ரோமாபுரிப் பாண்டியன்/13. நெடுமாறன் தடுமாற்றம்
13
நெடுமாறன் தடுமாற்றம்
புகார்த் தலைநகரத்துக்குப் பத்து கல் தொலைவிலுள்ள பெருவெளியொன்றில் பாண்டிய நாட்டுப்படை வீரர்கள் இறங்கி தங்குவதற்கேற்ற கூடாரங்களை அமைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர்; தளபதி நெடுமாறன், தன் துணைத் தளபதியிடம் போர்முறைகள் எப்படியெப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி விவாதித்துக் கொண்டிருந்தான். அவன் தங்கியிருந்த முகப்பில் மீனக்கொடி கம்பீரமாகப் பறந்து கொண்டிருந்தது. கூடாரம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் போர்ப்பரணி பாடியவாறு ஆடி ஓடி மகிழ்ந்தனர். போர்ச் செய்தி கேட்டதும் அவசர அவசரமாகப் போர்க் கருவிகளைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்தவர்கள், அந்தக் கருவிகளை மெருகேற்றிக் கூர்மையாக்கிக் கொண்டிருந்தார்கள். சமையற் கலையிலும் வல்லவராயிருந்த சில வீரர்கள் உணவு தயாரிக்கும் அலுவலில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
முரசுபோல் காணப்படும் பாத்திரங்களில் ஊற்றி வைக்கப்பட்டிருந்த கள்ளை ஒரு வீரன் எல்லா வீரர்களுக்கும் அளவோடு வழங்கிக் கொண்டிருந்தான். அதை அருந்தியவர்கள் புது ஊக்கமும் அருந்தாதவர்கள் அருந்தப் போகிறோம் என்ற புது உற்சாகமும் பெற்றுக் காட்சி தந்தார்கள்.
போராட்டக் களிப்பில் மூழ்கியிருந்த அவர்கள் எல்லாரும் திடுக்கிட்டுத் திரும்பும் அளவுக்குக் குதிரையொன்றின் குளம்படி ஓசை பாசறையை நோக்கி வந்து கொண்டிருப்பதை உணர்ந்தனர். வீரர்களின் கரங்கள் அவர்களை அறியாமலேயே வாட்களை ஏந்திக் கொண்டன. ஒரே அமைதி! ஒலி வரும் திக்கிலேயே படை வீரர்களின் பார்வை நின்றது. தளபதி நெடுமாறன் தனது கூடாரத்தை விட்டு எழுந்து வெளியே வந்து நின்றான். தங்கள் வாளுக்கு ஏதோ ஓர் இரை வருகிறது என ஓவ்வொரு வீரரும் எண்ணிக் கொண்டு காத்திருந்தனர்.
ஓசை மிக அருகே வந்துவிட்டது. மேலும் கூர்மையாக அனைவரும் கவனித்தனர். குதிரை, தளபதி நெடுமாறனை நோக்கி வந்து கொண்டிருந்தது. சந்தேகமில்லை. அதன் மீது அமர்ந்திருப்பவன் வேளிர்குடியைச் சேர்ந்த வீரன்தான். அவனைக் கண்ட பாண்டிய நாட்டார் வாளுருவிப் பாய்ந்தனர். வீரன், குதிரையை விட்டுக் கீழே குதித்தான். குதித்தவன் சுற்றிலும் பார்த்துவிட்டுச் சிரிக்க ஆரம்பித்தான். "ஒருவனை எதிர்க்க இத்தனை வீரர்களா?" இதைக் கேட்டுவிட்டு மறுபடியும் சிரிக்கத் தொடங்கினான்.
ஆத்திரமடைந்த ஒரு பாண்டியநாட்டு வீரன், "ஏய் நிறுத்து! சிரித்தது போதும் ! பாம்பை அடிக்கப் பத்து பேர் கூடுவது தான் வழக்கம்! அது பயத்தால் அல்ல - பாம்பு நழுவி விடுமோ என்ற சந்தேகத்தால்!" எனக் கூறியவாறு வாளை ஓங்கினான்.
உடனே தளபதி நெடுமாறன் அவனைத் தடுத்து நிறுத்தி, குதிரையில் வந்தவனை அருகே அழைத்து, "நீ யார்? எங்கு வந்தாய்?" என்று விசாரித்தான்.
"நான் வேளிர்குடி வீரன்; இருங்கோவேள் மன்னரே என் தலைவர்! மன்னரின் புதிய நண்பர் செழியன் என்னைத் தங்களிடம் அனுப்பினார்."
குதிரை வீரனின் பதில் நெடுமாறனைத் திகைப்பில் ஆழ்த்தியது.
"என்ன வீரனே! என்ன சொல்கிறாய்? மன்னர் இருங்கோவேளின் நண்பர் செழியனா? ஓகோ... போர் முறையில் நீங்கள் கண்டுள்ள புதிய முறை இதுவோ? மிக மிக வேடிக்கை. மேலும் சொல் கேட்போம்!" எனக் கேலி மொழிந்தான் நெடுமாறன்.
