உள்ளடக்கத்துக்குச் செல்

ரோமாபுரிப் பாண்டியன்/15. தமிழன்னை சிறைப்பட்டாள்

விக்கிமூலம் இலிருந்து

15

தமிழன்னை சிறைப்பட்டாள்

ன்னன் தன் கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டு, எதிரே நிற்கும் புலவரைத் திரும்பத் திரும்பப் பார்த்தான். அவர் புலவரில்லாமல் வேறு யாராகவாவது இருக்கக் கூடாதா என்று தவிக்கின்றான் என்பதை அவனது விழிகள் எடுத்துக் காட்டின. 'குழப்பம்' என்று கூறப்படும் ஒரு நிலை, தனது கொடுமையான வாய்க்குள் கொற்றவனை எடுத்துப் போட்டுக் கொண்டு கூத்தாடியது. எத்தனையோ சிக்கலான பிரச்சினை களையெல்லாம் சரிப்படுத்தி வெற்றி கண்ட மாமன்னன் கரிகாலன், தனக்கெதிரே தமிழ் கூறும் முதுபெரும் அறிஞர் ஒருவர் துரோகியெனும் பெயர் சுமந்து நிற்கின்ற காட்சிக்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாமல் துடித்தான்.

முதுகில் காயந்தாங்கிக் களத்திலே வீழ்ந்திடும் வீரனொருவனின் மனோநிலைக்கும், கரிகாலனின் மனோநிலைக்கும் அதிக வேறு பாடில்லை. அந்த வீரன் அனுபவிக்கும் வேதனையைத்தான் அவனும் அனுபவித்தான். தன்னையும் தன் நாட்டையும் வாழ்விக்கும் தமிழ் மொழியை நாவாறப் பாடிக்களிக்கும் பாவலர் ஒருவர், நாட்டுத் துரோகியென்ற பட்டத்துடன் நிற்கின்ற கொடுமையை எண்ணி எண்ணி கண்ணீர் வடித்தான். புலவரிடம் பேசுவதற்கு முயன்றான். தொண்டை அடைத்துக் கொண்டது.

வீரர்கள் அரசனை மரியாதையுடனும், அச்சத்துடனும் வணங்கி, "அரசே! நாங்கள் ஏமாந்து விட்டோம். யவனக் கிழவரைத் தப்பியோடச் செய்துவிட்டு அவரது உடைகளைப் புலவர் அணிந்து கொண்டு யவனக்கிழவர் போலவே வந்திருக்கிறார். எங்களை மன்னித்து விடுங்கள் அரசே!" என்று கதறினார்கள்.

அரசன், அவர்களைப் பார்த்துக் கையமர்த்திப் பேசாமல் இருக்கச் செய்தான். வீரர்கள் விளக்கிக் கூறாமலே என்ன நடந்தது என்பதைக் கரிகாலனால் ஊகித்துக் கொள்ள முடிந்தது.

முத்துநகைக்கு உடம்பெல்லாம் நெருப்பாகி விட்டது. கனல் பறக்கும் கண்களுடன் தந்தையின் அருகே வந்தாள். புலவா தன் மகளைப் பரிவுடன் நோக்கிக் கொண்டு நின்றார். முத்துநகை மிக அண்மையில் வந்து அவர் முகத்துக்கு நேரே தன் முகத்தை நீட்டி "உமது மகள் என்று சொல்லிக் கொள்ள நான் வெட்கப்படுகிறேன்" என்று மெதுவாகத்தான் சொன்னாள். ஆனால் அந்த வார்த்தைகள் எரிமலையிலிருந்து பொங்கி வழியும் அனற் குழம்பினையொத்திருந்தன. புலவர் அவளை அன்புடன் நோக்கியவாறு, "அருமை மகளே! அவசரப்படாதே!" என்று பதில் கூறினார்.

"இனிமேல் அவசரப்படுவதற்கோ - அமைதியடைவதற்கோ என்ன இருக்கிறது? தமிழ்ப் புலவர் கூட்டத்திற்கே அவமானச் சின்னமாக அழிக்க முடியாத களங்கமாக நீர் நிற்கிறீர்! தமிழுக்கு உயிர்ச் சக்தி உண்டென்பது பொய்யில்லையே -அங்ஙனமிருக்க எவ்வாறு அந்தச் சக்தி உமது துரோக இதயத்தை இதுவரையில் துளைக்காமல் மௌனம் சாதிக்கிறது?" - என இடிமுழக்கம் செய்தாள் முத்துநகை.

"அம்மா-முத்து! அரசரும் நீயும் என்னைப் பற்றித் தவறான எண்ணங்கொள்ளுவதற்குக் காரணமாக இருந்த சூழ்நிலை என்ன வென்று யான் அறியலாமா?"

புலவர் அதிர்ச்சியுடன் கேட்டார்.

"சூழ்நிலையை வேறு விளக்க வேண்டுமோ? இந்நாட்டின் நல்வாழ்வு தவிர வேறெதுவும் தேவையில்லையென்று முடிவுகட்டிக் கிளம்பிவிட்ட இந்த முத்துநகையின் தந்தை ஒரு துரோகி, சோழ மண்டலத்தைப் பகைவனுக்குக் காட்டிக் கொடுக்கும் பாவி, கரிகால் மன்னரின் உயிருக்கு உலை வைக்கப் புறப்பட்டிருக்கும் கயவர்களுக்குத் துணை, எந்தச் சோழ நாட்டு மண்மீது சுதந்திரத் தமிழ்க் கவிதைகளை இயற்றினாரோ, அந்தச் சோழ நாட்டுக்கு அழிவு தேடித் தரும் அக்கிரமக்காரர்! இதை விட வேறென்ன தந்தையே வேண்டும்?"

மகளின் பேச்சு, புலவரின் நெஞ்சில் சம்மட்டி அடிகளாய் விழுந்தன.

"முத்துநகை! விளையாட்டுத்தனமாகப் பேசாதே! தமிழால் வளர்ந்தது இந்த உடம்பு. துரோகம் என்னுடைய இரத்தத் துளியில் ஒரு சிறு அணுவைக் கூடத் தொடத் துணியாது என்பதை மறந்து விடாதே!"

"ஆகா! இந்தப் பேச்சில் என் தந்தையின் கற்பனை வளம் காணப்படுகிறது. ஆனால் தூய்மை, மருந்துக்குக் கூட இல்லை. துரோகம் தலைதூக்கி நிற்கிறது."

"இனி உன்னோடு பேசிப் பயனில்லை. தமிழ்ப் புலவர்களின் உள்ளத்தைப் புரிந்து கொண்டிருக்கும் தார் வேந்தர் சோழ மன்னரிடம் பேசுகிறேன். அரசே, என் மகள் முத்துநகை, தங்களையும் சேர்த்துக் குழப்பமடையச் செய்திருப்பாள் என்று நினைக்கிறேன்..." என்று அரசனிடம் பேசத் தொடங்கினார்.

