ரோமாபுரிப் பாண்டியன்/17. கடியலூர் உருத்திரங்கண்ணனார்
17
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
பெருந்தேவி, அரண்மனைக்குள் எப்படி நுழைவது என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் அரண்மனையிலுள்ளோர் பரபரப்புடன் எழுந்து ஒளி பொருந்திய முகங்களுடன் அங்குமிங்கும் ஓடியாடி ஏதோ ஒரு குறிப்பிட்ட அலுவலில் ஈடுபட்டிருந்தனர். எங்கு பார்த்தாலும் வண்ணக் கோலங்கள் வரையப்பட்டன. மகர தோரணங்கள் வரிசை வரிசையாகக் கட்டப்பட்டன. மண்டபங்களை விழாக் கூடங்களாக்கிடும் முயற்சியில் வீரர்கள் தீவிரங்காட்டினர். மன்னர் பெருமானின் கொலு மண்டபம் என்றுமில்லாத தனி அழகுடன் விளங்கிட வேண்டுமென்று அமைச்சர் கட்டளையிடவே அத ஆணையைச் சிரமேற்கொண்டு வீரர்கள் பணி புரிந்தனர். புலிக்கொடித் தோரணங்கள் அசைந்தாடிக்கொண்டிருந்த காட்சி கண்டு அரண்மனைக்குள்ளே வாழ்பவர்கள் மகிழ்ச்சிக் கடலில் திளைத்தனர்.
"தமிழ் காக்கும் தங்கமே! வருக!" எனும் வரவேற்பு வளைவுகள் காலைக் கதிரவனின் ஒளிபட்டுத் தகதகவென மின்னிக் கொண்டிருந்தன. கரிகால் மன்னன் அதிகாலையிலேயே எழுந்து கொலு மண்டபத்திற்குப் புறப்படுவதற்குத் தயாராகிவிட்டான்.
பூம்புகார்த் தலைநகரின் கொலுமண்டபத்தில் அமர்வதென்றால் கரிகாலனுக்குத் தனி உற்சாகம். பூம்புகாரில் இருந்தவாறே உறையூருக்கும் அரசனென விளங்கும் புகழ் படைத்தவனன்றோ சோழப் பெருமன்னனாம் - திருமாவளவன் கரிகாலன்! கொலுமண்டபத்தில் பூம்புகார்த் தலைநகர மாந்தரும்- உறையூர் நகர மாந்தரும் வந்து நின்று தங்கள் விருப்பங்களை வெளியிடும்போது கரிகாலனுக்கு நெஞ்சு புடைக்கும். தான் விளைத்த வீரத்தை எண்ணிப் பூரிப்படைவான்! தன்னால் உருவாகிவிட்ட சோழப் பேரரசு நீண்ட நெடுங்காலம் வலுவிழக்காமல் வாழ வேண்டுமென்று அவன் விரும்பியிருந்தான். அவனைப் புகழாத புலவர்கள் அந்தக் காலத்தில் இல்லை. பத்துப்பாட்டு என அழைக்கப்படும் பழந்தமிழ் இலக்கியத்தில் பட்டினப் பாலையும், பொருநராற்றுப்படையும் அவனது சிறப்பை வானளாவப் புகழ்ந்து கூறுகின்றன.
"காடுகொன்று நாடாக்கிக்
குளந்தொட்டு வளம்பெருக்கிப்
பிறங்கு நிலைமாடத்து உறந்தை போக்கிக்
கோயிலொடு குடி நிறீஇ."
என்று, அவன் செய்த பெருஞ் செயல்களை வர்ணிக்கிறது பட்டினப்பாலை. உலகமெல்லாம் மழை மறுத்துப் பஞ்சம் வந்த போதும், சோழமன்னன் தன் செங்கோல் அறத்தாலே பொன்னிமா நதியின் துணைகொண்டு பொன் கொழிக்கும் நாடாகவே சோழநாட்டை ஆக்கிடுவான்; கரும்பாலைகளிலே எழுகின்ற புகை, நீர் நிறைந்த இடத்தில் செழித்துள்ள நெய்தற் பூவையும் வாடச் செய்யும். தென்னை, வாழை, கமுகு, மஞ்சள்,மா, சேம்பு, இஞ்சி முதலியன பயன் கெழுமி நிறைந்த குலைகளுடனும் கிழங்குகளுடனும் நிற்பதைச் சோழ நாடெங்கும் காணலாம். உப்பங்கழிகளிலே - நிரல்படக் குதிரைகளைப் பிணைத்தாற் போன்று தறிகளிலே பிணைக்கப்பட்ட படகுகளையும், புலி இலச்சினை செதுக்கப்பட்ட பெரிய கதவுகளை உடைய இல்லத்தில் உள்ள அடுக்களையில் சோறு வடிப்பதால் ஒழுகிய கொழுங்கஞ்சி தெருவிலே ஆறுபோல ஓடுகின்ற நிலைமையையும் வளத்தையும் சித்தரித்துச் செந்தமிழ் நாட்டின் பழைய நிலைமையைக் கூறுவதே பட்டினப் பாலை.
இதன் பாட்டுடைத் தலைவன் கரிகால் திருமாவளவனே தான். சோழ நாட்டுப் பெருமைகளையும் சோழ மன்னனின் ஆற்றலையும் புகழ்ந்திடும் மற்றொரு இலக்கியந்தான் பொருநராற்றுப் படையாகும்.
