ரோமாபுரிப் பாண்டியன்/26. திகைப்பா வியப்பா
26
திகைப்பா வியப்பா
கூறியிருப்பான் என்ற குழப்பத்தோடு பூம்புகார் அரண்மனைக்குள் நடைபோட்டுக்கொண்டிருந்த செழியனின் காதில், மரமாளிகையின் மீது சோழப் பெருங்குடி மக்கள் நடத்திய போரும் அதில் பெற்ற வெற்றிச் செய்தியும் எட்டிவிட்டன. அந்தச் செய்தியை இளவரசி தாமரையிடம் அறிவித்தால் என்ன பாடுபடுவாள் என்ற ஆழ்ந்த இரக்க உணர்வும் அவன் இருதயத்தில் பொங்கியது. இருங்கோவேளின் பழிவாங்கும் உணர்ச்சி உச்சக்கட்டத்திற்குச் செல்லப் போகிறது. வெகுவிரைவில் அவனது வெறித்தனமான தாக்குதல் கரிகால் மன்னன் மீது ஆரம்பமாகி விடும் என்று பயந்தான் அந்தப் பாண்டியகுல வீரன்.
தனக்கு ஏற்பட்டிருக்கிற சோதனை நிறைந்த நேரத்தை அவன் நினைத்து நினைத்து மனம் புழுங்கினான். அரண்மனைக்குள் நுழைந்திருக்கிற ஆபத்துக்களை அரசனிடம் தெரிவித்து விடலாம் என்றாலோ, அவன் தாமரைக்குத் தந்த உறுதிமொழியை மீறியவனாகி விடுவான். வேளிர்குல வீரன் என்ற நிலையில் கரிகால் மன்னனிடம் ஆபத்தினை விளக்கினாலோ அவன் நம்பப்போவதில்லை.
வாக்குறுதியைக் காப்பாற்றுவதா? வான் புகழ் கொண்ட மன்னரைக் காப்பாற்றுவதா? இரண்டு கடமைகளையும் செய்து முடிப்பதே உண்மையான வீரனுக்கு அழகு என்று அவன் மனச்சாட்சி கூறியது.
தானே தனியாக நின்று மன்னரைக் பாதுகாப்பது என்ற முடிவுடன் அரண்மனையில் திரிந்து கொண்டிருந்தான். அவன் கால்கள் நான்கு திசையிலும் சுழன்றவண்ணமிருந்தன. எந்த ஒலியையும் கூர்ந்து கவனித்து ஆராய்ந்தன செழியனின் செவிகள். இரவு இருங்கோவேளைச் சந்திப்பதாலேயே மன்னனுக்கு ஏற்பட இருக்கும் படுநாசத்தைத் தடுத்திட முடியுமென்று அவன் நம்பினான். தாமரை தன்னைத் தேடிப்பார்த்துக் கிடைக்காத காரணத்தால், சந்தேகப்பட்டு விடக் கூடாதேயென்று நினைத்து அவள் இருக்குமிடம் நோக்கிச் சென்றான்.
அரண்மனைக்குள் வந்தது முதல் யாருடைய தடையுமின்றி விருப்பம் போல் எல்லா இடங்களிலும் திரிந்து கொண்டிருந்த அவனுக்குத் திடீரென ஓர் அதிர்ச்சி ஏற்பட்டது. அவனை யாரோ கவனிப்பது போன்ற ஒரு பயம். ஏதுமறியாதவனைப்போல் ஓரக் கண்ணால் தன்னைத் தொடர்ந்து மறைந்து வருபவனை அவன் கவனித்தான். கரிகாலனின் மெய்க்காப் பாளன்தான் அந்த ஒற்றன் என்பதைப் புரிந்து கொண்டான். திடுமென அவன் ஏன் தன்னைத் தொடர வேண்டும்? கேள்விக் குறி அவனை உலுக்கியது. வளவனின் எச்சரிக்கைக்குப் பிறகு, மன்னன் மெய்க்காப் பாளனிடம் செழியனைக் கண்காணிக்குமாறு பணித்திருக்கிறான் என்பது அவனுக்கு எப்படித் தெரியும்?
மன்னனின் ஆணைக்கிணங்க மெய்க்காப்பாளன், செழியனை நிழல் போலத் தொடர ஆரம்பித்து விட்டான்!
