மாஜி கடவுள்கள்/மாஜி கடவுள்கள்
- எந்தச் சாமிகளின் சார்பிலே, அந்த மக்கள், அறிஞர்களை அழிக்கத் துணிந்தனரோ, அந்தச் சாமிகள் இன்று இல்லை! அத்தனை கடவுள்களும்-பண்டைய நாட்களிலே பாபிலோன், கிரீஸ், ரோம், எகிப்து, சீனா போன்ற பல நாடுகளிலே, கோடிக்கணக்கான மக்களால் கும்பிடப்பட்டு வந்த கோலாகலமான கடவுள்களும் கும்பிடப்படுவதில்லை. கோயில் இல்லை, கொட்டு முழக்கில்லை, எந்தெந்தத் தெய்வங்கள் எந்தெந்த நாட்டிலே இருந்தனவோ அந்த நாடுகளிலே இன்று சென்று கேட்டால், அந்தக் கடவுளரைக் காட்ட முடியாது! சாக்ரட்டீசைச் சாகடித்த கிரேக்க நாட்டிலே இன்று சாக்ரட்டீசுக்காகப் பரிந்து பேசவும், வாழ்த்தவும் மக்கள் உள்ளனர். ஆனால் எந்தத் தெய்வங்களை சாக்ரட்டீஸ் நிந்தித்தார் என்று குற்றம் சாட்டி விஷம் கொடுத்து அவரைக் கொன்றனரோ அந்தக் கடவுள்கள் இன்று அங்கே இல்லை!
மாஜி கடவுள்கள்
கடவுளின் கொலுமண்டபத்திலே காமப்பித்தம் கரைபுரண்டு ஓடுவதா? மகாஜனங்களே! உங்கள் முழு முதற் கடவுள் ஜூவஸ், என்ன கதியானான் தெரியுமா? அவனுடைய பத்னி, தர்மபத்னி, ஹீராவின் கதி என்ன தெரியுமா? பக்திசெய்து முக்தி பெற்றவன் செய்த பாதகச் செயல் என்ன தெரியுமா? காமக்குரோதாதிகளை அடக்கி ஆள்பவனே ஆண்டவனின் அருள் பெறுவான் என்றுதானே பேசுகிறீர்கள்? பூஜை செய்வது அதன் பொருட்டு என்றுதானே கூறுகிறீர்கள்? பக்தியில் மூழ்கிக் கிடப்பவர்களே! பாவ புண்யம் பேசுபவர்களே! பக்தன், மோட்சலோகம் சென்று, தேவலோகம் சென்று, கடவுள் சன்னிதானத்திலே என்ன செய்தான் என்று உங்களுக்குத் தெரியுமா? தூய்மைக்கு இருப்பிடந்தானே தெய்வ சன்னதி. மும்மலம் நீக்குபவன்தானே முழுமுதற் கடவுள். காயத்தின் அனித்யத்தை உணரும் கடவுள் சன்னிதானத்திலே நடந்த அக்ரமத்தைக் கூறுகிறேன், பதறாமல் கேளுங்கள்.
“மகாஜனங்களே! லப்பீதே என்ற தேசத்து மன்னன், மோட்சலோகம் சென்றான். தேவர் உலகம் போவது என்றால் அவன், புண்யசாலி என்றுதானே அர்த்தம்? காமக்குரோதமற்றவன், பழிபாவம் செய்யாதவன் என்ற காரணத்தால்தானே, இக்சியான்—அந்த மன்னன் பெயர் அது—ஆண்டவனின் அருள்பெற்றான். எல்லோருக்கும் கிடைக்கமுடியாத அப்பேறு பெற்றவன், இறைவனாம் ஜூவசின் இல்லம் சென்றான். அவன் என்ன செய்தான்? என்ன செய்திருக்க வேண்டும்? இறைவா! இணையில்லாதவனே! என்மீது கிருபை பாலித்தவனே! என்று தொழுதிருக்கவேண்டும், உருக்கத்துடன். இக்சியான், இறைவனை மறந்தான், இறைவனின் துணைவியார், ஹீரா தேவியார்மீது தன் காமக் கண்களை வீசினான். லோக மாதா என்று பஜிக்கிறீர்களே! அந்த ஹீரா அம்மையார்மீது மோகம் கொண்டான். அம்மையை நெருங்கியும் விட்டான், நெஞ்சிலே மிஞ்சிய காமத்தால் தூண்டப்பட்டு.
பிறகு ஜுவஸ் அவனைத் தண்டித்தார். கேட்டீர்களோ, மகாஜனங்களே! இறைவனுடைய இல்லத்திலே, அவருடைய துணைவியை, லோக மாதாவை, மக்களின் வணக்கத்துக்கு உரிய ஹீரா தேவியாரைத் தன் இன்பவல்லியாக்கிக் கொள்ளத் துணிந்தான், பக்தியால் முக்தி பெற்றவன். எப்படி இருக்கிறது, உங்கள் கடவுளின் குடும்ப விவகாரம்! தூய்மையால், தேவர் உலகு புகுந்தவனின் மனதிலே மோகம் குடிபுகுந்த காரணம் என்ன? இறைவனின் இல்லத்திலேயே இத்தகைய இழி செயல் புரியும் துணிவு கொண்டவன், எப்படிப் பரமனின் அருளுக்குப் பாத்திரமானான்?
“ஒன்றுக்கொன்று பொருத்தம் இருக்கிறதா, கூறுங்கள். மக்களின் மனதுக்கு எட்டாதவராக, கடந்தவராக உள்ள கடவுளைப்பற்றி இவ்விதமான ஆபாசமான கதைகள் இருக்கலாமா? அவைகளை நீங்கள் புண்ய கதைகள் என்று நம்புவதா? இப்படித்தானா இறைவனைத் தெரிந்து கொள்ளும் முறை இருக்க வேண்டும்? தேவியாரைப் பற்றியும், முக்திபெறுகிற அளவு பக்குவமான பக்தி செய்தவனின் யோக்யதை பற்றியும் ஒருபுறம் இருக்கட்டும். உங்கள் முழுமுதற் கடவுள ஜூவஸ் இருக்கிறாரே, வானமுட்டும் கோயில் கட்டி, வணங்கித் திருவிழாக்கள் பல நடத்திவருகிறீர்களே ஜூவசுக்கு, அவருடைய கதை இருக்கும் விதத்தைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்!”
