ரோமாபுரிப் பாண்டியன்/ஊ. கவியரசு கண்ணதாசன் ஆற்றிய உரை
நூலின் முதற்படியினைப் பெற்றுக்கொண்டு
கவியரசு கண்ணதாசன் அவர்கள் ஆற்றிய உரை
இங்கே நீதிபதி திரு. அனந்தநாராயணன் அவர்கள் வெளியிட்ட இந்த 'ரோமாபுரிப் பாண்டியன்' என்கிற நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொள்வதிலே நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன்.
முன்னால் பேசிய நீதிபதி அவர்கள் எவ்வளவு தெளிவாக இந்த நூலைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ அவ்வளவும் சொல்லியிருக்கிறார்கள். 'தீர்ப்பு'க்குப் பின்னாலே வாதம் என்பது நியாயமில்லாததொன்றாகும். அது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்றாகும். இங்கே இரு தரப்பு வக்கீல்களுடைய ஆர்குமெண்ட்டையும் அவர்களே செய்து தீர்ப்பையும் அவர்களே வழங்கியிருக்கிறார்கள். ஆகவே, அவர்கள் சொன்னதுதான் முற்றும் முடிந்த உண்மையான மதிப்பீடாகும்.
கலைஞர் கருணாநிதி அவர்கள் சரித்திர நாவல் எழுதுவதிலே நீண்ட நாட்களாகவே ஆர்வம் காட்டியவர்கள். அவருக்கும், அவரைப் போன்ற தமிழார்வம் உள்ளவர்களுக்கும், சரித்திரத்தில் எங்காவது ஒரு தடயம்- இன்ன காலத்தில் இன்னார் வாழ்ந்தார் என்று கிடைத்தாலே போதும் - அவர்களைப் பின் தொடர்ந்து போய், முடியுமானால் ரோமாபுரி வரைக்கும் போய், அந்த வரலாற்றுக்குப் புதிய மெருகைக் கொடுத்துவிட - அந்த ஆர்வம் அவர்களை உந்தித் தள்ளுகின்றது. அதிலேயும், எந்த ஒரு எழுத்தாளனுக்கும் மிகவும் இன்றியமையாதது ஒன்றைப் பார்க்கும்போது இன்னொன்று தோன்றுவதாகும். அது பெரும்பாலான எழுத்தாளர்களுக்குத் தோன்றாததால்தான் அவர்களுடைய எழுத்துக்களை நாம் படிக்கும்போது அவர்களே முன்னால் நிற்கின்றார்களே தவிர அவர்களுடைய எழுத்து முன்னால் நிற்பதில்லை. ஆனால் இவரைப் பொறுத்தவரை ஒரு பொருளைக் காணும்போது, அவருக்கு வேறு பொருள் தோன்றுகிறது.
ஒன்றைப் பார்க்கும்போது இன்னொன்று விரிவது என்பது ஒரு நல்ல கற்பனையாளனுக்கு உள்ள நியாயமாகும். அது இல்லையென்றால். பெண்ணைப் பார்க்கும் ஒருவன் கண்ணைக் கண் என்றுதான் சொல்லுவான். வாயை வாய் என்றுதான் சொல்லுவான். கண்ணைக் குவளை என்று சொல்ல ஒருவனுக்குத் தோன்றிற்று, வாயைக் கோவை என்று சொல்லத் தோன்றிற்று என்றால் ஒன்றை நோக்கி இன்னொன்று விரிகின்றது. அது சற்றுக் கற்பனையாக அதிகமாக விரிகின்றது. ஆகவே, ரோமாபுரிக்கும், நம்முடைய நாட்டுக்கும் இடையிலே உறவு இருந்தது என்ற ஒன்றை அடிப்படையாகக்கொண்டு, அதற்கு என்னென்ன வரலாற்றுச் சான்றுகள் கிடைக்குமோ அவ்வளவையும் சேர்த்து ஒரு நல்ல பெரிய நாவலாகக் கலைஞர் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். சரித்திர நவீனம் எழுதுவதிலே ஒரு கஷ்டம் உண்டு. எத்தனை கதாபாத்திரங்களை எடுத்துக் கொள்கிறோமோ அவர்கள் எல்லாம் எங்கெங்கே இருக்கிறார்கள் என்று அடிக்கடி ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாம் அடுத்தாற்போல் எழுதும்போது அது தலைகீழாகப் போய்விடும்.
