ரோமாபுரிப் பாண்டியன்/11. ஓலை கை மாறியது
11
ஓலை கை மாறியது
வெளியில் வந்த இருங்கோவேள் தாமரையைப் பார்த்து, "என்ன செய்தி? அண்ணி எப்படி இருக்கிறாள்? நீ சொன்ன அந்த ஊமை மருத்துவன் வந்தானா?" எனக் கேட்டான்.
"வந்திருக்கிறான்; மருத்துவம் ஆரம்பிக்கப் போகிறான்" எனப் பதிலுரைத்தாள் அவள்.
"அவனை நமது காவலர்கள் யாரும் தடுக்காமலும் தொந்தரவு செய்யாமலும் இருக்கட்டும். அவன் விருப்பத்துக்கு வெளியில் சென்று மூலிகைகள் தயாரித்துக் கொண்டு வரட்டும். இந்தா! இந்த முத்திரை மோதிரத்தை அவன் கையில் மாட்டிவிடு. அப்போதுதான் காவலர்கள் தொல்லை இருக்காது அவனுக்கு. அந்த மருத்துவனைப் பற்றி நான் கூடக் கேள்விப்பட்டேன். வாலிபனாம், வடிவழகனாம்; ஊமையாக இருந்தாலும் மருத்துவத்தில் தலை சிறந்தவனாம். ஊரார் சொல்லக் கேட்டேன். நீ அழைத்து வந்திருப்பவனும் நான் கேள்விப்பட்ட வனாகத்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். எப்படியோ அரசிக்கு நோய் தீர்ந்தால் போதும். அதற்கு வேண்டிய வசதிகளை யெல்லாம் அந்த மருத்துவனுக்குச் செய்து கொடு. நமது அரண்மனையில் எத்தனையோ வசதி! இங்கே என்ன செய்வது? பரவாயில்லை. நடக்கிற வரையில் நடக்கட்டும். நீ போ தாமரை!" என்றான். அவளும் போக ஆரம்பித்தாள்.
"ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். நான் அரசியிடம் வந்து பேசிக் கொண்டிருக்கும்போதோ அல்லது உன்னைக் காணவரும்போதோ அவனில்லாமல் இருப்பது நல்லது. ஏனெனில் அவன் ஒருவேளை ஒற்றனாக இருந்தால் ...!" என இழுத்தாற் போல் கூறினான் அவன்.
"அப்படியெல்லாம் இல்லை. மிகவும் நல்ல மருத்துவன். எதற்கும் நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம்." என்றவாறு தாமரை அதைவிட்டு அகன்றாள். அவள் உள்ளத்தில் குதூகலம் இல்லை. ஏதோ ஒரு விவரிக்க முடியாத சங்கடம் அவளை ஆட்டிப் படைத்தது.
இருங்கோவேள், நேரே தன் இருப்பிடத்திற்குச் சென்று அமைச்சரிடம், செழியனின் கடிதத்தைப் படித்துக் காட்டினான். அமைச்சர் விகாரமாகச் சிரித்து மன்னனின் திறமையை மெச்சினார். திறமைமிக்க ஒருவன் மூலம் உடனே ஓலையைப் பாண்டியருக்கு அனுப்பத் தீர்மானிக்கப்பட்டது. நல்ல பலமிக்க வீரர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டனர். அமைச்சர் அவர்களைக் கூர்ந்து கவனித்து இறுதியில் ஒருவனைத் தேர்ந்தெடுத்தார். அவன் பெயர் கொடுங்கோல்! பாண்டியனிடம் பத்திரமாக ஓலையைச் சேர்க்க வேண்டிய பொறுப்பு அவனிடம் ஒப்படைக்கப் பட்டது.
பாண்டிய நாட்டுத் தலைநகரம் மிகவும் பரபரப்பாகக் காணப்பட்டது. புன்னகை பூத்த முகத்துடன் வீரர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் செல்லும் அழகை வீதியோரங்களில் நின்று வயது முதிர்ந்தோர் கண்டு களித்தனர். வீதியிற் சென்று கொண்டிருக்கும் வீரர்களின் கூட்டம் மேலும் மேலும் பெருகி விடும் விதத்தில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வீரர்கள் வந்து கூட்டத்தில் நுழைந்து கொண்டனர். அவர்களை வழியனுப்பி வைத்து விட்டு வைத்த விழி வாங்காது அவர்களையே பார்த்துக் கொண்டு அவர் தம் துணைவியர் வாயிற்படிகளில் நின்று கொண்டிருந்தனர்.