"வார்த்தைகளைச் செலவிடுவானேன்? இதோ இருக்கிறது செழியன் தந்த ஓலை. இதைப் பாண்டிய மன்னரிடம் கொடுக்க வேண்டுமென என்னை அனுப்பினார். வழியில் தங்களைச் சந்தித்தது நல்லதாயிற்று. தாங்களே இதைப் பாண்டிய மன்னரிடம் சேர்த்துவிடுங்கள்" எனக் கூறியவாறு ஓலையை எடுத்துத் தளபதியிடம் நீட்டினான் அவன்.
தளபதி, ஓலையை ஒரு முறைக்கு இரு முறை படித்தான். பின்னர், தன்னையே நம்பாமல் தன்னுடன் இருக்கும் துணைத் தளபதிகளிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னான். தளபதிகள் ஒருவர் முகத்தை ஒருவர் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டனர். நெடுமாறன் முகம் சிவப்பேறியது. அவன் மீசைக் கற்றைகள் துடித்தன. விழிகளில் கனல்! இடக் கரத்தில் வலக்கரத்தால் ஓங்கிக் குத்திக் கொண்டு அங்குமிங்கும் நடந்தான். "துரோகி! செழியன் துரோகி!" எனப் பலங்கொண்ட மட்டும் கத்தினான். எதிரி நாட்டு வீரன் எதிரே நிற்கிறான் என்பதையும் மறந்துவிட்டு உறுமினான். நெடுமாறனின் ஆவேசத்தையும் துணைத்தளபதிகளின் கலக்கத்தையும் வெகு அலட்சியமாகப் பார்த்துக் கொண்டிருந்த வேளிர்குடிவீரன், "நான் வருகிறேன். வணக்கம்" எனக் கூறியவாறு குதிரையில் ஏறி உட்கார்ந்து, அந்த இடத்தை விட்டு வேகமாகப் பறந்து சென்றான். அந்தக் குதிரையின் குளம்படிச் சத்தத்துடன் நெடுமாறனின் இதயமும் போட்டி போட்டுக் கொண்டு முழங்கியது.
"சே! நினைக்கவே முடியவில்லையே! செழியன், ஒரு பெண்ணின் கண்வீச்சில் மயங்கிப் பாண்டிய மண்டலத்தையே காட்டிக் கொடுத்து விட்டானே!" என்று நெடுமாறன் அதிர்ச்சி அடைந்த தொனியில். புலம்பும் தோரணையில், பேச ஆரம்பித்தான். தளபதியின் கோபத்தினூடே யாரும் எதுவும் குறுக்கிட்டுப் பேசுவது சரியல்ல என்று கருதி எல்லோரும் அந்த இடத்தை விட்டு ஊமைகளைப் போல் ஒதுங்கினர்.
நெடுமாறன் மட்டும் தனியே நின்று வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான். தங்கள் வாளுக்கு வந்த வேலை போய்விடுமோ என்ற கவலையில் வாளின் உறைகளைத் தடவிப் பார்த்துக் கொண்டு நின்றனர் வீரர்கள்.
அப்போது தொலைவில் பள்ளத்தாக்கான பகுதியிலிருந்து யாரோ வருகின்ற அடையாளம் தெரிந்தது. முதலில் ஒரு கொடி மட்டும் தெரிந்தது. கொடியை உற்றுக் கவனித்தனர். சோழ நாட்டுப் புலிக்கொடிதான் அது.
புலிக்கொடி அங்கு வரவேண்டிய அவசியம்?
நெடுமாறனுக்கு மீண்டும் குழப்பம். ஆனால் அந்தக் குழப்பம் நீண்ட நேரம் நீடிக்காமல் புலிக்கொடி மிக அண்மையில் வந்து விட்டது. குதிரை வீரர்கள் புடைசூழ அழகிய சிறுதேர் ஒன்றில் காரிக்கண்ணனார் அமர்ந்து பாசறை நோக்கி வந்து கொண்டிருந்தார். வருவது புலவர் பெருமான் என அறிந்த தளபதி நெடுமாறன் எதிர் கொண்டழைத்துக் கை நீட்டித் தேரினின்றும் இறங்கச் செய்து மரியாதையுடன் பாசறைக்குள் அழைத்துச் சென்று உட்கார வைத்தான்.
புலவர், தளபதிகளின் முகத்தையெல்லாம் பார்த்து விட்டு, "ஏன் எல்லாருடைய முகங்களிலும் ஒரு மாற்றம்? ஒரு வேளை போர் வெறியால் விளைந்த மாற்றமோ?" என ஆவலுடன் கேட்டார்.
