உள்ளடக்கத்துக்குச் செல்

ரோமாபுரிப் பாண்டியன்/2. முத்துநகை

விக்கிமூலம் இலிருந்து

2

முத்துநகை

பெருவழுதியின் உள்ளத்தைப் புயலாக்கிவிட்டுச் செழியன் நிம்மதியாகப் புலவர் காரிக்கண்ணனார் வீட்டில் சாய்ந்திருந்தான். முத்துநகையின் அன்பு கமழும் உபசாரங்கள் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தன. அவள் தயாரித்துக்கொடுத்த மிளகுநீர் மிகவும் உற்சாகத்தை அளித்ததாகப் பெருமை பாராட்டிப் பேசினான். அவளுடைய குடும்ப வரலாறுகளைப் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள செழியனுக்குப் பேராவல் எழுந்தது.

"உன் தாயார் பெயர் என்ன?" என்று கேட்டான்.

"தாமரைக்கண்ணியார்! ஆனால் என் தாயின் முகத்தை நான் பார்த்ததே இல்லை! தாயைக் கொன்றுவிட்டுப் பிறந்த சேய் நான்!" என அழுதுகொண்டே பதிலிறுத்தாள் முத்துநகை.

மெல்ல முத்துநகை செழியனின் தாய் தந்தை பற்றி வினவினாள்.

செழியன் அதற்கு, "இருக்கிறார்கள்!" என்றான்.

"எங்கேயிருக்கிறார்கள்!"

"என் இருதயத்தில்"

"தாயின் பெயர்?"

"தமிழ்"

"தந்தை?"

"பாண்டிய நாடு!"

"என்ன சொல்லுகிறீர்கள்?"

"ஆமாம் முத்துநகை!" பாண்டியநாட்டுத் தந்தையும் தமிழ்த்தாயும் பெற்றெடுத்த மகன்தான் நான்!"

"நான் சொன்னது போலச் சரியாகச் சொல்லுங்கள்!"

"சரியாகச் சொல்ல என்னால் இயலாது! எப்படியோ எனக்கு ஒரு தாயும் தந்தையும் இருந்திருக்கவேண்டும், அது நிச்சயம்!"

"அவர்கள் யார்? அவர்கள் பெயர்?"

"தயவு செய்து கேட்காதே- என்னால் சொல்ல இயலாது! அதனால் எனக்குத் தாய் தந்தையே கிடையாது என்று கருதிவிடாதே! தாமரையிலும், அல்லியிலும் திடீரென குழந்தைகள் தோன்றுவதாகக் கதை கட்டுகிறார்களே; அப்படிப்பட்ட தெய்வப் பிறவியல்ல நான்! தாய் வயிற்றில் உதித்த மனிதப் பிறவிதான்!"

அவனுடைய பேச்சு நயங்கண்டு முத்துநகை மகிழ்ச்சி கொண்டாள்; தாயைப் பற்றிய நினைவு அவளுக்குத் துயரத்தை உண்டு பண்ணியிருந்த போதிலும் அவனது பதில்களில் உள்ள சுவை கண்டு சோகத்தையும் ஒருவாறு மறந்தாள்.

இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது தெருப்புறத்திலேயிருந்து "அன்பே சிவம்! அன்பே சிவம்! பண்பே சைவம்!" என்ற முழக்கம் கேட்டது.

சிவனடியார்கள் வந்திருப்பதாகச் செழியனிடம் தெரிவித்துவிட்டு, முத்துநகை தெருப்பக்கத்துக் கதவைத் திறந்தாள். பதினைந்துக்கு மேற்பட்ட அடியார் கூட்டத்தினர், அவள் கதவைத் திறப்பதற்குள் மளமளவென்று உள்ளே நுழைந்தனர். முத்துநகைக்கு ஒரே புதுமையாக இருந்தது. தெரு வழியே செல்லும் அடியார் கூட்டம் திடீரென வீட்டுக்குள் நுழைந்தது கண்டு திடுக்கிட்டுக் கலங்கினாள்.

