உள்ளடக்கத்துக்குச் செல்

ரோமாபுரிப் பாண்டியன்/22. மக்கள் பின்னே மன்னன்

விக்கிமூலம் இலிருந்து

22

மக்கள் பின்னே மன்னன்

செழியன் அவள் பின்னாலேயே நின்று கொண்டிருந்தான். இப்போது அவனுக்கு அக்காளைப் பிரிந்த சோகமெல்லாம் சிறிது சிறிதாகக் கரைந்து விட்டது. அவன் உள்ளத்தை உலுக்கும் பிரச்சினை யொன்றுக்கு அவன் பதில் தேடித் தீரவேண்டிய அவசியத்திற்கு ஆளானான். 'உழவன் உடையில் இருக்கும் வளவனும், தாமரையும் முகக் குறிப்பால் பேசிக் கொள்ளக் காரணம் என்ன? அந்த உழவன் யார்?" என்ற கேள்விகள் அவனைத் திண்டாட வைத்தன. சோழ மண்ணுக்குப் பெரியதோர் அபாயம் வரக் காத்திருக்கிறதா? அல்லது தாமரையின் வாழ்க்கை ஏட்டில் இந்த உழவனுக்கு ஏதாவது ரகசிய இடம் கிடைத்திருக்கிறதா? இதற்கு எப்படிப் பதில் காணுவது? செழியன், தாமரைக்கு வாக்களித்துவிட்டு அவள் பின்னே வந்திருக்கிறான்! - அந்த வாக்குத் தவறுவதும் அழகல்ல என்பதை உணர்ந்திருக்கிறான். ஆனால் வந்த இடத்திலோ திடுக்கிடக்கூடிய சம்பவத்தைத் தன் இரு விழிகளால் கண்டுவிட்டது. அதைப் பற்றிக் கவலைப்படாமல் தாமரையுடன் திரும்பி விடுவது என்பது சோழநாட்டைக் காட்டிக் கொடுப்பது போலாகும் என்று மனசாட்சி வேறு அவனைக் குடைந்தெடுத்தது.

இறுதிச் சடங்கினை முடித்துக் கொண்டு அனைவரும் திரும்பத் தொடங்கினர். தாமரையும் அவர்களுடன் திரும்பிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள். திரும்புவ தற்குள்அண்ணனைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்று மீண்டும் எல்லாத் திசைகளிலும் கண்களைத் திருப்பினாள்.

இதுதான் நல்ல சமயமென்று செழியன், அவள் பார்வையிலிருந்து விலகிக் கொண்டான்.

அவன் மறைய முயலும்போது முன்பு தாமரைக்கு அவனளித்த வாக்குறுதி மனத்திரையில் நிழற்படமாக எழுந்தது.

"தமிழ்நாட்டுப் போர்மறவன் எவனும் ஒரு பெண்ணை ஏமாற்றி விட்டு ஓடிவிடமாட்டான்! நம்பியவர்களை மோசம் செய்வது தமிழ்க் குருதி உள்ளவர்களின் பழக்கம் இல்லையென்பது உனக்குத் தெரியாதா என்ன? நான் சொல்வதைக் கேள்! அண்ணியின் இறுதிச் சடங்கை நடத்தி வைக்க நீ பூம்புகாருக்குப் புறப்படும்போது உன்னோடு நானும் வருவேன். உன்னுடைய பாதுகாப்புப் படை வீரனாக வருகிறேன்; என்னை யாரும் அடையாளம் தெரிந்து கொள்ளாதபடி உன்னைப் பாதுகாக்கும் வீரனைப் போலவே நடித்து விடுகிறேன். உன்னை மோசம் செய்துவிட்டு நழுவிடப் பார்க்கிறேன் என்று உனக்குக் கடுகளவு சந்தேகம் வந்தாலும் உடனே கட்டாரியை என் மார்பின் மீது வீசிவிடு!" செழியன் அப்போது இப்படி கூறியது உண்மை!

