உள்ளடக்கத்துக்குச் செல்

ரோமாபுரிப் பாண்டியன்/ஆ. காணிக்கை

விக்கிமூலம் இலிருந்து

காணிக்கை

ளமைக் காலந்தொட்டு எழுதுவதில் எனக்குத் தனி ஆசை. 1939ம் ஆண்டில் என் கைப்பட எழுதிய கதை. அதன் பெயர் “செல்வ சந்திரா”, எங்கேயோ அழுக்கேறிக் கிடந்த அந்தக் கையெழுத்துப் பிரதி அண்மையில் கிடைத்தது. கடலில் மூழ்கிவிட்ட காவிரிப்பூம்பட்டினத்தின் மேல் எனக்கு இளமைப் பருவத்திலேயே ஒரு இடம் நெஞ்சில் உண்டு என்பதற்கு எடுத்துக்காட்டாக அந்தக் கதையைப் பின்வருமாறு தொடங்கியிருந்தேன்.

“நீர்வளம் நிலவளம் தங்கிய திராவிட நாட்டின்
கண் காவிரிப்பூம்பட்டினமெனும் நகரில் ...”

இன்று தமிழகத்தை ஆட்சி புரியும் முதலமைச்சர் பொறுப்பையேற்று அதற்குப் பிறகு காவிரிப்பூம்பட்டினத்தில் 'பூம்புகார்' உருவாக்க வேண்டுமென்று நான் புதிதாகக் கருதியதாக யாரும் நினைக்கக் கூடாது.

தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களும், புகழ் பரப்பிய தமிழ் வீரர்களின் பெயர்களும், பிஞ்சு வயது முதல் என் நெஞ்சில் நிலை பெற்றவைகளாகும்.

அந்த ஆழமான வேர்களின் அடிப்படையில் எழுந்ததுதான் இந்த வரலாற்றுக் கற்பனை.

“முரசொலி” கிழமை இதழாக இருந்தபோது ‘ரோமாபுரிப் பாண்டியனை’த் தொடங்கினேன். பின் முரசொலி நாளிதழாக மாறிவிட்டது. அதன் பிறகு ‘குமுதம்’ இதழில் ரோமாபுரிப் பாண்டியன் தொடர்ந்து வெளிவந்தது.

கற்பனை வேகத்தில் வரலாறு சிதைந்துவிடாமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டியிருந்தது. கதையாக மட்டுமன்றி அன்றைய தமிழகத்தின் சரித்திர சித்திரமாகவும் இதனைத் தீட்டியிருக்கிறேன்.

துணையாக இருந்து குறிப்புகள் தந்து உதவிய நண்பர் மறைமலையான் மெத்தவும் பயன்பட்டார். அவருக்கும் இந்த பெரிய நூலை அச்சியற்றப் பணியாற்றிய அருமை நண்பர் கவிஞர் ஆனந்தம் அவர்கட்கும் தமிழ்க்கனிப் பதிப்பகத்தாருக்கும் விற்பனை உரிமை பெற்றுள்ள பாரி நிலையத்தாருக்கும் என் நன்றியும் அன்பும் என்றும் உண்டு.

இதனைப் படித்துத் தமிழர்கள் தங்கள் கருத்துக்களை அவ்வப்போது வழங்கி என்னை ஊக்கப்படுத்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு என் வணக்கம்.

என் ஒவ்வொரு எழுத்தையும் சுவைத்துப் படித்துப் பிறரையும் படிக்கச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்த என் அன்புத் தந்தை முத்துவேலருக்கு இந்த நூல் காணிக்கை.

அன்புள்ள,

சென்னை

மு.கருணாநிதி