அவர்கள் அவளைப் பொருட்படுத்தவில்லை. "அன்பே சிவம்! பண்பே சைவம்!" என்று கூறியவாறு அவர்கள் செழியனின் படுக்கைப் பக்கம் பாய்ந்தனர். பருந்து உணவைப் பற்றுவது போல் அவனைப் பற்றிக்கொண்டனர்.

செழியன் திமிறிப் பார்த்தான். அன்பே சிவமென உச்சரித்த அடியார்கள் கைகளில் வாட்கள் மின்னிக் கிளம்பின. முத்துநகை அதுகண்டு அலறினாள்! அவளை ஒரு சிவனடியார் பிடித்துக் கொண்டார். இன்னொரு அடியார் ஒரு மூலிகையை அவள் முகத்தருகே நீட்டினார். அவள் மயங்கிக் கீழே விழுந்தாள்! பிறகு அவளை யாரும் திரும்பிப் பார்க்கவில்லை! செழியனைத் தூக்கிக் கொண்டு அடியார் கூட்டம் வெளியேறியது. முத்துநகை ஆடாமல் அசையாமல் படுக்க வைத்த சிலைபோல மயங்கிக் கிடந்தாள்.

தெருவிலே "அன்பே சிவம்" என முழங்கிச் செல்லும் அடியார்களின் கூட்டத்தைப் பார்த்தவாறு அவர்களுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டுத் தன் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார் காரிக்கண்ணனார். அடியார் களின் அன்னக் காவடிக்குள்ளே மயக்கமூட்டப்பட்ட செழியன் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை அவர் எப்படிக் கண்டுபிடிக்கமுடியும்? அவர் செழியனிடமும் முத்துநகையிடமும் அரண்மனையில் நடந்தவைகளைக் கூற வேகமாக வந்து கொண்டிருந்தார்.

வீட்டுக்குள் நுழைந்ததும் காரிக்கண்ணனாருக்குத் தூக்கிவாரிப் போட்டது. திரும்பிய பக்கமெல்லாம் ஒரே அலங்கோலம். எப்போதும் எதிர்வந்து இன்முகங்காட்டி அழைத்திடும் முத்துநகையையும் காண வில்லை. அச்சமூட்டிடும் அந்த அமைதியை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

"முத்துநகை! முத்துநகை!!" என்று கூவினார். கூவியவர் திடீரென்று கூச்சலே போட்டுவிட்டார். "அம்மா முத்துநகை!" என அலறியவாறு அவள் வீழ்ந்து கிடந்த இடத்திற்குப் பாய்ந்தோடினார். மயக்கத்தின் அணைப்பில் மெய்மறந்து கிடந்த மகளைத் தூக்கி மடியில் கிடத்திக் கொண்டு தழுதழுத்த குரலில் "அம்மா அம்மா!" என அழைத்துப் பார்த்தார். தண்ணீரை அள்ளி அவள் முகத்தில் தெளித்தார். தாமரையிலையின் மேலே விழுந்த தண்ணீர் முத்துருவங்கொண்டு உருள்வதைப் போல் அவள் முகத்தில் நீர்த்துளிகள் உருண்டோடிக் கொண்டிந்தன. தன் மேலங்கியின் முனையிலுள்ள கருப்புக் கரையைக் கிழித்துத் திரிபோலக் கையால் சுற்றி, விளக்கில் காட்டிக் கொளுத்தித் திரும்ப அணைத்து, அந்தப் புகையை முத்துநகையின் மூக்கில் செலுத்தினார்.

இப்படிப் பல தடவை அந்தப் புகை சிகிச்சை அளிக்கப்பட்டபிறகு முத்துநகையின் தலை மெதுவாக அசைந்தது. கடற்சிப்பி, தானே திறந்து ஒளி முகத்தை வெளியே காட்டினாற்போல் அவள் கண் இமைகள் திறந்தன... கருவிழிகள் மெதுவாக ஆடின.

