மாஜி கடவுள்கள்/தவளைமுகத் தேவி
- ஈஜிப்ட் நாட்டவரின் பூஜைக்குரிய தெய்வங்களிலே, முழுமுதற் கடவுளாகக் கருதப்படுபவன், ரா தேவன்—ஏறத்தாழ, நம் நாட்டுப் புராணத்திலே காட்டப்படும் சூரியன் போன்றவன், ரா!......ரா தேவன், முட்டையிலிருந்து கிளம்புகிறான், ஒளி வண்ணனாக! அந்த முட்டையோ, கடலிலிருந்து கிளம்பிற்று! அந்தக் கடல்?—யாரும் கேட்கவில்லை—கேட்பது நாத்தீகம் என்று கூறினர், ஈஜிப்ட் நாட்டுப் பூஜாரிகள். பகுத்தறிவுப் பலகணி திறக்கப்படும் வரையில ஈஜிப்ட் நாட்டு மக்கள் பிரபஞ்ச உற்பத்திக்கு, இந்தக் கடலிட்ட முட்டையே காரணம் என்று நம்பிவந்தனர்.
தவளைமுகத் தேவி
ஈஜிப்ட் பிரபஞ்ச உற்பத்தி
கடலும் காற்றும், வானமும் அங்கு மின்னும் விண்மீன்களும், கதிரவனும் திங்களும், இடியும் மின்னலும், பெருமழையும், அறிவுவளம் பெறாமல் மனிதகுலம் வாழ்ந்த நாட்களிலே, விளங்காதவைகளாக, விசித்திரமானவைகளாக இருந்தன. கண்முன் உள்ள காட்சிகள்—ஆனால் பொருள் விளங்கவில்லை—நிகழ்ச்சிகளுக்குக் காரணம் தெரியவில்லை. தென்றல் இனிமை தருகிறது, புயல் அழிவை உண்டாக்குகிறது! கதிரவனால் ஒளியும் கிடைக்கிறது, சில நேரத்திலே கொதிப்பும் ஏற்பட்டுவிடுகிறது! திங்கள் தேய்கிறது, வளர்கிறது, மீண்டும் மீண்டும். நட்சத்திரங்கள் மின்னுகின்றன, “ஏ, மானிடனே! சொல்லு பார்க்கலாம், நாங்கள் எங்கே இருக்கிறோம்! யார் நாங்கள்! எவ்வளவு உயரத்திலே இருக்கிறோம் பார்த்தாயா! முடியுமா உன்னால், இங்கு, வருவதற்கு!” என்று கேலி பேசுவதுபோல! ஒவ்வொரு இயற்கைப் பொருளும், நிகழ்ச்சியும், நன்மையோ தீமையோ தரத்தான் செய்கிறது—எனினும், அவைபற்றி அவனுக்கு விளக்கம் கிடைக்கவில்லை. தன் வாழ்வுடன் நீக்கமுடியாத தொடர்பு கொண்ட இயற்கையின் பொருளை அறிந்தாக வேண்டும் என்ற எண்ணம், மனதைக் குடைகிறது. அண்ணாந்து பார்க்கிறான் மேலே! என்னதான் இருக்கிறதோ......ஆச்சரியப்படுகிறான்! கடலைக் காண்கிறான், பொங்கும் அலை மயமாக இருக்கிறது—அதன் கரை எது? தெரியவில்லை; திகைக்கிறான். பயங்கரமான இடி! கண்ணைப் பறிக்கும் மின்னல்! எதற்கும் பொருள் தெரியவில்லை, எதையும் பொருட்படுத்தாமலும் இருப்பதிற்கில்லை. ஏனெனில் ஒவ்வொன்றும் மனிதனை பாதிக்கிறது. பலன் தெரிகிறது—பொருள் தெரியவில்லை!
இந்த மனநிலை, எந்த நாட்டிலேயும், அறிவு வளரா முன்னம் இருந்த பொதுவான நிலை!
விளக்கம் தேடினான்—ஒவ்வொன்றுக்கும்!
எல்லாவற்றுக்கும் மூலம் என்ன? எது முதல்! கடலா காற்றா, விண்ணா மண்ணா, மனிதனா மிருகமா, செடி கொடியா—விளங்கவில்லை!யாருடைய ஏற்பாடு இவைகள்?—எண்ணுகிறான் எண்ணுகிறான்—திகைக்கிறான் விளங்காமல்!
எதிலிருந்து எது உண்டாயிற்று! ஏன் உண்டாயின!—மனம் குழம்புகிறது இதைப்பற்றி எண்ணத் தொடங்கினால்.
காற்று மகா சக்தி வாய்ந்தது—ஆமாம்—பெருமரங்களைப் பெயர்த்தெடுத்தல்லவா வீசுகிறது, செண்டு போல!—
கடல்! காற்றைவிட விசித்திரமானது!
விண்! எல்லாவற்றையும்விட விசித்திரம்!
சூரியன்!—மிகமிக மேலான சக்தி படைத்தது!
இவ்விதம், ஒவ்வொரு இயற்கைப் பொருளும், மனிதனுக்கு, ஆச்சரிய மூட்டுகிறது. எதற்கும், அவனால் விளக்கம் காணமுடியவில்லை.
அந்த நிலை, பொதுவாக மனித குலத்துக்கு இருந்தபோது, ஒரு சிலர், புரியாத பிரச்னைகளைப்பற்றி, விடாமல் சிந்தித்து, தத்தமது திறமைக்கேற்ப, விளக்கம் கண்டு கூறினர். அப்படிக் கூறப்பட்டவைகளே, விசித்திரமான கதைகள்! இவைகளைப் புரட்டர்களும், பூசாரிக் கூட்டத்தாரும் பாமரரை ஏய்த்துப் பிழைக்கவும், தமது ஆதிக்கத்தைப் புகுத்தவும் பயன்படுத்திக்கொண்டனர்.