பட்டினப்பாலையின் ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார். இந்தத் தமிழ்ப் பாவலர் 'பட்டினப் பாலை' 'பெரும் பாணாற்றுப் படை' என்னும் இருபெரும் கருவூலங்களைத் தமிழகத்துக்குத் தந்தவர்; இவருடைய 'கண்ணனார்' என்னும் பெயருக்கு முன் வந்துள்ள கடியலூர் என்பது அவருடைய ஊரைக் குறிப்பதாகும். உருத்திரன் என்பது அவரது தந்தையின் பெயர். பட்டினப்பாலை மூலம் கரிகாலனின் அறவழி ஆட்சியை விளக்கிக் காட்டி, கடியலூர் உருத்திரங்கண்ணனார் மன்னனின் அன்புக்குப் பெரிதும் பாத்திரமாகிவிட்டார். அந்த அன்பின் அடையாளமாகக் கரிகாலன், கண்ணனாருக்குப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசில் வழங்கினான் என்று வரலாறு முழங்குகிறது. பொருநராற்றுப் படை இயற்றிய முடத்தாமக்கண்ணியார் கரிகாலனின் நாட்டு வளத்தையும், ஆற்றல் அறிவு ஆகியவற்றையும் இலக்கியத்தில் ஏற்றிய பெருமைக்குரியவராவார்.
இரு புலவரில் முதலில் கூறப்பட்ட பட்டினப்பாலை ஆசிரியருக்குப் பரிசு அளிக்கும் விழாதான் அன்று பூம்புகார் அரண்மனையில் நடக்க இருந்தது. அதனால்தான் அரண்மனை ஆட்கள் பரபரப்புடன் வேலைகளைக் கவனித்தனர். மன்னனைப் பாட்டுடைத் தலைவனாக வைத்து இயற்றப்பட்ட பட்டினப்பாலையைப் பூம்புகார்க் கொலு மண்டபத்தில் அரங்கேற்றுவதற்காகவே உருத்திரங்கண்ணனார் வருகிறார். அவர் வருகையை முன்னிட்டே அரண்மனை விழாக்கோலம் பூணுகிறது.
இன்னும் புலவர் வந்து சேரவில்லை. அவரை மிக்க மரியாதையுடன் கோலாகலமாக வரவேற்க வேண்டுமென்று திட்டம் தீட்டப்பட்டிருந்தது. புலவரை வரவேற்பதற்காக அரண்மனைக் கதவுகள் திறந்து வைக்கப்பட்டன. வாயிற்புறத்தில் காத்திருந்த பெருந்தேவியின் காதுகளிலும் கடியலூர்ப் புலவர் அரண்மனைக்கு வரப்போவது பற்றிய செய்தி எட்டியிருந்தது. வாயிற்புறத்துப் பெருங்கதவுகள் திறக்கப்பட்டதும் பெருந்தேவி உள்ளே நுழைய முயலாமல் வெளியிலேயே அதிகத் தொலைவில் போய்த் தன் குதிரையுடன் மறைந்திருந்து கவனித்துக் கொண்டேயிருந்தாள்.
தொலைவில் "சோழப் பேரரசு வாழ்க! கடியலூர்ப் புலவர் வாழ்க!" எனும் முழக்கம் கிளம்பியதை அவள் கேட்டாள். அவள் மறைந்து நின்ற இடத்துக்கு அருகாமையில் அந்த ஒலி வந்து விட்டது. அழகான முத்துச் சிவிகையொன்றில் புலவர் அமர்ந்திருந்தார். புலவரின் முகத்தில் வெற்றிரேகைகள் மின்னிக் கொண்டிருந்தன. அவரது கையில் சுவடி ஒன்றிருந்தது. அந்தச் சுவடிதான் எதிர்காலத்தில் பத்துப்பாட்டு வரிசை யில் பழம் பெரும் இலக்கியமாக அமையப் போகிறது என்று அவர் எண்ணினாரோ இல்லையோ - ஆனால் அவரது கண்கள் சுவடியிலேயே ஆழ்ந்திருப்பதைக் காணும் எவரும் அந்தப் படைப்பு நிச்சயம் அழியாத உயிர்பெறும் என்றுதான் கூறுவர். தான் எழுதியவைகளைத் திரும்பத் திரும்பப் படித்துத் திருத்தங்கள் செய்து கொண்டே வந்தார், சிவிகையில் இருந்தவாறே! அவர் எழுதியது அவருக்கே இனிக்கிறது போலும். அதனால்தான் அவரது முகத்தில் அத்தனை கம்பீரம் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
"திருமாவளவன் தெவ்வர்க் கோச்சிய
வேலினும் வெய்ய கானமவன்
கோலினுந் தண்ணிய தடமென் தோளே!"
- காதலியின் தோள்மீது கையைப் போட்டுக் கொண்டு காதலன் காட்டு வழியே செல்கிறானாம். அப்போது அவன் காட்டுக்கு உவமை தேடுகிறான். கரிகாலன் தனது பகைவர்களின்மீது வீசிய வேலைக் காட்டிலும், கடியதாயிருந்ததாம் அந்தக் காடு. அவன் பற்றியுள்ள தோள் எப்படியிருந்ததாம்? கரிகாலனின் செங்கோலினும் குளிர்ந்ததாகுமாம்.
