மாஜி கடவுள்கள்/பாசிடன்
- விவரமறியாத நிலையில் விண்ணிலே வீற்றிருந்த ஜுவசின் தம்பிதான் பாசிடன்–கடலுக்கு அதிபதி! காற்றுக்குக் காவலன்! கடலிலே பெரியதோர் அரண்மனையில் அமர்ந்து பாசிடன் அரசோச்சி வந்தான். நீண்ட தாடி! எதிரியை வீழ்த்தும் கூர்மையான திரிசூலம்! பாசீடனுக்கு ரதம் உண்டு, வெளியே சென்று வர. அதிலே பூட்டப்பட்ட குதிரைகளுக்குப் பொன் மயமான பிடரி மயிர்! குளம்புகள், நவரத்தினங்கள் போல ஜொலிக்குமாம்.
பாசிடன்
விரிந்து பரந்து கிடக்கும் விண், மண், கடல் இம்மூன்றும், மனித சமுதாயத்துக்கு விளக்கம் கிடைக்காத காலத்தில், அச்சம், ஆச்சரியம் எனும் இரு உணர்ச்சிகளைத் தூண்டுவனவாகவே இருந்தன. இது இயற்கையும்கூட.
“இதென்ன அதிசயமோ நமக்கென்ன தெரிகிறது!” என்ற பேச்சு, இப்போதும்,—நவீன உலகில்—பல்வேறு சம்பவங்களின்போதும், காட்சிகளின் போதும், பலரால் கூறப்படுகிறதல்லவா! மனித சமுதாயம் பலநூறு நூற்றாண்டுகள், பயிற்சிபெற்று, பக்குவமடைந்து, பெரும் அளவுக்கு அறிவுத் தெளிவும் ஆராய்ச்சித் திறனும், பெற்றிருந்தும்கூட, இன்னமும் மனித அறிவுக்கு, ஆச்சரியகரமான, விளக்கம் கிடைக்காத பொருளும், காட்சியும், இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் மனித சமுதாயம், நமக்கென்ன என்று இருந்துவிடுவதுமில்லை, நமக்குப் புரியவே புரியாது என்று விட்டுவிடுவதுமில்லை. தட்டுத்தடுமாறிக்கொண்டு சிந்தனைப் பாதையில், மேலும் ஓர் அடி எடுத்துவைக்கும் முயற்சியிலேயேதான், ஈடுப்பட்ட வண்ணம் இருக்கிறது. இந்த முயற்சியில், தன்னலக்காரர் ஈடுபடார், கோழை உள்ளத்தார் ஈடுபடமுடியாதாராகின்றனர், சிலர் ஈடுபட்டு, வாழ்வு சிதையினும், தோல்வி துரத்தித் துரத்தி அடித்தாலும் துவண்டுவிடாது, ஈடுபட்டு, உண்மைகளைக் கண்டறிகின்றனர்; அச்சத்தையும் ஆச்சரியத்தையும் தந்துவந்த பொருளும் காட்சியும், பிறகு, மனித சமுதாயத்துக்கு, விளங்கிக் கொள்ளக் கூடியவைகளாகின்றன.
விளக்கம் கிடைக்காமுன்பு பலன் இல்லை, பொருளாலும், காட்சியாலும்; அல்லவா?
அதோ மூலையில் உள்ள பொருள் என்ன? வளைவாக இருக்கிறது, ஓரளவு பளபளப்பும் தெரிகிறது—ஆனால் என்ன பொருள் என்று விளங்கவில்லை. அருகே சென்று கூர்ந்து பார்த்தால்தானே, என்ன பொருள் என்று தெரியும். போகலாமா, வேண்டாமா? போக முடியுமா முடியாதா? போனால் ஏதேனும் கெடுதி ஏற்படுமோ? நாம்தான் போகவேண்டுமா? வேறு யாராவது கிடைக்க மாட்டார்களா, இந்தக் காரியம் செய்ய—என்ற இவ்விதமான எண்ணங்கள், குடைகின்றன மனதில்.
அந்நிலையில், என்ன பலன் அப்பொருளால்? அது என்ன என்று கண்டறிந்தால்தானே, பயன்படுமா, அல்லவா, என்பதற்கு!
“அதோ பாரப்பா, மூலையில், இருட்டாக இருக்கிற இடத்தில், ஏதோ ஒன்று, வளைவாக, பளபளப்பாக இருக்கிறதே—தெரிகிறதா?”“எங்கே?......ஓ......ஆமாம், தெரிகிறது......வளைவாகத்தான் இருக்கிறது......பளபளவென்றும் இருக்கிறது”
“என்னவென்றே தெரியவில்லையே......என்னவாக இருக்கும்?......உனக்குத் தெரிகிறதா?”
“ஏதோ ஒன்று இருப்பதுதான் தெரிகிறதேயொழிய அது என்னவென்று தெரியவில்லையே......”
