ரோமாபுரிப் பாண்டியன்/25. யாருடைய கட்டாரி
25
யாருடைய கட்டாரி?
இருங்கோவேளின் மாளிகையைத் தகனம் செய்து விட்டு மனமகிழ்வு கொண்ட பூம்புகார் மக்கள் தலைநகருக்குத் திரும்பத் தலைப்பட்டனர். மக்கள் பெருங்கூட்டம் அந்த மண்டபத்தைத் தாண்டிச் செல்லும்போது அவன் முத்துநகையை அணைத்தவாறு தூண்களிலும் புதர்களிலும் தன்னை மறைத்துக் கொள்வதற்கு மிகுந்த சிரமப்பட்டான். கொஞ்சம் கொஞ்சமாகத் தலைநகரத்து மாந்தரும் மண்டபத்தைக் கடந்து சென்றுவிட்டனர்.
அருங்கோவேள் மாளிகைக்குத் தீயிட்ட மகிழ்ச்சியில் ஒரு வாலிப வீரன் ஆடிப்பாடிக் குதித்துக் கொண்டு வந்ததை வேளிர்குல மன்னனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவனுக்குப் பின்னால் யாரும் வரவில்லை என்பதையும் அவன் புரிந்து கொண்டான். கீழே கிடந்த ஒரு கூரிய கருங்கல்லைக் கையிலே எடுத்தான். பலங்கொண்ட மட்டும் அந்தக் கல்லை அந்த வாலிபனின் தலைக்கு நேரே குறி பார்த்து வீசினான். கொதிப்பேறியிருந்த இருங்கோவேளின் குறி தப்பவில்லை. ஆடிப்பாடி வந்த அந்த வீரன் 'அய்யோ!' என்று ஓலமிடக் கூட முடியாமல் அப்படியே தரையில் சுருண்டு விழுந்து கடைசி மூச்சைக் காற்றோடு கலக்கவிட்டான்.
அவனைக் கொன்றதிலே இருங்கோவேளுக்கு ஒரு திருப்தி. அந்தத் திருப்தியோடு மரமாளிகைப் பக்கம் திரும்பினான். மாளிகை எரிந்து முடிந்துப் புகை பரப்பிக் கொண்டிருந்தது. அவன் கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டு, முத்துநகையை வெறிக்கப் பார்த்தான். அவளை அவன் பார்த்த பார்வையில் பழியுணர்ச்சி தேங்கியிருந்தது. அவளை மெதுவாகத் தன் முன்னங்கையில் சாய்த்துக் கொண்டான். இன்னமும் அவளுக்கு மயக்கம் தெளியவில்லை. அவனது வலிமை மிகுந்த வலக்கரம் அவளது கழுத்தை நோக்கிச் சென்றது. ஒரு கையால் உடலை அணைத்து, இன்னொரு கையால் அவள் உயிரையும் அணைத்து விடுவானோ என்ற பயங்கர நிலை உருவாகி விட்டது!
அவன் கண்கள் சிவப்பேறிவிட்டன - பற்களைக் கடிக்கிறான்- வலக்கரமோ புலியின் முன்னங்கால்போல உயர்ந்து எழுந்து கழுத்துக்கருகினில் வந்துவிட்டது! அந்தக் கைவிரல்கள் ஒவ்வொன்றும் தேளின் கொடுக்குப் போலக் காணப்பட்டன! இதோ! இமைப் பொழுதில் கொல்லப்பட்டு விடுவாள்!
'என் நாடு - நகரம் - இனம் - மானம் - மறவர் படை அனைத்தையும் சோழ நாட்டுக்குக் காட்டிக் கொடுத்துவிட்டு என் மடியிலும் இடம் பிடித்துக்கொள்ளக் கூடிய அளவுக்கு இவளுக்கு எவ்வளவு துணிச்சல்? அந்தத் துணிச்சலை இதோ தூளாக்குகிறேன்!'
இப்படி எண்ணியவாறு அவள் அழகான சங்குக் கழுத்தை நெறிப்பதற்குப் போனான் இருங்கோவேள்!
அட்டே! அவனது வேகத்தைத் தடுத்தது யார்?
முத்துநகையின் கழுத்தை அமுக்குவதற்கு நீண்ட கை, அவள் இடையை வளைத்துக் கொள்ளக் காரணம் என்ன?
