ரோமாபுரிப் பாண்டியன்/10. எரிமலை மீது சூரியகாந்தி
10
எரிமலை மீது சூரியகாந்தி
செழியன் அடைக்கப்பட்டிருக்கும் இடத்திற்குத் தாமரை விரைந்தாள். கதவைத் தட்டிப் பார்த்தாள். உள்ளிருந்து எந்தப் பதிலும் இல்லை. வீரர்களை எச்சரிக்கையாக இருக்கச் சொல்லிவிட்டுக் கதவைத் திறந்தாள்; உள்ளே ஒரே இருட்டு, அது என்ன அரண்மனைச் சிறைச்சாலையா? அல்லவே. இங்கு அரசன் வாழ்கிற இடமே சிறைச்சாலை போலிருக்கிறது. சிறைச்சாலை எப்படியிருக்கும்!
ஒரு தீப்பந்தம் கொண்டுவரச் சொல்லித் தாமரை அதை எடுத்துக் கொண்டு அடிமேல் அடிவைத்து, சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டு உள்ளே சென்றாள். பூமியைக் குடைந்து அமைக்கப்பட்ட அந்தக் கொடிய சிறைச்சாலை சேறும் சகதியுமாக இருந்தது. குகை போன்ற அந்த அமைப்பில் சிறிது தூரம் நடந்து சென்றால்தான் கைதி இருக்கும் இடத்தைக் காணலாம். அந்த இடம் இன்னும் எவ்வளவு மோசமாக இருக்குமோ? அவள் காலில் ஏதோ சரசரவென்று ஓடிற்று. தீப்பந்தத்தைக் கீழே பிடித்துப் பார்த்தாள். பெருச்சாளியொன்று கதவுப்பக்கம் பாய்ந்தது. அதற்கு மேல் அவளுக்கு நடக்கவே பயமாக இருந்தது.
தன் அண்ணன் இருங்கோவேளின் மீது அவளுக்குக் கோபமும் ஏற்பட்டது. என்ன இருந்தாலும் எதிரிகளை இவ்வளவு கொடூரமாக நடத்தக்கூடாது என்று தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டாள். எருமை மாடுகளைக் கூடப் போட்டுப் பூட்டி வைக்கத் தகுதியற்ற இடத்தில், ஒரு நல்ல வீரனைப் போட்டு அடைத்து வைப்பது என்பது சிறிதும் மனிதாபிமானமற்ற செயல் என்று அவள் எண்ணிக் குமுறினாள்.
சற்று நின்று தன்னை அமைதிப்படுத்திக் கொண்டு வெளிச்சத்தை எதிரே பிடித்துப் பார்த்தாள். செழியன் இருக்கிறான். எங்கும் ஓடிவிடவில்லை. அந்த ஆறுதல் ஏற்பட்டது அவளுக்கு! அவன் உயிரோடு இருக்கிறானா? உற்றுப்பார்த்தாள். மூச்சு இருக்கிறது. ஆனால் அவன் பிரக்ஞையற்றுக் கிடக்கிறான். தொட்டுப் பார்த்தாள், அவன் நெற்றியும் கால்களும் சில்லிட்டுப் போய்விடவில்லை. சூடு இருக்கிறது. தன் பின்னால் வந்த வீரர்களைக் கூப்பிட்டு, "ஓடிப்போய்ச் சீக்கிரம் தண்ணீரும் கஞ்சியும் கொண்டு வாருங்கள்" என்று கட்டளையிட்டாள்.
அவனருகே அமர்ந்து அவன் முகத்தை மெதுவாக அசைத்துப் பார்த்தாள். சாகவில்லை என்பது தவிர அவன் படுத்திருந்த காட்சி பிணம் ஒன்று கிடத்தப்பட்டது போலவே இருந்தது. அவன் பெற்றோர்கள் இந்தக் கொடுமையைப் பார்த்தால் என்ன பாடுபடுவார்கள் என்று நினைத்துக் கண்ணீர் உகுத்துவிட்டாள். வீரன், தண்ணீரும், கஞ்சியும் கொண்டு வந்தான். தண்ணீரை அவன் முகத்தில் தெளித்துத் தலையைத் தூக்கி மெதுவாக அவனைச் சுவரோரத்தில் சாய்த்துப் படுக்க வைத்தாள். கஞ்சியை எடுத்து அவன் வாயருகே நீட்டினாள். அவனால் வாயைக்கூடத் திறக்க முடியவில்லை. கஞ்சிக் கிண்ணத்தை வாயிலே திணித்து, "கொஞ்சம் குடியுங்கள்! கொஞ்சம், கொஞ்சம்!" என்று பிடிவாதப்படுத்தி குடிக்க வைத்தாள். தன் நினைவு இல்லாமலே செழியன் அதைக் குடித்தான். கஞ்சி அவன் வயிற்றுக்குள் போய்விழும் சத்தத்தை அவளால் கேட்க முடிந்தது.
