உள்ளடக்கத்துக்குச் செல்

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்/001

விக்கிமூலம் இலிருந்து

வழிகாட்டி உரை
தொ.மு.சி. ரகுநாதன்

கருத்தரங்கத் தலைப்பின் கருப்பொருளும் அதன் வீச்சும் மிகவும் ஆழமும் அகலமும் கொண்டவை. நான் வழங்கவிருக்கும் இந்த வழிகாட்டும் உரையில் இந்த அரை நூற்றாண்டுக்கால வரலாற்றை விவரமாக விளக்கிக் கூறுவதையோ, இந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் நமது சாதனைகள் என்னென்ன எனப்பட்டியல் போட்டுக் கூறுவதையோ நான் நோக்கமாகக் கொள்ளவில்லை. அதனால், பல எழுத்தாளர்களின் பெயர்கள், அவர்கள் எழுதிய நூல்கள், அவற்றின் குறைநிறைகள் பற்றிய கருத்துகள் இந்த உரையில் இடம்பெறாமல் போகலாம்.

இந்த வழிகாட்டி உரையின் நோக்கம் இதுதான்:

தமிழ்நாட்டு முற்போக்கு இலக்கிய முன்னோடிகளில் ஒருவன் எனக் கருதப்படுபவன் என்ற முறையிலும், முற்போக்கு இலக்கிய இயக்கத்தில் ஆரம்ப காலம் முதல் இன்றுவரை தொடர்ந்து இருந்து வருபவன் என்ற முறையிலும், இந்த ஐம்பதாண்டுக் காலத்தைப் பின்னோக்கிப் பார்த்துச் சில உரத்த சிந்தனைகளையும், விமர்சனமாகவும் சுய விமரிசனமாகவும் அமைந்த சில கருத்துகளையும், உங்கள் முன் மனம் திறந்து பேசி, உங்கள் மத்தியில் ஆரோக்கியமான ஒரு விவாதத்தைத் தூண்ட வேண்டும் என்பதேயாகும். மேலும், இந்தக் கருத்தரங்கில் பங்கெடுப்பவர்கள் பலரிலும் வயதால் மூத்தவன், சென்ற தலைமுறையைச் சேர்ந்தவன் என்ற முறையிலும், இப்போது இளந்தலைமுறையினர் பலர் கடந்த கால் நூற்றாண்டுக் காலத்தில் முற்போக்குக் கலை இலக்கியத் துறையிலும் இயக்கத்திலும் பங்கேற்றுள்ளனர் என்ற காரணத்தாலும், இந்த வழிகாட்டி உரையானது முற்போக்கு இலக்கியம் என நாம் கூறுவது தமிழ் நாட்டில் முளைத்தெழுந்த விதத்தையும், அதன் பின்னணியையும் அதில் ஏற்ப்பட்ட சோதனைகளையும் வேதனைகளையும் தவறுகளையும் சுயவிமரிசன ரீதியில் சுட்டிக் காட்டுவதாகவே அமையும் என்றும் இந்தச் சுயவிமரிசனம் நமது வருங்காலத்தைச் செப்பம் செய்து கொள்ள உதவும் என்றும் முன்னுரையாகக் கூறிக் கொள்கிறேன்.

ஒப்புநோக்கான பொருளே உண்டு:

இலக்கியத்தில் முற்போக்கு அல்லது பிற்போக்கு என்பது அதன் கருத்து, அதாவது உள்ளடக்கம் சம்பந்தப்பட்டதே யாகும். இந்த முற்போக்கு அல்லது பிற்போக்கு என்பது இலக்கியத்தில் என்றுமே இருந்து வந்துள்ளன எனலாம். சமுதாயத்தில் அடிப்படையான மாற்றங்கள் ஏற்படும்போது, முந்திய சமுதாயத்தில் முற்போக்கானவையாக இருந்த கருத்துகள், மதிப்புகள் முதலியவை பிந்திய சமுதாயத்தில் பிற்போக்கானவையாக, அதாவது அந்தக் காலத்துக்கு ஒவ்வாதவையாக மாறிப் போய்விடும். பிந்திய சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் புதிய முற்போக்கான கருத்துகள் தேவைப்படும். இவ்வாறு உருவாகும் முற்போக்குக் கருத்துகளும் அந்தச் சமுதாய அமைப்பில் அடிப்படையான மாற்றங்கள் ஏற்படும்போது பிற்போக்கானவையாகி விடும். எனவே முற்போக்கான கருத்து என்பது காலத்துக்குக் காலம் மாறுபடுவதேயாகும். அந்தந்தக் காலத்தில் பெரும்பான்மையான மக்களது நலன்களுக்கு உகந்ததாகவும், அவர்களது அபிலாஷைகளையும், நியாயமான வேட்கைகளையும் பிரதிபலிப்பதாகவும் அந்தச் சமுதாயத்தின் வளர்ச்சிப் போக்கை மக்கள் அனைவரின் நலன்களுக்கும் ஏற்றவாறு மாற்றும் வேட்கை கொண்டதாகவும் இருப்பதே முற்போக்கான கருத்து எனவும், இதற்கு மாறானதைப் பிற்போக்கானது. எனவும் கூறலாம். எனவே, சமுதாய நிலைமைக்கும், வரலாற்றுப் போக்குக்கும், மனித சிந்தனையின் வளர்ச்சிக்கும் ஏற்பவே, முற்போக்குக் கருத்து அல்லது பிற்போக்குக் கருத்து என்பதற்குப் பொருள் கொள்ள வேண்டும். எனவே, இதற்கு ஒப்பு நோக்கான பொருளே உண்டு.

புதிய சிந்தனை தேவை:

நமது பரிசீலனைக்குரிய கடந்த ஐம்பதாண்டுக் காலத்தில், ஏழு ஆண்டுகள் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முந்திய ஆண்டுகள், மீதியுள்ள நாற்பத்து மூன்று ஆண்டுகளும் சுதந்தரத்துக்குப் பிந்திய ஆண்டுகளாகும். இந்த ஐம்பதாண்டுக் காலத்தில் நமது நாட்டில் ஏற்பட்டுள்ள ஒரே அடிப்படையான, மாற்றம், அன்னியரிடம் அடிமைப்பட்டிருந்த நாடு சுதந்திர நாடாக மாறிய மாற்றமேயாகும். இந்த மாற்றத்தின் விளைவாக நமது சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், முன்னேற்றங்கள் முதலியவற்றின் பரிமாணமும் வீச்சும் எவ்வளவுதான் இருந்த போதிலும், சுதந்தரத்துக்கு முன்நிலவி வந்த பல பிரச்சினைகள் வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, சுரண்டல், பெண்ணடிமைத்தனம், சாதி வேறுபாடுகள், மதவெறி, இனவெறி, எழுத்தறிவின்மை முதலான பல பிரச்சினைகள் - இன்னமும் இருந்துதான் வருகின்றன.

என்றாலும் இலக்கியம் சம்பந்தமாக நாம் முற்போக்கு அல்லது பிற்போக்கு என்று கணித்து வந்ததில், ஒரு மறுபரிசீலனையைக் கோரக்கூடிய அளவுக்கும், நமது திசைவழிநோக்கைச் சீர்செய்து கொள்ள வேண்டிய அளவுக்கும் அண்மைக் காலத்தில் சில நிகழ்ச்சிகள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, ஐந்தாண்டுகளுக்கு முன்னால், சோவியத் நாட்டில் தோன்றிய புதிய சிந்தனையும் கிளாஸ்னாஸ்தும் அதனால் விளைந்துள்ள விளைவுகளும் கடந்த ஓராண்டுக் காலத்தில் சோஷலிச நாடுகள் எனக் கூறப்பட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும், நாம் இந்த அவசியத்தை உணருமாறு செய்துள்ளன எனலாம். ஏனெனில், இவற்றின் விளைவாக, நாம் உண்மை என்று நம்பியிருந்தவை பலவும் பொய்யாகியுள்ளன; பொய் எனக் கூறிவந்தவை பலவும் மெய்யாகியுள்ளன; திரையிட்டு மூடப்பட்ட உண்மைகள் திகம்பரமாகியுள்ளன; திரித்துக் கூறப்பட்ட விஷயங்கள் பலவும் தெளிவாகியுள்ளன.

உண்மையில் இன்று சோவியத் நாட்டில் நிகழ்ந்து வருவது மற்றுமொரு புரட்சியேயாகும். தண்ணீர் எவ்வாறு மெல்ல மெல்லச் சூடேறிக் கொதிநிலைக்கு வந்ததும் திடீரென்று கொதித்துப் பொங்குகிறதோ, அதுபோலத்தான் புரட்சி தோன்றுகிறது என்பது நாம் கற்ற பால பாடம். எனவே, கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, அங்கு உள்ளுக்குள் புகைத்து புகைத்து சூடேறி வந்த மக்களின் உணர்வு, வெடித்துப் பொங்கியுள்ளதன் பிரதிபலிப்பே இந்தப் புரட்சியாகும். என்றாலும், அமுதத்தை வேண்டிப் பாற்கடலைக் கடைந்த போது, அதில் விஷமும் தோன்றிய கதையைப் போலவும், புதுவெள்ளம் பொங்கிப் பிரவகித்து வரும்போது அதில் குப்பைகூளங்களும் கழிவு நீரும் கலந்து வருவது போலவும், இந்தப் பிரதிபலிப்பில் எத்தனையோ விரும்பத்தகாத, எதிர்மறையான தன்மைகளும் தென்படவே செய்கின்றன. என்றாலும், இவையெல்லாம் அடங்கித் தெளிந்து, இந்தப் புதுவெள்ளமே ஒரு ஜீவ நதியாகப் பெருக்கெடுத்துப் பாயும் என்பதற்கான நம்பிக்கையும் வாய்ப்பும் புலனாகவே செய்கின்றன.

இலக்கியத் துறையை எடுத்துக் கொண்டாலும், இன்று சோவியத் நாட்டில் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு காலத்தில் பழிக்கப்பட்ட எழுத்தாளர்களான அலெக்சாந்தர் சல்செனித்சின், போரிஸ் பாண்டர்நாக், அன்னா அக்மதோவா போன்ற எழுத்தாளர்கள் கவிஞர்களின் நூல்கள் இன்று அங்கு வெளிவரத் தொடங்கியுள்ளன. தடைசெய்யப்பட்டிருந்த நூல்களும் மறைமுகமான தடைக்கு உள்ளாகிக் கிடப்பிலே போடப்பட்டிருந்த நூல்களும் திரைப்படங்களும் இன்று அரங்கேறுகின்றன. அதேபோல், முற்காலத்தில் பிரபலமாகவிருந்த எழுத்தாளர்கள் சிலரின் நேர்மையும் கூட, கேள்விக்கணைகளுக்கு உள்ளாகியுள்ளது. உதாரணமாக, இப்போது நிலவிவரும் கிளாஸ்னாஸ்தின் விளைவாக, நோபெல் பரிசு பெற்ற எழுத்தாளரும், லியோ டால்ஸ்டாய்க்குப் பின்னர் அந்நாடு கண்ட மிகப்பெரும் நாவலாசிரியர் எனப் போற்றப்பட்டவருமான, அமரர் மைக்கேல் ஷோலகோவ் கூட இந்தக் கேள்விக்கணையிலிருந்து தப்பவில்லை. மைக்கேல் ஷோலகோவ் 1933இல் இ. லெனிஸ்காயா என்ற மாதுக்கு எழுதிய கடிதத்தில், “மக்கள் நூற்றுக் கணக்கில் பட்டினியாய் மாண்டு மடிவதையும், கிடங்குகளில் இறந்த பிணங்கள் குவிக்கப்படுவதையும், பல்லாயிரக்கணக்கான மக்கள் பசிக் கொடுமையால் உடல் வீங்கிப் போய், மிருகங்களின் நிலைக்குத் தாழ்ந்து தரையில் ஊர்ந்து திரிவதையும் உள நடுக்கத்தோடு பார்த்து” வருவதாக எழுதியிருக்கிறார் (Moscow News, எண் 14, 1988). ஆனால், அவர் இந்த உண்மையைத் தாம் எழுதிய ‘கன்னி நிலம்’ (Virgin Soil Upturned) என்ற நாவலில் ஏன் பிரதிபலிக்கத் தவறிவிட்டார் என்று வாசகர்கள் கேள்வி கேட்கின்றனர்; இதற்கு அவர் அந்த நாவலை இதற்கு முன்பே எழுதிவிட்டார் என்று சமாதானம் கூறப்படுகிறது. இருப்பினும் அவர் இந்த நாவலை எழுதிய காலத்திலும் இத்தகைய அவலங்கள் நேரவில்லையா என்று வாசகர்கள் எதிர்க் கேள்வி எழுப்புகின்றனர் . இதனால் அங்கு “இலக்கியத்தில் சோஷலிச எதார்த்தவாதம் எனக் கூறப்பட்டு வந்த கருத்து சரியா, இல்லையா? அது இனியும் தேவையா இல்லையா?” என்ற கேள்விகள் எழுந்து அவை விவாதங்களாக வெடித்துள்ளன. ‘சோஷலிச எதார்த்தவாதம்’ என ஒன்றிருந்தால், ‘முதலாளித்துவ எதார்த்தவாதம்’ என ஒன்றும் இருக்கிறதா?” என்றெல்லாம் வாசகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். சோவியத் நாட்டில் முளைத்தெழுந்த சோஷலிச எதார்த்தவாதத்தின் வரலாறு என்ன என்பதைப் பின்னர்ப் பார்ப்போம்.