அவனுக்குத் தெரியவில்லை அந்தக் காரணம்!
எந்த முகத்தில் சாவின் அமைதியை உண்டாக்க நினைத்தானோ - அந்த முகத்தில் மாறிமாறி முத்தமிட்டான். முத்தமிடும்போதே 'ஓ'வெனக் கதறி அழுதான். அழுது கொண்டே முத்தமாரி பொழிந்தான்.
முத்துநகை கண்களை விழித்தாள். அவளுக்கு நினைவு திரும்பியது. தன்னை அணைத்திருப்பவன் வீரபாண்டிதான் என்ற நம்பிக்கை அவளுக்கு ஏற்பட்டது. தன் அழகிய கைகளால் அவன் மார்பகத்தைத் தடவிப் பார்த்தாள். சந்தேகமில்லை; அது பேயல்ல; அவளுடைய அத்தானேதான்!
"அத்தான்!" - பலத்த கரையை உடைத்துக்கொண்டு புறப்பட்ட ஆற்றுப் பிரவாகத்தைப் போல் அந்த ஒருசொல் வெளிவந்தது.
"முத்துநகை!" - சூடுண்ட நாக்கிலிருந்து தழுதழுத்து வரும் சொல்லைப் போன்றிருந்தது இருங்கோவேளின் குரல்.
இரு சொற்களுக்குமிடையே நீண்ட இடைவேளை இருக்கவில்லை. இருவரும் இறுகத் தழுவிக் கொண்டு மெய் மறந்து போய்விட்டனர்.
வெகு நேரத்திற்குப் பிறகு இருவரின் அன்பும் அன்புப் பிடியும் தளர்ந்தன. வீரபாண்டியின் முகம், உடல் அனைத்தையும் மிகக் கவலையோடு உற்று உற்று நோக்கினாள் முத்துநகை.
"அப்படி என்ன பார்க்கிறாய் கண்ணே?"
"ஒன்றுமில்லை; அந்தப் பாவிகள் இருங்கோவேளின் ஆட்கள் தங்கள் பொன்னுடலில் எங்கெங்கே காயப்படுத்தினார்கள் என்றுதான் பார்க்கிறேன்!"
"காயம் எல்லாம் ஊமைக் காயங்கள்தாம்! நான் செத்துவிட்டதாகக் குளத்திலே போட்டுவிட்டார்கள். அதனால்தான் பிழைத்துக் கொண் டேன், என்ன இருந்தாலும் நீ இப்படி ஏமாந்திருக்கக் கூடாது!"
"என்ன செய்வது? தங்களைப் போலவே கிழவன் வேடமிட்டு நின்றான் பாவி! வேடமணிந்ததும் தங்களுக்கும் அந்த வேல் மறவனுக்கும் வித்தியாசமே தெரியவில்லை. நான் ஏமாந்துவிட்டேன். அத்தான்! ஆனால், தாங்கள் உயிரோடு இருக்கிறீர்களே. அதுவே போதும்! நான் எத்தனை முறை ஏமாற்றப்பட்டாலும் கவலையில்லை. மன்னர் கரிகாலர் மதிவாணர் என்பதற்கு ஒரே சான்று, அவர் அந்த வேடதாரியிடம் மோசம் ஒளிந்திருப்பதைக் கண்டு பிடித்தாரே, அதுதான்!"
"முத்துநகை! அவை எல்லாம் போகட்டும். இருங்கோவேளின் படைகளை அழித்துவிட்டதாக மகிழ்ந்து பயனில்லை. அவன் மாளிகை மண்மேடாயிற்று. அவன் அமைச்சர் வீழ்ந்தார் - என்றெல்லாம் எண்ணிப் பூரிப்படைவது மட்டும் போதாது! இருங்கோவேள் உள்ள வரையில் கரிகால் மன்னனுக்கு அழிவு நிச்சயம். அவனை முதலில் ஒழிக்க வேண்டும்!"
"அவன் எங்கே இருக்கிறான்? ஏதாவது தெரியுமா?"
"கண்டுபிடிக்காமல் இருப்பேனா? அந்தக் கொடியவன் இங்கேகூட இருந்திடக்கூடும்."
"ஆ!"