உடனே கரிகாலன், "இல்லை புலவரே! என்னை யாரும் குழப்ப முடியாது. என்ன நடந்திருக்கும் என்பதை ஒழுங்காகவே புரிந்து கொள்ள முடிகிறது. யவனக் கிழவர் வேடத்திலேயிருந்த இருங்கோவேள் தப்பிவிட்டான். இல்லை! இல்லை! அவனைத் தப்பியோடும்படித தாங்கள் செய்து விட்டீர்கள். நாட்டுக்குத் துரோகம் நினைத்தாலும் நண்பனுக்காகச் செய்த தியாகத்தை நான் பெரிதும் பாராட்டுகிறேன்" என்று குமுறும் உள்ளத்தை அடக்கிக் கொண்டு பதில் கூறினான்.

"மன்னவரே! தங்கள் குடை நிழலில் தமிழ் வளர்க்கும் என்னைப் பற்றி எவ்வளவு அவசர முடிவுக்கு வந்து விட்டீர்கள்! அது தங்கள் தவறு அல்ல. என் மகளுக்கு அளவுக்கு மீறி எழுந்துள்ள நாட்டுப்பற்று, அவளையும் குழப்பமுறச் செய்து. தங்களையும் குழப்பமுறச் செய்து விட்டது."

- என்று புலவர் அமைதியாகப் பதிலுரைத்தார்.

அதுகேட்ட முத்துநகை, மேலும் ஆவேசம் பெற்றவளாகச் சீறியெழுந்து, "துரோகியென்று நாங்கள் முடிவு கட்டுகிறோம். அது தவறானால் அதற்குத் தரப்படும் நேரடியான பதில் என்ன?" என்று கர்ச்சித்தாள்.

"நேரடியான பதில்! நான் துரோகியல்ல என்பதுதான்!" புலவர் சாதாரணமாக இந்தப் பதிலைக் கூறினார்.

"அப்படியானால் அந்த யவனக் கிழவர் யார்?" அரசன் ஆத்திரத்துடன் கேட்டான்.

“அவர் யார் என்று இப்போது நீங்கள் தெரிந்து கொள்ளக் கூடாது" - புலவர் அலட்சியமாக பதில் மொழிந்தார்.

"இங்கேதான் ஒளிந்திருக்கிறது துரோகம்!" என்று கத்தி முத்துநகை.

"வயிற்றிலிருக்கும் குழந்தை ஆணா-பெண்ணா? என்று அறிவதற்கு அவசரப்பட்டு யாரும் வயிற்றைக் கீறிப் பார்க்க மாட்டார்கள் அம்மா! பிறக்கும்வரை பொறுத்திருப்பார் சில பெற்றோர். நிமித்திகனை நாடிச் செல்வர் சில பித்தர்! பித்தரும் செய்யத் துணியாத காரியத்தை நீங்கள் செய்ய விரும்புகிறீர்கள். என் உயிர் போனாலும் சரி! அந்த யவனக் கிழவர் யார் என்று இப்போது நான் சொல்ல மாட்டேன்."

"இவர் சொல்வதென்ன... அரசே! அதுதான் நன்றாகத் தெரிகிறதே இருங்கோவேள்தான்... என்று!"

"உம் அதுவும் சரிதான்! என் அருமை மகள் முத்துநகை கூறுவதுபோல் யவனக்கிழவராக வந்தவர் இருங்கோவேள் தான்! அப்படித்தான் இருக்கட்டுமே!"

-புலவர் இதைக் கூறிவிட்டு தலையைக் குனிந்து கொண்டார். அதற்குமேல் அவர் பேச விரும்பவில்லையென்பதை அவர் முகம் தெளிவாகக் காட்டியது. முத்துநகையின் ஆத்திரமும் ஆவேசமும் அழுகையாக மாறின; கண்ணீர் பெருக்கெடுக்க, கதறிப் புலம்ப ஆரம்பித்து விட்டாள்.

"அய்யோ! தலைமுறை தலைமுறைக்கும் மாறாத களங்கம் ஏற்பட்டு விட்டதே எங்கள் குடும்பத்துக்கு! அப்பா! அப்பா! ஏனப்பா உங்கள் அறிவு இப்படியெல்லாம் அழிவுச் சக்திகளுக்கு துணை போயிற்று? சோழப் பேரரசில் உங்களுக்கு என்ன குறை? கொலு மண்டபத்தில் அமர்ந்து கோலோச்ச வேண்டுமெனக் கேட்டிருந்தாலும் அட்டியின்றித் தரக்கூடிய குணாளன் தானே நமது கொற்றவன் ! அவருக்குப் பாதகம் நினைக்க எப்படியப்பா உங்கள் மனம் துணிந்தது? அரசே! அரசே! என்னை மன்னித்து விடுங்கள். இந்தத் துரோகியின் வீட்டில் நான் பெண்ணாய்ப் பிறந்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள்."

முத்துநகை அலறித் துடிப்பதைக் கண்ட கரிகாலன் அவளைச் சமாதானப்படுத்தி, "அழாதே முத்துநகை. தந்தை செய்த தவறுக்கு நீ என்ன செய்வாய்? உன் தந்தையின் களங்கத்தை மறைத்துப் புதிய ஒளியைப் பரப்புகிற அளவுக்குக் குடும்ப விளக்காக நீ திகழ்கிறாய். நீ தியாகச் சுடர். சோழ மண்டலத்தின் பெருமையைக் காப்பாற்றுவ தொன்றே பெரிதெனக் கொண்டு தந்தையையும் காட்டிக் கொடுத்த உன் நெஞ்சுறுதியை-தாயகப்பற்றை-நான் மதிக்கிறேன். உன் உறுதிக்கும் துணிவுக்கும் மரியாதை செலுத்துகிறேன். நீ நாட்டுக்குத் தியாகம் செய்கிறாய்; உன் தந்தை நண்பனுக்காகத் தியாகம் செய்கிறார்" என்று கண் கலங்கக் கூறிவிட்டுப் புலவரைப் பார்த்து,

