ரோமாபுரிப் பாண்டியன்/20. தாமரைச் செல்வி
20
தாமரைச் செல்வி
அழைத்தது யார் என்று செழியனுக்கு உடனே விளங்கி விட்டது.
அமைச்சர் செந்தலையார்தான் அது. அவரை அவன் அங்கேயே ஒருமுறை பார்த்திருக்கிறான். மரமாளிகையில் அவனை இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தியதும் அவன் பார்த்த அதே பயங்கர உருவக் கிழவர் அவனை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். அவரது ஆழமான கண்கள், தாமரையின் முகத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தன.
"தாமரைக்கு முகத்தில் கலக்கம் குறைந்திருந்ததைச் செழியன் உணர்ந்தான். அண்ணனோ எனக் கருதி அவள் திடுக்கிட்டிருக்க வேண்டும் அண்ணனல்ல; அமைச்சர்தான் என்றதும் அவளது பயம் ஓடிவிட்டது. ஆனாலும் அவள் அமைச்சரை அங்கு எதிர்பார்க்க வில்லை. இருட்சிறையின் காவலனை அவள் அமைச்சரிடம்தான் அனுப்பினாள். தான் சோழ நாட்டுக்குப் புறப்பட்டுவிட்டதாகச் செய்தி சொல்லிவிடும் படிதான் அவள், அந்த வீரனைச் செந்தலையாரிடம் ஓடச் சொன்னாள். வீரன் போய் வருவதற்குள் செழியனுக்கு வேடமிட்டு வெளியேறி விடலாம் என்ற தந்திரமான திட்டம் வேறு அவள் மனத்தில் இருந்தது.
ஆனால், நினைத்ததற்கும் நடந்ததற்கும் சற்று வேறுபாடு ஏற்பட்டு விட்டது. தாமரையினால் அனுப்பப்பட்ட காவலன், அமைச்சரிடம் சென்று தாமரை புகார் நகரத்துக்குப் பயணப்பட்டுவிட்டாள் என்று தகவல் கொடுத்தான். "இப்போது தாமரை எங்கேயிருக்கிறாள்?" என்று செந்தலையார் கேட்ட காரணத்தால், தாமரை இருட்சிறைக்குள் நுழைந்திருக்கும் செய்தியை அந்த வீரன் அவரிடம் சொல்ல நேரிட்டது. அதனால் செந்தலையார் ஏதோ ஐயமுற்றவராய் அங்கேயே வந்துவிட்டார்.
செந்தலையார் அண்மையில் வந்துவிட்டது கண்ட தாமரை, செழியனுக்குக் கண்ஜாடை தெரிவித்து அப்பால் சென்று தந்திரமாக நடந்து கொள்ளுமாறு மெல்ல இதழசைத்துக் கூறிவிட்டாள்.
செழியனும் வேளிர்படை வீரனைப் போலவே நடிக்கத் தொடங்கி அங்குமிங்கும் நடைபயின்று கொண்டிருந்தான். இருட்சிறையின் கதவை அவனே மூடிப் பூட்டினான்.
தாமரையின் பக்கத்தில் வந்து நின்ற செந்தலையார் "என்னம்மா! போவதற்கே முடிவு செய்து விட்டாயா?" என்று கரகரத்த குரலில் கேட்டார்.
"ஆமாம் அமைச்சரே! இதில் யோசிப்பதற்கு ஒன்றுமில்லை" என்று தாமரை பதில் கூறினாள்.
"கரிகாலன் உன்னைச் சிறைப்படுத்தி வைத்துக் கொண்டு, 'செழியனை விடுதலை செய்தால்தான் தாமரையை விடுவிப்பேன்' என்று நிபந்தனை போட்டு விட்டால் என்ன செய்வது?" என்று வினா எழுப்பினார்.
"கரிகால் சோழர், நாம் நினைக்கிறபடி அவ்வளவு நேர்மையற்றவரல்லர். நம்மையெல்லாம் வளைத்துச் சிறையில் பூட்ட வேண்டுமென்றால் அவர் படைகளின் உதவியைத் தான் நாடுவாரே தவிரப் போர்முறை இலக்கணத்துக்கு முரணாகப் புறமிருந்து நம்மைத் தாக்க மாட்டார்."
இப்படித் தாமரை கரிகாலனைப் புகழ்ந்து பேசியதும் செந்தலையாரின் கிணற்றுக் கண்கள் உப்பிக் கொண்டன. முகம் மேலும் விகாரமாக மாறிற்று. உறுமிக் கொண்டார். அந்த உறுமலில் எவ்வளவு வெறுப்பு உணர்ச்சியிருந்தது என்பதைத் தாமரை புரிந்து கொண்டாள்.
"சரி... இருட்சிறையில் என்ன செய்தாய்? செழியனைப் பார்த்தாயா? அவன் சுகம் விசாரித்தாயா? எப்படி இருக்கிறான் துரோகி?" என்று கேலியும் கோபமும் கலந்து சிரித்தவாறு கேட்டார்.
"செழியனின் சுகம் விசாரிக்கும் வேலையில்லை எனக்கு. அவன் ஓடிவிடாமல் பாதுகாத்து, அண்ணன் வரும்வரையில் இருட்சிறை யிலேயே மூடி வைத்திருப்பது தான் என்னுடைய பொறுப்பு!"
இந்தப் பதில் செந்தலையாருக்கு ஆத்திரமூட்டியது.
"செழியனைக் காவல் புரிய இங்கு படை வீரர்கள் இருக்கிறார்கள்; தளபதியிருக்கிறார்; நானும் சாகவில்லை, உயிரோடு தான் இருக்கிறேன்!" என்று அவர் வேகமாகப் பதில் சொன்னார்.
"நீங்கள் எல்லாம் இருக்கிறீர்கள் நான் மறுக்கவில்லை. அண்ணனைப் போர் வெறியராக மாற்றி, மறவர் குலப் பண்புக்கு மாறாக மாற்றாரிடம் நடந்து கொள்ளக் கூடிய கொடியவராக மாற்றி, எந்நேரமும் அவர் இருதயத்தில் பழிக்குப் பழி' என்ற பயங்கரமான வார்த்தைகளை ஒலிக்கச் செய்துகொண்டு. இந்த மரமாளிகையிலேயே வேளிர்குலத் துக்கு முடிவு கட்டக்கூடிய சூழ்நிலையை உருவாக்க, நீங்கள் இருக்கிறீர்கள்!" என்று தாமரை ஆத்திர வார்த்தைகளை வாரியிறைத்தாள்.
