உள்ளடக்கத்துக்குச் செல்

ரோமாபுரிப் பாண்டியன்/12. மண்ணாசை

விக்கிமூலம் இலிருந்து

12

மண்ணாசை

வள் போகும் வழியையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு இருங்கோவேள், தன் படைவீரன் கொடுங்கோல் வீழ்ந்து கிடக்கும் இடத்திற்கு வந்தான். அவன் இறந்து கிடக்கும் கோரத்தைக் கண்டு மனம் உருகினான். சடலத்தைத் தூக்கித் தன் குதிரையில் வைத்துக் கொண்டு மரமாளிகை நோக்கி விரைந்தான்.

மரமாளிகையின் வாயிற்புறத்தில் காத்திருந்த தாமரை, அண்ணனையும், அவன் தூக்கி வரும் பிணத்தையும் கண்டதும் எதிரே ஓடி, "அண்ணா! என்ன நடந்தது?" என்று கேட்டாள்.

இருங்கோவேள், பதில் ஏதும் கூறவில்லை. எதிரே நின்ற வீரனைக் கூப்பிட்டு உடனே அமைச்சரை அழைத்துவருமாறு உத்தரவிட்டான். அமைச்சரும் வந்து சேர்ந்தார்.

"கொடுங்கோல் வழியில் கொல்லப்பட்டான். இதோ இருக்கிறது செழியனின் ஓலை! வெகு விரைவில் இதைப் பாண்டியநாட்டுப் படைத் தளபதியிடம் சேர்த்தாக வேண்டும்! மதுரையை விட்டுப் படை புறப்பட்டு நம்மை நோக்கி வருவதாகச் செய்தி கிடைத்திருக்கிறது. உம்! உடனே ஓலையை அனுப்புங்கள்; அத்துடன் நமது இருப்பிடத்தைச் சுற்றிக் கட்டுக்காவல் பலமாகட்டும். எதிரிப் படை வருகிறதா என்பதை அறிய நாலா பக்கங்களிலும் ஆட்கள் செல்லட்டும்" என்று உத்தரவு பிறப்பித்துவிட்டுத் தங்கையைப் பார்த்து "தாமரை! என்னோடு வா!" என்று அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

இருங்கோவேள் இட்ட உத்தரவுகளை உடனடியாக நிறைவேற்றும் வேலையில் அமைச்சர் ஈடுபட்டார். பாண்டியப் படைத் தளபதியைச் சந்திக்க ஓலை கொண்டு மற்றொரு வீரன் புறப்பட்டான்.

இருங்கோவேள். தாமரையைத் தனியாக ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்று, "யாரை எதிர்பார்த்தம்மா, வாயிற்புறத்தில் காத்திருந்தாய்?" என்று வினவினான்.

"யாரையுமில்லை அண்ணா!" என்று மழுப்பினாள் தாமரை.

"எல்லாம் எனக்குத் தெரியும். அந்த மருத்துவ வாலிபனுக்காகத் தானே காத்திருந்தாய்?"

"ஆம் அண்ணா! ஆம்! பச்சிலைகள் பறித்து வருவதாகப் போன வரைக் காணவில்லை. அண்ணிக்கு எப்போது மருந்து கொண்டு வருவார் என்று எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தேன்."

"ஒரு சோகமான செய்தி சொல்லுகிறேன் கேள்!"

"என்ன அண்ணா?"

"அவனைக் காட்டிலே ஒரு புலி கொன்று விட்டது."

"ஆ! உண்மையாகவா...? அண்ணா! அண்ணா!"

தாமரை மயக்கமடைந்து விழுந்துவிட்டாள். இருங்கோவேள் ஓடிச்சென்று அவளுக்குச் சிகிச்சைகள் செய்து மயக்கம் தெளிவித்து உட்கார வைத்தான். தாமரையின் கண்களில் தாரை தாரையாக நீர் கொட்டியது.

"எப்படியண்ணா அந்தக் கொடுமை நடந்தது?" அவளுக்குத் துக்கம் நெஞ்சையடைத்தது.

"என் கண் முன்னாலேயே அவன் கொல்லப்பட்டான். அவன் உடலைக் கூடக் கீழே எறியாமல் புலி தூக்கிக் கொண்டு ஓடி விட்டது"

"அய்யோ! அண்ணா!"