“எனக்குந்தான் தெரியவில்லை”
🞸🞸🞸🞸
மனித சமுதாயம், ஆராய்ச்சிப் பள்ளிக்கூடம் அமைக்காதபோது, இதுபோன்ற நிலைதான்—எதைப் பார்த்தபோதும்—எந்தப் பொருளைப்பற்றியும். பொருள் தெரிகிறது கண்ணுக்கு—பொருள் விளங்குவதில்லை, கருத்துக்கு! பொருள் விளங்காததால், பயன் கிடைப்பதில்லை. மனித சமுதாயம் நஷ்டமடைகிறது, தெளிவு இல்லாததால். நம் வீட்டு மாட்டுத்தொழுவத்திலேயே, ஒரு சிறு கட்டை இருக்கிறது—சிறு மரத்துண்டு—அது என்ன என்பது தெரியாத நிலையில், அதனால் பெறக்கூடிய பலன் கிடைக்காதல்லவா! பிறகு ஒரு நண்பன் பார்க்கிறான், அந்த மரத்துண்டை! அவனுக்குத் தெரிகிறது, அது சந்தனக்கட்டை என்று.—எனவே அதனால் பெறக்கூடிய பலனையும் தெரிந்துகொள்கிறான். அவன் சுயநலக்காரனாக இருந்தால், என்ன செய்வான்? “இந்தச் சிறு விறகு உனக்கு வேண்டுமா!” என்று கேட்பான்—ஆவலை மறைத்துக்கொண்டு, அலட்சியப் போக்காக “எனக்கு ஏன்! இது இங்கு நெடுநாளாக இருக்கிறது, இடமடைத்தானாக!” என்கிறான் விளக்கமிலான். சுயநலவாதி, “இதை நான் எடுத்துக்கொண்டு போகிறேன்—வீட்டிலே, ஒரு கதவுக்குத் தாளாக்க!” என்று கூறிவிட்டு, அதை எடுத்துக்கொண்டு போகிறான். என்றைக்கேனும் ஓர் நாள், பூசிக்கொள்ளச் சந்தனம் கொடுப்பான்—பூசிப் பூரிப்படையும்போதுகூட விளக்கமிலான், சுயநலவாதியின் சூதை அறிந்துகொள்ளமாட்டான்! அறிவீனம் தரும் நஷ்டம்! அதைச் சுயநலவாதி பயன்படுத்திக்கொள்கிறான் தன் சுகபோகத்துக்காக. ஆப்பிரிக்க நாட்டுப் பழங்குடிகள் விளக்கம் இல்லாத காரணத்தால் தங்கள் நாட்டிலே கிடைக்கும் வைரங்களை வெள்ளையர்களுக்குக் கொடுத்து, விளையாட்டுச் சாமானும் சோப்பு சீப்பும் வாங்கிக்கொண்டார்களல்லவா! அதுபோல, மனித சமுதாயத்தில், முதலில் விளக்கம் பெறாததால், பயன் கிடைக்காத நஷ்டமும், விளக்கம் பெற்ற ஒரு சில சுயநலவாதிகளால் பெருநஷ்டமும், ஏற்பட்டதுண்டு.
தன்னலமற்றவனாக அந்த நண்பன் இருந்திருப்பானானால், “அடடே! அருமையான சந்தனக்கட்டையை, முட்டாளே! மாட்டுத் தொழுவத்திலே வீசிவிட்டாயே” என்று கூறி, அதன் பயனை விளக்கியிருப்பான்.
அதுபோலவே, மூலையில் தெரியும் வளைவான, பளபளப்பான பொருள் என்னவென்று தெரியாமல், மனித சமுதாயத்தில் மிகப் பெரும்பாலோர் பேசிக்கொண்டிருந்த சமயத்தில், சூதுக்காரர், சுயநலக்காரர், முளைத்தனர்—இந்த விளக்கமறியாத நிலையைச் சாதகமாக்கிக்கொண்டு தங்கள் சுகவாழ்வை அமைத்துக்கொள்ள.
பய உணர்ச்சியைத் தூண்டமுடியும் அவர்களால்—பேராசை உணர்ச்சியைத் தூண்டமுடியும்—பித்தராக்க முடியும் அந்த எத்தர்களால்.
“என்னவென்று தெரிகிறதா?” என்று கேட்ட உடனே, “ஆஹா! அருமை! நீ பாக்யசாலி! அப்பா! அருள்பெற்றவன் நீ! உன் வீட்டிலே, பிரசன்னமாகிவிட்டது, தேவப்பிரசாதம்” என்று, ஆவேசம் வந்தவன்போல பேசி, மேலும் ஆச்சரியப்படுபவனைப் பார்த்து, “அப்பா! இது, நீ எப்போது பார்த்தாய்?” என்று கேட்டு, “நான் நெடுநேரமாக பார்த்துக்கொண்டிருக்கிறேனே” என்று அவன் கூற, “இப்போதாவது என்னிடம் காட்டினாயே! மகனே! மண்டியிடு! உடனே மண்டியிடு! உனக்கு இன்னதென்று விளங்காத அப்பொருள், என்ன தெரியுமா? பாம்பு! பயப்படாதே பாம்பு என்ற உடன்! பாம்பு உருவில் பகவான்!” என்று கூற, பகவானாக இருந்தால்கூட உரு, பாம்பு ஆகையால், என்ன ஆபத்தோ, என்று அவன் அஞ்ச, “கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்! பாம்பாக வந்துள்ள பகவான், உன்னை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுவார்—மூடு கண்களை!” என்று கூறி, அவன் கண் மூடியது கண்டுகளித்து, திறந்ததும், “தேவனின் திருவருளே அருள்! வா, அப்பா, பயப்படாமல் வா, பகவான், பாம்பு உருவில் இருந்து இப்போது இரும்பு வளையம் போன்ற உருவம் எடுத்துள்ளார்”—என்று கூறி, வளையத்தைத் தொட்டுக் கும்பிட்டுக்காட்டி, அவனை ‘பாம்புக்கோயில்’ கட்டச்செய்து அதன், முதல் பூஜாரியுமாகிவிட முடியும்! மனித சமுதாயத்தின் விவரமறியாத பருவத்தின்போது, அற்புதங்களும் அவைகளின் பேரால் அமைந்த பூஜா இடங்களும், அவற்றை நடத்த ஏற்பட்ட பூஜாரிகளும், எண்ணற்ற அளவு!
கண் எதிரே, மூலையில் கிடந்த வளையத்துக்கே விவரம் இல்லாதபோது, மனித சமுதாயம் அஞ்சி, தந்திரக்காரனிடம் தாசனாகிடவேண்டி நேரிட்டதென்றால், விஞ்ஞானத்தின் துணைகொண்டும் இன்னமும் முற்றும் விளங்கிக்கொள்ள முடியாத நிலையில் உள்ள, விண், மண், கடல், என்பவைகளிடம், ஆதிகாலத்தில், எவ்வளவு அஞ்சியிருக்கவேண்டும், எவ்வளவு அடிமைத்தனம் வளர்ந்திருக்க வேண்டும்!
