ரோமாபுரிப் பாண்டியன்/19. சாவூருக்குப் உயுபோகும் வழி
19
சாவூருக்குப் உயுபோகும் வழி
விக்கும் வீரர்கள். நாட்டு மக்கள் அது கேட்டு மெத்தக் கொதிப்படைந்தார்கள். கரிகாலனின் ஆணைக்கு எதிராகப் பேச யாருக்கும் நாவெழாவிட்டாலும் உள்ளத்திலே பெருங்கிளர்ச்சி மூண்டது.
"இதற்குப் பெயர் பெருந்தன்மையா?"
"இதற்குப் பெயர் இரக்கமா?"
"இதற்குப் பெயர் அன்பா?"
"இல்லை!"
"இது ஏமாளித்தனமான வேலை!"
என்று தங்களுக்குத் தாங்களே சொல்லிக் கொண்டார்கள். பிறரிடம் பேச அஞ்சினார்கள். இருங்கோவேளுக்கு எதிராகச் சோழநாட்டு மக்கள் உயர்த்திய கரத்தைச் சோழவேந்தனே வெட்டி எறிந்து விட்டான் என்று அவர்கள் கருதி மனம் வெதும்பினார்கள். "இனி என்ன? நடப்பது நடக்கட்டும்" என்று அவர்கள் ஆயாசப்பட்டுக் கொண்டு தங்கள் வேலைகளைப் பார்க்கத் திரும்பினார்கள்.
"இருங்கோவேள் பெருந்தேவியின் முகதரிசனம் பார்ப்பது போல் வரப்போகிறான்; திடீரென மன்னர்மீது பாயப்போகிறான்; நாம் நமது கொற்றவனை இழக்கப் போகிறோம்" என்ற வேதனையை வெளியிட்டவாறு பூம்புகார் நகரத்து மாந்தர் நடைப்பிணங்கள் போலத் திரிந்து கொண்டிருந்தார்கள். சோழ நாட்டின் பல பகுதிகளிலும் ஒலித்தது போலவே இருங்கோவேள் தங்கியிருந்த மரமாளிகைக் காட்டோரத்திலும் பறை ஒலித்தது.
"வேளிர்குல அரசி பெருந்தேவி பூம்புகார் அரண்மனையில் அரசரைக் கொல்ல முயன்று இறந்து விட்டார். அவரது சவ அடக்கம் இருங்கோவேள் மன்னரின் வருகைக்காகத் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது; இன்று-நாளை -நாளை மாலை வரையில் அவரை எதிர்பார்க்கிறார்கள். அவர் பூம்புகார் அரண்மனையில் நுழைந்து, மனைவியின் முகதரிசனம் காண எந்தத் தடையுமில்லை; அவர் தன்னந்தனியாக வந்து போகச் சோணாட்டுப் படைத் தளபதி எல்லாவிதப் பாதுகாப்பு வசதிகளும் செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறார்."
- இப்படிப் பறை முழங்கிற்று. பறை முழங்கும் காட்டோரத்துப் புதர்களில் இருங்கோவேளின் வீரர்கள் ஒளிந்து கொண்டு கவனித்தவாறு இருந்தனர்.
பல தடவைகள் பறையின் ஒலியும், செய்தி கூறுவோன் ஒலியும் மாறி மாறி எழுந்து ஓய்ந்தன.
அறிவிப்பு முடிந்து சோணாட்டு வீரர்கள் காட்டைக் கடந்து பூம்புகார்ப் பாதைக்குத் திரும்பினர். புதரில் ஒளிந்திருந்த வேளிர்குல வீரர்கள் எழுந்து நின்றனர். அவர்களின் விழிகள் நீரைப் பொழிந்தன. தங்களின் அரசியார் மறைந்த தகவல் அவர்கள் உள்ளத்தில் சம்மட்டி அடிகளாக விழுந்திருந்தன. ஒருவரோடு ஒருவர் பேச முடியவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு மரமாளிகை நோக்கி நடந்தனர்.
அண்ணியின் சாவுச் செய்தி கேட்ட தாமரை அழுது புரண்டாள். துன்பம் படர்ந்த அவளது வாழ்வுக்குத் துணையாக இருந்த பெருந்தேவியின் இழப்பை அவளால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. அன்றாடம் பெரும் பொழுது அண்ணியைக் கவனிப் பதற்காகவே செலவழிந்தது என்றாலும், அதிலே தாமரைக்கு ஓர் ஆறுதல் இருந்தது. இப்போது அழிந்து விட்டது. வாழ்நாளில் கடைசி மூச்சை எந்தக் காரியத்திற்காகப் பயன்படுத்தத் தன் அண்ணியார் துணிந்தார்கள் என்பதை எண்ணும்போது அவளால் விம்மி அழாமல் இருக்க முடிய வில்லை. தன் கணவனின் இலட்சியம் ஈடேறினால் போதுமென்று புறப்பட்ட அந்த வீராங்கனையின் வீரத் திருவுள்ளத்திற்கு அவள் ஆயிரம் முறை வணக்கம் செலுத்தினாள். இந்தச்சோகச் செய்தியை அண்ணன் அறிந்திருக்க இயலுமோ? அண்ணன் எங்கே இருக்கிறாரோ? அவருக்குத் தெரிந்தால் என்ன பாடுபடுவார்! - என்றெல்லாம் அவள் நினைத்துக் குமுறிக் கொண்டிருந்தாள்.