தாமரையின் திடீர் மாறுதலுக்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாமல் செந்தலையார் அப்படியே நிலைபெற்று நின்றார்.
அமைச்சரிடம் அளவுக்கு அதிகமாகவே பேசிவிட்டோம் என்பதை தாமரையும் நன்கு உணர்ந்து கொண்டாள். ஆனால் அப்படிப் பேசித்தான் தீரவேண்டும் என்ற நெருக்கடியில் அவள் இருந்தாள். அமைச்சரிடம் சாவதானமாகப் பேசிக் கொண்டிருந்தால் அதற்குள் செழியனைப் பற்றி ஏதாவது தகவல் செந்தலையாருக்குக் கிடைத்து விடக்கூடும். செழியன் சிக்கிக் கொள்ள நேரிடும். கோபமாகப் பேசிவிட்டு உடனே வெளியேறி விட்டால்தான் செய்யும் தவற்றை மறைத்து விடலாம் எனத் திட்டமிட்டுத்தான் அவள் செந்தலையாரின் சிந்தனையை வேறு பக்கம் திருப்பும் விதத்தில் அங்ஙனம் கடுமொழிகளைக் கூறினாள். அந்தத் திட்டத்தில் அவள் வெற்றியும் பெற்றாள்.
என்றுமில்லாத விதமாகத் தாமரையின் சுடுசொற்கள் பாய்ந்தது கண்ட அமைச்சர் அசைவற்ற நிலையில் தலையை மட்டும் மேலே தூக்கியவாறு சிந்தனையை ஓடவிட்டார். தாமரையுடன் பேச அவர் விரும்பவில்லை. மன்னன் இருங்கோவேளுக்காகவே தன் உயிரை வைத்துக் கொண்டி ருப்பதாக எண்ணிடும் வயோதிகப் பருவத்தினர்தான் அந்தச் செந்தலையார். அவரைப் போய்த் தாமரை இழித்துரைத்ததும் அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
மனக் குமுறலுடன் அவர் நிற்கும் நேரமே நல்ல நேரம் எனக் கருதிய தாமரை சற்றுத் தொலைவில் நின்று கொண்டிருந்த செழியனைப் பார்த்து, "ம்... குதிரைகளைக் கொண்டு வா!" என்று கட்டளையிட்டவாறு நடந்தாள்.
செழியனும் குதிரைகள் கட்டப்பட்டிருந்த இடம் நோக்கி ஓடினான். தாமரையும் அவன் பின்னே போய்க் கொண்டிருந்தாள். யாராவது வேளிர் வீரன். செழியனைச் சந்தேகப்பட்டுப் பிடித்து விடக்கூடாதே என்பதற்காக அவள் அவனைத் தொடர்ந்தாள்.
செழியன், இரண்டு குதிரைகளைத் தயார் செய்து நிறுத்தினான். தாமரை ஒரு குதிரையில் ஏறிக் கொண்டாள்.
இரு குதிரைகளும் மரமாளிகையைத் தாண்டிச் செல்லுகிற காட்சியைக் கொந்தளிக்கும் நெஞ்சத்துடன் செந்தலையார் பார்த்துக் கொண்டு நின்றார்! அவர் உள்ளத்தில் பெரும் புயல்!
'இந்த அரச குடும்பத்தின் மேன்மைக்காக எவ்வளவு சிரமங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். சோழனுடன் நடந்த போரில், களத்தில் தன்னந்தனியாகச் சிக்கிக் கொண்ட இருங்கோவேள் மன்னனை, உயிரைப் பணயமாக வைத்தல்லவா காப்பாற்றினேன்? இந்த தள்ளாத வயதிலும் வேளிர்குலத்து மக்களின் வெற்றியொன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இரவு பகல் அதே சிந்தனையாக உழன்று கொண்டிருக்கும் என்னைப் பார்த்து மிக அவசரப்பட்டு பேசிவிட்டாளே இந்த இளம் பெண்! சே சே! இவ்வளவு உழைத்தும் என்ன பயன்?' என எண்ணியவாறு இருட்சிறையின் கதவை நோக்கினார். அது பூட்டப் பட்டுக் கிடந்தது. சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்தார். இருட்சிறையின் காவலன் அப்போதுதான் வந்து கொண்டிருந்தான்.
'இந்தச் சிறையின் சாவிகளில் ஒன்று உன்னிடமிருக்கிறதல்லவா?" எனக் கேட்டார்.
"இருக்கிறது" என அவனும் தலையசைத்தான்.
பிறகு அமைச்சரின் உத்தரவுப்படி சிறை திறக்கப்பட்டது. செழியனைக் காண்பதற்கு மிக ஆவல் கொண்டவராக அமைச்சர் உள்ளே நுழைந்தார். அமைச்சருக்கு அங்கே காத்திருந்தது வெறும் ஏமாற்றந்தான் செழியனைக் காணவில்லையென்றதும் அவருக்குத் தூக்கிவாரிப் போட்டது. 'ஓ' வென்று கத்தினார். கிழப்புலியின் உறுமலைப் போலிருந்த அந்தக் கதறல் கண்டு மரமாளிகையே அதிர்ந்தது. ஒரு நொடிப் பொழுதில் மரமாளிகையில் உள்ள வீரர்கள் அனைவரும் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள்.
"செழியன் தப்பி விட்டான்; தாமரையை ஏமாற்றி அவளுடன் போய்க் கொண்டிருக்கிறான். விடாதீர்கள்; பிடித்துக் கொண்டு வாருங்கள்!" என்று கத்தினார்.
செழியனைக் காணவில்லை என்றதும் அவருக்குத் தாமரையின் மீதுதான் சந்தேகம் ஏற்பட்டது. தாமரையுடன் சென்ற வீரன்தான் செழியனாக இருக்க வேண்டுமென்று அவர் முடிவு கட்டிக் கொண்டார். அவரது கட்டளை பிறந்ததும் குதிரைகள் மரமாளிகையை விட்டுப் பறக்க ஆரம்பித்தன. செந்தலையாருக்குக் குழப்பமும் கிலியும் அதிகமாயின.