எல்லா வீரர்களும் தங்கள் தங்கள் வீடுகளில் 'போருக்குப் போய் வருகிறேன்' என்று கூறிட முடிந்ததே தவிர, எந்தப் போருக்கு ? எங்கே? யாரை எதிர்க்க? என்ற விவரங்களை விளக்கிட முடியவில்லை. காரணம் அந்த விவரம் அவர்களுக்கே அறிவிக்கப் படவில்லை. தினவெடுக்கும் தோள்களுக்கு வேலை வந்தால் போதும் என்ற துடிதுடிப்பு அந்த வீரர்களுக்கு! அவர்களின் மார்பில் ஏந்தி வரும் விழுப்புண்களுக்கு முத்தமீந்து ஆற்றிட வேண்டுமென்ற தணியாத ஆசை, அவர்களைத் தழுவி மகிழ்ந்த காதலியர்க்கு!
"என் மகன் பட்ட காயம் எங்கே தெரியுமா? நெஞ்சாங்குழியில்!" எனக் கூறிப் பெருமையடைய வேண்டுமென்ற ஆத்திரம் கிழவிகளுக்கு!
"எதிரிகளின் இருதயத்தில் அவர்களின் பற்களைத் தட்டிப் போட்டு நம் குழந்தைகளுக்குக் கிலுகிலுப்பைக் கொண்டு வாருங்கள் அத்தான்," என்று விடை கொடுத்தனுப்பிய தாய்மார்களின் வீரக் குரல் பாண்டியன் தலைநகரமெங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது.
பல நாள் பட்டினி கிடந்த புலிக்கூட்டம், திடீரெனக் கண்ணில் பட்ட மான்கூட்டத்தை நோக்கிப் புறப்பட்டது போலப் பாண்டிய நாட்டு வீரர்கள் போருக்குப் புறப்பட்டார்கள். அரண்மனை முகப்பில் மீன் கொடி வெகு கம்பீரமாகப் பறந்து கொண்டிருந்தது. அந்தக் கொடி நிழலில் ஒலித்துக் கொண்டிருந்த முரசம் போர் வீரர்களை உணர்ச்சி வடிவங்களாக ஆக்கிக் கொண்டிருந்தது. கொடி மரத்தடியில் பாண்டிய நாட்டுத் தளபதி நெடுமாறன் புரவியில் அமர்ந்து வீரர்கள் அணிவகுப்பைக் கண்காணித்துக் கொண்டிருந்தான்.
அப்போது அரசர் வருவதை அறிவிக்கும் இசைக் கருவி முழங்கிற்று; அதனைத் தொடர்ந்து யானை மீது பெருவழுதிப் பாண்டியர் அணி வகுப்புகளிடையே வந்து சேர்ந்தார். தளபதியும் போர் மறவர்களும் தலை தாழ்த்தி அரசருக்கு வணக்கம் தெரிவித்தார்கள். பெருவழுதிப் பாண்டியர் வீரர்களை நோக்கினார்.
