மாஜி கடவுள்கள்/லாக் தேவன்
- லாக் தேவன் ஓடினுக்குத் தம்பி—தார் தேவனுக்குச் சிற்றப்பன். சிண்டு முடிந்து விடுவதுதான் லாக் தேவனுக்குப் பொழுது போக்கு கடவுளர் உலகிலே, கலகமூட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பான், இந்த லாக். லாக்கின் அக்ரமச் செயல்களால், கடவுளர் உலகே அடிக்கடி அவதிக்கு ஆளாகுமாம்.
லாக் தேவன்
“வம்புக்காரன்! வல்லடி செய்பவன்! கலகக்காரன்! கெட்ட எண்ணக்காரன்! போக்கிரி! ஒருவரையும் வாழவிட மாட்டான்! ஒன்றல்ல இரண்டல்ல அவன் செய்த அக்ரமங்கள்!”
“யாரைக் குறித்து இவ்வளவு கண்டிக்கிறாய்?”
“அதோ போகிறானே அந்த அநியாயக்காரனைப் பற்றித்தான் சொல்கிறேன்.”
“யாரை! அதோ போகிற ஆசாமியையா? இப்போதுதானே அவனிடம் அன்பாகப் பேசினாய்—அடக்க ஒடுக்கமாக இருந்தாயே! அவர், இவர் என்று மரியாதையாகப் பேசினாயே!”
“ஆமாம்! வேறே என்ன செய்வது! அவன் அக்ரமக்காரன்தான், நமக்கு ஏன் அவனுடைய பொல்லாப்பு என்பதற்காகத்தான் அவன் எதிரே, மரியாதையும் அன்பும் காட்டினேன், பாவனைக்கு”“அப்படியா விஷயம்! அவனிடம் பயம் என்று சொல்லு!!”
“ஆமாம்! அவன் படுபாவியாயிற்றே, பயப்படாமல் என்ன செய்வது”
இப்படிப்பட்ட உரையாடலைக் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஊர்ப் போக்கிரியைப் பற்றி. போக்கிரியிடம் சிக்கிக் கொள்வானேன் என்பதற்காகவே, அவனிடம் மரியாதை காட்டுவர், சற்று முன் ஜாக்ரதையும், பயங்கொள்ளித்தனமும் உள்ளவர்கள். மனிதர்கள் விஷயமாக இப்படி நடந்து கொள்வதே, மானக் குறைவு என்றும், கேலிக்குரியது என்றும் எண்ணுவர் பலர். சில கடவுள்கள் விஷயமாகவே இப்படிப்பட்ட ‘போக்கு’ காட்டினர், பக்தர்கள்!
அக்கமக்காரக் கடவுள்! கொலைக்கு அஞ்சாத கொடியவன்! கலகமூட்டுவதையே தொழிலாகக் கொண்ட கடவுள்!—இப்படியும் ஒரு கடவுள் உண்டு, ட்யூடானியருக்கு;—சனிபகவான்—நாரதர், இல்லையா நம் நாட்டவருக்கு, அதுபோல அடுத்துக் கெடுத்தல், அக்ரமத்துக்கு உடந்தையாக இருப்பது—அகப்பட்டதைச் சுருட்டுவது ஆகிய ‘திருக்கலியாண குணங்கள்’ கொண்ட தேவனும் உண்டு—அவனுக்கும் தேவாலயம் உண்டு—போக்கிரியிடம் புன்சிரிப்புடன் பேசித் தப்பித்துக் கொள்வது போல, இந்த அக்ரமத் தேவனுக்குப் பூஜை செய்து, அவனுடைய கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்வர், ட்யூடன் பக்தர்கள். கடவுள், அன்பின் ஊற்று, அன்பின் உருவம், அன்பு வேறு கடவுள் வேறு அல்ல, என்பதெல்லாம், கடவுட் கொள்கையில் ‘நாகரிகம்’ புகுந்த பிறகு, தீட்டப்பட்ட தத்துவங்கள். பழங்காலக் கோட்பாட்டின்படி, கடவுளரிலும், ‘கெட்டவர், நல்லவர்’ உண்டு; பக்தர்கள், இருவகையினரையும் பூஜித்தாக வேண்டும், அதுதான் ஆத்திகம், மதம். இப்படி இருக்கக்கூடாதே, கடவுளின் இலட்சணம் இது அல்லவே என்று பேசுபவன், நாத்திகன், மதவிரோதி!