"அப்படியொன்றுமில்லை, புலவர் பெருமானே! போர் வெறி இது போன்ற மாற்றங்களை அளிப்பதில்லை. போர்க் களத்திலே முதுகிலே வேல்பட்டு வீழ்ந்தவனின் தாயின் உள்ளம் படும் வேதனையைவிட அதிகமானது இப்போது எமதுள்ளம் படும் வேதனை!" - நெடுமாறனின் பதிலைக் கேட்ட காரிக்கண்ணனார் திடுக்கிட்டார்.
"என்ன? என்ன? என்ன சொல்கிறீர்கள்?"
"தமிழ் வளர்க்கும் தங்களிடம் மறைப்பதற்கு என்ன இருக்கிறது? யாரை மீட்பதற்காக இந்தப் போர் நடைபெறுகிறது என்று தங்களுக்குத் தெரியாதா என்ன?"
"புரியும்படி சொல்லுங்கள்."
"எதைச் சொல்வது புலவர் ஏறே! வேலினும் சிறந்தது பெண்கள் விழியென்று கவிதைகள் புனைவீர்கள்; படித்திருக்கிறோம். ஆனால் நாட்டைவிடச் சிறந்தவர்கள் பெண்கள் என்று கள்வெறியேறிய கவிஞன் கூடச் சித்தரித்ததில்லை. அப்படிச் சித்தரித்தால் அவன் தலை தப்புவது மில்லை. ஆனால், இங்கு வியப்புக்குரிய வேதனைச் செய்தி கேட்கிறோம் புலவரே! யாருக்காகப் பெருவழுதிப் பாண்டியர், ஊணுறக்கமின்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருகிறாரோ - யாருக்காகப் பல வீரர்கள் களம் புகுந்து தங்கள் உயிர் கொடுக்கவும் தயாராக வந்திருக்கிறார்களோ - அந்தச் செழியன் துரோகியாகி விட்டான்! கடைந்தெடுத்த கோழையாகி விட்டான்! பகைவனின் நண்பனாகி விட்டான்! அங்கேயிருக்கிறாள் ஒரு பெண். அவளை விரும்பிப் பிறந்த மண்ணையும் மறந்து விட்டான்!"
நெடுமாறன் எரிமலைபோல் குமுறிக் கொண்டிருந்தான்! புலவருக்கு ஒன்றும் புரியவில்லை.
"என்னால் இதை நம்ப முடியவில்லையே!" என்று கூறிய புலவரிடம் "இதோ இதைப் படித்துப் பாருங்கள்!" என்று ஓலையை அளித்தான் தளபதி.
ஓலையைப் படித்த புலவரின் கண்களிலிருந்து முத்து முத்தாக உதிர்ந்த கண்ணீர் ஓலையை நனைத்தது. விம்முங் குரலில் பேசினார். "பாண்டிய நாட்டு வீரர்களே! செழியன் துரோகியென்று இன்னும் என்னால் நம்ப முடியவில்லை!" என்று கத்தினார். “எழுத்தாணியின் கூர் மழுங்கியிருக் கிறதா இல்லையா என்பது ஓலையில் எழுதத் தொடங்கியதுமே புரிந்துவிடும். அது போலவே மனிதன் நல்லவனா கெட்டவனா என்பது அவனுடன் பழகத் தொடங்கும்போதே தெரிந்துவிடும். நான் அறிந்த வரையில் செழியன் துரோகியென்று என்னால் ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை." என்று புலவர் விளக்கம் கூறினார்.
"எழுதும்போது இடையிலே கூட எழுத்தாணியின் கூர் மழுங்கிவிடுவதுண்டு. நல்ல மனிதனும் சூழ்நிலையால் கெடுவதுண்டு; செழியன், அதற்கு விதிவிலக்காக இருக்க முடியாதே புலவரே!" - இது நெடுமாறனின் பதில்.
"நான் ஏன் குழப்பமடைய வேண்டும்? முதலில் நான் வந்த வேலையைச் சொல்லிவிடுகிறேன். சோழ மன்னர் என்னை இங்கு அனுப்பினார்; போர் துவங்குவதற்கு முன்பு தங்களுடன் பேச வேண்டுமென்று அவர் விரும்புகிறார். இப்போது போர் துவங்குவது பற்றியே சந்தேகம் வளருமளவுக்கு நிலைமை ஏற்பட்டிருக்கிறது. ஆகவே இந்த வேளையில் தாங்கள் கரிகாற் சோழரைச் சந்திப்பது எல்லா வகையிலும் நன்மை பயப்பதாகவே அமையும்!" என்று புலவர் வந்த காரியம் பற்றிய பேச்சைத் தொடங்கினார்.
"சோழரைச் சந்திப்பதா? பாண்டிய மன்னரின் அனுமதி இல்லாமலா?..." நெடுமாறன் சிந்தனையிலாழ்ந்தான்.
