மாஜி கடவுள்கள்/வீனஸ்
- கடல் நுரையினின்றும் கிளம்பிய கட்டழகி வீனசைக் கண்டதும் கடவுளர் அனைவரும் எனக்கு, உனக்கு—என்று போட்டியிட்டனர். வீனசோ கடைகாட்டி இடையாட்டி அவர்களின் மன அலையை அதிகப்படுத்திவிட்டு, அனைவரையும் அலட்சியமாகக் கருதினாள். முழுமுதற் கடவுள் ஜுவசுக்குக் கோபம். அழகும் ஆணவமும் ஒருசேர குடிகொண்டிருந்த வீனசின் கர்வத்தை அடக்க, கடவுளர் உலகிலேயே அவலட்சணவானான், வல்கன் என்னும் கடவுளுக்கு வீனசைத் தாரமாக்கினார்.
வீனஸ்
“பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா!”—ஆஹா! ஆஹா! என்ன அழகான நடை! எவ்வளவு இன்பமான சொற்செல்வம்! இதை உணர மறுக்கும் உலுத்தரும் உளரே! உமையொரு பாகா! இவர்தம் உள்ளமென்ன கல்லோ! இல்லை, இல்லை! கல்லும் உருகும் கவிதைகள் உளவே! அவைகளையுமன்றோ அலட்சியம் செய்கின்றனர். இவர்தம் உள்ளம் கல்லுமல்ல, இரும்புமல்ல, இறைவா! இவர்கள் உள்ள மற்றவர்கள்! அதனால்தான், உன் எழிலை, உன் இலட்சணத்தை, உன் திருவிளையாடலைத் தித்திக்கத் தித்திக்கச் சித்தரிக்கும் கவிதைகளைக் கேட்டும் சொக்காதுளர்! பாகு கனிமொழி—எவ்வளவு இனிமை, எவ்வளவு இனிமை, அன்னை வள்ளிநாயகியின், மொழி, பாகு, கனி,—ஐயன் முருகன், பாதம் வருடாதிருப்பரோ! பாதம் வருடிய மணவாளா!—என்று புகழ்பாடித் துதிக்கிறார் கவி. இவ்வண்ணம், இறைவனை இனிய கவிதையால் துதித்து பக்திரசத்தைப் பண்ணில் குழைத்தளித்த பெருமை, நந்தம் நாட்டுக் கவிவாணருக்கே சொந்தமானது. பிறநாடுகளிலே பிறந்தாரில்லை இப்படிப்பட்ட கவிவாணர்கள். இந்த அருமையினை அறிந்தாலேனும், திருந்துவரோ, இந்தத் தீயர்!!
இங்ஙனம் பேசிடும் இயல்பினர் இங்கு அநேகர்.
காவியம், போற்றப்பட வேண்டும், எனவே, அவை மூலம் தரப்படும் கருத்துக்களைக் கண்மூடி ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்—முருகனுக்குப் பன்னிரண்டு கரங்கள் என்று நம்புவது முடியாது என்று முரட்டுத்தனமாகப் பேசுகின்றனர்—கவி, எவ்வளவு அழகாக, ஈராறு கரமன்றோ ஈசனார் புதல்வர்க்கு என்று பாடுகிறார், இந்தச் சுவையை உணரமாட்டாது உளரே, எதற்கும் காரணம் கேட்டலையும், மாக்கள்! என்று கடுமொழியும் பேசுகின்றனர்.
