உள்ளடக்கத்துக்குச் செல்

மாஜி கடவுள்கள்/மெரோடாக்

விக்கிமூலம் இலிருந்து


அசுரக் கூட்டத்தை அழித்தொழித்துக் கடவுளரை ரட்சிக்க, விஷத்தைக் கக்கும் நாலு புரவிகள் பூட்டப்பட்ட இரதத்தில் அமர்ந்தான் மெரோடாக். கையிலே கதை! உடல் முழுவதும் தீப்பிழம்பு! மின்னல் அவன் முன்னோடுவானாயிற்று. யாரையும் பிணைக்கும் மாயவலை ஒன்றை அனு தேவன் தந்தான். இவ்வளவு யுத்த சன்னத்துடன் மெரோடாக் கிளம்பினான். ‘ஜய விஜயீபவ!’ என்று வாழ்த்தினர் கடவுளர். ஏழுவிதமான பெருங்காற்றை ஏவிய வண்ணம், மாவீரக் கடவுளாம் மெரோடாக் சென்றான்.

மெரோடாக்
பாபிலோன் பிரபஞ்ச உற்பத்தி

மாமா! அதென்ன, மினுக் மினுக்கென்று தெரிகிறதே”

“நட்சத்திரம்!”

“நட்சத்திரம்னா என்ன மாமா?”

“நட்சத்திரம்! பளபளன்னு இருக்கும்......”

“பள பளன்னு இருக்கு, மாமா! எனக்கும்தான் தெரியுது......அது என்னது? ஏன் அப்படி இருக்கு? மாமா! அது எங்கே இருக்கு? ஏன் இருக்கு?”

“சும்மா இருடா, தொண தொணன்னு பேசிண்டே இருக்கறே. அதுதான் நட்சத்திரம்—பள பளன்னு மின்னும்—மேலே இருக்கு......”

“போ, மாமா! அது என்னன்னு கேட்டா சொல்லத் தெரியல்லே, கோபம் வர்ரது. இதோ, பார், இந்த மாமாவைக் கேட்கறேன், அவர் நல்ல மாமா, சொல்லுவார், மாமா! பெரிய மாமா! நீ சொல்லேன்—அது என்னது?”

“எதைக் கேட்கிறேடா கண்ணா! ஓ! நட்சத்திரத்தையா?”

“ஆமாம், மாமா! அது என்னது? நட்சத்திரம்னா என்னா?”

“அதுவா! மேலே, சாமிகள் இருக்கேன்னோ......”

“சாமிகள் மேலேயா இருக்கு? இங்கே, கோயில்லே இருக்கே?”

“நெஜமான சாமிகளெல்லாம், மேலேதான் இருக்கு. அந்தச் சாமிகளெல்லாம், சுருட்டு பிடிக்கிறபோது, பளிச்சு பளிச்சுன்னு தெரியறது! இங்கே, சுருட்டு, சிகரட்டு, இதை பிடிக்கச்சே தெரியுதேன்னோ, அதுபோல”

“சாமிகள் சுருட்டு பிடிக்கற நெருப்பா! இந்த மாமா சுத்த மக்கு! இது தெரியல்லே, கேட்டா கோபம் வர்ரது? சாமிகளோட சுருட்டு நெருப்புதான் நட்சத்திரம்”

சிறுவன் உண்மையிலேயே, களித்துக் கூத்தாடினான்—தன் வயதுச் சிறுவர்களிடமெல்லாம் சென்று கூறினான், கதை கட்டும் ‘மாமா’ சொன்னதை! பல சிறுவர்கள், நட்சத்திரம், சாமிகள் சுருட்டு நெருப்பு என்று எண்ணினர்—பொய்தான்—என்றாலும், விவரமும் விளக்கமும் பெறமுடியாத வயதுள்ளவன், கேட்ட கேள்விக்கு, உண்மையான பதில் கூறினால், பயனில்லை, எனவே தந்திரமறிந்த ‘மாமா’, சிறுவனுக்காக, அவன் ஆவலை அடக்க, ஓரளவு அவனுக்குப் புரியக்கூடிய விதமாக, ஒரு பொய்யைக் கூறினார்—சிறுவன், தனக்கு நட்சத்திரம் என்றால் என்ன என்பது புரிந்துவிட்டது, என்று எண்ணிக் கொள்கிறான்.

