மாஜி கடவுள்கள்/ஹீரா தேவி
- ஹீரா, ஜூவசுக்குத் தங்கை; தங்க நிறமும் ஆவலைத் தூண்டும் பேரழகும், கண்டோர் கைகூப்பி நிற்கும் எண்ணம் கொள்ளத்தக்க கெம்பீரமும், கொண்ட அம்மை! பெருங்கவியாம் ஹோமர் (Homer) “காளைக்கண்ணழகி” என்று வர்ணித்திருக்கிறார். ஹீரா, ஜூவசின் தங்கையாகப் பிறந்து வளர்ந்தார்–ஆனால் ஜூவஸ் ஹீராவைத் தாரமாக்கிக் கொண்டார். தேவன், தேவி என்ற முறையில் அரசோச்சலாயினர்.
ஹீரா தேவி
ஹீரா, ஜுவசின் தங்கையாகப் பிறந்து வளர்ந்து வந்தாள்—ஆனால் ஜூவஸ், ஹீராவைத் தாரமாக்கிக்கொண்டார்; தேவன், தேவி, என்ற முறையில், அரசோச்சலாயினர்.
ஹீரா தேவியாருக்கு, ‘ஸ்வர்ணசிம்மாசனம்’! பசு, மயில் குயில், இவை மூன்றும், தேவியினால், உத்தமமானவைகளாகக் கருதப்பட்டன.
ஜுவஸ், ஹீரா, திருமணம், மிக மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. கலியாணத் தோட்டத்திலே, கடவுட் கூட்டம், களிநடமாடித் தம்பதிகளைப் புகழ்ந்து பாராட்டினர்! பூமியும் பூரித்தது இத்திருமணச் ‘சேதி’ கேட்டு; பொன் ஆப்பிள்கள் காய்த்துக் குலுங்கும் ஒரு அற்புதமான மரம், பூமியிலிருந்து திடீரென முளைத்ததாம்.
தங்கை தாரமானாள்! தயாபரனின் திருவிளையாடல்! பகுத்தறிவுத் துறையினர், ஆராய்ச்சியாளர் என்போர் மட்டுமல்ல, சாதாரண மக்கள்கூட இன்று, இச்செய்தியைக் கேள்விப்பட்டால், பதைப்பர், அருவருப்படைவர்; “இது என்ன கடவுளய்யா!” என்று கடிந்துரைப்பர். எவனோ கருத்துக் குழப்பமுடையோன், கட்டிவிட்ட கதை இது, கடவுளின் குணமும் இலட்சணமும் அறியாதவன் எவனோ தீட்டிவைத்த தீய ஏடு என்று தீர்ப்பளிப்பர். ஆனால் அன்று! ஆத்திகத்தின் அடையாளமே, அந்தத் தேவமாக் கதையைப் பக்தியுடன் ஏற்றுக்கொண்டு, பாராயணம் செய்வதுதான். ஜூவசைத் தொழுவது போலவே ஹீராவையும் பூஜிக்க வேண்டும்; இருவருக்கும் திருமணம் நடைபெற்றதே, கேட்பதற்கே கர்ண கடூரமாக இருக்கிறதே என்று எண்ணுபவன் பாவி; சொல்லத் துணிபவன் சொல்லொணாச் சித்ரவதைக்கு ஆளாக்கப்படுவான், பக்தர்களால்! பூஜாரி பூபதியிடம் புகார் கூறுவான், “மன்னவா! மாபாவி ஒருவன்; ஹீரா மாதாவைப் பழித்துப் பேசுகிறானாம்! இம்மண்டலம், அழிந்துபடும், மாதா கோபங்கொண்டால். தேவியாரின் திரு அருளால்தான் நீ மன்னனானாய்! மண்டலம் செழிப்புடன் இருக்கிறது. மாபாவியை, இன்றே, கொன்றுவிடு, மாதாவின் கோபம் கிளம்பாமுன்; நாத்திகம் பரவாமுன்; நாசம் உன்னையும் உன் நாட்டையும் தொடா முன்பு!” பூபதியும், “அந்தப் புத்தியற்றவனை இழுத்து வா!”—என்று உத்தரவிடுவான்; சந்தேகம் பேசியவன், தலை உருளும் கீழே! அது அந்த நாள் நிலை—ஆத்திகம்.