“ஐவஸ், முழுமுதற் கடவுள் அவர் செய்தது என்ன? தந்தையைத் துரத்தி அடித்தார், அதிகாரத்தைக் கைப்பற்றினார், தகப்பனின் அரச பீடத்தில், துராக்கிரகமாக ஏறிக்கொண்டு, தன் சதிச் செயலுக்கு உடந்தையாக இருந்த தம்பிமார்களுக்கு அதிகாரத்தில் கொஞ்சம் பங்கு கொடுத்துக் கடவுளானார்! தங்கையைத் தாரமாகக் கொண்டார்! அதிகார வெறி, சதிச்செயல், சூது, சூழ்ச்சி, சொந்த சுயபோகத்திலே மிகுந்த அக்கரை கொண்டவர் ஜுவஸ்-அவரைப்பற்றி நீங்களே கூறும் கதையின்படி பார்த்தால். ஆனால் அவர்தான் உங்கள் கடவுள்! கடவுளின் இலட்சணம் இதுதானா? தகப்பனைத் தவிக்கவிடுவதும், தங்கையைத் தாரமாக்கிக் கொள்வதுந்தானா, தயாபரனின் திருக்கூத்தாக இருக்கவேண்டும்? கூசாமல் கூறுகிறீர், இவைகள் கடவுளின் திருக்கூத்து என்று. இவைகளை நான் எடுத்துக் காட்டினாலோ, நான் கடவுளை ஏசுகிறேன் என்று கோபிக்கிறீர். கோபமின்றிக் கூறுங்கள், கடவுளின் இலட்சணம் இப்படி இருக்கலாமா? எவ்வளவு காமச் சேட்டை செய்தார் என்று கதை கூறுகிறீர்கள். மகாஜனங்களே! இப்படிப்பட்ட யோக்யதையுள்ள கடவுளால், என்ன நன்மை, என்னவிதமான ஒழுக்கம் ஏற்படமுடியும்? உங்களின் கடவுள் இப்படிப்பட்ட இலட்சணம் பொருந்தியவர் என்பது தெரிந்தால், உலகம் உம்மைக் கேலி செய்யாதா? அறிஞர்கள் உங்களை மதிப்பார்களா? காமப் பித்தம் கொண்டு அலைவது கடவுட் கொள்கையா! எவ்வளவு கேவலம்! எவ்வளவு அறிவீனம்! எவ்வளவு கோரமான உருவங்கள் கோயிலிலே! அவைகள் முன்னின்று என்னென்ன கோணற சேட்டை செய்கிறீர்கள்! நரபலி கேட்குமோ தெய்வம்! நாலு தலை, பத்துக்கை, பலவித முகம் கொண்டு இருக்குமோ? இப்படியோ, இறைவன் இருப்பார்? இதுவோ மதம்? இதுவோ மதி? இதற்கோ நாட்டுப் பெருநிதி பாழாக வேண்டும்? சேச்சே! எவ்வளவு கேவலம், மோசம்.”
கிரேக்க நாட்டிலே, கிருஸ்து பிறக்குமுன்பு, ஐந்தாம் நூற்றாண்டிலே, ஆண்டவன் பெயரால் நடத்தப்படும் ஆபாசங்களைக் கண்டித்து, கடவுளைப்பற்றிக் கயவர்கள் கட்டிவிட்ட கதைகளை விளக்கி, மக்களுக்கு மதி புகட்ட வேண்டுமென்று, மேற்கண்டவாறு கர்ஜனை புரிந்து வந்தார். டையகோராஸ் (Diagoras) என்ற அறிஞர். அவருடைய அறிவுரை, மக்களுக்கு ஆத்திரமூட்டிற்றேயொழிய அறிவு விளக்கத்தை அளிக்கவில்லை.
“ஆஹா! எவ்வளவு வாய்க்கொழுப்பு இவனுக்கு? எவ்வளவு நெஞ்சு அழுத்தம்? நமது கடவுளரைப் பழிக்கிறான் பாபி! இவன் நா புழுக்காதா? இவன் மீளா நரகம் சேர்வான்” என்று மக்கள் கோபத்துடன் பேசினரே தவிர, அறிஞன் கூறுவது அவ்வளவும் மறுக்கமுடியாத உண்மையாகவன்றோ இருக்கிறது, என்று தெளிவு அடையவில்லை.
தெளிவு பிறவாத நிலையிலே அந்த மக்கள், அறிவும் சுடர் கொளுத்திய டையகோராஸ், அழிக்கப்படவேண்டும் என்று கொக்கரித்தனர். ஊர் திரண்டது உண்மையை உரைத்த உத்தமனை ஒழிக்க. டையகேராரஸ், தான் பிறந்த (Melos) மீலாஸ் என்னும் ஊரைவிட்டு ஓடி, காரிநித் என்ற தேசத்தில் தங்க நேரிட்டது. கி. மு. 500-ல், கடவுள் பெயரால் பரப்பப்பட்ட பொய்க்கதைகளைக் கண்டித்த அறிஞனின் கதி, அவ்விதம் இருந்தது. அறிவு புகட்டச் சென்றான், ஆத்திரம் கொண்ட மக்களால் அவதிப்பட்டான். ஆனால் வெற்றிபெற்றவன் அவனே! ஓட்டம் பிடித்தவனை, எப்படி வெற்றி வீரன் என்று புகழ்வது? ஐனங்களின் ஆத்திரத்தைக் கண்டு அஞ்சி, உயிர் தப்பினால்போதும் என்று ஊரைவிட்டே ஓடிவிட்டவனல்லவா அந்த டையகோராஸ். அவனுடைய கோழைத்தனத்தைப் பரிகசிக்க வேண்டியதுதானே முறை; ஏன் அவன் ஓடினான்? என்று கேட்கவே எவருக்கும் தோன்றும். டையகோராஸ், உயிருக்குப் பயந்து ஓடினவன்தான்; உண்மை. அச்சம் இருந்தது அந்த அறிஞனுக்கு; உண்மை. ஆனால் அவனே வெற்றிபெற்றவன். அந்த உண்மையை அறிய, அவனுடைய வாரிசுகளைக் கவனிக்கவேண்டும். டையகோராஸ், மீலாஸ் நகரைவிட்டு ஓடி, காரிநித் தேசம் சென்றான். அங்கேதான் அவன் இறந்ததுங்கூட. ஆனால் மறுபடியும், அவன் உலவினான் கிரேக்க நாட்டுக் கடைவீதியில். முன்பு ஓடிப்போன டையகோராஸ் சொன்னவைகள்போல இதோ இவன் சொல்கிறானே என்று கிரேக்கர் மறுபடியும் பேச நேரிட்டது. பகுத்தறிவும் பயமும் கலந்த உருவில் டையகோராஸ், காட்சியளித்தான். பிறகு பயம் நீங்கி பகுத்தறிவும் சகிப்புத்தன்மையும் கலந்த உருவம் காண்கிறோம். அந்த உத்தம உருவமே, சாக்ரட்டீஸ். சாக்ரட்டீசும், சிறு மதியைச் சாடினான்; கடவுள் பெயர் கூறி நடத்தப்படும் காரியங்களைக் கண்டித்தான்; அறிவுக்கண் கொண்டு பாருங்கள், ஆலயங்களிலே கொலுவீற்றிருக்கும் தெய்வங்களின் ஆபாசம் தெரியும் என்று பேசினான். டையகோராஸ், சாக்ரட்டீஸ் இருவரும், பகுத்தறிவுக்குப் படைத்தலைவர்கள்; வெவ்வேறு நிலை. முன்னவர் ஏறக்குறைய முறியடிக்கப்பட்டார், விரட்டி அடிக்கப்பட்டார்; சாக்ரட்டீஸ் விரட்டி அடிக்கப்படவில்லை, பயந்து ஓடவில்லை, பணியவுமில்லை, சாகடிக்கப்பட்டார். வெளிநாட்டிலே அல்ல, கிரேக்க நாட்டிலேயே. பகுத்தறிவு ஊராரின் பகை கண்டு, ஓடி ஒளிந்துகொண்டது முதலில். சாக்ரட்டீசின் நாளிலேயும் ஊர்ப்பகை இருந்தது. ஊராள்வோரின் பகையும் பிறந்தது; ஆனால், ஊரைவிட்டு ஓடவில்லை. உயிர் துறந்தார் ஊரிலேயே பகுத்தறிவு டையகோராஸ் காலத்துக்கும் சாக்ரட்டீஸ் காலத்துக்கும் இடையே வலுவடைந்தது, என்பதுதான் பொருள். முதலில், பகுத்தறிவைப் பேசமட்டுமே ஆள் இருக்கக் கண்டனர். சாக்ரட்டீஸ் காலத்திலே, பகுத்தறிவுக்காகப் பேசமட்டுமல்ல, கஷ்ட கஷ்டம் ஏற்க, உயிரையே தரச் சித்தமாக இருக்கும் சிலரை உலகினர் கண்டனர்.
