ரோமாபுரிப் பாண்டியன்/16. வேளிர்குடிப் பேரரசி
16
வேளிர்குடிப் பேரரசி
பாழ்மண்டபத்தில் முத்துநகை மயக்கமுற்று விழுந்ததும் அருகிலுள்ள புதர் மறைவிலிருந்து இரண்டு பேர் ஓடி வந்தார்கள். அவர்களில் ஒருவன் இருங்கோவேள்; இன்னொருவன் இருங்கோவேளின் ஆள் விழுந்து கிடந்த முத்துநகையை இருங்கோவேள் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு முகத்தைப் பார்த்தான். மூச்சு இழைந்துக் கொண்டிருந்தது. உடனே தன் ஆளை அனுப்பிக் குதிரையைக் கொண்டு வரச் சொல்லி, முத்துநகையையும் குதிரையில் ஏற்றிக் கொண்டு மரமாளிகை நோக்கிப் பறந்து விட்டான். மரமாளிகையில் தன் தங்கை தாமரையின் அறையில் அவளைப் படுக்கவைத்துத் தங்கையிடம் ஒப்புவித்து விட்டு வெளியேறினான்
"என் பேச்சை நீ நம்புவதற்கு மறுத்தாயே, இதோ கொண்டு வந்து விட்டேன் உன் காதலனை, இனிமேலாவது அண்ணன் வார்த்தை சரிதானா என்று சோதித்துப் பார்!" என்று கூறி முத்துநகை வெளியேற முடியாதபடி காவல் போட்டுவிட்டுச் சென்றுவிட்டான்.
அவன் போனபிறகு நடந்த நிகழ்ச்சிதான் முதலில் தீட்டிக்காட்டப் பட்டது.
அன்றிரவு மரமாளிகையில் என்றுமில்லாத அமைதி குடி கொண்டிருந்தது. காரணம், இருங்கோவேள் முகம் மிகவும் சோகமாகக் காட்சியளித்ததுதான் போலும். தலைவனின் முகத்தில் செழிப்பில்லை என்றதும் வீரர்களுக்கு உற்சாகம் எங்கிருந்து வரும்? அதனால் அவர்கள் அன்றிரவு கூத்து, கும்மாளம் எதுவுமின்றிச் சோர்வுடன் காணப்பட்டார்கள்.
கரிகாலனை பழிவாங்குவதற்குத் தான் செய்த அருமையான முயற்சி தோல்வியடைந்ததே என்பதை எண்ணி எண்ணி இருங்கோவேள் சோர்வுற்றான்; அத்தோடு முத்துநகையின் பிரச்சினை வேறு அவனுக்குப் பெருங்குழப்பமாக வந்து முடிந்தது.
தன்னை உயிரினும் மேலாக நேசிக்கும் ஒருத்தி தன்னையே பழிவாங்கத் துடித்து நிற்கிறாள் என்று எண்ணும்போதும், அவளைத் தான் ஏமாற்றி அவளது காதலுக்கு பெருஞ்சோதனையை உண்டாக்குவதை நினைக்கும்போதும் அவனால் அந்தச் சிக்கலை எப்படி அவிழ்ப்பது என்றே தோன்றவில்லை. திண்டாடினான்.
இந்தக் குழப்பங்களோடுதான் அவன் அன்றிரவு தன் ராணியைப் போய் சந்தித்தான். கணவனின் முகத்தில் என்றுமில்லாத சோகம் கப்பியிருப்பதைக் கண்டு அரசி கலங்கினாள். தன் கணவன் பல நாட்களாகவே சோகச் சிலையாக மாறிவிட்டான் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தாலும் அன்றைய தினம் அவள் கண்ட இருங்கோவேள் நடைப்பிணம் போல் தோன்றியதை அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அரசியின் அருகே சென்று இருங்கோவேள் அமர்ந்தான். இருவரின் விழிகளும் உறவாடிக் கொண்டன. அரசி கண்ணீர் வடித்தாள்.
கரகரத்த குரலில் இருங்கோவேள், "அழாதே கண்ணே!" என்று ஆறுதல் கூறி அவளைத் தன் அகன்ற மார்பின் மீது சாய்த்துக் கொண்டான்.
"இந்தச் சோகத்திற்கு முடிவே கிடையாதா?” என்று அவள் கேட்டாள். மன்னன் பதிலுரைக்கவில்லை.
"இந்த வாழ்க்கையில் மாற்றமே இல்லையா?" இருங்கோவேளின் உதடுகள் அசைந்தன.
"ஏனில்லை! இருங்கோவேள் தன் இலட்சியம் நிறைவேறாமல் சாகமாட்டான்” என்று அழுத்தந்திருத்தமாகக் கூறினான்.
"அந்தக் கரிகால் மன்னர் ஒழிக்கப்பட வேண்டும்; அது தானே உங்கள் இலட்சியம்?” என்று ஆத்திரத்தோடு கேட்டாள் அரசி.
"ஆம் கண்ணே! அதுதான் நமது இலட்சியம்; ஏன் உனக்குப் பிடிக்கவில்லையா, இந்த இலட்சியம்?"
"என் ராஜாவின் இலட்சியமே என் இலட்சியம். அந்த இலட்சியம் நிறைவேற இந்த உயிர் போனாலும் எனக்கு எவ்வளவோ மகிழ்ச்சி. ஆனால் கேவலம் இருமல் அல்லவா என் உயிரை வாங்கிவிடும் போலிருக்கிறது!" என்று கூறியவாறு இரும ஆரம்பித்தாள்.
இப்போதும் கடுமையான இருமல், நெஞ்சுவலி, தாமரை ஓடி வந்து சிகிச்சையில் ஈடுபட்டாள்.
நீண்ட நேரக் கஷ்டத்துக்குப் பிறகு அரசியைப் படுக்க வைத்துத் தூங்கச் செய்துவிட்டுத் தாமரை படுப்பதற்குப் போய்விட்டாள். அதுவரையில் அங்கேயே உட்கார்ந்து ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டிருந்தான் இருங்கோவேள் முத்துநகையைச் சோதிப்பதற்காகச் சுவரில் எழுதி வைத்த அந்த எழுத்துக்களைக் கண்டு அவள் அலறிக் கீழே சாய்ந்த காட்சி அவனை ஓர் உலுக்கு உலுக்கும். அதே சமயம் அரசியின் பயங்கர இருமலும் அந்த இருமலினிடையே, “என் ராஜாவின் இலட்சியத்தை நானும் நிறைவேற்றுவேன்" என்று அரசி கூறுவதும், அவன் இதயத்தை உசுப்பும். கரிகாலனின் உருவம் எதிரே வந்து நின்று "அடே! இருங்கோவேள்! என்னை உன் சூழ்ச்சி ஒன்றும் செய்யாது!" என்று நகைமுழக்கம் செய்வது போலிருந்தது.