ஹீரா தேவியார், அண்ணனை நாயகனாகக் கொண்டு அண்டத்தை ஆளும் நிலையைப் பெற்று இருந்தபோதிலும், அவர்களுக்கு, அடிக்கடி தொல்லையும் துயரமும், வந்தபடியே இருந்தன. ஏன்! கணவனின், குணம், ஒரு மாதிரி! கட்டழகி எங்கு இருந்தாலும்—தேவலோகமானாலும் பூலோகமானாலும், ஜூவஸ் தேவனுக்கு, காதல் பிறந்துவிடும், முறையா? சரியா? தன் உயர்நிலைக்கு ஏற்றதாகுமா என்பது பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கமாட்டார்—சாமான்ய மக்களல்லவா, இவைகளைப் பற்றி யோசிக்க வேண்டியவர்கள்! மூல தேவனுக்குமா, இது! செச்சே! அவர், கடவுள்—எனவே, கட்டுத்திட்டம்—நீதி நேர்மை இவை பற்றிக் கவனிக்க வேண்டியவரல்ல—கண்ணைக் கவர்ந்தாள் ஓர் காரிகை என்றால், அவள் கடவுளுக்கு அர்ப்பணம்தான்! விடமாட்டார் ஜுவஸ்! அவருடைய இந்தக் காதல் விநோதம் பல விபரீதங்களுக்கு இடமளித்தது.
ஹீரா தேவியாருக்குக் கோபமும், பொறாமையும் ஆத்திரமும், வராமலிருக்குமா! பேரழகி நானிருக்க. இவர் வேறோர் மங்கையை நாடுவதா! அவள்தான், என்ன எண்ணுவாள், என்னைப்பற்றி! அவனிதான். என்ன எண்ணும் ஜூவஸ், ஹீரா இருக்க, வேறோர் பெண்ணைத் தேடி அலைகிறார்—ஆகவே, ஹீரா ஒரு சமயம் அவலட்சணமோ!—என்றுகூடப் பேதைகள் பேசக்கூடுமே. ஜூவசின் காதலைப் பெறும் காரிகை, கர்வமும் அடையக்கூடுமே—ஹீரா தேவியைவிட நான் அழகு வாய்ந்தவளாக இருப்பதால்தான், ஆண்டவன், நம்மை நாட நேரிட்டது—என்றல்லவா எண்ணி ஆணவம் கொள்வாள்—எப்படி இதைச் சகித்துக் கொள்வது! ஏன் சகித்துக்கொள்ளவேண்டும்? என் உரிமையை ஏன் இழக்கவேண்டும்? என்றெல்லாம் எண்ணி, ஹீரா தேவியார், ஜுவஸ் தேவனின், காமக்களியாட்டத்துக்குத் தன்னால் முடிந்த அளவு, முட்டுக்கட்டை போட்டபடி இருப்பார்களாம். அம்மை இது செய்யாதிருந்தால், ஐயனின் லீலாவிநோதம் இன்னும் எவ்வளவு வளர்ந்திருக்குமோ—புராணிகனுக்கு இன்னும் எத்துணை ‘புனிதப் புளுகுகள்’ கிடைத்திருக்குமோ, யார் கண்டார்கள்.
கணவனின் நடவடிக்கைகளைச் சதா கண்காணித்து வந்த, ஹீராவுக்கு, ஒரு சமயத்தில் ஜூவஸ், ஒரு புதுப் பாத்திரத்தின்மீது, மோகம் கொண்டிருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது; கோபம் மூண்டது.
ஜூவசின் கருத்தைக் கவர்ந்த அந்தக் கட்டழகி, ஆற்றுத் தேவன் இனாகஸ் என்பானின், குமரி, அழகி பெயர், அயோ. அவளை அணுகினார், ஜூவஸ். கடவுளின் காதலை அந்தக் கட்டழகி ஏற்றுக்கொண்டாள். இந்தச் ‘சேதி’தான், எட்டிவிட்டது, ஹீராவுக்கு; விட்டேனா பார், அவளை!—என்று கூறியபடி விண்ணிலிருந்து கீழே தாவினாள் தேவி! தேவன் இதை அறிந்தான்—காதலியை, மனைவியின் கோபத்திலிருந்து காப்பாற்ற வேண்டி, கருமேகங்களை அவசர அவசரமாகப் படைத்து வானத்தில் உலவவிட்டான்; அவைகள், திரைபோலாகிவிட்டன; தேவி அவைகளை ஊடுருவிக்கொண்டு வந்து சேருவதற்குள், அழகி அயோவை, ஒரு பசுங் கன்றாக உருமாற்றிவிட்டு, ஜூவஸ் தேவன், ஏதுமறியாதவர் போலிருந்து வந்தார். ஹீரா கோபத்துடன் வந்திறங்கி, கொடியவளைக் காணாமல், பசு இருக்கக்கண்டு, பதியை நோக்கி, “இது என்ன?” என்று கேட்க, பரமன், “ப்ரியே! பார் இதனை! இப்போதுதான் இதனை நான் படைத்தேன்” என்று பசப்ப, தேவி இதிலேதோ சூது இருக்கிறது என்று எண்ணி, “ஆம்! ஆருயிரே! அழகின் வடிவமான இப்பொருளை, தங்கள் அருந்திறமையால் படைக்கப்பட்ட இதனை, அடியாளுக்குத் தரவேண்டுகிறேன்” என்று கெஞ்சலானாள். என்ன செய்வார் ஜூவஸ்! சரி; என்றார். இழுத்துச் சென்றார் தேவியார், இன்பவல்லியாக இருந்து இறைவனால் பசுவாக்கப்பட்ட, ஆற்றுத் தேவனின் அழகு மகளாம் அயோவை.
