மாஜி கடவுள்கள்/மதுதேவன் பேகஸ்
- கிரேக்கரும் ரோம் நாட்டவரும், குடி வகைகளை எப்படித் தயாரிப்பது என்ற “ஞானத்தை”த் தந்து, மக்களை ரட்சித்தவர் என்று, பேகஸ் என்ற கடவுளைப் பூஜித்து வந்தனர். சாமான்யமான முறையிலே அல்ல, கோலாகலமாக: விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரல்ல, திரள் திரளாக. குடி தந்த கடவுளுக்கு, பக்தர்கள் நடத்திய திருவிழா, மற்றத் திருவிழாக்களைவிட ரம்மியமானதாகவே இருந்ததாம்!
மதுதேவன் பேகஸ்
சிறுத்தைகள் பூட்டப்பட்ட ரதம்! அதிலே ஒரு சிங்காரத்தேவன்! அவனைச் சூழ்ந்து பக்தர் கூட்டம்! அவர்களுக்கெல்லாம் அந்தத் தேவன் தந்த அருளால், வெறி ஏறும் அளவுக்குப் பானம்! அதைப் பருகிவிட்டு, ‘அவன் அருளை’ப் புகழ்ந்து பாடுவராம், ஆவராம், ஆடவரும் பெண்டிரும். காட்சியை மனக் கண்கொண்டு காணுங்கள்!
கிரேக்கரும் ரோம் நாட்டவரும், குடிவகைகளை எப்படித் தயாரிப்பது என்ற “ஞானத்தை”த் தந்து மக்களை ரட்சித்தவர் என்று, பேகஸ் என்ற கடவுளைப் பூஜித்து வந்தனர்; சாமான்யமான முறையிலே அல்ல, கோலாகலமாக; விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரல்ல, திரள்திரளாக. குடிதந்த கடவுளுக்கு, பக்தர்கள் நடத்திய திருவிழா, மற்றத் திருவிழாக்களைவிட ரம்மியமானதாகவே இருந்ததாம்! பக்தியும் மதுவும் ஒருசேர உள்ளே சென்றுவிட்டால், திருவிழா கொண்டாடுபவரின் பாட்டும் கூத்தும் சாதாரணமாகவா இருந்திருக்கும்.
குடி—மனிதகுல மாண்பைக் கெடுக்கும் பொருளாயிற்றே, இதையா கடவுள் தருவார்—மதுதந்த கடவுள், கடவுள்தானா—என்ன மதியீனம் என்று கேட்கத் தோன்றும், இன்று, இங்குள்ளவர்களுக்கு.
பேகஸ், மக்களின் பூஜைக்குரிய தெய்வங்களிலே ஒருவனாகத்தான் மதிக்கப்பட்டு வந்தான்—பன்னெடுங்காலம் கிரீசிலும், ரோமிலும்—இப்போதல்ல, இளித்தவாயர்களாக அம் மக்கள் இருந்த நாட்களில். இப்போது பேகஸ், ஒரு மாஜி!!
இந்தக் கதையைக் கேட்டுக் கைகொட்டிச் சிரிக்கும் நம்மவர்கள், நமது நாட்டில், நமது நாட்களில், காட்டேரி, மதுரைவீரன், முதலிய தெய்வங்களுக்கு ‘மது’ வைத்துப் பூஜை நடத்துவது ‘பக்தி’யின் இலட்சணம் என்று எண்ணும் ஆத்தீகர்கள் இருப்பதை மறந்துவிடுகின்றனர்!
