ரோமாபுரிப் பாண்டியன்/எ. அறிமுகம்
அறிமுகம்
மாவீரன் பாம்பே - மாவீரர்களை மண்டியிட வைத்த சீசர் - சீசர் வளர்த்த சிங்கம் அந்தோணி - அந்தோணியை அடக்கிய அகஸ்டஸ் - இப்படி வீரத் திருவிளக்குகளின் ஒளி மழையால் எழில் கொண்டு விளங்கிய பூமி ரோமாபுரி.
அது வாழ்ந்த விதமும் தாழ்ந்த கதையும் யாரும் அறியாத ரகசியமல்ல. ரசவல்லிகளின் மைவிழிகள்-மதுக்கிண்ணங்கள் இவைகளே அந்தத் திருநாட்டின் பெரு வீழ்ச்சிக்குக் காரணம் என்ற விளக்கத்தை வரலாறு புலம்பிக் காட்டுகிறது. ஏற்றமும் பொலிவும் குலுங்க என்றைக்கோ ஒரு நாள் மலையில் ஏற்றிவைத்த தீபம்போல் அந்தச் சின்னஞ்சிறு சிங்காரப் பொன்னாடு எட்டுத்திக்கும் புகழ் பரப்பிக் கொண்டிருந்தது. அதன் மெருகு குலைந்து அடித்தளமும் ஆட்டங்கொடுத்துப் புழுதியில் வீசப்பட்ட வீணையென ஆகிவிட்ட காலத்தை, கி.பி.1453 என்று கணக்கிட்டுக் கூறுவார்கள், சரித்திர ஆசிரியர்கள்.
ரோமானியப் பேரரசை உலகுக்கு முதன் முதல் அறிமுகப் படுத்திய பெருமை யாருக்கு உரியதாக இருந்தாலும், அந்தப் பிஞ்சுக் குழந்தையைப் பெற்றெடுத்த கௌரவம் முழுமையும் 'ரோமுலஸ்' என்பவனையே சாரும்.
கி.மு.753-ல் இத்தாலியிலே லத்தீன் மொழி பேசிக் கொண்டு ஒரு கூட்டம் நுழைந்தது. அந்தக் கூட்டத்தினர் 'தைபர்' ஆற்றங்கரையில் சிறு நகர் ஒன்றைத் தோற்றுவித்தார்கள். நகரைச் சுற்றி ஏழு குன்றுகள்- நடுவிலே நகரம். நகரை அமைத்த கூட்டத்தின் தலைவன்தான் ரோமுலஸ். அவன் பெயரே அந்த நகருக்கு வழங்கலாயிற்று.
பற்பல ஆபத்துக்களைச் சந்தித்து, உலகத்தின் கண்ணெதிரே நிமிர்ந்து நிற்க வேண்டுமென்று ரோமாபுரி நெஞ்சை உயர்த்திக் கொஞ்சங் கொஞ்சமாக எழுந்தது. அந்த எழுச்சிக்கு ஊக்கமளித்தவர்கள்தான் உரம் வாய்ந்த பெரு வீரர்களான பாம்பே, சீசர், அந்தோணி, அகஸ்டஸ் போன்றவர்கள்!
பாம்பேயின் தலையை எகிப்துக் கடற்கரையின் மணல்மீது நறுக்கிப் போட்டனர் - ஆனால், அதே மணல் வெளியில் சீசரின் மடியில் தலைவைத்து இன்ப சுகம் அனுபவித்தாள் பேரழகி கிளியோபாத்ரா! இது நடந்தது ஏறத்தாழ கி.மு. 48-ல். அந்தச் சீசரைப் பாம்பேயின் சிலை அருகே குத்திக் கொன்றனர், ரோமாபுரிப் பெருந்தகையினர் சிலர். அதன் பின்னர் அந்தோணிக்குச் சொந்தமானாள் எகிப்தின் அழகு ராணி கிளியோபாத்ரா. சீசரின் வளர்ப்பு மகன் ஆக்டேவியசுக்கு ரோமாபுரியைத் தன் ஆதிக்கத்தின் கீழ்க்கொண்டு வரவேண்டுமென்ற ஆசை வளரத் தொடங்கிற்று. அதன் விளைவாக ரோம் நாட்டுப் பாராளுமன்றத்தினர் அந்தோணியை விரோதியென்று விளம்பரப் படுத்தினர்.