தாமரை. தலையைச் சுவரில் முட்டிக்கொண்டு கோவெனக் கதறி அழத் தொடங்கினாள்.

"தாமரை! என்ன இது? எத்தனையோ வீரர்களை -தளகர்த்தர்களைப் போரிலே இழந்துவிட்டு இங்கே உட்கார்ந்திருக்கிறோம். அப்போதெல்லாம் உன்னை இப்படி அழ வைக்காத நிகழ்ச்சி இப்போது மட்டும் நடந்துவிட்டதா என்ன? ஒரு சாதாரண ஊமை மருத்துவனுக்காகவா இப்படி அலறுகிறாய்?"

"அண்ணா! அண்ணா!" -தாமரையின் கதறல் அதிகமாயிற்று.

"நிறுத்து தாமரை நிறுத்து! முட்டாளே! நீ ஏன் அழுகிறாய் என்று எனக்குத் தெரியும்! அந்த மருத்துவன் உன்னை மயக்கி விட்டான்."

"அண்ணா!" தாமரை இருங்கோவேளிடம் ஓடிவந்து அவன் காலில் விழுந்தாள். "என்னை மன்னித்து..." என்று விம்மி விம்மி அழுதாள். வார்த்தையை முடிக்காமல் அவன் பாதங்களைக் கண்ணீரால் குளிப்பாட்டினாள்.

"அந்த மருத்துவன் யார் தெரியுமா? அவனிடம் உன் மனத்தைப் பறிகொடுத்தாயே பைத்தியக்காரி! அவன் நமது எதிரி! பகைவர்கள் அனுப்பிய ஒற்றன்!" "அப்படியானால் நீங்கள்தான் அவரைக் கொன்று விட்டீர்களா?" தாமரை திடுக்கிட்டுக் கேட்டாள்.

"நான் ஏன் அவனைக் கொல்ல வேண்டும்? அவனே செத்து விட்டான். புலி அடித்ததும் மருத்துவன் செத்துவிட்டான். ஆனால் அதில் ஓர் ஆச்சரியம் என்னவென்றால், புலியின் நகம் பட்டதும் மருத்துவன் மங்கையாக மாறிவிட்டான். மருத்துவன் செத்தான்; மங்கை தோன்றினாள்!"

"என்ன அண்ணா? எனக்கொன்றும் புரியவில்லையே!"

"புரியாதுதான்! ஆமாம் தாமரை; உன் அண்ணனுக்குப் போர்ப் புலியென்று ஒரு பட்டம் உண்டல்லவா? ஞாபகம் இருக்கிறதா உனக்கு?"

"அதற்கென்ன?"

"இந்த புலிதான் அந்த மருத்துவனைக் கொன்றது. கொன்றதும், மருத்துவன் மங்கையாக மாறிவிட்டான். இன்னும் உனக்குப் புரியவில்லையென்றால் சொல்கிறேன் கேள்? நீ யாரிடத்திலே உள்ளத்தைப் பறி கொடுத்திருக்கிறாயோ, அவன், நீ நினைப்பதுபோல ஆடவன் அல்ல, அழகான ஆரணங்கு.

அதுமட்டுமல்ல, எதிரிநாட்டு அரசர்களின் துணையோடு நம்மை அழிக்க வந்தவள். அவளை நான் கண்டுபிடித்து விட்டேன். ஆனாலும் தெரியாதவனைப் போல நடித்துக் கொண்டிருக்கிறேன். நீயும் அவளிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்."

"நீங்கள் சொல்வதை நம்பலாமா அண்ணா?"

"ஒரு தங்கையிடம் அண்ணன் இதைவிட அதிகமாக என்ன பேச முடியும்? அவள் எங்கும் போய்விடப் போவதில்லை. திரும்பி இங்குதான் வரப்போகிறாள். அப்போது நீயே அவளைச் சோதித்துப் பார்த்துக் கொள். நான் இதைச் சொல்வதற்கு காரணமே, ஏமாற்றத்தால் உன் உள்ளம் உடைந்து விடக் கூடாதே என்பதற்காகத்தான்! முடிந்தால் நானே அவள் யாரென்று உனக்கு நிரூபித்துக் காட்டுகிறேன். எப்படியாவது அந்தச் செழியனை இங்கிருந்து விடுவித்துக் கொண்டு போவதற்காகவே அவள் வந்திருக்கிறாள்."