"அருமை மிகு பாண்டியத்து ஆற்றல் நிறை மறவர்களே! அனைவரையும் வாழ்த்துகிறேன். போர் என்று அழைத்தேன். எங்கே யாருடன் என்று கேட்காமலே கூட ஓடி வந்து கூடி விட்டீர்கள். புறப்படும் வரையில், செய்தி பரவிட வேண்டாமென்று தான் ஒளித்து வைத்தேன். நமது செழியன் எதிரிகள் வசம் சிக்கியிருக்கிறான் என்றே நீங்கள் அறிவீர்கள். ஆனால் அந்த எதிரி யாரென்று அறிய மாட்டீர்கள். வேளிர்குல மன்னன் இருங்கோவேள்தான் செழியனைச் சிறை பிடித்திருக்கிறான். நாடிழந்த அந்த வேந்தன் ஒளிந்திருக்குமிடமோ சோழ மண்டலத்தில் பூம்புகாரை அடுத்து, சில கல் தொலைவிலுள்ள ஒரு காடு, அந்தக் காட்டில்தான் பெரும்படையொன்றையும் கரிகால் சோழனுக்கெதிராக அவன் தயாரித்து வருகிறான். இந்நிலையில் செழியனுக்கு நேர்ந்த கதி யாதென்று விளங்கவில்லை. என் நம்பிக்கையெல்லாம் செழியன் உயிருக்கு ஆபத்து எற்பட்டிருக்காது என்பதேயாகும். நமது படை திடீரென்று இருங்கோவேளையும் அவன் வீரர்களையும் வளைத்துக் கொண்டால் அத்தனை பேரும் செயலிழந்து விடுவார்கள். செழியனின் உயிரும் காப்பாற்றப்படும். ஆகவே இந்தப் படையெடுப்பு மிகத் தந்திரமாக நடைபெற வேண்டும். வெற்றி கிடைத்தும் செழியன் உயிருடன் கிடைக்க வில்லையென்றால் அது மாபெரும் தோல்வியே ஆகும். அதனால் ஆர்ப்பாட்டம் அதிகமின்றி இந்தப் போராட்டத்தில் குதியுங்கள். தளபதி நெடுமாறனிடம் போர் முறை பற்றிய விளக்கமனைத்தும் அறிவித்திருக்கிறேன். அவருக்குக் கட்டுப்பட்டு வெற்றிகரமாகத் திரும்பி வாருங்கள்! வாழ்க பாண்டிய மண்டலம்!"
பெருவழுதிப் பாண்டியரின் உரை கேட்டு நின்ற வீரர்கள் "வாழ்க மன்னர்!" என முழங்கினர்.
தளபதி நெடுமாறன், அரசரிடம் விடை பெற்றுப் புறப்பட்டான். தளபதியைத் தொடர்ந்து வீரர்களும் முரசொலித்துக் கிளம்பினர். போர் வெறியால் உந்தப்பட்ட அவர்கள் மிக விரைவில் தலைநகரைத் தாண்டிப் பூம்புகார் செல்லும் பாட்டையில் நுழைந்தனர்.
சோழ மண்டலத்தில் நுழையாமலேயே அந்த நாட்டைச் சுற்றிக் கொண்டு இருங்கோவேள் வாழும் காட்டில் பிரவேசிக்க வேண்டு மென்று அரசர், தளபதிக்கு உணர்த்தியிருந்தார். அந்த அறிவுரைகளைப் பின்பற்றியே தளபதி நெடுமாறன் வழி வகுத்துச் சென்று கொண்டிருந்தான். அந்தப் படையை வழியிலேயே சந்தித்துச் செழியன் எழுதிய ஓலையைத் தளபதியிடம் கொடுத்துவிட வேண்டுமென்ற இருங்கோவேளின் உத்தரவைத் தாங்கி வேளிர்குல வீரன் கொடுங்கோல் புறப்பட்டுவிட்டான்.
அவன் குதிரையிலேறிப் புறப்படுகிற காட்சியைத் தன் இடத்தில் இருந்தவாறே முத்துநகை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். "யார் இவன்? எங்கே இவ்வளவு அவசரமாகப் புறப்படுகின்றான்?" என்ற கேள்விகள் அவள் உள்ளத்தில் எழுந்தன.
குதிரை நகரும் சமயம் இன்னொரு வீரன் அவனருகே வந்து, "ஏய் கொடுங்கோல்! வெற்றியோடு திரும்பு" என்று வாழ்த்தி அனுப்பிய தயும் முத்துநகையால் கேட்க முடிந்தது. ஏதோ புதிய சூழ்ச்சி உருவாகிறது என்பதை மட்டும் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. திரும்பினாள். தாமரை, அவளை நோக்கி மகிழ்ச்சியுடன் வந்து கொண்டிருந்தாள்.
"என்னைத் தனியாக விட்டுவிட்டு எங்கே போய் விட்டாய்?" என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டாள் முத்துநகை.
'மன்னித்து விடுங்கள். எல்லாம் உங்களுக்காகத்தான்! இதோ இந்த மோதிரத்தை அணிந்து கொள்ளுங்கள். இது விரலில் இருந்தால் உங்களை யாரும் தடுக்க மாட்டார்கள்! உங்கள் விருப்பம் போல் சுதந்திரமாக இருக்கலாம்." என்றாள் தாமரை.
