ரோமாபுரிப் பாண்டியன்/18. உயிர்காத்த உழவன்
18
உயிர்காத்த உழவன்
பூம்புகார் நகரத்து மக்களும் புயலென உள்ளம் படைத்து ஓரிடத்தில் உட்காரவோ நிற்கவோ முடியாதவர்களாக நகரத்து வீதிகளில் அலைந்து கொண்டிருந்தனர். இருங்கோவேள் மன்னன் மீது உடனே படையெடுத் தாக வேண்டும் என்ற உணர்ச்சி காட்டுத்தீ போலச் சோழர் தரணியெங் கும் பரவிவிட்டது. இனியும் அந்தப் பகைவனைப் பதுங்கி வாழ்வதற்கு அனுமதித்தால் கரிகால் மன்னரைக் காப்பாற்றுவது என்பது முடியாத காரியம் ஆகிவிடும் என்று அவர்கள் முடிவு கட்டிக் கொண்டார்கள்.
கோலமாப்போன்ற நரைத்தலைக் கிழடுகள் முதல் குழந்தைகள் வரையில் அனைவருமே கரிகால் மன்னரை நினைத்து நினைத்துத் தேம்பி அழுதனர். தங்கள் தலைவனைத் தங்களிடமிருந்து யாரோ பிரித்துவிடப் போகிறார்கள் என்ற பயம் அவர்களை நிலை தடுமாறச் செய்தது. சோழ நாட்டில் உள்ள படைகளின் முன்னே இருங்கோவேளின் படை எம்மாத்திரம்? அப்படியே இந்தப் படைகள் போதாது என்றால். பாண்டியத் தளபதி நெடுமாறன் வேறு படைகளோடு வந்திருக்கிறார். அதுவும் போதவில்லையெனில் பாண்டிய நாட்டில் மிச்சமுள்ள வீரர்களும் அழைத்தவுடன் அனுப்பப்படுவர். இவ்வளவு வலிமை இருந்தும் எதற்காக இன்னும் தயக்கம் காட்ட வேண்டும் என்று சோழ நாட்டு மக்கள் துடித்துக் கொண்டிருந்தார்கள்.
"கையாலாகாத கோழை! வாள் பிடிக்கத் தெரியாத வஞ்சகன்! நேர் நின்று போர் புரிய ஆற்றல் அழிந்து தன் மனைவியை அனுப்பிப் பகை முடிக்க நினைத்திருக்கிறான் படுபாதகன்."
-இப்படிப் பேசியது ஒரு கூட்டம்.
"அனுப்பியதுதான் அனுப்பினானே, யாராவது ஓர் ஆண் மகனை அனுப்பியிருக்கக்கூடாதா? நோயால் மெலிந்த தன் நோஞ்சான் மனைவியை அல்லவா சூதாட்டக்காயாகப் பயன்படுத்தியிருக்கிறான்? இவனுக்கு ஏன் கையிலே வாள்? இவனுக்கு ஏன் மீசை? இவனுக்கு ஏன் மன்னன் பட்டம்? வீரன் என்ற விருது?"
ஆத்திரம் கலந்த வாசகங்கள் பூம்புகார் மக்களிடமிருந்து வெளிக்கிளம்பின. வெளிநாட்டுப் பொருள்களை ஏற்றிக் கொண்டு வந்த களைப்பால் பெருமூச்சு விட்டுக் கரையில் சாய்ந்து உடனே வேலைக்கு ஓடும் கடலின் அலைகள் கூடக் கொஞ்சம் மெதுவாக எழுந்தன. ஆனால் நகரத்து மக்கட் பேரலையோ பயங்கரமாக எழுந்து விட்டது. வீட்டுத் திண்ணைகளில் கூடி, வீதி மூலைக்கு வந்து, ஒருவர் இருவர் என்று துவங்கி, ஆயிரம் இரண்டாயிரம் எனப் பெருகி, இறுதியில் அரண்மனை முகப்புக்கே வந்துவிட்டது அந்தக் கூட்டம். அதில் நாடி தளர்ந்த ஒரு கிழவன் முன்னுக்கு வந்து நடுங்கிய குரலில் பேச ஆரம்பித்தான். தொண்டை சூடு பிடிக்கும் வரையில் கிழவனைப் போல பேசிக் கொண்டிருந்த அவன் சிறிது நேரத்திற்கெல்லாம் சிங்கம் போல் கர்ஜித்தான்.