எவ்வளவு காலம், இந்தப் பொய், சிறுவன் மனதிலே தங்கி இருக்கமுடியும்? உண்மையை உணரும் உள்ள வளர்ச்சி ஏற்பட்ட பிறகு, ‘மாமா’ சொன்ன கதையையா நம்புவான்!

இப்படி ‘மாமா’ சொன்ன கதைகள் பலப்பல—நல்ல எண்ணத்தோடு சொல்லப்பட்ட கதைகளும் உண்டு, ஏமாற்றுவதற்காகவே சொன்னவைகளும் உண்டு.

மனித குலம், சிறுபிள்ளைப் பருவத்திலே இருந்தபோது, மனதிலே, இயற்கைக் காட்சிகளும் நிகழ்ச்சிகளும், கிளறிவிட்ட, சந்தேகங்களுக்கு, இப்படிப் பலப்பல கதைகள் கட்டவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அந்தக் கதைகளையே, நாளாவட்டத்தில், எத்தர்கள், தங்கள் சுய இலாபத்துக்காகச் சரக்கு ஆக்கிப் பிழைக்கலாயினர்! பிழைப்புக்குப் பொய்க் கதைகள் பயன்படவே, கதை கட்டுவோரின் தொகை வளர்ந்தது, கதைகள் பெருகின! ஒவ்வொரு, விளங்காப் பொருளுக்கும், புரியாத நிகழ்ச்சிக்கும், கதைகள் கட்டலாயினர்! கபடர்களிடம், இந்தக் ‘கதைகள்’ சிக்கியதால், நாளாவட்டத்தில், கள்ளனிடமுள்ள கன்னக்கோல் போலாகிவிட்டன, இந்தக் கதைகள்.

அறிவுத் தெளிவு ஏற்பட ஏற்பட, கதைகளை நம்ப மறுக்கும் மனப்பக்குவமும், ஏமாற்றுக்காரரின் பிழைக்கும்வழி இது என்ற அறிவும் மேலோங்கிடவே, கதைகள் சீந்துவாரற்றுப் போயின—இங்கு அல்ல!!—உலகிலே மற்ற நாடுகளில்—உள்ளத்தை வளமாக்கிக்கொண்ட நாடுகளிலே!—இங்கோ—கட்டிவிடப்பட்ட கதைகளைக் கேட்டுக் கைகொட்டிச் சிரிப்பவர்களைக் கண்டிக்கும் ‘மேதை’கள் ஏராளம்!!

நம்பமறுக்கிறாயா நாத்திகனே!

நம்ப முடியவில்லையோ, பெரிய ஞானஸ்தனோ?

உனக்குப் புரியவில்லை அந்த மகிமை—மந்தமதி—பாபம் கவ்விக்கொண்டிருக்கிறது—அஞ்ஞானி!

கதைதான்—ஆனால் வெறும் கதை அல்ல—அரிய பெரிய தேவ இரகசியங்களை விளக்கவேண்டும் என்பதற்காக, தவச் சிரேஷ்டர்கள், தந்தருளிய, தத்துவார்த்த விசேஷம் நிறைந்த கதைகள்—பாவீ! அவைகளை எள்ளி நகையாடாதே!

கதைகள்! ஆமாம், அவைகளை அப்படியே கவனித்து, இதற்கு என்ன பொருள், அதற்கு என்ன விளக்கம், இது நடக்கக்கூடியதா! என்றெல்லாம் கேள்விகளைக் கேட்டால், நிச்சயமாக மனக் குழப்பம்தான் ஏற்படும். மனிதனுடைய வாழ்வு மேம்பாடு அடைவதற்காக, அருமையான பாடங்கள், நீதிகள், அந்தக் கதைகள் மூலம் கிடைக்கின்றன! கதைகளை நம்ப மறுக்கலாம்—கதைகளை விட்டுத்தள்ளு—ஆனால், அந்த நீதிகள்! அவைகளை இழப்பதா—நீசத்தனமல்லவா இது!!