"என்னை ஏமாற்றுவதற்கு திட்டம் வகுக்கிறீர்களென்றால் பூம்புகார் அரண்மனையில் தாங்கள் தப்பியோட முனையும்போது என்னைக் கொன்று போட்டுவிடுங்கள். இல்லாவிட்டால் என் அண்ணனுக்குப் பதில் சொல்ல நான் உயிரோடிருந்து வேதனைப்படுவேன்" என்று தன் நிலையை விளக்கிய தாமரையை இப்படி மோசம் செய்யலாமா என எண்ணினான் செழியன்.

"தாமரை, என்னை நம்பு. உதவி செய்தவர்களுக்கு துரோகம் செய்வது தமிழினத்து வழக்கமல்ல என்பது தெரிந்தும் என்னைச் சந்தேகப்படலாமா? உன்னைப் பாதுகாக்கும் வீரனாக வரும் நான், என் சகோதரியின் பிணத்தைப் பார்த்ததும் பாச உணர்ச்சி பீறிட்டுக் கிளம்பிவிடாமல் என் இதயத்தைக் கட்டுப்படுத்திக் கொள்கிறேன். அரசியின் பிரிவு கண்டு படைவீரனுக்கு ஏற்படும் வேதனையை மட்டுமே என் முகத்தில் காண்பாய்."

இப்படி உறுதி கூறியது உண்மைதான். ஆனால் நாட்டுக்கும் அரசனுக்கும் ஆபத்து என்பதையும் செழியனின் தன்மான இதயம் நோக்கிற்று. மனப்போராட்டங்களுடன் செழியன் புகுந்து மறைந்து விட்டான். அதைக் கவனிக்காமலேயே இளவரசி விழிகளை அங்குமிங்கும் சுழலவிட்டவாறு மந்திரி பிரதானிகளுடன் போய்க் கொண்டிருந்தாள். கூட்டத்திற்குள் தந்திரமாக நுழைந்து ஒரு மண்டபத்தின் பக்கம் ஒதுங்கி நின்று கொண்டான் செழியன். அப்போது அவன் மனம் பட்ட பாட்டை விவரிக்க வொண்ணாது. தாமரை தன்னைக் 'கயவன்' என்று முடிவு கட்டி விடுவாளோ என்ற அச்சம் அவனைப் பிடித்தாட்டியது. எப்படியும் அவளுடன் போய்ச் சேர்ந்து கொள்ளலாம் என்ற முடிவுடன் அவன் மண்டபத்துக்குள் பதுங்கிக் கொண்டான். பெருந்தேவியைப் புதைத்த இடத்தில் இப்போது யாருமே இல்லை. ஒரே அமைதி! படைவீரர்களும் பரிவாரங்களும் புடைசூழ இருந்த தன்னுடைய அருமை அக்காள், தன்னந்தனியாளாக மண்ணுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் அந்தக் காட்சியை இமைகொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்; அவன் பார்வையை வேறு பக்கம் திருப்பக் கூடிய மற்றொரு காட்சி!

அந்த நிம்மதியான இடத்தை நோக்கி வெகு தொலைவிலேயிருந்து ஒருமனிதன் நடந்துவந்து கொண்டிருந்தான். செழியன் கண்களை அகலத் திறந்து பார்த்தான். யார் அவன்? வளவனேதான்.

அவன் மெல்ல மெல்ல நடந்து வந்து பெருந்தேவியின் கல்லறை அருகே நின்றான். சுற்றுமுற்றும் பார்த்தான். இப்போது அவனைச் செழியனால் நன்றாகக் கவனிக்க முடிந்தது. அவன், கல்லறைக்கருகே உட்கார்ந்து தலை குனிந்தான். அவன் கண்களிலேயிருந்து நீர்முத்துக்கள் கொட்டிக் கல்லறையை குளிப்பாட்டிக் கொண்டிருந்தன. அவன் வாய் அசைந்தது.

"தேவி! எனக்காகவே வாழ்ந்து எனக்காகவே உயிர் கொடுத்து விட்டாயா?"

இந்த வார்த்தைகளைக் கேட்டதும் அவன் யார் என்று செழியனுக்குப் புரிந்துவிட்டது. சோழநாட்டுக்கு ஆபத்து நிச்சயமாக வந்துவிட்டது என்று அவன் நடுங்கினான். தன்னை அமைதிப்படுத்திக் கொண்டு கல்லறையின் பக்கம் காதைத் திருப்பினான்.

