உள்ளடக்கத்துக்குச் செல்

ரோமாபுரிப் பாண்டியன்/14. மன்னனைத் தாக்கினான்

விக்கிமூலம் இலிருந்து

14

மன்னனைத் தாக்கினான்

பாழ்மண்டபத்தில் முத்துநகை, தன் காதலனை அவசரப்படுத்திக் கொண்டிருந்தாள், சோழ மன்னனைச் சந்திப்பதற்குப் புறப்படுவதற்காக!

"உன்னையே பார்த்துக் கொண்டு இந்த மண்டபத்தில் உட்கார்ந்திருக்கலாம் போலிருக்கிறது. ஏன் அவசரப்படுத்துகிறாய்? இரு, இரு!" எனக் கூறியவாறு அவள் முகத்தைத் தன் முகத்துக்கு நேரே கொண்டு வந்து வைத்த விழி வாங்காமல் சுவைத்துக் கொண்டிருந்தான்.

"நேரமாகிறது அத்தான்! வேடத்தைப் போட்டுக் கொள்ளுங்கள். வேந்தர் சொன்ன நேரத்தில் போய்ப் பார்ப்பதுதான் நல்லது" என்று எழுந்தாள் முத்துநகை.

அப்போது தொலைவில் குதிரைகள் வரும் ஒலி கேட்டு அவள் திடுக்கிட்டாள். அவனுக்கு அந்த ஒலி அதிர்ச்சியைத் தரவில்லை. ஆனாலும் அஞ்சுவது போல் நடித்தான்.

"முத்து! முத்து! நீ போய்க் குதிரைகள் எந்தப் பக்கம் போகின்றன என்று ஒளிந்திருந்து கவனி. அதற்குள் நான் கிழ வேடத்தை அணிந்து கொண்டு தயாராகிறேன்" எனப் பரபரப்புக் காட்டி அவளை ஓடச் செய்தான், இருங்கோவேள்.

அவளும் பதற்றமடைந்து ஓடிச் சென்று புதர்களின் மறைவில் ஒளிந்து குதிரைகளின் ஒலி வரும் திக்கையே உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தாள். வெகு தொலைவிலிருந்து குதிரைகள் வருவதாக யூகித்தாள். சிறிது நேரத்திற்கெல்லாம் மூன்று குதிரைகள் அந்தப் பக்கமாக வேகமாக வந்தன; அவைகளில் அமர்ந்திருப்பவர்கள் யார் என்று அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் அணிந்திருந்த உடைகள் இருங்கோவேளின் வீரர்கள் என்பதைக் காட்டிக்கொடுத்தன. குதிரையில் இருந்தவர்கள் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே "பகை! பகை! பகை!” என்று கத்தினார்கள். அதற்குள் எங்கிருந்தோ "தூள்! தூள்! தூள்" என்ற முழக்கம் கிளம்பியது. அந்த முழக்கம் பாழ்மண்டபத்துப் பக்கமிருந்து வந்தது போல் தோன்றியது. அவளைத் திகில் சூழ்ந்து கொண்டது. பகைவர்களுக்கிடையே தானும், தன் அத்தானும் சிக்கிக் கொண்டதாக எண்ணிக் கலக்கமடைந்தாள். அவள் மூச்சு நின்று விடும்போல் திணறியது.

மூன்று குதிரைகளும் அவள் ஒளிந்திருந்த இடத்துக்கு நேராக நின்று, தீங்களைத் தாங்களே ஒரு முறை சுற்றிக் கொண்ட பிறகு, குதிரை வீரர்கள் அவைகளை முடுக்கினார்கள். குதிரைகள் அந்த இடத்தை விட்டு நாலு கால் பாய்ச்சலில் கிளம்பின. அவைகள் போகும் திக்கையே பார்த்துக் கொண்டிருந்தாள் முத்துநகை. இருங்கோவேளின் மரமாளிகையை நோக்கித்தான் அவைகள் போகின்றன என்பதைப் புரிந்து கொண்டாள். பாழ் மண்டபத்துக்குத் திரும்பி ஓடி வந்தாள்; அவள் முதலில் கண்ட விகார உருவக் கிழவன் நின்று கொண்டிருந்தான்.