தாமரை போன பிறகு இருங்கோவேள் மனைவியின் கால் பக்கம் போய் அமர்ந்து, அவள் கால்களைத் தடவிக் கொண்டே இருந்தான். முரட்டுக் குணம் படைத்த அவன் இதயத்திலிருந்து கிளம்பிய சோகப் பெருவெள்ளம் கண்களின் வழியே உடைப்பெடுத்து ஓடிக் கொண்டிருந்தது.
அரசி திடுக்கிட்டு எழுந்தாள். கால்களை வருடிக் கொண்டிருக்கும் கணவனின் கரங்களை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டாள். அவனை அப்படியே ஆரத்தழுவி அவன் கால்களில் தன் தலையை வைத்துக் கொண்டாள். ஒருவருக்கொருவர் பேசாமலே தங்கள் உணர்ச்சிகளைப் பரிமாறிக் கொண்டனர். பின்னர் இருங்கோவேள் அரசியை ஒழுங்காகப் படுக்க வைத்துவிட்டு அவள் கன்னத்தை வருடிவிட்டு அந்த அறையினின்றும் வெளியேறினான். அரசியும் கண்ணை மூடிக் கொண்டு படுத்திருந்தாள்.
வெளியேறிய இருங்கோவேள், முத்துநகை பூட்டப்பட்டிருந்த அறையின் வழியாகச் சென்று அங்குள்ள பலகணியில் எட்டிப்பார்த்தான். அவள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். பின்னர் அங்கிருந்து தன் மாளிகைக்குச் சென்று கட்டிலில் தடால் என விழுந்து உறங்குவதற்கு முயற்சி செய்தான். மாளிகையின் உள்ளும் புறமும் நடுநிசியின் பயங்கர அமைதி குடிகொண்டிருந்தது. அரசி மட்டும் தூங்காமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள். மெதுவாக எழுந்து உட்கார்ந்தாள். மெல்லப் பலகணி வழியே, வெளியே எட்டிப் பார்த்தாள். ஒரே அமைதி! காற்றில் மரங்கள் அசைந்து ஏற்பட்ட சலசலப்பைத் தவிர வேறு ஒலியில்லை. எங்கேயோ தொலைவில் நரியின் ஊளைச் சத்தம் விட்டு விட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது.
அரசி, தாமரை படுத்திருந்த இடத்திற்குப் போய்க் கவனித்துப் பார்த்தாள். தாமரையும் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். தோழிகள் படுத்திருந்த இடத்தைக் கவனித்தாள். அவர்களும் அயர்ந்த உறக்கத்தில் கிடந்தனர். அடிமேல் அடிவைத்து இருங்கோவேளின் தேவி, தான் படுத்திருந்த இடத்தைவிட்டு நகரத் தொடங்கினாள். இருமல் அவளைக் காட்டிக் கொடுக்க முனைந்தது. மிகச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள்.
மாளிகைக்கு வெளியே வந்து விட்டாள்; குதிரைக் கொட்டடிக்கு வந்து சேர்ந்தாள். குதிரைகள் கனைத்துக் கொண்டும், தீனி தின்று கொண்டும் அமைதியற்று நின்று கொண்டிருந்தன. கொட்டடிக்குள் நுழைந்தாள்; அவளையும் மீறி இருமல். காவலன் விழித்துக் கொண்டான்.
“யார் அது?” என்று அருகே ஓடிவந்தான். கையிலிருந்த தீப்பந்தத் தால் முகத்தைப் பார்த்தான்.
அரசி, அதிகார தோரணையில் "ஸ்! சும்மா இரு! ஒரு குதிரையை அவிழ்த்துவா!" என்று கட்டளையிட்டாள்.
காவலன், அரசிக்கு வணக்கம் தெரிவித்துவிட்டுக் குதிரையைக் கொண்டு வந்து நிறுத்தினான். அதில் எப்படித்தான் ஏறி உட்கார்ந்தாளோ தெரியாது - குதிரை பறந்தோடத் தொடங்கியது. குதிரை போன பிறகு காவலனுக்கு யோசனை பிறந்தது.
“இந்த அகாலத்தில் அரசியார் எங்கே தனியாகப் போகிறார்கள்?"
"அய்யய்யோ! அவர்கள் நோயாளியாயிற்றே!"
காவலன் இப்போதுதான் தெளிவாக விழிப்படைந்தான். இதை மன்னனிடம் சொல்லாமல் இருக்கக்கூடாதென்று இருங்கோவேளின் இருப்பிடம் நோக்கி ஓடினான்.
பரபரப்புடன் ஓடிவரும் குதிரைக் கொட்டடிக் காவலனை இருங்கோவேளின் மாளிகை காவலர்கள் வழிமறித்து, "என்ன விசேடம்?" என்று கேட்டார்கள். அவர்களிடம் அவன் விவரத்தைக் கூறி, உடனே மன்னனைப் பார்க்க வேண்டுமென்று துடியாய்த் துடிக்கவே அவனை அழைத்துக் கொண்டு மன்னன் படுத்திருக்கும் இடத்திற்குப் போனார்கள்.
படுக்கையறையில் விளக்கு மாத்திரம் 'மினுக் மினுக்'கென்று எரிந்து கொண்டிருந்தது. இருங்கோவேளைக் காணவில்லை. எங்கே போயிருக்கக்கூடும் என்று அவர்களால் உடனடியாக யூகிக்க முடியவில்லை. இருங்கோவேள் மன நிம்மதிக்காக வேண்டி எப்படியாவது தூக்கத்தைத் தழுவிக் கொள்ளலாம் என்றுதான் பெரு முயற்சி செய்தான். சில சமயங்களில் சாவைக்கூட விரும்பியவுடன் அழைத்துக் கொள்ளலாம்... தூக்கத்தை அழைக்க முடியாமல் தவிக்க நேரிடும்! கவலைகள், சாவை அருகினில் அழைத்துவரும் சக்தி பெற்றவை. ஆனால் தூக்கமோ கவலைகளைக் கண்டால் வெகு தொலைவில் ஓடிவிடும்.