அறிவு பரவாத நாட்களில் அந்த நாடுகள் நடத்திவந்த ‘ஆபாச ஆட்டங்களை’ உலகம் இவ்வளவு முன்னேறிய நிலையிலேயும், நமது நாட்டினர், பக்தியின் பேரால் செய்கின்றனரே என்பதை ஒரு கணமேனும் எண்ணிப் பார்ப்பவர்கள் உண்மையிலேயே, வெட்கப்படுவர், வேதனைப்படுவர்—எவ்வளவு ஆபாசமான, அறிவுக்குப் பொருந்தாத பூஜையாக இருப்பினும், தமது கூரிய மதியினைக் கொண்டு ஏதேனும் ஒரு தத்துவார்த்தம் கூறி, பாமரரைப் பழமையின் பிடியிலேயே இருந்திடச் செய்யும் ‘கற்றோர்’ இங்கு இருப்பதால்தான், இங்கு இன்னமும் காட்டேரியும் மதுரை வீரனும், இருக்கமுடிகிறது. பேகஸ், மாஜியாகிவிட வேண்டி நேரிட்டது, கிரீசிலும் ரோமிலும்! அறிவு, விரட்டிற்று, ஆபாசத்தை.
அறிவு பரவா முன்பு, குடிவகைகளை மக்கள் தயாரிப்பதற்கு, ‘அருள்பாலித்த’ தெய்வமாக, பேகஸ், விளங்கினான். புராணம், அவன் பெருமைபற்றி! பூஜாரிகள் அவன் கோயிலுக்கு!!
முழுமுதற் கடவுள் ஜுவஸ் தேவன்தான், அழகிகளைக் கண்டால், அடங்காத பசி கொள்பவனாயிற்றே, அவன் வேட்டையாடிப் பெற்ற விருந்து ஒன்றின் விளைவுதான், பேகஸ்.
பூலோகத்திலே தீப்ஸ் நாட்டு மன்னன் காட்மஸ் என்பானுக்கு செமிலி என்றோர் மகள்—அழகி—எனவே ஜுவஸ் அவளை நாடினான்—கூடினான்–தகப்பனாரைக் கேட்டுத் திருமணம் செய்துகொண்டான் போலும் என்று எண்ணுகிறீர்களா, செச்சே! அது கேவலம் மாந்தரின் முறையல்லவா, தேவன் அப்படியா செய்வார்!! அவள் அழகி, இவர் ஆண்டவன்! பிறகு என்ன!!
மானிட வடிவுடனேதான், அந்த மங்கையுடன் குலவுவார்—ஆனால், உண்மையை மட்டும் கூறாமலில்லை, ‘நங்கையே! நாம் யாரெனில், கூறுதும் கேண்மினோ! நாமே, தேவதேவன்! தேவர்கட் கரசன்! முழுமுதற் கடவுள் ஜூவஸ், நாம்தான்!’—என்று சொல்லிவைத்திருந்தார். மனதிற்கிசைந்த மணாளன் மட்டுமல்ல, விண்ணுலக வேந்தனாகவல்லவா இருக்கிறார் நமது காதலர், என்று உருகி இருப்பாள் அந்த உல்லாசி. இந்த விருந்து வைபவம் நடைபெற்றுக்கொண்டிருந்தது—மனதிற்கிசைந்த ராஜா —மதிமுக விலாசா!—என்று அணங்கு பாட, விண்ணகம் தன்னில் காணேன் உன் விழியின் அழகுபோலே!! என்று அவர் பாட, ஆனந்தமாக இருந்து வந்தனர் போலும். விஷயம் எப்படியோ, அம்மைக்குத் தெரிந்துவிட்டது. ஹீரா தேவியார், தன் கணவனின் காமலீலை பற்றிக் கேள்விப்பட்டதும் கடுங்கோபம் கொண்டார்கள். இதைக் கருக்கித் தீருவது என்று முடிவுசெய்து ஒரு தாதி போல் வேடமணிந்து பூலோகம் சென்று, செமிலியிடம் பழகினார்கள்.
கடவுளையே காதலனாகப் பெற்ற காரிகையிடமிருந்து, பக்குவமாகப் பேசி, பாசத்துடன் பழகி, உண்மையை அறிந்து கொண்டார்கள். பிறகு தந்திரம் புரிந்தார் தேவியார்.