"அப்பா!" என்றாள் நடுங்கும் குரலில்.

"என்னம்மா நடந்தது; என் கண்ணே?" என்று அழுகுரலில் கேட்டார் புலவர்.

அவளால் பேசமுடியவில்லை. சுற்றும்முற்றும் கண்களைச் சுழலவிட்டாள். திடுமென எழுந்து உட்கார்ந்தாள். "அவரைக் கொண்டுபோய் விட்டார்களா?" என்று வேதனையோடு கேட்டாள். தேம்பித்தேம்பி அழுதாள்.

"சொல்லம்மா! விபரமாகச் சொல்லம்மா! எனக்கு ஒன்றுமே புரியவில்லையே. அய்யோ! நீ வீழ்ந்து கிடந்ததைக் கண்டபோது நான் கற்ற தமிழ் இலக்கணமெல்லாம் திடீரென மறந்துவிட்டது போன்ற உணர்ச்சி ஏற்பட்டதம்மா எனக்கு! சொல்லம்மா- என்ன நடந்தது? செழியன் எங்கே?"

புலவர் இந்தக் கேள்விக்கு மகளிடமிருந்து என்ன பதில் வருமோ எனப் பயந்தார்! ஒருவேளை, செழியனைப் பகைவர்கள் பழிக்குப்பழி தீர்த்து விட்டார்களோ என்ற ஐயம் அவரை அலைக்கழித்தது.

"வழக்கம்போல் சிவனடியார்கள் தெருவில் வரும் ஒலி கேட்டு, கதவு மூடியிருந்ததால் நாம் மதிக்கவில்லையென்று அடியார்கள் தவறாகக் கருதுவார்களோ என்று பயந்து, ஓடிப்போய்க் கதவைத் திறந்தேன். அவர்களோ 'குபுகுபு' வென வீட்டுக்குள் நுழைந்தார்கள். செழியனை வளைத்துக் கொண்டு தூக்கிச்செல்ல முயன்றார்கள். நான் தடுத்திட முயன்றேன். என் முகத்தில் ஏதோ ஒரு பச்சிலைக் கொத்தைக் காட்டினார்கள். அவ்வளவுதான்; எனக்குத் தலை சுற்றியது; மயக்கம் ஏற்படுவதை என்னால் உணரமுடிந்தது. நிற்க முடியவில்லை; உட்கார்ந்தேன். அதற்குள் அவரைத் தூக்கிக் கொண்டு அந்த அடியார்கள் ஓட்டம் பிடித்தார்கள். நான் வேகமாக எழுந்தேன், தடாலெனக் கீழே விழுந்தேன்; பிறகு எதுவும் எனக்குத் தெரியாது."

இந்த பதிலை முத்துநகை சொல்லி முடித்ததும் புலவர் காரிக்கண்ணனாருக்குப் புதிய குழப்பம் மூண்டது. உடனே ஓடிப்போய்ச் சோழன் கரிகாலனிடமும் பெருவழுதிப் பாண்டியனிடமும் செய்தியைச் சொல்லவேண்டும் என்று எண்ணியெழுந்தார். "அரண்மனைக்குப் போய் உடனே அரசர்க்குத் தகவல் கொடுத்து வருகிறேன்" என்று மகளிடமும் சொல்லிக்கொண்டுப் புறப்பட்டார்.

ஆனால் புறப்பட்டவர் வாயிற்படி தாண்டாமல் திரும்பிவந்து திகைத்து நின்றார்.

“ஏனப்பா திரும்பி விட்டீர்கள்?" என்று முத்துநகை ஆவல் ததும்பக் கேட்டாள்.

