ரோமாபுரிப் பாண்டியன்/24. கோச்செங்கணான் இட்ட தீ
24
கோச்செங்கணான் இட்ட தீ
மலைப்பாம்பின் விரிந்த வாய்க்குள்ளே தன் உடல், உயிர், அவற்றினும் மேலான இலட்சியம் - எல்லாவற்றையுமே அர்ப்பணிக்க இருந்த நேரத்தில் கூட முத்துநகையின் உள்ளத்திலே அந்தப் போராட்டம் நிகழவில்லை. காட்டுக்கு மத்தியிலே கரிகாலனுக்கு முன்னே - கோச்செங்கணானின் உடையிலே நிற்க வேண்டிய எதிர்பாராத நிலை ஏற்பட்டபோது தணலிடைப்பட்ட புழுவாகத் துடித்தது அவளது நெஞ்சு!
வீரத்தோடு மலைப்பாம்பை வீழ்த்திவிட்டுப் பாசத்தோடு தன்னைத் தூக்கி நிறுத்திய மன்னனது கரங்களிலிருந்து தன்னை மெதுவாக விடுவித்துக் கொண்டாள். ஆனால் நெஞ்சில் நிறைந்துவிட்ட புகை மண்டலத்திலிருந்து பனி நிறைந்த மூட்டத்திலிருந்து அவளை விடுவிக்கும் சக்தி அப்போது எதற்குமே கிடையாது.
தெரிந்தோ தெரியாமலோ பூம்புகார்ச் சரித்திரத்தில் நடைபெற்றிராத செயல் ஒன்றைச் செய்துவிட்டாள் அவள். அதைப்பற்றி மன்னன் என்ன கருதுகிறான்? மக்கள் வாழ, தான் வாழ நினைக்கும் அந்தப் பெருந்தகையாளனின் பூமியிலிருந்து 'புறப்படுவீர் மக்களே!' என்று ஆணையிட்டு அழைத்துச் சென்ற அதே நேரத்தில் அவனுடைய நெஞ்சிலே குடி கொண்டிருந்த அமைதியையும் அல்லவா கூடவே அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டாள்? மன்னனுக்கு எதிராக மக்களைத் திரட்டிய குற்றமும், ஆணையேதும் பெறாமல் அவர்களை எதிரியின் பாசறை நோக்கித் திருப்பிவிட்ட குற்றமும், நடுக்காட்டிலே இரத்தக் களரியைத் தோற்றுவித்த பலரை இறப்புலகிற்கு அனுப்பிவிட்ட பயங்கரமான குற்றமும் மன்னிக்கக் கூடியவையல்ல என்பதை முத்துநகை நன்கு உணர்ந்து விட்டாள். அதனினும் பெருங்குற்றம் மன்னனை அந்த மாறுவேடத்தில் ஏமாற்றிக் கொண்டு நிற்பதல்லவா? இந்த இக்கட்டான நிலையிலிருந்து தப்புவதற்கு வேறு என்ன தான் வழி?
மின்வெட்டு நேரத்தில் முத்துநகையின் உள்ளத்தில் இந்த எண்ணங்களின் சதிராட்டம் நடைபெற்றுவிட்டது! இந்த ஊமை நாடகத்திற்கு எப்படி முடிவு காண்பது என்று தவித்துக் கொண்டிருந்த போது, அந்தத் திருப்பணியை ஏற்றுக் கொள்வதைப் போல் சற்றும் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்தது.
அமைச்சர் செந்தலையாரின் உடலருகே நின்று கொண்டிருந்த ஒரு வீரன், வெறிபிடித்தவனைப் போல் அவர் மார்பிலே தைத்துக் கொண்டிருந்த வேலை உருவி எடுத்தான். "வேளிர் குலத்தை அழிக்க வந்த கொலைகார வெறியனே! எங்கள் அமைச்சரின் இதயத்தைப் பிளந்த இந்த வேல், உன்னையும் இல்லாமல் ஆக்கட்டும்!" என்று கர்ச்சித்தான். கண் இமைக்கும் நேரத்தில் அந்த இரத்தம் தோய்ந்த வேலை முத்துநகையை நோக்கி வீசி எறிந்தான்.
"அய்யோ... வீரனே!" - அலறினான் கரிகாலன்.
முத்துநகை நிலைமையைச் சமாளித்துத் தப்புவதற்குத் தயாராவதற்குள் வேல் பாய்ந்து விட்டது! நெஞ்சிலே அல்ல; அவளை மாறுவேடதாரியாக ஆக்கி வைத்திருந்த தலைப் பாகையில்!