இருங்கோவேள் மன்னரின் துணைவியோ எதிரியின் கோட்டைக் குள்ளேயே பிணமாகி விட்டாள். அவள் சவத்தைக் காணச் செல்கின்ற தாமரையும் புகார் அரண்மனையிலே சிக்கி விடமாட்டாள் என்பது என்ன நிச்சயம்? எதிர் காலத்தையாவது ஏற்றம் மிக்கதாகச் செய்ய வேண்டும் என்று நடுக்காட்டிலே வாழ்க்கை நடத்துகின்ற வேளிர்குடிக்கு மீண்டும் கடுமையான சோதனைக் காலம் துவங்கிவிட்டதோ என்று நெஞ்சிலே முளைவிட்ட எண்ணத்தைத் தொடர்ந்து அவரது தளர்ந்துபோன உடல் தள்ளாடத் துவங்கியது.
இருங்கோவேள் மன்னன் வந்தால் என்ன பதில் சொல்லுவது? 'செழியன் எங்கே?' என்று சிங்கநாதம் செய்கின்ற நேரத்தில் அமைச்சராகிய அவர் என்ன விளக்கம் தர முடியும்? இழந்த நாட்டை மீட்கப் 'பணயப் பொருளாக' அல்லவா அவன் செழியனைப் பயன்படுத்தக் கருதினான்? 'சிறகை ஒடித்துப் பறவையைக் கொடுத்தேன்; அதையும் பறக்க விட்டுவிட்டு நிற்கிறீர்களே! இங்கிருந்த பாதுகாப்பெல்லாம் பாழ்பட்டுப் போயிற்றா? அல்லது கொஞ்ச நஞ்சம் இருக்கிற என் மானத்தையும் போக்கி விடுவதுதான் உங்கள் எண்ணமாக ஆயிற்றா?' என்று தோல்வியால் புண்ணாகிக் கிடக்கின்ற இருங்கோவேள் புலம்பத் துவங்கிவிட்டால் என்ன செய்வது?
செந்தலையாரின் இருதயம் அடுப்பு உலைபோல் கொதிக்க ஆரம்பித்துவிட்டது.
தாமரை, செழியன் இருவரும் சென்ற குதிரைகள் மிக விரைவில் பூம்புகாரை அடைய வேண்டுமென்ற நோக்கத்துடன் நாலுகால் பாய்ச்சலில் சென்று கொண்டிருந்தன.
தனக்கு இணையாகத் தாமரையும் குதிரைச் சவாரி செய்திடும் காட்சி கண்டு செழியன் வியப்படைந்தான்.
சிறிது தொலைவு காட்டைக் கடந்ததும் தங்களுக்குப் பின்னால் ஏராளமான குதிரைகள் வரும் குளம்படிச் சத்தம் கேட்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள். இருவரும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் குதிரைகளை ஓட்டத் தொடங்கினர். இருங்கோவேள் மன்னனின் குதிரைப் படைகள் அந்தக் காட்டையே அழிப்பதுபோல் வெள்ளமென வந்து கொண்டிருந்தன. செழியனையும் தாமரையையும் தேடி!
முத்துநகையைச் சந்தித்துக் காதல் கொண்ட அருவியைத் தன் குதிரை கடந்து கொண்டிருப்பதைப் பார்த்துத் தாமரை சிந்தனையை எங்கேயோ செலுத்தினாள். அது ஒரு கணம்தான்: அதற்குள் பின்னே வரும் குதிரைப் படையின் ஒலி, அவளை வேகமாகத் துரத்திடத் தொடங்கியது.
தாமரை! படைகள் அருகே வந்துவிட்டன. இன்னும் வேகமாக...!" என்று கூவியவாறு குதிரையில் பறந்து கொண்டிருந்தான் செழியன்.
தாமரையும் தன் குதிரையைக் கடுவேகமாக விரட்டும் முயற்சியில் தீவிரங்காட்டினாள். சிறு சிறு பாறைகளை யெல்லாம் அலட்சியமாகத் தாண்டியும், ஏறியும் கடந்து சென்று கொண்டிருந்த தாமரையின் குதிரை, ஒரு குழியில் காலை விட்டுத் 'தடா'ரென்று கீழே விழுந்தது. விழுந்த ஒலி கேட்டுச் செழியன் ஓடி வந்தான்.
குதிரை எழமுடியாமல், கால் ஒடிந்து போயிற்று, தாமரைக்குப் பலமான அடியேதும் இல்லை; செழியன் தவித்தான், செய்வதறியாமல்! அதற்குள் குதிரைப் படைகள் நெருங்கி வரும் ஒலிவேறு அவனைத் திடுக்கிடச் செய்தது. யோசிப்பதற்கு நேரமில்லை. தாமரையைத் தூக்கித் தன் குதிரையில் உட்கார வைத்துக் கொண்டு குதிரையைத் தட்டிவிட்டான். இருவரையும் சுமந்தவாறு அந்தக் குதிரை முன்னிலும் வேகமாகப் புறப்பட்டது. பின்னால் வரும் குதிரைப் படையின் ஒலி மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. இப்போது அவர்கள் தொடர்ந்து வருவதைக் கண்ணாலும் பார்க்க முடிந்தது.
"தாமரை! என்னைப் பலமாகப் பிடித்துக் கொள்! நான் இன்னும் வேகமாகப் போகப் போகிறேன்!" என்றான் செழியன்.
தாமரையும் அவ்வாறே செய்தாள். குதிரை, காற்றைக் கிழித்துக் கொண்டு ஓடிற்று. ஆபத்தான கட்டத்தைக் கடந்து விட்டால் போதுமென்று எண்ணியவனாகச் செழியன் உயிரை மறந்து குதிரையை ஓட்டிக் கொண்டிருந்தான்.
அதோ வந்து விட்டார்கள், படை வீரர்கள்-
அய்யோ-பிடித்து விடுவார்கள்-
அகப்பட்டுக் கொண்டார்கள் - என்று நினைக்கும் நேரத்தில் காட்டைத் தாண்டி வெளியேறிவிட்டது செழியனின் குதிரை.
தொடர்ந்து வந்த குதிரைப் பட்டாளம். காட்டைத் தாண்டுவதற்கு அஞ்சி -அதற்கு மேல் செல்வது இருங்கோவேள் மன்னரைக் காட்டிக் கொடுத்ததாக ஆகுமெனக் கருதி நின்றுவிட்டது.
