மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்/6. கிணறுகள் - செய்குளம் - செங்கற்கள்
5000 ஆண்டுகட்கு முற்பட்ட கிணறுகள்
மொஹெஞ்சொ-தரோவில் பெரும்பாலும் வீட்டுக்கொரு கிணறு இருந்ததெனக் கூறலாம். ஆராய்ச்சியாளர் நகரத்தைத் தோண்டி ஆராய்ச்சி நடத்தும்பொழுது பல கேணிகள் இருத்தலைக் கண்டனர். ஆனால் அவை அனைத்தும் துார்ந்து கிடந்தன. ஹரப்பாவில் அறிஞர் வாட்ஹ் என்பார் ஆராய்ச்சி நிகழ்த்திய போது ஒரு பெருங் கிணற்றில் நீர் இருத்தலைக் கண்டார். அக்கிணற்றில் 245 செ.மீ. உயரம் தண்ணீர் இருந்ததாம். அவ்வறிஞர் அதனைத் தூய்மை செய்து அங்கு வேலை செய்து வந்த தொழிலாளர்க்குப் பயன்படுமாறு ஏற்பாடு செய்தனராம். ஹரப்பாவில் பிறிதோர் இடத்தில் 180 செ. மீ. சுற்றளவுடைய கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. பல கிணறுகள் நகர அழிவினால் அழிந்து விட்டன. பல இருந்த இடம் தெரியாமல் மண்ணுக்குள் மறைப்புண்டன.
இன்றும் சுரப்புடைய கிணறுகள்
மொஹெஞ்சொ-தரோவில் உள்ள கிணறுகள் 107.5 செ.மீ. சுற்றளவு முதல் 270 செ.மீ. சுற்றளவு வரை பல திறப்பட்டனவாக இருக்கின்றன. அவற்றுள் பல மண்ணுள் புதைந்துவிட்டன. ஆராய்ச்சியாளர் அவற்றைக் கண்டறிந்து அவற்றில் அடைந்துள்ள மண் கல் முதலியவற்றை அப்புறப்படுத்தி, சகதியை நீக்கித் தூய்மை செய்யும் வேலையில் ஈடுபட்டனர். சில கிணறுகள் நன்னீர்ச் சுரப்புடையனவாகக் காணப்பட்டன. அந்நீரே அங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அறிஞர்க்கும் தொழிலாளர்க்கும் உண்ணவும் குளிக்கவும் உரியதாயிற்று.கேணி நீரைப் பயன்படுத்துவதற்கு முன் அவர்கட்குத் தேவைப்பட்ட நீர் 3கிமீ தொலைவிலிருந்து வண்டியில் கொண்டுவரப்பட்டது. இப்பொழுது அத்தொல்லை முற்றும் நீங்கிவிட்டது. சுமார் 5000 ஆண்டுகட்கு முற்பட்ட கிணறுகள் இன்றும் சுரப்புடையனவாக இருத்தல் வியப்புக்குரியதே அன்றோ?
மாளிகைகளில் உள்ள கிணறுகள்
சில மாளிகைகளில் உள்ள பழங்கிணறுகள் தெருப்புறம் இல்லாமல் மாளிகைக்கு அண்மையில் அமைந்திருந்தனவென்று தெரிகிறது. அந்நிலையில் அவை மாளிகை மக்கட்கே பயன் பட்டிருத்தல் வேண்டும். ஆனால் அம்மாளிகையில் பிற்காலத்தில் வீட்டின் தெருப்புறமாகக் கிணறுகள் அமைந்துள்ளன. அவை பிற்காலத்தில் பொதுமக்கள் நலங்கருதியே முன்புறம் அமைக்கப் பட்டன என்று அறிஞர் கருதுகின்றனர். இங்ஙனம் தெருப்புறம் அமைந்துள்ள கிணறுகள் சில அறைகளில் உள்ளமை கவனித்தற்குரியது. அவ்வறையில் கிணற்றுருகில் பெரிய தண்ணீர்ப் பானைகள் புதைக்கப்பட்டிருந்தமைக்குரிய அடையாளங்கள் தெரிகின்றன. அவ்அறையின் தரை நன்கு பண்படுத்தப்பட்டுள்ளது. கிணற்றருகில் சிந்தும் நீர் அங்குத் தேங்கியிராமல் உடனுக்குடனே தெருக் கால்வாய்க்கும் இடையே சிறு வடிகால் ஒன்று அமைந்துள்ளது. நீர் எடுக்கும் பெண்கள் உட்காருவதற்குக் கிணற்றண்டை மேடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது கிணற்றைச் சுற்றியுள்ள சுவர் குழந்தைகள் எட்டிப் பார்க்க முடியாத அளவு உயர்ந்துள்ளது.