வேலோடு தலைப்பாகை கீழே வீழ்ந்தது! அலை அலையாய்ச் சுருண்ட அடர்த்தியான கூந்தலும் அவிழ்ந்து தொங்கியது! முத்துநகை தன் நெஞ்சிலே வேல் பாய்ந்து விட்டதைப் போல் அதிர்ச்சியில் தவித்துப் போனாள், அந்தக் கணத்தில்!
"முத்துநகையா? காரிக்கண்ணனாரின் புதல்வியா?"- கரிகாலன் தன் கண்களையே நம்பத் தயாராக இல்லாதவனைப் போல இப்படிக் கேட்டான்.
"எனனை மன்னித்து விடுங்கள் மன்னவா!" அரசன் சற்றும் எதிர்பாராத வண்ணம் அவனது காலடியிலேயே வீழ்ந்தாள் முத்துநகை. இந்தப் புதிரான காட்சியைக் கண்ட வேளிர்குல வீரனின் தாக்குதல் தொடரவில்லை! காரணம் 'மன்னவா, என்று முத்துநகை விளித்ததுதான்! அடுத்த கணமே எதிரே நிற்பவன் சோழ மன்னன் கரிகாலன்தான் என்பதை அவன் ஐயமறத் தெரிந்து கொண்டான். ஆகவே, அதைத் தொடர்ந்து அவன் நெஞ்சத்திலே கொஞ்ச நஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்த பழி வாங்கும் உணர்ச்சியும் விடை பெற்றுச் சென்றுவிட்டது.
கரிகாலன் தான் பேசினான்: "முத்துநகை! எழுந்திரு! நான் உன்னை மன்னிப்பதா? நீ செய்த பயங்கரமான குற்றத்திற்கு இந்த உலகத்தில் மன்னிப்பே கிடையாது!"
"அரசே!" திடுக்கிட்டு எழுந்தாள் முத்துநகை. அவளது குரலிலே பீறிட்டெழுந்த சோகத்தை மன்னன் உணர்ந்து கொண்டான்.
"ஆமாம்! சோழப் பெருங்குடி மன்னனாக மகுடம் சூட்டிக் கொண்ட என்னுடைய உடலில் ஓட்டிக் கொண்டிருக்கும் வலக்கரமாகப் பிறந்திருக்க வேண்டிய நீ - என் இதயத்தைச் சுற்றிக் காவலிருக்கும் எலும்புக் கூடாக, சிறைக் கதவாகச் செயலாற்றும் கண் இமையாகப் பிறவி எடுத்திருக்க வேண்டிய நீ - ஒரு பெண்ணாகப் பிறந்து விட்டது மாபெரும் குற்றமில்லாமல் வேறு என்ன?"
முத்துநகை கொண்ட அதிர்ச்சி கணநேரத்தில் அளவிடற்கரிய ஆனந்தமாக மாறிவிட்டது! அவள் விட்ட மகிழ்ச்சிப் பெருமூச்சின் சூடு தாங்காமல் தானோ என்னவோ, பிணக்குவியலில் இரை தேடவந்த காட்டுக் கழுகுகள் கூடச் சற்று பின்னடைந்து போயின!
"எனக்கு அந்தப் பெரும் பேற்றைத் தாங்கள் அளிக்கிறீர்களா மன்னவா?"
"இதை விட உயர்ந்த முறையில் உன்னைப் பாராட்ட உன்னுடைய தியாகத்தைப் புகழ - உனது தந்தையைப் போல் நானொரு புலவராகப் பிறக்கவில்லையே என்று வருந்துகிறேன் அம்மா!"
"போதும் அரசே! போதும்! இது ஒன்றே போதும்; நான் பிறவி எடுத்ததன் பயனைப் பூரணமாக அடைந்து விட்டேன்! பெண்ணாகப் பிறந்தவளின் வாழ்க்கையிலே வந்து போகும் பெருமைக்குரிய நாட்கள் இரண்டுதான் என்று நான் காவியங்களிலே படித்திருக்கிறேன்! நெஞ்சில் நிறைந்தவனுக்கு மாலை சூட்டும் திருநாளும்..."
"பெற்றெடுத்த மழலைச் செல்வம் தன் மார்பில் புரளும் பெரு நாளும் என்று சொல்கிறாயா? சோழ மாதாவின் சுந்தரத் திருமார்பிலே உரிமையோடு புரளும் பெருமையை நீ ஏற்றுவிட்டதாகவும், அதைப் போலவே இன்று நீ காப்பாற்றிய சோழர் குலத்தின் மானம்தான் நீ பெற்றெடுத்த மழலை என்றும் சொல்கிறாயா? இல்லை, முத்துநகை! இரண்டே இரண்டு தினங்கள் மட்டுமல்ல உனக்குப் பெருமையைத் தேடித் தந்தவை! உயிரைப் பணயம் வைத்து நீ போராடிக் கொண்டிருந்தாயே, அந்த ஒவ்வொரு கணமும் உன் வாழ்வினிலே பெருமைக்குரிய நேரம், குறுகிய வாழ்வுக் காலத்திலேயே கோலூன்றும் முதியோரும் எண்ண முடியாதவற்றை நீ சாதித்துக் காட்டியிருக்கிறாய் அம்மா!"