“அது தவறு இது தவறு என்று உளறுவர்; அடித்தால் அக்ரமக்காரர், அடங்குவர்”—இது, ஜனங்களின் பேச்சு. முதலில், டையகோராஸ் காலத்தில் காரிநித்துக்கு ஓடினான் டையகோராஸ் என்ற உடனே களிப்புடன் அந்த மக்கள், “கண்டீரோ வேடிக்கையை! கண்டபடி பேசி, நமது கடவுளரை ஏசினானே அந்தக் கயவன், அவன் கால் பிடரியில்பட ஓடிவிட்டான், பிழைத்தால் போதும் என்ற பயம் பிடித்துக் கொண்டது அந்தப் பெருவாயனுக்கு” என்று பெருமையுடன் பேசிக்கொண்டிருப்பர். ஆனால் அதே மக்கள் சாக்ரட்டீஸ் காலத்திலே என்ன பேசி இருப்பர்? “சாக்ரட்டீஸ் நமது கடவுள்களை நிந்திக்கிறானே, அவன் நாசமாய்ப்போக” என்று தூற்றியவர்கள்கூட, சாக்ரட்டீஸ், தான்கொண்ட கொள்கைக்காக உயிரைத் திரணமாகக் கருதி, சிறையில் கடுவிஷத்தைச் சிறிதும் சித்தம் கலங்காமல் குடித்து இறந்தான் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் திகைத்துப் போயிருப்பர். தங்களுடைய “விரோதி” ஒழிந்தான், இனிப் பயமில்லை, என்ற மனநிலை அல்ல; “உயிரைக்கூட இழக்கத் துணிந்தானே!” என்று பயந்திருப்பர்; பேசவும் நாவெழாத நிலை பிறந்திருக்கும். சாக்ரட்டீஸ், பிணமான அன்றுதான், பகுத்தறிவுக்குப் புதியதோர் களை, சக்தி, மதிப்பு, பிறந்தது என்று கூறலாம். ஊரார் அல்லவா விரட்டினர் டையகோராசை! சாக்ரட்டீஸ் நாட்களிலே, ஊரில் இரண்டு கட்சி! பகுத்தறிவு, தனக்கு ஓர் இடம் தேடிக்கொண்டது. பகுத்தறிவின் சார்பிலே பேச, ஆதரவு தர, ஊரிலே ஒரு பகுதி மக்கள் திரண்டுவிட்டனர். சாக்ரட்டீஸ், குற்றவாளியா அல்லவா என்பதை விவாதிக்கக்கூடிய நீதி சபையிலே 501 பேர் இருந்தனர். சாக்ரட்டீஸ் குற்றவாளி என்று தீர்ப்புக் கூறினவர்கள் 281. சாக்ரட்டீஸ் குற்றவாளி அல்ல என்று கூறினவர்கள் 220. பகுத்தறிவு, பழைய கால அமுலுடன், ஏறக்குறைய சரிசமமாகப் பலம் சேர்த்துக் கொண்டுவிட்டது. 61 பேர் அதிகம் பழைமைப் படைக்கு! சாக்ரட்டீஸ் பிணமான பிறகு, படைபலத்தின் நிலை தலைகீழாக மாறிவிட்டது! அவர் இருந்தபோதுங்கூட, டையகோராஸ் பயந்து ஓடிவிட நேரிட்டதுபோன்ற நிலைமை இல்லை. 501 பேரில் 220 பேர், பகுத்தறிவுக்காகப் பரிந்துபேச முன்வந்தனர்! இதன் பொருள் என்ன? முதலில் ஊரே பகைத்தது, பிறகு ஊரிலே பாதிப் பகுதியினர் பகுத்தறிவின் பக்கம் சேர்ந்தனர். யாருக்கு வெற்றி? பழமை திரட்டிவைத்திருந்த பட்டாளத்திலே ஒரு பகுதி, படைபலமின்றி இருந்த பகுத்தறிவுக்குக் கிடைத்துவிட்டது.
டையகோராஸ் போலவே, சாக்ரட்டீசும், கிரேக்க மக்கள் கண்மூடித்தனமாக கும்பிட்டுக் கூத்தாடிவந்த கடவுட் கூத்தைத்தான் கண்டித்தார். சாக்ரட்டீஸ்மீது சாட்டப்பட்ட குற்றம், “கிரேக்கர்கள் தொழுதுவந்த தேவர்களைப் பொய்த் தெய்வங்களென்று சொல்லி வாலிபர்களைக் கெடுத்தார்” என்பதுதான்.
“இதற்குமுன் எவ்வளவோ உத்தமர்களை ஊர் மக்கள் கோபத்தாலும் அறியாமையாலும் வதைத்துள்ளனர். நானும் பாமரரின் கோபத்துக்குப் பலியாகிறேன். எனக்குப் பிறகும், பலர் பலியாகித் தீருவார்கள்” என்று சாக்ரட்டீஸ் சொன்னார். அவர் இறந்தபோது, பகுத்தறிவு முன்பு இருந்ததைவிட அதிக வலுவடைந்தது. ஊராரின் உள்ளம் அடியோடு மாறிவிடவில்லை என்ற போதிலும், உயிர்போகுமே என்ற பயத்துக்காகப் பகுத்தறிவாளர்கள், தமது பணியை நிறுத்திக்கொள்ள மாட்டார்கள் என்ற எண்ணம் வேரூன்றிவிட்டது. தியாகிகளின் இரத்தமே, அதற்கு நீராகப் பாய்ச்சப்பட்டது. அறிவுத் துறைக்கு இந்த ‘அபிஷேகம்’ நடத்த நடத்த, ஆதிநாட்களிலே அமைக்கப்பட்டு, ஆலயங்களிலே கொலுவீற்றிருந்து, பூஜாரிகளைக் கொழுக்க வைத்துக்கொண்டிருந்த “சாமி”களுக்கு நடக்கும் “அபிஷேகம்” குறையத் தொடங்கிற்று. கடவுளின் லீலைகளைப்பற்றிய பேச்சிலே ஈடுபட்டிருந்த மக்கள், பகுத்தறிவாளர்கள் இரத்தம் சிந்திய வரலாறுகளைப் பேசத்தொடங்கினர். அந்தப் பேச்சு ஓங்க ஓங்க, தேவாலயப்பூஜாரிகள் தூங்க ஆரம்பித்தனர். அவர்கள், தங்கள் சாமிகள் சகலரையும் ஒரேயடியாகத் துணைக்கு அழைத்துப் போரிடவேண்டிய நிலைமையை ஏசு உண்டாக்கினார்; அவர்களைக் கொன்று அல்ல; தான் சிலுவையில் அறையப்பட்டு. ஏசுவைச் சிலுவையில் அறைந்தது, சாக்ரட்டீஸ் விஷம் குடித்து 500 வருஷங்களான பிறகு! சிலுவையில் அறையப்பட்டவர் ஏசு, ஆனால் உயிர் நீத்தது யார்? பழைய சாமிகள்! பல காலமாகப் பாமரரை ஆட்டிப்படைத்த “கடவுட் கூட்டம்”
சிற்பிகளின் சிருஷ்டிகளான கோயில்களிலே, கோலாகலமாக வீற்றிருந்த எண்ணற்ற குட்டித் தெய்வங்கள் மக்களால் மறக்கப்பட்டு மாஜிகளாயின.