வாயில் மூக்கில் இரத்தம் வந்துவிடும்—மரம்போல முறித்துக் இழே போட்டுவிடுவாள்—கண் குருடாகிவிடும்—வாய் அடைத்துப் போகும்—இன்ன தெய்வத்தின், கோபம் கிளம்பினால், என்று இப்போதும், பட்டிக் காட்டவர் பேசுகிறார்களல்லவா! அதுபோன்ற நிலை ட்யூடன் மக்களுக்கு முன்பு இருந்தது; இப்போதல்ல! அந்த இருட்டறையிலிருந்து அவர்கள் வெளியேறி, பகுத்தறிவுப் பகலவன் உள்ள பரந்த வெளிக்கு வந்துவிட்டனர்.
இருட்டறையில் அந்த மக்கள் இருந்தபோது, முழுமுதற் கடவுள் ஓடின், அவன் குமாரன் தார், எனும், அதிசூரர்களை—அண்டத்தை ரட்சிக்கும் காவலர்களைப் பூஜித்ததுடன், கேடு செய்யும் கடவுளையும் கும்பிட்டுத்தான் வந்தனர். லாக் தேவன் அப்படிப்பட்ட, அக்ரமக் கடவுளரில் ஒருவன்—ஓடினுக்குத் தம்பி—தார் தேவனுக்குச் சிற்றப்பன்.
சிண்டு முடிந்து விடுவதுதான் லாக் தேவனுக்குப் பொழுதுபோக்கு.
மானிடர், மனதிலே மாசும் தூசும் நிரப்புவான்—அதுமட்டுமா! கடவுளர் உலகிலேயே, கலகமூட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பான், இந்த லாக்!
லாக்கின் அக்ரமச் செயல்களால், கடவுளர் உலகே அடிக்கடி அவதிக்கு ஆளாகுமாம்.
காட்டு ஜாதித் தலைவர்களுக்குள் மூண்டுவிடும் பொறாமை உணரச்சி, கடவுளர் உலகிலும் இருந்திருக்கிறது—புராணத்தின்படி. லாக் தேவனுக்கு, ஓடினின் கீர்த்தியும், தார் தேவனின் செல்வாக்கும் தனக்கு ஏன் வரக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது. அவர்களுடன் குலவிக்கொண்டே, இதற்கான திட்டமிடுவான்—தோற்பான்—தண்டிக்கப்படுவான்–மீண்டும் முணுமுணுத்துக்கொண்டே, அதே அக்ரமத்திலேயே ஈடுபடுவான். இப்படி ஒரு கடவுள்! இதற்குப் பக்தி, பூஜை, பாசுரம், தேர், திருவிழா.
கேடு செய்வதையே குணமாகக் கொண்ட இந்த லாக் தேவனைக் கொண்டு, கடவுளர் உலகின், பரம்பரைப் பகைவர்களான, ஜோட்டூன்கள், பழி தீர்த்துக் கொள்ளத் தீர்மானித்து, மூன்று ராட்சசப் பெண்களை அனுப்பினர், கடவுளர் உலகுக்கு. இந்த மூவரும் மாயா ஜாலத்தினால், ஒரே உருப்பெற்று, தேவர் உலகு வந்தடைந்து பணிப் பெண்ணாக அமர்ந்தனர்!
இந்த மாயாவதிமீது லாக்தேவனுக்கு மையல்! பிறகு கேட்கவேண்டுமா! அந்த மைவிழியாள், லாக்கின் மனதிலே ஏற்கனவே மூண்டுகிடந்த கெட்ட எண்ணங்களை, மலை உருவாக்கினாள்,—அலை என ஓயாது கிளம்பியபடி இருக்கச் செய்தாள்.
