ரோமாபுரிப் பாண்டியன்/1. கரிகாற் சோழனும் பெருவழுதிப் பாண்டியனும்
1
கரிகாற் சோழனும்
பெருவழுதிப் பாண்டியனும்பெருமன்னன் கரிகாலன் திருநகரம் பூம்புகார்ப் பட்டினம் புதிய பொலிவு பெற்றுத் திகழ்ந்தது. மருவூர்ப் பாக்கத்தில் கடற்கரையையொட்டி அமைந்திருந்த வான்முட்டும் மாட மாளிகைகளில் எல்லாம் சோழனது கொடியும் பாண்டியனது கொடியும் ஒன்றையொன்று தழுவிக் கொண்டு பறந்தன. யவனப் பெருமக்களின் மாளிகைகளில் எழில் நிறைந்த தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. "வாழ்க சோழ பாண்டியர் உறவு!” என்ற எழுத்துக்களை முத்துக்களால் பதித்த கம்பீரமான நுழைவு வாயில்கள் பட்டினப்பாக்கமெங்கும் காட்சி தந்து கொண்டிருந்தன. மருவூர்ப் பாக்கத்தில் வாழும் வணிகர், பட்டாடை, பருத்தியாடை, கம்பள ஆடை நெய்வோர். பொற்கொல்லர், பூக்கட்டுவோர், ஓவியர், சிற்பிகள், மாலுமிகள் அனைவரும் புத்தாடை புனைந்து அரச வீதி நோக்கி விரைந்தனர். நிலக்கிழார், மருத்துவர், மறையவர், அரண்மனை அலுவலர், பாணர், இசைவாணர், புலவர் பெருமக்கள் அனைவரும் தாம் வாழ்கின்ற பட்டினப்பாக்கத்தையே விழாக்கோலம் பூணச்செய்து, தங்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறு அரச வீதியை இமைகொட்டாது ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். உலகமே வறுமைக் காடாக மாறிவிட்டாலும் பூம்புகார் வறுமைக் கோலம் கொள்ளாது என்று முழங்கிக் கொண்டிருந்த புகார்த் துறைமுகப்பட்டினத்தின் கலங்கரை விளக்கத்தின் உச்சியில் புலியுடன் மீன் கொடியும் சேர்ந்து பறந்த பெருமைக்குரிய காட்சியை அனைவரும் கண்டு பூரிப்புக் கொண்டனர். கரிகால் பெருவளத்தானுக்கு மகத நாட்டு மன்னன் வழங்கிய பட்டி மண்டபம் ஒளிமயமாக விளங்கிற்று. வச்சிர நாட்டான் அளித்த கொற்றப் பந்தர், அழகின் சிகரமாக அமைந்திருந்தது. அவந்தி நாட்டு மன்னன் தந்த 'தோரண வாயில்' 'மதுரைக் கொற்றவனே வருக! வாழ்க!' என்று முழங்கிக் கொண்டிருந்தது.
எழில்சேர் மங்கையர் யானைகளின் மீதமர்ந்து முன் செல்ல, பூம்புகார்ப்பட்டினம் அதுவரை காணாத மாபெரும் பனியொன்று அந்த மாநகரில் நடைபெற்றது. தானைத் தலைவர்களும் நாற்படை வீரர்களும் அணிவகுத்து வர இரு யானைகளின்மீது மாமன்னர் இருவர் அமர்ந்திருக்க - அன்று நடைபெற்ற அந்தப் பவனி கண்டு தமிழ்த் தரணியே வியப்பு மேலீட்டால் விழித்து நின்றது.
ஒரு யானையின்மீது சோழப் பேரரசன் கரிகாலன் வீற்றிருந்தான். அதனையொட்டி மெல்ல நடைபோட்டு வரும் மற்றொரு யானையின் மீது பாண்டிய நாட்டு வேந்தன் பெருவழுதி அமர்ந்திருந்தான்.
"வாழ்க கரிகால் மன்னர்"
"வாழ்க பெருவழுதிப் பாண்டியர்!"
"வளர்க சோழ, பாண்டியர் உறவு!" - என்ற முழக்கம் விண்ணதிரக் கிளம்பிற்று.
காவிரியாற்று நீரையள்ளித் தெளித்து விளையாடியவாறு பூம்புகாரின் வாலிபரும் மாதரும் விழாக்கொண்டாடினர். தெருவெங்கும் மலர்களைத் தூவினர். "தேன் தமிழ் வெல்க!" என்று கூவினர். எங்கு திரும்பினும் விழாக்காட்சி! இசை முழக்கம்! அகமுழவு எல்லாம் ஒலித்தன. இடக்கை, உடுக்கை, பேரிகை, படகம் எனப்படும் தோற்கருவிகள் அனைத்தும் ஆர்த்தெழுந்தன. குழல், வாக்கியம் என்னும் துளைக்கருவிகளும், சகோடயாழ், பேரியாழ், மகரயாழ் போன்ற நரம்புக்கருவிகளும் பவனியினூடே உற்சாகத்தை வாரியிறைத்துக் கொண்டிருந்தன. மக்களின் வாழ்த்துக்களைப் புன்னகையோடு ஏற்றுக் கொண்டு ஒருவரைப் பார்த்து ஒருவர் முறுவல் செய்தவாறு கரிகாலனும் பெருவழுதியும் யானைமீது கம்பீரமாக அமர்ந்திருந்தனர்.
அரசவீதிகளைக் கடந்து அணிதேர்ப்புரவி ஆட்பெரும் படையுடன் அழகுற நடந்த அந்தப் பவனியின் சிறப்பை எண்ணி எண்ணி மகிழ்ந்தனர், சோழநாட்டுத் தானைத் தலைவர்கள்.
