ரோமாபுரிப் பாண்டியன்/23. செந்தலையாரின் முழக்கம்
23
செந்தலையாரின் முழக்கம்
"என்ன ஆயிற்று? தாமரையைக் கண்டீர்களா? அவளையும் வேளிர்குடியின் ராஜதந்திரத்தையும் ஏமாற்றிவிட்டு ஓட நினைத்த அந்தச் செழியனைப் பிடித்தீர்களா? எங்கே அவர்கள்? பின்னால் வருகிறார்களா? நீங்கள் எல்லாரும் எதற்காக முன்னே வந்து விட்டீர்கள்?" - காட்டின் அமைதியைக் கிழித்துக் கொண்டு செந்தலையாரின் கிழக்குரல் கிரீச்சிட்டது!
"மன்னித்துவிடுங்கள் அமைச்சரே!...
-மூச்சு விடவும் தடுமாறிய வீரனொருவன் இப்படி நாக்குழறப் பேச ஆரம்பித்தான். அதற்குள் செந்தலையார் இடைமறித்தார்.
"மன்னிப்பா? அத்தகைய குற்றம் என்ன செய்து விட்டாய் வேளிர்குலத்து வீரனே? ஓகோ.. தப்பிச்சென்ற செழியனோடு போர் நடத்தினாயா? போரிலே எதிர்பாராமல் அவனைக் கொன்று விட்டாயா? அதற்காக என்னிடம் மன்னிப்புக் கேட்கிறாயா? தேவையில்லை! இந்த நேரத்தில் எதிரிகளுக்குள்ளேயே பெரும் எத்தனான செழியனின் மரணத்தை, நான் மட்டுமல்ல, மன்னர் இருங்கோவேளே மாலைசூட்டி வரவேற்பார்!..."
-வீரன் அவர் பேச்சினே இடையே குறுக்கிடத்தான் முயன்றான்; முடியவில்லை; கணீரென்று ஒலித்த அந்த முதுமைக் குரல் ஓயவில்லை!
"பழிக்குப் பழி!... கரிகாலன் மாளிகையிலே அரசி பெருந்தேவியாரின் சவம்! இருங்கோவேளின் அரண்மனையிலே செழியனின் பிணம்!... ஆகாகா! பழிக்குப் பழி!!"
செந்தலையாரின் இந்தக் குரலைக் கேட்டு "அய்யோ!" என்று வாய்விட்டு அலறிவிட்டாள் முத்துநகை! தனக்கு முன்னால் புறப்பட்டுவிட்டானோ செழியன் என்று கண நேரத்தில் அதிர்ந்துபோன அவளுடைய கையிலிருந்த கட்டாரி தானே கீழே விழுந்தது!
அப்போது, செந்தலையார் அவசரத்தில் எழுப்பிய கண நேரத்து வெற்றிக் கோட்டையைத் தகர்த்து எறிகின்ற உண்மைச் செய்தியைச் சொல்லிக் கொண்டிருந்தான் அந்தக் குதிரைவீரன். "உண்மை அதுவல்ல அமைச்சரே!... நாங்கள் காற்றோடு போட்டியிட்டுத்தான் சென்றோம்! தாமரையின் குதிரை கீழே விழுந்துங்கூட, ஒரே குதிரையிலே இருவரும் பறந்து விட்டார்கள்! காட்டைக் கடந்து செல்வது மன்னரைக் காட்டிக் கொடுக்கவும் வழி அமைத்து விடுமோ என்று திரும்பி விட்டோம் அமைச்சரே!".
குதிரை வீரனின் நடுக்கம் கலந்த குரலைத் தொடர்ந்து, "அய்யோ!" என்கிற செந்தலையாரின் அலறல் காட்டையே கிடுகிடுக்க வைத்தது. 'அடப் பாவிகளே! இருப்பிடம் தெரிந்துவிடுமோ என்று பயந்து, நம் இதயத்தையே எடுத்து எதிரிக்கு அனுப்பி வைத்து விட்டீர்களே! இனி நடக்கப் போவது என்ன தெரியுமா?"
-செந்தலையாரின் வேதனை கலந்த கதறலை. குதிரை வீரர்களைக் காட்டிலும் முத்துநகைதான் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள்.
"வேளிர் குடியிலே நஞ்சு கக்கிய கருநாகமாம் அந்தக் கரிகாலன் தன் சூதிலே வெற்றி கண்டுவிட்டான்! அரசியார் மறைந்து விட்டார்களே! அந்த வீழ்ச்சியைத் தன் வெற்றிக்கு அடிக்கல்லாக்கிக் கொண்டான்! இருங்கோவேளுக்கு விடுத்த அழைப்பிலேதான் அந்த ஆபத்தின் முழு உருவமே புறப்பட்டது! அந்தப் பறையொலியிலேயே வேளிர்குல மரண கீதமும் கலந்து விட்டது! மனைவியின் சடலத்தைக் காணத் துடித்துச் சென்றிருப்பார் மன்னர்! அந்த மதோன்மத்தனின் கூண்டுக்குள்ளேயும் சிக்கியிருப்பார்! எஞ்சியிருந்தாள் தாமரை: அவளையும் ஏமாற்றிக் கவர்ந்து சென்றுவிட்டான் பாண்டிய நாட்டானாம் பச்சைத் துரோகி! அய்யோ! வேளிர்குடியே பூண்டோடு அழிந்துவிட்டதே! அதன் வீர வரலாற்றிலே மாசு படிந்து விட்டதே! போர்க்களத்திலே எதிரியின் வேலுக்கு மார்பு காட்டினான் என்று இருங்கோவேளின் சரித்திரம் முடிந்திருந்தால் - அண்ணனைக் கொன்றவனின் அங்கத்தைத் துண்டாடிய பின்னரே - அவன் அந்தப்புரத்துப் பேரரசிகளின் அலறலைக் கேட்ட பின்னரே மறத்தமிழச்சியாகத் தாமரை மடிந்திருந்தால் காலமெல்லாம் அந்தக் குலத்தின் மேன்மைக்குப் போராடிய இந்தக் கிழவனின் ஆவியும் நிம்மதியாகப் பிரிந்திடுமே"
-கடலலைபோல் எழுந்த அந்தக் குரல் நடுங்கியது; செந்தலையார் பொங்கிவந்த அழுகையை அடக்க முடியாமல் விம்மினார்.
அவருடைய குரல், காட்டுக்கு விளிம்பு கட்டியிருந்த மர உச்சிகளில் மோதி எதிரொலித்திருக்கத்தான் வேண்டும். குரல்கேட்டு, அங்குமிங்கும் சிதறிக் கிடந்த வேளிர்குடி வீரர்கள் ஒவ்வொருவராக ஓடிவர ஆரம்பித்தார்கள். பெருந் தேவியாரின் மரணத்தால் மனமுடைந்திருந்த அவர்கள் 'அதைவிட மேலான ஆபத்து ஏதேனும் வந்துவிட்டது போலும்' என்று கருதிச் செந்தலையாருக்கு முன்னே பரபரப்புடன் கூட ஆரம்பித்தார்கள்.
செந்தலையார் தலை நிமிர்ந்தார். தன் விழியோரத்தில் துளிர்த்து நின்ற கண்ணீரை வழித்து உதறினார். இப்போது அவருடைய நிமிர்ந்த தோற்றத்தில் - நேரிய பார்வையில் - உயர்ந்த கரங்களில் புது வேகம் பளிச்சிட்டது! போர்வெறி பிடித்தோருக்கு மத்தியிலே நிற்கும் தானைத் தலைவனைப் போல் தோற்றமளித்தார். அவரது உருளும் செவ்விழிகளும் உணர்ச்சியால் துடிக்கும் கரங்களும் - உரத்த குரலெழுப்பத் தயாராக நிற்கும் உதடுகளும்இடப்போகின்ற ஆணை என்னவோ என்று காத்துக் கொண்டு நின்றது அந்தப் பெருங்கூட்டம்.
அவர் ஏதோ விபரீதத்திற்கு வித்திடத்தான் போகிறார் என்றுணர்ந்த முத்துநகையின் உள்ளத்தில் திடீரென்று ஓர் எண்ணம் தோன்றியது. தான் எப்படியும் அந்த அறையிலிருந்து தப்பிவிட வேண்டும் என்று முடிவெடுத்தாள். பலகணி வழியாக வெளியே பார்த்தாள். காவலுக் கென்று வாசலில் நிறுத்தப்பட்டிருந்த வேளிர்குலத்து வீரன் இன்னும் செந்தலையாரை நோக்கி ஓடவில்லை. அவள் எப்படித் தப்புவது? அறையில் சுற்றும் முற்றும் பார்வையைச் செலுத்தினாள். ஓரே ஒரு பலகைக் கட்டிலையும், கீழே விழுந்து கிடந்த கட்டாரியையும் தவிர வேறு எந்தக் கருவியுமே கிடையாது. அவைகளைக் கொண்டு தப்புவது என்பது இயலாத காரியம். புதுவேகம் பெற்று விட்ட அவளது மூளையில் கணநேரத்தில் ஒரு யோசனை உதயமாயிற்று.