செழியனை மிகப் பலமாகப் பிடித்தவாறு குதிரையில் அமர்ந்திருந்த தாமரையை இனந்தெரியாத வெட்கம் துளைத்தது என்றாலும், அவள் உள்ளத்தில் மண்டிக் கிடந்த வேதனை அதனையும் மீறி நின்றது.
குதிரை பூம்புகார்த் தலைநகரத்துக் கோட்டை வாயிலை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. பின்னால் தங்களை யாரும் துரத்தி வரவில்லையென்று தரிந்ததும் அவர்கள் பயணத்தின் வேகம் சற்றக் குறைந்தது. செழியன், தாமரையின் மீது மிக்க அனுதாபங்கொண்டு அவளுக்கு ஆறுதலாகப் பேச முயன்றான்.
"என்னால் உனக்கு வேதனைதான்! சிறையிலிருந்து என்னை மீட்டு வந்த செய்தி காட்டு மாளிகையில் பரவி விட்டது. உன் அண்ணனுக்கும் தெரிந்து விட்டால் அவ்வளவுதான். என்னை மன்னித்துக் கொள்வாயா?" செழியனின் அன்பு கலந்த மொழிகள் அவளுக்கு மிக ஆதரவு தரக்கூடியனவாய் அமைந்தன. அண்ணியின் மறைவு பற்றிய சிந்தனையுடன் போட்டி போட்டுக் கொண்டு செழியனைப் பற்றிய எண்ண ரேகைகள் அவள் இதயத்தில் நெளிந்து காட்டின. முதல் தடவையாக அவள் இவனைச் சந்தித்தபோது தன்னை முத்துநகையின் ஆண் வேடத்துக்கு அடிமையாக்கிக் கொண்டிருந்தாள். அடுத்த சந்திப்பில் செழியன், தன்னை விரும்புகிறவன் என்பது மட்டுமல்ல. தனக்கு அத்தான் முறை கொண்டவன் என்ற தெளிவும் பெற்றுவிட்டாள். அந்தத் தெளிவினைத் தொடர்ந்து மனம் விட்டு எதுவும் பேச முடியாமல் புகார் நகரத்துப் பயணம் குறுக்கிட்டுவிட்டது. பயணத்தினிடையேயும் அந்தப் பேச்சுக்கு இடமேயில்லாது போயிற்று.
ஆனால், இருவர் நெஞ்சத்திலும் ஏதோ ஓர் ஊமை நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது என்பது மட்டும் உண்மை. அந்த நாடகத்துக் கதாபாத்திரங்கள் ஊமைகள் மட்டுமல்ல! நொண்டிகள். முடங்கள், குருடுகள், செவிடுகள் என்று கூடச் சொல்லலாம்.
பகைவனைச் சிறையிலிருந்து மீட்டு, பகைவனின் வீட்டிலிருக்கும் அண்ணியின் உருவைக் காண்பதற்குப் பகைவனின் தோளைத் தழுவி யவாறு செல்லுகிறோமே- இதைப் பற்றி அண்ணன் என்ன கருதுவார் என்று தாமரையால் நினைக்காமல் இருக்க முடியுமா? அவள் அதை அடிக்கடி நினைக்கிறாள் என்பதற்கு அடையாளமாகத் தான்போலும் அவள் கண்களிலிருந்து நீர் பெருகிக் கொண்டேயிருந்தது.
பூம்புகார் நகரத்துக்குள்ளே குதிரை நுழைந்து விட்டதை இருவரும் உணர்ந்தனர். வீதியில் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்த தைச் செழியன் கவனித்தான். அந்தக் கூட்டத்திலே ஆண்களும் பெண்களும் நிறைந்திருந்தனர். முதியவர்களும் கவலையுடன் நின்று கொண்டு அங்கு பேசப்படும் விஷயங்களில் முழுக் கவனத்தையும் செலுத்தினர். கூடிப் பேசுவோர் முகங்களில் தோன்றிய பரபரப்பையும் ஆத்திர உணர்ச்சியையும் செழியன் புரிந்துகொள்ளாமல் இல்லை.
நகரத்து மக்களை இப்படி ஒரு விசித்திரமான செயலில் ஈடுபடுத்தியது என்னவாக இருக்கும் என்பது தாமரைக்குத் தெரியாதா என்ன? மன்னனைக் கொல்ல முன்வந்தாள் மாதரசி - அவளும் மகுடம் பறிக்கப்பட்ட எதிரியின் மனைவி! சரித்திரம் எப்போதாவது சந்திக்கின்ற அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடைபெற்றவை இன்னும் நம்பத் தகாதவை களாக இருக்கின்றனவே! கொல்ல வந்த கோமகள் பிணமாகி விட்டாள். அவள் சவத்தைக் காண, சதிகள் ஆயிரம் புரிந்து கொண்டிருக்கும் மாற்றானுக்கு அழைப்பு! இவை எல்லாம் கணநேரம் தாமரையின் கருத்தில் நிழலாட்டம் போட்டு மறைந்தன. சோழ மண்டலத்தின் கொதிப்புக்குக் காரணம் சுலபத்தில் புரிந்து விட்டது அவளுக்கு.
இருவரும் தனித்தனியே சிந்தனை செய்தபடியே சென்று கொண்டிருந்தனர்.
ஒரு மண்டபத்தினருகே நின்ற கூட்டத்தினர் சிலர் பேசிக் கொள்வதை மறைந்திருந்து கேட்கக்கூடிய வசதி செழியனுக்கு அமைந்தது. குதிரையில் இருந்தவாறே இருவரும் அவர்களின் பேச்சுக்குக் காது கொடுத்தனர். கரிகால் மன்னன், இருங்கோவேளுக்குப் பூம்புகாரில் பயமின்றி நுழைவதற்கு அனுமதி அளித்திருப்பதைக் கண்டு அதிருப்தி அடைந்தவர்கள்தான் அவர்கள் என்பதை இருவரும் தெளிவாக அப்போது உணர்ந்து கொண்டனர்.
"இருங்கோவேள் தன்னந்தனியாகப் புகார் நகரத்தில் நுழைந்து கோட்டைக்குள் பிரவேசிக்கும்போது நாமே அவனைச் சிறைப்பிடித்து விட்டால் என்ன?" என்று துடிப்புள்ள ஓர் இளைஞன் முழங்கினான்.