"ஆமாம், அவ்வளவு மாயங் கற்றவன் அந்த மாபாவி! இன்றிரவு அவன் மன்னனைக் கவிழ்க்கும் திட்டம் தீட்டுவதற்காகப் பூம்புகார் அரண்மனைக்குள்ளேயே வரப்போகிறான்!"
"என்ன?"
"பதறிப் பயனில்லை முத்துநகை! இன்றைக்கு அவனைக் கொன்று பழி தீர்த்துக் கொள்ள வேண்டும்!"
"அந்த நல்ல காரியத்தை நான் செய்கிறேன் அத்தான்! 'அவன் எப்போது அரண்மனைக்கு வருவான்? எப்படி வருவான்? விவரமாகச் சொல்லுங்கள்!"
"அவன் வருவதற்கு முன்பே அவனை வரவேற்பதற்கும் வஞ்சக வலை விரித்து அதிலே மன்னன் கரிகாலனைக் கவிழ்ப்பதற்கும் திட்டமிட்டு, இருங்கோவேளின் தங்கை தாமரை பூம்புகார் அரண்மனையில் நுழைந்திருக்கிறாள். அவள் மட்டுமல்ல; அவளுக்குத் துணையாக ஒரு வேளிர்குல வீரனும் சோழ நாட்டு மாளிகையில் சுற்றிக் கொண்டிருக்கிறான்!"
"அய்யோ! அப்படியானால் அரசருக்கான ஆபத்து அரண்மனைக் குள் நுழைந்து விட்டது என்பதுதானே பொருள்."
"இன்னும் கேள், இன்றிரவு நடுச்சாமத்தில் இருங்கோவேள், யவனக் கிழவர் வேடத்தில் வந்து அரசனைக் கொல்வதற்குத் திட்டமிட்டிருக்கிறான். அத்திட்டத்திற்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் உள்ளேயிருந்து தாமரை செய்து முடிக்கப் போகிறாள். மாளிகைக்குப் பக்கத்தில் அரசனின் ஆலோசனை மண்டபத்தை ஒட்டினாற் போலுள்ள சோலைவழியேதான் யவனக் கிழவர் உருவில் இருங்கோவேள் வரப் போகிறான். அவனை வரவேற்பதற்கு வேளிர்குல வீரன் தயாராக இருப்பான்!"
இதைக் கேட்டதும் முத்துநகையின் மெய் சிலிர்த்தது; குரல் நடுங்கியது; பேச முடியாமல் தவித்தாள்.
"இருங்கோவேள்! இன்றிரவோடு அவனுக்கு முடிவு ஏற்பட்டு விடும். இப்போதே அரண்மனைக்குச் சென்று வீரர்களைக் கோட்டை முழுவதும் பரவலாக ஒளிய வைக்கச் செய்கிறேன். இருங்கோவேள் வந்ததும் உடனே அவனுக்கு அழிவு! அஸ்தமனம்!" எனக்கத்தினாள் முத்துநகை!
"பைத்தியமே! சொல்வதைக் கேள்! இந்தச் சதித் திட்டம் நம்மைத் தவிர வேறு யாருக்கும் தெரியக்கூடாது. பூம்புகார் அரண்மனை வீரர்களில் பலர் கரிகாலருக்கு எதிரிகள் - பகைவனின் கூலிகள். மன்னரின் சாவுக்கு அவர்களும் வெற்றிலை பாக்கு வைப்பவர்களேதாம், அதனால் இந்தச் செய்தி மன்னருக்கே கூடத் தெரியக்கூடாது. நீ இப்போதே சென்று யவனக் கிழவரின் வருகையை எதிர்பார்த்திரு! நான் செழியனைப் பற்றிய தகவல் அறிந்து கொண்டு எப்படியும் இருங்கோவேளுக்கு முன்பு மாளிகைக்கு வந்து உன்னைச் சந்தித்து விடுகிறேன். நான் வருவதற்கு முன்பு ஒரு வேளை இருங்கோவேள் முந்திக் கொண்டால் அவனை இந்தக் கட்டாரிக்கு இரையாக்கி விடு! இந்தா!"
வீரபாண்டி தந்த கட்டாரியை முத்துநகை தன் கையில் வாங்கிக் கொண்டாள். அவள் முகம் சிவந்தது. குளிர் சிந்தும் கண்கள் கொள்ளிக் கட்டைகளாயின! 'இருங்கோவேள்' என்று தனக்குத்தானே உறுமினாள்.
