ரோமாபுரிப் பாண்டியன்/உ. திரு.அனந்தநாராயணன் ஐ.சி.எஸ். பேசியது
நூலை வெளியிட்டு
ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி
திரு.அனந்தநாராயணன் ஐ.சி.எஸ்.
அவர்கள் பாராட்டிப் பேசியது :
மேல்நாட்டில் சிறுவரைப்பற்றி ஒரு பழமொழி உண்டு. அதாவது 'சிறுவரைப் பார்க்கலாம், அவர்கள் ஒலியைக் கேட்கக்கூடாது' என்று. "Children should be seen, not heard". இதே பழமொழி நீதிபதிகளுக்கும் அதிகமாகப் பொருந்தும் என்று எனக்குத் தோன்றுகிறது. நீதிபதிகளைப் பார்க்கலாம் நீதிமன்றங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் அதிகம் கேட்கக்கூடாது. ஓய்வுபெற்ற நீதிபதிகள் இன்னும் அடக்க ஒடுக்கமாக இருக்கவேண்டுமென்பது என்னுடைய முடிவு. நம்முடைய இலக்கிய மரபில் ஒரு தொடர் வருகிறது. "மூலையில் இருந்தாரை முற்றத்தே விட்டார்" என்று. மூலையில் இருந்த என்னை முற்றத்தில் ஏன் விட்டார்கள்? எனக்கு என்ன தகுதி? என்று நான் சிறிது யோசித்துப் பார்த்தேன். அதில் எனக்கு ஒரு தகுதி தோன்றிற்று. அதை கூறுகிறேன்; தமிழில் எனக்கு இலக்கியப் பற்று உண்டு, சிறு வயதிலிருந்து. ஆனால் என்னைவிட அதிக இலக்கியப் பற்று உள்ளவர்கள் இங்கு இருக்கிறார்கள். என்னைவிட வாழ்நாளை எல்லாம் தமிழ் இலக்கிய மரபிலே, இலக்கிய ஆய்விலே செலுத்தியவர்கள் இருக்கிறார்கள்.
தமிழில் நவீனம் என்று தோன்றியது? 19-ஆவது நூற்றாண்டில்தான் (அதற்கு முன்பு பெஸ்கி என்ற வீரமாமுனிவர் பரமார்த்த குரு கதை போன்ற சிறு வசனம் எழுதினார்). அதற்கு முன்புள்ள இறையனார் அகப்பொருள் உரை, அடியார்க்கு நல்லார் உரை, பரிமேலழகர் உரை-இவைகள் எல்லாம் உரைநடை என்று சொல்ல முடியாதவாறு கடினமாக இருந்தன. பிரதாப முதலியார் சரித்திரம் என்று வேதநாயகம் பிள்ளை எழுதிய நூல் (இதை நுட்பமாகக் குறித்தல் வேண்டும்). ஆங்கில இலக்கிய சரித்திரத்தில் கோல்டுஸ்மித் (Goldsmith) எழுதிய 'விகார் ஆஃப் வேஃக்பீல்டு' (Vicar of Wakefield) என்ற நூலுக்கு எடை சமமாக இருக்கிறது. அதாவது பாதி நீதி நூல், மீதி நவீனம். இன்னும் நவீனம் முற்றும் மிளிரவில்லை. அதன்பிறகு காலஞ் சென்ற ராஜம் ஐயர் அவர்களும், என்னுடைய தந்தையார் காலஞ்சென்ற மாதவையா அவர்களும், முறையே கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம் என்ற 2 நவீனங்களை எழுதினார்கள். அந்த நவீனங்களை அடிப்படையாகக் கொண்டுதான் இப்போது நவீனங்கள் பெருகி வந்திருக்கின்றன. அதுவும் வரலாற்று அடிப்படையான நவீனங்கள் 20 ஆண்டுகளாகத் தமிழகத்தில் புறப்பட்டு வருகின்றன. என் தந்தையார் பிறந்த நூறாவது ஆண்டு 1974. இந்தத் தகுதி ஒன்றைப் பற்றியே நான் இந்த நூலை வெளியிடத் தகுதி உள்ளவன் என்று நினைக்கிறேன். ஏனென்றால் தமிழில் இலக்கியச் சரித்திரத்தின் நவீனகர்த்தாக்கள் மூவரில் ஒருவராக அவர் இருந்தார் என்பது சிறிதேனும் ஐயமில்லாமல் ஏற்பட்டுவிட்டது. அவரைக் குறித்து நான் சிறப்பாகப் பேசுவது தகுதியல்ல.