"வணக்கத்துக்குரிய தமிழ்ப்பாவாணரே! நானொருவன் வாழ்வது பிடிக்கவில்லையென்றால் என் மார்பில் வேல் நுழைத்திருக்கலாம் தாங்கள்! அதை விடுத்துத் தாயகத்தை எதிரிக்குக் காட்டிக் கொடுக்கும் இழி செயலை மேற்கொண்டிருக்கத் தேவையில்லை. போனது போகட்டும். நீதிக்கு முன்பு தரணியாளும் மன்னரும் தமிழால் உலகை ஆளும் புலவரும் ஒன்றுதான். நீதி கிடைப்பதற்குப் பெரிதும் முயல்கிறேன். அதுவரையில் தாங்கள் அரண்மனையிலேயே சிறைப்படுத்தப்படுகிறீர்கள்; பகைவனுக்குத் துணை நிற்கும் ஒருவரை வெளியில் உலவிட விடுவது தவறல்லவா? அது அறிவுடைமையும் ஆகாது. அதனால் என்னை மன்னித்துக் கொள்ளவும். பெயர்தான் சிறைவாசம் என்று இருக்குமே தவிர தங்களுக்குத் தொல்லைகள் இருக்காது. நல்ல உணவு வழங்கப்படும். சிந்திக்கவும் எழுதவும் வசதிகள் உண்டு. செந்தமிழ்க் கவிதைகளைத் தாங்கள் எழுதிக் குவிக்கலாம். என் கடமையை நான் செய்ய வேண்டியிருக்கிறது. மன்னிக்கவும்."

என்று தழுதழுத்த குரலில் உரைத்துவிட்டு அசைவற்று நின்றான்.

"சிறைச்சாலையில் எனக்கு வசதிகளா, மன்னவா? கிளியை அடைக்கும் கூண்டு இரும்புக் கூண்டாயின் என்ன? பொன் கூண்டாயின் என்ன? அரண்மனையிலேயே சிறை வைப்பதால் என் பெருமை நிலைத்து விடுமா என்ன? துரோகியென்று நீங்கள் எல்லாம் கூறிவிட்ட பிறகு என்னைக் கொன்று போடுவதே சிறந்த தண்டனையாகும். எனக்கும் அமைதி ஏற்படும்." என்று புலவர் மறுமொழி பகன்றார்.

அவர் பேச்சில் நடுக்கமில்லை. கம்பீரமாகப் பேசினார். அரசன் அதற்குப் பதில் கூறவில்லை. வீரர்களை அழைத்து அவர்களிடம் சைகை செய்தான். அவர்கள் புலவரை அழைத்துக் கொண்டு புறப்பட்டனர்.

"வருகிறேன் மன்னவா! வாழ்க!"

- என்று வாழ்த்திவிட்டு வீரர்களுடன் கிளம்பினார் காரிக்கண்ணனார்.

எப்போதும்போல மன்னன் அவனையறியாமலே ஏழடி நடந்து சென்று, அதன் பின்னர், தான் நடந்து வந்ததை உணர்ந்து அப்படியே நின்று பொலபொலவென்று கண்ணீர் உகுத்தான்.

முத்துநகையின் கண்களும் அருவிகளாயின. அவள் அரசனிடம் வந்து "அரசே!" என்று கரகரத்த குரலில் அழைத்ததும், அரசனின் நெஞ்சம் வெடித்துவிடும் போல் ஆயிற்று; "என்னம்மா?" என்று அழுதவாறே கேட்டான்.

"என்னை மன்னித்து விடுங்கள்." - அவள் விம்மியழுதாள்.

"உன்னை மன்னித்து விடலாம். ஆனால், தமிழ்த்தாயை கதறி அழவிட்டு அவளது அன்புப் புதல்வரை அரண்மனையில் அடைக்க உத்தரவிட்டிருக்கிறேனே; அதற்கு நான் யாரிடம் மன்னிப்புக் கேட்பேன்?" என்று குழந்தைபோலச் செருமிச் செருமி அழத்தொடங்கினான், கரிகாலன். அவ்விருவரும் போட்டி போட்டுக் கொண்டு அழுது முடிந்த பிறகு முத்துநகை கரிகாலனிடம் சொன்னாள். "நான் போய் வீரபாண்டியைப் பார்த்துவிட்டு வருகிறேன்" என்று!

"அப்படியொரு ஒற்றன் பாண்டிய நாட்டில் இல்லையென்று நான் விசாரித்த வரையில் தெரிகிறது" என்று சோழன் பதில் கூறினான்.

"பாண்டிய மன்னரால் நியமிக்கப்பட்டவர்தான் அந்த ஒற்றர். தாங்கள் கேட்டவைகள் தவறானவைகளாக இருக்கக் கூடும். வீரபாண்டியைப் பற்றி வீண் சந்தேகம் ஏற்பட வேண்டிய அவசியமே இல்லை. அவருக்கு என்ன ஆயிற்று என்றும் தெரியவில்லை. அவரை நான் உயிரோடு பார்க்கப் போகிறேனா என்பதே சந்தேகந்தான்!" என்று கூறிவிட்டு மீண்டும் அழ ஆரம்பித்தாள் அவள்.

வேதனைக் களத்தில் வீழ்ந்து கிடக்கும் அவளுக்கு மேலும் துன்பம் தர எண்ணாமல், அரசன் அவளைப் போகுமாறு கூறிவிட்டுத் துணைக்குச் சில வீரர்களையும் அழைத்துச் செல்லுமாறு கூறினான்.

"இல்லை! யாரும் தேவையில்லை. நான் தனியாகவே போய் வருகிறேன்- எனச் சொல்லிவிட்டு கரிகாலனிடம் விடைபெற்று முத்துநகை வீரபாண்டியைச் சந்திக்கப் புறப்பட்டுவிட்டாள். அரசரைக் கொல்ல வந்த இருங்கோவேளின் ஆள் கூறிய தகவலிலிருந்து தன் காதலன் உயிரோடு இருப்பான் என்ற நம்பிக்கையே அவளுக்கு இல்லை. அந்தச் சூழ்நிலையில் அவள் மனம் என்ன பாடுபடும்? பாழ் மண்டபத்தினருகிலோ, அல்லது அந்தக் குளத்திலோ தன் ஆசைக் காதலனின் பிணம் கிடக்கும் -அய்யோ! அதைப் பார்த்த பிறகு உயிர் நிற்குமா உடலில்! அப்படிப்பட்ட ஒரு கொடுமையான காட்சிதான் தன்னை வரவேற்கக் காத்திருக்கிறதா? அல்லது மரணத்தோடு போராடிக் கொண்டு ஆதரிக்க யாருமில்லாமல் அவதிப்படுகிற வீரபாண்டியைத் தான் அவள் காணப்போகிறாளா? அப்படியானால் காயம்பட்டு அலறித் துடிக்கும் அவனைத் தழுவிச் சிகிச்சை செய்து உயிர் கொடுத்து விட்டு மறுவேலை பார்க்கலாம் அவள்.

எண்ணங்கள் உந்தித் தள்ள ஓடிக் கொண்டிருந்தாள் பாழ் மண்டபம் நோக்கி.