"ஒன்றுமில்லையம்மா! முதலில் செழியனைக் காணவில்லை என்று அரண்மனையில் மன்னர்களிடம் செய்தி வந்தது. அப்போது நானும் அங்கேயிருந்தேன். செழியன் நம் வீட்டில் இருக்கும் செய்தியைக் கூறிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் செழியனின் வேண்டுகோள் என் நெஞ்சிலே நின்றது. அவன் சொன்னதை மீறிச் செய்தியை வெளியிடுவானேன் என்று மௌனமாயிருந்து விட்டேன். இப்போது போய்ச் செழியனை யாரோ தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள் என்று நான் கூறினால் முதலில் செழியன் இங்கு இருந்ததை ஏன் சொல்லவில்லை என்று கேட்பார்கள். பாண்டியராவது பரவாயில்லை. கரிகால் மன்னரிடம் யாரம்மா பதில் சொல்ல முடியும்? மன்னரின் கேள்வியும் நிச்சயமாக நியாயமாகத்தான் இருக்கும். நான் செழியன் இருக்குமிடத்தை முன்பே கூறியிருந்தால் இப்போது செழியனுக்கு இந்த ஆபத்து வந்திருக்காதல்லவா? தவறு என்மீதுதான்!" என்று தன்னைத் தானே நொந்து கொண்டார் புலவர்.

"உங்கள்மீது தவறொன்றுமில்லையப்பா; தவறு செழியனுடையது தான்! மன்னர்களிடம் தகவல் கொடுக்கவேண்டாமென்று முதலில் தடுத்தது அவர்தானே!" எனத் தந்தைக்குச் சமாதானங் கூறினாள் முத்துநகை.

"செழியனைத் தூக்கிச் சென்றவர்கள் யாராக இருக்கும்? வேளிர்குடி மன்னவன் இருங்கோவேளின் ஆட்களாகத்தான் இருக்கவேண்டும். தோல்வியுற்ற அவமானத்தில் எப்படியும் சோழப் பெருநாட்டில் அமளியை உருவாக்க வேண்டுமென்று எண்ணுகிறான் போலும்!" என்றெல்லாம் புலவர் முனகிக்கொண்டிருந்தார்.

"இருங்கோவேள், மன்னர் கரிகாலரிடம் தோற்று நாடிழந்து நகரிழந்து எங்கேயோ தலைமறைவாக வாழ்கிறான் என்று கூறினார்களே யப்பா; இப்போது அவனிடம் இத்தனை ஆட்கள் ஏது?" என்று சந்தேகத்துடன் வினவினாள் முத்துநகை.

"நாடற்றவர்களைக் காடு காப்பாற்றுகிறது. அந்தக் காட்டின் புதர்களில் புலியும் பதுங்கியிருக்கும்-இந்த வேளிர் குடும்பத்து எலியும் ஒளிந்திருக்கும். குகைகளில் சிங்கமும் படுத்திருக்கும் - அங்கே பகை வளர்க்கும் இந்தச் சிறு நரியும் ஒண்டிக் கிடக்கும். அந்த நரிக்கு மீண்டும் நாட்டாண்மை கொடுக்கவும், நமது காவலராம் கரிகாலரை வீழ்த்தி விடவும் உள்நாட்டிலேயே ஒருசில துரோகிகள் உலவிக்கொண்டிருக்கிறார்கள்! அவர்களின் கூட்டு முயற்சியாகத்தானிருக்க வேண்டும், இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும்" என்று காரிக்கண்ணனார் விழிகளில் கனல் பறக்கப் பேசினார்.

"செழியனின் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்து விட்டால் என்னப்பா செய்வது?"