உடனே பலகணிக்கு அருகே சென்று சத்தம் வெளியே கேட்கும்படியாகக் கீழே விழுந்தாள். வீரன் திடுக்கிட்டு உள்ளே பார்வையைச் செலுத்தினான். "தண்ணீர்! தண்ணீர்!!" என்று கால், கைகளை உதைத்துக் கொண்டு முத்துநகை கத்தினாள். வீரனை நோக்கி, 'தண்ணீர் வேண்டும்' என்றும் சைகையால் காட்டினாள்.
படர்ந்து வந்து இருளில் அவளைச் சரியாக அடையாளம் புரியாதவீரன், உடனே தண்ணீர் எடுக்க ஓடினான். சற்று நேரத்திற்கெல்லாம் சிறிய மண் கலயம் ஒன்றில் நீர் கொண்டு வந்து அதைப் பலகணியின் வழியாக நீட்டினான். ஆனால் பலகணியில் பொருத்தப் பட்டிருந்த மரச்சட்டங்களுக்குள் கலயம் நுழையவில்லை. என்ன செய்வது என்று அவன் கணநேரம் கூட யோசிக்க இடம் வைக்காமல் முத்துநகை "சீக்கிரம்! சீக்கிரம்!! கதவைத்தான் திறந்து கொண்டு வாயேன்!" என்று கதறினாள்.
வீரன் கதவைத் திறந்தான். கலயத்தை நீட்டினான். அதை வாங்கிய முத்துநகை சற்றும் எதிர்பாராத வகையில் அவன் முகத்தில் வீசியடித்தாள். அதிர்ச்சியால் தடுமாறிய வீரன் தன்னைச் சமாளித்துக் கொள்வதற்குள் "ஆ" என்று பேரிரைச்சலைக் கிளப்பினான். இருங்கோவேளிடமிருந்து அபகரித்த கட்டாரியை அவன் அடி வயிற்றில் பாய்ச்சிய முத்துநகை, கண்சிமிட்டும் நேரத்தில் சிட்டுப்போல் வெளியே பாய்ந்து ஓடினாள். சுற்றிக் கொண்டு கீழே சாய்ந்த வீரனின் கண் இமைகள் கடைசி முறையாக மூடுவதற்குமுன் பார்த்த பார்வையில் அவள் தென்படவே இல்லை. சோழப் பேரரசின் மேல் கொண்ட தாயகப் பற்றால் தவிர்க்க முடியாத இந்த இரண்டாவது கொலையையும் செய்துவிட்ட முத்துநகை, கூடாரங்களுக்கிடையே பதுங்கிப் பதுங்கிச் சென்றாள்.
அவள் மறுபடியும் ஆண் உருவம் பூணுவதற்காக உடைகளைத் தேடுவதில் அதிகச் சிரமப்படவில்லை. செந்தலையாரிடம் ஓடிவிட்ட வீரன் ஒருவனது கூடாரத்தில் துணிவுடன் புகுந்து தேவையானவற்றை எடுத்துக் கொண்டு அவைகளால் தன் உருவையும் முழுக்க முழுக்க மாற்றிக்கொண்டு, மீண்டும் வெளியே வருகிறநேரத்தில் செந்தலை யாரின் குரல் மறுபடியும் உரக்கக் கேட்டுக் கொண்டிருந்தது. அதன் பக்கம் தன் செவிகளைத் திருப்பிவிட்டுத் தப்பும் வழியில் பார்வையைச் செலுத்தினாள் முத்துநகை!
"வேளிர்குடி வீரர்களே! வேளை வந்துவிட்டது உங்களுக்கு! நம் மன்னராம் இருங்கோவேளின் குடும்பத்தையே வேரோடு சாய்த்து, அதோ வெற்றிக்களிப்பால் கரிகாலன் எழுப்பும் சிரிப்பொலி கேட்கிறதா செவிகளில்? பின்னாலேயே எழும்புகிறது பாண்டியத் தளபதி நெடுமாறனின் குதூகலக் கூக்குரல்! அதற்கும் கணநேரம் உங்கள் காதுகளைத் திருப்புங்கள்! அதற்குள்ளே தான் மறைந்து கிடக்கிறது நம் மன்னர் எழுப்புகின்ற அபாயக் குரல்! அது மட்டுமா? வேளிர் குலத்து மணிமுடியை இடறிவிட்டு - மண் புழுதியை நம் வாழ்வில் அப்பி விட்டவர்களைப் பழி தீர்க்கப் புறப்படுவீர் என்று, அரசியாரின் மரணம் நமக்கு ஆணை இடுகிறது! வாழ்வெல்லாம் அனல்மேல் நின்றோம்! அணுஅணுவாகச் செத்தோம்! ஆசை படபடக்க - ஆவி துடிதுடிக்கக் காட்டிலே ஆட்சி நடத்தினோம்! நாகத்தால் விழுங்கப்பட்ட தவளையெனத் தவித்தோம்! ஆகவே, சாகத் தான் வேண்டுமென்று துணிந்து விட்டவர்களே...! இனி மோதத்தான் வேண்டும் சோழ மண்டலத்தோடு...!"
-செந்தலையாரின் உணர்ச்சி முழக்கம் இப்போது போர்ப்பரணியாக மாறிக் கொண்டிருப்பதைக் கேட்ட முத்துநகை, தான் எதிர்பார்த்த அபாயம் உருவாகி வருகிறது என்று உறுதி செய்து கொண்டே கூடாரங்களின் இடையே மறைந்து மறைந்து ஓடிக் கொண்டிருந்தாள்.
“வீரர்களே! என்ன சொல்கிறீர்கள்? உன்னத நிலையில் இருந்தீர்கள் நீங்கள்! இன்று உருமாறிக் கிடக்கிறீர்கள்!
உங்கள் சிங்காதனத்துச் சிறப்பையெல்லாம் அபகரித்துக் கொண்ட வனை நோக்கிப் படையெடுத்துப் புறப்படுவீர்! புறப்படுவீர்!!"
-ஓடிவந்து கொண்டிருந்த வேளிர்குல வீரர்களின் பார்வையிலி ருந்து தப்பி ஒரு புதருக்குள் மறைந்து கொண்டாள் முத்துநகை. அவர்கள் அவளைக் கடந்து சென்றபின் மீண்டும் தன் பயணத்தைத் துவங்கினாள். அங்கே செந்தலையாரின் குரல் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருந்தது. மன்னர் இருக்குமிடம் தெரியாத நேரத்தில் அவர்களைப் போர்க்களம் நோக்கி அழைப்பதற்குச் செந்தலையாரின் முழுமூச்சும் தான் தேவைப் படுகிறது!
"புறப்படுகிறோம்!" - வீரர்கள் முழக்கமிட்டனர்.
முத்துநகை தன்மேல் பட்ட விளக்கொளியைக் கண்டு திடுக்கிட்டாள். தரையோடு தரையாகப் படுத்து விட்டாள். மண்கோபுரம் ஒன்றிலிருந்து ஒளி கிளம்பியது. மரமாளிகைக்கு ஏற்படுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு களில் அதுவும் ஒன்று. கலங்கரை விளக்கத்தைப்போல் சுற்றிக் கொண்டே யிருக்கும் அந்த ஒளியின் உதவியால் நாற்புறமும் பார்வையிடலாம். எதிரிகளிடமிருந்து தப்புவதற்காக அமைக்கப்பட்ட அந்த விளக்கி லிருந்து தப்பிய முத்துநகை ஊர்ந்து கொண்டே சென்றாள்.
"பகை! பகை! பகை!"
"தூள்! தூள்! தூள்!" - இடி முழக்கமென வீரர்கள் எழுப்பிய இந்தக் குரல், காட்டைக் கடந்து பூம்புகார்ப் பாதையிலே தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்த முத்துநகையின் செவிகளில் மெல்லியதாகத்தான் கேட்டது!
பூம்புகார் சென்று அவள் என்ன செய்யப் போகிறாள்?
அவளைப் பிடித்து நிறுத்தி "எங்கே ஓடுகிறாய் பெண்ணே புயல் போல?” என்று கேட்க முடியுமா? முடியவே முடியாது. அந்தப்பெண் புலியின் வேகப்பாய்ச்சலைத் தடுத்து நிறுத்த எந்தச் சக்தியும் கிடையாது!
