ரோமாபுரிப் பாண்டியன்/27. தமிழ் விடு தூது
27
தமிழ் விடு தூது
அனைவரும் போன பிறகு காரிக்கண்ணனார் ஒரு பெருமூச்சு விட்டுத் தனக்குத்தானே. “அப்பாடா!! என் ஆசை நிறைவேறியது; எனக்குத் தெரியாது என்று கருதிக் கொண்டு இந்தநாட்டில் பலர் என் கண்ணைக் கட்டிவிட்டுக் காரியமாற்றுவதாகப் பெருமைப்படுகின்றனர். நான் எழுதிய ஓலைச் சுவடி சேரவேண்டிய இடத்தில் சேர்ந்து விடும்; இனிமேல் நாம் நிம்மதியாக உயிர் விடலாம்" என்று தழுதழுத்த குரலில் கூறிக்கொண்டார். அவர் கூறிய வார்த்தைகளை அந்த அழகான அறையின் சுவர்கள் கூட எதிரொலிக்காமல் அவரை மௌனமாகச் சூழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தன.
வேளிர்குல வீரன் தன்னிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே தன்னைச் சுற்றி மெய்க்காவலர் படையினர் ஒளிந்திருப்பதைப் புலவர் கவனித்துவிட்டார்; அந்த வீரனிடம் ஒப்படைக்கும் ஓலைச் சுவடியை மெய்க்காவலர் கைப்பற்றிக் கொள்வர் என்று அவரால் ஊகித்துக் கொள்ள முடிந்தது. அப்படியிருந்தும் அவர் சுவடியைத் துணிவுடன் வேளிர் வீரனிடம் கொடுத்தார். கொடுத்தது மட்டுமல்ல; அது போய்ச் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்துவிடும் என்றும் எண்ணிப் பெருமூச்சு விட்டார்.
சேர வேண்டிய இடம் எது? புலவர் கருதும் அந்த இடம் இருங்கோவேளின் முன்னிலைதானா? அல்லது கரிகாலனின் கரங்களில் சேர வேண்டுமென்று விரும்புகிறாரா? ஒரு வேளை அந்த விருப்பம் நிறைவேறும் நம்பிக்கையில்தான் மறைந்தவாறு வேளிர் வீரனைத் தொடரும் மெய்க்காவலனைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறாரா?
அவரது விழிகளைவிட்டு வேளிர்வீரனும், மெய்க் காவலரும் மறைந்த பிறகு முன்போலவே விளக்கடியில் உட்கார்ந்து கொண்டு சிந்தனையில் ஈடுபட்டார். பட்டினப் பாலை அரங்கேற்றத்திற்குக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் வந்திருக்கும் செய்தியைக் கேள்விப் பட்டதிலிருந்தே அவரைக் காண வேண்டுமென்ற துடிப்பு மிகுந்தது. கட்டுக்காவலில் கிடக்கும் அவருக்குக் கடியலூராரைக் காண்பதற்கான நல்வாய்ப்பை யார் வழங்கப் போகிறார்கள்? அவரைச் சந்திக்க நேரிட்டால் தனக்குற்ற கேடுகளையெல்லாம் அவர்பால் எடுத்துரைத்துத் தக்கதோர் முடிவு காணச்செய்யலாம் என்று எதிர்பார்த்தார். அதற் கெனவே அவசர அவசரமாக ஓலைச் சுவடி எழுதத் தொடங்கினார். தனக்காக வாதாடும் ஆற்றல் மிக்க, வழக்குரைக்கும் கருவியாக அந்தச் சுவடி பயன்படுமே என்பது அவரது எண்ணம்!
