மானாவாரிப்பூ/017
முக்காலும் காலுமாய்...
வேணும் வேணும் என்று பூவனத்தின் மனம் ஏங்க, கைகள் மட்டும் குறுக்கே விழுந்து தடுத்தன. கைகளை பொருட்படுத்தாமல் அவன் ஆவேசமாக அள்ளி... அணைத்து... ஆக்கிரமித்துக் கொண்டிருந்தான்.
உணர்ச்சிகளின் வெறியாட்டம், உக்ரமமான அலைகளின் தழுவல்கள். அவள் தேகமெல்லாம் சூடேறி நெகிழ்ந்துபோய்த் துவள.. மனசெல்லாம் ததும்பித் தவிக்க... அவள் திணறினாள். திணறல் இன்பமான திணறல்... மூச்சுமுட்டிய திணறல்... மயக்கமூட்டிய திணறல்.
கதவைத் தட்டுகிற கரடிச் சத்தம்...
உடம்பெல்லாம் எரிச்சல்பற்றி எரிய, புருஷனை உதறித்தள்ளிவிட்டு எழுந்தாள்...
...நிஜமாகவே எழுந்துவிட்டாள். திடுக்கிட்டுப் போய்ப்பார்த்தாள்.
புருஷனைக் காணோம். சற்றுத்தள்ளி மகள் ராஜிதான் படுத்திருந்தாள். சூழ்ந்த வெறுமை சுள்ளென்று சுட்டது. மனசின் சூன்யம் கண்களோரத்தில் துளிகளாக வியர்க்க... கனவின் உஷ்ணம் தேகமெல்லாம் தகித்தது. தாபத்திலும் சோகத்திலும் மனசு அவிந்தது.நிஜமாகவே கதவு தட்டப்படுகிற சத்தம். இது கனா அல்ல... நிஜம். கதவை ஓரவிழியால் பார்த்தாள். பார்வையில் அம்புபட்ட கிரௌஞ்ச பட்சியின் வேதனை... விரக்தி. அயர்ச்சி...
“யம்மா...வ்” என்ற அழைப்புக் குரல்.
எழுந்து கொண்டாள், கதவைத் திறந்தாள்.
“என்னம்மா... வெள்ளனத்துலேயே ஒறங்கிட்டீகளா?”
“ஆமப்பா...” உணர்ச்சிகளை கசியவிட்டுவிடக்கூடாதே என்கிற ஜாக்கிரதை யுணர்வில் வார்த்தைச் சிக்கனம்.
“இன்னிக்கு பொங்கல் சாட்டப்போறாக, எல்லாரையும் கோவிலுக்கு வரச் சொன்னாங்க. அதான்... வீடு வீடா சொல்லிக்கிட்டு வாரேம்மா.”
“சரியப்பா”
போய்விட்டான்.
“ஐயாவை சீக்கிரமா வரச் சொல்லுங்கம்மா” என்று போன வருஷம் இதே நாவிதன் சொல்லிவிட்டுப் போனான். அந்த வார்த்தையை நாசூக்காக தவிர்த்துவிட்டுப் போகிறான். மனசறிந்த நாகரீகம்.
அந்தத் தவிர்ப்பு, ஒரு முழுச்சோகமாக நெஞ்சுக்குள் தாக்குகிறது. இழப்பின் பரிமாணம் கனத்துடன் அழுத்துகிறது.
வெடித்துச் சிதறுகிற அழுகையோடு கதவைச் சாத்தினாள்.
ஏதேதோ நினைவுகள். துண்டு துண்டாக, சம்பந்தா சம்பந்தமில்லாமல் நினைவுகள்... ஒன்றின் குறுக்காக ஒன்றாக நினைவுகள்...
அவர்... அவரது அன்பு... நெஞ்சைத் தொடுகிற எத்தனையோ அவரது நிகழ்ச்சிகள்... அவரது நேர்த்திகள்.
அவர் இருக்கிற வரைக்கும் அவரை நிம்மதியா இருக்க நான் விடலை... எந்நேரமும் கொத்திப்புடுங்கினேன். குதறியெடுத்தேன். நாறப் பொழப்பா வைச்சுக்கிட்டேன்.