தெருமுதல் கிணறுவரை சிறிய வழி விடப்பட்டுள்ளது. வெளியார் கிணற்றண்டை வருவதற்கென்றே அவ்வழி அமைக்கப்பட்டது போலும் பிறர் தண்ணீர் எடுக்கும்பொழுது மாளிகைக்குரிய மடந்தையரும் தண்ணிர் எடுக்கவேண்டுமாயின் என்செய்வது? அதற்கென்று தக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது கவனித்தற்குரியது. வெளியார்க்கும் வீட்டார்க்கும் கிணற்றண்டை யாதொரு சம்பந்தமும் இராதவாறு கிணற்றின் நடுவில் மெல்லிய மறைவு அமைக்கப்பட்டிருந்தது என்பதற்குரிய அடையாளம் தெரிகிறது. கேணிகளின் மேற்புறமும் உட்புறமும் மிக்க கவனத்துடனும் ஒழுங்குடனும் கட்டப்பட்டுள்ளன. சில கிணறுகளின் ஓரச் சுவர்கள் மூன்று முதல் ஐந்து அடுக்குச் செங்கற்கள் வைத்துக் கட்டப்பட்டுள்ளன. இப்பாதுகாப்புக்குரிய ஏற்பாட்டினால் கிணற்று நீர் சுவர்களில் தங்கி ஊறு விளைக்காது என்பது தெளிவாம்.
கயிறும் உருளைகளும்
கிணறுகளிற் குடங்களைவிட்டு நீரை முகத்தல் இக்காலத்தும் சில இடங்களில் வழக்கமாக இருக்கின்றது. இது போன்றே அப்பண்டைக் காலத்தும் மொஹெஞ்சொ-தரோவில் இவ்வழக்கம் இருந்தது. அக்கால மக்கள் தடித்த கயிறுகளைப் பயன்படுத்தினர் என்பது, கிண்றுகளின் மேற்சுவரில் ஏற்பட்டுள்ள உராய்ப்புகள் மூலம் அறிதல் கூடும்.பொதுக் கிணறுகளில் மகளிர் பலர் ஒரே காலத்தில் நீரை எடுக்கும் பழக்கம் இன்றும் இருப்பது போலவே அப்பழங்காலத்தும் இருந்ததென்பதைக் கிணற்றின் மேற்சுவர் மீதுள்ள அடையாளங்களைக் கொண்டு கூறலாம். பல் கேணிகளில் உருளைகள் பயன்படுத்தப்பட்டன என்பது சுட்ட களிமண்ணாலாய சில பதுமைகள் வாயிலாக அறியக்கிடக்கிறது.