புரியாத பிரச்னைகளுக்குக் கற்பனையாகக் கட்டிவிடப்பட்ட கதைகள் பலப்பல, எனினும், அவை பெரிதும், பிரபஞ்ச உற்பத்தி பற்றியும். இறந்தபின் மனித நிலை என்ன என்பது பற்றியதுமாகவே இருந்திடக் காணலாம். அதாவது பொதுவாக இந்தக் கற்பனைக் கதைகள், கடந்துபோன காலம், எதிர்காலம், எனும் இரு முனைகள் பற்றியதாகவே இருந்தன.பிரபஞ்ச உற்பத்திபற்றி ஒவ்வொரு நாட்டவர் ஒவ்வொரு விதமான ‘கதை’ கூறிவந்தனர். அதுபோலவே, ஈஜிப்ட் நாட்டிலேயும் ஒரு கற்பனை நெடுங்காலம் வரையிலே, மக்கள் மனதை ஆட்சி செய்துவந்தது.
கொந்தளிக்கும் பெருங்கடல்! அதன் ஆழம், பரப்பு, யாருமறியார்! அதன் போக்கு, யாருக்கும் விளங்காதது! அந்தப் பெருங்கடல்தான், வித்து! விண்ணோ மண்ணோ, புல்லோ பூண்டோ, மோட்சமோ நரகமோ, தேவனோ அசுரனோ, ஏதும் தோன்றாதிருந்தபோது, பெருங்கடல் ஒன்றுதான் இருந்தது—கொந்தளித்தபடி!
அந்தப் பெருங்கடலிலிருந்து, ஒரு பளபளப்பான முட்டை கிளம்பி மிதந்தது. அதிலிருந்துதான் கிளம்பினான், முதற் கடவுள், ரா தேவன்!
ஈஜிப்ட் நாட்டவரின் பூஜைக்குரிய தெய்வங்களிலே முழுமுதற் கடவுளாகக் கருதப்படுபவன், ரா தேவன்—ஏறத்தாழ, நம்நாட்டுப் புராணத்திலே காட்டப்படும் சூரியன் போன்றவன, ரா!
ரா தேவன், முட்டையிலிருந்து கிளம்புகிறான், ஒளி வண்ணனாக! அந்த முட்டையோ, கடலிலிருந்து கிளம்பிற்று! அந்தக் கடல்?—யாரும் கேட்கவில்லை—கேட்பது நாத்தீகம் என்று கூறினர், ஈஜிப்ட் நாட்டுப் பூஜாரிகள். பகுத்தறிவுப் பலகணி திறக்கப்படும் வரையில், ஈஜிப்ட் நாட்டு மக்கள் பிரபஞ்ச உற்பத்திக்கு, இந்தக் கடலிட்ட முட்டையே காரணம் என்று நம்பி வந்தனர்!
ரா தேவன் பிறந்த கடலகம், நூ என்று அழைக்கப்பட்டது, அன்றைய மக்களால்!
ரா தேவனுக்கே, மூன்று திருநாமங்கள். பொற்கதிர் பரப்பிக் கிளம்பிடும் அதிகாலையில், கெப்பீரா என்று பெயர்! பகலில், ரா தேவன் என்று பெயர். மாலையிலே டும் என்று நாமதேயம்.
ரா தேவனைத்தான், ஈஜிப்ட் மக்கள், தேவதேவனென்றும், முழுமுதற் கடவுள் என்றும், கொண்டாடி வந்தனர்—பலப்பல நூற்றாண்டுகள்! இங்குபோலவே அங்கும்! ஆலயங்கள், பூஜாரிகள், திருவிழாக்கள், பூஜைகள், கோலாகலத்துக்குக் குறைவில்லை.
எல்லாக் கடவுள்களும் ரா தேவனால் படைக்கப்பட்டார்கள், என்று ஈஜிப்ட் புராணம் கூறுகிறது.
காற்றுக் கடவுள் ஷு (வாயு தேவன்) சிங்கமுகவதி டெப்னட் தேவி, மாநிலக் கடவுள் செப், விண்ணகக் கடவுள் நட்—போன்ற பல கடவுள்களையும் ரா தேவனே, உண்டாக்கினான். ரா தேவனால் படைக்கப்பட்ட நட் கடவுளிடம் பிறந்தவர்கள் நால்வர், இரண்டு ஆண் கடவுள்கள், இரண்டு பெண் கடவுள்கள். ஆசரிஸ் தேவன், இசிஸ் தேவி! செட் தேவன், நெப்தீஸ் தேவி!
விண்ணையும் மண்ணையும், ரா தேவன்தான் படைத்தான்—ரா தேவன் கட்டளையால், கடலகத்திலிருந்து கிளம்பின இரண்டும்.
ரா தேவன் தன் கண்களிலிருந்து, மாந்தரைப் படைத்தான்! பிரமன் முகத்திலே பிராமணன் உதித்தான்—என்று இங்கு புராணம் இருக்கிறதல்லவா—அங்கு, ஈஜிப்ட்டில், ரா தேவனின் கண்ணிலிருந்து மனிதர் பிறந்தனர் என்று புராணம் இருந்தது!
ஈஜிப்ட்டில், இருந்தது—இங்கு, இருக்கிறது! ஈஜிப்ட்டில், அறிவு ஆட்சி செய்யத் தொடங்கியதும், முழுமுதற் கடவுளாவது முட்டை வடிவிலே வெளிப்படுவதாவது, ஒரு கடவுள் பல கடவுள்களைப் பெறுவதாவது, இதெல்லாம் கட்டுக் கதைகள், என்று மக்கள் கூறிடும் துணிவும் தெளிவும் பெற்று, கடவுள் ஒருவர், உருவமற்றவர் என்ற மெய்ஞானம் பெற்றனர்—மேதினியில் வேறு பல நாடுகள் மெய்யறிவு பெற்றது போலவே. இங்குதான், அன்று போலவே இன்றும், அரிதுயில் செய்யும் ஸ்ரீமன் நாராயண மூர்த்தி, அவருடைய நாபிக்கமலத்திலே இருந்து தாமரைக்கொடி, அதன் நுனியிலே தாமரை, தாமரை மீது நான்முகப் பிரம்மா, அவர் நாவிலே கல்விக்கரசி சரசுவதி-என்பன போன்ற கதைகள், ஆதிக்கம் செலுத்துகின்றன—மறுப்பவன் மாபாவியாகிறான்!