"அத்தான், நமக்கு ஏதோ ஆபத்து வர இருக்கிறது. குதிரை வீரர்கள் மிக வேகமாக இருங்கோவேளின் மாளிகையை நோக்கி ஓடியிருக்கிறார் கள். நாம் இங்கிருப்பது அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். நம்மை வளைப்பதற்கு இன்னும் சில வீரர்களோடு வருவதற்காகவே அவர்கள் திரும்பியிருக்க வேண்டும். வாருங்கள் உடனே புகார் நகருக்குப் புறப்படலாம்...உம்... கிளம்புங்கள்" என்று அவன் கரம்பற்றி இழுத்தாள் முத்துநகை.

இருவரும் சுற்றும் முற்றும் நடுக்கத்தோடு பார்த்துக் கொண்டே ஓடிவந்து குதிரையில் ஏறிக் கொண்டார்கள். இரண்டு குதிரைகளும் சோழன் தலைநகரம் பூம்புகார் நோக்கிப் பறந்தன.

பூம்புகார்த் தெருக்கள் பலவற்றைக் கடந்து கோட்டைக்குள் குதிரைகள் நுழைந்தன. முத்துநகைக்கு அங்கு தடையில்லை. அதனால் வீரர் எவரும் தடுக்கவில்லை. இருவரும் குதிரைகளை விட்டிறங்கி மன்னன் மாளிகை நோக்கி நடந்தனர்; மாளிகை வெளி முற்றத்தில் மெய்க்காப்பாளன் நின்று கொண்டிருந்தான். வரவேற்று உள்ளே உட்காரச் சொல்லிவிட்டு முத்துநகையின் அருகே வந்து, "முதலில் உன்னை மட்டும் அரசர் தனியே பார்க்க விரும்புகிறார்; அடுத்து அவரைப் பார்ப்பாராம்" என்றான்.

உடனே முத்துநகை எழுந்து மெய்க்காப்பாளனுடன் அரசரைத் தனியே பார்ப்பதற்குச் சென்றாள். அரசன் சின்னஞ்சிறு கூடமொன்றில் ஒரு புலிக்குட்டியின் வாயில் கையை விட்டு விளையாடிக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

முத்துநகையைக் கண்டதும், "வீரபாண்டியை அழைத்து வந்திருக்கிறாயா!" என்று கேட்டான் கரிகாலன்.

"அழைத்து வந்திருக்கிறேன்!" என்று மரியாதையுடன் கூறினாள் முத்துநகை.

அரசன், மெய்க்காப்பாளனைப் பார்த்து, "நீ போய் நானும் ஒற்றரும் சந்திக்கும் இடத்தை ஒழுங்குபடுத்தி வை, போ!" எனச் சொல்லிவிட்டு, "முத்துநகை; நீ இங்கேயே இரு - இதோ வந்து விடுகிறேன்!" எனக் கூறி வெளியே புறப்பட்டான்.

அரசனின் அர்த்தமற்ற பரபரப்புக்கு முத்துநகையினால் காரணம் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அந்தப் பரபரப்பு அவள் மனத்தில் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.

வெளியே வந்த வேந்தன், ஒரு வீரனைக் கூப்பிட்டு, "உடனே ஓடிச் சென்று புலவர் காரிக்கண்ணனாரை அழைத்து வா!" எனக் கட்டளை யிட்டுவிட்டு, எதிரே வந்து வணங்கிய காவற்படைத் தலைவனிடம் கண்டிப்பான குரலில், "என் மாளிகையிலிருந்து என் உத்தரவின்றி யாரும் வெளியேறக் கூடாது. எச்சரிக்கை!" எனக் கூறி விட்டு மீண்டும், முத்துநகையை உட்காரச் சொல்லிய கூடத்திற்குத் திரும்பினான்.

மன்னனின் முகத்தில் சினத்தின் சாயல் மின்னுவதை முத்துநகை கண்டாள்; எனினும் அதுபற்றி எதுவும் பேசாமல் இருந்துவிட்டாள். அவளுக்கு எதிரே வந்து கம்பீரமாக அமர்ந்த கரிகாலன், விழிகளை உருட்டி மாளிகைச் சுவர்களை ஒரு முறை பார்த்துக் கொண்டான். அவளை அவனால் நேரடியாகப் பார்க்க இயலவில்லை. வேறுபுறம் திரும்பியவாறே, "ம்! பிறகென்ன சொன்னார் அந்தப் பாண்டிய நாட்டு ஒற்றர்?' என்று கேள்வி எழுப்பினான்.