பலமுறை உயர்த்தப்பட்ட கிணறுகள்
சிந்து ஆற்றின் வெள்ளப் பெருக்கிற்கு அஞ்சி நகரத்தின் தரைமட்டம் உயர்த்தப்பட்டபோதெல்லாம் இக்கிணறுகளும் மாறுபாடு அடைந்துகொண்டு வந்தன. சில இடங்களில் உள்ள கிணறுகள் இங்கனம் மும்முறை புதுப்பிக்கப்பட்டன என்பதை, அவற்றின் மேற்சுவர்கள் மூலம் நன்கறியலாம். வேறு சில இடங்களில் உள்ள கிணறுகள் நகர அடிமட்டம் உயர்த்தப்பட்ட காலத்தும் புதுப்பிக்கப்படவில்லை. சில இடங்களில் புதுப்பிக்கப் பட்ட கிணறுகள் பழையவற்றைவிட எளியனவாகவே காணப்படலால், அந்நகர மக்கள் புதுப்பிக்கும் தொழிலில் வெறுப்புற்றனர் என்றோ, அல்லது செல்வ நிலையில் பாதிக்கப்பட்டனர் என்றோ கூறலாம் என்பர் ஆராய்ச்சியாளர். அக்காலத்துத் தண்ணிர் மட்டத்திற்கும் இக்காலத்துத் தண்ணிர் மட்டத்திற்கும் 600 செ.மீ. வேறுபாடு காணப்படுகிறது. இதனால், அக்கிணறுகளை அடிமட்டம் வரை தோண்டிக் காண்பது மாட்டாமையாக இருக்கின்றது. ‘சில கிணறுகளின் - அடிமட்டத்தையேனும் சோதித்துப் பார்த்தல் வேண்டும். அவற்றின் அடியில் குழந்தைகளும் பெரியவர்களும் கை தவறிப் போட்ட பொருள்கள் சிலவேனும் கிடைத்தல் கூடும். நாம் அவற்றைக் கொண்டு பல உண்மைகள் உணர்தல் கூடும்’ என்று ஆராய்ச்சி யாளர் அறைகின்றனர். ஆராய்ச்சி உடையார்க்கு அகப்பட்ட சிறு பொருளும் அற்புதமாகக் காட்சியளிக்கும் அன்றோ!
அழகிய செய்குளம்
மொஹெஞ்சொ-தரோவில் இதுகாறும் நடந்த ஆராய்ச்சியில் வெளிப்பட்ட கட்டிடங்களுட் சிறந்தவை அரண்மனை என்று கருதத்தக்க கட்டிடம் ஒன்றும் அழகிய செய்குளம் ஒன்றுமே ஆகும். பின்னது இக்காலப் பொறிவலாளரும் திகைப்புறுமாறு அமைந்துள்ளது. இதனை. சர் ஜான் மார்ஷல் 1925-1926இல் கண்டறிந்தார். இதனில் தண்ணிர் நிற்கும் இடம் மட்டும் சுமார் 1200 செ.மீ நீளமும் 690 செ.மீ. அகலமும் 240செ.மீஆழமும் உடையது.இக்குளத்திற்கு ஒழுங்கான படிக்கட்டுகள் அமைந்துள்ளன. இக்குளத்தைச் சுற்றி நாற்புறமும் நடைவழி இருக்குமாறு 135.செ.மீ. அகலமுள்ள சுவர் எழுப்பப்பட்டுள்ளது. அச்சுவருக்கும் அப்பால் குளத்தைச் சுற்றி 210 செ.மீ அகலமுள்ள பெருஞ்சுவர் ஒன்று அமைந்துள்ளது. அதன் மீதும் நடைவழி அமைக்கப்பட்டுள்ளது.
குளத்தின் அடிமட்டமும் உட்சுவர்களும்
இச்செய்குளத்தின் அடிமட்டம், நன்றாய் இழைத்து வழவழப்பாக்கப்பட்ட செங்கற்களும் இக்காலத்துச் ‘சிமெண்ட்’ போன்ற ஒருவகை நிலக் கீலும்[1] கொண்டு தளவரிசை இடப்பட்டுள்ளது. அடிமட்டச் சுவர்களும் இவ்விரண்டால் ஆக்கப்பட்டனவே ஆகும். இதை அமைத்த அறிஞர் பாராட்டுதற்கு உரியவரே ஆவர் என்பது அறிஞர் கருத்தாகும். அப்பெருமக்கள் முதலில் சூளையிடப்பட்ட வழவழப்பான செங்கற்களை ஒருவகை வெள்ளிக் களிமண்[2] கொண்டு ஒட்டவைத்துள்ளனர்; இவ்வண்ணம் நாற்புறமும் 120 செ. மீ. கனத்தில் சுவர்கள் எழுப்பினர்; பின்னர் அச்சுவர்கள் மீது 2.5 செ.மீ. கனத்தில் நிலக்கீல் பூசியுள்ளனர்; இச்சுவருக்குப் பின்புறம் நன்றாய்ச் சுடப்பட்ட செங்கற்களைக் கொண்டு மற்றொரு வரிசைச் சுவர் கட்டியுள்ளனர்; அதனை ஒட்டிச் சுடாத உலர்ந்த செங்கற்களாலான சுவர் ஒன்றை இணைத்துள்ளனர். தண்ணிர் ஊறிப்பழுதாகாமல் இருப்பதற்காகவே இச்சுவர்கள் இவ்வளவு வேலைப்பாடுகளோடு கட்டப்பட்டுள்ளன.