அதே இயற்கையின் உட்பொருள் இன்று பெருமளவுக்கு மனித சமுதாயத்துக்கு, ஆராய்ச்சியின் பயனாக விளங்கிவிட்டதால், எவ்வளவு பயன், ஏற்பட்டிருக்கிறது!
🞸🞸🞸
விவரமறியாத நிலையில் விண்ணிலே, வீற்றிருந்த ஜூவசின், தம்பிதான், பாசிடன்—கடலுக்கு அதிபதி! காற்றுக்குக் காவலன்! அலைகடலே அவன் அரண்மனை! அண்டத்தைக் கட்டிக் காக்கும் மூலதெய்வங்களில் பாசிடனும், முக்கியமானவன். கிரேக்க நாட்டவர், பாசிடனை, மிக மிகப் பயபக்தியுடன் தொழுது வந்தனர். அவர்களின் பயபக்திக்குக் காரணமும் இருந்தது.
கிரேக்கர்கள், கடல் மார்க்கமாகச் சென்று வாணிபம் நடாத்துபவர்—அவர்கள் வாழ்க்கையில் பெரும் பகுதியை, கடலின்மீதே போக்கவேண்டிய நிலையில் இருந்தனர். கடலைக் காணும்போதெல்லாம், அவர்கள், உள்ளத்தில், ஆயிரம் எண்ணங்கள் கூத்தாடும்! இது எவ்வளவு பெரிதோ? எங்கு ஆரம்பமாகி எங்கு முடிகிறதோ? அலையின் காரணம் என்னவோ? இவ்வளவு நீரும், மழையினாலேயே நிரம்பிற்றோ, மழைநீர், பயிர்பச்சைக்கும், மக்கட்கும் பயன்படும்போது, அது கடலில் சேர்ந்ததும், கரிப்பாகிவிடும் காரணம் என்னவோ? இதை முதன்முதலில் வெட்டின மகாவீரன் யாரோ? இக்கடல், கலங்களைச் சுக்கு நூறாக்கும் அலைகளைக் கிளப்புகிறதே! காட்டாறு கரை புரண்டாலே, ஊர் அழிகிறதே! இந்தக் கடல், பெரும் வலிவுள்ளது—இது கிளம்பினால், கட்டுக்கடங்காது, கரையோடு நில்லாது, ஊருக்குள் நுழைந்தால், என்ன ஆகும்? என்று எண்ணினான்—அச்சத்தால் நடுங்கினான்—ஆவலும் நிரம்பிற்று உள்ளத்தில் இதன் ஆதி அந்தம் அறியவேண்டும், என்ற ஆவல்.
கடல்! அலை! புயல்! இவைகளைக் கண்டு கண்டு, மனிதனின் மனதிலேயும் எண்ண அலைகள் எழும்பலாயின! பல்வேறு விதமான கருத்துக்கள்—தெளிவான உருவில் அல்ல—குழப்பமான நிலையுடன்.
இப்படி இருக்குமா!—இதுபோலிருக்குமா!—என்று ஏதேதோ எண்ணினான்—கற்பனை உள்ளம் படைத்தவன் கதை கட்டிவிடும் காலம்வரை! அந்தக் கதை கட்டுவோனின் சிந்தனையில் பிறந்தான் பாசிடன்.
இவ்வளவு வலிவுள்ள கடலைக் கட்டிக் காத்து, அலைகளை எழுப்பி எழுப்பி அடக்கி, கரையைக் கடந்து, கடல் உலகை அழிக்காமல் புத்திபுகட்டிட; ஒருதேவன் இருந்தாக வேண்டுமல்லவா! அவன் சாமான்ய வலிவும், மகிமையும், கொண்டவனாக இருந்தால் போதாதே! அவன் ஜூவஸ் போலவே மூலதெய்வமாகத்தான் இருக்கவேண்டும்—என்று கற்பனை உள்ளம் படைத்தவன் எண்ணி, பாசிடனைப் பெற்றெடுத்தான்—வந்துவிட்டான் தந்திரம் தெரிந்த மதவாதி, பாசிடனை—கற்பனையை வளர்த்திட எழும்பின, கோயில்கள்–கூடினர்—பக்தர்கள்—குவிந்தது காணிக்கை! பொய்யின் முன்பு மெய்யன்பர்கள் திரண்டு வந்து பணிந்தனர்—பலகாலம்—பகுத்தறிவுச் சுடரொளி கிளம்புமட்டும்!
ஜுவசைத் தொழுவதற்குக் கிடைக்கும் சந்தர்ப்பத்தைவிட, கிரேக்கர்களுக்கு, பாசிடனை தொழுவதற்கான, சந்தர்ப்பமே அதிகம்—கடற்பயணம் அதிகம் என்ற காரணத்தால்.
கடற்பயணத்தின் போதெல்லாம், பாசிடனைப் பற்றிய நினைப்பு—அலை அதிகமாக எழும்பும்போதெல்லாம், அவன் நாமத்தைப் பஜிப்பது, கலம் ஆபத்தில் சிக்கும் போதெல்லாம், அவனுக்குப் பலி கொடுப்பது, பயணம் முடித்துக்கொண்டு, வீடுவந்ததும், ஆபத்தின்றி கொண்டு வந்து சேர்த்ததற்காக, ஊரில் கோயிலில், பாசிடனுக்கு, விசேஷமான பூஜை! பாசிடன் பாடு, கொண்டாட்டந்தான்!
பாருங்களேன், உருவை! கட்டுமஸ்தான் திரேகம்! அழிக்கும் திறத்தை விளக்க, காலின் கீழேயே, நசுங்கிக் கொண்டிருக்கும் எதிரி! கையிலே, திரிசூலம்! ஏறத்தாழ முயலகனைக் காலின்கீழ் போட்டு மிதித்தபடி, மழு ஏந்தி நிற்கும், “மகேசன்” போல் இல்லையா!