‘ஆனது ஆகட்டும்' என்ற துணிவுடன் தன்னை யாரும் தொடர்ந்து வராதது போலவே நடித்த வண்ணம் செழியன், தாமரை தங்கியிருக்கும் பளிங்கு மாளிகைக்குள் நுழைந்தான். வாயிற்புரம் வரையில் தன்னைத் தொடர்ந்து வந்த மெய்க்காப்பாளன் மறைந்து விட்ட அதிசயத்தையும் அவன் கண்டான். வாயிற்புத்தில் அமைக்கப்பட்டிருந்த ரகசியக் கதவு ஒன்றினைத் திறந்து கொண்டு செழியனுக்கு முன்பாக மாளிகையின் உட்பகுதிக்குள் நுழைந்து விட்டான், அந்த மெய்க்காப்பாளன். அதை உணராத செழியன், தாமரை ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கூடத்திற்குள் புகுந்தான். அச்சமும் கவலையும் தோய்ந்திருந்த தாமரையின் முகத்தை அவன் கண்டு அப்படியே நின்று விட்டான்.
தாமரை, அவனைப் பார்த்ததும் நெஞ்சு மேலும் புடைக்கப் பெருமூச்செறிந்து, "வந்து விட்டீர்களா?" என்று கேட்டாள் பரபரப்புடன், வேளிர் படை வீரனை. அந்த நாட்டு இளவரசி இவ்வளவு மரியாதை யுடன் அழைப்பதைப் பார்த்து மெய்க்காப்பாளன் வியப்படைந்து மேலும் அவர்கள் உரையாடலைக் கூர்ந்து கவனித்தான்.
"ஓடி விட்டேனோ என்ற சந்தேகம் ஏற்பட்டதல்லவா?"
"இல்லை, உங்கள் வாக்குறுதியில் எனக்கிருந்த நம்பிக்கை சிறிதும் தேயவில்லை. பூம்புகார் வீரர்களிடம் ஏதாவது விபரீதமான தகராறுகள் ஏற்பட்டு உண்மை வெளியாகிவிட்டதோ என்று அஞ்சினேன்; அவ்வளவு தான்."
"அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. சவ அடக்கம் முடிவுற்றதும் ஏதேதோ நினைவுகள் அலைக்கழிக்க அரண்மனையில் கால் போன பக்கமெல்லாம் போய் விட்டு. இறுதியில் இங்கு வந்து சேர்ந்தேன். மன்னரைப் பார்த்தால் விடை பெற்றுக் கொண்டு புறப்படலாமென்று கருதினேன்."
"நாம் புறப்படலாமா?"
"ஏன், இன்று தங்கிவிட்டு நாளைக்குப் புறப்பட்டால் போகிறது. ஒருவேளை இந்த மாளிகையின் வசதிகள் போதவில்லையா?"
"என்னதான் இனிய வசதிகள் உபசாரங்கள் நடைபெற்றாலும் இது எங்கள் எதிரியின் வீடுதானே? உடலை வருத்துகின்ற மரமாளிகையில் படுத்துத் தூங்க வேண்டிய வேதனையிருந்தாலும் அது எங்கள் சொந்த இடமல்லவா? விரைவில் அங்கு சென்று விடவே நான் விரும்புகிறேன்"
மரமாளிகை பற்றித் தாமரை குறிப்பிட்டதும், செழியனுக்கு நெஞ்சம் துணுக்குற்றது.
'அந்தோ பரிதாபம் - அந்த மாளிகை மண்மேடாகி விட்டதை இன்னும் அறிந்து கொள்ளாமல் உளறிக் கொண்டிருக்கிறாளே?' என எண்ணித் தனக்குத்தானே வருத்தப்பட்டுக் கொண்டான். அவளிடம் வேளிர் படையின் வீழ்ச்சியையும், அமைச்சர் செந்தலையாரின் பரிதாபகரமான முடிவையும் அறிவித்து விடலாமா என்று ஒரு கணம் நினைத்தான். ஆனால் உடனே நினைப்பை மாற்றிக்கொண்டான்.
"அண்ணன் மரமாளிகைக்குத் திரும்புவதற்குள் நாம் போய்விடுவது நல்லதல்லவா?"
தாமரையின் இந்தக் கேள்விக்குச் செழியன் சிரித்துக் கொண்டே பதில் சொன்னான்:
"இது வரையில் நமது ரகசியம் வெளிப்படாமல் இருக்குமென்ற நம்பிக்கை வேறு இருக்கிறதா? திரும்பக் கொண்டுபோய் என்னை இருங்கோவேளிடம் ஒப்படைத்து விட்ட நல்ல பெயரைத் தவிர இளவரசிக்கு வேறென்ன மிஞ்சப் போகிறது?"