அண்ணன் தந்த தகவலைக் கேட்டுத் தாமரை இடிந்து போனாள். இருப்பினும் அவளுக்கு ஓர் ஆறுதல், அதே சமயம் தாங்க முடியாத வெட்கம், ஒரு பெண்ணையா காதலித்தோம் - என்று.

தனக்கு எதிராக மரமாளிகையில் நடைபெறும் உரையாடல்களைப் பற்றிச் சிந்தனை கூட இல்லாமல் முத்துநகை தன் காதலன் தனக்கிட்ட கட்டளையை நிறைவேற்றுவதற்காகக் கரிகாலனின் மாளிகையில் நுழைந்தாள். கரிகாலனைத் தனியாகச் சந்தித்தால் அவனைக் கொன்று வீழ்த்திவிட்டுச் சோழ மண்டலத்தையே தன் காலடியின் கீழ்க் கொண்டு வரவேண்டுமென்று யார் மனக்கோட்டை கட்டியிருக்கிறானோ, அவனுக்குச் சாதகமாகச் சோழநாட்டு சுடர்க்கொடியாம் முத்துநகை சோழப் பேரரசனிடம் பேசுவதற்குப் போய்க் கொண்டிருந்தாள்.

எப்படியும் பாண்டியனுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி யாக வேண்டும் என்ற துடிப்பு கரிகாலனுக்கு மிகுந்திருந்தது. தன் நாட்டுக்கு வந்தவன் மட்டுமல்ல. தன் உயிரையே மீட்பதற்குக் காரணமாக இருந்த செழியனைக் காப்பாற்ற வேண்டியது தலையாய கடமையெனக் கொண்டான். அவன் நினைத்தால் இருங்கோவேள் எங்கே ஒளிந்திருந்தாலும் அந்த இடத்தோடு அவனை அழித்து ஒழித்துவிடமுடியும். அத்துணை ஆற்றலும், படை வலிமையும் பெற்றிருக்கிறான். ஆயினும் முத்துநகையின் கருத்துக்கு அவன் மதிப்பளித்துக் காத்திருந்தான்.

அதே போல் புலவர் காரிக்கண்ணனார் கூறிய வார்த்தைகளும் சிந்தித்துப் பார்க்க வேண்டியவைகளாகவே அவனுக்குத் தோன்றின. செழியனை உயிரோடு விடுவிப்பது தான் இலட்சியம் என்கின்றபோது ஆர்ப்பாட்டமான போராட்டம் அதற்குப் பயன்படாது என்பது, காரிக்கண்ணனார் அவனிடம் முதலில் எடுத்துச் சொன்ன வாதம். அதன்படி வேறு வழிகளில் முயற்சி எடுக்க முனையும்போது முத்துநகை குறுக்கிட்டுத் தானே அந்தக் கடமையை மேற்கொண்டு, திறம்பட முடிப்பதாக வாக்குறுதி அளித்து அவனை அமைதிப்படுத்திவிட்டாள். இதற்கிடையே பெருவழுதிப் பாண்டியன் செழியனை மீட்கும் முயற்சியில் இறங்கியிருப்பதும், அதற்கெனப் படை அனுப்பியிருப்பதும் இன்னும் கரிகாலனுக்குத் தெரியாது.

நிம்மதியற்ற உள்ளத்தோடு சோழன், தன் மாளிகையில் அங்குமிங்கும் உலவிக்கொண்டிருந்தான். உத்தரவிட்ட நேரத்தில் பாய்ந்து சென்று படையழிக்கும் சக்தி வாய்ந்த படைகளிருந்தும், சுட்டு விரல் அசைத்தால் எட்டுத் திக்கும் முரசுகொட்டி வெற்றிக்கொடி ஏற்றிக் காட்டும் வீரர்கள் காத்திருந்தும் எதுவும் செய்ய முடியாத நிலையில் சோழப் பெருவேந்தன் குழப்பமுற்றிருந்தான். இருங்கோவேளைப் பிணமாக்கிப் போடவேண்டுமென்றால் ஒரு நொடிக்குள் நடந்துவிடும்.