நீண்ட நேரத்திற்குப் பிறகு செழியன் கண்களைத் திறந்து பார்த்தான். இருண்ட குகையில் ஒளியைக் கண்டதும் அவனுக்குக் கண்கள் பூத்துவிட்டன; அவனையுமறியாமல் "ஒளி! ஒளி! ஒளி!" என்று கத்தினான். பரக்கப் பரக்க விழித்தான். கண்களை அகலத் திறந்து சுற்றுமுற்றும் பார்த்தான். தான் காண்பது என்ன கனவா? - கேள்வி குதித்தது. கண்களை கசக்கிவிட்டுக்கொண்டு மீண்டும் நோக்கினான். அவன் எங்கும் போய்விடவில்லை. இங்குதான் இருக்கிறான். பகைவர் களின் சக்தி நிறைந்த சிறைக் கோட்டத்தில்தான் இருக்கிறான். அதில் ஒன்றும் குழப்பமில்லை. சந்தேகமில்லை. நிச்சயமானஉண்மைதான்! தெளிவான நிலைமைதான்! பெருமூச்சு விட்டவாறு தாமரையைப் பார்த்தான். அவனது பார்வையில் எத்தனையோ பொருள்கள் மறைந்து கிடந்தன. அவளுக்கு விளங்கியதெல்லாம் ஒரே அர்த்தம்தான்; "இப்படிச் சித்திரவதை செய்கிறீர்களே; செய்யலாமா?" என்று அவளைப் பார்த்து கேட்பதைப் போலிருந்தது.
"எப்படியிருக்கிறது இப்போது?" என்று இரக்கம் தோய்ந்த குரலில் தாமரை கேட்டாள்.
"மிகவும் சுகமாக இருக்கிறது. ஆகா! எவ்வளவு குளிர்ச்சியான சிறைச்சாலை! சந்தனக்குழம்பை ஊற்றியது போல் தரை; மந்தமாருதம் வீசுவதற்கேற்றவாறு பலகணிகள்; மூக்கைத் துளைக்கும் மல்லிகை மணம்; எனக்கு இங்கென்ன குறை? நரகலோகம் இருப்பதாகக் கதை எழுதினானே. அவன்கூட இப்படிப்பட்ட இடத்தை தன் கற்பனை வளத்தால் படைத்திட முடியாது!" என்று ஏகடியமாகப் பதில் கூறினான் செழியன்.
தன் அண்ணனின் பெருமையை இழிவுபடுத்துவது போன்ற வார்த்தைகளைத் தாமரையால் கேட்டுக் கொண்டிருக்க முடியவில்லை. ஆனாலும் சோர்ந்து போய்க் கிடப்பவனிடம் மேலும் மனம் புண்படும் படியாகப் பதில் கூறுவது கூடாது என்று பேசாதிருந்து விட்டாள்.
செழியனுக்கோ அவளிடம் இன்னும் பேச வேண்டும் என்பது போன்ற உணர்ச்சி. "உன்னோடு சிறிது நேரம் நான் தனியாகப் பேச வேண்டும்! அனுமதி கிடைக்குமா?" என்று கொஞ்சும் தோரணையில் கேட்டான்.
முதலில் ஒரு தடவை அவனிடம் பேச்சுக் கொடுக்காமலே சமாளித்துக் கொண்டு போயிருக்கிறாள் அவள். ஆனாலும் இப்போது செழியனின் வேண்டுகோளை வெளிப்படையாக அவளால் புறக்கணிக்க முடியவில்லை.
செழியனை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துவிட்டுத் தாமரை. வீரர்களைச் சைகை செய்து வாசலிலே போய் நிற்கச் சொன்னாள். அவர்களும் தீப்பந்தத்தை அங்கேயே சேற்றில் செருகி நிற்க வைத்துவிட்டு, வாயிற்பக்கம்போய் எச்சரிக்கையுடன் காவல் நின்று கொண்டார்கள்.
"ம்! என்ன பேச வேண்டும்? சீக்கிரம் பேசுங்கள்!" என்றாள் தாமரை.
"நான் மாத்திரம் சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்க மாட்டேன். நீயும் என் கேள்விகளுக்குச் சில விளக்கங்கள் தரவேண்டும்." என்றான் செழியன்.
"மிக நன்றாயிருக்கிறதே! எதிரி நாட்டு வீரருக்கு எங்களைப் பற்றிய விளக்கங்களைத் தந்து நாங்கள் ஏமாந்து போக வேண்டுமோ?"