"வேந்தே! வீட்டுக்கொரு வீரர் வந்துவிட்டோம்! அந்த வீரனின் விலா எலும்பை முறித்து, அதிலே அழகான விசிறியொன்று செய்கிறவரையில் என் உயிர் போகாது! எங்கள் குலத் தலைவனை மங்காத தமிழ்ப் பெருமகனை - வட புலத்தான் தலை நொறுங்க இமயத்தில் ஏறி நின்று எட்டுத் திசையும் முரசு கொட்டியவனை - இனி வாழவிடக் கூடாது என்று அந்த வஞ்சக இருங்கோவேள் திட்டம் தீட்டி விட்டான்! நமது வாட்கள் நீட்டப்பட வேண்டியதுதானே நியாயம்! ஏ, அரண்மனைக் காவலர்களே! எங்கள் மன்னவனைக் கொல்ல எண்ணிக் குறிபார்க்கும் குள்ள நரிக் கூட்டத்தைக் கூண்டோடு அழிப்பதற்குப் பூம்புகார் நகரமே பொங்கியெழுந்து விட்டது என்ற செய்தியை உள்ளே அனுப்புங்கள்! ஏ, கனமான கோட்டைச் சுவர்களே! தொங்கிப்போன நரம்புகள் எல்லாம் முறுக்கேறி விட்டன. இனி இருங்கோவேளின் தலைதான் பனங்குலை போல் தொங்க வேண்டும் என்று பூம்புகார் மக்கள் முடிவு செய்துவிட்ட போர்ச் செய்தியை நம் மன்னர் பெருமானின் காதுகளில் எதிரொலிக்கத் தயங்காதீர்கள்!"
இப்படி நகரம் போர்க்கொடியேந்தி வெறிபிடித்து நின்று கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் கரிகால் மன்னன் தன் உள்ளத்தில் தாக்கிய குழப்ப அம்புகளையெல்லாம் பிடுங்கி எறிந்துவிட்டு அமைதியாகத் தன் மாளிகைத் தாழ்வாரத்தில் நடை பழகிக் கொண்டிருந்தான்.
பகைவனின் மனைவி தன்னைக் கொல்ல வந்தாள். அவள் மீது அவனுக்கு ஆத்திரமே ஏற்படவில்லை; ஆழ்ந்த அனுதாபமே ஏற்பட்டது. அவளது சாவு அவனைக் கலக்கிவிட்டது. அதே சமயம் தன்னைக் காப்பாற்றுவதற்குச் சோழ நாட்டிலே பிறந்த ஓர் உழவன் முன்வந்தான் என்பது மன்னனைப் பெரிதும் மகிழச் செய்தது. தன்பால் குடி மக்களுக்கு இருக்கும் அன்பினை நினைத்துப் பூரித்துப் போனான். அந்தக் களிப்பின் அடையாளந்தான் போலும் முகத்தில் வீசும் ஒளி!
உலவிக் கொண்டிருந்தவனின் எதிரே வீரன் ஒருவன் வந்து நின்றான், “என்ன?” என்று ஆவலாகக் கேட்டான் மன்னன்.
"உழவனுக்கு வேண்டிய சிகிச்சைகள் எல்லாம் செய்தாகிவிட்டது. படுக்கையில்தான் இருக்கிறான் இனிப் பயமில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்" என்று பதில் கூறினான் வீரன்.
"கண் திறந்தானா? வாய் திறந்தானா?... ஏதாவது பேசினானா?"
"பேசவில்லை அரசே! கண்ணை மட்டும் விழித்திருக்கிறான். விழிகள் ஒரு பக்கமில்லாமல் சுழன்றுகொண்டேயிருக்கின்றன."
"அது என்னைக் காப்பாற்றும்போது ஏற்பட்ட அதிர்ச்சி...ம் நீ முன்னே போ; நானும் வருகிறேன்."
- என்று கரிகாலன், உழவன் படுத்திருக்கும் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றான்.
உழவன், வீரன் கூறியவாறே படுக்கையில் அசையாமல் படுத்திருந்தான். அரசன் அவன் அருகே சென்று உட்கார்ந்தான். அரசனைக் கண்டதும் உழவனின் விழிகள் வேகமாகச் சுழன்றன. அரசன், உழவனின் நெற்றியை மெதுவாகத் தொட்டுப் பார்த்துவிட்டு, "எப்படியிருக்கிறது?" என்று அன்பு ததும்பக் கேட்டான்.
உழவனின் கண்களில் நீர் ததும்பியதே தவிர, பதில் எதுவும் கிடைக்கவில்லை.