தான் எழுதியவற்றைத் தானே சுவைத்தார் புலவர். தன் எழுத்தை, எல்லாரையும் விட அதிகமாகச் சுவைத்துப் பாராட்டக் கூடியவர் ஒருவர். பூம்புகாரில் இருக்கிறார். அவர்தான் முதலில் தனது பட்டினப்பாலையைக் காண வேண்டும் என்றெல்லாம் கடியலூரார் எண்ணமிட்டவாறு வந்து கொண்டிருந்தார். தனக்குப் பாராட்டுரை வழங்கத் தகுதியுடையவர் யார் என்று அவர் முடிவு கட்டுகிறார்? புலவர் காரிக்கண்ணனார்தான் அந்தத் தகுதி பெற்றவர் என்பது உருத்திரங்கண்ணனாரின் முடிவு. காரிக்கண்ணனார் கொலு மண்டபத்தில் தனக்காகக் காத்துக் கொண்டிருப்பார். அவரைச் சந்தித்துப் பல திங்கள் ஆகின்றன- இன்று மிகவும் மகிழ்ச்சிகரமான நாள்தான் - என்றெல்லாம் நினைத்துப் புளகாங்கித முற்றவாறு கடியலூரார் வந்து கொண்டிருந்தார்.
சிவிகையைச் சுற்றி முன்னும் பின்னுமாகக் குதிரைகளில் நூற்றுக்கு மேற்பட்ட வீரர்கள் புலிக்கொடிகளுடன் வந்து கொண்டிருந்தார்கள். அந்தத் தமிழுணர்ச்சி மிக்க பவனியைப் பெருந்தேவி கண்டாள். இதுதான் நல்ல சமயமாகும். பவனி அருகே வரட்டுமென்று காத்துக் கொண்டிருந்தாள். முன்னால் வந்த ஐம்பது குதிரை வீரர்களும் பெருந்தேவி மறைந்து நிற்பதைப் பார்க்காமலே வேகமாகப் போய் விட்டார்கள்.
அடுத்து, புலவர் அமர்ந்திருந்த சிவிகை, அதுவும் அவளை விட்டு நகர்ந்த பிறகு பின்னால் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பெருந்தேவி நிற்கும் இடத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். தருணம் பார்த்திருந்த பெருந்தேவி குதிரை வீரர்களின் கடைசி வரிசைக்கும் பின் வரிசையில் தனியாகச் சென்று அவர்களோடு கலந்து கொண்டாள்.
புலவரைச் சுமந்து வந்த சிவிகை அரண்மனைக்குள்ளே நுழைந்தது. அத்துடன் குதிரை வீரர்களும் தொடர்ந்தார்கள். அவர்களுடன் கொலை வெறியோடு வந்திருக்கும் பெருந்தேவியும் யாருக்கும் தெரியாமல் கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் புகுந்து விட்டாள். அரண்மனை வாயிலைக் கடக்கும் வரையில்தான் பெருந்தேவிக்குக் கவலையாக இருந்தது. உள்ளே நுழைந்த பிறகு அவளுக்கு எல்லாமே சுலபமாகத் தெரிந்தது. புலவர் கடியலூராரை வரவேற்பதற்கான விழாவில் ஆடவரும் பெண்டிரும் அளவில்லாத ஆர்வங்காட்டி ஆடிப்பாடி மகிழ்ந்திருந்தனர். அரண்மனைக்குள்ளே தாராளமாக நடமாட முடியாதபடி ஒரே நெருக்கடி, அதிவிரைவில் அப்படிக் கூட்டம் சேர்ந்து விட்டது.
பெருந்தேவி குதிரை வீரர்களை விட்டுப் பிரிந்து, மெதுவாகக் குதிரையை விட்டு இறங்கிச் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டாள். யாரும் தன்னைக் கவனிக்கவில்லையென்று உணர்ந்து குதிரையை அங்குள்ள ஒரு தூணில் கட்டிவிட்டுப் பெண்களின் கூட்டத்தில் போய்ச் சேர்ந்து கொண்டாள். புலவரை வரவேற்பதில் அக்கறையும் அவசரமுங் கொண்டிருந்த பெண்களுக்குப் பெருந்தேவியைக் கவனிப்பதற்கு ஏது நேரம்?
புலவரின் சிவிகை கொலு மண்டபத்துக்கு அருகே இறக்கப்பட்டது. புலவர் இறங்கிக் கொலு மண்டபம் நோக்கிப் புறப்பட்டார். ஏற்கனவே புலவர்கள் பலர் புடைசூழ நின்று கொண்டிருந்த கரிகால் மன்னன், உருத்திரங்கண்ணனாரை எதிர் கொண்டழைத்து மார்புறத் தழுவிக் கொலுமண்டபத்துக்குள்ளே அழைத்துச் சென்றான். உள்ளே ஆண்களும் பெண்களும் தனித்தனியே அமர்வதற்கேற்ற வகையில் ஆசனங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
புலவர் கூட்டத்தில் விழிகளையோட்டி ஏமாந்த உருத்திரங்கண்ணனார், அரசனைப் பார்த்து ஆவல் ததும்ப, "காரிக்கண்ணனார் எங்கே?" என்று கேட்டார். அதற்குக் கரிகாலனால் பதில் கூற முடியவில்லை. அவன் கண்கள் கலங்கி விட்டன. சமாளித்துக் கொண்டான். "அவர் மதுரைக்குப் போயிருக்கிறார்?" என்று பொய் கூறி மழுப்பினான்.