ஜோட்டூன் தலைவனுக்கு, தேவலோகத்திலிருந்த அழகான ஒரு பெண் கடவுள்மீது மோகம் பிறந்துவிட்டது—அந்தப் பெண் கடவுளை எப்படியாவது, மயக்குவது என்பது இந்த மாயாவதிக்கு, ஜோட்டூன்கள் விதித்த கட்டளை. பெண் கடவுளின் பெயர் பிரஜீயா! கடவுள் உலகிலேகூடப் பாபம், பெண்களுக்கு, இந்தப் பேராபத்து இருக்கத்தான் செய்கிறது!!
கடவுள்கள் தமது “லோக”த்துக்குப் பகைவர்களால் ஆபத்து நேரிடாதபடி இருக்க ஒரு பலமான மதிற்சுவர் கட்டவிரும்பினர்! கடவுளருக்கா இந்த யோசனை பிறந்தது, விசித்திரமாக இருக்கிறதே என்று கேட்கத்தான் தோன்றும், இப்போது. அப்போது, இவ்வித எண்ணம், தூய்மையான ஆத்திகமாகக் கருதப்பட்டது! இப்போதும் நம் நாட்டிலே, அனுமார் வால்கோட்டை கட்டியது—அணிலின் முதுகை இராமர் தடவிக்கொடுத்தது—ஆகியவைகளை நம்ப மறுப்பவனை நாத்திகன் என்று கூறிடும் நல்லறிவாளர்கள்(!) உள்ளனரே! ட்யூடன் மக்கள், அறிவுபெறாத காலத்திலே நம்பினர் இதுபோல.
ஜோட்டூன் ராட்சசன் ஒருவன், சித்திரக்குள்ளன் வடிவத்திலே வந்தான், அந்த மதிற்சுவர் கட்ட. அவனுடைய நிபந்தனைகளைக் கேட்டுக் கடவுளர்களுக்குக் கோபம் வந்தது—விரட்ட எண்ணினர். விஷமத்தனத்தை விருதாகக்கொண்ட லாக் தேவன்தான், தந்திரமாக, கடவுளர்களை, மாயக்குள்ளனின் ஏற்பாட்டுக்கு இசையச் செய்தான். அவன் கேட்ட நிபந்தனைகளோ, கடவுளரின் கண்களைக் கோபத்தால் சிவக்க வைத்துவிடக்கூடியவை. கட்டழகி பிரஜியாவை அவன் காணிக்கையாகக் கேட்டான். அதுவும் போதாதென்று, சூரியனையும் சந்திரனையும், தந்துவிட வேண்டுமென்றான்.
கடவுளரிடம், கலகக்கார லாக், இந்த மாயாவி, நாம் குறிப்பிடும் காலத்திற்குள் மதிற்சுவரைக் கட்டமாட்டான், எனவே அவனை நாம் தண்டிக்கலாம், பிரஜியாவை இழக்க வேண்டிய நிலைமையே உண்டாகாது என்று தந்திரமாகக்கூறி, ஏமாற்றினான்! ஒரு கடவுள் ஏமாற்றுகிறார்! மற்றக் கடவுள்கள் ஏமாறுகின்றனர்! எத்தன்! ஏமாளி! கடவுளரின் இலட்சணம் இவ்விதம்—இப்படிப் புராணங்கள்—இவைகளை நம்புவதுதான் மதம்!!ராட்சசனோ, மளமளவென்று கட்டிவிட்டான் மதிற்சுவரை—ஒரே நாள் வேலைதான் பாக்கி. கடவுளர் உலகு கலங்கிற்று—லாக்மீது பாய்ந்தனர், உன்னால்தானே இந்த ஆபத்து என்று. தன் உயிருக்கு உலை வைத்துவிடுவார்கள் என்று கண்டுகொண்ட லாக், மாயக் குள்ளனின் மந்திர சக்தி வாய்ந்த குதிரையினாலேயே அந்த மகத்தான மதிற்சுவர் கட்டப்படுகிறது என்பதை அறிந்து, அந்தக் குதிரையை மயக்க, ஒரு பெண் குதிரையை ஏவினான்! இரு குதிரைகளும் கானகம் சென்றன காதல் விளையாட்டில் ஈடுபட; வேலை தடைப்பட்டது, குறிப்பிட்ட காலத்திலே சுவர் கட்டி முடிக்காததற்காக, ராட்சசன் கொல்லப்பட்டான். பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டிவிடும் போக்கு இந்த லாக்குக்கு.