பசுவாக உருமாற்றப்பட்ட பாவையை, ஒரு ஆற்றோரத்தில், மேயவிட்டு, பத்திரமாகப் பாதுகாத்து வரும்படி, ஹீரா தேவியார் ஆர்கஸ் என்ற தன் ஏவலாளை, அமர்த்தினாள்.
இந்த ஆர்கஸ், ஒரு அற்புதப் பேர்வழி! நமது புராணிகன், இந்திரனுக்கு ஏதோ ஓர் இக்கட்டின் காரணமாக, ஆயிரம் கண் ஏற்பட்டதாகக் கதை திரித்தான். கிரேக்கப் புராணிகன், இந்த ஆர்கஸ் எனும் குட்டிக் கடவுளுக்கு, உடலெல்லாம் கண் உண்டு, என்று கயிறு திரித்து வைத்தான். எந்தச் சமயத்திலும், ஆர்கஸ், ஏதாவது இரண்டு கண்களைத்தான் மூடிக்கொள்வானாம்–தூங்க! கண்கள்தான் எண்ணற்றன! எனவே, தூங்கினாலும், விழித்துக்கொண்டிருப்பது போலத்தான்! இரு கண் மூடிக்கிடக்கும்! மற்றக் கண்கள் திறந்து இருக்கும்; எனவே இந்தப் பலகண் தேவன், எதையும், பார்த்துக் கொண்டே இருப்பான்! அயோ, தப்ப முடியவில்லை—ஜுவஸ், நெருங்க முடியவில்லை! ஹீராவின் திட்டம் வெற்றி தந்தது! தேவன், வேதனையுற்றான்! கடவுள்தான், எனினும் காதல் பாருங்கள்! இலேசானதா, அந்தச் சக்தி!
அருமை மகள் அயோவை இழந்த இனாகஸ், தவியாய்த் தவித்தான்—எங்கெங்கு தேடியும் அவள் கிடைக்காததால், ஏக்கமுற்றான். அலைந்தான், மகளைத்தேடி! பசுவாகி, அவள் மேய்ந்துகொண்டிருந்த இடம் வந்தான்—மகளைக் காணோமே என்று பதைத்தபடி! பசுவைப் பார்த்தான்—பார்த்து? அவன் மகளை அல்லவா தேடுகிறான்! மகள்தான் அந்தப் பசு என்பதை அவன் கண்டானா! அயோவுக்குத் தெரிந்துவிட்டது, தன் தகப்பன் வந்திருப்பது. “அப்பா! இதோ நான் இருக்கிறேன்” என்று கூறமுடியவில்லை—எனவே, கால் குளம்பினால், தரையிலே, அயோ என்று கீறிக் காட்டிற்றாம் பசு!
“என்ன அண்டப்புளுகய்யா இது—பசுவாக மாறிடுவதாம்—அதேபோது வந்திருப்பது தகப்பன் என்று தெரிவதாம்—அவ்வளவு அற்புத சக்தி இருந்தும், பேச மட்டும் முடியாதாம்—ஆனால் எழுதத் தெரிகிறதாம்! இதெல்லாம், என்ன புளுகுமூட்டை! இப்படிப்பட்ட புளுகுகளையா, புனிதனைப்பற்றி மக்கள் பூஜிப்பதற்காக என்றுகூறிப் புனைவது!” என்று இன்று, நம் நாட்டவர் கூடக் கூறுவர்—நல்லறிவு அந்த அளவுக்குப் பரவிவிட்டது. ஆனால், அன்று, இதுபோல கிரேக்க நாட்டிலே, எவனாவது பேசினால், அவன் நாத்திகனாக்கப்படுவான்! அன்று, அங்கு! இன்று! இங்கு என்ன நிலை? இதுபோன்ற, அர்த்தமற்ற ஆபாசம் நிரம்பிய கதைகள் கடவுட் கதைகளாக உள்ளன, பாராயணத்துக்கு உரியன! பக்தர்களுக்குப் பரவசம் தருவன! பகுத்தறிவாளன், அவற்றினைக் கண்டித்தால்போதும் பாய்வர் அவன்மீது! பாபீ! நாத்திகா! என்று சீறுவர். முருகன், கடவுள் என்கிறீர்! அவர், வேங்கை மரமாக மாறினார் என்கிறீர்! அதுவும், கள்ளத்தனமாக ஒரு பெண்ணைக் காதலிக்க, என்று கூறுகிறீர்—கடவுளுக்கு இந்த வேலை தேவையா?