நெடுங்கதை எழுதுவது போல் பல்வேறு செய்திகளைத் தொகுத்து எழுதினார். அந்தச் சுவடிகளைப் படித்துப் பார்க்கும் ஆவல் அவருக் கிருந்தது. அதனை ஒப்படைக்க வேண்டியது உருத்திரங்கண்ண னாரிடத் தில்தான் என்று தீர்மானித்து அவரது வருகையை எதிர்பார்த்துக் கிடந்த புலவர் திடுமென வேளிர்வீரனைச் சந்திக்க நேரிட்டது! அவன் தனக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த சமயத்தில் தான் ஓலையில் தன்னைப் பற்றி எழுதிய புதிர் நிறைந்த வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டுப் புதியதோர் பாடலை எழுதிக் கொண்டிருந்தார். அந்தப் பாடலை முடித்துவிட்டுத்தான் அவர் வேளிர்வீரனைத் திரும்பிப் பார்த்தார். அந்தப் பாடலும் அவனிடம் தரப்பட்ட ஓலைச் சுவடிக்குள்ளேதான் இருந்தது.
அவர் எழுதிய அந்தப்பாட்டை, அவரது அறையிலிருந்து வெளியே சென்ற செழியன் பிரித்துப் பார்க்கலானான். தன்னைச் சூழ்ந்து மெய்க்காவலர் வருகின்றனர் எனத் தெரிந்த பிறகும், அவன் அந்த ஓலையைப் படிப்பதிலே தீவிரம் காட்டினான். அதிசயிக்கும் வண்ணம் அமைந்த பீடம் - அதிர்ச்சியுண்டாக்கும் வகையில் தானே திறந்து கொண்ட கதவு - எல்லாமே அவனுக்கு மிகுந்த அச்சத்தை உண்டாக்கி விட்டன. ஆயினும் அவன் நிதானமாக நின்று புலவர் எழுதிய பாடலில் மனத்தைப் பரவவிட்டான்.
பொலஞ்செய் பல்கா சணிந்த வல்குல்
ஈகைக் கண்ணி யிலங்கத் தைஇத்
தருமண வியல்வோள் சாய னோக்கித்
தவிர்த்த தேரை விளர்த்த கண்ணை
வினவ லானா வெல்போ ரண்ணல்
யார்மக ளென்போய் கூறக் கேளினி
குன்றுகண் டன்ன நிலைப்பல் போர்பு
நாட்கடா வழித்த நனந்தலைக் குப்பை
வல்வி லிளையார்க்கு கல்குபத மாற்றாத்
தொல்குடி மன்னன் மகளே முன்னாட்
கூறி வந்த மாமுது வேந்தர்க்கு
செருவா யுழக்கிக் குருதி யோட்டிக்
கதுவாய் போகிய துதிவா யெஃகமொடு
பஞ்சியுங் களையாப் புண்ணர்
அஞ்சுதக வுடைய ரிவடன் னைமாரே"
- காதற் கதையொன்றையல்லவா காரிக்கண்ணனார் தீட்டியிருக்கிறார் என்று வியப்புற்றான் செழியன். வேந்தர் குடிப் பிறந்தவன் ஒருவன் இளமங்கை யொருத்தியின் அழகு கண்டு அவள்மீது கருத்தைச் செலுத்தி அறிவு குலைந்து நிற்கின்றான்.
மாசற்ற பொற்கொல்லன் பழுதறச் செய்த பொன்மணியணிந்த மேகலையும் கண்ணியும் திகழ்ந்திடத் தன்னை ஒப்பனை செய்து கொண்டு புதுமணலில் நடந்து செல்கிறவளின் சாயலை நோக்கி, தான் சென்ற தேரை அப்படியே நிறுத்திவிட்டு வெளுத்த பார்வையுடன் புலவரை நோக்கிக் கேட்கிறானாம். "இவளை மணக்கலாமா?" என்று! அதற்குத் தானே பதில் கூறுவது போலக் கற்பனை செய்து கொண்டு பேசுகிறார் புலவர். எவ்வாறு?