நிலக் கீல்
இச்செய்குளத்தில் பயன்படுத்தப்பட்ட நிலக்கீல் சிந்துப் பிரதேசத்திலோ அன்றி இந்தியாவின் பிறபகுதிகளிலோ இல்லை. எனவே, இது வெளி நாட்டிலிருந்தே கொண்டுவரப்பட்டதாதல் வேண்டும். அவ்வெளிநாடு யாது? சுமேரியாவிற்றான் இந்நிலக்கீல் உண்டு. இஃது அங்கேதான் பெரிதும் இப்பண்டைக் காலத்தில் பயன் படுத்தப்பட்டது. சுமேரியர் கட்டிடங்களை உறுதியும் அழகும் செய்தது இந்நிலக்கீலே ஆகும். எனவே, வாணிபத்தில் சுமேரியரோடு நெருக்கம் கொண்டிருந்த சிந்துப் பிரதேச மக்கள் இந்நிலக்கீலை அவர்களிடமிருந்தே பெற்றனராதல் வேண்டும். இஃது இங்ஙனம் நெடுந்துாரத்திலிருந்து கொண்டுவரப்பட்டதாக இருந்ததாற்றான், கிணறுகட்கோ பிறவற்றுக்கோ பயன்படுத்தப்படாமல் இவ்வரிய செய்குளத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட தென்பதை உணர்தல் வேண்டும். இவ்வரிய பொருளை அந்நெடுந்துர நாட்டினின்றும் கொணர்ந்து அமைக்கப்பட்ட இச்செய்குளம், ஒரு குறிப்பிட்ட நற்காரியத்திற்காகவே பயன்பட்டதாதல் வேண்டும் என்பதும் அறியத்தகும்.
குளத்திற்கு வடக்கே
இச்செய்குளத்திற்கு வடக்கே எட்டு அறைகள் கட்டப் பட்டுள்ளன. அவை மிக்க உறுதியான சுவர்களைக் கொண்டவை: வெளியிலிருந்து பார்ப்பவர் உட்புறத்தைச் சிறிதும் காணாதவாறு இயன்ற உறுதியான கதவுகளை உடையவை; மேலே ஏறப் படிக்கட்டுகளை உடையவை. ஒவ்வோர் அறையின் மேலும் அறை இருந்ததென்பதற்கு உரிய அடையாளங்கள் காண்கின்றன. மேல் அறையில் இருந்தவர் படிக்கட்டுகள் வழியே உட்புறமாகவே கீழ் அறைக்கு வந்து, அருகில் உள்ள கிணற்றிலிருந்து சேவகன் சேமித்து வைக்கும் நீரில் நீராடிவிட்டு மேலே போய்விடுவர். அவ்வழுக்கு நீர் ஒவ்வோர் அறையிலும் உள்ள துளை வழியே வெளியில் உள்ள கழிநீர்க் கால்வாயைச்சேரும். இவ் அறைகளில் வாழ்ந்தவர் சமயச்சார்புடைய பெருமக்களாக இருத்தல் வேண்டும். இவ்அறைகளும் இச்செய்குளமும் ஸ்தூபி நிற்கும் இடத்திற்கு அண்மையில் இருக்கின்றன. ஆதலால்,ஸ்துாபியின் அடியில் மறைந்துகிடப்பது, இவ்விரண்டிற்கும் தொடர்புடைய கோவிலாகவோ அன்றிச் சமயச் சார்புடைய பிறிதொரு கட்டிடமாகவோ இருத்தல் வேண்டும்[3]
குளத்திற்கு நீர் வசதி
இச்செய்குளத்திற்கு அருகே, இதில் நீரை நிரப்புதற்கென்றே அமைந்தன போல மூன்று பெரிய கிணறுகள் உள்ளன. அவற்றின் நீரே குளத்திற்குப் பயன்பட்டிருத்தல் வேண்டும். குளத்து நீர் தூய்மை அற்றவுடன் அப்புறப்படுத்தப்படல் வேண்டும் அன்றோ? அதற்காகவே இச்செய்குளத்தின் மூலை ஒன்றில் சதுர வடிவில் புழை ஒன்று அமைந்துள்ளது. அஃது ஒரு மனிதன் தாராளமாக நுழைந்து செல்லக்கூடிய அளவு அகன்றதாக இருக்கின்றது. அது, வேண்டும் போது தண்ணிரை வடியாமல் தடுத்து வைப்பதற்காகவும், வேண்டாதபோது தண்ணீரை வெளிவிடுதற்காகவும் அமைந்துள்ள மதகைப்போலச் சிறந்த வேலைப்பாடுடையதாகக் காணப்படுகிறது. சுருங்கக் கூறின், இச்செய்குளத்தின் வேலைப்பாடு ஒன்றே ஆராய்ச்சியாளரைப் பெரிதும் வியப்புறச் செய்ததென்னல் மிகையாகாது. இதன் அருகில் உள்ள பிற மண் மேடுகளும் தோண்டப்பட்ட பின்னரே இதன் அருமை பெருமைகள் மேலும் விளக்கமாகும்.
