ரோமாபுரிப் பாண்டியன்/ஈ. ஞா. தேவநேயப் பாவாணர் தலைமை உரை
கலைஞரின் "ரோமாபுரிப் பாண்டியன்"
நூல் வெளியீட்டு விழா சென்னை, கலைவாணர் அரங்கத்தில்
9.6.1974 ஞாயிறு மாலை 6 மணியளவில் நடைபெற்றது.
தலைமை ஏற்ற மொழி நூலறிஞர்
திரு. ஞா. தேவநேயப் பாவாணர் அவர்கள் ஆற்றிய தலைமை உரை :
நம் தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு கருணாநிதியார் என்னும் அருட்செல்வனாரின் பொன்விழாவையொட்டி அவர்கள் எழுதியுள்ள “ரோமாபுரிப் பாண்டியன்" என்னும் புதினமும், "மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று" என்னும் ஒரு கட்டுரைத் திரட்டும் ஆகிய இரு புத்தகங்களின் அரங்கேற்ற விழா அல்லது வெளியீட்டு விழா இன்று நிகழ்கின்றது.
அந்த இரு நூல்களில் 'ரோமாபுரிப் பாண்டியன்' என்னும் புதினத்தை நம் ஓய்வு பெற்ற தலைமை நடுவர் உயர்திரு அனந்தநாராயணன் அவர்கள் வெளியிடுவார்கள். அதைப் பாவரசு கண்ணதாசன் அவர்கள் பெறுவார்கள். அதன்பின்பு அந்தக் கட்டுரைத் திரட்டை மாண்புமிகு புலவர் கா.கோவிந்தனார் வெளியிடுவார். அதைப் பெரும் புலவர் கி.வா.ஜகந்நாதன் பெறுவார். இப்போது இந்த 'ரோமாபுரிப் பாண்டியன்' என்கின்ற புதினத்தைப் பற்றிச் சிறப்பாக ஒன்றும் பேச வேண்டுவதில்லை. ஏனென்றால் பேசுவதற்கு ஒரு பெருஞ் சொற்கொண்டல் இங்கே காத்திருக்கின்றது.
அது ஒரு புதினம்; அதாவது நாவல்; வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு மிகத் திறம்பட எழுதப்பட்ட ஒரு புதினம். ஒரு புது வரிவான கதை. ரோமாபுரித் தொடக்கத்தில் இருந்து அந்தக் கதை எடுத்துக் கூறுகின்றது. அது கி.மு. 753 என்று சொல்லப்படுகின்றது. இதை நினைக்கும்போது ஒரு சிலர் அதாவது ஆராய்ச்சி இல்லாதவர்கள், இவ்வளவு பழமையானதா என்றுகூடச் சற்று வியக்கலாம்.
ஆனால் தமிழ், அதற்கும் முந்தினது. இந்த ரோமாபுரியோடு தமிழ்நாடு வணிகத் தொடர்புடையது மட்டுமன்று, இன்னும் சொல்லப்போனால் அதற்கு முந்தி மொழித் தொடர்பே உடையது. அந்த வணிகத்தினால் இணைக்கப்பட்ட சில பொருட்களின் பெயர்கள் மட்டுமல்ல, அந்த மொழியிலேயே பல அடிப்படைச் சொற்களே தமிழாக இருக்கும். அவற்றை எல்லாம் இப்போது சொல்ல நேரமில்லை. வேறு சமயம் வாய்க்கும்போது சொல்வேன். ரோமாபுரிப் பாண்டியனுடைய கதை இது. இதைத் திறம்பட நம்முடைய முதலமைச்சர் அவர்கள் எழுதி இருக்கின்றார்கள். ஒரு புதினம் என்கிற காவியம் எழுதப்படும் போது அந்தக் கதையானது நான்கு வகையாகப் பிரித்துச் சொல்லப்படும்.
இதிலே இவர்கள், உள்ளோன் தலைவனாக, உள்ளதும் இல்லதும் புணர்த்து அழகாக எழுதி இருக்கிறார்கள். இதைப் பார்க்கும்போது இவர்கள் பிறப்பிலேயே இதற்குரிய திறன் அமைந்தவர்கள் என்று நினைக்கும்படியாக இருக்கின்றது. கரிகால் வளவனே திரும்ப நம் கருணாநிதியாராகப் பிறந்தானோ என்றுகூட நாம் நம்பும்படியாக இருக்கின்றது. அந்தக் கரிகால் வளவனும் இந்தக் காவிரி நாட்டிலேயேதான் பிறந்தான். இவரும் அந்த நாட்டிலேதான். அந்தப் பூம்புகாரை அவன் வளப்படுத்தினான். இவரும் இப்போது அதைப் புதுப்பித்து வருகின்றார். காவிரிக்கு அவன் கரை கட்டினான். இவரும் காவிரி நீருக்கு ஒரு வரப்பு கட்டுவதற்கு இயன்றவரை முயல்கின்றார். அவன் இளமையிலேயே பகைவராலே இடர்ப்பட்டுத் துன்பப்பட்டு அதிலிருந்து தப்பினான். அப்படியே இவரும் போன பொதுத் தேர்தலிலே எப்படியோ பகைவரிடத்தில் அகப்பட்டுத் தப்பினார் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி. இந்தப் பெயரைப் பார்த்தால்கூட அந்த முதல் எழுத்து கரிகாலன்; கருணாநிதி என்கிற முதல் அசைகூடக் கொஞ்சம் ஒத்துவருகிறது. இனி அந்தக் காலத்திலேயே அவரைப்பற்றி ஏதாவது ஒரு புகைப் படமோ, பூச்சுப்படமோ இருந்திருந்தால் இவர் முகச்சாடைகூட ஒத்துப்போகுமோ என்றுகூட நாம் நினைக்கும்படியாக இருக்கிறது. அந்த அளவிற்கு இவர்களுடைய உள்ளம் முழுவதும், இவர்களுடைய அறிவு, நினைவு, மதி மூன்றும், அந்தப் பூம்புகாரைப் புதுப்பிப்பது, காவிரியை வளப்படுத்துவது இவற்றிலேயே முனைந்திருக்கின்றது.