அண்ணனின் தவறான செயல்களால் அவள் மனம் நொந்திருந்தாள் என்றாலும், அண்ணன் தன் அருமைத் துணைவியை இழந்துவிட்டான் என்கிறபோது இயற்கையாக எழுந்த இரத்தபாசம் கொடி கட்டிப் பறந்து அவளைக் கண்ணீர்க் கடலில் மிதக்க வைத்தது. இறந்த அரசனின் உடல் பகைவனின் வீட்டில் இருக்கிறது. அந்தப் பகைவன் நமக்கு அழைப்பு விடுத்திருக்கிறான், சவ அடக்கம் செய்திட!
இந்த நிலைமையை அவளால் தாங்கிக்கொள்ளத்தான் இயலவில்லை. தன்னைக் கொல்வதற்குச் சதி செய்து மனைவியை அனுப்பிய பகைவனைத் தந்திரமாகச் சிறை பிடிக்க வேண்டுமென்பதற்காகவே சோழ மன்னன் இப்படியொரு அழைப்பு விடுத்திருக்கிறான் என்று அவள் தீர்மானித்தாள். அண்ணனை எப்படியாவது தடுத்தாக வேண்டும்; அதற்கு என்ன வழியென்று ஏனைய மந்திரி பிரதானியருடன் யோசித்தாள். அண்ணன் எங்கே இருக்கிறான் என்பது தெரியாதபோது அவனைச் சந்திப்பது என்பது எப்படி முடியும்? இவனைத் தடுக்கத்தான் வழி என்ன? யாரும் நல்ல முடிவு எதுவும் சொல்லத் தெரியாது திகைத்தனர்.
இழந்த நாட்டைப் பெறவேண்டும் என்ற உயரிய இலட்சியத்தோடு தங்கள் தலைவனின் பின்னால் நடந்து வந்த அவர்களுக்கு எத்தனையோ ஆபத்துக்கள் இதுவரை நேர்ந்திருக்கின்றன. காட்டு மிருகங்களின் கோரப் பற்களுக்குத் தங்கள் குடும்பத்தவரில் பலரைக் காணிக்கையாக்கி இருக்கிறார்கள். திடீரென்று பரவிய தொத்து நோய்கள் கொத்திச் சென்றிருக்கின்றன, சிலரது உயிர்களை. இத்தனை தொல்லைகளையும் சிரித்த முகத்தோடு சந்தித்தவர்கள் அவர்கள், "என்றேனும் ஒரு நாள் இந்த இடர்ப்பாடுகள் விடை பெற்றுச் செல்லும்; அரியணையிலிருந்து விரட்டப்பட்ட அரசன் மீண்டும் மணிமுடிசூடும் காலம் தூரத்தில் இல்லை”- இந்த நினைவுதான் அவர்களிடம் அண்டி வந்த சோர்வையும் சோகத்தையும் விரட்டிக் கொண்டிருந்தது. ஆனால் இன்று அவர்களைத் தேடி வந்த இந்த வேதனையான செய்தி அவர்கள் நெஞ்சிலே பெரும் புயலையே கிளப்பிவிட்டது. அந்தப் புயலிலே சிக்கிய துரும்புபோல் துவண்டு கொண்டிருக்கும் தாமரைக்கு அவர்களால் ஒரு வழியும் காட்ட முடியவில்லை.
தாமரை யோசித்தாள். அண்ணியின் அவல முடிவு அண்ணனின் செவிகளில் பட்டிருக்காது என்பது என்ன நிச்சயம்? இரவைப் பகலாக்கி வனாந்திரத்திலே உலவிக் கொண்டிருக்கிற அவன் இச்செய்தி கேட்டு அடிபட்ட வேங்கையாகிவிடமாட்டானா? அண்ணியின்மறைவு அவன் இரத்தத்திலே புதிய கொதிப்பையே உண்டாக்கி இருக்குமே! "நான் ஆண்ட நாட்டைக் கவர்ந்து, என் நல்வாழ்வை அபகரித்துப் பல்பிடுங்கப் பட்ட பாம்பாக என்னைத் திரியவிட்டது போதாதா? இன்று எனது வாழ்க்கைத் துணைவியின் உயிரையும் குடித்துவிட்டதே சோழப் பேரரசு!" என்று அவன் வெஞ்சினம் கொண்டிருந்தால்....
உடனே சோழன் அரண்மனையை நோக்கி ஓடியிருந்தால்? ஐயோ!. அதை நினைத்துப் பார்க்கவே முடியாது. தாமரையின் மெல்லிய இதயம் சக்தியற்றுத் தள்ளாடியது! அண்ணனும்கூடச் சோழன் அரண்மனையில் சிக்கியிருக்கலாமோ!