நான் பாண்டிமாதேவி என்று ஒரு காவியம் எழுதத் தொடங்கினேன். அந்தக் காவியம் எழுதத் தொடங்கி 12 வருடம் ஆகின்றது. பாண்டிமாதேவி என்றுதான் அதற்குத் தலைப்பு. நான் பின்தொடர்ந்து போனது சேரமாதேவியை. அவள் இலங்கையில் இருக்கிறாள் இப்போது. அவளை எப்படித் திரும்பக் கொண்டு வருவது என்று தெரியாமல் 12 ஆண்டு காலமாக பாண்டிமாதேவி நடுத்தெருவிலே நின்றுகொண்டிருக்கிறாள். கதாபாத்திரங்களைக் கொண்டு செலுத்துகின்ற பாணி என்பது நினைவிலே நிறுத்தி வைத்துக் கொண்டு போக வேண்டும். ரோமாபுரிக்குப் பாண்டியன் போனான், ராணி இங்கே தமிழ்நாட்டிலே இருந்தாள் என்றால் இரண்டு பேருக்குமிடையே உள்ள சம்பவங்கள் ஞாபகத்தோடு வரையப்பட வேண்டும். ஆகவே முன்னாலே சொன்னது போன்ற பாத்திரங்களைப் பின்தொடரும்போது மிக ஜாக்கிரதை யாகப் பின் தொடர வேண்டும். அதிலும் பாத்திரப் படைப்பு, பாத்திரங்களுடைய குணங்கள் என்பது மிகவும் முக்கியமாகக் கருதப்பட வேண்டும். அதை ரோமாபுரிப் பாண்டியனிலும் கலைஞர் அவர்கள் மிக அழகாகக் கையாண்டு இருக்கிறார்கள். பொதுவாக மனிதனுக்கு ஒன்பது குணங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு மனிதனைப் பாத்திரமாகப் படைக்கும் போது அவனுக்கு ஒரு குணம்தான் இருக்கவேண்டும். அது போலவே எந்தச் சிறப்பான நாவல், நாடகங்களில் பார்த்தாலும் அந்த கேரக்டர் என்பது ஒன்றாக இருக்க வேண்டும்.
கதாபாத்திரங்களைப் படைப்பது என்பது, படைக்கின்ற போதே கதையின் உருவகமும், கண்ணிலே கிடைக்க வேண்டுமென்பதற்கு இந்த ரோமாபுரிப் பாண்டியனை ஏறக்குறைய நான் 200 பக்கங்கள் படித்தேன். அது ஒரு நல்ல சாட்சியாக அமைந்திருக்கிறது. தமிழிலே, தமிழ்நாட்டு மக்களுடைய வீர மரபுகள் பற்றிய ஏராளமான கதைகள் உண்டு. தமிழ்நாட்டு மக்கள் அந்நாளிலே வாழ்ந்தது அகத்துறையும், புறத்துறையும் நமக்குக் காட்டுகின்றன. கலைஞர் கருணாநிதியின் இந்த நூல் அகம்புறம் இரண்டையும் முழுமை செய்கிறது. இந்த இரண்டு துறைகளுக்குள்ளே தான் அன்றைய தமிழனுடைய வாழ்நாள் முழுவதும் அடங்கியிருந்தது. ஆகவே, முழுவதும் இங்கே அவர்கள் தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள். இத்தனைக்கும் அவரும் என்னைப் போலவேதான் வாராவாரம் பத்திரிகையிலே கதை எழுதினார். இந்த வாரம் நிறுத்தும்போது கதாசிரியனுடைய - தொடர் கதையாசிரியனுடைய பலவீனம். ஜனங்களுடைய பலவீனம் என்று நினைத்துக் கொள்வது என்னவென்றால், நிறுத்துகிற இடத்தைப் பொறுத்துத்தான் அடுத்த வாரப் பத்திரிகையின் விற்பனை என்று.
