ரோமாபுரிப் பாண்டியன்/21. புகார் நீங்கும் படலம்
21
புகார் நீங்கும் படலம்
மன்னன், நேரே தன் ஆலோசனை மண்டபத்துக்குச் சென்றான். அமைச்சர் பெருமக்களும் தளபதிகளும் வரவழைக்கப்பட்டனர். பெருங்குழப்பத்துடனே ஆலோசனை மண்டபத்தில் அமர்ந்திருக்கிற அரசனுக்குத் தங்களால் ஏதேனும் ஆலோசனைகள் வழங்க முடியுமா என்ற நல்ல எண்ணத்துடன் பாண்டிய நாட்டுத் தளபதி நெடுமாறனும் கடியலூர் உருத்திரங்கண்ணனாரும் அனுமதி பெற்று மண்டபத்திற்குள் வந்தமர்ந்தார்கள்.
பெருந்தேவியின் சடலத்தை அரச மரியாதைகளுடன் அடக்கம் செய்வதையும், இருங்கோவேளின் தங்கையை அனுமதித்ததையும் எதிர்த்து சோழ மண்டலமே பொங்கி எழுந்து விட்டது என்ற செய்தியைத் தொடர்ந்து, தலை நகரத்திலுள்ள மக்களனைவரும் தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தைக் கழுவிக் கொள்வதற்காக வெளியேறி விடப் போகிறார்கள் என்ற அதிர்ச்சி தரும் தகவல் கரிகாலனைக் கலக்கிவிட்டது. அந்தத் தீயெனத் தகும் செய்தியைத்தான் மன்னனிடம் ஒரு வீரன் ரகசியமாகச் சொன்னான். மந்திரிகளையும் தளபதிகளையும் விசாரித்த தில் செய்தி உண்மை என்றே உறுதிப்பட்டுவிட்டது. தலைநகரின் பல பகுதிகளைப் பார்வையிட்டு வந்த கடியலூர்ப் புலவரும் தான் கண்ட கேட்ட எதிர்ப்பு உணர்ச்சிகளை மன்னனிடம் வர்ணித்தார். இந்த நிலையை எப்படியாவது சமாளித்தே தீரவேண்டும் என்று பாண்டியத் தளபதி நெடுமாறன் கவலையுடன் கூறினான். தக்க யோசனைகளைக் கூற யாராலும் இயலவில்லை.
"மக்கள் இல்லாத நாட்டுக்கு நான் எதற்காக ஒரு மன்னன்?"
இந்தக் கேள்வி கரிகாலன் உள்ளத்திலிருந்து குமுறிக் கிளம்பிய போது ஆலோசனைக் கூடமே சோகத்தில் மூழ்கியது.
"உருவாகி வரும் மக்களின் உணர்ச்சி பற்றி இதுவரை என்னிடம் யாரும் தெளிவாகக் கூறவில்லையே ஏன்?" என்று தளபதிகள் மீது சீறிப் பாய்ந்தான்.
"இந்த அளவுக்கு நிலைமை முற்றும் என்று நாங்கள் எதிர்பார்க்க வில்லை!" என்றனர் தளபதிகள்.
"யார் அந்தக் கோச்செங்கணான்?"
இந்தக் கேள்வியைக் கரிகாலன் கேட்கும்போது முகத்தில் ஆத்திரத்தின் சாயலும் இருந்தது; அன்பின் தேக்கமும் தெரிந்தது. தன் மீதுள்ள அன்பினால் அல்லவா தலை நகரத்து மக்கள் இத்தகைய கொதிப்படைந்திருக்கிறார்கள் என்பதை அவன் புரிந்து கொள்ளாமல் இல்லை.
ஆனால், நாட்டு மக்கள் புரிந்து கொள்ளாத ஒன்றை அவன் யாரிடம் போய்ச் சொல்லுவான்? தமிழனுக்கு வீரம் எப்படிச் சொந்தமோ அதைப் போல் பெருந்தன்மையும் அவன் கூடப் பிறந்ததாயிற்றே! இருங்கோவேள் எதிரிதான். ஆனால் இன்று உயிர்த்துணைவியைப் பறி கொடுத்துவிட்டு நிற்கும் பரிதாபத்திற்குரியவன். பெருந்தேவி எதிரியின் மனைவிதான். ஆனால் அரச குடும்பத்தில் பிறந்து வாழ்க்கையில் பெரும்பகுதியில் கசப்பையே சுவைத்து, இன்று அந்த வாழ்க்கையை முடித்துக் கொண்டு விட்டாள்.