சோழப் பெருங்குடி மக்கள் பாண்டியன் பெருவழுதியின் தோற்றங் கண்டு அவனுக்குத் தாங்கள் மரியாதை செலுத்தக் கடமைப்பட்டவர்களே என்பதை உணர்ந்தனர். எடுப்பான உடற்கட்டும் மிடுக்கான விழி நோக்கும் பெற்று, அகன்ற மார்பில் கொற்கை முத்துக்களால் கோத்த ஆரங்களை அணிந்து மணிமுடியின் மதிப்பைக் காப்பாற்றும் பெருமை வாய்ந்த வேந்தனே தான் என்று சோழர் குடியினர் எண்ணிப் புகழ்ந்திடுமளவுக்குப் பவனி வந்தான் பெருவழுதி.
"இமயத்தை முட்டிக் கலக்கிய தோள்களன்றோ அவைகள்! எதிர்த்து வந்த மன்னாதி மன்னர்களையெல்லாம் தூளாக்கிய வேலன்றோ கையில் பிடித்திருப்பது! நாடு காக்கும் மறக்குலத் தன்மையன்றோ முகத்தில் ஒளி விடுவது! இவரைத் தலைவனாகப் பெற்ற நாமன்றோ பெரும்பேறு பெற்றவர்கள்!" என்று கரிகால்மன்னவனைப் பவனியிலே கண்ட அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.
முதியவர் வாழ்த்தினர். இளையவர் தங்கள் நாடு வாழ்க என அதிர்ந்தனர்.
அரச வீதிகளிலே அழகேற்றியவாறு அந்த மன்னர்களின் ஊர்வலம் நகர்ந்தது மெல்ல மெல்ல!
இருபெரும் வேந்தர்களையும் நோக்கிய தலைநகரத்து மாந்தரது விழிகள், பாண்டிய மன்னனையொட்டி வெள்ளைப் புரவியொன்றில் அமர்ந்து வெற்றிப் புன்னகை காட்டியவாறு ஊர்வலத்தில் சென்ற பாண்டிய நாட்டு வீரன் ஒருவனைக் காணத் தவறவில்லை. அவன் குதிரையில் வீற்றிருந்த அழகே தனியாக இருந்தது. கடிவாளத்தைக் கரத்தில் ஏந்தியிருந்த பாவனையே எல்லோருடைய உள்ளத்தையும் கவர்ந்தது. சிறிய இளம் முறுக்கு மீசை, சுருண்டு காய்ந்த மிளகாய்கள் போலச் சுருள் சுருளான தலைமுடி! ஒவ்வொரு அசைவிலும் வீரந் துள்ளுவது போன்ற காட்சி! புன்னகையிலே ஒரு தனிக் கவர்ச்சி! யானைமீது வரும் அரசர்களையும் புரவிமீது வரும் அந்த வாலிபனையும் மாறி மாறிப் பார்த்தவாறு மக்கட் பெருங்கடல் உற்சாகத்தோடு நகர்ந்து கொண்டிருந்தது.
பட்டினப்பாக்கத்திலுள்ள புலவர் தெருக்களை அணுகியது ஊர்வலம். தமிழ் வளர்க்கும் காவலர்கள் அரசர்கட்கு மாலை அணிவித்து மகிழ்ந்தனர். அரசன் கரிகாலன் ஆவலோடு புலவர் கூட்டத்தை நோக்கினான்.
அவனது வாள் போன்ற கண்கள் அந்தக் குழுவில் யாரையோ மிக அக்கறையோடு தேடுகின்றன என்பதை தமிழ்ச் சான்றோர் புரிந்து கொண்டு, "என்ன மன்னவா?" எனக் கேட்டனர்.
கரிகாலன் கேட்டான், “காரிக்கண்ணனார் எங்கே?" என்று!
"அவர் தனது இல்லத்தின் வாயிலில் காத்து நிற்கிறார்” என்று பதில் மொழிந்தனர் புலவர்கள்.
காரிக்கண்ணனார் தனது வீட்டு வாயிற்புறத்தில் நின்று கொண்டிருந்தார். அவரது அகமகிழ்ச்சி முகத்தில் பீரிட்டெழுவது கண்டு கரிகாலன் நன்றியுடன் அவரைப் பார்த்தான். புலவரின் கண்கள் குளமாகிவிட்டன. அந்த ஆனந்தக் கண்ணீரில் ஒத்தியெடுக்கப்பட்ட இருமலர்களைச் சோழனுக்கும் பாண்டியனுக்கும் அளித்தார். மன்னர்கள் அவற்றைப் பெற்றுத் தம் மணிமுடியில் வைத்துக் கொண்டனர். எல்லாப் புலவரிடத்தும் காட்டுகின்ற அன்பையும் மரியாதையையும் விடக் காரிக்கண்ணனாரிடத்தில் கரிகாலன் அதிக அளவு அன்பையும் மரியாதையையும் காட்டுவதைப் பாண்டியன் உணர்ந்து, தன் கழுத்திலே யிருந்த முத்தாரம் ஒன்றினைக் கழற்றிப் புலவருக்கு அணிவித்து மகிழ்ந்தான்.
"புலவரே! அரண்மனை சேர்ந்ததும் ஆள் அனுப்புகிறேன். வந்து எம்மைத் தமிழால் வாழ்த்துவீராக!" என்று கேட்டுக் கொண்டான் சோழநாட்டு வேந்தர் பெருந்தகை!
"வருகிறேன் அரசே! வாழ்க!" எனக் கூறி வணக்கம் தெரிவித்தார் புலவர்.
