உள்ளடக்கத்துக்குச் செல்

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்/003

விக்கிமூலம் இலிருந்து

சுதந்திர தமிழகத்தில் கலை இலக்கிய
இயக்கங்கள்

பொன்னீலன்

வரலாற்றுக் காலம் முழுவதுமே தமிழகத்தில் கலையையும், இலக்கியத்தையும் சமூகத்தின் பண்பாட்டுத் தளத்தின் முக்கியமாக வெளிப்பாடுகளாகக் கருதிப் பேணும் போக்கு இருந்து வந்திருக்கிறது.

மன்னர்களின் அவைகள் ஒரு அம்சத்தில், ஓரளவுக்குக் கலை இலக்கிய அமைப்புகளாகவே இருந்து வந்திருக்கின்றன. “கொங்கு தேர் வாழ்க்கை” என்ற சங்க இலக்கியப் பாடல் பிற்காலத்தில் உருவம் உள்ளடக்கம் பற்றி பெரிய விவாதத்தைக் கிளப்பிவிட்டிருக்கிறது. அதாவது கவிதையின் உள்ளடக்கம் உணர்ச்சி பூர்வமாக இருக்க வேண்டுமா, அறிவு பூர்வமாக இருக்க வேண்டுமா என்ற கடுமையான விவாதமே கதை வடிவத்தில் அந்தப் பாடல் மீது ஏற்றப்பட்டுள்ளது.

இலக்கியத்துக்காகத் தனியான சங்கங்கள் அமைக்கப்பட்டதாகவும் செய்திகள் உள்ளன. அன்றைய மாபெரும் விமர்சன இலக்கியங்களான இலக்கண நூல்கள் பெரும்பான்மையும் இச்சங்கங்களில் விவாதித்து, அங்கீகரிக்கப்பட்டவையாக இருக்கலாம். பேரிலக்கியங்கள் பல மன்னர்கள் அல்லது கலை இலக்கியச் சான்றோர்களின் அவைகளில் அரங்கேற்றப்பட்டு விவாதிக்கப்பட்டதாகச் செய்திகள் சொல்லுகின்றன.

இம்மாதிரியான நல்ல மரபுகள் இடைக்காலத் தமிழகத்தால் சீரழிவு அடைந்ததாகத் தெரிகிறது. குறிப்பாகத் தமிழ் மன்னர்கள் அல்லாதாரின் ஆட்சிகாலங்களில் தமிழக மன்னரவைகளும், மேலோர் அவைகளும், சிருங்கார ரசத்தைப் போற்றி வளர்ப்பதையே முக்கிய லட்சியமாகக் கொண்டிருந்தாகத் தெரிகிறது. இசை, நடனம் போன்ற கலைகளில் பிற மொழி மரபுகளே அதிகம் போற்றப்பட்டிருக்கின்றன.

ஆனால் இந்த இடைக்காலத்தில் தமிழ்க் கலை இலக்கியத்தைப் பேணும் பணியை ஓரளவுக்குச் சைவ, வைணவ மடங்கள் செய்துள்ளன. கலை இலக்கியத் துறையில் பக்தி பிரதான உள்ளடக்கம் ஆயிற்று.

இந்த மடங்களில் துறைபோகிய தமிழறிஞர்கள் இருந்தார்கள். இவர்கள் தங்கள் சமகாலத் தமிழறிஞர்களோடு இலக்கணம், உரை, அணிகள் போன்றவற்றை விவாதம் செய்தார்கள். ஆர்வமுள்ள இளைஞர்களுக்குத் தமிழ் கற்பித்தார்கள். என்றாலும் இது மத எல்லை என்ற வட்டத்துக்குள்ளேயே நடந்தது.

இவர்களுடைய சமயப் பார்வைகள் கலை இலக்கியங்களைப் பாதித்தன. பிற சமயத்தினரின் சிறந்த படைப்புகளையும் சமயக் காழ்ப்போடு நிராகரித்தார்கள் இருட்டடிப்புச் செய்தார்கள். இசை போன்ற நுண்கலைகளை சமணர்கள் புறக்கணித்தார்கள். தமிழ்த் தாத்தா உ.வே.சா. கூட கும்பகோணம் கல்லுாரியில் பணியாற்றிடத் தொடங்கிய பின்னர்தான் சீவக சிந்தாமணியை அறிந்து கொண்டார். அவர் பயின்ற சைவச் சூழல் அப்படிச் செய்திருக்கிறது.

ஆங்கிலேயரின் வரவால் மேற்கத்திய இலக்கியங்களும், இலக்கிய விமர்சனப் போக்குகளும் இங்கே நுழைந்தன. இலக்கியத்தைப் பிரதானமாக அதன் உள்ளடக்க அடிப்படையில் ஆய்வு செய்யும் போக்கு அறிமுகம் ஆயிற்று. கலை இலக்கியத்தை சமூக வரலாற்றுப் பின்னணியோடு வைத்துப் பார்க்கவேண்டும் என்ற போக்கும் உருவாயிற்று. ஆனாலும் இந்தப் போக்குகளைச் செழுமைப்படுத்தவும் இவற்றை உள்வாங்கி இலக்கியப் பணி செய்யவும் கலை இலக்கிய அமைப்புகள் உருவாக்கும் முயற்சி தொடங்கப்படவில்லை.

20-ம் நூற்றாண்டில் பாரதி பாண்டிச்சேரியில் இருந்த போது பாரதிதாசனை அவருடைய ‘எங்கெங்கு காணினும் சக்தியடா!’ என்ற பாடலுடன் சுதேசமித்திரனுக்கு அறிமுகம் செய்யும்போது பாரதி கவிதா மண்டலம் என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகின்றார். நெசவுத் தொழிலோடு கவிதைத் தொழிலை ஒப்பிட்டு, கவிதை எப்படி உருவாக வேண்டும் என்று அவருடைய ‘தராசு’ விளக்குகிறது. தன் கலை இலக்கியக் கொள்கையை விளக்கவும், இளைஞர்களை அந்தப் போக்கில் வளர்க்கவும் பாரதியின் விருப்பத்தைக் ‘கவிதா மண்டலம்’ என்ற தொடர் சுட்டுகிறது. ஆயினும் அது அமைக்கப்பட்ட ஒரு ஸ்தாபனமாக விதிமுறைகளுடன் செயல்பட்டதாகத் தெரியவில்லை. கனக சுப்புரத்தினத்தை அது பாவேந்தர் பாரதிதாசனாக உருவாக்கிற்று.

பாரதிதாசன் தன் பங்குக்குத் தமிழ்க் கவிஞர் மன்றம் என்ற நோக்கங்களும், வடிவமும் தெளிவுபடுத்தப்பட்ட அமைப்பை உருவாக்கினார். கவிதைத் துறையின் பாரதிதாசனின் உருவ உள்ளடக்க மரபுகளை உள் வாங்கி, வளரும் ஒரு கவிதை ஸ்தாபனமாக அது உருப்பெற்றது. இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் கடற்கரைக் கவியரங்கம் தமிழகக் கவியரங்கங்களுக்கு ஒரு முன்னோடி.