“காயாத கானகத்தில் நின்றுலாவும் நற்காரிகையை” அடைய, முருகன், இவ்வளவு செய்யத்தான் வேண்டுமா? வள்ளியோ, மானிடமகள்! முருகனோ கடவுள்! எம்மாத்திரம், அவர் மனதுவைத்தால்! நாரதர் போதாதா, தூதுபோக! நம்பிராஜன் மறுத்தா விடுவான்! வேடனாவானேன், வேங்கையாவானேன், கிழவனாவானேன், வேழத்தை அழைப்பானேன், இதெல்லாம், யார் நம்புவது!” என்று கூறிப்பாருங்கள், திருப்புகழ் படிக்குமவர் சீற்றமதனாலே, “சிறுமதியாளனே! பெருநெறி அறியாய்! சிவனாரின் மகனின் சேதியும் தெரியாய்! உருத்தெரியாமல் ஒழிப்பான் உனையே!” என்றெல்லாம் ஏசுவர். இன்றும், இதுபோன்ற நிலை இங்கு.
பாவை பசுவானது, குளம்பினால் பெயர் தீட்டிக் காட்டியது போன்ற, புராணங்களை, இன்று, கிரேக்க நாட்டிலும், அறிவு பரவியுள்ள எந்த நாட்டிலும், பித்தர் பட்டியில் உள்ளோரும் நம்பார்! ஒரு காலத்து ஆத்திகம், இன்று, அறிவுச்சூன்யம், என்று அங்கு ஆக்கப்பட்டுவிட்டது.
மகளே இந்தப் பசு என்று கண்டு ஆற்றுத்தேவன், மனம் பதறினான்! இக்காட்சியைக் கண்டான், பலகண் தேவன், ஆர்கஸ் விரட்டியடித்தான், விம்மும் தந்தையை. மற்றோர் வெற்றி, ஹீரா தேவியாருக்கு; மனவேதனை, ஜூவஸ் தேவனுக்கு.
இந்தப் பல கண்ணனை ஒழித்தால்தான், பசுவை மீண்டும் பாவையாக்கி மகிழமுடியும் என்ற தீர்மானத்துக்கு வந்தான் ஜூவஸ். ஹெர்மிஸ் என்ற குட்டிக் கடவுளை ஏவினான், எப்படியாவது, ஆர்கசை, அழித்துவிட்டு வரச்சொல்லி. அவன், ஒரு அற்புதமான குழலெடுத்து ஊதினான்—கேட்போர் மயங்கும் விதமாக! நமது புராணிகன் கண்ணனின் குழலைப்பற்றிக் கதை கட்டினானல்லவா. அதுபோல் பசுவும் கன்றும், பாவையரும் பாம்பும், கண்ணனின் குழல்கேட்டு மயங்குவர், என்று துவக்கிய புராணிகன், பாரதப் பெரும்போரே, நேரிடாதபடி, குழலை ஊதினான் கண்ணன், துரியன் சபையில், துரியன் பாண்டவர் மீதிருந்த பகை நீங்கப்பெற்று, தூயமனத்தினனாகி, அவரடி தொழுது, தர்மனைத் தழுவி, தூய துரியனானான் என்று முடிக்கவில்லையல்லவா! குழல், ஒரு அளவுக்குத்தான் பயன்பட்டது. அங்கும் அவ்விதம்தான்! எல்லோரையும் மயக்கிய அந்தக் குழல் பல கண்ணனை மயக்கவில்லையாம்! அவன் வழக்கம்போல், இருகண் மூடியாகவே இருக்கக்கண்டான், ஹெர்மிஸ். எனவே, வேறோர் தந்திரம் செய்தானாம்! சுவையான கதை ஒன்று கூறினானாம், அதைக் கேட்டுக்கொண்டே, ஆர்கஸ், தூங்கிவிட்டானாம்—எல்லாக் கண்களையும் மூடிக்கொண்டு. இதுதான் சமயமெனக் கண்ட ஹெர்மிஸ், அவனைக் கொன்று, அயோவைச் சிறைமீட்டானாம்! எனினும், பசுவைப் பாவையாக்க முடியவில்லை, குட்டிக் கடவுளால். ஹீரா தேவியாருக்கு, விஷயம் தெரிந்தது—கோபம் மூண்டது, இறந்துபட்ட ஆர்கசின், பல கண்களை, எடுத்து, தன் பிரியத்துக்குரிய மயிலின் தோகைக்குக் கண்களாக அமைத்துவிட்டு—ஒரு, விஷவண்டைச் சிருஷ்டித்து அயோமீது ஏவினாள். அது கொட்ட, பசு துடிதுடித்து, வலி தாங்கமாட்டாமல், கடலிலே வீழ்ந்து, நெடுந்தூரம் சென்று கடைசியாக, ஈஜிப்ட் சென்றதாம். ஜுவஸ், தேவியுடன் போட்டியிட்டுப் பயனில்லை என்று கண்டு, கெஞ்சிட தேவி, போனால் போகிறது என்று, பசுவை மீண்டும் பாவையாக்கினாராம்—ஆனால் ஜுவசின் காதலியாக்கவில்லை!