பல காலமாகப் பெற்றுவந்த பூஜைகள், பலிகள் நின்றுபோயின. பரம்பரை பரம்பரையாக இருந்துவந்த பூஜாரிக் கூட்டம், வேலை இழக்க நேரிட்டது.
“எங்கள், சாமிகளையா இப்படி எல்லாம் தூற்றுகிறாய்? பாவி! எவ்வளவு அருமையான தெய்வங்களடா அவை! அவைகளின் சக்தி உனக்கென்னடா தெரியும், மூடா! அந்தச் சாமிகளைப்பற்றி எவ்வளவு அழகான பாசுரங்கள் உள்ளன தெரியுமா? கலைப் பொக்கிஷமல்லவா, கடவுள் சம்பந்தமான காவியங்கள்? சிற்பிகளின் சிருஷ்டி அல்லவா கோயில்கள்! இவைகளையா பழிப்பது? அதர்மக்காரா!” என்று தூற்றி, டையகோராசை ஊரைவிட்டு ஓடும்படி செய்தது போலவும், சாக்ரட்டீசைச் சாகடித்தது போலவும், அறிவு பரப்பத் துணிந்தவர்களை அழித்தனர், அறிவுத் தெளிவு இல்லாததால் ஆத்திரம் கொண்ட மக்கள். ஆனால் பலன் என்ன? எந்தச் சாமிகளின் சார்பிலே, அந்த மக்கள், அறிஞர்களை அழிக்கத் துணிந்தனரோ, அந்தச் சாமிகள் இன்று இல்லை!! அத்தனை கடவுள்களும்-பண்டைய நாட்களிலே பாபிலோன், கிரீஸ், ரோம், எகிப்து, சீனா போன்ற பல நாடுகளிலே, கோடிக்கணக்கான மக்களால் கும்பிடப்பட்டுவந்த கோலாகலமான கடவுள்களும் இன்று கும்பிடப்படுவதில்லை கோயில் இல்லை, கொட்டு முழக்கில்லை, எந்தெந்தத் தெய்வங்கள் எந்தெந்த நாட்டிலே இருந்தனவோ அந்த நாடுகளிலே இன்று சென்று கேட்டால், அந்தக் கடவுளரைக் காட்டமுடியாது! சாக்ரட்டீசைச் சாகடித்த கிரேக்க நாட்டிலே இன்று சாக்ரட்டீசுக்காகப் பரிந்துபேசவும், வாழ்த்தவும் மக்கள் உள்ளனர். ஆனால், எந்தத் தெய்வங்களைச் சாக்ரட்டீஸ் நிந்தித்தார் என்று குற்றம் சாட்டி விஷம் கொடுத்து அவரைக் கொன்றனரோ அந்தக் கடவுளர்கள் இன்று அங்கே இல்லை. இப்படி எல்லாமா கடவுளர் இருந்தனர்? இவ்விதமாகவா நீங்கள் கூத்தாடினீர்கள்? இவ்வளவு ஆபாசமாகவோ கடவுளைப்பற்றிக் கதை இருந்தது என்று கேட்டால், வெட்கப்பட்டு, அறிவுத் தெளிவு இல்லாத நாளிலே, அஞ்ஞான இருள் இருந்த காலத்திலே, காட்டுமிராண்டிகளாக இருந்தபோது, பல கடவுள், கடவுளுக்குப் பல உருவம், கடவுளுக்குத் தாய் தகப்பன், பிள்ளை குட்டி, கூத்தி குடும்பம், என்றெல்லாம் கூறினோம், காவியம் எழுதினோம், கோயில்கள், கட்டினோம்; அறிவு பிறந்ததும், அத்தனை கடவுளரும் அர்த்தமற்ற கற்பனை என்பதை அறிந்தோம், என்று கூறுவர். சாக்ரட்டீஸ் குடித்த விஷம், பலப்பல சாமிகளைச் சாகடித்தது.
மக்களின் மதி துலங்கியதால், மாஜிகளான கடவுளரின் எண்ணிக்கை ஏராளம். ஒரு சில மாஜிகளை மட்டுமே கூறமுடியும். உருத்தெரியாமல் மட்டுமல்ல, பெயர் தெரியாமல் போய்விட்ட கடவுளரும் உண்டு. இன்று நம் நாட்டிலே உள்ளது போலத்தான், சாக்ரட்டீஸ் சாகுமுன்பு, பகுத்தறிவுக்காக இரத்தம் சிந்தும் உத்தமர் தோன்று முன்பு, கிரீசிலும் ரோமிலும், நார்வேயிலும் ஸ்வீடனிலும், சீனாவிலும் எகிப்திலும், எந்த நாட்டிலும், விதவிதமான கடவுள் கூட்டம் இருந்துவந்தன. புராண இதிகாசங்களும், லீலைகளும், திருவிளையாடல்களும், இன்று இங்கு நம் நாட்டில் இருப்பது போலவே, அங்கெல்லாம் இருந்தன. இன்று இங்கு பகுத்தறிவு பேசப்பட்டால், பழமை கண்டிக்கப்பட்டால், கடவுள்பற்றி இப்படி எல்லாம் ஆபாசமான கதைகள் இருக்கலாமா ஆண்டவன் ஒருவன், அவன் உருவமற்றவன் என்று கூறினால், மக்கள் கோபித்து, சந்தேகித்து, பகுத்தறிவு பேசுபவர்களை நாத்திகர் என்று நிந்தித்து வதைக்கிறார்களே, அதேபோலத்தான், அங்கெல்லாம் நடந்திருக்கிறது.