போர்க்கொடி இரத்தச் சாயத்துடன் விண்ணை எட்டியது! இரு பெரும் தீரர்களும் ரணகளத்தில் இறங்கினர். போர்க்களத்தில் புரண்டு கொண்டிருந்த அந்தோணிக்குப் போர்க்களம் உற்சாகம் வழங்கவில்லை. புறமுதுகிட்டுத் திரும்பினான். ரோமாபுரியின் முதலாவது மன்னர் மன்னனாக மணிமகுடம் அணிந்து கொண்டான் ஆக்டேவியஸ்! "மகிமை பொருந்திய மாவீரன்" என்ற வீர வாசகத்தின் சுருக்கமான பெயராக “அகஸ்டஸ்" என்ற பட்டத்தை ரோமாபுரிப் பாராளுமன்றம் ஆக்டேவியசுக்குப் பூரிப்போடு சூட்டி மகிழ்ந்தது.
அகஸ்டஸ் சீசர் அரிமாவென நின்று ஆர்ப்பரித்தான் - அந்தோணியோ அந்தப்புரத்தில் சுருண்டு கிடந்தான். இந்த நிலைக்குரிய காலம் ஏறத்தாழ கி.மு.30 என்று கூறலாம்.
அந்தக் காலத்திலேதான் நமது பழம்பெரும் தமிழகத்தின் முப்பேரரசுகளின் கொடி நிழல் கொற்றம் தழைத்துக் கொண்டிருந்தது எனவும், சோழ மண்டலத்தில் திருமாவளவன் இரண்டாம் கரிகாற் பெருவளத்தான் ஆண்டு கொண்டிருந்தான் எனவும் வரலாற்றுப் பெரியவர்கள் வரையறுத்துள்ளார்கள். இந்தக் கரிகாலனின் காலம் கி.மு 60 முதல் கி.மு.10 வரை என்பதாகத் தமிழ்ச் சான்றோர் குறிப்பிடுகின்றனர்.
ரோமாபுரியிரே கோலோச்சிய அகஸ்டஸ் சீசரின்பால் பாண்டிய மன்னன் தனது தூதுவரை அனுப்பியிருந்தான் என்றும், அது கி.மு.20 என்றும் குறிப்புக்கள் காணப்படுகின்றன.
அங்ஙனமாயின் அந்தத் தூதுவரை ரோமாபுரி அகஸ்டஸ் மன்னனிடம் அனுப்பி வைத்த பாண்டிய அரசன் யார்?
இந்தக் கேள்விக்கு விடையினைக் கூறுவோர் பலவிதக் குழப்பங்களையே பதிலாகத் தந்திருக்கின்றனர், இதுவரையில்!
கரிகால் பெருவளத்தானுக்குக் "குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமா வளவன்" என்ற ஒரு பெயருண்டு. இந்தப் பெயர் அவன் மறைந்த பிறகு இடப்பட்ட தாகும். இவன் திருவிடைக் கழி' அல்லது 'குராப்பள்ளி' என்னும் இடத்தில் உயிர் நீத்ததால் அப்பெயர் பெற்றான். இவனைப் பற்றிய புறப்பாட்டு ஒன்றைப் பாடிய காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் எனும் புலவர், அந்தப் பாட்டில் பாண்டிய மன்னன் ஒருவனையும் இணைத்துப் பாடியிருக்கிறார். அந்த மன்னனின் பெயர் பெருவழுதி. இவன் "வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி" என்று அழைக்கப்பட்டான்; மறைந்த பிறகு!
"நீ அறந்தங்கும் உறையூரின்கண் அரசன்; இவனோ தமிழ் குலுங்கும் மதுரையில் குளிர்ந்த செங்கோலையுடைய வேந்தன் ! நீ, தண்புனல் காவிரிக்கு உரியவன்; இவனோ போரின் கண் மாட்சிமைப்பட்ட பாண்டியர் குடியில் ஏறு போன்றவன்; பொதிகைமலைச் சந்தனமும், திரைகடல் முத்தும், மும்முரசமும் கொண்டவன். நீவிர் இரு பெருந் தெய்வங்கள் ஒழுங்கு நின்றாற்போல் காட்சி தருகின்றீர்! இன்றுபோல் என்றும் நிலைத்திடுக நுமது நட்பு! வென்று வென்று போர்க்களத்தில் மேம்படுக உமது வேல்! புலி, கயல் பொறித்து, உம் வெற்றியைப் பிற நாட்டுக் குன்றுகளில் செதுக்கிடுவீராக!"