"என் இதய ராணி! நாலு பேர் அறிய உனக்காகக் கண்ணீர் வடிக்கக்கூடிய பாக்கியத்தைக்கூட எனக்களிக்காமல் பறித்துக் கொண்டாயே; இது நியாயமா? காட்டு மாளிகையில் இறந்தால் இதுபோன்ற ராஜமரியாதைகளை நடத்துவதற்கு எனக்குத் தகுதியில்லை என்று நினைத்துத் தானே இங்கு வந்து சாவைத் தழுவிக் கொண்டாய்?

"உன் செயலால் எனக்கும் கரிகாலனுக்கும் ஏதோ ஒரு தொடர்பை ஏற்படுத்திவிட்டாய். அவன் என்னை நேசிக்கிறான்; அன்புகாட்டுகிறான்; மரியாதை செலுத்து கிறான்; ஏழை உழவன் வளவன் என்று நம்பி எனக்கு அவன் இதயத்திலே இடமளித்திருக்கிறான். இவ்வளவும் உன்னால் வந்த வினைதான். எதைப்பற்றியும் கவலைப்படால் நீ மண்ணுக்குள் நிம்மதியாகத் தூங்க ஆரம்பித்துவிட்டாய்.

"கவலைப்படாதே! யாரோ ஒருவனின் மாளிகையில் உன் கல்லறை கட்டப்பட்டது என்ற அவச்சொல்லை அழிக்கிறேன். இதுவும் இருங்கோவேளின் மாளிகைதான் என்பதைத் தமிழகத்திற்கு விரைவில் தெரிவிக்கிறேன். நீ புதைந்திருக்கும் இந்த மண்ணின் மீது ஆணை!

"இருங்கோவேள், அன்புக்கு விரோதியல்ல! ஆனால் பகைவனின் அன்புக்கு அவன் பணியமாட்டான். இருங்கோவேள் இதயமில்லாதவனல்ல; ஆனால் எதிரியின் இதயத்துக்கு அடிமையாகிவிடமாட்டான். என் இலட்சியம் நிறைவேற, என்னை மகிழ்விக்க நீ மன்னனைக் கொல்ல வந்தாய். உன் பெயர் உள்ளவரையில் அந்தக் களங்கம் உன்னைச் சுற்றுமே என்று பயந்து, மனைவியை அனுப்பி எதிரியைக் கொன்ற இருங்கோவேள் என்ற பழி என்னைத் தொடருமே என அஞ்சி, கரிகாலனைக் காப்பாற்றினேனே தவிர, உன் முயற்சி பட்டுப்போக வேண்டும் என்பதற்காக அல்ல!

"இன்பமே! அதற்காக என்னை மன்னித்துவிடு. விரைவில் புகார் நகரத்துக் கோட்டை முகப்பில் பறக்கப் போகிற வேளிர்குலத்துக் கொடியை, நீ இங்கிருந்தபடியே கண்டு மகிழலாம்."

இப்படிச் சோகப் பெருமூச்சுக்கிடையே வஞ்சினம் கூறிய இருங்கோவேள், தன் துணைவியின் கல்லறை மீது கிடக்கும் மலர்களை எடுத்து முத்தமிட்டுவிட்டு மெல்ல நடந்தான். தன்னை யாரும் பார்க்கவில்லையென்ற நம்பிக்கையோடு நிம்மதியடைந்து திரும்பிய அவன் செழியன் ஒளிந்திருந்த மண்டபத்தைக் கண்டு விட்டான். அதற்குள்ளிருந்து யாராவது தன்னைக் கவனித்திருந்தால் என்ன செய்வது என்ற சந்தேகம் அவனுக்குப் பலமாகத் தோன்றிவிட்டது.

அதனால் அந்த மண்டபத்துப் பக்கம் சந்தடியில்லாமல் நடந்து வந்தான். தானிருக்குமிடத்திற்கு இருங்கோவேள் வருவது கண்ட செழியன் எப்படித் தப்புவது என்று தெரியாமல் விழித்தான். அங்குமிங்கும் ஓடி, ஓர் ஆழமான கருங்கல் தொட்டிக்குள் இறங்கிப் பதுங்கிக் கொண்டான். தனக்கிருந்த பயங்கரமான எதிர்காலத்தை யெண்ணி நெஞ்சம் நடுங்கினான். கல்லறையில் வேளிர்குல மன்னன் உதிர்த்த வெறிபிடித்த வாசகங்களை நினைத்து நினைத்து கனல் மூச்சு விட்டுக்கொண்டிருந்தான்.