படுக்கையில் புரண்டு புரண்டு இருங்கோவேள் தொல்லைப்படும் போது அவன் வாழ்க்கையின் ஏடுகளும் ஒன்றன் பின் ஒன்றாகப் புரண்டு கொண்டுதான் இருந்தன. இன்றைய கருநாடகப் பகுதியான மைசூர் வட்டாரத்திலும், தமிழகத்தில் இன்றைய புதுக்கோட்டைப் பகுதிகளிலும் சிதறிக்கிடந்த வேளிர்குலத்தினரை ஒன்று திரட்டிப் பலம்வாய்ந்த வேளிர்குடிப் பேரரசு ஒன்றை நிறுவுவதாக அவன் திடசித்தத்துடன் முயற்சிகளை மேற்கொண்டான். அவன் முயற்சிகளுக்குப் பெருந்தடை யாகத் தான் கரிகாலனின் சோழப் பேரரசு விளங்கி வந்தது. உறையூரையும், பூம்புகாரையும் முறையே பெருநகராகவும் தலைநகராகவும் கொண்டு வலிமை வாய்ந்த படைகளை அரணாக அமைத்து அரசோச்சிய சோழவேந்தன் கரிகாலனைத் தோற்கடித்தாலன்றித் தன் முயற்சிகள் வெற்றி பெற முடியாது என்ற பேருண்மை நாளுக்கு நாள் பெருத்துக் கொண்டே வந்தது. எப்படியும் கரிகாலனைப் பழி தீர்த்து அவன் கல்லறைமீது வேளிர்குடிப் பேரரசை நிறுவலாம் என்று அவன் கண்டு வந்த கனவு, கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்துவருவதை அவன் தெளிவாக உணரத் தலைப்பட்டு விட்டான். இறுதியாகக் கிடைத்த நல்ல சந்தர்ப்பமும் எப்படியோ நழுவி விட்டது. இனிச் சோழ மன்னன் எச்சரிக்கையாகி விடுவான் என்று எண்ணி, அவன் சோர்வடைந்தான்.
அப்படிச் சோர்வுற்று வருகிற நேரத்தில் அவனுக்கு உற்சாகம் தரக் கூடிய நிலையில் பெருந்தேவியாவது இருந்தாளா என்றாள் அதுவுமில்லை. அவனுக்கு உற்சாகமும், மகிழ்ச்சியும், உலகில் அவன் இதுவரையில் காணாத இன்பமும் அளிப்பதற்கு ஒருத்தி இருக்கிறாள். வீரபாண்டி என்ற பெயரில் அவளிடம் சென்றால் இறுகத் தழுவி இன்பமழை பொழிவாள். இருங்கோவேள் மன்னனாகச் சென்றால் இறப்புலகிற்கு அனுப்பிவைக்கத் துடித்து நிற்பாள்.
அதிலும் மனக்குழப்பந்தான். நிம்மதியில்லை. எல்லாக் குழப்பங்களும் ஒரே அடியில் தீர்ந்து விடும், கரிகாலனைத் தொலைத்துவிட்டால். அதற்கு வேளிர்குடியினர் இனித் தயாராக இல்லை. சோழன் படைகளிடம் தாங்கள் பட்டபாடு போதுமென்று அவரவர்கள் அடங்கிப் போய் ஆமைகளாகக் கிடக்கிறார்கள். இந்தக் கானகத்து மரமாளிகையில் சில நாட்கள் இலட்சிய வெறியுடன் உலவி, இறுதியில் இங்கேயே மண்ணோடு மண்ணாக வேண்டியதுதான் தன் வாழ்க்கையின் முடிவுபோலும் என்றெல்லாம் எண்ணியெண்ணி உறுமிக் கொண்டு, உறக்கத்தை வலிந்து வலிந்து கூப்பிட்டுக்கொண்டிருந்தான்.
முத்துநகையை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு வரலாம் என்ற ஆசை துளிர்த்தது. அவள் சிந்தும் அமுத மொழிகளைக் கேட்டுச் சற்று ஆறுதல் பெறலாம் என்ற எண்ணம் மேலோங்கிற்று.
இந்தச் சூழ்நிலையில் அவள் என்ன பேசப் போகிறாள் என்று அறியவும் அவா எழுந்தது. வீரபாண்டியாகப் போகாமல் இருங்கோவேள் மன்னனாகப் போக வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டான். அதிலும் முத்துநகை காணுகிற இருங்கோவேள் முற்றிலும் வேறு உருவத்தில் இருக்க வேண்டுமென்றும் முடிவு செய்து கொண்டான்.
வேடம் அணியும் வேலை ஆரம்பமாயிற்று. காதில் கனத்த குண்டலங் கள், தலைவிரிகோலம், முரட்டுமீசைகள், முகத்தைக் கடுமையாகக் காட்டும் இளந்தாடி, மார்பிலே ஆபரணங்கள் - அவனது பிரதானியர் பார்த்தாலேகூட திடீரென்று அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்குப் புதிய இருங்கோவேள் மன்னன் புறா அடைபட்டிருக்கும் இடம் நோக்கிப் புறப்பட்டுவிட்டான்.
முத்துநகை அடைக்கப்பட்டிருந்த இடத்திற்கு வந்ததும் அங்குள்ள காவலன் அடையாளம் தெரியாமல் மன்னனைத் தடுத்து நிறுத்தினான். அவனிடம் தன் வேடத்தை விளக்கிவிட்டு உள்ளே நுழைந்தான் இருங்கோவேள். அவன் முதலில் பலகணி வழியே பார்த்தபோது அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த முத்துநகை, இப்போதுகூட அது போலவே கண்ணை மூடிக் கொண்டு படுத்திருந்தாள். அவன் உள்ளே நுழைந்தபோது காலடியோசை கேட்டு அவள் திடுக்கிட்டு எழுந்தாள். அதிலிருந்து அவளும் சரியாகத் தூங்காமல், தூங்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறாள் என்பதை அவன் புரிந்து கொண்டான். எழுந்தவள், இருங்கோவேளை உற்றுப் பார்த்துவிட்டு “யார்?” என்று அதட்டலாகக் கேட்டாள்.
"மன்னன்!"
- என்று கம்பீரமாகப் பதில் கூறினான்.