அப்போது, யானை மீதிருந்த பாண்டியன் பெருவழுதியின் கண்கள், காரிக்கண்ணனார் வீட்டுக்குள்ளே பாய்ந்தன. அதே சமயம், பாண்டியனுக்கு அண்மையில் புரவியில் அமர்ந்திருந்த வாலிப வீரனின் கண்களும் வீட்டுப்புறமாகத் தாவிச் சென்றன. புலவர் வீட்டு வாயிற்கதவின் ஓரமாக ஒளிந்து நின்றவாறு முழுநிலா முகத்தை மட்டும் வெளியே நீட்டிக் கொண்டிருந்தாள் ஒரு வடிவழகி. தன்னைப் பிறர் பார்த்து விட்டனர் என்பதை உணர்ந்ததுதான் தாமதம்! உடனே உள்ளே தன்னையிழுத்துக் கொண்டாள். பாண்டிய மன்னன் பார்வை அந்தக் கதவோரத்தைவிட்டு மீள்வதற்குச் சற்றுத் தயங்கிற்று. கரிகாலனோ மற்றவர்களோ தன்னைப் பார்க்கிறார்களோ என்ற பயத்தோடு சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டான் பெருவழுதி!' "சே! என்னஇது" என்று தன்னைத் தானே இடித்துரைத்துக் கொண்டான். புரவியிலிருந்த வாலிபன், காரிக்கண்ணனாரையும் அவரது வீட்டையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு பவனியிலே தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டான்.
எழுந்த நிலவு அறுந்து வீழ்ந்தது போல் மறைந்து விட்டது அந்தச் சுந்தரமுகம்! பவனியின் சிறப்பைக் கண்டு களித்தவாறு அது அந்தத் தெருவை விட்டு அகலும் வரையில் அங்கேயே நின்று கொண்டிருந்து விட்டுக் கடைசியாகத் தன் வீட்டுக்குள் நுழைந்தார், காரிக்கண்ணனார்.
நுழைந்தவர் "முத்துநகை! முத்துநகை!" என்று அன்பைக் குழைத்து பெயரை உச்சரித்து அழைத்தார்.
"அப்பா! என்ன வேண்டும்?" என்றவாறு அவள் ஓடி வந்தாள்.
ஆமாம்!; அவள்தான்! பவனி சென்ற மன்னர்களை ஒளிந்திருந்து நோக்கிய அந்தப் பருவக் கிள்ளைதான்!
அவளைக் கண்டதும் புலவர் "பார்த்தாயா முத்துநகை, உனக்கொரு முத்துநகை!" என்று தன் கழுத்திலே பாண்டியன் அணிவித்த முத்தாரத்தையெடுத்து அவள் கரத்திலே தந்தார். அவள் அதை ஆசையுடன் வாங்கிக் கொண்டாள்.
"பாண்டிய நாட்டு முத்துக்கள் என்றாலே அவைகளுக்குத் தனி ஒளிதான்! இல்லையா அப்பா?" என்று கேட்டாள் முத்துநகை.
"ஆம் அம்மா! அதிலென்ன ஐயப்பாடு! கொற்கை முத்துக்களுக்கு ஈடான முத்துக்கள் உலகத்திலே வேறெங்கும் கிடையாது! ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு முன்பு, எகிப்து நாட்டை அரசாண்டு பரிதாபகரமாகச் செத்தும் போனாளே கிளியோபாத்ரா என்ற அழகி, அவளுக்கு இந்த முத்துக்கள் இல்லாவிட்டால் கள்ளே அருந்த முடியாதாம். மதுக் கிண்ணங்களில் இந்த முத்துக்கள் எழுப்பும் ஓசைதான் அவளுக்குப் பிடித்தமான சங்கீதமாம்! ரோமாபுரியிலே இருக்கிற மக்களுக்குப் பாண்டிய நாட்டு முத்துக்கள் என்றால் உயிர்! அவர்களது ஆடை அணிகள் ஒவ்வொன்றிலும் இந்த முத்துக்கள் சுடர்விட்டுக் கொண்டிருக்கின்றன!"
"ஏனப்பா! பாண்டிய மன்னருக்கும் சோழ மன்னருக்கும் இன்றைய தினம் நடைபெறுகிற நட்புறவு ஒப்பந்தம் வெற்றிகரமாக ஆகி விடுமல்லவா!"
"என்ன இப்படிக் கேட்கிறாய்? இப்படியொரு உறவு ஏற்பட வேண்டுமென்று மன்னர் கரிகால் திருமாவளவனை இத்தனை நாளும் வற்புறுத்தியதே நான்தான்! எனக்கு நம்பிக்கையிருக்கிறது, சோழர் பாண்டியர் உறவு நீடிக்குமென்று!"
"இந்த உறவை எப்படியும் முறித்துவிட வேண்டுமென்று யாரோ சில சிற்றரசர்கள் முயல்வதாகக் கூறினீர்களே!"
"அதெல்லாம் இனிமேல் முடியாது! உறுதிப்பட்டு விட்ட உறவு இது! நமது சோழ மன்னரிடம் தோற்றோடிப்போன சிற்றரசன் இருங்கோவேள் என்பவன்தான் ஏதாவது குந்தகம் விளைவிக்கக் கூடும். அதற்காக யாரும் பயப்படத் தேவையில்லை."
இதைக் காரிக்கண்ணனார் தன் மகளிடம் கூறிக் கொண்டிருக்கும்போதே தெருவிலே பெருத்த ஆரவார ஒலி கேட்டது. திடுக்கிட்டார் புலவர்.
முத்துநகை கதவுப்புறம் ஓடினாள்! ஓடியவள். "அப்பா! அப்பா! இங்கே வாருங்கள்!" என்று கூவினாள்.