இப்போது சென்று கேட்டுப் பார்க்கச் சொல்லுங்கள், ‘தேவார திருவாசகங்களை’—கிரேக்க நாட்டில், “ஐயா! அலைகடல் அதிபன்! அதிபலதேவன் ஐயன் பாசிடனின் ஆலயம் எங்கே?” என்று! பதில், என்ன கிடைக்கும்! ஒரு கேலிப் புன்னகை! பிறகு ஓர் விளக்கம்! பாசிடன், மனித சமுதாயம், பகுத்தறிவுப் பள்ளியில் நுழையுமுன், இருந்தான்—இன்று இல்லை—பாசிடன் ஓர் மாஜி கடவுள்!—என்று கூறுவர்.
திருவாதிரைத் திருநாள் கொண்டாடும் நமது தோழர்கள், திகைப்படைவர், “ஏன் இந்த நாத்திகர்கள், பாசிடன் எனும் பகவானை இப்படிக் கைவிட்டு விட்டனர்! இந்த நாத்திகர்களை ஏன் நாதன் இன்னமும் விட்டுவைத்திருக்கிறார்” என்று எண்ணுவர். ஆனால் அவர்களோ, “யாரப்பா, இந்தப் பழைய பசலி! பள்ளிப் பிள்ளைகட்கு உள்ள தெளிவும் காணோமே இவர்கட்கு! பாசிடனைத் தேடுகிறார்களே, இந்த 20-ம் நூற்றாண்டில்!” என்று கேலி செய்வர்!
உலகத்தின் கேலியை நமது ‘மதவாதிகள்’ மதிக்கவா போகிறார்கள்! அவர்கள் இன்றும், ஆடிய பாதத்தைத் தேடிப் பார்த்தபடிதான் உள்ளனர்—ஆடலழகிகளின் துணையையும் நாடி, பாசிடன், இன்று கிரேக்க நாட்டிலும் சரி, அறிவு வளர்ந்த மற்ற நாடுகளிலும் சரி, ஒரு மாஜி கடவுள்! ஆனால், கிரேக்கரும், ரோம் நாட்டவரும், இன்று நம் நாட்டவர் இருப்பது போன்ற நிலையில் இருந்தபோது, பாசிடனுக்கு இருந்து வந்த ‘யோகம்’ அற்பசொற்பமானதல்ல! காரினித் என்ற நகரிலே, கண் கவரும் வனப்புள்ள கோயில், பாசிடனுக்கு! கடற்பயணம் செய்துவிட்டு வருவோர், கொட்டும் காணிக்கை, மலை மலையாகக் குவியும்—பூஜாரியின் நிலை, அதுபோலவே ஓங்கி வளரும். இன்று காரினித் நகரம் உண்டு, கோயில் கிடையாது; பாசிடனைப் பயபக்தியோடு தொழுத கிரேக்கர்களின் சந்ததியார் வாழ்கின்றனர், ஆனால் பாசிடனைத் தொழுதுகொண்டில்லை! முன்னோர்களின் மனதிலே மூண்டிருந்த அஞ்ஞான மூடுபனியில், விளைந்த பல கற்பனைத் தோற்றங்களிலே, பாசிடன் ஒன்று, என்று கண்டறிந்தனர்.
ஓங்காரப் பொருள்—ஒன்று, ஆகிவிட்டது!
கடவுளாக இருந்த பாசிடனுக்கு கற்பனை, எனும் நிலை பிறந்துவிட்டது, அங்கே!
தகப்பனை வீழ்த்திவிட்டு தன்னைத்தானே கடவுளாக்கிக்கொண்ட ஜுவஸ், தன் உடன்பிறந்தார்களின் பகை கூடாது என்று எண்ணி, ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் ‘ஆதிபத்யம்’ அளித்தான்; அனைவரும், ஜூவசைத் தலைமைக் கடவுளாக ஏற்றுக்கொள்வது என்ற நிபந்தனையுடன். இம்முறைப்படியே, பாசிடனுக்கு, கடலுலகாளும் ‘பதவி’ கிடைத்தது.
கடலிலே, பெரியதோர் அரண்மனையில் அமர்ந்து பாசிடன் அரசோச்சி வந்தான். நீண்ட தாடி! எதிரியை வீழ்த்தும் கூர்மையான திரிசூலம்! பாசிடனுக்கு ரதம் உண்டு, வெளியே சென்று வர. அதிலே பூட்டப்பட்ட குதிரைகளுக்குப் பொன்மயமான பிடரி மயிர்! குளம்புகள், நவரத்னங்கள்போல் ஜொலிக்குமாம்.
பாசிடனுக்குக் கடலுலக ஆதிபத்யத்தை ஜூவஸ், அளித்தபோது, அங்கு அரசோச்சிக்கொண்டிருந்த தேவன் பெயர் டைடான் ஒஷியானஸ் என்பதாகும்—பெருங்கடல் என்பது பெயரின் பொருள். புதிய அதிபதியின் தோற்றத்தைக் கண்டதும் இவரிடம் போரிட்டுப் பயனில்லை என்பதைக் கண்டு கொண்ட பழைய தேவன், பதவியை இழப்பதே மேலெனக் கருதினானாம். பாசிடனின் கண்ணொளி கண்டதும் பழைய கடவுளுக்குக் கருத்துக் குழம்பிவிட்டதாம். ‘ராஜ்யத்தை’ப் பாசிடன் வசம் ஒப்புவித்துவிட்டதோடு, பாசிடனின் பராக்கிரமத்தைப் பற்றிப் பல்லாண்டு பாடி வந்தாராம் அந்தப் பழைய கடவுள்.
அட பழைய பரமசிவமே! என்று, பரிகாசப் பேச்சுப் பேசுவதுண்டல்லவா. கிரேக்கக் கடவுட் காதையிலே, பழைய கடவுள், புதிய கடவுள், என்பது, பரிகாசப் பேச்சல்ல—பகவானின் திருவிளையாடல்.