"எதையும் தாங்கிக் கொள்வது என்ற முடிவுடன் தானே இந்தக் காரியத்தில் நான் இறங்கினேன்? பரவாயில்லை. தங்களுக்காக, வருவதை நான் அனுபவித்துக் கொள்கிறேன்."
தாமரை பெருமிதத்தோடு இந்தப் பதிலைக் கூறினாள். செழியன் அவளிடம் அதிகம் பேச்சுக் கொடுக்க விரும்பவில்லை; ஏனெனில் தன்னைத் தொடர்ந்து வந்த மெய்க்காவலன் ஒருவேளை அங்கேயும் ஒளிந்திருந்து தன்னைக் கவனிக்கக் கூடுமென்று அவன் கருதினான். அந்த யூகம் சரிதான் என்பதுபோல் அவன் விழிகளில் மெய்க்காவலனின் உருவமும் தென்பட்டுவிட்டது!
"இளவரசி! ஓய்வெடுத்துக் கொள்க! நான் வெளித்தாழ்வாரத்தில் படுத்துச் சற்றுக் கண்ணயர்கிறேன்."
-எனக் கூறிவிட்டு அவள் பதிலுக்குக் காத்திராமல் செழியன் தாழ்வாரத்துப் பக்கம் வந்தான். மெய்க்காவலனும் அவனைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான். தாழ்வாரத்தில் நிறுத்தப்பட்டிருந்த தூண் ஒன்றின் ஓரத்தில் வட்ட வடிவமாகச் செதுக்கப்பட்டிருந்த ஒரு பீடத்தில் செழியன் உட்கார்ந்து சிந்தனைத் தேரைச் செலுத்திக் கொண்டிருந்தான்.
மெய்க்காவலன் அவனையே உற்று நோக்கியவாறு பூனைபோல் அடியெடுத்து வைத்துத் தூணின் அருகே தொங்கிக் கொண்டிருந்த இரும்புச் சங்கலியொன்றைப் பிடித்துக் கொண்டான்.
அந்த இரும்புச் சங்கிலியைப் போலவே அங்கு பல சங்கிலிகள் தொங்கி அந்த தாழ்வாரத்திற்கு எழில் தந்து கொண்டிருந்தன. ஆனாலும் மெய்க்காவலன் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தான். செழியனோ கண்களை மெதுவாக மூடிக்கொண்டு தன் முன்னே காத்திருக்கும் பொறுப்புகளோடு போராடிக் கொண்டிருந்தான்.
செழியன் அமர்ந்திருந்த இருக்கை மெல்ல மெல்ல அசைந்தது. மெய்க்காவலனின் கையிலிருந்த சங்கிலி தரையை நோக்கித் தாழ்ந்தது. செழியன், பீடத்துடன் கீழே போய்க் கொண்டிருப்பதை உணர்ந்தான்.
தாழ்வாரத்திலிருந்து இருள்நிறைந்த பூமியைக் குடைந்து கொண்டு எங்கேயோ போவது போன்ற திகில் அவனைப் பற்றிக்கொண்டது. கீழே கீழே அவனால் எண்ணமுடியாத அளவுக்குக் கீழே-பீடம் பயணம் நடத்துகிறது.கூச்சலிடவோ, அங்குமிங்கும் ஆடியசைந்து உடலைக் காயப்படுத்திக் கொள்ளவோ விரும்பாமல் மனத்திடத்தோடு இருந்தான் செழியன். கீழ்நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த இயந்திர இருக்கை தடால் என்ற ஒலியுடன் ஓர் இடத்தில் முட்டியது.
செழியன் சுற்றும் முற்றும் பார்த்தான். முதலில் இருந்த அடர்ந்த இருள் இப்போது இல்லை. மங்கலான ஒளி பரவிக் கொண்டிருந்த ஓர் இடத்திற்கு வந்திருப்பதாக உணர்ந்தான். இயந்திர இருக்கையை விட்டு இறங்கி மெல்ல அடிவைத்து அந்த இடத்தை ஆராய்ந்தான். அவன் இறங்கியதும் அந்தப் பீடம் மேலே போய்விட்டது. அதைப் பற்றிக் கவலை கொள்ளாமல் எங்கே வந்திருக்கிறோம் என்ற தீவிர யோசனையில் ஈடுபட்டு மங்கலான ஒளி வழங்கும் விளக்கினிடம் சென்றான்.
