மாஜி கடவுள்கள்/மச்சாவதாரம்
- பாபிலோனியா நாட்டு முழுமுதற்கடவுள் பெயர் ஈயா! வடிவம், மீன்! எரிடு எனும் திருத்தலத்தில், ஈயா கடவுளுக்கு, அற்புதமான ஆலயம் கட்டி, விதவிதமான விழா நடத்தி, பாபிலோனியா மக்கள், தொழுது வந்தனர். ஈயா சாவ ரட்சகன்—சர்வ வல்லமை பொருந்தியவன்! கடலிலேதான் அந்தக் கடவுள் வாசம் செய்துவந்தார்! அண்டபிண்ட சராசரத்தையும், ஆதி மனிதனையும் அவர்தான் ஆக்குவித்தார் என்ற ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட பாபிலோனியா நாட்டு மக்கள், இந்த மச்சாவதாரத்துக்கு மகோன்னதமான ஆலயம் கட்டிக் கொண்டாடினர்.
மச்சாவதாரம்
மச்சாவதாரம்! இங்கு இன்றும், பகவான் விஷ்ணு மச்சாவதாரம் எடுத்த மகிமையைப் பற்றிப் பேசுபவர்களும், வந்தனை வழிபாட்டுக்கு உரியதாக மச்சாவதாரத்தைக் கொள்பவர்களும், ஏராளமாக உள்ளனர். ஆண்டவன் மீனாவானேன்—இதென்ன கேலிக்கூத்து, என்று கூறினாலோ, இங்கு பக்தர்களின் முகத்திலே எள்ளும் கொள்ளும் வெடிக்கும், “ஏடா! மூடா! எம்பெருமானின் தசாவதாரத்திலே ஒன்று மச்சாவதாரம் என்பதையும், மகா மகத்துவம் வாய்ந்தது என்பதையும், நாலு வேதங்களையும் ரட்சிக்கவே மச்சாவதாரம் எடுத்தார், துளசி மாலையோன் என்பதையும், அறிவாயா! அறிவிலி! இந்த அவதாரங்களிலே புதைந்து கிடக்கும் இரகசியத்தை உணரும் மனப்பக்குவம் உனக்கு உண்டோ!” என்று புராணீகர்கள் ஏசுவர். ஏதோ ஒரு காலத்திலே, இயற்கை நிகழ்ச்சிகளுக்கு விளக்கம் கிடைக்காமல், மனிதகுலம் மருட்சியுடன் இருந்தபோது, வளமான மூளைகளிலிருந்து கிளம்பின எண்ணங்கள்தானே இந்த அவதாரக் கதைகள்! என்று எவரேனும் வாதிட முனைந்தாலோ, வைதீக நெறியினர், விழியை வாளாக்கிவிடுவர்! அவ்வளவு அசைக்கமுடியாத அளவிலும், தன்மையிலும், அறியாமை, பாறையாகிக் கிடக்கிறது.
மற்றும் சிலர், மதியிலே சிறிது தெளிவும், மனதிலே மிகுதியான சூதும் நிறைந்தவர்கள், “மச்சாவதாரம் எடுத்தாரா பகவான் இல்லையா, என்பது கிடக்கட்டும், மச்சாவதாரம் என்பது உண்மையா, அல்லது உயரிய தத்துவார்த்தத்தை உணர்த்த ‘ஞானஸ்தாள்’ தயாரித்த விளக்கக் கதையா என்பதுகூடக் கிடக்கட்டும், எங்கும் கடல் மயம்—எவை மனிதகுல மேம்பாட்டுக்கு உயிரோ, அந்த வேதங்கள் காப்பாற்றப்படவேண்டும் என்ற நெருக்கடியான நிலைமை—அந்த நெருக்கடியைத் தீர்க்க, ஆண்டவன், ஆனையாக வடிவெடுத்தால் முடியுமோ, சிங்கமானால் சிக்கல் தீருமோ, புலியாக மாறினால் தீருமோ,—முடியாதல்லவா!