போர்க்களத்தில் வெற்றிக் கொடியைப் பறக்கவிடும் தலைவர், மலையைக் கண்டது போன்ற பல நெற்போர்களைக் கடாவிடப்பட்ட இடத்தில் குவிந்த நெல்லை, வலிய வில்வீரர்களுக்கு நாளுணவாகத் தருவதில் எந்தவித மாற்றமும் இல்லாத குடிமக்கள் நிறைந்த ஊருக்கு மன்னனாகத் திகழ்பவனின் மகள் இவள்! பெண் கேட்க வந்த பல வேந்தர்கள் இவள் தமையன்மாரிடம் பட்டபாட்டைக் கேட்பாயாக! போர்க்களத்தில் பகைவரைக் கொன்று அவர் குருதியை ஆறாக ஓடச் செய்து, வாய் மடிந்து விடுப்பட்ட கூரிய வாயையுடைய வாளுடனே அஞ்சாது நின்றவரே இவளது தமையன்மார்!
-எனச் சொல்லிப் பெண் கேட்ட பெருவீரனைப் பயமுறுத்துகிறார் புலவர்.
அதைப் படித்த செழியனுக்குப் பாட்டின் கருத்துச் சொல்லும் விதம் புரியவில்லை. புலவரின் தமிழ் திறமையை வியந்து பாராட்டினான். 'வடுப்பட்ட கூரிய வாயையுடைய வாள்' என்ற சுவைத்தொடரை எண்ணியெண்ணித் தமிழ் மணத்தின் பெருமையினை வாழ்த்தி நின்றான்.
காரிக்கண்ணனார் வெறுங் கற்பனையாக இதனை எழுதியிருக் கிறாரா? அல்லது உட்பொருள் ஏதாவது இருக்கக் கூடுமோ என்ற ஐயப்பாடு அவனை விரட்டத் தொடங்கியது!
வேந்தர் குலத்தில் வந்த அந்த வீரன் யார்? எழில் மிகுந்த அந்தப் பொற்கொடிதான் எங்கிருப்பவள்? அவள் தமையன்மார் பெருவீரர்களாமே! அந்தப் பெண்ணைக் காதலித்தவன் புலவரை எங்கே சந்தித்தான்? சே சே! எல்லாமே கற்பனைதான். இப்படியொரு முடிவு பிறக்கும். உடன் அதனைக் கலைத்துவிட்டு வேறொரு முடிவு கிளம்பும் -ஒரு வேளை முத்துநகையை யாராவது காதலிக்கிறார்களா? அவர்களை மிரட்டுவதற்காகப் புலவர் முயல்கிறாரா? சிறையில் கிடக்கும் இவர் மிரட்டுவது யாரை? உணர்ச்சிகளை எழுதி எழுதித் தீர்த்துக் கொள்வர் புலவர் பெருமக்கள் என்பார்களே; அதுபோல் முத்துநகையை விரும்புகிறவனின் மீது தான் கொண்ட ஆத்திரத்தை இங்ஙனம் காட்டிக் கொள்கிறாரோ காரிக்கண்ணனார் எனச் சந்தேகமுற்றான்.
முத்துநகைக்குத் தமையன் ஏது? நம் கருத்துத் தவறானது என்று இதை எண்ணி இரண்டாம் முடிவை அழித்து விட்டான்.
தாமரைக்குத் தமையன் உண்டு. அவனைப்பற்றி எழுத இவருக்கென்ன விவரம் தெரியும்? சிறிது நேரம் குழம்பிக் கொண்டிருந்தான்.
அதுவரையில் மெய்க்காவல் படையினர் பொறுத்துக் கொண்டிருக்க வில்லை. வில்லிலிருந்து விடுபட்ட கணையென அவனைச் சூழ்ந்து கொண்டனர். எதிர்பார்த்த நிகழ்ச்சிதான் என்றாலும் செழியன் ஆத்திரங்கொண்டான். ஆனால் அந்த ஆத்திரத்தை வெளிப்படுத்துவது ஆபத்தில் முடியுமென்பதை உணர்ந்து கொண்டு உடனே அமைதி பெற்றான்.