“பைத்தியமே, பைத்தியமே! எவனோ ஒரு எத்தன்—ஏய்க்கிறான். அவன் மொழி கேட்டு மயங்கிவிட்டாயே! உன்முகம், மலர்! பற்கள் முத்து, மேனி பசும்பொன்! எழில் அரசிளங்குமரி, நீ—உன்னை யாரோ ஒரு நாடோடி வென்றுவிட்டான்”
“தோழீ! துடுக்குத்தனமாகப் பேசாதே—வடிவழகனடி என் காதலன்! வானவில்லிலே உள்ள வர்ணஜாலம் அவ்வளவும் அவர் முக விலாசத்திலே காண்கிறேன். அவர் வாய் திறந்தால், அமிர்தமடி, அமிர்தம், என் செவியில் பாய்கிறது! அவர் தொட்டால் உடல் சிலிர்க்கிறது. கட்டி அணைத்தால்,...ஆஹா!!”
“அழகனாக இருக்கட்டுமடி, அனுபவமற்றவளே! அவன், கடவுள் என்று கூறுகிறாயே!...கடவுளா!”
“சாதாரணக் கடவுளல்லடி, சுவையறியாதவளே! ழுமுதற் கடவுள், தேவதேவன் ஜூவஸ்!!”“நன்றாக ஏய்த்துவிட்டான் வேடக்காரன்!”
“ஏய்த்தானா...என் நாதனா...போடி பித்துப்பிடித்தவளே...ஜூவஸ்தான் அவர்!”
“அவன் சொல்கிறான் அவ்விதம், ஆனால், நீ, அந்த வடிவிலே கண்டாயா?”
“இல்லை மானிட வடிவிலேதான் இங்கு வருவார்!”
“ஏனாம்...! தேவ வடிவத்தை ஒருமுறைகூடக் காட்டாத காரணம் என்ன? கேட்டுப் பார்! உண்மையிலேயே, ஜீவசாக இருந்தால், ‘விஸ்வரூபம்’ காட்டுவார்—எத்தனாக இருந்தால் விழிப்பான்—எப்படியும் உண்மை வெளிப்பட்டுவிடும்.”
“சரி—இன்றே கேட்கிறேன்”
“சாக்குப்போக்குச் சொல்லி தப்பித்துக்கொள்ளப் போகிறான்.”
“சத்தியம் செய்யச் சொல்லிவிடுகிறேன், முதலிலேயே”
தாதி வேடமணிந்து வந்த ஹீரா தேவியார் தூபமிட்டதற்கிணங்க, செமிலி, தன்னை நாடி வழக்கம்போல வந்த ஜுவசை வற்புறுத்தலானாள், உண்மை வடிவம் காட்டு என்று. எவ்வளவோ கூறியும் பிடிவாதத்தை விடவில்லை. என்ன செய்வார்! சத்தியம் செய்துவிட்டார் முதலிலேயே—தரிசனம் தந்தாலோ செமிலியே சாம்பலாகிவிடுவாள். இந்த விபரீதமான வேண்டுகோள்மட்டும் வேண்டாம் என்று எவ்வளவு கூறியும், செமிலி பிடிவாதம் செய்தாள். ஜீவஸ், தன் தேஜோனமயமான வடிவைக் காட்டலானார்—அவ்வளவுதான் மாளிகையும் அங்கிருந்த பொருள்களும் சாம்பலாகிவிட்டன—சுந்தரியின் கதியும் அதே விதமாகிவிட்டது. ஜூவஸ், செமிலியிடம் தனக்குப் பிறந்த ஆண் குழந்தையை மட்டுமே காப்பாற்றமுடிந்தது. அந்த தேவப்பிரசாதம்தான், பேகஸ்.
பேகசின் பிறப்புக்கு இப்படி ஒரு புராணம். பொறுத்தம் பார்த்தல், காரணம் கேட்பது, ஆகியவை கூடாது என்பது பூஜாரியின் சட்டம். பூபதிகள் பூஜாரிகளுக்குத் துணை நின்றனர். எனவே இந்த அர்த்தமற்ற கதை ஆத்தீகமாகத் திகழ்ந்தது, பல காலம்.