ஒம்மாலே என்ன கண்டேன், ஏது கண்டேன்னு எந்நேரமும் அவரைத் தாளிச்சு எடுத்தேன். அத்தனைக்கும் பொறுமைதான். ஒரு நாளாச்சும் ‘சீ கழுத’ன்னு சீறியிருப்பாரா? ம்ஹும்... அதே சிரிப்பு... அச்சுப்பிறழாத அந்தச் சிரிப்புதான். ‘இருக்குறப்ப புரிஞ்சுக்கிட மாட்டே என்னோட அருமையை...’ன்னு ரகசியத்தை பொதிஞ்சு வைச்ச பூடகமான சிரிப்பு.பாயில் வந்து உட்கார்ந்தவளுக்கு கனா நினைவுக்கு வந்தது. உடம்பெல்லாம் உஷ்ணத்தின் பரவல். காய்ச்சல் கண்டதைப்போல ஒரு தகிப்பு. மனசுக்குள் ஒரு சூன்யத்தாக்குதல்.
தூக்கம் தூரமாயிற்று. மனசுக்குள் மருகி மருகி வருகிற நினைவுகள். இமை மூடிப் படுத்தாலும் எட்டிப்பார்க்கவிடாமல் உறக்கத்தைத் துரத்தியடிக்கிற எண்ணங்கள்... காட்சிகள்.... கற்பனைகள். உடம்பு தகிக்கிறது.
செப்புப் பானையில் இருந்த பச்சைத் தண்ணீரையள்ளி மேலுக்குக் குளித்தாள். கண்களில் பொங்கிவருகிற உஷ்ணக் கண்ணீரோடு குளித்து முடித்து. அதே சேலையை உடுத்திக்கொண்டாள்.
படுத்துக் கொண்டாள். போனவருஷம் பொங்கல் சாட்டியது ஞாபகத்திற்கு வந்தது. அன்று—
இவருதான் கட்டாயமாக சினிமா போடணும்னு ஒத்தைக்கால்லே நின்னார். அதுக்காக மடக்கு வரியா பத்து ரூபாய் மேற்கொண்டு போட்டு முடித்தார்கள்.
பட்டிக்காடா பட்டணமா படம் போட்டார். அடேயப்பா... அன்னிக்கு இந்த ஊரில் கொஞ்ச ஜனங்களா! சுத்துப்பட்டி பத்து ஊரு ஜனங்களும் வந்து சேர்ந்துட்டாகளே... உக்காரக்கூட இடமில்லியே... ஊரே திணறித் தவிச்சதே...
இவரு என்னமாய் ஓடியலைஞ்சார்... உள்ளுக்குள் பெருமிதத்தில் பொங்கி வழிந்தேனே... ஆனாலும். “ஊரு ஊருன்னு இப்படி ஓடியலைஞ்சு நமக்கென்ன ஆகப்போகுது?” என்று கோபித்துக் கொள்ளத்தானே செய்தேன்.
அதுக்கும் அதே சிரிப்புதான்! பூடகமான சிரிப்பு... எதையோ பொதிஞ்சு வைச்ச சிரிப்பு.
இந்த வருஷம், ‘சினிமா போடணும்’னு சொல்ல யாரு இருக்காக?
போனவருஷப் பொங்கலுக்கு ஆசை ஆசையாக அவரு எடுத்துக்கொடுத்த நைலக்ஸ் சேலை சாயம் போய்... அதோ கொடியில் கிடக்கு. அதை யாரு கட்ட! எடுத்துத்தந்த மனுசர், உடுத்தவிடாத படிக்குப் போய்ச் சேர்ந்துட்டாரே...
மகளுக்கு மஞ்சள்லே பச்சைப் பூவிரிஞ்ச பாலியஸ்டர் துணியிலே 3.5 மீட்டர் வாங்கிட்டு வந்து, என்ன சந்தோஷமா காட்டுனாரு... “இது மட்டும் நூத்தியஞ்சு ரூவா” என்று முகமெல்லாம் பெருமையா பூரிக்கச் சொன்னாரு.அந்நேரமாச்சும் இந்தப் பாதகத்தி வாயிலேயிருந்து நல்லவார்த்தை நாலு வநதுச்சா? இல்லே.
“பொட்டைக் கழுதைக்கெல்லாம்... இம்புட்டு ஒசத்தி துணி எதுக்கு? சீட்டித்துணி போதாது? துட்டை துட்டுன்னு நினைக்காம்... இப்படிச் கரியாக்கிட்டு வந்து நிக்கீகளே... நீங்களெல்லாம் ஒரு ஆம்பளை தானா?”
பூவை எதிர்பார்த்த அவர், கத்திமாதிரி வார்த்தைகளை எறிந்த போதுகூட, அவரு முகம் சுருங்கவில்லை. அதே சிரிப்பு...
“போம்மா... ஒனக்கென்ன தெரியும்... இருக்கட்டும் இருக்கட்டும்” என்ற மழுப்பலோடு சிரிப்பு.