ஆனால் செழியன்? அவனை எப்படி மீட்பது ? கேள்விக் குறிகள் நெஞ்சத்தில் ஒன்று பத்து நூறாக முளைத்தன. ஏதாவது ஒரு முடிவு கண்டேயாகவேண்டும் என்று கரிகாலன் ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கி விட்டான். இளவயதில் அவன் இருந்த இடத்திற்குத் தீ மூட்டியபோது எப்படி வெளியேறுவது என அங்குமிங்கும் ஓடினானே, அப்போது கூட அவனுக்கு இவ்வளவு குழப்பமில்லை. பாண்டியனுக்கும் தனக்கும் ஏற்பட்டுள்ள நட்புரிமைக்குக் களங்கம் ஏற்படும் வகையில் எதுவும் நடந்துவிடக் கூடாதேயென்று மிகவும் அஞ்சினான். அப்படி நட்புரிமை கெடுவது தன் ஆட்சிக்குப் பலக்குறைவு என்று அவன் எண்ணி வருந்தவில்லை. தான் வளர்த்து வரும் பண்பாட்டுக்கு ஊறு நேரிடுமே என்றுதான் கவலைப்பட்டான்.

இவ்விதம் மனப் போராட்டத்தில் திண்டாடிக்கொண்டிருந்தவனின் முன்னே மெய்க்காப்பாளன் தோன்றி முத்துநகை வந்திருப்பதை அறிவித்தான். "அழைத்து வா!" என்று ஆவலுடன் கூறிவிட்டு, வாயிற்பக்கமே விழி வைத்துக் காத்திருந்தான்.

அவளும் மன்னனை வணங்கியவாறே எதிரே வந்து நின்றாள். அரசனின் கண் அசைவு மூலம் நோக்கத்தைப் புரிந்துகொண்ட மெய்க் காப்பாளனும் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். அவளை உட்காரச் சொல்லிவிட்டு, தானும் எதிரே உட்கார்ந்து அவள் என்ன சொல்லப் போகிறாள் என்பதையே ஆவலுடன் எதிர்பார்த்தான் மன்னன்.

"பாண்டியர்கள் படை, இருங்கோவேளை எதிர்த்துப் புறப்பட்டு விட்டது மன்னவா!"

"என்ன? பாண்டியப் படையா? இருங்கோவேளை எதிர்த்தா?" -கரிகாலன் வியப்பிலாழ்ந்தான்.

"ஆம் மன்னவா, பாண்டிய மன்னரின் ஒற்றர் ஒருவர் மூலம் அறிந்து கொண்டேன்."

"அப்படியானால் செழியனை உயிரோடு மீட்கும் உத்தேசம் இல்லையா?"

"செழியனை மீட்பதற்காகவே படையெடுப்பாம்! ஆனால் அந்தச் செய்தி இருங்கோவேளுக்குத் தெரிந்து விட்டது. அவன் எச்சரிக்கையாக இருக்கத் திட்டம் தீட்டி விட்டான்."

"இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?"

"எல்லாம் இந்த வேடத்தின் மகிமையால்தான். அன்று தங்களிடம் தெரிவித்தவாறு இருங்கோவேளின் கோட்டைக்குள்ளேயே நுழைந்து விட்டேன். செழியன், இருங்கோவேளின் சிறையிலேதான் அடைக்கப் பட்டிருக்கிறார். பாண்டிய மன்னருக்குச் செழியன் எழுதியதுபோல் ஓர் ஓலை எழுதி அதை ஒரு வீரன் வாயிலாக இருங்கோவேள் அனுப்பி வைத்தான்!"

"என்ன ஓலை அது?" -கரிகாலன் ஆச்சரியத்தோடு கேட்டான்.

"செழியன், இருங்கோவேளின் நண்பனாகிவிட்டதாகவும், பாண்டிய மன்னன் செழியனைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லையென்றும் செழியனைக் கொண்டே எழுதப்பட்ட ஓலையாகும் அது. முக்கியமாகப் பாண்டியர் படையெடுப்பைத் தடுத்து, அவர்களைத் திரும்பிடச் செய்யவே அந்த ஏற்பாடு. நல்ல வேளையாக அந்தச் சூழ்ச்சியில் இருங்கோவேள் வெற்றியடையவில்லை. நான் குறுக்கிட்டு ஓலையைக் கைப்பற்றிவிட்டேன்!"