"இனிமேல் ஏன் அழுகிறாய்? நான்தான் பிழைத்துக் கொண்டேனே!" என்று மன்னன் மிகப் பரிவுடன் ஆறுதல் கூறினான். உழவன் கரிகாலனையே பார்த்தவாறு படுத்திருந்தான்.
"நீ செய்த உதவிக்கு நான் என்ன கைமாறு செய்ய முடியும்? என் இதயப்பூர்வமான நன்றியை ஏற்றுக் கொள்!" என்று தழுதழுத்த தொனியில் மன்னன் பேசினான்.
உழவன் மிகவும் சிரமப்பட்டு உதடுகளை அசைத்தான். "மன்னா! என் கடமையை நான் செய்தேன். அதிருக்கட்டும், அவள் என்ன ஆனாள்?"
"அந்தோ பரிதாபம்! அவள் தன் காரியம் கைகூடாத ஏக்கத்தில் அங்கேயே விழுந்து செத்துவிட்டாள். அவள் சாவுக்கு நீதான் காரணம்."
"நானா?"
"ஆமாம்! நீ தடுத்திராவிட்டால் அவள் என்னைக் கொன்றிருப்பாள்! அவளுக்கு நிம்மதி கிடைத்திருக்கும். அவள் பிணத்தைப் பார்த்தபிறகு நினைத்துக் கொண்டேன். அய்யோ! நான் மடிந்திருக்கக்கூடாதா என்று!"
கரிகாலன் இதைச் சொன்னதும் உழவனின் கண்கள் இரு அருவிகளாயின.
"ஏன் அழுகிறாய்? உன்னுடைய மன்னன் சாவதற்கு விரும்புகிறானே என்றுதானே? அழாதே! நான் இருங்கோவேளின் மனைவி பெருந்தேவியின்மீது கொண்டுள்ள மரியாதையின் காரணமாக இதைச் சொன்னேன். நீ பார்த்தாயா அந்த அரசியின் உடல்நிலையை? பார்த்திருக்க முடியாது. உன் கவனம் முழுவதும் என்னைக் காப்பாற்றுவதிலேயே போயிருக்கக்கூடும். நோயினால் தேய்ந்து போனவள்; அணு அணுவாக நோய்க்கிருமிகளுக்கு தன் உயிரைத் தந்து கொண்டிருப்பவள்; அவளுக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு வலிமை? தியாக உள்ளம் தந்த வலிமைதான் அது! அந்த உள்ளம் உடைந்து விடலாமா? உடையக் கூடாது, உடையும்படி செய்துவிட்டோம் நீயும் நானும். எப்படி என்று கேட்கிறாயா? நீ காப்பாற்றினாய். நான் பிழைத்துக் கொண்டேன். நாமிருவரும் இந்தத் தவற்றினைச் செய்யாவிட்டால் அந்த உத்தமியின் இலட்சியம் நிறைவேறியிருக்கும்."
"பெருந்தேவியின் சவத்தை என்ன செய்தீர்கள்?"
"அரசு மரியாதைகளுடன் அடக்கம் செய்ய உத்தேசித்திருக்கிறேன்."
"அவள் செத்துவிட்ட செய்தியையாவது இருங்கோவேளுக்குச் சொல்லி அனுப்பினீர்களா?"
"ஏன்?"
"துக்கம் விசாரிக்க அந்தத் துரோகி வருவான். அப்போது அவனைப் பிடித்துக்கொள்ளலாம் என்றுதான்."
"அந்தப் போர் முறையை நான் படித்ததில்லையே!"
"மன்னித்து விடுங்கள்."
உழவன் கண்களை மூடிக் கொண்டான். இமைகளை மீறிக்கொண்டு கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
"உழவ! உணர்ச்சி வயப்பட்டு உடலை அலட்டிக் கொள்ளாதே! இந்தச் சமயத்தில் அதிகமாகப் பேசுவது கூடத் தவறுதான். ஆனாலும் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல். என் சரித்திரத்தில் அழியாத இடம் பெற்று விட்ட உன் பெயர் என்ன?" என்று மிக்க ஆவலுடன் கரிகாலன் உழவனைப் பார்த்துக் கேட்டான். கன்னங்களில் கண்ணீரை வழிய விட்டுக் கொண்டே உழவன் பதில் சொன்னான்.
"அவன் பெயர் வளவன்."
அந்தப் பெயரை மன்னன் வாய் நிறையச் சொல்லிப் பார்த்துக் கொண்டான்.