"அதைத்தான் நானும் கவலையோடு யோசிக்கிறேன்" என்று கூறியவாறு பூமியில் விழியோட்டிச் சிந்தனையில் ஈடுபட்டார் புலவர். சிந்தனைக்கெனச் சென்ற விழிகள், செழியன் படுத்திருந்த கட்டிலின் ஓரமாக ஏதோ ஒன்றைக் கண்டு மேலும் அகல விரிந்தன. புலவர் வேகமாகச் சென்று அந்தப்பொருளை எடுத்தார். புலி நகம் பொருத்தப்பட்ட மாலை! வேலைப்பாடமைந்த அழகிய தங்கத் தகட்டாலான அந்த மாலையின் முனையில் புலி நகங்கள் நீட்டிக்கொண்டிருந்தன. மாலையை உற்றுப்பார்த்தார்.

"இது செழியன் தன் கழுத்தில் அணிந்திருந்ததுதான்!" என்று அடையாளங் கண்டுபிடித்துச் சொன்னாள் முத்துநகை.

புலிநக மாலையைத் திரும்ப உற்றுநோக்கினார் புலவர். பிறகு அதை முத்துநகையிடம் கொடுத்துப் பத்திரமாக பேழையில் வைத்துப் பூட்டச் சொன்னார். முத்துநகையும் பூட்டினாள். அவளுக்கு எப்படியாவது செழியனை மீட்டுவிடவேண்டும் என்ற துடிப்பு. சிறிது நேரந்தான் அவனுடன் அவள் பழகினாள். அந்த நேரத்திற்குள் அவன் மிகவும் உயர்ந்த பண்பாடு கொண்டவன் என்பதை உணர்ந்து கொண்டாள். தன்னந்தனிமையில் ஓர் அழகான பெண்ணும் ஒரு வாலிபனும் விடப்படும் சூழ்நிலையில் எவ்வளவோ விபரீதங்கள், காதல் என்ற பெயரால் அரும்பிப் பூத்துக் காய்த்துக் கனிந்து போயிருக்கின்றன. அதுவும் இருவரில் ஒருவருக்குக் காயமோ பிணியோ ஏற்பட்டுச் சிகிச்சை செய்யும் கட்டங்கள் ஏற்பட்டு விடுமேயானால் அந்த இடத்தில் காதல் எனும் புதிய நோக்கு தங்கு தடையின்றி உள்ளத்தில் நுழைந்து உடலுக்கு வராமல், முதலிலேயே உடலில் பரவிப் பிறகு உள்ளத்தையும் பற்றிக்கொள்ளும்.

ஆனால் அதே சூழ்நிலையில் விடப்பட்ட செழியன், தனக்கு அன்புடன் சிகிச்சைகள் செய்து உபசரித்த முத்துநகையிடம் எந்தவிதமான தவறான குறிப்புகளும் காட்டவில்லை. அந்த மேன்மையான குணத்தை முத்துநகை பெரிதும் பாராட்டி மகிழ்ந்து இருந்தாள். அந்தப் பண்பினைக் கண்டு அவன்மீது மிக்க மதிப்பு வைத்தாள். அதனாலேயே அவனுக்கேற்பட்ட ஆபத்திலிருந்து எவ்வாறேனும் காப்பாற்றிவிட வேண்டும் என்று எண்ணித் தவித்தாள். மறுபடியும் தந்தையிடம் செழியனைக் காப்பாற்றுவதற்கு வழிகாண வேண்டும் என்று வற்புறுத்தினாள்.

புலவர் புனுகுப்பூனை போல அங்குமிங்கும் நடைபோட்டுக் கொண்டு ஆழ்ந்து யோசிக்கத் தொடங்கினார். விழா நாளும் அதுவுமாக இஃதென்ன புதிய வேதனை என்று நொந்து கொண்டார்.

கடைசியாக முத்துநகையைப் பார்த்துக் "கவலைப்படாதே! செழியனைப்பற்றிய தகவலை மன்னருக்கு அறிவிக்க நான் ஒரு குறுக்குவழி கண்டுபிடித்திருக்கிறேன். நம்மீது குற்றமில்லாமல் செய்தி மன்னனின் செவியில் எட்டிவிடும்!" என்றார்.