"நட்புரிமையுடன் கூடிய இரு நாடுகள்தானே பாண்டியமும் சோழமண்டலமும்! ஒரு நாட்டின் தளபதி இன்னொரு நாட்டின் மன்னரைச் சந்திப்பது தவறல்லவே. இது பற்றிப் பாண்டியர் தவறாகக் கருதமாட்டார் என்பதற்கு நான் பொறுப்பு. அதுமட்டுமல்ல,நானே இந்த ஏற்பாட்டைச் செய்தேன் என்று கேள்விப்பட்டால் பெருவழுதிப் பாண்டியர் மகிழ்வாரே தவிர மறுத்துரைக்க மாட்டார்!" என்று புலவர், நெடுமாறனை இணங்கச் செய்யும் அளவுக்குத் தைரியம் அளித்தார்.
பின்னர், நெடுமாறனும் கரிகாற் சோழரைச் சந்திப்பதற்குப் புறப்படத் தயாரானான். தளபதியுடன் பாண்டிய நாட்டுக் குதிரை வீரர்கள் பதின்மர் புறப்பட்டனர். வாட்ட சாட்டமான குதிரையொன்றில் நெடுமாறன் ஏறி அமர்ந்து, துணைத் தளபதிகளை எச்சரிக்கை செய்து விட்டு, அவர்கள் பொறுப்பில் படையினை ஒப்படைத்து விட்டுப் புலவருடன் புகார்த் தலைநகரம் நோக்கிக் கிளம்பினான்.
பாசறையை விட்டு வெகுதூரம் அவர்கள் கடந்து விட்டார்கள். இருமருங்கிலும் புதர்கள் அடர்ந்த குறுகிய பாதையொன்றில் அவர்களின் பயணம் நடந்து கொண்டிருந்தது. சுற்று முற்றும் சுழல்விளக்கென அலைந்து கொண்டிருந்த நெடுமாறனின் விழிகள் புதர் மறைவில் எதையோ கண்டு அசைவற்று நின்றன. திடீரெனக் குதிரையை நிறுத்தினான்.
புலவர் திகைப்படைந்து, “என்ன வேண்டும்!" என்று கேட்டார்.
"ஒன்றுமில்லை?" என்றவாறு குதிரையிலிருந்து இறங்கினான்.
புலவர், அவனையே வியப்புடன் கவனித்துக் கொண்டிருந்தார். மீண்டும் கேட்டார்; "தளபதியாரே! என்ன தேவை? ஏன் இறங்கிவிட்டீர்?"
"இதோ இந்தப் புதரில் படர்ந்திருக்கும் பச்சிலையைப் பார்த்தீர்களா? எல்லா நோய்களையும் நீக்க வல்லது இது! இதைக் கொஞ்சம் பறித்துப் போகலாம்!" என்றான் தளபதி.
“பச்சிலையின் பெயர் என்ன?" என்று கேட்டார் புலவர்!
"வேளிர்குடியின் விஷக்கொடி!" என்று பலமாகக் கூச்சலிட்டவாறு வாளை உருவிப் புதருக்குள்ளே ஓங்கிக் குத்தினான் நெடுமாறன்.
"ஆ! ஐயோ!" என்று புதருக்குள்ளேயிருந்து ஒரு பயங்கர ஒலி கேட்டது. புலவர் பயந்து விட்டார். கூட வந்த வீரர்கள் புதர் அருகே ஓடிவந்து சூழ்ந்தனர். புதருக்குள் கிடந்த உருவத்தை இழுத்து நெடுமாறன் வெளியே போட்டான்.
"யார் அது?" - புலவர் கேட்டார்.
"இவன்தான் செழியன் கொடுத்த ஓலைதாங்கி வந்தவன். வேளிர்குடி வீரன். ஓலையின் விளைவு என்ன என்று பார்ப்பதற்காகப் பதுங்கியிருக்கிறான்" என்று நெடுமாறன் பதில் கூறிவிட்டுக் குதிரையில் ஏறிக்கொண்டான்.
மற்றவீரர்கள் பிணத்தையெடுத்து அப்பால் மறைத்து விட்டுத் தங்கள் குதிரைகளில் ஏறிக் கொண்டனர்.
"இந்த நிகழ்ச்சியைக் கண்டபிறகு எனக்கு என்னவோ ஓலையின் மீதே சந்தேகம் வருகிறது!" என்றார் புலவர்.
அதற்கு பதில் ஏதும் கூறாமல் தன் குதிரையைத் தட்டிவிட்டான் நெடுமாறன். மற்றவர்கள் அவனைத் தொடர்ந்தனர்.