கடியலூராருக்கும் கரிகாலனுக்கும் இடையே பேச்சு வார்த்தைகள் நடைபெறும்போதே பெருந்தேவி பெண்கள் அமரும் பகுதியில் வந்து உட்கார்ந்து கொண்டாள். ஏதோ ஒரு மகத்தான இலட்சியத்தைச் சாதிக்கப்போகிறோம் என்ற கடமை உணர்ச்சியும் வெறித்தனமும் அவளது நோயைக் கூடச் 'சற்றே விலகியிரு!' என்று கூறிவிட்டன. இடையிலே மறைத்து வைத்துள்ள கட்டாரியின் பிடியை அழுத்திப் பிடித்தவாறே அவள் கரிகாலனின் முகத்தை நோக்கினாள். தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளச் சமயம் பார்த்திருந்த அவளுக்குக் கரிகால் சோழனின் முகம் சற்றுக் கோழைத்தனத்தை அளித்தது! அவன் கண்களில் கனிவு இருந்தது; கனல் இல்லை. பேச்சில் பண்பு தெரிந்தது; பயங்கரம் இல்லை. கையிலே வாளைப் பிடித்திருக்கிறான். அந்த வாளோ தீயோரைத்தான் தாக்கும் என்று பக்கத்திலுள்ள பெண்கள் மன்னனைப் பற்றி மதிப்புரை வழங்கிக் கொண்டிருந்தார்கள்.
வேளிர்குல அரசி, எந்தச் சபலத்துக்கும் இடம்கொடுக்கக் கூடாது என்று தீர்மானித்துக் கொண்டு கரிகாலனை வீழ்த்தச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கடியலூர்ப் புலவர் அமர்வதற்கென அமைக்கப்பட்டிருந்த அழகான இருக்கையில் அவரை அமரச் செய்து விட்டு, மன்னன் தன் இருக்கைக்குச் சென்றான். தேன் தமிழ் பெருக்கெடுத்தோடப் போவதை எண்ணி மகிழ்ந்தவாறு அவையோர் வீற்றிருந்தனர்.
கரிகாலனின் விருப்பப்படி பூம்புகார் மாளிகையில் தங்கியிருந்த பாண்டிய நாட்டுத் தளபதி நெடுமாறன் கொலு மண்டபத்தில் நுழைந்து மன்னனுக்கும் புலவருக்கும் வணக்கம் தெரிவித்து விட்டு, அமர்ந்தான். கரிகாலன் உருத்திரங்கண்ணனாருக்கு நெடுமாறனை அறிமுகம் செய்து வைத்தான்.
உடனே புலவர், பாண்டியன் பெருவழுதியின் நலன்கள் பற்றி அக்கறையுடன் நெடுமாறனிடம் விசாரித்தறிந்து மகிழ்ந்தார். அதன் பின்னர் கரிகாலன் அவையிற் குழுமியிருந்தவர்களை நோக்கிப் பின்வருமாறு உரையாற்றினான்.
"அன்புக் குடிமக்களே ! அவைப் புலவர்களே! நாடு காக்கும் நல்லவர்களே! இன்று நமக்கெல்லாம் ஒரு திருநாள். நமது சோழ மண்டலத்து வரலாற்றில் ஒரு பொன்னேடு சேர்க்கப்படுகிறது இன்று. தமிழ்த் தாயின் செல்வங்கள் நாம். தமிழால் வளர்க்கப்படுகிறவர்கள் நாம். நமது அருமைத் தாயை அன்புடன் பேணி வளத்துடன் வாழ வைக்க வேண்டிய கடமைக்குரியவர் நாம் என்பதை உணர்ந்திருக்கிறோம். தாய்மொழிப் பற்றில்லாதவன் என்னதான் உலகத்தில் மேன்மையுடனும் புகழுடனும் வாழ்கிறான் என்று கூறினாலும் அந்தப் புகழும் மேன்மையும் குருடன் கையில் இருக்கும் விளக்கைப் போன்றது தான் என்பதை மறந்துவிடக் கூடாது; நாம், நமது மொழியை-நாட்டை -கலையை -நமது மக்களை நேசிக்கிறோம். நமது உரிமை உணர்ச்சிகளை அழிக்க எத்துனை வல்லமை வாய்ந்த எதிரிகளாலும் முடியாது. நல்லதிடசித்தத்தையும் உறுதிப் பாட்டையும் நமக்கு அளித்தவள் நமது தமிழன்னைதான்! எவ்வளவு இடர்ப்பாடுகள், இடுக்கண்கள் வந்துற்றாலும் தமிழ்த்தாயின் குளிர்ந்த முகத்தைக் கண்டு அவள் அரவணைப்பின் சுகம் பெற்று எல்லா வேதனைகளையும் மறந்து விடுகிறோம். இப்போது நான் அமைதியான உள்ளத்தோடு இல்லை! என் நெஞ்சில் அடித்துக் கொண்டிருக்கிற புயலின் வேகத்தை யாராலும் உணர்ந்து கொள்ள இயலாது. ஆனால் என் அமைதியற்ற இதயத்துக்கு அமைதி வழங்கும் தாய், இதோ வந்திருக்கிறாள்! ஆமாம்! உருத்திரங்கண்ணனார் உருவத்திலே என் தமிழ் அன்னை வந்திருக்கிறாள். அவள் என் கவலையைப் போக்குவாளாக! என் துயரங்களுக்கு ஆறுதல் அளிப்பாளாக! சோழ மண்ணின் பெருமைகளைப் பற்றி வீறு கொண்ட தமிழில் பாப்புனையக் காத்திருக்கிறார் நமது பைந்தமிழ்க் காவலராம் கடியலூர்ப் புலவர் பெருந்தகை உருத்திரங்கண்ணனார். அந்த நல்லார் இப்போது தமிழன்னைக்கு முத்தாரம் அணிவிப்பார். அதனைக் கண்டு, கேட்டு நாமெல்லாம் புதிய வலிவும் பொலிவும் பெறுவோமாக!"