"அப்படிப்பட்ட செய்திகள் எனக்கொன்றும் தேவையில்லை. அது போன்ற உண்மைகள் எனக்குக் கிடைத்தாலும் எப்படி இங்கிருந்து வெளியே செல்ல முடியும்! நீங்கள்தான் என் பிணத்தைக்கூட வெளியே போடமாட்டீர்களே! ஒரு வேளை என் பிணத்தை வெளியே போட்டு, நாய், நரி, கழுகு ஏதாவது என் உடலைக் கீறி, இதயத்தை எடுத்துக் கொண்டு போய்ப் பாண்டிய மண்டலத்திலோ சோழமண்டலத்திலோ போட்டுவிட்டால் என் இதயம் பாண்டிய-சோழ மண்டலங்களுக்குச் சொந்தம் என்ற உண்மை நிலை பெற்று விட்டால் என்ன செய்வது? தவறிப் போய் ஒரு காக்கை என் நாக்கைக் கொண்டு போய்ச் சோழர் எதிரில், பாண்டியர் எதிரில் போட்டு, உடனே என் நாக்கு, புராணத்தில் வரும் நாக்குப் போலப் பேச ஆரம்பித்து, உங்களைப் பற்றிய உண்மைகளைச் சொன்னாலும் சொல்லிவிடக்கூடும் இல்லையா? அதனால் என் சவத்தையும் இங்கேதான் எரித்துப் பொசுக்குவீர்கள்; அதற்குள் சில உண்மைகளைத் தெரிந்து கொண்டு தற்காலிகமாக மகிழ்வு கொள்ளலாம் என்று எண்ணுகிறேன். இந்தச் சிறு மகிழ்ச்சியையாவது நான் அடைவதில் தடையொன்றும் இல்லையே?"
அவன் பேச்சைக் கேட்கக்கேட்கத் தாமரையின் உள்ளம் உருக ஆரம்பித்தது. சாவைப் பற்றிய ஒரு நிச்சயத்துடன் இருக்கும் அவன் முகத்தில் அச்சத்தின் சாயல் அணுவளவும் தென்படாத ஓர் ஒளி வீசிக் கொண்டிருப்பதைக் கண்டு அவள் வியந்தாள்.
"நீங்கள் என்னிடம் எதைப் பற்றிக் கேட்க வேண்டுமென்று விரும்புகிறீர்கள்?" என்று அன்பு குழைந்த தொனியில் கேட்டாள்.
"என்னைப்பற்றி ஒரு கதை சொல்கிறேன். கேள் முதலில்" என்று ஆரம்பித்தான். "ஒரு நாள் என் மன்னவர் பாண்டியன் பெருவழுதி என்னையழைத்து ஓர் அழகிய பெண்ணின் படத்தைக் காட்டி, 'இவள்தான் உனக்கு மனைவியாக வரப்போகிறவள்' என்று கூறினார். படத்தைப் பார்த்த நான் எந்த மறுப்பும் கூறவில்லை. என் சம்மதத்தைப் புரிந்து கொண்டார். பிறகு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலைகளால் திருமணம் நடைபெறாமல் போய்விட்டது. அந்தப் படத்தில் நான் கண்ட அழகியை இதுநாள் வரையில் தேடிக் கொண்டேயிருந்தேன்; கிடைக்கவில்லை."
"அதற்கென்ன? இந்தக் கதை கேட்கவா என்னை உட்கார வைத்தீர்கள்?"
"கொஞ்சம் பொறு! நான் தேடிக் கொண்டிருந்த சமயத்தில்தான் சோழ பாண்டியர் நட்பு ஒப்பந்தம் நடைபெற்றது. அந்த விழாவின் போது ஏற்பட்ட நிகழ்ச்சியால் எனக்கு இந்த முடிவு ஏற்பட்டது."
"அதெல்லாம் தான் தெரியுமே, அதற்கென்ன?"
"நான் வாழ வேண்டும் - வளமாக வாழவேண்டும்- இன்பமாக வாழ வேண்டும் என்று நினைத்து எப்போது திருமணம் வரும் என்று ஏங்கிக் கிடந்த சமயம் அந்தச் சித்திரத்துப்பாவை என் கண்ணில் படவில்லை. அவளோடு காதல் மொழி பேசி இல்லறக் களி நடனம் புரிய வேண்டுமென்று நான் ஆயிரமாயிரம் மனக்கோட்டைகளைக் கட்டியலைந்தபோது, அந்த பேசும் புறா என் விழி வலையில் விழவில்லை.
என்னுயிரே - பொன் விளக்கே - மண்ணுலகில் இல்லாத பேரழகே - மாற்றுக் குறையாத தங்கமே! என்றெல்லாம் அவளைப் புகழ்ந்து பாடிப் பாடி எழுதி, அந்த ஓலைச்சுவடிகளை அடுக்கி அடுக்கி அவைகளைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு, 'இத்தனையும் என் காதலியைப் பற்றிய காவியம்' என்று கூத்தாடிக் குடும்பம் நடத்த நான் கனவு கண்டபோது அவளை நான் காண முடியவில்லை. சாவு வா! வா! என்று கை காட்டி என்னை அழைக்கும் போது சாவூருக்குப் போகும் வழியில் என் சந்தனச் சிலையைக் காண்கிறேன். கண்ணீர் வடிக்கிறேன்!"
"அவளைக் கண்டீர்களா? எங்கே?. யார் அவள்....!"
"ஆமாம் கண்டேன். அன்றலர்ந்த செந்தாமரை முகம். ஆணிப்பொன் மேனி. அழகெல்லாம் ஒருசேர வடித்தெடுத்த வண்ணச்சிலை. மீன் என்பார் கண்ணை. இல்லை; தேன் கொள்ளும் வண்டு படுத்திருக்கும் அல்லி மலர் என்பேன்; இதழ் என்பார் அதரத்தை இல்லை; திறந்திருக்கும் குங்குமச் சிமிழ் என்பேன்! அந்த ஆரணங்கைக் கண்டு விட்டேன்- எழிலோவியத்தைக் கண்டு விட்டேன்!"