"இது உனக்கு எப்படிக் கிடைத்தது?"
"இந்தக் கேள்வியெல்லாம் எதற்கு? மருத்துவர் மூலிகைகள் பறிக்க அடிக்கடி வெளியில் செல்வார்; அவரை யாரும் தடுக்காமலிருக்க இந்த மோதிரம் வேண்டும் என்று கூறி அமைச்சரிடம் இதைப் பெற்று வந்தேன்!"
எனச் சொல்லிக் கொண்டே முத்துநகையின் விரலில் மோதிரத்தை அணிவித்தாள் தாமரை. அப்போது அங்கு வந்த தோழியொருத்தி அந்தக் காட்சியைக் கண்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள் என்றாலும், வந்த காரியத்தை மறக்காமல், "இளவரசி! தங்களை அரசியார் அழைக்கிறார்" என்று கூப்பிட்டாள்.
தாமரை. முத்துநகையிடம் கண்களால் விடைபெற்றுக் கொண்டு, அரசியைப் பார்க்கப் புறப்பட்டாள். முத்துநகை அரசியையும் அந்தத் தோழியையும் மனதுக்குள் வாழ்த்தியவாறு மோதிரத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டே வேறு வழியாக வெளியே வந்தாள். குதிரைகள் கட்டப்பட்டிருக்கும் இடத்துக்கு வேகமாகப் போனாள். குதிரையை அவிழ்த்தாள்.
"யார் நீ?" என்று காவலன் ஒருவன் ஈட்டியை நீட்டியவாறு ஓடிவந்தான்.
மோதிரத்தை அவன் முகத்துக்கு நேரே காட்டினாள் முத்துநகை. குதிரையில் ஏறி வெகு வேகமாகப் புறப்பட்டாள். கொடுங்கோலின் குதிரை எந்தப் பக்கம் போயிருக்குமென்று அவளால் வெகுநேரம் வரையில் ஊகிக்க முடியவில்லை. ஒரு வாய்க்கால் ஓரத்தில் ஈரமண்ணில் பதிந்திருந்த குதிரையின் குளம்படிகள் கொடுங்கோல் சென்ற திக்கை அவளுக்கு அறிவித்தன. வேறு வழியில் அவன் சென்றிருக்க முடியாது என்ற நம்பிக்கையில் குதிரையைத் தட்டிவிட்டாள். காற்றினும் கடிய வேகத்தில் குதிரை பறந்தது. அவள் முயற்சி வீண் போகவில்லை. அவளுக்கு முன்னே அவன் போய்க் கொண்டிருந்தான்.
அவள் முதல்நாள் உட்கார்ந்திருந்த அதே அருவியோரம், அங்கே குதிரையை விட்டிறங்கி, கொடுங்கோல் தண்ணீர் பருகிக் கொண்டிருந்தான். முத்துநகையும் குதிரையைக் கொண்டு வந்து அங்கே நிறுத்தினாள்.
திடுக்கிட்ட கொடுங்கோல், "யார்?" என்று கர்ச்சித்தவாறு வாளை எடுத்துக் கொண்டு பாய்ந்தான்.
"நில்லப்பா! நானும் உன்னோடுதான் வருகிறேன்" என்றவாறு முத்துநகை குதிரையிலிருந்து இறங்கி, முத்திரை மோதிரத்தை அவனிடம் காட்டிச் சிரித்துக் கொண்டாள். உடனே கொடுங்கோல் முத்துநகைக்குத் தலைதாழ்த்தி வணக்கம் தெரிவித்துக் கொண்டான்.
"பயப்படாதே! அரசியாருக்கு மருத்துவம் செய்ய வந்திருக்கிறேன். திடீரென்று மன்னர் என்னையும் உன்னுடன் போகச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார். அவர் உன்னிடம்.." முத்துநகை பேச்சை முடிக்காமல், அவனிடமிருந்து பதிலை எதிர்பார்த்தாள்.
அந்த முட்டாளும், "ஆமாம், ஆமாம். பாண்டியருக்குக் கொடுக்க வேண்டிய ஓலையைக் கொடுத்திருக்கிறார். கட்டாயத்தின் பேரில் செழியனே எழுதிய ஓலை!" என்று உளறி வைத்தான்.