—ஆகவேதான் மச்சமாக, மீனாக, வடிவெடுத்தார், என்று, எவ்வளவு அழகிய, அறிவு செறிந்த கற்பனையுடன், கதை தீட்டினர், பண்டு வாழ்ந்த, பரமனருள் பெற்றோர்! பண்டைய பெருமையை அறியாதானே! இந்த மனவளம், கற்பனைத் திறம், நம் நாட்டு, சிரேஷ்டர்களிடம் காணமுடியுமே தவிர, வேறு எந்த நாட்டிலேனும் இத்தகு, கற்பனை அலங்காரத் திறமை கொண்டவர்கள் உண்டோ?”—என்று கேட்பர்— தமது மேதாவித்தனமும் நிலைக்கும், பழைய முறையும் பிழைக்கும் என்ற நம்பிக்கையுடன்
மச்சாவதாரம்!—என்பது அவர்கள் கூறுவதுபோல, மனவளமும் மார்க்கத்தெளிவும், கற்பனைத் திறமும் கலை ரசனையும், கொண்ட நமது நாட்டுப் புராணீகர்களின் பிரத்யேகச் சரக்கு—அவனியில் இதுபோல வேறெங்கும் சுற்பனைத்திறம் காட்டப்பட்டதில்லை, என்று ஆராய்ச்சியாளர் எவரும் துணிந்து கூறார். ஏனெனில், மனித குலம் துள்ளி விளையாடும் பிள்ளைப் பருவத்தில் இருந்தபோது, பல்வேறு நாடுகளிலே இதுபோன்ற கதைகளைத்தான் கட்டி வைத்தனர்—இது போன்ற கடவுள்களைத்தான் தொழுது வந்தனர்.
மச்சாவதாரம்—இங்கு மகாவிஷ்ணு மட்டும்தான் எடுத்தார் என்று எண்ணிவிடாதீர்கள்.
பாபிலோனியா நாட்டுப் புராணீகன், உலக மகாப் பிரளயத்தை வர்ணிக்கிறான். இங்கு, நம் நாட்டுப் புராணீகன் சித்தரிப்பது போலவே—அது மட்டுமல்ல—பாபிலோனியாவிலேயும், ஆண்டவன் மச்சாவதாரம் எடுத்தார் என்று கூறுகிறான்.
பாபிலோனியா நாட்டு முழுமுதற் கடவுள் ஈயா! வடிவம், மீன! எரிடு எனும் திருத்தலத்தில், ஈயா கடவுளுக்கு, அற்புதமான ஆலயம் கட்டி, விதவிதமான விழா நடத்தி. பாபிலோனியா மக்கள், தொழுது வந்தனர். புதை பொருள ஆராய்ச்சியாளர்கள், ஈய கோயிலின் கலனான பகுதிகளைக்கூடக் கண்டறிந்து கூறியுள்ளனர். ஈயா, சர்வ ரட்சகன்—சர்வ வல்லமை பொருந்தியவன்! கடலிலேதான் அந்தக் கடவுள் வாசம் செய்துவந்தார்! ஒவ்வொரு நாளும் கரை வருவார், மக்களை அழைப்பார், அவர்களுக்கு அறிவூட்டி, அருங்கலைகளைக் கற்றுக் கொடுத்து வந்தார். பயிர்த்தொழில் முதற்கொண்டு பானை சட்டி செய்யும் தொழில் வரையிலே, மீன்தேவன், கற்றுக் கொடுத்தார்! பாபிலோனியா நாட்டு மச்சக் கடவுள்தான், சட்டம் வகுத்துத் தந்தார். சகல அறிவும், அவரிடமிருந்தே மக்களுக்குக் கிடைத்தது! அண்டபிண்ட சராசரத்தையும், ஆதி மனிதனையும் அவர்தான் ஆக்குவித்தார்—ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட பாபிலோனியா நாட்டு மக்கள், இந்த மச்சாவதாரத்துக்கு மகோன்னதமான ஆலயம் கட்டிக் கொண்டாடி வந்தனர். சலவைக் கல்லால் கோயிற் படிக்கட்டுகள், சர்வேஸ்வரன் ஈயாவுக்கு! மச்சாவதாரத்துக்கு இங்கு உள்ளதைவிட, மகிமை அதிகமாகவே