"எங்கே? யாரை?" தாமரை கோபமாகக் கேட்டாள்.
"இங்கேதான்! நீதான்! நீயேதான் நான் தேடியலைந்த நீலோற்பலம்! நித்திலம்! நிலவு!"
தாமரைக்குத் தூக்கிவாரிப் போட்டது.
அப்படியே சிலையாக மாறிப் போனாள். அவனுக்கு என்ன பதில் கூறுவதென்று அவளுக்குத் தெரியவில்லை. அவன் மனம் புண்படும்படிப் பேசக்கூடாது என்று மட்டும் அவள் முதலிலேயே முடிவு செய்திருந்தாள். அவன் தன்னைப் பற்றிக் கொண்டிருக்கும் எண்ணத்தை நினைத்து அவள் ஆத்திரப்படவில்லை. தன் அழகை வியக்கவும் தன்மீது விருப்பமுறவும் அவனுக்கு உரிமையிருக்கிறது. அதைத் தடுக்க அவளால் எப்படி முடியும்? ஒரு பெண்ணைப் பார்த்ததும் அவளிடம் ஓர் ஆண்மகன் தன் உள்ளத்தைப் பறிகொடுப்பது தவறில்லை. தன் கருத்தை அவளிடம் வெளியிடுவதிலும் தவறில்லை. இந்த நிலைமை எதுவரையில் போகலாம்... எதுவரையில் சரியாக இருக்கலாம் என்பதே பிரச்சினை. 'உன்னை நான் உயிரினும் மேலாக நேசிக்கிறேன்; என்னை ஏற்றுக் கொள்!' என்று கேட்கிற வரையில் தவறில்லை. நிச்சயமாகத் தவறில்லை. அவன் மொழி கேட்ட அந்தப் பாவையும் ஒப்புதல் உரை தந்துவிட்டால் பிறகு பேச்சே இல்லை
அவள் அவனை விரும்பாமல் மறுத்துவிட்ட பிறகும் அவன் தவறான வழியிலேயே அவளிடம் நடந்து கொள்ள முயன்றால், அங்கேதான் மனிதன் மிருகமாக மாறுகிறான். அந்த மிருகம் தண்டிக்கப்பட்டே தீர வேண்டும்.
இப்படிப்பட்ட ஒரு கருத்து தாமரையை அவன்மீது அனுதாபம் காட்டச் செய்தது. சோழனுக்கும் இருங்கோவேளுக்கும் பகை மூளாமல் இருந்தபோது, பாண்டியனும் இருங்கோவேளும் கூட நண்பர்களாகத் தான் இருந்தார்கள்.
அந்த நேரத்தில் தன் படத்தை இருங்கோவேள் பாண்டிய மன்னனிடம் அனுப்பியிருக்கக்கூடும்; அந்தப் படத்தைக் கண்ட செழியன் தன் மீது காதல் கொண்டிருக்கக்கூடும். இவன் பேச்சினைக் காணும்போது அந்தக் காதல் தூய்மையான காதலாகவே தோன்றுகிறது. அதே சமயம் பயமும் ஏற்படுகிறது. செழியன் காதல் கதை பேசி இவளை ஏமாற்றிவிட்டுத் தப்பியோடி விடலாம் என்றும் திட்டமிட்டிருக்கலாம் அல்லவா?
அவன் முகத்தை முறித்துப் பேசிவிடக்கூடாது என்ற முடிவுடன், "நான் யாரென்று தெரிந்தால் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்வீர்கள்" என்றாள்.
அதற்குச் செழியன் பதில் பேசவில்லை. அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று ஆவலோடு எதிர்பார்த்தான்.
"நான் இருங்கோவேள் மன்னரின் தங்கை" என்று அவள் பெருமிதத்தோடு கூறிய வார்த்தைகளைக் கேட்டுச் செழியன் திணறிப் போனான்.
"எரிமலைமீது சூரியகாந்திப் பூ எப்படி மலரும்?" என தன்னைத் தானே கேட்டுக் கொண்டான்.
"யாராய் இருந்தால் என்ன? காதல், பகையை நோக்குவதில்லை!" என்று அவன் பதில் கூறியிருந்தால்
அவன் தன்னை ஏமாற்றுவதற்கே இந்தத் திட்டம் வகுத்து காதல் நாடகம் ஆடுகிறான் என்று தீர்மானித்திருப்பாள் தாமரை.
எதிரியின் தங்கை எனக்கேட்டு அவன் தவிப்பதைக் கண்டதும் அவள் உண்மையிலேயே தன்னை நேசித்திருக்கிறான் என்று புரிந்து கொண்டாள்.
"நான் சொன்னது காதில் விழவில்லையா? இருங்கோவேள் மன்னரின் தங்கைதான் இந்த தாமரை?" என்றாள் அழுத்தந்திருத்தமாக மீண்டும்.
"நீ ஏன் இந்தக் குடும்பத்தில் வந்து பிறந்தாய்!" என்று வேதனை பீறிட்டெழக் கத்திவிட்டான் செழியன்.