"பரவாயில்லை-பத்திரமாக வைத்துக் கொள்!?" என்று அவள் பதில் கூறினாளே தவிர, 'என்ன ஓலையாக இருக்கும்? செழியனே எழுதியது என்கிறானே!' என்பது போன்ற குழப்பங்கள் அவள் மூளையைக் குடையலாயின.
"சரி... நேரமாகிறது.. புறப்படலாம்!" என்றாள் அவள்.
கொடுங்கோல் புறப்பட்டான். முத்துநகை, குதிரையின் கடிவாளத் தைப் பிடித்தவாறு நடந்து கொண்டிருந்தாள். கொடுங்கோலும் அவ்வாறே அவளுடன் நடந்து கொண்டிருந்தான். அரசரின் முத்திரை மோதிரத்தையே போட்டிருக்கக்கூடிய ஒருவன் நடந்து செல்லும் போது சாதாரண வீரனாகிய அவன் மட்டும் குதிரையில் ஏறிச் செல்லலாமா? நடந்து கொண்டே முத்துநகை பேச்சுக் கொடுத்தாள்.
"நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகமில்லையா?"...
"ஆமாம் ஆமாம்"
"ஓலையைக் கொடுத்தால்.. அந்தப்பாண்டியர்கள்."
"படையெடுக்க மாட்டார்களாம்!"
"அது தெரியும்; அது தெரியும். ஆமாம்; நீ எவ்வளவு நாட்களாக நமது மன்னரின் படையில் வேலை பார்க்கிறாய்?"
"எங்க தாத்தா காலத்திலிருந்து எங்க குடும்பமே இருங்கோவேள் மன்னரின் படையிலேதான் இருக்கிறது!"
"ஓகோ! நீ வாள் வித்தையில் சிறந்தவன்தானா?"
"ஏதோ கொஞ்சம் தெரியும்!"
"பார்த்தாலே தெரிகிறது, பெரிய வீரன்தான் என்று. எங்கே, உன் வாளைக் கொடு பார்ப்போம்!"
கொடுங்கோல், தன் வாளையெடுத்து மரியாதையுடன் முத்துநகையிடம் கொடுத்தான்; முத்துநகை நடந்து கொண்டே அந்த வாளை வாங்கித் திருப்பிப் பார்த்தாள்.
"அதிகக் கனமாக இல்லையே!"... இது முத்துநகை
"ஆமாங்க! நம் அரசர் வைத்திருக்கும் வாள்தான் அதிகக் கனம். கரிகால் சோழனுடைய வாளைவிட அதிகக் கனமானது!" இது கொடுங்கோல்.
"ஓ! அப்படியா?" என்று கூறிக் கொண்டே முத்துநகை கையிலிருந்த வாளைக் கொடுங்கோலின் நெஞ்சில் நுழைத்து விட்டாள். எதிர்பாராமல் தாக்கப்பட்ட கொடுங்கோல், வாளிலே தன் உடலைச் சிக்க வைத்துக் கொண்டு மண்ணில் வீழ்ந்தான். அவசர அவசரமாக அவன் உடைகளை ஆராய்ச்சி செய்தாள் முத்துநகை. அந்த ஓலை அவள் கையில் கிடைத்துவிட்டது; எடுத்துப் படித்துப் பார்த்தாள். திடுக்கிட்டாள். அவளுக்குப் பயம் வேறு பிடித்துக் கொண்டது. எதிரே கிடக்கும் கொடுங்கோலின் பிணத்தை இழுத்துப் புதர் மறைவில் பரபரப்புடன் கிடத்தினாள். ஆளில்லாமல் நின்ற குதிரையை இழுத்துக் கொண்டு போய் வேறிடத்தில் விட்டாள். தன் குதிரையில் ஏறிக் கொண்டு எங்கு போவதென்று தெரியாமல் கொஞ்ச தூரம் சென்றாள்.
கொடுங்கோலை கொலை செய்த பரபரப்பு அவளுக்கு அடங்கவில்லை. உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது. இனி என்ன செய்வதென்று புரியவில்லை. போய்க் கொண்டே இருந்தாள் அவள். திடீரென்று மகிழ்ச்சியடையக் கூடிய காட்சியொன்றை எதிரே கண்டாள். மரக்கிளை யொன்றைப் பிடித்தவாறு அவளது அன்புக்குரிய வீரபாண்டி நின்று கொண்டிருந்தான். அவள் பயமத்தனையும் நீங்கிற்று. "அப்பாடா," என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே குதிரையிலிருந்து குதித்தாள். அவள் குதிப்பதற்கு முன் அவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான் இருங்கோவேள்.