அறிவுத் துறையினின்றும் கிளம்பிய கேள்விக் கணைகளின் வேகமும் வல்லமையும் கண்டு மருண்டவர்கள், கவிவாணர்களின் புகழைக் கேடயமாகக்கொண்டு, சில காலமேனும் களத்திலே நின்று பார்ப்போம் என்று எண்ணுகின்றனர். அவர்தம் நினைப்பு, உலகிலே இங்கு போல வேறெங்கும் புராணப் புளுகுகளை, இனிய கவிதை உருவிலே தந்தவர் கிடையாது என்பது. கம்பன்போல் அவதார மகிமையைப் பாடிய கவிஞன் இருந்திருந்தால், வில்லிபோல் பெரும்போரைச் சித்திர நடையில் பாடி இருந்திருந்தால், பழங்காலக் கற்பனைகள், பழங்காலக் கடவுட் கொள்கைகள் பாழ்பட்டுப் போயிரா! அங்கெல்லாம் அருங்கவிவாணர்கள், ஐயன் ஆடியபாதத்தின் அற்புதத்தையும் அம்மையின் அருளொழுகும் கண்களின் வடிவழகையும், பாடினாரில்லை, எனவேதான், பழைய கொள்கைகள் பாழ்பட்டுப் போயின, என்று எண்ணுகின்றனர்—மக்களிடையே இந்த வகையான பிரசாரமும் செய்கின்றனர். கலைமூலம் கற்காலக் கடவுட் கொள்கையைக் காப்பாற்றலாம் என்று எண்ணுகின்றனர்.
ஹோமர், வெர்ஜில், ஷேக்ஸ்பியர், மில்டன், ஷெல்லி, கீட்ஸ், டிரைடன்,—கவிதா மண்டலத்திலே இவர்கள் உன்னதமான இடம் பெற்றவர்கள் என்பதை மறுப்பவர் கிடையாது. இந்நாட்டுப் பழம்பெரும் கவிவாணர்களிடம் காணப்படும், கற்பனைத்திறமும், கவர்ச்சிகரமும், இவர்களிடமும் ஏராளமான அளவு இருக்கத்தான் செய்தன. காவியச் சுவை சொட்டும் கவிதைகளை அவர்களும் தத்தமது நாட்டவருக்குத் தந்தனர். மக்கள் அவர்தம் ‘கவிதா சக்தி’யைப் போற்றினர்—போற்றியும் வருகின்றனர். நம்நாட்டுக் கவிவாணர்கள் போலவே, மேற்கோள், உவமை, என்பனவற்றுக்கும், அவர்களும், பழம் புராணக் கதைகளையே பயன்படுத்திக் கவிபாடினர். எனினும், கற்காலக் கடவுட் கோட்பாட்டை அவர்களின் ‘கவிதை’ காப்பாற்றி விடவில்லை. நல்ல கவிதை! அழகான நடை! சுவையுள்ள கற்பனை!—என்று அந்தக் கவிவாணர்களின் திறமையைப் பாராட்டிவிட்டு, கடவுட் சம்பந்தமான கருத்துக்களுக்கு, அறிவின் துணையைத் தேடினர்.—முன்னேற்றம் கண்டனர்.இன்று மாஜி கடவுள்கள் பட்டியலில் காணப்படும் பெயர்களை, கவிவாணர்கள், தமது கவிதைகளிலே இணைத்துவிட்டுத்தான் போயினர்! மாஜி கடவுள்களின் ‘லீலா விநோதங்களை’க் கவிதை வடிவிலே, மக்களிடம் கூறித்தான் பார்த்தனர்—எனினும், அறிவு வளர்ச்சியைக் கலை உணர்ச்சி கெடுக்கவில்லை. தங்கக் கூண்டிலே பஞ்சவர்ணக் கிளியை வளர்க்கிறோம், பாலும் பழமும் தருகிறோம், இனியமொழி கேட்க. பேசும் கிளி, குழியில் விழு! விழு குழியில்!—என்று கொஞ்சு மொழியில் கூறினால், சிரிப்பார்களேயன்றி, அதற்குப் பேசும்திறன் வந்ததே என்று மகிழ்ந்து ஒரு கொவ்வைக் கனி தருவரேயன்றி, ஆசைக்கிளியே, இதோ வீழ்கிறேன் குழியில் என்று கூறி, யாரும் குழியில் விழமாட்டார்களல்லவா! அதுபோலவே, அந்நாட்டு அறிவாளிகள், கவிதை அருமையானது எனினும் கருத்து காலத்துக்கு ஒவ்வாதது என்று கண்டறிந்து, புராணத்தை விலக்கி, கவிதையை ரசித்தனர். கவிதை வடிவிலே இருக்கிற காரணத்தால், உள்ளத்துக்கு மகிழ்வை ஊட்டும் கவர்ச்சியுள்ள முறையிலே கவிதைகள் இருப்பதால், அந்தக் கருத்துக்களைக் கைவிடக் கூடாது என்றோர் பொது விதிக்கு உலகம் கட்டுப்பட்டிருந்திருக்குமானால், ஜூவசும் ஹீராவும், அபாலோவும் பிறரும் இன்றும் கோயில் கொண்டு எழுந்தருளி கோலாகலமான திருவிழாக்களைக் கண்டுகளித்துக் கொண்டிருந்திருப்பர்—மாஜிகளாகியிருந்திருக்கமாட்டார்கள்.