"இன்றோடு தொலைந்தாய் நீ!" என்று கர்ச்சனை செய்தாள்.
அவளைத் தழுவிக்கொண்டு, அவளது உதடுகளை ஈரமாக்கினான். வீரபாண்டியெனும் இருங்கோவேள்.
அனல் உமிழ்ந்து கொண்டிருந்த அவளது விழிகள், கையிலிருந்த கட்டாரியை நோக்கின. அதில் சில எழுத்துக்கள் செதுக்கப்பட்டிருந்தன.
கடுகினும் சிறிய எழுத்துக்கள்!
கூர்ந்து பார்த்துப் படித்தாள்; அந்த எழுத்துக்களின் கோவை... 'இருங்கோவேள்' என்று காணப்பட்டது!
முத்துநகை திடுக்கிட்டாள்.
தன் தவற்றை உணர்ந்த இருங்கோவேள் ஒரு கணம் திணறிப் போனான். என்றாலும் உடனே சமாளித்துக் கொண்டான். அவன் வெறும் வேளிர் குலத்துச் சிற்றரசன் மட்டுமல்லவே - வேளிர்குடிப்பேரரசு ஒன்றினைத் தோற்றுவிப்பதற்காகத் தன் ஆற்றலையும் அறிவையும் பெருக்கிக்கொண்டு அயராது பாடுபடுகிற இலட்சியவாதியாயிற்றே? மாபெரும் ஆபத்துக்களிலிருந்தெல்லாம் தப்பிய அவனுக்கு இந்தச் சாதாரணச் சந்தேகத்திலிருந்துதானா தப்ப முடியாது? கட்டாரியையும் தன் முகத்தையும் மாறி மாறிப் பார்க்கும் முத்துநகையின் கன்னத்தைத் தடவியவாறு அவன் ஏமாற்று மொழிகளைத் தேனிலே தோய்த்துக் கொட்டினான்.
"என்ன ஆச்சரியப்படுகிறாய்? இந்தக் கட்டாரி எனக்கு எப்படிக் கிடைத்தது என்றா? நீ உற்று நோக்குவதையும் - உன் விழிகள் உமிழும் ஆவலையும் பார்த்தால் நானே இருங்கோவேளைக் கொன்றுவிட்டு அவன் கட்டாரியை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேனா என்று சந்தேகப்படுகிறாய் போல் தோன்றுகிறதே! எங்கே சொல் பார்க்கலாம்! இதில் இருங்கோவேளின் பெயர் இருப்பதற்கு என்ன காரணம்?"
"சற்று முன்பு இங்கு நடைபெற்றதே போர்; அதில் சிதறி விழுந்த கட்டாரிகளில் ஒன்றாக இது இருக்கலாம்!"
நடந்துவிட்ட போர் -அதனால் விளைந்து விட்ட கொடுமைகள் எல்லாமே அந்தக் கணத்திலேயே மீண்டும் இருங்கோவேளின் நெஞ்சில் நிழலாட்டம் போட்டன! அதனால் திடீரென்று ஏற்பட்ட முகமாற்றத்தை அவனால் அவ்வளவு சுலபத்தில் மறைத்துவிட முடியவில்லை.
“ஏன் இப்படி உங்கள் முகம் மாறுகிறது? போரைக் கண்டால் பயமா?" என்றாள் முத்துநகை, கிண்டலாக.
"நான் உங்களைப் போன்ற பெண்களைக் கண்டாவது பயப்படுவேனே தவிரப் போரைக் கண்டு பயப்படவே மாட்டேன். நீயும் களம் குதிக்க வேண்டிய காலம் வந்து விட்டதே என்று எண்ணினேன். அதன் விளைவுதான் இந்தக் கண நேரக் கலக்கம்."
எப்படியோ சமாளித்துக் கொண்டான் இருங்கோவேள். மீண்டும் இதுபோன்ற 'காட்டிக்கொடுக்கும் சம்பவங்கள்' நடைபெற்று விடக்கூடாதே என்று எண்ணியவனாய், “உம்.. இந்த எழுத்துக்கள் எப்படி என் கட்டாரியில் இடம் பெற்றன என்று சொல்லவில்லையே, நீ?" என்றான்.
"எனக்கு எப்படித் தெரியும்?"