சிறிது நேரத்துக்குப்பிறகு மண்டபத்துக்குள் காலடி ஓசை கேட்டது. பிறகு சிறிது சிறிதாகத் தேய்ந்து மறைந்தது.

"அப்பாடா போய்விட்டான்!" என்று செழியன் தலையை வெளியே நீட்டினான். அவனுடைய கழுத்தை ஒரு கரம் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.

தப்ப வழியின்றிச் சிக்கிக்கொண்டோம் என்றுணர்ந்த செழியன், நிமிர்ந்து பார்த்தான். வளவன் வேடத்தில் இருங்கோவேள்தான் நின்று கொண்டிருந்தான். அந்தி நேரத்து வானத்தகடுபோல் சிவந்திருந்த இருங்கோவேளின் முகத்தைச் செழியன் இமைகொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். தன்னை அவன் அடையாளம் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக மிகவும் சிரமப்பட்டு வேளிர்குல வீரனைப் போல் பாவனை செய்து கொண்டான்.

அதற்கேற்றாற்போல் இருங்கோவேளும் செழியனை இன்னாரென்று தெரிந்து கொள்ளாமல் தன் படைவீரன் என்றே நினைத்து, "ஏய்! எதற்காக இங்கு ஒளிந்திருக்கிறாய்? நீ மட்டும்தான் தாமரைக்குத் துணையாக வந்தாயா?" என்று கேட்டான்.

யாரோ ஒருவன் தன்னை உணர்ந்து கொண்டுவிட்டான் போலும் எனப் பயந்திருந்த இருங்கோவேளுக்கும் சந்தேகம் நீங்கியது. தன்னை யாரென்று கண்டுபிடிக்கவில்லை என்ற திருப்தியும் செழியனுக்கு ஏற்பட்டது.

"இளவரசிதான் என்னை இங்கே விட்டுச் சென்றார்கள். தாங்கள் ஏதாவது செய்திகள் சொன்னால் கேட்டுவரச் சொன்னார்கள். அதற்காகத்தான் யார் கண்ணிலும் படாமல் இங்கே ஒளிந்திருந்தேன்" என்று திறம்பட நடித்துவிட்டான் செழியன்.

இருங்கோவேள் சற்று நேரம் எதுவும் பேசாமல் மௌனமாக நின்று கொண்டிருந்தான். கண்கள் மெதுவாக மூடிக் கொண்டன. நெற்றியிலே சுருக்கங்கள் விழுந்தன.

ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட செழியன், என்ன புதிய ஆபத்து ஏற்படுமோ என்ற திகிலுடன் இருங்கோவேளின் இதழ் அசைவை எதிர்பார்த்திருந்தான்.

இருங்கோவேளின் மூளையில் மழைக்காலத்து வானில் கருமேகங்கள் வேகமாகத் திரள்வதுபோல் திட்டங்கள் உருவாயின. விழிகளை அகலத் திறந்தான்.

செழியனின் தோள்பட்டையைப் பிடித்து உலுக்கியவாறு “வீரனே! இன்றிரவு நடுயாமத்தில் நான் தங்கியிருக்கும் இடத்திற்கு நீ வர வேண்டும். உன்னிடம் சில முக்கியமான செய்தியைச் சொல்ல இருக்கிறேன். அவைகளை நீ நிறைவேற்றியாக வேண்டும்."

- என்று அழுத்தந்திருத்தமாகக் கூறினான். செழியனும் உள்ளுக் குள்ளே சிறிது பயந்தான்.

பயத்தை மறைத்துக் கொண்டு, "தாங்கள் எங்கே மன்னவா தங்கியிருக்கிறீர்கள்?" என்று வினவினான்.