ஒரு அரசன், தன்னைவிட வலிவுள்ள வேறோர் அரசன் படை எடுத்து வந்தால், தோற்று ஓடுவது போலவே, கடவுள்களுக்கும் நேரிடுவதுண்டு! போரிட்டுத் தோற்றுத் துயருறுவதற்குப் பதில், பெண் கொடுத்து, சமரசமாவது போலவும், கடவுள்கள் செய்து கொள்வதுண்டு. கடவுளின் குணம் இப்படியா? என்று ‘அறிவும் ஆத்திகமும், சம எடையாகக் கலந்து’ உட்கொண்டவர்கள், கேட்பர்—இக்காலத்தில். ஆனால் அந்த நாட்களிலே, ஆண்டவனைப் பற்றிய இத்தகு கதைகளை நம்புவதுதான், அறிவு, ஆத்திகம், இரண்டும்! மறுப்பவன் மாபாவி மட்டுமல்ல, மதியீனனாகவும் கருதப்படுவான்—இப்போதல்ல—பழைய நாட்களில்—பகுத்தறிவுக் கதிர் தோன்றா முன்னம்.
மூத்த மகன் பட்டத்தரசனாவதும், இரண்டாம் மகனுக்கும் மூன்றாம் மகனுக்கும், செல்வாக்கான வேறு பதவிகளோ, சிறு ராஜ்யங்களோ தரப்படுவதும், போதாது என்ற மனக்குறையும், அண்ணனுக்கு அரசனாகும் ‘பாக்கியம்’ கிடைத்ததே என்ற பொறாமையும் மூண்டெழும் ‘தம்பிமார்’, அண்ணனிடம், போரிடுவது, அரச குலத்துக் கதை! கடவுள்களின் கதையும் இதேதான்!!
அரச குடும்பத்திலேகூட இப்போது, பொறாமை காரணமாக, அமளி நடைபெற்றால், அறிஞர்கள் எள்ளி நகையாடுவர். பொறாமை, சூது, சதி, போர், கலகம் இப்படிப்பட்ட உணர்ச்சிகளுக்கு அடிமையாகிக் கடவுள்களே பலப்பல செய்ததாகக் கதைகள் உண்டு—ஆனால் அவைகளைக் கேலியாகப் பேசவோ, கண்டிக்கவோ, சந்தேகிக்கவோ, கூடாது—ஆத்திகர் அறிந்தால் ஆத்திரப்படுவர்! கடவுள்களின் கதைகள் எப்படிப்பட்டவைகளாக இருப்பினும் சரி, கொலை, களவு, காமக்கூத்து, அடுத்துக் கெடுத்தல் எனும் எத்தகைய தீய செயல் புரிந்ததாகக் கதை இருப்பினும், அவைகளைக் கடவுளின் திருவிளையாடல் என்று பயபக்தியோடு எண்ணிக்கொள்ள வேண்டுமேயல்லாது, இப்படியுமா செய்வது என்று கேட்கத் துணிந்தால், தலை உருளும் கீழே. அவ்விதமான ஆதிக்கம் செலுத்தி வந்தனர், பூஜாரிகள்.
தேவனின் திருக்கலியாண குணம், மானிடருக்கு மதி புகட்டக்கூடியதாய், மனித குலத்தின் மாண்பினை வளர்க்கவல்லதாய், மனிதன் மனதிலே, தூய்மையான கருத்துக்களை, ஊட்டவல்லதாய், அவர், வெகுளி, காமம், சுயநலம், சூது முதலிய அருவருக்கத்தக்க, தீய நினைப்புகளைச் சுட்டெரிக்கக்கூடியதாகவல்லவா இருக்கவேண்டும். கடவுள்களுக்கிடையே போட்டியும் பொறாமையும், போரும் சதியும், கலகமும் கபடமும், இருந்ததாகச் சித்தரித்துக் காட்டும் கதைகள் உள்ளனவே—மனித குலம், இத்தகைய கதாநாயகர்களையா, கடவுள்களாகக் கருதித் தொழவேண்டும்—சரியா, முறையா, அறிவாகுமா இது—ஆத்திகந்தான் ஆகுமா!—என்றெல்லாம், கேட்பவர்களின் தொகை இன்று பெருகிவிட்டது—பெருகியபடியும் இருக்கிறது. ஆனால் ஆதிகாலத்தில், கிரேக்க நாட்டிலே அதுபோல பேசக்கூடாது—பேசுபவன் பெரும் பாவி!
அப்படி ஒருகாலம் இருந்ததா! அப்படி ஒரு நாடு இருந்ததா!! என்று சற்று ஆச்சரியத்துடன் கேட்பர், நம்நாட்டு அறிவாளிகளில் சிலர், நம் நாட்களில்! அவ்விதமான நிலைமை, கடலில் கட்டுமரமும் பாய்க்கப்பலும், தரையில் ரதமும் இருந்த காலத்தில், கிரேக்க நாட்டிலே இருந்தது ஆச்சரியமல்ல—இன்னும் நம் நாட்டிலே, வானத்தில் விமானமும், மண்ணில் மோட்டாரும், கடலில், அணுசக்தியால் செலுத்தப்படும் கப்பலும் சாத்தியம் என்ற நிலை ஏற்பட்டிருக்கும் நமது நாட்களிலேயும், கடவுள்களுக்குள் ஏற்பட்ட போட்டி, போர் ஆகியவற்றினைச் சித்தரிக்கும் கதைகள், புண்ய கதைகளாக, பூஜா மாடங்களுக்கு ஏற்றவைகளாக, பாராயணத்துக்குரியவைகளாக, பக்தி ஊட்டவும் முக்தி தரவும் சக்திவாய்ந்த ‘சத்’ விஷயங்களாகத்தானே கருதப்பட்டுள்ளன—இது அல்லவா, ஆச்சரியம்! இன்றும், இவ்விதமான கதைகளைக் கண்டிப்பவர்கள்மீது காயவும் பாயவும், சர்க்கார் உட்படச் சனாதனப்படை தயாராக இருக்கிறதே, இதுவல்லவா ஆச்சரியம்!