30-களில் தேச விடுதலை என்ற உணர்வோடு, தேசீய இனங்கள் தங்கள் தங்கள் பண்பாடுகளைச் செழுமைப்படுத்த தன்னிச்சையான முயற்சிகளும் தொடங்கின. தேசிய இன உணர்வு பொங்கி எழுந்தது. தமிழ் மொழிப் பற்றும், தமிழ் இசைப்பற்றும், இக்காலத்தில் வலுப்பெற்றன. கம்பன், வள்ளுவன், இளங்கோவடிகள் போன்ற பெருங்கவிஞர்களின் பெயரால் அமைப்புகள் தோன்றி வளர்ந்தன. இவை அந்த அந்தக் கவிஞர்களின் நூல்களின் சிறப்பைச் சொற்பொழிவுகள் வாயிலாக மக்களிடம் பிரபலப்படுத்தின. செட்டி நாட்டில் தமிழ் நூல்கள், கட்டுரைகள், வெளியிட தமிழ்ப்பண்ணை, பாரதிப் பண்ணை, போன்ற பிரசுர அமைப்புகள் தோன்றின. வை. கோவிந்தன், கதிரேசன் செட்டியார் எ.கே. செட்டியார் போன்றோர் இம்முயற்சியில் தீவிரம் காட்டினர். டி.கே.சி.பி. ஸ்ரீ; கவிமணி, நாமக்கல்லார், சுத்தானந்த பாரதியார், பாரதிதாசன் போன்றோரின் நூல்கள் அதிகமாக வெளிவரத் தொடங்கின.

கம்பரை ஒரு ஆழ்வாராகப் பார்க்கும் பார்வையை விட்டு, அவரை ஒரு கலைஞராகப் பார்க்கும் போக்கையும், கம்ப இராமாயணத்தை ஒரு பக்திக் காவியமாகப் பார்க்கும் போக்கை விடுத்து அதை ஒரு பேரிலக்கியமாகப் பார்க்கும் பார்வையையும், இவ்வமைப்புகள் பிரபலப்படுத்தின. வள்ளுவர் நெறியைத் தமிழ்ப் பண்பாட்டின் அடித்தளமாக ஆக்கத் திருவள்ளுவர் கழகங்கள் பிரச்சாரம் செய்தன. இலக்கியத்தைப் பதவுரை, பொழிப்புரை, அணி, அழகு பார்க்கும் பார்வையிலிருந்து உள்ளடக்கத்தில் கவனம் செலுத்த இம்மன்றங்கள் உதவின.

தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்களின் பெருமுயற்சியால் முதன் முறையாகச் சங்க நூல்கள் மடங்கள், பெருநிலக்கிழார்கள், பெரும்பண்டிதர்கள் ஆகியோரின் வாசல்களைத் தாண்டி, தமிழ் மக்களின் அனுபவத்துக்குக் கிடைத்தன. இந்த அளப்பரிய செல்வத்தைச் சுவைத்த தமிழ்ச் சமூகம், தன் பழங்காலத்தில் மிகுந்த பெருமிதம் கொண்டது. குறிப்பாகத் திராவிட இயக்கத்தின் இனவாதக் கண்ணோட்டம் சங்க நூல்களால் மிகவும் செழுமையடைந்தது.

திராவிட இயக்க அமைப்பானது அடிப்படையில் ஒரு சமூக அமைப்பு என்றாலும், அது பண்பாட்டுத் துறையில் மிகுந்த கவனம் செலுத்திற்று. திராவிட இனம், அல்லது தமிழ் இனம் என்ற அளவு கோல் அவர்களுடைய கலை இலக்கிய அளவு கோலாயிற்று. அந்த அளவுகோலை வைத்துக் கொண்டு அவர்கள் கம்ப ராமாயணத்தை ஆரியப் புகழ்பாடும் ஒரு தமிழின எதிர்ப்பு இலக்கியமாகக் கண்டார்கள். சிலப்பதிகாரமோ வடவணை வென்ற தமிழனின் மரம்பாடும் பெருங் காப்பியமாகப் போற்றப்பட்டது. திருக்குறள் வேதத்திலும் உயர்ந்தது என்ற சைவ மரபு இவர்களால் மேலும் உயர்த்திப் பிடிக்கப்பட்டது. புறநாநூற்று வீரமும், அகநாநூற்றுக் காதலும் மக்களிடம் பெரும் செல்வாக்குச் செலுத்தின. திராவிடக் கழகத்திலிருந்து பிரிந்து ஒரு அரசியல் சக்தியாகத் தோன்றிய திராவிட முன்னேற்றக்கழகம் இந்தக் கருத்துக்களைத்தான் அரசியல் நலன்களுக்காக மிகத் திறமையாகப் பயன்படுத்திற்று. அதே காலத்தில் ம.பொ.சியின் தமிழரசுக் கழகம் அரசியல் நோக்கத்தோடு செயல்பட்டாலும், அதுவும் கலை இலக்கியத்துறையில் மிகுந்த அக்கறை காட்டிற்று. சிலப்பதிகாரம் திராவிட இயக்கத்தினரால் ஒரு இனவாதக் கண்ணோட்டத்தில் அணுகப்பட்டது. இவர்களோ அதை ஒரு மாபெரும் மக்கள் காப்பியம். அரசனுக்கு எதிராக ஒரு குடி மகள் - அதிலும் குறிப்பாக ஒரு பெண் - நடத்திய போராட்டம் பற்றிய காப்பியம் என்ற புதிய அணுகு முறையைக் கொடுத்தார்கள். இதே காலத்தில் சைவ இயக்கத்தின் வளர்ச்சியாக மறைமலையடிகளார் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கமும் அமைப்பு வடிவமும் பெற்றது. தமிழ் மொழியின் தொன்மைச் சிறப்பை வலியுறுத்திய இவர்கள் புதிதாகத் தமிழில் சேர்ந்த சொற்களையே ஒதுக்கித் தள்ளும் நிலைக்குப் பிரச்சாரம் செய்தார்கள். கூடிய மட்டிலும் தமிழில் எழுத வேண்டும் என்ற இன்றைய போக்கு இதன் பலனாகத் தோன்றிற்று. இன்னொரு பக்கம் பகுத்தறிவுச் சிகரம் சிங்கார வேலனார் மார்க்சீயத்தைத் தமிழ் சமூகத்துக்கு அறிமுகப்படுத்தத் தொடங்கினார். அதோடு சேர்ந்து கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றின் புதிய சமூகவியல் அணுகுமுறைக்கும் அவர் வித்திட்டார். இந்த வழியில் சைவம் சார்ந்த - பெண் விடுதலை சார்ந்த - உழைப்போர் சார்ந்த - ஒரு கலை இலக்கியப் போக்கை பாரதியின் கலை இலக்கியப் போக்கை - முன் கொண்டு செல்வதில் வ.ரா. கணிசமான பங்காற்றினார். திரு.வி.க.வும் இப்போக்கைப் பேணி வளர்க்கத் தொடங்கினார். கலை இலக்கியத்தில் மனித நேயத்தைத் தேடும் முயற்சிகளுக்கு மணிமேகலை மன்றங்கள், வள்ளலார் மன்றங்கள், போன்ற மன்றங்கள் பங்களிப்புச் செய்தன. டி.கே.சி.யின் ரசனை அணுகு முறை, சீனிவாச ராகவனின் ரசனையும் மேற்கத்தியப் போக்கும் கலந்த அணுகுமுறை ச. கணேசனின் கம்பன் கழகச் செயல்பாடுகள், இவையெல்லாம் தமிழகத்தில் ஆரோக்கியமான ஒரு கலை இலக்கிய அமைப்பு தோன்றுவதற்கு உரிய சூழ்நிலையைத் தோற்றுவித்தன.