"அரண்மனைக்குள்ளே அரசனும், அமைச்சர் பெருமக்களும் அமர்ந்திடும் ஆலோசனை மண்டபம் இருக்கிறதே! அதற்கு அருகிலே தான் என் இருப்பிடம். காவலோ, கட்டுத் திட்டங்களோ எதுவுமில்லை! என் இருப்பிடத்திற்கு நீ பயமில்லாமல் வரலாம். இளவரசி தாமரையிடம் சொல்! நான் சொல்லும்போது அவள் இந்த இடத்தை விட்டுப் புறப்பட்டால் போதும்."

-இருங்கோவேளின் பேச்சை ஆமோதிப்பதுபோல் செழியனும் தலையசைத்தான்.

"சரி! நீ புறப்படு - நான் போகிறேன். இரவு மறந்து விடாதே!" என்று கூறிவிட்டு இருங்கோவேள் அந்த இடத்தைவிட்டு அகன்றான்.

செழியனுக்குப் பலவிதமான குழப்பங்கள், அந்த குழப்பத்திலும் ஓர் ஆறுதல். கரிகால் மன்னனுக்கு வருகின்ற எந்த ஆபத்தும் அவனுக்குத் தெரியாமல் வரமுடியாதல்லவா? தன்னால் சோழ நாட்டுக்கு வரும் பயங்கரமான புயற்காற்றை அடக்கிவிட முடியும் என்ற துணிவு ஏற்பட்டது. அவனுக்கு தன்னைச் சுற்றி உருவாகும் சூழ்ச்சியில் தனக்கு முக்கியமான வேலை கிடைத்துவிட்டதாக அவன் நினைத்தான்.

அந்த எண்ணங்களினூடே, மெதுவாக அரண்மனை நோக்கி நடந்தான். இளவரசி தாமரையுடன் வந்திருக்கும் வீரன் என்ற காரணத்தால் யாரும் அவனைத் தடைசெய்யவில்லை. வீரர்கள் ஆங்காங்கு சூழ்ந்து நின்று பேசிக் கொண்டிருந்ததைச் செழியன் நின்று கவனிக்காவிட்டாலும் நடந்தவாறே தன் காதை அந்தப் பக்கம் திருப்பிடத் தவறவில்லை.

எல்லா இடங்களிலும் பேசப்பட்ட விஷயம், தலைநகரத்து மக்கள் இன்னும் திரும்பி வரவில்லை என்பது தான்! 'மன்னன் கரிகாலன் சென்று அவர்களை இன்னும் அழைத்து வரவில்லை: மன்னனும் வந்து சேரவில்லை!' என்ற செய்தியை ஆளுக்கொரு விதமாக விமர்சித்துக் கொண்டிருந்தார்கள்.

செழியனுக்குக்கூடத் தலைநகரத்து மக்கள் காட்டிய எதிர்ப்பு உணர்ச்சி வியப்பையே அளித்தது.

மக்களோ, தங்கள் மன்னன் அளவுக்கு மீறிய இரக்க உணர்வு கொண்டு பகைவர்களுக்குச் சோழநாட்டில் மரியாதை கொடுத்து விட்டான் என்ற குற்றச்சாட்டைக் கூறியவண்ணம் தலைநகரை விடுத்து நடந்துகொண்டிருந்தார்கள்.

அவர்களை அழைத்து வரப் புறப்பட்ட கரிகாலன். குதிரையொன்றில் வேகமாக அவர்களைத் தொடர்ந்து சென்றான். எளிதில் சந்திக்க இயலாதவாறு மக்கட்பெருங்கடல் தலைநகரைவிட்டு வெகுதூரம் சென்று விட்டது.

கரிகாலன் ஒரு சிறு தவறு செய்துவிட்டான். சாலை வழியேதான் அவர்கள் சென்றிருக்கக்கூடுமென எண்ணி அவ்வழியே தன் குதிரையை முடுக்கிவிட்டதால் ஏமாந்து விட்டான். அவர்களோ சாலை வழி விடுத்துக் காட்டு வழியில் புகுந்து விட்டனர்.

அந்தக் காட்டு வழியும் இருங்கோவேள் மன்னனின் மரமாளிகை இருக்கின்ற வழியென்பது அவர்களுக்குத் தெரியாது.