கடல்நுரை, வனப்புள்ள காட்சியல்லவா! தூய வெள்ளை நிறம்—தொட்டால் நீராகச் சொட்டி மறையும், பலப்பல சொட்டுகளை உள்ளடக்கிய நுரை, பாங்குடன் காட்சி தருகிறதல்லவா—இதைக் கண்ட, கற்பனைத்திறம் படைத்த ஒருவன், ஒரு தெய்வத்தைச் சிருஷ்டித்துவிட்டான். கடல் நுரையிலிருந்து பிறந்தவள்தான், பேரழகி வீனஸ் தேவி, அப்ரோடைட் என்றோர் திருநாமமும் தேவிக்கு உண்டு.
திடீரென ஓர் நாள், கடல் நுரையிலிருந்து வீனஸ் தேவி தோன்றி, கடல் சிப்பியின் மீதமர்ந்து, கரையோரம் வந்து சேருகிறாள். கடவுளர் உலகு இதுபோன்ற எழில் மங்கையை இதுவரை கண்டதில்லையே, என்று அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். அத்தகைய அழகி மட்டுமல்ல, அம்மை, ஆவலைக் கிளரும் வல்லமை மிக்கவர்களாம்! சைப்ரஸ் என்ற தீவின் பக்கம்தான் தேவி முதலில் தரிசனம் தந்தது. இன்றும் இந்தத் தீவு இருக்கிறது—ஆனால் அதைக் காரணமாகக் காட்டி வீனஸ் தேவி, வெறும் கற்பனை என்று எங்ஙனம் கூறுவது, உண்மை உருவந்தான் வீனஸ் என்று வாதிடும் புராணீகன் அங்கு கிடையாது. புராணிகனுடைய பிடி பலமாக இருந்தபோது, வீனசுக்கு விதவிதமான விழாக்கள், அழகழகான கோயில்கள், பாமாலை, பூமாலை, யாவுந்தான்! இன்றல்ல, இருட்டறையில் மக்கள் உழன்றபோது.
கடல் நுரையினின்றும் கிளம்பிய கட்டழகி வீனசைக் கண்டதும் கடவுளர் அனைவரும் எனக்கு, உனக்கு–என்று போட்டியிடலாயினர். வீனசோ கடை காட்டி இடையாட்டி அவர்களின் மன அலையை அதிகப்படுத்திவிட்டு, அனைவரையும் அலட்சியமாகக் கருதினாள். முழுமுதற் கடவுள் ஜூவசுக்குக் கோபம். அழகும் ஆணவமும் ஒரு சேரக்குடிகொண்டிருக்கிறது இவளிடம், இவளுடைய கர்வத்தை அடக்கவேண்டும் என்று எண்ணினார். உடனே, கடவுளர் உலகிலேயே அவலட்சணவானான், வல்கன் எனும் கடவுளுக்கு, வீனசைத் தாரமாக்கினார். அனைவரும் திடுக்கிட்டுப் போயினர்.