இங்ஙனம், ஹீரா தேவியார், வீராங்கனையாய் விளங்கினார்! அதைக் கூறியே, பக்தர்கள் விசேஷப் பூஜைகள் நடத்தி வந்தனர், ஹீராவுக்கு, நெடுங்காலம்!
ஜுவசின் மற்றோர் காதல் விளையாட்டையும், அம்மை கருகச்செய்து, தன் வீரத்தைக் காட்டினாராம்.
ஆர்கேடியா நாட்டிலே ஒரு வள்ளி!—வேடர்குலமாது—அழகி—எனவே ஜூவஸ், காதல் வேட்டையில் ஈடுபட்டார்! கணவன்மீது–கோபக் கணைகளை ஏவினாள், ஹீராதேவி!
இந்த அழகியின் பெயர் காலிஸ்ட்டா. கட்டழகி காலிஸ்ட்டா, டயானா தேவிக்குத் தோழி! வழுக்கி விழுந்தவளல்ல! வானவில்போன்ற வசீகரமிக்க அழகி! ஒருநாள், அலுத்துப்படுத்து உறங்கிக்கொண்டிருந்தாள், பச்சைப் பசும் புற்றரைமீது. பத்தரைமாத்துத் தங்கப்பதுமை போன்ற பாவை! பார்த்தார் ஜுவஸ், அடக்க முடியாத காமப்பசி! கடவுளுக்குத்தான்! அந்த நாட்களில், மனிதனுக்கே அடுக்காத குணத்தை மகேசனுக்கு இருந்ததாகக் கூறிக் களித்தனர்—கும்பிட்டனர் அத்தகைய கடவுள்களை.அவளோ படுத்து உறங்குகிறாள்! முழுமுதற் கடவுள் காண்கிறார்—கண்டதும், காமம் மேலிட்டு, அவளை அடைவது என்று தீர்மானிக்கிறார்.
அழகுக்கு ஆண்டவனும் அடிமைப்பட்டுவிடுகிறார், அழகின் அதி அற்புத சக்தியே சக்தி, என்று தத்துவார்த்தம் கூறலாமே இதற்கு என்று எண்ணுவர், இங்குள்ள புராணீகர்கள்—இன்றும்.
துயிலிலிருந்து தோகை மயிலாளை, காதல் கீதம்பாடி, ஜூவஸ் எழுப்பி, “ஏந்திழையே! எவரும் வணங்கிடும் ஜூவஸ் தேவன் நான், இதோ காதலால் கட்டுண்டு நிற்கிறேன், உன்னைத் தொழ! எவருக்கும் எவ்வரமும் அருளும் ஆற்றல் படைத்தவன் நான், எனினும், உன்னிடம் பிச்சை கேட்கிறேன், காதல் பிச்சை! விண்ணிலும் மண்ணிலும் உன்னைப் போன்ற அழகியைக் கண்டேனில்லை! அஞ்சாதே! அழகுத் தெய்வமே! அருகில் வா! உன் ஆலிங்கனம் கிடைத்தாலன்றி நான் உயிர் தரியேன்! என் இதயத்தை வென்றுவிட்டாய் இன்பவல்லி! இனி நான் உன் அடிமை! நீயே, என் பிரியநாயகி!”—என்று தூய காதல் பேசி, அந்தத் துடியிடையாளைக் கடிமணம் புரிந்துகொண்டான், என்று எண்ணிவிடாதீர்கள்.
அவள் ஓர் அழகி! இவர் ஓர் பசி நிறைந்த காளை! அவள் வேண்டும் இவருக்கு—அப்போதே!—அவ்வளவுதான். அதற்கு என்ன செய்வது என்றுதான் எண்ணலானார் ஜூவஸ் தேவன். கடவுளல்லவா, அபூர்வமான யோசனை உதித்தது உடனே, டயானா வடிவமெடுத்தார்—இந்திரன் கௌதம் ரிஷியானானே, அதுபோல! அந்த அகலிகையோ அரிதுயில் செய்கிறாள்—ஜூவஸ், டயானாவானார்.“அடி! காலிஸ்ட்டா! எழுந்திரடி!”—ஜூவஸ், தட்டி எழுப்புகிறார், தளிர் மேனியாளை.