முத்துநகையின் உடம்பெல்லாம் நடுங்கிற்று. அவள் இதயம் படபடவென அடித்துக் கொண்டது. சுவாசப் பைகள் காற்றினால் நிரம்பி மார்பகம் விம்மி உயர்ந்தது; பெருமூச்சுக்குப் பின்னர் பழைய நிலையடைந்த காட்சியை இருங்கோவேள் சுவைத்தவாறு நின்று கொண்டிருந்தான். முத்துநகை தன்னைத்தானே தைரியப்படுத்திக் கொண்டு இருங்கோவேளுடன் கம்பீரமாகப் பேச முன் வந்தாள்.
"மன்னனா? எந்த நாட்டுக்கு?" -இந்தக் கேள்வி இருங்கோவேளின் உள்ளத்தை எந்த அளவுக்குக் குடைந்திருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. அப்படியே இடிந்து போய் நின்றான்.
"ஓகோ! இந்தக் காட்டுக்கு மன்னரா?"
-அடுத்த கேள்வியும் கேலியுடன் கலந்து எழுந்தது.
"அடிமைப் பெண்ணே! பணிவாகப் பேசு! வேளிர் குலத் தலைவன் இருங்கோவேள் ஓர் எரிமலை - நீ பனிமலர்! நினைவில் வைத்துக் கொள்."
"நான் எதையும் மறப்பதில்லை மன்னாதி மன்னரே! கரிகால் சோழரிடம் தாங்கள் பெற்ற மகத்தான வெற்றியைக் கூட நான் இன்னும் மறக்கவில்லை."
"வெற்றி மயக்கத்தில் வீழ்ந்து கிடக்கும் சோழ மண்டலத்துக்கு விரைவில் பாடம் கற்பிக்கத்தான் போகிறேன். தோல்வி என் தோள்களை மேலும் வலுப்படுத்தியிருக்கிறதே தவிர என்னைத் துவளச் செய்துவிடவில்லை."
"சரி ...சரி... இந்நேரத்தில் இங்கு என்ன வேலை?"
அவனுடன் பேச்சுக் கொடுப்பது தன் காரியங்களைக் கெடுத்துவிடக் கூடும் என்று கருதிய முத்துநகை, தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டு பணிவுடன் பேச ஆரம்பித்தாள்.
"வேலையொன்றுமில்லை, என் மாளிகையில் சிறைப்பட்டிருக்கும் உனக்கு வசதிகள் போதுமானவைகளாக இருக்கின்றனவா என்று அறிய வேண்டியதும், ஆவன செய்ய வேண்டியதும் என் கடமையல்லவா?"
"மிகவும் நன்றி. நான் ஏன் இங்கு சிறைப்படுத்தப்பட்டிருக்கிறேன் என்று கூறலாமா?"
"மண்டபத்தில் மயங்கிக் கிடந்தாய்; உன்னை என் ஆட்கள் இங்கு கொண்டு வந்து சேர்த்தார்கள். ஆணுடையில் இருந்த உன்னைக் கண்டு என் தங்கை தாமரை அழுது புலம்பினாள். 'அய்யோ அத்தான்' என்று அலறினாள். எனக்கு ஒரே திகைப்பு! அதைவிடத் திகைப்பு - உன் வேடம் கலைந்த நிகழ்ச்சி; அடடா நீ பெண் என்பதை உணர்ந்ததும் என் தங்கைக்கு ஏற்பட்ட ஏமாற்றம் இருக்கிறதே, அதை விவரிக்கவே முடியாது. தங்கை ஏமாந்தாள். ஆனால் நான் விழித்துக் கொண்டேன். சோழ நாட்டுக்கு எங்களைக் காட்டிக் கொடுக்கும் வஞ்சகியொருத்தி அகப்பட்டாள் என்று அகமகிழ்ந்தேன். அதற்குப் பிறகு உன்னைச் சிறை வைப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும், சொல்!"
"சிறையில்தான் அடைத்து வையுங்கள் - அல்லது சித்திரவதை செய்து கொன்று போடுங்கள்; எனக்கு இனி எதைப் பற்றியும் கவலையில்லை. இனி எனக்கு விடுதலை கிடையாது என்று நன்றாகப் புரிகிறது. என் வாழ்வின் கடைசிக் கட்டத்தில் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்; தயவு செய்து உண்மையைச் சொல்லுங்கள். வீர பாண்டியை என்ன செய்தீர்கள்?"
"வீரபாண்டி யார்? அந்த மதுரை ஒற்றனா? அவனைத்தான் படுகாயப்படுத்தி மரண வாசலுக்கு வழியனுப்பி வைத்துவிட்டார்களே என் ஆட்கள்?"
அந்த வார்த்தைகள் முத்துநகையின் காதுகளில் பேரிடி முழக்கமென அதிர்ந்தன. கண்களைப் பொத்திக் கொண்டு ஓவென அழுதாள். தான் செத்துவிட்டோம் என்று நினைத்துத் தனக்கெதிரே ஒருத்தி நின்று அழுவதைப் பார்த்து இருங்கோவேள் மனமுருகினான். திடீரென வேடத்தைக் கலைத்து வீரபாண்டியாக வெளிப்பட்டு விடலாமா என்று ஒருகணம் எண்ணினான். ஆனால் அவன் நிலைமை அவனைக் கட்டுப்படுத்தி எச்சரித்து விட்டது. எதிரே இருங்கோவேள் மன்னன் நிற்கிறான் என்பதையும் மறந்து "அத்தான்! அத்தான்!!" என்று கதறிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள் முத்துநகை.
இருங்கோவேளும் தன்னை மறந்து அவளருகே சென்று, "அழாதே கண்ணே!" என்று அவள் தோளைப் பிடித்தான்.
அவள் சோகமெல்லாம் எங்கேயோ பறந்து போயிற்று. "சீ!" எனத் திரும்பினாள். திரும்பிய வேகத்தில் இருங்கோவேளின் கன்னத்தில் 'பளார்' என ஓர் அறை கொடுத்து விட்டாள். அந்த அடி அவனைக் கலங்க வைத்து விட்டது.
ஆனாலும் சமாளித்துக் கொண்டு புலிபோலக் குரலெழுப்பி, "என்ன துணிச்சல் உனக்கு? என் கையில் சிக்கிய பிறகு உன்னைச் சும்மா விட்டுவிடுவேன் என்று கனவு கூடக் காணாதே?" என்று கையைப்பிடித்து இழுத்துக் கட்டித் தழுவிட முயன்றான். வழியேதுமறியாத முத்துநகை, அங்குமிங்கும் ஓடித் தன்னையும் கற்பையும் காப்பாற்றிக் கொள்ள முயன்றாள்.