"அப்படியா! நீயா?"

"ஏன் மன்னா வியப்பு? ஓலையை தாங்கிச் சென்றவனை நானே கொன்று கிடத்தி விட்டு அந்த ஓலையையும் பிடுங்கிக் கொண்டேன்!"

"எங்கே அந்த ஓலை?"

"அது பாண்டிய நாட்டு ஒற்றர் வீரபாண்டியிடம் இருக்கிறது அரசே! சொல்ல மறந்து விட்டேனே, அந்த வீரபாண்டியைப் பற்றி! மிகவும் நல்லவர். ஒப்பற்ற வீரர். பாண்டிய நாட்டுக்காகத் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் இருங்கோவேளைச் சுற்றிக் கொண்டு திரிகிறார். பாவம், ஒரு சாதாரண விறகு வெட்டியைப் போலக் காடுமேடெல்லாம் அலைகிறார்; கஷ்டப்படுகிறார்!"

"அப்படியா? மிக்க மகிழ்ச்சி! ஆனால் சோழ மண்ணில் களங்கம் இருத்தலாகாது-களை முளைத்தலாகாது - என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரியும் சோழர்குடித் திலகமாம் உன்னை விட உயர்ந்தவனோ அந்த வீரபாண்டி? இருக்க முடியாது. உன் கடமையுணர்வும் தியாக உள்ளமும் யாருக்கும் இருக்க முடியாது!"

"தங்கள் பாராட்டுதலுக்கு நன்றி வேந்தே! இந்த ஊக்கம் நிறைந்த மொழிகள் மேலும் மேலும் என்னை உற்சாகப்படுத்தட்டும். எனக்கு நம்பிக்கையிருக்கிறது, எப்படியும் செழியனை மீட்டு வந்து விடலாம் என்று! அந்த வகையில் வீரபாண்டியின் துணையும் நிரம்ப இருக்கிறது.

"முத்துநகை! நீ என்ன திட்டம் போட்டிருக்கிறாய் என்றே எனக்குப் புரியவில்லை. பாண்டிய நாட்டுப் படைகள் இருங்கோவேளை வளைத்துக் கொள்வதால் இருங்கோவேள் பிடிபடுவான். ஆனால் செழியனைக் கொன்றுவிட்டால் என்ன செய்ய இயலும்? பொதுவாக எனக்கு இந்தப் படையெடுப்பு அவ்வளவு திருப்திகரமான திட்டமாகத் தெரியவில்லை. இதில் பாண்டிய மன்னர் என்னைக் கலந்து கொள்ளாதது ஏன் என்றும் தெரியவில்லை. செழியன் விஷயத்தில் நான் அலட்சியமாக இருந்துவிட்டதாகக் கருதியிருக்கிறாரோ என்னவோ?"

"அப்படியொன்றும் இருக்காது. ஆனால் ஒன்று. இங்கு நான் வந்ததே எதற்குத் தெரியுமா? பாண்டிய மண்டலத்து ஒற்றர் வீரபாண்டி மிக அவசரமாகத் தங்களைத் தனியே சந்திக்க வேண்டுமாம்! அது முடியுமா என்று தங்களைக் கேட்டுப் போகவே வந்தேன்."

"என்னை எதற்காகச் சந்திக்க வேண்டுமாம்?"

"படையெடுப்பைப் பற்றித்தான் இருக்குமென்று நினைக்கிறேன்; தனிமையில் சந்தித்துப் பேச வேண்டுமென்று கூறினார்."

"ஓ! பேசலாமே - நான் தயாராயிருக்கிறேன். ஒற்றர் எப்போது வேண்டுமானாலும் வரலாம்."

"எங்கே அவரை அழைத்து வருவது?"

"இங்கேயே அழைத்து வரலாம். உங்களை மெய்க்காப்பாளன் வரவேற்பான். அதன் பிறகு நான் தங்கியிருக்கும் தனியிடத்துக்கு ஒற்றர் அழைத்து வரப்படுவார்."

"அப்படியானால் இன்றிரவே அழைத்துவர முயல்கிறேன். இல்லையேல் நாளைக்கு...?"

"தாராளமாக! இதோ! இப்போதே மெய்க்காப்பாளனுக்கும் அறிவித்து விடுகிறேன்" எனக் கூறியவாறு கரிகாலன் கையொலி செய்ய, மெய்க்காப்பாளன் எதிர் வந்து நின்று வணங்கினான்.