அவன் கத்தியது அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. சிறைச்சாலை யின் கதவுப்பக்கம் ஏதோ ஓசை கேட்கவே திரும்பிப் பார்த்தாள். வீரன் ஒருவன் ஓடிவந்து, "அரசர் வருகிறார்" என்றான். தாமரை, வாயிற்புறத்தையே பார்த்துக் கொண்டு மெல்ல முன்னோக்கி வந்தாள். இருங்கோவேள் அந்தச் சேற்றிலும் சகதியிலும் கால் வைத்து வேகமாக உள்ளே வந்து கொண்டிருந்தான்.
அண்ணன், ஏதுவும் கேட்டுவிடுவதற்கு முன் தானே முந்திக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தில் தாமரை, "அண்ணா! இந்தக் கைதிக்கு திடீரென்று நெஞ்சு அடைத்து ஆபத்தாகப் போய் விட்டதண்ணா!" என ஆரம்பித்தாள்.
தங்கையைக் கோபத்துடன் நோக்கியவாறு இருங்கோவேள் "ஓகோ! கைதிக்கு ஆபத்தாகப் போய்விட்டது; உடனே காவலர்கள் ஓடி வந்தனர். உனக்கு இந்தக் கைதியின் மீது கருணை பிறந்து விட்டது; சிகிச்சையளிக்கப் பறந்து வந்து விட்டாய்; இல்லையா?" என்று கிண்டல் செய்தான். அண்ணனின் கேலி மொழியில் ஆத்திரம் கொந்தளிப்பதை உணர்ந்து கொண்ட தாமரை தலையைக் குனிந்துகொண்டு நின்றாள். இருங்கோவேள் செழியனைப் பார்த்துச் சீறினான்.
"ஏன் தம்பி? சிறைச்சாலை என்றால் உங்கள் வீட்டுப் பள்ளியறை மாதிரியா இருக்கும்? அதற்காக ஏன் மற்றவர்களுக்குத் தொந்தரவு கொடுக்கிறாய்? சாகும் வரையில் மரியாதையாகக் காலங் கழிக்க மாட்டாய் போலிருக்கிறதே!"
இதுவரையிலும் அமைதியாக இருந்த செழியன், இருங்கோவேளை மிக அலட்சியமாகப் பார்த்தவாறு, "நான் யாரையும் இங்கே கூப்பிட வில்லை. என்னைக் கொல்ல வேண்டுமென்று நீ விரும்பினால் அந்த வேலையை விரைவில் முடித்துவிடு. மாறாக என் கால் கைகளைக் கட்டிப் போட்டுவிட்டு என் நெஞ்சை மட்டும் உசுப்பி விடாதே!" என்று பதில் கூறவே, இருங்கோவேளுக்குச் சினம் பொங்கி எழுந்தது.
"என்ன சொன்னாய்?" என்று செழியன் மீது பாய்ந்தான். ஆனால் அதற்குள் குறுக்கே தாமரை ஓடிநின்று அண்ணனைத் தடுத்து நிறுத்தி, “எதிரி நாட்டுக்காரராயிருந்தாலும் அவரும் ஒரு வீரர். அவரை இப்படி நடத்துவது நமது மறக்குலப் பண்புக்கே இழுக்குத் தரும் காரியம் அண்ணா!" என்று படபடவென்று வார்த்தைகளைக் கொட்டி விட்டாள். பேசி முடித்த பிறகே அவளுக்கு அச்சம் ஏற்பட்டது. அண்ணன் முன்னே ஏதேதோ கூறி விட்டோமே என்று.
"தாமரை! பண்புக்கு விளக்கம் அளிக்க உன்னை யாரும் இங்கே அழைக்கவில்லை. போ வெளியே!" என்று கத்தினான் இருங்கோவேள்.
"மன்னித்துக் கொள்ளவும். இதுபோல நமக்கு ஒரு நிலை ஏற்பட்டு விட்டால்... என்று சிந்திப்பதுதான் முறையண்ணா" என்று கெஞ்சும் தோரணையில் கூறினாள் தாமரை.
"நமக்கு ஒரு நிலை! பைத்தியக்காரி, இனிமேல் தானா நமக்கு அந்த நிலை ஏற்பட வேண்டும்? இப்போது நம் நிலை என்ன? அதை எண்ணிப்பார், தாமரை! எண்ணிப்பார்! முகிலைத் தொடும் அளவு எழுந்து நின்ற நமது கோட்டை எங்கே? கொத்தளங்கள் எங்கே? கொலு மண்டபத்தில் உன் அண்ணன் வீற்றிருந்த காட்சி எங்கே? அத்தனையும் மறைவதற்குக் காரணமாயிருந்த இந்த எதிரிகளின் மீது இரக்கமாம் - கருணையாம் பரிவாம் பச்சாதாபமாம்!" இருங்கோவேள் எரிமலையானான்.
"கரிகாற் சோழர்தானே அண்ணா நமது எதிரி- பாண்டியர்களுக்கும் நமக்கும் என்ன பகை?"
தாமரையின் கேள்விக்கு இருங்கோவேள் பதில் சொல்வதற்கு முன்பு அவன் உதடுகள் துடித்தன. பல்லைக் கடித்துக் கொண்டான்.