அகில இந்திய அளவில் விடுதலைப் போராட்ட வேகமும், சோவியத் யூனியனின் தாக்கமும், பாஸிச ஆபத்திலிருந்து மனித குலத்தைக் காக்கும் வேகமும், அகில இந்திய அளவில் 36-ல் இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாகக் காரணமாயிருந்தன. அதைத் தொடர்ந்து சுதந்திர இந்தியாவில் ‘இப்டா’ உருவாயிற்று. தமிழகத்தில் 1948-ல் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கிளை நாரணதுரைக் கண்ணன் தலைமையில் உருவாயிற்று. மாநாடுகள் நடத்துதல், எழுத்தாளர்களைப் பாராட்டுதல், எழுத்தாளர் நலன்களைப் பேணுதல் என்ற வகையிலேயே அதன் செயல்பாடு இருந்தது. ஒரு இயக்கமாக அது செயல்படவில்லை. கிட்டத்தட்ட அதே காலத்தில் தோன்றிய தமிழ் எழுத்தாளர் சங்கமும் இதே மாதிரிதான் செயல்பட்டது. அதற்குப் பல மாவட்டங்களில் கிளைகள் இருந்தன என்பது ஒரு வேறுபாடு.

நெல்லையில் அண்ணாச்சி சண்முகம் பிள்ளை, நா.வா. ரகுநாதன், தி.க.சி, போன்றோர் இந்தக் காலத்தில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ற அமைப்பை நிறுவி நடத்தினர். அதுவும் தொடர்ந்து இயங்கவில்லை.

50-களின் தொடக்கத்தில் சென்னையில் மீண்டும் ஒரு தமிழ் எழுத்தாளர் சங்கம் கல்கி தலைமையில் தொடங்கப்பட்டது. ஆனால் அதுவும் இயக்கமாக உருப்பெறவில்லை.

இக்கால கட்டம் தமிழ் இசைத்துறையிலும் வளர்ச்சியை ஏற்படுத்திற்று. சமூகத்தின் மீது சினிமாவின் தாக்கம் அதிகம் படத்தொடங்கியிருந்தது. தியாகராஜ பாகவதர், சின்னப்ப பாகவதர், பாவனாசம் சிவன், என்.எஸ்.கே., போன்ற கலைஞர்கள் கொடிகட்டிப் பறந்தனர். இவர்களுடைய பேச்சாலும் பாட்டாலும் தமிழ் உரைநடையும் இசையும் மாற்றம் அடைந்தன. சங்கீதக் கச்சேரியில் தமிழ் இசைப் பாடல்கள் கேட்கத் தொடங்கின. தமிழ் மக்களின் இந்த இசை ஆர்வத்தை ஒரு இயக்கமாக வளர்த்த பெருமை முத்தைய்யா செட்டியாரையும், அவருடைய தமிழ் இசை மன்றத்தையும் சாரும்.

40-களின் பிற்பகுதியிலும் 50-களின் முற்பகுதியிலும் நிலப் பிரபுத்துவ ஆதிக்கங்களை உடைப்பதில் கம்யூனிஸ்டு இயக்கம் அளப்பரிய தியாகங்களைச் செய்தது. தேசத்தின் மிகச் சிறந்த புதல்வர்கள் துப்பாக்கிச் சூட்டிலும், தூக்குக்கயிற்றிலும் சாகடிக்கப்பட்டனர். கம்யூனிஸ்டுகள் மீது உழைக்கும் மக்களுக்கு மரியாதையும், செல்வாக்கும் அதிகரித்தன. தமிழகத் தியாகிகளின் நினைவாக உழைக்கும் மக்கள் பகுதிகளில் தியாகி பாலுமன்றம், தியாகி சிவராமன் மன்றம், களப்பால் குப்பு மன்றம், தியாகி பொன்னு மன்றம், தியாகி வேலாயுதம் மன்றம், தியாகி மாரி மணவாளன் மன்றம் போன்ற பல மன்றங்கள் தோன்றின. இவ்வமைப்புகள் ஓரளவுக்கு முற்போக்குக் கலை இலக்கிய அமைப்புகளின் பணியையும் செய்தன.

தமிழகக் கலை இலக்கியத்துறை, அல்லது பண்பாட்டுத் துறையின் நிகரற்ற 20-ம் நூற்றாண்டு வழிகாட்டியான பாரதியை அணுகும் பல்வேறு போக்குகள் தோன்றின. பாரதி அரசியலையும் சமூக மாற்றத்தையும் பாடியதால் அவன் அமர கவியல்ல என்றார் கல்கி. தற்காலத் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு போக்குகளுக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்த ‘மணிக்கொடி’யில் கூட அடிப்படை போக்குடையவர்கள் இருந்தார்கள். இன்னொரு சாராரோ பாரதி ஒரு ஆன்மீகக் கவி என்று அவனுக்கு நாமம் போட்டார்கள். பாரதி ஒரு பார்ப்பனக் கவி, சிறப்புக்குரியவனல்லன் என்றார்கள் திராவிட இயக்கத்தினர். இவர்கள் அனைவருக்கும் ஈடு கொடுத்து, பாரதியின் முழு ஆளுமையையும் வெளிப்படுத்த ஜீவா தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொண்டார்.

50-களில் தமிழக முற்போக்குக் கலை இலக்கிய உலகம் செழிப்பாக வேர் பிடித்து வளரத் தொடங்கிற்று. ரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்’ புதியதொரு இலக்கிய மரபையே தோற்றுவித்தது. பாரதிதாசன், ஜீவா ஆகியோரைத் தொடர்ந்து ரகுநாதன், கே.சி.எஸ். தமிழ் ஒளி, வெ.நா. திருமூர்த்தி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், போன்றவர்கள் கவிதைத் துறையைப் புரட்சிகரமாகப் பேணி வளர்த்தனர். கலை கலைக்காகவே என்ற முழக்கத்தோடு மணிக்கொடியின் ஒரு பகுதி ஏற்கெனவே வலுவான சக்தியாக வளர்ந்து, இளம் படிப்பாளிகளைக் கவரத் தொடங்கியிருந்தது. இவர்களுக்கு எதிராக, வ.ரா.வின் வழியில், இலக்கியம் மக்களுக்காகவே என்ற கருத்து மேலோங்கியது. இந்தக் கருத்தானது கலை கடவுளுக்காகவே, மேலோருக்காகவே, இன எழுச்சிக்காகவே, என்ற கருத்துக்களின் உக்கிரங்களையும் எதிர்த்து நின்றது. இலக்கியத்தையும் கலையையும் இறைவனோடு தொடர்புப்படுத்தி, இலக்கிய ஆய்வை அவரவர் ஆசைக்குத் தக்கபடி வளைத்த போக்குகளுக்கு எதிராக ரா.பி. சேதுப்பிள்ளை, தெ.பொ.மீ டாக்டர். மு.வ. போன்றோரின் ஆய்வுப் போக்குகளும் தடம் பதித்தன.