"உன்னை இன்று நான் விடப்போவதில்லை!" என்று இருங்கோவேள் அவளைத் தழுவிக் கொண்டான்.
அவனது முரட்டுப் பிடியிலிருந்து முத்துநகை தன்னை விடுவித்துக் கொண்டு அவனது இடையில் இருந்த கட்டாரியைத் தன் கையிலே எடுத்துக் கொண்டு அவனை எதிர்ப்பதற்குத் தயாரானாள். தன் அருமைக் காதலியின் மன உறுதியையும் - கற்பின் திண்மையையும் வீரத்தையும் கண்ட இருங்கோவேள் பூரித்துப் போனான். இருந்தாலும் மேலும் அவளுடன் விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் தீக்கண்களுடன் அவளை நெருங்கினான். முத்துநகை அவனை நோக்கிக் கட்டாரியை ஓங்கிவிட்டாள்.
தன் காதலனைத் தானேகொன்று சாய்க்க வேண்டிய சூழ்நிலை அவளையறியாமலே உருவாகிக் கொண்டிருந்தது. அவனும் அவளிடம் பாய்ந்துவிட்டான். அவள் கட்டாரியை அவன் மார்புக்கு நேரே கொண்டுவந்து விட்டாள்.
ஆனால் வீரனான இருங்கோவேள் அவள் கரத்தை மிக லாவகமாகப் பிடித்துக் கொண்டு அவள் முகத்தோடு தன் முகத்தை ஒட்டுவதற்கு முயன்றான்.
அந்தச் சமயத்தில் "நிறுத்து அண்ணா! நிறுத்து!" என்ற கூச்சலுடன் தாமரை உள்ளே நுழைந்தாள். தாமரை எப்படி அங்கு வர நேரிட்டது? பெருந்தேவி வெளியேறிய செய்தியை இருங்கோவேளிடம் சொல்வதற்குச் சென்ற காவலர்கள், மன்னன் அங்கு இல்லாத காரணத்தால் தாமரையிடம் சென்று செய்தியைக் கூறிவிட்டனர். அவளும் அண்ணனைத் தேடிப் பார்த்துவிட்டு கடைசியாக முத்துநகை அடைபட்டிருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தாள். அங்கு காவல் புரிந்து கொண்டிருந்த வீரன் இருங்கோவேள் மாறுவேடத்துடன் முத்துநகை யிடம் பேசிக் கொண்டிருப்பதைக் கூறிவிட்டான். உடனே தாமரை உள்ளே நுழைந்த போது தன் அண்ணன், முத்துநகையிடம் அடாத செயல் புரிவதைக் கண்டு கூச்சல் போட்டுவிட்டாள். தங்கையின் குரலைக் கேட்ட இருங்கோவேள் முத்துநகையைவிட்டுத் திரும்பினான்.
"தாமரை! நீ எங்கே வந்தாய்?"
"வந்தது தவறா? அண்ணா! இது என்ன அக்கிரமம்! இதுவரையில் உன்னை நாங்கள் உத்தமன் என்றல்லவா கருதிக் கொண்டிருந்தோம்! பழிவாங்கத் துடிக்கும் காரணத்தால் என் அண்ணனுக்கு அடிக்கடி கோபம் வருகிறது; சிலரைக் கொடுமைப்படுத்துகிறார்! ஆனால் அவரைப் போன்ற ஒழுக்கசீலர் யாருமே இல்லை என்றல்லவா கூறிக் கொண்டிருந்தேன்! என்றுமில்லாத அநியாயம் இன்று ஏன் அண்ணா?"
"தாமரை! இதிலெல்லாம் நீ தலையிடாதே!"
"தயவு செய்து என்னை மன்னிக்கவும். அவள் இங்கு சிறைப்பறவையாக இருக்கலாம். அதற்காக மன்னனின் சிற்றின்பப் பதுமையாக இருக்க வேண்டுமென்று நினைப்பதை நான் மறுக்கிறேன்; தடுக்கிறேன்."
"என் காரியங்களைத் தடுக்க யாராலும் முடியாது. மரியாதையாக வெளியே போய்விடு!"
"அண்ணா! நீ எப்படியாவது அழிந்து போ, எனக்கென்ன? நான் சொல்ல வந்ததைச் சொல்லிவிடுகிறேன்... அண்ணியைக் காணவில்லை. குதிரையிலேறி ரகசியமாக எங்கேயோ போய் விட்டார்களாம்."
"ஆ! என்ன? அரசியைக் காணவில்லையா? எங்கே போனாள்"
"இந்த அக்கிரமங்களைக் கேள்விப்படக்கூடாது என்று எங்கேயோ போய்விட்டார்கள்"
இருங்கோவேள் சிலையென நின்று கொண்டிருந்தான். தாமரை அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். "பெருந்தேவி!" என நடுங்கும் குரலில் ஒரு கூச்சல் கிளம்பிற்று அவன் வாயிலிருந்து! உடனே அந்த இடத்தை விட்டுத் தன் மாளிகை நோக்கி விரைந்தான். முத்துநகை அழுதவாறு மூலையில் நின்று கொண்டிருந்தாள். அவளிடம் ஆறுதல் எதுவும் கூற விரும்பாத தாமரை, காவலர்களை எச்சரித்துவிட்டு வெளியே சென்றாள். பழையபடி அந்த இடம் பூட்டப்பட்டது. தன் கையிலிருந்த கட்டாரியின் முனையை விரல்களால் தடவிப் பார்த்தவாறு சிந்தனையில் ஆழ்ந்தாள் முத்துநகை.
மரமாளிகையை விட்டுப் புறப்பட்ட பெருந்தேவி குதிரையை வேகமாக ஓட்டிக் கொண்டு கானகத்தின் பல பாதைகளில் ஆவேசமுடன் சென்று கொண்டிருந்தாள். கல்லும் முள்ளும் நிரம்பிய பாதை. இருபுறமும் மரங்கள் நெருங்கி வளர்ந்த பாதை. நடுவே வளைந்து கிடந்து குதிரையின் வேகத்தைக் குறைத்துக் கொண்டிருந்தது. அந்த அடர்த்தியான இருளின் பயங்கரமான மௌனத்தைக் கலைத்துக் கொண்டு கோட்டான்கள் ஓலமிட்டுக் கொண்டிருந்தன. கிளைகளில் அமர்ந்து குதிரையின் குளம்படிச் சத்தம் கேட்டுப் பறவைகள் சிறகையடித்துக் கொள்வதற்கும் பெருந்தேவியின் இதயம் படபடப்பதற்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை.
