மானுடம் வெல்லும்
| This page is under construction. This text or section is currently in the middle of an expansion or major revamping. More Information and Options However, you are welcome to assist in its construction by editing it as well. Please consult the edit history should you wish to contact the person who placed this template. If this article has not been edited in several days, please remove the under construction notice. While actively editing, consider adding {{inuse}} to reduce edit conflicts. |
மானுடம் வெல்லும்
மேலாண்மை செ. பொன்னுச்சாமி
கரிகாலன் பதிப்பகம்
மேலாண்மறைநாடு
இராமநாதபுரம் மாவட்டம்
626127
உரிமை : ஆசிரியருக்கே
முதல் பதிப்பு : ஏப்ரல் 1981
அட்டை ஓவியம் : கவிஞர் இளவேனில்
நன்றி :
செம்மலர்
சிகரம்
மேலாண்மை பொன்னுச்சாமியின்
முதல் சிறுகதைத் தொகுப்பு
மானுடம் வெல்லும்
நன்றிக்குரியவர்கள்:
தணிகைச்செல்வன்
இளவேனில்
கி. த. பச்சையப்பன்
கிருஷ்ணசாமி
மனுவேல்
என். என். ஜே. பிரிண்டர்ஸ் அன்டு தொழிலாளர்கள்
விலை ரூ. 5/-
கிடைக்கும் இடம்:
சிகரம் வெளியீடு,
19, குறுக்குச் சாலை,
புதுவண்ணாரப்பேட்டை,
சென்னை–83.
நுழை வாசலில்....
இராமநாதபுரம் மாவட்டத்தில், நகர நாகரீகம் எட்டிப் பார்க்க இயலாத ஒரு குக்கிராமத்தில் புஞ்சைக்காட்டில் மிளகாய்ச் செடிகளுக்காக உழுதுகொண்டும் கிராமத்துச் சில்லறைக் கடை ஒன்றின் சாளரத்து வழியாக ஜனங்களின் உறவுகளைக் கண்டு வியந்து கொண்டும், மகிழ்ந்துகொண்டும், வருந்திக்கொண்டிருந்த ஒரு இளைஞனின் நெஞ்சுக்குள் ஒரு இலக்கியவாதி கருக்கொண்டிருந்தான் என்பது சராசரி வாழ்வின் விதிகளிலிருந்து விலகிக் காட்சியளிக்கும் ஒரு செய்தியாகும். அதுவும் இந்திய வாழ் நிலைகளிலிருந்தும் - அதிலும் கிராமியச் சூழ்நிலைகளிலிருந்தும் இத்தகைய கலைஞன் ஒருவன் பிறப்பெடுப்பது ஒரு அபூர்வ சங்கதியாகும். ஆம்! மேலாண்மை பொன்னுச்சாமி அத்தகைய அபூர்வக் கலைஞன்தான்.
“காளியின் சக்தியினால் கலைஞனானான்” என்று காளிதாசர்களே சொல்லிக்கொள்ள விரும்பாத ஒரு காலத்தில், இந்த ‘அபூர்வ’ உண்மைக்குக் காரணத்தை எங்கே தேடுவது என்று அதிக தூரம் அலைய வேண்டியதில்லை.
‘மேலாண்மை’ சார்ந்துள்ள அரசியல் இயக்கம், அவர் தேர்ந்துள்ள சித்தாந்தம் அவற்றில் வெளிப்பட்ட சமூக — பொருளாதார கலாச்சாரக் கோட்பாடுகள் ஆகியவற்றின் உதய ரேகைகள் மேலாண்மறை நாட்டின் சின்னக் கடையில் ஜன்னல் வழியாக நுழைந்து உருவத்தால் சின்ன மனிதனைப் பரிணாமப்படுத்தி ஒரு சிறந்த இலக்கியவாதியாகச் செதுக்கியதில் வெற்றிபெற்றிருக்கிறது என்று நான் கருதுகிறேன்.
அவர் படைப்புகளே அதை ஊர்ஜிதம் செய்யும். அவற்றின் சிலவே இங்கு நூல் உருப்பெறுகின்றன. இந்தக் கதைகளைத் திறனாய்வு செய்வதல்ல என் நோக்கம். அதை நீங்களே செய்வீர்கள். மேலாண்மையின் முன்னுரைக்கும் முன்னுரையாக இது அமைந்து அவர் முகவிலாசத்துக்கு ஒரு பகைப்புலனைத் தரவே இது பயன்படும்.
கல்லைக் கனியாக்கும் ரசவாதத்தை மார்க்சீயம் வரலாற்றில் ஆயிரம் முறை நிரூபித்திருக்கிறது. ஆயிரத்து ஓராவது முறையாக மீண்டும் நிரூபிக்கிறது — ‘மேலாண்மை’ மூலம்! ‘மானுடம் வெல்லும்’ அதற்கொரு மகத்தான சாட்சி!