என்றாலும், “தமிழக முற்போக்குக் கலை இலக்கியம் - அரை நூற்றாண்டு” என்ற இந்தக் கருத்தரங்குக்கும், சோவியத் நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்களுக்கும் என்ன சம்பந்தம்?” என்று இங்குள்ள நண்பர்கள் என்னிடம் கேட்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். ஏனெனில், முற்போக்கு இலக்கியம் மற்றும் முற்போக்கு இலக்கிய இயக்கம் என்று நாம் தோற்றுவித்ததற்கும், சோவியத் நாட்டில் நிலவிவந்த இலக்கியப் பார்வைக்கும் சம்பந்தமுண்டு, அதன் தாக்கத்துக்கு நம்மிற் பலரும் ஆட்பட்டு இருந்தோம், இருக்கிறோம் என்பதை நண்பர்கள் மறுக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன். சோவியத் நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் தவிர்க்கொணாத விதத்தில், நமக்கும் கலை இலக்கியத் துறையில் ஒரு புதிய சிந்தனை தேவை என வலியுறுத்துகின்றன என்றும் கருதுகிறேன். இந்தத் தேவையை உணர்ந்து கொள்வதற்கு நாமும் நமது கடந்த காலத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்; புரிந்து கொள்ள வேண்டும்.

இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உதயம் :

எனவே, முற்போக்கு இலக்கியம், அதற்கான இயக்கம் என்பது இந்திய நாட்டில் எப்போது தோன்றியது, எவ்வாறு தோன்றியது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். 1930 ஆம் ஆண்டுகளில் பல முக்கிய நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன பாசிஸ்டு இத்தாலி அபிசீனியாமீது படையெடுத்தது; ஐரோப்பாவில் நாஜிசம் வளர்ந்து கொண்டே இருந்தது; ஸ்பெயின் நாட்டில் ஜெனரல் பிராங்கோவின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்துப் பெரும் உள் நாட்டுப் போர் நடந்தது; இந்த உள்நாட்டுப் போரில் பிராங்கோவுக்கு எதிராக குடியரசுச் சேனையில் பிற நாட்டுக் கம்யூனிஸ்டுகளும் தொண்டர் படையினராகச் சேர்ந்தனர்; மேலைநாட்டு எழுத்தாளர்கள் சிலரும் கூட அங்குப் போர் வீரர்களாகவும், யுத்த நிருபர்களாகவும் பணியாற்றச் சென்றனர்; அவர்களிற் சிலர் அங்குக் கொல்லவும் பட்டனர்; சிலர் கைதாயினர். இந்தக் காலக் கட்டத்தில்தான் சோவியத் நாட்டில் 1934 ஆம் ஆண்டில் சோவியத் எழுத்தாளர்களின் அகில யூனியன் காங்கிரஸ் முதன்முதலாக நடைபெற்றது. இதில்தான் மாக்சிம் கார்க்கி “சோஷலிச எதார்த்தவாதம் சோவியத் எழுத்தாளர்களுக்கு மட்டுமல்லாமல், மக்களுக்காகப் பாடுபடும் எழுத்தாளர்கள் அனைவருக்கும் உரியதாகும்” எனக் கூறி அதற்கு விளக்கமும் அளித்துத் தமது விரிவான உரையை ஆற்றினார். இதன்பின் 1935இல் பாரீஸ் நகரில் ‘கலாசாரத்தைப் பாதுகாப்பதற்கான உலக எழுத்தாளர் மாநாடு’ ஒன்று நடைபெற்றது. இதற்கு மூலகாரணமாக இருந்தவர்கள் மாக்சிம் கார்க்கி, ரோமன் ரோலாந்து, ஆந்திரே மால்ரா, தாமஸ்மான் முதலிய உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களாவர். இந்த மாநாட்டில் பல்வேறு கருத்துக்கொண்டவர்களும் பங்கு கொண்ட போதிலும், அவர்கள் பாசிஸ்டு ஆதிக்கத்துக்கு எதிராகத் தமது சிந்தனைச் சுதந்தரத்தைப் பாதுகாக்க வேண்டும், சுதந்தரத்துக்கும் நல்வாழ்வுக்கும் ஆதரவாக மக்களை ஒன்று திரட்டி அவர்களது ஆதரவைப் பெற்றுப் போராட வேண்டும் என்றும் ஒரு மனதாகத் தீர்மானித்தனர். இந்த இரு மாநாடுகளையும் கண்டு உத்வேகம் பெற்ற இந்திய எழுத்தாளர்கள் சிலர் இந்தியாவிலும் ஓர் எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவிக்க முனைந்தனர். அவ்வாறே இதனைக் கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினராகவும், கவிஞராகவும், எழுத்தாளராகவும் இருந்த சஜ்ஜாத் ஜாகிர், ‘தீண்டாதான்’ (Untouchable), கூலி (Coolie), ‘இரு இலையும் ஒரு மொட்டும்’ (Two leaves and a Bud) போன்ற நாவல்களை எழுதியுள்ள முல்க்ராஜ் ஆனந்த், ‘சேவாசதன்’, ‘கோதான்’ முதலிய நாவல்களையும் ஏராளமான சிறுகதைகளையும் எழுதியுள்ள பிரபல ஹிந்தி எழுத்தாளர் பிரேம்சந்த் ஆகியோர் முன்னின்று தோற்றுவித்தனர். இதற்கு “இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம்” என்று பெயரும் சூட்டினர். இதற்கு பிரேம்சந்தே தலைவராக இருந்தார்; இந்தச் சங்கம் 1936 இல் தோற்றுவிக்கப்பட்டது; இதன் முதல் மாநாடும். அதே ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது .

நாம் பயன்படுத்துகின்ற ‘முற்போக்கு இலக்கியம்’, ‘முற்போக்கு எழுத்தாளர்’ என்ற சொல்லாட்சிகளெல்லாம், இந்தச் சங்கம் தோற்றுவிக்கப்பட்ட பின் உருவானவையே யாகும்; என்றாலும் இவற்றை நாம் எதார்த்தமான நடைமுறைக்குக் கொண்டு வந்தது பல ஆண்டுகளுக்குப் பின்னரேயாகும்.

1936இல் வடநாட்டில் இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோன்றியதைத் தொடர்ந்து, 1938இல் கல்கத்தாவில் ஒரு முற்போக்கு எழுத்தாளர் மாநாடு நடைபெற்றது. இதற்கு ரவீந்திரநாத் தாகூரே தலைமை வசித்தார். இதன் பின் சில ஆண்டுகளில் பம்பாயிலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தொடங்கியது. இதில் கே.ஏ. அப்பாஸ் போன்ற பிரபல எழுத்தாளர்கள் முன்னின்று பணியாற்றினர். இதனைத் தொடர்ந்து 1943 வாக்கில் IPTA என்ற இந்திய மக்கள் நாடக மன்றமும் பம்பாயில் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வாறு டில்லி, கல்கத்தா, பம்பாய் ஆகிய தலைநகர்களில் முற்போக்கு எழுத்தாளர் சங்கங்கள் தோன்றிப் பத்தாண்டுகளுக்கு மேல் கடந்த பின்னரும் கூட, தமிழ் நாட்டில், அதன் தலைநகரான சென்னையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கமோ, அதற்கான இயக்கமோ தோன்றவில்லை. இவ்வாறு நேர்ந்தது ஏன் என்பது ஆராயப்பட வேண்டியதாகும்.

முப்பதாம் ஆண்டுகள்:

இவ்வளவுக்கும் முப்பதாம் ஆண்டுகள் இந்தியாவின் ஏனைய பகுதிகளைப் போலவே, தமிழ்நாட்டிலும் அரசியல் எழுச்சியும் இலக்கிய மறுமலர்ச்சியும் நிலவி வந்த ஆண்டுகளாகும். இந்த நூற்றாண்டுத் தொடக்கத்திலேயே சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய லட்சியங்களைப் பாடுபொருளாக்கி, நமக்கெல்லாம் முற்போக்கு இலக்கியத்துக்கு அடியெடுத்துக் கொடுத்துச் சென்றிருந்தான் பாரதி. என்றாலும் பாரதியின் பாடல்களும் அவரது பார்வையும் தமிழ்நாட்டில் புத்துயிரும் புதிய சக்தியும், பெற்று, நம்மை மீண்டும் வீறுகொள்ளச் செய்தது. இந்த முப்பதாம் ஆண்டுகளில்தான். இந்த முப்பதாம் ஆண்டுகள் பலவிதத்திலும் முக்கியமானவை. மேலும் தேச விடுதலைப் போராட்டத்தை மகாத்மா காந்தி வெகுஜன இயக்கமாக மாற்றியதன் பயனாகக் கள்ளுக்கடை மறியல், அன்னியத்துணி பகிஷ்காரம், அகிம்சாபூர்வமான போராட்டம் ஆகியவையெல்லாம் பரவலாக நடைபெற்று வந்த காலம் அது; பகவத் சிங்கும் அவர்களது தோழர்களும் தூக்கிலிடப்பட்டதைக் கண்டு, இந்திய இளைஞர்கள் உள்ளம் கொதித்திருந்த காலமும் அதுவே, இத்துடன் இதற்கு முன்பே 1927இல் சோவியத் நாட்டுக்குச் சென்று வந்த பண்டித ஜவஹர்லால் நேரு 1929இல் காங்கிரஸ் இயக்கத்திலேயே முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைய தலைவராகக் காங்கிரஸ் மகாசபையின் தலைமையை ஏற்று, அதே ஆண்டில் காந்தியடிகள் முன்மொழிய, ‘பூரண சுதந்தரமே இந்தியச் சுதந்தரப் போராட்டத்தின் லட்சியம்’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றி முடித்தார்; இதன்பின் 1930 ஜனவரி 26ஆம் தேதியை இந்தியச் ‘சுதந்தரப் பிரதிக்ஞை தின’மாக அறிவித்து, ஆண்டுதோறும் இந்தத் தினத்தில் மக்கள் இந்தப் பிரதிக்ஞையை ஏற்குமாறு செய்தார். இத்தனைக்கும் மேல், அவர் தமது சோவியத் விஜயத்துக்குப் பின்னால், இந்தியாவின் லட்சியம் அரசியல் விடுதலை மட்டுமல்ல, பொருளாதார விடுதலையையும் பெறுவதேயாகும் எனக் கூறி, சோஷலிச லட்சியத்தையும் ஆதரித்தார். இதனால், தேசபக்தர்கள் மத்தியில் தேசபக்தியுணர்வு மட்டுமல்லாமல், சோஷலிச வேட்கையும் மேலோங்கியது. இதன் விளைவாக, காங்கிரசுக்குள்ளேயே காங்கிரஸ் சோஷலிஸ்டுகள் என்ற பிரிவொன்றும் தோன்றியது. இவர்கள் இந்திய விடுதலையின் இறுதி லட்சியம் சோஷலிசமும் தான் என்று வலியுறுத்தி வந்தனர்.