“அதிக நேரம் தூங்கி விட்டேனம்மா, டயானா தேவி”—என்று கூறியபடி கண்களைத் திறக்கிறாள் காரிகை. கமலம் இரண்டு கண்டேன் என்று களிக்கிறார் டயானாவான ஜுவஸ். காலிஸ்ட்டாவின் கனிமொழி அவருடைய காமப்பித்தத்தை மேலும் கிளறுகிறது.
“கண்ணே காலிஸ்ட்டா! கட்டழகி காலிஸ்ட்டா!” தொட்டிழுத்து முத்தமிட்டபடி, கொஞ்சுகிறார், டயானா வடிவுடன், ஜுவஸ். இந்த விசித்திரப் போக்கைப் புரிந்துகொள்ள முடியவில்லை, காலிஸ்ட்டாவால்! டயானா அணைத்துக் கொள்கிறாள்! டயானா, கன்னத்தைக் கிள்ளுகிறாள்! டயானா, கூந்தலைக் கோதுகிறாள்! டயானா காதல் சேட்டைகள் புரிகிறாள்! முத்தமிடுகிறாள்! கட்டிக் கரும்பே! கற்கண்டே! என்று கொஞ்சுகிறாள்—காலிஸ்ட்டாவிடம்! இதென்ன விபரீதம், டயானாதானா?—இப்படியெல்லாம், சரசமாடக் காரணம் என்ன—என்று எண்ணித் திகைக்கிறாள். அகலிகைகூட கௌதம் வேடத்தில் வந்த இந்திரன், விளையாடும் விதத்தைக் கண்டு, இதென்ன நமது நாதன் அல்ல போலிருக்கிறதே என்று ஒரு கணம் சந்தேகித்ததாகச் சொல்லப்படுகிறதல்லவா, அதுபோல! காலிஸ்ட்டா திணறுகிறாள்—போராடுகிறாள், தன்னை மாய டயானாவின் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள. ஆனால் முடியுமா! சாமான்யருடைய பிடியா அது! சாட்சாத் ஜூவஸ் தேவனின் பிடி! பசும் புற்றரை மஞ்சமாயிற்று! ஜூவஸின் பசியும் தீர்ந்தது. பாவை பதறினாள்—வெட்கித் தலை குனிந்தாள். ஜூவஸ் தேவன், எவ்வளவோ முக்கியமான அலுவல்களுக்கிடையிலல்லவா, இந்தத் திருவிளையாடல் புரிந்தார். எனவே அவர் வேறு அலுவல்களைக் கவனிக்கச் சென்றுவிட்டார். கற்பிழந்த காரிகை—செச்சே!—அப்படிச் சொல்ல அனுமதிக்க மாட்டார்கள் ஆத்தீகர்கள்—ஜூவஸ் கடவுளுக்கு விருந்தளித்த பாக்யசாலி—கிரேக்க அகலிகை—தன் நிலையை எண்ணி எண்ணி விம்மினாள்—ஆனால் வெளியே சொல்ல முடியுமா—தேவ இரகசியமல்லவா!!
டயானா அறியாள் இதை—மற்றத் தோழியரும் தெரிந்து கொள்ளவில்லை. ஆடிப் பாடிக் களிக்கின்றனர் வழக்கம் போல!
ஒரு நாள், தேவமாதர்கள் நீராடச் சென்றனர்! கெண்டை விழிமாதர், தாமரைத் தடாகத்திலே துள்ளிக் குதித்து விளையாடுகின்றனர்—அவர்கள் களைந்து வைத்த ஆடைகள் காற்றிலே ஆடுகின்றன ஓர் புறம்—இவர்களின் கரம்பட்டுக் கமலங்கள் கூத்தாடுகின்றன. குளத்தில் காலிஸ்ட்டா மட்டும் நீராடவில்லை.
“ஏண்டி, பெண்ணே, இப்படி நிற்கிறாய்! ஆடையைக் களைந்துவிட்டு, நீராடவா”
“வேண்டாமம்மா நான் நீராடப் போவதில்லை”
“ஏன்!”
“வேண்டாம்!”
“என்னடி இது விந்தை! இவ்வளவு பேர் நாங்கள்! நீராடுகிறோம் ஆனந்தமாக—நீ மட்டும் நிற்பானேன்—வா—”
டயானா அழைக்கிறாள், காலிஸ்ட்டா மறுக்கிறாள்.
மற்றவர்கள் சென்று, காலிஸ்ட்டாவை பிடித்து இழுத்து, ஆடையைக் களைகின்றனர்—அகலிகை கருவுற்றிருக்கிறாள்! தேவப்பிரசாதத்தைத் தாங்கி நிற்கிறாள். கண்டாள் டயானா, கடும் கோபம் கொண்டாள்.“என்னடி இது”—டயானா கேட்கிறாள் கோபமாக காலிஸ்ட்டாவின் கண்ணீரைக் காண்கிறாள். தோழியர் திகைக்கிறார்கள்!