"இன்றோ, நாளையோ -முத்துவுடன் இன்னொரு ஆள் வருவார். என்னிடம் அழைத்து வர வேண்டும்" என்று அவனுக்கு உத்தரவிட்டு விட்டு முத்துநகையைப் பார்த்து "உன்னை எப்படிப் புகழ்வது என்றே தெரியவில்லை. திறமையும் பயிற்சியும் பெற்ற தலைசிறந்த ஒற்றர்களுக்குக் கூட உன் ஆற்றல் வருமா என்பது சந்தேகம்" என்று பாராட்டினான் பூம்புகார் மன்னன். அரசரின் புன்னகையைப் பரிசாகப் பெற்று பெருமிதங் கொண்ட முத்துநகை, விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டாள்.

வீரபாண்டியை அழைத்துவந்து கரிகாலரிடம் சந்திக்க வைப்பதற்காக உற்சாகத்துடன் கிளம்பினாள். தன்னை அறியாமல் ஒரு பெரும் சதிக்குத் தான் உடந்தையாகி விட்டோம் என்பது அவளுக்குத் தெரியவில்லை. அவள் மாளிகைத் தாழ்வாரத்தைக் கடந்து வெளியேறும்போது எதிரே புலவர் காரிக்கண்ணனார் வேகமாக வந்து கொண்டிருந்தார். சென்றவள் தந்தையையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் நீர் கலங்கிற்று.

"அப்பா!" என்று கூவிட இருந்தாள். சிரமப்பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டாள். புலவருக்குத் தன்னைக் கடந்து செல்வது தன் மகள்தான் என்று தெரிந்திருந்தால், "அம்மா! முத்துநகை! என் கண்ணே!" என்று ஓலமிட்டுப் புலம்பி அழுது துடித்திருப்பார்; துவண்டிருப்பார். சற்று நேரம் அவரையே பார்த்துக்கொண்டே இருந்து விட்டு அவள் போய்விட்டாள், கண்ணீரைத் துடைத்துக் கொண்டு!

புலவர், கரிகாலனுக்கு நேரே போய் நின்றதும் அவனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. காரணம், புலவரின் முகத்தில் அவன் கண்ட மாறுதல்தான்! மகளைக் காணாத சோகத்தால் புலவர் முகம் மாறி இருந்ததை அவன் இதற்கு முன் கண்டிருக்கிறான். ஆனால் இப்போது அவன் காணும் அவரது முகத்தில் வேதனையைவிடக் கோபமே மிகுந்திருக்கக் கண்டான்.

"புலவரே!" என்றான் ஆவலுடன்!

"சோழ மண்டலத்தின் கீர்த்தி குப்பை மேடாகி விட்டது!" என்று கத்தினார் புலவர்.

"என்ன சொல்கிறீர்கள்?"

-கரிகாலன் மிகுந்த ஆச்சரியத்துடன் புலவரிடம் நெருங்கி வந்து அவர் உதடுகளின் அசைவையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான்.

"வீரத்தை நிலைநாட்டுவது பெரிதில்லை. செல்வத்தைக் குவிப்பதும் பெரிதில்லை; உலகெங்கும் புகழ்க்கொடி நாட்டுவதும் பெரிதில்லை; ஆனால் மன்னவா! வாய்மையைக் காப்பாற்றுவதே சிரமமான வேலை! அதைக் காப்பாற்றத் தவறிவிட்டது சோழப் பேரரசு!"

"விவரமாகச் சொல்லுங்கள் புலவர் பெருமானே!" -கரிகாலன் ஆத்திரத்துடன் பதிலை எதிர்பார்த்தான்.

"செழியனை மீட்டுத் தருவது நமது பொறுப்பு என்று பாண்டியனிடம் சொல்லியிருக்கிறீர்கள் அல்லவா?"

"ஆமாம், சொன்னேன்."

"அதற்காக இதுவரை இங்கு நடைபெற்ற முயற்சி என்ன?" கரிகாலன் மௌனமாக இருந்தான்.

"பாண்டியன் பெருவழுதி சோழரின் வார்த்தைக்கு மதிப்பு வைத்தது குற்றம் இல்லையா?"