அண்ணி சாவின் மடியில்-அண்ணன் எதிரியின் பிடியில்-இனி மற்றவர்களின் நிலை...? இந்தப் பரிதாப நிகழ்ச்சியை நடக்கவிடக்கூடாது என்ற முடிவை ஏற்றாள் தாமரை. அண்ணன். சோழனுடைய அரண்மனைக்குச் சென்று விடாது தடுத்தாக வேண்டும் என்று உறுதி செய்தாள். அண்ணியையும் இனியொருமுறை காணவே முடியாது. வாழ்ந்த காலத்தை எண்ணிக் கண்ணீர் சிந்தி, வருங்காலத்தைப் பற்றிக் கோடிக்கணக்கான இன்பக் கனவுகளைக் கண்டு கொண்டிருந்த அந்த அருளொழுகும் முகத்தை கடைசியாகப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையும் உந்தித் தள்ள அவள் புறப்பட்டாள்.
அவள் தன்னந்தனியாகக் கிளம்புவதை மற்றவர்கள் மறுத்தனர். துணைக்கு வீரர்களை அழைத்துக் கொண்டு செல்லுமாறும் கேட்டுக் கொண்டனர். கரிகால் மன்னனின் அறிவிப்பில் தன்னந்தனியாக வந்தால் இருங்கோவேள் அனுமதிக்கப்படுவார் என்றிருப்பதைச் சுட்டிக் காட்டி. தானும் அப்படிச் சென்றால்தான் அண்ணியின் திருமுகத்தைக் கடைசித் தடவையாகக் காணும் பேறு கிடைக்கும் என்று கூறிவிட்டுத் தாமரை புறப்பட்டாள்.
மரமாளிகையை விட்டுக் கிளம்புவதற்கு முன்பு, முத்துநகை அடைப்பட்டிருந்த இடத்திற்குச் சென்று கதவோரத்தில் இருந்தவாறே அவள் என்ன செய்கிறாள் என்று பார்த்தாள். முத்துநகை அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். 'கவலையில்லாதவள்' என்று மனதுக்குள் கூறிக் கொண்டே, அதை விட்டு வெளியேறினாள்.
செழியன் சுகமாக இருக்கிறானா? பாதுகாப்பாக இருக்கிறானா? இந்தச் சமயத்தில் அவன் வேறு தப்பி ஓடிவிட்டால் அண்ணன் மனம் மிகவும் ஒடிந்து போய்விடுமே என்றெண்ணியவாறு செழியன் அடைப்பட்டிருக்கும் சிறைக்குள் நுழைந்தாள்.
'சாவூருக்குப் போகும் வழி' - முகப்பிலே தெரிந்த இந்த எழுத்துக் களைக் கண்டதும் அவள் சிறிது நின்றுவிட்டாள். அவள் விழிகளில் நீர் துளிர்த்தது. இந்தக் கொடிய வாயில் வழியாக இருங்கோவேளின் இருட்குகையில் சிறைப்பட்டவர் இதுவரை சித்திரவதைதான் செய்யப் பட்டிருக்கிறார்கள்; கொழுந்து விட்டெரியும் தீக்குப் பக்கத்திலே இரத்தம் கசிந்துபோன பாதங்கள் தள்ளாடித் தடுமாற - நின்று மயங்கி வீழ்ந்திருக்கின்றனர். அவர்கள் சோழ நாட்டுக் கைதிகள் அணு அணுவாக வதைக்கப் பட்டிருக்கிறார்கள்; ஆனால் வாழ்வை முடித்துக் கொண்டதில்லை!
உண்மைதான்! 'சாவூருக்குப் போகும் வழி' அந்த இருட்குகையின் வாசல் அல்ல; பூம்புகார் அரண்மனை! அங்கேதான் தாமரையின் அண்ணி நுழைந்துவிட்டாள்; உலக பந்தத்திலிருந்தும் விடுபட்டு விட்டாள்!
சோழ நாட்டுக் கைதிகளின் உயிரை விளையாட்டுப் பொருளாகக் கருதவேண்டாம் என்று தாமரை தன் அண்ணனிடம் மன்றாடி இருக்கிறாள். மிருகத்தனமாக வாழப் பழகி விட்ட இருங்கோவேளின் நெஞ்சத்திலிருந்து மனிதாபிமானம் மறைந்துவிட்டதா என்றும் சந்தேகித்திருக்கிறாள். ஆனால் இனித் தன் அண்ணியின் உயிருக்கு அவள் யாரிடம் மன்றாட முடியும்?
அந்தக் குகையில் பரவியிருந்த இருளையும் மீறிக் கொண்டு அவள் கண்கள் உருண்டன. தட்டுத் தடுமாறி விழுந்து விடப் போகிறோமோ என்ற பயத்துடன் சுவரைப் பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.
அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சுவரிலே செருகப்பட்டிருந்த தீவட்டிகள் கூட நன்றாக எரியவில்லை. தமது அரசியின் மறைவு குறித்து அவைகளும் அழுது கொண்டிருக்கின்றனவோ எனத் தாமரை நினைத் தாள். நடந்தாள்; அந்தத் தீவட்டிகளில் ஒன்றைக் கையிலே எடுத்துக் கொண்டு செழியனைத் தேடிக் கண்டுபிடித்தாள்.
செழியன் அந்த இருட்சிறையில் மிக்க சோர்வுடன் இருந்தான். எனினும் அவன் முகத்தில் வீர ஒளி சுடர்விட்டுக் கொண்டிருந்ததை அவள் கவனிக்காமல் இல்லை. தாமரையின் முகம் வாடியிருப்பதைக் கண்ட செழியன் அவளையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான்.