“ஆமா! இவருக்கு மட்டுந்தான் எல்லாம் தெரிஞ்ச மாதிரி” என்று ஒரு நொடிப்பு நொடித்து, முகத்தைகக்கோணியது... நேற்றுபோல இருக்கிறது. ஒரு வருஷம் மாயமாகிப்போச்சு.
நெசந்தான்... அவருக்கு ஏதோ தெரிஞ்சிருக்கு. அதான்... நாளா இருந்து செய்ய வேண்டியதை நாழிகையிலே செஞ்சிருக்காரு. இந்தப் பாவி முண்டைக்கு இது தெரியாமப் போச்சே. தெரிஞ்சிருந்தா... அவரை அப்படியா ‘வெடுக், வெடுக்’குன்னு பேசியிருப்பேன்? கொத்தியா பிடுங்கியிருப்பேன்?
‘குளிர்ந்த வார்த்தை பேசியிருப்பேனே... சிரிச்ச முகத்தைக் காட்டியிருப்பேனே... கனிஞ்ச பார்வை பார்த்திருப்பேனே... இந்தப் பாதகத்திக்கு இது தெரியாமப் போச்சே... எப்பப்பார்த்தாலும் நாகப்பாம்பா கொத்திக்கொத்திப் பிடுங்குனேனே... என்னோட பிடுங்கல் பொறுக்கமாட்டாமத்தான்... என்னை இப்படியாக்கிட்டு... அவரு போய்ச் சேர்ந்துட்டாரோ...ஐயோ!’
நினைக்க நினைக்க அவளுக்கு அழுகை அழுகை பொத்துக்கொண்டு வந்தது. கண்கள் குத்தலெடுத்தது. கதறி அழுதால்... அக்கம்பக்கம் எட்டிப்பார்க்கும். அடக்க அடக்க உணர்ச்சிகள் உள்ளுக்குள் குமைந்து குமைந்து பொங்கித் திமிறியது. வெடித்துவிடுவதைப் போல நெஞ்சு விம்மியது.
அழுக்குச் சேலையை மூடிக்கொண்டு ஒருக்கழித்துப் படுத்திருந்த ராஜியைப் பார்த்தாள். தோளுக்கு வந்து விட்ட பிள்ளை. நெடு நெடுன்னு வளர்த்தி. சட்டையை முட்டிக்கொண்டு ரெண்டு முடிச்சு, தாவணி போடணும்
பாவாடை தாவணிக்கு எம்புட்டுக் குறைச்சுப்பார்த்தாலும் அம்பது ரூபா ஆகும். சின்னப் பயலுக்கு டவுஷர் சட்டைக்கு முப்பது ரூபா ஆகும். பொங்கல் சாட்டிவிட்டால்... வீட்டுக்கு 40 ரூபா தலைக்கட்டு வரி போடுவாக. கோயில் காரியம். குடுக்காமப் போனா, குத்தம் வந்து சேரும். அதுவும் குடுத்தாகணும்.
இம்புட்டு ரூபாக்கு எங்குட்டுப் போவேன்? யாரு கிட்டே கேப்பேன்? கூலி வேலை பார்த்து கஞ்சி குடிக்குற இந்த முண்டச்சி (விதவை)யை நம்பி யாரு கடன் கொடுப்பாக...?
நேரம் கெட்ட நேரமாயிருக்கு. மார்கழியிலே பெய்யிற மழை பெய்யலை. கெணத்துகள்லே தண்ணி வரட்டிழுப்பு. இருக்குற தண்ணியை இறைக்குறதுக்கும் கரண்டுல்லே. மொளகாச்செடி காயும் பூவுமாயிருக்கு. களை வெட்டு வேலைக முடிஞ்சுபோச்சு. பழம் பொறுக்குற வேலை இன்னும் வரலை. பொம்பளைகளுக்கு ஒரு வேலை ஜோலியில்லே.
மழை ஒழுங்கா பேய்ஞ்சு, கண்மாய்க்காடு நெறைஞ்சிருந்தா... வயக்காடுக வெளைஞ்சுருக்கும். கதிரறுப்பு வேலையாச்சும் நடக்கும். அதுவும் இல்லை.
கொத்துவேலை கெடைக்காம, வீட்டுக்கும் வழிக்குமாய் வெறும் நடைநடந்துக்கிட்டு... கூரை நிழல்லே பேன் பாத்துக்கிட்டு இருக்குற இந்த நேரத்துலே. கஞ்சி குடிக்குறதே பெரும்பாடு. இதுலே இம்புட்டுச் செலவு வந்து சேர்ந்துருக்கு. என்ன செய்றது?