செங்கற்கள்
வீடுகள், கிணறுகள், குளங்கள், கழிநீர்ப்பாதைகள் இன்ன பிறவற்றுக்கும் மொஹெஞ்சொ-தரோவில் பயன்பட்ட செங்கற்களைப்பற்றிய சில விவரங்களை அறிதல் இங்கு அவசியமாகும். சிந்துப் பிரதேச மக்கள் சுமேரியாவிலிருந்து நிலக்கீலைக் கொண்டுவந்தவாறே செங்கல்செய்யும் முறையினையும் பிறரிடம் கற்றனரா? அன்றி இயல்பாகத் தாமே உணர்ந்தனரா? என்னும் வினாக்கட்கு விடை காணல் கடமையாகும்.
பண்டை நாடுகள்
எகிப்து, சுமேரியா முதலிய பண்டைப் புகழ் படைத்த நாடுகளில் சூளையிடப்பட்ட செங்கற்களைக் கட்டிடங்கட்குப் பயன்படுத்தும் வழக்கமே அப்பண்டை நாட்களில் எழுந்திலது. உரோம அரசு ஏற்பட்ட பின்னரே செங்கற்களைப் பயன்படுத்தும் முறையை அம் மேற்குப்புற நாடுகள் அறியலாயின. எகிப்தில் கல்லைப் போன்ற ஒருவகைக் கடினமான பொருள் மிகுதியாகக் கிடைத்தது. அதனால், அம்மக்கள் செங்கற்களைச் செய்யவேண்டிய அவசியம் எழவில்லை. சுமேரியர்க்கும் அங்ஙனமே. எனவே, சிந்துப் பிரதேச மக்கள் செங்கற்களைச் செய்யும் முறையைப் பிற நாட்டாரிடம் கற்றிலர்: தாமாகவே அம்முறையைக் கண்டுபிடித்தனர் எனக் கூறல் தவறாகாது. ‘அவசியமே ஆராய்ச்சியின் தாய்’ என்பது உண்மை யன்றோ? அவர்கள், சிந்து ஆற்றங்கரையில் இயற்கையில் கிடைத்த களிமண்ணைப்பதமாக்கி அறுத்துக்காயவைத்துப் பயன்படுத்தினர்; அது கடுவெயிலுக்கும் மழைக்கும் ஆற்றாததைக் கண்டபின், அதனைச் சூளையில் இட்டுச் சுட்டுப் பயன்படுத்தினராதல் வேண்டும் இங்ஙனம் அப்பெருமக்கள் கையாண்ட முறையே நம்நாட்டில் இன்றளவும் கையாளப்பட்டு வருகின்றது.