"என்னப்பா வழி?" என்றாள் முத்துநகை.

"விவரமெல்லாம் கேட்கக்கூடாது! இனிக் கவலைப்படாமல் தூங்கலாம் நீ!" என்று சற்றுக் குரலை உயர்த்திப் பேசினார்.

"இரண்டு மன்னர்களில் எந்த மன்னரிடம் செய்தியை அறிவிக்கப் போகிறீர்கள்? பாண்டியரிடமா? சோழரிடமா?"

"யாரிடமென்றால் உனக்கென்ன? செழியன் மீளவேண்டும்; அவ்வளவுதானே?"

"இல்லையப்பா, அதற்கில்லை! யாரிடமென்று விவரமறியக் கேட்டேன், அவ்வளவுதான்."

"அடடா உன் தொல்லை - பெரிய தொல்லை - முத்துநகை! உண்பதற்கு ஏதாவது இருந்தால் கொடு! பிறகு உறங்கு! போ!"

திடீரெனத் தந்தையின் பேச்சில் தலைகாட்டும் கடுமைக்குக் காரணம் புரிந்து கொள்ளமுடியவில்லை. முத்துநகையினால்!

இருங்கோவேள் மறைந்திருந்து நாட்டில் இப்படியெல்லாம் குழப்பங்களை உண்டு பண்ணுகிறானேயென்று தந்தைக்கு உள்ளத்தில் குடைச்சல் ஏற்பட்டிருக்கக் கூடும். அல்லது, செழியனைப் பற்றிய செய்தியை முதலில் வெளியிடாமல் இப்போது வெளியிட்டால் மன்னர் என்ன கருதுவாரோ என்ற கவலை மனத்தைத் துளைத்திடக்கூடும். அதனால் தந்தையின் பேச்சில் படபடப்பு இருக்கிறதோ என்று முத்துநகை நினைத்தாள். அவளுக்கு வேறொரு பயமும் வந்துவிட்டது. அடிக்கடி செழியன் காப்பாற்றப்பட வேண்டும் என்பதையே வலியுறுத்திக் கூறுவதால் ஒருவேளை தந்தை தன்னைப் பற்றித் தவறாக கருதியிருக்கக் கூடுமோ என்ற அச்சம்தான் அது!

ஆகவே அவள் பேசுவதை நிறுத்திக்கொண்டாள். அடுக்களைக்குச் சென்று பழங்களையும் பாலையும் எடுத்து வந்து தந்தைக்கு முன்னே வைத்தாள். அவரும் பழந்தின்று பாலைப் பருகினார். அதுவரையில் வைத்த விழி வாங்காமல் முத்துநகை தந்தையின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். தன் மகள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் காரிக்கண்ணனார் உணராமல் இல்லை. உணவை முடித்துக்கொண்டு எழுந்து தெருக்கதவைத் தாழிட்டுவிட்டுப் படுக்கையில் சாய்ந்து கொண்டார்.

முத்துநகைக்கு ஒன்றுமே விளங்கவில்லை. செழியனைப் பற்றி மன்னருக்குச் செய்தி அனுப்ப வழி கண்டுபிடித்துவிட்டேன் என்று கூறியவர், உறங்குவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டு விட்டாரே யென்ற கவலை அவளை வாட்டியது. படுக்காமல் உட்கார்ந்திருந்தால் தந்தையின் மனத்தில் மேலும் அமைதியற்ற நிலையை உண்டாக்கிவிடக் கூடும் என அஞ்சி அவளும் தாழ்வாரத்தில் தலைசாய்த்துக் கொண்டாள். சிறிது நேரத்திற்கெல்லாம், புலவர் உறங்குகிறார் என்பதற்கு அடையாளமாக விதவிதமான மூச்சுகள் ஒலி எழுப்பிடத் தொடங்கின. முத்துநகைக்கு தூக்கமே வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தாள்.