முத்துநகை, தன் காதலனைத் தேடிச் செல்லும் அதே நேரத்தில் கானகத்தில் மரமாளிகையில் தன் அண்ணிக்கு அருகில் அமர்ந்து கன்னத்தில் கை வைத்தவாறு தாமரை, காதலில் தனக்கு ஏற்பட்ட விபரீதமான தோல்வியை எண்ணிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். 'பிற ஆடவரை மனத்தால் நினைத்தாலும் கற்புக்குக் களங்கம் ஏற்பட்டுவிடும் என்று கூறுவார்களே! அதுபோலத்தான் நம் கற்புக்கும் குறை வந்து விட்டதோ' என்று சந்தேகப்பட்டாள். அந்தச் சந்தேகத்தை ஒரு நொடியில் துடைத்து விட்டு அவளைச் சமாதானப்படுத்தியது அவளது மனச்சாட்சி. ஓர் ஆடவனிடம் மனத்தைப் பறிகொடுத்தால் தானே அப்படி அவள் ஒரு பெண்ணிடம்தானே மனத்தைப் பறிகொடுத்தாள்? அதனால் கற்புப் பற்றிய பிரச்சினைக்கு இடமே ஏற்படவில்லை.

தன் அண்ணன் இருங்கோவேள் கூறியது உண்மையாக இருந்து, தன் காதலன் பெண்தான் என்று நிரூபிக்கப்பட்டு விட்டால் அவளைச் சும்மா விடக்கூடாது. சரியானபடி உடனே பழி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று திட்டம் வகுத்திடத் தொடங்கினாள். தன் மனத்தைக் கட்டுப்படுத்திச் சிந்தனை செய்யத் தவறிய காரணத்தால் எத்தனை பெரிய ஏமாற்றத்தைச் சந்திக்கும் நிலைமை ஏற்பட்டுவிட்டது என்று வருந்தினாள். வெட்கத்துடன் ஆத்திரமும் கலந்து கொண்டது. விழலுக்கு இறைக்கப்பட்ட நீர்போல் அவள் பேசித் தீர்த்த காதல் உரையாடல்கள் எல்லாம் பாழாகிவிட்டன. காட்டில் எரிந்த நிலாப் போல ஆயிற்று அவள் விழியினால் பேசிய விந்தை மொழியெல்லாம்!

அவள் அந்தப் பெண்ணைக் காதலிக்கவில்லை. அந்த பெண் போட்டிருந்த வேடத்தைக் காதலித்தாள்! ஆம். அந்த அழகிய வடிவத் தைக் காதலித்தாள். எழில் கொட்டும் அந்தச் சுந்தரத் திருமுகத்தைக் காதலித்தாள்.

இப்போது அது வெறும் ஊமை ஓவியமாகி விட்டது என்று நினைத்து நினைத்து மனம் புழுங்கினாள். தடாகத்துத் தெளிந்த நீரில் பிரதிபலிக்கின்ற முகத்தை எட்ட இருந்தே பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கலாம். 'என்னே அழகு!' என்று கூறிக் கொண்டே தடாகத்தில் கை வைத்தால் நீரில் ஆடிய அழகு நிழல் குலைந்து போய் விடும். அதே நிலைதான் இப்போது தாமரைக்கு!

அந்த முத்துநகையை எப்படி பழி வாங்கிக் கொள்வது என்ற கவலை தீவிரமாயிற்று. அவள் ஒரு வேஷக்காரி! தனக்கும் தன் அண்ணனுக்கும், ஏன், வேளிர் குலத்துக்கே பகை அவள்! செழியனை மீட்பதற்கு அவள் ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும். ஒருவேளை இருவரும் காதலர்களா? காதல் இல்லாவிட்டால் அவளுக்கு இவ்வளவு கவலை ஏற்பட நியாயமே இல்லை. செழியனின் மனப்போக்கு அதுபோல் இல்லையே. "தாமரை! தாமரை!" என்றல்லவா அவன் தவித்தான்? தன்னை அவன் காதலிப்பதாகச் சொன்னது வெறுங்கதைதானா? நான் பகைவனின் தங்கையென்றதும் அவன் காதலில் தயக்கம் ஏற்பட்டு விட்டதே! செழியன் எதிரி நாட்டுக்காரன். அவனை எப்படி நம்ப முடியும்? எப்படியாவது இதைவிட்டுத் தப்புவதற்குத் தன்னைக் காதலிப்பதுபோல் நடிக்கக்கூடும். நடிப்பு வெளியாகிவிடக் கூடாதே என்பதற்காகச் சற்றுத் தயக்கம் காட்டுவது போலவும் பாசாங்கு செய்யக்கூடும். முன்னதை விட இது மிக உயர்ந்த நடிப்பல்லவா?

முடிவாக உணர முடிவதெல்லாம் செழியனுக்கும் முத்துநகைக்கும் நிச்சயம் ஏதோ ஒருவகைத் தொடர்பு இருக்க வேண்டும்; அந்தத் தொடர்பு, இருவரும் இருங்கோவேளின் பகைவர்கள் என்ற தொடர்பாக மட்டும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு சாதாரணத் தொடர்பு ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்பட வேண்டிய அவசியமுமில்லை. செழியன், அவளைக் காதலிக்கவில்லையென்று வலிந்து ஓர் ஆறுதலான முடிவுக்கு வந்தாலும், முத்துநகை நிச்சயமாகச் செழியனைக் காதலிக்கிறாள். அதனால்தான் அவனை விடுவிப்பதற்காகத் தன் உயிரையும் உதிர்ந்த சருகாக எண்ணிப் பகைவரின் குகைக்குள்ளே நுழைந்திருக்கிறாள். நுழைந்தவள் தன் காரியத்தைப் பார்த்துக் கொண்டு தொலைந்திருக்கக் கூடாதா? இந்தத் தாமரை தானா கிடைத்தாள் அவளுக்குக் கருவியாக? அட தெய்வமே! தாமரை இலையில் விழுந்த தண்ணீர்தான் முத்துப்போல உருண்டு ஓடி ஓடித் தவிக்கும், பார்த்திருக்கிறேன். இப்போது தாமரையல்லவா தவிக்கிறது?