அங்கே யாரோ ஒருவர் அமர்ந்திருப்பது தெரிந்தது. விளக்கடியில் உட்கார்ந்திருப்பது யார்? அருகே சென்று பார்க்கலாமா? அதற்கு அவனுக்குத் துணிவு வரவில்லை. எத்தனையோ பொறுப்புகளைச் சந்திக்க வேண்டிய சமயத்தில் இப்படி ஒரு பயங்கரமான தடை வந்து விட்டதே என்று அவன் ஆயாசமடைந்தான். 'விளக்கடி உருவம் எத்தகைய விளைவுகளுக்குக் காரணமாக இருக்குமோ? என்னென்ன வேதனைகள் ஏற்படுத்துமோ?' என்றெல்லாம் குழம்பினான். எவ்வளவு நேரமாக அந்த உருவம் இப்படி உட்கார்ந்திருக்கிறது? அதுவும் தெரியாது. அந்த இடமென்ன கொலை புரியும் சூதுச் சுரங்கமா? சித்திரவதை நடக்கும் சிறைக்கோட்டமா?
அந்த உருவம் விளக்கின் பக்கம் முகத்தைக் குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தபடியால் செழியன் அந்த உருவின் பின்புறத்தைத்தான் பார்க்க முடிந்தது! அமைதி நிலவிக் கொண்டிருந்த அந்த இடத்தில் என்ன அதிசயம் நடக்கப் போகிறதோ என்று செழியன் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.
அசைவற்று நின்றுகொண்டிருந்த செழியனின் தொண்டை அடைத் துக்கொண்டது. தன்னை மறந்து தொண்டையைக் கனைத்துக்கொண்டு, உடனே தவற்றை உணர்ந்து தன் தலையில் அடித்துக் கொண்டான்.
இந்த ஒலி கேட்ட மாத்திரத்தில் விளக்கடி உருவத்தின் தலை நிமிர்ந்தது.
நிமிர்ந்த தலை அவன் பக்கம் திரும்பியது. உருவம் தன் கைகளில் விளக்கை எடுத்து, ஒலி வந்த பக்கம் திரும்பியது. அந்த விளக்கொளியில் உருவத்தின் முகத்தைச் செழியன் கண்டான். பார்த்தவுடன் பதைத்துப் போய் "ஆ! தாங்களா?" என்று கூச்சலிட்டு விட்டான்.
புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனாரும் பாண்டிய நாட்டுத் தளபதி நெடுமாறனும் மிகத் தீவிரமாக ஒரு முயற்சியிலே ஈடுபட வேண்டுமென்று முடிவெடுத்ததை வாசகர்கள் மறந்திருக்க முடியாது. பட்டினப்பாலை அரங்கேற்றத்தின்போது அவைக்களத்தில் நிகழ்ந்த அமளிக்குப் பின் படைக்காவலன் நெடுமாறனும், பாவேந்தர் கடியலூராரும் சோழ நாட்டில் அரசருக்கெதிராகத் துரோக சக்தி வளர்ந்து வருவது பற்றிப் பேசிக் கொண்டார்கள். அப்போதுதான் புலவர் காரிக்கண்ணனாருக்கு நேர்ந்துள்ள நிலை பற்றியும் நெடுமாறன் உருத்திரங்கண்ணனாரிடம் கூறினான். அச்செய்தியால் தாக்குண்ட கடியலூரார் எவ்விதமாயினும் மறைந்து கிடக்கும் உண்மையினை அறிதல் வேண்டுமென்று துடித்து விட்டார். கரிகால் மன்னனுக்கிருக்கும் குழப்பங்களினிடையே இந்தக் குழப்பத்தையும் மீண்டும் புகுத்தக்கூடாது என்று நெடுமாறன் விளக்கமளித்து, அவன் அமைதி பெற்ற பிறகு அதுபற்றி பேச வேண்டுமென்ற எண்ணத்துடன் இருவரும் வந்திருந்தனர்.