"அதுதான் உன் அத்தானின் திறமை; காரணம் நான் சொல்லட்டுமா? சொன்னால் என்ன தருவாய்!"
"சொல்லுங்கள்!
"நூறு தரவேண்டும்!"
"என்ன!"
"ஒரு பெண்ணிடம் ஓர் ஆண் அந்தத் தொகையில் என்ன கேட்பான்? உடையா - உணவா அணியா மணியா? - புரியுமென்றுதான் கேட்கிறேன். நீயும் புரிந்துகொண்டுதான் என்னிடம் கேள்வி போடுகிறாய்!"
"அதிருக்கட்டும். இதைச் சொல்லுங்கள்!"
முத்துநகை அக் கட்டாரியை அவன் முகத்துக்கு நேரே நீட்டினாள். அவன் அதை வாங்கியவாறு "இந்தக் கட்டாரியால் இருங்கோவேள் கொல்லப்பட வேண்டும். ஆனால் அதைக் கொலை என்று நாடு நம்புவதைவிட அவனே தற்கொலை செய்து கொண்டான் என்று செய்தி பரவிவிடவேண்டும். அந்தச் செய்தி பரவுவதற்குச் சாதகமான பெயர் தான், கட்டாரியில் செதுக்கப்பட்டிருக்கிறது முத்துநகை! இருங்கோவே ளைக் கொல்லும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது கூட இந்தக் கட்டாரியை மிகவும் எச்சரிக்கையோடு பயன்படுத்த வேண்டும். அதாவது எதிரிகள் குத்தியதுபோல் இல்லாமல் தானே தன் நெஞ்சில் குத்திக் கொண்டது போல் கட்டாரியைப் பிடித்துக் காரியத்தை முடிக்க வேண்டும். இப்போது புரிகிறதா இதில் இருங்கோவேளின் பெயரை ஏன் செதுக்கினேன் என்பதற்குக் காரணம்" என்று கொஞ்சு மொழி பேசினான்.
"இந்தத் திறமைக்கும் அறிவுக்கும் நூறென்ன? ஆயிரமே கொடுக்கலாம்!" - என்று ஆரம்பித்தாள் முத்து. ஆனால் ஆளுக்கு நூறாக ஆயிரத்தைப் பூர்த்தி செய்தார்கள்.
பின்னர் வீரபாண்டி தந்த கட்டாரியை மறைத்துக் கொண்டு முத்துநகை அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டாள். தன் வேலைகளை விரைவில் முடித்துக் கொண்டு எப்படியும் முத்துநகைக்குத் துணையாக வந்துவிடப் பெருமுயற்சி செய்வதாக வாக்களித்தான் வீரபாண்டி. காதல் உணர்வும் கடமை உணர்ச்சியும் ஒன்றோடொன்று போட்டி போடும் உள்ளம் பெற்ற ஏந்திழையாள், அன்றோடு தன் இலட்சியம் நிறைவேறப் போகிறது என்கிற பெருமகிழ்ச்சியில் பூம்புகார் நோக்கி நடந்து கொண்டிருந்தாள். மரமாளிகையிலே செழியனைக் காணாது திரும்பியபோது அவள் உடலிலே ஏற்பட்ட சோர்வும், உள்ளத்திலே ஏற்பட்ட வேதனையும், இப்போது சென்ற இடம் தெரியவில்லை. புத்துணர்ச்சி பெற்றவளாய் வேகநடை போட்டாள். அவளது நடையழ கையும் முதுகின் எழிலையும் சுவைத்தவாறு நின்ற இருங்கோவேள், மரங்களுக்கிடையே மறைந்ததும் உணர்வு பெற்றவனாய்த் தன் மாளிகையிருந்த திக்கை நோக்கினான்.
பொறாமைக்காரர்களின் உள்ளம் போல் எரிந்து அடங்கிப் புகைந்து கொண்டிருந்த மரமாளிகையின் முடிவு பற்றி எண்ணிப் பார்க்கவும் முடியாத அளவுக்கு மனம் வெறிச்சோடிப் போயிருந்தது. சோழ மண்டலத்திலே வசிக்கின்ற ஈ, எறும்பு, காக்கைக் குஞ்சுகளுக்குக்கூடத் தெரியக்கூடாது என்பதற்காக வன விலங்குகளுடன் போராடி அமைக்கப்பட்ட அரண்மனையல்லவா அது? காட்டுக்குள் இடம் அமைத்துக் காரியத்தை முடித்துக் கொண்டு விடலாம் என்ற அவனுடைய தீர்மானமும் மாளிகைக்கு ஏற்பட்ட முடிவையே அடைந்து விடுமோ என்ற எண்ணம் ஏனோ அவன் மனத்திலே தோன்றியது. இருந்தாலும், அவனுடைய விழிகள் அங்கிருந்து இடம் பெயரச் சற்று நேரம் பிடித்தது.