இருந்தது, பாபிலோனியாவில்! ஆனால், எதுவரையில்? உண்மை அறிவு பிறக்கும் வரையில்! அறிவுக் கதிர் கிளம்பிற்று, ஈயா விடை பெற்றுக்கொண்டார்—மாஜி கடவுளானார்! ஆராயும் திறன் பிறந்தது, அர்த்தமற்ற கதையை அந்த நாட்டு மக்கள் மறந்தனர்! இன்று, பாபிலோனியாவிலே, மச்சாவதாரத்தைப்பற்றிப் பேசிப் பூஜித்திட, பித்தரும் முன் வருவதில்லை. மனித குலத்தின் மனமருளின் விளைவுகளிலே ஒன்று இந்த விசித்திரத் தேவன் என்று கூறுவர். அறிஞர்கள், உண்மைக் கடவுள் நெறியை அறிந்ததும், அந்த மக்கள், உதவாக்கரைகள் கட்டிவிட்ட, அர்த்தமற்ற கதைகளிலே காட்டப்படும் கடவுளரைத் தொழ மறுத்தனர்! பிரபஞ்ச உற்பத்தி, தொழில் வளர்ச்சி ஆகியவை பற்றி, தெளிவான கருத்து கிடைத்ததும், ஏமாளிகள் நம்புவதற்காக எத்தர்கள் தீட்டிய, பழைய கதைகளைத் தூக்கி எறிந்தனர்! அங்கு!! ஆனால் இங்கு? இன்றுகூட, மச்சாவதாரத்தை நம்பியாகவேண்டும், அவனே ஆத்தீகன் நம்ப மறுப்பவன் நாத்திகன், என்றல்லவா பேசுகின்றனர்—பாமரர் மட்டுமல்லவே, படித்தவர்கள் என்ற பட்டயத்தைச் சுமந்து திரிபவர் பலரும்கூட அல்லவா பேசுகின்றனர்! பாபிலோனியா, தனது மச்சாவதாரத்தை, அழுகிய பொருள் என்று தூக்கி எறிந்துவிட்டது—பாரத் வர்ஷமோ, இன்றும், தன் மச்சாவதாரத்தை மறக்க மறுக்கிறது. பாபிலோனியாவில், மச்சாவதாரம், மாஜி கடவுளாகிவிட்டது—இங்கோ, மீன் இலாக்காவைப் பற்றிப் பேசும் அமைச்சர், முதலில், மச்சாவதார மான்மியத்தைப் பற்றிய புராணமல்லவா பேசுகிறார்!
எந்த நாட்டிலேயும், தெளிவு பிறக்காத காலத்திலே, கடவுள் கூட்டம், இதுபோலத்தான், இருந்து வந்தது!
இங்கு, புராணிகன் கூறுகிறான் இந்திரன், மாறுவான் அடிக்கடி. அதாவது புண்ய பலனாக யார் வேண்டுமானாலும் இந்திரன் ஆகலாம், அவ்விதம் பல இந்திரன்கள் ஏற்பட்டனர்—ஆனால், இந்திரன் பலர் மாறி மாறித் தோன்றினாலும், இந்திராணி மட்டும், ஒரே அம்மைதான்—அதாவது, கலெக்டர் மாறுவார், இப்போது புன்னைவனநாதர் இருக்கிறார், சென்றமாதம் புவனகிரி முதலியார் இருந்தார், அதற்கு முன்பு அப்துல் லத்தீப் இருந்தார், இப்படி கலெக்டர்கள் பலர் மாறிமாறி வந்தனர். என்றபோதிலும், கலெக்டர் ஆபீஸ் நாற்காலி, முன்பு இருந்ததுதான். இப்போதும், கலெக்டர் லத்தீப் உட்கார்ந்து வேலை பார்த்த அதே நாற்காலியில்தான் புன்னைவனநாதர் இப்போது உட்கார்ந்திருக்கிறார் என்பதுபோல—இந்திரன் ஆக யார் வந்தாலும், அவனுக்கு மனைவியாக இருக்கும் திருப்பணி புரிய ஒரே ஒரு இந்திராணிதான்! இதேபோலப் பாபிலோனியாவில், ஆண் கடவுள்கள் ஆண்டுதோறும் கூட