இப்போது இந்த வரலாற்றுச் சான்றாக உள்ள நவீனத்திற்கு என்ன இலக்கணம் என்று சிறிது ஆராயவேண்டும். இதை எழுதிய டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஒரு முன்னுரை எழுதியிருக்கிறார்கள். இன்னின்ன வரலாற்றுச் சான்றுகளைக்கொண்டு இந்த 'ரோமாபுரிப் பாண்டியன்' என்ற நவீனத்தை நான் கற்பனை செய்து சிருஷ்டித்தேன் என்று காட்டியிருக்கிறார். உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். சர் மார்டிமர் வீலர் என்ற புதைபொருள் ஆராய்ச்சி நிபுணர் ஒருவர் இருந்தார். அவர் புதுச்சேரிப் பக்கத்தில் உள்ள அரிக்கமேடு என்ற இடத்தில் உலாவும்போது அகஸ்டஸ் சீசருடைய பொன் நாணயங்கள் சில ஒரு புதையலில் கிடைத்தன. அது இம்முன்னுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் மற்றொரு செய்தி முன்னுரையில் குறிப்பிடப்படவில்லை. அதாவது ஒரு பானையின் ஒரு பாகம் என்று கூறுவார்களே, அதுவும் கிடைத்தது. ரோமாபுரியில் அகஸ்டஸ் சீசர் ஆண்ட காலத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையின் முத்திரை அதில் இருந்தது. அதைப் பார்த்து சர் மார்டிமர் வீலர் மிகவும் வியப்படைந்ததாக எழுதியிருக்கிறார். அதாவது நாவாய்ப் போக்குவரத்து, வணிகம் இவைகள் எல்லாம் ரோமாபுரிக்கும், தமிழகத்திற்கும் மிகமிக விரைவாகவும், மிகமிகச் சுறுசுறுப்பாகவும் அந்தக் காலத்தில் நடந்தன என்பது ஐயமின்றித் தெளிவாகின்றது. ஆகவே, வரலாற்றுச் சான்றுகளைக் கொண்டுதான் இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது. ஆயினும் இந்த நூலில் எழுதப்பட்டிருக்கிற பெருவழுதிப் பாண்டியன் என்பவன்தானா ரோமாபுரிக்குச் செழியன் என்பவனைத் தூது ஆக அனுப்பினான்? இதற்கு வரலாற்றுச் சான்று என்ன? என்று கேட்கக்கூடாது. ஏன் என்றால் வரலாற்றுச் சான்றுகளைத் தழுவிய நவீனத்திற்கு, ஆசிரியனுக்கும் கற்பனைக்கும் ஒரு இடம் கொடுக்கவேண்டும். கற்பனைக்கு இடம் கொடுக்காவிட்டால் அது வரலாற்றுப் புத்தகமாகி விடுமேயொழிய நவீனமாகி விடாது. ஆகவே முதல் இலக்கணம் என்னவென்றால் வரலாற்றுச் சான்றுகள் இருக்கவேண்டும். ஆனால் கற்பனையும் இருக்கவேண்டும். விளக்கமாக, ஜூனோ என்ற அகஸ்டஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் எகிப்தில் ஒரு யவனக் கிழவரிடம் தமிழ் கற்றுக்கொண்டு தமிழில் பேசியதாக இதில் இருக்கிறது. இதற்கு எங்கே வரலாற்றுச் சான்று என்று நீங்கள் கேட்கக்கூடாது. நடந்திருக்கக்கூடியதுதான். அதை கலைஞர் கற்பனை செய்திருக்கிறார். நடந்திருப்பதுடன் அது ஒத்திருப்பதால் அதை நாம் ஏற்க வேண்டும். கற்பனையே வறட்சியாக இருக்கவேண்டுமென்றால் நூல் உருவாகியிருக்காது. இதை நீங்கள் சிறிது மனதில் வாங்கிக் கொள்ள வேண்டும். இது இந்த நூலின் ஒரு சிறந்த அம்சம். பல வரலாற்றுச் சான்றுகளைக் கொண்டது. ஆனால் கற்பனையினால் பெருகியிருப்பது. கற்பனை