இவ்வாறு, பல வழிகளிலும் தமிழகம் ஒரு புதிய ஸ்தாபனத்தின் பிறப்புக்காகப் பொங்கி பூரித்துக் கொண்டிருந்தது. நகரங்களிலும் கிராமங்களிலும் தேவைகளுக்கேற்ப உருவாகிய பல்வேறு விதமான கலை இலக்கிய அமைப்புகளும் இந்தத் தோற்றத்துக்கு ஊட்டம் கொடுத்தன. இந்தப் பண்பாட்டு வளர்ச்சியின் சாரமே 1961-ல் கலை இலக்கியப் பெருமன்றம் என்ற பேரமைப்பாக உருப்பெற்றது.

ஜீவா ஒரு வலுவான தொழிற் சங்க வாதி. நாடறிந்த அரசியல் வாதி. ஆனால் அடிப்படையில் அவர் காலூன்றி நின்றது பண்பாட்டுத்தளத்தில்தான். அதில் நின்றுகொண்டு தான், அவர் சகலத்தையும் பார்த்தார், செயல்பட்டார். இக்கால கட்டம் கனிந்து நிற்பதை, புதிய ஒரு பண்பாட்டு இயக்கம் பிறப்பெடுக்க உருத்திரண்டு கொண்டிருப்பதை அவரால் மிகத்தெளிவாகக் கண்டு கொள்ள முடிந்தது. அக்காலத்தில் அவருக்கு உதவியாக இதே உணர்வுடன் ஆற்றல் வாய்ந்த ஒரு தளபதிகளின் படைவரிசையுமிருந்தது; பேராசிரியர் நா. வானமாமலை, தொ.மு.சி. ரகுநாதன், ஆர்.கே. கண்ணன், எம்.பி. சீனிவாசன், புதுக்கோட்டை சேதுராமன், கு. சின்னப்ப பாரதி, ஜெயகாந்தன், பாவலர் வரதராசன், டி.கே. பால சந்திரன், கவி. வே. நாரா. சிவகாமசுந்தரி போன்ற ஆற்றல்மிக்க தளபதிகள் அவரைப் புரிந்துகொண்டும், அக்கால கட்டத்தின் குரலைப் புரிந்து கொண்டும், ஒரு பெரும் படையாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஜீவாவின் வழிகாட்டுதலில் இப்பெரும் படையின் கூட்டு முயற்சியே கலை இலக்கியப் பெருமன்றமாக 1961-ல் உருப்பெற்றது.

கலை இலக்கியப் பெருமன்றத்தின் தோற்றத்துக்கான சூழ்நிலையை ஜீவா கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். “இன்று தமிழ்க் கலை இலக்கியம் வளர்ந்திருப்பது போல் என்றாவது வளர்ந்ததுண்டா? பேச்சுத்தமிழ் இன்று இருப்பதுபோல் இருந்திருக்கிறதா? நாடகத்தின் நிலை என்ன? சமீபகாலத்தில் இத்துறையிலும் திரையுலகத் துறையிலும் நாம் பெரும் வளர்ச்சியைக் கண்டு வருகிறோம். மேலும் செய்தித்தாள் துறையின் வளர்ச்சியைப் பாருங்கள். கலை இலக்கியங்களின் வளர்ச்சிக்க வாய்ப்புகள் எவ்வளவு பெருகியுள்ளன ..... உரைநடைத்துறை, நாடகம், ஓரங்க நாடகம், வானொலி நாடகம், தத்துவதரிசனம், வரலாறு, இசை, பயணக் குறிப்புகள், ஆராய்ச்சி நூல்கள், தொழில் நுணுக்க இயல், விஞ்ஞானம், பொது அறிவுத்துறைகள், யாவற்றிலும் நூல்கள் படைக்கப்பட்டு வருகின்றன. மொழிபெயர்ப்பு, அகராதி, ஆராய்ச்சிக் கலைக் களஞ்சியம், மடல், முடங்கல், தமிழ் வளர்ச்சிக்கழகம், தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம், நுண்கலைகள், இன்கலைகள், இவை வேறு! இவை குறித்து எமது பல்கலைக் கழகங்களில் மட்டுமின்றி, வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களிலும் ஆராய்ச்சியும், திறனாய்வும் பெருகியவாறுள்ளன. இந்த முழு வடிவ முன்னேற்றத்தால் மக்களுடைய கலாச்சார வாழ்வில் பெரும் எதிரொலிகள் கேட்கின்றன. இந்த முன்னேற்றத்தில் தெளிவும் உண்டு. குழப்பமும் உண்டு, முற்போக்கும் உண்டு, பின்னடைவும் உண்டு, நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு. ஆனால் ஒன்று - இந்த மாபெரும் பின்னணியில் தான் - இந்த கலாச்சாரப் பொது எழுச்சியின் ஒரு பகுதியாகத்தான் நமது மாநாடு அமைகிறது என்பதை யாரும் ஒப்புக்கொள்வார்கள்.”

பெரு மன்றத்தின் கொள்கை குறிக்கோள் பற்றிய விளக்கக்குறிப்பின் முன்னுரையில் அதன் முதல் பொதுச் செயலாளர் தா. பாண்டியன் இவ்வாறு சொல்லுகிறார். “தமிழகத்தின் பல பகுதிகளில் இயங்கி வரும் மன்றங்களை, ஒன்றாக ஒரு தலைமையின் கீழ் இணைத்து, ஒரே நோக்குடனும், போக்குடனும் கலை இலக்கியப் பணி புரிய வேண்டும் எனும் நன் நோக்குடன் தோற்றுவிக்கப்பட்டது தான். தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்றம்.” இவ்வாறு தமிழகத்தில் ஏற்பட்டுக் கொண்டிருந்த பண்பாட்டு மறுமலர்ச்சியின் மலராக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தை ஜீவாவும் அவருடைய தோழர்களும் மிகப்பரந்த அடித்தளமிட்டு உருவாக்கினார்கள்.

த.க.இ.பெ. 1961 - மே 28, 29, 30 மூன்று நாட்கள். கோவையில் நடந்த மாநாட்டில் அமைக்கப்பட்டது. இந்த மாநாடு தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றில் மிக முக்கியமான ஒரு சம்பவம். அன்றைய கல்வி அமைச்சர் சி. சுப்பிரமணியம் விழாவுக்கு வருகை தந்து, ஒரு வெள்ளிக் கோப்பையை மத்தியக் குழுவுக்குப் பரிசளித்ததோடு மத்தியக் குழு ஒரு பொது நூலகத்தை அமைக்க வேண்டும் என்ற வேண்டுகோளும் விடுத்தார். ஓவியத்துறை சம்மந்தமான ரூபாய் 140 மதிப்புள்ள புத்தகங்களையும் மத்தியக் குழுவுக்கு அன்பளிப்பாக அளித்தார். பொது மக்களுக்கு அன்றைய கலை இலக்கியப் பெருமன்றத்திடம் எந்த அளவு எதிர்பார்ப்புகள் இருக்கின்றன என்பதைக் காட்டுகிறது இது.

தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றில் பொது மக்கள் சார்பாக ஒரு கலை இலக்கிய அமைப்பு தோன்றுவது இதுவே முதல் முறை. இதில் குறிப்பிடத்தக்கச் சிறப்பு அம்சம் த.சு.இ.பெ.யின் அடிப்படைக் கொள்கையாக மனிதாபிமானத்தை அமைத்தது. ஜீவா சொல்கிறார்; “மனிதத்துவப் பண்பை வளர்க்கும், போற்றும் - ரீதியிலே, எவ்விதக் கலை வடிவங்கள் - கலைப் படைப்புகள் அமைந்தாலும் அவற்றை நாம், வரவேற்கிறோம் என்று இம்மாநாட்டில் பிரகடனம் செய்திருக்கிறோம்.” இந்த மனிதாபிமானத்தையே பின்னால் 1966-பிப்ரவரி 16 முதல் 20 வரை பொள்ளாச்சியில் நடந்த 2-வது மாநில மாநாட்டில் தலைவர் ரகுநாதன் மிகச் சிறப்பாகத் தெளிவு படுத்தியிருக்கிறார். சுரண்டலற்ற, அடக்கு முறையற்ற ஜனநாயக பூர்வமான சோசலிச சமூகத்தைக் கலை இலக்கியங்கள் லட்சியமாகக் கொள்ள வேண்டும் என்று கோவை மாநாட்டில் ஜீவா அரசியல் வழிகாட்டுதல் அளித்திருந்தார். இந்த வழிகாட்டுதலை ஏற்று ரகுநாதன் மனிதாபிமானத்தை மேலும் தெளிவுபடுத்துகிறார். அவர் சொல்லுகிறார்: “மனிதாபிமானம் என்பது மனிதனின் பேராற்றலை, மனிதப் பிறவியின் மகத்துவத்தை உணர்த்துவதும், ஒப்புக் கொள்ளுவதும் ஆகும். அதே சமயம் மனிதனுக்கு இழைக்கப்படும் அநீதிகள், கொடுமைகள், ஆகியவற்றைக் கண்டு கொதித்தெழுகின்ற போர்க்குணமும் ஆகும். சொல்லப்போனால் தாழ்த்தப்பட்ட மனிதனுக்கு மந்திரத்தை உபதேசிப்பதன் காரணமாக நான் நரகத்தில் தள்ளப்படுவேன் என்றால் அந்த நரக வாசத்தையும் நான் மகிழ்ச்சியோடு ஏற்கத் தயார் என்று சொன்ன இராமானுஜம் மனிதனுக்குப் பணிபுரிவதற்காக நான் இங்கு பிறவி எடுக்க வேண்டும் என்றால், அதற்காக நான் ஆயிரம் பிறவிகளையும் எடுக்கத் தயார் என்று முழங்கிய விவேகானந்தனும் கைக்கொண்ட மனிதாபிமானமாக அது இருத்தல் வேண்டும்..... உண்மையான மனிதாபிமானம் என்பது போர்க்குணம் மிக்கதாகும். அது தீமை கண்ட இடத்தில் சீறும், கொடுமை கண்ட இடத்தில் கொதித்துக் குமுறும். அநியாயத்தைக் கண்ட இடத்தில் அதனை அழித்து ஒழிக்கக் கொடி தூக்கும். அத்தகைய போர்க்குணம் மிக்க மனிதாபிமானத்தையே நாம் மனிதாபிமானமாக மதிப்பிடுகிறோம்.”

கோவை மாநாட்டில் பெருமன்றத்தின் கொள்கை உருவாக்கப்பட்டதோடு, அக்கொள்கையைச் செயல்படுத்த ஒரு மத்தியக் குழுவும், பல்வேறு துணைக்குழுக்களும் அமைக்கட்பட்டன. தலைவர் ஜீவா, துணைத்தலைவர் ரகுநாதன், பொதுச் செயலாளர் தா. பாண்டியன், இவர்கள் போக, ஆர்.கே. கண்ணன், முகவை இராஜமாணிக்கம், எம்.பி. சீனிவாசன், டாக்டர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, கவி.வே. நாரா, எஸ். காமராஜ், என். கிருஷ்ணசாமி, கே.பி.எஸ். கோன், கு. சின்னப்ப பாரதி, மு. பழனியப்பன், தா.வே. சீராச்சாமி, பேராசிரியர் நா. வானமாமலை, ஜெயகாந்தன், தஞ்சை ராமமூர்த்தி, கடலூர் பாலன், டி.கே. பாலச்சந்திரன் ஆகியோரைக் கொண்ட மத்தியக் குழு அமைக்கப்பட்டது. இதுபோக இலக்கியத்துக்கும், நாட்டார் இலக்கியத்துக்கும், நாடகத்துக்கும், இசைக்கும் இலக்கிய மன்றத்துக்கும், ஓவியத்துக்கும் துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன.

த.க.இ.பெ. தொடங்கும் முன்னமேயே அகில இந்திய அளவில் முற்போக்கு எழுத்தாளர் தேசீய சம்மேளனம் அமைக்கப்பட்டு, அது தமிழ் நாட்டிலும் கிளைவிட்டிருந்தது என்பது ஜீவாவும் அவர் தோழர்களும் அறியாததல்ல. இருந்தாலும் ஜீவா கலை இலக்கியம் பெருமன்றம் என்ற பெயரையே இந்த அமைப்புக்குச் சூட்டினார். இந்தியாவில் வேறெங்கும் கேட்டிராத இந்தப் பெயரை அவரும் தோழர்களும் சூட்டக் காரணம் என்ன? பிரதானமாக ஜீவா விரும்பியது புதிய ஜனநாயகத்துக்குத் தேவையான சோசலிச சமூகத்தை உருவாக்கும் வலிமையுள்ள புதிய மனிதனைப் பண்பாட்டு ரீதியாக வளர்த்தெடுப்பதே. கோவை மாநாட்டின் தொடக்க உரையில் அவரே சொல்லுகிறார்.

“... இந்த மாபெரும் பின்னணியிலேதான், இந்தக் கலாச்சாரப் பொது எழுச்சியின் ஒரு பகுதியாகத்தான் நமது மாநாடு அமைகிறது.”

கலைஞர்கள், இலக்கியவாதிகள், தத்துவ அறிஞர்கள், விமர்சகர்கள், இவர்களை அனுபவிக்கிற மக்கள்; இவர்களின் கூட்டமைப்பாகத்தான் ஜீவா இந்தப் பேரமைப்பைக் கண்டார். குறைந்தபட்சம் மனித நேயத்தை ஏற்றுக் கொள்ளுகின்ற யாரும் இதில் உறுப்பினராகலாம் என்ற வரையறை இதனால்தான் வைக்கப்பட்டது.

த.க.இ.பெ.யின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளுகின்ற எந்தக் கலை இலக்கிய அமைப்பும் அப்படியே த.க.இ.பெ.யுடன் இணைந்து கொள்ளலாம் என்ற விதிமுறை இதனால்தான் உருவாக்கப்பட்டது.

ஜீவாவின் நோக்கம் மிகவும் விசாலமானது, ஒரு மக்கள் பண்பாட்டுப் பல்கலைக்கழகம் அமைக்கும் ஆசை கொண்டது, தமிழக மக்களின் பண்பாட்டு வாழ்வைப் புரட்சிகரமாக மாற்றியமைக்கும் பெருநோக்கம் கொண்டது. பண்பாட்டுத்தளத்தின் சகல துறைகளிலும் ஞானம் பெற்ற முன்னோடிகள், இவர்களிடம் பயிற்சி பெறும் இளைஞர்கள், தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்படும் கிளைகள், அவற்றின் வழியே எங்கெங்கும் பூத்துக் குலுங்கும் மனிதநேயக் கலை இலக்கிய மலர்கள், இவற்றில் தோய்ந்து, வலிமையும், விசாலமும், மென்மையும், ஒருசேரப் பெறும் தமிழினம் - இதுவே அவர் கனவு.