இறந்துபடுவதுண்டு—ஆனால் பெண் தெய்வங்கள், இறவா வரம் பெற்றவை! என்று புராணம் கூறுகிறது. கடவுள் ஒன்று, என்பது இன்றுள்ள அறிவு! கடவுள் பல, அன்று இருந்த எண்ணம், ஏற்பாடு அவ்விதம்! கடவுள் பல என்பது மட்டுமல்ல, ஆண் கடவுள் பெண் கடவுள் என் இருவகை! சாகும் கடவுள் உண்டு, சாகாக் கடவுள் உண்டு! இப்படி பாபிலோன் புராணம் இருந்தது. புத்தறிவு பிறந்ததும், கடவுள்கள் என்ற சொல்லே, கடவுளை அறியாதானின் பேச்சு, என்ற எண்ணம் வெற்றி கொண்டது. விளக்கமறியாதாரின் வெட்டிப் பேச்சு, கடவுள்களை நடமாடவிட்டன என்ற நல்லறிவு பிறந்தது! கடவுள்கள் என்று கூறினாலே கைகொட்டிச் சிரிக்கலாயினர், கருத்துத் தெளிவு பெற்றோர்! இனி நமக்கு வேலையில்லை, என்று கண்டுகொண்டதாலோ என்னவோ, பாபிலோனியக் கடவுள்கள், மாஜிகளாயின! கோயில்களிலே கொலுவீற்றிருந்துகொண்டு கோலாகலமான வாழ்க்கை நடத்திவந்த கடவுள்கள், மாஜிகளாயின! கோல்கொண்டோரும் வேல்கொண்டோரும், தாள் பணியவும், நரபலியிலிருந்து நவரத்ன ஆபரணம் வரையிலே பக்தர்கள் காணிக்கை செலுத்தவும், புலவர்கள் பாடவும், பூஜாரிகள் ஆடவும், அளவற்ற கீர்த்தியுடன், ஆலயங்களிலே அரசோச்சி வந்த கடவுள்களெல்லாம், மாஜிகளாயின! தத்துவார்த்தம் பேசி, அந்தக் கடவுள்களை யாரும் இன்று வழிபடுவதில்லை! காவியமெருகு தரப்பட்டிருக்கிறது; எனவே கருத்தற்றது எனினும், இதனைத் தள்ளிடல் தீது, என்று பேசுவார் அங்கெலாம் இல்லை! காகமாயிரம் கூடினும் ஓர் கல்லின்முன் எதிர் நிற்குமோ என்றபடி ஆகிவிட்டது அங்கு! இங்கு? புதிதாகத் தந்தாலும், பத்தோடு பதினொன்றாகச் சேர்த்துக்கொள்ளச் சித்தமாக உள்ள பக்தர்களல்லவா உள்ளனர்! தங்கத்தால் கழலணி செய்தான் பிறகும், இரும்பு வளையத்தைக் காலிலிருந்து கழற்ற மறுப்பது மதியீனம் என்றுதானே, எவரும் கூறுவர்! கண் இரண்டு இருந்தால் மட்டும் போதாது, பக்கத்திலே ஒரு புண் இருந்தாக வேண்டும் என்று கருதி, முகத்தைக் கூர்வாள் கொண்டு குத்திக் கொள்பவன் பித்தன்தானே! பட்டாடை அணிந்து, அதன்மேல், மரப் பட்டையையும் அணிபவரை, என்னென்று கூறுவது. ஆண்டவன் அருளின் இருப்பிடம், அன்பின் பிறப்பிடம், ஒருவனே தேவன், என்ற, உண்மை நெறியையும் பேசிக்கொண்டு, மச்சம், வராகம், கூர்மம், ஆகியவைகளையும் விடமுடியாது, என்று பிடிவாதம் பேசுபவர்களை, உண்மை ஆத்தீகர் என்று எப்படிக் கூறமுடியும்! மற்ற நாடுகளிலே ஆபாசமும் அர்த்தமற்ற தன்மையும் கொண்ட கற்பனைக் கடவுள்கள் மாஜிகளாகிவிட்டனர். அங்ஙனம் மாஜியான கடவுள்களிலே ஒன்றுதான், பாபிலோன் நாட்டு மச்சாவதாரம்!!
❖