வீனஸ், விண்ணவர் வியந்திடும் பேரழகி—வல்கன், கடவுளர் உலகு கைகொட்டிச் சிரிக்கும் விதமான கோரரூபம் படைத்தவன். கடுகடுத்த முகம்! நொண்டிக் காலன்!
இவள்போல் அழகியை எங்கும் கண்டதில்லை, என்றனர் வீனசைக் கண்டு. இவன் போன்ற அவலட்சணமானவன் எங்கும் கிடையாது, என்ற ஏளனத்துக்கு ஆளாகி, கடவுளருலகிலே களிப்புடன் உலவுவதையும் வெறுத்து, ஒதுங்கி வாழ்ந்து வந்தவன் வல்கன். இவர்களைத் தம்பதிகளாக்கினார் தயாபரன்.
பொன்னிற மேனி! பூவிதழ்க் கன்னம்! செம்பவள் அதரம்! முத்துப்பற்கள்! மோகனப் புன்னகை! மோன நிலையையும் முறியடிக்கும் பார்வை! துடியிடை தோகை மயிலனையாள்! இவ்வளவு எழில் ததும்பும் கன்னியை, அருவருப்பைக் கிளரும் உருவம் படைத்த வல்கனுக்குத் தாரமாக்குகிறீரே! முழுமுதற் கடவுளே! கன்னி என்ன கதியாவாள்! இந்தப் பொருந்தாத் திருமணம் வேண்டாம்! கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரையில் தள்ளிவிடலாம் இந்தத் தையலை! நொண்டிக் காலனுடன் இந்த நேரிழையாள் எப்படி இல்லறம் நடத்துவாள்!—என்று பலப்பல கூறி, கடவுளர் தடுத்தனரா? இல்லை!! வீனசாவது இந்த விபரீதம் வேண்டாம் என்று கூறி விம்மினாளா? இல்லை! அவர் தந்த கணவன் இவர்—இருக்கட்டும் இவரும்—இதயத்தை வெல்பவன் வேறொருவன் கிடைக்காமற்போவானா!—என்றெண்ணிக்கொண்டாள். கொண்ட கணவனுக்குத் துரோகம் செய்யும் காதகியா, கடவுளர் வரிசையிலே வைத்துப் போற்றப்பட்டாள் என்று கோபத்துடன் கேட்கத் தோன்றும். ஆமாம், ஐயா, ஆமாம்! வீனஸ் தேவி, விண்ணுலக அழகி, மக்களின் பூஜைக்குரியவளாகத்தான் இருந்து வந்தாள், மக்களின் மனம் பூஜாரி கையில் மெழுகாக இருந்தவரையில்!நொண்டிக்கால் தேவனுடன் சென்று வாழ்ந்து வந்தாள், பேரழகி வீனஸ்.
வல்கன் தேவனுக்குக் கால் நொண்டி, உருவம் அவலட்சணம், ஆனால் இவனும் சாமான்யமானவனல்ல. சாட்சாத் ஜூவஸ் தேவனின், மகன்தான் இவனும். ஹீரா தேவியாராம் அன்னையிடம் ‘பக்தி’யும் கொண்டவனாகத்தான் இருந்து வந்தான். ஒருநாள், ஹீராவின் தொல்லையால் கோபம் மூண்டது ஜுவசுக்கு. உடனே அவர், ஒரு தங்கச் சங்கிலியில் அவளைக் கட்டி, விண்ணிலிருந்து, மண்ணுலகத்துக்குத் தொங்கவிட்டார். இதைக் கண்ட மகன் மனம் பதறி தங்கச் சங்கிலி மண்ணுலகம் போகாதபடி தடுக்கத் தன் முழுவலிமையையும் உபயோகித்தான். தந்தைக்குத் தாங்கொணாக் கோபம் பிறந்தது—தனயனைத் தூக்கி எறிந்தார் பூவுலகுக்கு. கீழே விழுந்த போதுதான், வல்கனுக்குக் கால் முறிந்துவிட்டது.