கதையை அப்படியே நம்பிடும் ஏமாளி ஒருபுறம்.
கதைக்குக் தத்துவார்த்தம் கூறிடும் தந்திரக்காரன் மற்றோர் புறம்.
கதையிலே புதைந்து கிடக்கும் உண்மைகளைக் கண்டறிந்து கூறிடும் அறிவியல் துறையின் கழைக் கூத்தாடிகள் மற்றோர் புறம்.
கதைகளை நம்புவதுதான் ஆத்தீகம், காரணம் கேட்பவன் நாத்தீகன், என்று மிரட்டிடும் பூஜாரிக் கூட்டம் மற்றோர் புறம்—என்று இந்நிலையில் இங்கு மக்கள் உள்ளனர். ஈஜிப்ட்டில் இதே நிலையில் இருந்த மக்கள், இப்போது, கடலில் கிளம்பிய முட்டையே கதிரவன்—கதிரவன் பெற்ற குழந்தை குட்டிகளே, பல கடவுள்கள், என்ற பழங்காலக் கதைகளை, குப்பை மேட்டுக்கு அனுப்பிவிட்டனர்—அறிவு பெற்றதும்!
அறிவாராய்ச்சி இல்லாதபோது இருந்த இறைவன்தான் ரா. அவனுடைய ஆற்றலைப் புகழ்ந்தனர், புராணப் புலவர்கள்! அவன் அழகைக் காவியத்திலும் ஓவியத்திலும் காட்டினர், கலாவாணர்கள்! அவனுக்கு, காணிக்கை குவித்தனர் குன்றுபோல, பாமரர். அமோகமான செல்வாக்குடன் அரசோச்சி வந்தான் ரா தேவன், அறிவு வெளிக்கிளம்பும் வரை, பிறகோ, ரா தேவன், மாஜி கடவுளானான்.
ரா, மாஜி கடவுளாகா முன்பு, அந்நாட்டுக் காளிதாசனும் கம்பனும், காவிய மாலைகள் பலப்பல சூட்டிக் காட்டினர், பாமரர் வீழ்ந்து வணங்கி வந்தனர். ஈஜிப்ட் நாட்டு மக்களின் இதயத்தை உருக்கக்கூடிய விதமான அருட்செயல்கள் பல செய்தவர், இந்த ரா தேவன்—அந்த காட்டுப்புராணத்தின்படி.
மண்ணைப் படைத்த மாதேவன், மானில மன்னனுமானான்.
மக்களின் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, அன்பாட்சி நடத்திவந்தான், ரா தேவன்.
ரா தேவன், பூலோகவாசியாக இருந்தபோது, இசிஸ் தேவியும், பூலோகத்திலே இருந்தாள். அவளுக்கு, ரா தேவனுக்கு இருந்த சர்வ வல்லமை தனக்கும் வேண்டும் என்ற பேராசை! அந்தப் பேராசை கொண்டதால், இசிஸ் தேவி, சூழச்சி செய்த வண்ணம் இருந்தாள், ஆதிக்கம் பெற!
கைகொட்டிச் சிரிக்கத் தோன்றும், பகுத்தறிவுப் பல்கலைக்கழகத்திலே துவக்க வகுப்பில் உள்ளவர்களுக்குக்கூட!
போட்டா போட்டி! பொறாமை! பேராசை! சூழச்சி, ஆதிக்க வெறி!!—இவை மனித வர்க்கத்திலேயே மட்ட ரகங்களின் குணமல்லவா—இந்தக் குணம் கொண்ட இசிஸ் ஒரு கடவுளா! எப்படி அந்த நாட்டு மக்களின் மனம் இடம் கொடுத்தது, இசிசைப் பூஜிக்க—என்று கேட்கத் தோன்றும்.—இப்போது அப்போதோ, இவைகளைக் திருக்கலியாண குணங்களாகவே கொண்டாடினர் மன மயக்கத்தால்,
ரா தேவன், சர்வ வல்லமையுள்ளவனாக இருந்ததற்குக் காரணம், அவனுடைய இதயத்திலே ஒரு மந்திரப் பெயர் பதிந்திருந்ததுதான்! அந்த மந்திரப் பெயர் வேறு ஒருவருக்கும் தெரியாது. அதுமட்டும் தெரிந்துவிட்டால் போதும், தானும் ரா தேவன் போலவே சர்வ சக்தி படைத்த கடவுளாகிவிடலாம், என்று கருதினாள் இசிஸ் தேவி. தக்க சமயத்தை எதிர்பார்த்த வண்ணம் இருந்தாள் தேவி.
ரா தேவன், தள்ளாடி நடக்கும் கிழப் பருவமடைந்துவிட்டான். ஈளை இருமல் மேலிட்டுவிட்டது! வாயிலிருந்து தானாக, உமிழ் நீர் கீழே ஒழுகலாயிற்று. நரையும் திரையும் மேலிட்ட மூப்புப் பருவம் மேலிட்டது, முழுமுதற் கடவுளுக்கு. கடவுள் கிழவனுமாகிறார்!! கடவுட் தன்மையா இது, என்று, இன்று கேட்கத் தோன்றும், அன்று கேட்கும் துணிவு பிறக்கவில்லை, அறிவு, கருவில் இருந்த காலம் அது.