"என்னிடம் வேறு எதுவும் சொல்லவில்லை, அரசே! இப்போதுதான் சந்திக்கப் போகிறீர்களே; அப்போது தங்களிடம் விவரம் சொல்வார் என்று எண்ணுகிறேன்!" என்றாள் அவள்

"உனக்கு அந்த ஒற்றரைப் பற்றிய எல்லா விவரங்களும் தெரியுமா?" முழு விவரங்கள் தெரியாது. பாண்டிய நாட்டு மண்ணுக்காகப் பாடுபடக்கூடிய உத்தமர் என்பது மட்டும் நன்றாகத் தெரியும்!"

"எத்தனை ஆண்டுக் காலமாகப் பாண்டிய நாட்டில் ஒற்றர் வேலை பார்க்கிறாராம்?"

"நான் அதையெல்லாம் கேட்கவில்லை, அரசே!"

"நீ சோழ நாட்டுக்காக உயிரையும் தியாகம் செய்யக் கூடிய உத்தமியென்று அந்த ஒற்றர் நம்பியிருக்கிறாரா?"

"என்னை அவர் புரிந்து கொள்ளாவிட்டால், இவ்வளவு தூரம் வந்திருப்பாரா?"

"இன்று ஒற்றரைப் பார்த்து முடிந்த பிறகு, உன்னை உன் வீட்டுக்கே அனுப்பி விடுவதாக முடிவு கட்டியிருக்கிறேன்!"

"ஏன் மன்னவா? என் பணியில் என்ன பழுது கண்டீர்கள்? நான் செய்த தவறென்ன?"

"பணியில் பழுதில்லை பாவையே! உன் தந்தையின் கவலையைப் போக்குவதற்காக உன்னை வீட்டுக்கு அனுப்பத் தீர்மானித்திருக்கிறேன். அது மட்டுமல்ல; நானும் ஒற்றரும் சந்தித்த பிறகு செழியனை எப்படியும் மீட்டே தீர்வோம்; அதற்கான திட்டங்களைப் பாண்டிய நாட்டுத் தளபதியுடனும் ஒற்றர் வீரபாண்டியுடனும் வகுப்பதாக இருக்கிறேன். இனி உனக்குச் சிரமம் தேவையில்லை அல்லவா!"

"வேந்தே! செழியனை மீட்பது மட்டுமல்ல என் வேலை; சோழத் திருநகரில் தாங்கள் நினைக்காத இடங்களில் துரோகிகள் தோன்றியிருக்கிறார்கள்; அவர்களைக் கூண்டோடு பிடிக்கும் வரையில் எனக்கும் ஓய்வில்லை."

"வெளுத்ததெல்லாம் பால் எனக் கருதும் உன்னைப் போன்ற வெள்ளை உள்ளங்கள் அந்த வேலைக்குத் தகுதியில்லை என்பது என் எண்ணம்"

இந்தப் பதிலைக் கேட்டதும் முத்துநகைக்கு முகம் கருத்துப் போய் விட்டது. கண்கள் கலங்கி விட்டன.

ஆனாலும் சமாளித்துக் கொண்டு, "மன்னர் மன்னவா! என்னை மன்னித்துவிடுங்கள்! என் பணிக்குத் தங்களின் துணை இல்லாவிட்டாலும் தனியொருத்தியாக நின்று சோழநாட்டுப் புகழைக் காப்பாற்றப் போராடியே தீருவேன்!" என்று குரல் தழுதழுக்கக் கூறினாள்.

அப்போது புலவர் வீட்டுக்குச் சென்ற வீரன் திரும்பி வந்து கரிகாலனிடம், "அரசே! புலவர் முக்கியமாக யாருடனோ பேசிக் கொண்டிருக்கிறார்; விரைவில் வருவதாக அறிவித்தார்" என்று கூறினான்.

வீரன், முத்துநகைக்கு நேராக அந்தச் செய்தியைச் சொன்னது சோழனுக்குப் பிடிக்கவில்லை. அந்த ஆத்திரத்தில் வீரனைப் பார்த்து, "அப்படி யாருடன் அவ்வளவு முக்கியமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்?" என்று கூவினான்.

வீரன் சொன்னான்; "அவரும் ஒரு யவனக் கிழவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்" என்று!