கடவுளர் உலக நடவடிக்கைதான்!
முழுமுதற் கடவுளாக, கிரேக்கராலும், ரோம் நாட்டவராலும், போற்றப்பட்ட ஜுவஸ் தேவனின் குடும்ப நிலை இவ்வண்ணம்!!
கீழே வீழ்ந்து வேதனைப்பட்ட வல்கனை, தாயார், செத்தானா பிழைத்தானா என்றுகூடக் கவனிக்கவில்லை. எந்தத் தாயாருக்காகத் தந்தையின் கோபத்தைத் தாங்கிக்கொண்டு, காலையும் இழந்தானோ, அந்தத் தாய், தன்னிடம் துளி அன்பும் காட்டாத்து கண்ட வல்கனுக்கு, மனம் உடைந்துவிட்டது—கடவுளர் உலகா இது, காதகர் உறைவிடம், இனி அங்கு செல்லேன், என்னை இம்சைக்கும் இழிவுக்கும் ஆளாக்கியவர்களுக்குத் தக்க பாடம் கற்பிப்பேன் என்று சூளுரைத்துவிட்டு, எட்னா மலைமீது, ஒரு பெரிய உலைக்கூடம் அமைத்துக்கொண்டு, நெற்றியில் ஒற்றைக் கண் கொண்ட ஒருவகை ராட்சதப் பிறவிகளின் துணையைப் பெற்று, அற்புதமான ஆயுதங்களைத் தயாரித்துக்கொண்டிருந்தான்.
வல்கன், தயாரித்த அற்புதப் பொருள்கள் பலப்பல.
தங்கத் தாதிமார் இருவர்—அதாவது தங்கப்பதுமைகள்—பதுமைகள் என்றாலும், தானாக இயங்கக்கூடியவை. அவன் எங்கு சென்றாலும், இந்த தங்கத் தாதிமார் உடன் செல்வர்!
பிறகு வல்கன், ஓர் அழகிய தங்கச் சிம்மாசனம் தயாரித்தான்—அது ஒரு சூட்சமமான பொறி. இதைத் தன் தாயார், ஹீராதேவிக்கு அனுப்பி வைத்தான். அம்மை அதிலே அமர்ந்ததும், அவளைச் சிம்மாசனம் சிறைப்படுத்திவிட்டது. விடுபட முடியவில்லை. விண்ணிலுள்ள கடவுளர் அனைவரும் முயன்று பார்த்துத் தோற்றனர். கடைசியில், வல்கனை வரவழைத்து வேண்டிக் கொள்வதென்ற முடிவுக்கு வந்தனர்.
“சிம்மாசனமா சிறையாகிவிட்டது! வேண்டும் வேண்டும்! பெற்ற மகன் விபத்துக்குள்ளானபோது நமக்கென்ன என்று இருந்துவிட்ட பெருமாட்டிக்கு, தக்க சிம்மாசனந்தான் அது”—என்று கூறினான் வல்கன், தன்னை நாடி வந்த கடவுளரிடம். விண்ணகம் வர முடியாது! ஹீராவை விடுவிக்க முடியாது! கடவுளர்களே! காலிழந்தவன் நான்! என் அற்புதப்பொறி அந்தச் சிம்மாசனம்—காட்டுங்கள் உங்கள் கைவரிசையை—என்று கூறிவிட்டான். திகைத்தனர் தேவர்கள்! கடைசியில் ஒரு யோசனை உதித்தது. எதற்கும் இசைய மறுக்கும் இவனை, மதுதேவனைக் கொண்டுதான், இசையச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தனர். [மதுதேவன் பேகஸ் பற்றி முன்னரே குறிப்பிட்டுள்ளோம்.] பஞ்சமா பாதகத்திலே ஒன்று தான் குடி—எனினும் விண்ணவருக்குள், குடி, சாதாரணம் என்பது மட்டுமல்ல; அந்த இலாக்காவைப் பரிபாலிக்கவே ஒரு தனிக் கடவுள்—அவர் பெயர்தான் பேகஸ்!