என்ன சந்தோஷத்துலே கோயில் திருவிழா கொண்டாட? என்ன குதூகலத்துலே புதுசு கட்டி, பலகாரம் சுட்டு, ஊர் மெய்க்க அலையுறது?
அப்படி நினைச்சி ஒதுங்கிடவும் முடியாதே... சந்தோஷமோ சங்கடமோ... ஊர் வழமொறைக்கு ஒத்துப்போகணுமே... நாலு பேரைப்போல நாமும் இருந்தாகணுமே... இல்லேன்னா... சுத்தியுள்ள பொட்டச்சிக கை கொட்டிச் சிரிச்சிருவாளுகளே....
சரி.. நூத்தியம்பது ரூபாயாச்சும் வேணுமே. அம்புட்டுக்கு இப்ப எங்க போறது?
பூவனத்துக்கு கண்ணைக் கட்டி இருட்டுக்குள் விட்ட மாதிரியிருந்தது. நிற்கவும் முடியவில்லை. நடக்கவும் பாதை தெரியவில்லை.
போன வருஷம் இந்தக் கவலையை இவள் அறியவேயில்லை. இதைச் சமாளிக்க மல்லுக்கட்ட ஒரு மனுசர் இருந்தார். இந்த வருஷம்?அடப்பாவிப்பய தெய்வமே, உனக்கு நா என்ன கொறை வைச்சேன்? என்னை எதுக்கு இப்படி கோலமழிச்சு கொடுமைப்படுத்திட்டே?
அவளுக்குள் நினைவுகள் ‘நா முந்தி, நீ முந்தி’ என்று ஓடிப்பிடித்து விளையாட, தூக்கம் கண்ணில் ஒட்டவில்லை. எங்கோ கோழி பீதியுடன் “கோ, கோ” என்று கத்துகிற சத்தம். கூளம் தின்னுகிற காளைமாட்டின் கழுத்துமணியின் அசைவுச் சத்தம். ஆற்றோரப் பனந்தோப்பில் அடைந்திருக்கிற மயில்கள். எதையோ பார்த்து மிரண்டுபோய் கரகரத்த குரலில் கதறுகிற சத்தம். சுவர்க்கோழியின் ‘ங் ங் ங் ஙீ’ என்ற இரைச்சல்.
கவலைகளும், திகைப்புகளுமாய் மருகி மருகி மனசு, அழுகை அடங்கிய குழந்தையைப்போல அப்படியே உறங்கிப்போய்விட்டது.
காலையில் கண்விழித்த பூவனத்தின் முகத்தில் ஊரின் உல்லாசம் மோதியது.
அடுத்த செவ்வாய் கோவில் திருவிழாவாம். வீட்டுக்கு 45 ரூபாய்க்கு வரியாம். திருநெல்வேலி கரகாட்டக்காரி வருகிறாளாம். புல்வாய்ப்பட்டி கணேசன் மேளம், விளாத்திகுளம் வில்லடி, டெக் சினிமா போடுகிற பொறுப்பு ஒரு இளவட்டம் கையில், அவனால் வசூல் பண்ண முடிந்தால், சினிமா. இல்லேன்னா இல்லையாம்.
ஊரெல்லாம் திருவிழாப் பேச்சு. சேலை துணிமணிகள் பேச்சு. சொந்தபந்தத்துக்கு வரச்சொல்லி கடித அழைப்புகள், புதுசா மகளைக் கட்டிக்கொடுத்த வீடுகளில், மருமகனுக்கு என்ன மாதிரியான வேட்டி சட்டை எடுப்பது என்பது பற்றிய பேச்சுக்கள்..
ஒவ்வொரு முகத்திலும் திருவிழா தீபங்கள் சுடர்விட்டுப் பிரகாசித்தன. பூவனம் முகம் மட்டும் வெட்டுப்பட்ட பூங்கொடியாக வாடிக்கிடந்தது. என்ன செய்றது, ஏது செய்றது என்ற கவலை மனசை அரித்துக்கொண்டிருந்தது.
பூவனம் ஒரு யோசனையோடு அக்காவீட்டுக்குப் போனாள், மச்சானிடமாச்சும் கடன் கேட்டுப்பார்க்கலாம்.
இப்ப இப்பவெல்லாம்... அக்கா புருஷன் பார்வை சரியில்லை. ஒரு தினுசாக இருக்கிறது. கொழுந்தியாளை அன்போட பார்த்த பழைய பார்வை மாதிரியில்லே. உரியை பார்க்கிற கள்ளப்பூனை மாதிரி... ஒரு விதமான பார்வை.