"பாண்டியன் பகைவனல்ல என்கிறாயா? இதோ இந்தப் பாவி இல்லையென்றால் இந்நேரம் அந்தக் கரிகாலன் உயிர் காற்றில் பறந்திருக்குமே - அதைத் தடுத்து நிறுத்தியது இவன் தானே? அது மட்டுமல்ல தாமரை; இதோ ஒரு புதிய செய்தி சொல்லுகிறேன் உனக்கு! இன்னும் இரண்டொரு தினங்களில் பாண்டிய நாட்டுப்படை நம்மை இந்தக் காட்டுக்குள் வளைக்கப் போகிறது. பெரும் சேனை கொண்டு முற்றுகையிட்டு என்னையும் உன்னையும், ராஜ குடும்பத்தையும் கைது செய்து, இவர்களையெல்லாம் விடுவிக்க வேண்டுமென்று திட்டமிட்டிருக்கிறது."
இதை அவன் சொல்லி முடிப்பதற்குள் தாமரைக்கு நடுக்கம் ஏற்பட்டு விட்டது. பாண்டியர்கள் படையெடுக்கப் போகிற செய்தி தந்த பயத்தைவிட, அந்தச் செய்தியை செழியன் எதிரிலேயே அண்ணன் வெளியிடுகிறானே என்ற பயம் அதிகமாயிற்று அவளுக்கு. ஆனால் அந்த பயம் வெகு விரைவில் நீங்கிற்று. செழியன் காதில் அந்தச் செய்தியைப் போட்டதுங்கூட அண்ணனின் ராஜதந்திரந்தான் என்ற முடிவுக்கு வந்தாள்.
இருங்கோவேள் செழியனிடம் சென்று முதுகில் தட்டியவாறு. "உணர்ச்சி மிக்க வாலிபனே! உனக்கும் எனக்கும் ஏற்பட்டிருக்கிற நெருக்கடியைத் தீர்க்கக்கூடிய சக்தி இப்போது உன்னிடந்தான் இருக்கிறது. என்ன நெருக்கடி என்று கேட்கிறாயா? நீ கேட்க மாட்டாய்! புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் பெற்றவன்தான் நீ! பெருவழுதிப் பாண்டியனின் படைகள் எங்களை வளைத்துக் கொள்ளுமேயானால் நாங்கள் நிச்சயம் தப்ப முடியாது. எங்களை வெல்வார் யாருமில்லை என்று அறைகூவல் தருகிற நிலையில் நாங்கள் இல்லை.
ஆனால் ஒன்று. எந்த ஓர் உயிரை மீட்பதற்காகப் பாண்டியனின் படையெடுப்பு நடக்க இருக்கிறதோ, அந்த உயிரை அவர்களால் கண்டிப்பாக மீட்க முடியாது. அந்த உயிர் உன் உயிர்தான்! நாங்கள் அத்தனை பேரும் பாண்டியர்களால் சூழப்படுகிற நேரத்தில் உன்னை உயிரோடு அவர்களிடம் திருப்பித் தருவோமா? யார்தான் தருவார்கள்? உனக்குத் தெரியாதா என்ன? அதனால் நீ உயிர் தப்புவதற்கு ஒரே ஒரு வழி இருக்கிறது - அதைச் சொல்லுகிறேன்; உன்னால் நிறைவேற்ற முடியுமா? முடியாதா? என்று உடனே கூறிவிடு!" என்று ஒரு சொற்பொழிவே நடத்திவிட்டான்.
என்னதான் செய்ய வேண்டுமென்று சொல்கிறான் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவலில், "என்ன வழி?" என்று கேட்டு வைத்தான் செழியன்.
"பிரமாதமாக ஒன்றுமில்லை. பெருவழுதிப் பாண்டியனுக்கு ஓர் ஓலை அனுப்ப வேண்டும். அவ்வளவுதான்." - இருங்கோவேள் சற்றுக் கனிவுடன் இந்த வார்த்தைகளை உதிர்த்தான்.
"என்ன ஓலை?"
"திருமண ஓலை!"
"திருமண ஓலையா!"
"ஆமாம் -அதுவும் உனக்குத் திருமணம் நடக்கப் போகிறது என்ற செய்தியைத் தாங்கிய ஓலை"
"புரியவில்லை எனக்கு!"
"புரியும்படி சொல்கிறேன். நீயே எழுத வேண்டும். பாண்டியனுக்கு ஓலையில் குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய வரிகள் எவை தெரியுமா?'
"எவை?"
"பாண்டிய மன்னர் அவர்களே! என்னை மீட்பதற்காகப் பெரும்படை திரட்டிவரப் போவதாகச் செய்தி கேள்விப்பட்டேன். என்னை மீட்க வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லாமற் போய்விட்டது என்பதை இந்த ஓலை வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் இப்போது இருங்கோவேளின் உற்ற துணைவனாக மாறி விட்டேன். பாண்டியப் பேரரசு இந்த உறவின் மூலம் எனக்குப் பகையாகிறது."
"ஆ! என்ன சொன்னாய்?"