சோழவேந்தனைச் சந்திப்பதற்குப் பாண்டிய நாட்டுத் தளபதியைத் தந்தை அழைத்து வரும் அதே நேரத்தில், பாண்டிய நாட்டு ஒற்றனாம் வீரபாண்டியைச் சோழனிடம் அழைத்துச் செல்லும் நோக்கத்துடன் காட்டினிடையேயுள்ள பாழ்மண்டபத்தை நோக்கி மகள் வந்து கொண்டிருக்கிறாள்; அவள் உள்ளத்தில் எத்தனையோ எண்ணங்கள்! இந்த இளம் வயதில் - அதுவும் பெண்ணாகப் பிறந்த ஒருத்தி - பிறந்த நாட்டுக்காகப் பெரும் பணியாற்றுவதை நினைத்து நினைத்து தனக்குத்தானே பெருமை கொண்டாள். வீரபாண்டியையும் சோழரையும் சந்திக்க வைத்து இருங்கோவேளை எதிர்க்கும் போராட்டத்தை வெற்றியுடன் முடித்து விட்டால் செழியன் விடுதலை சுலபமாக நடந்து விடும். பின்னர் வீரபாண்டிக்கும் தனக்கும் திருமணம்! திருமணத்திற்குப் பிறகு நாட்டுப் பணி முடிந்து விட்டதாகப் பொருள் அல்ல! சோழ நாட்டுக்குத் துரோகம் செய்பவர்களை - செய்ய எண்ணியவர்களைக் கண்டு பிடித்துத் தண்டனை வழங்கும் வரையில் ஓய்வு கிடையாது!
இப்படியெல்லாம் சிந்தனைகளை ஓடவிட்டவாறு மண்டபத்தை நோக்கி நடந்தாள். தன் பணியினிடையே தாமரை குறுக்கிட்ட நிகழ்ச்சியை அவள் ஒரு வேடிக்கையாகக் கருதினாலும், அதனால் விளைந்த பலன்கள் அதிகமென்று அவள் நம்பினாள்.
உற்சாகமூட்டக்கூடிய இத்தனை செயல்களுக்கிடையே தந்தையின் நினைவு அவளைக் குன்றிப் போகச் செய்தது. "தந்தை, இருங்கோவே ளின் நண்பர்; மகள் சோழ நாட்டுப் பெருமைக்குப் பாடுபடும் வீராங் கனை!' என்று அவள் உதடுகள் உச்சரித்தன. கண்கள் மூடிக் கொண்டன. சற்று நின்றாள் மண்டபத்துப் படிக்கட்டில். மூடிய இமைகளின் வழியே கண்ணீர்த் துளி எட்டிப் பார்த்தது. 'ஆம்! நான் என் தந்தையைக் காட்டிக் கொடுக்க வேண்டும்'! என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள். பிறகு அசைவற்று அப்படியே நின்றாள்.
எவ்வளவு நேரம் அப்படி நின்றாள் என்று தெரியாது. பிறகு உணர்வுபெற்று விழிகளைத் திறந்தாள். என்ன ஆச்சரியம்! எதிரே ஒரு கிழவன்! சொரிபிடித்த கிழவன்! பரட்டைத் தலை! பஞ்சு நிறத்தாடி! கூனன்! குறுகிப் போய் எதிரே நின்று கொண்டிருந்தான்.
"யார் நீ?" என்று வியப்பு மேலிட முத்துநகை கேட்டாள். அவளால் அவனைப் பார்க்கவே இயலவில்லை. அவ்வளவு கோர உருவமாகக் காட்சியளித்தான் அந்தக் கிழவன்.
"என்னையா யார் என்று கேட்கிறாய்? பெண்ணே, நீ யார் என்று எனக்குச் சொல்! நிலவைக் கடைந்து செய்த சிலையில் நித்திலத்தைப் பதித்தது போல காட்சி தரும் பாவையே! நீ யார்?"
கிழவனின் பேச்சை அவளால் பொறுக்க முடியவில்லை. தன்னைப் பெண் என்று எப்படிக் கண்டுபிடித்தான் என ஆச்சரியமுற்றாள்.
"நீ இருக்கும் அழகுக்கு வர்ணனைப் பேச்சு ஒரு கேடா? ஆண் - பெண் வேறுபாடு தெரியாத குருடனே நிறுத்திக்கொள் உன் அலங்கோல வார்த்தைகளை!" என்று கடுமையாகப் பதில் கூறினாள் முத்துநகை.
"என்னடியம்மா - இப்படி ஊடல் புரிகிறாய்?" என்று நகைத்தவாறு கிழவன் முத்துநகையின் கையைப் பிடித்து இழுத்து இறுகத் தழுவிக் கொண்டான்.
அவன் பிடியிலிருந்து விடுபட முடியாமல் முத்துநகை தவித்து. இறுதியில் அவனைக் கீழே தள்ளி விட்டுத் தொலைவில் சென்று அங்கு கிடந்த ஒரு கருங்கல்லைத் தூக்கி அவன் தலையில் போட ஓடி வந்தாள். கீழே கிடந்த கிழவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவள், அவன் தலைக்குக் குறிபார்த்துக் கல்லை பலங்கொண்டமட்டும் இரு கைகளாலும் உயரத்தூக்கி அவன்மீது எறிந்தாள். அதைப் பற்றிக் கவலையே கொள்ளாமல் படுத்திருந்த கிழவன் தலைக்கு நேரே வந்த கல்லை இடது கையால் தட்டிவிட்டு வேகமாக எழுந்து அவளைத் துரத்தினான். அவள் ஓட முயன்றாள்; கிழவன் விடவில்லை; அவள் கையைப் பிடித்துக் கொண்டான். முத்துநகை அவனைத் தாக்குவதற்குக் கையை ஓங்கினாள். உடனே, கிழவன் கலகலவென்று நகைத்துக் தன் தாடியையும் தலைமுடியையும் எடுத்து முத்துநகையின் கையில் கொடுத்தான்.