புறம் ஐம்பத்தெட்டாவது பாடலில் இந்த அழகிய கருத்தினைத் தந்து காரியக்கண்ணனார், சோழன் கரிகாலனையும், பாண்டியன் பெருவழுதியையும் ஒருசேர வாழ்த்துகிறார்.
இதனைக் கொண்டு கரிகாலன் காலத்துப் பாண்டியன் பெருவழுதியென்று முடிவு கட்டுகிறோம். கரிகாலன் காலமோ கி.மு. 60 முதல் கி.மு. 10 வரையில்
அந்தக் காலத்திலேதான் ரோமாபுரியில் அகஸ்டஸ் சீசர் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறான். அதாவது கி.மு. 39 முதல் கி.பி.14 வரையில்.
இந்தக் காலக் கணக்கை ஆராய்வதிலிருந்து அகஸ்டஸ் சீசருடன் நட்புறவு கொண்டு தூதுவரை அனுப்பிவைத்த பாண்டியன் பெருவழுதியாத்தான் இருக்க முடியும் என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியவர்களாகிறோம்.
ரோமாபுரிக்கும், தென்னகத்திற்கும் இந்தக் காலத்திற்கு முன்பே வாணிபத் தொடர்புகள் ஏற்பட்டு, இரு நாட்டுக்காரர்களும் அளவளாவி மகிழ்ந்தனர். கரிகாலனும், பெருவழுதிப் பாண்டியனும் மகுடம் புனைந்த பிறகு ரோமாபுரித் தொடர்பு வேகமாகத் தழைத்து வளரலாயிற்று. அகஸ்டஸ் சீசர் காலத்தில் ஓங்கி எழுந்த அந்த உறவு பல ஆண்டுக்காலம் நீடித்தது. நீரோ மன்னனின் ஆட்சிக் காலத்திற்குப் பிறகுதான் அந்த உறவு சிறிது சிறிதாகத் தேய்ந்து மாய்ந்தது என்று கூறலாம்.
தமிழமும், ரோமும் கொண்டிருந்த தொடர்புகளுக்குச் சான்று பகரும் வகையில் புதைபொருள் ஆராய்ச்சிகள் துணை நிற்கின்றன.
கிரேக்கரையும், ரோமானியரையும் யவனர்கள் என்ற பெயரால் அழைத்து, அந்த யவனர்களைத் தங்கள் அரண்மனைகளில் காவல் வீரர்களாக வைத்திருந்தனர் தமிழ்மன்னர்கள் என்பதற்கு இலக்கியங்கள் சாட்சி கூறுகின்றன. "கடிமதில் வாயிற் காவலிற் சிறந்த - அடல்வாள் யவனர்" என்ற சிலப்பதிகாரப் பாட்டு தக்க எடுத்துக்காட்டாகும்.
நக்கீரனார் பாடிய ஐம்பத்தாறாவது புறப்பாட்டில் "யவனர், நன்கலம் தந்த தண்கமழ் தேறல்" எனக் காணும் வரி, யவனர்கள் தமிழகத்தில் மது வகைகளைக் கொணர்ந்து விற்று வந்தனர் என்பதை உணர்த்துவதாகும்.