அந்தத் துன்பக் காட்சியைப் பார்த்தவாறே பெரும்புதர்களுக்கு மறைவில் கட்டப்பட்டிருந்த குதிரையிடம் சென்றான். அதனைத் தட்டியவாறு ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு நின்றான். அவன் முகத்தில் இப்போது காதல் பொலிவுமில்லை - சோகத்தின் சாயலும் இல்லை. எல்லாம் மறைந்து ஒரு வெறிக்கூத்து ஆரம்பமாகிவிட்டது. குதிரையில் பாய்ந்து ஏறினான். வேறு வழியாகப் பூம்புகார் நோக்கிப் பறந்தான்.
அடர்ந்த காட்டுப் பகுதியொன்று கோட்டைச் சுவர் போல இருமருங்கிலும் மறைந்திருக்கும் நெருக்கமான மரங்கள்! புதர்கள்-நச்சுக் கொடிகள் நிறைந்த பயங்கரமான இடம். அதற்குள்ளே புகுந்த இருங்கோவேளின் குதிரை வெகு நேரம் வரையில் வெளிவரவில்லை.
அந்த ஆபத்தான இடத்தில் வழி தெரியாமல் திண்டாடுகிறானா? அல்லது குதிரை அந்த இருட்டில் கீழே விழுந்து விட்டதா?
இல்லை; இல்லை!
அதோ வந்துவிட்டது குதிரை!
இப்போது அதன்மீது அமர்ந்திருப்பவன் யார்? இருங்கோவேளா? அல்ல! அல்ல! கரிகாலனைக் காப்பாற்றிய அந்த உழவர் பெருமகன் வளவனல்லவா அமர்ந்திருக்கிறான்?
இருங்கோவேள் அரண்மனையில் எந்த வேடத்திலிருக்கிறானோ அதே வேடத்தில்தான் உள்ளே நுழைந்திட வேண்டும்! அதற்காக அவன் மாற்றிக் கொண்ட வேடம் அது!
தலைநகரத்து மக்கள், தங்கள் மன்னனுக்காக நாடு போற்றும் தீரச் செயல்களைப் புரிந்துவிட்டுத் திரும்பி விட்டார்கள். அந்த இன்ப நினைவு மட்டுமே மன்னன் கரிகாலனுக்குச் சிறிதளவு ஆறுதலைத் தந்தது. ஏனையபல நிலைமைகள் மன்னனின் உள்ளத்தைச் சேறு கலங்கிய குட்டை போல் ஆக்கியிருந்தன. 'அவைகளுக்கெல்லாம் எப்படி நல்ல முடிவு காணப்போகிறோம்?'- கேள்வி துளைத்தது, கணைகள் துளைக்க முடியாத கரிகாலன் நெஞ்சத்தை! இருங்கோவேளைப் பிடித்தாலன்றி மனத்தில் மூண்டிருக்கும் ஐயப்பாடுகளுக்கு விளக்கம் கிடைக்காது! இதயத்திற்கும் நிம்மதி கிடைக்காது! இந்த முடிவுக்குத்தான் மன்னன் வரவேண்டியிருந்தது.
யாரையும் பார்க்க விரும்பவில்லையென்று கண்டிப்பாக உத்தரவிட்டு விட்டுத் தன் தனி மாளிகையில் ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டுத் தவித்துக் கொண்டிருந்த மன்னனின் முன்னே மெய்க் காவலன் வந்து தலைவணங்கி நின்றான்.
அவனைப் பார்த்து 'என்ன?' என்று உறுமினான் கரிகாற்சோழன்.
"மன்னிக்க வேண்டும். எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன்; கேட்கவில்லை. மன்னரின் உயிரைக் காப்பாற்றிய வளவன் அவசரமாகப் பார்க்க வேண்டுமாம். மிக ஆபத்தான செய்தியாம். கண்ணீர் விட்டுக் கொண்டு நிற்கிறான்"
என்று நடுங்கியவாறு கூறினான் காவலன்.