"கேட்டீர்களா செய்தி?" என்றாள் துடிதுடிப்புடன்.
"என்ன?" என்றான் இருங்கோவேள்.
"ஒரு கொலை செய்து விட்டேன்!"
"ஏன்? யாரை? எப்போது?"
"இருங்கோவேளின் ஆளை! பாண்டிய மன்னரைச் சூழ்ச்சி செய்து ஏமாற்றிச் செழியனையும் அவருக்கு எதிரியாக ஆக்குவதற்கு ஓர் ஓலை தயாரித்திருக்கிறான் இருங்கோவேள்!"
"அப்படியா?"
"ஆமாம்! அந்த ஓலையைக் கொண்டு சென்ற வீரனைத் தான் நான் வழிழறித்துக் கொன்று ஓலையையும் கைப்பற்றியிருக்கிறேன்!"
"சபாஷ்! - அந்த ஓலை எங்கே?"
"இதோ இருக்கிறது - படித்துப் பாருங்கள்!"
இருங்கோவேள் அதைப் படிப்பது போல் பாசாங்கு செய்து விட்டுத் திரும்ப அவளிடமே கொடுக்கப் போனான்.
"வேண்டாம்; நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்!" என்று அவனிடமே கொடுத்தாள் முத்துநகை.
இருங்கோவேள் அந்த ஓலையைப் பத்திரமாகத் தன் மடியில்
வைத்துக் கொண்டான்.
தன்னைக் கொன்று புசிக்கப் போகிறவனின் கையிலேயே அமர்ந்து புறா தானியத்தைக் கொரித்துக் கொண்டிருக்கும்; சற்று நேரத்தில் பலிபீடத்தில் தலையை இழக்கப் போகும் ஆட்டுக்குட்டி, பூசாரியின் கையிலுள்ள பசும்புல்லை நுனிப்பல்லால் கடித்துச் சுவை பார்த்துக் கொண்டிருக்கும். புறாவுக்கும், ஆட்டுக் குட்டிக்கும் தங்களைக் கொல்லப் போகிறவர்களே உணவும் அளிக்கிறார்கள் என்ற ரகசியம் தெரியாது.
ஆனால் இருங்கோவேளுக்கு நன்றாகவே புரிந்திருந்தது, தன்னை ஒழித்துக் கட்டத் துடித்து நிற்பவளே தன் தோள்மீது மெய்மறந்து சாய்ந்திருக்கிறாள் என்ற உண்மை. யாரைத் தலையெடுக்க வொட்டாமல் செய்துவிட வேண்டுமென்று வீட்டை விட்டுப் புறப்பட்டாளோ அவனுக்கே இன்பவல்லியாக அவள் மாறிவிட்ட வித்தையை அவனும் நினைத்துப் பார்த்துச் சிரித்துக் கொண்டான்.
'நான்தான் இருங்கோவேள்!' என்று கூறிவிட்டால்? அதைக் கேட்டதும் அவள் நிலை என்ன ஆகும்? பாவம்! அவளைப் பார்க்கும்போது எவ்வளவு பரிதாபமாக இருக்கிறது! கோடையின் கொடுமை தாங்காது பாம்பு படமெடுத்தவாறு தன்னை மறந்து நிற்குமாம். அதன் நிழலிலே வந்து தவளை ஒண்டிக் கொள்ளுமாம். அதைப் போலத்தான் காதல் மகத்துவத்தால் தங்களை மறந்து இருவருமே ஒன்றுபட்டனர்.
முத்துநகையின் முகத்தையே அவன் பார்த்துக் கொண்டு நின்றான். ஒருவனைக் கொன்றுவிட்ட பிறகு ஏற்பட்ட பயத்தின் சாயல் அவள் முகத்தில் படர்ந்திருந்தது.
"என்ன பார்க்கிறீர்கள்" என்று இதழ்கள் சிறிது நடுங்க அவள் கேட்டாள்.