கரிகாலன் அரண்மனையிலே பெருந்தேவியின் பிணம் கிடக்க வேண்டும்; அப்போது, மன்னனோ இருங்கோவேளுக்கு அழைப்பு விடுத்துவிட்டான் நிராயுதபாணியாக வரவேண்டுமென்று! நகரம் நிச்சயம் குழப்பத்திலேதான் இருக்கும்! அந்த நிலையில் காட்டுக்கு மத்தியிலே உருவாகிக் கொண்டிருக்கும் இந்தப்போர் அபாயத்தை யார் எதிர்பார்க்கப் போகிறார்கள்? நிச்சயமாக எவரும் உணர முடியாது! அதைத் தெரிந்த ஒரே ஓர் உயிர் முத்துநகைதான்! அவள்தான் சோழமண்டலத்தை இந்த திடீர்த் தாக்குதலிலிருந்து காப்பாற்றியாக வேண்டும். மன்னனிடம் சென்று 'படை திரட்டுவீர்!' என்று யோசனை சொல்லும் நேரமும் இதுவல்ல! ஆகவே குழப்பத்தை மேலும் அதிகரிக்காமல், பெருந்தேவியாரின் சவ அடக்கமும் குலைந்துவிடாமல் அதே நேரத்தில் செந்தலையார் தலைமையில் புறப்படப் போகும் வேளிர்குடி வீரர்களின் போரையும் தடுத்து நிறுத்த என்ன வழி என்ற தீவிரச் சிந்தனையுடன், ஆண் வேடத்தில் பூம்புகார் நகரத்தில் புகுந்தாள் முத்துநகை!
புகுந்த சில விநாடிகளிலேயே தலைநகரின் நிலையைக் கவனித்த அவள் நெஞ்சில், எல்லாவற்றையுமே சமாளிக்கக் கூடிய ஒரு புரட்சிகரமான திட்டம் உருவாகி விட்டது;
அதை நிறைவேற்ற முத்துநகை மீண்டும் ஆண் வேடம் போட்ட தோடு மட்டுமில்லை;
குரலை மாற்றிக் கொண்டாள்!
பெயரை மாற்றிக் கொண்டாள்!
மக்கள் மத்தியிலே புகுந்தாள்.
குமுறிக் கொண்டிருந்த மக்களிடையே ஒரு புதிரான திட்டத்தை வெளியிட்டாள்.
திடீர்த் தலைவன் ஆனாள்!
யார் அந்தத் தலைவன்?
கோச்செங்கணான் தான்!
"மக்களை மன்னருக்கு எதிராகத் திருப்பிய அந்தப் புதிய தலைவன் யார்?" என்று அரண்மனையின் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் தீப்பொறி பறக்கப் பேசிய போது 'யார் அந்தக் கோச்செங்கணான்?" என்று கரிகாலன் கண்கள் சிவக்கக் கேட்ட போது, கோச்செங்கணான் என்று புதிய பெயருக்குள்ளே புகுந்து கொண்டிருந்த முத்துநகை தனக்கு ஆதரவாக மக்களைத் திரட்டிக் கொண்டிருந்தாள்!
பெருந்தேவியாரின் சடலம் புதைக்கப்பட்டபோது, அந்தப் பெருங் கூட்டம் பூம்புகாரைக் கடந்து செல்ல அதற்குத் தலைமை தாங்கிச் சென்று கொண்டிருந்தாள்!
மக்களைத் திரும்ப அழைத்துவர மன்னனே புறப்பட்ட போது கூட்டம் காட்டுப்பாதையில் அடியெடுத்து வைத்துக் கொண்டிருந்தது!
ஏன்?
சோழப் பேரரசோடு தன் உயிர் மூச்சைப் பிணைந்து விட்ட புலவரின் புதல்வி முத்துநகையின் 'மர்ம'மான திட்டத் திலேதான் இந்தக் கேள்விக்கு விடை அடங்கியிருக்கிறது!
முத்துநகையின் தலைமையில் அடவியில் புகுந்த பூம்புகார் மக்களின் உள்ளத்தை அச்சம்தொட்டுப் பார்க்கவில்லை. அவர்களின் நெஞ்சம் பிடிவாத உணர்ச்சியால் கெட்டிப்பட்டிருந்தது. தங்களின் தலைவன் கோச்செங்கணான் எங்கே அழைத்துச் சென்றாலும் போகத் தயாராக இருந்தார்கள். சோழப் பேரரசின் பெருமையை நிலை நாட்டுவதற்காகவும், பூம்புகாரின் தன்மானத்தை எடுத்துக் காட்டுவதற்காகவும் இருங்கோவேளின் மீது கொண்டுள்ள பகையுணர்ச்சியை வெளிப்படுத்துவதற்காகவும் தியாக ஊர்வலம் நடத்துவதாகவே அவர்கள் எண்ணிக் கொண்டார்கள்.
இல்லாவிட்டால் பஞ்சின்மீது நடந்தாலும் பாதம் நோகும் என்று வருந்தத்தக்க வஞ்சிக் கொடிகள், கல்லிலும் முள்ளிலும் காலில் இரத்தம் கசிய நடை பழகுவார்களா? பிஞ்சுக் குந்தைகளை இடுப்பிலே சுமந்தவாறு ஆவேச நடைபோடும் தாய்மார்களின் உணர்ச்சிக்கு எதனை உவமை காட்டுவது? முற்றிப்போன வற்றல் கிழடுகளின் நடையிலே காணும் வேகம் முரசுகொட்டிச் செல்லும் வீரர்களின் அணிவகுப்பிலே கூடக்காண இயலாத ஒன்றன்றோ? வீரக் கனல் உமிழும் கண்கள் படைத்த வாலிபர்களை, அவர்களுடன் போட்டியிடும் கிழவர்களை, உணர்ச்சி வேகம் துள்ள ஓடிவரும் தாய்மார்களை, குழந்தைகளை முத்துநகை எங்குதான் அழைத்துப் போவாள்?
அய்யோ, அவள் போகும் பாதையைப் பார்த்தால் -மரமாளிகைக் கல்லவா செல்வது போல் தெரிகிறது!
அங்குள்ள இருங்கோவேள் மன்னனின் படைகளுக் கெதிரே கொண்டுபோய்ப் போர்க்கருவி எதுவுமில்லாத பூம்புகார் நகரத்து மக்களைப் பலியிட்டு விடப் போகிறாளா?
வேலும், வாளும், ஈட்டியும், கேடயமும் நிறைந்த அந்தப் படை வரிசையின் முன்னே கையில் போர்க்கருவி எதுவுமில்லாத பூம்புகார் மக்கள் என்ன செய்ய முடியும்?
முத்துநகை, இப்படி ஒரு பைத்தியக்காரச் செயலில் ஈடுபட்டது ஏன்?
சோழ மண்டலத்திற்காக உயிர் விடவும் துணிந்து விட்ட அந்த மங்கைநல்லாளின் திட்டம் பற்றி அவசர முடிவுக்கு வந்து விடாமல் மேலும் கவனிப்போம்.
காட்டு வழியில் ஒரு மரத்தின் மீது கோச்செங்கணான் ஏறிக் கொண்டான். மக்கள் வெள்ளம் அம்மரத்தைச் சூழ்ந்து நின்றவாறு தங்கள் தலைவனின் வாயைப் பார்த்துக் கொண்டு நின்றது. கோச்செங்கணான் தன்னுடைய விழிகளை நாலா திசையிலும் ஓடவிட்டு, மாற்றார் யாரும் தொலைவிலே கூட இல்லை என்பதைப் புரிந்துக் கொண்டு பிறகு பேசித் தொடங்கினான்!
ஒரே நாளில் காவிரிப்பூம்பட்டினத்துப் பெருமக்களின் உள்ளத்தை யெல்லாம் தன்பால் இழுத்துக் கொண்ட தன்மானப் பொலிவு கொண்ட வீரத் தமிழ்க் குரலல்லவா அது! மக்கள் கடல் அலை ஓய்ந்து அந்தக் குரலின் பக்கம் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டது.