அமைதிதான் தோன்றுவதற்கான அடையாளமே தெரியவில்லையே! புதுப்புதுப் புயல்கள் உருவெடுத்துக் கொண்டேயிருக்கின்றனவே! பூம்புகாரில் திடீர் திடீரென நிகழும் சம்பவங்களும், கேள்விப்படும் செய்திகளும் நெடுமாறனுக்கு மிக்க விசித்திரமாகத் தென்பட்டன. அந்த நிலைமைகளைச் சமாளிப்பதற்கு மன்னன் மேற்கொள்ளும் முறைகள் கூட அவனுக்குப் பெரும் வியப்பை அளித்த வண்ணமிருந்தன.
ஆற்றல் மிக்க படைவரிசைகளைக் கொண்டிருந்தும், அவைகளைப் பயன்படுத்திப் பகைவன் இருங்கோவேளைப் பிடிக்கவோ, அழிக்கவோ அவர் முயற்சியெடுக்கவில்லை. சோழநாட்டின் படைகள். சேர-பாண்டியர் படைகளைக் காட்டிலும் தொகையிலும் வலுவிலும் எத்தனையோ மடங்கு உயர்ந்தவை. ஆனால் அந்த பெரும்பலம் கொண்டு இருங்கோவேளின் படைகளைச் சூழ்ந்து எதிர்த்து அவன் இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிடலாம். அதுபற்றிக் கரிகாலன் சிந்தித்ததாகவே தெரியவில்லை. பாண்டிய நாட்டுப் படையெடுப்பில் அவனைக் கைது செய்து இழுத்துச் செல்லலாம் என எண்ணியதும் பாழாகும் அளவுக்கு அந்தச் செழியன் இருங்கோவேளின் கைப்பாவையாகி விட்டான்.
இருங்கோவேளின் துணைவி கொலைகாரியாக மாறி கொலுமண்டபத்திற்கு வந்தபிறகு, மன்னனின் பெருந்தன்மை மேலும் வளர்ந்ததே தவிர, பகையுணர்வுகொண்டு பழிகாரர்களைத் தொலைத்துக் கட்ட அப்போதும் எழுந்தானில்லை. அவனே குறி வைக்கப்படுகிறான். அவன் உயிருக்கே ஆபத்து. அந்தச் சமயத்திலும் முகத்தில் கோபம் பொங்கிடவில்லை. சிந்தனை ரேகைகள்தான் விழுகின்றன. அமைதியாகக் காரியங்களில் ஈடுபடுகிறான். ஆர்த்தெழுந்து படைதிரட்டிப் பகைப்புலம் அழிக்கப் புறப்படுகின்றா னில்லை. ஒருவேளை போர்த்தொழில்கூடாது எனும் புதிய தத்துவ உபதேசத்தை நாட்டுக்கு வழங்கப் போகிறானா? படைகளைக் கலைத்துவிட்டுப் பெருந்தன்மை, அன்பு, அடக்கம் ஆகியவற்றைக் கொண்டு நாடாளப்போகிறானா? இந்தப் புதிய போக்குக்கான காரணத்தை எப்படியும் தெரிந்துகொள்ள வேண்டும் என்றெல்லாம் நினைத்துக் கிளர்ந்த நெடுமாறனுக்கு காரிக்கண்ணனார் பற்றிய விளக்கமறிய வேண்டுமென்ற ஆவலும் நெஞ்சைப் பீறிக் கொண்டு கிளம்பிற்று.
கரிகாலனிடமிருந்து தனக்குச் செய்தி கொண்டுவந்த போது அந்தப் புலவர் மன்னனிடம் காட்டிய அன்பும், மரியாதையும், நாட்டுப்பற்று மிக்க பேச்சும் நெடுமாறனைப் பெரிதும் கவர்ந்திருந்தன. அத்தகைய தமிழ்ச் சான்றோருக்கு இந்த முடிவு ஏற்படுவானேன் என்று அவன் சிந்தித்துக்கொண்டிருந்தபோது உருத்திரங்கண்ணனாரின் வருகையும் காரிக்கண்ணனார் பற்றி உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று அவர் காட்டிய பரபரப்பும் அவன் முயற்சியைத் தீவிரமாக்கின. ஆனால் அரண்மனையில் இருந்த நெடுமாறனுக்கும் கடியலூர்ப் புலவருக்கும் கிட்டாத வாய்ப்புச் செழியனுக்குக் கிட்டிவிட்டது.
மாமன்னனின் ஆணைப்படி மெய்க்காவலன், செழியனை வட்டமிடத் தொடங்கினான். அவனைச் சுற்றியலைந்து செய்தி கொண்டு வருவது மட்டுமல்ல; அவனுக்கும் பூம்புகார் அரண்மனையில் யார் யாருக்கும் தொடர்பு இருக்கிறது என்று ஆராய வேண்டிய பணியும் மெய்க்காவலனுக்குத் தரப்பட்டிருந்தது.