அந்தப் பதில் வெளி வந்ததுதான் தாமதம், "அகப்பட்டுக் கொண்டான் இருங்கோவேள்! அரசே! இப்போதே படைகளை அனுப்பி அந்த யவனக் கிழவனைக் கைது செய்ய உத்தரவிடுங்கள்” என்று முத்துநகை கத்தினாள். "என்ன சொல்கிறாய்?" என்று அரசன் வியப்புடன் கேட்டான்.

"ஆம் அரசே! அந்த யவனக் கிழவன்தான் இருங்கோவேள்! இத்தனை நாளும் தங்களிடம் மறைத்து வைத்திருந்த உண்மையை இப்போது வெளியிட்டுத் தீர வேண்டிய நேரம் வந்து விட்டது. என் தந்தை காரிக்கண்ணனார் இருங்கோவேளின் உற்ற நண்பர். சோழ நாட்டுக்குத் துரோகி. இருங்கோவேளும் என் தந்தையும் இரவு நேரங்களில் வெகு நேரம் பேசிச் சதித் திட்டங்கள் வகுத்ததை நானே நேரில் கண்டிருக்கிறேன். இதோ இந்தப் பதக்கத்தைப் பாருங்கள். என் தந்தையுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டுப் போன யவனக் கிழவரிடமிருந்து கீழே விழுந்த பதக்கம் இது. இதில், 'இருங்கோவேள்' என்ற எழுத்துக்களைப் பாருங்கள். இன்னும் என்ன சான்று வேண்டும் அரசே? மகளே தன்னுடைய தந்தையைத் துரோகியென்று கூறுகின்ற அற்புதத்தைக் கண்டு திகைக்கிறீர்களா?" என உணர்ச்சிப் பொறி பறக்க முழங்கினாள் முத்துநகை.

கரிகாலன் அலட்சியத்தோடு பலமாகச் சிரித்துக் கொண்டே அவளைப் பார்த்து, "பைத்தியக்காரி! இருங்கோவேள் இப்போது உன் வீட்டில் இல்லை. என் வீட்டில்தான் இருக்கிறான். பகைவன் அமர்ந்திருப்பது பாட்டுத் தந்தையின் வீட்டில் அல்ல! நாட்டுத் தந்தையின் வீட்டில்! துரோகத்துக்குத் துணை போவது உன் தந்தையல்ல - நீயே தான்!" என்று கூறினான்.

அது கேட்டு முத்துநகை துடித்துவிட்டாள், "அரசே! என் தூய்மையைச் சந்தேகிக்காதீர்கள்!" என்று அவன் காலைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கதறத் தொடங்கி விட்டாள்.

"முத்துநகை! விரைவில் விளக்கம் பெறுவாய்! வா என்னோடு! நீ அழைத்து வந்துள்ள ஒற்றர் வீரபாண்டியைச் சந்திக்கலாம்" என அவளை அழைத்துக் கொண்டு கரிகாலன் அந்த இடத்தை விட்டு அகன்றான்.

ஒற்றரைச் சந்திப்பதற்கான இடம் ஏற்பாடாயிற்று, வட்ட வடிவமான அந்த இடம் பளிங்குக் கற்களால் அமைந்திருந்தது. யானைத் தந்தங்கள் பொருத்தப்பட்ட அழகிய கதவுகள் - அதில் இடையிடையே தங்கத்தால் ஆன குமிழ்கள்! சுவர்களின் ஓரத்தில் பட்டுத் திரைகள் தொங்கிக் கொண்டிருந்தன. அந்தத் திரைக்குப் பின்னால் ஓங்கிய வாளுடன் வீரர்கள் நிற்பதை யாரும் கவனிக்க இயலாது. நடுவே இரண்டொரு வெள்ளி இருக்கைகள் போடப்பட்டிருந்தன. பழங்களும் கனிச்சாறும் இருக்கைகளுக்கு நேரே வைக்கப்பட்டிருந்தன.