இவ்விதமாகவே இடர்கள் பல உண்டாக்கிக் கொண்டே இருப்பது இந்தக் கடவுளின் வேலை.
ஒருமுறை சிப் என்ற சிங்காரத் தேவதையின், அலங்காரக் கூந்தல் தனக்கு வேண்டுமென்று கேட்டாளாம், லாக்கின் காதலி! சிப், தூங்கும்போது, கூந்தலைக் கத்தரித்து எடுத்துவிட்டான் லாக், கோபம் கொதித்தது கடவுளருக்கு—பிடித்துத் தாக்கலாயினர். கூந்தலைத் திருப்பித் தந்துவிட்டதுடன், அருமையான ஆயுதங்களை மந்திர சக்தி வாய்ந்த கொல்லர்களைக் கொண்டு செய்வித்து, கடவுளருக்குப் பரிசாகத் தந்து, கோபத்தைத் தணியச் செய்தானாம், இந்தக் கோணல் புத்தி படைத்த கடவுள்.
பரிசாகக் கிடைத்த ஆயுதங்களைப் பெற்று, அவைகளைச் செய்த கொல்லர்களைக், கடவுளர்கள் பாராட்டினராம்—அதை வேறு, கொல்லர்களிடம் சென்று கூறி, போட்டி பொறாமையை மூட்டிவிட்டானாம் லாக். அந்தக் கொல்லர்கள், அவற்றைவிட அருமையான ஆயுதங்களைச் செய்து தந்தனராம். அப்படிச் செய்யப்பட்ட ஆயுதங்களிலே ஒன்றுதான், தார் தேவனின் சம்மட்டி!
அதை ப்ரோக் எனும் தேவக் கொல்லன் செய்து கொண்டிருக்கும்போது, லாக், வண்டு வடிவம் கொண்டு கொட்டினான். அதை சகித்துக்கொண்டு சம்மட்டி செய்து, தார் தேவனுக்குத் தந்துவிட்டு, லாக் தேவனின் தலை தனக்கு வேண்டும் என்று நிபந்தனை விதித்தான், ப்ரோக், லாக், தந்திரமாக, “சரி! தலையை எடுத்துக்கொள்–ஆனால், ஜாக்கிரதை—கழுத்தை ஒன்றும் செய்யக்கூடாது” என்று கூறிவிட, கடவுளரும் அதை ஆமோதித்திட, ஏமாற்றமடைந்த ப்ரோக், தலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, இந்த லாக்கின் கலகப் பேச்சு வெளியே கிளம்பாதிருந்தால் அதுவேபோதும் என்று கூறி, லாக்கின் வாயைத் தைத்து விட்டானாம்! இப்படிப் புராணம்!!
இவ்வளவு கெட்ட குணம் இருப்பினும், தார் தேவன் தன் ‘திருவிளையாடல்’களின் போது, இந்த லாக் தேவனைத் துணைக்கு அழைத்துச் செல்வாராம்!
அப்படிச் சென்றபோது, ஓர் முறை, ஒரு மாயாலோகம் தென்பட்டது; பனிக்கட்டிகளால் கட்டப்பட்ட கோட்டை கொத்தளங்கள், அரண்மனைகள்! அவைகளிலே பிரம்மாண்டமான ராட்சதர்கள்.
தார் தேவனும் லாக்கும் ஜோட்டூன்கள்மீது போரிடச் செல்லும் வழியிலே இந்த மாயாபுரியைக் கண்டனர்—மன்னன் முன் சென்று நின்றனர்—அவன் இவர்களை மதிக்கவேயில்லை!