தணிகைச்செல்வன்
நுழைவாசலில்
- சில வார்த்தைகள்....
முன்னுரை என்று தனியாக ஒன்று தேவைதானா?
இந்தக் கேள்விக்குப் பதில்சொல்ல என்னால் முடியவில்லை. எழுத்தாளன், தனது படைப்புகளில் வெளியிட முடியாததை... வேறெதில் வெளியிட்டுவிட முடியும்?
ஆயினும் தேவை தேவையில்லை என்ற பிரச்னையில் அதிகமாக மண்டையைக் குழப்பிக் கொள்ளாமல், இந்த முன்னுரையின் மூலம் உங்களுடன் சிலவற்றைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
இலக்கியம் படைப்பவர்களில் மூன்றுவகைப்பட்டவர்கள் இருக்கின்றனர் என்று கருதுகிறேன்.
முதல் வகை: இலக்கியத்தின் வலிமையை - கடமையை கொஞ்சங்கூட பொருட்படுத்திக் கொள்ளாமல் - குறைந்தபட்ச தார்மீக உணர்வுகள்கூட இல்லாமல்,.... ‘எதையாவது எழுதிச் சம்பாதிப்பது’ என்ற சுயநலத்தில் - சமூகத்துக்குக் கேடு விளைவிக்கும் இலக்கியங்களையும், நிஜவாழ்க்கை பிரக்ஞையில்லாத கற்பனைக் கதைகளையும் புற்றீசல்களாகப் படைத்துக் கொண்டிருக்கும் வணிக எழுத்தாளர்கள்.
இவர்கள் மக்கள் மத்தியிலே அம்பலமாகிப் போனவர்கள்.
இரண்டாம் வகை: இலக்கியத்தைப் பாதுகாப்பதற்கே அவதாரம் எடுத்திருப்பதாக தம்மைத்தாமே கற்பனை செய்து கொண்டு மாபெரும் சிந்தனையாளர்களாகக் கருதிக்கொண்டு உலவித்திரிகிற பகட்டு அறிவுஜீவிகள்.
‘இலக்கியப் புரட்சிக்காரர்களாக’ பகட்டித் திரிகிற இந்த இண்டலெக்சுவல்களின் படைப்புகளை - இயல்புகளை - உற்று நோக்கினால்.... இவர்கள் எத்தனை வறண்டுபோய்க் கிடக்கிறார்கள் என்பது பளிச்சென்று விளங்கிவிடும்.
இந்த எக்ஸிஸ்டென்ஷியலிஸ்டுகளின் சிந்தனைகளும்சரி, படைப்புக்களும்சரி.... சீர்குலைவுத்தன்மை கொண்டதாக இருப்பதையும் காணமுடியும்.
இவர்களால் மக்களை நேசிக்கவோ, மதிக்கவோ முடிவதில்லை ‘மக்கள் வெறும் மந்தைக் கூட்டங்களாக’ இவர்கள் ‘ஞானக்’ கண்களுக்கு தெரிவதால்.. மக்கள் இலக்கியத்தைக் கண்டு, மிகுந்த அருவருப்புடன் முகஞ்சுளிப்பார்கள்.
நடப்புலக வாழ்க்கையின் பயங்கரத்தில் மிரண்டு, புதைந்துபோன இந்த எக்ஸிஸ்டென்ஷியலிஸ்டுகள், வாழ்க்கையை புதுப்பிக்க முடியும் என்ற நம்பிக்கைகளை இழந்துபோனவர்கள்.
வாழ்க்கையும், சமூகமும், சுரண்டலும், கொடுங்கோன்மையும் மற்றும் சகலமும் மாறவே மாறாது என்கிற மாறா நிலைத் தத்துவத்தைக் கொண்டுவாழும் இந்த மனிதர்கள்.... தங்களை சுத்த சுய இலக்கியவாதிகளாக—அதிமேதாவிகளாக பிரகடனப்படுத்திக் கொள்கின்றனர்.
இவர்கள் தான்—
புதுக்கவிதை என்ற பெயரில் கவிதை இலக்கியத்தையே காயடித்திருக்கின்றனர்.
வாழ்வும், உணர்ச்சிக்கொந்தளிப்புகளும், கற்பனை விசாலமும் கொண்டு எழில் சிந்தி இருக்கவேண்டிய கவிதையை –சாரமற்றதாக—வக்கிரமமாகிப்போன அடிமனசுகளின் நெருடல்களாக—தரமற்றதாக சீரழித்துவிட்டனர்.
தமிழ்க்கவிதை உலகத்தில் விஷக்காற்றாக இவர்கள் பரவிவிட்டனர்.