இவுக்கிட்டே கேக்குறது இழிவுதான். அவளுக்கு சுத்தமாக சம்மதமில்லை.என்ன செய்வது? இவர்களை விட்டால் வேறு சொந்தபந்தம் கிடையாதே.... வேற நாதியில்லே....
தெருவை அடைத்துக்கொண்டு வருகிற எருமைகளை விட்டு விலகி, மடத்துவாசலில் உட்கார்ந்திருக்கிற இளவட்டங்களுக்கு மறுபக்கமாய் முகம் திருப்பி, டீக்கடை அரட்டைக்கூட்டத்தைக் கடந்து... அக்கா வீட்டுக்குள் நுழைந்தாள்.
மச்சான்தான் திண்ணைத் தாழ்வாரத்தில் உட்கார்ந்து வெற்றிலை போட்டுக்கொண்டிருந்தார். அக்காள் மகள் தண்ணி சுமந்துகொண்டிருந்தாள் பூவனம் தாழ்வார நிழலோரம் ரொம்ப ஒதுங்கி — ஒடுக்கமாய் — நின்றாள்.
“என்ன பூவனம், அக்காளைப் பார்க்க வந்தீயா?”
‘ஆமா’ என்று தலையாட்டிய அவள். ஏறிட்டுப் பார்க்கவில்லை. ஆனாலும் மச்சானின் பார்வை மேனியெங்கும் ஊர்வதை உணர்ந்தாள். உள்ளுக்குள் கூசினாள். தலைநிமிராமல் பேசினாள்.
“அவா... குட்டிகளுக்கு கொழை ஒடிக்கப் போயிருக்கா...”
“நா... உங்ககிட்டேதான் ஒரு விஷயமா வந்தேன்”
“என்ன பூவனம், சொல்லு”
“பொங்கச் சாட்டியிருக்காக”
“ஆமா...”
“எனக்கு வேலையுமில்லே ஜோலியுமில்லை. கைக்கும் மெய்க்கும் காசில்லே. புள்ளைகளுக்காச்சும் ரெண்டு புதுசு எடுத்துக் குடுக்கணும்.”
“ஆமா, பூவனம். எனக்கும் அதுதான் கவலையாயிருக்கு. எங்க வீட்டுக்கும் எப்படி கொறைச்சுப் பாத்தாலும் ஐநூறு ரூவா ஆகும்”
“நீங்க எப்படியாச்சும் கடன்கிடன் வாங்குவீக”
“முடியலே, சங்கரன் கோயில் கமிஷன் கடைக்காரங்க மழை போற போக்கைப் பார்த்துட்டு. கடன் இல்லேன்னு கையா விரிச்சிட்டாக. மொளகாச்செடிக்கு ஒரம் போடக்கூட வழி தெரியலே. இந்த நெலையிலே இந்தச் செலவு. என்ன செய்யறதுன்னும் ஒன்னும் வெளங்கலே... ஒரே முழிப்பாட்டமாயிருக்கு”
“நீங்கள் ஆம்பளை, நாலு எடத்துலே முட்டி மோதி எங்கனாச்சும் கடன் வாங்குருவீக. நீங்க வாங்குறப்ப.. எனக்கும் சேத்து வாங்கிட்டீகன்னா...”மௌனம் கால் நீட்டிப் படுத்துக்கிடந்தது. மச்சானிடமிருந்து பேச்சு மூச்சே வரவில்லை. ஒரு பெருமூச்சு விடுகிற சப்தம் மட்டும். அந்தப் பெருமூச்சின் சத்தத்தில் எத்தனையோ உணர்ச்சிகள்.. ஏதேதோ செய்திகள். மொழியில்லாத மனச்சபலங்கள்.
மனசுக்குள் மருண்டாள்.
பூவனம் மெல்ல நிமிர்ந்தாள். அவனது கண்கள் இவளது புஜத்தில் நங்கூரமிட்டிருந்தது. அசைவற்ற அந்தப் பார்வையில் ஆயிரமாய் மன அசைவுகள், நெளியும் புழுக்கள்.
மருட்சி நிஜமாயிற்று, படபடக்கும் மனசை கட்டுப்படுத்திக் கொண்டாள். இயல்பாய் இருக்க முயன்றாள்.
“என்ன மச்சா, பேச்சு மூச்சையே காணலே”
“சாணி வுழுந்தா மண்ணு ஒட்டும். ஒத்தாசைக்குப் பதிலா ஒரு புரயோசனம் இருக்கும். ஒனக்கு நா உதவி செய்ஞ்சா.. எனக்கு என்ன பலன்?”