"இல்லை மன்னவா! இனிமேல்தான் பெரும்பகுதி பாக்கியிருக்கிறது! சோழ மண்டலத்தைச் சுற்றியிருக்கும் துரோகத்தை மறைத்திருந்த உடை மட்டுமே இப்போது அகற்றப்பட்டிருக்கிறது! இறைந்து கிடக்கும் இந்த பிணங்கள் - பெருகி ஓடும் இரத்த வெள்ளம் எல்லாமே அந்த அணிகலன்கள் தாம்! ஆனால் அந்தத் துரோகம் அழிக்கப்படவில்லை, துரோகத்திற்குத் துணையாக நிற்கும் வஞ்சக சக்தியும் முறியடிக்கப் படவில்லை."
உறுதி கலந்த அவளது குரல் மர்மமான யவனக்கிழவரையும், அவரை மறைத்து வைத்துச் சதி செய்யும் தந்தை காரிக்கண்ணனாரையும் சுற்றிக் கொண்டு சென்றது ! ஆனால் அவளது துடிப்பான பேச்சைத் தடுத்து நிறுத்தி விட்டது மன்னனது குறுக்கீடு.
"இல்லை; இல்லை! நீ அனுபவித்த கொடுமைகளே போதும்! தென்றல் சிலுசிலுக்க வேண்டிய உன் வாழ்க்கையிலே இனிப்புயல் எழுப்பும் பேரொலி கேட்கக் கூடாது. மலர்ந்து மணம் பரப்ப வேண்டிய வாழ்வு மலர். நடுக்காட்டில் மரக்கிளையில் மோதிச் சிதறிச் சுருண்டுவிடக் கூடாது! நீ வாழ வேண்டியவள்! இனிநான் உனக்கு எந்த ஆணையும் இடமாட்டேன்!
"ஆனால், ஒன்றும் மட்டும் பாக்கியிருக்கிறது மன்னவா!'
"எதைச் சொல்லுகிறாய் முத்துநகை?'
"இடையில் ஏற்பட்ட இடர்ப்பாடுகள் ஏராளம் என்றாலும் அன்றொரு நாள் நான் எடுத்துக் கொண்ட இலட்சியம் ஒன்றுண்டு. ஆணுடை பூண்டு, உங்களிடம் அனுமதி பெற்றுப் புறப்பட்டேனே- அந்த முதற் பணியை நான் மறந்து விடவில்லை! செழியனை மீட்பதுதானே எனக்கு நீங்கள் அளித்த கட்டளை...?"
"ஆம்!"
"அதை முடிப்பதற்குள் - பாண்டிய நாட்டுக்குச் சேர்ந்திட வேண்டிய அந்தச் சொத்தை மீட்டுத் தருவதற்குள் - என் கைகளுக்கு விலங்கிடக் கருதலாமா?... புறப்படுங்கள் இப்போதே. இருங்கோவேளின் மரமாளிகைக்குச் சென்று செழியனை மீட்போம்!"
- என்று சொல்லிவிட்டு முத்துநகை புறப்படத் தயாரானபோது அவர்களைச் சுற்றிலும் வேளிர்குடி வீரர்கள் பலர் சூழ்ந்து நின்றனர்.
கையொடிந்த நிலைக்கு ஆளாகிவிட்ட அவர்களால் எந்த வித ஆபத்தும் நேராது என்று இருவருக்கும் நன்றாகத் தெரியும். ஆனாலும் அவர்கள் ஏதோ சொல்ல நினைக்கிறார்கள் என்பதுணர்ந்து, 'என்ன வேண்டும்' என்று கேட்கும் பாவனையில் அவர்களைப் பார்த்தார்கள்.
"கரிகால் மன்னரே! போரிலே வீர மரணம் அடைந்து விட்ட எங்கள் அமைச்சர் செந்தலையாருடைய சவத்தை எங்களிடம் ஒப்படைத்துவிட வேண்டுகிறோம். வேளிர் குடியின் மானத்தைக் காப்பாற்றத் தன் கடைசி மூச்சுள்ள வரை போராடிய அந்த வீரத்திருவுருவை அடக்கம் செய்கின்ற பாக்கியத்தை நாங்கள் வேறு யாருக்கும் தர இணங்கமாட்டோம். அந்த உரிமையையாவது எங்களுக்குத் தருகிறீர்களா? - முத்துநகையின் மேல் வேலெடுத்து வீசினானே, அந்த வீரன் இப்படி உணர்ச்சியுடன் பேசினான்.