இதுபோல, பலப்பல ‘படிகள்’ உண்டு, பழமைக்காகப் பரிந்து பேசுபவர்களின், வாதங்களில்! பழைய கதைகளைவிட மறுக்கும் போக்கைத்தான் இவ்வளவு வகையான வாதங்களும் ஏற்படுத்துகின்றன!

விளக்கம் கிடைக்காத நாட்களில், விசித்திரமாகத் தோன்றிய நிகழ்ச்சிகளுக்கும் பொருள்களுக்கும், தரப்பட்ட கதைகள், புராணச் சரக்குகள், என்று வெறுத்துத் தள்ளும், அறிவுத் தெளிவும், மனத் துணிவும், இங்கு ஏற்படவில்லை, பெரும்பாலான மக்களுக்கு! எனவேதான், பிரபஞ்ச உற்பத்தி, வளர்ச்சி ஆகியவை பற்றி, அன்று கட்டிவிடப்பட்ட அர்த்தமற்ற கதைகளையே இன்றும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்—அந்த நம்பிக்கையே ஆத்தீகம் என்றும் பேசுகிறார்கள்—அந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டே, பூஜை, சடங்கு, திருவிழா, ஆகியவைகளை அமைத்துக்கொண்டு, பொருளையும் அறிவையும், நேரத்தையும் பாழாக்கிக் கொள்கிறார்கள்—பாரதவர்ஷத்தில்!!

பிரபஞ்ச உற்பத்தி பற்றிய விளக்கம், எளிதிலே கிடைக்கக்கூடியதல்ல—அறிவாற்றலும் ஆராய்ச்சியும் படிப்படியாக வளர்ந்து, இன்று ‘பிரபஞ்ச விளக்கம்’ கிடைத்திருக்கிறது, விஞ்ஞானத்தின் துணையினால். இந்த விளக்கம் கிடைக்காதபோது, நட்சத்திரத்துக்கு தந்திரக்கார ‘மாமா’ கேள்வி கேட்கும் சிறுவனுக்காகக் கட்டிவிட்ட கதைபோல, பல கதைகள், ஒவ்வொரு நாட்டிலும் கட்டி விடப்பட்டன—பூஜாரிக் கூட்டம் இந்தக் கதைகளைப் பயன்படுத்தி மக்களை ஆட்டிப் படைத்தன!

ட்யூடன் மக்கள், பிரபஞ்சம் உண்டானதற்கு ஒரு கதையை நம்பி வந்தனர்—அதற்குத் தக்கபடி, பூஜைகள் வகுத்துக்கொண்டனர்.

பாபிலோன் நாட்டிலே பிரபஞ்ச உற்பத்திக்கு, மற்றோர் வகையான கதை கட்டிவிடப்பட்டது.

இந்தக் கதையிலும் ட்யூடன் நாட்டுக்கதை போலவே, முதலில் சூன்யம்தான்! விண் இல்லை—மண் இல்லை—தேவர் இல்லை—மாந்தர் இல்லை! சூரியனோ சந்திரனோ கிடையாது—எங்கும் கடல் மயம்! இந்தக் கடலின் எல்லை, யாருமறியார்! ஆழ்கடலின் அடியே ஆதிக் கடவுள், இருந்தார்—அவர் திருநாமம், அப்சூ!

ஏதுமற்ற நிலைதான்—ஆழ்கடலினடியிலேதான் வாசம், எனினும் அப்சூ தேவன், டியாமட் என்ற தேவியை மட்டும் துணையாகப் பெற்றிருந்தார் வேறு பொருள் இல்லை—நெடுங்காலம்!!