அந்நாடுகளுக்கும் இந்நாட்டுக்கும் உள்ள வித்தியாசம், அங்கெல்லாம், கடவுட்கொள்கை தெளிவடைந்து பல நூற்றாண்டுகளாகிவிட்டன. இங்கு, பழைய நாட்களில் இருந்துவந்த எண்ணம் இன்றும் குறையவில்லை. வெளிநாடுகளிலே, ஒரு காலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி இருந்து, கோலாகலமான ஆட்சி செய்திருந்து, காவியர், ஓவியர், பூஜிதர் என்பவர்களால் போற்றப்பட்டு மகாசக்தி வாய்ந்த தெய்வங்கள் என்று புகழப்பட்டு, மணிமுடி தரித்த மன்னரையும், மத யானையை அடக்கும் மாவீரனையும் வணங்கவைத்து, அரசு செலுத்திய, எத்தனையோ ‘சாமிகள்’ இதுபோது, அந்த நாடுகளிலே மாஜி கடவுள்களாகிவிட்டன என்பதை நம் நாட்டு மக்கள் அறியவேண்டும். கோடிக்கணக்கான மக்கள் கோடிகோடியாகப் பணம் செலவிட்டுக் கோயில் சுட்டிக் கொலுவிருக்கச்செய்த கடவுளர், இன்று அங்கே மாஜிகளாயினர்! அதனால், அந்த நாடுகளில், மக்கள் கெட்டுவிடவுமில்லை, மதி தடுமாறிவிடவுமில்லை, அழிந்துபடவுமில்லை. அங்கு கலையோ, காவியமோ, சிற்பமோ, ஓவியமோ அழிந்துபோகவுமில்லை. மக்கள் நாஸ்திகர்களாகி விடவுமில்லை, அஞ்ஞானம் தொலைந்து மெய்ஞ்ஞானம் பிறந்தது. ஆலயங்கள் ஆசாபாசத்தின் பீடமாய், பூஜாரிகளின் குகைகளாய் இருந்த கேடு நீங்கி கடவுள் தூய்மையின் இருப்பிடம், அவர் ஒருவர், உருவமற்றவர், உன்னதத்தின் பிறப்பிடம் என்ற உண்மைக் கடவுட் கொள்கையுடன் மக்கள் வாழுகிறார்கள். நமக்கு இன்றும் இருப்பதுபோன்ற மாரியும் மன்மதனும், காட்டேரியும் காகவாகனனும், வாயுவும் வருணனும், அவர்களுக்கும் இருந்தன. நமக்கு இருக்கும் புராண இதிகாசங்கள் போல அவர்களிடமும் இருந்தன. நமது கடவுளர் கதைகளிலே காமலீலைகள் வர்ணிக்கப்படுவதுபோல அவர்களிடமும் இருந்தன. இன்று அவைகளை, அஞ்ஞானிகளின் விளையாட்டு என்று அந்த நாட்டு மக்கள் ஒதுக்கிவிட்டனர்; அவர்கள் வாழ்கிறார்கள்; நாமோ இன்னமும் அடிமைகளாய், வறுமையின் பிடியில் சிக்கி வதைகிறோம்; மாஜிகளான கடவுளரின் முழு விபரமும் தருவது முடியாத காரியம்—தேவையுமில்லை. பல ராஜ்யங்களின் ரட்சகர்களென்று கருதப்பட்டு, காவிய கர்த்தாக்களால் புகழப்பட்ட, ஒரு சில மாஜிகளை மட்டுமே இங்குக் குறிப்பிடுகிறேன் உலகின் போக்கு உங்கட்குத் தெரியட்டும் என்ற எண்ணத்துடன். இதோ “மாஜிகள்” பாருங்கள்;
அப்பாலோ (Apollo)
கிரேக்கர்களின் முக்கியத்துவம் வாய்ந்த கடவுள்களில் ஒருவர். இங்குச் சூரியபகவான்போல, அங்கு அப்பாலோ கருதப்பட்டு மக்கள் அவருக்குத் தொழுகை நடத்தி வந்தனர்.
அபாடான் (Aphadon)
நரகலோகக் காவலன், ஆண்டவனின் முத்திரை மோதிரத்தின் குறி, வருகிறவர்களின் முகத்திலே இருக்கிறதா என்று பார்ப்பான். இல்லை என்றால், அவர்களைப் படுபாதானத்தில் தள்ளி இம்சைக்கு ஆளாக்குவான்.இயோலஸ் (Aeolos)
கிரேக்க நாட்டவருக்கு இயோலஸ், வாயுபகவான். இவர் நல்ல காற்று, கெட்ட காற்று என்று பிரித்துத் தோல் பைகளில் அடைத்துத் தருவார். அதன்படி பலாபலன்கள் இருக்கும்.
அப்ரோடைட் (Aphrodite)
கிரேக்க நாட்டு அழகுத்தெய்வம். இந்தத் தெய்வத்தின் அருளால் அழகு வரும் என்பது கிரேக்கரின் நம்பிக்கை. அப்ரோடைட் க்யூபிட் என்னும் கடவுளுக்குத் தாய். க்யூபிட், கிரேக்க நாட்டு மன்மதன். காதற் கணைகளை ஏவும் தெய்வம். இந்த அப்ரோடைட் என்ற அழகுத்தெய்வத்திடம் காதல் கொண்டு சேஷ்டைசெய்து, அவமானமடைந்த கடவுள் ஒன்று உண்டு. அந்தக் கடவுள் பெயர் ஆரிஸ்.
ஆரிஸ் (Aris)
கிரேக்கர்கள், யுத்த தேவதையாக ஆரிஸ் என்னும் கடவுளைக் கும்பிட்டு வந்தார்கள். இந்தக் கடவுளுக்குச் சண்டையிலே மிகுந்த பிரியம். ஆரிஸ் ஒரு சமயத்திலே அப்ரோடைட் என்ற அழகுத் தெய்வத்திடம் ஆசைகொண்டு சேஷ்டை செய்ய, அதனை மற்றக் கடவுள்கள் கண்டுபிடித்துக் கேலிசெய்து, ஆரிசை அவமானப்படுத்திவிட்டார்கள்.
ஆர்ட்டிமிஸ் (Artimes)
அப்பாலோ போலவே ஆர்ட்டிமிஸ் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கடவுள், கிரேக்கருக்கு. ஆர்ட்டிமிஸ் கன்னி! கால் நடைகளின் ரட்சிப்பு வேலை ஆர்ட்டிமிசுக்கு.பேகஸ் (Bacchus)
புலிகள் பூட்டப்பட்ட இரதத்திலேறிச் செல்லும் பேகஸ் என்ற கடவுள், குடிவகைகளுக்குத் தெய்வம். ஜூவஸ் என்ற கடவுளின் குமாரன்.
பால்டர் (Balder)
நார்வே நாட்டுச் சூரியபகவான்; அழகன்; விவேகி என்று பால்டரைப் புகழ்வர் அம்மக்கள். பால்டர் எனும் கடவுள், ஓடின், பிரிக் எனும் தேவனுக்கும் தேவிக்கும் பிறந்த குழந்தை. இந்த பால்டர் என்ற நார்வே நாட்டுச் சூரிய தேவனை, விஷமத்தனம் செய்யும் கடவுளான லோகி கொன்றுவிட்டதாகக் கதை கூறுவர்.
பெல்லோனா (Bellona)
ரோம் நாட்டவருக்கு, யுத்த தேவதை; மார்ஸ். பெல்லோனாவும் யுத்த தேவதையே. சிலர் பெல்லோனாவை மார்சுக்கு மனைவி என்பார்கள். சிலர் சகோதரியென்றும், வேறு சிலர், மகள் என்றும் கூறுவர். பெல்லோனா, கரத்திலே தீப்பந்தத்துடன் உலவிப் போர்க் காரியத்தைக் கவனிப்பதாகக் கூறுவர்.