பிறகு வளவனைப் பார்த்து, "பெருந்தேவியின் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகியிருக்கும். நான் போய் அவைகளைக் கவனிக்கிறேன். நீ நன்றாக ஓய்வெடுத்துக் கொள். உன் மன்னனுக்கு இனிமேல் எந்தவித ஆபத்தும் நேராது. மனத்தைக் குழப்பிக் கொள்ளாமல் தைரியமாக இரு!" என்று கூறிவிட்டுக் கிளம்பினான்.
அவன் சொன்னவாறே பெருந்தேவியின் சவ அடக்கத்திற்கான காரியங்களில் அரண்மனையிலுள்ளோர் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். என்ன இருந்தாலும் ஒரு மன்னனின் மனைவி என்ற மரியாதையுடன் அந்தக் காரியங்கள் நடைபெற்றன. அலங்கரிக்கப்பட்ட பீடமொன்றில் பெருந்தேவியின் சடலம் வைக்கப்பட்டிருந்தது. அவள் முகத்தைத் தவிர மற்ற அங்கமனைத்தும் மலர்களால் மூடப்பட்டிருந்தது. கூடம் முழுவதும் நறுமணப் புகை சூழ்ந்திருந்தது. பெரியதோர் சாதனை புரியவந்த தோற்றமும் அந்தக் காரியத்தில் ஏற்பட்ட தோல்விச் சாயலும் பெருந்தேவியின் முகத்தில் குடிகொண்டிருந்தது.
அவளுக்கு இப்போது நிம்மதி! அரண்மனையிலே பிறந்து. அரண்மனையிலே வாழ்ந்து, இறுதியில் ஆரண்யத்தில் செத்துக்கிடக்காமல் அரண்மனையிலேயே முடிவெய்திவிட்டாள். ஆனாலும் அந்தச் சாவு, அவளுக்குப் பரிபூரணத் திருப்தியை அளிக்கக் கூடியதாக இல்லை! நிச்சயமாக இல்லை? அவளருகே அவளது உயிரனைய கணவன் இருங்கோவேள் இல்லை . அவன் அவளது பிரிவை நினைத்து உகுத்தி டும் கண்ணீர்த் துளிகளில் அன்றோ அவள் கடைசியாகக் குளித்திருக்க வேண்டும்? அதற்குக் கொடுத்து வைக்கவில்லையே!
அது மட்டுமா "அண்ணி! அண்ணி!" என்று அன்பைக் குழைத்துப் பேசும் அவள் பிரியத்துக்குரிய தாமரையும் அருகே இல்லை அனாதைபோல் இறந்து கிடந்தாள். அரண்மனைக் கூடத்தில்; அதுவும் பகைவனின் வீட்டில்!
சவம் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்குக் கரிகாலன் வந்து சேர்ந்தான். பெருந்தேவியின் முகத்தையே உற்றுக் கவனித்தவாறு நின்று கொண்டிருந்துவிட்டுத் தாழ்வாரத்துப் பக்கம் வந்து அங்குமிங்கும் உலவிடத் தொடங்கினான். அரசனிடமிருந்து என்ன கட்டளை பிறக்குமோ என்று அமைச்சர் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
அதன்படியே அரசனும் அமைச்சரை நோக்கி, "இந்தச் செய்தியை இருங்கோவேளுக்குத் தெரிவிக்க வேண்டாமா?" என்று கேட்டான்.
"இந்நேரம் இது இருங்கோவேளுக்குத் தெரியாமலா இருக்கும்? அவன்தானே அனுப்பி வைத்திருக்கிறான். அதனால் அவனுக்கு இதுவரையில் செய்தி எட்டாமல் இருக்காது" என்று அமைச்சர் பதில் சொன்னார்.
"மனைவியின் திருமுகத்தைக் கடைசித் தடவையாகக் காண்பதற்கு நாம் இருங்கோவேளுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதே முறை என்று கருதுகிறேன்."
நீண்ட சிந்தனைக்குப் பிறகு அரசனின் மனத்தில் எழுந்த இந்த முடிவைத் திடீரென மறுத்துவிட அமைச்சர் பயந்தார். ஆனாலும் அவரால் முடிவை ஏற்றுக் கொள்ளவும் இயலவில்லை. கடும் பகைவனாகக் காட்சி தந்தவாறு எந்த நேரத்தில் கரிகாலன் வாழ்வைச் சூறையாடலாம் என்று துடித்துக் கொண்டிருக்கும் இருங்கோவேள் மீது அவ்வளவு இரக்கம் காட்டுவதா?