ஆனால் கனவுகள் லேசில் பலித்துவிடுமா?
நாலிலே ஒன்றிரண்டு பலித்தாலும்

பலிக்கும் என்கிறான் பாரதி.

கோவை மாநாட்டைத் தொடர்ந்து சிறிதுகாலமே ஜீவாவால் ஓடியாடி வேலை செய்ய முடிந்தது. 62-ல் சோசலிச உலகத்தில் கீறல் விழுகிறது. எல்லைப் பிரச்சினையால் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் மோதல் ஏற்படுகிறது. இந்தியாவிலும் வலிமைமிக்க கம்யூனிஸ்ட் இயக்கத்தில் விரிசல் ஏற்படுகிறது. ஏற்கெனவே பாதிப்புக்குள்ளாகியிருந்த ஜீவாவின் உடல் நலம் சீன ஆக்கிரமிப்புக்கு எதிராகத் தமிழகத்தைத் தட்டி எழுப்பும் முயற்சியில் மேலும் பாதிப்படைகிறது. 1963-ஜனவரி 10-ல் அந்த மாபெரும் மனிதநேய இதயம் துடிப்பதை நிறுத்திற்று.

என்றாலும் கலை இலக்கியப் பெருமன்றம் தொடர்ந்து வளர்ந்தது.

பெரு நகரங்களில் மட்டுமல்ல, சிற்றூர்களிலும் கூடக் கலை இலக்கியப் பெருமன்றக் கிளைகள் தோன்றின. கவியரங்கங்கள் பட்டிமன்றங்கள், கருத்தரங்குகள், விழாக்கள் போன்றவை மூலம் மனித நேய இலக்கியத்தின் சாரங்கள் மக்களுக்கு ஊட்டப்பட்டன. பெரிய - சிறிய நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. 1963-ல் மதுரையில் முதல் மாநில மாநாடு சிறப்பாக நடந்தேறியது. தொ.மு.சி. ரகுநாதன் அமைப்பின் தலைமைப் பொறுப்பேற்றார். பொதுச் செயலாளர் தா. பாண்டியன், கலை இலக்கியப் பெருமன்றக் கூட்டங்களுக்குப் பத்தாயிரக்கணக்கில் ரேட் வசூல் ஆகும் அளவுக்கு அமைப்பின் செல்வாக்கு மக்களிடையே பரவிற்று.

மதுரை மாநாட்டுக்குப் பின்னர் பெருமன்றம் இலக்கியத் துறையில் பெரும் சாதனைகள் புரிந்திருக்கிறது. பேராசிரியர் நா.வா. ரகுநாதன், ஜெயகாந்தன், கே.சி.எஸ்; தி.க.சி. போன்றவர்கள் படைப்பிலக்கியத் துறையிலும், விமர்சனத் துறையிலும் பெரும் சாதனைகளைச் செய்தார்கள். ஆனால் கலைத் துறையில் பெருமன்றத்தின் சாதனை மிகக் குறைவே.

பெருமன்ற நிறுவனத்தில் இலக்கியவாதிகளின் ஆளுமை அதிகமாய் இருந்தது இதற்கான ஒரு காரணமாக இருக்கலாம். நாடகக்குழு, இசைக்குழு, ஓவியக் குழு போன்ற பிற குழுக்கள் முறையாகச் செயல்படாமல் இருந்திருக்கலாம். இக்குறைகள் பற்றி பொள்ளாச்சியில் நடந்த 2-வது மாநில மாநாட்டில் ஆய்வு செய்யப்பட்டதாகவோ, முடிவுகள் எடுக்கப்பட்டதாகவோ தெரியவில்லை. 5-நாட்கள் வெகு விமரிசையாக மாநாடு நடந்திருக்கிறது. 2-நாள் பகல் முழுவதும் பிரதிநிதிகளின் மாநாடு நடந்திருக்கிறது. பிரதிநிதிகளின் பேருரை வீச்சுக்களாகவே அந்தக் கூட்டம் நடந்திருக்கிறது. துணைக்குழுக்களின் அறிக்கைகள், அவற்றின் மீது விவாதங்கள், முடிவுகள், என்று ஆழமாக எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. நிறுவன அமைப்பிலோ, அதன் செயல்பாடுகளிலோ போதிய கவனம் செலுத்தப்படவில்லை. ரகுநாதனின் கொள்கை அறிக்கை மாநாட்டில் படிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.

66-க்கு பிறகு 68-மே 30 முதல் ஜூன்-2 வரை திருச்சியிலும் இதுமாதிரியான ஒரு பெரு விழாவே நடந்திருக்கிறது. அந்த மாநாட்டின் சாதனை ரகுநாதன் கோவை மாநாட்டில் வைத்த கொள்கை அறிக்கை இங்கு அங்கீகரிக்கப்பட்டதே. இங்கும் கூட அமைப்பின் பலமும், பலவீனமும், வீச்சும், செயல்பாடுகளின் பன்முகத் தன்மையும் அமைப்பு ரீதியாகப் பரிசீலனை செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. பல்வேறு விதப் பேருரைகளிலும் கலை நிகழ்ச்சிகளிலும் மாநாடு நிறைவு பெற்றுவிட்டது. இந்தக் கவனக் குறைவின் காரணமாகக் கலை இலக்கியப் பெருமன்றமே பெரும் பேச்சாளர்களுக்காகச் சிறப்புரைகளும் பேருரைகளும், பட்டிமன்றங்களும், இதர நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யும் ஒரு துணை அமைப்பாக மாற்றிற்று, அல்லது ஆண்டுக்கு ஒரு நாடகம் நடத்தும் மேடையாயிற்று. புதிய ஜனநாயக, சோசலிச, மனித நேயம் கொண்ட புதிய மனிதனை உருவாக்கும் பன்முக முயற்சிகளைக் கொண்ட அதன் பண்பாட்டு லட்சியத்தின் மீது தூசு படியத் தொடங்கிற்று. லட்சியப்பற்றும், வேகமும் கொண்ட இளைஞர்கள் விரக்தியடைந்தனர். இதற்குப் புறக் காரணங்களும் உள. கலை இலக்கியப் பெருமன்றத்துக்கு என்று முழுநேரப் பொறுப்பாளர் யாரும் எழுபதுகளில் இல்லை தலைவர் ரகுநாதனின் உழைப்பு முழுக்க முழுக்க சோவியத் நாடு அலுவலகத்துக்குப் போயிற்று. பாண்டியன் முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார் அவருடைய கலை இலக்கியப் பார்வையும் அரசியல் தளத்தில் கால் ஊன்றி நின்றுகொண்டு பண்பாட்டுத் தளத்தை அணுகும் பார்வையாக மாறிவிட்டிருந்தது. இந்தப் பார்வையானது கலை இலக்கியப் பெருமன்றத்தை மொத்தமாகப் பாதித்தது. கலை இலக்கியப் பெருமன்றம் என்பது கம்யூனிஸ்டுக் கட்சியின் லட்சியங்களைப் பிரகடனம் செய்யும் கலை இலக்கிய மேடையே என்ற கருத்து மேலோங்கிற்று. ஆகப் பெரிய லட்சியம் மனிதகுல சேமம். இதை அடையத் தொழிற் சங்கங்கள் பொருளாதாரப் போராட்டங்களை நடத்துகின்றன. அரசியல் கட்சிகள் அரசியல் போராட்டங்களை நடத்துகின்றன. பண்பாட்டு அமைப்புகள் (கலாச்சார அமைப்புகள்) பண்பாட்டுப் போராட்டங்களை நடத்துகின்றன. இவற்றின் லட்சியங்கள் ஒன்றே. செயல்பாடுகளும் ஒரு நோக்கத்தைக் கொண்டவையே ஆனாலும் செயல்பாடுகளின் தன்மைகள் தளத்துக்குத் தளம் வித்தியாசமாகவே உள்ளன. உடம்பின் பொது லட்சியம் ஒன்றே. இந்த லட்சியத்துக்காகவே எல்லா உறுப்புகளும் செயல்படுகின்றன. ஆனாலும் கையின் செயல் வேறு, காலின் செயல் வேறு, மூளையின் செயல் வேறு, இதயத்தின் செயல் வேறு, வயிற்றின் செயல் வேறு, சிறு நீரகத்தின் செயல் வேறு, சில வேளைகளில், சில உறுப்புகள் பழுதுபட்டால், இன்னொரு உறுப்பு உதவி செய்யும். ஆனால் அந்தந்தக் கடமையை அந்தந்த உறுப்புகள் செய்வதே இயல்பானது முழுமையானது.