இத்தகைய சூழ்நிலையில் முப்பதாம் ஆண்டுகளின் தொடக்கத்திலேயே தமிழ் நாட்டில் பல பத்திரிகைகள்தோன்றின. “சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே?” என்று பாடிய பாரதியின் சுதந்திரப் பள்ளுப் பாட்டினால் உத்வேகம் பெற்று, 1931இல் ‘சுதந்திரச் சங்கு’ப் பத்திரிகை தோன்றியது. இதன் காரணமாக, இதன் பதிப்பாசிரியரான கணேசனும், ஆசிரியராகவிருந்த சுப்பிரமணியனும், தமது இறுதிக் காலம் வரையிலும் சங்கு கணேசன், சங்கு சுப்பிரமணியன் என்றே பெயர் பெற்றிருந்தனர். இதே காலத்தில் தான் பின்னர் ‘தினமணி’யின் ஆசிரியராகவிருந்த டி.எஸ். சொக்கலிங்கம் ‘காந்தி’ பத்திரிகையைத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து பாரதியின் ‘தாயின் மணிக்கொடி பாரீர்!’ என்ற பாடலால் உத்வேகம் பெற்று, சிறந்த வசனநடைகர்த்தாவான வ.ரா.வும், கே. சீனிவாசனும் ‘மணிக்கொடி’ என்ற வாரப் பத்திரிகையைத் தொடங்கினர். இதே காலத்தில் ராஜாஜியின் சீடரான கல்கி (ரா. கிருஷ்ணமூர்த்தி) ‘ஆனந்தவிகடன்’ வாரப் பத்திரிகையில் ஆசிரியராக இருந்து வந்தார். அநேகமாக, அவர்கள் அனைவருமே தேச விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைவாசம் அனுபவித்தவர்களாவர். இந்தக் காலம் தேச உணர்வும் எழுச்சியும் மிக்க காலமாக மட்டுமல்லாமல், சோஷலிசத்தின்பால் ஈடுபாடும் தோன்றிவந்த காலமாகும். சொல்லப்போனால், பிற்காலத்தில் கம்யூனிஸ்டுகளைத் தமது முதல் நம்பர் எதிரியாகக் கருதிய ராஜாஜி, அந்தக் காலத்தில் தம்மோடு சிறையில் இருந்த சகதேசபக்தர்களுக்கு சோஷலிசத்தைப் பற்றி உரைகள் ஆற்றினார். இந்த உரைகள் ‘Chats behind bars’ என்ற பெயரில் ஆங்கிலத்திலும், ‘அபேதபாதம் என்றால் என்ன? என்ற தலைப்பில் தமிழிலும் நூல் வடிவில் வெளிவந்தன. மேலும் பிற்காலத்தில் கம்யூனிஸ்டுகளைச் ‘செம்பிடாரிகள்’ என்று பழித்துரைத்த டி.எஸ். சொக்கலிங்கம் ஆசிரியராகவிருந்த ‘தினமணி’ பத்திரிகையின் 1937 அல்லது 1938 ஆம் ஆண்டு வருட மலரில், புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பரும், நெல்லை இந்துக் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வரலாறு மற்றும் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றியவரும், அதன்பின் சென்னை அரசாங்கத்துக்குப் புள்ளிவிவர உதவியாளராகப் பணியாற்றியவரும் கல்லூரியில் எனக்கு வரலாற்றுப் பேராசிரியராகவிருந்தவருமான கே.எஸ். சோணாசலம் சோஷலிசம் பற்றி எழுதிய விரிவான கட்டுரையும் வெளிவந்த காலம் அது. இவையெல்லாம் விஞ்ஞான சோஷலிசத்தைத்தான் விளக்கிக் கூறினவா என்பது விதண்டாவாதமான கேள்வியாகும். அக்காலத்தில் இவற்றை எழுதியவர்கள் தாமும் மக்களும் சோஷலிசத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும், அதனைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கையின் காரணமாகவே இவற்றை எழுதினர் என்பதை நாம் சந்தேகிக்க வேண்டியதில்லை.

அரசியலும் இலக்கியமும்:

அரசியல் எழுச்சியையொட்டி இந்தக் காலத்தில் தோன்றிய பத்திரிகைகள்யாவும், அரசியலோடு இலக்கிய மறுமலர்ச்சியிலும் கவனம் செலுத்தின. ‘சுதந்திரச் சங்கில்’ நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையின் தேசிய இயக்கப், பாடல்களோடு, ஏனையோர் எழுதிய பாடல்களும் வெளிவந்தன. தி.ஜ. ரங்கநாதன் என்ற தி.ஜ.ர. அதில் பணியாற்றிய காலத்தில் அதில் கதைகளும் வரத் தொடங்கின, ‘காந்தி’ பத்திரிகையும் அவ்வாறே. புதுமைப் பித்தனே முதன்முதலில் ‘காந்தி பத்திரிகையில்தான் எழுதினார்;’ ‘மகாகவி பாரதியார்’ என்ற தலைப்பில் பின்னர் வெளிவந்த வ.ரா.வின் நூலும் ‘காந்தி’ பத்திரிகையில்தான் தொடர் கட்டுரைகளாக வெளி வந்தன. ‘மணிக்கொடி’ ஆரம்ப காலத்திலிருந்தே அரசியல், இலக்கியம் இரண்டிலுமே அக்கரை செலுத்தி வந்தது; பின்னர் ‘காந்தி’ ‘மணிக்கொடி’,யுடன் இணைந்து விட்டது. என்றாலும் ‘மணிக்கொடி’யைத் தோற்றுவித்த கே. சீனிவாசன் - இவர் இவரது தோற்றம் மற்றும் மீசை காரணமாக, ‘ஸ்டாலின் சீனிவாசன்’ என்றே குறிப்பிடப்பட்டு வந்தார் என்பது ஒரு சுவையான விஷயம் ‘பாம்பே! ஸ்டாண்டர்டு’ பத்திரிகையில் பணியாற்ற, பம்பாய் சென்றுவிட்டார்; சொக்கலிங்கம் ‘தினமணி’யின் ஆசிரியரானார்; வ.ரா. கொழும்புவிலிருந்து வெளிவரும் ‘வீரகேசரி’ப் பத்திரிகைக்கு உதவியாசிரியராகப் போய் விட்டார். இதற்கெல்லாம் இவர்களுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியே பெரிதும் காரணம் எனலாம்.

மணிக்கொடியும் உருவ வாதமும் :

இதன்பின் ‘மணிக்கொடி’ பி.எஸ். ராமையாவின் நிருவாகத்துக்கு வந்தது, அப்போதுதான் ‘மணிக்கொடி, எழுத்தாளர்கள்’ எனக் கூறப்படும் பலரும் அதில் அதிகமான கதைகளை எழுதினர். ‘மணிக்கொடி’யை நிர்வகித்து வந்த கதாசிரியரான பி.எஸ். ராமையா தேசிய இயக்கத்தில் சேர்ந்து சிறை சென்றவர்தான்; ‘மணிக்கொடி’ எழுத்தாளர்கள் பலரும் அரசியல் உத்வேகத்தின் விளைவாக எழுந்த மறுமலர்ச்சிக் கால எழுத்தாளர்களாக மாறியவர்கள்தாம். என்றாலும், அவர்கள் அரசியலுக்கும் இலக்கியத்துக்கும் சம்பந்தம் உண்டு என்ற பிரக்ஞையே அற்றவர்களாய், ‘மணிக்கொடி’யை ‘அவ்வளவும் கதைகள்’ என முற்றிலும் ஒரு சிறுகதைப் பத்திரிகையாகவே மாற்றி விட்டார்.

பி.எஸ். ராமையா தேசிய இயக்கத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவராயினும் அவருக்கு இலக்கியத்துக்கும் அரசியலுக்கும் சம்பந்தமுண்டு என்ற பிரக்ஞையே இருக்கவில்லை என்பதை அவர் எழுதியுள்ள ‘மணிக்கொடி காலம்’ என்ற நூலைப் படித்தாலே புரிந்துகொள்ள முடியும். ‘மணிக்கொடி’யில் வெளிவந்த கதைகளிலும் தேசிய உணர்வினால் எழுந்த நாட்டு மக்களின் வாழ்க்கையையும் போராட்டத்தையும் கதைப்பொருளாக்காமல், பெரும்பாலும் குடும்ப உறவுகள் சம்பந்தப்பட்ட கதைகளையே எழுதினர். மேலும் அவர்கள் கதையின் கருப்பொருளைக் காட்டிலும் அதன் வடிவ அமைப்பிலேயே பெரிதும் கவனம் செலுத்தினார். இதனால் தமிழ்ச் சிறுகதை உலகில் அருமையான வடிவ அமைதி கொண்ட கதைகளை அவர்கள் வழங்கிய போதிலும், சாராம்சத்தில் அவர்களிற் மிகப்பெரும்பாலோர் வெறும் ‘உருவ வாதிக’ளாகவே மிஞ்சி நின்றனர்.

‘மணிக்கொடி’ எழுத்தாளர்கள் உருவவாதிகளாகவே மிஞ்சி நின்றனர் என்பது, ‘பாரதி மகாகவியா இல்லையா?’ என்ற ஒரு விவாதத்தை 1935ஆம் ஆண்டில் ‘நெல்லை நேசன்’ என்ற பெயரில் பி.ஸ்ரீ. ஆசார்யாவும், ‘கல்கி’ கிருஷ்ண மூர்த்தியும் தொடங்கி, பாரதி தேசியப் பாடல்களை, அதாவது “நிரந்தரமற்ற மதிப்புக்களைப் பாடிய காரணத்தால் அவன் தேசிய கவியேயன்றி மகாகவியல்ல” என்று வாதிட்டபோது, இதனை எதிர்த்து பாரதி மகாகவிதான் என்று நிலைநாட்டப் புகுந்த ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களான (‘சிட்டி’) பெ.கோ. சுந்தரராஜனும், கு.ப. ராஜகோபாலனும், “தேசிய கீதங்களைப் பாடிய பாவத்துக்காக, பாரதி சந்தேகாஸ்பதமான திதியில் இருந்து வருகிறார்” என்றும், “தேசிய கீதங்களைப் பாடிய பாவம்தான் பாரதியை தேசியக் கவியாக்கி விட்டது” என்று தாமும் எழுதி, பி.ஸ்ரீ. ஆசார்யாவும் கல்கியும் விரித்த வலையிலேயே தாமும் விழுந்துவிட்டனர். அதாவது ஒரு மகாகவி தேசிய கீதங்களைப் பாடுவது என்பது பாவம் தான், தேசியக் கவி என்றால் அது ஒரு மட்டமான தகுதிதான் என்பதை ஏற்றுக்கொண்டு, பாரதி மகாகவிதான் என்பதை நிரூபிக்க பாரதியின் கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, முதலியவற்றை மேலை நாட்டுப் பெருங் கவிஞர்களின் படைப்புகளோடு ஒப்பிட்டுக்காட்ட முற்பட்டனர். எனினும் தேசிய கீதங்கள் அல்லாத ‘நிரந்தரமான உண்மைகளை’ப் பாடிய கண்ணன் பாட்டிலும் கூட, அதாவது கல்கியும் பி.ஸ்ரீ.யும் சிறந்த கவிதைப் படைப்புக்கள் என ஒப்புக் கொள்ளக் கூடிய அந்தப் பாட்டிலுங் கூட,

ஏழைகளைத் தோழமை கொள்வான் - செல்வம்
ஏறியவர் தமைக்கண்டு சீறி விழுவான் —
மேலவர் கீழவர் என்றே - வெறும்
வேடத்திற் பிறப்பினில் விதிப்பனவாம்
போலிச் சுவடியை யெல்லாம் - இன்று
பொசுக்கி விட்டால் எவர்க்கும் நன்மை உண்டென்பான்

(கண்ணன் - என் தந்தை)

என்று பாரதி அரசியலையும் சேர்த்தே பாடியிருந்தான் என்பது அவர்கள் கண்ணுக்குப் புலப்படவும் இல்லை; அவர்கள் இதனைச் சுட்டிக் காட்டவும் இல்லை. மொத்தத்தில் இந்த விவாதமே பாரதியின் கருத்து நிலை பற்றிய விவாதமாக இல்லாமல், பாரதியின் உவமை, கற்பனை முதலியவை பற்றிய - அதாவது உருவ வாதம் பற்றிய - விவாதமாகவே மாறி விட்டது.