"அரசே! இருங்கோவேளைக் கண்டால் சோணாட்டு மக்கள் பொடி செய்து விடுவார்கள். இருங்கோவேளிடம் நாம் காட்டுகிற பெருந்தன்மை அவன் உயிருக்கே ஆபத்தாக முடிந்து, கடைசியில் நமது போர் முறைக்கே இழுக்கு ஏற்பட்டு விடக்கூடும். மக்களின் கொந்தளிப்பை அடக்கவே முடியாது, மாமன்னா! பூம்புகாரில் இப்போதே புயல் எழுந்துவிட்டது என்று சொல்லலாம்."
இந்தப் பதிலை அமைச்சர் நடுங்கியவாறு கூறினார்.
"என்ன அமைச்சரே இப்படிப் பேசுகிறீர்? நமது மக்கள் நம்மையும் மீறியா நடந்து கொள்வார்கள்? இருங்கோவேள் நமது பகைவன் என்பது உண்மை. என்னைக் கொல்லும் முயற்சியில் இரண்டொரு முறை ஈடுபட்டிருக்கிறான் என்பதும் உண்மை. இன்றைக்கு நாம் அவனிடம் காட்டுகிற பெருந்தன்மையால் இந்தப் பகை உணர்ச்சி அழிந்துவிடப் போவதில்லை. அவனும் அப்படிப்பட்ட உத்தமனுமல்ல. அனைத்தும் நானறிவேன். ஆனாலும் இதையெல்லாம் நினைத்து அவன் வீட்டில் நடைபெற்று விட்ட இந்த சோக நிகழ்ச்சியை நாம் நமது விளையாட்டு விழாவாக ஆக்கிவிடக்கூடாது. இறந்து கிடப்பது அவன் மனைவி. அவனை உயிருக்குயிராக நேசித்த மனைவி. அவன் இலட்சியம் நிறைவேற வேண்டும் என்ற கவலையில் தன் உயிரையே பணயமாக வைத்த பாவை. அப்படிப்பட்டவளின் உடலை அவன் கண்ணுக்கே காட்டாமல் புதைத்து விடுவது என்பது சொல்ல முடியாத கொடுமை. சிறிது யோசித்துப் பார்ப்போம். இது போன்ற ஒரு நிலை நமக்கே ஏற்பட்டிருந்தால் நம் மனம் என்ன பாடுபடும்? ஏதோ அவசரத்தில் முடிவு செய்து பெருந்தேவியை அனுப்பி விட்டான். வந்த காரியத்தில் அவளுக்கு வெற்றி ஏற்பட்டாலும்தோல்வி ஏற்பட்டாலும் முடிவு இப்படித்தான் ஆகும் என்பதை அவன் உணராமல் இருந்திருக்க வேண்டும்; அல்லது அவனுக்கே தெரியாமல் கூட அவள் வந்திருக்கக் கூடும். எப்படியிருப்பினும் இருங்கோவேள் வந்து அவள் முகத்தைக் கடைசியாகப் பார்த்துச் செல்வதற்கு நாம் தடையாக இருக்கக் கூடாது."
"மனைவியின் முக தரிசனம் காணவரும் பாவனையில் தங்களுக்கு ஏதாவது தீங்கு செய்துவிட்டால்...?"
"அவ்வளவு மோசமான நிலை உருவாகுமென்றால் நான் சாவதே மேல். தன்னந் தனியாக அரண்மனைக்குள்ளே ஒருவன் வருவான். என்னைச் சுற்றிப் பெரும் பாதுகாப்புப் படை இருக்கும். வருகிறவன் இவ்வளவையும் மீறி, என்னைக் கொன்று போட்டுவிடுவான். அப்படித் தானே அமைச்சரே? அதுபோல் நடக்குமென்றால் நமக்குப் படைகளே தேவையில்லை. இப்போதே கலைத்து விடலாம்."
"மன்னிக்கவும் அரசே! நான் அதற்குச் சொல்லவில்லை. நாட்டு மக்கள் யாருக்குமே பிடிக்காத ஒன்றை ஏன் செய்ய வேண்டும் என்றுதான்..."