அதனால்தான் அவன் - வேளிர்குல வீரன் உடையில் இருந்த செழியன் தற்செயலாகப் பீடத்தில் உட்கார்ந்த போது எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்பினைப் பயன் படுத்திக்கொண்டு இயந்திரச் சங்கிலியை இழுத்துப் பீடத்தைக் கீழ்நோக்கித் தள்ளி அங்குள்ள மாளிகைக்குள் அவனை விட்டான்.
அங்கே செழியன் யாரைச் சந்தித்தான்? விளக்கடியில் உட்கார்ந் திருந்தது யார்? திரும்பியவாறு கையிலேயிருந்த ஓலைச் சுவடியையும், எழுத்தாணியையும் பார்ப்பதற்கு முன்பு செழியன் கண்டது. விரிந்த ஓலைச் சுவடி போல் நெற்றியும், எழுத்தாணிபோல் கூரிய விழிகளும் படைத்த காரிக்கண்ணனாரின் முகத்தைத்தான்.
ஆம், அந்தப் புலவர்தான் விளக்கடியில் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். அவர் நாட்டுத் துரோகியெனக் குற்றஞ் சாட்டப்பட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தாலும் தமிழ்ப் புலவருக்குரிய எல்லா மரியாதைகளுடனும் அங்கு நடத்தப்பட்டார். எந்த வசதிகளும் குறைக்கப்படவில்லை. இன்னும் சொல்லப் போனால், அவர் வீட்டில் இருந்ததை விட அதிகப்படியான வசதிகள் அங்கே செய்யப்பட்டிருந்தன. எத்தனை வசதிகள் இருந்தால் என்ன? அவர் மீது கூறப்பட்டுள்ள குற்றம் அவரை அணுஅணுவாகக் கொன்று கொண்டிருக்கிறதே!
இந்த நாட்டின் நல்வாழ்வு தவிர வேறெதுவும் தேவையில்லையென முடிவு கட்டிக் கிளம்பிவிட்ட இந்த முத்துநகையின் தந்தை துரோகி! சோழ மண்டலத்தைப் பகைவனுக்குக் காட்டிக் கொடுக்கும் பாவி. கரிகால் மன்னனின் உயிருக்கு உலைவைக்கப் புறப்பட்டிருக்கும் கயவர்களுக்குத் துணை: எந்தச் சோழநாட்டு மண்மீது சுந்தரத் தமிழ்க் கவிதைகள் இயற்றினாரோ அந்தச் சோழநாட்டுக்கு அழிவு தேடித்திரியும் அக்கிரமக்காரர்.
-இப்படி முத்துநகை தனக்கு நேராகத் தேன்மொழி சிந்தும் நாவால், தேளெனக் கொட்டியதை அவரால் மறக்க முடியுமா? அந்தச் சொற்கள் அவரது உள்ளத்தை எருமைகள் புகுந்த தாமரைக் குளம்போல் ஆக்காமலிருக்குமா?
"வணக்கத்துக்குரிய தமிழ்ப் பாவாணரே! நானொருவன் வாழ்வது பிடிக்கவில்லையென்றால் என் மார்பில் வேல் நுழைத்திருக்கலாம். தாங்கள் அதை விடுத்துத் தாயகத்தை எதிரிக்குக் காட்டிக் கொடுக்கும் இழிசெயலை மேற்கொண்டிருக்க வேண்டியதில்லை."
- மன்னன் அன்று பேசிய வாசகங்களை நினைத்துக் கதறினார் காரிக்கண்ணனார். அவருக்கு அந்த வசதிகள் நிறைந்த சிறை மாளிகையில் அமைதி ஏது? பெருங்காற்றில் கரை மோதும் அலைகள் போல் நினைவுகள் உயர்ந்தும் தாழ்ந்தும் அவரைக் குடைந்தெடுத்த போதும் எழுதும் பணியிலிருந்து விடுபடாமலிருந்த அவர், திடீரெனத் தன் முன்னே வந்து நிற்கும் வேளிர்படை வீரனைக் கண்டதும் வியப்புற்றார். விழிகளை அகல விரித்து எதிரேயிருந்த விளக்கைக் கையிலேந்தி மெல்ல நடந்து அவன் முன்னே வந்தார்.
