மின்சாரப்பூ/010
மின்சாரப்பூ
விடிந்த நேரம் நல்ல நேரமாகத் தோன்றியது ராசாமணிக்கு. இன்றிலிருந்து எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்று மனசுக்குள் ஒருபட்சி சொல்கிறது. எடுத்த காரியம் எல்லாமே தொடுத்து முன்னேறி, கை நிறைய பலன்களை குவிக்கும் என்ற நம்பிக்கை நிறைந்த மனநிலை.
மன ஆணிவேரின் அடி நுனியில் நீர்ச்சுனை பட்ட மாதிரியோர் குளிர்ச்சி. மனசெல்லாம் பூத்த மாதிரியோர் இறகு வருடல்.
உறக்கச் சடவை கழுவித் துடைத்த மன மகிழ்வு.
எழுந்து வெளியே வந்த ராசாமணி, கைலியை மடித்துக் கட்டிக் கொண்டான். செம்புத் தண்ணீரில் வாயை கொப்பளித்து, முகத்தை கழுவிக் கொண்டு மேல் துண்டால் அழுந்தத் துடைத்துக் கொண்டான்.
டீக்கடையை நோக்கி நடந்தான். பங்குனி மாச வெக்கையும், இறுக்கமும் விடிந்த பொழுதிலேயே இருக்கிறது.
காலைக் கரண்டு. ஆறு மணிக்கு நின்று வருகிற கரண்டு ‘த்ரீபேஸ்’. பம்ப்ஷெட் மோட்டார் ஓடும். கோடைப் பாய்ச்சல். எல்லோரும் மம்பட்டியோடு தண்ணீர் பாய்ச்சப்போய் விட்டதால், டீக் கடையில் ஈயாடுகிறது.ஓட்டமாய் ஓடிவருகிற எதிர்வீட்டுக்காரனைக் கண்டு திகைக்கிற ராசாமணி. அவன் முகத்தில் பதற்றமும், வியர்வை மணிகளும்.
“ஒங்கவீட்டு வாசல்லே வந்து... சாமிநாதன் காட்டுக் கூச்சலாய் சத்தம் போட்டு... ‘தங்கு, புங்கு’ன்னு குதிக்கான்...”
“என்னாவாம்...?”
“தெரியலே...”
திகில் பிடித்துப் போய் ஓடினான் ராசாமணி. புரியாத குழப்பம். சண்டை போடுகிற மாதிரியான தாவா எதுவுமில்லையே...
பங்குனி மாசம். அருங்கோடை, தீ வெயில், கிணற்றுத் தண்ணீர், ஓட்டைப் புடுங்கிப் போகிற மாதிரி வேகமாக வற்றி வருகிறது. வற்றுப்பாடு கிணறு. காயும் பூவுமாய் மிளகாய்ச் செடிகள். நல்ல பூபலன். தண்ணீர் பற்றாக்குறை.
நேற்றுடன் சாமிநாதன் இறவைமுறை முடிந்து விட்டது. ரெண்டரை வாய்க்கால் தண்ணீர் பாயாமல், மிச்சமாய்க் கிடந்தது. தலை தொங்கி வாடிக்கிடக்கிற மிளகாய்ச் செடிகள்.
ராத்திரி வீடு வந்து மருகி நின்றான், சாமிநாதன்.
“விட்டுக் கொடேன்... ரெண்டரை வாய்க்காலை நான் பாய்ச்சுக்கிடுதேன்”
ராசாமணி மறுத்தான். அவன் புஞ்சையிலும் கடும் வாட்டம். மிளகாய்ப் பழம் பொறுக்கியாகி விட்டது. நாலுசாக்கு பழம். பழம் பொறுக்கி விட்டால், மறுநாளே தண்ணீர் பாய்ச்சியாகணும். வேறுவழியில்லை.
ராசாமணி மறுக்க... மறுக்க... மருகி மன்றாடிய சாமிநாதன். “விட்டுக் கொடுங்க பாவம்” என்று கண்ணசைத்த இவன் மனைவி. “தாட்சண்யம் பார்க்காமலிருக்க முடியாதே...”“சரி” என்றான், ராசாமணி.
சந்தோஷமாகிப் போன சாமிநாதன். ராத்திரி ரொம்ப நேரம் பேசிக் கொண்டு இருந்துவிட்டுத்தான் போனான்.
‘பிறகெதுக்கு விடியக் காலம் சண்டைக்கு வரணும்?’
ராசாமணி நடையை எட்டிப் போட்டான். மனசின் பதைப்பு காலுக்குப் புரிகிறது.
இவன் போய்ச் சேரவும்... வீட்டு வாசலில் வசவும் பேச்சுமாகக் கொதித்துக் கொண்டிருந்த சாமிநாதன், பொங்கிச் சீறினான்.
“ச்சீய்... நீயெல்லாம் ஒரு மனுசந்தானா? சம்சாரிக்குப் பொறந்த சம்சாரிதானா?”