பேகஸ் கிளம்பினான் வல்கனிடம்! மதுவைத் தந்தான்—மயங்கினான் நொண்டிக் கடவுள். விண்ணகம் வந்தான், மாதாவை விடுவித்தான். ஓர் அளவுக்குச் சமரசம் ஏற்பட்டது. தங்கமாளிகைகளைக் கட்டிக் கொடுத்தான் பல கடவுளருக்கு—தந்தைக்கு இடியாயுதம் செய்து தந்தான். எனினும், விண்ணகத்திலேயே இருந்துவிட அவன் மனம் ஒப்பவில்லை. எட்னா மலைமீதே வசித்து வரலானான்.
இங்குதான் வந்து சேர்ந்தாள், வடிவழகி வீனஸ்.
ஆற்றோரத்தில், முந்திரிச் சோலையில், ஓடி ஆடிப் பாடிக்கொண்டு, காதலன் கண்ணைப் பொத்த, அவன் கரத்தை விலக்க முயலும்போது அவன் தன்னை அணைத்துக்கொள்ள, ஐய்யய்யோ—என்று இவள் பாட, அவன், கன்னத்தைக் கிள்ளி இதழமுது கேட்க, ஊஹும் என்று இவள் கொஞ்ச இன்னுயிரே என்று அவன் கெஞ்ச, இப்படி இன்ப விளையாட்டில் ஈடுபட்டிருக்க வேண்டியவள், மலைமீது ஓர் உலைக்கூடம், பெரு நெருப்புக்கு எதிரே இரும்பைக் காய்ச்சுவதும், அடிப்பதும் வளைப்பதுமான வேலையில் ஈடுபட்ட அவலட்சணமான கணவன்—இந்தக் சூழ்நிலையில் எப்படி இருக்கமுடியும்! உதட்டை மடித்தபடி கடித்தாள், புருவத்தைச் சிறிதளவு நெறித்தாள் யோசனை உதித்தது—காதலைத் தேடிக்கொண்டாள். கடவுள் ஒருவன் கிடைத்தான்!
போர்க் கடவுள் மார்ஸ் என்பான்தான், வீனஸ் பெற்ற புதுவிருந்து.ஒவ்வோர் இரவும், மார்ஸ் வீனஸ் இல்லம் வருவான், இன்பம் பெறுவான்.
இது, அபாலோ கடவுளுக்குத் தெரிந்துவிட்டது. வல்கனிடம் தெரிவித்துவிட்டார். கடுங்கோபம் கொண்டான் வல்கன். என்ன செய்வது! கடவுளல்லவா, ஒரு அபூர்வமான யோசனை உதித்தது. பித்தளைக் கம்பிகளைக்கொண்டு ஒரு அபூர்வமான வலை—சிலந்திக்கூடு போன்ற வலை—செய்தான். பார்ப்பதற்குச் சாதாரணப் போர்வை போலவே இருக்கும்—ஆனால் பொறியாக மாறிவிடும், நொடிப்போதில். இந்த மாய வலையை, வீனசின் மஞ்சத்திலே வீசிவிட்டு, மறைவிடத்தில் தங்கியிருந்தான். மார்ஸ் வழக்கப்படி வந்தான், வீனஸ் கொஞ்சினாள், மஞ்சம் சென்றனர், கொஞ்சுமொழி வளர்ந்து, குழைந்து, ஓய்ந்தது—இறுகத் தழுவினர் அன்றும், என்றும்போல்—மறைந்திருந்த கணவன், மாயவலையை இழுத்தான் காதற் கள்வர்கள், காகூவெனக் கூவினர், வலையில் சிக்கிக்கொண்டு! விடுபட முடியவில்லை! வல்கன் வலை இலேசானதா! சிக்கிக்கொண்டீர்களா! சிரிப்பாயக் சிரிக்க வைக்கிறேன் பார்!