இந்த நிலையில் பெருந்தன்மையுள்ள எந்த மனிதன் தான் கரிகாலன் செய்ததை மகத்தான தவறு என்று சொல்ல முடியும்?
இருங்கோவேளைக் களத்தில் சந்திப்பதற்கும், கட்டிய மனைவியின் சவத்தருகிலே சந்திப்பதற்கும் வேறுபாடு இல்லையா? கரிகாலன் இப்போது மிகவும் இக்கட்டான நிலைமையில் சிக்கிக் கொண்டிருந்தான்.
சோழ மண்டலத்திலுள்ள மக்களின் தலைவனாக - தந்தையாக - அண்ணனாக - தம்பியாகப் போற்றித் துதிக்கப்படுகிற மாமன்னனை உறவாடிக் கெடுப்பதற்கான கடைசி முயற்சியில் இறங்கி இருக்கும் இருங்கோவேளி டத்திலே மரியாதை வைப்பதும், மதிப்புக் காட்டுவதும் சோழ நாட்டை அழிப்பது போலாகும் என்று கருதிவிட்ட பெருங்குடி மக்களின் இதயக் கொந்தளிப்பை எப்படி அடக்க முடியும் என்று தெரியாமல் தவித்துத் துடித்தான் கரிகாலன்.
ஒரு கணம் கண்களை மூடி நினைத்துப் பார்த்தான். பூம்புகார்த் தெருக்களிலே மக்கள் நடமாட்டமில்லை. வீடுகளிலே விளக்கொளி இல்லை. விருந்தினரை வரவேற்கத் திறந்து கிடக்கும் வாயிற்கதவுகள் எல்லாம் தூங்குமூஞ்சியின் இமைகளைப் போலக் கிடக்கின்றன. இல்லத்து எதிரில் ஏந்திழையர் தீட்டிய எழிற்கோலங்கள் இல்லை. பட்டினப்பாக்கமும், மருவூர்ப்பாக்கமும் மௌன நிலையில் இருக்கின்றன. திரைகடலின் நுரையொதுங்கும் காட்சியைச் சுவைத்தவாறு மணற் படுக்கையைவிட என்னுடையவனின் மடிப்படுக்கையே சுகமானது என்று கூறி அவ்வண்ணமே படுத்திருக்கும் காதலர்கள் காணப் படவில்லை.
மயில் தோகை, மிளகு மூட்டைகளை ஏற்றிச் செல்லும் வண்டிகளின் நடமாட்டம் தெருக்களில் இல்லை.
எங்கும் வெட்ட வெளி! எங்கும் இருட்டு! எங்கும் சோகம்! எங்கே திரும்பினாலும் இடுகாட்டு அமைதி!
தலைநகரத்து மக்களின் முடிவு நிறைவேறிவிட்டால் பூம்புகார் இப்படியல்லவா பொலிவிழந்து வாடும் என்று எண்ணி ஏங்கினான்.
அப்போது மற்றொரு செய்தி வந்துவிட்டது. "தலைநகரத்து மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளோடு ஆடு மாடுகளோடு தட்டு முட்டுச் சாமான்களோடு பயணத்திற்கான ஏற்பாடுகளைத் துவங்கிவிட்டார்கள். எங்கே போவது என்று இலட்சியம் எதுவுமில்லையாம். இங்கிருந்து வெளியேறினால் போதும் என்று முடிவு கட்டிவிட்டார்களாம்!"
இதைக் கேட்டதும் கரிகாலன் என்ன பாடுபட்டிருப்பான்; நாளைக்கு யாரை வைத்துக் கொண்டு நாட்டை ஆள்வது என்ற பிரச்சினை பிறகு இருக்கட்டும். நாட்டைத்தான் ஆள்கிறான், அல்லது நாடோடியாகப் போகிறான். அதுவல்ல இப்போது அவனுக்கு பெருங்கவலை! தமிழகத்து வரலாற்றில் இப்படியொரு நிகழ்ச்சி, தன் காலத்தில் நடைபெற்றதாகப் பொறிக்கப்பட்டுவிட்டால் என்ன செய்வது என்றே அவன் கலங்கினான். தான் செய்த காரியம் தவறுடையதாகவே இருந்தாலும் அதைச் சற்றுப் பொறுத்துக் கொள்ளக்கூடிய எண்ணம் இந்த நாட்டு மக்களுக்கு இல்லாமற் போய்விட்டதே என்ற வேதனை அவனைக் குடைந்தது.
நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிட முடியுமா?
பொழிலும் புனலும் சூழ்ந்த பூம்புகார்த் திருநகரைப் புழுதி மேடாக்கி விட்டு, அதன் உச்சியிலே உட்கார்ந்து கொண்டு புலம்பிக் கொண்டிருக்கப் போகிறோமா?
அல்லது நிலைமையை உடனே சமாளித்துச் சோழ மண்டலத்துப் பெருமையைக் காப்பாற்றப் போகிறோமா?
இந்தக் கேள்விக்கு ஆலோசனை மண்டபத்தில் இருந்தவர்கள் யாரும் ஒழுங்கான பதில் கூறவில்லை. ஆளுக்கு ஒரு யோசனை சொன்னார்கள். எதுவும் ஏற்றதாக அமையவில்லை.
அவர்கள் தாம் என்ன செய்வார்கள்? வரலாற்றில் சந்திக்காத ஒரு நிகழ்ச்சியல்லவா இது? எதிரிக்குப் பயந்து வீட்டைக் காலி செய்து புறப்பட்ட மக்களையும், நாட்டை விட்டோடிய மன்னர்களையும் பற்றித்தான் அவர்கள் அறிந்திருக்கிறார்கள். படையெடுத்து வருகிற எதிரியும் முதலில் பறையொலிப்பானாம்; "வில்லெடுத்து வாளெடுத்துப் புறப்பட்டு விட்டோம் நாங்கள். ஆகவே களம் காணக் கூசுகின்ற பெண்களே! நோய்நொடி பிடித்தாட்டும் பெரியோரே! உடனே புறப்படுங்கள். குழந்தைகளையும் மாடு கன்றுகளையும் அழைத்துக் கொண்டு!" என்பதாக. இவ்விதங்களில்தான் நகரைவிட்டு மாந்தர் கிளம்பியதாக அறிந்தவர்கள், பூம்புகாரிலே புதுமையை அல்லவா காண்கிறார்கள்! மன்னனின் செயல்மேல் வெறுப்புற்றல்லவா மக்கள் வெளியேறுகிறார்கள்! அதனால்தான் ஆற்றொணாத் துயரோடு, அலைமோதும் நெஞ்சோடு. 'எதைச் செய்வது' என்ற குழப்பத்தோடு நிற்கின்ற மன்னனுக்கு என்ன வழி சொல்வது?' என்று புரியாது தவித்தனர்.
உண்மையானவனின் பின்னால் ஐந்து பேர் செல்வார்கள் என்றால், அந்த உண்மையைப் புரியாதவன் பின்னால் ஐம்பது பேர் அரும்பிவிட்ட நிலையை எப்படித்தான் மாற்றுவது?
எல்லாரும் மௌனமாகச் சிந்தனையில் மூழ்கிய வண்ணம் சில வினாடிகள் பேசாமல் இருந்தார்கள்.
"மக்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து விட்டார்கள். சோகம் கப்பிய முகத்தினராய்ப் பிஞ்சுக் குழந்தைகளையும் பழுத்த கிழடுகளையும் அழைத்துக் கொண்டு அவர்கள் கூட்டம் கூட்டமாகப் புறப்பட்டுவிட்ட காட்சி எங்களை அழவைத்து விட்டது மன்னவா!" - என்று ஒரு பெருவீரன் சொல்லிக்கொண்டே தேம்பித் தேம்பி அழத் தொடங்கிவிட்டான்.
கனல் பறக்கும் கரிகாலனின் கண்களிலே நீர் முத்துக்கள் தலைகாட்டின. சற்று நேரம் ஒரே அமைதி.
"பெருந்தேவியின் சடலத்தை வேளிர்குல இளவரசியிடம் ஒப்படைத்து அவளைத் தலைநகரை விட்டு உடனே வெளியேற்றுவது தான் நிலைமையைச் சீர்படுத்த நல்ல வழி!" என்று நெடுமாறன் எடுத்துரைத்தான்.
'மாண்டுபோன அரசியின் பிணம் வெளியேற்றப்பட்டால் வெளியே றிக் கொண்டிருக்கும் மக்கள் நிச்சயம் திரும்பி வருவார்கள். மலர்ந்த முகத்தோடு' என்று அவன் நம்பியதில் தவறில்லை!