"ஒன்றுமில்லை. உன் இதழ்கள் உலர்ந்து விட்டனவே என்று பார்க்கிறேன்" என்று கூறியவாறு அவைகளை ஈரமாக்கினான்!
"அத்தான்!" என்று உச்சரித்தவாறு கண்களை மூடிக் கொண்டு அவனைக் கட்டித் தழுவிக் கொண்டாள்.
"என்ன இருந்தாலும் ஒரு எதிரியைக் கொலை செய்கிற அளவுக்கு உனக்குத் துணிவு ஏற்பட்டிருக்கக் கூடாது" என்று அவள் கன்னத்தோடு கன்னம் பதித்தான்.
தன் காந்த விரல்களால் அவன் முகத்தை வருடியவாறு, "ஏனத்தான் அப்படிச் சொல்கிறீர்கள்? கடமையை நிறைவேற்றும்போது ஒரு தமிழச்சியின் உள்ளத்தில் கோழைத்தனம் குறுக்கிடலாமா?" என வினவினாள் முத்துநகை.
"உன் வீரத்தை நான் இகழவில்லை. உன் செயலை நான் பாராட்டாமல் பேசவில்லை. உன் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருந்தால் பிறகு என் கதி?” என்று அவளைப் பார்த்துக் கேட்டான். அதைக் கேட்கும்போது அவன் கண்கள் கலங்கி விட்டன. ஆம், அவனை அவளிடம் ஒப்படைத்து விட்டான் என்பதற்கு அது எடுத்துக்காட்டு.
கலங்கிய அவன் கண்களைக் கண்டதும் முத்துநகைக்கு மகிழ்ச்சி பொங்கியது. அந்த மகிழ்ச்சியும் அவள் கண்களைக் குளமாக்கியது. மகிழ்ச்சி ஆரவாரத்தில் வளரும் காதல், நீர் வீழ்ச்சியின் அடியில் சிக்கிய மலர் போலக் கசங்கி விடுவதும் உண்டு. கண்ணீரில் மலரும் காதல், சேற்றில் மலரும் செந்தாமரையாகக் காட்சி தருவதும் உண்டு. இதில் இரண்டாம் வகைக் காதலை அவர்கள் வளர்த்தனர். அவர்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லை, காதலைப் பற்றிய மட்டில்!
ஆனால் அவன் தான் புயலானான். தூய்மையான காதலை வளர்த்துக் கொண்ட பிறகு அவளை ஏமாற்றுவது சரியா என்று எண்ணி எண்ணி ஏங்கினான். அவள் இருங்கோவேளுக்கு எதிரிதான். ஆனால் அவனுக்கு அருமைக் காதலி! அவளில்லாது இனிமேல் அவனால் உயிர் வாழ முடியாது. அதற்காக அவன் நாடிழந்து நகர்இழந்து அரச பதவியிழந்து ஆண்டி போல் காட்டில் உலவிக் கொண்டிருக்கவும் முடியாது. இப்படி ஓர் அமைதியற்ற உளைச்சேற்றில் மாட்டிக் கொண்டு அவன் திணறிக் கொண்டிருந்தான்.
வெறித்து ஆகாயத்தைப் பார்க்கிறான். வீரம் பிறக்கிறது கண்களில்! மீசைகள் பயங்கரமாகத் துடிக்கின்றன! நெஞ்சம் கனலாக மாறுகிறது. பூமியை உற்று நோக்குகிறான். இந்த மண்ணில் சிறு பகுதியும் தன் ஆட்சிக்கு உட்பட்டதில்லை என்று பெருமூச்சு விடுகிறான். மூச்சின் காற்றுப்பட்டுப் புழுதி பறக்கிறது. கால்களை ஓங்கி உதைக்கிறான் தரையில்.
விவரம் புரியாமல் முத்துநகை அவனை வியப்புடன் பார்க்கிறாள். அவனும் பார்க்கிறான்.
ஆவேசம் படர்ந்திருந்த முகத்தில் அன்பு ஒளி!