அவள் உரையாற்றினாள்! எந்தத் தானைத் தலைவனும் ஆற்றிட இயலாத போர் உரை:
"பூம்புகார் மக்களே! நாம் நின்று கொண்டிருக்கும் இந்த இடத்திலேயிருந்து நாலைந்து கல் தொலைவிலே தான் நமது பகைவன் இருங்கோவேளினுடைய பாசறை இருக்கிறது. மரத்தால் மாளிகை யமைத்துக் கொண்டு யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்ற நெஞ்சுரத்தால் சோழப் பேரரசைச் சாய்க்கப் படை திரட்டிக் கொண்டிருக்கிறான். பகையை எதிர்க்கப் படை திரட்டும் வேலை முடிந்து விட்டதைப் போல் அவனுடைய அமைச்சர் செந்தலையார் போர் முரசும் கொட்டி விட்டார். அந்தக் கிழட்டுப் புலியின் உறுமலைக் கேட்ட பிறகே நான் தலைநகருக்கு ஓடிவந்தேன். உங்களையெல்லாம் அணுகினேன். உங்களிடம் இதுவரையில் வெளியிடாத உண்மையினையும் இப்போது வெளியிடப்போகிறேன். பூம்புகார்மீது பாய்வதற்கான எல்லாவித ஏற்பாடுகளையும் முடித்துக் கொண்டு திடீரெனக் கிளம்பப் போகிறார்கள் இருங்கோ வேளின் வீரர்கள். நகரம் எப்படியிருக்கிறது என உளவறிய வந்திருந்த இரண்டொரு வேளிர்குல வீரர்களையும் நான் சந்தித்தேன். அவர்கள் என்னைப் புரிந்து கொள்ளவில்லை. நான் அவர்களை யாரென்று புரிந்து கொண்டு, அவர்களுடைய செயலனைத்தையும் இடைவிடாது தொடர்ந்து கவனித்தேன். நாமெல்லாம் பூம்புகாரை விட்டுக் கிளம்பியதும் அவர்கள் தாங்காத மகிழ்ச்சியுடன் குதிரைகளிலேறி மரமாளிகைக்குப் புறப்பட்டு விட்டனர். இந்நேரம் மரமாளிகையிலிருந்து படை புறப்படத் தயாராக இருக்கும்!
"பூம்புகாரில் மக்களே இல்லை. மக்களின் கோபத்துக்கு மன்னன் ஆளாகிவிட்டான் என்ற மகிழ்ச்சிக்குரிய செய்திகளால் அமைச்சர் செந்தலையாரின் தோள் வீங்கிப் போயிருக்கும். இருங்கோவேளின் படை இந்த வழியாகத் தான் பூம்புகார் நோக்கிப் போகப் போகிறது. 'இவ்வளவு தெரிந்திருந்தும் எங்களையெல்லாம் இங்கே ஏன் அழைத்து வந்தாய்? என்று என்னைப் பார்த்துக் கேட்பது போலிருக்கிறது உங்களுடைய பார்வை! இருங்கோவேளின் படையைச் சோழநாட்டுப் படைவீரர்கள் எதிர்த்து முறியடித்தார்கள் என்று சொல்லும் போது ஏற்படுகிற பெருமையை விட, அந்தப் படையைப் பூம்புகார்த் தலைநகரத்து மக்களே எதிர்த்து விரட்டினார்கள் என்று கூறும்போது தான் அதிகப்பெருமை என்று நான் கருதுகிறேன், நீங்களும் அப்படித்தானே கருதுகிறீர்கள்?
இதைக் கேட்டுவிட்டுச் சற்று அமைதியாக அவள் மக்களைப் பார்த்தாள்.
"ஆமாம் அதுதான் சரி!" என்று மக்கட் பெருங்கடல் முழங்கியது. முத்துநகை மீண்டும் தொடர்ந்தாள்.
"போர்க் கருவிகளைக் கொண்டு களம்புகத் துடித்து வரும் வேளிர் படை வீரர்களை வெறுங்கையுடன் நாங்கள் எப்படி எதிர்ப்பது என்று கேட்பீர்கள். வேளிர் வீரர்களுக்கு எதிராக வேலும், வாளும் பிடித்துப் போரிடுவது சோழ வீரத்துக்கு இழுக்கான செயலாகும். அதனால் நான் கூறுகிறேன், மறவர்குல மக்களே...!
"உங்கள் பரந்த நெஞ்சங்களே பகைவரின் வேல், வாட்களைத் தாங்கும் கேடயங்களாகட்டும்! உரம் வாய்ந்த உங்கள் வீரக் கரங்களே எதிரிகளின் தலைகளை அறுத்துத் தள்ளும் போர் வாட்களாக மின்னட்டும்!
'குழந்தைகள், கிழவர்கள், உடமைகள் நீங்கலாக அனைவரும் என் ஆணைக்கு அடங்கும் விதத்தில் தனி அணிவகுப்பாக வந்து நில்லுங்கள்!
தலைவனின் வார்த்தையைத் தட்டாமல் முதியவர்கள் மற்றவர்களிடமுள்ள குழந்தைகளைத் தாங்கள் பெற்றுக் கொண்டு, உடைமைகளைத் தங்கள் பொறுப்பில் ஏற்றுக் கொண்டு ஒதுங்கி நின்றனர்.
கிழவர்களின் சார்பாக ஒருவர் பேசினார், "குழந்தைகளையும் உடைமைகளையும் காப்பாற்றும் பொறுப்பைக் கிழவிகள் ஏற்கட்டும். நாங்கள் போராடத் தயாராக இருக்கிறோம்!" - என்பதாக.
அதை கோச்செங்கணான் மறுத்துவிட்டான்.
"அன்பார்ந்த சோழர் குலப் பெரியோர்களே! தாய்மார்களே! உங்கள் வீரத் திருமுகங்கள் கண்டு நாங்கள் புதிய பலம் பெற்று விட்டோம். நீங்கள் அனைவரும் இந்தப் பகுதியை அடுத்த இடங்களில் தங்கியிருக்க வேண்டும். நீங்கள் பெற்றெடுத்த வீர மறவர்களும் வீராங்கனைகளும் பகையை எதிர்க்கப் புறப்பட்டு விட்டார்கள். அவர்களை வாழ்த்தி அனுப்புங்கள். அனைவருமே திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்காது என்று எனக்கு நன்றாகத் தெரியும். பல்வேறு களங்களுக்குப் பிள்ளைகளை அனுப்பிப் பழக்கப்பட்டவர்களாயிற்றே. நீங்கள்! காதலனின் விழுப் புண்ணின்மீது முத்தமிடுவதென்றால் சோழ நாட்டுப் பெண்களுக்குத் தனி இன்பமாயிற்றே! அதிலும் பயங்கரமான சோதனைக்கு உங்கள் வீட்டுப் பிள்ளைகளை நான் அழைத்துப் போகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள்' இதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. - சோழ நாட்டைக் காப்பாற்ற! இருங்கோவேளின் படைகள் புறப்படுகின்றன என்ற செய்தியை மன்னரின் காதில் போட்டாலோ, அவர் இந்நேரம் அதை அலட்சியப்படுத்திவிடுவார். நமது மன்னர் பெருவீரர், ஆற்றல் மிக்கவர், என்றாலும் எதையும் காலந் தாழ்த்தியே செய்யவேண்டும் என்ற கொள்கையைக் கடைப்பிடிக்கிறவர். இருங்கோவேளின் மனைவியை அடக்கம் செய்கின்ற நேரத்தில் அவனுக்கும் அழைப்பு அனுப்பிவிட்டு, அவன் மரமாளிகை நோக்கிப் படையெடுப்பதா என்றும் கேட்பார். அவரைச் சமாதானப்படுத்தி நம் வழிக்குத் திருப்புவதற்குள் இருங்கோவேளின் படைகள் பூம்புகாரை வளைத்துவிடும். இந்தக் காரணங்களால்தான் மன்னனை நம்புவதைவிட மக்களை நம்புவது மேல் என்ற முடிவுக்கு வந்தேன். நீங்களும் என் கையைப் பலப்படுத்தி விட்டீர்கள். நாங்கள் புறப்படுகிறோம். உங்கள் பிள்ளைகளிலே ஒருவனாகவே என்னையும் வழி அனுப்பி வையுங்கள். சோழ நாட்டின் மங்காத புகழை - குறையாத வீரத்தை மாற்றார் உணரச் செய்து, அந்த மாளிகையை நெருப்பின் வாயிலே தள்ளி விட்டுத் திரும்புகிறோம்! இருங்கோவேளின் படை அழிந்தால், பிறகு அவன் கையில் கோலில்லாத நொண்டிபோல் ஆகிவிடுவான். அவனை அடிமையாக்கிப் பூம்புகார்த் தெருவிலே இழுத்துச் செல்வோம்! என்னருமைத் தாயகத்துப் பெருமக்களே! புறப்படுங்கள்!"
கோச்செங்கணானின் இந்த முழக்கம் கேட்டுப் போருக்கு எனத் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களும் வீராங்கனைகளும் ஆவேசத்துடன் புறப்பட்டார்கள்.
அவர்களை முதியவர்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். தங்கள் அருமைச் செல்வங்களுக்கு முத்தமளித்து விட்டுக் கோச்செங்கணான் பின்னே பூம்புகார் மக்கட்படை தொடரலாயிற்று.
அதனை விட்டு இரண்டு கல் தொலைவில் பூம்புகார்ப் படை செல்லும் போது, எதிர்த்திசையில் இருங்கோவேளின் படைகள் வருவதை முத்துநகை உணர்ந்து கொண்டாள். உடன் அவள் நின்று, பூம்புகார் மக்களுக்குப் போராட வேண்டிய முறைப்பற்றி விளக்கமுரைத்தாள். அவளது விளக்கத்தை ஏற்றுக்கொண்டு அவர்களும் செயல்படத் தொடங்கினார்கள்.
