மெய்யறம் (1917)/முன்னுரை

விக்கிமூலம் இலிருந்து

மெய்யறம்
முன்னுரை.

இந்நூலின் முதற்பதிப்புப் பிரதிகள் செலவாகிவிட்டமையாலும், இதனைப் பலர் வேண்டினமையாலும், இதனை இரண்டாம் முறை அச்சிற் பதிப்பிக்கத் துணிந்து சென்னைக் கிறிஸ்டியன் கல்லூரிச் சுதேசபாஷா அத்தியக்ஷகர் ஸ்ரீமான். த. கனகசுந்தரம் பிள்ளை (பி. ஏ.) அவர்களிடம் காட்டினேன். அவர்கள் இதில் சில சீர்திருத்தங்கள் செய்து அழகுபடுத்தித் தந்தார்கள். இதன் முதற்பதிப்புப் பிரதியின் பாடங்களுக்கும் இப்பதிப்புப் பிரதியின் பாடங்களுக்கு முள்ள பேதங்களில் பெரும்பாலன ஸ்ரீமான். பிள்ளையவர்களாற் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள். இவ்வாறு இந்நூலை மேம்படுத்தித் தந்த ஸ்ரீமான். பிள்ளையவர்களுக்கு யான் நன்றி பாராட்டக் கடமைப் பட்டுள்ளேன்.

இந்நூலை மாணவரியல், இல்வாழ்வியல், அரசியல், அந்தணரியல், மெய்யியல் என்னும் ஐந்து இயல்களாகப் பகுத்துள்ளேன். அவ்வாறு யான் பகுத்ததற்குக் காரணம் மானுடப்பிறப்பை அடைந்த ஒவ்வொருவரும் முறையே மாணவராய், இல்வாழ்வாராய், அரசராய், அந்தணராய், மெய்ந் நிலையை அடையலாமென்ற எனது கோட்பாடும், அவர்கள் அவ்வாறு அந்நிலைகளை அடையவேண்டுமென்ற எனது விருப்பமுமே. "பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்; சிறப்பொவ்வா, செய்தொழில் வேற்றுமை யான்" - என்றபடி பிறப்பால் மனிதவர்க்கத்தின ரெல்லாரும் ஒரே தன்மைய ரென்பதும், ஒவ்வொருவரும் தாம் தாம் கைக்கொள்ளும் ஒழுக்கங்களுக்குத் தக்கவாறு உயர்வையும் தாழ்வையும் அடைவரென்பதும், அறிவுடையோர் பலரும் கொண்ட கொள்கை. ஆதலால், இதனை வாசிக்கும் ஒவ்வொருவரும் தத்தம் நிலைக்கு உயர்ந்ததாயுள்ள நிலைக்குரிய ஒழுக்கங்களைக் கைக்கொண்டு அவ்வுயர்ந்த நிலையை அடைந்து அவ்வாறே ஒவ்வோர் உயர்ந்த நிலையையும் அடைந்து மேம்படுவார்களாக.

இந்நூற்குச் சிறப்புப் பாயிரம் தந்தவர்கள் கல்வி கேள்வி ஒழுக்கங்களால் நிறைந்து மெய்யந்தணராய் விளங்காநின்ற ஸ்ரீ. சகஜாநந்த சுவாமியவர்கள். இந்நூலின் முதற்பதிப்பையும், எனது மற்றைய நூல்களிற் சிலவற்றையும், இந்நூலின் இப்பதிப்பையும் அச்சிட்டு வெளிப்படுத்துவதற்குப் பொருளுதவி செய்தவர்கள், தென் ஆபிரிக்காவில் வியாபாரம் செய்து பொருளீட்டித் தக்க பரோபகாரம் செய்துகொண்டிருக்கிற ஸ்ரீமான். த. வேதியப்பிள்ளை யவர்களும், ஆங்கு "விவேகபாநு" என்னும் அரிய தமிழ்ப்பத்திரிகையை நடாத்தி ஆங்குள்ள நம் தமிழ்ச் சகோதர சகோதரிகளுக்கு நன்மை புரிந்துவரும் ஸ்ரீமான். சொ. விருத்தாசலம் பிள்ளையவர்களுமே. அவர்களுக்கு யான் செய்யும் கைம்மாறு, அவர்கள் அவ்வாறே பிறர்க்கும் உதவி புரிந்துவர வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை யான் பிரார்த்திப்பதே.

பிரம்பூர், சென்னை.
பிங்கள ௵ ஆவணி ௴ .5௳
'வ.உ.சிதம்பரம் பிள்ளை.
"https://ta.wikisource.org/w/index.php?title=மெய்யறம்_(1917)/முன்னுரை&oldid=1471378" இலிருந்து மீள்விக்கப்பட்டது