"கொல்ல வரும் எதிரியிடமும் கரிகாலன் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டான் என்ற செய்தி நாட்டு மக்களுக்குச் செந்தீயாக இருக்குமென்கிறீர்! நல்ல வேடிக்கை! அங்ஙனமாயின், எதிரி என்பதற்காகக் கரிகாலன் மனிதப் பண்பையும் இழந்து நடந்து கொண்டான் என்ற பெயர் எனக்கு வரவேண்டுமென்று மக்கள் விரும்புகிறார்கள் போலும்!"
கரிகாலன் கோபமாக இருக்கிறான் என்பதை அமைச்சர் புரிந்துகொண்டு மெளனமாக இருந்தார்.
"அமைச்சர் அவர்களே! இப்போதே நமது வீரர்களை அனுப்புங்கள். இருங்கோவேள் ஒளிந்து வாழ்வதாகச் சந்தேகப்படும் இடங்களில் எல்லாம் பறை முழக்கச் சொல்லுங்கள்! இருங்கோவேள் துணைவி பெருந்தேவியின் மறைவைப் பற்றிப் பறை முழங்கட்டும் ! நமது அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள சவத்தைக் காண்பதற்கு இருங்கோவேள் மட்டும் தன்னந்தனியாக வர யாதொரு தடையுமில்லை என்று செய்தி பரவட்டும். இன்று-நாளை -நாளை மறுநாள் மாலை வரையில் இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்படாமல் இருங்கோவேளுக்காக எதிர்பார்ப்போம் என்றும் விளக்கமுரைக்கட்டும் உடனே ஏற்பாடு செய்யுங்கள். அதுவரையில் சவம் சிறிதும் கெடாமல் தைலங்களால் பாதுகாக்கப்படட்டும், மற்ற ஏற்பாடுகளை ஒத்தி வையுங்கள்."
அரசனின் ஆணை பிறந்ததும் அதுபற்றி எந்தப் பதிலும் கூறாமல் அமைச்சர் தலை வணங்கி விட்டு நகர்ந்தார். அப்போது, தளபதி அங்கு வந்து நின்று வணங்கினான். தளபதியிடம் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
"நாட்டு மக்கள் அமைதியாக இருக்க வேண்டும். இருங்கோவேள் வரும்போது எந்தவிதமான எதிர்ப்பும் காட்டக்கூடாது. அவனுடைய உயிருக்கோ மரியாதைக்கோ ஏதாவது ஊனம் ஏற்பட்டால் அதற்கு முழுப்பொறுப்பும் தளபதியாகிய நீயேதான். பூம்புகாருக்குள் நுழைந்து பெருந்தேவியின் முகத்தைப் பார்த்துவிட்டு பின்னர் பூம்புகாரை விட்டு வெளியேறிடும் வரையில்அவன் நமது பகைவன் என்ற கண்ணோடு யாரும் அவனைப் பார்க்கக் கூடாது. முதலில் மக்களை அமைதிப்படுத்து! அதுபோல் போர் வீரர்களுக்கும் கூறு!"
கரிகாலனின் கம்பீரம் நிறைந்த வார்த்தைகளுக்குத் தளபதி பணிந்து நின்று மரியாதை செலுத்திவிட்டு அகன்றார். கரிகாலனுக்கு இப்போது ஒரு பெருமூச்சு! உழவன் வளவன் கேட்ட கேள்வி நினைவுக்கு வந்தது.
"அவள் செத்துவிட்ட செய்தியையாவது இருங்கோவேளுக்குச் சொல்லியனுப்பினீர்களா?"
உழவன் கேட்டதற்குக் காரணம், இருங்கோவேள் வந்தால் அவனைப் பிடித்துக் கொள்ளலாம் என்றுதான்! அது போலத்தான் உழவன், மன்னனிடமும் பதில் கூறினான். வளவன் இருங்கோவேளைப் பிடிக்கக் கூறிய சூழ்ச்சி எண்ணத்திற்கு மன்னன் இணங்காவிட்டாலும், மனைவி இறந்த செய்தியைக் கணவனுக்கு சொல்லியனுப்ப வேண்டியதுதான் முறை என்ற எண்ணத்தை வளவனின் கேள்வியின் மூலம் பெற்றான்.
அந்த எண்ணத்தின் விளைவாகவே சவ அடக்கம் ஒத்தி வைக்கப் பட்டது. இருங்கோவேளுக்குச் செய்தி பரவிட வழி வகுக்கப் பட்டது. தங்கு தடையின்றி அவன் பூம்புகார் அரண்மனைக்குள் நுழைய அனுமதி தரப்பட்டது.
இனி அவன் வரவேண்டியதுதான் பாக்கி.