என்றாலும், இதே காலத்தில், ‘ஆனந்தவிகட’னில் பணியாற்றி வந்த கல்கி, தமது கதைகளைப் பொறுத்த வரையில் ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களைப் போல் உருவவாதியாக மாறிவிடவில்லை. இதனால் கதைகளின் வடிவ அமைப்பிலும், அவற்றை உருவாக்கிக் காட்டும் முறையிலும், ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களைப் போல் கல்கி கைதேர்ந்த கலைஞராக இல்லாவிட்டாலும், அவர் தமது தேசிய உணர்வையும் சமூக உணர்வையும் கைவிட்டு விடவில்லை. இதற்கு அவரது ‘தியாகபூமி’, ‘மகுடபதி’ போன்ற நாவல்களும், ‘கவர்னர் விஜயம்’ போன்ற கதைகளுமே உதாரணம் எனலாம். இதனால் உருவவாதிகளான, ‘மணிக்கொடி’ எழுத்தாளர்கள் பலரையும்விட, உள்ளடக்க விஷயத்தில் கல்கி நமது கவனத்துக்கு உரியவராகிறார் கல்கி மட்டுமல்லாது அவரது குருநாதராகவும் அரசியல் தலைவராகவும் விளங்கிய ராஜாஜியும் காந்தியக் கருத்துகளை வலியுறுத்தும் ‘திக்கற்ற பார்வதி’ போன்ற பல கதைகளையும் எழுதினார்; அவற்றில் சில ‘மணிக்கொடி’யிலும் கூட வெளிவந்தன. இதனால் அவரும் அக்காலத்தில் ஒரு சிறுகதை எழுத்தாளராகவும் மதிக்கப்பட்டார்.

புதுமைப்பித்தனின் தனிச்சிறப்பு :

இந்த முப்பதாம் ஆண்டுகளில் கே. சீனிவாசன் நடத்திவந்த ‘மணிக்கொடி’யிலும், பின்னர் பி.எஸ். ராமையாவின் நிருவாகத்திலிருந்த ‘மணிக்கொடி’யிலும், புதுமைப்பித்தன் பேய்க்கதைகள் உட்படப் பல்வேறு விதமான கதைகளை எழுதிவந்த போதிலும், அவற்றுக்கிடையே ‘எதார்த்தவாதம்’, ‘விமரிசன எதார்த்தவாதம்’ என்று கூறும் இலக்கணத்துக்குப் பொருந்திய கதைகளும் பல இருந்தன. அவரது இந்த முப்பதாம் ஆண்டுக் கதைகளில் சோஷலிசக் கருத்தின் தாக்கமும் கூட ஓரளவுக்கு இருந்தது எனலாம். இதனால், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் முரண்பாடுகளையும், அவல வாழ்வையும் பிரதிபலிக்கும் ‘இது மெஷின்யுகம்’, ‘மனிதயந்திரம்’, ‘நாசகாரக் கும்பல்’ போன்ற கதைகளோடு, அஸ்ஸாம் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு முல்க் ராஜ் ஆனந்த் எழுதிய ‘இரு இலையும் ஒரு மொட்டும்’ என்ற ஆங்கில நாவலின் தகுதிக்குச் சற்றேனும் குறையாத விதத்தில், இலங்கைத் தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டு, ‘துன்பக்கேணி’ என்ற நெடுங்கதையையும் அவர் எழுதினார். ‘துன்பக்கேணி’ கதையில் வெயிலின் கொடுமையைப் பற்றிக் கூறும்போது, அந்த “வெள்ளிக்கிழமை மத்தியான வெயில் ஹிட்லரை நல்லவனாக்கியது” என்றும் எழுதினார். மேலும் ‘விநாயக சதுர்த்தி’ என்ற கதையில், “மாவிலைகளைத் தோரணமாகக் கட்டிக் கொண்டிருந்தேன். ஆமாம். பட்டணத்தில் மாவிலையைக் கூடக் காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டும். என்ன மாவிலைக்குமா விலை என்று பிரமித்துப் போகாதீர்கள். மாவிலைக்கு விலையில்லை என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். ஆனால், மரத்தில் ஏறிப்பறித்து வீடுதேடிக் கொணர்ந்து கொடுப்பதற்குக் கூலி கொடுக்க வேண்டுமா, இல்லையா? நாங்கள் படித்த பொருளாதார சாஸ்திரப்படி இந்த ‘உழைப்பின் மதிப்பை’ அந்த இலையின் மீது ஏற்றி வைத்துப் பார்க்க வேண்டும். “அதுதான் விலை” என்று எழுதியுள்ளார். இதேபோல், ‘பக்த குசேலா’ என்ற தலைப்பில் அவர் எழுதிய ‘சினாரியோ’க் கதையின் முன்னுரையில், “வறுமை முதலாளித்துவத்தின் விலக்க முடியாத நியதி. வியாதியும் கூட... மனித சமுதாயத்தின் அபார, அற்புதக் கற்பனையான தெய்வம் என்ற பிரமை தனக்கு ஆக்கவும் வளர்க்கவும் அழிக்கவும் சக்தி இருக்கிறது என்று வேண்டுமானால் பெருமையடித்துக் கொள்ளலாம். “ஆனால் இந்தக் குசேல வியாதியைப் போக்கும் சஞ்சீவி மனிதன் வசம்தான் உண்டு” என்றும் அவர் எழுதியிருக்கிறார். இவ்வாறு தமிழில் முதன் முதலில் எழுதிய தமிழ்க்கதாசிரியர் புதுமைப்பித்தனே யாவார். மேலும் அவரது ‘கவந்தனும் காமனும்’ என்ற கதையில் தெரு மூலையில் நிற்கும் ஒரு விலைமாதினைச் சுட்டிக் காட்டும்போது “அதோ மூலையில் சுவரின் அருகில் பார்த்தீர்களா?... நீங்கள் போட்டிருக்கிறீர்களே பாப்ளின் ஷர்ட்டு; உங்கள் ஷெல்பிரேம் கண்ணாடி, எல்லாம் அவர்கள் வயிற்றில் இருக்க வேண்டியதைத் திருடியதுதான். ரொம்ப ஜம்பமாக நாசூக்காகக் கண்ணை மூட வேண்டாம், எல்லாம் அந்த வயிற்றுக்காகத்தான்” என்றும் அவர் எழுதியுள்ளார். இவை யாவும் நான் முன்னர் கூறிய கருத்தை உறுதிப்படுத்துகிறது எனலாம். இது விஷயத்தில் புதுமைப்பித்தன் ஏனைய மணிக்கொடி எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டுத் தனித்து நின்றார் எனலாம்.

மேலும் இந்தக் காலத்தில் புதுமைப்பித்தன் மொழி பெயர்த்த பல வெளிநாட்டுக் கதைகளில், மாக்சிம் கார்க்கி, மைக்கேல் ஜோஷெங்கோ, வாலரி, புரூஸோவ், மைக்கேல் ஷோலகோவ் நிக்கொலாய் திக்கனோவ், இலியா கிரென்பர்க் முதலிய சோவியத் எழுத்தாளர்களின் கதைகளும் இடம் பெற்றிருந்தன.

புதுமைப்பித்தனும் நானும்

என்றாலும், நான் இங்கு ஓர் இரகசியத்தைக் கூற வேண்டும். கல்லூரியில் படித்து வந்த காலத்திலேயே, அதாவது 1941 ஆம் ஆண்டிலேயே எனது கதைகள் முதலியன பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கிவிட்டன. இதன்பின் 1942இல் நடந்த போராட்டத்தின் போது, நெல்லையில் மாணவர்களை ஒன்று திரட்டிப் போராடியதன் விளைவாக, அதே ஆண்டில் சிறைப்பட்டேன்; இதனால் என் கல்லூரிப் படிப்பும் தடைப்பட்டது. இதன்பின் நான் முழு நேர எழுத்தாளனாகவே மாறி, எழுத்தையே தொழிலாகக் கொள்வது என்று தீர்மானித்து, 1944இல் சென்னைக்குச் சென்று, ‘தினமணி’ பிரசுராலயத்தில் உதவியாசிரியனாகச் சேர்ந்தேன். இந்தக் காலத்தில் தான் எனக்குப் புதுமைப்பித்தனின் நெருங்கிய நட்பும் அன்பும் கிட்டின. இவ்வாறு அவரோடு நான் நெருங்கிப் பழகி வந்த காலத்தில், நான் கம்யூனிசச் சித்தாந்த அனுதாபியாகவும், சோவியத் நாட்டை நேசிப்பவனாகவும் இருந்த விஷயம் அவருக்குப் பிடிக்கவில்லை. எழுத்தாளன் கம்யூனிசச் சித்தாந்தியாக மாறினால் அவனது சுதந்தரம் பறிபோய்விடும் என்றே அவர் கருதினார்; மேலும் அப்போது அவர் கம்யூனிச விரோதியாகவும் ஸ்டாலினைப் பற்றி நல்லெண்ணம் இல்லாதவராகவுமே இருந்தார். இதனால் கம்யூனிச அபிமானத்தையும், அனுதாபத்தையும் நான் கைவிடுவதற்கு அவர் எவ்வளவோ முயற்சி செய்தார். அப்போது தான் அவர் என்னிடம் மாஸ்கோவில் 1937இல் நடந்த விசாரணைகளைப் பற்றிக் கூறியதோடு, ஆர்தர் கீஸ்லர் அந்த விசாரணையைக் கருப்பொருளாகக் கொண்டு எழுதியுள்ள ‘Darkness at Noon’ - நண்பகலில் கும்மிருட்டு - என்ற நாவலைப் படிக்குமாறு செய்தார். மேலும் கம்யூனிசத்துக்கு எதிர்காலமில்லை என்ற கருத்தை வலியுறுத்திய ஜேம்ஸ் பர்ன்ஹாம் எழுதிய Managerial Revolution - நிர்வாகப் புரட்சி - என்ற நூலை அவரே எனக்கு விலைக்கு வாங்கிக் கொடுத்தார். இதன் காரணமாக நான் கம்யூனிச விரோதிகளாக இருந்த அல்லது அவ்வாறு மாறிவிட்ட சில எழுத்தாளர்களின் நூல்களையும் படித்தேன் என்றாலும் நான் எனது கருத்து நிலையிலிருந்து மாறவில்லை.