இதற்குப் பழி தீர்க்காமல் விடக்கூடாது; அவளுடைய மனம் எரிமலையாக மாற வேண்டும். திரும்பிய பக்கமெல்லாம் குளவிகள் கொட்டுவதுபோல் அழவேண்டும் அவள்! எந்தக் காதலனை மீட்பதற்காக என்னைப் பைத்தியக்காரியாக ஆக்கினாளோ, அந்தக் காதலன் அவளுக்குக் கிடைக்காமல் போகும்படி செய்ய வேண்டும். அதற்கு வழி இங்கு சிறையிலுள்ள செழியனைத் தொலைத்துவிடுவதா? தொலைத்தால் அவளுக்கு வேதனை-துயரம்- இத்தோடு முடிந்துவிடும். அவனை உயிரோடு வைத்து அவனைக் கொண்டே அவளை அணு அணுவாகக் கொல்லவேண்டும். அவனுக்காக எவ்வளவோ இன்னல்களை ஏற்றுக் கொண்டும் கடைசியில் அவன் தன்னை ஏமாற்றி விட்டானே என்று அவள் துடித்துக் கதற வேண்டும்.

அதற்கு ஒரே ஒரு வழி செழியனை என்னுடையவனாக்கிக் கொள்வதுதான். என் மடியில் செழியன் சயனித்திருக்க வேண்டும். நான் அவனது சுருண்டு வளர்ந்த தலைமுடியை என் காந்தள் விரல்களால் வருடிக் கொண்டிருக்க வேண்டும். அந்தக் காட்சியை அவள் காண வேண்டும்; பதற வேண்டும்; 'பாவி! பாதகா! என்னை ஏமாற்றி விட்டாயே!' என்று செழியன் மீது அவள் பாய வேண்டும்; செழியன் அவளை எட்டி உதைக்க வேண்டும்; கலகலவெனச் சிரிக்க வேண்டும். 'ஆகா! இதுவன்றோ முத்துநகை! இவளா முத்துநகை? பெயரைப் பார் பெயரை!' என்று அவன் அவளை மேலும் மேலும் இகழ வேண்டும்; என்னைப் புகழ்ந்த அவன் வாயை நான் என் இதழ்க் கதவுகளால் சாத்திட வேண்டும். அங்கு அதற்கு மேல் நிற்க முடியாமல் அந்த ஏமாற்றுக்காரி கோவெனக் கத்திக் கொண்டு ஓட வேண்டும்; இப்படிப் பழி தீர்த்துக் கொண்டால்தான் என் ஆத்திரம் அடங்கும்; என் மனம் அமைதி அடையும்; ஆறுதல் பிறக்கும்!

இவ்வாறு பழி வாங்கும் திட்டத்தை மனத்திற்குள் நிறைவேற்றிக் கொண்டு தாமரை உட்கார்ந்திருக்கும் போது, அவளை அறியாமலே அவள் முகம் அந்தி வானத்துச் செந்நிறமாய் ஆகிவிட்டதை அவள் கண்ணாடியிற் காணாவிட்டாலும் அருகிலேயே படுத்துப் பிணியால் வாடிக் கொண்டிருந்த அரசி கவனித்து விட்டாள்.

"என்னம்மா! முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது? உள்ளத்திலே ஊமை நாடகத்தின் உச்சக்கட்டம் நடைபெறுகிறதா?" என்று கேட்டுவிட்டு இரும ஆரம்பித்தாள்.

"ஒன்றுமில்லை அண்ணி," என்று தாமரை சடக்கென்று பதில் சொன்னாலும், 'ஊமை நாடகம்' என்று அண்ணி வர்ணித்ததற்கு அவளால் பொருள் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை அண்ணியிடத்திலும் அண்ணன் விஷயத்தைக் கூறியிருப்பாரோ என்ற ஐயம் அவளை ஆட்டிப்படைத்தது. மிகக் கஷ்டப்பட்டு முகத்தை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டு அண்ணியின் அருகில் சென்று மருந்தைக் கலக்கிக் கொடுத்தாள்.

"எங்கேயம்மா அந்த மருத்துவன்? ஆளையே காணோம்...?" என்று அரசி ஆவலுடன் கேட்டால்.

"பச்சிலை பறிக்கப் போனவன் இன்னுமா திரும்பவில்லை? அடப்பாவமே ஏதாவது மலைப்பாம்புகளின் வாயைக் குகையென்று நினைத்து, பச்சிலை பறிக்க உள்ளே புகுந்து வயிறு வரையில் சென்று அங்கேயே குடியிருக்கிறானா?" என்று தொடர்ந்து கேலியாகக் கேட்டாள் அண்ணி.

பேச்சை மாற்றுவதற்குப் பெரிதும் விரும்பிய தாமரை "அண்ணி, அவன் எங்காவது தொலையட்டும்! அண்ணனை இன்னும் காணவில்லையே; எங்கேபோனார்? எப்போது வருவார்?" என்றாள்.

"அந்தக் கவலையில்தான், அவர் வெளியில்சென்றால் திரும்பி வரும் வரையில் என் நெஞ்சு 'திகீர் திகீர்' என்று பற்றியெரிந்தவாறே இருக்கிறது. ஒவ்வொரு சமயமும் உயிரைப் பணயமாக வைத்துத்தான் உன் அண்ணன் வெளியில் கிளம்புகிறார்!"

"எனக்கென்னவோ அண்ணி இந்தப் பயங்கரத்தை அனுபவிப்பதை விடக் கரிகால் சோழருடன் சமாதானம் செய்து கொண்டு அவருக்கு அடங்கியே இருக்கலாம் என்று தோன்றுகிறது."

"அய்யோ, இதைச் சத்தம் போட்டுச் சொல்லாதே! அவர் கேட்டுக் கொண்டு வந்தாலும் வருவார். சோழரைப் பழி தீர்த்துக் கொள்வதைத் தவிர வேறு வாழ்க்கை இலட்சியமே இல்லையென்பதுதான் உன் அண்ணனின் முடிவு. அதற்காகவே அவர் உயிர் வாழ்வதாகக் கூறிக் கொண்டிருக்கிறார்!"

"நிறைவேறக் கூடிய இலட்சியமா அண்ணி அது?"

"என்னைக் கேட்டால் நான் எப்படிக் கண்ணே பதில் கூறுவேன்? அவரைத் தடுக்க நாம் யார்? அப்படித்தடுக்கும் முயற்சியில் வெற்றி பெற இயலவில்லையென்பது உனக்குத் தெரியாதா என்ன? அம்மா தாமரை! நான் ஒன்று சொல்லுகிறேன் கேள்! நான் இன்னும் அதிக நாள் உயிர் வாழப் போவதில்லை!"

"அய்யோ! அப்படியெல்லாம் சொல்லாதீர்கள், அண்ணி!"

"நானே உணர்கிற உண்மையைச் சொல்லக்கூடாதா? என் உடலையும் உயிரையும் அனேகமாக நோய் அரித்துத் தின்றுவிட்டது. உன் அண்ணனின் இலட்சிய முடிவைப் பார்க்காமல் நான் செத்தாலும் செத்துவிடக்கூடும். தப்பித் தவறிச் சாவதற்குச் சிறிது தாமதமானால் கொஞ்சம் உடம்பில் தெம்பு வந்தாலும் போதும்; உன் அண்ணனின் இலட்சியம் ஈடேற என்னால் ஆன பங்கைச் செலுத்தவே விரும்புகிறேன். என் எண்ணம் ஈடேறாமல் நான் போய் விட்டால், நான் சொல்வதை நீ கட்டாயம் கேட்கவேண்டும்! கேட்பாயா தங்கமே?"