"பழி வாங்கும் உணர்ச்சியும் சதி புரியும் ஆவேசமும் உயிர் மூச்சோடு வெளியேறியபின் தூய்மையாகிறது. எதிரியின் பலம் என்ன என்பதை நான் நன்கு உணர்வேன். என்னைக் கொல்ல வந்த உங்களரசியார் நீதி தேவன் முன்னால் தானே தண்டனை பெற்றார்களே; அவர்களுடைய சவத்தைக் கூட அனாதையாக்கி விடவில்லை தெரியுமா? அரச பரம்பரை யைச் சேர்ந்தவரது இறுதி யாத்திரை எப்படியிருக்க வேண்டுமோ. அந்த அளவிலே முறையிலே கடுகளவும் குறையாத வகையிலேயே அடக்கம் செய்ய ஆணையிட்டேன். ஆகவே இந்த வேண்டுகோளை நான் தடுக்கவில்லை! அதைப் போலவே இந்தப் போர்க்களத்துத்தானைத் தலைவியாகிய முத்துநகையும் அதற்குக் குறுக்கே நிற்கமாட்டாள்."
-அரசன் சொல்லி முடித்ததும் வேளிர்குடி வீரர்களது முகத்தில் நன்றி உணர்ச்சி தலை காட்டியது. செந்தலையாருடைய சவம் கிடந்த இடம் நோக்கி நடந்தார்கள். அவரது உடலைக் கணநேரம் உற்றுப் பார்த்தான் கரிகாலன்! அந்தத் தியாகிக்கு மரியாதை செய்வதைப் போல் அவனது பார்வை இருந்தது. பிறகு முத்துநகையைத் திரும்ப பார்த்தான். குறிப் பறிந்த முத்துநகை மரமாளிகை இருக்கும் திசை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
"நீங்கள் குதிரைமேல் ஏறி வாருங்கள் அரசே!" என்றாள் நடந்து கொண்டே.
"எதற்கு?"
"காட்டுப் பாதையில் கல்லும் முள்ளும் நிறைந்திருக்கிறதே; உங்களுக்குத் தெரியாதா?..."
"அதற்கெல்லாம் பயந்தால் அரியணை ஏறியிருக்க முடியாது என்று உனக்குத் தெரியாதா? மக்களுக்காக உயிரையும், போர்க்களச் சாவுக்காக உடலையும் எந்த நேரத்திலும் அர்ப்பணிக்கத் தயார் என்ற மன உறுதியை ஏற்ற பிறகுதான் மகுடபதி என்ற தகுதியை சோழர்குல மரபினர் ஏற்றுக் கொள்வார்கள் முத்துநகை! உல்லாச புரியிலே உலவிட அல்ல; பொல்லாதவற்றை ஏற்கவும் பின் வாங்காத உடல் இது! அது மட்டுமல்லாமல் உன்னுடைய மலர்ப்பாதங்களே மேடுபள்ளங்களில் தடையின்றி நடக்கின்றபோது என்னை மட்டும் சுயநலக்காரன் என்று கருதி விட்டாயா?'
முத்துநகை இதற்குப் பதிலேதும் சொல்லாமல் நடந்தாள்.
சமீப காலங்களில் எதிர்பாராத சம்பவங்கள் பலவற்றைச் சந்தித்துப் பழகிப்போன பூம்புகார் மக்களை அங்கே நேர்ந்த அதிர்ச்சி தரும் சந்திப்பும், அதைத் தொடர்ந்த உரையாடலும் அவ்வளவாக ஆச்சரியத்தில் மூழ்கடிக்கவில்லை. ஆகவே, மன்னனையும், மன்னனை அழைத்துச் செல்லும் மங்கையையும் அவர்களும் பின் தொடர்ந்து சென்றார்கள்.
நடுக்காட்டில் - மரங்களடர்ந்த பகுதியில் இருங்கோவேள் கட்டி வைத்திருக்கிற மரமாளிகையைக் கண்டு கரிகால் மன்னன் வியந்தான். சோழ மண்டலத்தை அழிக்கக் கருதிய நச்சு வித்து அங்குதான் முளைத்தது என்றாலும் வேளிர்குலத்தவர் அமைத்துக் கொண்டிருக்கிற ராஜரீகத்தை அவனது உள்ளம் போற்றத்தான் செய்தது!