"ஏதாவது தேவையா?" என்று கேட்கலாமென நினைத்தாள். ஆனால் கேட்க இயலவில்லை. அண்ணியின் பிரிவால் ஏற்பட்டிருந்த வேதனை அவள் தொண்டையை அடைத்துக் கொண்டிருந்தது.
அவளது முக மாற்றத்தைக் கண்ட செழியன், "ஏன் என்ன விசேடம்?" என்று கேட்டான் மெல்லிய குரலில்.
அவள் பதில் சொல்லவில்லை. சற்று நேரம் நின்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தப் பார்வையில் எந்தவித அர்த்தமும் இல்லை. - வெற்றுப் பார்வை! 'அய்யோ, பாவம்!' என்ற அனுதாப உணர்ச்சி மட்டும் சிறிது தலை காட்டியது அந்தப் பார்வையில்.
அவளைப் பற்றிய நினைவுகளால் குழம்பிப் போயிருந்த செழியனுக்கு அவள் அங்கேயே நின்று கொண்டிருக்க மாட்டாளா என்று இருந்தது. அப்படியே அவள் நின்று கொண்டிருந்தால் அவளைப் பற்றித் தான் ஒரு முடிவுக்கு வர முடியும் என்று அவன் எண்ணினான். ஆனால் அவன் ஆசை ஈடேறவில்லை. தாமரை திரும்பினாள், அந்த இருட்குகையை விட்டு வெளியேறும் நோக்கத்துடன்!
செழியன் மௌனமாக இருக்கவில்லை. "எங்கே வந்தாய்! ஏன் போகிறாய் ?" என்று சற்று அதிகாரக் குரலில் கேட்டான். திரும்பிய தாமரை நின்றாள்.
"உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்களா என்று பார்ப்பதற் குத்தான் வந்தேன்" - பதிலுரைத்தாள் தாமரை.
அவள் குரலில் நடுக்கம் இருந்ததை அவனால் உணர முடிந்தது. அண்ணன் இல்லாத சமயம், செழியன், முத்துநகை இருவரும் தப்பிவிடக் கூடாதே என்ற கவலையால்தான் அவள் அவர்களைப் பார்வையிட வந்தாள். அந்தப் பொறுப்பு அப்போது அவளுக்குத்தான் இருந்தது. முத்துநகையைப் பார்க்கும்போது ஒரு கைதியைப் பார்ப்பது போன்ற உணர்ச்சியுடன்தான் பார்த்தாளே தவிர, தன் ஏமாற்றத்திற்குக் காரணமானவள் என்ற ஏக்கத்துடன் பார்க்கவில்லை. அதே மாதிரிதான் அவள் செழியனையும் பார்வையிட வந்தாள். திரும்பியும் செல்ல முயன்றாள். அதற்குள் செழியனின் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது.
தாமரையின் முகவாட்டத்திற்கான காரணத்தை எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் செழியனுக்கு மூண்டது. அந்தப் பதிலில் ஏதாவது உண்மைகள் கிடைக்கலாம் என்று அவன் எதிர்பார்த்தான்.
"ஒருவேளை இருங்கோவேள் யாரிடமாவது சிக்கியிருப்பான்; கரிகால் மன்னரிடமே கூட அகப்பட்டிருக்கக் கூடும். அதனால்தான் தாமரை வருத்தமாக இருக்கிறாள் போலும்" என்றெல்லாம் கற்பனை செய்துகொண்டே, "முகமாற்றத்திற்கு என்ன காரணம்” என்று கேட்டான்.
"என் சோகத்தில் நீங்கள் ஏன் பங்கு கொள்ள வேண்டும்?" என்று அழுதுகொண்டே பதில் சொன்னாள் தாமரை.
அந்த இருட்சிறையில் சகதி நிறைந்த இடத்தில் அவளை அதிக நேரம் நிற்க வைக்க அவனுக்குக் கஷ்டமாகத்தான் இருந்தது. அந்தச் சகதிக் காட்டில் தான் தவித்தது கூட அவனுக்கு ஞாபகம் வரவில்லை. அவள் சில வினாடிகள் அங்கு நின்று கஷ்டப்படுவதைப் பார்த்ததும்.
"தயவு செய்து சொல், என்ன காரணம்?"
"நான் அனாதையாகி விட்டேன்!"
"புரியவில்லை... புரியும்படி சொல்!"
"அண்ணியார் இறந்து விட்டார்கள்!" என்று கூறித் தேம்பி அழ ஆரம்பித்தாள் தாமரை.
அவள் அந்தச் சோகச் செய்தியைச் சொல்லி முடிப்பதற்குள் செழியன், "ஆ! அக்கா! அக்கா!' என்று வாய் விட்டு அலறினான்.
சோகப் புயலில் சிக்கியிருந்த தாமரை வேதனையிலிருந்து சிறிது விடுபட்டு வியப்பிலாழ்ந்தாள். செழியன், "அக்கா! அக்கா!' என்று அலறியதும் அவள் காதுகளையே அவளால் நம்ப முடியவில்லை.