"கேட்கிறேன் அண்ணி, சொல்லுங்கள்!"

"சீரோடும் சிறப்போடும் வாழ்ந்தவர் என் ராஜா. கவலைகள் அவரைத் தொட்டது கிடையாது அப்போது! முகத்திலே சிந்தனை ரேகைகள் படர்ந்து நான் கண்டது கிடையாது அன்று ஆனால் இன்று அவர் கவலைகளின் உறைவிடமாகிவிட்டார். நான் ஒன்று கேட்டால் அவர் ஒன்று சொல்கிறார். எங்கேயோ சிந்தனை, எதைப் பற்றியோ நினைவு. தொல்லைகளில் உழலும் அவருக்கு எள்ளளவு அமைதி வழங்கவும் இந்தப் பாவிக்குக் கொடுத்து வைக்கவில்லை நான் போன பிறகு அவருக்கு என்னைப் பொறுத்த வரையில் நிம்மதிதான். ஆனால் இலட்சியத்தைப் பொறுத்தவரையில் அவருக்கு அமைதி ஏற்படவும் - வெற்றி கிட்டவும் நீ தான் அவருக்கு உதவியாக இருக்க வேண்டும். அண்ணன் பேச்சுக்கு மறுபேச்சுப் பேசக்கூடாது. இழந்த பொன்னாட்டை மீட்பதற்கும். இலட்சிய வெற்றி காண்பதற்கும் அவர் படும் கஷ்டங்களின் பயன் அத்தனையையும் நீதானே அனுபவிக்கப் போகிறாய்? உன் எதிர்காலத்துக்கும் சேர்த்துத்தானே அவர் போராடுகிறார், அதை மறந்துவிடாதே! என்ன; நான் சொல்வதைக் கேட்பாயா?" என்று கேட்டுக் கொண்டே தேம்பித் தேம்பி அழுதாள் வேளிர்குலத்து அரசி.

தாமரையும் “அண்ணி"! என்று கதறிக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.

உணர்ச்சியை அள்ளிக் கொட்டிப் பேசியதால் அரசிக்கு இருமல் அதிகமாயிற்று. ஓயாமல் இருமி இருமித் துடித்துத் துவண்டாள். நெஞ்சாங்குழாய் எல்லாம் வலி கண்டு "அய்யோ! அம்மா! அப்பா!" என்று கத்திக் கொண்டேயிருந்தாள். கண்களிலேயிருந்து தடைபடாமல் நீர் வழிந்து கொண்டேயிருந்தது.

தாமரை, தகுந்த சிகிச்சைகள் செய்து அரசியைக் களைப்பு நீக்கிப் படுக்க வைப்பதற்குள் மிகவும் பயந்து விட்டாள். இதுதான் அண்ணியின் கடைசிக் கட்டம் போலும் என்று அவள் தீர்மானித்துக் கொண்டு, அண்ணனையும் காணோமேயென்று அலறித் துடித்தாள். ஆனால் அவள் பயந்தது போல் ஒன்றும் நடந்து விடவில்லை. அரசி சிறிது நேரத்திற்கெல்லாம் கண்ணயர்ந்து விட்டாள்.

தாமரையின் சிந்தனை மீண்டும் சிறகு கட்டிக் கொண்டு புறப்பட்டது. முத்துநகையைப் பழி வாங்க. தான் போட்ட திட்டமும் - அண்ணியின் வேண்டுகோளும் வெவ்வேறு திசை நேர்க்கோடுகளாகப் போகாமல் ஒவ்வொன்றும் வளைந்து கொடுத்து ஒன்றையொன்று தொட முயல்வதாகவே எண்ணினாள். தரையில் பச்சிலை ஒன்றினால் அவள் இழுத்த இரண்டு வளைவுக் கோடுகளும் அவளுக்கு அந்தக் கருத்தை நினைவூட்டின.

தாமரை, செழியனைக் காதலித்து அவனைத் தன்னுடையவனாக ஆக்கிக் கொண்டால் ஒரே கணையில் இரண்டு மான்கள் வீழ்ந்தது போலத்தான்! முத்துநகையையும் பழிவாங்கிக் கொள்ளலாம். செழிய னைக் கொண்டே இருங்கோவேளின் இலட்சியத்தையும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று திட்டம் தீட்டினாள் அவள்.

அப்போது புரண்டு படுத்த அரசி திடுக்கிட்டவளாய் எழுந்து "தாமரை! தாமரை கொண்டுவா ஒரு குதிரையை!" என்று கத்தினாள். "அண்ணி! அண்ணி!" என்று தாமரை எழுந்து ஓடினாள். "எனக்குத் தெம்பு வந்து விட்டது தாமரை! புதிய பலம் வந்து விட்டது. நான் ஒருத்தியே கிளம்பிச் சோழனிடம் செல்கிறேன். அவனைப் பழிவாங்கு கிறேன். என் நாயகனின் இலட்சியத்தை நிறைவேற்றுகிறேன். இப்படி ஒரு கனவு கண்டேன். அந்தக் கனவு இப்போதே பலிக்கப் போகிறது. கொண்டுவா குதிரையை!" என்று கட்டிலை விட்டுக் கீழே குதிக்க முயன்றாள் அரசி.

சரி! அண்ணிக்குக் குளிர்கண்டு விட்டது என்று தீர்மானித்த தாமரை அவளைப் பலவந்தமாகப் படுக்க வைத்துத் தோழிகளை விட்டு மருத்துவர்களை அவசரமாக அழைத்துவரச் சொன்னாள். மருத்துவர்கள் ஓடிவந்து பயம் ஒன்றுமில்லையென்று கூறிவிட்டுத் தூங்குவதற்கான மருந்து கொடுத்து அரசியாரைத் தூங்க வைக்க முயன்றார்கள்.

"அவர் எங்கே? அரசர் எங்கே ? என் ராஜா எங்கே?" என்று கேட்டவாறே அரசி தூங்க ஆரம்பித்தாள்.

தாமரையும் பெருமூச்சு விட்டு ஆறுதலடைந்தாள்.