அவனது இந்த முடிவை அங்கிருந்த சிலர் வரவேற்கத்தான் செய்தனர். ஏனெனில் எவருமே அந்த யோசனையை மறுத்துப் பேசவில்லை. மௌனமாக மன்னனின் முகத்தை ஏறிட்டு நோக்கினர். வேறு வழி இல்லை! ஒத்துக்கொண்டு விடுங்கள்!' என்று வேண்டுகோள் விடுத்தது அவர்களுடைய பார்வை.
ஆனால் மன்னன் அதை ஏற்றுக்கொண்டதாகவே காணப்படவில்லை.
"வேறு எதுவும் நாம் செய் தற்கில்லை என்றே நான் கருதுகிறேன். தயவு செய்து இந்த முடிவுக்கு மன்னர் வந்துதான் தீரவேண்டும்" என்று சொன்ன நெடுமாறன் எழுந்து இங்குமங்கும் நடக்க ஆரம்பித்தான்.
'அய்யோ! அது மிகப் பண்பு கெட்ட செயல். தமிழ் இனத்துக்கே இழுக்குத் தரக்கூடிய செயல்” என்று உரத்த குரலில் கூவினான் மன்னன்.
ஆலோசனை மண்டபத்தில் அலைமோதிக்கொண்டிருக்கும் அரசனைப் பற்றியோ அமைச்சர் பெருமக்களைப் பற்றியோ கிஞ்சித்தும் கவலை கொள்ளாது கோச்செங்கணான் தலைமையில் பூம்புகாரே புறப்பட்டு மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது.
ஏன் தலைநகரமே நகர்கிறது? வெளியேறும் மக்களின் விளக்க மென்ன? அந்த விளக்கத்தில் வேடிக்கை மட்டுமல்ல, விவரிக்க முடியாத பாசமும் கலந்திருந்தது.
'கரிகால் மன்னரைக் காப்பாற்றுவதற்காக, கரிகால் மன்னரின் கொள்கையை எதிர்ப்பது குற்றமாகாது. துரோகிகளுக்கு இடம் தரும் அளவுக்குப் போதிக்கப்படும் அறநெறியைத் தற்கொலைக்காகத் தயாரிக்கப்படும் நஞ்சுக்கு ஒப்பிடலாம். நஞ்சு தலைநகரிலே புகுந்திருக்கிறது, வேளிர்குல இளவரசியின் உருவில்! இதை உணராதிருக்கிறார் அரசர். தலைநகரமே வெளியேறுவதன் மூலம் தான் சூழ்நிலைகளால் இருண்டு விட்ட மன்னரின் கண்ணோட்டம் தெளிவு பெறும்!' - இந்த விளக்கத்தின் அடிப்படையில், அதோ தலை நகரமே நகர்கிறது!
தள்ளாடித் தண்டூன்றி நடக்கவும் சக்தியற்ற முதியோர்கள் ஒரு நல்ல காரியத்துக்காகத் தங்கள் பேரிழப்பினைத் தாங்கிக் கொள்கிறோம் என்ற மன உறுதியுடன் நடந்து கொண்டிருந்தனர். வீடு-வீடு என்று வீட்டுக்குக் கடமை செய்து வாழ்ந்து கொண்டிருந்த மகளிர். தங்கள் கண்களில் வழியும் நீரைத் துடைத்துக் கொண்டு தாங்கள் வாழ்ந்த வீடுகளைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே தலை நகரத்து வீதிகளிலே நடைபோட்டனர். ஒன்றும் புரியாத குழந்தைகள், இந்திரவிழா போன்று ஏதோ ஒரு விழா திடீரென வந்துவிட்டதாக நினைத்துக் கும்மாளம் போட்டவாறு பெற்றோர்கள் பின்னே ஓடிக் கொண்டிருந்தார்கள். மக்களின் முன்னே ஆழ்ந்த சிந்தனையுடன் அமைதியான நோக்குடன் கோச்செங்கணான் நடந்து சென்றான், இன்னும் பல நாழிகைக்குள் தலைநகரின் எல்லையைக் கடந்து விடுவார்கள்.
இந்தச் செய்தியும் கரிகாலனுக்கு எட்டி விட்டது. படுகுழியில் வீழ்ந்த யானையெனத் தவித்தது அவன் உள்ளம்.