கரிகாலன் பேசவில்லை.

"எந்தப் படையெடுப்பு வேண்டாமென்று நான் தடுத்தேனோ அந்தப் படையெடுப்பு முறையால் செழியனை மீட்க வேண்டிய அவசியம் பாண்டியனுக்கு ஏற்பட்டு விட்டது. சோழர், நிச்சயம் செழியனை மீட்கும் காரியத்தில் ஈடுபடுவார் என்றுவேறு நான் பாண்டியருக்கு உறுதியளித்திருந்தேன். இப்போது என் உறுதியும் காற்றில் பறந்துவிட்டது. யாரால் மன்னா? யாரால்? எல்லாம் தங்களால்தான்!"

கரிகாலன் புலவரையே பார்த்துக் கொண்டிருந்தான். வாய் திறக்கவில்லை.

"செழியனை மீட்கப் படையெடுப்புமுறை தேவையில்லை என்று நானே கூறினேன்; இப்போது நானே பாண்டியனின் திட்டத்துக்குத் தலை அசைத்தேன்."

கரிகாலனின் உதடுகள் அசைந்தன.

"ஏன்?"

“ஏன் என்றா கேட்கிறீர்கள் மன்னா? மிகவும் வேடிக்கைதான்! நமக்கு அறவே அக்கறையில்லை. பாண்டியராவது அவரது சொந்த முயற்சியில் வெற்றியைக் காணட்டுமே என்றுதான் அவர் விருப்பத்துக்கு இணங்கினேன்"

"பாண்டியனுக்கு என்மீது வருத்தம் அல்லது கோபம். அதனாலே என்னைக் கலந்து கொள்ளாமல் இருங்கோவேள் மீது படையெடுக்கிறார். இல்லையா?"

"அப்படியும் இல்லை. சோழ மன்னர் என்ன செய்வதென்று புரியாத நிலையில் குழப்பமடைந்து இருக்கிறார். போரில் வென்ற நாட்டைத் திரும்ப இருங்கோவேளிடம் கொடுத்து அதற்குப் பதில் ஒரு சாதாரண உயிரை மீட்பது என்பது முடியாத காரியந்தான். இந்நிலையில் சோழருக்குத் தொல்லை கொடுக்காமல் நாமே செழியனை மீட்க முயலுவோம் என்று துணிந்துவிட்டார். அவ்வளவுதான்!"

"அவசரக்காரர்!"

"அலட்சியத்தைவிட அவசரம் எவ்வளவோ மேல் என்பேன் நான்!"

"அலட்சியம் அவசரம் இரண்டுக்குமிடையே அமைதியோடு தெளிவான காரியங்களில் ஈடுபடுதல் என்ற குணமும் இருக்கிறது. புலவரவர்களே! தங்களுக்குத் தெரியாதவைகளையா நான் கூறப் போகிறேன்?"

"என்ன கூறினாலும் சரி; நம் நாட்டுக்கு வந்து நம் உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் அல்லற்படும் ஒரு வீரனைப்பற்றிக் கவலைப் படாமல் இருப்பது பண்பே அல்ல! நல்லவர்களுக்கு அழகே அல்ல! இதற்குப் பெயர்தான் கடைந்தெடுத்த தன்னலம்!"

"போதும்! புலவரே, போதும்! இந்தக் கரிகாலனைத் தாங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. செழியனை மீட்பதற்காக நான் எத்தகைய முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன் என்பது தங்களுக்குத் தெரியாது. தாங்கள் இங்கு வரும்போது தங்களைக் கடந்து சென்றானே ஓர் இளம் வீரன். அவனைப் பார்த்தீர்களா?"

"ஆமாம் பார்த்தேன்"

"யார் அவன்?"

"ஒற்றன் என்றீர்கள் அன்று!"

"ஒற்றன் மட்டுமல்லன், காணாமற்போன உங்கள் மகள் முத்துநகையும் கூட!"

"ஆ! என்ன! என் மகளா! முத்துநகையா?"

"ஆமாம்! அவளைக் கேட்டுப் பாருங்கள்! செழியனை மீட்பதற்கு நான் எவ்வாறெல்லாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்று. முத்துநகை மட்டும் குறுக்கிடாதிருந்தால் இருங்கோவேளின் தலை எப்போதோ கீழே விழுந்திருக்கும். உங்கள் மகள் அளித்த உறுதியின் பேரில்தான் செழியனை எப்படியும் தந்திரமாக மீட்டுவிடலாம் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறேன். அதற்குள் அவசரப்பட்டு விட்டார் பாண்டியர்!"