பேகசைத் தொலைக்கவும், ஹீராதேவியார் பல முயற்சி செய்தார்கள்—ஜூவசின் தயவால் பேகஸ் தப்பினான்.
திராட்சைப் பழச் சாறைக்கொண்டு போதை தரும் பானத்தைத் தயாரிக்கும் முறையை, மாந்தருக்கு இந்தத் தேவன் கற்றுக் கொடுத்தான்—இதன் காரணமாகவே பூஜிக்கப்பட்டு வந்தான்.
வெறி ஏறும் விதமாகக் குடித்துவிட்டுக் கூத்தாடும் விழா பரவிற்று. ஆடவரும் பெண்டிரும் மதுதேவனின் பூஜை என்று கூறிக்கொண்டு மனம் போனவாறு ஆடலாயினர். இந்த அக்ரமத்தை ஆத்திகம் என்றும் கூசாது கூறினர். இதைத் தீப்ஸ் நாட்டு மன்னன் வெறுத்தான். பேகசின் சீடன் ஒருவனைப் பிடித்து விசாரணை நடத்தினான்—பேகஸ் கோபம் கொண்டு, அந்த மன்னனை அவன் நாட்டு மக்களைக் கொண்டே சாகடித்தான். பேகஸ் விழா கொண்டாடினராம் அந்த நாட்டு மக்கள்—அதாவது குடித்துவிட்டுக் கூத்தாடினர். அப்போது அவர்கள் கண்களுக்கு, தங்கள் மன்னன் காட்டுப்பன்றிபோல் தெரிந்தாராம். பேகசின் வேலைத்திறம் அது என்கிறான் புராணீகன். குடிவெறியில் இருந்த மக்கள் மன்னனைக் குத்திக் கொன்றுவிட்டார்களாம்.பேகஸ் தேவனுடைய ‘பிரபாவ’ விளக்கக் கதைகள் இதுபோல் பலப்பல உண்டு.
ஒருமுறை இந்தத் தேவன் கடலோரத்திலே படுத்துறங்கும்போது, சிலர் கட்டித் தூக்கிக், கப்பலில்போட்டு, எகிப்து நாட்டிலே கொண்டு சென்று அடிமையாக விற்றுவிட முனைந்தனராம். கடலில் கலம் செல்லும்போது பேகஸ் கண் விழித்துக்கொண்டார். காதகர்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். தன்னை நாக்சாஸ் தீவிலேவிட்டு விடும்படி—அவர்கள் இணங்கவில்லை. உடனே, பேகசின் கோபம் சாபமாகி, கலம் கடலில் அசைவற்று நின்றுவிட்டது. புதிய புதிய பாய்மரங்களை அமைக்கிறார்கள்—கப்பல் அசையவில்லை. பேகசின் சக்தியின் முன் சாமான்யர்களான மனித சக்தி என்ன செய்யமுடியும்! கலங்கினர்—கடைசியில், தன்னைச் சிறை பிடிக்கத் துணிந்த செருக்கர்களை மீன்களாகி விடும்படி சாபமிட்டுவிட்டார்.
பேகசின் காதல் விளையாட்டுக் கதைகளும் புராணீகன் தந்தான்.
மற்றக் கடவுள்களுக்கு இருந்துவந்தது போலவே இந்த மதுதேவனுக்கும், மக்கள் மன்றத்திலே செல்வாக்கு இருக்கத்தான் செய்தது. கோயில்கள் உண்டு! கொண்டாட்டங்கள் பலப்பல. எல்லாம் இருந்தது பாமரர் ஏமாளிகளாக இருந்தவரையில்! பாடுபடுபவன் பணத்தைப் பகற்கொள்ளைக்காரன் பக்தி என்ற பெயர் கூறிப் பறித்திடும் பாதகச் செயல், ‘ஆத்திகம்’ என்ற பெயருடன் இருந்த வரையில். பிறகோ! முழு முதற் கடவுள் ஜூவசின் கதிதான், அவருடைய காதற் கனியாம் பேகசுக்கும்—மாஜியானான்.
❖