-எனக் கூறி மன்னன் நிறுத்தியதும் கொலுமண்டபம் அதிரும் வகையில் "கரிகால் பெருவளத்தார் வாழ்க!", "கடியலூரார் வாழ்க!" என்ற முழக்கங்கள் எழுந்தன. உருத்திரங்கண்ணனார், கையிலுள்ள சுவடியைப் பிரித்துக் கவிதை மழை பொழியத் தொடங்கினார்.
"வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கேகினும்
தற்பாடிய தளியுணவிற்
புள்தேம்பப் புயல்மாறி
வான்பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத்தலைஇய கடற்காவிரி
புனல்பரந்து பொன் கொழிக்கும்"
-என ஆரம்பித்துத் தமிழ் முழக்கம் செய்தார்.
வடதிசைக்கண் நில்லாமல் வெள்ளிமீன் - திசைமாறி தென் திசைக்குப் போயினும், வானம்பாடி மழைத்துளிதூறாது வருந்துகிற அளவுக்கு வானம் பொய்த்து விட்டாலும், காவிரியாறு, தான் பொய்க்காமல் சோழ நாட்டுக் கரையில் பொன்துகள்களை ஒதுக்குகிற அளவுக்குப் பெருக்கெடுத்து ஓடுகிறதாம்.
இந்தப் பொருள் செறிந்த கவிதை வரிகளைக் கேட்டு அவைக்களம் அசையாத சிலையின் நிலைபெற்றது. முந்நூறு முத்தமிழ் வரிகளைப்பாடி முடித்தார் உருத்திரங்கண்ணனார்.
அத்தனையும் பலாச்சுளை-நிலா ஒளி-பனிமலர்க் குவியல்! மொத்தத்தில் தேனருவி.
கரிகாலன் தன்னை மறந்து அமர்ந்திருந்தான். தமிழ் மாதாவின் அன்புக் கரங்களில் முகத்தைப் பதித்துக் கொண்டிருந்த உணர்வு அவனுக்கு ஏற்பட்டிருந்தது.
சோணாட்டில் சோறுவடித்த கஞ்சி, தெருவில் ஆறாக ஓடுகிறது. அங்கே காளைகள் ஒன்றோடொன்று போரிட்டு அந்த இடம் சேறாகிறது. அந்தச் சேற்றிலே தேர்கள் ஓடி ஓடிச் சேறு, தூசுகளாய் மாறி, அந்த அழுக்குத் தூசுகள் வெள்ளிய அரண்மனைகளில் பரவி, அக்கோட்டை கள் புழுதியைப் பூசிக் கொண்ட யானைகள் போலக் காட்சி தருகின்றன.
-இப்படிச் சோழ நாட்டுச் சிறப்பை வர்ணிக்கும் போது யார் நெஞ்சில்தான் இன்பம் சுரக்காமல் இருக்கும்? கரிகால் மன்னனைப் போலவே அவையிலிருந்த அனைவரும் பூரிப்புத் தாங்கமாட்டாமல் மகிழ்ச்சிக் கண்ணீர் பெருக்கினர். வேளிர்குல அரசி பெருந்தேவியின் காதுகளில் அந்த இன்பத் தமிழ் முழக்கம் கேட்கவில்லை. அவள் கவனமெல்லாம் தன் காரியத்தை வெற்றிகரமாக முடித்துக் கொள்ள எப்போது சமயம் கிடைக்கும் என்பதில்தான் இருந்தது.
சேலையின் மறைவில் ஒளித்தவாறு வைத்திருந்த கட்டாரியின் பிடியைத் தளர்த்தாமலே அவள் நேரம் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவளை யாரும் கவனிக்கவில்லை. எல்லோருடைய கண்களும் காதுகளும் கடியலூர்ப் புலவர் பக்கமே திரும்பியிருந்தன.