ஒன்றும் வரலாற்றுச் சான்றுக்குப் புறம்பாகவோ எதிர்த்தோ இல்லை. அதற்கு ஒரு சிறு இலக்கணம் கூறலாம். அதற்கு ஆங்கிலத்தில் Anachronism என்று சொல்கிறார்கள். நான் தமிழாக்கம் செய்தால் 'இடம், பொருள், ஏவல், முரண்பாடு' என்று கூறுவேன். இடம். பொருள், ஏவல், முரண்பாடு இருக்கக்கூடாது. வரலாற்றுச் சான்று தழுவிய நவீனத்தில், இங்கு இருந்த ஒரு பாண்டியன் ஒரு மோட்டார் காரை ஓட்டிக்கொண்டு போனான் என்று எழுதினால் அதை ஒத்துக்கொள்ள முடியாது. அந்தக் காலத்தில் ரோமாபுரியிலும், தமிழிலும் ஒருவருக்கும் புலப்படாத ஒரு விஞ்ஞானச் செய்தியோ, மற்றச் செய்தியோ இதில் புகுந்தால் இடம்,பொருள், ஏவல், முரண்பாடு ஆகும். அந்த முரண்பாடுகள் சிறிதும் இல்லாமல் கலைஞர் மிகத் திறமையாக இதை எழுதியிருக்கிறார். ஆனால் இதுவும் ஒரு இல்லாமையின் குணம், குற்றம், 'நெகடிவ் வர்ச்சு (Negative Virtue) என்று கூறலாம். இதில் சிறப்பான குணங்கள் என்ன என்று நீங்கள் கேட்கலாம். நான் சிறிது கூறுகிறேன். நான் அதிகமாகப் பேச விரும்பவில்லை, சிறிதே கூறுகிறேன். இதில் முதல் சிறப்பான குணம் என்னவென்றால் வரலாற்றுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட, முழுவதும் நடந்திருக்கக் கூடிய கதாபாத்திரங்களும், 'கருவூலம்' (பிளாட் என்று சொல்கிறோம் அல்லவா?) அதுவும் கூடிய இந்த நூல் மிகத் திறமையாக எழுதப்பட்டதில் அந்தக் காலத்துத் தமிழர்வளம், தமிழர் பண்பு, தமிழர் குணம், தமிழர் வீரம், பெண்மையின் திண்மை இவைகள் எல்லாம் விளக்கப்பட்டிருக்கின்றன. இவை எல்லாம் ஓரளவு கற்பனையாக இருக்கிறதே, அந்த நாட்களிலும் பல குறைகள் இருந்திருக்க வேண்டுமே என்று சிலர் நினைக்கலாம்.
அண்மையில் சில அமெரிக்கர்களுக்கு நான் தமிழ்நாட்டின் சிறப்புக் குறித்து, அதாவது கி.மு. 2 முதல் கி.பி.2 வரை தமிழ்நாட்டில் உள்ள வளங்களைப் பற்றிப் பேச வேண்டியிருந்தது. அப்போது பல நூல்களைப் படித்துத் தமிழிலிருந்து ஆங்கில ஆக்கம் செய்து அவர்களுக்கு விளக்கிக் காட்டினேன். அப்போது முக்கியமாக எனக்குப்பட்டது என்னவென்றால் தமிழில் நாம் அகம், புறம் என்று கூறுகிறோம். அதாவது, ஆண்-பெண்ணிடையில் வயது வந்த பிறகு முதலில் குறை குற்றம் இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் நேசமாக நேரிடும் அன்பு என்னும் காதலின் மாண்பு; இரண்டாவது வீரம். போரில் வீரம், போர்க்களத்தில் வீரம், போர்க்கள வீரனின் தாய்மாரின் வீரம். இவை இரண்டும் தமிழில்- தமிழ் இலக்கியத்தில் - பெரும் சுவைகளாக அமைந்திருக்கின்றன. இவை இரண்டும் இந்த நூலிலும் மிகப் பெரிய சுவைகளாக அமைந்திருக்கின்றன. ஆகையால் மிகையாகக் கூறல் என்ற (அதிக யுக்தி என்று சொல்வார்கள் வடமொழியில்) அந்தக் குற்றத்திற்கு இந்த நாவலாசிரியர் ஆளாகவில்லை என்பது என்னுடைய நீதிமன்ற அபிப்பிராயம் என்று கூறலாம்.