முத்துநகை, "அத்தான்!" என்று ஆசையுடன் அழைத்து அவனைத் தழுவிக்கொண்டாள்.
கூன் விழுந்த கிழவன் நிமிர்ந்து நிற்கும் சிங்கமாய் வீரபாண்டியாய்க் காட்சி அளித்தான்.
"எதிரிகளிடம் காட்ட வேண்டிய திறமையை என்னிடமே காட்டுகிறீர்களா அத்தான்?"
"நீ கூட எதிரி தானே?"
"என்ன?"
"ஆமாம் காதல் எனும் போர்க்களத்தில் நாம் இருவரும் ஒருவருக்கொருவர் எதிரிகள் தான்! அப்போது தானே இந்தப் போர்க்களம் சுவைக்கும் கண்ணே?"
"அதிருக்கட்டும் - இந்த வேடம் எதற்காக?"
"இதுதான் கரிகால்சோழரைச் சந்திப்பதற்காகப் போட்டுக் கொண்டுள்ள வேடம்?"
"ஏன்... உண்மையான வீரபாண்டியாகவே வருவதில் என்ன குற்றம்?"
"என் உண்மை உருவில் வந்தால் என்னையும் உன்னையும் பற்றி அரசர் சந்தேகிக்க இயலும்; நம்மிடையே எப்படித் தொடர்பு ஏற்பட்டது என்று எண்ணிடத் தோன்றும்; அந்தச் சாதாரணச் சந்தேகங்கள் கூட யாருக்கும் ஏற்படலாகாது என்பதற்காகவே இந்த வேடம் பூண்டேன். அதிருக்கட்டும், அரசரைப் பார்க்க அனுமதி கிடைத்து விட்டதா?"
"இன்றைக்கே சந்திக்கலாம் - எப்போது வேண்டுமானாலும் அரசர் தயார்!"
"கண்மணி... உன் திறமைக்குப் பரிசாக...." எனக் கூறியபடி இதழ் குவித்தான் இருங்கோவேள்!
நெடுமாறனையும் காரிக்கண்ணனாரையும் வரவேற்று, பயணக் களைப்புத் தீரப் பழச்சாறு வழங்கச் செய்து பாண்டிய நாட்டுத் தளபதியின் நலன்களை விசாரித்து மகிழ்ந்தான் கரிகாலன். மன்னனின் கேள்விகட்கு நெடுமாறன் பதில் அளிக்கும்போது புன்னகையை வரவழைத்துக் கொண்டான் என்றாலும் கரிகால் மன்னனின் கண்கள், அவன் உள்ளத்தில் புயல் இருப்பதைக் கண்டு பிடித்துவிட்டன.
"என்ன, இருங்கோவேளைக் கூண்டோடு சிறைப்படுத்தத் திட்டமிட்டுப் போராட்டம் தொடங்கியிருப்பதாகக் கேள்விப்பட்டேன்! மிக்க மகிழ்ச்சி. ஏற்பாடுகள் எல்லாம் வெற்றிகரமாக நிறைவேறி விட்டன அல்லவா?" என்று பேச்சைத் திருப்பினான் சோழவேந்தன்.
"ஏற்பாடுகள் எல்லாம் வெற்றிகரமாக அமைந்துவிட்டன; எதிரியைச் சந்தடியின்றிப் பிடித்து விட என்னாலியன்ற எல்லா முறைகளையும் மேற்கொண்டேன். ஆனால் எப்படியோ படையெடுப்புப்பற்றி இருங்கோவேளுக்குத் தகவல் போயிருக்கிறது" - நெடுமாறன் பேச்சை முடிக்கவில்லை.
அதற்குள் கரிகாலன் குறுக்கிட்டு, "இருங்கோவேளுக்குத் தகவல் போய் விட்டதென்று எப்படித் தெரியும்?" என்று கேட்டான்.
"தகவல் போனது மட்டுமல்ல, தார்வேந்தே! தலைகுனியும் செய்தி யொன்றும் என் நெஞ்சில் மோதிவிட்டது. எந்தச் செழியனின் விடுதலைக் காக இப்படையெடுப்போ, அந்தச் செழியன் இருங்கோவேளின் நண்ப னாகிவிட்டான். இதோ பாருங்கள்! செழியன் விடுத்துள்ள முடங்கலை! கோழைத்தனமும் துரோக எண்ணமும் கொண்ட கொடியவன் எழுதியுள்ள மடலைப் படியுங்கள்!"