அவளுக்குள் நறுக்கென்று முள் தைத்தது. தெருவில் நிர்வாணமாய் நிறுத்தப்பட்ட அவமான உணர்ச்சி அவளை வதைத்தது. மனசுக்குள் ரத்தம் வடிய... கண்ணுக்குள் குத்தலெடுத்தது.
“அவுக இருந்தா.... நா வந்து இப்படி நிக்கவா செய்வேன்? அக்கா வீடு தவிர வேற யாருகிட்டே ஆதரவு தேடிப்போக முடியும்?”
“சரி சரி... கண்ணைக் கசக்காதே. சவடால் சங்கரன்கிட்டே கொஞ்ச ரூபா கேட்டிருந்தேன். இன்னிக்குத் தாரேன்னான். அதை வேணுமின்னா ஒனக்குத் தாரேன். சாயங்காலமா நீ புல்லுக்கு வருவேயில்லை? நம்ம தெக்குக் கிணத்துப்பக்கமாக வா. ரூவா தாரேன். என்ன சரிதானே?”
அதிர்வோடு நிமிர்ந்து பார்த்தாள். மச்சான் முகத்தைத் தீர்க்கமாய்ப் பார்த்தாள். குத்துண்ட பறவையின் வேதனை அவள் கண்ணில். தலையசைத்துவிட்டு நகர்ந்துவிட்டாள்.
பூவனம் மனசுக்குள் முள்வனம்...
பணம் தர்றதுன்னா அக்கா மூலமா தரவேண்டியதுதானே..? தெக்குப் புஞ்சைக்கு வரச்சொல்றாரே? எதுக்கு அங்க? சாணி வுழுந்தா மண்ணு ஓட்டணும்னாரே... அப்படி மண்ணு ஒட்டுறதுக்கா?
மாட்டுக்காரன் கிட்டே விலைபேசி முடிச்சு. பணத்தையும். மாட்டையும் கை மாத்திவிடுகிற தரகன், நாப்பது ஐம்பது தரகு வாங்குவான். இவரு சவடால்சங்கரன் கிட்டே பணம்வாங்கித் தர்றதுக்கு என்ன தரகு கேக்குறாரு? என் உடம்பையா? என்னோட மானம் மரியாதையையா? ச்சே!
பூவனத்துக்கு உடம்பெல்லாம் பற்றியெரிந்தது. ஏதோ அசிங்கத்தை முழுங்கி விட்டதைப் போல மனசெல்லாம் குமட்டியது. காறித் துப்பினாள். யார் மீதோ விழ வேண்டிய எச்சில், தெருப்புழுதியில் விழுந்தது.
அந்த மனுசர் இருந்தா... எனக்கு இந்தக் கேவலம் வருமா? நாந்தான் இப்படிப்போய் நிப்பேனா? இவருதான் இப்படிக் கேப்பாரா? அந்த ஒழக்கரிசி ஜீவன் இல்லாததாலே... என் தரம் எவ்வளவு தாழ்ந்துபோயிருச்சு?
முன் எப்போதும் இல்லாத பிரம்மாண்டமாய் புருஷன் அவளுக்குள் எழுந்தான். இழப்பின் கனபரிமாணம் அவள் நெஞ்சை உறுத்தியது.
மனசுக்குள் நினைவுகளின் கோரத்தாண்டவங்கள், மனத்தெருவை புழுதிக்காடாக்குகிற மூர்த்தண்ய விளையாட்டுகள்.
எருமை மாட்டுக்கு பசும் புல்லையள்ளிப் போட்டுக்கொண்டிருந்த ராஜி, “எங்கம்மா போய்ட்டே?” என்றாள். அவசரப்பட்டு உணர்ச்சிகளை உள்ளடக்க பிரயத்தனப்பட்டாள், பூவனம்.
“பெரியம்மை வீட்டுக்குப் போயிருந்தேன்”
“ஏம்மா... ஒரு மாதிரியாயிருக்கே?”
“எனக்கு கொள்ளையா வந்துருக்கு? ஒன்னுமில்லே. நீ கஞ்சியைக் குடி” என்று எரிந்து விழுந்தாள். அம்மாவைப் புதிதாக — புதிராகப் — பார்த்தாள் ராஜி.
அரவமில்லாமல் நான்கு நாட்கள் ஓடிவிட்டன. சனிக்கிழமை வந்துவிட்டது. வர்ற செவ்வாய், கோயில் திருவிழா.