“கடவுள்களா!” என்று கேவலமாகக் கேட்டுவிட்டு “எங்கே வந்தீர்கள்! என்ன செய்யவல்லீர்கள்?” என்று கேலி செய்தானாம், அந்த மாயாபுரி மன்னன். லாக், துள்ளிக் குதித்து, “நான் இறைச்சியை எவ்வளவு வேண்டுமானாலும் தின்பேன்—வேண்டுமானால் போட்டியிடச் சொல்” என்றானாம். லாக்குக்கும் மாயாபுரி ராட்சசன் ஒருவனுக்கும் ‘போட்டி’ நடந்தது, லாக் தோல்வியுற்றான். “இது போகட்டும்—ஓட்டப் பந்தயத்திலே எனக்கு நிகர் எவரும் இல்லை” என்று வீரம் பேசினான் லாக். தேவருலகில், லாக்குக்கு மிஞ்சியவர்கள் கிடையாது ஓட்டத்தில்—எனினும், மாயாபுரிக் குள்ளன் ஒருவன் தோற்கடித்துவிட்டான், லாக் தேவனை. தார் தேவன், சூரத்தனமாகக் கிளம்பினான்—“நான் எவ்வளவு வேண்டுமானாலும் குடிப்பேன்” என்றான்—தோற்றான் ஒரு ராட்சசனிடம். ஒரு பூனையைக் காட்டி, “பாலகனே! இதைத் தரையிலிருந்து தூக்கு பார்க்கலாம்” என்றான் மாயாபுரி மன்னன் தூக்க முடியவில்லை தார் தேவனால். ஒரு கிழவி வீழ்த்திவிட்டாள் தார் தேவனை, குஸ்திப் போட்டியில். இப்படி லாக்கும் தாரும், தோல்விமேல் தோல்வி அடைந்து துயருற்றனர். கடவுள்கள் தோற்கின்றனர்! பொருத்தமாக இல்லையே, என்று கூறிடத் தோன்றும்; அறிவு ஏற்றுக்கொள்ளத்தான் மறுக்கும்—எனினும் ஆத்திகம் இவைகளை நம்பித்தான் தீரவேண்டும் என்று ஆர்ப்பரித்தது அந்நாட்களில்—நம்பினர் ட்யூடன் மக்கள்.
மாயாபுரி திடீரென்று மறைந்ததாம்—ராட்சசன் சிரித்துக்கொண்டே, நீங்கள் கண்டது கண்கட்டு வித்தை; கவலைப்படாதீர்கள்—இறைச்சி தின்னும் போட்டியிலே ஜெயித்தது, தீ! ஓட்டப் பந்தயத்திலே வெற்றி பெற்றது, சிந்தனை! குடிக்கும் போட்டியிலே ஈடுபட்டபோது, குடிக்கத் தரப்பட்டது கடல்! பூனை, பூனையல்ல, அண்டசராசரத்தையும் அஞ்சிடச் செய்யும் மிட்கார்டு எனும் அரவம்! குஸ்தியில் வெற்றி பெற்றது, வயோதிகம்!—என்று தத்துவார்த்த விளக்கம் கூறிவிட்டு மறைந்தான்.நம் நாட்டுப் புராணங்களுக்குத் தத்துவார்த்தம் கூறிப் பூரிப்பவர் சிலர் உண்டு—ட்யூடானியரிடமும் இருந்தது இந்தத் தந்திர முறை! எனினும் அறிவுத் தெளிவு ஏற்பட்டதும், இவைகளைத் கடவுட் கொள்கைக்கே இழுக்கு உண்டாக்குபவை என்று ஒதுக்கிவிட்டனர்—உண்மை அறிவை நாடினர், அந்நாட்டு மக்கள்.
மாயாபுரியில் இந்த அனுபவம் பெற்று, ஜோட்டூன் சென்று போரிலே வெற்றி பெற்றுத் திரும்பினர், தாரும் லாக்கும்—வழியிலே, தார் திகைத்தான், பதைத்தான், ஏனெனில் அவனுடைய அதி அற்புதமான ஆயுதமாகிய சம்மட்டி காணப்படவில்லை. தார் திகிலடைந்தான்—அந்தச் சம்மட்டி இல்லாமல் கடவுளர் உலகு பிழைத்திருக்க முடியாது. உடனே, லாக் ஒரு பறவை வடிவெடுத்து ஜோட்டூன் சென்று சம்மட்டியை, திரிபூம் என்ற மன்னன் களவாடி வைத்திருக்கும் செய்தியைக் கண்டறிந்தான். அந்த மன்னனோ, கட்டழகி பிரிஜியாவைக் கடிமணம் செய்து தந்தால் சம்மட்டியைத் திருப்பித் தருவதாகக் கூறினான். பூமிக்கடியில் ஒன்பது மைல் ஆழத்தில் சம்மட்டியைப் புதைத்து வைத்திருப்பதாகக் கூறினான்.