“ஏய்... வார்த்தையை அளந்து பேசு... கொட்டுனா... அள்ள முடியாது”
“என்ன மயித்துக்கு அளந்து பேசணும்? நீயெல்லாம் ஒரு மனுசனா? நீ திங்குறதெல்லாம் சோறுதானா? ராத்திரி தண்ணி பாய்ச்சுக்கோன்னு, யோக்கியங்கணக்கா பேசிட்டு... விடியக்காலம் வழியை மறிக்கீயே...”
“நா எங்க வழியை மறிச்சேன்? ஒங்கிட்டேதானே பம்ப்ஷெட் ரூம் சாவி இருக்கு?”
“யோக்கியன், கருணைப் பிரபு கணக்கா பேசியனுப்பிட்டு, ராவோட ராவா போய் ப்யூஸ் கட்டைகளை உருவி வைச்சுக்கிட்டா, எப்புடி? இதென்ன, கயவாளித்தனம்? ப்யூஸ் கட்டை இல்லாம கரண்டு என்னத்துலே வரும்? கரண்டு இல்லாம நா என்னத்துலே தண்ணி பாய்ச்ச?” ஆங்காரமும் ஆத்திரமுமாய் கையை நீட்டிப் பேசுகிற சாமிநாதன்.
“ஓங்கிட்டே எனக்கென்ன பயமா? நீயென்ன, எந்தலையைச் சீவிருவீயா? கொண்டா, ரூம் சாவியைக் குடு’ன்னு கேக்க முடியாதா? என்னத்துக்குப் போய்... ப்யூஸ் கட்டைகளை உருவணும்?”
சாமிநாதனுக்கு உள்ளுக்குள் ஏதோ அறுந்த மாதிரியிருந்தது. விறைப்பும், வீராப்பும் தளர்ந்தது. ராசாமணி பேச்சிலுள்ள தர்க்க நியாயம், அவனை யோசிக்க வைத்தது.
“அப்ப... நீ ப்யூஸ் கட்டைகளை உருவலியா?”
“நா என்னத்துக்கு உருவணும்?”
ராசாமணி நடந்து வருகிற போது விறுவிறுப்பு கண்ட நாலைந்து பேர் ‘என்னமோ, ஏதோ’வென்று பின்னாடியே வந்திருந்தனர். சாமிநாதன் பண்ணிய அலப்பரையும், சலம்பலும் ஏழெட்டுப் பேரை கூட்டியிருந்தது.
கூட்டத்தின் சலசலப்பு, நடந்த விவகாரம் புரிந்த வெளிச்சத்தில் அவர்களின் குறுக்கீடு.
“ஏய், சாமிநாதா... நீ... விடியக் காலம் போகையிலே ப்யூஸ் கட்டை இல்லியா?”
“இல்லே...?”
“எங்க?”
“மின்கம்பத்திலே உள்ள பெட்டியிலே தாம்...”
“யார் உருவுனது?”
“அதானே... தெரியலே”
“ராவோட... ராவா... ப்யூஸ் கட்டைக்கு எந்தக் களவாணி வரப் போறான்?”
“வந்துருக்கான்லே?”
“அப்ப... இது... நம்ம செந்தட்டி வேலையாத்தானிருக்கும்”“செந்தட்டியா...” எல்லோருக்கும் மறைந்திருந்த சூட்சுமம் புரிந்தது.
“அட, ஆமா” என்று ஆமோதிப்புடன் வியப்பில் வாயைப் பிளந்தான் சாமிநாதன். எல்லோரும் தான்.
“ஆமோப்பா... செந்தட்டிதான் ரா முழுக்க ஒறக்கமில்லாம சுத்துவான். தென்னை மர உச்சியிலே ஏறுவான். இல்லேன்னா... ப்யூஸ் கேரியலை உருவுவான்...”
“அந்த மெண்டலுக்கு இந்தப் ப்யூஸ்கேரியல் என்ன செய்ய?”
“ம்...? வறுத்துத் திங்க...”
எல்லோரும் சிரித்தனர். சாமிநாதன் விளக்கெண்ணெய் குடித்தவனைப் போல திணறல் முழி முழித்தான். தர்ம சங்கடமாய் தத்தளித்தான்.
ராசாமணி வேதனையும், சமாதானமுமாய் புலம்பினான். “அந்தக் கிறுக்குப் பய களவாண்டுட்டுப் போக... சாமிநாதனும் நானுமில்லே சண்டை போடத் தெரிஞ்சோம்?”
“நல்ல வேளை... ராசாமணி கூறுபாடோட பேசப் போய்... முறுக்கு வெறைப்பு எல்லாம் கொறைஞ்சு, நெசத்தை கண்டுபிடிக்க முடிஞ்சது.”
“செந்தட்டி இப்புடியே கிறுக்குப் புடிச்சுப் போய்த் திரியுதானே... அவனை ஒண்ணுஞ்செய்ய முடியாதா?”
“துட்டு இருந்தா... முறையா வைத்தியம் பார்க்கலாம். கஞ்சிக்கு வழியில்லாத குடும்பத்துலே என்ன செய்ய?”
எல்லோரும் செந்தட்டியைப் பற்றி அனுதாபமும் பரிவுமாகப் பேசினர்.