கலைஞர் கருணாநிதி அவர்கள் எழுதிய தொடர்கதை விழுந்து எழாமல், நிமிர்ந்தே நின்றுகொண்டு இருப்பதற்குக் காரணம் அவர் எடுத்துக் கொண்ட சரித்திரத்தினுடைய பலமான பின்னணி என்பதுதான் மிக முக்கியமானதாகும்.
தமிழர்கள் ரோமாபுரிக்குப் போனதாக வரலாறு உண்டு. அப்படிப் போனவர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள்; எப்படியெல்லாம் இருப்பார்கள் என்று அவர் நினைத்துப் பார்த்திருக்கிறார். பூம்புகார் கடற்கரையிலே போய் நின்றுகொண்டு, இது முன்னாலே எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்ய அவருக்கு மட்டும்தான் தெரிந்திருக்கிறது என்பதிலிருந்து, பழங்கால வரலாற்றை அவர் படிக்கும்போது, அது எப்படி இருந்திருக்கும் - எப்படிப் போயிருப்பார்கள் என்று கற்பனை செய்து இருக்கக் கூடும். அதை அவர் பெருமையாகக் கருதியிருக்கக்கூடும்.
உண்மையிலேயே நான், சிங்கப்பூர் போயிருந்தபோது அதனுடைய வரலாற்றைப் படித்தேன். சிங்கப்பூர் எப்போது தோன்றியது என்று எழுதியிருக்கிறார்கள். இந்தோனேஷியாவை ஆண்டு கொண்டிருந்த ஒரு தமிழ் மன்னன் அங்கிருந்து தனது விரோதியான வேறொரு தமிழ் மன்னனாலே துரத்தப்பட்டு அந்தத் தீவுக்கு வந்த போது அங்கே ஒரு சிங்கத்தைக் கண்டான். அதற்குச் சிங்கபுரம் என்று பெயரிட்டான். அதுதான் அந்தத் தீவின் முதல் வரலாறு என்று சிங்கப்பூர் அரசாங்கம் வெளியிட்ட வரலாற்றுக் குறிப்பில் இருக்கிறது என்பதனை நான் கண்டேன். அங்கு அது மட்டுமல்லாது, மலேசியாவில் இருக்கின்ற முஸ்லீம் வமிசாவழியினருக்கு முதன் முறையிலே முஸ்லீமாக மாறியவன் மலாக்காவை ஆண்டு வந்த ஒரு தமிழ் மன்னன் என்பது மலேசியாவினுடைய வரலாறு.
ஆக, தமிழன் எங்கெங்கோ போய் விதை போட்டிருக்கிறான். ஆனால் அறுவடை செய்யாமல் திரும்பி வந்திருக்கிறான். அதுதான் நமக்கு அவன் செய்த துயரமாகும். ஆக, எங்கெங்கோ அவனுடைய வரலாறு இருக்கிறது. கம்போடியாவில் ஒரு பிரம்மாண்டமான கோயில். பிரம்மாவுக்கு வேறு எங்கேயும் கோயில் இல்லை. அங்கே இருக்கிறது. அதிலே இருக்கின்ற சித்திரங்களை எல்லாம் கொண்டு வந்து, மலேசியாவில் பிரிண்ட் செய்து விற்றுக்கொண்டிருக்கிறார்கள். பாற்கடலைக் கடைந்தது, விஷம் வந்தது. அவ்வளவும் இருக்கிறது அங்கே! கிட்டத்தட்ட ஒரு மைல் தூரத்திற்கு அதனுடைய சுற்றளவு இருக்கிறது. அவ்வளவு பெரிய கோயில். அந்தக் கோயிலைக் கட்டிக் கொண்டிருந்தவர்கள் தமிழ்நாட்டு ஸ்தபதிகள். அவர்கள்தான் கட்டிக்கொண்டிருந்தார்கள் என்று கம்போடிய வரலாறு கூறுகின்றது. ஆனால் காலரா போன்ற வியாதியினாலேயே அவர்கள் அதை முடிக்காமல் போனார்களா, வேறு வகையினாலே போனார்களா என்பது தெரியவில்லை என்று வரலாறு குறிக்கிறது. ஆக, தென்கிழக்கு ஆசியா முழுவதையும் பார்த்தால் நம்முடைய நாகரிகம் எப்படிப் பரவியிருக்கிறது; நம்முடைய மன்னர்கள் எவ்வளவு தூரம் அங்கே போய் இருக்கிறார்கள் என்பது தெரியும்.