புலவர் தெருப்பக்கம் விரைந்தார். தெருவிலே இரண்டு குதிரை வீரர்கள் ஆவேசமாகப் போரிட்டுக் கொண்டிருந்தனர். குதிரைகள் ஒன்றன் மீதொன்று பாய்ந்து பாய்ந்து சண்டையிட்டன. அவைகளின் மீது அமர்ந்திருந்த வீரர்களோ தங்கள் கைகளில் தாங்கிய ஈட்டிகளைக் கொண்டு யார் உயிரை யார் முதலில் போக்குவதென்று உணர்ச்சிக் கொந்தளிப்போடு போரிட்டனர். புலவர் அவர்களை உற்றுக் கவனித்தார். ஒருவனை அவரால் அடையாளம் புரிந்து கொள்ள முடிந்தது. பாண்டியன் பெருவழுதியின் பக்கத்தில் குதிரையில் அமர்ந்து பவனியிற் சென்ற பாண்டிய நாட்டு வீரன்தான் அவன்.
மற்றொருவன் யார்? அவருக்குப் புரியவில்லை. ஆனால் அவனும் பாண்டிய நாட்டு வீரர்களின் உடையிலேதான் இருந்தான்.
இந்தப் போராட்டம் எப்படி முடியுமோ தெரியவில்லையே என்று ஒவ்வொரு கணமும் எதிர்பார்த்தனர் கூடியிருந்தவர்கள். ஒருவன் புலியெனப் பாய்கிறான்; மற்றவன் சிங்கமென உறுமுகிறான். இருவர் ஈட்டிகளும் ஒன்றையொன்று அதனதன் கூர்மையான முனைகளில் தொட்டுத் தாக்குகின்றன என்றால், குறிபார்த்து எதிரியைக் கொன்று தீர்ப்பதில் அவர்கள் எவ்வளவு வல்லவர்களாய் இருந்திட வேண்டும்! இறுதியில் ஈட்டி முனைக்குத் தன் மார்பகத்தைக் காட்டி ஒரு மறவன் தெருவில் வீழ்ந்தான். வீழ்ந்தவனின் உடையைக் கிழித்துப் பார்த்தான் பெருவழுதியுடன் வந்த வீரன், மேலே அணிந்திருந்தது தான் பாண்டிய நாட்டு உடை! உள்ளே அவனது உண்மையான உடையிருந்தது. சோழனின் எதிரியான இருங்கோவேள் என்பவனின் தானைத் தலைவன் அவன் என்பது தெரிந்துவிட்டது.
எதிரியின் தானைத் தலைவன் பிணமாக வீழ்ந்து விட்டான். அவனை வீழ்த்திய வீரன், போரிட்ட களைப்பால் மயக்கமுற்றுப் புலவர் வீட்டுப் படிக்கட்டில் சாய்ந்தான்.
புலவர், பரபரப்புடன் அவனை உள்ளே அழைத்துச் சென்று மயக்கம் தெளிவிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். அவன் நெஞ்சிலே பலமான காயங்கள் இருந்தன. நெற்றியிலே எதிரியின் ஈட்டி உண்டாக்கிய புண்ணிலேயிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது! புலவரும் முத்துநகையும் ஓடியாடி அவனுக்குச் சிகிச்சைகள் செய்தனர்.
சிறிது நேரத்திற்கெல்லாம் அவன் மயக்கம் தெளிந்து எழுந்து உட்கார்ந்தான். காயங்களின் வலி பொறுக்க முடியவில்லை. உடம்பை நெளித்துநெளித்துத் துவண்டான். கொதிக்க வைத்த மஞ்சளை ஊமைக்காயங்களில் போட்டாள் முத்துநகை. ஏதேதோ மருந்துகளைத் தேடியெடுத்து இரத்தங்கசியும் புண்களில் தடவினார் புலவர் பெருமான்.
"நீ யாரப்பா?"
"நான் பாண்டிய நாட்டுக்காரன், பெருவழுதி மன்னரின் ஊழியன்!"
"பெயர்?"
"செழியன்"
"போரிலே வீழ்ந்து விட்டவன் யார்?"
"அவன் சோழ மன்னரின் எதிரி - கரிகால்வளவனைக் கொல்ல வந்த துரோகி - சிற்றரசன் இருங்கோவேளின் தானைத் தலைவன் வில்லவன். பவனியில் செல்லும் சோழரைப் பின்னிருந்து தாக்கி, ஓடி ஒளிந்து கொள்ள வந்த கோழை! அவன் ஈட்டியைக் கரிகால் மன்னன் மீது எறிய முனையும்போது நான் பார்த்து விட்டேன். ஊர்வலத்திலிருந்து மெதுவாக நழுவி அவனைத் தொடர்ந்தேன். அவன் என்னைப் புரிந்து கொண்டு ஓடத் தொடங்கினான். துரத்தி வந்து இங்கே வளைத்துக் கொண்டேன். தொலைந்தான் துரோகி!" என்று பெருமூச்சு விட்டுக்கொண்டான் செழியன்.
"நல்லவேளை - எங்கள் மன்னர் தப்பினார்! வீரனே! உன்னைக் காவிரி அன்னை வாழ்த்துவாளாக! தமிழ்த்தாயின் வீரமகனே! உன் ஆற்றலைக் கண்டு நான் வியக்கிறேன். வேங்கையெனப் பாய்ந்து நீ வெற்றி விளைவித்த நிகழ்ச்சியை நான் சாகும்வரை மறக்க மாட்டேன். புகார்ப்பட்டினத்து மக்கள் உனக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றனர். எம் மன்னரைக் காத்த உனக்கு, மன்னர் திரு முன்னிலையில் தகுந்த பரிசு வழங்க இப்போதே போய் ஏற்பாடு செய்கிறேன்" என்று துள்ளிக் குதித்தார் தமிழை அள்ளி வழங்கும் புலவர் பெருந்தகை!