செழியன் என்ன செய்வதென்று புரியாமல் நின்று கொண்டிருந்தான். அவனுடைய உள்ளத்தில் அதிசயம் மட்டுமல்ல; திகிலும் குடி கொண்டிருந்தது.. தன்னைச் சுற்றியவாறு ஒருவன் பின் தொடர்கிறான் என்றும், அவனுடைய ஏற்பாட்டின்படியே தனக்கும் புலவருக்கும் கூடச் சந்திப்பு ஏற்பட்டிருக்கக் கூடுமென்றும் ஊகித்தறிந்து கொண்ட செழியன், புலவரிடம் தன்னை யாரென்று காட்டிக் கொள்ள விரும்பாமல், அவர் அருகே வரும் வரையில் அப்படியே நின்று கொண்டிருந்தான். விளக்கைத் தூக்கிச் செழியனின் முகத்திற்கு நேராகப் பிடித்தவாறு புலவர் மெல்லிய குரலில், "யார்?" என்று கேட்டார்.
"நான் வேளிர்படை வீரன். இருங்கோவேளின் தங்கை தாமரையுடன் வந்திருக்கிறேன்" என்றான் செழியன்.
வேளிர்படை!
-இருங்கோவேள்!!
இந்த வார்த்தைகள் காதில் விழுந்ததும் புலவருக்குப் புதியதோர் ஆவேசமே பிறந்தது. உரக்கக் கத்தினார்:
"இருங்கோவேள்! ஆகா, இருங்கோவேள் என்னுடைய மன்னன்! அவருடைய ஆணையின்படி நான் கரிகாலனைக் கொன்று குவிக்கத் துணை நிற்க வேண்டும். அந்த ஏற்பாட்டிற்காகத்தான் இளவரசி தாமரையும் நீயும் வந்திருக்கிறீர்களா? வேளிர் வீரனே! நான் யார் தெரிகிறதா? நான் சோழ மண்டலத்தைக் காட்டிக் கொடுப்பவன், பூம்புகாரில் இருங்கோவேளின் அடிமை, கரிகாலனைக் கொல்ல வந்த காலன்."
இந்த உணர்ச்சி மிக்க வார்த்தைகளைக் கேட்டதும் செழியனின் உடல் நடுங்கிற்று. மயிர்க் கூச்செரியும் வார்த்தைகளால் அவன் செவிகள் செவிடுபட்டன. இடி முழக்கம் கேட்டவனைப் போல் காதுகளைப் பொத்திக் கொண்டு நின்றான்.
"என்னப்பா திகைக்கிறாய்! வேளிர் வீரனே! என்னைப் பார்த்தால் சதியை நிறைவேற்றச் சக்தியற்றவனைப் போலத் தெரிகிறதா? நம்பு என்னை நீ மட்டுமல்ல, உனது மன்னர் இருங்கோவேளிடமும் சொல்! மன்னிக்கவும், அவர் எனக்கும் மன்னன்தானே! அவரிடம் சொல்! அரசன் கரிகாலனின் முடிவை யாரும் தடுப்பதற்கு வலுவில்லாதவாறு அருமையான திட்டம் தீட்டியிருக்கிறேன். என் அருமை மகள் முத்துநகையின் ஆத்திரத்தையும் பொறுத்துக் கொண்டு எமது மன்னன் கரிகாலன் எம்மிடம் காட்டிய அன்புக்கு ஆழக் குழி தோண்டி விட்டு வேளிர்படையின் வெற்றிக்கு உழைக்கும் வீரத்தமிழ்ப்புலவன் தீட்டியுள்ள திட்டங்களை உமது மன்னனிடம் காட்டு!"
என்றவாறு அவர் எழுதிக் கொண்டிருந்த ஓலைச் சுவடியை மடக்கிக் கட்டி, அவனுக்கு நேராக நீட்டினார் புலவர் காரிக்கண்ணனார்! அதை வாங்காமல் நின்றிருந்தான் செழியன்.
புலவர் உள்ளபடியே துரோகியாகி விட்டாரா? அல்லது பித்தம் தலைக்கேறியதால் அவரைக் கரிகால்மன்னர் அரண்மனையில் அடைத்து வைத்திருக்கிறாரா? அவரை நான் காண்பதற்கான சூழ்நிலை ஏன் அமைக்கப்பட்டிருக்கிறது?