ரா தேவனுக்குச் சமமாக வல்லமை பெற எண்ணிய இசிஸ் தேவி, ரா தேவனின் உமிழ்நீர் தரையில் சிந்திடக் கண்டு, அந்த மண்ணை எடுத்து ஒரு மாயப்பாம்பு ஆக்கினாள். யார் கண்ணிலும் தெரியாத மாயப் பாம்பு! தேவ தேவனாம் ராவுக்கும் தெரியாது. அந்த மாயப் பாம்பு ரா தேவனைத் தீண்டிவிட்டது—துடிதுடித்தான் தேவன். என்னவென்று தெரியவில்லை—வேதனையோ தாளமுடியவில்லை. மரணாவஸ்தையில் இருந்த ரா தேவன், தன் குழந்தை குட்டிகளான கடவுள்களை எல்லாம் அருகே அழைத்துப் புலம்பியபடி, “அருமை மக்களே! என் உயிர் துடிக்கிறது. வேதனை தாங்கமுடியவில்லை—அதன் காரணமோ தெரியவில்லை. நெருப்பல்ல என்னைத் தீண்டியது, என்றாலும், தீயில் வீழ்ந்தது போலாகிவிட்டது. என் தேகம்! உடல் ஜில்லிட்டுவிட்டது! என் செய்வேன்! இனி நான் பிழைப்பது ஏது!” என்று கூறிட, எல்லாக் கடவுள்களும் கோவெனக் கதறினர்—இசிஸ் மட்டும் இரக்கம் காட்டவில்லை. மந்திரம் தெரிந்த கடவுள்கள் மந்திர உச்சாடனம் செய்தன—ரா தேவனுடைய வேதனையைப் போக்க. பலன் இல்லை. சில கடவுள்கள், மருந்திட்டன, மகேசன் பிழைக்க—பலன் காணோம். பிறகு, இசிஸ் தேவி “நான் குணப்படுத்த முடியும்” என்று கூறினாள். “அப்படியா, அருமை இசிஸ்! குணப்படுத்து, வா, வேதனை தீரட்டும்” என்று ரா தேவன் கெஞ்சினான்—மற்றத் தெய்வங்களும் மன்றாடின. இசிஸ் தேவி, “என் விருப்பத்தை ரா தேவன் நிறைவேற்றுவதாக வாக்களித்தால்தான், நான் அவருக்குக் குணம் உண்டாகச் செய்வேன்” என்று பேரம் பேசலானாள்.
முழுமுதற் கடவுளின் உயிர் துடிக்கிறது—பேராசை கொண்ட பெண் தெய்வம், பேரம் பேசுகிறது.
“என்ன தேவை உனக்கு? சொல்லம்மா, சொல்லு”—ரா, கேட்கிறார்.
“உமது இதயத்திலே பதிந்துள்ள மந்திரப் பெயர் எனக்குத் தெரியவேண்டும்”—இசிஸ் கேட்கிறாள்.
“நெஞ்சழுத்தக்காரி! யாரும் அறிய முடியாதது அந்தப் பெயர்! எவரும் அறியக்கூடாதது அந்தப் பெயர்! அது, என் இதயத்தில் இருப்பதால்தான் நான் சர்வேஸ்வரனாக இருக்கிறேன்! அப்படிப்பட்ட மந்திரச் சொல்லைக் கேட்கிறாயே—முறையல்ல” என்று வாதாடுகிறார், ரா.
சர்வேஸ்வரன் சாகக் கிடக்கிறார்! அறிவுக்குத் துளியும் பொருந்தாத கூற்றாக இருக்கிறதே, என்று கூறுவீர்கள்! அது, அந்த நாள் ஈஜிப்ட் ஆத்தீகம்!
கடைசியில், வேறு வழியின்றி, ரா தேவன், இசிஸ் தேவியின் நிபந்தனைக்கு இசைந்தான். மந்திரப் பெயர், இசிசின் மனதுக்குச் சென்று பதிவாகிவிட்டது—மாயப் பாம்பு கடித்ததால் மகேசனுக்கு ஏறிப்போயிருந்த கடு விஷமும் வெளியே வந்துவிட்டது, முழுமுதற் கடவுள் பிழைத்துக்கொண்டார்.
கடவுளுக்காவது விஷம் ஏறுவதாவது, பேராபத்து வருவதாவது, அதனின்றும், பெம்மான் தப்புவதாவது, இதெல்லாம் என்ன கட்டுக்கதை—யார் நம்புவர் இதனை, என்று கேட்டுவிடுகிறோம் சுலபமாக. ஆனால் இவைகளை தேவ ரகசியங்களாக மதித்திருந்தனர். எல்லா நாடுகளிலேயும் இப்படிப்பட்ட கதைகள் இருந்தன! கடவுளுக்கு நோய்! கடவுளுக்கு ஆபத்து! கடவுள் கிழவராவது! கடவுள் சாகக்கிடப்பது!—இவைகள் அந்த நாட்களிலே இருந்துவந்த நம்பிக்கைகள். நம்ப மறுப்பவன் நாத்தீகன்—இன்று அல்ல! இன்று, மாயப் பாம்பால் மகேசன் பட்ட அவதிபற்றி, ஈஜிப்ட் நாட்டிலே, நம்பும் பேதைமை கிடையாது. அறிவு துலங்கிவிட்ட பிறகு, அர்த்தமற்ற அந்தக் கதையைத் துச்சமென்று கருதித் தூரத் தூக்கி எறிந்துவிட்டனர்—அங்கு. ஆனால், இங்கு? அதோ உற்றுக் கேளுங்கள், “ஆலகால விஷத்தை எடுத்து, என் அப்பன், கைலைவாசன், உமையவள் நேசன், உட்கொள்ள, பக்கமிருந்து பார்த்துக்கொண்டிருந்த தேவர்களெல்லாம், பதை பதைத்து, ஐயகோ! ஆலகாலத்தை உண்டாரே, இனி, ஈசன் அதோகதியாகிவிடுவாரே, உள்ளே சென்றதும், ஆலகாலம், அரனாரின் உயிரைக் குடித்துவிடுமே, பரமசிவனைப் படுசூரணமாக்கிவிடுமே, என் செய்வோம், எவ்வாறு உய்வோம் என்று புலம்பினர். பார்வதி அம்மையார் தன் பர்த்தாவுக்கு வந்துற்ற பேராபத்தைக் கண்டு, பதைபதைத்து, துடி துடித்து, பரமசிவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, “நாதா! நான் என்ன செய்வேன்” என்று கதறிட, அம்மையின் ஆலிங்கனத்தின பலனாக, சிவனாரின் கழுத்திடம் சென்ற சக்தியின் கரத்தின் வலிமையினால், ஆலகாலம், ஐயனின் உள்ளே செல்ல முடியவில்லை—கண்டத்தோடு நின்றுவிட்டது—சிவனார் பிழைத்தார்—நீல கண்டனானார்!”—என்று புராணீகன் பாடுவது, செவியில் விழும்—இப்போதும்!