லாக் கூறிய சேதிகேட்டு தார் திடுக்கிட்டான்—பிறகு, லாக்கின் யோசனைப்படி, தார், பிரிஜியா போல மாறுவேஷம் போட்டுக்கொண்டார், லாக், தோழியாக நடித்தான், இருவரும், ஜோட்டூன் சென்றனர்—திருமண விருந்து நடைபெற்றது—திருமணப் பரிசாகச் சம்மட்டி தரப்பட்டதும், பெண் வேஷத்தைக் கலைத்துவிட்டு, தார் தேவன், ராட்சசனைத் தவிடுபொடியாக்கினான். நம் நாட்டுப் புராணிகர்கள் மகாவிஷ்ணுவுக்கு, ‘மோகினி அவதாரக் கதை’ கட்டினார்களே, அதுபோல், ட்யூடன் புராணிகன், கட்டிவிட்டான், இப்படி ஒரு சரடு. சரடு என்று இன்று சர்வ சாதாரணமாகக் கூறுகிறோம்—ஆனால் அன்று, இதுபோலக் கூறினால் தலைபோகும்! அவ்வளவு ஆழ்ந்த நம்பிக்கையும், தணியாத வெறியும் இருந்தது பக்தர்களுக்கு.
லாக் தேவன், கொலையும் செய்திருக்கிறான்—அதுவும் ஒரு கடவுளை!!
ஓடினுக்கு, தார் தவிர வேறு குமாரர்களும் உண்டு, சிவனுக்கு விநாயகர் தவிர முருகனும் உண்டல்லவா, அதுபோல! முருகன் என்றால் அழகு என்றல்லவா பொருள்—மதவாதிகள், இலக்கிய கர்த்தாக்கள் ஆகியோரின் கற்பனைப்படி! அதுபோலவே, ஒரு ‘முருகன்’ ஓடினுக்கு. இந்த ட்யூடன் முருகன் பெயர், பால்டர். இவனைத்தான், சதிசெய்து கொன்றுவிட்டான், லாக்; கடவுளைக் கடவுள் கொல்கிறார்! பக்தர்கள், பதறாமல் படிக்கவேண்டும், பூஜையும் செய்யவேண்டும், என்று மதம் கட்டளை பிறப்பித்தது—கட்டுப்பட்டனர் மக்கள்! அக்ரமமே உருவான லாக் தேவன், தன் சொந்த அண்ணன் மகனாம் பால்டரைக் கொல்லத் துணிந்ததற்குக் காரணம் வேறொன்றுமில்லை, மற்றக் கடவுள்களெல்லாம், பால்டரிடம் பிரியமாக இருக்கிறார்கள் என்பதுதான்! எப்படி இருக்கிறது இந்தக் கடவுளின் குணாதிசயம்.
பால்டர் தேவனுக்கு ஒருநாள் ‘மரணபயம்’ ஏற்பட்டுவிட்டது—கலங்கினான்; கதறினான். அருமை மகனின் அச்சத்தைப் போக்க ஓடின் ஏதேதோ செய்தும் முடியலில்லை. தாயோ தவித்து, கடவுளர் உலகு முதற்கொண்டு சகல உலகங்களிலும் உள்ள சகல பொருள்கள், ஜீவராசிகளிடமும் முறையிட்டு, பால்டருக்கு ஒரு தீங்கும் செய்யக்கூடாதென்று, சகலத்திடமும் சத்தியம் பெற்றாள்—ஆனால், இதனால் என்ன ஆபத்து வந்துவிட முடியும் என்று அலட்சியமாகக் கருதி, புல்லுருவியிடம் மட்டும் சத்தியம் வாங்கிக் கொள்ளவில்லை.