"பெருந்தேவியின் இறுதிச் சடங்கிற்கான எல்லா ஏற்பாடுகளும் முடிந்து விட்டன. எல்லாரும் அரசரின் வருகைக்காக தான் காத்திருக்கிறார்கள்." என்ற செய்தியுடன் ஒருவன் ஓடி வந்தான்.
என்ன செய்ய முடியும் கரிகாலன்?
ஆலோசனை மண்டபத்தில் இருந்த அனைவரும் ஒரு முகமாகக் கூறினார்கள். "மக்கள் இன்று போனால் நாளை திரும்பி வந்துதான் தீர்வார்கள். அவர்கள் எங்கே போய் இவ்வளவு சுகமாக வாழ முடியும்?" என்று!
கரிகாலன் பேச முடியாமல் வாயடைத்து நின்றான்.
"யோசிக்காதீர்கள் மன்னா! பூம்புகார்த் திருநகரில் வாழ்ந்தவர்களுக்கு வேறு நாட்டில் வாழ்வதற்கு மனம் வருமா? வளமான நாடுகள் பல இருந்தாலும் அங்கெல்லாம் இங்கு வாழ்ந்தவர்களுக்கு ஒத்து வருமா? இவர்களுக்கு எத்தனைபேர் இடங்கொடுத்துவிடப் போகிறார்கள்? விரைவில் ஓடி வரத்தான் போகிறார்கள்!" என்றார் ஓர் அமைச்சர்.
"ஆத்திரத்தில் முடிவுகள் செய்யக் கூடிய நேரமல்ல இது!" என்றான் மன்னன்.
"ஆமாம்-மன்னர் சொல்வதுதான் சரி!" என்றது ஒரு குரல். கரிகாலன் திரும்பிப் பார்த்தான்.
"மன்னிக்க வேண்டும்" எனப் பணிந்தவாறு உழவர் பெருந்தகை வளவன் நின்று கொண்டிருந்தான்.
வளவனைக் கண்ட மன்னன் திடுக்கிட்டான். "நீயா? உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் எதற்காக இங்கு வந்தாய்?" எனப் பரபரப்புடன் கேட்ட மன்னனிடம் வளவன் பணிவான குரலில், "தலைநகரில் ஏற்பட்டுள்ள குழப்பம் என் செவிக்கும் எட்டியது; மனக்கலக்கமுற்றிருக்கும் மன்னரைக் காண வேண்டும் போலிருந்தது. அதனால்தான் ஓடிவந்தேன்" என்று பதிலளித்தான்.
ஓர் உழவன் தன்னுடைய உயிரைக் காப்பாற்றினான். அதற்காக உழவனுக்கு நன்றி தெரிவிக்க வேண்டியதுதான். அவனுடைய அன்புக்கு மரியாதை செலுத்த வேண்டியதுதான். அவனுடைய ஆலோசனைகளைக் கூடக் காதில் போட்டுக் கொள்ள வேண்டியதுதான். ஆனால் அந்த உழவன் தனக்குத் தெரிந்த யோசனைகளை ஒரு மாமன்னனிடம் தனியான இடத்தில் சொல்வதுதான் பொருத்தம். அதை விடுத்து மன்றத்தில் வந்து நின்று யோசனைகளைக் கூற முனைகிறான் என்பதைக் கரிகாலன் அவ்வளவாக விரும்பவில்லை. ஆனால் தன் உள்ளத்தை அப்போது திறந்து காட்டவும் முடியவில்லை. தன் உயிரைக் காப்பாற்றியவன் ஆயிற்றே அவன்! எந்த யோசனையையும் அவன் வெளியிடுவதற்கு முன்பு அவனை அங்கிருந்து அனுப்பிட வேண்டுமென்று மன்னன் முயன்றான்.
"கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. எல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீ போய் ஓய்வெடுத்துக் கொள். என்ன செய்வதென்று யோசிப்பதற்கே மன்றம் கூடியிருக்கிறது!" என்று மன்னன் கூறியதும், தனக்கு இடம் கிடைத்ததென்று வளவன், "அப்படியானால் இந்த மன்றம் என்யோசனைகளை எடுத்துக் கொள்ளட்டும்" என்று ஆரம்பித்து விட்டான்.
அரசனுக்கு எதுவும் பேசமுடியவில்லை. வளவனையே பார்த்தவாறு இருந்தான். மன்றத்திலிருந்தவர்களுக்கும் வளவனின் போக்கு சற்று அதிகப்படியாகவே தெரிந்தது. அந்த நிலைமைகளையெல்லாம் கவனிக் காதவனைப் போல் வளவன் பேசத் தொடங்கினான்.