இதுபோல, இன்று ஈஜிப்ட்டில், ரா தேவன் மாயப் பாம்பு கடித்ததால் சாகக்கிடந்தது, பிறகு இசிஸ் தேவியால் பிழைத்த புராணம் படிப்பவரைக் காணமுடியாது. மெய்யறிவு பிறந்ததும் பொய்யுரையைத் தள்ளிவிட்டனர்! ரா தேவன், மாஜி கடவுளாகிவிட்டான். இங்கோ, ஆலகாலம் உண்ட புராணம், இன்றும் ஆட்சி செய்கிறது—மறுப்பவனை மாபாவி என்று கண்டிக்கும் மதியினர் ஏராளமாக உளர்.
மரணத்தின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட மகேசனுக்கு, இடர் அடியோடு ஒழிந்துவிடவில்லை
“எத்தனை காலத்துக்குத்தான் இந்தக் கிழத்தின் ஆட்சியிலே இருப்பது”
“செத்தும் தொலைக்கக் காணோம், படுகிழமான பிறகும், பட்டத்தரசனாக இருந்து வருகிறது”
“இனி இந்தக் கிழத்தேவனை நம்பிப் பயனில்லை.”இப்படி எல்லாம், ஏசியும் இழித்தும் பேசினர், சில மாந்தர், மகேசனைப்பற்றி.
“ரா தேவனுக்குத் துக்கம் தாங்கமுடியவில்லை, அழைத்தார் கடவுள்களை. அக்ரமக்காரர் சிலர், என்னை எதிர்க்கின்றனர்; ஏளனம் பேசுகின்றனர்; என் ஆட்சியைப் பழிக்கின்றனர். இதற்கென்ன செய்யலாம், கூறுங்கள், நீங்கள் சம்மதித்தால், துடுக்குத்தனமாகப் பேசிடும் அந்தத் தீயவர்களை அழித்து விடுகிறேன்.” என்று கூறினார். அதுவே சரி என்றனர் அத்தனை கடவுளரும். உடனே, ரா தேவனின், கண், ஹாதார் எனும் தேவி வடிவம் கொண்டு, தீயோரைக் கொன்று குவித்தது. இரத்தவேட்டையில் ஈடுபட்டாள், தேவி!
“அக்ரமக்காரர் அழிந்துவிட்டனர்! ஆனால், இரத்தம் குடித்து, பழக்கப்பட்டுவிட்ட ஹாதார் தேவி, வெறி கொண்டவளாகி, மேலும் மேலும் மாந்தரைக் கொன்று குவிக்கலானாள். இதுகண்ட மகேசன் மனமிளகி, இரத்த வேட்டையாடும் ஹாதார் தேவியைத் திருப்பி அழைத்துக் கொள்ளத் திட்டமிட்டு, பார்லியும் (ஈஜிப்ட் நாட்டு உணவுப் பொருள்) இரத்தமும் கலந்து, 7000 ஜாடிகளிலே நிரப்பித் தர, அதைப் பருகிய பிறகு ஹாதார் தேவியின் உக்கிரம் அடங்கிற்று, தேவியும் பழையபடி, ரா தேவனின் கண் ஆகிவிட்டாள். அழிவுத் தேவியின் இரத்த வெறியை அடக்க அன்று ரா தேவன் தயாரித்த பானம்தான், பிறகு, பீர் என்ற பெயருடைய பானமாயிற்றாம்!
‘துஷ்ட நிக்ரஹ’த்துக்குப் பிறகு, ரா தேவன், இனியும் பூலோக மன்னனாக இருத்தல் முறையல்ல என்று தீர்மானித்து, சொர்க்கலோகத்தை உண்டாக்கிக்கொண்டு, அங்கு சென்று வசிக்கலானார்.ரா தேவன் சிருஷ்டித்த சொர்க்கலோகத்தின் பெயர், ஆலு என்பதாகும்.
பூலோகத்திலே, ரா தேவனுக்குப் பிறகு, ஆசரிஸ் தேவனும் அவன் மனையாட்டியாகிவிட்ட இசிஸ் தேவியும் ஆண்டு வந்தனர்.
ஆசரிசின் ஆட்சி, பொற்காலம்! காட்டுமிராண்டித்தனத்தில் இருந்த மக்களைச் சீர்திருத்திடும் நல்லாசானாக இருந்தார் ஆசரிஸ். உழவு, தொழில், கல்வி, கலை, யாவும் அவன் தந்த அருங்கலைகளே, அவன் ஆட்சியால் மாந்தர் பயன் பெற்றனர். ஆனால், ஆசரிஸ் தேவனின் தம்பி; செட் தேவனுக்கு, இது பிடிக்கவில்லை. அவன் தீயோன்! எதியோபியா நாட்டவரான 72 முரடர்கள் அவனுக்கு நண்பர்கள். இந்தக் கும்பல், ஆசரிசை ஒழித்துவிட்டு, செட் மன்னனாவதற்காகச் சூழ்ச்சி செய்து வந்தது.