நாள் நெருங்க நெருங்க பூவனத்துக்குள் பதைப்பு.
கோயிலுக்கு வெள்ளையடித்து சாயக்கோடுகள் போட்டுவிட்டார்கள். ஊர் முழுக்க புத்தம் புதிய உற்சாகத்தில் திளைத்துக் கொண்டிருந்தது. வருஷம் முச்சூடும் வாட்டுகிற வருத்தங்களை — வாழ்க்கைச் சுமைகளை — தாங்குகிற மனோ வீர்யத்தை இந்த ஒரு உல்லாசத்தில்தான் சேகரிப்பதாலோ... என்னவோ... ஜனங்கள் கண்மண் தெரியாத ஆவேத்தில் பரபரத்துத் திரிந்தனர்.
பூவனம் துணிமணிக்காக — கோயில் வரிக்காக எங்கெங்கோ அலைந்தாள். அங்கு இங்கு என்று முட்டிப்பார்த்தாள். எந்த இடத்திலும் சல்லிக்காசு பெயரவில்லை. நேரம் அப்படி, கண்ணு முழி பிதுங்குகிற கோடை நேரம்.
போட்டிருந்த ஏலச்சீட்டையாச்சும் எடுத்துவிடலாம் என்று ஆனமட்டும் முயற்சித்தாள். போட்டி கடுமை. பலிக்கவில்லை. முட்டிய இடமெல்லாம் ஏமாற்றமும் வேதனையுமே பதிலாகக் கிடைத்து. மனசு அலுத்துப் போய்விட்டது.
ராஜியையும், முத்துவையும் பார்க்கப் பார்க்க மனசு ஏங்கித் தவித்தது. ஊர்முழுக்க பிள்ளைகளெல்லாம் புதுச்சட்டையும், புதுப்பாவாடையுமாய் ஓடித்திரிய... நான் பெத்த பூச்செண்டுக மட்டும் கசக்கி உடுத்துன பழந்துணியோட கொறைக்கோலமா நிக்குமே... அதுக மனது என்ன பாடுபடும்? ஊரே என்னைப்பாத்து கை கொட்டிச் சிரிச்சிருமே...
என்ன செய்றது? நினைக்க நினைக்க இருட்டிக் கொண்டுவந்தது.
தனிமையில் புழுங்கிப் புழுங்கி அழுதாள். அழுகையில் பொழுதெல்லாம் கரைந்தாள். தெக்குக் கிணத்துப் புஞ்சைக்கு வரச்சொன்ன மச்சானை நினைக்க நினைக்க மனசு கொதித்தது.
எவ்வளவு லேசா நெனைச்சுட்டாரு? வான்னா வர்ற தேவடியான்னு எம்புட்டு எளக்காரமா நெனச்சுட்டாரு? நா அந்த மாதிரி பல்லையிளிக்கிற பலவற்றையா? சரியான சாதிமான்கன்னு.
மச்சானைப் பற்றி அக்காளிடம் சொல்லிவிட்டால்... என்ன, அவர்களுக்குள் சண்டை சச்சரவு வருமோ?
வந்தா... வரட்டுமே. அப்பத்தானே அவருக்கும் நெஞ்சுலே பயம் இருக்கும்? பாக்குற பார்வையிலே சுத்தம் வரும்?
சொல்லிட வேண்டியதுதான்.
அக்காளைத் தேடி வீட்டுக்குப்போனாள்.
வாசலில் தேங்கினாள். தயங்கினாள். மச்சான் குரல் கேட்கிறது. ஏதோ சகஜமாய் — சந்தோஷமாய் பேசிக்கொண்டிருக்கின்றனர்.
இவளால் உள்ளே தலைகாட்டவும் முடியவில்லை. திருப்பிப் போகவும் மனமில்லை. திகைத்தாள், பூவனம்.
“.... இந்தா.... இதெல்லாம் ஒப்புள்ளைகளுக்கு துணிகள். டெய்லர் கிட்டே தைக்கக் குடுத்துரு. இது ஒனக்குச்சேலை. இது சட்டைக்குத் துணி.”“நீங்க.. உங்களுக்கு எடுக்கலியா?”
“ஜனதா வேட்டிக்கும் துண்டுக்கும் சொல்லியிருக்கேன் போதும்”
“இது யாருக்கு?”
“இது ஒந்தங்கச்சி புள்ளைகளுக்கு. இதை நீயே போய் பூவனத்து கையிலே குடுத்துரு”
“ஏன், நீங்களே கொண்டு குடுத்துர வேண்டியதுதானே?”
“ம்ள்ச்சூ... நீயே குடுத்துரு”
“ஏன் உங்களுக்கென்ன?”