-என்று ஓலையை எடுத்து அரசனிடம் கொடுத்தான். கரிகாலன் அதைப் படித்துப் பார்த்துவிட்டுச் சிந்தனையில் ஆழ்ந்தான். அவன் நினைப்பு முத்துநகையின் மீது சென்றது. அவள் கூறிய வார்த்தைகள் அவன் காதில் ஒலிக்க ஆரம்பித்தன.
"செழியன். இருங்கோவேளின் நண்பனாகி விட்டதாகவும், பாண்டிய மன்னன் செழியனைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை யென்றும் செழியனைக் கொண்டே எழுதப்பட்ட ஓலையாகும் அது. முக்கியமாகப் பாண்டியர் படையெடுப்பைத் தடுத்து அவர்களைத் திரும்பிடச் செய்யவே அந்த ஏற்பாடு. நல்ல வேளையாக அந்தச் சூழ்ச்சியில் இருங்கோவேள் வெற்றியடையவில்லை. நான் குறுக்கிட்டு ஓலையைக் கைப்பற்றி விட்டேன்".
அந்த ஓலை பாண்டிய நாட்டு ஒற்றர் வீரபாண்டியிடம் இருக்கிறது. அந்த வீரபாண்டி மிகவும் நல்லவர். ஒப்பற்ற வீரர். பாண்டிய நாட்டுக்காகத் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் இருங்கோவேளைச் சுற்றிக் கொண்டு திரிகிறார். படையெடுத்து வரும்படி பாண்டிய நாட்டுக்குத் தகவல் அனுப்பியதே அவர்தானாம். பாவம், ஒரு சாதாரண விறகு வெட்டியைப் போல் காடு மேடெல்லாம் அலைகிறார். கஷ்டப்படுகிறார். ஆகா... அவரிடம் எவ்வளவு ஆழ்ந்த நாட்டுப்பற்று ஒளிவிடுகிறது தெரியுமா?"
- முத்துநகை உற்சாகத்துடன் கரிகால் மன்னனிடம் பேசிய வாசகத்தை மன்னன் நினைத்து நினைத்துப் பார்த்துப் பெரும் குழப்பமடைந்தான். இருங்கோவேளின் ஆளிடமிருந்து முத்துநகையால் கைப்பற்றப்பட்டுப் பாண்டிய நாட்டு ஒற்றனிடம் ஒப்படைக்கப்பட்ட ஓலையாகத்தானே இது இருக்க வேண்டும் என்று தீர்மானித்தான்.
"இந்த ஓலை உமக்கு எப்படிக் கிடைத்தது, ஒற்றர் வாயிலாகத் தானே?" என்று நெடுமாறனைப் பார்த்துக் கேட்டான்.
"இல்லை மன்னா! இருங்கோவேளின் ஆளே கொண்டு வந்து கொடுத்தான். கொடுத்தது மட்டுமல்ல; ஒளிந்திருந்து உளவறியவும் தலைப்பட்டான். அவனைச் சாவூருக்கு அனுப்பி விட்டுத்தான் இங்கு வந்தேன் நான்!" என நெடுமாறன் பதில் கூறியதும், சோழனின் உள்ளத்தில் சூறாவளி வீசத் தொடங்கியது. ஒற்றனிடம் முத்துநகை கொடுத்த ஓலை மறுபடியும் இருங்கோவேளின் கைக்கு எப்படி மாறியது? கேள்விக் கணை அவன் இதயத்தைக் குடைந்தது.
"போகட்டும் - அண்மையில் உங்கள் ஒற்றர் வீரபாண்டியிடமிருந்து ஏதாவது அவசரச் செய்திகள் உங்கள் பாசறைக்கு அனுப்பப் பட்டனவா?" என்றான் சோழன்.
"எங்கள் ஒற்றர் வீரபாண்டியா? அரசே! அப்படிப் பெயர் கொண்ட யாரும் எங்கள் நாட்டில் ஒற்றராகவே இல்லையே! தங்களுக்கு யாரோ தவறான தகவல் தந்திருக்கிறார்கள் என்று எண்ணுகிறேன்" என்று வியப்புடன் பதில் கூறினான் நெடுமாறன்.
சோழனின் தலை கிறுகிறுத்தது. பேச நா எழவில்லை. கண்களை மூடிக்கொண்டு அசைவற்று வெகுநேரம் உட்கார்ந்திருந்தான்.
வீரபாண்டி என்கிற பெயரால் ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்று மட்டும் பாண்டிய நாட்டுத் தளபதியால் புரிந்து கொள்ள முடிந்தது.
சோழன் திடீரென்று தளபதியைப் பார்த்து, "இந்த ஓலையைப் படித்த பிறகு என்ன முடிவுக்கு வந்தீர்கள்?" என்று கேட்டான்.