வேடன், கையிலே வில்லும் முதுகிலே அம்புறாத் தூணியும் வைத்துக்கொண்டு போனால் ஆச்சரியப்படுவார் இல்லை—ஆனால் விலையுயர்ந்த மோட்டாரில் அமர்ந்துகொண்டு, நாகரிகமான உடை அணிந்து கொண்டு, வில்லும் அம்பும் ஒரு விசித்திர புருஷன் வைத்துக்கொண்டிருக்கக் கண்டால், எவ்வளவு ஆச்சரியம் ஏற்படும். அதுபோலத்தான், மனிதகுல முன்னேற்றத்திற்கு முன்பு, சிந்தனைத் திறம் தெளிவுபடுத்தப்படுவதற்கு முன்பு கிரேக்க நாட்டவர், மற்றப் பல நாட்டு மக்கள் போலவே, அறிவுக்கு ஒவ்வாத, ஆபாசம் நிறைந்த கதைகளை எல்லாம் நம்பி ஆலயம் அமைத்து, ‘ஆத்திகராக’ விளங்கினர்—அவர்களெல்லாம் அறிவுபெற்று, தெளிவுபெற்று, அஞ்ஞானத்தை விரட்டிவிட்டு, மெய்யறிவுத் துறையிலே மேலானதோர் இடம்பெற்று, உண்மையான கடவுட் கொள்கையையும், மார்க்கத்தையும் உணர்ந்தறிந்து, கற்பனைகளைக் களைந்தெறிந்தான பிறகும், நம் நாட்டிலே, நாகரிகத்தின் மேல்பூச்சைக் கொண்ட மட்டும் எடுத்துப் பூசிக்கொண்டு, கோலத்தை மாற்றிக்கொண்டு, உலகத்தோடு உறவாடிக்கொண்டு, உயர்ந்தோம் என்றும் வீம்பு பேசிக்கொண்டு, கடவுட் கொள்கையிலேயும், மார்க்கத் துறையிலும், மாடனையும் காடனையும், மன்னாரையும் மாரியையும், போரும் போட்டியும், போகபோக்கியத்துக்காகப் போட்டதாகக் கூறும் கதைகளையே சிறப்புகளாகக் கொண்ட பல்வேறு கடவுள்களையும், அன்று போல் நம்பும் போக்கிலே உள்ளனர்! இஃதன்றோ ஆச்சரியம்!!
பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் போட்டியுணர்ச்சி ஏற்பட்டதாம்! கடவுள்களின் குணம், எப்படி இருக்கிறது பாருங்கள்!! யார் பெரியவன்? என்ற பலமான பிரச்னை! இதைத் தீர்த்து வைக்க, சிவனாரிடம் சென்றனராம்! அவர், மூவரிலும், தானே மூலவர் என்பதை நிரூபிக்க, இதுவே சமயம் என்று எண்ணி, ‘ஜோதிமயமாகி’, யார் என் அடியையும் முடியையும் முதலில் காண்கின்றனரோ, அவரே இருவரில் பெரியவர், என்று கூற, அடிகாண ஒரு கடவுளும், முடிகாண மற்றோர் கடவுளும் முயன்று, இரு கடவுள்களும் தோற்றதாக ஓர் ‘புண்ணிய கதை’ உண்டு—இன்றும் இதனை, நம்பினவன் நமசிவாயன் அருளையும், நம்பாதவன்; நாத்திகன் என்ற கெட்ட பெயரையும் பெறுகிறான்! நாட்டின் நிலைமை இதுபோல் இருக்கிறது!! திருவண்ணாமலைத் தலத்திலே, ஆண்டுதோறும் நடைபெறும் தீப தரிசனத் திருவிழா இந்த, ‘போட்டி’யைக் காட்டும் கருத்தோடுதான் பக்தர்கள், மதவாதிகள், கொண்டாடுகின்றனர். கோலியும் பம்பரமும் விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுவர்கள், வயது சென்றவர்களாகி, ஒருவன் வீரனாகி, ஊர்க்காவலனாகி வீதிவழி வரும்போது, அவனெதிரே, சிறு பிராயத்தில் தன்னோடு ஆடிக்கொண்டிருந்த சிறுவன் முதுமைக்கோலம் இருந்தும், முன்பு போலவே பம்பரம் ஆடிக்கொண்டிருக்கக் கண்டால், என்ன எண்ணுவான்!
கிரேக்க நாடு போன்ற பல நாடுகளும், நம் நாட்டைக் கண்டு, இதே விதமான எண்ணம்தானே கொள்ள முடியும்! உபசாரத்துக்காக உள்ளத்திலுதித்ததை மறைத்து இரண்டோர் புகழுரைகளைத் தரும் என்ற போதிலும், மனதிலே, உண்மையாக, மதிப்பு ஏற்படமுடியுமா! நமது நாடுதான், அன்று போலவே இன்றும், அரசமரம் சுற்றும் அம்மையரையும், அடிமுடிகாணும் திருவிழா நடாத்தும் ஐயாமார்களையும் கொண்டதாக இருக்கிறதே! முன்பு நடந்து செல்வர், அல்லது கட்டை வண்டியில் செல்வர், தீபம் பார்க்க! இப்போது, புதிய மோட்டாரில் புறப்படுகின்றனர், கார்த்திகைக்கு! வித்தியாசம் கோலத்திலேயே தவிர, குணத்தில் இல்லையே! குவலயம் கேலி செய்யாமலா இருக்கும்!
கிரேக்க நாட்டிலே, அறிவுக் கதிர் முளைத்ததும், பாசிடன், பரிகாசப் பொருளாக்கப்பட்டான்! பகுத்தறிவு வென்றதும், மாஜி கடவுளானான்! அதற்கு முன்பு, கோயில்தான், கொண்டாட்டம்தான்!! பாசிடன் கோலாகலத்தைக் காணக் கூடிடும் பக்தர் கூட்டம் ஏராளம்தான்! கடலாதிபனைப் பற்றிய கதைகளைப் புண்ய கதைகளென நம்பி, கேட்டுப் பூரிப்படைந்ததோடு, முக்திக்கு ‘அச்சாரம்’ தந்ததாகத்தான் கருதினர்—அந்நாள் கிரேக்கர்கள்.