பூடிஸ் (Bootes)
கிரேக்கநாட்டுக் கடவுளர் கூட்டத்திலே பூடிசும் ஒருவர். இந்தக்கடவுளே, கலப்பையைக் கண்டுபிடித்தவராம். ஆகவே பூடிஸ் விவசாயத்துக்குக் கடவுளாகக் கருதப்பட்டு வந்தார்.
போரியாஸ் (Borias)
வடதிசைக் காற்றுக்குக் கடவுள் என்று கருதி போரியாஸை மக்கள் வழிபட்டனர்.பிராகி (Bragi)
நார்வே நாட்டில், கவிதைக்குக் கடவுள், பிராகி. ஓடினுக்கும் பிரிகாவிற்கும் பிறந்தவர். நீண்ட வெண்தாடியுள்ள கிழ உருவில் இக்கடவுள் இருந்துகொண்டு, போர்க் காலத்தில் உயிர்நீத்தவர்களை, சொர்க்கத்திலே வரவேற்கிறார் என்பது அந்நாட்டு மக்கள் கொண்ட நம்பிக்கை.
கிளைடை (Clydy)
அப்பாலோ என்ற கடவுளைக் காதலித்த கிளைடையும் ஒரு கடவுளே. அப்பாலோ, கைவிட்டுவிடவே, கிளைடை உருகிப்போனதுடன், கடைசியில் சூரியகாந்திப் பூவாக உருமாறிவிட்டதாகக் கதை உண்டு.
லக் (Luck)
அயர்லாந்திலே, லக் என்ற கடவுளை மக்கள் வணங்கினர். லக் அந்த நாட்டுச் சூரியதேவன்.
க்யூபிட் (Cupid)
ரோம் நாட்டுக்கு மன்மதன் க்யூபிட், காதற் கணைகளைச் செலுத்துவது இந்தக் கடவுளின் வேலை. குழந்தை உருவில் கையில் வில் அம்புடன், கண்கள் துணியால் மூடிக் கட்டப்பட்டு இருக்கும் விதத்திலே க்யூபிட் எனும் கடவுளை ரோம் நாட்டவர் சித்தரித்தனர்.
சிபிலி (Cybele)
வட ஆசியாவிலே, சிபிலி என்றோர் கடவுளை, அமோகமான ஆடல்பாடல்களுடன், மக்கள் வழிபட்டுவந்தனர், கோலாகலமான பூஜை நடத்துவர், குடித்துக் கூத்தாடுவர், இந்தக் கடவுளை மகிழ்விக்க. சிபிலி, இயற்கை எழிலுக்குக் கடவுள் என்பது அந்த மக்கள் எண்ணம்.டயானா (Diana)
ரோம் நாட்டவர், டயானா என்ற கடவுள் ஒளி தருபவன் என்று வணங்கினர். அதாவது சந்திரன் இங்கு ஆண், அங்குப் பெண்கடவுள். அதிலும் கன்னி, சதாசர்வ காலமும் தோழிகளுடன் சேர்ந்துகொண்டு உல்லாசமாக வேட்டையாடுவது டயானாவுக்கு விருப்பம். எபீசஸ் என்ற இடத்திலே டயானாவுக்குக் கட்டப்பட்ட கோயில் உலக அதிசயங்களிலே ஒன்று.
டயனீஷியா (Dionysia)
பேகஸ் போலவே குடிவகைகளுக்குத் தெய்வமாக டயனீஷியா எனும் கடவுளைக் கிரேக்கர்கள் கொண்டாடி வந்தனர். பேகன், ரோம் நாட்டவருக்கு. டயனீஷியா, கிரேக்கருக்கு. இந்தக் கடவுள் பூஜை, வெறிக்கக் குடித்துவிட்டுக் கூத்தாடுவதுதான். டயனீஷியாவின் பிறப்பு வேடிக்கையான ஒரு கதை. கர்ப்பமாக இருக்கும்போதே தாய் இறந்துபோகவே, தாயின் கருப்பையிலிருந்து டயனீஷியா வெளியே எடுக்கப்பட்டு, பிறகு ஜூவஸ் எனும் கடவுள் தன் தொடையிலேயே வைத்திருந்து, வளர்த்தாராம்.
மூன்று சகோதரிகள் (Three Sisters)
விதியை, இங்கே பிரம்மா எழுதுகிறார் என்றல்லவா கதை. கிரேக்க நாட்டிலே, “விதி” நெய்து, துண்டுகளாக அறுத்து எடுக்கப்படுகிறது. இந்தக் காரியத்துக்கு மூன்று கடவுள்கள் மும்முரமாக வேலை செய்த வண்ணம் உள்ளனர். மூவரும் பெண்கள். Clotho க்ளோத்தோ, Larchesis லர்ச்சீசிஸ், Atropos அட்ரோபாஸ் என்பது அவர்கள் பெயர். ஒரு கடவுள் நூற்க, மற்றோர் கடவுள் நெய்ய, மூன்றாம் கடவுள், துண்டுகளாக வெட்டி எடுத்து வீச இவ்விதமாக, மக்களின் வாழ்வு மேலே நெய்து அனுப்பப்படுகிறது என்று கிரேக்கர்கள் நம்பி, அந்த மூன்று தேவதைகளையும் வணங்கி வந்தனர்.
பானஸ் (Paunus)
இங்கே சனிபகவான் இருப்பதுபோல், கிரேக்க நாட்டிலே சாட்டர்ன் என்றோர் கடவுள். அந்தக் கடவுளின் பேரப்பிள்ளை பானஸ். பானஸ் வயல்கள், ஆடு மாடுகள் இவற்றின் ரட்சகன், என்று கொண்டாடப்பட்டு, கடவுளாகக் கும்பிடப்பட்டார், லாட்டியம் தேசத்தில்.
பைடிஸ் (Fides)
சொன்னசொல் தவறாத குணத்தைக் கடவுளாக்கி பைடிஸ் என்ற பெயரில் ரோம் நாட்டவர்கள் வணங்கினர். இந்தக் கடவுளுக்கெனத் தனிக்கோயில் கட்டித் திருவிழா நடத்தி வந்தனர்.
ப்ளோரா (Flora)
தோட்டங்களின் தேவி, மலர்களின் மாதா, ப்ளோரா. ரோம் நாட்டவர் இப்படி ஒரு கடவுளையும் வழிபட்டு வந்தனர்.
ப்ரியர் (Prear)
நார்வே ஸ்வீடன் காடுகளின் கடவுள், ப்ரியர். வெளிச்சம், மழை, முதலியவற்றைத் தந்து, சாந்தி சுபிட்சம் சகலமும், தரும் கடவுளாகப் ப்ரியரைக் கும்பிட்டனர்.
ப்ரிகா (Frigga)
நார்வே நாட்டுக் கடவுள். பூமாதேவி, என்று இங்கு புராணத்தில் கூறப்படும் கடவுள்போல, அந்த நாட்டுக்குப் ப்ரிகா. இந்தக் கடவுளை ஓடின் Odin என்ற கடவுள் கலியாணம் செய்துகொண்டார்.காத் (Gad)
அதிர்ஷ்ட தேவதை என்று பாபிலோனிய மக்கள் காத் என்ற ஒரு கடவுளை, வணங்கி வந்தனர்.
டிமிடர் (Dameter)
பூலோகத்திலும், மேல் உலகிலும் உள்ள சகல ஜீவராசிகளுக்கும், மாதாவாக, டிமிடர் என்ற ஒரு கடவுளைக் கிரேக்கர்கள் கொண்டாடி வணங்கி வந்தனர்.