"மன்னவா! எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என் மகள் எப்படி இங்கு வந்தாள்? காணாமற் போன என் கண்மணி இங்குதான் இருக்கிறாளா! நான் எவ்வளவு பேறு பெற்றவன்! ஆகா! என்னைப் போன்ற புகழுடையவன் யாருமே இருக்க மாட்டார்கள். இப்படியொரு நாட்டுப் பற்றுள்ள செல்வத்தையா நான் மகளாகப் பெற்றிருக்கிறேன்? அடடா! இந்த வார்த்தைகள் என் செவிகளில் செந்தேனாகப் பாய்கின்றனவே! அரசே! என்னை மன்னித்து விடுங்கள்! அவசரப்பட்டு, ஆத்திரத்தில் ஏதோ கூறிவிட்டேன்" என்று ஆனந்தக் கண்ணீர் பொங்க நின்றார் காரிக்கண்ணனார்.

"பரவாயில்லை புலவர் பெருமானே! தாங்கள் ஒன்றும் தவறு செய்து விடவில்லையே! மன்னரின் கடமையை எடுத்துரைத்தீர்கள்; அவ்வளவு தானே! எனக்கிருக்கும் வருத்தமெல்லாம் என் நண்பர் பாண்டியர் என்னைக் கலந்து கொள்ளாமல் இருங்கோவேள் மீது படையெடுத்து விட்டாரே என்பதுதான்!" என மிகக் கவலையுடன் கூறினான் கரிகாலன்.

"இல்லை மன்னா! தங்களுக்குத் தொல்லை தரக்கூடாது என்பதே அவர் எண்ணம். இருப்பினும் இப்போதும் ஒன்றும் முழுகிவிடவில்லை. தாங்கள் என்ன சொல்கிறீர்களோ அதன்படி அவரை நடக்கச் செய்வது என் பொறுப்பு!" என்று புலவர் கடமை உணர்ச்சியுடன் பதில் கூறினார்.

"இருங்கோவேளை மடக்குமுன் நானும் பாண்டிய நாட்டுத் தளபதியும் சந்திப்பது நல்லது. பாண்டிய நாட்டு ஒற்றன் கூட என்னைச் சந்திப்பதாக முத்துநகையிடம் கூறி அனுப்பியிருக்கிறான். அது போலவே தளபதியைச் சந்திப்பது முக்கியம் என்று கருதுகிறேன்"

"அதற்கென்ன? இப்போதே நான் போகிறேன். படை வரும் வழியில் தளபதி நெடுமாறனைச் சந்தித்துத் தங்களிடம் அழைத்து வருகிறேன். நேரில் பேசி ஆக வேண்டியவைகளைச் செய்யுங்கள்."

"அதுவே நலம். புலவர் பெருமானே! தாங்கள் உடனே புறப்படுங்கள்; தாங்கள் போனால்தான் அவர்களிடம் விளக்கமாகப் பேச முடியும். இல்லையேல். 'எனக்கு ஆணையிடச் சோழன் யார்?' என்று கேட்டாலும் கேட்டு விடுவார்கள்!"

"அய்யோ! அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். எனக்கு நேரே தங்களைப் பற்றி ஒருவன் அப்படிப் பேசி தப்பிவிடுவானா? நான் கற்ற தமிழாலேயே அவனைக் கொன்று விடுவேன், மன்னா கொன்று விடுவேன்!"

"மகிழ்ச்சி, புலவர் பெருமானே! விரைவில் தளபதி நெடுமாறனுடன் வந்து சேருங்கள்!"

"அரசே ! அதற்குள் மீண்டும் என் முத்து இங்கு வந்தால் நான் வரும் வரையில் எங்கும் போகவிடாதீர்கள்! இங்கேயே..."

"இருக்க வைக்கிறேன். சென்று வாருங்கள்!"

புலவர் விடைபெற்றுக் கொண்டு புறப்பட, சோழன் ஏழடி அவர் பின்னே நடந்து சென்று அவரை வழியனுப்பி வைத்தான்.