இவர்கள் இப்போது அதிகார முறையிலே, ஓர் அரசன் நிலையிலே, ஆளுகின்ற அரசன் நிலையிலே இருக்கின்றார்கள்.
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற்கு இயல்பு.
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு.
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.
இப்படி பல திருக்குறளைப் பார்த்தால் அவற்றிற்கெல்லாம் ஒரு சிறந்த இலக்கியமாக இவர்கள் விளங்குகிறார்கள். பண்டை நாளிலே பாண்டிய நாட்டிலே மூன்று கழகங்கள் இருந்தன, தமிழை வளர்ப்பதற்கு, இவற்றுள்ளே முதல் கழகத்திலே எழுவர் பாவரங்கேறினர். பா என்றால் செய்யுள். இரண்டாவது கழகத்திலே இடைக்காலத்திலே ஐவர் பாவரங்கேறினார்கள். கடைக் கழகத்திலே மூவர் பாவரங்கேறினார்கள் என்று சொல்லப்படுகிறது. ஈராண்டுகளுக்கு முன்பு இதே இடத்திலே இவர்கள் பாவரங்கேறினார்கள் என்பது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். அதிலேதான் இவர்களுக்கு "தமிழ்வேள்" என்ற பட்டமும் பேராசிரியர்களால் அளிக்கப்பட்டது. இந்தத் தமிழகம் முழுவதும் மட்டுமின்றித் திராவிட நாடுகளிலிருந்தும்கூட எல்லாத் தமிழ்ப் பேராசிரியர்களும் இங்கு அன்று குழுமியிருந்தார்கள். அவர்களுடைய சார்பிலே அவர்களால் "தமிழ்வேள்" என்ற பட்டமானது இவர்களுக்கு வழங்கப்பட்டது. அதிலே இவர்கள் பாவரங்கேறினார்கள் என்றுதான் சொல்லவேண்டும். இவர்களுடைய பாடல்கள் எல்லாம் சிறந்த ஆராய்ச்சி முறையிலே தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டன. இப்பொழுது அடுத்தபடியாக உரைநடை. பண்டைக் காலத்திலே நம்முடைய புலவர்கள் வழக்கிலே, எல்லாம் செய்யுள் வழக்காகத்தான் இருந்தது. பொதுமக்கள்தான் நம்போலப் பேச்சுக்கள்- உரைநடை என்கிற-'புரோஸ்' என்று சொல்லப்படுகிற வகையிலே பேசி வந்தார்கள். பிற மக்கள், அதாவது புலவர்கள் எல்லாம் எழுதுவது மட்டுமல்ல, பேசுவதுகூடச் செய்யுளாகவே இருந்தது. அந்தக் காலத்திலே! இப்பொழுது ஆங்கிலத்திலே 'கலோக்கியல்', 'லிட்டரரி' என்று பிரிப்பார்கள். நாம் இப்பொழுது உலக வழக்கு, இலக்கிய வழக்கு என்றே சொல்கிறோம். ஆனால் பண்டைக் காலத்திலே எல்லாம் உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்றுதான் சொன்னார்கள். பண்டை மக்கள் என்று சொல்லும்போது நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.
அவர்கள் தெற்கே முழுகிப்போன குமரி நாட்டிலே இருந்தார்கள். தமிழர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் அல்லர்; சிலர் பலர் கருதுகிறபடி! தென்னாட்டுப் பழங்குடி மக்கள்; அந்தத் தமிழும் தென்னாட்டிலே தோன்றியது. தமிழைச் சிறப்பாக ஒருவர் ஆராய்ந்திருந்தால் - வரலாற்று அடிப்படையிலே ஆராய்ந்திருந்தால் - அதன் உண்மையை அறிவார்கள். தமிழ் வெளிநாட்டிலிருந்து வந்தது என்று எவராவது சொல்வதாய் இருந்தால், ஒன்று அவர்கள் தமிழைச் சரியாக அறியவில்லை என்பது; அல்லது அவர்கள் தமிழ்ப் பகைவர்கள் என்பது; இந்த இரண்டில் ஒன்று என்ற அந்த முடிவுக்குத்தான் வரமுடியும். தமிழ் தென்னாட்டிலே தோன்றிய மொழி. ஆகையினால் இந்த ரோமாபுரித் தொடர்புக்கு முன்னாலேயே அது இருந்தது. அந்தத் தமிழ்நாட்டு வரலாறு, இந்த ரோமாபுரித் தொடர்பு என்றால், ரோமர்களுடையது இந்த கி.மு.8ம் நூற்றாண்டு. அதற்கு முன்னாலேயே எகிப்து நாட்டோடும் சுமேரிய நாட்டோடும் தொடர்பு இருந்தது.
அடுத்து 'ரோமாபுரிப் பாண்டியன்' என்ற புதினம் இந்த அரங்கத்தில் இப்போது வெளியிடப்பெறும்.