"ஏழை சொல் அம்பலமேறாது என்பது எனக்குத் தெரியும். ஆனால் கரிகால் பெருவளத்தாரின் நல்ல இதயத்தில் என்னைப் போன்ற குடிமகனுக்குத் தனியிடம் உண்டு என்பதை நானறிவேன்; என் எண்ணத்தில் பழுதிருந்தால் எல்லாரும் மன்னித்துக் கொள்ளுங்கள். தலைநகரில் மக்கள் இல்லை என்ற செய்தி வெகு விரைவில் வரக் காத்திருக்கிறது. பெருந்தேவியின் உடலை அடக்கம் செய்வதற்கான எல்லாக் காரியங்களும் முடிந்துவிட்டன. அரசரோ, மக்களும் வெளியேறக் கூடாது; பெருந்தேவியின் உடலை சவ அடக்கத்திற்கான ராஜ மரியாதைகளும் குறையக் கூடாது' என்று எண்ணிக் குழம்பிக் கொண்டிருக்கிறார். அவருடைய நினைப்பில் ஊனம் வராதவாறு நான் ஒரு யோசனை கூறத் துணிந்திருக்கிறேன்!"
கம்பீரமாக ஒலிக்கும் வளவனின் பேச்சில் கவரப்பட்டவர்களாக அனைவரும் அமர்ந்திருந்தனர். அவன் நிறுத்தவில்லை; தொடர்ந்து பேசினான்.
"தலைநகரிலிருந்து வெளியேறும் மக்களைத் தடுத்து நிறுத்த மன்னர் ஒருவரால்தான் முடியும். ஆகவே, அவர் உடனே மக்களைத் தொடர்ந்து சென்று தடுத்து அழைத்து வரவேண்டும். அதே சமயம் வேளிர்குல இளவரசிக்கு எந்த விஷயமும் காதில் எட்டாதவாறு செய்துவிட்டுப் பெருந்தேவியின் சவ அடக்கத்தையும் முடித்துவிட வேண்டும். அவசரக் காரியமாக மன்னர் வெளியே சென்றிருக்கிறார் என்று வேளிர்குல இளவரசிக்குக் கூறிவிட்டுக் காரியத்தை நடத்தி விடலாம்".
இந்த யோசனையை வளவன் சொன்ன பிறகு, அனைவருக்கும் இது சாதாரணமாகப்பட்டது. ஆனால் அது வரையில் யாருக்கும் இப்படியொரு யோசனை தோன்றவில்லை.
"மக்களைத் துரத்திக் கொண்டு மன்னர் செல்வதா?" - ஒரு கேள்வி எழுந்தது.
"குழந்தையைத் துரத்திக் கொண்டு தாய் செல்வதில் குற்ற மில்லையே!" என்றான் வளவன்.
"மன்னரை மதிக்காமல் செல்கிறவர்களை மன்னர் மதித்து ஓடுவது கோழைத்தனமல்லவா?"
-என்றனர் சிலர்.
"வீரம் காட்டப்பட வேண்டிய இடம் எதிரிகளைச் சந்திக்கும் களம்! விவேகத்துக்குக் கோழைத்தனமென்று பெயரில்லை!" - இது வளவனின் பதில்
"மக்கள் மன்றமே வளைத்துக் கொண்டு எதிர்க்கக் கிளம்பி விட்டால்?"
"படை கொண்டு செல்லட்டுமே மன்னர்!"
ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் எண்ணங்களை வளவனின் யோசனை மீது வெளியிட்ட பிறகு, கரிகாலன் ஒரு முடிவுக்கு வந்தவனைப் போல் விழிகளைத் திறந்து தலையை நிமிர்த்தினான். யாருடைய யோசனை மன்றத்திலே வெளியிடப்படக் கூடாது என்று கருதினானோ அவனுடைய யோசனையின்படி நடக்கலாம் என்று தீர்மானித்தான்.