செங்கற்கள் சுடப்பட்ட முறைகள்
அப்பண்டை நாட்களில் வெட்ட வெளிகளில் களிமண் செங்கற்களை அறுத்துக் காயவைத்து, பின் விறகுகளைக்கொண்டு தீ மூட்டிச் செங்கற்களைச் சுட்டு வந்தனர். இம்முறை காளவாய்கள் ஏற்பட்ட பின்னரும் இக்காலத்தும் வழக்கில் இருத்தலால், சிந்துப் பிரதேசத்திலும் அப்பழங்காலத்தில் ஒருபால் இம்முறையும் பிறிதொருபால் காளவாயில் சுடும் முறையும் இருந்திருத்தல் வேண்டும். மொஹெஞ்சொ-தரோ மக்கள் செங்கற்களைச் சூளையிடுவதற்காகவேப் பயன்படுத்திய காள்வாய்கள் வட்ட வடிவில் செய்யப்பட்டிருந்தன என்பதற்குரிய அடையாளங்கள் காணப்படுகின்றன. இக்காளவாய்கள் அடியில் நெருப்பு முட்டப்படும். இவற்றிலிருந்து புகையை வெளிப்படுத்த புகைப் போக்கிகள் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
உலர்ந்த செங்கற்கள்
மொஹெஞ்சொ-தரோவில் சில வீடுகளின் உட் புறச்சுவர்கள் உலர்ந்த செங்கற்களால் கட்டப்பட்டவை. பல இடங்களில் நிலத்தின் அடிமட்ட அளவை உயர்த்துவதற்காக இவ்வுலர்ந்த செங்கற்கள் பயன்பட்டன. இங்ஙனம் இவ்வுலர்ந்த கற்களைப் பயன்படுத்தும் வழக்கம் அப்பண்டைக் காலம் முதல் இன்றளவும் இந்நாட்டில் இருந்து வருகின்றது. இன்றைய சிந்து மாகாணத்தில் இம்முறை நிரம்பக் கையாளப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.
செங்கற்களின் அளவுகள்
மொஹெஞ்சொ-தரோவில் இருந்த செங்கல் அறுக்கும் தொழிலாளர் மதிநுட்பம் வாய்ந்தவராதல் வேண்டும். அவர்கள் ஒவ்வொரு செங்கல்லையும் அதன் பயனுக்கு ஏற்றவாறு செய்துள்ளனர். ஒவ்வொன்றும் கோணலும் மேடுபள்ளங்களும் இன்றி நன்றாய் அறுக்கப்பட்டுச் சமனாக்கப்பட்டுள்ளது. சூளையிடப்பட்ட செங்கற்கள் பதமறிந்து சூளையிடப் பட்டுள்ளன. ஒவ்வொரு செங்கல்லும் ஏறக்குறைய நீளத்திற் பாதி அகலமும் அகலத்திற் பாதி உயரமும் (1 : ½ : ¼) உடையதாக அமைந்திருத்தல் பெரிதும் வியக்கத்தக்கது. இவ்வளவில் அமைந்துள்ள செங்கற்களே பலவாகும். கழிநீர்ப் பாதைகட்குச் செய்யப்பட்ட கற்களும் பிற குறிப்பிட்ட காரியங்கட்கென்று செய்யப்பட்ட கற்களும் அளவிற் பெரியனவும் சிறியனவுமாக இருக்கின்றன; அவற்றுள் சில 55 செ. மீ நீளமும் 28 செ. மீ. அகலமும் 7.5 செ.மீ. உயரமும் உடையவை; சில 5 செ. மீ. நீளமுடையவை; சில 23 செ. மீ. நீளமுடையவை. இச்செங்கற்கள் தேவைக்கு ஏற்ற வடிவில் செய்யப்பட்டவை ஆகும். சில சம சதுரமாக இருக்கின்றன; சில நீள சதுரமாக உள்ளன; சில வளைவாகவே இருக்கின்றன; சில கண்ணாடிபோல வழ வழப்பாக்கப்பட்டுள்ளன. சில மூலைகளுக்கு ஏற்ப முக்கோணமாக வெட்டப்பட்டுள்ளன. “ஆரியர் இந்தியாவில் காலடி எடுத்து வைப்பதற்கு முன் இந்தியாவில் நாகரிகம் என்று ஒன்று இருந்ததே இல்லை” என்று நினைத்தவரும் பேசியவரும் எழுதியவருமே வியக்குமாறு இச்சிந்துப் பிரதேச நாகரிகம் செங்கற்களிலும் சிறந்து விளங்குகின்றது எனின், இப்பிரதேசத்துப் பண்டைப் பெருமையை என்னென்பது!