கனிமீடிஸ் (Ganymedes)
கிரேக்கக் கடவுளான ஜுவஸ், பூலோகவாசியான கனிமீடிஸ் என்ற அழகான வாலிபனைக் கண்டு, அவனிடம் மையல் கொண்டு அவனைக் கடவுளாக்கி தன் பக்கத்திலேயே இருக்கும்படிச் செய்துவிட, கனிமீடிஸ் கடவுளாகி, ஜூவஸ் என்ற கடவுளுக்குப் பானம் ஊற்றித்தரும் பணியை மேற்கொண்டு வரலானான்.
ஹாதார் (Hathar)
தேவலோக ராணியாக ஹாதார் என்ற கடவுளை ஈஜிப்ட் நாட்டவர் வழிபட்டு வந்தனர்.
ஹிபி (Hepe)
கிரேக்கக் கடவுள் ஜூவசுக்கு மகள் ஹிபி, அழகி. ஹிபியும் ஒரு கடவுளாகவே வணங்கப்பட்டு வந்தாள். கிரேக்கவீரன் ஹெர்முலின் இறந்து மோட்சலோகம் வந்ததும் ஹிபியை மணம் செய்துகொண்டான்.
ஹிகேட் (Hecate)
பூலோகம், தேவலோகம், நரகலோகம் ஆகிய மூன்று இடங்களிலும் அதிகாரம் செலுத்தி, எண்ணற்ற பிசாசுகளை ஏவலராகப்பெற்று, மூன்று தலைகளுடன் விளங்கிய, பராக்கிரமக் கடவுளாக, கிரேக்கர்கள் ஹிகேட் என்னும் தெய்வத்தைத் தொழுது வந்தனர்.ஹெயிம்ட்லர் (Heimdler)
நார்வே நாட்டுக் கடவுளரில் ஒருவர். தேவலோக வாசற்காவல் இக்கடவுளின் வேலை. அங்கு வானவில்தான் பாலமாக அமைந்திருக்கிறது. ஹெயிம்ட்லர் ஒளிதரும் கடவுள். புல்முளைக்கும்போது உண்டாகும் சத்தம்கூட இந்தக் கடவுளின் காதிலே விழுமாம். ஹெயிம்ட்லர் எனும் கடவுளுக்கும், லோகி என்னும் கேடுசெய்யும் கடவுளுக்கும் அடிக்கடி போர் நடக்குமாம். கடைசியில், ஒருவரை ஒருவர் கொன்று கொண்டனர். இரண்டு கடவுள்களும் இறந்தனர்.
ஹெல் (Hel)
நார்வே நாட்டுத் தேவதை கேடுசெய்யும் லோகி என்னும் கடவுளின் குமாரியான ஹெல், மரணத்துக்கு அதிபதி.
ஹீரா (Hera)
கிரேக்கக் கடவுளான ஜூவசுக்கு, ஹீரா தங்கை. தங்கையையே ஜூவஸ் கல்யாணம் செய்துகொண்டார். ஜூவசுக்கு மானிடர்மீது இருந்து வந்த அன்பு, ஹீராவுக்குப் பொறாமையையும் கோபத்தையும் ஊட்டவே, ஜூவசின் குழந்தைகளை, ஹீரா, கொடுமை செய்தாள்.
ஹெர்மீஸ் (Hermes)
நம்நாட்டு நாரதர்போல கிரேக்கர்களுக்கு, ஹெர்மீஸ். ஜூவஸ் என்ற கடவுளுக்கு மாயா என்ற தேவதை மூலம் பிறந்த ஹெர்மீஸ் என்ற கடவுள், தேவர்களுக்குத் தூதனாகவும், தந்திரமிக்கக் கடவுளாகவும் இருந்து வந்தான், என்று கிரேக்கக் கதை இருக்கிறது. இறக்கைகொண்ட தலையணியும் செருப்பும் தரித்துக்கொண்டிருப்பதாகக் கூறுவர்.ஹெஸ்ப்ரிடஸ் (Hesperides)
ஹீரா, ஜூவசைக் கல்யாணம் செய்துகொண்டபோது, சீதனமாகத் தரப்பட்ட பொன் ஆப்பில் பழங்களைப் பாதுகாக்க ஏற்பட்ட தேவகன்னியர்கள் ஹெஸ்ப்ரிடிஸ் என்பவர்கள். இவர்களையும் கிரேக்கர்கள் – தொழுது வந்தனர்.
ஹைஜியா (Hygea)
கிரேக்கர்கள் ஆரோக்கிய தேவதையாக, ஹைஜியாவை வழிபட்டு வந்தனர். இந்தக் கடவுள், கன்னி. கையில் ஒரு கோப்பையுடன் இருப்பதாகவும், அந்தக் கோப்பையிலிருப்பதை ஒரு பாம்பு பருகுவதாகவும் சித்தரித்துள்ளனர்.
ஹைமன் (Hymen)
கலியாணக் கடவுள், கிரேக்கருக்கு, இந்த ஹைமன். இந்தக் கடவுள் அப்பாலோ, கடவுளின் மகன்.
இஸ்கால்பியஸ் (Aescualpius)
அப்பாலோ கடவுளின் குமாரன், மருந்துக்குக் கடவுள். பாம்பு சுற்றிக்கொண்டிருக்கும் தடியைக் கையிலே, வைத்திருப்பான்.
போமோனா (Pomona)
ரோம் நாட்டவர் தங்கள் தோட்டங்களில் பழ வகைகள் செழிப்பாகக் கிடைப்பதற்காக, போமோனா என்ற தேவதையைப் பூஜித்து வந்தனர்.
ப்ரோடியஸ் (Proteus)
கிரேக்க நாட்டுக் கடல் தேவன், இந்த ப்ரோடியஸ். எதிர்காலத்தில் நடக்க இருப்பதைக் கூறும் சக்தி இக்கடவுளுக்கு. ஆனால், திடீர் திடீரென்று உருமாறும். அப்போது ஆரூடம் பலிக்காது. இயற்கையான உருவிலிருக்கும்போது சொன்னால்தான் ஆரூடம் பலிக்கும்.
ரா (Ra)
ஈஜிப்ட் நாட்டவரின் முக்கியத்துவம் வாய்ந்த கடவுள். அந்நாட்டுச் சூரிய பகவான்.
ரீயா (Rhea)
கிரேக்கக் கடவுள்களான ஜூவஸ், ப்ளூடோ, ஹீரா முதலியவர்களின் தாயார்.
வீனஸ் (Venus)
காதல் தெய்வமாக, ரோம் நாட்டவர் வீனசை வணங்கினர்.
வெஸ்ட்டா (Vesta)
ரோம் நாட்டிலே குடும்பத் தேவதையாக வெஸ்ட்டாவை வணங்கி வந்தனர். ஒவ்வொரு வீட்டிலும் வெஸ்ட்டாவுக்குப் பூஜை அறை உண்டு.
வல்கன் (Vulcan)
ரோம் நாட்டுக்கு வல்கன், அக்னி தேவனாக விளங்கினான். ஜூபிடர் கடவுளுக்கு வல்கன், இடிமின்னல் எனும் ஆயுதம் தயாரித்துக் கொடுப்பான்.