பயங்கரச் சூழ்நிலையிலே அந்த மாளிகை இருந்த போதும், அப்போது மயான அமைதி அங்கே குடி கொண்டிருந்தது. ஆள் நடமாட்டமே எதுவுமின்றி வெறிச்சோடிப் போயிருந்தது. இன்றைக்கு முதல் நாளோ, அல்லது சில மணி நேரங்களுக்கு முன்னதாகவோ, கரிகாலனும் முத்துநகையும் அங்கே துணிவுடன் நடந்து வந்திருக்க முடியுமா? வேளிர் குடியினர் விரோதிகளைக் கண்டுவிட்ட வெறிக் கூத்தில் ஆனந்தத் தாண்டவமே ஆடியிருப்பார்களே! அவர்களது ஆட்டபாட்டப் பேரொலியில் காட்டு விலங்குகள் கூட ஓடி ஒளிந்திருக்கக் கூடுமே! 'பகை' என்றும், 'தூள்' என்றும் எழுப்புகிற பழி வாகும் பேரிரைச்சல் கேட்டுப் பறவைகள் எல்லாம் மரக்கிளையிலிருந்து பறந்தோடி மறைந்திருக்கக் கூடுமே!
சுற்றியிருந்த மரவீடுகளையும், பாசறையையும் பார்த்துக் கொண்டே வந்த மன்னன் ஓர் அறையின் வாசலுக்கருகே வந்ததும் சற்றுப் பின் வாங்கினான். முத்துநகை உள்ளே பார்த்தாள். வேளிர்குல வீரனொருவன் மார்பிலே பாய்ந்த கட்டாரியுடன் பிணமாகக் கிடந்தான், அங்கே!
"இந்த அறையிலிருந்து தப்புவதற்காக இதயத்தை இரும்பாக்கிக் கொண்டு நான் நடத்திய செயல்தான் இது!' என்று சொல்லிக்கொண்டே சென்ற முத்துநகை, “அதோ பார்த்தீர்களா?" என்று சுட்டிக் காட்டினாள்.
"என்ன இது! நாம் அங்கு போகவேண்டுமா, என்ன?" என்று கேட்டான் மன்னன்..
'சாவூருக்கு போகும் வழி!' என்ற எழுத்துக்களை அங்கே பார்த்தான் கரிகாலன்.
"இல்லை; இல்லை! உங்களைச் சாவூருக்கு அனுப்ப அன்று பூம்புகார்த் தெருவிலே சதி நடத்தினானே ஒரு வேளிர்குல வீரன்; அவனை வீழ்த்திய செழியன் இங்கு தான் இருக்க வேண்டும்! சோழ நாட்டு வீரர்களை அடைத்து வைத்து ஆத்திரம் தீரும்வரை சித்திரவதை செய்வதும் இங்குதானாம்! வாருங்கள்!" என்று அழைத்தாள் முத்துநகை.
இருவருமே அந்த இருண்ட பகுதிக்குள்ளே நுழைந்தார்கள். பயங்கர மாகத் தோன்றிக் கொண்டிருந்த அந்த அறை, மலைக் குகையைப் போல் காட்சியளித்தது. சேறும் சகதியும் நிரம்பிய தரையில் இருவரும் மெதுவாக நடந்தார்கள். 'பூமியைக் குடைந்து அமைக்கப்பட்ட அந்தக் கொடிய சிறைச்சாலையில் செழியன் அடைபட்டுக் கிடக்கிறான். தன்னைக் காப்பாற்றிய காரணத்தால்' - என்று நினைத்த கரிகாலனின் மனம் அந்தப் பாண்டிய வீரனது தியாகத்தைப் போற்றியது. தன்னுடைய கால்களில் சரசரவென்று ஊர்ந்து சென்ற பெருச்சாளிகளைப் பற்றிக் கூட சிறிதும் கவலைப்படாமல் மேலும் நடந்தாள் முத்துநகை!
சுவரோடு இணைக்கப்பட்டிருந்த விலங்குகளில் சிறைப்பட்டிருந்த சில சோழநாட்டு வீரர்களை அவர்கள் விடுதலை செய்தார்கள். தங்கள் வாழ்வு அந்த இருட்டறையோடு முடிந்துவிடும் என்று கருதிக் கொண்டிருந்த அந்த வீரர்கள் மன்னன் தங்களைத் தேடிவந்து விட்டதை எண்ணி மகிழ்ச்சியடைந்தார்கள். ஆனால் செழியனை மட்டும் அங்கே காணவில்லை!
எல்லாருமே விடுவிக்கப்பட்ட பிறகு "யாரங்கே? இன்னும் இருப்பது யார்?” என்று குரலெழுப்பினாள் முத்துநகை.