தமிழ் வளர்க்கும் சோழனைக் கொல்வதற்குத் தனக்குத் தமிழே துணைபுரிகிறது என்று எண்ணிக் கொண்டாள் பெருந்தேவி. யாரும் அவளைக் கவனிக்கவில்லையென்பது உண்மைதான். என்றாலும் அவளையுமறியாமல் இரண்டு கூர்மையான விழிகள் கொலு மண்டபத்தின் ஒரு மூலையிலிருந்து அவள் பக்கம் ஊடுருவிப் பாய்ந்து கொண்டிருந்தன. அந்த விழிகளில் தேங்கியிருந்த ஆவலை - பரபரப்பை - அவசரத்தை - அச்சத்தை வர்ணிப்பதென்றால் பட்டினப்பாலை பாடிய கடியலூர்ப் புலவராலும் இயலுமா என்பது சற்று ஐயத்திற்கிடமானதுதான்!
அந்த விழிகளுக்குரிய உருவம் நகர்ந்து நகர்ந்து, கொலு மண்டபத்து உட்பகுதிக்கு வந்து கொண்டிருந்தது.
வேளிர் அரசியும் தான் முதலில் உட்கார்ந்த இடம் வசதியானது அல்ல என்பதையும் உணர்ந்து, மெதுவாக அரசனின் ஆசனத்திற்கு அருகாமையில் உள்ள இடம் நோக்கி வந்து கொண்டிருந்தாள்.
இதற்குள்ளாக உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையைப் பாடி முடித்துச் சுவடியைக் கொண்டு போய்க் கரிகால் மன்னனிடம் அளித்தார். மண்டபம் முழுவதும் மலர் மாரி பொழிந்தது. சுவடியை வாங்கித் தக்க இடத்தில் வைத்துவிட்டு அரசன் அமைச்சரிடம் குறிப்பாக ஏதோ கூறவே அவர் தளபதியை நோக்கிக் கையை அசைத்தார்.
சற்று நேரத்திற்கெல்லாம் ஐந்தாறு ஆட்கள் தூக்க முடியாமல் திணறியவாறு வெள்ளிப் பேழைகள் சிலவற்றைத் தூக்கி வந்து மண்டத்தின் நடுவே வைத்தனர். அரசன் எழுந்து, புலவரை நோக்கிக் கரங்குவித்தவாறு பேசலானான்.
"கவியரசே! சோழ நாட்டின் அன்புப் பரிசாக இந்த வெள்ளிப் பேழைகளிலுள்ள பதினாறு நூறாயிரம் கழஞ்சுப் பொன்னையும் எற்றுக் கொள்ள வேண்டுகிறேன்."
- எனக் கூறிப் பேழைகளைத் திறக்கச் செய்து பொன்னை அள்ளிப் புலவர் பெருமானின் தலையில் மலர் போலத் தூவினான்.
அந்த ஆரவாரத்தைக் கண்ட பெருந்தேவி, இதுதான் தக்க தருணமென்று தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள எழுந்தாள். அவள் இலக்குக்கு நேராக கரிகாலன் நின்று கொண்டிருந்தான். கட்டாரியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு பலங்கொண்ட மட்டும் தன் கரத்தைப் பின்னுக்குத் தூக்கி வீசியெறிய முயன்றாள்.
அவளைப் பற்றியிருந்த பிணி எங்கேயோ பறந்து விட்டது.
"ஓரே வீச்சு! மன்னன் ஒழிந்தான்!" -இப்படி அவளால் ஆத்திரத்தோடு நினைக்க முடிந்தது.
ஆனால் ஏதோ ஒரு திகில் அவள் அடிவயிற்றிலிருந்து கனல் போல் கொழுந்துவிட்டுக் கிளம்பி நாக்கு வரையில் சூடேற்றிக் கொண்டிருந்தது.
"இனியும் தயங்கிப் பயனில்லை!"-அவள் உள்ளம் எச்சரிக்கிறது.
ஆனால் அவள் செயலிழந்து விட்டாள். எப்படி?
கூடாது! கூடாது! எல்லா வலுவினையும் ஒன்று சேர்த்து ஒரேவீச்சில் தன் காரியத்தை வெற்றிகரமாக முடித்துவிட வேண்டும்... என உறுதி கொண்டு விட்டாள் இப்போது.
தணிந்த கை மீண்டும் உயர்ந்தது. பலமனைத்தும் கரத்தில் குவிந்தது. ஓங்கினாள் வேகமாக; வீசிவிட்டாள் கட்டாரியை!
'ஐயோ! கரிகாலன் மார்புக்கு நேரே கட்டாரி பாயப்போகிறது! ஆனால் அதற்குள் அங்கே குறுக்கே பாய்ந்தது யார்?' கொலு மண்டபத்தில் ஒரே குழப்பம். கரிகாலன் திடுக்கிட்டான். திகைத்தான். பெருந்தேவியைச் சில பெண்கள் பிடித்துக் கொண்டார்கள்.
கரிகாலனின் உயிரைக் காப்பாற்றுவதற்காகக் குறுக்கே பாய்ந்து தன் விலாப்புறத்தில் பலத்த காயத்துடன் கீழே விழுந்துவிட்ட அந்த மனிதனை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். அவன்தான் கொலுமண்டபத்தில் பெருந்தேவியின் நடவடிக்கைகளை மிகத் தீவிரமாகக் கவனித்து வந்தவன். தோற்றத்தில் ஒரு வயதான உழவனைப் போலவே இருந்தான்.