ஆம். இங்கு முத்துநகை என்று ஒரு பெண் வருகிறாளே, அவள் என்ன ஆண் வேடம் தரித்துப் போகிறாளே; சிறிதும் அச்சம் இல்லாமல் குதிரை மீதேறிச் செல்கிறாளே; பயங்கரமான கட்டங்களில் சிக்கித் தவிக்கிறாளே என்றால், அவைகள் தமிழ் மரபுக்கு ஒத்தவை அல்ல என்று நாம் கூறிவிட முடியாது. நான் இங்கு இலக்கியத்திலிருந்து எடுத்துக் காட்டினால் காலம் ஆகிவிடும். அந்த அமெரிக்கர்களிடம் கூறினேன்: புறநானூற்றில் இருந்து. ஒன்றில் தாய் கூறுகிறாள்; என்னுடைய மகனைத் தேட வேண்டுமா? என்னுடைய மகன் என் கர்ப்பப் பை ஆகிய குகையில் சிறு காலம் தங்கிய புலி. (எவ்வளவு அழகான உவமை!) அந்தப் புலி சென்றுவிட்டது! அதைப் போர்க்களத்தில் முதுகில் ரணம் இல்லாமல் மல்லாக்கப் பார்க்கலாம் என்கிறாள்.
ஆகையால் மறம், வீரம் இவைகள் உண்மையாகவே தமிழ்நாட்டில் மிகவும் செறிந்த நயங்கள் என்பது நமக்குச் சிறிதேனும் ஐயமில்லாமல் தெரிகின்றது. மற்றொன்று எனக்கு மிகச் சுவையாகப் பட்டது. ஒரு பெண் ஆண் வேடம் தரிப்பதோ, அந்த ஆண்வேடம் தரித்த பெண்ணை மற்றொரு பெண் காதலிப்பதோ, இது நேரிடக்கூடியதா? ஆண் என்று நினைத்து மயங்கிக் காதலிப்பது நேரிடக்கூடியதா என்று நான் நினைத்த அளவில் ஷேக்ஸ்பியர் மகாகவியின் இரண்டு நாடகங்களில் -'As you like it' 'Twelfth Night' என்ற இந்த இரண்டு நாடகங்களிலும் இது முக்கிய கட்டமாக வந்திருக்கிறது. பெண் ஆண் வேடம் தரிக்கிறாள். அந்த ஆண்வேடம் தரித்த பெண்ணை மற்றொரு பெண் காதலிக்கிறாள்! ஆனால் ஷேக்ஸ்பியர் ஒன்றை விட்டுவிட்டார். நம்முடைய கலைஞரை ஒப்பிட்டுப் பார்த்தால் ஷேக்ஸ்பியர் சிறிது கவனம் இல்லாமல் இருந்திருக்கிறார். குரல் வெளிப்பட்டு விடுமே என்ற ஒரு செய்தி! எவ்வளவுதான் உடை உடுத்தி, பெண் ஆணாக நடித்தாலும், குரலினால் அறிமுகப்படுத்தப்பட்டு விடுவாளோ என்ற ஒரு செய்தி இருக்கிறது அல்லவா? அதில் கலைஞர் மிகவும் கவனம் செலுத்தி, "இந்த முத்துநகை என்ற பெண் ஆண் குரலில் பேசிப் பழகிக் கொண்டாள்" என்று எழுதியிருக்கிறார். எனக்குச் சிறிது வியப்பாக இருந்தது. அடடே நல்ல வேளை, இவர் ஒரு வழக்கறிஞராக ஆகி, நீதி மன்றங்களில் வந்திருந்தால், நமக்கு மிகத் தொல்லையாக இருந்திருக்குமே; இவ்வளவு நுட்பமாக ஷேக்ஸ்பியர் மகாகவி கவனிக்காது விட்டதைக்கூட இவர் கவனித்து இருக்கிறாரே என்று உண்மையில் நான் அதை மிகவும் மெச்சினேன். மற்றொன்றைக் கூறவேண்டும். இதில் ஒரு பிரெஞ்சு மொழியை நான் உபயோகிக்கக் கடமைப்பட்டுள்ளேன். சிலருக்கு அது தெரியாமல் இருக்கலாம். அதற்குத் தமிழாக்கம் கூறுகிறேன். இப்போது புதிய இலக்கணம் இருக்கிறதே. இதில் நான் சிறிது உழல வேண்டியிருக்கிறது.