"செழியன்! செழியன்!" என்று அதைத் தொடர்ந்து கரிகால் மன்னனும் கத்திப் பார்த்தான்!
அவர்களது குரல்கள் தான் உட்சுவரில் மோதி எதிரொலித்தனவே தவிர, பதிலேதும் கிடைக்கவில்லை, மீண்டும் அப்படி அழைத்துக் கொண்டே நடந்த அவர்கள், கடைசியில் சிறைச் சாலையின் கோடிக்கே வந்து விட்டார்கள். சற்றுமுற்றும் தேடினார்கள். செழியன் அங்கே இல்லை! முத்துநகையின் முகம் ஏமாற்றத்தை உமிழ்ந்தது. தன்னுடைய கடமைப்பணி நிறைவேற முடியாமல் இன்னும் எதிர்ப்புச் சக்திகள் குறுக்கிடுகின்றனவே என்ற ஏக்கம் அவளது முகத்தில் பிரதிபலிப்பதைக் கரிகாலனால் அந்த இருட்டிலே தெரிந்து கொள்ள முடியவில்லை.
"இங்கே செழியனைக் காணவில்லை! வெளியே செல்வோம் அரசே!" என்றாள் முத்துநகை
இருவரும் அதைவிட்டு வெளியே வந்தார்கள். மரமாளிகையைச் சுற்றியிருக்கின்ற பகுதிகளிலும் தேடி அலுத்தார்கள்.
பூம்புகாரிலே தாமரைக்குக் காவலனாக வேளிர் வீரனைப் போல் நடமாடிக் கொண்டிருக்கிற செழியனைக் காட்டிலே தேடி என்ன பயன்?
"செழியன் எங்கே?" - முத்துநகையின் உள்ளத்திலே தோன்றிய இந்த வினாக்குறி, மீண்டும் அவளிடம் ஒருவித உத்வேகத்தைத் தோற்றுவித்து விட்டது! "அரசே! நம்மையும் மீறிய சதி ஒன்று நடந்துவிட்டது என்று கருதுகிறேன்! என்ன செய்வது இப்போது?" என்றாள்.
உடனே கரிகாலன் "முத்துநகை! செழியனை இனிமேல் இங்கே தேடிப் பயனில்லை என்று நான் நினைக்கிறேன்! ஆகவே நாம் இப்போது உடனே பூம்புகாருக்குச் சென்றாக வேண்டும்! கொந்தளிப்புக்கும் குமுறலுக்கும் இடையே நான் அங்கிருந்து புறப்பட்டேன்! இப்போது அங்கே என்ன நேர்ந்திருக்கக்கூடும் என்பதை என்னால் யூகித்துப் பார்க்க முடியவில்லை! புறப்படு!" என்றான்.
இந்த நேரத்தில் அதைத் தவிர வேறு என்ன செய்வது என்பது முத்துநகைக்கும் புரியவில்லை. தலையசைத்தாள், நடக்க ஆரம்பித்தாள்!
போகும் போது இருந்த ஆவலும், ஆர்வமும் திரும்புகிற நேரத்தில் முத்துநகையிடம் இல்லை; துவண்டு விழத்தயாராக இருந்த உடலை எப்படியோ தூக்கி நிறுத்தி நடத்திச் சென்று கொண்டிருந்தாள். வழியிலே காட்டுச் சுனை கண்களில் பட்டவுடன் அவளது உள்ளம் மேலும் வேதனையுற்றது!
பாண்டிய நாட்டு ஒற்றன் வீரபாண்டியயைச் சந்தித்துத் தனது உள்ளத்தைப் பறிகொடுத்தது அந்த இடம்தானே! ஒரே இலட்சியத்துக்காகப் போராடி வந்த இதயங்கள் இணைந்ததை - கடமைக்கு இடையேயும் காதல் விளையாட்டுக்களில் ஈடுபட்டதை - அந்தச் சுனைக்கு மட்டும் பேசும் சக்தியிருந்தால் கதை கதையாகச் சொல்லுமே! அதோ ... அந்தச் சுனை நீர் காற்றின் வேகத்தால் இங்கும் அங்கும் அசைகிறதே; அது ஏன்? தன்னுடைய காதலனை இருங்கோவேளின் கத்திக்கு உணவாகத் தந்து விட்டுத் தனிமரமாய்ச் செல்கிறாளே முத்துநகை என்ற வேதனையால் தத்தளிக்கிறதா?