உடனே தளபதி, "நான் எப்படி முடிவுகளை எடுக்க முடியும்? பாண்டிய மன்னரைக் கலந்து கொண்ட பிறகே என்னால் எதையும் செய்யமுடியும். அத்துடன் தங்களின் பெருமைமிக்க யோசனைகளை யும் பாண்டிய மன்னரிடம் தெரிவிக்க மிக்க ஆவலாய் இருக்கிறேன்" என்று பதில் தந்தான்.
சோழன் புருவத்தை உயர்த்தியவாறு, நெடுமாறனைப் பார்த்து, “அப்படியானால் - வீரபாண்டியென்று யாருமே ஒற்றர் உங்கள் நாட்டில் இல்லையா?" என்று கவலையோடு கேட்டான்.
"இல்லை வேந்தே! நிச்சயமாக இல்லை! ஏன், யாராவது அந்தப் பெயருடன் தங்களை வந்து சந்தித்தார்களா?" என்றான் தளபதி.
"இல்லை! இன்னும் சந்திக்கவில்லை" என்று மெல்லிய குரலில் பதில் அளித்தான் கரிகாலன்.
அதற்கு மேல் அதுபற்றிக் கேட்க வேண்டுமென்று நெடுமாறனுக்கும், புலவருக்கும் தோன்றினாலுங்கூட சோழப் பெருவேந்தரிடம் அளவுக்கு மீறிப் பேசியதாக ஆகிவிடுமென்று அஞ்சி நிறுத்திக் கொண்டனர். சோழன், தளபதி நெடுமாறனிடம் நாளை வரையில் பூம்புகாரிலேயே தன் மாளிகையில் தங்கியிருக்குமாறும், அதற்குமேல் நடக்க வேண்டியவை பற்றி யோசிக்கலாமென்றும் கூறி அவன் தனி மாளிகையில் தங்குவதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்குமாறு தன் மெய்க்காப்பாள னிடம் உத்தரவிட்டான். நெடுமாறனும் அரசனிடமும் புலவரிடமும் விடைபெற்றுக் கொண்டு தனி மாளிகை நோக்கி மெய்க்காப்பாளனைத் தொடர்ந்து சென்றான். புலவர், தன்னிடம் மன்னர் ஏதாவது சொல்லக் கூடுமென்று எதிர்பார்த்து நின்றார்.
"புலவர் அவர்களே! என் ஆட்சிக் காலத்தில் இதுவரை கேள்விப்படாத அதிசயங்களையெல்லாம் இப்போது கேள்விப் படுகிறேன். என்னிடம் தோற்றோடிய அந்த இருங்கோவேள், மன்ன னைப் போல சாகாமல், கள்வனைப் போல வாழ்கிறான் காட்டில் என்றால் தமிழ்நாட்டு வீரத்திற்கே இழுக்கு! வாழட்டும் காட்டில் வேண்டாமென்று கூறவில்லை நான். நாடுகள் திரும்ப வேண்டுமென்று கேட்கட்டும்; தர முடியாது எனக் கூற மாட்டேன் நான். இன்னும் வீராப்பும் வீம்பும் பேசிக் கொண்டு திரிகிறானே, என் வீரத்தை உணராமல்! அதுமட்டுமல்ல புலவரே!... அவன் சாகசத்தில் வீழ்ந்தோ, சதியில் சிக்கியோ மலர்க்கொடி ஒருத்தியும் தவிக்கிறாள். என் தலையைக் கொய்வது அவ்வளவு சுலபமென்று கருதியிருக்கிறான் போலும்" என்று கூறிச் சோழன் அலட்சியமாகச் சிரித்தான்.
புலவர் விழித்தார், "என்ன மன்னவா சொல்கிறீர்கள்? தலையைக் கொய்ய ஏற்பாடா? அதில் ஒரு பெண்ணுக்கும் பங்கா? என்ன சொல்கிறீர்கள்? யார் அந்தப் பெண்?" என்று ஆவலோடு கேட்டார்.
"இன்று அல்லது நாளை உண்மையைத் தங்கள் கண் எதிரிலேயே காட்டுகிறேன். தாங்கள் எங்கும் போகாமல் வீட்டிலேயே இருங்கள்; நான் அழைத்த நேரத்தில் அரண்மனைக்கு வரவேண்டும். சரிதானா?"
புலவர் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார். சோழன் ஏழடி நடந்து சென்று அவரை வழியனுப்பி விட்டு ஒரு வீரனைக் கூப்பிட்டு உடனே மெய்க்காப்பாளனை அழைத்து வருமாறு கட்டளையிட்டான். அவனுக்குக் குழப்பம் ஓய்ந்தபாடில்லை. வீரபாண்டி என்கிற பெயரால் முத்துநகையுடன் வரப்போகிறவன் யார்? அவன் எதற்காக வருகிறான்? முத்துநகை அந்த மாயக்காரனிடம் ஏமாந்திருப்பாளா? அல்லது அவளும் இந்தச் சதிக்கு உடந்தையா? இவ்வினாக்களுக்கு விடை காணாமல் கரிகாலன் தவித்துக் கொண்டிருந்தான்.