"ம்! அவனுக்கு உடம்பு எப்படியிருக்கிறதாம்?"
-மன்னன் கேட்டான். அவன் கோபமாகத்தான் கேட்கிறான் என்று தவறாக எண்ணிக் கொண்ட காவலன், "நான் எவ்வளவோ சொன்னேன். அவன் கேட்கவில்லை; ஆபத்து என்றதும் ஓடி வந்தேன்" என்று உளறினான்.
"நான் கேட்பதைப் புரிந்துகொள். உடல் நலமாயிருக்கிறானா என்று கேட்கிறேன்" என்றான் மன்னன். சோகத்தின் இடையே வெளிப்படும் சிரிப்பையும் அடக்கிக் கொண்டு!
"சுகமாகத்தான் இருக்கிறான். இப்போது கூடக் குதிரையில் எங்கேயோ வெளியில் போய்விட்டுத்தான் வந்திருக்கிறான். அதனால் தான் மன்னனை அவசரமாகப் பார்க்க வேண்டுமாம்!"
"ம்-வரட்டும்! வரவிடு!"
அரசனின் ஆணை கேட்டு வெளியில் ஓடிய மெய்க்காவலன் வளவனை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான். வளவன் மன்னனை வணங்கி நின்றான். மெய்க்காவலன் ஒதுங்கியிருந்து மன்னனின் கட்டளைக்குக் காத்து நின்றான். அரசன் அவனை வெளியில் போகச் சொல்லவில்லை.
வளவன் மன்னரின் காதோரம் அணுகிச் சென்று, "ஆபத்தான செய்தியொன்று, அதனை அறிவிக்க வந்தேன்!" என்றான்.
"என்ன-அப்படி ஆபத்து?" என்றான் வேந்தன்.
"ஆயிரம் புலிகள் எதிர்த்து வந்தாலும் நெஞ்சு குலுங்காத வீரர் தாங்கள் என்றாலும், என்னால் இந்தச் செய்தியைச் சொல்லாமலிருக்க முடியவில்லை!" என்று வளைந்து நெளிந்தான் வளவன். " பரவாயில்லை...சொல்லுங்கள்!' என்று அவசரப்படுத்தினான் கரிகாலன்.
வளவன் தொண்டையைக் கனைத்துக்கொண்டு மெல்லிய குரலில் பேசினான்:
"அரசே, இருங்கோவேளின் தங்கை தாமரையுடன் வந்திருக்கிறானே ஒரு வேளிர்குல வீரன்; அவன் மூலம் தங்கள் உயிருக்கு ஆபத்து வரக் காத்திருக்கிறது!"
"என்ன?" மன்னரது இந்தக் கேள்வியிலே தெரிந்த கோபத்தைக் கண்டு வளவன் சிறிதும் அதிர்ச்சி அடையவில்லை.
"உண்மைதான் மன்னவா!" என்றான் வளவன்.
"அவன் வேளிர்குடி வீரனாக இருந்தும், நம்மவர்கள் அவனை உயிரோடு உலவ விட்டு வைத்திருக்கிறார்களே; அதற்கு நன்றியா இது?"
"எதிரிகள் நடக்கின்ற பாதையிலே நீங்கள் பூ தெளித்தாலும் உங்களுடைய பாதையிலே முள்ளை வாரி வீசத்தான் அவர்கள் தயாராக இருக்கிறார்கள்!"
"சேசே! அவனா? நானிருக்குமிடத்தில் அவனால் நுழையக்கூட முடியுமா?"
"இல்லை மன்னா! சதி வேறுவிதமாக உருவாகிறது! இருங்கோவே ளுக்கும் நமது அரண்மனைக்குள்ளிருக்கும் அந்த வேளிர் வீரனுக்கும் இடையிலே செய்திகள் போய் வந்து கொண்டிருக்கின்றன. அதன்படி எனக்குக் கிடைத்த தகவலைச் சொல்லுகிறேன் கேளுங்கள்; இன்று விடியற்காலைப் பொழுதில் நம் ஆலோசனை மண்டபத்துக்கருகேயுள்ள சோலையில் யவனக்கிழவர் வேடத்தில் இருங்கோவேள், அந்த வேளிர் வீரனைச் சந்திக்கப் போகிறான். சதி உருவாகப் போகிறது. தங்களை வீழ்த்த! என்ன விதமோ எனக்குத் தெரியாது. இருவரும் சோலையில் சந்தித்து முடிவு செய்யப் போகிறார்கள் என்பது மட்டும் எனக்குத் தெரியும்!"