"சேச்சே ! அதெல்லாம் கூடாது. போர்க்களத்திலே கூட அறங்காக்கும் உத்தமர் என்று பெயரெடுத்த நமது கரிகாலர் ஆட்சிக்கு அப்படி யெல்லாம் களங்கம் உண்டாக்கக் கூடாது. எப்போதும் எதிரிகளை அழிப்பதைவிட அவர்கள் நெஞ்சில் நிறைந்திருக்கும் நாச நினைவுகளை எல்லாம் தலைகுனியும்படி செய்து விட்டால் அதுவே பெரிய வெற்றி அதைத்தான் தமது மன்னர் பெருமான் பெரிதும் விழைகிறவர்" என ஒரு முதுபெருங்கிழவர் மெல்லிய குரலில் அறிவுரை புகன்றார்.
சோழப் பேரரசின் பண்பு கண்டு தாமரை தலை தாழ்த்தியவாறு அமர்ந்திருந்தாள். அவள் நிலை கண்ட செழியன், "என்ன கீழே பார்க்கிறாய்? சோழ மாதாவின் மேனி எவ்வளவு கொதிக்கிறது என்று பார்க்கிறாயா? தேவையானால் கீழேயிறங்கி எங்கள் அன்னையின் நெற்றியைத் தொட்டுப்பாரேன்! அவள் எவ்வளவு துயரத்தில் ஆழ்ந்திருக்கிறாள் என்பது உனக்கு நன்றாக விளங்கும்!" என்று சற்று பதறியவாறு கூறினான்.
தாமரை அவனுக்குப்பதில் கூறவில்லை. கொஞ்ச நேரம் மௌனமாக இருந்துவிட்டு, 'கோட்டைக்குள்ளே போகலாமா?” என்று கேட்டாள்.
செழியனும் குதிரையை அந்த இடத்தைவிட்டுத் திருப்பினான் வழிநெடுகப் புகார் நகரத்து மக்களின் புயல் நெஞ்சத்தைக் கண்டவாறு அவர்கள் கோட்டை வாயிலை அடைந்தனர்.
கோட்டையில் பலமான காவல் இருப்பது கண்டு தாமரை திகைத்தாள். குதிரையைவிட்டு இறங்கிய, செழியன், கோட்டை வாயிற்காப்போனிடம் சென்று வணங்கினான். வாயிற் காப்போன் அவனருகே வந்து தனது வலுத்த மீசையைத் தடவிக் கொண்டே விவரம் விசாரிக்கலானான். செழியன் வாயிலோனிடம் விளக்கமுரைத்திடத் தொடங்கினான்.
"இதோ வந்திருப்பவர்கள் இருங்கோவேள் மன்னரின் தங்கை தாமரைச் செல்வியார் ஆவார்கள். அண்ணனின் துணைவி வேளிர்குல அரசி பெருந்தேவியாரின் மறைவு கேட்டு ஓடி வந்திருக்கிறார்கள். இருங்கோவேள் மன்னர் கோட்டையில் இல்லாத காரணத்தாலும், அவர் எங்கு சென்றுள்ளார் எனத் தெரியாத காரணத்தாலும் அவருக்கு அரசி இறந்த செய்தி அறிவிக்கப்படவில்லை. அதனால் இளவரசி தாமரைச் செல்வியார் மட்டும் அரசரின் நிபந்தனைக்கு உட்பட்டுத் தன்னந்தனியாக வந்துள்ளார்கள். அவருக்குப் பாதுக்காப்பாக நான் வந்திருக்கிறேன். இந்தச் செய்தியை மன்னருக்கு தெரிவித்து எங்களை அரசியாரின் சவம் இருக்குமிடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டுகிறோம்!"
செழியனின் வேண்டுகோளைக் கேட்டதும் வாயிலோன் திகைப்புற்றுத் தாமரையை மாறி மாறிப் பார்த்துத் தனக்குத்தானே வியந்து கொண்டான். இருங்கோவேள் எனும் கொடுமைக்காரனுக்கு இப்படியொரு சாதுவான தங்கை இருக்கிறாளா? - என்று வாயிலோன் சந்தேகப்பட்டான். மன்னரிடம் தகவல் உரைப்பதாக கூறிவிட்டு அவன் கோட்டைக்குள்ளே ஓடினான்.
செழியனும் தாமரையும் கோட்டைக்கு வெளியே உள்ள ஓர் உயர்ந்த மண்டபத்துப் படிகளில் அமர்ந்து கொண்டனர். உள்ளே சென்ற வாயிலோன் எப்போது வருவானோ - வந்து என்ன பதில் கூறுவானோ என எண்ணியபடி இருவரும் கோட்டை வாயிலைப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தனர்.
கோட்டைக்குள் சென்ற காவலன், கரிகால் மன்னனைத் கோட்டைக்குள்
தேடியலைந்து கடைசியில் அவன் வளவன் படுத்திருக்கும் மாளிகையில்
இருப்பதாக அறிந்து அங்கே சென்றான். உழவர் குடிமகன் வளவனின்
அருகேயிருந்த கரிகால் சோழன் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிக்
கொண்டிருந்தான். வளவனுக்கு உடல்நிலை சரியாக வரும்போது
திடீரென ஆபத்தான மாறுதல் தோன்றியதாகச் செய்தி வந்து, கரிகாலன்
அவன் இருந்த இடத்துக்கு வந்திருந்தான்.
"குணமான பிறகு மயக்கம் வருவதற்குக் காரணமென்ன?" என்று அரசன், மருத்துவர்களைக் கேட்டான்.
"வளவனின் உள்ளத்தில் ஏதோ கவலை சூழ்ந்திருக்கிறது; அதன் எதிரொலிதான் இந்தத் திடீர் மாறுதலே தவிர, உடல் நிலையில் எந்தக் கோளாறும் இல்லை!" என்று மருத்துவர்கள் கூறினார்கள்.