அண்ணன் அண்டமெல்லாம், ஆளும் பெருங்கடவுளாகவும், கடலாதிபதி என்ற நிலைமட்டுமே தனக்கும் என்ற ஏற்பாடு, பாசிடனுக்குப் பொறாமையை மூட்டிவிட்டது—ஜுவசைத் தொலைத்துவிட்டு, தானே மூலக் கடவுளாகி விடவேண்டும் என்று எண்ணினான்—அதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தான். ஜூவசுக்கு எப்படியோ இரகசியம் தெரிந்துவிட்டது—உடனே எதிர்க்கத் துணிந்த தம்பிக்குச் சாபமிட்டு பூலோகத்துக்குத் தள்ளிவிட்டார்.
கடவுள் நிலையை இழந்து ‘மானிடனான்’ பாசிடன், டிராய் எனும் நகரை ஆண்டுவந்த, லயாமிடான் எனும் அரசனிடம் வந்தான். அந்த அரசன், நகரைச் சுற்றிலும், பலமானதோர், கோட்டைச்சுவர், கட்டித் தந்தால், அரச மரியாதை செய்வதாகக் கூறினான். கடலை அடக்கி ஆண்டுவந்த பாசிடன் கருங்கற் சுவர் கட்டும் பணியை மேற்கொண்டான். மண்சுமந்த மகேசன் கதை இல்லையா நம்நாட்டில்—வைகைக்குக் கரை அமைக்க, கூலியாக வந்து, பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படிபட்ட பெம்மான் கதை, இன்றும் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறதல்லவா! அதுபோன்ற கடவுள் கதை, கிரேக்கப் புலவன் கட்டினான்—ஆனால் இன்று அதை நம்புவார் இல்லை—திருவிழா இல்லை.
பாசிடன், இந்தப் பெரும்பணியை எவ்வாறு செய்து முடிப்பது என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தபோது, “நான் உதவி செய்கிறேன்” என்று கூறினான், அபாலோ! அபாலோவும் ஒரு கடவுள்தான். ஜூவசை எதிர்த்த குற்றத்துக்காகவே, அபாலோவும், பூலோகத்துக்குத் துரத்தப்பட்டான். எனவே இரு கடவுள்களும், மானிட உருவில், டிராய் நகரக் கோட்டைச் சுவர் கட்டும் காரியத்தில் ஈடுபட்டனர்!
அபாலோவிடம் ஓர் குழல் உண்டு—மாயக் குழல்! தாயைச் சேய் மறக்கவும், கணவனை மனைவி மறக்கவும், கொல்லும் கொடுமையைப் புலியும் பாம்பும் மறக்கவும் செய்யவல்ல, மதுரமான இசைதரும், மாயக் குழல், எமது கண்ணனிடமன்றோ இருந்தது!—என்று கேட்பர், பக்தர்கள்! ஆம்! அன்பர்காள்! அதேபோல, கிரேக்க நாட்டுக் கடவுள் கதை கட்டினோரும், அபாலோ தேவனிடம் அதி அற்புதமான மாயக் குழல் இருந்ததாகக் கூறினர்!
அந்த மாயக் குழலை அபாலோ, ஊதிட, மலைகள் உருண்டோடி வந்தனவாம், சுவர் கட்டும் பணிக்கு உதவியாக! குழல் ஊத ஊத, பெரும்பாறைகள், ஒழுங்காக, வரிசையாக, தாமாகவே அமைந்து, பலமான, சுவராகிவிட்டன எப்படிச் சாத்யமாகும் என்று ஏக்கம் கொண்டிருந்த பாசிடன், அபாலோவின் உதவியால் இந்தப் பணியை வெற்றிகரமாக முடித்துவிட்டு, மன்னனிடம் சென்றான், பரிசு பெற.
மன்னன் அயோக்யன்—பரிசு தர மறுத்தான்—பணி முடித்த பாசிடனுக்கு. கோபம் மூண்டது, பாசிடனுக்கு. எனவே, ஒரு பயங்கரப் பிரம்மராட்சசனை உண்டாக்கி, ஊரைத் துவம்சம் செய்யும்படி ஏவிவிட்டுச் சென்றுவிட்டான்.
ஒரு பயங்கரமான பிரம்மராட்சசனை உண்டாக்கும் ‘சக்தி’ மானிட உருவிலும் பாசிடனுக்கு இருந்தபோது, சுவர் கட்டவா, முடியாமல் போய், அபாலோவின் உதவி தேவைப்பட்டது! பொருத்தமாக இல்லையே!! என்று கூறத் தோன்றும். பொருத்தம் இருக்கிறதா, பொருள் இருக்கிறதா, என்று பார்க்கக்கூடாது, புண்ணிய கதைகளில்—பாபம்—மகா பாபம்!!
டிராய் நகரம் அல்லோல கல்லோலப்பட்டது, பயங்கர ராட்சசனால்—எதிரே சிக்கினவர்களை எல்லாம் பிடித்துத் தின்னத் தொடங்கிற்று, அந்தப் பயங்கர உருவம்.
என்ன செய்வான் மன்னன்? அருள்பெற்ற ஆவேச மாடியை அணுகினான். அவன் ஓர் யோசனை சொன்னான். அழகான கன்னியை, அந்தப் பிரம்மராட்சசனுக்குப் பலி கொடுத்தால், அழிவு வேலை நின்றுபோகும் என்றானாம். அதன்படியே ஆண்டுக்கொரு அழகிய கன்னி பலி இடப்பட்டு வந்தாள்—கடைசியாக மன்னனின் மகள் ஹெஸியோன் பலியாக வேண்டிய நிலை வந்தது—அப்போது தேவாம்சம் பெற்ற ஹெர்குலிஸ் எனும் வீரன் ராட்சசனைக் கொன்றான், என்று கதை முடிகிறது.