நெடுந்தூரம் சென்ற மன்னனுக்குப்பலமான சந்தேகம் ஏற்பட்டது. என்னதான் வேகமாக ஓடினாலும் தன் கண்ணில் படாத அளவுக்குப் பூம்புகார் மக்கள் இத்தனை தூரத்தைக் கடந்திருக்க முடியாது என்று தீர்மானித்துக் கொண்டு திரும்பினான்.

மக்கள் காட்டு வழியிலேதான் சென்றிருக்கக்கூடும் என்று யூகித்தான். அவன் யூகம் தவறானதல்ல என்று காட்டுவதுபோல் காட்டு மார்க்கத்தில் பூம்புகார் மக்கள் திரும்பியிருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. அந்த அடையாளங்களைத் தொடர்ந்து கரிகாலன் தன் குதிரையைத் திருப்பிவிட்டான்.

பூம்புகார் நகரத்தில் சரித்திரம் காணாத கொந்தளிப்பு ஏற்பட்ட நேரத்தில் - கொல்ல வந்த எதிரியின் சவத்துக்கு மரியாதை செலுத்திய கரிகால் மன்னனின் உள்ளத்தில் ஏற்பட்ட சங்கடப் புயலில் - சஞ்சலச் சூறாவளியில் வேதனை பூகம்பத்தில் சிக்கிவிட்ட நாம் ஓர் உருவத்தை மட்டும் மறந்தே போய்விட்டோம்!

சோழ பேரரசன் கரிகால் மன்னனின் மானமும் உயிரும் காப்பாற்றப் பட வேண்டும் என்பதற்காக, ஆரம்ப காலத்திலேயே ஆபத்தோடு விளையாடப் புறப்பட்டாளே அந்த முத்துநகை, இப்போது எங்கே?

கடமை-திடீரென ஏற்பட்ட மக்களின் குமுறல் - இவற்றினால் ஏற்பட்ட பயங்கரமானதொரு மனப்போராட்டத்தில் அகப்பட்டுத் தவிக்கும் மன்னனுக்கு ஆறுதல் சொல்லவும் வகையற்று அவள் எங்குதான் வாடுகிறாள்?

எல்லாருமே இப்போது பூம்புகார் நகரிலே கூடிவிட்டனர். எது நடைபெற முடியாது என்று கருதினார்களோ. அது நடக்கிறது! பெரும்பகை என்ற பாலம் போடாத முடியாத பள்ளத்தால் விலகி நிற்கிற கரிகாலனும், இருங்கோவேளும் ஓரிடத்தில் தான் இருக்கிறார்கள்! பழிவாங்கும் உணர்ச்சி கொண்டவனான இருங்கோவேளின் உடன் பிறந்த தங்கை தாமரையும் பூம்புகாரில்தான் இருக்கிறாள்! அவள் தயவால் சகோதரியின் சவத்தைக் காணவந்த செழியனும் அங்கு தான் இருக்கிறான். இதுவரையில் மர்மமானதொரு நாடகத்தின் கதாபாத்திர மாக இருந்து வருகிற புலவர் காரிக்கண்ணனாரும் சந்தேகத்தில் சிக்கிய வராகத் தனியறையில் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்! தமிழ்காத்த நல்லார் ஒருவர் இத்தகைய 'பட்டம்' சுமந்ததற்குக் காரணமான முத்துநகை மட்டும் பூம்புகாரில் இல்லை.

அவளைச் சந்திக்க வேண்டுமாயின் குழப்பமும் கலவரமும் சூழ்ந்துள்ள பூம்புகாரைவிட்டு, அமைதியும் ஆபத்தும் ஒருங்கே சேர்ந்திருக்கும் ஆரண்யத்திற்குச் சென்று- அதன் மத்தியில் இருக்கின்ற இருங்கோவேளின் மரமாளிகைக்குள் நுழைந்து அங்கே பூட்டப்பட்டுக் கிடைக்கும் ஓர் அறையில் நாம் புகுந்தாக வேண்டும்!

பெருந்தேவியின் சடலத்தைக் காண்பதற்காகத் தாமரையும், செழியனும் பூம்புகார் நகரத்திற்குள் நுழைந்து கொண்டிருந்த நேரத்தில் இருள் சூழ்ந்து கொண்டிருந்த அந்த அறையில், பலகைக் கட்டில் ஒன்றில் சாய்ந்தபடி கூரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள், முத்துநகை!