புதிய இலக்கிய வட்டங்களில் 'அவமகாம்' என்ற பிரெஞ்சு மொழி உபயோகிக்கப்படுகிறது. அதற்கு, முன்னணி வகுப்பு என்று பொருள். முன்னணி வகுப்பு எழுத்தாளர்க்கு ஒரு முக்கிய லட்சணம் என்னவென்றால், பால் அல்லது இன உணர்ச்சி அதாவது ஆண் மகன் பெண்ணால் கவரப்படுதல், பெண் ஆண் மகனால் கவரப்படுதல். இதைப் பச்சைப் பச்சையாக-எவ்வளவு பச்சையாக என்றால், உங்கள் வீட்டிற்குக் கொண்டு போனால் குழந்தைகளிடமோ. மனைவியிடமோ, அக்காள் தங்கைகளிடமோ காட்டமுடியாதபடி எழுதுதலாகும். இது பேரிலக்கியம்! அல்லது பேரிலக்கியத்திற்கு ஒரு சான்று. இந்த எண்ணம் எப்படி உதித்ததோ எனக்குத் தெரியவில்லை. இதில் என்ன இருக்கிறது என்றும் தெரியவில்லை. ஏனென்றால் விலங்கினங்களுடன்சமமாக நாம் பங்கிட்டுக் கொள்வது இந்தப் பால் உணர்ச்சி, ஆனால் மனிதனுக்கு மனது என்ற ஒன்று இருக்கின்றது. அவனுக்கு உயிர் இருக்கின்றது, சிந்தனை இருக்கின்றது, ஆண்பால், பெண் பால் என்ற வித்தியாசத்தில் முழு அன்பையும் செலுத்த முடியும். அந்த முழு அன்பையும் செலுத்தும் காதலில் தூய்மையான காதல் இந்தப் பால் உணர்ச்சியில் ஒரு பங்கு பெறுகிறது. அப்போது அதற்குத் தனியாக ஒரு அழகு, சோபிதம் இருக்கிறது. இதைப் பிரித்து விட்டு உணர்ச்சியாக, பச்சையாக வெளிப்படுத்தினால் அது மிக ரசக் குறைவாக, மிகச் சுவைக் குறைவாக இருக்கும். இதை ஏன் இலக்கியமாகக் கருதுகிறார்கள் என்று இன்னும் எனக்குப் புரியவில்லை. உண்மையில் எனக்குத் தடுமாற்றமாகத்தான் இருக்கிறது.