சற்று நேரத்திற்கெல்லாம் பூம்புகார் மக்கள் திடீரென மறைந்து விட்டார்கள். அவர்களின் தலைவன் கோச்செங்கணானையும் காண வில்லை. காட்டுமரங்கள் ஒவ்வொன்றின் மறைவிலும் ஒவ்வோர் ஆளென ஒளிந்து கொண்டார்கள் கோச்செங்கணான் உயர்ந்த மரமொன்றின் உச்சியில் மளமளவென்று ஏறினான். எதிரியின் படைகள் எவ்வளவு தூரத்தில் வருகின்றன என்று பார்ப்பதற்காகவே அவன் இத்துணை பரபரப்புடன் மரத்தில் ஏறினான். அந்த அவசரத்தில் மரக்கிளையென்று மலைப்பாம்பைப் பிடித்துக் கொண்டு கிளைக்குக் கிளை தாவினான் என்றால், அவனது உணர்ச்சியை அளவிட்டுக் காட்ட முடியுமா?
உச்சியிலிருந்தவாறு இருங்கோவேளின் வேளிர் படைகள் வருகின்றனவா என்று விழி வலிக்கும் வரையில் பார்த்துக் கொண்டிருந்த கோச்செங்கணான், கீழே குனிந்து அனைவரையும் தயாராகச் சொன்னான். அதோ இருங்கோவேளின் படைகள்!
என்ன அதிசயம்! அனைவரும் பண்டார உடையில் அல்லவா வருகிறார்கள்! இப்படித்தானே முன்பொருமுறை பூம்புகாரில் நுழைந்து, செழியனைத் தூக்கிக் கொண்டு போனார்கள். முத்துநகைக்கு ஆவேசம் மிகுந்தது.
"ம்! தயார்! தயார்!" என்று கீழே ஒளிந்துள்ள பூம்புகார் மக்களுக்கு ஆணையிட்டாள்.
இருங்கோவேளினது பண்டாரப் படை செந்தலையார் தலைமையில் புயல் வேகத்தில் வந்து கொண்டிருந்தது. மரத்துக்கு மரம் பூம்புகார்ப் படையினர் பதுங்கிக் கொண்டு தங்கள் தலைவனின் அடுத்த கட்டளைகளை எதிர்நோக்கியிருந்தனர். மரமாளிகையிலிருந்து புறப்பட்ட பண்டாரப்படை வீரர்களுக்குத் தங்களைச் சூழ்ந்து மரவியூகத்தில் எதிரிகள் ஒளிந்திருக்கிறார்கள் என்று எப்படித் தெரியும்? பண்டாரப் படையின் நீளத்தையும் அதில் வரும் வீர்களின் கம்பீரத்தையும் கண்ட முத்துநகை, தன் தலைமையிலுள்ள மக்கள் படையின் வலிமையை ஒரு கணம் எண்ணிப் பார்த்துப் பெருமூச்சு விட்டாள். எனினும் அயர்ந்து போகாமல் ஆணையிடுவதற்குத் தன்னை தயார்ப்படுத்திக் கொண்டாள். பூம்புகார் மக்கள் எத்தனை பேரை இந்த இடத்திலே பலியிட வேண்டுமோ என நினைத்துக் கவலைப்பட்டாள். அதே சமயம் தன்னைப் போன்ற வீரப்பெண்மணிகள் பலர் எதிரியின் படை பலத்தைச் சாய்க்கும் நோக்கத்துடன் மரங்களின் பின்னே ஒளிந்திருக்கும் காட்சி அவளுக்குத் தெம்பு கொடுத்தது.
பண்டாரப்படை, மரவியூகத்திற்கு அருகே வந்து விட்டது. அனைவருமே காவி கமண்டலங்களுடன் வருகிறார்கள். அந்தச் சாய உடைக்குள்ளே சாவுக் கருவிகள் மறைக்கப்பட்டிருக்கின்றன. முன்னே வந்து கொண்டிருக்கும் அந்தக் கிழட்டுச் செந்தலையாருக்கு இவ்வளவு பலம் எங்கிருந்து வந்தது?
இப்படி ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்த முத்துநகையின் கண்களில், தூரத்தில் வேறோர் அதிசயமான காட்சி - ஆனால் அதிர்ச்சி தரக்கூடிய காட்சி -தோன்றியது.
வேறொரு பாதையில் இருங்கோவேளின் படையைச் சேர்ந்த குதிரைகள் ஓடிக்கொண்டிருந்தன. அந்தக் குதிரைகளை ஒரு சிலரே கண்காணித்துச் சென்றனர். முத்துநகைக்குச் செந்தலையாரின் தந்திரம் புரிந்துவிட்டது. 'பண்டாரப்படை தலைநகரில் புகுந்து அரண்மனையில் நுழைய நேரம் பார்த்திருக்க வேண்டியது. நுழையும் நேரத்தில் குதிரைகள் தேவைப்படுமாதலால் அதற்கான குதிரைகளை வேறொரு பாதையில் பூம்புகாருக்குக் கொண்டு செல்ல வேண்டியது.' எங்கே-எப்போது-எந்தத் தந்திரம் கையாளப்பட்டுப் பண்டாரங்கள் அந்தக் குதிரைகளை அடைவார்களோ தெரியவில்லை. செந்தலையாரின் சூழ்ச்சியில் ஒரு பகுதியை மட்டும் அவள் புரிந்து கொண்டாள். அந்தக் குதிரைகளால் இப்போது இங்கு தொல்லையில்லை என்ற மகிழ்ச்சியுடன் முத்துநகை, செந்தலையாரும் படைவீரர்களும் எதுவரையில் வந்திருக்கிறார்கள் என்று பார்த்தாள்.
இப்போது அவர்கள் மரவியூகத்துக்கு மத்தியிலே வந்து விட்டார்கள். இன்னும் தங்களுடைய தலைவனிடமிருந்து ஆணை பிறக்கவில்லையே என்று பூம்புகார் மக்கள் துடிதுடிப்புடன் மேலே மரக்கிளையின் உச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள், தங்கள் கழுத்து வலியையும் பொருட்படுத்தாமல்!
மரவியூகத்துக்குள் பண்டாரப்படையின் வரிசை வரவர முத்து நகைக்கு உள்ளத்திலே ஒரு கலக்கம் ஏற்பட்டது. போர் புரிய வேண்டுமே. அந்தப் போரில் தன் உயிர் போய்விட்டால் என்ன செய்வது என்ற கலக்கமல்ல, அது! வெறியும் முரட்டுத்தனமும் கொண்ட இருங்கோவேள் படையினரின் வாளுக்கும் வேலுக்கும் தன் நாட்டு மக்கள் அனைவரும் பலியாகிவிடக்கூடுமோ? வெற்றிபெற்ற வேளிர்படை, பூம்புகார் அரண்மனையிலும் நுழையக் கூடுமோ என்ற ஐயப்பாட்டின் மீது எழுந்த கலக்கமே அவளை ஒரு கணம் நிலைகுலைய வைத்தது.
மிகவும் நெருக்கடியான அந்த நேரத்தில் அவளுக்குப் பின்புறமாகச் சிறிது தொலைவில் குதிரையொன்று வேகமாக வரும் காலடி ஓசையும் கேட்டது. திரும்பிப் பார்த்தாள். மரங்களின் மறைவிலும் புதர்களின் ஓரத்திலும் குதிரை வந்து கொண்டிருந்ததால் அதில் அமர்ந்திருந்தது யார் என்று கண்டுபிடிப்பது அவளுக்குக் கஷ்டமாக இருந்தது.
குதிரையில் வருபவனைக் கவனிப்பதா?பண்டாரப்படையின் மீது பாய்வதற்குத் தன் மக்களுக்கு ஆணையிடுவதா?
அது மட்டுமல்ல- அங்கே உள்ள பயங்கரம்! அவள் மர உச்சிக்குச் செல்லும்போது ஏறிச் சென்றாளே, மலைப்பாம்பு - அது வேறு அவள் கீழே இறங்கி வரட்டும் என்றோ என்னவோ அடிமரத்துக் கிளையிலே அமைதியோடும் ஆவலோடும் படுத்துக் கொண்டிருக்கிறது!
குதிரை, மிக வேகமாக வருவதைக் கண்டாள். மரவியூகத்துக்கு. பண்டாரப்படை முழுவதும் வந்து விட்டதையும் உணர்ந்தாள். இனித் தாமதிக்கக் கூடாது; என்ன ஆனாலும் ஆகட்டுமென்று, "கரிகால் மன்னர் வாழ்க!ம்... பாயுங்கள்!" என்று உரத்த குரலில் கூவினாள்.