மெய்க்காவலர் தலைவன் செழியனின் கையிலிருந்த ஓலைச் சுவடியைப் பிடுங்கிக்கொண்டான்.
செழியன் அந்த வீரர்களைப் பார்த்து, "இதெல்லாம் என்ன வேடிக்கை? என்று கேட்டான்.
வீரர்கள் கலகலவெனச் சிரித்தவாறு படிக்கட்டுகளின் வழியாக அவனை மேலே இழுத்துக் கொண்டுவந்தார்கள்.
"உன்னால் எங்களுக்கு ஆக வேண்டிய வேலை முடிந்து விட்டது. இனிமேல் போகலாம்" என்று காவலர் தலைவன் செழியனின் முதுகில் தட்டிக் கொடுத்தான். வீரர்கள் தொடர அந்தத் தலைவன் ஓலைச் சுவடியுடன் அங்கிருந்து அகன்றான்.
அவர்கள் போகும் திக்கையே பார்த்துக் கொண்டிருந்தான் செழியன், பெருத்த குழப்பத்துடன் மெல்ல நடக்கலானான். சுவடியைக் கைப்பற்றிய மெய்க்காவலர்கள் அவசர அவசரமாக அரசன் மாளிகைக்கு ஓடினார்கள். காவலர் தலைவன் வீரர்களை வெளியே நிற்க வைத்து விட்டு ஓலைச் சுவடியை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றான். கரிகாலன் பொன்னும் மணியும் மின்னுகின்ற கட்டிலொன்றில் கண் மூடியவாறு சாய்ந்திருந்தான். மெய்க்காவலன் அருகே போய் நின்றான். கனைத்துப் பார்த்தான். மன்னனின் சிந்தனையோ கலைவதாக இல்லை. எழுப்புவதோ கூடாது.
சிறிது நேரம் நின்று பார்த்து விட்டுப் பிறகு ஓலைச்சுவடியை மன்னனுக்கருகினில் தென்படக் கூடிய ஒரு யானைத் தந்த முக்காலியில் வைத்தான். வெளியில் வந்து கதவைச் சாத்திவிட்டு அவனும் மற்ற வீரர்களும் மன்னனுக்குப் பாதுகாப்பளிப்பதில் தீவிரமாக முனைந்தனர். சிந்தனையிலீடுபட்ட வேந்தன் இன்னும் விழிக்கவில்லை. அவன் எதிரே ஓலைச்சுவடி காத்திருக்கிறது. அதை அவன் பிரித்துப்பார்த்தால் அதிலிருந்து எத்தனை எத்தனை மாற்றங்கள் ஏற்படுமோ யார் கண்டது? சிந்தனையிலாழ்ந்த செங்கோலேந்தி விழித்துக் கொள்ளா வண்ணம் அந்த ஓலைச் சுவடியை நோக்கி மிக மெதுவாக அடிமேல் அடி வைத்து அந்த அறைக்குள் ஓர் உருவம் வருகிறதே, அது யாருடைய உருவம்?
எங்கே வருகிறது?
யார் வருகிறது ?
தன்னையொத்த தமிழ்ப் பெரியவர் அவதூறுக்கு இலக்காகி அடைப்பட்டுக் கிடப்பது கண்டு அகமும் முகமும் வாடி அல்லலுற்ற கடியலூர் உருத்திரங்கண்ணனார். காரிக்கண்ணனாரை விடுவிக்காமல் பூம்புகாரை விட்டுச் செல்வதில்லையென்று உறுதியெடுத்துக் கொண்டார். பாண்டியத் தளபதி நெடுமாறனும் திரும்பி மதுரைக்குச் செல்லாமல் பூம்புகாரிலேயே தங்கிவிட்டான்.