மேடும் பள்ளமும் கொண்ட இந்த சமூகத்தின் மர்ம இருட்டுகளின் மீது ஒளிபாய்ச்சி, அம்பலப்படுத்தவேண்டிய சமூகக் கடமை கொண்ட சிறுகதை பிரதேசத்திற்குள்ளும் இந்த நச்சுக் காற்று பரவி...
இலக்கியம் பிரச்சாரத்திற்கல்ல–அடிமன நெருடல்களை வெளிப்படுத்தவே, என்று கோஷித்து—மனசின் அசிங்கங்களையும், கோரங்களையும் நோக்கமின்றி வெளியிடுகின்ற சாதனமாக சிறுகதை இலக்கியத்தை மாற்றி, சாரமற்றதாக்கி விட்டது.
இவர்கள் தான்—
நாடக உலகிலும் பிரவேசித்து, ‘மேடை வேண்டாம்லைட் வேண்டாம்—ஆடை வேண்டாம்—கதை வேண்டாம் வாழ்வோ-உணர்ச்சியோ எதுவுமே வேண்டாம்’ என்று மிகப்பலமாக கூச்சலிட்டு நாடகத்தை வீதிக்கு கொண்டு வந்திருக்கின்றனர்.
வளர்ந்துவரும் விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி, எப்படி அந்தக் கலையை வளர்ப்பது என்ற இயக்க இயல் ரீதியான சிந்தனை இல்லாமல், கலை வடிவத்தைப் பின்னோக்கி இழுத்துச் செல்கின்றனர்.
கெட்டிதட்டிப் போன பழமைகளின் மீது, மக்கள் கொண்டுள்ள வெறுப்புணர்வை பயன்படுத்தி...புதுமைச் சிந்தனை என்ற பெயரில் சகலத்தையும் நிர்மூலமாக்கும் இந்த வக்கிரமனம் படைத்த—நம்பிக்கைகளற்ற—யாவும் மாறும் என்கிற தத்துவத்தை நம்பாத
இந்த இரண்டாவது வகை புதுமைவேடம் புனைந்த போலி இண்டெலெக்சுவல்களிடம் தான் படிப்பாளிகள் இன்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மூன்றாவது வகை : இவர்கள் இலக்கியத்தையும், மொழியையும் நேசிப்பதைப்போலவே—அல்லது அதிகமாக மக்களை நேசிக்கின்றனர்; வாழ்க்கையைக் காதலிக்கின்றனர்.
மக்களையும் வாழ்க்கையையும் நேசிப்பதனாலேயே—மக்கள் வாழ்வதற்குப் பொருத்தமில்லாமல் ஆகிவிட்ட இந்த சுரண்டல் சமூகத்தின் மீது ஆழ்ந்த பகைமை கொண்டிருக்கின்றனர்
இந்தச் சமுதாயம் மனிதகுலத்தால் தூக்கியெறியப்பட்டு, புதிய சமுதாயம் நிர்மாணிக்கப்படும் என்று வலுவான நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.
நனவுலகத்தைப் புரிந்து கொண்ட இலட்சியக் கனவுகளுடன் பயணத்தைத் தொடங்கியிருக்கிற இந்த மூன்றாம் வகை முற்போக்கிலக்கியப்படை வரிசையில் ஒரு வீரனாக நிற்பதில் பெருமை கொள்கிறேன்.
அடங்கிப் புழுங்கிக் கிடக்கிற இந்த மக்கள் கூட்டம், சன்னஞ் சன்னமாக உஷ்ணப்பட்டு, எரிமலையாக கனன்று கொண்டிருப்பதை நான் உணர்வதாலேயே...வரப்போகும் சமூக மாறுதலையும், அதற்கான புரட்சியையும் உத்வேகத்துடன் வரவேற்கிற எழுத்தாளனாக இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
என்னால் நேசிக்கப்படுகிற தொழிலாளி வர்க்கமும், உழவர் வர்க்கமும், வாலிபர்களும், என்னையும் நேசிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே உண்டு.
எனது முதல்ச் சிறுகதையை வெளியிட்டு, என்னைப் பிரகாசிக்க வைப்பதில் இன்னமும் முக்ய பாத்திரம் வகித்து வருகிற “செம்மலரு”க்கும், எனது இலக்கிய அணியின் தலைவனாகதிகழும் கே. முத்தையா அவர்களுக்கும் தோழர் வரதன் அவர்களுக்கும் எனது நன்றி உரித்தாகுக!
இந்தச் சிறுகதை தொகுப்பு வெளிவரக் காரணமாயிருந்த எல்லா அன்பு இதயங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி!
மேலாண்மறை நாடு
626127
வாழ்த்துக்களுடன்
மேலாண்மை செ. பொன்னுசாமி
17—4—81