—என்றுகூறி, வெளியே சென்று, எல்லாக் கடவுளரையும் அழைத்து வந்தான் வல்கன். “வாருங்கள், வாருங்கள்! வந்து பாருங்கள், என்னை மணந்துகொண்ட காதகி, என் வீட்டில், என் மஞ்சத்தில் சோர நாயகனை ஆறத் தழுவிக்கொண்டுள்ள காட்சியை, விழியுள்ளோர் அனைவரும் காண வாருங்கள்”—என்று அழைத்து வந்து காட்டினான். தமது அணைப்பிலிருந்து விடுபட முடியாதபடி, மாயவலை அவர்களை இறுகப் பிணைத்து விட்டிருக்கிறது—கடவுளர் யாவரும், கைகொட்டிச் சிரித்தனர்! கடவுளருலகுக்குப் பலகாலம், இந்தச் சம்பவம் வேடிக்கைப் பேச்சுக்குப் பயன்பட்டதாம்!வீனசும் மார்சும் விபசாரத் தடைச் சட்டத்தின்படி, தண்டிக்கப்பட்டனர் போலும்—என்று எண்ணிவிடாதீர்கள்!! கடவுளர் உலகு—எனவே, கேவலம் மானிடரைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள், அங்கு, செல்லுபடியாகா! வழக்கம்போல மார்சும் வீனசும், கடவுளர் பதவிகளிலேயேதான் இருந்துவந்தனர். பக்தர்கள்கூட, இந்தக் கதையைக் கேட்டதால், மனம் பதறி, கோயிலிலேயா இருப்பது இப்படிப்பட்ட குணகேடி என்று வெறுத்துப் பேசவில்லை, மார்சை மருவினாய் போற்றி!—என்று வீனசையும், வீனசை வென்றாய் போற்றி என்று மார்சையும் தொழுதுதான் வந்தனர். கணவனுக்கு, தன் சோரத்தனத்தையே காட்சியாக்கிக் கொடுத்த பெருங்குணவதி, வீனஸ், கிரேக்க, ரோம் நாட்டவருக்கு, வரம் தரும் கடவுளரில் ஒருவளாக இருந்துவந்தாள்—பலப்பல காலம். வீனசையும் மார்சையும் மட்டுமல்ல, அவர்கள் பெற்றெடுத்த, ஹெர்மாயின், க்யூபிட், ஆண்டிராஸ், எனும் மூன்று தேவ குமாரர்களையும், வணங்கி வந்தனர். வீனஸ் தேவியின் விபசாரம், விண்ணுலகோடு நின்றுவிட்டது என்று எண்ணாதீர்கள்—மண்ணுலகத்தையும் அம்மை அவ்வப்போது பதம் பார்த்து வந்தார்கள். டிராய் நகர மன்னன் ஆன்ச்சிஸீஸ் அம்மையின் காதலுக்கு இலக்கானான். ஈனாஸ் என்ற திருக்குமாரனைப் பெற்றாள்.