இரண்டு வீரர்கள் ஒற்றரை மிக்க மரியாதையுடன் அழைத்து வந்து இருக்கையொன்றில் அமர வைத்தனர். சற்று நேரத்துக்கெல்லாம் அரசரும் முத்துநகையும் அங்கு வந்து சேர்ந்தனர். அரசரைக் கண்ட ஒற்றர் எழுந்து நின்று வணங்கினார். அரசன் அங்கு நின்ற இரண்டு வீரர்களையும் சைகை காட்டி வெளியே அனுப்பி விட்டான். கதவுகளும் சாத்தப்பட்டன. திரைமறைவில் நின்ற வீரர்கள் மூச்சுவிடும் ஒலி கூட வெளியே கேட்காமல் அவ்வளவு எச்சரிக்கையாக இருந்தார்கள். ஒற்றரை உட்காருமாறு கூறிவிட்டு அரசன் அமர்ந்தான். ஒற்றனின் முதுமைத் தோற்றமும் முகபாவமும் கரிகாலனுக்கு வெறுப்பைத் தந்தது என்பதை முத்துநகை புரிந்து கொண்டாள். அவளுக்கு இந்தச் சந்திப்பின் முக்கியத்துவம் பற்றிய கவலையெல்லாம் பறந்தோடி விட்டது. கரிகாலன் பேசிய மொழிகள் அவளை மிகவும் கலவரப் படுத்தியிருந்தன. இவ்வளவு நல்லெண்ணத்துடன் நாட்டுக்குத் தொண்டாற்ற முன்வந்தும் இறுதியில் பழிவந்து சேர்ந்ததே என வருந்தினாள். - வேதனைப்பட்டுப் புழுங்கினாள். கரிகாலன் ஒற்றனுடன் பேச ஆரம்பித்தான்.

"வயதான காலத்தில் பாண்டிய நாட்டுக்காகத் தாங்கள் படும் கஷ்டத்தை முத்துநகை சொல்லக் கேட்டேன். மிக்க மகிழ்ச்சி."

அந்தப் பாராட்டுரைக்கு ஒற்றர் பதில் கூறவில்லை. நன்றியோடு சிரித்துக் கொண்டார்.

"இப்போது என்னைச் சந்திக்க வேண்டுமென்று விரும்பியது எதற்காக.?"

பதிலில்லை.

முத்துநகை சிரித்தாள்.

கரிகாலன் விடவில்லை. - மீண்டும் கேள்வி கேட்டான்.

"மிகவும் ரகசியமாக ஏதாவது பேச வேண்டுமா? முத்துநகையையும் வெளியே அனுப்பி விடட்டுமா?"

இதற்கும் பதில் இல்லை.

முத்துநகை அதிர்ச்சி அடைந்தாள். அரசன் ஒற்றரையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒற்றரின் விழிகள் அரசரையே நோக்கின. பட்டுத் திரைக்குப் பின்னாலிருந்த வீரர்கள் பாய்வதற்குத் தயாராக இருந்தார்கள். முத்துநகையின் கருவிழிகள் சுழன்றன. அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

ஒரே அமைதி! அந்த அமைதியில் தான் எவ்வளவு பயங்கரம்!

முத்துநகையின் பார்வை ஒற்றரை விட்டு நகராமல் அப்படியே நிலைத்து நின்றது. அவள் கண்கள் இருண்டு விட்டன. சிறிது நேரத்தில் எதிரே ஒன்றும் தோன்றவில்லை. உட்கார்ந்திருந்த ஒற்றன் கம்பீரமாக எழுந்தான். எழுந்த வேகத்தில் இடுப்பில் செருகியிருந்த கட்டாரியை உருவிக் கொண்டு கரிகாலன் மீது பாய்ந்தான். கட்டாரியால் கரிகாலனின் நெஞ்சில் பலங்கொண்ட மட்டும் குத்தினான்.

ஆனால் கரிகாலனுக்குச் சிறு காயமும் ஏற்படவில்லை. மார்பில் மறைந்திருந்த கவசம் கட்டாரியை முனை மழுங்கச் செய்தது. அதற்குள் திரைமறைவில் இருந்த வீரர்கள் வெளிப்பட்டனர். ஒற்றனை வளைத்துக் கொண்டனர். முத்துநகைக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. கரிகாலன் உயிர் தப்பி நிற்பதையும், தன் அன்பு அத்தான் வீரபாண்டி கைது செய்யப்பட்டு நிற்பதையும் கண்டு தணலில் நிற்பது போல் நின்றாள்.

அரசன் அவளைப் பார்த்து, "முட்டாள் பெண்ணே! நீ அழைத்து வந்த ஒற்றன் யார் என்று தெரிகிறதா? வீரபாண்டியல்ல என்பதைப் புரிந்து கொள்! வேடமிட்டு என்னைக் கொல்ல வந்த இருங்கோவேள் இவன்தான்!" என்று கூறி அவன் தலைமுடி, உடை முதலியவற்றைப் பற்றியிழுத்து வேடத்தைக் கலைத்து விட்டான்.