ஆயினும் ஒரு கேள்வி எழுகிறது முப்பதாம் ஆண்டுகள் சிலவற்றில் சோஷலிச வாடை வீசும் கருத்துக்களைப் பிரதிபலித்த புதுமைப்பித்தன், தமது பொறுப்பில் தயாரான ‘தினமணி’ வருட மலரில் தமது நெருங்கிய நண்பராக கே.எஸ். சோணாசலத்தின் சோஷலிசம் பற்றிய கட்டுரையை வெளியிட்ட, புதுமைப்பித்தன் எப்போது கம்யூனிச விரோதியாக மாறினார்? இதற்குக் காரணம் என்ன? ‘மாஸ்கோ விசாரணைகள்’ என்ற பெயரில் 1937இல் ஸ்டாலின் விசாரணைகளை நடத்தி, கட்சியின் மூத்த தலைவர்கள் பலரையும் தீர்த்துக்கட்டி ஒரு நர வேட்டையே ஆடிவந்த விவரங்கள் இப்போது நமக்கு நன்றாகத் தெரிய வந்துள்ளன. 1939இல் புதுமைப்பித்தனும், ந. ராமரத்தினமும் சேர்ந்து, ஹிட்லரைப் பற்றி எழுதிய ‘கப்சிப் தர்பார்’ என்ற நூலில் இவ்வாறு எழுதப்பட்டடுள்ளது; “பாலும் தேனும் வழிந்தோடுவதாகச் சித்திரிக்கப்படும் ருஷியாவில் இன்று என்ன ஜனநாயகம் இருக்கிறது? 1917ஆம் வருடத்திய அக்டோபர் புரட்சிக்குத் தூண்கள் போலிருந்த பல பொதுவுடைமைத் தலைவர்கள் ஏன் பீரங்கிவாய்க்கு இரையானார்கள்? ருஷியப் புரட்சிக் கோஷ்டியின் மேதையென்று புகழப்பட்ட டிராட்ஸ்கி இன்று அனாதையாக உலகமெங்கும் சுற்றித் திரிவதற்குக் காரணம் என்ன? அதிகாரத்தைக் கைப்பற்றிய ஸ்டாலினை அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆகவே அவர்களுக்கு இந்தக் கதிநேர்ந்தது. ஸ்டாலின் தன் கொள்கையை நிறைவேற்ற விரும்பினால் இவர்களைப் பக்கத்தில் வைத்துக் கொண்டிருப்பது அபாயம். ஹிட்லர் நிலையும் அதுதான், ‘மாயை இல்லாத கண்களுடன் ருஷியக் காட்சி’ என்று பாட்ஸ்லோன் என்பவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். ‘ருஷியாவில் ஜனநாயகமே இல்லையாமே, அபிப்பிராய பேதங்களுக்கு அங்கு இடம் கொடுப்பதில்லையாமே’ என்பன போன்ற கேள்விகளுக்கு அவர் என்ன பதில் சொல்கிறார் தெரியுமா? ‘ஜெர்மனியில் நாஜிப் பிரசாரத்தைத் தவிர வேறு பிரசாரம் அனுமதிக்கப்படுகிறதா? சர்க்கார் ஒரு புதுச் சமூகத்தைச் சிருஷ்டிக்க விரும்புகிறது. ஆகவே, அதற்கேற்றாற்போல் எல்லாம் தயார் செய்யப்படுகிறது’ என்று அவர் எழுதியிருக்கிறார். “இதையே ஜெர்மனி விஷயத்தில் திருப்பி வாசிக்கலாம் அல்லவா?” (இங்க நூலாசிரியர்கள் குறிப்பிடும் புத்தகம் பாட்ஸ்லோன் எழுதிய Russia Without Illusions என்ற புத்தகமாகும்).

மேற்கோள் காட்டிய இந்தப் பகுதி நூலின் பிற்பகுதியில்தான் காணப்படுகிறது; இந்தப் பகுதியின் நடையும் இது புதுமைப்பித்தன் எழுதியதல்ல, ரமாரத்தினம் எழுதியதே என்பதைத் தெளிவாக்குகிறது. என்றாலும் இந்தக் கருத்து புதுமைப்பித்தனுக்கும் உடன்பாடானதே என்பதில் நமக்கு எந்தச் சந்தேகமும் இருக்கத் தேவையில்லை. நூலாசிரியர்கள் இருவரும் ஸ்டாலினையும் “ஹிட்லரைப் போன்ற ஒரு சர்வாதிகாரியாகவே மதித்திருந்தனர் என்பதும், எனவே புதுமைப்பித்தன் 1939ஆம் ஆண்டிலேயே ஸ்டாலினை வெறுத்திருக்கிறார் என்பதும் தெளிவு. (இங்கு வேறு ஒரு சுவையான விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். நாஜிப்படையெடுப்பின் போது 1941இல் நடைபெற்ற போரைப் பின்னணியாகக் கொண்டு, People Immortal - இறவாத மனிதர்கள் என்ற சிறந்த போர்க்கால நாவலை எழுதிய வாஸிவி கிராஸ்மனின் Life and Destiny வாழ்க்கையும் விதியும் - என்ற நாவல் (இது குருஷ்சேவ் ஆட்சிக் காலத்திலேயே எழுதப்பட்ட நாவலாயினும், அப்போது இதனை வெளியிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது). இப்போது சோவியத் நாட்டில் கிளாஸ்னாஸ்த் தொடங்கிய பின்னால், அங்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாவலில் அவர் ஸ்டாலினையும் ஹிட்லரையும் ஒரே விதமான சர்வாதிகாரிகளாகவே மதிப்பிட்டிருக்கிறார். இதற்கு அவர் கூறும் வாதங்கள் சிந்தனையைத் தூண்டுவனவாகும் (Soviet Literature எண். 11/88).

இங்கு இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். மேலை நாட்டில், குறிப்பாக மாஸ்கோ விசாரணைகளுக்குப் பின்னால், சோவியத் அபிமானிகளாகவும், கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்களாகவும் அல்லது அனுதாபிகளாகவும் இருந்த பல எழுத்தாளர்கள் கட்சியிலிருந்து விலகினர்; அதன்பால் கொண்டிருந்த அபிமானத்தைக் கைவிட்டனர். இவ்வாறு மாறியவர்களில் பிரபலமான ஆறு எழுத்தாளர்கள் தங்கள் கருத்துக்களை கட்டுரைகளாக எழுதினர்; இந்தக் கட்டுரைகள் The God that failed - “கைவிட்டுவிட்ட கடவுள்” என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. ஆர்தர் கீஸ்லர், இக்னேஜியோ சைலோன், ரிச்சர்டு ரைட், ஆன்ட்ரி ஜிட், லூயி பிஷர், ஸ்டீபன் ஸ்பெண்டர் ஆகியோரே அந்த ஆறு பேர். இவர்களில் ஆர்தர்கீஸ்லர் 1931இல், கம்யூனிஸ்டுகள் கட்சியில் சேர்ந்து. 1938இல் அதிலிருந்து விலகியவர். ஸ்பெயினில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது, அங்குச் சென்றிருந்த காலத்தில் ஜெனரல் பிராங்கோவினால் கைது செய்யப்பட்டுச் சிறைவாசம் அனுபவித்தவர். இந்தச் சிறைவாசத்தை அவர் Dialogue with Death மரணத்தோடு உரையாடல் - என்ற நூலில் வருணித்திருக்கிறார். இந்நூலின் நடையழகையும் வேகத்தையும் வைரம் பாய்ந்த சொல்லாட்சியையும் கண்டு நான் வியந்திருக்கிறேன். இவரே மாஸ்கோ விசாரணையைக் கருப்பொருளாகக் கொண்டு, நான் முன்னர் குறிப்பிட்ட ‘Darkness at Noon’ என்ற நாவலையும் எழுதியவர். இக்னேஜியோ சைலோன் 1921இல் இத்தாலியக் கம்யூனிஸ்டுக் கட்சியை நிறுவியவர்களில் ஒருவர்; டோக்ளியாட்டியின் நெருங்கிய தோழர், டோக்ளியாட்டியுடன் இருபதுகளின் இறுதியில் மாஸ்கோவில் நடந்த கம்யூனிஸ்டு அகிலத்தின் கூட்டம் ஒன்றுக்குச் சென்று, அங்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் 1930ஆம் ஆண்டிலேயே கம்யூனிஸ்டுக் கட்சியிலிருந்து விலகியலர், இவர் ‘பாண்டமரா’ (Fontamara), Bread and wine - ‘ரொட்டியும் ஒயினும்’ போன்ற அருமையான நாவல்களை எழுதியவர். ரிச்சர்டு ரைட் என்பவர் அமெரிக்க நீக்ரோ இனத்தைச் சேர்ந்தவர்; ஜான் ரீடு கழகத்தின் மூலம் கம்யூனிஸ்டுக் கட்சியில் சேர்ந்தவர். இவர், பல சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதியவர், ஆன்ட்ரி ஜிட் நோபெல் பரிசு பெற்ற பிரபலமான பிரஞ்சு எழுத்தாளர்; இவர் கம்யூனிஸ்டுக் கட்சியில் சேரவில்லை; எனினும் அதில் ஆர்வம் காட்டியவர். இவர் 1926இல் சோவியத் எழுத்தாளர்களின் அழைப்பின் பேரில் சோவியத் நாட்டுக்குச் சென்று வந்தவர். லூயி பிஷர் நமக்கெல்லாம் ஓரளவுக்குத் தெரிந்த பிரபலமான அமெரிக்கப் பத்திரிகை நிருபர்; ‘காந்தியும் ஸ்டாலினும்’ என்ற நூலை எழுதியவர்; இவர் இந்தியாவுக்கு வந்து காந்தியடிகளோடு சிறிது காலம் தங்கியிருந்து, காந்தியடிகள் பற்றிய வரலாறு ஒன்றையும் எழுதியவர். ஸ்டீபன் ஸ்பெண்டர் சிறிது காலம் கம்யூனிஸ்டுக் கட்சியில் இருந்தவர்; பிரபலமான ஆங்கிலக் கவிஞர்; இலக்கிய விமரிசகர், இவரும் இந்தியாவுக்கு வருகை தந்திருக்கிறார். இந்த அறுவரும் தாம் சோவியத் நாட்டுக்குச் சென்ற போது அங்குக் கண்டவை, கம்யூனிஸ்டுக் கட்சியோடு, தொடர்பு கொண்டிருந்த காலத்தில் தமக்கு ஏற்பட்ட அனுபவங்கள், மாஸ்கோ விசாரணைகள் தம்மில் ஏற்படுத்திய பிரதிபலிப்புகள் ஆகியவற்றையே மேற்குறிப்பிட்ட நூலில் எழுதியிருந்தனர். இந்த நூல் மேலை நாட்டு எழுத்தாளர்கள் பலரின் மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நூலாகும். ‘மணிக்கொடி’யைச் சேர்ந்த எழுத்தாளர்கள் பலரும் மேலைநாட்டு இலக்கியங்களில் பெரும் கவனம் செலுத்தி வந்தவர்களாகவும், அவற்றில் ஈடுபாடு கொண்டவர்களாகவும், வடிவ அமைதி மற்றும் கருப்பொருள் முதலியவற்றில் அவர்களைப் பின்பற்றியவர்களாகவும் இருந்தததால், மேலை நாட்டில் வெளிவந்த மேற்கூறிய நூலும், அதனால் ஏற்பட்ட பாதிப்பும் புதுமைப்பித்தன் போன்ற எழுத்தாளர்களையும் பாதித்திருக்கக் கூடும். அதனாலேயே ராமரத்தினம், புதுமைப்பித்தன், போன்றவர்கள் சோவியத் கம்யூனிச விரோதிகளாக மாறியிருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது.