நமது கலைஞர் எழுதியிருக்கிற இந்த நூலில் இன்பச் சுவை (சிருங்காரம் என்று வடமொழியில் கூறுவார்கள்) அது மிக அடிப்படையானது. அவலச் சுவை (சோகரசம்), இன்ப ரசம் (சிருங்காரம்), நகைச்சுவை (ஹாஸ்யம்) இவை மூன்றும் இல்லாமல் இலக்கியங்களை இயற்றுவதே நல்லதல்ல. இவர் இன்பச் சுவையை எடுத்துக் கையாண்டு இருக்கிறார். ஆனால் தூய்மையான காதலாகவே கையாண்டிருக்கிறார். அந்தக் காதலில் இன உணர்ச்சி, பாலுணர்ச்சி, கவர்ச்சி இருக்கிறது. ஆனால் அதில் பதுங்கி மறைந்து இருக்கின்றது. இந்தப் புத்தகத்தை நீங்கள் - நான் நீதிபதியாக இருந்து சொல்கிறேன்-தங்கு தடை இல்லாமல் உங்கள் தங்கைமார்கள், மனைவி, குழந்தைகளிடம் வழங்கலாம். இதில் ஒரு வாசகமாவது, ஒரு சொல்லாவது அவர்களுக்கு ஒரு அசிங்க உணர்ச்சியையோ, ஒரு வெட்கத்தையோ கொடுக்கும் சொல்லாக இல்லை. இதை நான் மெச்ச வேண்டியதுதான். ஏனென்றால் இது வேண்டாம், பச்சை பச்சையாகத்தான் நான் எழுதுவேன். எங்களுக்கு உரிமை உண்டு என்றும் (யாருக்கு என்ன உரிமை இருக்கிறது என்று இப்போது ஒன்றும் தெரியாமல் கலங்கலாக இருக்கிறது!) அடிபட உரிமை, அடிக்க உரிமை, இரண்டும் கேட்கிறார்கள்.அடிபட உரிமை உண்டா? அடிக்கும் உரிமை உண்டா? இது எங்கு போய் முடியும்? விபரீதமாக இருக்கிறது.
மிகத் தூய்மையான காதலை இதில் கலைஞர் கையாண்டு இருக்கிறார். ஆகையினால் அந்த அளவிலும் இந்த நூல் மிகவும் சிறப்புக்குரியது. உரைநடையைப்பற்றி ஒன்று கூறலாம். நீதிபதி என்றால் ஒரு குறை கூறாமல் தீர்ப்புக் கூற முடியாது. அவர் உரைநடை மிக எளிமையாக எழுதியிருக்கிறார். ஆனால் இலக்கிய மரபை மிகவும் தழுவி எழுதிவிட்டார். ஆகையால் சில சில இடங்களில் அவ்வளவு தமிழ் அறிவு எல்லோருக்கும் இருக்குமோ என்று எனக்கு ஒரு ஐயப்பாடு எழுகிறது. சில இடங்களில் சங்க காலத் தொடர்களையே எழுதியிருக்கிறார். சில இடங்களில் அவர் 'கழறினார்' என்று எழுதியிருக்கிறார். கூறினார். பேசினார், சொன்னார் என்று எவ்வளவு வகைகளிலே சொல்லலாம். கழறினார் என்ற சொல்லைச் சிறிது இலக்கியம் படித்தவர்கள்தான் அறிவார்கள். இது ஒன்று, நான் சொல்ல வேண்டியது. மற்றொன்று, கடைசியாக ஒன்றைக் கூறுகிறேன். நானாகக் கண்டுபிடித்தது இது. ஆகையால் இதைச் சொல்லிவிட்டு நான் முடித்துக் கொள்ளலாம் என்று கருதுகிறேன்.
எனக்குச் சில வேளைகளில் தோன்றுகிறது. தனி மனிதனின் கற்பனை என்பதே ஓரளவு நாம் தவறாக எண்ணுவதோ என்று எனக்குத் தோன்றுகிறது. அதாவது கற்பனைக் கடல் என்பது தனி மனிதனை மாத்திரம் குறித்தது அல்ல. இந்தக் கற்பனைக் கடல் உலகெங்கும் பரவியிருக்கிறது. எல்லா மனிதர் உள்ளத்திலும் இருக்கிறது. ஆகையால் ஏதோ ஒரு நூற்றாண்டில் வாழ்ந்த ஏதோ ஒரு புலவனுடைய கருத்து, அவனைச் சிறிதும் அறியாத மற்றொரு நூற்றாண்டில் வாழ்ந்த மற்றொரு கவிஞனின் கவிதையில் மிளிர்வதைப் பார்த்தால் இந்தக் கவிதை உள்ளம் என்பது ஒருவருக்கு மட்டும் சொந்தம் இல்லையோ என்று எனக்குத் தோன்றுகிறது. இதற்கு ஒரு சிறு விளக்கம் கூறுவேன். அந்த விளக்கம் ஏன் என்றால் நமது கலைஞருக்கு மிகவும் பிடித்தமான கலிங்கத்துப்பரணி என்ற நூலில் இருந்து எடுத்தது. செயங்கொண்டான் என்ற குலோத்துங்கச் சோழனின் அவைப் புலவர் எழுதியிருக்கிறார். போர்க் களத்தை விவரிக்கும்போது இந்தப் பாட்டு வருகிறது.