"அவர் எங்கே? என் ராஜா எங்கே?" என்று மரமாளிகையில் அரசி கதறியது போலவே முத்துநகையும் கதறிக் கொண்டு பாழ்மண்டபத்துக்கு வந்து சேர்ந்தாள். பரபரப்புடன் சுற்று முற்றும் பார்த்தாள். குளக்கரைக்கு ஓடினாள். படித்துறையில் தேடினாள். எந்த அறிகுறியும் தென்பட வில்லை, அவள் மனம் பட்டபாட்டை அவளைத் தவிர வேறு யாரால் வர்ணிக்க இயலும்?

படித்துறைகளில் இரத்தத் துளிகள் காய்ந்து கருமை நிறம் பெற்றுக் காட்சியளிப்பதைக் கண்டு, "ஓ!" வென அலறிக் கண்களைப் பொத்திக் கொண்டாள். மண்டபத்திலும் இரத்தம் உறைந்து கிடந்தது. அது தன் காதலனின் இரத்தம்தான்! அந்த இரத்தக்கறையின் மீது முகத்தைப் பதித்துக் கொண்டு முத்துநகை "அத்தான். அத்தான்!" என்று கதறிய கொடுமையைக் கண்டு அவளுக்கு ஆறுதல் கூற அங்கு யாரும் இல்லை.

எழுந்தாள், வெறிகொண்டவளைப் போல! தடாகத்தை நோக்கினாள். "எங்கே என் அத்தான்?" என்று அழுதாள். தூணும் அந்தக் கேள்விதான் கேட்டது.

அதே மண்டபத்தில் - அதே குளக்கரையில் - அவளும் அவள் ஆசை அத்தானும் பேசியதும் பழகியதும் நினைவுக்கு வராமல் போகுமா?

நினைவுகள் ஈட்டிகளாக மாறி வதைத்தன. உடல் நெருப்பாக எரிந்தது. குளத்தில் குதித்தாள். முழுகி முழுகி எழுந்தாள். அத்தானின் பிணத்தைத் தேடத் தொடங்கினாள். அவள் கையில் எதுவும் சிக்கவில்லை.

கடைசித் தடவையாக அவள் முழுகி எழுந்தபோது அவள் கையோடு ஓர் உடை வந்தது. ஆம் அது அவன் அணிந்திருந்த உடைதான்! 'அத்தான் மேனியில் இருந்த உடையேதான். அந்த உடையை மாறிமாறி முத்தமிட்டுக் கதறினாள்; புலம்பினாள். மீண்டும் குளத்தில் தேடினாள். ஏமாற்றத்துடன் கரையேறி மண்டபத்துக்கு வந்தாள். மண்டபத்து இடிந்த சுவரில் எழுதப்பட்டிருந்த எழுத்துக்கள் அவள் கண்களை இழுத்தன. அருகே ஓடி அதைப் படித்தாள். காட்டுப் பச்சிலை களால் எழுதப்பட்ட அந்த எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேலாக மாறி அவள் கண்களைக் குத்தின.

"இந்த மண்டபத்தில் ஒரு வீரன் குற்றுயிராய்க் கிடந்தான். யாரும் துணையில்லை. செத்துக் கொண்டே இருந்த அவனைத் தூக்கிப் பிழைக்க வைக்க முயற்சி செய்தோம், முடியவில்லை. 'நீ யார்?' என்று கேட்டோம். 'இருங்கோவேள்! இருங்கோவேள்; முத்துநகை! முத்துநகை!' என்று கூறிக் கொண்டே உயிர்விட்டான். மண்டபத்துக்கு அருகே அவன் சடலத்தை அடக்கம் செய்து விட்டுத் திரும்பி விட்டோம்.

இங்ஙனம்
வழிப்போக்கர்"

இதைப் படித்த முத்துநகை "அய்யோ அத்தான்!" என்று தலையைச் சுவரில் முட்டிக் கொண்டு மயக்கமுற்றுத் தடால் எனக் கீழே சாய்ந்தாள்.

வெகு நேரத்திற்குப் பிறகு முத்துநகை மயக்கம் தெளிந்து மெல்ல மைகளைத் திறந்து பார்த்தபோது அவளுக்கு மீண்டும் மயக்கம் வரும்போல் ஆகிவிட்டது. பாழ்மண்டபத்தின் சுவரில் எழுதப்பட்டிருந்த அந்த எழுத்துக்களைப் படித்ததும், படிக்கும்போதே நினைவு கலங்கிய தும் அவளுக்கு ஞாபகத்திற்கு வந்தன. 'மயக்கமுற்று மண்டபத்திலே தானே விழுந்தோம்? இப்போது வேறிடத்தில் அல்லவா இருக்கிறோம்?' என்று அதிர்ச்சி அடைந்தாள். விழிகளை மெதுவாகச் சுழலவிட்டாள். நிச்சயமாகத் தான் இருக்குமிடம் மண்டபம் இல்லையென்பதைப் புரிந்து கொண்டாள். மரத்தாலான ஒரு வீட்டுக்குள் அவள் படுக்க வைக்கப் பட்டிருப்பதை உணர்ந்தாள்.

இது என்ன புதிய வீடா? அல்லது இருங்கோவேளின் பழைய மரமாளிகைதானா? இளைத்துப்போன நினைவுகளுக்குத் தெம்பு ஏறிற்று. இருங்கோவேளின் மரமாளிகையில் தான் கிடத்தப்பட்டிருக்கிறோம் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டாள். தன் படுக்கைக்கு அருகே ஒரு தட்டில் பழங்கள் வைக்கப்பட்டிருந்தன. ஒரு கிண்ணத்தில் பழரசம் இருந்தது. இவ்வளவு அக்கறையாகத் தன்னை யார் கவனித்திருக்க முடியும்? கேள்வி எழுந்தது. அத்தோடு பதிலும் பிறந்தது. எல்லாம் அந்தப் பைத்தியக்காரி தாமரையின் வேலையாகத்தான் இருக்குமென்று முடிவு கட்டிக் கொண்டாள்.

அவளையறியாமல் அவள் கண்கள் நீரைப் பொழிந்து கொண்டேயிருந்தன. தான் மயங்கி விழுந்த பிறகு தாமரை மண்டபத்திற்கு வந்திருக்க வேண்டும்; அவள் தான் இங்கே கொண்டு வந்திருக்க வேண்டும் என்று அவள் முடிவு செய்து கொண்டாள். சுவரில் எழுதப்பட்டிருந்த அந்த எழுத்துக்கள் அவள் கண்களின் எதிரே பயங்கரமாகக் கூத்தாடிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு எழுத்திலிருந்தும் இரத்தம் கொட்டுவது போலத் தெரிந்தது. "அத்தான்! அத்தான்!" என்று அவள் இதயம் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

அவள் கன்னங்களில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரை ஒரு பெண்ணின் கரம் மெதுவாகத் துடைத்தது. அந்தக் கரத்தின் பக்கம் முத்துநகை திரும்பினாள். தாமரைதான் அங்கே உட்கார்ந்திருந்தாள்.