மீண்டும் முப்பதாம் ஆண்டுகள்:

இனி நாம் மீண்டும் முப்பதாம் ஆண்டுகளுக்குச் செல்வோம். முப்பதாம் ஆண்டில் தோன்றிய முற்கூறிய மணிக்கொடி உள்ளிட்ட பத்திரிகைகள் எல்லாம், தமிழ்நாட்டு எழுத்தாளர்களின் கதைகளை மட்டுமல்லாது, தாகர், பிரேம்சந்த், முதலிய எழுத்தாளர்களின் கதைகளையும் தொடர்கதைகளையும் வெளியிட்டு வந்தன; சரத் சந்திரர், பங்கிம் சந்திரர், ரமேஷ் சந்திரதத்தர் போன்ற வங்க எழுத்தாளர்களின் நாவல்களும் தொடர்கதைகளாக வெளிவந்தன. பின்னர் இவை புத்தகங்களாகவும் வெளிவந்தன, மேலும் இந்தக் காலத்தில் புத்தக வெளியீடும் சூடு பிடித்தது. முதலில் ‘மணிக்கொடி’யின் சோதர ஸ்தாபனமாக நவயுகப் பிரசுராலயம் தோன்றியது. ப.ரா. என்ற ப. ராமசாமி (இவர்தான் நாற்பதாம் ஆண்டுகளின் பிற்பகுதியில் மாக்சிம் கார்க்கியின் ‘மதர்’ என்ற நாவலை ‘அன்னை’ என்ற தலைப்பில் சுருக்கி மொழிபெயர்த்து வெளியிட்டார்; ‘தாய்’ என்ற தலைப்பில் நான் செய்த முழுமையான மொழிபெயர்ப்பு 1951இல் தான் வெளிவந்தது) சோஷலிசத்தையும் சோவியத் அனுபவத்தையும் பற்றி எழுதிய ‘எல்லோரும் ஓர் குலம்’ என்ற நூல் அந்தப் பிரசுராலயத்தின் முதல் நூலாக வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து புதுமைப்பித்தனும் ராமரத்தினமும் சேர்ந்து ஹிட்லரைப் பற்றி எழுதிய ‘கப்சிப் தர்பார்’ என்ற நூலும், முஸோலினியைப் பற்றிப் புதுமைப்பித்தன் எழுதிய ‘பாசிஸ்டு ஜடாமுனி’ என்ற நூலும் வெளிவந்தன. இதன்பின் புதுமைப்பித்தன் கதைகளும்’ இதன் வெளியீடாகவே வெளிவந்தன, இதே காலத்தில் அல்லயன்ஸ் கம்பெனி ‘தமிழ்நாட்டுச் சிறுகதைகள்’ என்ற வரிசையில் பல தமிழ் எழுத்தாளர்களின் தனித்தனித் தொகுதிகளையும், மற்றும் பல எழுத்தாளர்களின் கதைகளைக் கொண்ட ‘கதைக் கோவை’களையும் வெளியிடத் தொடங்கியது. இத்துடன் வங்க நாவல்களும், இந்தி நாவல்களும் வெளிவந்தன. கலைமகள் பிரசுராலயமும் இதேபோன்ற நூல்களை வெளியிட்டதோடு நாற்பதுகளின் தொடக்கத்தில் காண்டேகரின் நூல்களையும் வெளியிடத் தொடங்கியது. இதே முப்பதாம் ஆண்டுகளின் இறுதியில்தான் 1939இல் வை, கோவிந்தன் ‘சக்தி’ பத்திரிகையைத் தொடங்கினார். ‘சக்தி’யில் தமது எழுத்துக்கள் இடம் பெறவேண்டும் என்று பிரபல எழுத்தாளர்கள் கூடத் தவிக்கும் அளவுக்கு தி.ஜ.ர. அதன் ஆசிரியராகவிருந்த காலத்தில் அதன் தரம் உயர்ந்திருந்தது. இதன் பின் நாற்பதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில் ‘சக்தி காரியாலயம்’ புத்தகங்களையும் வெளியிடத் தொடங்கியது. வெ. சாமிநாத சர்மா எழுதிய ‘சோவியத் ருஷ்யா’, ‘ரூஸோவின் சமுதாய ஓப்பந்தம்’, ‘கார்ல் மார்க்ஸ்’ போன்ற புத்தகங்களும் வெளிவந்தன. எனவே முப்பதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில் தோன்றிய இலக்கிய மறுமலர்ச்சி நாற்பதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில் பலவகையிலும் முழுமலர்ச்சி பெற்றிருந்தது என்றே கூறலாம்.

ஜனசக்தியின் தொடக்கம்:

இதே முப்பதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில் பெரியார் ஈ.வெ.ரா. சோவியத் நாட்டிலிருந்த நாத்திகர் கழகத்தின் அழைப்பின் பேரில் அங்குச் சென்று திரும்பியதன் விளைவாக, லெனின் மதத்தைப் பற்றி எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பாசு, ‘லெனினும் மதமும்’ என்ற மொழிபெயர்ப்பு நூலையும், தமிழ் நாட்டின் பொதுவுடைமை இயக்கத்தின் மூலவரான ம. சிங்காரவேலு எழுதிய சில நூல்களையும் ‘பொதுவுடைமைத் தத்துவங்கள்’ என்ற நூலையும் பெரியார் தமது ‘குடியரசு பதிப்பக’ வெளியீடுகளாக வெளியிட்டார், அத்துடன் அவர் பொதுவுடைமைப் பிரசாரமும் செய்தார். ஆனால் அன்றைய சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த ஆர்.கே. சண்முகம் செட்டியார் முதலிய பிரமுகர்கள் இந்தப் பொதுவுடைமைப் பிரசாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இயக்கத்திலிருந்து வெளியேறினர்; மேலும் இந்தப் பிரசாரத்தைக் கைவிடுமாறு அன்னிய அரசாங்கமும் பெரியாரை நிர்ப்பந்தித்தது. இவற்றைத் தொடர்ந்து பெரியார் பொதுவுடைமைப் பிரசாரத்தைக் கைவிட்டுச் சமூகச் சீர்திருத்த விஷயங்களிலேயே கவனத்தைச் செலுத்தத் தொடங்கி விட்டார். இவ்வாறு பெரியாரின் சுயமரியாதை இயக்கம் பொதுவுடைமைக் கொள்கையைக் கைவிட்ட சமயத்தில், அந்த இயக்கத்திலிருந்து வெளியேறிச் சுயமரியாதைச் சமதர்மக் கட்சியைத் தோற்றுவித்தவர்தான் தோழர் ஜீவானந்தம். என்றாலும், அன்றைய சூழ்நிலையில் கம்யூனிஸ்டுக் கட்சி சட்ட விரோதமாக்கப்பட்டிருந்ததால், டாங்கே போன்ற இந்திய கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைப்படி, கம்யூனிஸ்டுகள் பலரும் காங்கிரசுக்குள்ளேயே தோன்றியிருந்த காங்கிரஸ் சோஷலிஸ்டுக் கட்சிக்குள் சேர்ந்தனர். ஜீவாவும் அவ்வாறு சேர்ந்து தமிழ்நாட்டில் அதன் பொதுச் செயலாளராகவும் விளங்கினார். இவ்வாறு காங்கிரஸ் சோஷலிஸ்டுக் கட்சியில் சேர்ந்திருந்த கம்யூனிஸ்டுகளான தோழர்கள் ஜீவா, பி. ராமமூர்த்தி, பி. சீனிவாசராவ், ஏ.எஸ்.கே. அய்யங்கார், கே. முருகேசன் ஆகியோரே 1937ஆம் ஆண்டில் நவம்பர் புரட்சி தினத்தன்று, காங்கிரஸ் சோஷலிஸ்டுக் கட்சியின் பத்திரிகையாக ‘ஜனசக்தி’ வாரப் பத்திரிகையைத் தொடங்கினர்.

என்றாலும், ‘ஜனசக்தி’யைத் தொடங்கிய காலத்தில், முப்பதாம் ஆண்டுகளில் இருந்து வந்த ஏனைய பத்திரிகைகளைப்போல் (இதற்கு பி.எஸ். ராமையாவின் நிருவாகத்தில் இருந்து வந்த ‘மணிக்கொடியும்’ ‘கலைமகள்’ பத்திரிகையும் விதிவிலக்காகும்; இவை இரண்டும் அரசியலில் கவனம் செலுத்தவில்லை) அரசியலோடு கலை இலக்கியத்துக்கும் ‘ஜனசக்தி’யில் இடம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அந்தத் தலைவர்களுக்கு இருக்கவில்லை. அதேபோல் 1936இல் இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோன்றிய பின்னரும் கூட, இங்கும் தமிழ்நாட்டில் ஒரு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஒன்றைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற எண்ணமும் அவர்களுக்கு உதிக்கவில்லை. சொல்லப்போனால், தேசிய எழுச்சியும் உணர்வும் பெருகி, அதன் விளைவாக இலக்கியத் துறையில் ஒரு மறுமலர்ச்சியும், அதன் விளைவாகப் பல சிறந்த எழுத்தாளர்களும் உருவாகியிருந்த சூழ்நிலையிலும், இலக்கியத்தை முற்போக்குப் பாதையில் கொண்டு செலுத்தவும், அவர்களை ஓர் அணியாக ஒன்று திரட்டவும் அவர்களுக்குச் சிறிதும் அக்கறை இருக்கவில்லை. காரணம் அந்தத் தலைவர்களில் ஜீவா ஒருவரைத் தவிர ஏனையோருக்குத் தமிழ் இலக்கியத்தில் பரிச்சயமோ, அதில் ஆர்வமோ இருக்கவில்லை. ஜீவாவும் கூடப் பாரதி பாடல்களைத் தமது அரசியற் சொற்பொழிவுகளில் பயன்படுத்தியும், பாரதியின் கிளிக் கண்ணிப் பாடல்களை முன்னுதாரணமாகக் கொண்டு

காலுக்குச் செருப்புமில்லை;
கால்வயிற்றுக் கூழுமில்லை;
பாழுக்குழைத்தோமடா - என் தோழனே;
பசையற்றுப் போனோமடா!

என்று தொடங்கும் பாடல் பாரதியின் ‘அச்சமில்லை’ பாடலின் சந்தத்தைப் பின்பற்றியதாகும்.

“சடசடவென்றே முறிந்தே ஜார் விழுந்த காரணம்
தரணியில் சோஷலிசம் தழைப்பதற்கு உதாரணம்” என்று தொடங்கும் பாடல் முதலிய சில நல்ல பாடல்களை மேடைகளிற் பாடுவதற்காக எழுதி வெளியிட்டும் வந்தாரே தவிர, முற்போக்கு இலக்கியம் பற்றியோ, அதற்கான இயக்கத்தின் தேவை பற்றியோ எதுவும் எழுதவில்லை. (ஜீவாவின் இந்தப் பாடல்கள் கோவை ராமதாஸ் போன்ற காத்திரமான குரல்வளம் படைத்த தோழர்களால் மேடைகளில் பாடப்பெற்றுத் தொழிலாளர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தன என்பதை இங்குக் குறிப்பிட வேண்டும்). மேலும் பாரதி மகாகவியா இல்லையா என்ற சர்ச்சை நடைபெற்று நின்றுபோன தருணத்தில், அதனை நாம் இன்றும் போற்றுவதற்கான காரணங்களைக் குறிப்பிட்டு, ஜீவா கட்டுரைகள் எதுவும் எழுதவில்லை. சொல்லப்போனால், அன்றைய தலைவர்கள் அனைவருக்கும் தொழிற்சங்கங்களையும் விவசாய சங்கங்களையும் கட்டியமைப்பதிலேயே முனைப்பும் ஈடுபாடும் இருந்தன; ஏனைய துறைகளைப் பற்றி அவர்கள் அக்கறைகாட்டவில்லை; அதற்கு அவர்களுக்கு நேரமும் இருக்கவில்லை. மேலும், உற்பத்திச் சாதனங்களின் உடைமை சம்பந்தப்பட்ட பொருளுற்பத்தி உறவுகளே சமூகத்தின் அடிப்படை (basis) ஆகும். கலை, கலாசாரம், மொழி வளர்ச்சி, இலக்கியம் முதலியன எல்லாமும் சமூகத்தின் மேற்கட்டு மனமே (Superstructure) என்று படித்த பாடத்தின் விளைவாக நேர்ந்த வறட்டுக் கோட்பாட்டு நிலையும் இந்தப் புறக்கணிப்புக்குக் காரணமாகும் எனலாம்.