சலனமெதுவும் இல்லாதிருந்தது அவள் முகத்தில், மனத்தில் அலை மோதிக் கொண்டிருக்கின்ற எண்ணற்ற உணர்ச்சிகளில் எதைத் தான் தொல்லைகளால் துவண்டு போய்க்கிடக்கின்ற அந்த முகம் பிரதி பலித்துக் காட்ட முடியும்?

மேற்கூரையில் பதிந்திருந்த அவளது கண்கள் எதைக் கண்டோ சற்று அகல விரிந்தன. பல்லி ஒன்றின் வாயிலே சிக்கிக் கொண்ட பூச்சி, தப்பிக்க முடியுமாவெனக் கணநேரம் சிறகுகளை அடித்துக் கொண்ட பின்னால் வாழ்வை சத்தமின்றி முடித்துக் கொண்டது.

அந்தப் பூச்சிக்கும் முத்துநகைக்கும் என்னதான் வேறுபாடு!

சற்று நேரத்திற்கு முன்பு அந்த இருண்ட அறைக்குள்ளே புகுந்து, முத்து நகையின் மானத்தையே சூறையாடிவிட நினைத்த இருங்கோவேள் மன்னனை அந்தப் பல்லிக்கு ஈடாக அல்ல, பயங்கரமான வனவேங் கைக்கு ஒப்பாகவே நினைத்துப் பார்த்த அவளது கண்கள் தாமாக மூடிக்கொண்டன

விழித்திருக்கின்ற கண்களைவிட மூடிக்கொண்டிக்கும் கண்களுக்கு முன்னேதானே திரையெதுவும் இல்லாமல் காட்சிகள் தோன்ற ஆரம்பிக்கின்றன!

கரிகால் மன்னனைச் சுற்றியிருக்கும் காற்றில்கூடப் பகை கலந்திருக்கும் என்று கருதிய முத்துநகை, ஓர் ஆணுக்கும் இல்லாத துணிவோடு அன்று புறப்பட்டாள்! பூரித்துக் கிடக்கும் தன் பருவத்துப் பேரெழிலை ஆண் உடைக்குள்ளே மறைத்து, பெண்மைக்கு வேலியிட்டுக் காட்டுப்பாதையில் பயணம் நடத்தினாள். மதயானையும் மலைப்பாம்பும் வஞ்சித்து விடுமோ கொடுவேங்கைப் புலியால் தன் கொள்கை பாழாகி விடுமோ - என்றெல்லாம் கூட அவள் சஞ்சலப் பட்டதில்லை. அத்தகைய கொடிய பிறவிகளைவிடக் கடினமனம் படைத்த இருங்கோவேளை இருட்டிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வரவேண்டும்; கரிகாலனைக் காப்பாற்றிய செழியனை அந்தக் காட்டரசனிடமிருந்து மீட்டுவிட வேண்டும்-இப்படி உன்னதக் குறிக்கோளுடன் புறப்பட்ட அவள், பெண்ணாகப் பிறந்தவள் அனுபவிக்கக்கூடாத எத்தனையோ தொல்லைகளை அனுபவித்து விட்டாள்!

தன்னைப் போல் ஒரு பெண்ணாகிய தாமரையே காதலிக்கும் விசித்திரத்தை நடத்தினாள்.

திருநீற்றுக்குள்ளே துரோகத்தை மறைத்துக் கொண்டிருந்த சிவனடியார் கூட்டத்திலிருந்து தன் கற்பை காப்பாற்றிக் கொண்டாள்! பெற்றெடுத்த பேசும் தெய்வமாம் தன் தந்தையைத் 'துரோகி' என்று வசை பாடினாள்!

இவை மட்டுமல்ல; வேடத்திற்காக அவள் உடலிலே ஒட்டிக் கொண்டிருந்த கட்டாரியால் கொலை ஒன்றையுங் கூடச் செய்திருக்கிறாள். செழியனிடமிருந்து இருங்கோவேள் துன்புறுத்தி எழுதி வாங்கிய வஞ்சக ஓலையைக் கொண்டு, படையெடுத்து வருகின்ற பாண்டியர் தளபதியை ஏமாற்றச் சென்ற கொடுங்கோல் என்பவனின் மார்பிலே கட்டாரியைப் பாய்ச்சித் தானே அந்தக் கடிதத்தை அபகரிக்க வேண்டி யிருந்தது!