பிறகு, இந்தப் பெருங்கடல், குழம்பலாயிற்று—கொந்தளிப்பு ஏற்பட்டது! ஏன்? அது தேவ இரகசியம்! கேட்பது, பாபம்! நம்பவேண்டும், அதுதான் ஆத்தீகம். பெருங்கடல் கொந்தளித்தது, லச்மு, லச்சாமூ எனும் இரு கடவுளர் வெளிக் கிளம்பினர், ஆழாழியினின்றும்! லச்மு, தேவன்! லச்சாமூ, தேவி! ஜோடி!! மீண்டும் ஆழாழி துயிலில் ஈடுபட்டது, நெடுங்காலம்! பிறகு, மற்றோர் கடவுள் ஜோடி கிளம்பிற்று—அன்ஷார் தேவன், கிஷார் தேவி! மீண்டும் உறக்கம்—பிறகு, அனு தேவனும் அனாடு தேவியும் கிளம்பினர்! கடைசியாகக் கிளம்பினார், வல்லமைமிக்க ஈயா தேவன்! இவர், தேவி வேண்டாம் என்பாரா? இவருக்குத் தேவிதான், டாம்கீனா என்ற பெண் தெய்வம்! இந்தக் கடவுளிடம், பெல் எனும் பிள்ளை பிறந்தான்—பிறந்தவன், பல காரியங்களைக் கவனிக்கத் தொடங்கினான்—மனித குலத்தை உற்பத்தி செய்யத் தொடங்கினான்—பெல், ஏறத்தாழ நமது புராணீகன் கூறும் பிரமன்போல!

பாபிலோன் பிரமனான பெல் தேவனுடைய போக்கும் நடவடிக்கையும், ஆழாழி அடியிலே இருந்த அப்சூவுக்குப் பிடிக்கவில்லை. மேலும் ஈயா தேவனின் பராக்கிரமமும் செல்வாக்கும் வளருவது கண்டு, ஏதும் செய்யாது எல்லையற்ற பெருங்கடலின் அடித்தட்டிலே இருந்து வந்த அப்சூ தேவனுக்குப் பொறாமை மூண்டது! ஆமாம், கடவுளுக்குத் தான், பொறாமை!! உடனே, தன் மைந்தனாம் மம்மு தேவனை அழைத்துக்கொண்டு, டியாமட் தேவியிடம் சென்று முறையிடுகிறான், அப்சூ! சிரிக்கிறீர்களா! ஆமாம், பாபிலோன் புராணமல்லவா, சிரிப்புத்தான் ஏற்படும்! எந்த நாட்டு அறிவாளியும், சிரிக்கத்தான் செய்வார்கள் இந்தக் கதை கேட்டு! பாபிலோன் நாட்டவரே, கைக்கொட்டித்தான் சிரித்தனர், அறிவு பிறந்ததும். அங்கும் அறிவு மேலோங்கியுள்ள எங்கும், இன்று இப்படிப்பட்ட கதைகளை, நம்பத்தான் மாட்டார்கள்! ஆகவே நீங்கள் பாபிலோன் புராணம் கேட்டுச் சிரிப்பதிலே தவறு இல்லை. ஆனால், சிரித்தது போதும், தயவுசெய்து, நமது புராணங்களை நினைவிற்குக் கொண்டுவாருங்கள்.