ஆசரிசுக்கு ஒரு பெரிய விருந்து ஏற்பாடு செய்தனர், வெற்றி விழா கொண்டாட. அதுசமயம், செட் எனும் தீயதேவன், ஓர் அற்புதமான பேழையைச் செய்து விருந்தினருக்குக் காட்டினான். அதைப் பெறப் பலரும் விரும்பினர். யார் அதனுள் படுத்தால், பொருந்துகிறதோ, அவருக்கே பேழை தரப்படும் என்றான் பேய்க் குணம் படைத்த செட் தேவன்! பலர், பேழையுள் நுழைந்தனர்—பொருந்தவில்லை. ஆசரிஸ் தேவன் பேழையுள் படுத்தான்—பொருத்தமாக இருந்தது! இதேபோது சூழ்ச்சிக்கார செட், பேழையை மூடி, மூடிமீது ஆணிகளை அறைந்து, பேழையை நைல் நதியிலே வீசி எறிந்துவிட்டு, எதிர்த்தோரை அழித்துவிட்டு, தானே அரசன் என்று அறிவித்துவிட்டான்.ஆசரிஸ் தேவனின் கதியைக் கேள்விபட்ட இசிஸ் தேவி கோவெனக் கதறி, கொடுங்கோலனாம் செட் தேவனைச் சபித்தார்—அவனோ, அவளையும் அழித்திடத் துணிந்தான். அஃதறிந்த பெண் தெய்வம், தன் புருஷனின் உடல் எந்தப் பேழையில் இருக்கிறதோ, அந்தப் பேழையைக் கண்டுபிடித்துத் தீருவது என்று உறுதி கொண்டு, நைல் நதி தீரமெல்லாம் தேடினாள். இசிஸ் அம்மைக்குத் துணையாக, தேவனருள் பெற்ற 7 தேள்கள் இருந்தன! தேவிக்குத் துணை தேள்கள்!!
நைல் நதியிலே வீசி எறியப்பட்ட பேழை, சிரியா நாட்டுக் கடலோரத்திலே அடித்துக்கொண்டு வரப்பட்டு, அங்கு ஒரு மாய மரமாகி நின்றது. மாய மரத்தின் அடிப்பாகத்துக்கு உள்ளே பேழை! பேழைக்குள்ளே ஆசரிஸ் தேவனின் உடல்!! அந்த நாட்டு மன்னன் இந்த மாய மரத்தைக் கண்டதும், ஆச்சரியப்பட்டு, அதை வெட்டிக் கொண்டு வரச்செய்து தன் அரண்மனையிலே, தூணாக அமைத்துக்கொண்டான்.
பல இடங்களிலும் தேடித் தேடி அலைகிறாள் இசிஸ் தேவி—தன் பர்த்தாவை—இந்தச் சமயத்திலேதான், ஈஜிப்ட் நாட்டு சாவித்ரிக்கு, ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது—ஹோரஸ் என்ற பெயர்! ஈஜிப்ட் நாட்டுக் கம்சன் இந்தக் குழந்தையைக் கொன்றுவிடத் திட்டமிடுகிறான். இது தெரிந்த தேவி, குழந்தையை பாம்பு வடிவிலே இருந்த ஒரு கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு, தன் கணவனின் உடலைக் கண்டுபிடிக்கும் காரியத்தில் ஈடுபடுகிறாள்.
கடைசியில் அசரீரி மூலம், கணவனின் உடலைக் கொண்டுள்ள பேழை இருக்குமிடம் தெரிய அந்தச் சிரியா நாட்டிலே, பைபிளாஸ் என்ற மண்டலம் செல்கிறாள். பல இன்னல்களுக்குப் பிறகு பேழை கிடைக்கிறது—ஆனால் இதைக் கண்டறிந்த பேயனாம் செட் தேவன், ஆசரிசின் உடலை 14 கூறுகளாக்கி நைல் நதியிலே வீசிடுகிறான்—ஆனால், முதலைகள் தின்ன மறுத்துவிடுகின்றன—ஒரு சிறு துண்டைமட்டும் ஒரு மீன் தின்றுவிடுகிறது. அதுபோக, மிச்சமிருந்த துண்டுகள் அவ்வளவையும், இசிஸ் தேவி கண்டுபிடித்து ஒன்று சேர்த்து, பேழையில் அடக்கம் செய்கிறாள். அதனால்தான் ஈஜிப்ட் நாட்டிலே செத்தவர்களின் உடலைக் கெடாதபடி பக்குவம் செய்து பேழையில் அடைக்கும் பழக்கம் வளர்ந்ததாம். செட் தேவனை, ஹோரஸ் வாலிபனானதும், விரட்டி அடித்துவிட்டு, தன் ஆட்சியை நிலைநாட்டுகிறான். செட் தேவன் நரகலோக அதிபதியாகிவிடுகிறான்.
இப்படிப்பட்ட ‘கதை’ கட்டப்பட்டு, மக்களால் புண்ய கதை என்று போற்றப்பட்டு, அந்தக் கதைகளிலே குறிப்பிடப்பட்ட கடவுள்களுக்கு பூஜைகள் நடந்து வந்தன ஈஜிப்ட் நாட்டில் பன்னெடுங்காலம் வரையில். கேட்டஉடன் கேலிச் சிரிப்பு பிறக்கும் கதைகள்! காலுமில்லை தலையுமில்லை என்பார்களே அப்படிப்பட்ட கதைகள்! பொருள் பொருத்தம், காரணம் ஏதும் அற்ற கதைகள்! அவையே அந்த நாளில் ஈஜிப்ட் நாட்டுத் தேவமா கதைகள்! கவிதை பாடினர் இந்தக் கடவுளரின் திருவிளையாடல் பற்றி! பிரம்மாண்டமான கோயில்களைக் கட்டினர்! எல்லாம் அறிவுத் தெளிவு பிறக்கா முன்னம். பிறகு, பகுத்தறியும் பண்பு பிறந்தது, ராவும் ஆசரிசும் இசிசும், மாஜி கடவுள்களாயின அங்கு! இங்கு அல்ல!!