கடாரங்கொண்டான், கங்கை கொண்டான் என்கிற வரலாறுகளை நாம் இன்றைக்குக் கேட்கிறோம். அதிலும் ரோமாபுரிக்குப் போவது, தமிழ் நாட்டிலேயிருந்து போவது ரொம்ப வசதியாகும். பருவக்காற்று தோதாக அடித்தால் நீங்கள் பாயை இறக்கிவிட்டு பேசாமல் இருக்கலாம். அது நேரே இத்தாலிக்குத்தான் போகுமே தவிர வேறு எங்கேயும் போகாது. ஆகவே பருவக் காற்றினுடைய துணையைக் கொண்டு அவர்கள் போயிருக்கிறார்கள். அதை வரலாறாகக் கண்டு நண்பர் கருணாநிதி அவர்கள் வாராவாரம் எழுதும்போது, அது இவ்வளவு பெரிய புத்தகமாக வருமா என்பது அவருக்கே தெரியாது. வாராவாரம் எழுதினார். சமயங்களிலே கல்கிகூடத் திருத்தம் போடுவதுண்டு. சென்ற வாரம் எழுதியதிலிருந்து இதை இப்படி மாற்றிப் படித்துக்கொள்ளுங்கள் என்று. இவர் அப்படியில்லாமல், இரண்டு தடவை வேறு வேறு பத்திரிக்கையிலே எழுதி ஒரு நல்ல நூலாக ஆக்கியிருக்கிறார். இவ்வளவு வேலைகளுக்கு இடையிலேயும்கூட அவருடைய பேனா தெளிவாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த நூலும் ஒரு சான்றாகும்.
இந்த முதல் நூலைப் பெற்றுக் கொள்வதிலேயே நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால், கலைஞரிடமிருந்து நான் முதன்முதலாகப் பெற்றுக்கொண்டதுதான் கவிஞர் என்ற அடைமொழி. அப்போது இரண்டே இரண்டு கவிதை மட்டும் எழுதியிருந்த என்னைப் பொள்ளாச்சிக்கு அழைத்துக் கொண்டுபோய் "கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பேசுவார்கள்" என்று அவர் சொன்னவுடனே, எனக்கே என்னவோ மாதிரி இருந்தது.
ஆக அவரிடமிருந்து அப்போது நான் அந்த விருதைப் பெற்றுக் கொண்டேன்; இப்போது இந்த நூலைப் பெற்றுக் கொள்கிறேன். இதுபோன்ற பல நூல்களையும் நான் அவரிடமிருந்து பெற முடியும். இந்தப் பதவியே போனாலும்கூட அவர் கையிலே இருக்கிற பேனா இந்த நாட்டைச் சுழன்றடிக்கின்ற சூறாவளியாக இயங்கும். இந்தப் பதவியை யாராவது பறித்துக் கொண்டாலும் அவர்களை அந்தப் பேனாதான் பதம் பார்க்கும். அந்த அளவுக்குச் சக்தியுள்ள அந்தப் பேனா இன்னும் தொடரட்டும் என்கின்ற என்னுடைய வாழ்த்துக்களோடு இதனை நான் பெற்றுக்கொள்கிறேன்.
வணக்கம்