அந்த அசுரர்களின் தொல்லையைத் தாங்கமாட்டாமல் தேவேந்திரனானவன், தேவர்களை அழைத்துக்கொண்டு திருப்பாற்கடவிலே ஆதிசேஷன்மீது சயனித்துக்கொண்டிருந்த அரிபரந்தாமனிடம் சென்று, அடியற்ற நெடும்பனை போல வீழ்ந்து, ஸ்ரீமண் நாராயணமூர்த்தி! லட்சுமீ சமேதா! பாஞ்சசன்யா! தேவேந்திரன் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறேன். பாபிகளான அசுரர்கள் செய்யும் இம்சையை அடியேனால் தாங்கமுடியவில்லை, அவர்களைச் சம்ஹரிக்கும் சக்தி, சக்ரதாரியான தங்களுக்கே உண்டு, ஆபத்பாந்தவா! அனாதரட்சகா! அடியேன்மீது கிருபை பாலித்து, இப்போதே அசுரர்களைத் துவம்சம் செய்து, தேவலோகத்தை ரட்சிக்க வேண்டும்—பாபிலோன் அல்ல—நமது ஊர் பஜனைக் கோயில் புராணீகன் படிக்கிறான்—இன்றும்! சிரிக்கிறீர்களா!! பாபமல்லவா!! அதோ, தேவேந்திரனுடைய அவதியைத் துடைக்க, அரிபரந்தாமன் எழுந்தருளுவதற்கு முன்பே, அதை இராகபாவத்துடன் எடுத்துக் கூறிய புராணீகன், தன் அலுப்பைப் போக்கிக் கொள்ள, பால் சாப்பிடுகிறான்–தெரிகிறதா? பார்-அட்-லா பார்த்தசாரதி முதலியாரின் ‘பார்யாள்’ தந்த தர்மம்—அந்தப் பால்! இன்று! பாபிலோனியா தன் பழங்கதையை பித்துப்பிள்ளை விளையாட்டு என ஒதுக்கிப் பலநூறு ஆண்டுகளாகிவிட்டன—நமது நாட்டிலோ, புராணம் இன்றும், பாராயணம் செய்யப்பட்டு வருகிறது! பகுத்தறிவு பாபமாகக் கருதப்படுகிறது! பழைய புராணம், பஞ்சாமிர்தமாக இனிக்கிறது! கேள்வி கேட்டால், புருவத்தை நெறிப்பர்! விளக்கம் கேட்பவன், விதண்டாவாதி என்று தூற்றப்படுகிறான். நம்ப மறுப்பவனை, நையாண்டி செய்பவனை, நாத்தீகன் என்று, ஊரார்கூட அல்ல, அவன் வீட்டாரே, ஏசுவர்! இங்கு இன்றுள்ள நிலையில், பாபிலோன், பன்னெடுங்காலத்துக்கு முன்பு இருந்தபோது பிரபஞ்ச உற்பத்திக்காக, பூஜாரிக் கூட்டம் கட்டிய கதையை, அறிவு பிறந்ததும் எட்டி என்று எடுத்தெறிந்துவிட்டனர். அறிவு அரும்பா முன்னர் அந்நாட்டு மக்கள் நம்பிய கதை இது.

தன்னிடம் வந்து முறையிட்ட தேவர்களை நோக்கி, டியாமட் தேவி, “ஆமாம்! ஆழாழியின் அமைதியும் கெடுகிறது, ஈயா தேவனின் செயலால்! அவனை அழித்திடத்தான் வேண்டும். அதற்கு என்ன செய்வது, கூறுமின்!” என்று கேட்க, இந்த மந்திராலோசனை முழுவதையும், தந்திரமாகக் கேட்டுக்கொண்டிருந்த ஈயா தேவன் தன் பராக்கிரமத்தால், அப்சூ, மம்மூ இருவரையும் சிறைப்படுத்திவிட்டான்.

பற்களை நறநறவெனக் கடித்தபடி, டியாமட் தேவி, கிங்கு தேவனை அழைத்து, “போர்! போர்! இனி அந்த ஈயாக் கும்பலுடன் போர்!” என்று உத்திரவு பிறப்பிக்க, இரு தரப்பும் படை திரட்டலாயின, பாபிலோன் தேவாசுர யுத்தம்! ஈயா தேவனும் அவனைச் சார்ந்தவர்களும் தேவர்கள்! டியாமட் கூட்டம் அசுரர்!