ஆனால் வருத்தலுக்குரிய செய்தி என்னவென்றால் மனிதப் பொது லட்சியத்தை அடையும் வழி முறையில் அரசியல் வழிமுறையே ஆக முக்கியமானது என்று கருதும் போக்கு மேலோங்கி இருக்கிறது. நிலப் பிரபுத்துவ, முதலாளித்துவ வாழ்க்கை முறையின் விளை பொருளான. இந்தப் போக்கு, இன்றைய ஜனநாயகயுகத்திலும் அப்படியே தூக்கிப் பிடிக்கப்படுகிறது. அரசியல் மாற்றம் வந்தால் போதும், எல்லா மாற்றங்களும் கொண்டு வந்துவிடலாம் என்ற குருட்டு நம்பிக்கைப் போக்கு இது. மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவும், சீரணித்துக் கொள்ளவும் தகுதியும் வலிமையும், விசாலமும், உள்ள மனித இதயங்களை மனித ஆன்மாக்களை பண்பாட்டுத் துறையால்தான் உருவாக்க முடியும் என்ற கருத்தை இப்போக்கு நிராகரிக்கிறது. இதனால் உடனடி அரசியல் நோக்கங்கள் பண்பாட்டுத் துறையின் மீது திணிக்கப்படுகின்றன. உடனடி அரசியல் தேவைகள் பண்பாட்டுத்துறைக்கு அன்னியமானவையோ, வேண்டாதவையோ அல்ல. மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்ட முற்போக்கு கலை இலக்கியங்கள். சமூகத்தின் உடனடித் தேவைகளைக் கலைப் படைப்புக்கு உள்ளடக்கமாக எடுத்துக் கொள்ளாவிட்டால் அவை மாண்டு மடிந்து போவது திண்ணம். ஜீவா என்ன சொல்லுகிறார்? “நாளை விரிசோதி என மேதினியை மேவத்தகு ஆற்றலைப் படைத்த இன்றைய உண்மைத் துணுக்குகளை அனுபவக் கூறுகளை, உணர்ச்சித்துளிகளை, ஆதர்சக் கதிர்களை, கலை இலக்கியத் துறையிலே ஆட்சி கொண்டு, வாழ்வின் மீட்சியிலே மக்கள் வெற்றி பெறப் பணிபுரியுங்கள்” என்று அறை கூவல் விடுக்கிறார்! முற்போக்குக் கலை இலக்கியத் துறையினருக்கு இதை விடச் சிறந்த ஒரு வழிகாட்டுதலை வேறு எங்கும், எவரும், எப்போதும் கொடுத்ததாக நான் இதுவரை அறியவில்லை. இதுதானே கலை இலக்கியப் பெருமன்றத்தின் ஆதாரவெளிச்சம்.

இந்த வெளிச்சம் பிற்காலத்தில் தெரிந்தோ தெரியாமலோ அரசியல் வெளிச்சத்துக்கு உட்படுத்தப்பட்டது. பண்பாட்டுத் தளத்தின் சுதந்திரத்தை - அதன் தனித் தன்மையை அரசியல் தளத்துக்குச் சமமான அதன் முக்கியத்துவத்தை இடைக்காலத் தலைவர்கள் அவ்வளவாகப் போற்றவும் இல்லை பொருட்படுத்தவுமில்லை என்றே தோன்றுகிறது. இதன் விளைவாக, சிறந்த மனிதநேயக் கலை இலக்கியவாதிகள் பெருமன்றத்தை விட்டு விலகினர். கலைக் குழுக்கள் நாடகக் குழுக்கள் உருவாக்கம் தடைபட்டது. நிறுவனத்தின் மீது மட்டுமல்ல, அதன் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரின் படைப்புகளிலும் இந்தப் போக்கின் நிழல் படிந்தது. இதை விட விசித்திரம் என்னவென்றால் பிற மேடைகளில் சோசலிச லட்சியத்துக்கு விரோதமாகப் பேசுபவர்கள் கூடக் கலை இலக்கியப் பெருமன்ற மேடையில் ஏறியதும் கம்யூனிஸ்டுக் கட்சியின் அரசியல் புகழ்பாடுவோர்களாக நிறம் மாறி விடுகின்றனர். இந்த வீழ்ச்சியிலிருந்து தன்னை மீட்டுக் கொள்ளக் கலை இலக்கியப் பெருமன்றம் இக்காலத்தில் நிறுவன ரீதியாக எதுவும் செய்யவில்லை.

70-களின் தொடக்கத்தில் கலை இலக்கியப் பெருமன்றத்தைப் புனரமைக்க வேண்டும் என்ற ஆசை. தமிழகத்தில் பலருக்கும் பரவலாக ஏற்பட்டது. தோழர் பாலதண்டாயுதம் வடக்கிலிருந்து சில முயற்சிகளைத் தொடங்கினார் அவைகளும் முழுமை அடையவில்லை. தெற்கே பேராசிரியர் நா.வா. இளைஞர்களைத் திரட்டி, கலை, இலக்கியப் பெருமன்றச் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தினார். அவருடைய ஆராய்ச்சிக் குழுக் கூட்டங்கள் பண்பாட்டு ரீதியாக இளைஞர்களைக்கூட்டி பயிற்சி அளித்து, வளர்க்கும் பாசறை ஆயிற்று. பேராசிரியரின் வீச்சு தென்மாவட்டங்களில் கலை இலக்கியப் பெருமன்றம் வேர்பிடித்து வளர உதவின. என்றாலும் மத்திய அமைப்பு சோர்ந்து முடங்கிக் கிடந்ததால் இந்தச் செயல்பாடுகள் வடக்கு மாவட்டங்களில் வீச்சு ஏற்படுத்தவில்லை.