இந்தக் கதை மட்டும் கிரேக்க நாட்டிலே இல்லாமல், நம்நாட்டிலே புண்ய கதையாக இருந்திருந்தால், திருவிழா இன்றும் நடைபெறுமே!!
சாபம் தீர்ந்து, பழையபடி பாசிடன், கடவுளுலகு சென்று ஜுவசின் அனுமதிபெற்று, கடலாதிபனானான்.
பாசிடனின், பத்னியின் பெயர், ஆம்பிடிரைட் என்பதாகும். இவள் உடன்பிறந்த மங்கையர் ஐம்பதின்மர்! இவளை, மணம் புரிந்துகொள்ளப் பாசிடன் சென்றபோது, இவனது, பயங்கர உருவைக்கண்டு, பயந்து, ஓடினாளாம்!! பாசிடனுக்கோ, காதல்! பெண்ணுக்கோ, கிலி! பாசிடன் உடனே ஒரு கடல் குதிரையைத் தூது அனுப்பி, பெண்ணின் மனதை மாற்றச் செய்து, பின்னர் மணமுடித்துக் கொண்டான். பல குழந்தைகள் பெற்றெடுத்தாள் பத்னி. பாதி மனித உருவும் பாதி மீனுருவும் கொண்ட, டிரிடன் என்பானே, பாகிடனின் மக்களுக்குள் கீர்த்தி வாய்ந்தவனாக விளங்கினான்.
காதலின் சக்தியை அனுபவ பூர்வமாகக் கண்டதனால் போலும், ஒரு முறை, பாசிடன், பூலோகத்திலே காதல் பாதையிலே கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த இடாஸ் எனும் வாலிபனுக்கு, தன் ரதத்தைத் தந்து உதவி புரிந்தான்—என்றோர் கதை உண்டு. இந்தக் காதலியின் பெயர், மார்ப்பேசா! இவள் தந்தை, காதலைத் தடுத்திடவே இடாஸ் துயருற்று, என்ன செய்வதென்று ஏக்கமடைந்தபோது, பாசிடன், தன் ரதத்தைக் காதலனுக்குத் தர, அதிலே, காதலியை ஏற்றிக்கொண்டு, வந்தான், காதலன். பெண்ணைப் பறிகொடுத்துவிட்ட, ஈவினஸ் என்பான், துரத்திக்கொண்டு வந்தான்—(ருக்மணியைக் கண்ணன் கொண்டு வந்ததும் இம்முறையில்தான்!)
ஆனால், பாசிடனின், ரதத்தைப் பிடிக்க முடியுமா! காதலர் தப்பினர்—தகப்பனின் கோபத்தில் இருந்துதான்—கடவுளின் காமத்தில் இருந்தல்ல!
இந்த அழகு மங்கையைக் கண்டுவிட்டான் அபாலோ தேவன்! விடமாட்டேன் என்று கூறி, வழி மறித்துக் கொண்டான். நல்ல வேளையாக, அசரீரி கூறிற்றாம், ‘பெண் யாரை விரும்புகிறாளோ, அவனே அவளுக்கு மணாளனாகக் கடவன்’ என்று.
பெண்ணின் சங்கடத்தைக் கவனியுங்கள்.
ஒருபுறம், அபாலோ—கடவுள்—அழகன்!
மற்றோர் புறம், ஆபத்துக்களைத் துரும்பென எண்ணிய காதலன்!
யாரைத் தேர்ந்தெடுப்பது? தேவனையா? தேடிவந்த காதலனையா?
மதி மிக்கவள் அந்த மங்கை. அபாலோவோ கடவுள்களில் ஒருவர்—மூப்பு பிணி, சாக்காடுகளைக் கடந்தவர். எனவே அவர் எப்போதும் இன்றுபோலவே எழிலும் இளமையும் கொண்டவராக இருப்பார். நாமோ மானிடகுலம்—மூப்பு வரும், எழில் அழியும்! நாம் கிழவியாகி, அபாலோ குமரனாகவே அப்போதும் இருந்தால், நமது நிலை என்ன ஆகும்? காதல் கருகுமே!! வேறோர் வனிதையையன்றோ, குமரன் தேடிக்கொள்வார்! மனம் உடையுமே நமக்கு!!
நமது காதலனோ, நம்மைப்போலவே, மானிடன்—நாம் கிழவியாகும்போது அவனும் கிழவனாவான்—காதலுக்குச் சிக்கல் ஏற்படாது. எனவே நமக்கு ஏற்றவன் இடாசே, என்று தீர்மானித்தாள்.
அசரீரி அறிவித்தபடி, அவள் இடாசையே மணம் செய்துகொண்டாள்.
அபாலோவின் திட்டம் முறிந்தது கண்டு, பாசிடன் மகிழ்ந்தான்.
இப்படிப் பல கதைகள், பாசிடனைப்பற்றி, கடலாதிபதியின் பராக்கிரமத்தைப்பற்றி, மகாகவி ஹோமர்கூடத்தான் பாடியிருக்கிறார்! கல்லுருவங்கள் பல சமைத்தனர், கலைத் திறமையுடன்! கோயில்கள் எழுப்பினர் பல ஊர்களில்! எனினும் அறிவு வளர்ச்சி ஏற்பட்டதும், இப்படி எல்லாம் கற்பனைகளை நம்பி நம்பி, கருத்தைக் கெடுத்துக் கொள்ளக்கூடாது என்ற எண்ணம் உதித்தது. கடலின் தன்மையும் பொருளும் விளங்காவிட்டால், கண்டபடி ஒரு கதை கட்டுவதா!—என்று கேலி பேசினர் முதலில்—ஏற்கனவே கட்டப்பட்ட கதை அஞ்ஞானத்தின் அடையாளம் என்று வெறுத்துத் தள்ளினர்; இன்று விஞ்ஞானம், கடலைப்பற்றிய அறிவுரையை அவனிக்கு அளித்திருக்கிறது. பாசிடன் மறைந்தான்; மாஜி கடவுளானான்!!
❖