"என்ன?" என்று கூறியவாறு அவனையே பார்த்துக் கொண்டிருந் தாள். செழியனின் விழிகளிலிருந்து நீர் ஆறாகப் பெருகி வருவதை அங்கு எரிந்து கொண்டிருந்த தீப்பந்தங்களின் உதவியால் அவள் காண முடிந்தது. பெரிய புதிரை விடுவித்துத் தீர வேண்டிய கட்டத்தில் தாமரை இப்போது சிக்கிக் கொண்டாள்.
"என்ன சொல்கிறீர்கள்?"
செழியனின் கண்களிலிருந்து பெருகும் நீர் அடைபடவில்லை. அவன் உதடுகள் மெதுவாக அசைந்தன.
அக்கா! உங்கள் வாழ்வு முடிந்துவிட்டதா?" என்று மெல்லிய தொனியில் கூறிக் கொண்டான்.
"என்ன சொல்கிறீர்கள்? என் அண்ணி உங்களுக்கு அக்காளா? வேளிர்குல மன்னனின் துணைவி உங்களுக்கு அக்காளா?"
தாமரையின் கேள்வி எழுந்ததும், செழியன் தன்னைச் சமாளித்துக் கொண்டபடி, “ஒன்றுமில்லை.. ஏதோ நினைவு" என்று உளறினான்.
தாமரை அதைக் கேட்டு சமாதானமடையத் தயாராக இல்லை.
"தயவு செய்து கூறுங்கள். பெருந்தேவியார் உங்கள் அக்காளா!" என்று கெஞ்சினாள்.
அதற்குச் செழியன் மௌனமாக இருந்தான். தன் அண்ணிக்கும் செழியனுக்கும் சகோதர உறவு இருக்கும் என்பதற்கான ஆதார ஏடுகள் ஒன்றன் பின் ஒன்றாக அவள் உள்ளத்தில் புரண்டன.
செழியன் முகத்தையும், தன் அண்ணியின் முகத்தையும் மனக் கண்ணால் நினைத்து ஒப்பிட்டுப் பார்த்தாள். இருவரும் உடன் பிறப்பு என்பதற்கான ஒற்றுமை இருப்பதாகவே முடிவு கட்டினாள். அண்ணியார், எத்தனையோ தடவை, "தம்பி ஒருவன், அவன் எங்கேயிருக்கிறானோ? என்ன ஆனானோ?" என்று கண்ணீர் சிந்திக் கவலைப்பட்டது அவள் நினைவுக்கு வந்தது. பெருந்தேவியாரும், செழியனும் உடன் பிறப்புக்கள் தாம் என்று திண்ணமாக அவள் மனத்துக்குள் முடிவு செய்து கொண்டாள்.
"எப்போது இறந்தார்கள் பெருந்தேவியார்?" என்று கேட்டான் செழியன்.
"அக்காள் என்று சொல்லுங்கள். ஏன் பெயரைச் சொல்லுகிறீர்கள்?" என்று தாமரை அழுதுகொண்டே பதில் கூறினாள்.
"அக்காள்! அக்காள்! ஆம், வாழ்க்கையின் துளி இன்பமும் காணாமல் வேதனையுடன் - சளைக்காமல் போராடியவள் என் அக்காள்!" என்று செழியன் வாய்விட்டுக் கதறினான்.
சோழன் மாளிகையில் இருக்கும் அண்ணியின் உடலைக் காண வேண்டும் - அண்ணனைப் பற்றிய தகவல் அறிய வேண்டும் - இந்த வேதனையினிடையே செழியன் வெளியிட்ட செய்தி வேறு தாமரை உள்ளத்தைக் கலக்கிட ஆரம்பித்தது. செழியனை, இதுவரையில் பாண்டியனர் குலத்தில் பிறந்தவன் என்றுதான் அவள் கருதியிருந்தாள். இப்போதோ அவன் வேளிர்குலத்து அரசியின் தம்பியென்று கூறுகிறான். அப்படியானால் பெருந்தேவியார் பாண்டியர் மரபில் வந்தவராக இருக்குமோ? இந்தச் சந்தேகங்களுக்கெல்லாம் அவள் பதில் கண்டுபிடித்தாக வேண்டும். சேற்றிலும் சகதியிலும் அழுந்தியிருந்த அவளது மணிப்பாதங்களைப் போலவே மனமும் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தது.
"தயவு செய்து விவரமாகக் கூறுங்கள்; என் அண்ணியும் தாங்களும் எப்படிச் சகோதர உறவு?"
செழியன், தாமரையின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தானே தவிர, பதில் எதுவும் சொல்லவில்லை. தாமரையோ விடுவதாக இல்லை.
"இந்த நேரத்திலேகூடக் கல்நெஞ்சம்தானா? என் அண்ணனுடைய கொடுமைகளுக்கெல்லாம் அசைந்து கொடுக்காமல் மலையென நிற்கும் தங்கள் கடின இதயம் -வைர நெஞ்சம் இப்போது இளகிடுவதால் தவறொன்றும் இல்லையே!"
தாமரையின் கண்களில் மீண்டும் நீர் பொழிய ஆரம்பித்தது. செழியனின் உடல் முழுவதும் நடுங்கிக் கொண்டிருந்தது. இரண்டொரு தடவை அவன் உதடுகள் அசைந்தன. ஆனால் வார்த்தைகள் எதுவும் வெளிப்படவில்லை. அவளிடம் எதையோ சொல்லிவிட வேண்டுமென்று நினைத்து, உடனே அந்த நினைப்பை மாற்றிக் கொண்டான் போலும்!