தென்னகத்திலிருந்து ரோமாபுரிக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட உணவுப் பொருள்களில் மிக முக்கியமானது மிளகு. அலாரிக் என்பவன் ஒரு காலத்தில் ரோமை வெற்றி கண்ட போது, நஷ்ட ஈட்டுத் தொகையில் மூவாயிரம் பவுண்டு தமிழ்நாட்டு மிளகும் தரவேண்டுமென்று உடன்படிக்கை செய்து கொண்டானாம். முசிறிக்குத் தெற்காக இருக்கும் குளச்சல் என்னுமிடத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் மூழ்கி எடுத்த முத்துக்களும் ரோமுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
டாலமி என்பவன், ரோமுடன் தொடர்பு கொண்டிருந்த தமிழ்நாட்டுத் துறைமுகங்களில் ஒன்றாக "கொபெரிஸ்" துறைமுகம் என்ற ஒரு பெயரையும் எழுதிக்காட்டுகிறான், காவிரிப்பூம்பட்டினத்தையே அவ்வாறு அழைத்திருக்கக் கூடுமெனக் கூறுவர் அறிஞர். அவன் "புடோக்கி” என்று ஒரு துறைமுகத்தைக் குறிப்பிடுகிறான். அது அநேகமாகப் புதுவையாக இருக்கவேண்டுமெனக் கூறுகிறார்கள். பாண்டிநாட்டுக் கொற்கைப் பெருந்துறைக்கு அருகில் முத்துக்களும், சங்குகளும் மிக அதிகமாகக் கிடைத்து, அவைகள் உலகில் எல்லாப் பகுதியினராலும் பாராட்டப் பெற்றன. கொற்கை முத்துக்கு ஈடு இணை இல்லையென்பதை
"மறப்போர்ப் பாண்டியர் அறத்திற் காக்கும்
கொற்கையும் பெருந்துறை முத்து"
என்ற அகப்பாட்டு அழகுற விளக்குகிறது.
முத்தும், நுண்ணிய பருத்தி ஆடைகளும், எலிமயிராலும், பட்டாலும் நெய்யப்பட்ட உடைகளும். ரோமாபுரி போன்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டு. அங்கிருந்து குதிரைகளும், மதுவகைகளும், கண்ணாடிச் சாமான்களும் கொற்கைப் பெருந்துறையில் வந்து இறங்கியவண்ணமிருந்தன.
அழகாக கப்பல்களில் தங்கத்தை ஏற்றிக்கொண்டு யவனர்கள் வருவார்களாம். பிறகு மிளகை ஏற்றிக்கொண்டு திரும்புவார்களாம். முசிறித் துறை முழுவதும் அந்தக் கப்பல்களின் பேரொலி கேட்கும் என்று சங்க இலக்கியங்கள் பெருமை பேசுகின்றன.
புகார் துறைமுகத்தில் எல்லா நாடுகளைச் சேர்ந்த வணிகர்களும், மாலுமிகளும் வந்திறங்குவார்கள்; அவர்கள் எல்லோரும் ஒரே இனத்தவர் போல் ஒற்றுமையாகப் பழகுவார்கள் - என்று தமிழிலக்கியம் கூறுகிறது. யவனர்கள் பலர் தமிழ் மன்னர்களின் மெய்க்காப்பாளர்களாகவும் இருந்திருக்கின்றனர் என்ற செய்தியொன்றே இருசாராரிடையிருந்த நல்லெண்ணத்தை விளக்கும் கண்ணாடியாகும்.
இத்தகைய தொடர்புகளை இன்று மெய்ப்பித்துக் காட்டுவது போலப் புதுவை மாநகருக்குப் பக்கத்தில் "அரிக்கமேடு" என்னுமிடத்தில் நடைபெற்ற ஆராய்ச்சியில் ரோமானியருக்குரிய பலவகைப் பொருள்கள் கண்டெடுக்கப்ட்டுள்ளன. அவர்கள் உபயோகித்த பாத்திரங்கள், விளக்குகள், நாணயங்கள் போன்ற பலவற்றைத் தமிழகத்தில் காணமுடிகிறது. அரிக்கமேட்டில் சில சிறுவர்கள் அகஸ்டஸ் சீசரின் உருவம் பதிக்கப்பட்ட ஒரு விலை உயர்ந்த கல்லைக் கண்டெடுத்தனர். ஆனால் அது இப்போது காணாமல் போய்விட்டதாகச் சொல்லப்படுகிறது.
ரோம் நாட்டுத் தங்க நாணயங்கள் இந்தியா, பாகிஸ்தான் உட்பட அறுபத்தெட்டு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த அறுபத்தெட்டு இடங்களில் ஐம்பத்தேழு இடங்கள் விந்தியத்திற்குத் தெற்கே இருக்கின்றன என்பதைக் கேட்கும்போது ரோமுக்கும், தென்னகத்திற்கும் இருந்து வந்த பழைய தொடர்பை எண்ணி எண்ணிப் பெருமூச்செறிகிறோம் நாம்.