நெடுநாளையப் பிணியினால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து படுக்கையிலேயே கிடந்த அவளுக்கு எங்கிருந்து புதுப்பலம் வந்தது என்று அந்தக் குதிரை ஆச்சரியப்பட்டது போலும்! அதனால் இடையிடையே வேகத்தைக் குறைத்துக் கொண்டு மெதுவாக நடக்க ஆரம்பித்தது.
அரசி விடுவதாயில்லை. குதிரையை விரைவாகச் செலுத்துவதிலேயே கண்ணுங் கருத்துமாயிருந்தாள். காரிருளில் ஓடிக் கொண்டிருந்த குதிரை திடீரெனக் கால் தவறி ஒரு சிறு குழியில் விழுந்து விட்டது. நல்ல வேளையாகப் பெருந்தேவி குதிரையிலேயே உட்கார்ந்து கொண்டிராமல் ஒரு மரக்கிளையைத் தாவி பிடித்துக் கொண்டு அதிலே தொங்கினாள்.
விழுந்த குதிரை மெதுவாக எழுந்து நின்றது. மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்த பெருந்தேவிக்குப் புதிய திகில் ஒன்று மின்னலெனக் கிளம்பியது. காரணம் அவள் பிடித்திருந்தகிளை, மெதுவாக அசைந்ததுதான்! கவனிக்க ஆரம்பித்தாள். மரக்கிளையின் சொர சொரப்பு கைகளுக்குத் தோன்றவில்லை. வழவழப்பான உணர்ச்சிதான் தோன்றியது. சந்தேகமில்லை. மலைப் பாம்புதான். அதைப் புரிந்து கொண்டதும் அரசி கீழே குதித்துவிட்டாள்.
குதித்த வேகத்தில் குதிரையில் தாவி ஏறிக் கொண்டாள். தப்பித்தோம் பிழைத்தோம் என்று குதிரையை முடுக்கினாள். இரையை விழுங்கி விட்டுக் கிடந்த மலைப் பாம்பு மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. பாம்பிடமிருந்து தப்பிய பிறகு அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது. தன்னையே நொந்து கொண்டாள். எதற்காகப் பாம்பிடமிருந்து ஓடி வர வேண்டும்? அதற்கே இரையாகியிருக்கலாமே என்பது தான் அந்த யோசனை.
அவள் இப்படி நினைக்கும்போதே மனதுக்குள்ளிருந்து மற்றொரு பெருந்தேவி பேச ஆரம்பித்தாள்.
"பைத்தியக்கார ராணி! நீ எதற்காகப் புறப்பட்டிருக்கிறாய்? தற்கொலை செய்து கொள்வதற்கா? இல்லையடி இல்லை! உன் இலட்சியத்தை மறந்துவிடாதே; அதை நிறைவேற்றி விட்டுப் பிறகு செத்துப்போ; ம்.. ஓடு!ஓடு!"
"இலட்சியத்தை என்னால் நிறைவேற்ற முடியுமா? எனக்கு அந்த வல்லமை இருக்கிறதா? என்ன இருந்தாலும் நான் பெண்தானே?"
"பிறகேன் வீட்டை விட்டுக் கிளம்பினாய்? இந்த யோசனை முன்பே இருந்திருக்க வேண்டும் உனக்கு. நீ இனிமேல் இருந்துதான் என்ன செய்யப்போகிறாய்? நீ இப்போது உயிரோடிருப்பதாகவா எண்ணிக் கொண்டிருக்கிறாய்? பேதாய்! நீ செத்து எத்தனையோ ஆண்டுகள் ஓடி விட்டன. என்றைக்கு உன் மூச்சுப்பைகளில் நோய்க்கிருமிகள் குடியேறினவோ அன்றைக்கே உன் உயிர் அந்த இடத்தைவிட்டு வெளியேறி விட்டது. எந்தவிதத்திலும் செத்து விடக்கூடிய நிலையில் தள்ளாடிக் கொண்டிருக்கும் நீ, இலட்சியத்தை நிறைவேற்றும் முயற்சியில் ஏன் சாகக் கூடாது? தளராதே! தயங்காதே!! போ; போ!"
பெருந்தேவியின் உள்ளத்தில் பெரும் போராட்டம் எழுந்தது என்றாலும், முன்னோக்கிச் சென்று கொண்டிருந்த அவள் பயணத்தில் எந்தவிதத் தயக்கமும் ஏற்படவில்லை.
தாமரையும் முத்துநகையும் முதன் முதலில் சந்தித்துப் பேசிய அருவிக்கரையின் பக்கம் வந்தாள். அந்த இடத்தைத் தாமரை பார்த்திருந்தால் எத்தனை எண்ணங்கள் படையெடுத்து அவளை அழவைக்குமோ யார் கண்டது?
அருவிக் கரையைத் தாண்டி அரசியின் குதிரை மரமடர்ந்த மற்றொரு பகுதிக்குள் நுழைந்தது. அந்தப் பகுதியிலேதான் இருங்கோவேளும் முத்துநகையும் ஒரு நாள் சந்தித்துத் தங்கள் அன்பைப் பலப்படுத்திக் கொண்டார்கள். அந்த வழியே கணவனைத் தெய்வமென நம்பியிருக்கும் அரசி பெருந்தேவி சென்றாள்.
போகப்போக அரசிக்குக் களைப்பு அதிகமாயிற்று. மூச்சு வாங்க ஆரம்பித்தது; எங்கேயாவது சற்று இறங்கி இளைப்பாறிக் கொண்டால் தான் மேலே தொடர்ந்து செல்ல முடியும் என உணர்ந்து கொண்டாள்.
அவளுடைய ஆருயிர் கணவனும் முத்துநகையும் தங்கள் காதலை மலரவைத்த பாழ்மண்டபத்தைக் கண்டாள். அந்த மண்டபத்துக்கு மட்டும் பேசும் சக்தியிருந்தால், இருங்கோவேள்-முத்துநகை இருவரின் இன்பத் திருவிளையாடல்களைப் பற்றி பெருந்தேவியிடம் கோள் மூட்டியிருக்கும்.