பூம்புகார் மக்கள் சிங்கம்போல் கர்ச்சித்து நடுவில் சிக்கிய பண்டாரப் படையின் மீது பாய்ந்தனர், அவர்களுக்கு ஆணை பிறப்பித்த உணர்ச்சிப் பெருக்கோடு மரத்திலிருந்து அவசரமாகக் கீழே இறங்கிப் போரில் கலந்து கொள்ள அடிமரத்துக் கிளையில் குதித்த முத்துநகையை மலைப்பாம்பு சுற்றிக் கொண்டது! அதன் பயங்கரப் பிடியிலிருந்து தப்ப முடியாமல் முத்துநகை மரக்கிளையிலிருந்து கீழே தொங்கிக் கொண்டிருந்தாள்.
தங்கள் தலைவன் கோச்செங்கணான் மலைப்பாம்பிடம் சிக்கித் தலைகீழாகத் தொங்குவதைக் கவனிக்காமல் பூம்புகார் மக்கள் வேளிர் வீரர்களை மடக்கி வீழ்த்துவதில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இருங்கோவேள் என்கிற கொடிய நச்சுப் பாம்பின் கோரப் பற்களுக்கிடையேயிருந்து சோழ மண்டலத்தைக் காக்கும் பயங்கரப் போராட்டத்தில் ஈடுபட்டுவிட்ட முத்துநகை, மலைப்பாம்பின் பிடியில் சிக்கிக் கொண்டதை யாருமே கவனிக்கவில்லை.
"பாயுங்கள்?" என்ற தலைவனின் ஆணை புறப்பட்டது தான் தாமதம்; பூம்புகாரை வெற்றுப் பூமியாக்கி விட்டு வந்திருந்த பெரும்படை புயலில் பறக்கும் சருகைப் போல் பாய்ந்தது.
வஞ்சினம் ஏற்று வந்தவர்களின் மேல் மன்னனைக் காக்கும் மகத்தான கடமையைப் பெற்றுவிட்டவர்கள் பாய்ந்து விட்டார்கள்.
உடலைப் பண்டார உடைக்குள்ளும், உள்ளத்தைப் பழி வாங்கும் உணர்ச்சிக்குள்ளும் மறைத்துக் கொண்டவர்களை நோக்கி, கோச்செங்க ணானின் ஆணைக்குத் தங்கள் உடல், பொருள், ஆவி அத்தனையையும் அர்ப்பணித்து விட்டவர்கள் மோதிய அந்தக் காட்சிக்கு ஈடு.
இதுவரை எந்த ஏடுகளிலும் காணாத ஒன்று. கற்பனைக் கண்களாலும் எவரும் காணச் சகிக்காத ஒன்று.
வெல்லற்கு அரியான் இலங்கை வேந்தனின் போர்த்திறன் உணராத குலப்பகைவனாம் இராமன். "இன்று போய் நாளை வா!" என்று வேண்டினானாமே; அன்றிருந்த களக் காட்சியை நினைப்பதா?
'வாளுக்கு முத்தமிடும் தமிழனை இகழ்ந்தோரைத் தாள் பணியச் செய்வேன்' எனச் சூளுரைத்துச் சென்ற சேரன் செங்குட்டுவன், கனக விசயர் மண்ணிலே கண்ட இரத்தக்களரியை எடுத்துக் காட்டுவதா? களம் பல கண்ட சரித்திரம் வெற்றித் தேவியை ஆரத்தழுவிக் கொண்ட வரலாறு-இதுவரை சந்தித்திராத புதுமையான போரல்லவா இது! கொலைக் கருவிகளை மறைத்துக் கொண்டிருந்த புல்லர்கள் ஒரு புறம்: வெற்றுக் கைகளையே படைக் கலன்களாகப் பயன்படுத்திய மக்கள் மறுபுறம். இத்தகைய விந்தையான போரை எப்படித்தான் வர்ணிப்பது?
திடீரென்று வளைத்துக் கொள்ளப்பட்ட பண்டாரப் படை வரிசை தங்கள் இக்கட்டான நிலையைப் புரிந்து கொள்வதற்கு முன்னதாகவே பூம்புகார் மக்களால் தாக்கப்பட்டார்கள்! "அய்யோ” என்று எழும்பிய ஒரு பெருங்குரல் வனப்பகுதியில் மோதி எதிரொலித்தது; ஆனால் அதற்குள்ளேயா மலைப்பாம்பிடம் சிக்கிவிட்ட முத்துநகையின் அபயக்குரலும் மறைந்து அழித்துவிட வேண்டும்.
இரு கூட்டமும் மோதிக் கொண்டன.
மறைவிலிருந்த போர்க்கருவிகள் காலத்தை எதிர்பார்த்தக் கொண்டிருந்த வேல், வாள் எல்லாமே 'வேளை வந்துவிட்டது' என வெளிவந்தன.
பளபளத்த கொலைக் கருவிகள் மட்டுமா? அல்ல; அல்ல; நடுக்காட்டிலே வாழ்ந்திருந்தவர்களின் நாடி நரம்புகளிலே புதிய முறுக்கு ஏற்பட்டது. செந்தலையாரின் சிம்ம கர்ச்சனையால் சிலிர்தெழுந்தவர் செங்களம் காணத் தயாராகிவிட்டார்கள்! பகையைத் தூளாக்கத் துடித்தவர்களின் விழிகளிலே கொலைவெறி தாண்டவமாடியது! எப்படிச் சமாளிப்பது இந்த எதிர்ப்பை? ஏதுமற்ற கரங்களால், எதிர்பார்க்காத பகைவர்களை வென்று விடுவதும் இயலுமோ? அய்யோ, எங்கிருந்தோ குதித்தவனுக்கு அடிமையானோமே; ஆணையைக் கேட்டோமே! கெட்டழியப் போகிறோமே!
இப்படி நினைக்கவில்லை, பூம்புகார் மக்கள்!
அவர்கள் கரங்களிலே வாள் பளபளக்கவில்லை; ஆனால் கண்களிலே தோன்றிய இலட்சிய வெறியிலே தீக்குழம்பின் ஜ்வாலை தெரிந்தது! எதிரியின் பாய்ச்சலைத் தடுக்கும் கேடயம் இல்லை அவர்களிடம். ஆனால், வேலா - வாளா - அமைதியுலகுக்கனுப்பும் சாவா - எதுவரினும் தடையில்லை; இடமுண்டு எம் நெஞ்சில் என்று வரவேற்புத்தரும் திறந்த மார்பகங்கள் தெரிந்தன!
"வேளிர் குடியினரே! வெற்றி வாசல் திறந்துவிட்டது. நம்மை நோக்கி! சோழ மண்டலத்தின் சோற்றாலடித்த பிண்டங்கள் நம்மைத் தேடிவந்து தருகின்றன உயிர்களை; இனி நாம் அடிமையல்ல; வேற்றானை அண்டிக் கிடப்போரல்ல; இதை அந்த அக்கிரமக்கார அரசனுக்குத் தெரிவிக்க அறுத்துக் கொண்டு வாருங்கள் தலைகளை; பெருக்கெடுத்து ஓடச் செய்யுங்கள் இரத்த வெள்ளத்தை! பகை! பகை! பகை!"
அந்தப் பெருங் கூச்சலிலே செந்தலையாரின் நெடிய குரல் எப்படித்தான் மற்றவர்களின் செவிகளில் பட்டதோ தெரியவில்லை. "தூள்! தூள்! தூள்!' என்ற முழக்கம் வானை முட்டியது!
ஆனால் பூம்புகார் மக்களின் செவிகளிலே இத்தகைய போர்க்கள எச்சரிக்கை கேட்கவில்லை; போர்க் குரல் கொடுக்கும் தானைத் தலைவன் தான் மலைப்பாம்பின் பசிக்கு உணவாகும் நிலையில் கிடக்கிறானே!
ஆனாலும், அந்த இலட்சியவாதியின் வீர உரை பல்லாயிரம் மக்களைப் படையாகத் திரட்டிவந்த செயல் வீரனின் சிம்மக்குரல் அவர்கள் செவிகளில் ஒலித்துக் கொண்டுதான் இருந்தது. மன்னனுக்கு எதிராக அழைத்து வந்த மக்கள் வெள்ளத்தைப் போர் முகட்டுக்குத் திருப்பி விட, மரத்தின் மீது ஏறி நின்று அவன் கொக்கரித்த குரலை மீண்டும் கேட்பதாகத்தான் அவர்கள் உணர்ந்தார்கள்.
"இருங்கோவேளின் படையைச் சோழ நாட்டுப் படை வீரர்கள் எதிர்த்து முறியடித்தார்கள் என்று சொல்லும் போது ஏற்படுகிற பெருமையைவிட, அந்தப் படையைப் பூம்புகார் தலைநகரத்து மக்களே எதிர்த்து விரட்டினார்கள் என்று கூறும்போது தான் அதிகப் பெருமை என்று நான் கருதுகிறேன்..."