'வளவன் கூறுவதும் உண்மைதான். நான் சென்றால் தான் மக்களைத் திரும்பத் தலைநகருக்கு அழைத்து வர முடியும். என் முகத்தைக் கண்டதுமே பூம்புகார் மக்கள் வெட்கித் தலைகுனிந்து வாய் பேசாமல் திரும்பி வந்து விடுவர்' என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான். மன்றத்திலுள்ளவர்களைப் பார்த்து. "நீங்கள் அனைவரும் சென்று பெருந்தேவியின் சவ அடக்கத்தைச் சிறப்பாகச் செய்து முடியுங்கள்! வேளிர்குல இளவரசியை மரியாதையுடன் உபசரியுங்கள், நான் மக்களைத் தடுத்து அழைத்து வருகிறேன்" என்று கூறிவிட்டுப் புறப்படத் தயாரானான்.
"படையுடன் போவதுதான் நலம்!" என்று அனைவரும் கூறினர். அதைக் கரிகாலன் கேட்கவில்லை.
"நான் சந்திக்கப் போவது என்னுடைய நாட்டு மக்களை! அவர்கள் என்னை எதிர்த்துத் தாக்குவார்கள் என்றால், அதைத் தடுக்க ஒரு படை ஏன்? அவர்கள் கையாலேயே சாவதுதான் மேல். நாட்டு மக்கள் எதிர்த்த பிறகு, படையை வைத்துக் கொண்டு என்ன செய்வது?" என வெண்கலக் குரலில் முழங்கிவிட்டு, வளவனை நன்றியுணர்ச்சியுடன் பார்த்து விட்டு, மன்றத்தை விட்டு வெளியேறினான். மெய்க்காப்பாளன் மன்னனுடன் சென்று வாட்டசாட்டமாக நின்று கொண்டிருந்த வெண்புரவியொன்றை எதிரே கொண்டு வந்து நிறுத்தினான். கரிகாலன் அதிலே தாவி ஏறிக்கொண்டு கிளம்பினான். மற்றொரு குதிரையில் மெய்க்காப்பாளன் பின் தொடர்ந்தான்.
பின்னர் மன்றத்தினரும், நெடுமாறனும், கடியலூர் புலவரும், வளவனும் பெருந்தேவியின் சவம் இருக்கும் இடத்திற்குச் சென்றனர். தன்னை அனுமதிப்பார்களோ இல்லையோ என்ற சந்தேகத்துடன், வளவன் பயந்தவாறு அவர்கள் பின்னாலேயே சென்று கொண்டிருந்தான். அரசன் வருகைக்காகக் காத்திருந்தவர்களிடமும், தாமரையிடமும் அரசன் அவசரக் காரியமாகத் தலைநகருக்குச் சென்றிருப்பதாகக் கூறி, மற்ற ஏற்பாடுகளைக் கவனிக்க ஆரம்பித்தனர் மந்திரி பிரதானியர்.
வளவன் ஓர் ஓரத்தில் வந்து நின்று பெருந்தேவியின் உடலைப் பார்த்துக் கொண்டிருந்தான், அதுவரையில் ஒளி வீசிக் கொண்டிருந்த அந்த உழவனின் முகத்தில் துயர நிழல் படர்ந்தது. அவன் கண்கள் கலங்கின, யாரும் தன்னைப் பார்த்து விடாமல் சமாளித்துக் கொண்டான்.
பெருந்தேவியின் உடலை எடுத்து மலர்த்தேர் ஒன்றின் மீது வைத்தார்கள். அப்போது தன்னை அறியாமல் தாமரை 'கோ' வெனக் கதறி விட்டாள். வேளிர்குடி வீரனைப் போல் உடை அணிந்திருந்த செழியனின் கண்கள் மழை பொழிந்தன. தேவியைச் சுமந்தவாறு தேர் நகர்ந்தது. தாமரையும் மற்ற அனைவரும் அடிமேல் அடி வைத்து அந்தத் தேரின் பின்னே நடந்து கொண்டிருந்தனர்; வளவனும் அந்தக் கூட்டத்தில்தான் இருந்தான். சவ ஊர்வலம் நகர்ந்து கொண்டிருக்கும் போது, தாமரையின் கண்களில் வளவன் பட்டு விட்டான். செழியனும் வளவனை பார்த்தான். அவனுக்கு எந்தச் சந்தேகமும் வரவில்லை.