"அத்தான்!" என்று தாமரையின் இதழ்கள் மெல்ல உச்சரித்தன.

உடனே முத்துநகைக்குத் தன்னைச் சரிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அவசர உணர்ச்சி தோன்றியது. படுத்திருந்தவள், தன்மேல் அணிந்திருந்த ஆண் உடை சரியாக இருக்கிறதா என்று மார்பகத்தைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள். திகீர் என்றது அவளுக்கு, திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தாள். தன்னை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்துக் கொண்டாள். தான் ஆண் வேடத்தில் இல்லை, பெண்ணாகவே இருக்கிறோம் என்பதை உடனே தெரிந்து கொண்டாள். தன் வேடத்தை கலைத்தது யார்? தாமரையாகத்தான் இருக்குமோ? யார் கலைத்தால் என்ன? தாமரைக்கும் தன் தந்திரங்கள் புரிந்துவிட்டன. தானும் இங்கு வந்து சிக்கிக் கொண்டாகிவிட்டது. புதிய புதிய ஆபத்துக்கள் ஏதேதோ காத்திருக்கின்றன என்று அவள் தீர்மானித்துத் தாமரையைச் சற்று வெட்கத்தோடும் கோபத்தோடும் பார்த்தாள்.

தாமரை மிகுந்த சினத்துடன் இருக்கிறாள் என்பது அவள் பார்வையிலேயே புரிந்தது. யார் முதலில் பேசுவது என்ற பிரச்சினையும் இருவரிடையே பலமாக எழுந்தது.

யார்தான் முதலில் பேச முடியும்? ஒருத்தி ஏமாந்தவள்; இன்னொருத்தி ஏமாற்றியவள். இருவரிடையே நடமாடியதோ காதல் விவகாரம். தன் உள்ளத்தைக் கொள்ளையடித்து இறுதியில் பெருத்த அவமானத்திற்கு உள்ளாக்கிவிட்ட ஒரு வஞ்சகியைப் பழிவாங்கிக் கொள்ளச் சரியான சந்தர்ப்பம் கிடைத்தது என்று எண்ணிக் கொண்டே தாமரை அவளைப் பயங்கரமாக நோக்கினாள். வாழ்வில் பேரிடியே விழுந்துவிட்டது. இனி என்ன வந்தால் என்ன என்ற துணிவோடு முத்துநகை உள்ளத்தைத் திடப்படுத்திக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். தாமரை வேண்டுமென்றே முத்துநகையின் தங்கம் மின்னும் அங்கங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் செய்கையில் வெறுப்புற்ற முத்துநகை சற்றுக் கடுமையான குரலில் "என்ன பார்க்கிறாய்?" என்று கேட்டாள்.

"ஒன்றுமில்லை, இந்த வாளிப்பான உடம்பை வைத்து எத்தனையோ வாலிபர்களை மயக்கியிருக்கலாமே - நான் தானா கிடைத்தேன் உனக்கு, என்று சிந்தனையை ஓட விடுகிறேன்" என்றாள் தாமரை.

"இப்பொழுது நான் சிறைப்பட்டிருப்பதாக அர்த்தமோ?" என்று கேட்டாள் முத்துநகை.

"அப்படியே நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். சிறைப்பட்ட காதலரை விடுவிப்பதற்கு இத்தனை நாள் ஆண் உடைக்குள் சிறைப்பட்டிருந்தாய்; இப்போது எங்கள் அரண்மனைக்குள் சிறைப்பட்டிருக்கிறாய்."

முத்துநகை தன் திட்டங்களெல்லாம் தவிடுபொடியாகியதாக எண்ணிக் கலங்கினாள். இனிமேல் தாமரையிடம் பேசுவதால் எந்தப் பயனும் இல்லை என்றும் முடிவு கட்டிக் கொண்டாள். அவளைத் தான் ஏமாற்றவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதற்காக ஏதாவது போலிக் காரணங்களை காட்டலாம் என்று எண்ணியிருந்தாள். ஆனால் அந்த எண்ணமும் பலிக்காது என்பது தாமரையின் பேச்சிலிருந்து நன்றாக விளங்கிவிட்டது. செழியனை மீட்டுச் செல்வதற்காகவே தான் ஆண் வேடம் பூண்டு வந்ததாகத் தாமரை கண்டுபிடித்து விட்டாள். இனிமேல் நடப்பது நடக்கட்டுமென்று பேசாமல் இருக்க வேண்டியதுதான்.

தப்பித்துக் கொள்ள வேறு வழியில்லை. திடீரென்று இந்தச் சூழ்நிலையைத் தலைகீழாகக் கவிழ்க்கக் கூடிய மகத்தான மாறுதல்கள் ஏற்பட்டாலன்றித் தனக்கு விடுதலை இல்லை; செழியனுக்கும் விடுதலை இல்லை.

இப்படிப்பட்ட முடிவுகளால் முத்துநகை தன்னைத் திடப்படுத்திக் கொண்டாள். தாமரைக்கு, முத்துநகையைக் கேலி செய்து ஆத்திர மூட்ட வேண்டும் என்று தோன்றியது. ஏனெனில் அவளுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் அத்தகையது. அவள் சந்தித்த அந்த அவமானமிக்க சூழ் நிலையை அவளைப் போல் அனுபவித்துப் பார்த்தவர்களால்தான் வர்ணிக்க இயலும். எத்தகைய கொந்தளிப்பை நெஞ்சத்தில் உண்டாக்கக் கூடிய சம்பவம் அது என்பதையும், அனுபவித்தவர்களே புரிந்து கொள்ள முடியும்.

"சரியத்தான், நான் போய்வருகிறேன். நிம்மதியாகத் தூங்குங்கள்" என்று அவள் எழுந்தாள்.

"போய் வாடி ஏமாளி!" என்றாள் ஆத்திரமாக முத்துநகை.

"ஏனத்தான் கோபித்துக் கொள்கிறீர்கள்? என் ராஜா! இப்படி யெல்லாம் ஆத்திரப்படலாமா? கண்ணாளா! கண்ணயருங்கள்!" என்று மீண்டும் கேலி புரிந்தாள் தாமரை.

பதில் கூறாமல் இருப்பதுதான் நல்லது என்று கருதியவளாய் முத்துநகை வேறு பக்கம் திரும்பி உட்கார்ந்து கொண்டாள். சற்று நேரம் அங்கேயே நின்று விட்டுத் தாமரை வெளியேறினாள். அவள் வெளியேறியதைத் தொடர்ந்து கதவு சாத்தப்பட்டு வெளியே பூட்டப்படுவதைக் கவனித்தாள் முத்துநகை.