தான் படைகொண்டு வந்ததையும், வழியிலேற்பட்ட நிகழ்ச்சிகளையும் பூம்புகாரில் நடைபெறும் புதுமைகளையும், ஓலைவாயிலாகப் பெருவழுதிப் பாண்டியனுக்குத் தெரிவித்திருந்தான். அதற்கு உடனடியாகப் பாண்டிய வேந்தனிடமிருந்து பதில் வந்துவிட்டது. அந்த மடலில் கண்டவாறு இன்னும் சில நாட்கள் அவன் பூம்புகாரில் தங்கிட வேண்டியது இன்றியமையாதது ஆயிற்று. அந்த நாட்களில் காரிக்கண்ணனார் களங்கமற்றவர் என மெய்ப்பிப்பதற்கு ஏதாவது சான்றுகள் கிடைக்காதா என்று அவன் தேடிக் கொண்டிருந்தான். கடியலூரார், கரிகாலனைச் சந்தித்து அதுபற்றி விவாதிக்க வேண்டுமென்று துடித்தார். இடையில் நிகழ்ந்த எதிர்பாராத சம்பவங்கள் அவரையும் மன்னனையும் சந்திக்க வைப்பதற்கு ஏற்றனவாக இல்லை.
ஆயினும் உருத்திரங்கண்ணனாரின் உள்ளத்தில் தளர்ச்சி ஏற்படவில்லை. எவ்வாறேனும் மன்னனைக் கண்டு தமிழுக்காக வாழ்பவரின் பக்கம் நின்று வாதிட வேண்டுமெனத் துணிந்துவிட்டார்.
செழியன் காரிக்கண்ணனாரின் முன்னே நின்று கொண்டிருந்த அதே நேரத்தில் உருத்திரங்கண்ணனார் கரிகால் மன்னனின் மாளிகை முகப்பில் நின்று கொண்டிருந்தார்.
புலவரைக் கண்ட காவலன் அவரைப் பணிந்து “என்ன தேவை தங்களுக்கு?” என்று கேட்டான்.
"அவசரமாக மன்னரைப் பார்க்க வேண்டும்" என்று புலவர் கூறியதும் காவலன் உள்ளே ஓடினான்.
மாளிகையிலுள்ள கட்டிலில் சாய்ந்தபடி விழியிமைகளைச் சுருக்கியவாறு தோற்றமளித்த கரிகாலனிடம் காவலன்; "கடியலூர்ப் புலவர் மன்னர் மன்னரைக் காணவிரும்புகிறார்" என மொழிந்து நின்றான்.
"வரவிடு!" என்று மன்னன் பதில் கூறினானே தவிரப் புலவர் வந்திருக்கிறார் என்ற செய்தியை கேள்விப்பட்ட ஆவலோ பரபரப்போ எதுவும் அவன் முகத்தில் தலைகாட்டவில்லை.
அவனுடைய சிந்தனையெல்லாம், அவனைச் சுற்றியும் பூம்புகாரைச் சுற்றியும் சுழன்று கொண்டிருக்கிற விசித்திரமான நிழ்ச்சிகளைத் தொடர்ந்தது! மாளிகைக்குள்ளே தனக்கெதிராக நடைபெறும் பயங்கரமான சதித்திட்டங்களைப் பற்றி உணர்ச்சி கொப்பளிக்க எண்ணிக் குமுறினான். 'வரவிடு' என்று கூறினானே தவிர வரப்போகிற புலவரை எதிர்கொண்டழைக்க எழுந்தானில்லை. காவலன் போனதுமே புலவர் வருவதை அறவே மறந்துவிட்டான். 'வரவிடு' என்று சொல்லிக் கொண்டே விழிகளை மூடிச் சிந்தனைக் கடலில் வீழ்ந்து விட்டான்.
எட்டுத் திக்கும் முரசு கொட்டி எதிரிகளைப் பணிய வைத்த அந்த ஏற்றமிகு வெற்றிவிழாத் திருநாள் எங்கே? அந்த நாளில் ஆனைமீதமர்ந்து சோழ மண்டலத்துப் பெருமக்கள் வாரியிறைத்த பூமழைக்குள்ளே சிக்கித் தவித்த சிறப்பான காட்சி எங்கே? களம் பல கண்டு கவின் தமிழ்க் கற்கண்டைக் கவிஞர்கள் தரப்பெற்றுக் கொண்டு கொலுவீற்றிருந்த மாட்சிதான் எங்கே?