ஆனால் தாமரைக்குச் சந்தேகம் தோன்றி விட்டது. தாமரை தன்னைப் பார்க்கிறாள் என்பதைப் புரிந்து கொண்ட வளவன், அதற்காக எவ்வித அச்சமும் கொள்ளாமல் நடந்து கொண்டுதானிருந்தான். அண்ணியின் சவ ஊர்வலத்தில் எத்தனை எத்தனையோ வேதனை தோய்ந்த நினைப்புகளுடன் செல்லும் தாமரைக்குப் புதிய பயம் ஒன்று வந்து சேர்ந்து கொண்டது. நடந்தவாறே வளவனின் பக்கம் நெருங்கிச் சென்று அவனைக் கவனிக்க வேண்டுமென்று முயற்சி செய்தாள். அதைக் கண்டும் வளவன் பயந்ததாகத் தெரியவில்லை. வளவனுடைய பார்வை, இப்போது தாமரைக்கருகே வரும் வேளிர்குல வீரன் மீது கூர்மையாக விழுந்தது.
சவ ஊர்வலம் உட்கோட்டையைத் தாண்டி வெளிக் கோட்டை வாயிலின் பக்கம் வந்துவிட்டது. தாமரையும் மெல்ல வளவனின் பக்கம் வந்துவிட்டாள். அவளுடைய சந்தேகம் உறுதிப்பட்டு விட்டது போலும்!
"அவன் யார்?"
"உழவன் வேடத்திலிருக்கும் அவன் யார்?"
செழியனின் மனத்தில் இந்தக் கேள்வி எழவில்லை. தாமரையின் மனத்தில் பலமாக எழுந்து விட்டது. இன்னும் அருகே இருவரும் நெருங்கி விட்டனர்.
அதற்குள் சவ ஊர்வலமும் குறிப்பிட்ட இடத்துக்கு வந்து சேர்ந்தது. சோழ மன்னனது குடும்பத்தினர் அடக்கம் செய்யப்படும், 'வேந்தர் சதுக்கம்' என்னுமிடத்தில், பெருந்தேவியைச் சுமந்திருந்த மலர்த் தேர் நின்றது. தேவியின் சடலம் கீழே இறக்கப்பட்டது. தாமரை இப்பொழுது வளவனின் முகத்தை இமை கொட்டாது பார்த்தாள். அவன் கண்கள் குளமாகிவிட்டன. தாமரையின் பக்கம் திரும்பினான்.
தாமரைக்கு அவன் யார் என்று விளங்கிவிட்டது. "அண்ணா!" என்று கூவிவிட வாய் திறந்தாள். அதற்குள் வாயடைத்துக் கொண்டது.
வளவன், அவளை நோக்கிக் கையசைத்து, “உஸ்! ஜாக்கிரதை!' என்று குறிப்பால் உணர்த்தினான். அதை யாரும் கவனிக்கவில்லை. செழியன் மட்டுமே கவனித்து விட்டுக் கவனிக்காதது போல வேறு பக்கம் திரும்பிக் கொண்டான்.
பெருந்தேயின் உடலை அங்கு வெட்டப்பட்டிருந்த ஆழமான குழியொன்றில் வைத்தனர். அந்தக் கொடுமையான காட்சி கண்டு தாமரை குமுறினாள். அங்கே தன் அண்ணன் இருக்கிறான் என்ற உணர்ச்சி மேலும் அவளைக் கதற வைத்தது.
வளவனாக நிற்கும் அவளது அண்ணன், தன் ஆரூயிர்த் துணைவி மண்ணுக்குள் மறையப்போகிறாள் என்பதை நினைத்து ஒடிந்து போய் நின்றான்.
வேளிர் குல அரசியைச் சிறிது நேரத்திற்கெல்லாம் சோழ மாதா தன் மண் கரத்தால் போர்த்துக் கொண்டாள்.
பெருந்தேவியைப் புதைத்த இடத்தில் எழுப்பிய மண்மேட்டின் மீது அரசவைப் பிரதிநிதிகள், மந்திரிகள், தளபதிகள் அனைவரும் மலர் தூவித் தங்கள் இரங்கலைத் தெரிவித்து இறுதி வணக்கம் கூறினர்.
வேளிர்குல இளவரசி தாமரை தன் கண்ணீரில் நனைந்த மலர்க் கொத்தை அண்ணியின் கல்லறை மீது வைத்துவிட்டு, அருகே நிற்கும் அண்ணனைத் திரும்பிப் பார்த்தாள். திடுக்கிட்டாள்! அவனைக் காணவில்லை. அவனைத் தேடும் முயற்சியில் பரபரப்புக் காட்டக் கூடாது என்பதையும் அவள் உணர்ந்து, ஓர விழிகளைச் சுழலவிட்டு அண்ணனைக் கண்டுபிடிக்க முடியாமல் தத்தளித்தாள்.