அரசன், வளவனின் மனப்போராட்டத்தைத் தெரிந்து கொள்ள எவ்வளவோ முயன்றான்; முடியவில்லை. "அரசருக்கு யாராலும் ஆபத்து ஏற்பட்டுவிடக் கூடாதே என்ற கவலையாய் இருக்கலாம்" என மருத்துவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
அதனையொட்டி அரசன், வளவனைத் தழுவியவாறு "உன்னைப் போன்ற உத்தமர்களின் நல்ல இதயமெல்லாம் என் பக்கம் இருக்கும்போது எனக்கு எப்படி இன்னல் வரும்? வராது!" என்று திடமாகச் சொன்னான்.
அந்தச் சமயத்தில் அங்கு வந்த காவலன், இருங்கோவேளின் தங்கை தாமரை, கோட்டை வாயிலில் காத்திருக்கும் செய்தியைக் கூறினான். வளவனின் முகமும் மாறியது. "என்ன! இருங்கோவேளின் தங்கையா? அய்யோ! இதில் ஏதாவது சூழ்ச்சி இருக்கப் போகிறது- வேண்டாம்! அவளை அனுமதிக்காதீர்கள்" என்று கத்தினான் வளவன்.
"ஆமாம்; அவளை நான் அனுமதிக்கப் போவதில்லை" எனக் கூறியவாறு கரிகால் மன்னன் அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டான். வாயிலோனும் பின்னாலேயே வந்து கொண்டிருந்தான்.
மன்னன், தன் மாளிகைக்குள் நுழைந்தான். வாயிலோன் வெளியில் நின்றான். உள்ளே சென்ற மன்னன், திரும்பி வந்து காவலனைப் பார்த்து, “நான் வளவன் மனத்தைக் கஷ்டப்படுத்தக்கூடாது என்பதற்காக வேளிர் குல இளவரசியை அனுமதிக்க மாட்டேன் என்று கூறினேன். நீ, உடனே இளவரசியை பெருந்தேவியின் சவம் இருக்குமிடத்திற்கு அழைத்துச் செல்!' என உத்தரவிட்டான். வாயிலோனும் மன்னனுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டுக் கோட்டை வாயிற்புறம் ஓடி வந்தான்.
அங்கு அவன் வருகைக்காகக் காத்திருந்த இளவரசியும், செழியனும் அனுமதி கிடைத்த செய்தியறிந்து ஆறுதல் பெற்றனர்.
கோட்டை வாயிலின் பெருங்கதவுகள் திறக்கப்பட்டன.
உள்ளே இருபுறமும் படைவீரர்கள் அணிவகுத்து நின்றனர்.
அந்த அணிவகுப்புக்கு இடையே தாமரையும், அவளுக்குப் பின்னே செழியனும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
வேளிர்குல இளவரசி புகார் அரண்மனைக்குள் வந்து விட்டாள் என்ற செய்தி தலைநகரமெங்கும் பரவிவிட்டது. அவளுடன் ஒரு பாதுகாப்பு வீரனும் வந்திருக்கிறான் என்ற செய்தியறிந்த மக்கள், அவனால் என்ன ஆபத்து ஏற்படப் போகிறதோ என்று கவலையுடன் பேசிக் கொண்டார்கள். சோழப் பெருங்குடி மக்களின் எண்ணத்தை மதிக்காமல் பகைவனுக்கும் அவனுடைய குடும்பத்துக்கும் தேவைக்கு மீறிய மரியாதை கொடுத்துவிட்டார் மன்னர் என்ற குற்றச்சாட்டு, பரவலாகப் பயணம் நடத்திக் கொண்டிருந்த வேளையில், தாமரை அரண்மனைக்குள் அழைத்துச் செல்லப்பட்டாள் என்ற தகவல், மேலும் மக்களிடையே அதிருப்தியைத் தூண்டக் காரணமாகி விட்டது. சரியாகவோ தவறாகவோ அதிருப்தியாளர்கள் வளர வளர அவர்கள் மத்தியிலே அவர்களை நடத்திச் செல்லும் தலைவன் ஒருவன் தோன்றிவிடுவான் என்பதுதானே வரலாறு!
அதற்கேற்பப் பூம்புகார் நகரத்தில் கொந்தளித்துக் குமுறிக் கொண்டிருந்த மக்களிடையேயும் ஒரு தலைவன் கிளம்பி விட்டான். அவன், சிதறிக் கிடந்த அதிருப்தியாளர்களையெல்லாம் வெகு விரைவில் ஒன்று சேர்த்துவிட்டான். அவன் பேச்சு, கவலையால் துவண்டு போனவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வல்லமை கொண்டதாய் இருந்தது: அவன் உருவம் மற்றவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதாய் அமைந் திருந்தது. அவனது கடைசி மூச்சுப் பிரியும்போது கூடக் கரிகால் மன்னருக்காகப் பணிபுரிவதையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருப்பான் என்று பெருமக்கள் அவனுக்குப் பாராட்டுரை வழங்கினர்.
தலைநகரத்து மூலைமுடுக்குகளில் எல்லாம் அவன் தலை தெரிந்தது, குரல் கேட்டது, மக்களின் ஆத்திர உணர்ச்சிக்கு அமைதியான முறையில் வேலிகட்டிக்கொண்டிருந்த முதியவர்கள் எல்லாம் தங்கள் முயற்சி சரிந்ததாக எண்ணி மூலையில் ஒடுங்கினர்.
"கொலைகாரியின் பிணத்துக்கு ராஜமரியாதைகளா? கடைசித் தரிசனம் காண்பதற்குப் பழிகாரனுக்கு அழைப்பா? எதிரியின் தங்கைக்கு அரண்மனையில் வரவேற்பா? இவையென்ன நாடாளும் மன்னரின் கோட்டைக் கொத்தளங்களா? அல்லது காடாளும் முனிவர்களின் ஆசிரமக் குடிசைகளா? அறநெறி தேவையானதுதான்! அது மக்களைக் கோழையாக்குகிற அளவுக்குத்தேவையா? நாட்டைப் பகைவனிடம் காட்டிக் கொடுக்கிற அளவுக்குத் தேவையா? துரோகிகளுக்கு இடம் தருகிற அளவுக்குபோதிக்கப்படும்அறநெறி, தற்கொலைக்காகத்தயாரிக்கப்படும் நஞ்சோடு ஒப்பிட வேண்டிய ஒன்றாகும். கொடியவனின் தங்கை. கோட்டைக்குள்ளே நுழைந்து விட்டாள்! இருங்கோவேளும் திறமைசாலி தான். முதலில் மனைவியை அனுப்பினான். இப்போது தங்கையை அனுப்பியிருக்கிறான். இத்தகைய சூட்சுமத்தைக் கூடப் புரிந்து கொள்ளாமல் அவர்களுக்கு ராஜமரியாதை கொடுக்கப்படுகிறதென்றால் இதை நாம் எதிர்த்தே தீர வேண்டும்!"