"தாமரை! என் கதையில் நீ இதுவரை கேட்டறியாப் புதுமையும் பயங்கரமும் நிறைய உண்டு. தயவுசெய்து என்னைத் தொந்தரவு செய்யாதே. ஒரு காலம்வரும் அந்தக் காலம், நாமிருவரும் பேசக்கூடிய சூழ்நிலையொன்றை வகுத்துத் தருமானால் அப்போது என் கதையைச் சொல்கிறேன். உன் அண்ணி என் அக்காள் என்பது மட்டும் உண்மை. அதைக்கூட அவசரத்தில் என்னையறியாது உன்னிடம் கொட்டிவிட்டேன். நீ எனக்காகச் செய்யவேண்டிய உதவி, எனக்கும், உன் அண்ணிக்கும் உள்ள உறவை உன் அண்ணனிடம் சொல்லாமல் இருப்பதுதான். இந்த வேண்டுகோளைக் காப்பாற்றுவாயா?"
செழியனின் வேண்டுகோளுக்குத் தாமரையால் உடனடியாகப் பதில் கூற முடியவில்லை. அவள், அவனிடம் கெஞ்சுகிற தோரணையில் நெருங்கி வந்து மெல்லிய குரலில் பேசத் தொடங்கினாள்.
"என் நிலைமையைச் சிறிது எண்ணிப்பாருங்கள். எனக்காக இரக்கம் காட்டுங்கள். என்னடா இது; இருட்சிறையில் கொடுமையான முறையில் அடைத்துப் போட்டு விட்டு நம்மிடம் வந்து இரக்கத்தை யாசிக்கிறாளே யென்று ஆச்சரியப்படாதீர்கள்! தங்களைச் சித்திரவதை செய்யும் அண்ணனுக்குத் தங்கைதான் நான்.ஆனால் இப்போதும் சொல்கிறேன். பகைவர்களைப் பழிவாங்கும் கொடுமை யொன்றைத் தவிர வேறெந்தத் தீய செயல்களையும் என் அண்ணனிடம் தாங்கள் காண முடியாது!"
இந்தக் கடைசி வாக்கியத்தைச் சொல்லிவிட்டுத் தாமரை சற்றுத் தயங்கினாள். காரணம் தன் அண்ணன் இருங்கோவேள், முத்துநகையிடம் நடந்து கொண்ட முறையை அவள் நேரில் கண்டது நினைவுக்கு வந்தது. அதைச் சமாளித்துக் கொள்ளச் சிறிது நேரம் தேவைப்பட்டது. பிறகு பேச்சைத் தொடர்ந்தாள்;
"அப்படிப்பட்ட அண்ணனுக்குத் துணைவியாக வாய்த்த உத்தமி பெருந்தேவி தங்கள் சகோதரிதான் என்று கேள்விப்படும்போது என் உள்ளத்தில் எழும் ஆவல் எத்தகையது என்பதைத் தாங்கள் உணர முடியாதா?"
"தாமரை! என்னை மன்னித்து விடு. என் கதையை இப்போது உன்னிடம் கூறுவதாக இல்லை. இன்னும் ஒரே ஒரு வேண்டுகோள். அதை மட்டும் நிறைவேற்றி வைக்க வேண்டும். என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். என் சகோதரியின் உருவத்தைக் கடைசியாக ஒரு முறை பார்ப்பதற்கு வழி செய்தால் உயிர் உள்ளவரை உன்னை மறக்கவே மாட்டேன். சகோதர பாசம் எத்தகையது என்பதை நீயே அறிந்திருப்பாய். இந்த ஓர் உதவியை மட்டும் எனக்குச் செய்திடு."
செழியன் தழுதழுத்த குரலில் விடுத்த கோரிக்கைக்குத் தாமரை என்ன பதில் கூற முடியும்? அண்ணியார் இறந்து கிடப்பது சோழன் மாளிகையில் அல்லவா? செழியன் நினைத்துக் கொண்டிருக்கிறான் அவள் மரமாளிகையில் தான் இயற்கை எய்திவிட்டாள் என்று! இந்தச் செய்தியைச் செழியனிடம் அவள் எப்படி சொல்வது? சொல்லாமலேயே இருந்து விடலாம்; சொல்லித்தான் தீரவேண்டும் என்ற அவசியம் ஒன்றும் இல்லை. ஆனால் அவசியமில்லாத அளவுக்குச் செழியன், யாரோ எவனோ அல்லவே! இறந்து போன அரசியின் தம்பியாயிற்றே! மூச்சைப் பிடித்துக் கொண்டு விவரத்தைக் கூறிவிடத் தாமரை தயாரானாள். செழியனின் நிலைமை என்ன ஆகுமோ அந்தச் செய்தி கேட்டு, என்று அவள் கலங்கினாள்.