தன் மகனுக்கு இனி மரணபயம் இல்லை, என்று மகிழ்ந்தாள்—அழகனுக்கு ஆபத்து இல்லை என்பதறிந்து எல்லாக் கடவுளரும் களித்தனர். மலை, மலர், இரும்பு, பஞ்சு, நீர், நெருப்பு ஆகிய எதை எடுத்து பால்டர்மீது வீசினாலும் அழகுத் தெய்வம் புன்னகை செய்யும்—எதுவும் துன்புறுத்தாததால். இதைக் கண்ட லாக், பொறாமை கொண்டு, அங்கிருந்த ஒரு குருட்டுக் கடவுளைத் தூண்டிவிட்டு, அனைவரும் பால்டர்மீது எதையாவது வீசி விளையாடுகிறார்களே, நீ மட்டும் ஏன் சும்மா இருக்கிறாய் இந்தா வீசு என்றுகூறி ஒரு புல்லுருவியைக் கொடுத்தான். சூதுவாதறியாக் குருட்டுத் தெய்வம், புல்லுருவியை அவன்மீது வீச, அதுபட்ட மாத்திரத்தில், பால்டர், பிணமானான். கடவுளர் கதறினர். மகனை இழந்த மகேசன், புரண்டழுதான். அனைவருக்கும் லாக்மீது சந்தேகம். அவனைப் பகிஷ்கரித்தனர். லாக்கும் ஓடிப்போய் குகை ஒன்றில் ஒளிந்துகொண்டான். தார் தேவன் அவனைக் கைதுசெய்து, ஒரு பெரும் பாறையில் கட்டிப்போட்டுவிட்டான். ஓடின் ஆணைப்படி, லாக்கின் முகத்தின்மீது, கடும் விஷம் சொட்டுச் சொட்டாக விழ, ஏற்பாடாகி இருந்தது, விஷத்துளி பட்டதும் லாக் துடி துடிப்பான்; நெருப்பெனச் சுடும் விஷம் அது. இவ்வளவு கொடியவனான லாக்குக்கு ஒரு உத்தம பத்தினி இருந்தாள்—இந்தச் சாவித்திரி, சதா தன் பதியின் பக்கம் வீற்றிருந்து, விஷத்தை ஒரு கோப்பையில், பிடித்தபடி இருப்பாளாம்—கணவன்மீது விழாதபடி—கோப்பை நிரம்பியதும், விஷத்தைக் கீழே கொட்டிவிட்டு வரவேண்டுமல்லவா—அப்போது சில துளிகள் லாக்கின் முகத்திலே விழுமாம்—தாங்கமுடியாத வேதனையுடன் துடியாய்த் துடிப்பானாம், லாக்கின் துடிப்புத்தான், பூகம்பம்!! இப்படி ஒரு நம்பிக்கை இருந்தது ட்யூடானியருக்கு.
கலகமூட்டும் கடவுள்—காரிகை வடிவெடுக்கும் கடவுள்—புல்லுருவியால் சாகும் கடவுள்—பூனையைத் தூக்கமுடியாத கடவுள்—கொலை வேலை செய்யும் கடவுள்—கூந்தலைக் கத்தரிக்கும் கடவுள்—என்று இப்படிக் கதைகளைத் தீட்டி, அவைகளையே, ஆத்திகம் எனக்கொண்டு அல்லற்பட்டனர் ட்யூடன் மக்கள், அறிவுத்தெளிவு ஏற்படாமுன்பு. பிறகே கண்டனர் சித்தத்தில் எவ்வளவு பித்தம் இருந்தால், எத்தர்கள் கட்டிவிட்ட இந்தச் சொத்தைச் சேதிகளை கடவுளின் கதையாகக்கொண்டிருக்க முடிந்தது என்பதை—அருவருப்புப் பிறந்தது—கேள்வி பிறந்தது—கண்டனம் கிளம்பிற்று—மதவாதிகள் கொக்கரித்தனர்—முடிதரித்தோர் கொடுமை செய்து பார்த்தனர்—பகுத்தறிவு பணியவில்லை—தாக்கிற்று இத்தகு தகாத எண்ணங்களை—வெற்றியும் பெற்றது மிகுந்த கஷ்டத்துக்குப் பிறகு—அந்த வெற்றியின் பயனாக, லாக் தேவன், ஓர் மாஜி கடவுளானான்!
❖