"தரைமகளும் தன்கொழு நன் உடலந் தன்னைத்
தாங்காமல் தன் கரத்தால் தாங்கி விண்ணாட்(டு)
அரமகளிர் அவ்வுயிரைப் புணரா முன்னம்
ஆவியொக்க விடுவாளைக் காண்மின் காண்மின்"
அந்தக் கற்பரசியானவள் பூமாதேவி தன் கணவனுடைய சவத்தை அவள் மடியில் வைத்துக்கொள்ளக்கூடாது என்று, தன் மடியில் வைத்து, அவன் உயிர் தேவலோகத்துக்குப் போனால் தேவ அணங்கினர் தழுவி விடுவார்களோ என்று, உயிரைக் கூடவே விடுகிறாள் என்று வர்ணித்துக் கூறுகிறார். இவர் 8-ஆவது நூற்றாண்டில் (எனக்குச் சரியாக வரலாறு தெரியவில்லை, மறந்துபோய்விட்டது) குலோத்துங்கச் சோழன் காலத்தில் வாழ்ந்த அவைப் புலவர். அதில் சிறிதும் ஐயப்பாடு இல்லை. 15ஆவது 16ஆவது நூற்றாண்டில் மகாகவி ஷேக்ஸ்பியர், அந்தோணியும் கிளியோபாட்ராவும் என்ற நாடகத்தை எழுதியிருக்கிறார். அவருக்குச் செயங்கொண்டான் என்றால் யார் என்றே தெரியாது. தமிழும் தெரியாது. இந்தியாவும் தெரியாது. அவர் எழுதும்போது, இந்தக் கிளியோபாட்ரா என்பவள் ஒரு நாகத்தை மார்பில் தீண்ட வைத்துத் தற்கொலை புரிந்து கொள்கிறாள். ஐராத் என்ற அவளது பணிப்பெண்ணும் அது மாதிரித் தற்கொலை புரிந்து கொள்கிறாள். கிளியோபாட்ரா இறக்கும் முன்னரே அவளை நாகம் கடித்து விட்டது. உடனே அந்தப் பணிப்பெண் சவமாகி விடுகிறாள்.
'அவள் முதலில் என்னுடைய காதலனாகிய அந்தோணியைத் தேவலோகத்தில் சந்தித்தால் அந்த அதர முத்தத்தை அவன் முதலில் பெற்று விடுவான். நாம் முதலில் சாகவேண்டும்' என்று எண்ணுகிறாளாம்! செயங் கொண்டானின் கருத்து அந்த ஷேக்ஸ்பியருக்கு எப்படி வந்தது? அதே கற்பனையை இவர் எப்படி விவரித்தார்? அவர் எப்படி விவரித்தார்? இவ்வகையாகப் பலப்பல தொடர்புகளை -பல இலக்கியங்களைப் பார்க்கும் போது கவிஞர் உள்ளம் என்பது பெருங்கடல். அதில் தனித்தனிக் கவிஞர்கள் மிதக்கிறார்களேயொழிய அது ஒரே கவிஞனுக்கு உறைவிடம் என்று கூறமுடியாது என்று சொல்லலாம்.
நான் முன்பு குறிப்பிட்டேனே: ஷேக்ஸ்பியர் மகாகவியின் கருத்தும், நம் கலைஞரின் கருத்தும் இப்படித்தானே ஒத்து வருகின்றன.
எனவேதான் இந்த நூலை வெளியிடுவதில் நான் மிகப்பெருமை கொண்டு வெளியிடுகிறேன்.
வணக்கம்.