-என்று அந்தத் தலைவன் முழங்கினான். "ஆமாம்: எதிர்த்தே தீர வேண்டும்!" என்று மக்களும் முழங்கினார்கள்.
"கரிகால் மன்னரைக் காப்பாற்ற - கரிகால் மன்னரின் கொள்கையை எதிர்ப்பது குற்றமாகாது!" என்று அவன் தன் செயலுக்கு விளக்கமுரைத்து எழுந்து விட்டான்.
காலையில்தான் முளைத்தான். மக்களின் எழுச்சி, மாலை நேரத்திற்குள் அவனைத் தலைவனாக்கிவிட்டது. கரிகால் மன்னரைக் காப்பாற்றியாக வேண்டும். இருங்கோவேள் குடும்பத்தாருக்குத் தரப்படும் மரியாதையால் நாட்டுக்கு ஏற்படும் அவமானத்தைத் துடைத்தாகவேண்டும். இந்த இருபெரும் இலட்சியங்களை முன் வைத்து மக்கள் படையைத் திரட்டிவிட்டான் அந்தத் திறமைமிகுந்த தலைவன். அவன் பெயர் கோச்செங்கணான்.
அந்தப் பெயர் திடீரென ஒரே நாளில் பரவிவிட்டது. அவன் நாவன்மையால், மக்கட் பெருவெள்ளம் பொங்கி எழுந்து விட்டது; அவனது அயராத உழைப்பால்! அலைமோதி நிற்கும் அந்த மக்கட் கூட்டத்தைத் தேக்கி வைத்து வீணாக்கிவிடாமல் உடனடியாகச் செயல்பட வேண்டுமென்று அந்தப் புதிய தலைவன் துடித்தான்; அதற்கான திட்டமொன்றையும் தயாரித்தான்.
அந்தத் திட்டம் மிக ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டது. தீப்பொரி யெனக் காட்சி தந்தவர்கள் அவன் திட்டத்தை வெளியிட்டதும் தெளிந்த நீரென அமைதியாகக் காரியமாற்றத் தொடங்கினர். திட்டம் பற்றி ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டால்கூட ரகசியங்கள் வெளிப்பட்டு விடுமென்று அஞ்சி வாய்மூடி மௌனிகளாக மக்கள் கலைந்து சென்றனர். ஒரே இடத்தில் நின்று உரத்த குரலில் அவன் திட்டத்தை ஒலிபரப்பவில்லை. ஏழெட்டுத் துணைத்தலைவர்களிடம் காதில் ரகசியமாகக் கூறினான். அவர்கள் மற்றவர்கள் காதில் திட்டத்தைப் போட்டார்கள். சற்று நேரத்தில் ஒருவர் காதில் ஒருவர் பேசத் தொடங்கினர். திட்டத்தை ஆதரிப்பதாக அனைவரும் கரங்களை உயர்த்தினர்.
திட்டத்தைக் கேள்வியுற்றதும் ஊமையாகி விட்டவர்களைப் போல அந்த இடத்தினின்றும் வேகமாக அகன்றனர். அவர்கள் முகத்திலே புதியஒளி தோன்றியது. கவலை ரேகைகள் மறைந்து விட்டன. நடையில் தெம்பு காணப்பட்டது. தன் முயற்சி வெற்றி பெறும் என்ற திருப்தியுடன் கோச்செங்கணான் புன்னகை புரிந்தான்.
கோட்டைக்கு வெளியே திரண்டெழும் மக்கள்சக்தி பற்றிய விவரம் எதுவும் கேள்விப்படாத மன்னன் கரிகாலன், வேளிர்கால இளவரசியை வரவேற்று உபசரிப்பதற்காக அரசி பெருந்தேவியின் சடலம் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்குப் புறப்பட்டான்.
கரிகாலனின் பெரும் உள்ளத்தை மனத்துக்குள் பாராட்டியவாறு தாமரை அரசமரியாதைகளை சோகப் பெருமூச்சுடன் ஏற்றுக் கொண்டு நடந்து சென்றாள். அவளுக்குப் பின்னே செழியன் பணிவுடன் நடந்தான். இருமருங்கிலும் நின்ற வீரர்களுக்கு உள்ளத்திலே அதிருப்தி புகைந்து கொண்டிருந்தாலும் தம் காவலனின் கட்டளையைப் புறக்கணித்தல் ஆகாது என்ற கடமையுணர்ச்சி கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தது. தாமரைக்குச் சிரம் தாழ்த்தி அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ளும் வகையில் அந்த அணிவகுப்புகள் அமைந்தன.
அவைகளையெல்லாம் பார்க்கும்போது தாமரைக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. வாய்விட்டுக் கதறி அழுதுவிடக் கூடாதே என்ற பயத்தில் சமாளித்துக் கொண்டு நடந்தாள். இறுதியில் அரசி பெருந்தேவியின் சவம் இருக்குமிடம் வந்து சேர்ந்தாள்.
தாமரையின் சோகம் அணையைப் பிளந்து கொண்டு பீறிட்டெழுந்தது. 'ஐயோ அண்ணி!" என்று கதறியவாறு அண்ணியின் உருவத்தின் மீது விழுந்து புரண்டு அழுதாள்.
அக்காளின் காலைக் கட்டிக் கொண்டு அழவேண்டும் போலிருந்தது செழியனுக்கு! அவன் என்ன செய்வான் - பரிதாபம்! தான் யார் என்று அங்கு காட்டிக் கொள்ளக்கூடாதே! அவன் கண்களில் வழிந்த நீரைக் கண்ட மற்றவர்கள் “அரசியின் பிரிவுக்காக ஒரு போர் வீரன் எவ்வளவு துக்கப்படுகிறான்! என்று தங்களுக்குள்ளாகவே நினைத்துக் கொண்டார்கள்.