செழியனை எங்கே கொண்டு போயிருப்பார்களோ? என்ன செய்திருப்பார்களோ?

எல்லாம் தன்னால் வந்த வினைதான்! சிவனடியார்களுக்கு மரியாதை செலுத்துவதற்காகக் கதவைத் திறக்காமல் இருந்திருந்தால் இப்படி யெல்லாம் ஆகியிருக்குமா?

இவ்வாறு கவலைப்பட்டுக்கொண்டே அந்தப் பூங்கொடியாள் துவண்டு போனாள். நாழிகைகள் உருண்டோடி நடுநிசியாயிற்று. எங்கும் பயங்கரமான அமைதி. அரண்மனையின் மணியோசை நடுநிசியென் பதை அறிவித்துவிட்டு ஓய்ந்து போனது. பூம்புகார் கடற்கரையின் கலங்கரை விளக்கம் சுழலும்போது அவள் வீட்டு முற்றத்தின்வழியாகப் “பளிச் பளிச்" என்று ஒளி பட்டு மறைந்து கொண்டிருந்ததானது அவளது மனோ நிலைக்குத் தக்க எடுத்துக்காட்டாய் அமைந்திருந்தது.

இருண்டிருந்த வீட்டிற்குள் யாரோ விளக்கு ஏற்றுவதை உணர்ந்து திரும்பிப் பார்த்தாள். புலவர்தான் விளக்கைக் கொளுத்தி வைத்தார். முத்துநகை கவனித்துக்கொண்டேயிருந்தாள். விளக்கின் அடியில் அமர்ந்து புலவர், ஓலைச் சுவடிகளைக் கையிலெடுத்து எழுத்தாணியை ஓட்டத்துவங்கினார். அவர் எழுதிக்கொண்டிருப்பது எதுவாக இருக்கும் என்ற சந்தேகம் முத்துநகைக்கு! ஏதாவது கவிதையாக இருக்கும் என்று அவளே பதில் கூறிக்கொண்டாள்.

அப்போது தெருக்கதவு மெல்லத் தட்டப்படும் ஒலி கேட்டது! முத்துநகை எழுந்து தெருக்கதவின் பக்கம் ஓடினாள்.

"நில்! நீ போகாதே! நான் திறக்கிறேன்!" என்றவாறு புலவர் எழுத்தாணியைக் கையில் எடுத்துக்கொண்டே கதவுப்பக்கம் வந்தார். எதிரிகள் யாராவது இருந்தால், தற்காப்புக்காக எழுத்தாணியைக் கையில் வைத்துக் கொண்டார் என்பது அவர் அதைப் பிடித்திருந்த பாவனையிலேயே தெளிவாகத் தெரிந்தது.

கதவு திறக்கப்பட்டது. தாடியும் மீசையும் கொண்டு தண்டூன்றியவாறு ஒரு கிழவர் உள்ளே வந்தார். நீண்ட கருநீல அங்கியொன்றை அவர் அணிந்திருந்தார். அதன்மீது பூவேலை செய்யப்பட்ட மேலாடை யொன்று கிடந்தது. சிவப்பு வர்ணமுள்ள பட்டுத் துணியொன்று தலையைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்தது.

அந்தக் கிழவர், "என்ன புலவரே! சுகமா?" என்று கேட்டவாறு உள்ளே வந்தார்.

அந்தக் கிழவரை முத்துநகை இதற்குமுன்பு பார்த்திருக்கிறாள், அவரோடு பேசியுமிருக்கிறாள். அவர் ஒரு யவன நாட்டுக்காரர் என்றும், பெரிய வாணிப வேந்தர் என்றும், தன்பால் மிக்க அன்பு கொண்டவர் என்றும் காரிக்கண்ணனார் முத்துநகையிடம் கூறியிருக்கிறார். கிழவரை அவளும் வணங்கி வரவேற்றாள்.