டியாமட்டால் தூண்டிவிடப்பட்ட கிங்கு, பாம்பு மனிதன், தேள் மனிதன், பறவை மனிதன், என்பன போன்ற பதினோரு வகையான—ராட்சதர்களை உண்டாக்கினான்! மேலும், கிங்குவின் மார்பகத்திலே, டியாமட் தேவி, விதிப் பலகையைப் பதித்துவிட்டாள்! அதாவது, கடவுள்களின் விதியையும் நிர்ணயிக்கும் சக்தி, கிங்குவுக்குக் கிடைத்துவிட்டது. இதை அறிந்த ஈயா தேவன், கோவெனக் கதறினான், பலநாட்கள். வந்ததே விபத்து! வழி தெரியக் காணோமே!—என்று புலம்பினான், வல்லமை மிக்க ஈயா தேவன்!

இதற்கு என்ன செய்வது என்று கலந்தாலோசிக்க ஈயா தேவன், அன்ஷார் தேவனிடம் சென்றான். “ஆமடா மகனே! ஆபத்துதான்—தாங்கமுடியாத ஆபத்துதான். இதற்கு என் செய்வது” என்று கூறி, அன்ஷார் தேவனும் அழுதுவிட்டு, பிறகு தன் மைந்தன் அனு தேவனை அழைத்து, “மகனே! கோபமிகுதியால் நம்மைக் கூண்டோடு அழித்துவிடக் கிளம்பியுள்ள டியாமட் தேவியிடம் சென்று, சமரசம் பேசி, நமக்கு வர இருக்கும் அழிவைத் தடுத்திடுவாய்” என்று வேண்ட, அனுதேவன், தந்தை சொல்லைத் தலைமேற்கொண்டு, சென்றான். ஆனால், டியாமட் தேவியை நெருங்க முடியவில்லை—பிறகு, அதே திருப்பணிக்கு ஈயா தேவன் சென்றான்–பலன் இல்லை–பீதியுடன் திரும்பிவிட்டான்.

யோசித்தான் அன்ஷார் தேவன். யோசனை உதித்தது. உடனே ஈயா தேவனுடைய திருக்குமாரன் மெரோடாக் என்பானை அழைத்து, இந்தக் காரியத்தைச் செய்யும்படி கேட்டான். நமது புராணம் சிலவற்றிலே, சிவனுக்கு இல்லாத சக்தி முருகனுக்கு உண்டு என்று குறிக்கப்பட்டிருப்பதுபோல, இந்த பாபிலோன் கதை.

மெரோடாக் பலசாலி மட்டுமல்ல, யூகமுள்ள தேவன். எனவே, “சரி! இந்த சம்ஹார காரியத்தை நான் செய்து முடித்தால், சன்மானம் என்ன தரப்படும்” என்று பேரம் பேசலானான். “என்ன வேண்டுமானால் கேள்!” என்றனர், மற்றக் கடவுள்கள். “அங்ஙனமாயின, இனி, நானே எல்லாக் கடவுள்களுக்கும் மேலானவன் என்று அனைவரும் ஏற்றுக் கொள்வதானால், நான் அசுரக் கூட்டத்தை அழித்தொழித்து, கடவுளரை ரட்சிப்பேன்” என்றான் மெரோடாக். மற்றக் கடவுள்கள் இசைந்தனர். கடவுளரின் மணிமண்டபத்திலே இந்த வைபவம் நடைபெற்றான பிறகு, விஷத்தைக் கக்கும் நாலு புரவிகள் பூட்டப்பட்ட இரதத்தில் அமர்ந்தான் தேவதேவன், கையிலே கதை! உடல் முழுவதும் தீப்பிழம்பு! மின்னல் அவன் முன்னோடுவோனாயிற்று. யாரையும் பிணைக்கும் மாயவலை ஒன்றை அனுதேவன் தந்தான். இவ்வளவு யுத்த சன்னத்துடன், மெரோடாக் கிளம்பினான். ‘ஜய விஜயீபவ!’ என்று வாழ்த்தினர் கடவுளர். ஏழு விதமான பெருங்காற்றை ஏவிய வண்ணம், மாவீரக் கடவுளாம் மெரோடாக் சென்றான்.