இதனாலேயே சுயமரியாதை இயக்கத்திலும் பொதுவுடமை லட்சியத்திலும் ஈடுபாடு கொண்டவராக விளங்கி,

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
பொதுவுடைமைக் கொள்கை
திசையெட்டும் சேர்ப்போம்:
புனிதமோடதை எங்கள் உயிரெனக் காப்போம் என்று தொடங்கும் பாடலை ‘ஜனசக்தி’ தொடங்கிய காலத்திலேயே, அதற்கு எழுதியனுப்பிய பாரதிதாசன் (இந்தப் பாடல் ‘ஜனசக்தி’யின் மூன்றாவது இதழில் 20.11.37இல் வெளிவந்தது) கம்யூனிஸ்டுக் கட்சியில் சேராமல் அல்லது அதன் அனுதாபியாகக் கூட நிலைத்திராமல், திராவிட இயக்கத்துடனேயே சென்றுவிட்டாரோ என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது. இதேபோல் சமூகச் சீர்த்திருத்தங்களைப் பற்றிப் பேசுவதும் அதற்காகப் பாடுபடுவதும் சீர்திருத்தவாதமேயாகும், சீர்திருத்தவாதம் அடிப்படையில் பிற்போக்கானதேயாகும் என்று கற்றிருந்த பாடத்தின் வறட்டுக் கோட்பாட்டு நிலையும், கம்யூனிஸ்டுகள் சமூகச் சீர்திருத்த விஷயங்களில் முனைப்பான அக்கறை எதுவும் காட்டாமல் போனதற்கும் ஒரு காரணமாக இருக்கலாமோ என்றும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஆனால் கம்யூனிஸ்டுகள் சோஷலிச லட்சியத்துக்காகவே போராடினாலும், அதன் காரணமாகப் பொருளாதார உறவுகளையே அடிப்படையாகக் கருத்தில் கொண்டு, வர்க்கப் போராட்டத்தை வளர்த்தெடுக்கும் நோக்கத்துக்காகவே செயல்பட்டாலும், அவர்கள் ஏனைய துறைகளைப் புறக்கணித்து விடாமல், அரசியல், சமூகம், பொருளாதாரம் கலாசாரம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் மானிட விடுதலையைக் கொண்டு வருவதையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும், அத்தகைய ஒருமித்த Synthetic அணுகுமுறை அவர்களுக்கு இருக்க வேண்டும் என்றே எனக்குத் தோன்றுகிறது. எவ்வாறாயினும் 1937இல் ‘ஜனசக்தி’ தொடங்கிய காலத்தில் அதில் கலை இலக்கியப் பகுதி எனத் தனியாக ஒரு பகுதி தொடங்கப்படவும் இல்லை முற்போக்கு இலக்கியத்தை வளர்ப்பதற்கோ, முற்போக்கு - எழுத்தாளர் சங்கம் ஒன்றை உருவாக்குவதற்கோ முயற்சி ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.

உண்மையில் கம்யூனிஸ்டுக் கட்சி கலை இலக்கியத் துறையில் ஈடுபாடு காட்டத் தொடங்கியது இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகுதான் என்றே கூற வேண்டும். சுதந்திரம் கிட்டிய சூட்டோடு 1947 அக்டோபர் 13 அன்று எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபத் திறப்புவிழா நடந்தது. அந்த விழாவையொட்டி ஜனசக்தி பிரசுராலயம் முதன்முதலாக ஓர் இலக்கிய வெளியீட்டை வெளிக் கொணர்ந்தது; அதனைப் பத்தாயிரம் பிரதிகளாக அச்சிட்டது. சுமார் 30 பக்கங்கள் கொண்டதும், ஜீவா எழுதியதுமான ‘பாரதி வழி’ என்ற இந்தச் சிறுநூலே, அவர் பாரதியைப் பற்றி முதன்முறையாக எழுதிய ஒரு முழுமையான மதிப்பீடாக விளங்கியது. பாரதியை வெறும் வேதாந்தக் கவி என்று ராஜாஜி முதலியோர் சொல்லத் தொடங்கியிருந்த அந்தக் காலத்தில், அந்தக் கருத்தை ஆணித்தரமாக மறுத்து பாரதியைப் பற்றிய ஒரு சரியான தரிசனத்தை வழங்கிய நூலாக அது இருந்தது. இந்த நூல் வெளிவந்த காலத்தில், பாரதி மண்டபத் திறப்பு விழாவிற்கு முந்திய நாள் இரவில், ஜீவா கோவில்பட்டியில் ஆற்றிய சொற்பொழிவும், இதன்பின் பாரதி மண்டபத் திறப்பு விழாவில் ஆற்றிய சொற்பொழிவும் அவர் நூலில் கூறியிருந்த விஷயங்களை மேலும் விரித்துக் கூறுவதாகவே இருந்தன. இந்தச் சந்தர்ப்பத்தில்தான் ஜீவாவோடு எனக்கு முதன்முதலாக நேரடித் தொடர்பு ஏற்பட்டது.

முற்போக்கு எழுத்தாளர் சங்க முயற்சிகள்:

இங்கு நான் என்னைப்பற்றிச் சிறிது கூற வேண்டும், ஏற்கெனவே குறிப்பிட்டபடி நான் 1941 முதற்கொண்டுதான் பத்திரிகைகளில் கதைகள் முதலியனவற்றை எழுதி வந்தேன். என்றாலும் 1939 - 40 ஆம் ஆண்டுகளில் 16 - 17 வயதுப் பருவத்தினனாகவிருந்த நான் நேருவின் சுயசரிதம் (இது வ.ரா.வின் மொழிபெயர்ப்பு ‘சுதந்திரச் சங்கு’ வெளியீடு என்று நினைக்கிறேன்), பா.ரா. எழுதிய ‘எல்லோரும் ஓர் குலம்!’ மற்றும் பிரபலமான நெல்லை தேச பக்தரும், அந்நாளில் காங்கிரஸ் சோஷலிஸ்டுமாகவிருந்த எஸ்.என். சோமயாஜுலு எனக்கு ரகசியமாகக் கொடுத்த அன்று தடைசெய்யப்பட்டிருந்த மார்க்ஸின் ‘கம்யூனிஸ்டு அறிக்கை’, லெனின் எழுதிய ‘அரசும் புரட்சியும்’ ஆகிய நூல்களின் ஆங்கிலப் பதிப்புகள், அன்று தலைமறைவாகவிருந்த கம்யூனிஸ்டுக் கட்சித் தோழர்கள் மூலம் கிட்டிய சில பிரசுரங்கள் ஆகியவற்றைப் படித்து, கம்யூனிசச் சித்தாந்த அனுதாபியாக இருந்து வந்த நான், இலக்கியத் துறையில் மட்டும் ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களின் முக்கியமாகப் புதுமைப்பித்தனின் தாக்கத்துக்கு உள்ளாகியிருந்ததால், நானும் இலக்கியமும் வேறு, அரசியல் வேறு என்பது போன்ற மனப்பான்மையிலேயே இருந்து வந்தேன். இதற்கு நெல்லையில் நிலவிய இலக்கியச் சூழலும் ஒரு முக்கிய காரணமாகும். இந்தக்கால கட்டத்தில்தான், அதாவது நாற்பதாம் ஆண்டுகள் தொடங்கிய காலத்தில் தான் கு. அழகிரிசாமி, வல்லிக்கண்ணன், நான் ஆகிய மூவரும் இலக்கியக் கர்த்தாக்களாக உருவாகியிருந்தோம். இவர்களில் கு. அழகிரிசாமியும் என்னைப் போலவே ஆரம்பம் முதல் கம்யூனிசச் சித்தாந்த அபிமானியாகவே இருந்து வந்தார். இருப்பினும் நாங்கள் மூவரும் அரசியலுக்கும் இலக்கியத்துக்கும் சம்பந்தம் உண்டு, இலக்கியத்தில் அரசியல் இடம்பெறாவிட்டாலும் இலக்கியத்துக்கென ஓர் ‘அரசியல்’ உண்டு என்ற ஞானத்தைப் பெறாதவர்களாகவே இருந்தோம். இது மணிக்கொடி எழுத்தாளர்கள் எங்களைப் போன்ற எழுத்தாளர்களின் மீது ஏற்படுத்திய எதிர்மறையான விளைவு என்றே கூறலாம். இதிலிருந்து நாங்கள் விடுபடச் சிறிது காலம் பிடிக்கவே செய்தது. மேலும் கம்யூனிஸ்டுக் கட்சிக்கு இலக்கியத் துறையில் ஈடுபாடு இல்லாதிருந்ததும் இதற்கு ஒரு காரணம் எனலாம். என்றாலும், நாங்கள் புதுமைப்பித்தனின் கதைகளையே பெரிதும் விரும்பிய காரணத்தால், எங்கள் கதைகளில் ஆரம்பம் முதலே அவரைப் போலவே எதார்த்தவாதமும், விமர்சன எதார்த்தவாதமும் உருவாகியிருந்தன. இதற்குச் சில கதைகளே விதிவிலக்காக இருக்கலாம் என்றே கூறலாம். சொல்லப்போனால், புதுமைப்பித்தனின் தாக்கத்துக்கு உள்ளாகாமல் தமிழ்நாட்டில் எந்த முற்போக்கு எழுத்தாளரும் உருவாகவில்லை என்றே கூற வேண்டும்.

இல்வாறு 1941இல் எழுதத் தொடங்கி, 1944 முதல் எழுத்தையே தொழிலாக மேற்கொண்ட நான் 1944 முதல் 1947 முற்பகுதிவரை சென்னையில் ‘தினமணி’ பிரசுராலயத்திலும், பின்னர் பாரதிதாசனுக்குப் பின் ‘முல்லை’ மாதப் பத்திரிகையின் ஆசிரியப் பதவியிலும் பணியாற்றிவிட்டு, ‘முல்லை’ பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி மூடப்படும் நிலையிருந்தபோது, திருநெல்வேலிக்கு 1947 மே மாதம் வந்து சேர்ந்தேன். அப்போது தோழர் பாலன் ஒரு வழக்கின் காரணமாகப் போலீசிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார். இந்தத் தலைமறைவு வாசத்தின்போது அவர் நெல்லைக்கு வரும் சமயம் எங்கள் தெருவுக்கு அடுத்த தெருவிலிருந்த எனது நெருங்கிய நண்பர் ஒருவரின் வீட்டில்தான் தங்குவார். அப்போதுதான் எனக்கும் பாலனுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது, இதனால் அவர் நெல்லை வரும் சமயமெல்லாம் எனக்குத் தகவல் அனுப்பி விடுவார்; நானும் அவரும் அந்த நண்பரின் வீட்டில் சந்தித்து மணிக் கணக்கில், முக்கியமாக இலக்கியம் பற்றி உரையாடினோம். அப்போதுதான் முற்போக்கு இலக்கியத்தை உருவாக்கி வளர்க்கவும், அதற்காக ஓர் இயக்கத்தைத் தொடங்கவும் வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்தோம். இதன் விளைவாக இதன்பின் ஒரே மாத காலத்தில் நெல்லையில் ‘கலைஞர் கழகம்’ என்ற பெயரில் ஒரு சங்கத்தைத் தொடங்கினோம். இது 1947 ஜூலை இறுதியில் தொடங்கப்பட்டது. இதற்கு நான் தலைவராகவும் தோழர் தி.க. சிவசங்கரன் செயலாளராகவும் இருந்தோம். இதைத் தான் தமிழ்நாட்டில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முன்னோடி என்று சொல்ல வேண்டும். ஆயினும் இந்தக் கழகம் சில மாதங்களே செயல்பட்டது 1948 பிப்ரவரி மாத மத்தியில் நான் சென்னை சென்று, ‘சக்தி’ பத்திரிகையில் 1947 மத்தியில் ஏற்கெனவே துணையாசிரியராகப் பணியாற்றி வந்த அழகிரிசாமியோடு ‘சக்தி’யில் நானும் அதன் துணையாசிரியராகச் சேர்ந்துவிட்டேன். தி.க.சியும் மார்ச் மாதம் சென்னைக்கு மாற்றலாகிச் சென்னை வந்து விட்டார். இத்துடன் ‘கலைஞர் கழக’மும் முடிவு கண்டு விட்டது.