"பதறாதே செழியா? முழுவதையும் கேள்! இனிமேல்தான் இன்பமான செய்தியே வரப்போகிறது."
"போதும் - போதும் - என் காதில் தேள்களை நுழைய விடாதே; தயவு செய்து போய்விடு மன்னா - போய்விடு!"
"இதையும் கேள் தம்பி! பாண்டிய மன்னரே? உம்மீது எனக்குப் பகை வளர்ந்த காரணத்தை அறிய விரும்புகிறீரா? என் திருமணத்திற்கென ஏற்பாடு செய்து அதைத் திடீரென நிறுத்தி விட்டீரே; அதன் தொடர்ச்சிதான் இப்போது நமது உறவை முறித்துவிட்டது. அன்றொரு நாள் சித்திரத்தில் காட்டிய பெண்ணை இங்கே இருங்கோவேளின் வீட்டில் நேரிலே கண்டேன். கண்ட பிறகு என்ன நடக்கும் என்று தங்களுக்குத் தெரியாதா என்ன? இருங்கோவேள் இப்போது என் மைத்துனர்; ஆமாம் அரசே! வேளிர் குலவிளக்காம் தாமரையை நான் மணப்பதென்று தீர்மானமாகி விட்டது!"
இருங்கோவேளின் பேச்சு, செழியனுக்கும் தாமரைக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இருவரும் இருங்கோவேளையே பார்த்தபடி நின்றார்கள். அண்ணன்தான் பேசுகிறானா.. என்று சந்தேகப்பட்டாள் தாமரை. உண்மையிலேயே அண்ணனுக்கு இப்படியொரு எண்ணமிருக் கிறதா? அல்லது தற்காலிகமாகத் தப்பித்துக் கொள்வதற்குச் செழியனை துரோகியாக்க முடிவு செய்திருக்கிறானோ? அவளுக்கும் ஒன்றும் புரியவில்லை. ஆனால். ஏதோ ஒரு ராஜதந்திரத்தை மிக அழகாகக் கையாள்கிறான் அண்ணன் என்பதை மட்டும் உணர்ந்து கொண்டாள்.
செழியனுக்கு ஒரே குழப்பம். எதிர்பாராத வாசகங்களைக் கேட்டு அப்படியே நின்று கொண்டிருந்தான். இருங்கோவேள் உண்மையிலேயே தனக்குப் பெண் கொடுத்து உறவு கொண்டாட விரும்புகிறானா? அல்லது தன்னையும் ஏமாற்றிப் பாண்டியரையும் ஏமாற்றித் தான் வெற்றி பெறச் சூழ்ச்சிகள் செய்கிறானா? ஒருவேளை, தாமரையைத் தனக்கு திருமணம் செய்து கொடுக்க அவன் வலிய முன்வந்து விட்டால் என்ன செய்வது? சே!, சே! எதிரியின் வீட்டிலா தொடர்பு? அழகிதான் அவள், அதற்காக அவன் துரோகியாகி விடுவதா? முடியாது! முடியாது! இதிலிருந்து ஏதோ ஒரு முக்கிய காரணத்தால் பாண்டியனுக்கும் இருங்கோவேளுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுத் தனக்கும் தாமரைக்கும் நடந்திருக்க வேண்டிய திருமணம் தடைபட்டுப் போயிற்று என்பதை மட்டுமே குழப்பத்திற்கிடையே செழியனால் கண்டுபிடிக்க முடிந்தது. இருங்கோவேளின் பேச்சில் புதைந்து கிடக்கும் இணையற்ற தந்திரத்தைக் கண்டு செழியன் ஆச்சரியப்பட்டான். ஏன் அந்தத் தந்திரத்தைத் தனக்கும் தன் நாட்டுக்கும் சாதகமாக ஆக்கிக் கொள்ளக் கூடாது என்ற கேள்வி எழுந்தது அவன் உள்ளத்தில்.
இருங்கோவேள் கூறுவது போல் ஒரு கடிதம் எழுதினால் அது பாண்டியரிடம் செல்லும்; பாண்டியர் அதைப் படித்ததும் செழியனைத் துரோகி என்று தூற்றுவார். படையெடுப்பு நின்று விடும். அதன் காரணமாகச் செழியனின் உயிர் காப்பாற்றப்படும்; இப்போது எப்படியோ சாகாமல் தப்பித்துக் கொண்டால் எவ்வாறேனும் இருங்கோவேளிடமிருந்து விடுபட்டுப் பாண்டியரிடம் உண்மையைக் கூறி, துரோகியல்ல என்று நிரூபித்து விடலாம்.
இந்தச் சிந்தனை செழியனுக்கு ஒரு புதிய தெம்பை அளித்தது என்றே கூற வேண்டும். அத்தோடு அவனுக்கு மற்றுமொரு சந்தேகம். இருங்கோவேள், தன் தங்கை தாமரையைத் தனக்கு உண்மையிலேயே திருமணம் செய்து வைக்கச் சம்மதிப்பானா என்பதே அது. அதையும் கேட்டு விடலாம். அவன் மனத்தை ஆராய்ந்து விடலாம் என்ற கருத்தோடு அவனைப் பார்த்து "உன் விருப்பப்படியே பாண்டியருக்கு ஓலை எழுதுகிறேன். அதேபோல் தாமரைக்கும் எனக்கும் திருமணம் நடைபெறுமா?" எனக் கேட்டான்.