“என்னை அவா தப்பா நெனக்குறா”
“தப்பா? எப்படி தப்பா?”
“நமக்கு புஞ்சையிருக்கு. சில சமயம் வேலைக்கு ஆள் கிடைக்காம திண்டாடித் தெருவிலே திரியுதோம். அவா... யாரு புஞ்சைக்கோ கூலி வேலைக்குப் போறா. அது நம் புஞ்சைக்கு வரலாமில்லியா? வந்தா நமக்கு எம்புட்டுப் பிரயோஜனமா யிருக்கும்?”
“ம்.... நெஜந்தான்”
“அவளுக்கும் நம்மை விட்டா வேற யார் இருக்காக? இந்தச் சின்ன வயசுலே தாலியறுத்துட்டு நிக்குற அவளைப் பாக்குறப்போ... நமக்கும் சங்கடமாயிருக்கு. இதையெல்லாம் நெனச்சு... அன்னிக்கு ஒன்னாலே என்ன பிரயோஜனம்னு கேட்டேன். அதை அவா வேற அர்த்தத்துலே எடுத்துக்கிட்டா போலிருக்கு. முகம் வாடிப்போய் போய்ட்டா, எனக்கே சங்கடமாப் போச்சு. ம்ச்ள்ச் சூ! எதுக்கு வம்பு? நீயே போய் ஒந்தங்கச்சிகிட்டே இதைக் குடுத்துரு. கோயில் வரியும் குடுத்தாச்சுன்னு சொல்லிரு”
பூவனத்துக்குள் ஆயிரம் சாட்டையடிகள் சுளீரிட்டன.
வந்த சுவடு தெரியாமல் திரும்பிவிட்டாள். மனசுக்குள் வெட்கமும், வேதனையும் பிடுங்கித்தின்றன.
வீடு வந்து சேர்ந்தாள். ராஜி எங்கே? தண்ணீர் எடுக்கப் போய்விட்டாளோ. அடுப்பங்கரைக்குள் வந்தாள். அடுப்பில் சோளக்கழி “டிப், டிப், டிப்”பென்று சத்தமிட்டுக் கொண்டிருந்தது. துடுப்பை உள்ளே போட்டு மவித்தாள்.
மச்சானை நினைத்தாள். கோழிக்குஞ்சை கால்தவறி மிதித்துவிட்டால் மனசுக்குள் ஒரு வேதனை வருமே... அந்த வேதனை பூவனத்துக்குள்.
நா ஒரு பாவி, சே! மச்சானை எம்புட்டு, மட்டமா நெனச்சுட்டேன்? தங்கமான மனுசரை தரகுகேக்குறவருன்னு நெனச்சுட்டேனே... அவருக்குள்ளே இருந்துருக்குற பாசத்தையும், கருணையையும், நல்ல எண்ணத்தையும் இந்தப்பாவி மனசு புரிஞ்சுக்கிடாமே இருந்துருச்சே...
அழுக்கு எம்மனசுலே தான் இருந்திருக்குமோ...
தன்னைத்தானே வைதுகொள்கிற மனப்புலம்பல். யோசனைகள்.
சட்டென்று யோசனைகள் ஓரிடத்தில் தேங்கித்திகைக்க... மனசுக்குள் ஒரு நெருடல்.
சரி.... அக்காகிட்டே அவரு பேசிக்கிட்டிருந்தது நெஜந்தான். அவரோட பாசம், எரக்கம் எல்லாம் நெஜந்தான். ஆனா..
தெக்குப் புஞ்சைக்கு வரச்சொன்னாரே.... அதுவும் நெஜந்தானே? பாக்குற பார்வையிலே ஒரு மோகம் இருந்துச்சே. கள்ளப்பூனைப் பார்வை பார்த்தாரே... அதுவும் நெஜந்தானே...
அக்காகிட்டே பேசுனது நெஜமா... பார்வையிலே பேசுனது நெஜமா? ரெண்டுமே நெஜந்தானோ? ஒன்னுக்குள்ளே ஒன்னு பின்னிக்கிடக்குதோ? பாசமும், மோகமும் முக்காலும், காலுமாய் சேர்ந்து கலந்து கிடக்குதோ..
அவளுக்குப் புரியவில்லை. ஏதோ புரிவது போலவுமிருந்தது.
நினைவுகளின் அயற்சியில் சோர்ந்துபோய், புருஷனை நினைத்துப் புலம்பி அழத் துவங்கினாள் பூவனம்.
சிறுகதைக் களஞ்சியம் 1984