அண்ணியின் மூடிக்கிடக்கின்ற இமைக் கதவுகளை ஊடுருவி நோக்கினாள் தாமரை! அதற்குள்ளே உறைந்து கிடக்கின்ற மௌன விழிகள் ஒரு காலத்தில் என்ன என்னவோ பேசியிருக்கின்றன!
வேளிர்குடிக்கு அவள் மருமகளாக வந்த நேரத்தில் மகிழ்ச்சியை வெளியிட்டன அந்த விழிகள்! சிற்றரசர்தான் என்றாலும் இருங்கோவேளின் சிங்க நடையையும் அங்கங்கள் ஒவ்வொன்றிலும் வீரம் விளைந்த வெற்றித் தழும்புகளையும் கண்டு பெருமிதம் காட்டின. ஆனால் காட்டின் மத்தியில் அவர்கள் வாழ்க்கை நடத்தும் காலம் வந்த போது அந்த விழிகள்தான் எப்படி வேதனையைக் கொட்டின! ஏக்கத்தைப் பிரதிபலித்த அவைகளைக் கண்டு தன் விழிகளையே மூடிக் கொண்டிருக்கிறாள் தாமரை. முத்துக்களைத் தரையில் கொட்டி தன் அத்தானுடன் ஓடிவிளையாடுவாளே! ஓடும்போது வழுக்கி விழுவதைக் கண்டு விலாநோகச் சிரிப்பாரே மன்னர் - அதை நினைத்துக் கொண்டாளா? அல்லது தங்கத் தாலான சிங்கங்களாம் - அவற்றின் திறந்த வாயிலே காணப்படும் பற்கள் எல்லாம் வைரங்களாம். அத்தகைய கோலாகலமான சிங்காதனத்திலே அமர்ந்திருந்தவள் இன்று கரடுமுரடான பலகையிலே படுத்திருக்கும் சோகத்தை எண்ணி வருந்துகிறாளா? அல்லது பஞ்சு மெத்தை வேண்டாம். பட்டாடை வேண்டாம். பணிசெய்யும் ஆட்களும், அணி பூட்டும் பாவையரும் வேண்டாம், பரம்பரையின் பெயர் சொல்ல ஒரு குலக்கொடி - நாடிழந்தாலும் பரவாயில்லை; அந்தத் தாய்மைப்பாசமே என்னவென்று தெரியாது. பிள்ளைபெறும் பேற்றை இழந்து விட்டோமே - என்று வேதனைப்படுகிறாளா? கணவன் காட்டிலே திரிகிறான் களைப்போடு - ஏதேதோ நினைப்போடு திரும்புகிறான். ஓடிச் சென்று உபசரிக்க இயலாத வீட்டுக்காரியாக - நிரந்தர வியாதிக்காரியாக ஆகிவிட்டோமே - என்று மனத்திற்குள் அழுகிறாளா? பெருந்தேவியின் கண்கள் காட்டிய ஆழம் காணமுடியாத 'ஏக்க'த்திற்கு என்ன பொருள் காண்பது என்று புரியாது தவித்திருக்கிறாள் தாமரை, பலமுறை.
அந்தக் கண்கள்தாம் ஒரு நாள் நள்ளிரவில் பழி தீர்க்கப்பாய்கின்ற கொடுவேங்கைப் புலியின் இரத்தக் கண்களாகவும் மாறின. "என் ராஜாவின் இலட்சியமே என் இலட்சியம்" என்று படுக்கையிலிருந்து விழுந்து எழுந்த பெருந்தேவி, "சோழனைப் பழிவாங்கும் புதிய பலம் எனக்கு வந்துவிட்டது! என் நாயகரின் இலட்சியத்தை நிறைவேற்றுகிறேன்! கொண்டுவா குதிரையை!" என்று வெற்றி முழக்கமிட்டபோது அதே கண்களைக் கண்டு நடுங்கியிருக்கிறாள் தாமரை!
ஆனால் -இப்படி ஆயிரம் உணர்ச்சிகளை வெளிக்காட்டிய அந்தக் காந்தக் கண்கள் இன்று மூடிக் கொண்டனவே!
இப்படி எல்லாம் அவள் எண்ணித் தவித்துக் கொண்டிருந்தபோது, மன்னன் அடிமேல் அடி வைத்து, கவலையின் உருவாக அங்கு வந்து சேர்ந்தான். கரிகால் மன்னனைக் கண்ட தாமரை, அவனது காலடிகளில் வீழ்ந்து வணங்கினாள்.
அந்த நிகழ்ச்சி மன்னனின் நெஞ்சை நெகிழ வைத்து விட்டது. ளவரசியின் தோளைத் தொட்டுத் தூக்கி விட்டுக் 'கவலைகளைப் பகிர்ந்து கொள்வோம். என்னுடைய வருத்தமெல்லாம் உன் அண்ணியின் இலட்சியம் நிறைவேறவில்லையே என்பது தான்!" என்று தழுதழுத்த குரலில் கூறினான். அந்த வார்த்தைகளைக் கேட்டதும் தாமரை விம்மி விம்மி அழத் தொடங்கி விட்டாள்.
"உன் அண்ணனுக்காக காத்திருக்க வேண்டியதில்லையே? காரியங்களைத் தொடங்கலாமா!" என்று கேட்ட மன்னரிடம் தாமரை 'சரி'யென்று தலையசைத்த காட்சி அங்கு நின்ற அனைவரது உள்ளத்தையும் ஓர் உலுக்கு உலுக்கியது.
மன்னனின் கண் ஜாடைக்குக் காத்திருந்தவர்கள் பெருந்தேவியாரின் இறுதிச் சடங்குகளை நிறைவேற்றுவதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கினர்.
அப்போது ஒரு வீரன் பதைபதைப்புடன் அங்கு ஓடி வந்து மன்னனை வணங்கி, அவன் காதில் ஏதோ ஒரு ரகசியத்தைக் கூறிவிட்டு நடுங்கியபடி நின்றான்.
மன்னன் தன்னையுமறியாமல் "ஆ"! எனக் கத்திவிட்டான்! சூழ இருந்தவர்களைப் பார்த்து, "காரியங்கள் ஆகட்டும் - இதோ வந்து விடுகிறேன்!" என்று கூறியவாறு கரிகாலன் அதை விட்டு அகன்றதைத் தாமரையும், செழியனும் மற்றவர்களும் வியப்புடன் கவனித்தனர்.