"கண்ணே!" என்று அவளை அணைத்துக் கொள்கிறான்; அவளிடம் உண்மையைச் சொல்லிவிட வேண்டும் போல் இருக்கிறது. நெஞ்சில் ஓங்கி ஓர் அடி விழுகிறது. 'பைத்தியக்காரா! என்ன காரியம் செய்யத் துணிகிறாய்? உண்மையைச் சொன்னால், காதல் காற்றில் பறந்துவிடும். காதலி காளியாகி விடுவாள். எச்சரிக்கையாக இரு!' என்ற உணர்வை அந்த அடி எழுப்புகிறது போலும்! பிறகுதான் தெரிகிறது அவனேதான் அவன் நெஞ்சில் அடித்துக் கொண்டிருக்கிறான்! குழப்பத்திலும் மௌனமாக இன்பத்திலும் சிறிது நேரம் கழிந்தது.
"நேரமாகிறது அத்தான்! தாமரை தேட ஆரம்பித்து விடுவாள். பிறகு ஆபத்து-நான் போகட்டுமா?"
"போவதா? இப்போது நீ போக முடியாது. உனக்கு ஒரு பெரிய வேலையிருக்கிறது."
"என்ன வேலை?"
"பாண்டிய நாட்டுப் படைகள் இருங்கோவேளைப் பிடிப்பதற்காக வருவது உனக்குத் தெரியுமல்லவா?"
"அதுதான் தெரியுமே. அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?"
"நான் உடனே போய் பாண்டிய நாட்டுப் படையை வழியிலேயே சந்தித்தாக வேண்டும். இருங்கோவேளின் மீது எப்போது பாயலாம், எப்படி அவனை வளைக்கலாம் என்பதற்கான நேரம், காலம் வழி முதலியவற்றைச் சொல்லி விளக்கிட வேண்டும்!"
"அப்படியானால் படையெடுப்பின்போது நான் எங்கேயிருப்பது?"
"நான் சொல்லப் போகிற வேலையை முடித்துவிட்டு என்னை வந்து பார்! அப்போது சொல்கிறேன். நீ என்னை சந்திக்கிற வரையில் படையெடுப்பு நடக்காது.!"
"அவ்வாறு முக்கியமான பணி எனக்கு என்ன இருக்கிறது?"
"இருங்கோவேளைப் பற்றிச் சில இன்றியமையாத ரசகியங்களைக் கரிகாலரிடம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கு நான் நேரில் கரிகால் சோழரைச் சந்தித்தாக வேண்டியிருக்கிறது. நான் எப்போது வந்தால் அவரைத் தனியாகச் சந்திக்கலாம் என்று செய்தி அறிந்து வர வேண்டும்."
"தேவையான விவரங்களை என்னிடம் கூறுங்களேன், நானே அரசரிடம் கேட்டு வருகிறேன்."
"இல்லை கண்ணே, நானும் அவரும் அதுபற்றி நீண்ட நேரம் பேச வேண்டியிருக்கிறது. அந்தச் சந்திப்பு நடந்தால்தான் இருங்கோவேளைப் பிடிப்பது சுலபமான காரியமாகும்."
"சரி, தங்கள் விருப்பப்படியே அவரைப் போய்ப் பார்க்கிறேன். அவர் சந்திப்பதற்குச் சம்மதம் தந்துவிட்டால் உங்களை நான் எங்கே கண்டு செய்தியைக் கூறுவது?"
"அதுதானா பெரிய காரியம்? நமது பழைய பாழ் மண்டபத்தில் உனக்காகக் காத்திருக்கிறேன். அதுதான் அந்த மண்டபம்-நீ குளித்தாயே? அந்தக் குளம்கூட இருக்கிறதே..."
"போங்களத்தான்!"
-என்று அவன் மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். அவளது அழகிய உச்சந்தலையில் 'இச்' சென்று முத்தமீந்தான் இருங்கோவேள். பகைவனின் வில்லுக்குக் கணையாகிவிட்ட அந்தப் பாவையை புன்னகையுடன் வழியனுப்பி வைத்தான்.
விழிவழியே நெஞ்சில் நுழைந்துவிட்ட வீரபாண்டியின். திருவுருவின் எழிலையெண்ணி மகிழ்ந்தவாறு அவன் இட்ட கட்டளையை நிறைவேற்றவும், சோழ நாட்டுக்கு ஏற்பட்ட பகையை வீழ்த்தவும்தான் பணியாற்றுவதாக தவறாகக் கருதிக் கொண்டு அவள் போய்க் கொண்டேயிருந்தாள்.