"வேண்டாம் புலவரே! வேண்டாம்! இப்படியொரு நிகழ்ச்சி ஏற்பட்டதே இரு மன்னர்களுக்கும் தெரிய வேண்டாம். நட்புறவு விழாக் கொண்டாடும் நேரத்தில் அதைக் குலைக்கும் முயற்சிகள் நடைபெற்றதாகச் செய்திகள் வருவது அவ்வளவு நல்லதல்ல! தயவு செய்து இந்தச் செய்தி நம்மோடு அழிந்து போகட்டும். யாரோ இரு வீரர்கள் போரிட்டனர். ஒருவன் செத்தான். ஒருவன் பிழைத்தான் என்ற அளவோடு இது நிற்கட்டும்!" என்று கேட்டுக் கொண்டான் செழியன்.
அப்போது வாயிற்புறத்தில் இருந்து யாரோ அழைத்தார்கள், "புலவர் பெருமானே! புலவர் பெருமானே!" என்று.
புலவர் தெருப்பக்கம் சென்றார். அரண்மனை வீரர் இருவர் புலவரை வணங்கி நின்றனர்.
"தங்களை அழைத்து வருமாறு மன்னர் ஆணையிட்டிருக்கிறார்" என்று கூறினர் வீரர்கள். கூறியவர்கள். "தெருவிலே ஒரு பிணம் கிடக்கிறதே, என்ன நடந்தது?" என்றும் பதைப்போடு கேட்டார்கள்.
"ஆமாம், யாரோ இரு பாண்டிய நாட்டு வீரர்கள் ஒருவரையொருவர் ஈட்டி கொண்டு தாக்கிப் போரிட்டனர். ஒருவன் வீழ்ந்தான். அவ்வளவுதான்! நான் அரசரிடம் போகிறேன், நீங்கள் இந்தப் பிணத்தை அகற்ற ஏற்பாடு செய்யுங்கள்" எனக்கூறியவாறு புலவர் உள்ளே வந்து செழியனிடம் செய்தியைச் சொன்னார். செழியனும் விடைபெற்றுக் கொண்டு எழுந்தான். ஆனால் அவனால் எழமுடியவில்லை.
புலவர் அவனைப் பிடித்து உட்கார வைத்து, "நீ இங்கேயே இரு! முத்துநகை உன்னைக் கவனித்துக்கொள்வாள். நான் அரண்மனைக்குப் போய் உடனேயே திரும்பிவிடுகிறேன்!" என்று புறப்பட்டார் புலவர்.
செழியனால் அதைத் தடுத்துப் பேச இயலவில்லை! காரணம் அவரோ பெரும்புலவர்; வலியோ தாங்கமுடியாமல் இருக்கிறது; சரியென்று உட்கார்ந்து கொண்டான்.
"முத்துநகை! பத்திரமாகக் கவனித்துக்கொள்ளம்மா!" எனக்கூறிப் புலவர் வெளியில் சென்றுவிட்டார்.
தெருவில் நின்றிருந்த புரவி பூட்டிய பல்லக்கு வண்டியில் அவர் ஏறிக்கொண்டார். அந்த அழகிய வண்டி அரண்மனை நோக்கிப் புறப்பட்டது.
கரிகாலனும், பெருவழுதியும் புலவரை எதிர்கொண்டழைத்து இருக்கையில் அமரச் செய்தனர். புலவர் பெருமான், இருவரையும் ஒருசேரக்கண்டு உவகை கொண்டார். கரிகாலனுக்கு வரவிருந்த ஆபத்தையும்,அது தவிர்க்கப்பட்டதையும் எண்ணுகின்றபோது அவரை யறியாமல் ஓர் அச்சம் அவரை ஆட்டிப்படைத்தது.
அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், “அழைத்த காரணம் யாதோ?" என வினவினார்.
"எமது நட்புறவை வாழ்த்துவதற்கே தங்களை அழைத்தோம்!" என்றான் சோழர்திலகம்.
புலவர் சற்றுக் கண்மூடி அமைதியாக இருந்தார். அவரது இதழ்கள் அசைந்தன. "தமிழ் வாழ்க!" என்றார். அதனைத் தொடர்ந்து தமிழ்மழை பொழிந்தது.
"நீயே. தண்புனல் காவிரிக்
கிழவனை; யிவனே....."
என்று பாட ஆரம்பித்தார்.
"நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியவென
வரைய சாந்தமும் திரைய முத்தமும்
இமிழ் குரல் முரசும் மூன்றுடன் ஆளுந்
தமிழ்கெழு கூடல் தண்கோல்வேந்தே!"
"ஒற்றுமை குலைக்கப் பகைவர்கள் பல வழியும் முயல்வர். நண்பரைப் போலவும் நல்லன தேடுவார் போலவும் பேசி இருவரிடமுள்ள ஒற்றுமையை மாய்க்கத் திட்டம் போடுவர். அவைகளுக்கு இடந்தராமல் இருவரும் நட்புக் கொள்வீராக!" என்று அறிவுரை கூறினார். தன் வீட்டின் முன்னே நடந்த நிகழ்ச்சியை மனத்தில் வைத்துக்கொண்டுதான் புலவர் அங்ஙனம் கூறினார்.
"இன்று போல் என்றும் உமது உறவு தழைக்கட்டும்! நுமது வேல் வென்று வென்று போர்க்களத்தில் புகழொளி வீசட்டும்! நமது புலியும் கயலும் பகை நாட்டுக் குன்றுகளிலே செதுக்கப்படட்டும்!"
எனப் புலவர் தன் நெஞ்சைத் திறந்து காட்டியபோது இரு மன்னர்களும் புலவரைத் தழுவிக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.