அந்த நாணயங்களில் பெரும்பாலானவை அகஸ்டஸ் காலத்தவையும், டைபீரியஸ் என்பவனின் காலத்தவையுந்தான்! நீரோ காலத்து நாணயங்கள் அவனைப் போலவே தரக் குறைவாகவும், தங்கத்துடன் வெள்ளி கலந்ததாகவும் காணப்படுகின்றன. ரோம் பாராளுமன்றத்தில் பேசிய டைபீரியஸ், வெளிநாடுகளுக்கு ரோம் நாட்டுப் பணம் போவதைக் கண்டித்துப் பேசினான் என்று சரித்திரம் செப்புகிறது.
கோவை மாவட்டத்திலே குவியல் குவியலாக ரோமர் நாணயங்கள் கிடைப்பதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தார்கள். கிழக்குக் கடற்கரையிலிருந்து ரோமாபுரிக்கு மேற்குக் கடற்கரை வழியாகப் பொருள்களை அனுப்ப வேண்டுமானால் ஒன்று கன்னியாகுமரியைச் சுற்றிக்கொண்டு போகவேண்டும் - அல்லது கிழக்குத் தொடர்ச்சி மலையும், மேற்குத் தொடர்ச்சி மலையும் சந்தித்து வழி விட்டிருக்கும் குறுக்குப் பாதை வழியாகத்தான் செல்ல வேண்டும். இன்று அதிக அளவில் அந்தப் பகுதியில் காணப்படும் நாணயக் குவியல்களுக்கு அதையும் ஒரு காரணம் காட்டுவோரும் உளர்.
எப்படியோ தமிழகமும், ரோமும் எல்லா வகையிலும் உறவாடியிருக்கக் கூடும் என்பதற்கான சான்றுகள் புதைபொருள் ஆராய்ச்சி மூலமும், இலக்கியங்கள் வாயிலாகவும் வரலாற்றிலிருந்தும் வெகுவாகக் கிடைத்திருக்கின்றன.
இந்தப் பழைய தொடர்பினை மையமாக வைத்துதான் "ரோமாபுரிப் பாண்டியனை" உருவாக்கிடத் துணிவு பெற்றுள்ளேன்.
அகஸ்டஸ் சீசர் காலம் கி.மு. 39 முதல் கி.பி.14 வரை! கரிகாலன் காலம் கி.மு. 60 முதல் கி.மு. 10 வரை. பாண்டியன் பெருவழுதி கரிகாலனின் நண்பன் மட்டுமல்ல. ரோமுடன் நட்புக் கொண்டிருந்தவன்- தூதரை அனுப்பியவன்.
அகஸ்டசும் அந்தோணியும் போர்க்களத்திலே சந்தித்துத் திரும்பியிருக்கிறார்கள்! அந்தோணியின் முடிவு இன்னும் சொல்லப்படவில்லை; கிளியோ பாத்ராவின் சோக முடிவினையும் எழுதிடவில்லை! நமது கற்பனைக் கதாநாயகி எங்கிருந்து வரப்போகிறாள் என்பதும் அறிவிக்கப்படவில்லை. அவள் கற்பனைக் கதாநாயகிதானா? அல்லது சரித்திர நூலின் வரிகளில் ஒளிந்து கொண்டு இதுவரை அறிமுகமாகாத ஆரணங்கா? ரோமாபுரிப் பாண்டியன் யார்? இந்த விசித்திரமான தலைப்பு புரிய வைக்கப்போகும் பொருள் என்ன?
இதுவும் புதிராகவே இருக்கிறதல்லவா? இருக்கட்டும்! இருக்கட்டும்! முதலில் ரோமாபுரிக்கும், தமிழகத்துக்கும் உள்ள தொடர்புகளும், காலக்குறிப்புகளும், சமகால மன்னர்களின் பெயர்களும் ஐயமின்றித் தெரிந்தால் போதும். அவை தெளிவாகத் தெரிந்துவிட்டன இப்போது!
இனி, கதையைத் தெடரலாம் அல்லவா?