"இருங்கோவேள், அவ்வளவு துணிவுடன் அரண்மனைக்குள் நுழைந்து விடுவானா என்ன?"
"அதனால்தான் யவனக்கிழவர் வேடமாமே; அந்த வேடத்தில் வரப்போகிறானாம்!"
மன்னன் யோசனையிலாழ்ந்தான். மீண்டும் வளவன் பேசத் தொடங்கினான்;
"எனக்கு ஒரு வழி புலப்படுகிறது."
"என்ன வழி?"
"இருங்கோவேளுக்காக நடுயாமத்திலிருந்து விடியற்காலம் வரையில் வேளிர் வீரன், நான் குறிப்பிட்ட சோலையில் மறைந்திருக்கப் போகிறான். வேளிர்வேந்தன் யவனக்கிழவர் வேடத்தில் வந்து அவனது வீரனைச் சந்திப்பதற்கு முன்பு நாம் அந்த வீரனை ஏமாற்றி விஷயத்தைப் புரிந்து கொண்டால்..."
"அது எப்படி முடியும்?"
"அரசே! மன்னிக்கவும்! தாங்களே யவனக்கிழவர் வேடமணிந்து அந்தச் சோலைக்குச் செல்வது; நல்ல இருட்டானதால் வேளிர் வீரன் ஏமாந்து விடுவான். அவனிடம் தாங்கள் அடித்தொண்டையில் 'என்ன ஏற்பாடுகள் செய்திருக்கிறாய்?' என்று கேட்டால் எல்லாவற்றையும் சொல்லிவிடுவான். அதன் பிறகு அவனைக்கொண்டே இருங்கோவே ளைப் பிடிப்பதற்கும் அவன்மீது சதிக்குற்றம் சாட்டுவதற்கும் வழி ஏற்படுத்திக் கொள்ளலாம்."
"வளவா! இதற்கேன் இவ்வளவு தொல்லை? இருங்கோவேளும் வீரனும் சந்தித்துப் பேசும்போது நமது படைகளை மறைந்திருக்கச் செய்து அவர்களை அப்படியே மடக்கிவிட்டால்?"
"அரசே! தங்கள் ஆற்றல் எனக்குத் தெரியாதா? படைகள் கூட எதற்கு? தாங்கள் தனியொருவரே பல்லாயிரம் இருங்கோவேள்களுக்குப் பதில் சொல்வீர்களே! ஆனால் நான் நினைப்பது வேறு ! நமது சோழ மண்டலத்திலேயே இருங்கோவேளின் பக்கம் யார் யார் சேர்ந்து கொண்டு தங்களைக் கவிழ்க்க முயல்கிறார்கள் என்ற உண்மை தெளிவாக, என்னுடைய யோசனையும் பயன்படுமென்று நம்புகிறேன்!"
"ஆமாம்! நீ கூறுவதும் உண்மைதான்! சோழ நாட்டிலேயே எனக்கெதிராகச் சில தீய சக்திகள் வளர்கின்றன என்பதை நான் முதலிலேயே கேள்விப்பட்டிருக்கிறேன்!"
"நாட்டிலே மட்டுமல்ல மன்னா! நமது அரண்மனையிலேயே அந்தக் கயவர்கள் சிலர் உலவிக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பாவிகளின் பட்டியலைத் தாங்கள் அணியும் யவனக்கிழவர் வேடத்தின் மூலம் அந்த வேளிர் வீரனிடமிருந்து இன்றிரவு அறிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன்!"
வளவனின் திட்டம் மன்னனின் மனத்தைக் கவர்ந்து விட்டது.
"வளவா! நீ போ! உன் யோசனைப்படியே ஏற்பாடுகளைக் கவனிக் கிறேன். தேவைப்பட்டால் உன்னைப்பிறகு அழைக்கிறேன்!" என்று வளவனை அனுப்பிவைத்தான். அவன் முதுகில் தட்டிக் கொடுத்தவாறு!