ஒருவேளை புலவர் துரோகியெனத் தீர்மானிக்கப்பட்டு வேளிர் படை வீரனாக இருக்கும் என்னையும் அவரையும் சந்திக்க வைப்பதால் மேலும் ஏதாவது தேவையான ஆதாரங்கள் கிடைக்குமென்று மன்னர் எதிர்பார்க்கிறாரா?
-இந்தக் கேள்விக்குச் சரியான பதில் காணமுடியாமல் ஓரக்கண்ணால் சுற்றுமுற்றும் பார்த்தான். அவன் எதிர்பார்த்தவாறு இருண்டு கிடந்த ஒரு மூலையில் மெய்க்காவலன் நின்றுகொண்டிருந்தான். அவனுக்குப் பின்னால் ஏழெட்டு வாட்கள் மின்னிக்கொண்டிருந்தன. மெய்க்காவலன் காத்திருக்கிறான் என்பதைச் செழியன் புரிந்து கொண்டான். என்ன விபரீதம் ஏற்படப் போகிறதோ என்று அவன் நெஞ்சம் படபடவென அடித்துக் கொண்டிருந்தது. புலவர், செழியனை நோக்கி மேலும் சத்தம் போட்டுப் பேசலானார்:
"பைத்தியக்காரப் புலவன் பாட்டு எழுதி உன்னிடம் நீட்டுகிறான் என்று எண்ணுகிறாயா? இல்லை. இல்லவே இல்லை. இவையனைத்தும் கரிகால் மன்னனை ஒழித்துக் கட்டுவதற்கான திட்டம். இருங்கோவேள் சோழப் பெருநாட்டுக்கு எவ்வாறு மன்னனாவது என்பதற்கான வழி முறைகளடா தம்பி. ஓலையில் தீட்டப்பட்டிருப்பவை. இன்னுமா சந்தேகம்? இதைக் கொண்டுபோய்ப் பத்திரமாக வேளிர்குல வேந்தரிடம் கொடு, சதி நிறைவேறியதும் என்னை விடுதலை செய்யச் சொல். எனக்கு எழுதி எழுதி வாழும் வேலை பிடிக்கவில்லை. இருங்கோவேளிடம் கூறி என்னை நாட்டின் அமைச்சராக்கச் சொல்! இந்தா ஓலையைப் பிடி!"
செழியனுக்கும் அந்த ஓலைச் சுவடியை வாங்கிவிட வேண்டுமென்ற எண்ணம் பிறந்தது. புலவர், தேசத் துரோகியாக இருக்க வேண்டுமென்ற முடிவுக்குக்கூட அவன் வந்துவிட்டான்! தன்னை வேளிர் வீரனென நம்பித் தன்னிடம் கொடுக்கிற ஓலையின்மூலம் வேறு பல உண்மைகளைத் தெரிந்து கொள்ளக் கூடுமென்று கருதி, செழியன் புலவர் கொடுத்த ஓலைச் சுவடியை வாங்கிக் கொண்டான்.
வாங்கியதும் தன்னைச் சூழ்ந்துவரும் மெய்க்காவல் படையினர் அந்த ஓலைச் சுவடியைப் பிடுங்கிக் கொண்டு போய்விடுவார்களோ என்ற அச்சம் வேறு பிறந்தது. அப்படியே தன் கையை விட்டுப் போனாலும் போக வேண்டிய இடத்துக்கு - அரசரிடம் தான் போய்ச் சேரும் என்ற நம்பிக்கையில் அதை தன் கையில் பத்திரமாக வைத்துக் கொண்டான்.
'அதிக நேரம் இங்கு நிற்பதில் பயனில்லை. வெளியேறிவிட வேண்டும்' என்று முடிவு செய்து புலவரிடம், "வருகிறேன்" என்று வணக்கம் செலுத்திவிட்டுப் புறப்பட்டான்.
எவ்வழியாக வெளியேறுவது என்று புரியாமல் திகைத்துக் கொண்டிருக்கும்போது அவனுக்கெதிரே ஒரு கதவு திறந்தது.
மகிழ்ச்சியும் மனக்கலக்கமும் ஒன்றையொன்று வென்றிடப் போட்டியிடும் இதயம் படைத்த அந்த வீரன், ஓலைச் சுவடியுடன், திறந்த கதவின் வழியே சென்றான். மெய்க்காவல் படையினரும் அவனைத் தொடர்ந்தனர். -உருவிய கத்திகளுடன்!