இவ்வளவு வேதனைகளுக்கும் இடையே அவள் சிறிது சிரிக்கவும் முடிந்தது; இருட்குகைக்குள்ளே பயணம் நடத்தச் சென்றவளுக்குக் கிடைத்த ஒளிவிளக்குப்போல், அவள் வீரபாண்டியைக் கருதினாள்! ஆனால் அந்தோ பரிதாபம்! இளமை உணர்ச்சி விலைக்கு வாங்கிய அந்த உறவும் அவளை அறியாமலே அவளுக்குச் சதி செய்து விட்டது. தன் குறிக்கோளுக்குப் பக்கபலமாவான் வீரபாண்டி என்று கருதி, தானே இருங்கோவேளுக்குத் துணையாக இருந்திருக்கிறாள் என்பதை அவள் அறிய முடியுமா?

இப்படிக் குறுகிய காலத்திலேயே வாலிபப் பருவத்துக்குள்ளேயே - வாழ்க்கையின் கோரமான பகுதிகளைச் சந்தித்துவிட்ட அவள், இப்போது, அதன் இறுதிக் கட்டத்திற்கே சென்றுவிட்டாள்! வீர பாண்டியை மரண முகட்டுக்கு அனுப்பி விட்டதாகச் சொல்லி, 'இனி நீ எனக்கு விருந்தாகி விடு' என்று அவளை முத்தமிடத் துடித்தானே இருங்கோவேள்...? அவன் இனிமேல் அவளை விட்டு விடவா போகிறான்? தாமரை மட்டும் தடுத்திருக்காவிட்டால் அவள் நிலை எப்போதோ அவலத்தை அடைந்திருக்குமே!

வாழ்வின் இறுதிக் கட்டத்தில் மிகச் சிக்கலான பகுதிக்கு வந்துவிட்ட ஒரு பெண் என்ன நினைப்பாளோ... அதைத்தான் முத்துநகையும் செய்தாள்! கொள்கைகள் மாண்டு மடியலாம்; ஆனால் கற்பைச் சாகவிட எந்தப் பெண்தான் சம்மதிப்பாள் - அதுவும் தன் காதலனையே வீழ்த்தி விட்டதாகச் சொல்லும் ஒரு கயவனிடம்! இருங்கோவேளிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, அவனிடமிருந்து தான் அபகரித்த கட்டாரியின் துணையைத்தான் நாட வேண்டும் என்று முடிவு செய்தாள் முத்துநகை!

பளபளவென மின்னிய அந்தக் கட்டாரியைத் தடவிப் பார்த்தாள் ஒருமுறை. "இது எத்தனையோ சோழ வீரர்களது உயிரைக் குடித்திருக்கும்; நாளையோ அல்லது மறுநாளோ செழியனின் மரணத்திற்கும் இதுவே கருவியும் ஆகலாம்; அதற்குள் என் இரத்தத்தை ருசிபார்த்துத் தன் மேல் படிந்திருக்கும் கறையைக் கழுவிக் கொள்ளட்டும்! செழியனைப் போன்ற மாவீரர்களது இதயத்தில் இத்தகைய மாசு படிந்த கருவிகள் பாயக்கூடாது!"

-முத்துநகையின் உதடுகள் இப்படி முணுமுணுத்தன! கட்டாரியைத் தன் மார்புக்கு நேரே தூக்கினாள்.

ஆனால் அதே நேரத்தில், இடியோசையைப் போல் எழும்பிய குதிரைகளின் குளம்படிச் சத்தம் அவள் செவிகளைத் தாக்கியது! உயர எழுந்த கரம், தானே சாய்ந்தது. பலகணி அருகே ஓடிச் சென்று வெளியே பார்வையைச் செலுத்தினாள்!

குதிரையிலே வந்துகொண்டிருந்த சில வீரர்கள், அங்கே எதிர்பார்த்துக் காத்திருந்த அமைச்சர் செந்தலையாரின் அருகே வந்ததும் அவசரமாகக் கீழே குதித்தனர்.