அவள் குதிரையிலிருந்து மெல்ல இறங்கி மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டாள். இருமல் தொந்தரவு துவங்கி விட்டது. அவளுக்கு உதவிசெய்ய, அருகில் யாருமே இல்லை. இருமி இருமித் தொண்டை யெல்லாம் வலியெடுத்து விட்டது. 'ஐயோ! அப்பா! அம்மா!' என்று வாய்விட்டு அலறினாள். விலாப்புறங்களில் சகிக்க முடியாத வலி; முதுகெலும்பெல்லாம் முறித்துப் போட்டது போன்ற வேதனை; கண்களிலிருந்து மழையெனக் கொட்டியது வேதனையின் சின்னம்! யாருடைய துணையுமின்றி அவளாகவே இருமிக் களைத்துப் போய்ச் சுருண்டு படுத்துக் கொண்டாள். தலைவரின் துணைவி படும் வேதனையைப் பார்த்துக் கொண்டே அந்தக் குதிரை அசைவற்று நின்றது.
அப்போது வெகு தூரத்தில் குதிரையொன்று வரும் குளம்படி ஓசை கேட்டது. அயர்வுடன் படுத்திருந்த பெருந்தேவி மெதுவாகக் கண்விழித்துக் குளம்படி ஓசை வரும் திக்கையே கவனித்துக் கொண்டிருந்தாள். ஆம்! குதிரைதான் - வர வர சத்தம் அண்மையில் கேட்கிறது. தன்னைத் தான் தேடிக் கொண்டு வருகிறார்கள் என்று பயந்து போனாள். எழுந்து நடக்க முடியாத அளவுக்கு உடல் நலிவு ஏற்பட்டிருந்தது. அதைப் பொருட்படுத்தாமல் குதிரையில் தாவி ஏறிக் கொண்டாள். தன்னைத் தொடர்ந்து வரும் குதிரையிடம் அகப்பட்டுக் கொள்ளக் கூடாது என்று திட்டமாகத் தீர்மானித்துக் கொண்டாள். பலங்கொண்ட மட்டும் குதிரையைத் தட்டி ஓடச் செய்தாள்; குதிரை அரசியின் குறிப்பை அறிந்து கொண்டு இருளைக் கிழித்தவாறு போய்க் கொண்டிருந்தது.
அரசியின் குதிரை சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் மற்றொரு குதிரை மண்டபத்துப் பக்கம் வந்து நின்றது. அதன் மீது இருங்கோவேள் தான் அமர்ந்திருந்தான்.அவன் கையில் தீப்பந்தமொன்று இருந்தது. அந்த வெளிச்சத்தின் உதவியால், மண்டபத்திற்கு அருகே குதிரையொன்று நின்றிருந்த அடையாளத்தையும், அது புறப்பட்டுப் போன வழியையும் புரிந்து கொண்டான். அதைத் தவிர வேறு அடையாளம் ஒன்றும் கிடைக்கவில்லை. கீழேயிறங்கி மண்டபம் முழுவதும் தேடிப்பார்த்தான். முத்துநகையைப் பயமுறுத்துவதற்காக எழுதப்பட்ட எழுத்துக்கள் சுவரில் காட்சியளிப்பதை மட்டுமே கண்டான். ஒரு கணம் முத்துநகையின் நினைவு தலை நீட்டியது. ஆனால் அரசியின் பிரிவு அவனை நிலை தடுமாறச் செய்திருந்த காரணத்தால் வேறு எதையும் அவனால் நினைக்க முடியவில்லை.
மீண்டும் புரவியிலேறிக் கொண்டு தீப்பந்த வெளிச்சத்தின் உதவியால் முன்னே சென்ற குதிரையின் குளம்படிச் சுவடுகளைக் கவனித்தவாறு தொடர்ந்து சென்றான். அடர்ந்த காட்டுப் பகுதிகளைத் தாண்டிச் சிறிது ஒழுங்கான பாதைக்கு குதிரை வந்து சேர்ந்தது. தனக்கு முன்னே குதிரையொன்று போகும் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து பிடித்து விடப் பெருமுயற்சி எடுத்துக் கொண்டான் இருங்கோவேள். இருளும் சிறிது சிறிதாக விலக ஆரம்பித்து விடியத் தொடங்கியது. வைகறைப் பொழுதில் அரசியின் குதிரையைப் பிடித்துவிடக்கூடிய அளவு மிக அருகினில் இருங்கோவேளின் குதிரை வந்து விட்டது.
முன்னே போவது அரசிதான் என்று அவனுக்கும் தெரிந்துவிட்டது. தொடர்ந்து வருவது மன்னன்தான் என்பதும் அவளுக்கும் விளங்கி விட்டது. உயிரைக் கொடுத்தாகிலும் அவனிடமிருந்து தப்பிவிட வேண்டு மென்று அவள் முடிவுகட்டிக் கொண்டாள். அவனிடம் சிக்கிக் கொண்டால் தன் இலட்சியம் நிறைவேறாது என்பது அவளுக்கிருந்த பயம்.
அந்தப் பயத்தில் அவள் ஓடும்போது பின்னாலிருந்து இருங்கோ வேள், "பெருந்தேவி! நில்! நில்!' என்று கூவிக் கொண்டே வந்தான்.
அரசியும் பதிலுக்குக் கத்தினாள். "என்னைத் தடுக்காதீர்கள்! என் இலட்சியம் நிறைவேறும்போது தடங்கல் செய்யாதீர்கள்."
"அப்படிப்பட்ட இலட்சியம்தான் என்ன?"
ஒரு பெண்ணுக்குத் தன் கணவனின் மகிழ்ச்சிதான் முதல் இலட்சியம். அந்த இலட்சியத்தை வெற்றிகரமாக ஆக்கவே அவள் புறப்பட்டிருக்கிறாள். அவள் கணவனுக்கு மகிழ்ச்சி ஏற்படக்கூடிய ஒரே ஒரு நிகழ்ச்சி, கரிகால்மன்னர் பழிவாங்கப்படுவதுதான்!
அந்தப் பழி தீர்க்கும் படலத்தை ஒழுங்காக நிறைவேற்றவே அவள் பெண் புலியென எழுந்து வருகின்றாள். அவள் நோக்கம் இன்னதென்று புரியாது இருங்கோவேளுக்கு! அப்படியே புரிந்தாலும் அந்தக் காரியத்துக்கு அவளை நிச்சயம் அனுப்பமாட்டான். எப்படியோ சிறு அலட்சியத்தால் அவள் அனைவரையும் ஏமாற்றிவிட்டு இவ்வளவு தூரம் வந்துவிட்டாள்.