இக்கால கட்டத்தில் கோவை வானம்பாடிக் குழு புதுக்கவிதைக்குப் புதிய உள்ளடக்கத்தைக் கொடுத்து, தமிழகம் முழுவதும் பிரபலப்படுத்தியது. தி.க.சி. தாமரையின் மூலம் ஆற்றல் உள்ள பல இளைஞர்களை இலக்கிய உலகுக்கு அறிமுகப்டுத்தினார். இவர்கள் பலர் நெல்லை ஆய்வுக் குழுக் கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொண்டனர். கலை இலக்கியப் பெருமன்றம் செயல்பட வில்லையே என்ற ஏக்கம் இவர்களைக் கோபப்படுத்திற்று. இவர்களின் முயற்சி மதுரையில் அப்போது துடிப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த நவபாரதி, பொன்மணி, பரிணாமன், சந்திரபோஸ் போன்ற தோழர்களின் ஒத்துழைப்பு, சிற்பி மற்றும் கோவை வானம்பாடிக் குழுவின் ஆதரவு, இவையெல்லாம் சேர்ந்து 1971-ல் தென் தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ற அமைப்பாக உருப்பெற்றது. இதன் முதல் மாநாடு மதுரையில் 2-நாள் வெகு சிறப்பாக நடந்தது. ஆனாலும் கவிதை என்று சொல்லுவதற்குரிய பிரதான பொருள் எது? உருவமா உள்ளடக்கமா என்ற பிரச்சனையில் தோழர்களிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு அந்த அமைப்பும் குறைப் பிரசவமாக மரணமடைந்தது.

73-ல் பாலன் மறைவு அவருடைய முயற்சிகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது.

சென்னையில் டி.எஸ். ரவீந்திரதாஸ் தொடர்ச்சியாகச் சில நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தார். புதுக்கோட்டை, தஞ்சை, மதுரை, ராஜபாளையம், சிவகங்கை, நெல்லை , குமரி, தருமபுரி, கோவை மாவட்டங்களில் சில கிளைகள் தங்களுக்குத் தோன்றியவாறு செயல்பட்டுக் கொண்டிருந்தன.

குமரிக்கிளை 1964-விலேயே தோற்றுவிக்கப்பட்டு விட்டது. ஆயினும் 72-வரை ஆண்டுக்கு ஒரு முறை பாரதி விழாவும், கவிமணி விழாவும் நடத்துவதே அவர்களின் செயல் திட்டம். ஆராய்ச்சிக் குழுவின் தாக்கத்தால், குமரியில், பண்பாட்டுப் பிரச்சனைகளை விஞ்ஞான சித்தாந்த அடிப்படையிலே தெரிந்து கொள்ளும் ஆர்வமுள்ள ஓர் இளைஞர் படை ஆரோக்கியமாக உருவாயிற்று. கவிதை, சிறுகதை, சிறு நாடகங்கள், வில்லுப் பாட்டுக்கள், கனியான் கூத்துகள், விமர்சனம், தத்துவம் இவற்றில் ஆர்வமுள்ள இளைஞர்கள் வாரந்தோறும் கலை இலக்கியப் பெருமன்றக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்தினர். இக்கூட்டங்களின் பெரும் பேச்சாளர்களின் சிறப்புரைகள் தவிர்க்கப்பட்டன. பேராசிரியர்கள் வானமாமலை, சிவசுப்பிரமணியன், டி.எஸ். நடராஜன் பொன்னீலன் போன்றோர் இளைஞர்களின் படைப்புகளை ஆக்கபூர்வமாக விமர்சித்து, ஆலோசனை கூறி அவர்களைச் செழுமைப்படுத்தி வளர்க்கப் பெரிதும் உதவினர். இந்த வளர்ச்சியால் இரண்டு விளைவுகள் ஏற்பட்டன. ஒன்று 1975-இல் ‘புதிய வானம்’ என்ற கலை இலக்கியமாத இதழ் தோன்றியது. பேராசிரியர் நா.வா. வழிகாட்டுதலில் ‘குமரி கலை இலக்கிய முகாம்’ என்னும் ஆரோக்கியமான செயல்பாடு தோன்றியது. ஆயினும் இவற்றின் வீச்சுக்கள் தென் மாவட்ட எல்லைகளைத் தாண்ட வெகுகாலம் பிடித்தது.

1971 முதல் 1977 வரையில் உள்ள காலம் சுதந்திர இந்திய அரசியலில் மிகவும் கொந்தளிப்பான காலம். இந்திரா காந்தியும் கம்யூனிஸ்ட் கட்சியும் இதர சில சக்திகளும் இணைந்து தேசிய ஜனநாயகப் புரட்சியை முழுமைப்படுத்தி சோசலிசத்துக்குச் செல்லும் பாதையில் முனைந்தன. ஜெ.பி. தலைமையில் இதர கட்சிகள் அணி அமைத்து முழுப்புரட்சிக்கான போராட்டத்தைத் தீவிரப்படுத்தின. இக்காலத்தில் மக்கள் ஜனநாயகப் புரட்சியை விரும்பிய இதர கம்யூனிஸ்டு இயக்கங்களும் ஜெ.பி.யோடு சேர்ந்தன. தேசத்தின் அரசியல் சக்திகள் தெட்டத் தெளிவான இரண்டு அணிகளாக எதிரெதிராக மோதின. சுதந்திர இந்தியாவில் இம்மாதிரியான மோதல் நிகழ்ந்தது. இதுவே முதல்முறை. இந்தப் பெரும்போரில் ஈடுபட்ட பல்வேறு அரசியல் சக்திகளுக்குத் தங்கள் தங்கள் கருத்துக்களைக் கலாபூர்வமாகச் சொல்லக் கலை இலக்கிய அரங்கங்கள் தேவைப்பட்டன.

வலதுசாரிகளின் பண்பாட்டு ஆயுதங்களாக ஆர்.எஸ்.எஸ், ஜமாத். சி. இஸ்லாமி, ஆனந்தமார்க்கம் போன்ற வகுப்புவாத ஆயுதங்கள் ஏற்கெனவே கூர்தீட்டப்பட்டுத் தயாராக இருந்தன. காங்கிரஸ் போன்ற இயக்கங்கள் தங்கள் அரசியல் செல்வாக்காலும் பொருளாதார பலத்தாலும் பிரபல கலை இலக்கிய வாதிகளையும், பன்பாட்டுவாதிகளையும் தேவைப்படும்போதெல்லாம் வாடகைக்கு அமர்த்திக் கொண்டார்கள்.

70-களில் முற்பகுதியில் கோவை ஈஸ்வரனின் மாவோயிசச் சார்புப் பத்திரிகையான ‘மனிதன்’ படித்த இடதுசாரி இளைஞர்களிடையே பெரிய வீச்சை ஏற்படுத்திற்று. இந்த இளைஞர்களின் சங்கமமாக 73-ல் சென்னையில் மக்கள் எழுத்தாளர் சங்கம் தொடங்கப்பட்டது. ஆயுதம் தாங்கிய மக்கள் ஜனநாயக புரட்சிக்குத் துணையாகக் கலை இலக்கியம் குரல் எழுப்ப வேண்டும் என்று, இந்தச் சங்கமும் அரசியலுக்குச் சமுதாயப் புரட்சியில் முதன்மை பாத்திரம் வழங்கி, கலை இலக்கியத்தை அதன் தொண்டனாகவே அங்கீகரித்தது. 30-களில் மாஸ்கோவில் சாடனோவால் உருவாக்கப்பட்ட இந்தக் கலைக் கோட்பாடானது மக்கள் எழுத்தாளர் சங்கத்தின் சங்க நாதமாக அமைந்திருந்தது.

இந்த அமைப்பு அப்போதிருந்த ஆளும் அரசியலின் போலீசால் பிறந்த உடனேயே கொலை செய்யப்பட்டது.