மனிதன், அறிவுத் துறையிலே எவ்வளவு கஷ்டப்பட்டு முன்னேறியிருக்கிறான், எத்தகைய குருட்டறிவிலிருந்து பகுத்தறிவுக்குப் பயணம் செய்திருக்கிறான் என்ற வரலாறு அல்ல இங்கு மதிக்கப்படுவது. எந்தக் காலத்திலோ, எத்தன் தீட்டி ஏமாளிக்குத் தந்த கற்பனைகள் யாவும், மதிக்கப்படுகின்றன. மந்த மதியினரும் சொந்த மதியற்றவர்களும் மட்டுமே இந்தப் புராணச் சேற்றிலே நெளிகிறார்கள் என்றும் கூறிவிட முடியவில்லை. மேதாவிகள் என்ற விருது பெற்றவர்களும், தத்துவார்த்தம் ஏதேனும் கூறிக்கொண்டு பழமையில் நெளிந்திடக் காண்கிறோம். இந்த இலட்சணத்தில், சிலர் பெருமை வேறு பேசிக் கொள்கிறார்கள். புராணம் புளுகாகவே இருக்கட்டும், இப்போது புராணங்கள் தேவை இல்லை என்றுகூட ஒப்புக்கொள்வோம், ஆனால், அந்தப் புராணங்களிலே, நமது முன்னோர்களின் கற்பனைத்திறமை, எவ்வளவு அருமையாக இருக்கிறது, என்பதைப் பார்க்கும்போது பூரிப்படையாமலிருக்கமுடியுமா!—என்று பேசுகின்றனர். ஈஜிப்ட், பாபிலோன், மற்றும் பற்பல நாட்களிலேயும் இதே மனவளம்—கற்பனைத் திறம்—காவியம் ஓவியம்—தத்துவார்த்தம்—போதுமான அளவுக்கு இருந்தன, எனினும் அவை யாவும், இருட்டறிவின் விளைவுகள் என்று தீர்மானிக்கப்பட்டு தள்ளப்பட்டுவிட்டன என்பதை நம் நாட்டுப் பெரும்பாலான மக்களுக்கு, ‘மேதைகள்’ எடுத்துக் கூறுவதில்லை. பிரபஞ்ச உற்பத்தி, கடவுள் அவதாரம், மோட்ச நரக அமைப்பு முறைகள், போன்றவைகள், ஏதோ, இங்கு மட்டுமே பூத்திட்டவைகள் போலவும், மற்ற எந்த நாட்டிலேயும், கற்பனைத் திறமை இருந்ததே கிடையாது போலவும் மார் தட்டிக் கொள்கின்றனர். புராணப் பண்ணையிலே புரட்டர் விதைத்த விதை விசித்திரமான விளைவுகளை எல்லா இடங்களிலேயும்தான் தந்தது! பாபிலோன், ட்யூடன், ஈஜிப்ட் போன்ற நாட்டவர் முன்பு நம்பிக்கொண்டிருந்த பிரபஞ்ச உற்பத்தி விளக்கக் கதைகளிலே, என்ன ரசம் குறைந்திருக்கிறது! வர்ணனைகளுக்குக் குறைவா! உவமைகள் இல்லையா! உள்ளத்தை உருக்கும் சம்பவங்கள், திடுக்கிடச் செய்யும் திருவிளையாடல்கள், இல்லையா! சாவித்ரி, சத்யவானை மீட்க எடுத்துக்கொண்ட முயற்சி பற்றிய புராணக் கதையிலே காணப்படும் ரசங்களைவிட, இசிஸ் தேவி, ஆசரிஸ் தேவனைக் கண்டுபிடிக்க எடுத்துக்கொண்ட முயற்சிபற்றி, ஈஜிப்ட் நாட்டுப் புராணீகன், அதிகமாகத்தானே புளுகி வைத்திருக்கிறான். கற்பனை அலங்காரத்துக்காகவாவது, புராணங்களைப் பாதுகாத்தாக வேண்டும் என்று இங்கு சில பழமைப் பித்தர்கள் பேசுவதுபோல, ஈஜிப்ட்டில் பேசினரா! தூக்கி எறிந்துவிட்டனரே, பழைய கூளத்தை! நாடு பாழ்பட்டாவிட்டது! மக்கள், சன்மார்க்கத்தை இழந்தா விட்டார்கள்! இல்லையே! அறிவல்லவா அங்கெல்லாம் ஆட்சி செய்கிறது. ஆமை வராக அவதார மேன்மையை அன்றுபோலவே இன்றும் உச்சிமேல் வைத்துக் கொண்டாடும் மக்கள் இங்கு மட்டுந்தானே உள்ளனர்.
மோட்சம்—நரகம்—என்ற கற்பனையை எடுத்துக் கொண்டு பார்ப்பதா, பார்ப்பதானாலும், நம் நாட்டுப் புராணத்தோடு வெற்றிகரமாகப் போட்டியிடக் கூடியதாகவே, ஈஜிப்ட் புராணம் இருக்கிறது.
ஈஜிப்ட் புராணப்படி சொர்க்கலோகம், புண்யவான்கள் இருப்பிடம்.
பாப—புண்ய பரிசீலனைக்கு மேலுலகிலே ஓர் இடம், அதற்காகத் தனியாக ஒரு கடவுள்.
மனிதன் இறந்த பிறகு அவன் ஆவி, மேலுலகம் செல்லும் வர்ணனை, நம் நாட்டுப் புராணத்தை மிஞ்சக் கூடியதாகவேதான் இருக்கிறது—புளுகின் அளவிலே!!