கிரீட் தேவி (Crete Devi)
கிரீட் நாட்டு நாக கன்னிகையாக ஒரு தெய்வம் இருந்தது.
ஜூவஸ் (Zeus)
கிரேக்கரின் மூலக் கடவுள் ஜூவஸ். தேவலோகத்தில், கையில் (மழுவாயுதம்போல்) இடிமின்னல் ஆயுதம் தாங்கிக் கொலுவீற்றிருக்கிறார். தேவதேவனாகப் போற்றப்பட்ட ஜூவஸ், க்ரோனாசுக்கும் ரியாவுக்கும் தோன்றி தன் சகோதர சகோதரிகளின் துணையுடன், தகப்பனுக்கு எதிரிடையாகப் புரட்சி நடத்தி, அதிகாரத்தைக் கைப்பற்றி, சகோதரர்களுக்கு சில லோகங்களையும் அதிகாரங்களையும் பங்கிட்டுக் கொடுத்து, தன் தங்கையைத் தானே மணம் செய்துகொண்டு, உலகை ரட்சித்து வருகிறார் என்பது கிரேக்கரின் கடவுட் கொள்கை.
இன்னும் எண்ணற்ற கடவுள்கள், கோயில் கொண்டு எழுந்தருளியிருந்த நாடுகளிலே, இன்று, நிலைமை அடியோடு மாறிவிட்டது. காளிதாசன், கம்பன், போன்ற கவிவாணர்களால் போற்றிப் புகழப்பட்ட அந்தக் கடவுள்களெல்லாம், இன்று மாஜிகள்! இன்றும் நம் நாட்டிலே, நம்மவர்கள் நம்புகிறார்களே, அதுபோலவே அந்தக் காலத்திலே அந்த நாடுகளிலெல்லாம் இன்று மாஜிகளாகிவிட்ட கடவுள்களிடம், பலவகையான அஸ்திரங்கள் உண்டு என்றும், அற்புதம் புரிவதிலே அபாரமான திறமை உண்டென்றும் மக்கள் நம்பினர், அந்த நம்பிக்கையை நாட்டிலே பரப்பவும் பலப்படுத்தவும் பல புராணங்கள் இருந்தன. அந்தப் புராணங்கள் புண்ய கதைகளென்று போற்றப்பட்டு வந்தன. அவ்வளவும் இன்று அங்கு பழங்கதைகளாகிவிட்டன. மதம் வேறு, மக்களின் மனதிலே மாசுபடிந்திருந்தபோது, கட்டிவிடப்பட்ட இந்தக் கதைகள் வேறு என்பதை மதிவாணர்கள் தைரியமாக எடுத்துக்கூறினர். மருண்ட மக்கள் செய்த கொடுமைகளைச் சகித்துக்கொண்டனர். புராணீகன் தேவ அம்சம் பெற்றவன், புராணப் புலவன் அருட்களி, பூஜாரி தேவதூதன் அவர்களைக் குறைகூறுவது கொடிய பாவம் என்றுதான், அங்கெல்லாம் மக்கள் முன்பு நம்பினர். யாராவது தைரியமாக, இவைகளைக் கண்டிக்க முன்வந்தால், ஆத்திரம் கொண்டு அவர்களை அடித்தனர், இம்சித்தனர், கொளுத்தினர், சித்திரவதை செய்தனர். இவ்வளவு கொடுமைகளையும் சகித்துக்கொண்டவர்களின், தொண்டின் பயனாகவே அங்கு அறிவாலயங்கள் ஆயிரமாயிரமாகி, மக்கள் முன்னேற முடிந்தது. ஒரு காலத்திலே, ஓங்கார சொரூபங்களாக விளங்கிய ஆயிரக்கணக்கான கடவுள்கள், இன்று மாஜிகளாயினர்.
பலகாலமாக மக்கள், பயபக்தியோடு தொழுது வரும் தெய்வங்களைப் பேய் என்று கூறுவது, சுலபமான வேலை அல்ல, எல்லோரும் செய்யக்கூடிய வேலையுமல்ல, அதற்கு இருக்கவேண்டிய நெஞ்சு உரமே வேறுவிதமானது. அறியாமை என்னும் முரட்டுக் குதிரைமீது ஏறிக்கொண்டு, கொடுமை எனும் வேல் பிடித்துக்கொண்டு, கூட்டம் கூட்டமாக, மக்கள் பாய்ந்து வருவர். கடவுளை நிந்திக்கிறான் கயவன், இவனைக் கொன்று, உடலை காக்கை கழுகுக்கு இரையாக்குகிறோம் என்று கூவுவர், இந்தப் பயங்கரமான சூழ்நிலையிலே இருந்து கொண்டு, எதுவரினும் வருக என்ற நிலையில் பாடுபட்டனர், சில புரட்சி வீரர்கள். ஒரு பிரபுவின் ஆதிக்கத்தை, ஒரு அரசனின் ஆதிக்கத்தை எதிர்த்து புரட்சி நடத்துவது என்றாலே உயிர்போகும். மக்கள் மனதிலே நெடுநாட்களாக குடிகொண்டுள்ள, எண்ணற்ற தெய்வங்களை, அவைகளைப்பற்றிக் கட்டிவிடப்பட்ட கதைகளை, அந்தக் கதைகளுக்கேற்றபடி நடைபெற்று வரும் திருவிழாக்களை, சடங்குகளை, அவைகளால் பிழைத்துவரும் பூஜாரிக் கூட்டத்தை எதிர்த்துப் பணிபுரிவதென்றால், சாமான்யமான காரியமல்ல. வாழ்விலே பற்று அற்றால் மட்டுமே, அந்தப் பணிபுரியமுடியும்.
புத்தறிவு பரப்புவதற்கு நடத்தப்படவேண்டிய போர், பலம் பொருந்தியதோர் கோட்டைக்குள் இருக்கும், மாயாவாதியை, வெளியே, வெட்ட வெளியில் நின்றுகொண்டு, எதிர்க்கும் ஆபத்தான காரியம் போன்றது. கோட்டைக்குள்ளே காவல் இருக்கும், ஆட்பலத்துடன் ஆயுத பலமும் ஏராளமாக இருக்கும், சுற்றுச் சுவர் பாதுகாப்பு அளிக்கும், சூழ்ந்திருக்கும் அகழியும் பாதுகாப்பு அளிக்கும், இத்தகைய பலமான கோட்டைக்குள் இருக்கும் எதிரியின் ஆதிக்கத்தை, தன்னந்தனியனாய் வெட்டவெளியில் நின்று எதிர்ப்பது மிகக் கஷ்டமான காரியம். ஆனால் ஒரு சிலராவது முன் வந்து அந்தக் கஷ்டமான காரியத்தில் ஈடுபட்டதால் மட்டுமே, தட்டை உலகம் உருண்டையாகிவிட்டது, தலை பல கொண்ட தேவன், பலி பல கேட்கும் பகவான், தேவியருடன் திருவிளையாடல் செய்யும் கடவுட் கூட்டம் என்ற எண்ணங்கள் மாறி ஆண்டவன் ஒருவன், அவன் உருவமற்றவன் என்ற உண்மை துலங்கலாயிற்று.
❖