"தங்கள் சகோதரி, அரிய பெரிய இலட்சியமொன்றை நிறைவேற்றும் முயற்சியிலேயே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்கள். தன் அருமைக் கணவனின் நெடுநாளையக் கனவு நிறைவேற வேண்டும்; அதைத் தானே நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று அவர்கள் சோழனின் மாளிகைக்குள் நுழைந்தார்களாம். கரிகால் பெருவளத்தானைக் கொன்று விட்டுத் தன் கணவனின் ஆசையைப் பூர்த்தி செய்ய வேண்டுமென எழுந்த அண்ணியின் குறிக்கோள் படுதோல்வி அடைந்துவிட்டது. சோழ மன்னரைக் கொல்லும் முயற்சியில் அண்ணியார் தோல்வியுற்றதும் மனமுடைந்து இறந்து விட்டார்களாம். அண்ணியின் சவம் பூம்புகாரில்தான் இருக்கிறது."
இதைக் கேட்ட செழியனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. கரிகால் மன்னரைக் கொல்ல வந்த வில்லவனைக் கொன்று, அவன் இருட்சிறையில் அடைபட்டுக் கிடக்கிறான். அவன் அக்காளோ, கரிகாலனைக் கொல்ல முயன்று பிணமாகி விட்டாள். எவ்வளவு விசித்திரமான அக்காளும் தம்பியும்!
தன் அன்புக்கும் மரியாதைக்குமுரிய கரிகாலர் மீண்டும் ஓர் ஆபத்திலிருந்து தப்பிவிட்டார் எனக் கேட்டுச் செழியன் மகிழ்ந்தான். ஆனால், தன் சகோதரி, சாகும் நேரத்தில் இலட்சியம் நிறைவேறாத ஏக்கத்தோடு போய்விட்டாளேயென்று அவளுக்காக அனுதாபம் காட்டினான். தீராத நோயிலே, தீப்பட்ட புழுவெனத் துடித்துக் கொண்டிருந்த அந்த அக்காளுக்குப் பூம்புகார்க் கோட்டைக்குள்ளே புகுந்திடும் ஆற்றல் எங்கிருந்து வந்தது? புலிக்கொடிச் சோழனைக் கொன்று குவித்திடுவோம் என்ற வீராப்பு எப்படி எழுந்தது? கட்டுக்காவல்களை மீறி உள்ளே நுழைய, நோய் எப்படித்தான் இடம் கொடுத்தது? செழியன் அதிசயத்தால் கண்ணை மூடி மெய்மறந்து இருந்தான். அக்காளின் சவம், பூம்புகாரில் இருப்பதாலேயே அவன் தாமரையிடம் விடுத்த கோரிக்கை பலமற்றுப் போய் விட்டது எனக் கருதவில்லை. மீண்டும் அதே வேண்டுகோளை அவளிடம் வலியுறுத்தினான். தாமரை, செழியனைக் கனிவுடன் நோக்கினாள்.
"வேண்டுகோள் நியாயமானது தான். ஆனால் அதை நிறைவேற்றி வைப்பது எவ்வளவு தவறானது என்பதைத் தாங்களே உணர முடியும். இங்கே நீங்கள் ஒரு அடிமை. இப்படிச் சொல்வதற்கு மன்னிக்க வேண்டும். எங்களுக்கு நீங்கள் பகைவர்; பகைவரை வெளியில் அனுப்புவது என்பது சரியான காரியமாகுமா? யாராவது அகப்பட்ட எதிரியை வெளியேவிட்டு ஆபத்தை வரவழைத்துக் கொள்வார்களா?"
"உனக்கு வேண்டுமானால் நான் உறுதி அளிக்கிறேன். உன் பாதுகாப்பிலேயே நான் பூம்புகார் வருகிறேன். உன் அண்ணனுக்குக் கூடத் தெரிய வேண்டாம்; சகோதரியின் முகத்தைக் கண்டபிறகு உன்னுடனேயே திரும்பி வந்து இந்தச் சிறையில் புகுந்து கொள்கிறேன். நீ நம்பவில்லையானால்... என் உடைவாளின் மீது ஆணையிட்டு உறுதியளிக்கிறேன்'
"அண்ணியின் சவ அடக்கத்திற்கு அண்ணன் செல்கிறாரோ இல்லையோ; அது கூட எனக்குத் தெரியாது. நான் போகிறேன் என்பது நிச்சயமாகி விட்டது. தங்களை அழைத்துச் செல்வதானால், அண்ணிக்கும் தங்களுக்கும் இருக்கிற உறவையாவது வெளியில் சொல்லியாக வேண்டும். தாங்களோ அந்த உறவை யாரிடமும் சொல்லக் கூடாதென்று கூறுகிறீர்கள். இந்த நிலையில் நான் என்ன செய்ய முடியும்? அண்ணியின் தம்பி என்பதற்காகத் தங்கள் மீது அனுதாபம் காட்டுகிறேன். அண்ணனின் எதிரியென்கிறபோது நான் என்ன உதவி செய்ய முடியும்?"