அவன் வருகை கண்டு டியாமட் தேவி, தன் வாயைத் திறந்தாள், ஆச்சரியத்தால்! வாய் என்றால், சாமான்யமானது அல்ல! அதன் அகலம் ஏழு மைல்!! இதுதான் சமயமென, ஏழு காற்றையும் டியாமட்டின் வாயில் புகச் செய்தான் பாபிலோன் முருகன்! என் செய்வாள் ராட்சசி! வாய் மூட முடியவில்லை! காற்று குடைகிறது! எடுத்தான் கதாயுதத்தை! கொடுத்தான் பலமான ஓர் அடி! கீழே வீழ்ந்தாள் பிணமாக!! சம்ஹாரமூர்த்தி, கிங்குவைச் சிறைப்படுத்தி, அவன் மார்பகத்தே இருந்த, விதிப்பலகையை எடுத்துக்கொண்டான். அனுதேவன் தந்த மாயவலையை வீசி, மற்ற அசுரர்களைப் பிடித்தான்—சிறையில் அடைத்தான்—டியாமட்டின் உடலை இரு கூறாக்கினான்—ஒன்று விண், மற்றொன்று மண்ணுலகு! முருகன், சூரபதுமனைக் கொன்றதும் ஒருபகுதி கோழி, மறுபகுதி மயில் ஆக மாறினது என்பார்களே நமது புராணீகர்கள், அதுபோல! பாபிலோனில், சூரசம்மாரத் திருவிழா இன்று கிடையாது—கந்தபுராணம் கிடைக்காது—பூஜைகள் கிடையாது மெரோடாக் தேவனுக்கு—தேவாலயம் கிடையாது, தேவதேவனுக்கு! ஏழு காற்றுக்குத் தத்துவார்த்தமும், பதினோறு இராட்சதர்களுக்குத் தத்துவார்த்தமும் கூறிடும், நாவாணிபர்கள் கிடையாது! குக்குடக் கொடியோய் போற்றி! சூரனை வென்றோய் போற்றி! என்று இங்கு இன்றும் பாடிடும் பக்தர்கள்—பாமரர் கூட்டத்திலே மட்டுமல்ல—ஹைகோர்ட் ஜட்ஜு எனும் நிலைக்குச் சென்றவர்களும் இருந்திடக் காண்கிறோம். பாபிலோன் புராணம், சூரசம்ஹாரத்தைவிட பயங்கரமான ஓர் போரில், அதிபலசாலியான தேவன், தந்தையைக் காத்த தேவன், வென்றான் என்று கூறுகிறது—எனினும், குருட்டறிவின்போது, கட்டப்பட்ட, கருத்தற்ற, கவைக்கு உதவாத கதை இது என்று அங்கு தள்ளிவிட்டனர். மெரொடாக் மாஜி கடவுளானான்! மெரொடாக், கடவுளாக இருந்தபோது, கோலாகலமான வாழ்வுதான்; அழகழகான ஆலயங்கள் உண்டு, அபிஷேகம் ஆராதனை உண்டு, அர்ச்சனையும் உண்டு, இங்கு, இன்றும், ‘சஹஸ்ரநாம அர்ச்சனை’ என்று செய்யப்படுகிறதல்லவா, இருட்டறிவிலே பாபிலோன் இருந்தபோது, பூஜாரிக் கூட்டத்தின் புரட்டுரையைப் புண்ய கதை என்று நம்பிக்கிடந்த பாமரர், மெரொடாக் தேவனை, 51 திருநாமங்களால் அர்ச்சிப்பராம்!


மயிலேறுவோய் போற்றி!
வள்ளி மணுளா போற்றி!
சூர சம்மாரா போற்றி!
தந்தைக் குபதேசித்தோனே போற்றி!

என்று, இதோ இங்கு அர்ச்சனை நடைபெறுகிறது. பாலோனில், மெரொடாக், மாஜி கடவுளானான்—மதி வென்றது, மருள் அழிந்தது! அறிவு ஆட்சி செய்கிறது, அஞ்ஞானம் அழிந்துபட்டது! பூஜாரிப் புரட்டு விரட்டப்பட்டுவிட்டது—மெரொடாக் மாஜி கடவுளாக்கப்பட்டான்!