ஆவி, தன்னுடன் போதுமான உணவு எடுத்துக்கொண்டு கிளம்புகிறதாம் மேலுலகுக்கு.கட்டுச் சோறு மூட்டையுடன் கிளம்பும் ஆவி, காடு மலை பாலைவனம், பயங்கர மிருகங்கள் உலவும் இடம் ஆகியவைகளைக் கடந்து சென்று மேற்கு மலையைத் தாண்ட வேண்டும். அங்கு ஒரு பிரம்மாண்டமான மரம்! அந்த மரத்தின் அடிப்பாகத்திலிருந்து ஒரு தேவி, பழத்தட்டு பலகாரத்தட்டோடு பிரசன்னமாவாள்! அந்த விருந்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்—ஆவி !!
மலை போன்ற அளவிலே ஓர் ஆமை! அதை விரட்டி அடிக்கவேண்டும்.
பெரிய பாம்புகள், வாயைப் பிளந்தபடி வருமாம்—கொல்ல வேண்டும்.
பயங்கரமான உருவுடன் பலப்பல பிராணிகள்—அவ்வளவையும் சமாளித்தாக வேண்டும்—ஆவி!
ஒட்டகத் தலை—நாய் உடல்! பாம்பு வால்! சிகப்பு நிறம்!—இந்த வடிவிலே வருவானாம் செட் தேவன்! அவனை விரட்டவேண்டும். பிறகு ஒரு மந்திரப் படகு தெரியும். அதில் ஏறிக்கொள்ள வேண்டும். அதில் சில தேவர்கள் இருப்பர்—ஆனால் அவர்கள் பேசவும் மாட்டார்கள்—உதவியும் செய்யமாட்டார்கள். படகு பல கேள்விகளைக் கேட்கும்—படகோட்டிகளல்ல, படகு கேட்கும்! உண்மையான பதில் சொன்னால்தான் படகு செல்லும். பிறகு, நீதி மன்றம் செல்லலாம், ஆவி.
அங்கு, ஆசரிஸ் தேவன் அரியாசனத்திலே அமர்ந்திருப்பான், விசாரணை நடத்தி. அவனுக்குத் துணையாக 42 கடவுள்கள் சூழ நிற்பர்—எல்லாக் கடவுள்களும், மிருக உருவில்.
ஆவி அந்த நீதிமன்றத்திலே நின்று, தன் வாழ்நாளில், குற்றம் ஏதும் செய்யவில்லை என்பதைக் கூற வேண்டும். அந்த வாக்குமூலம், உண்மை என்று ஒப்புக்கொள்ளப்பட்டதும், அனுபிஸ் என்ற கடவுள், ஆவியின் கரத்தைப் பிடித்து அழைத்துக்கொண்டு போய், ஆசரிஸ் தேவன் முன் நிறுத்துவான். இந்த அனுபிஸ், நரிமுகத் தேவன்!
அந்த நீதிமன்றத்திலே ஒரு துலாக்கோல் இருக்கும். ஒரு தட்டிலே, ஆவியின் இருதயத்தைப் போட்டு, மறு தட்டிலே, நெருப்புக் கோழியின் சிறகு ஒன்றைப் போட்டு நிறை பார்க்கப்படும். சரியாக இருந்தால், சொர்க்கம்—இல்லை என்றால், 42 மிருக தேவர்களும் மேலே விழுந்து கடித்துக் கொடுமைப்படுத்தி, நரகத்துக்கு விரட்டுவர். ஆவியை!
சொர்க்கலோகம் செல்லும் ‘பாக்யம்’ கிடைத்தாலோ, அங்கு சுகபோகத்துக்குக் குறைவே கிடையாது.
ஒவ்வொருவருக்கும் இவ்வளவு என்று நிலம் பங்கிட்டுத் தரப்படும்—அங்கு உழுது பயிரிட்டு வாழ்க்கையை நடத்தலாம். வளம் அதிகம், எனவே, பஞ்சம் தலைகாட்டாது. சொர்க்கலோகவாசியான பிறகு, பூலோகத்திலே தன் மக்களைப் பார்க்கவேண்டுமென்று ஆவி ஆசைப்பட்டால், பறவை வடிவிலே சென்று பார்த்துவிட்டுப் பிறகு, சொர்க்கலோகம் திரும்பி வரலாம்.
இப்படி இருக்கிறது ஈஜிப்ட் புராணம்!
கற்பனைத்திறம் குறைவா இதிலே! எனினும், இன்று அங்கு, இதை நம்பியா நாசமாகிறார்கள்.
நந்தி நாரதர் இங்குதானே இன்றும் பூஜைக்குரியவர்கள். நரிமுகத் தேவன், சிங்கமுகத் தேவி, முன்புதானே அங்கு கடவுள்கள், இன்று மாஜிகளாயினவே!பசு உருவில் தேவன், குதிரைமுகத்தில் தேவன்—நமது புராணப்படி—அவைகளை நம்பாதவனை இன்று நாத்தீகன் என்று நிந்திக்கிறோம். பாரில் பகுத்தறிவு இவ்வளவு பரவி இருப்பது தெரிந்தும். அதோ, ஈஜிப்ட்டிலே முன்னாளில், அதாவது மூடமதியினரை கபடர்கள் ஆட்டிப் படைத்தபோது கட்டப்பட்ட புராணப்படி, ஆட்டுமுகத் தேவனும், தவளைமுகத் தேவியும் கோயில்களிலே கொலுவீற்றிருந்தனர். இன்று! கை கொட்டிச் சிரிப்பார்களே, கடவுள்கள் என்று பன்மையில் பேசினாலே! அங்கு, ராவும் ஆசரிசும், இசிசும் பிறவும், மாஜிகளாகிவிட்டன, மதிவென்றதால். இங்கோ இருளாண்டிகூட மாஜியாக மறுக்கிறான்—அஞ்ஞானத்துக்கு அவ்வளவு செல்வாக்கு இங்கு இன்றும் இருக்கிறது.
❖