-ஆமாம்; அந்தப் பெருமையைச் சூடிக் கொள்ள நாங்கள் தயார் இந்தப் போர்க்கதையைக் கேட்டுச் சோழப் பேரரசர் விடப்போகும் ஆனந்தக் கண்ணீரை இறுதிக் குளியலாக ஏற்றுக் கொள்ள எங்கள் சவங்கள் தயார் - போராடிக் கொண்டிருந்த பூம்புகார் மக்களின் வீரம் இதைத் தான் பறை சாற்றியது!
"உரம் வாய்ந்த உங்கள் வீரக்கரங்களே எதிரிகளின் தலைகளை அறுத்துத் தள்ளும் போர் வாட்களாக மின்னட்டும்!"
- கோச்செங்கணானின் இந்தக் கட்டளை, காட்டுக் கெரித்த நிலவாகி விடவில்லை; படையிருந்தும், படைக்கலன் இருந்தும், எதிரியின் தலைகளைப் பந்தாடவேண்டும் என்ற பகை இருந்தும், வேளிர் வீரர்கள் தீப்பட்ட புழுவைப்போல் விழுந்து துடித்த காட்சி, ஆணையிட்ட தலைவன் கண்டாலும் அதிர்ந்துவிடக் கூடியதாகத்தான் இருந்தது!
ஆனால் அந்தப் போர்க் காட்சியைக் கண்டும் களிக்க முடியாமல் 'வெற்றிக்கு வழிகாட்டுங்கள்!' என வீர உரை கொடுக்க ஆவல் இருந்தாலும் வாய் திறக்க முடியாமல் மலைப்பாம்பின் மடியிலே தன் மரணத்தையல்லவா எதிர்பார்த்துத் துடித்துக் கொண்டிருக்கிறாள் முத்துநகை! மென்மையற்ற காட்டு மிராண்டிகளின் உடலையே புசித்துப் புசித்துச் சலித்துப்போன அந்தப் பசியெடுத்த மலைப் பாம்புக்கு, ஒரு மனித உடலைச் சுவைபார்ப்பதில், அதுவும் ஒரு கொள்கைவாதியின் வீரம் துடிக்கும் மேனியை விழுங்குவதில் என்ன ஆர்வமோ தெரியவில்லை. அந்தச் சுவையான விருந்துக்கு தன்னைத் தயார்செய்து கொண்டது வேக வேகமாக!
அதன் பிடி இறுகியது. முறுக்கிய கயிற்றைப் போல் அதன் நீண்ட உடலுக்கு இடையிலே சிக்கித் தவித்தாள் முத்துநகை!
இந்த மரணப் போராட்டத்தைப் பார்க்காத பூம்புகார் மக்கள், மனித உருக்கொண்டு வந்திருந்த மலைப்பாம்புகளை அழிக்கும் பெரும் பணியிலே தங்கள் உயிரையே பணயம் வைத்து ஈடுபட்டிருந்தார்கள்!
ஓட்டைக் கூரை வழியே ஊடுருவும் ஒளிபோல் பூம்புகார் வீரனின் மார்பிலே பாய்கிறது ஒரு வேல்! "கரிகாலர் வாழ்க!" என்று கூச்சலிட்டுச் சாகிறான் அவன்! அந்தக் குரல்கேட்டு ஓடிவரும் வேறொருவன் முகத்திலே புன்னகை! செத்து மடிந்தவனைக் கண்டு சிரித்திடக் காரணம்.; அவன் நெஞ்சிலே பாய்ந்திருக்கிற வேல் தனக்குக் கருவியாகப் பயன்படுமே என்ற மகிழ்ச்சி! ஆமாம்! உடன்பிறந்தான் ஒருவனைக் கொன்ற அந்த வேல், வேளிர்குடி வீரர்களை பலரை வீழ்த்தும் வாய்ப்பைத்தான் தேடித் தருகிறது! சாவும் சாதனைக்கு வழிகாட்டிய இத்தகைய நிகழ்ச்சிகள் அந்தப் போரிலே ஏராளமாக நடைபெற்றன! அப்படிச் செத்தும் கொடுத்தவர்களின் சவங்களின் மேல் நின்றவாறு பூம்புகார்ப் பெரும்படை போராடிக் கொண்டிருந்தது!
அதுமட்டுமா! கையிலே கருவி கிடைக்காத வீரர்கள் தங்கள் கரங்களையே கருவிகளாக்கிக் கொண்டனர். இன்னும் சிலர் இயற்கை அன்னையின் தயவையும் நாடத் தயங்கவில்லை. உருண்டு கிடந்த குண்டுக்கற்களைப் பலங்கொண்ட மட்டும் தூக்கிப் பகைவர்களின் தலைகளைக் குறி வைத்து வீசினார்கள்! தலை சிதறிய உடல்கள் பல இப்படி கீழே சாய்ந்தன!
அந்தப் போர்க்களப் பேரிரைச்சலுக்கிடையே சற்று முன்பு அங்கே எழும்பிக் கொண்டிருந்த குதிரையின் காலடி ஓசை இப்போது கேட்கவில்லை. ஆனால், கொஞ்ச தூரத்திலே குதிரை வருவது மட்டும் நன்றாகத் தெரிந்தது. குதிரைமேல் அமர்ந்திருந்த உருவம் நன்றாக புலப் படவில்லை. ஆனால், அங்கு ஏற்பட்டிருந்த இனம் புரியாத பேரொலியைக் கேட்டு, அவன் முன்னிலும் வேகமாகத்தான் குதிரையைத் தட்டிவிடுகிறான் என்பது மட்டும் நன்றாகத் தெரிந்தது!
செத்தவர்கள் எழுப்பிய மரண ஓலம் - சாகின்றவர்கள் வாயிலிருந்து புறப்படுகின்ற புலம்பல் - வாட்கள் மோதிக் கொள்வதால் ஏற்படுகின்ற போர்க்கள ஓசை, இவ்வளவும் காட்டுப் பகுதிகளிலே மறைந்து கொண்டிருந்த முதியவர்களின் செவிகளிலும் பட்டன!
போருக்குப் பின்வாங்குகின்ற மரபிலே வந்தவர்கள் அல்லர் அவர்கள்; முரசு ஒலி கேட்டு வீட்டுக்கொருவீரரை அனுப்பி வைப்பதோடு மட்டுமல்ல வேளை வந்துவிட்டால் வேலெடுத்துப் பாயும் வீரக்குடியின் பரம்பரையில் உதித்தவர்கள்தாம். இருந்தாலும் அவர்கள் முகங்களிலே கவலையின் ரேகைகள் படர்ந்தன.
அதைப் போலத்தான் முதுபெருங் கிழவிகளின் இதயங்களும் சற்றுத் துணுக்குற்றன! அடுத்தடுத்த நாட்களிலே தங்கள் குடும்பங்களின் ஆண் மக்களையெல்லாம் போருக்கனுப்பிய பின், இனியும் வீரனில்லையே என்று ஏங்கி, மழலைகளின் கையிலும் வாளெடுத்துத் தந்து, "சென்றுவா மகனே செருமுனைநோக்கி!" என்று வாழ்த்தி வழியனுப்பி வைத்த வீராங்கனைகள் அவர்களின் மூதாதையர் அல்லவா? புறமுதுகிட்டான் மகன் என்று பொல்லாங்கு கேட்டுப் புலியெனச் சீறி, மானம் கெட்டவனுக்கு பாலூட்டிய மார்பகத்தை அறுத்தெறிவேன் என்று வஞ்சினம் ஏற்ற மறக்குடிப் பெண்டிரின் வரலாற்றை மறந்து விட்டவர்கள் அல்லவே அவர்கள்?
இருந்தாலும் வாழ்வை அனுபவித்துவிட்ட அந்த வயோதிகர்களின் கலக்கத்திற்குக் காரணம். தாங்கள் பெற்றெடுத்த வீரத் திருவிளக்குகள் தாயகத்தின் மானம் காக்க அணைந்து கொண்டிருக்கிற நேரத்தில், அவர்கள் மட்டும் மறைந்து கொண்டு நிற்பதா என்பதே?
"நாம் பெற்ற மக்கள் அங்கே மானம் காத்துக் கொண்டிருக்கிறார்கள்; மடிந்து கொண்டிருக்கிறார்கள்! காட்டு மரங்களினூடே பதுங்கிக் கிடக்க நாம் மட்டும் என்ன சுயநலக்காரர்களா? அல்லது சாவதற்குப் பயந்த கோழைகளா? புறப்படுங்கள்! துவண்டு விழும் அவர்களுக்குத் தோள் கொடுக்கப் புறப்படுங்கள்!"
- முதியவர் ஒருவரின் குரல் இப்படி எழும்பி அந்த வட்டாரத்தையே கிடுகிடுக்க வைத்தது!