என்ன ஆச்சரியம்!

அரசன் எதிர்பார்த்தபடி அவன் இருங்கோவேளுமல்ல, அவள் நினைத்திருந்தபடி அவன் வீரபாண்டியுமல்ல!

அரசன் திகைத்து நின்றான்.முத்துநகை கூச்சலிட்டாள்.

"அரசே! இவன் நான் அழைத்து வந்த ஒற்றர் வீரபாண்டியல்ல! வேந்தர் பெருந்தகையே! நான் தங்களிடம் இன்னொரு உண்மையையும் கூறுகிறேன். வீரபாண்டி கிழவர் அல்ல. கிழவர் போல வேடமிட்டுத் தங்களைக் காண வந்தார். அவரல்ல இது! எப்படியோ அவர் மறைக்கப் பட்டு அந்த வேடத்தில் இந்தக் கொலைகாரன் வந்திருக்கிறான்!"

முத்துநகையின் கூச்சலைக் கேட்ட அரசர் குழப்பமுற்றவராய். "இப்போது நீ என்ன உளறுகிறாய்!" என்று கத்தினார்.

"என்னை மன்னித்து விடுங்கள். வீரபாண்டியும் நானும் காதலர்கள். அந்த விஷயத்தைத் தாங்கள் புரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே அவர் கிழவேடம் கட்டிக் கொண்டு தங்களைக் காண வந்தார். இடையில் இந்த விபரீதம் எப்படி ஏற்பட்டது என்று எனக்குப் புரியவில்லை;" என்று விம்மி விம்மி அழுதாள் முத்துநகை.

"நீ யார்? உண்மையைச் சொல்!" என்று அந்தக் கொலைகார இளைஞனை மிரட்டினான் அரசன்.

அவன் பதில் பேசவே மறுத்து விட்டான்.

"ம்! இவன் நகக் கண்களில் ஊசி ஏற்றுங்கள். உண்மையை வரவழையுங்கள்!" என்று கர்ச்சித்தான் கரிகாலன்.

"அய்யோ - சொல்லி விடுகின்றேன்!" என்று ஆரம்பித்தான், அந்தக் கொலைகாரன். அனைவரும் என்ன சொல்லப் போகிறான் என்று ஆவலோடு எதிர் பார்த்தார்கள்.

"நான் இருங்கோவேள் மன்னரின் ஆள்! கரிகால் மன்னரைக் கொல்வதற்காகவே இங்கு வந்தேன். மன்னரைக் கொல்வதற்கு நியமிக்கப்பட்ட ஆட்களில் நானும் ஒருவன். இதோ இந்த முத்துநகையும் இவள் குறிப்பிட்டாளே வீரபாண்டியென்று, அந்த மனிதனும் ஒரு பாழ்மண்டபத்தில் உட்கார்ந்து அரசரைச் சந்திக்கப் போவதாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்; அதை நான் ஒளிந்திருந்து கேட்டுக் கொண்டிருந்தேன். அந்தச் சமயம் எங்கள் இருங்கோவேள் மன்னரின் குதிரை வீரர்களை விட்டு முத்துநகையையும் வீரபாண்டியையும் ஏமாற்றினோம். முத்துநகை வீரபாண்டியைப் பிரிந்து குதிரை வீரர்கள் போகும் திக்கைக் கவனித்துக் கொண்டிருந்த நேரம் பார்த்து, வீரபாண்டியைப் படுகாயப்படுத்திவிட்டு அவன் போட்டிருந்த உடைகளை நான் மாட்டி வேடம் போட்டுக் கொண்டு, காயமடைந்த வீரபாண்டியையும் தடாகத்தில் தள்ளிவிட்டு, முத்துநகையை ஏமாற்றி இவளுடன் இந்த மாளிகைக்குள் நுழைந்து விட்டேன். பாவம்; இவளுக்கு இந்த விவரம் எதுவும் புரியாது. தன் காதலன் தான் கிழவேடத்தில் இருப்பதாக அழைத்து வந்து விட்டாள்!"

இந்தச் செய்தியைக் கேட்டதும் முத்துநகை பழைய நிகழ்ச்சியை எண்ணிப் பார்த்தாள்!