“கெடுமதி கொண்டவளே! கெட்டலைந்த நாரீ! இனி என் தோழியாக இருக்கும் யோக்கியதை உனக்குக் கிடையாது. போ, நில்லாதே!” என்று கண்டித்து, விரட்டிவிட்டாள். ஜூவஸ் தேவனின் அக்ரமத்துக்கு இடமளித்தாள், அவமதிப்பு பெற்றாள், டயானாவின் அவையில் இருக்கும் அந்தஸ்த்தையும் இழந்தாள், அழகி காலிஸ்ட்டா. பிறகு காலிஸ்ட்டாவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.
ஜூவஸ் தேவனின் காமக்களியாட்டத்தால் தாக்கப்பட்டுத் தத்தளித்த காலிஸ்ட்டாவை, சும்மா விடவில்லை, ஜூவசின் பத்னி, ஹீரா தேவியார். தன் கணவனின் காமச் சேட்டைகள் அனைத்தும் அறிந்தவர்களல்லவா தேவியார்! காலிஸ்ட்டாவுடன் ஜூவஸ் நடத்திய காம விளையாட்டும் தேவியாருக்குத் தெரிந்தது. கோபம் பிறக்காமலிருக்குமா! உடனே, காலிஸ்ட்டாவை, பெண் கரடியாகும்படி சாபமிட்டுவிட்டார்! ஆண் தெய்வம் கற்பை அழித்தது, பெண் தெய்வம், உருவை அழித்தது—இத்தனைக்கும் காலிஸ்ட்டா செய்த ஒரே குற்றம், அவள் அழகாக இருந்ததுதான்!
காலிஸ்ட்டாவுக்குக் கரடி உருவம்—ஆனால் பெண் உள்ளம்! எந்தக் கானகத்திலே கட்டழகியாக, ஆடிப்பாடி இருந்து வந்தாளோ, அங்கு, கரடியாகி, தன் முன்னாள் நிலையை எண்ணி எண்ணி விம்முகிறாள் காலிஸ்ட்டா.
ஜூவஸ் தேவனுடைய காதல் விளையாட்டுகள் கணக்கிலடங்கா! அழகிகளைக் கண்டால் அந்த ஆண்டவனுக்கு மனதிலே அலைமோதாமலிருப்பதில்லை. மிகத் திறமையாகத்தான், ஹீரா தேவி ஜூவசைக் கண்காணித்து வந்தார்கள்—எனினும், ஜூவஸ் தேவன், எப்பாடுபட்டாவது, மேகரூபமோ காளை உருவோ, ஏதேனும் ஒரு அவதாரம் எடுத்தாவது காதல் கனிரசத்தைப் பருகி மகிழ்வார். கடவுள், என்றால் சர்வசக்தி வாய்ந்தவர், என்பது ‘பக்த இலக்கணம்.’ மனிதர்களுக்குச் சாத்யமாகாத அரும்பெரும் செயல்களைக் கடவுள் செய்து முடிப்பார்—எனவேதான் அவர் பூஜைக்குரியவர் என்பது பூஜாரியின் வாதம்! களவு, கொலை, காமக்களியாட்டம் போன்ற செயல்களைச் செய்வது ஒழுக்கத்துக்கும் பண்புக்கும் ஊறு தேடுவதாகும் என்ற காரணத்தால் சாமான்யர்களான மனிதர்களே சமுதாயத்திலே சில கட்டுத்திட்டங்களை அமைத்துக்கொண்டனர்—அதற்கேற்ப நடந்தனர்—அதை மீறுவோர் இழிமக்களென்று கண்டிக்கப்பட்டனர்—தண்டிக்கப்பட்டனர். ஆனால் சகல வல்லமை பொருந்தியவர் என்ற இலட்சணத்தைக் கூறி, எந்தக் கடவுளரை, பூஜாரி புராணீகன் ஆகியோர் சொல் கேட்டு மக்கள் தொழுது வந்தனரோ, அந்தக் கடவுளர் ஆபாசமான லீலைகளிலே ஈடுபட்டும், அக்ரமமான காரியங்களைச் செய்தும், தமது திருக்கலியாண குணத்தை வெளிப்படுத்தினர். மக்கள் இவைகளைப் பற்றிக் கேள்விப்பட்டபோது, மனம் பதறிடவில்லை. பக்தி, அவர்களுடைய சிந்தனையைச் சிதைத்தது. பூஜாரி அவர்களின் அறிவுக் கண்களைத் திறக்கவிடாமல் தடுத்தான். அதனால், ஜூவசின் காமவெறிச் செயலை எல்லாம் கடவுளின் திருவிளையாடல் என்று கூறிப் பூரித்தனர்.