என்றாலும் 1948ல் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தோழர் முகவை ராஜமாணிக்கம் தலைமையில் ஒரு முற்போக்கு எழுத்தாளர் மாநாடு நடைபெற்றது. கலந்து கொண்டவர்கள் வெளியிலிருந்து கட்சித் தோழர்களும் சில எழுத்தாளர்களும் ஆவர்; அவர்களும் வெகுசிலரே. இந்த மாநாடு உருப்படியான முற்போக்கு எழுத்தாளர் சங்கம் எதையும் உருவாக்கவில்லை. இதனால் 1949இல் மீண்டும் ஒரு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவிக்கும் முயற்சி சென்னையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த முயற்சியில் நானும் அதன் அமைப்பாளர்களில் ஒருவனாக இருந்தேன். எனினும் அன்றைய சூழ்நிலையில் இந்த முயற்சியும் உருப்படியாக வெற்றி பெறவில்லை. இதன்பின் 1952இல் நாரணதுரைக்கண்ணனைத் தலைவராகக் கொண்டு, சென்னையில் ஒரு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைக்கப்பட்டது. இதனைக் குறித்துத் தோழர் நல்லகண்ணு ‘பாட்டாளியைப் பாடிய பாவலர்கள்’ என்ற தமது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். என்றாலும், இந்தச் சங்கத்தில் நமது அணியைச் சேர்ந்த முற்போக்கு எழுத்தாளர்கள் சிலபேர் இடம் பெற்றிருந்தாலும், இதுவும் உருப்படியாகச் செயல்படவில்லை. ஏனெனில் இது அமைக்கப்பட்ட சூழ்நிலையும் இதன் நோக்கமும் வேறாக இருந்தன.

முற்போக்கு இலக்கியப் பத்திரிகைகளின் தோற்றம்:

1948இல் கம்யூனிஸ்டுக் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் ‘புதுமை இலக்கியம்’ என்ற பெயரில் ஒரு பத்திரிகை தொடங்கப்பட்டது. இந்தச் சமயத்தில் கம்யூனிஸ்டுக் கட்சி அன்றைக்கு மேற்கொண்டிருந்த வறட்டுக் கோட்பாட்டு நிலை, செக்டேரியன் நிலை ஆகியவற்றின் விளைவாக, பாரதியை வைதிகக் கவி எனவும், முதலாளித்துவக் கவிஞர் எனவும் பழிதூற்றும் காரியம் தொடங்கியது. இதனை தி.க.சி மற்றும் என்னைப் போன்ற எழுத்தாளர்கள் எதிர்க்க நேர்ந்தது, என்றாலும் இந்தப் ‘புதுமை இலக்கியம்’ இரண்டே இதழ்களுக்குப் பின் தடை செய்யப்பட்டு விட்டது. இதன்பின் குயிலனைப் பதிப்பாளராகக் கொண்டும், தமிழ் ஒளி ஆகியோரைக் கொண்டும் 1949இல் ‘முன்னணி’ என்ற வாரப் பத்திரிகை தொடங்கப்பட்டது. இதுவும் சிறிதுகாலத்தில் நின்று விட்டது.

இங்கு ஒரு விஷயத்தைக் கூறியாக வேண்டும். சுதந்திரத்துக்குப் பின் தமிழ் நாட்டில் தோன்றிய முற்போக்கு இலக்கிய இயக்கம், அன்றைய சோவியத் இலக்கியங்களையும் ‘சோவியத் லிட்டரேச்சர்’ முதலிய பத்திரிகைகளில் வெளிவந்த இலக்கிய விமர்சனங்களையுமே வழிகாட்டியாகவும் முன் மாதிரியாகவும் கொண்டிருந்தன. எனவே சோவியத் நாட்டில் அன்று இலக்கியம் பற்றி நிலவிய வக்கிரமான, திரிபான, செக்டேரியன் தன்மைவாய்ந்த கட்சிப் பார்வையே தமிழ்நாட்டு முற்போக்கு இலக்கியவாதிகளிடம் நிலவியது. இந்த நிலைமை நாற்பதாம் ஆண்டுகளின் பிற்பகுதியிலிருந்து ஐம்பதாம் ஆண்டுகளின் தொடக்கம் வரை நீடித்தது எனலாம். 1956ல் சோவியத் நாட்டில் குருஷ்சேவ் ஆட்சி ஏற்பட்டு, அதன் காரணமாக இலக்கிய நோக்கிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டபின்னரே, இந்தக் கட்சிப் பார்வை விடுபடத் தொடங்கியது எனலாம். இந்தக் காலத்துக்கு முன் சோவியத் நாட்டில் நிலவிய நிலைமை என்ன என்பதைப் பின்னர் பார்ப்போம்.

முன்னணிக்குப் பின் ஐம்பதாம் ஆண்டுகளில்தான் முற்போக்கு இலக்கிய நோக்கைக் கொண்ட இலக்கியப் பத்திரிகைகள் பல வெளிவரத் தொடங்கின. 1951 ஏப்ரலில் விஜய பாஸ்கரன் ‘விடி வெள்ளி’ என்ற வாரப் பத்திரிகையைத் தொடங்கினார். 1952இல் குயிலன் ‘வாரம்’ என்ற பத்திரிகையைத் தொடங்கினார். இவை இரண்டிலும் நானும் கவிதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதி வந்தேன். 1952இல் ‘சக்தி’ பத்திரிகை பொருளாதார நெருக்கடியின் காரணமாக நின்று போனபின், நான் திருநெல்வேலிக்குத் திரும்பி வந்தேன். தி.க.சி.யும் திருநெல்வேலிக்கு மாற்றலாகி வந்திருந்தார். இதனால் 1952இல் நாங்கள் மீண்டும் ‘முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ என்ற பெயரிலேயே ஒரு சங்கத்தைத் தொடங்கினோம். இது முறையாக செயல்பட்டு வந்தது; பல இலக்கியக் கூட்டங்களை நடத்தியது; இதில் ஜீவாவும் பாலனும் கலந்து கொண்டு பலமுறை உரையாற்றினர். 1952இல் இந்தச் சங்கம் புதுமைப்பித்தன் விழாவைப் புத்தகக் கண்காட்சி, புகைப்படக் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் எனப் பலவாறும் மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. 1954 டிசம்பரில் நான் ‘சாந்தி’ப் பத்திரிகையைத் தொடங்கினேன். நெல்லையில் தோற்றுவிக்கப்பட்ட இந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் அதன் நடவடிக்கைகளும், ‘சாந்தி’யின் தோற்றமும்தான் சுந்தர ராமசாமி, டி. செல்வராஜ் ஆகிய இரு சிறந்த எழுத்தாளர்களைத் தோற்றுவித்து முற்போக்கு இலக்கிய அணிக்குக் கொண்டு வந்தது. ‘சாந்தி’ நடத்திய புதுமைப்பித்தன் நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசைப் பெற்ற சுந்தர ராமசாமி முதலில் ‘சாந்தி’யிலும், பின்னர் 1955 மே மாதத்தில் விஜயபாஸ்கரன் தொடங்கிய ‘சரஸ்வதி’ப் பத்திரிகையிலும் முற்போக்கான கதைகள் பலவற்றையும் எழுதி வந்தார்.

1954இல் நான் தொடங்கிய ‘சாந்தி’ 1956 முற்பகுதியில் நின்று விட்டது. என்றாலும் இதே காலகட்டத்தில் தான் விந்தன் ‘மனிதன்’ என்ற மாத இதழைத் தொடங்கினார். இது ஒன்பது மாதங்களே நடந்தது. என்றாலும், இதில் தமிழ் ஒளி, ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி முதலியோர் எழுதி வந்தனர். இதே ஐம்பதுகளில் மாஜினி, ‘தமிழன்’ என்ற பத்திரிகையையும், கே.சி.எஸ். அருணாசலம் ‘நீதி’ என்ற பத்திரிகையையும் நடத்தி வந்தனர். ‘நீதி’ப் பத்திரிக்கையில் கே.சி.எஸ். எழுதிய ‘பூர்வீகச் சொத்து’ என்ற நெடுங்கதை பற்றி நடந்த விவாதம், முற்போக்கு இலக்கியப் பார்வைகள் எவ்வாறெல்லாம் வேறுபட்டிருந்தன என்பதைக் காட்டும் கண்ணாடியாக விளங்கியது எனலாம். அந்த விவாதத்தை இறுதியாக நானே முடித்து வைத்தேன். இதே காலத்தில் 1956இல் தொடங்கப்பட்ட விஜய பாஸ்கரனின் ‘சரஸ்வதியில்’ நமது முற்போக்கு எழுத்தாளர்கள் பலரும் ஜெயகாந்தன், எஸ்.ஆர்.கே, ஆர்.கே. கண்ணன், நா. வானமாமலை, தி.க.சி., வல்லிக்கண்ணன் முதலிய பலரும் எழுதி வந்தனர். ஜெயகாந்தன் சிறந்த சிறுகதையாசிரியராகப் பூரணமாக மலர்ச்சி பெற்றது இந்தக் காலப்பகுதியில்தான். இவையெல்லாம் வெளிவந்த பின்னர்தான், அதாவது ஐம்பதாம் ஆண்டுகளின் இறுதியில்தான், கம்யூனிஸ்டுக் கட்சியின் இலக்கியப் பத்திரிகையாக 1959 டிசம்பரில் ‘தாமரை’ வெளிவரத் தொடங்கியது. ஐம்பதாம் ஆண்டுகளில் - குறிப்பாக 1956இல் நடந்த 20 ஆவது சோவியத் கட்சிக் காங்கிரஸ், அதன் தொடர்பாக எழுத்தாளர்களுக்குக் கிட்டியிருந்த - எனினும் சிறிது காலத்தில் பறிபோய்விட்ட புதிய சுதந்திரம், இந்தச் சுதந்திர காலத்தில் வெளிவந்த சோவியத் இலக்கியங்கள் மற்றும் இலக்கியக் கட்டுரைகள் ஆகியவற்றின் பின்னணியில்தான், மேற்கூறிய பத்திரிகைகள் எல்லாம் முற்போக்கு இலக்கியத்தை, நாற்பதுகளில் நிலவிய குறுகிய செக்டேரியன் பார்வையிலிருந்து விடுபடச் செய்தன எனலாம். இவையனைத்தின் விளைவாகவே 1961 ஆம் ஆண்டு மத்தியில் - மே மாத இறுதியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கோவையில் உருப்பெற்றது.