முத்துநகையின் உள்ளம் எரிமலையாக மாறத் தயாராகிக் கொண்டி ருந்தது. அதைத் தவிர்த்து விடலாம் என்ற நினைவுடன் தனது பார்வை யைச் சுனையிலிருந்து நகர்த்திப் பாழ்மண்டபத்தை நோக்கி ஏவினாள்; ஆனால், மறுகணம்... அவளது விழிகள் வியப்பால் திடுக்கிட்டன!
அங்கே... சற்றுத் தூரத்தில் இருந்த பாழ்மண்டபத்தில் அவள் ஓர் உருவத்தைக் கண்டு திகைத்து விட்டாள்!
மனித நடமாட்டமில்லாத அந்தப் பகுதியிலே தோன்றும் அந்த உருவம் யாருடையது?
முத்துநகை கூர்ந்து நோக்கினாள்.
அந்த நிமிர்ந்த நெஞ்சு... உயர்ந்த தோற்றம் உடை... நடை... உருவம்...
யார்?... யார்?... யாரது?
எங்கோ பார்த்ததுபோல் இருக்கிறதே! ஆமாம்.. வீரபாண்டியன் சாயல்தான்; இல்லை; இல்லை; அது வீரபாண்டியன்தான்!
முத்தநகை தடுமாறிப் போய்விட்டாள். இறந்து போன வீரபாண்டி எப்படி வந்தான்? இருங்கோவேள் 'கொன்று விட்டேன்' என்று கொக்கரித்த பிறகு அந்த வீரத்திரு உருவம் மீண்டும் எப்படித் தோன்றுகிறது?
அதுதான் 'பேய்' என்பதா?
"கொலை செய்யப்பட்டவர்கள் பேயுருவில் திரிவார்கள் என்று சோழநாட்டிலே புதிதாகக் கருத்தொன்றைப் பரப்பி வருகிறார்களே வைதீகர்கள்; அதைப் போன்றதா அது?"
என்னைத் தேடித்தான் வீரபாண்டியின் 'பேய்' பாழ்மண்டபத்தை முற்றுகை போட்டிருக்கிறதா?
- மன்னனிடம் 'என்ன சொல்வது ?' 'எப்படிச் சொல்வது?' என்ற பதட்டத்தில் முத்துநகை துடித்துக் கொண்டிருந்தபோது, அந்த உருவம் அவளைக் கையசைத்து அழைப்பதாக அவள் உணர்ந்தாள்.
அதே நேரத்தில்...
கரிகாலன் வானமண்டலத்திலே திடீரென்று எழும்பிய செந்நிறத்தை திகைப்புடன் பார்த்தான்! ஆமாம்; அவர்கள் விட்டு வந்த மரமாளிகைப் பக்கத்திலிருந்துதான் அந்த அக்கினி ஜ்வாலை எழும்பிக் கொண்டிருந்தது! தீ நாக்குகள் வானத்தை முத்தமிடத் துடித்துக் கொண்டிருந்தன!
இந்த அதிசயத்தைச் சொல்ல, "முத்துநகை'! என்று கத்தினான், கரிகாலன்! தன்னுடைய மனப்போராட்டத்தைத்தான் மன்னர் தெரிந்து கொண்டு விட்டாரோ என்று பதறிப்போய்த் திரும்பினாள் முத்துநகை!
திகைப்புடன் திரும்பிய முத்துநகையிடம், "நமது மக்கள் பகைவர்களைப் பழிவாங்குவதில் வரம்புமீறிப் போய்விட்டார்கள்! அதோபார், மரமாளிகைக்குத் தீயிட்டுவிட்டார்கள்" என்று வருத்தம் தெரிவித்தான் கரிகால் மன்னன்.
"அவர்களது ஆத்திரத்தை எப்படித்தான் தணித்துக் கொள்வது?" எனக் கேட்டாள் முத்துநகை.
"தோற்றுப்போன பகைவனை நடத்த வேண்டிய முறையே, அவன் நாணித் தலைகுனியுமளவுக்கு அவனுக்கு நன்மை செய்வதுதான்!" எனப் பதில் கூறிய மன்னன் மரமாளிகையை அழித்துக் கொண்டிருக்கும் மக்களின் ஆத்திரத்தைத் தணித்து, அவர்களைத் தலைநகருக்கு அழைத்து வரும் பொறுப்பை முத்துநகையிடமே ஒப்படைத்ததும் அவளுக்குத் தூக்கி வாரிப்போட்டது. பாழ் மண்டபத்துப் பக்கம் தான் காணும் உருவத்தைப் பற்றிய ஐயத்தை நீக்கிக் கெள்வதில் முழுக் கவனத்தையும் செலுத்தியிருந்த அவளுக்கு, இப்படி ஒரு வேலை கிடைத்தது. அதிர்ச்சியாகத்தான் தோன்றியது. ஆனால் அதிலேயும் அவளுக்கு ஒரு மகிழ்ச்சி. கரிகாலன் உடனடியாகத் தலைநகருக்குத் திரும்ப முடிவு செய்ததுதான்.