பேரரசர்களின் அணைப்பிலே அகமகிழ்ந்த புலவர் பெருமான், "தமிழ் வாழ்க! தாயகம் மேன்மேலும் வெற்றிபெறுக!" எனத் தழுதழுத்த குரலில் கூறினார். அவரது கண்கள் அவரையும் அறியாமல் குளமாகிவிட்டன. "என்னுடைய பலநாள் ஆசை இன்று நிறைவேறியது. பாண்டியரும் சோழரும் என்றைக்குப் பகைத்துக் கொள்வார்கள்; நேரம் பார்த்துப் போர் தொடுக்கலாம் என ஏங்கிக் காத்திருக்கும் வேளிர்குடித் தலைவர்களும், ஒளி நாரகர்களும் இடை நிலங்களில் வாழும் பொதுவரும் இந்தநாள் விழா நிகழ்ச்சி கேட்டு ஏமாற்றத்தைத் தழுவிக் கொண்டிருப்பார்கள்" என்று காரிக்கண்ணனார் விழிகளை அகலத்திறந்தவாறு புதிய துடிப்புடன் முழங்கினார்.
"எல்லாம் உங்கள் கரிகால் மன்னரின் அரசியல் அறிவு நுட்பத்தால் விளைந்த முடிவுகள்" என்று புன்முறுவலோடு கூறினான் பாண்டிய மன்னன்.
"இல்லை; இல்லை! அதெல்லாம் ஒன்றுமில்லை... ஏதோ நடக்கவேண்டுமென்றிருந்தது; நடந்துவிட்டது!" என்றான் கரிகாலன்.
புலவர், பெருமிதத்தோடு பேசினார்: "ஏன் மன்னவா மறைக்க வேண்டும்? தங்களின் அரசியல் அறிவைப் பாராட்டி எழுதுவதற்குச் சுவடிகள் போதாது என்பதை நாடறியும்; நானறிவேன். இன்றல்ல. இளமைப் பருவத்திலேயே தாங்கள் சாதித்த காரியங்கள், ஒப்பிடுவதற்கரிய உயரிய காரியங்கள் என்று அறிஞர் குழாம் இன்றும் சிறப்பித்துக் கூறுவதை என் செவிகள் கேட்டுச் சிந்தையில் குளிரேற்று கின்றன. மதுரைக் காவலனே! எம் சோழ மன்னரின் திறமைக்கும், அரசியல் அறிவுக்கும் ஒரு சிறு உதாரணம் கூறுகிறேன் கேளுங்கள்!
"சோழரது இளமைப் பருவத்தில் கொலு மண்டபத்திலே முறையிட வேண்டி, வயதேறிய இரண்டு கிழவர்கள் வந்தார்கள். வந்த முதியவர்கள் அரசரது இளமைத் தோற்றங்கண்டு இந்த இளைஞரா முறையீட்டைக் கேட்டு நீதி வழங்கக் கூடியவர் என்று திகைப்படைந்தார்கள். கரிகாலரது வயது கண்டு அந்தப் பெரியவர்கள் அவ்வளவு அலட்சியமாகக் கருதிவிட்டனர். சிறுவனிடம் நீதி கிடைக்காது என்று திரும்பிட எண்ணினர். அதை எப்படியோ மன்னர் புரிந்துகொண்டார். முறையிட வந்த முதியவர்களிடம் தக்க நீதியளிக்கத் தகுதி மிக்க ஒருவரை அழைத்து வருவதாகக் கூறிப் போய்விட்டார் மன்னர். பின்னர் கொலு மண்டபம் கூடிற்று. முறையிட வந்த முதியோர் வந்தனர். தள்ளாடித் தண்டூன்றிய கிழவர் ஒருவர் அரியாசனத்தில் அமர்ந்து நீதி விசாரணையைத் துவக்கினார். வழக்கு முடிந்தது. நல்ல தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த நேர்மையான தீர்ப்புக்கண்டு முறையிடவந்தவர்கள் மனங்களித்தனர். கிழவரை வாழ்த்தினர். கிழவரின் தாடி கீழே விழுந்தது. நரைத்த தலைமுடி கழன்றது. கிழவர் வேடத்தில் வந்து நீதி வழங்கியவர் இளைஞர் கரிகாலரே என்ற உண்மை வெளியாயிற்று. நாடு மகிழ்ந்தது; கரிகாலரை வாழ்த்தியது. அப்படிப்பட்ட திறமை கொண்டவர் எங்கள் மன்னர்" என்று புலவர் புகழ்ந்துரைத்தார்.
கரிகாலன், புகழுரைகளைக் கேட்க மனமின்றித் தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டான். பாண்டியனும் புலவரோடு சேர்ந்து கொண்டு புகழ்மாலை சூட்ட ஆரம்பித்தான்.
"இளம் வயதில் எதிரிகளால் சூழப்பட்டுச் சிறையில் சிக்கிவிட்ட சிங்கமாம் கரிகாலரின் உயிரைக் குடிக்கத் திட்டமிட்ட கொடியவர்களையும் நான் அறிவேன். எதிரிகள் சிறைக் கோட்டத்திற்குத் தீ மூட்டினர். அந்த எரி நெருப்பிலேயிருந்து இவர் தப்பியிருக்காவிட்டால் தமிழகம் மாவீரர் ஒருவரை இழந்திருக்கும்; நான் போற்றுதற்குரிய ஒரு நண்பரைப் பெறாமலே போயிருப்பேன்; பூம்புகாரின் பொலிவு என்றைக்கோ அழிந்து போயிருக்கும்."