அதோ... பூம்புகார் நகரத்து நுழைவு வாயிலும் வந்து விட்டது. அதில் நுழைந்து விடுவதற்குள் அவளைத் தடுத்தாக வேண்டும். அதற்குமேல் அவளைப் பின்தொடர்ந்து சென்றால் தன்னைச் சோழநாட்டுக் காவலர்கள் சிறைப்படுத்தி விடுவார்கள்; இருங்கோவேள் மன்னன் உயிரோடு அகப்பட்டு விட்டால் அவர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்! பூம்புகார் முழுவதும் விழாக் கொண்டாடி மகிழ்வார்கள். இருங்கோவேள் அகப்பட்ட நாளை இந்திர விழாவாக ஆக்கிக் கொள்வார்கள். இறந்து போனாலும் போகலாமே தவிர, சோழநாட்டு வீரர்களிடம் உயிரோடு அகப்படக் கூடாது.
இப்படியெல்லாம் எண்ணியவாறு அவன் அரசியின் குதிரைக்கு. மிக மிக அருகாமையில் வந்து அந்தக் குதிரையைத் தடுத்து நிறுத்த முனையும் சமயம் அவளுடைய குதிரை நகரின் நுழைவு வாயிலுக்குள் புகுந்துவிட்டது. அதற்குமேல் செல்ல அவன் விரும்பவில்லை. அப்படியே சிலைபோல் நின்று விட்டான். அதற்குள் பொழுதும் நன்றாக விடிய ஆரம்பித்து விட்டது. இனி அங்கே நிற்பதும் ஆபத்து எனக்கருதி. வந்த வழியே அவசரமாகத் திரும்பினான்.
பூம்புகாருக்குள் புகுந்த அரசி அந்த அழகுத்திருநகரின் எழில் நிறை வீதிகளில் குதிரையில் போய்க் கொண்டிருந்தாள்.
சோழ நாட்டு மாதரசிகள் தங்கள் வீட்டு வாயில்களைச் சுத்தம் செய்து மூவேந்தரின் சின்னங்களான புலி, வில், கயல் ஆகியவற்றைக் கோலங்களாக்கிக் கொண்டிருந்தனர். உழவர் பெருமக்கள் தங்கள் தங்கள் செழித்துக் கொழுத்த எருதுகளை ஓட்டிக் கொண்டு கழனிப் பக்கம் போய்க் கொண்டிருந்தார்கள். துறைமுகத்தை நோக்கி மயில் தோகைகளைக் கட்டுக்கட்டாகக் குவித்த வண்டிகள் சென்ற காட்சி பெருந்தேவியினுடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. மிளகு மூட்டைகளை உடல் வலுத்த பாட்டாளிகள் துறைமுகத்தின் பக்கம் தூக்கிச் செல்வதையும், அவர்களின் முகத்திலே காணப்பட்ட பூரிப்பையும் உற்சாகத்தையும் கண்டு பெருந்தேவி வியப்படைந்தாள்.
வீதிகளைக் கடந்து துறைமுகத்திற்கே குதிரை வந்து விட்டது. அடடா! அந்தத் துறைமுகத்தில் அவள் கண்டு சுவைத்த காட்சிகள் தமிழகத்தின் பழம் பெருமையைப் பாடக்கூடிய காட்சிகளாகும். வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான வாட்ட சாட்டமான குதிரைகள்! இங்கிருந்து ஏற்றுமதியாகும் மிளகு மூட்டைகள்! மயில் தோகைகள்! பாம்பின் தோல்! வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்! குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்! தென்கடல் முத்து! இன்னோரன்ன பொருள்கள் குவிந்து கிடந்த காட்சிகண்டு அவள் நோயின் வேதனைகூடச் சற்று விலகியிருந்தது என்று கூறலாம். ரோமானியரும், கிரேக்கரும் துறைமுகத்தில் சுறுசுறுப்பாகக் காணப்பட்டார்கள். அவர்களுடன் தமிழர்கள் உற்சாகத்துடன் பேசிக் கொண்டிருந்தார்கள். யவனர்களின் தோள்மீது கை போட்டவாறு தமிழர்கள் அங்குமிங்கும் உலவிக்கொண்டிருந்தனர்.
எல்லாவற்றையும் பார்த்தவாறு பெருந்தேவி குதிரையை மெதுவாக வீதிகளில் ஓட்டிக்கொண்டிருந்தாள். உலகத் தொடர்பு கொண்ட இவ்வளவு பெரிய நாட்டைத் தோற்கடிப்பது என்பது முடிகின்ற காரியமா?- எனத் தனக்குள்ளே கேட்டுக்கொண்டாள்.
இருங்கோவேள் அவள் எதிரே நிற்பது போல ஒரு நினைவு. அவன் அவளுக்கு இலட்சியத்தை ஞாபகப்படுத்துவதுபோல் ஓர் உணர்வு.
இறுதியாக, அவள் தன்னைத் திடப்படுத்திக் கொண்டு அரண்மனையை நோக்கிக் குதிரையைத் தட்டிவிட்டாள். எப்படியாவது அரண்மனைக்குள் நுழைய வேண்டும். கரிகாலனைக் கொல்ல வேண்டும். தன் கணவனின் இதயத்தில் மகிழ்ச்சி ததும்பச் செய்ய வேண்டும். அவன் முகம் மலர வேண்டும். அதைப் பார்த்துவிட்டுப் பிறகு சாக வேண்டும்.
அய்யோ பாவம்! பூம்புகாரில் உற்சாகத்துடன் நடமாடும் இந்த மக்களெல்லாம் இன்று மாலைக்குள் ஒரு பயங்கரமான செய்தி கேட்டு மயங்கி விழப் போகிறார்கள்.
அந்தச் செய்திதான், 'கரிகாலன் மடிந்தான்!' என்ற செய்தி.
அந்தக் காரியத்தைச் செய்யப் போகிறவள் இந்தப் பெருந்தேவிதான்!
இவ்வாறு ஆவேசத்துடன் கூவினாள் பெருந்தேவி, நல்ல வேளையாக யாரும் அவளைக் கவனிக்கவில்லை. அவளும் மக்கள் கூட்டத்தைவிட்டு அரண்மனைப் பக்கம் வந்துவிட்டாள்.
அரண்மனைக் கதவுகள் மூடப்பட்டிருந்தன. குதிரையுடன் வெளியி லேயே நின்று கொண்டு உள்ளே செல்வதற்கு வழி என்ன என்று யோசித்தாள்.