"முத்து நகை! நீ, ஆத்திரம் கொண்ட மக்களை அமைதிப்படுத்தித் தலைநகருக்கு அழைத்து வா; நான் முன்னே போகிறேன். மக்கள், என்னைவிட உனக்குத்தான் அதிகம் கட்டுப்படுவார்கள். ஏனெனில், அவர்களின் தலைவன் கோச்செங்கணான் அல்லவா?" என்று கூறியதும், மன்னனின் குதிரை புறப்பட்டது.
குதிரை கண்களைவிட்டு மறையும்மட்டும் பார்த்துக் கொண்டிருந்து விட்டு முத்துநகை, மண்டபத்துப் பக்கம் திரும்பினாள் தன் இலட்சிய உருவம் இதயத்து நிழலில் அங்கேயே நின்று கொண்டிருப்பதாகவே உணர்ந்தாள். தொலைவில் விண்ணைத் தொடுமளவுக்கு எரிந்து கொண்டிருந்த நெருப்பின் ஆவேச நடனத்தைப் பற்றி அவள் கவலைப்படவில்லை. அதைவிட அதிகமாகத் தன் உள்ளத்தில் தீ மூண்டுவிட்டதே என்ற கவலை அவளை அலைக்கழித்தது.
மண்டபம் நோக்கி அவள் கால்கள் நடந்தன. கண்களோ கால்களை வெற்றி கண்டன. எல்லா அங்கங்களையும் இதயம் வெற்றி கண்டு ஜெயக்கொடி போட்டது. மண்டபத்தருகே அவள் வந்துவிட்டாள். எதிரே இருப்பது வீரபாண்டியேதான்! ஆனால் அவளால் நம்ப முடியவில்லை. மூட நம்பிக்கை. முழு பலத்தோடு அவளைக் கட்டித் தழுவிப் பகுத்தறிவின் கற்பை அழிக்கும் மிருக முயற்சியிலே ஈடுபட்டது.
"அத்தான்! அத்தான்! அவரில்லை! பேய்! பூதம்! பிசாசு!" என்று அவளறியாமலேயே கத்திவிட்டாள். கத்தும் பொழுதே அவளுக்குக் கண்கள் இருண்டுவிட்டன.
வீரபாண்டி, "முத்து!" எனக் கூவி அவளருகே தாவிப் பாய்ந்தான்.
அவன் வருவதைக் கண்டு இன்னும் அதிகமாகப் பயந்து விட்ட முத்துநகையின் நெஞ்சு அடைத்துக் கொண்டது; தலை சுற்றியது. 'தடால்' என்று கீழே விழப் போனவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான். வீரபாண்டி. மயங்கிய நிலையில் பிரக்ஞையிழந்து அவன் மேல் சாய்ந்து கிடந்தாள் கடமையாற்றும் அந்தக் கண்மணி.
தோளிலே தலை புதைத்துக்கிடக்கும் தோகை மயிலின் முதுகைத் தடவிக் கொடுத்தவாறே மரமாளிகையிலிருந்து கிளம்பும் தீச்சுழலை உற்று நோக்கிக் கொண்டிருந்தான் வீரபாண்டி.
அந்தநேரம் அவன் உள்ளம் என்ன பாடுபட்டிருக்கும்? பாசறை படுசூரணமாகி விட்டது. படை வீரர்கள் பலர் மாண்டனர். மிஞ்சிய சிலரும் உயிர் காக்க ஓடிவிட்டனர். அவனுக்கென உலகத்திலிருந்த ஒரே ஓர் இடத்தையும் நெருப்பு விழுங்கிக் கொண்டிருக்கிறது!
அதை அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். அந்தப் படுபாதகத்தைச் செய்தவள் அவன் மீது வாடிய கொடியெனப் படர்ந்து கிடக்கிறாள். அதையும் அவன் உணர்ந்து பார்க்காமலில்லை. மரமாளிகையில் எழும் தீயை ஒரு முறை பார்க்கிறான். அதற்குக் காரணமான தன் காதலியை ஒருமுறை பார்க்கிறான். கண்களில் கனலும், புனலும் ஒருசேரக் கிளம்புகின்றன. கனல் கரிகாலனை நினைத்தா? புனல் அந்தப் பூங்கொடியை நினைத்தா? ஒன்றுமே புரியவில்லை! பூகம்பமாகி விட்டது நெஞ்சம்!