பாண்டியனும் புலவரும் மாறிமாறித் தன்னைப்பற்றிப் பேசுவது கண்ட கரிகாலன், "போதும்! தயவுசெய்து நிறுத்துங்கள்! ஏற்கனவே இந்த மணிமுடியால் என் தலை கனத்திருக்கிறது; மேலும் கனத்துப் போகச் செய்யாதீர்கள்!" என்றான் கனிவாக.
"கனத்துவிட்டது என்பதற்கு அடையாளமாகக் கழுத்திலே நிற்க முடியாமல் தங்கள் தலை கீழே தொங்குகிறது மன்னா! எவ்வளவு அடக்கப் பண்பு தங்கள் தலையிலே நிரம்பிக் கொண்டேயிருக்கிறது!" என்று புலவர் கூறினார்.
"தமிழ் மணம் பரப்பும் மலர்க்கொடி நீங்கள்! எங்கணும் மணம் பரவச் செய்து, கொடிகளுக்கு வேலி அமைத்துப் பாதுகாக்கும் பைந்தமிழ்க்காவலர் பாண்டியர்! நீங்கள் இருவருமே என்னைப் புகழ்ந்து கூறிவிட்டீர்கள் என்கிறபோது தமிழன்னையே என்னைத் தழுவி முத்தமிட்டு வாழ்த்தியதுபோல் ஆகிவிட்டது. இனி என்ன குறை எனக்கு?" எனச் சொல்லிக் கரிகாலன் உள்ளத்து உணர்ச்சிகளை வெளிக்கொட்டினான்.
தமிழ்க்காவலரும் பாவலரும் மனம் திறந்து மடைதிறந்த தமிழாற்றில் நீந்திக் கொண்டிருக்கும்போது, அரண்மனை உட்கோயிலில் காவல் புரியும் கிரேக்க நாட்டுக் காவலன் ஒருவன் கரிகால் மன்னன் எதிரே வந்து நின்று வணங்கி நிமிர்ந்தான்.
"என்ன?" - கரிகாலன் வினவினான்.
"மன்னர்கள் பவனி முடிந்ததும் முடியாததுமாக ஒரு சம்பவம் நடந்து விட்டது. யாரோ இரு பாண்டிய நாட்டு வீரர்கள் ஒருவருக்கொருவர் போரிட்டுக்கொண்டனர். ஒருவன் மடிந்தான்; மற்றவன் போன இடம் தெரியவில்லை. இருவரில் ஒருவன் பெயர் செழியன் என்கிறார்கள்."
காவலன் இதைச் சொல்லி முடிப்பதற்குள் பெருவழுதிப் பாண்டியன் துடித்துவிட்டான். "ஆ! செழியனா! மடிந்தவன் பெயர் செழியனா? காவலனே சரியாகச் சொல்! மடிந்தவன் செழியனா?" - பெருவழுதி ஆவலோடு கேட்டான்.
"இருவரில் யார் செழியன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் போராட்டம் நடந்தது புலவர் வீட்டு எதிரில்தானாம்! இறந்தவன் பிணம் அரண்மனைக்குப் பின்புறமுள்ள பாழ்மண்டபத்தில் கிடத்தப்பட்டிருக்கிறது! மன்னர் விரும்பினால் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன" என்று காவலன் பதில் சொன்னான்.
புலவருக்கு ஒரே திகைப்பு! நடந்தவைகளைச் சொல்லிவிடலாமா என்று இரண்டு மூன்று தடவை நாவை அசைத்தார். ஆனால் வார்த்தைகள் வெளிப்படவில்லை. செழியன் அவரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறான், யாரிடமும் அந்தச் செய்தியைச் சொல்லக்கூடாதென்று! மௌனமே சிறந்தது எனக்கண்டார்.
கரிகால் மன்னன், புலவரிடம் "உங்கள் வீட்டுக்கெதிரில்தானே நடந்ததாம்; உங்களுக்கு ஒன்றுமே விவரம் தெரியாதா?" என்று திடீரென்று கேட்டுவிட்டான்.
"நான்தான் இங்கு வந்துவிட்டேனே!" என்றார் புலவர்.
"அய்யோ - செழியன் செத்திருக்கக் கூடாது! செத்திருக்கக் கூடாது! சோழ மன்னரே! நான் உடனே போய் அந்த வீரனின் சடலத்தைக் காணவேண்டும்; இறந்தது யார் என்பதை அறியவேண்டும்!" என்று பரபரப்போடு கேட்டுக்கொண்டான் பெருவழுதி.
"இதோ. ஆவன செய்கிறேன். நானும் வருகிறேன்!" என்று விடை பகர்ந்த கரிகாலன், காவலனிடம் ஏற்பாடுகளைச் செய்யக் கட்டளை பிறப்பித்தான்.
புலவர் கரங்கூப்பி விடைபெற்றுக் கொண்டார். அவருக்குத் தெரியும்; பாண்டியனின் அன்புக்குப் பாத்திரமான செழியன் சாகவில்லையென்று! அதனால் அவரது முகத்தில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை. கரிகாலன், புலவருடன் ஏழடித் தூரம் நடந்து சென்று வழியனுப்பிவிட்டுப் பாண்டியனை அழைத்துக்கொண்டு அரண்மனைக்குப் பின்புறமுள்ள பாழ்மண்டபம் நோக்கி விரைந்தான். பெருவழுதிப் பாண்டியனின் உள்ளம், அவனையும் முந்திக்கொண்டு பாழ்மண்டபத்துக்கு ஓட முயன்றது. அரண்மனையின் அழகு குலுங்கும் பல பகுதிகளைக் கடந்து இரு மன்னர்களும் குறிப்பிட்ட மண்டபம் நோக்கி நடந்தனர்.
செல்லும்போதே அருகிருந்த வீரர்களிடம் கரிகாலன் கேட்டான்: "மண்டபத்தைச் சுற்றிக் காவல் போடப்பட்டிருக்கிறதா?"