ஆர்காஸ் நாட்டு மன்னன் மகள் டானே, அழகுமிக்கவள்! ஆரூடக்காரன் இந்த மங்கை வயற்றிலுதிக்கும் மகனாலேயே உனக்கு மரணம் சம்பவிக்கும் என்று கூறி விடவே, மன்னன் மகளைப் பாதாளச் சிறையிலே போட்டு வைத்தான் கன்னியாக இருந்தபோதே. பித்தளையால் செய்யப்பட்ட சிறை—பூமிக்குள் அதைப் புதைத்து வைத்தான். அந்தச் சிறைக்குப் பலகணியும் கிடையாது—ஒரே கதவு, அதைப் பூட்டி, சாவியை மன்னனே வைத்துக் கொண்டான்—ஒரு கிழவியைக் காவலுக்கும் துணைக்கும் அமர்த்தியிருந்தான். புத்தம் புது மலர், வாடிக் கிடந்தது. சிறையிலே சிங்காரி, சேதி ஜூவசுக்கு எட்டிவிட்டது. மணம் வீசிற்று மகேசனுக்கு. அவ்வளவுதான்! சர்வேஸ்வரனல்லவா!! ஒரு நாள், பொன் மழை பெய்தது, சிறையின் உள்ளே! பொன் மழை என்றால் என்ன—அவரேதான், அந்த வடிவில்! மேகமாக மாறி ஒரு மெல்லிடையாளை மகிழ்வித்ததுபோல, இந்தச் சிங்காரியைச் சேர, பொன்மாரியாக வந்தார்—புதுமலர்—விண்ணுலகத்து விசேஷ அதிகாரம் படைத்த வண்டு! விளைவு பற்றி விளக்கமா தேவை! அழகு மகன் பிறந்தான். அலறினான் மன்னன். ஜூவசின் திருவிளையாடல்தான் இது! வேறு யாரால் முடியும் இந்த ஆற்றல்மிக்க செயல்!—என்று எண்ணி, தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளக் கருதி பெரியதோர் பேழையில், பெண்ணையும் அவள் பெற்றெடுத்த தேவ குமாரனையும் வைத்து, பேழையைக் கடலிலே வீசினான்—அலைக்கோ சுறாவுக்கோ இறையாகட்டும் என்று. தன் இன்பவல்லியும் காதல் கனியும் கடலால் விழுங்கப்படுவதைக் காண மனம் வருமா மகேசனுக்கு. “கடலே! அமைதி!”—என்றார். கடல், அலை நீங்கப் பெற்று பேழையை ஆபத்திலே தள்ளாமல் பாதுகாத்தது. பிறகு தூர தேசத்தில் கரையோரமாகப் பேழை சென்று தங்கிற்று. மீன் பிடிப்போன் கண்டெடுத்து, தாயையும் சேயையும் வளர்த்தான். அந்த தேவ மகன்தான், பெர்ஷியஸ் எனும் கீர்த்தி வாய்ந்த வீரன்!ஹுரா தேவியாருக்கு, வானவில்தான், தூது செல்லும் தோழி, என்றான் கிரேக்கப் புராணிகன்—இன்று விஞ்ஞானி வானவில் அமைப்பை விளக்குகிறான், அங்கு. இங்கோ, உருண்டு கிடக்கும் கல்லைக்காட்டி, இது கண்ணன் உருட்டி வைத்த வெண்ணெய் என்றும், தேய்ந்து இருக்கும் கல்லைக் காட்டி, இது துரோபதை, மஞ்சள் அரைத்த இடம் என்றும் தூற்றுகிறார்கள்!
ஹீராவுக்கு ஒரு காலத்தில் கிரேக்க நாட்டில் இருந்து வந்த செல்வாக்கு, கொஞ்சமல்ல! ஹீராவையே, ரோம் நாட்டவர், ஜூனோ என்ற பெயர் சூட்டித் தொழுது வந்தனர்.
ஆர்காஸ், ஸ்பார்ட்டா, மைசீன், எனும் தலங்கள் இருந்தன—ஹீரா தேவியாருக்கு மக்கள் மூவர், தேவிக்கு! பூஜை, பலம்; கோயில், பிரமாண்டம்!
ஆனால் இன்று இவை எல்லாம், புராணப்புளுகாய், புத்துலகுக்குத் தோன்றுகின்றன.
மயிலும் குயிலும் பசுவும் உடனிருக்க, தங்கப்பீடத்தமர்ந்து, வானவில்லைத் தோழியாகக்கொண்டு அரோச்சிய ஹீரா தேவியாருக்கு, இன்று, பாழ்மண்டபமோ, அகல் விளக்கோ, திருநாளோ, நோன்பு கொண்டாடுவோரோ, இல்லை! அறிவு பிறந்ததும், ஹீரா, மாஜி கடவுளாகிவிட்டார்! ஆனால், மாரி, இங்கு ஆட்சி புரிகிறாள், இன்றும்!!
❖