மற்றோர் சமயம், வீனஸ்தேவி அடவியிலே உலவிக் கொண்டிருந்தபோது, மரம் ஒன்றுதானாகப் பிளந்தது. அதிலே ஒரு குழந்தை தெரிந்தது. வேறோர் தேவதையிடம் கொடுத்து அந்தக் குழந்தையை வளர்த்துவரக் சொன்னாள். இந்தக் குழந்தை, சுந்தரமான வாலிபனாக வளர்ந்தான்—வீனஸ் உள்ளத்திலே, காதல் மூண்டுவிட்டது மகனென எண்ணித்தான், மர இடுக்கிலிருந்து எடுத்தாள்—அரும்பு மீசைக்காகனானதும், அவன், காதலைக் கிளறிடும் கட்டழகனாகவல்லவா ஆகிவிட்டான்—அவள் என்ன செய்வாள் பாபம்—அவனைத் தன்னுடன் அனுப்பி வைக்கும்படி கேட்கிறாள்—அவனை வளர்த்து வந்தாளே, வேறோர் தேவி, அவள் இணங்கவில்லை—இரு இன்பவல்லிகளுக்கிடையே சிக்கித் தவிக்கிறான் அடனாய்ஸ்—எனும் ஆணழகன். சிக்கல் நிறைந்த இந்த வழக்கு, முழுமுதற் கடவுளின் மன்றம் வந்தது. நாலு மாதம் வீனசுடன், நாலுமாதம் வளர்த்த தேவியுடன், மற்ற நாலுமாதம் உன் இஷ்டம்போல், என்று தீர்ப்பளித்தாராம், ஜவஸ்!
என்னென்ன விதமான காமக் கூத்துக்கள், எப்படிப்பட்ட சிக்கல்கள், வழக்குகள், கடவுளர் உலகிலே! பூஜாரிகள் இவைகளையெல்லாம் புண்ய கதைகள் என்று கூறினர்—பாமரர் நம்பினர். புலவர்கள், இவைபற்றி இலக்கியச் சுவையுடன் எழுதினர், மக்கள் படித்து ரசித்தனர்—இப்படிப்பட்ட ஆபாசங்களா, கடவுள் என்ற உயர்ந்த தத்துவ விளக்கத்துக்குத் துணைசெய்யும் மார்க்கம், என்பதுபற்றி எண்ணிப் பார்க்கத் துணிவு பிறக்கவில்லை. கேள்வி கேட்கத் தைரியம் பிறக்கவில்லை, தேவநிந்தனை செய்கிறான் என்று ஆத்தீகர்கள் கண்டிப்பரே என்ற பயம்!
கரும்பு வில்லோன், பஞ்சபாணன்—என்று இங்கு, மன்மதனைக் குறிப்பிடுகிறார்களல்லவா, புராணீகர்கள்—இந்தக் கடவுளுக்கு ஈடாகத்தான், கிரேக்க, ரோம் நாட்டவர் வீனசின் மகன், க்யூபிட் தேவனைக் கொண்டாடி வந்தனர். காதற் கணைகளைத் தொடுப்பது இந்தத் தேவனின் திருப்பணி. துள்ளுமத வேட்கைக் கணையாலே ஏற்பட்ட தொல்லைகள், கடவுளர் உலகில் திருவிளையாடல்களாகிவிட்டன.இப்படிப்பட்ட “புண்ய கதைகளை”ப் புல்லறிவு என்று கண்டு, ஒதுக்கித் தள்ளிவிட்டு, அந்த நாடுகளெல்லாம், உலக அரங்கிலே உயரிடம் பெற்றுத் திகழ்கின்றன. கடவுட் கொள்கையிலே தெளிவும் அறிவும் துலங்குகின்றன. மார்க்கத்துறை, மக்களிடை வளரும் மாசுகளைத் துடைத்து மாண்புகளை வளர்க்கும் கருவியாக்கப்பட்டுவிட்டது. கற்பனை அலங்காரங்கள், கவிதா ரசம், என்ற காரணம் பேசி, அங்கெல்லாம், எறிந்த கட்சி எறியாத கட்சி பேசிடும் பாமரரும் கிடையாது, பெரும்பான்மையான மக்களைப் பாமரர் நிலையிலேயே இருக்கச் செய்து, சுறண்டிப் பிழைக்கும் எத்தர்களும் கிடையாது. வீனசும் மார்சும், வல்கனும் க்யூபிடும், கவிகளின் ஏடுகளிலே உள்ளனர், மக்களின் மன்றத்திலே இருந்து மறைந்தனர்—மாஜிகளாயினர்.
❖