மறுகணம் மறைந்திருந்த அவர்களும் சண்டை நடக்கின்ற இடம் நோக்கிச் சண்டமாருதமெனக் கிளம்பினார்கள்! குழந்தைகள் எழுப்பிய கூக்குரல் அவர்களைத் தடுத்து நிறுத்தவில்லை; ஏறுநடை போட்டு வேகவேகமாக நடந்தார்கள்.
உங்களுக்குச் சளைத்தவன் நானல்ல என்று சவால் விடுகிற முறையிலே வேளிர்குல அமைச்சர் செந்தலையார் அவர்களை நோக்கினார்; அந்தக் கிழப்புலி மீண்டும் உறுமியது!
"தொகைதொகையாகப் புறப்பட்டுவிட்டனர் பகைவர்கள்! இருங்கோவேளின் விலாப்புறத்து எலும்புகளே! நம் குல மன்னனைப் பிடித்துவிட்ட மதோன்மத்தனாம் கரிகாலன், படைக்குப்பதிலாகப் பல்லாடும் கிழவர்களையும் அனுப்பி விட்டான். வாருங்கள்! நல்ல பாடம் புகட்டுவோம். அந்த பகல்வேடக்காரனுக்கு! துவண்டு விடாதீர் கள்; துண்டாடுங்கள் துரோகிகளை; நாளை நம் மன்னர் மீண்டு வந்தால் எதிரிகளின் இரத்தத்தால் குளிப்பாட்டுவோம் அவரை! வெற்றி விழாக் கொண்டாடுவோம்; இந்த வீணர்களின் மரணக் கூக்குரலைப் பின்னணி யாக்கு. பகை! பகை! பகை!"
இப்படி மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு முழங்கிய செந்தலையார், மறுகணமே "அய்யோ!" என்று அலறினார். அந்தக் கதறல் காட்டையே ஓர் உலுக்கு உலுக்கி விட்டது!
வேளிர்குல வீரர்கள் திடுக்கிட்டு குரல் வந்த திசையை நோக்கினார்கள்.
அங்கே...
நெஞ்சிலே பாய்ந்த வேல் குத்திட்டு நிற்க - குருதி வெள்ளத்திலே தெப்பமென மிதந்து கொண்டிருந்தார் செந்தலையார்!
"அய்யோ.. அமைச்சரே!"
வேளிர்குடி வீரர்களின் இந்த கூக்குரல் ஒன்றாகச் சேர்ந்து எழுந்தது. சிலர் அவரிடம் ஓடினார்கள். பலர் செயலற்று நின்றார்கள்! கடைசிக் காலத்தில் அவர்களின் பக்கத்தில் நின்று, போராடும் துணிவூட்டிக் கொண்டிருந்த ஒரே ஒரு மூச்சும் காற்றோடு கலந்துவிடப் போகிறதே- என்பதை அவர்களால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
"என்னை விட்டுவிடுங்கள்! என்னை விட்டுவிடுங்கள்!!" செந்தலையார் தன்னை நோக்கி வந்தவர்களைப் பார்த்து, 'வராதீர்கள்' என்கிற பாணியில் சைகை காட்டினார்.
"நான் சாகவில்லை! நோய்க் கிருமிகள் என்னை அரித்துத் தின்று, ஈளைகட்டி, இருமி, விக்கி, வியர்த்து, விழி பிதுங்கி - நான் சாகவில்லை! இதோ... வீரனாகச் சாகிறேன்! வேளிர்குடியின் வீரத்திற்கு இலக்கணமாய், நம் மன்னர் பெருந்தகையின் மானத்திற்கு ஒரு சின்னமாய்ச் சாகிறேன்! நீங்கள் போராடுங்கள்! உங்கள் உடலின் கடைசித்துளி இரத்தம் இருக்கும் வரையில் மானம் காக்கப் போராடுங்கள்!... எதிரிகளை மரமாளிகையின் பக்கம் போகவிடாதீர்கள்! அது நம் அரண்மனை. அங்கே இந்த அக்கிரமக்காரர்களை அண்ட விட்டுவிடாதீர்கள்!"
-செந்தலையார் முன்னிலும் உரத்த குரலெடுத்து அலறினார். கீழே விழுந்து கிடந்த அமைச்சரிடம் ஓடோடி வந்தான் ஒரு வீரன். அவரது தலையைத் தன் மடி மீது வைத்துக் கொண்டான்!
"ஏன் நீ இங்கே வந்தாய் ? ஓடு ஓடு இல்லை இல்லை... நில் வீரனே! நீ எனக்கு ஓர் உதவி செய்வாயா?... நம் வீரர்கள் வென்று விடுவார்கள்!... நிச்சயம் வென்று விடுவார்கள்!. நாளை... நாளை நம் மன்னர் வெற்றி வீரராகப் பகைவன் கோட்டையிலிருந்து பவனி வருவார்! என்னுடைய பிணத்திற்கு அவரையே தீயிடச் சொல்வாயா?... அப்போதுதான், கால மெல்லாம் அவருக்கு உழைத்த இந்தக் கட்டை வேகும்! செய்வாயா... பகை!... பகை!!..."
-மறுகணம் செந்தலையாரின் தலை சாய்ந்து விட்டது! அதே சமயத்தில் குதிரையின் காலடியோசை அங்கே எழும்பியது. வீரர்கள் ஏறிட்டு நோக்கினார்கள்! குதிரைமேலிருந்த உருவம் அவர்களைச் சேர்ந்த எவருடையதுமல்ல என்பதைக் கண நேரத்தில் தெரிந்து கொண்டார்கள்! 'சோழப் படை தான் வரவேண்டும்; படை நடத்தி வருகிற தானைத் தலைவன் முன்னே வந்துவிட்டான்போலும்' என்று கருதிய அவர்கள் அப்போது திடுக்கிட்டார்கள்! தாங்கள் மிகவும் நெருக்கடியான கட்டத்தை அடைந்து விட்டதாகவும் உணர்ந்தார்கள்!
மறுகணம் தலைவனை இழந்த போர்முகப் படை என்னவாகுமோ- அது அங்கே நடந்து விட்டது!
இருங்கோவேளின் படைவீரர்கள் கருவிகளை வீசி எறிந்து விட்டுச் செந்தலையாரின் சவத்தையும் அப்படியே விட்டு விட்டுப் புறமுதுகிட்டு ஓடத் துவங்கி விட்டார்கள்!
குதிரையிலே வந்த வீரன் வேறு யாருமல்ல; கோச்செங்கணான் தலைமையில் சென்ற பூம்புகார் மக்களின் பாதச் சுவடுகளை அடையாளங்கண்டு வந்த கரிகால் மன்னனே தான்!
காட்டுவழி வந்த அவன், போர்க்களத்தைச் சென்றடைவோம்: அங்கே இருட்டுலகில் வசித்து வந்த இருங்கோவேளின் படைகள் புறமுதுகிட்டு ஓடும் காட்சியைக் காண்போம் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லைதான்!
ஆனாலும், இந்த எதிர்பாராத நிகழ்ச்சி குறித்து அவன் மனத்திலே எந்தவிதக் கருத்தும் ஏற்படுவதற்கு முன்பு, ஒரு கோரக்காட்சியைக் கண்டு திடுக்கிட்டான்!
இருபுறத்து வீரர்களும் அவ்வளவு நேரம் அங்கே போராடிக் கொண்டிருந்தபோது, மலைப்பாம்புடன் போராடிக் கொண்டிருந்த முத்துநகை, மலைப்பாம்பின் விரிந்த வாய்க்குள் தன் தலையை உணவாகத் தரப்போகும் காட்சியைத்தான் மன்னன் கரிகாலன் கண்டுவிட்டான் அப்போது!
மறுகணம் கீழே கிடந்த வேல் ஒன்றை எடுத்து வீசினான் முழுப்பலத்துடன். அருகிலே ஓடி, மீண்டும் அந்த வேலினாலேயே மலைப்பாம்பின் உடலைத் தாக்கினான்!
மலைப்பாம்பு கீழே விழுந்தது, அதன் பிடி தளர்ந்தது. நழுவியது! விடுபட்ட முத்துநகை கண்விழிக்காது கிடந்தாள்.
மன்னன் அவள் முகத்தருகே குனிந்தான். "வீரனே! என்னைப் பார்!” என்று அழைத்தான்!
மெதுவாகத் திறந்த முத்துநகையின் விழிகள் எதிரே மன்னனைக் கண்டு திடுக்கிட்டன!
"அரசே...!" வீறிட்டலறிய அவள் அவன் பாதத்திலே முகம் புதைத்து விம்மி விம்மி அழுதாள்!
பரிவுடன் - பாசத்துடன் கோச்செங்கணானைத் தூக்கினான் மன்னன் கரிகாலன்!