மயக்கமுற்றுக் கிடந்த அவனை உடனே மருத்துவச் சிகிச்சைகளுக்காக எடுத்துப்போக வேண்டுமென்று கரிகாலன் பரபரப்புடன் ஆணை பிறப்பித்தான்.
தூக்கும்போது கண்விழித்த அந்த உழவன், பெருந்தேவி நின்றிருந்த திசையை நோக்கியவாறு “அவள்! அவள்! அவள்..." என்று கத்தினான்.
அப்படி அவன் கத்திக்கொண்டிருக்கும்போதே பெண்களின் பிடியிலிருந்த பெருந்தேவி கீழே சாய்ந்தாள்.
தன் இலக்குத் தவறிவிட்டது; யாரோ ஒருவன் தன் இலட்சியத்தைத் தடுத்துவிட்டான்; தன் முயற்சியத்தனையும் பாழாகி விட்டது என்பதை ஒரு நொடியில் உணர்ந்து கொண்டாள் வேளிர் குல அரசி. அந்த உணர்வுக்குப் பிறகு அவள் உயிர் உடலில் தங்கவில்லை. முட்டிமோதிக் கொண்டு வெளிப்பட்டு அவளது கடைசி மூச்சு, காற்றுடன் கலந்து விட்டது!
அய்யோ பரிதாபம்! வேளிர் குல அரசியின் வேதனைகள் கடைசி வரையில் தீரவில்லை. தன் கணவனின் மகிழ்ச்சிக்காக அவள் செய்யத் துணிந்த காரியமும் படுதோல்வி அடைந்து விட்டது. எங்கேயோ பிறந்து, எங்கேயோ வாழ்ந்து, எங்கேயோ எதிரியின் மாளிகைக் கொலு மண்டபத்தில் அந்தப் பெருமைக்குரிய அரசியின் பிணம் கிடந்தது!
கரிகாலன் அந்தச் சவத்தின் அருகே வந்து நின்றான். அனைவரும் சூழ்ந்து நின்று பிணத்தின் முகத்தை உற்று உற்றுப் பார்த்தனர்.
இருங்கோவேளின் மனைவி பெருந்தேவிதான் அரசனைக் கொல்லும் முயற்சியில் ஈடுபட்டுப் பிணமாகி விட்டாள் என்ற உண்மை உறுதிப்படுத்தப்பட்டது.
கரிகாலன் மரம்போல் நின்று கொண்டிருந்தான். பெருந்தேவியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் மன்னன். அம்மண்டபத்திலே மயான அமைதி நிலவிற்று.
இறுதியாக அமைச்சரைப் பார்த்துச் "சவ அடக்கத்திற்கான ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்படட்டும், நான் போய் அந்த உழவனைக் கவனிக்கிறேன்" என்று கூறிவிட்டுக் கொலு மண்டபத் திலிருந்து கரிகாலன் வெளியேறினான்.
கொலு மண்டபத்தில் ஏற்பட்ட குழப்பத்தினால் அதிர்ச்சியடைந்து போயிருந்த உருத்திரங்கண்ணனாரைப் பாண்டியத் தளபதி நெடுமாறன் அழைத்துக் கொண்டு, மெதுவாக அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான். தன் பாடல்கள் அரங்கேறிய அந்த நாளில் இப்படி ஒரு சம்பவம் நடக்க வேண்டுமா என்ற கவலை புலவரை வாட்டியது.
"பட்டினப்பாலை அரங்கேற்று விழாவில் சோழன் கொலுமண்டபத்தில் குழப்பம் ஏற்பட்டது என்று எண்ணிக் கொண்டு எதற்காக வருந்த வேண்டும்? அந்த நாளில் அரசனின் உயிருக்கு நேர இருந்த ஆபத்து நீங்கியது என மகிழ்ச்சியடைவதே பொருத்தமு டையதாகும்" என்று நெடுமாறன், புலவருக்குச் சமாதானம் கூறினான்.
"இப்படி ஒரு நிகழ்ச்சி ஏற்படக் காரணம் என்ன?" என்று புலவர் கவலையுடன் கேட்டார்.
அதற்கு நெடுமாறன், "இது போல இரண்டு மூன்று முயற்சிகள் நடைபெற்று விட்டன, அரசரைக் கொல்ல!" என்று பதில் அளித்தான். "பகைவர்கள் பூம்புகாரில் நுழைவதற்கும். மாளிகையிலும் கொலுமண்டபத்திலும் விருப்பம் போல பிரவேசிப்பதற்கும் இடமளித்து விடுகிறார்களா?"
புலவரின் சந்தேகம் நியாயமானதுதான். ஆனால் அதற்கு பதில் சொல்ல நெடுமாறன் சிறிது தயங்கினான். ஆயினும் பதில் கூறினான்:
"வெளியில் மட்டுமல்ல, பூம்புகாருக்குள்ளேயே கரிகால் சோழருக்கு விரோதமாகக் காரியங்கள் நடக்கின்றன. அந்த துரோகிகளை கண்டு பிடிக்கும் விஷயத்தில் மன்னன் சிரத்தை காட்டாமல் விட்டுவிட்டார். அதன் விளைவு விபரீதமாகப் போன பிறகுதான் இப்போது சில நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்."
"வியப்புக்குரிய செய்தியாக இருக்கிறதே! சோழ மண்டலத்தில் துரோகிகளா?"