கொலைகாரன் சொன்னது எல்லாம் சரிதான். குதிரை வீரர்களின் ஒலி கேட்டு தான் பார்க்கப் போனபோதுதான் தன் அத்தானுக்கு அந்த விபரீதம் ஏற்பட்டிருக்கிறது என்று அவள் முடிவு கட்டிக் கொண்டாள்.

"அய்யோ! இந்நேரம் என்ன ஆனாரோ தெரியவில்லை!" என்று வாய்விட்டுக் கதறத் துவங்கினாள்.

கரிகாலன், அந்தக் கொலைகாரனைப் பார்த்து, "உன் பெயர் என்ன?" என்று விசாரித்தான்.

"வேல்மறவன்" என்று வீராப்புடன் பதில் கூறினான்.

அவனைச் சிறையில் அடைக்க ஆணை பிறப்பித்து விட்டு முத்துநகையைத் தேற்ற ஆரம்பித்தான். அவளோ, தன் காதலனை நினைத்துக் கண்ணீர் வடித்தாள். அந்தக் கவலைக்கிடையேயும், "அரசே! என் வார்த்தையை நம்பி உடனே சென்று அந்த யவனக் கிழவரைக் கைது செய்ய உத்தரவிடுங்கள். அவர் வேறு யாருமல்லர். இருங்கோவேளாகத் தான் இருக்க முடியும்; இங்கே கொலைகாரனை அனுப்பி விட்டு இன்பச் சேதி கேட்பதற்கு என் தந்தையிடம் வந்திருக்கிறான். அவன் இருங்கோவேளேதான்! முதலில் அவனை இழுத்து வரச் செய்யுங்கள். அவனைக் கூண்டிலே அடைத்து விட்டுத்தான் என் ஆருயிர்க் காதலன் வீரபாண்டி என்ன ஆனார் என்று பார்க்கப் போகிறேன். அனுப்புங்கள் அரசே, வீரர்களை!" என்று கெஞ்சினாள்.

அரசனும் அவள் பேச்சுக்கிணங்கி வீரர்களை கூப்பிட்டு "உடனே சென்று புலவர் காரிக்கண்ணனாரையும், அவர் வீட்டில் இருக்கும் யவனக் கிழவரையும் அழைத்து வருக!" என்று கட்டளையிட்டான். வீரர்கள் புறப்பட்டனர்.

குதிரைகளின் குளம்பொலி கேட்ட புலவர் காரிக்கண்ணனார் வெளியில் வந்தார். "என்ன வேண்டும்?" என்று வீரர்களிடம் வினவினார். "தங்களையும் யவனக் கிழவரையும் மன்னர் உடனே அழைத்து வரச் சொன்னார்" என்றனர் வீரர்கள். புலவர் சிந்தனையில் ஆழ்ந்தார் 'ஏன் யவனக் கிழவரையும் அழைத்தார்?'

நீண்ட சிந்தனைக்குப் பிறகு "முதலில் யவனக் கிழவரை அனுப்புகின்றேன்; சற்றுப் பொறுத்து நானும் வந்து சேர்கின்றேன்" எனக் கூறிவிட்டுக் கதவை மூடிக்கொண்டு உள்ளே சென்றார்.

யவனக்கிழவர் வெளியில் வந்ததும், விலங்கிடாமல் அவரை நடத்தியே அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர், வீரர்கள். மண்டபத்து பட்டுத் திரைகளின் பின்னே வீரர்கள் பாய்வதற்குத் தயாராக காத்திருந்தனர்.

"நீ யார்?" என்று உரத்த குரலில் கேட்டான் கரிகாலன்.

பதிலில்லை. இருமுறை கேட்டும் விடை கூறாததால் "நீ என்னைக் கொலை செய்ய வந்திருக்கும் இருங்கோவேள் என்கிறேன் நான்! அப்படித்தானே?" என்றான் மன்னன்.

பதிலேதும் வெளிவரவில்லை. கரிகாலன் யவனக் கிழவரை நெருங்கி, அவர் தலையில் கட்டியிருந்த துணியை அகற்றினார். தாடியையும் பற்றினான்; அது கையோடு வந்து விட்டது.

என்ன வியப்பு! கரிகாலன் தீ மிதித்தவன் போல் ஆனான். எதிரே யவனக்கிழவர் உடையில் மறைந்து நின்றிருந்தவர் வேறு யாருமல்ல; புலவர் காரிக்கண்ணனார்தான்.