அக்கிழவர், முத்துநகையிடம் நெருங்கி வந்து, "சுகமாக இருக்கிறாயா பெண்ணே?" என்று அவள் தலையை அன்போடு தடவிக் கொண்டே கேட்டார்.

“சுகந்தான் தாத்தா! ஏது இந்நேரத்தில் வந்தீர்கள்?" என்று முத்துநகை அவரைப் பார்த்துக் கேட்டாள்.

"ஏதாவது வேலையிருந்திருக்கும்; வந்திருப்பார். இதெல்லாம் ஒரு கேள்வியா? முத்து! நீ போய்ப் படுத்துத் தூங்கு!" என்று புலவர் கூறவே, அவளும் தன் படுக்கையிடம் சென்றுவிட்டாள்.

பிறகு, கிழவரும் புலவரும் வெகுநேரம் வரையில் ஏதோ ரகசியம் பேசிக்கொண்டிருந்தனர். என்ன பேசுகிறார்கள் என்பதை எப்படியாவது கேட்டுவிட வேண்டும் என்று பெருமுயற்சி செய்தாள் முத்துநகை. காதைக் கூர்மையாக்கிக் கொண்டு ஒலி வரும் திக்கில் நீட்டிக் கொண்டிருந்தாள். "சோழ நாடு", "பாண்டிய மண்டலம்", "வேளிர்குடிமக்கள்" இப்படிச் சிதறிய சில வார்த்தைகளைத் தான் அவளால் கேட்க முடிந்தது. "செழியன்" என்ற சொல்லும் சில நேரங்களில் பேசப்பட்டது. அப்போது அந்த வாசகத்தின் முழு உருவையும் பெற அவள் பட்ட பாடு கொஞ்சமல்ல. ஆனாலும் பயனில்லாது போயிற்று.

இறுதியாக, யவனக்கிழவர் விடைபெற்றுக்கொண்டு எழுந்தார். புலவர் ஓலைச்சுவடியிலிருந்து இரண்டு மூன்று ஓலைகளை எடுத்துக் கிழவரிடம் கொடுத்தார். அவர் அவைகளை வாங்கிப் பத்திரப்படுத்திக் கொண்டார்.

கிழவர் மெதுவாக வாயிற்படியைத் தாண்டி நடந்தார். புலவரும் தெருவரையில் சென்று அவரை வழியனுப்பி வைத்தார். தெருவில் நின்று ஏதாவது பேசுகிறார்களா என்று கவனிக்க முத்துநகை கதவோரத்திற்குப் போனாள். போனவளின் காலில் கதவோரத்தில் ஏதோ ஒன்று தட்டுப்பட்டது. குனிந்து எடுத்து விளக்கருகே சென்று பார்த்தாள். ஒரு சிறு பதக்கம்! சுற்றிலும் வைரம் பதித்த பதக்கம்! அதன் நடுவே உள்ள எழுத்துக்கள் அவள் பார்வையை இழுத்தன கூர்ந்து கவனித்தாள். "இருங்கோவேள்" என்று எழுதப்பட்டிருந்தது. அவள் கண்களை அவளால் நம்பமுடியவில்லை. திரும்பத் திரும்பப் படித்தாள். அதே எழுத்துக்கள்தான். அவளுக்காக அவை மாறவில்லை.

"இருங்கோவேள் மன்னனா? இந்த நாட்டின் பகைவனா? அப்படியானால் இவர் யவனக் கிழவர் இல்லையா? அய்யோ பகைவனுடனா தந்தை உறவு கொண்டாடுகிறார்?"

கேள்விகள் அவள் நெஞ்சத்தைத் துளைத்துத் தகர்த்தன. பதக்கத்தை மறைத்துக்கொண்டு படுக்கையில் போய்ச் சாய்ந்துக்கொண்டாள்.

புலவரும் கிழவரை அனுப்பிவிட்டுக் கதவைத் தாழிட்டுவிட்டுப் படுத்துறங்க ஆரம்பித்தார்.