"ஆமாம். இப்போது நான் சொல்லப் போவதைக் கேட்டால் மேலும் வியப்படைவீர்கள். பகையரசன் இருங்கோவேளுடன் தொடர்பு கொண்டு துரோகம் புரிந்தார் என்ற காரணத்திற்காகப் புலவர் காரிக்கண்ணனார் கூடச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்!"
"ஆ! என்ன! காரிக்கண்ணனார் சிறைப்பட்டிருக்கிறாரா?"
"ஆமாம். எனக்குத் தெரியாது என்றுதான் மன்னர் நினைத்துக் கொண்டிருக்கிறார். மாளிகையில் உள்ள முக்கியமான வீரர்கள் மூலம் நான் அறிந்து கொண்ட உண்மையிது. யவனக் கிழவர் வேடத்தில் வந்த இருங்கோவேளுடன் காரிக்கண்ணனார் பேசிக் கொண்டிருக்கும்போது பிடிப்பட்டிருக்கிறார். ஆனால் பிடிக்கப் போன வீரர்களைத் தந்திரமாக ஏமாற்றி இருங்கோவேளைத் தப்பியோடச் செய்து. யவனக் கிழவர் வேடத்தில் தானே வந்து கரிகால் மன்னரின் கையில் சிக்கிக் கொண்டார்."
"அப்படியா? நம்பவே முடியவில்லையே!"
"கேள்விப்பட்டதும் நானும்தான் நம்பவில்லை. மன்னர் காரிக்கண் ணனாரிடம் வைத்திருந்த அன்பு அளவு கடந்தது. அவரை மன்னர் பொன்னே போல் போற்றி வந்தாராம். ஆனால் மயில் தோகைக்குள்ளே முள்ளம்பன்றி மறைந்து கொண்டிருந்திருக்கிறது!"
காரிக்கண்ணனார் பற்றிய செய்தி கேட்டதும் கடியலூர்ப் புலவரின் நெஞ்சம் கொதிக்கத் தொடங்கியது. குமுறலும் கொந்தளிப்பும் மிகுந்த உள்ளத்தோடு நடுங்கும் குரலில் கண் கலங்க அவர், பாண்டியத் தளபதியைப் பார்த்து, "தமிழுக்கே இது அவமானம்!" என்று கதறினார்.
"எப்படியாவது காரிக்கண்ணனாரைச் சந்தித்தே தீர வேண்டும்!" என்று நெடுமாறனிடம் பரபரப்புடன் கூறினார். அன்பும் அமைதியும் நிறைந்த காரிக்கண்ணனாரின் கண்களில் வஞ்சம் ஒளிந்திருந்தது எப்படி எனச் சிந்திக்கத் தொடங்கினார்.
"தளபதி நெடுமாறா! பட்டினப்பாலையை இயற்றி முடிந்ததும் கரை காணா இன்பம் கொண்டேன். அதனை அரசர் முன்னே பாடிக்காட்டியதும் என் பிறவிப் பயனை அடைந்துவிட்ட மகிழ்ச்சியுற்றேன். பொன்னையும் மணியையும் திருமாவளவர் வாரி வழங்கியதும் என் தமிழ் நெஞ்சம் விம்மி உயர்ந்தது. 'வாழ்க தமிழ்!' என்று உரக்கக்கூவிய ஒலி என் காதுகளுக்கு மட்டுமே கேட்டது. என்னை நான் மறந்தேன். அந்தச் சமயத்தில் மின்னலெனத் தோன்றிய குழப்பம் - கொலை வெறி அனைத்தும் சேர்ந்து என் உயிரைக் கொத்தித் தின்னத் தொடங்கின. அந்த வேதனையைக் கூடச் சகித்துக் கொண்டேன், பேரரசர் பிழைத்துக் கொண்டார் என்பது கண்டு!. ஆனால் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு நேர் எதிர்ப்பாக... நான் பெற்ற வேதனைகளுக்குச் சிகரமாக அமைந்துவிட்டது காரிக்கண்ணனார் பற்றிய செய்தி. இதுபற்றி எனக்கு உண்மை தெரிந்தாக வேண்டும். அதற்குவழி செய்தாக வேண்டும்" என்று நெடுமாறனிடம் தன் உள்ளத்தைத் திறந்து காட்டினார் உருத்திரங்கண்ணனார்.
"புலவர் அவர்களே! கொஞ்சம் பொறுத்திருங்கள். அமைதியின்றித் தவித்துக் கொண்டிருக்கும் அரசரின் மனம் ஒரு நிலைக்கு வரட்டும். தன்னைக் கொல்ல வந்த பெருந்தேவிக்கு அவர் நடத்த இருக்கும் ஈமச்சடங்குகள் முடிவு பெறட்டும். அதன் பிறகு அவரை அணுகிக் காரிக்கண்ணனார் பற்றி விசாரிக்கலாம்" என்று நெடுமாறன் பதில் கூறிவிட்டு, அவரையும் அழைத்துக் கொண்டு தான் தங்கியிருக்கும் இடம் நோக்கி நடக்கலானான். புலவரும் நெடுமாறன் சொல்வது சரிதான் என்று ஒப்புக் கொண்டவராய் அவனுடன் புறப்பட்டார்.