வீரர் தலைவன் சொன்னான்: "பிணம்தானே, ஓடியாபோய்விடும்? எதற்கும் இருக்கட்டும் என்று நான்கைந்து வீரர்கள் காவல் இருக்கிறார்கள் அரசே!"
மன்னர்கள் மண்டபத்தருகே வந்தனர். வந்தவர்கள் திடுக்கிட்டனர். மண்டபத்தைக் காவல் புரிந்த வீரர்கள் ஐவர் படுகாயமுற்றுச் சாய்ந்து கிடந்தனர், சவமாக!
அந்தக் கொடுமையான காட்சியைக் கண்டான் கரிகாலன். "நாம் காணவந்தது ஒரே ஒரு சவத்தைத் தானே?" என்று பதைபதைப்புடன் கேட்டான். ஆத்திரம் தாங்கமாட்டாதவனாய் மண்டபத்துக்குள்ளே வெகுவேகமாக நுழைந்தான்.
உள்ளே பிணம் மூடப்பட்டுக் கிடந்தது. பாண்டியநாட்டு உடைதான் போர்த்தப்பட்டிருந்தது. "பாண்டிய மன்னரே; நீங்கள் குறிப்பிடும் செழியனா என்று பாருங்கள்!" எனக் கூறிப் பிணத்தின்மீது மூடப்பட் டிருந்த துணியை விலக்கினான் கரிகாலன். துணி மறைவில் பிணம் கிடந்தது உண்மைதான். ஆனால் அது மனிதனின் உயிரற்ற உடல் அல்ல. ஒரு கோவேறு கழுதையின் அழுகிப்போன சடலம்!
திடுக்கிட்டனர் இரு வேந்தர்களும்! ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். கரிகாலனுக்கு யாரை என்ன சொல்வதென்றே புரியவில்லை.
“இந்த அவமானம் எப்படி நடந்தது? அனுமதித்தவர்கள் யார் யார்?" என்று கர்ச்சித்தான்.
எல்லா வீரர்களும் நடுங்கியவாறு நின்றனர். கிரேக்கக் காவலனை அருகே அழைத்தான் சோழ மன்னன்.
“நீ அந்த வீரனின் பிணத்தைப் பார்த்தாயல்லவா?"
"பார்த்தேன் அரசே!"
"இந்தப் பாழ்மண்டபத்தில் அந்தச் சவத்தைப் பாதுகாப்பாக வைத்ததும் நீதானே?"
"நானும் மற்ற வீரர்களும்தான் அரசே!"
"பிறகு எப்படிப் போர்வீரனுக்குப் பதிலாகக் கோவேறு கழுதை வந்தது?"
"அதுதான் மன்னா மர்மமாக இருக்கிறது!"
"கோழைகள்! குருடர்கள்! நம் கோட்டைக்குள்ளேயே எதிரி விளையாடியிருக்கிறான்- அதை அனுமதித்து ஏமாந்திருக்கிறீர்கள்; ஏமாளிகள்!"
கரிகாலனின் கோபம் எல்லை மீறியது. பாண்டியனைப் பார்த்து "நண்பரே! என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்" என்று மெல்லிய தொனியில் கேட்டுக்கொண்டான்! அப்போது அவன் கண்களில் கனல் பறந்து கொண்டிருந்தது.
"இறந்தவன் செழியன் அல்லன் என்ற இன்பச் செய்தி எனக்குக் கிடைத்தாலே போதும்!" என்று கண்கலங்கியவாறு கூறினான் பெருவழுதிப் பாண்டியன்.
"யார் அந்தச் செழியன்? அவருக்காக மிகவும் கவலைப்படுகிறீர்களே!" என்று விசாரித்தான் சோழன்.
"செழியன் - அவன் பெயர் எனக்குச் செந்தேன். செழுந்தமிழன்! செருமுனைக்காளை! சிந்தனையாளன்! சித்திரக் கவிதைகள் பாடும் இளம்புலவன்! அவனின்றி நான் வாழ முடியாது- அவன் என் உயிர்!"
செழியனைப் பற்றிப் பாண்டியன் தீட்டிய ஓவியம் கண்டு சோழன் வியப்பிலாழ்ந்தான். “அவனுக்கும் தங்களுக்கும் என்ன உறவு?" என்று கேட்டவாறு கரிகாலன் மண்டபத்தை விட்டு வெளியேறத் தொடங்கினான்.
"அவனைப் பற்றிய முழுவிவரம் பெரிய கதை. அதைப் பிறிதொரு சமயம் கூறுகிறேன். இப்போது எனக்கு வேண்டியதெல்லாம் அவனைப் பற்றிய தகவல்கள்தான்!" என்றான் பாண்டியன்.
உடனே கரிகாலன், தன் வீரர்களை அழைத்துச் செழியனைப் பற்றிய சிறு செய்தி கிடைத்தாலும் உடனே கொண்டு வருமாறு ஆணையிட்டான். அந்தப் பொறுப்பு முழுவதையும் தான் ஏற்றுக் கொள்வதாகக் கரிகாலன், பாண்டியனிடம் வாக்களித்தான்.
"விழா நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட களைப்பும் அதனைத் தொடர்ந்து வந்த கவலையும் தங்கள் உள்ளத்தில் அமைதியின்மையை உண்டாக்கி யிருக்கக்கூடும். அதனால் தங்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாளிகையில் ஓய்வு பெறுங்கள்!" என்று கரிகாலன் கேட்டுக்கொண்டான். பாண்டியனும் சம்மதித்துக் கரிகாலனை விட்டுப் பிரிந்து தனி மாளிகை நோக்கிப் புறப்பட்டான்.