"தமிழ்நாட்டுப் போர் மறவன் எவனும் ஒரு பெண்ணை ஏமாற்றிவிட்டு ஓடிவிட மாட்டான். நம்பியவர்களை மோசம் செய்வது தமிழ்க்குருதி ஒடுகிறவர்களின் பழக்கம் இல்லையென்பது உனக்குத் தெரியாதா என்ன? நான் சொல்வதைக்கேள். நீ, அண்ணிக்கு இறுதிச் சடங்கை நடத்தி வைக்கப் பூம்புகாருக்குப் புறப்படும்போது உன்னோடு நானும் வருகிறேன்; உன்னுடைய பாதுகாப்புப் படை வீரனாக வருகிறேன். என்னை யாரும் அடையாளம் தெரிந்து கொள்ள முடியாத படி உன்னைப் பாதுகாக்கும் வீரனைப் போலவே நடித்து விடுகிறேன். உன்னை மோசம் செய்துவிட்டு நழுவிடப் பார்க்கிறேன் என்று உனக்குக் கடுகளவு சந்தேகம் வந்தாலும் உடனே கட்டாரியை என் மார்பின் மீது வீசிவிடு. களம் பல கண்ட என்னுடைய போர் வாளின் மீது ஆணை! என்னைப் பெற்றெடுத்த தமிழன்னையின் மீது ஆணை! பாண்டியர் பெருவழுதி, சோழர் கரிகாலர் இருபெரும் மன்னர்களின் மீதும் ஆணை! உன்னை நான் ஏமாற்ற மாட்டேன். தப்பியோட முயல மாட்டேன். உன்னுடனேயே வந்து உன்னுடனேயே இங்கு திரும்புகிறேன். என்ன சொல்கிறாய்? சரிதானா?"
தாமரைக்குச் செழியனின் பேச்சை மறுத்துரைக்க முடியவில்லை. அவன் சொல்லும் யோசனைப்படியே நடந்து கொள்வது என்று தீர்மானித்தாள்.
"என்னை ஏமாற்றுவதற்காகவே திட்டம் வகுக்கிறீர்கள் என்றால் பூம்புகார் அரண்மனையில் தாங்கள் தப்பியோட முனையும்போது என்னைக் கொன்று போட்டு விடுங்கள். இல்லாவிட்டால் என் அண்ணனுக்குப் பதில் சொல்ல நான் உயிரோடிருந்து வேதனைப்படுவேன்" என்று உருக்கமாகக் கேட்டுக் கொண்டாள் தாமரை.
"தாமரை! என்னை நம்பு. உதவி செய்தவர்களுக்குத் துரோகம். செய்வது தமிழினத்து வழக்கமல்ல என்பது தெரிந்தும் என்னைச் சந்தேகப்படலாமா? உன்னைப் பாதுகாக்கும் வீரனாக வரும் நான், என் சகோதரியின் பிணத்தைப் பார்த்ததும் பாச உணர்ச்சி பீரிட்டுக் கிளம்பி விடாமல் என் இதயத்தையும் கட்டுப்படுத்திக் கொள்கிறேன். அரசியின் பிரிவு கண்டு படை வீரனுக்கு ஏற்படும் வேதனையை மட்டுமே என் முகத்தில் காண்பாய்."-என்று செழியன் கூறியதும் தாமரை 'ஓ' வெனக் கதறி அழுதுவிட்டாள். பிறகு, தாமரை, அவனிடம் விடைபெற்றுக் கொண்டு விரைவில் பயணத்துக்கான ஏற்பாடுகளுடன் வருவதாகச் சொல்லிவிட்டு இருட்சிறையிலிருந்து வெளியேறினாள். செழியன் தாமரை போவதையே பார்த்துக் கொண்டிருந்தான். பின்னர் சிறையின் கதவுகள் மூடப்பட்டன.
தாமரை, அவன் கண்களிலிருந்து மறைந்து விட்டாள். திரும்ப வருவாளா என்ற சந்தேகத்துடனே தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு சிந்தனையில் வீழ்ந்தான். தாமரை வேகமாகத் தன் இருப்பிடம் சென்று பயணத்திற்கான உடைகளை அணிந்து கொண்டாள். தோழியொருத்தியின் துணையால் வேளிர்படை வீரன் ஒருவனின் உடைகளைக் கொண்டுவரச் சொல்லி அவைகளைக் கையில் எடுத்துக் கொண்டாள். தோழியிடம் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டுச் செழியன் அடைபட்டிருக்கும் இருட்சிறை நோக்கி நடந்தாள்.
"என்ன ஆனாலும் சரி, சமாளிப்போம்" என்ற துணிவு அவளைத் தள்ளியது. இடையில் ஒளித்து வைத்திருந்த கட்டாரியைத் தடவித் தடவிப் பார்த்துக் கொண்டே சிறையின் அருகே சென்றாள். வாயிற்புறத்தில் காவல் நின்ற வீரனைக் கூப்பிட்டு அவன் காதில் ஏதோ ரகசியம் கூறி அவனை அனுப்பினாள்.
பிறகு தாமரை உள்ளே நுழைந்தாள். செழியன் தாமரையை நன்றியுணர்வுடன் நோக்கினான். வேளிர் வீரன் உடைகளைக் கொடுத்து அவனை அணிந்து கொள்ளுமாறு கூறிவிட்டு, வாயிற்புறம் வந்து நின்று கொண்டாள். செழியனும் வெகு விரைவில் வேளிர் படை வீரனைப் போல உருமாறி அவள் எதிரே வந்து நின்றான். இருவரும் சிறையை விட்டு வெளியேறினர். சிறைக் கதவை தாமரை மூடினாள். செழியன் தலை குனிந்தவாறு அருகே நின்றான்.
"தாமரை!" என்ற முரட்டுக் குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினாள். செழியனும் நடுங்கி விட்டான்.