அவனது துணிச்சலான கேள்விக்கு இருங்கோவேள் சட்டென்று பதில் சொன்னான்.
"தாராளமாக நடைபெறும். ஆனால் அதற்கும் ஒரு நிபந்தனை இருக்கிறது."
“என்ன நிபந்தனை?"
"அப்படியொன்றும் பயங்கரமானதல்ல; அதெல்லாம் நிச்சயம் செய்யும்போது கூறுகிறேன். இப்போது நெருக்கடியைத் தவிர்த்துக் கொள்ளலாம். என்ன சொல்கிறாய்? உதவி புரிகிறாயா? ஆனால் இந்த உதவி உன் உயிருக்கும் சேர்த்துத்தான் என்பதை மறந்து விடாதே!"
"உதவி செய்கிறேன்; ஒரு சிறு நிபந்தனை. என்னை இந்தச் சித்திரவதைக் கூடத்திலேயிருந்து மாற்றி, வேறு ஒரு நல்ல இடத்தில் பூட்டி வைக்க வேண்டும். முடியுமா?"
"தாராளமாக! இங்கேயுள்ள இடத்தில் ஒரு நல்ல இடம் உனக்கு ஒதுக்கப்படும். சரி இதோ ஓலை - இந்தா எழுதுகோல் - உடனே எழுது!"
ஓலையையும் எழுதுகோலையும் பெற்ற செழியன் எழுதத் தொடங்கினான். இருங்கோவேள் கூறியவற்றை மிகச் சுருக்கமாக எழுதி முடித்து அவன் கையில் தந்தான்.
"பாண்டியர் பெருவழுதிக்கு, செழியன் வணக்கம், என்னை இருங்கோவேளிடமிருந்து மீட்பதற்கு முயல்வதாகக் கேள்விப்பட்டேன். தேவையில்லை - தாங்கள் என்னிடம் மறைத்து வந்த மணமகளை யாரென்று புரிந்து கொண்டேன். இருங்கோவேளின் தங்கை தாமரைக்கும் எனக்கும் திருமணம். வேளிர்குடியில் புது உறவு - பாண்டியருக்கு நான் பகைவனாக வேண்டிய சூழ்நிலை; என்னை மறந்து விடுக.
செழியன்"
ஓலையை வாங்கிக் கொண்டே இருங்கோவேள், 'சபாஷ்' என்று செழியன் முதுகில் தட்டிக் கொடுத்து விட்டுக் கலகல எனச் சிரிக்கத் தொடங்கினான். அந்தப் பயங்கரமான சிரிப்பு இருட்குகையெங்கும் எதிரொலித்தது.
"செழியா! சரியானபடி ஏமாந்தாய்! இந்த ஓலை பாண்டியன் படையெடுப்பதைத் தடுக்கும். ஆனால் உன் உயிர் போவதைத் தடுக்க இந்த ஓலைக்குச் சக்தி இல்லை. உன் உயிரைப் பணயமாக வைத்துக் கரிகாலனுக்கு அறிவிப்புக் கொடுத்திருக்கிறேன். இழந்த என் நாடுகளைத் திருப்பித்தர வேண்டும். இல்லையேல் செழியனின் உயிர் பறிக்கப்படும். இதுதான் தம்பி, மதிப்பிற்குரிய பூம்புகார் மன்னவனுக்கு இருங்கோவேளின் இறுதி எச்சரிக்கை. ஆகவே, தம்பி! எப்படியோ ஒரு வகையில் உன் உயிர் ஊசலாடிக் கொண்டுதான் இருக்கிறது" என்று இடி முழக்கம் செய்தான் இருங்கோவேள்.
செழியனுக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. தன் உயிரை வைத்து இருபெரும் மன்னர்களை வேடிக்கை காட்டுகிற இருங்கோவேளை அப்படியே கசக்கிப் பிழிந்து விடலாமா என எண்ணி உறுமியவாறு இருங்கோவேள் மீது பாய்ந்தான். இருங்கோவேள், அவனை அலட்சியமாகத் தட்டி வீழ்த்திவிட்டு, வேகமாக வெளியேறினான். தாமரையும் அவனோடு சென்றாள். போகும்போது செழியனை ஒருமுறை திரும்பிப் பார்த்தாள். உள்ளத்து உணர்ச்சிகளையெல்லாம் நாக்கில் தேக்கிச் செழியன் பலமாக ஒரு முழக்கம் செய்தான். "வாழ்க!" சோழ- பாண்டிய மண்டலம்!" என்ற முழக்கம்தான் அது. அந்த உணர்ச்சிப் பரணியைக் கேட்ட தாமரை, செழியனின் நாட்டுப்பற்றைத் தனக்குத்தானே வியந்து கொண்டாள். கதவு மூடப்பட்டது. மீண்டும் இருள் சூழ்ந்தது. செழியன் இருளில் கிடந்தான்.