எதுவும் மறைந்துவிடவில்லை. மறவர் குடிப்பெருமை ஓடிவிட வில்லை. மானங்காத்திடும் தமிழ் மரபின் மாண்பு அழிந்துவிடவில்லை. அவனது ஏக்கத்திற்குக் காரணமே, எப்படித் தன் அரண்மனைக்குள் எதிரிகளின் கையாட்கள் நிறைந்திருந்தார்கள் என்பது தான்! பூம்புகாருக்குள்ளேயே சோழ மண்டலத்தின் பகைவர்கள் இருக்கிறார்கள் என்ற ஒரே ஒரு வேதனையினால்தான் சில நாழிகை. நேரத்தில் துரத்தியடித்திருக்க வேண்டிய வேளிர் மன்னனையும் அவன் படையினரையும் எதிர்த்துத் தாக்குவதற்கு அவன் தயங்கினான். இல்லையேல் சோழ நாட்டுப் படை எப்போதோ மரமாளிகையை மண்மேடாக்கியிருக்கும்! நம்மிடமே பகைவனை வைத்துக் கொண்டு என்ன பயன்? மாற்றானின் சதிகளை வளர விட்டால்தான் நம்மிடமுள்ள துரோகிகள் எந்த அளவுக்குச் சதிவேலையின் சிகரத்தை எட்டுகிறார்கள் என்று புரியும்!
இந்த எண்ணம் மன்னனுக்கு உதித்த காரணத்தால் தான் பூம்புகார் மக்களே வியக்கவும், வெறுப்படையவும் கூடிய நிலைமைகளை யெல்லாம் உருவாக்கினான்! கொல்ல வந்த வேளிர் குல அரசிக்கும் அரச மரியாதைகளுடன் சவஅடக்கம் நடத்தி வைத்தான். இளவரசி தாமரையிடம் பகைமை பாராட்டாமல் அவளை மிக்க உபசாரத்துடன் வரவேற்றான்! அரசியின் முக தரிசனம் காண இருங்கோவேளும் வரலாம்; பாதுகாப்பு அளிக்கப்படும் என்று பறை முழங்கச் செய்தான்.
இத்தனை காரியங்கள் செய்ததும் எதிரியிடமுள்ள அச்சத்தால் அல்ல? கரிகாலனின் தனிப்பண்பு அது என்றாலும், அந்தப்பண்போடு நாகரிகமான ராஜ தந்திரமும் கலந்திருந்தது. பகைவர்கள் தடையின்றி நுழைந்து காரியங்களை செய்தால்தான் நம்மிடமுள்ள துரோகிகளுக்கும் அவர்களுக்குமுள்ள தொடர்பைத் தெளிவாக புரிந்து கொள்ளலாம் என்று அவன் கருதினான். இந்தத் தந்திரத்தால் திடீரென்று எதிர்ப்பு எரிமலை வெடித்து விட்டாலும் அதனைச் சமாளித்து வெல்லும் ஆற்றல் தன்னிடமிருக்கிறது என்பதிலே அவனுக்குச் சிறிதும் நம்பிக்கை குறையவில்லை.
ஆனால் ஆபத்தை வீட்டுக்கூடம் வரையிலே கொண்டு வந்து உட்கார வைத்து, அதன் பிறகு அதை விரட்ட வேண்டுமா? இந்தக் கேள்வி பாண்டிய நாட்டுத் தளபதி நெடுமாறனின் உள்ளத்தில் கிளர்ந்தெழுந்தது. வீட்டு மூலை முடுக்குப் பொந்துகளில் ஒளிந்திருக்கும் எலிகளை விளக்கின் உதவியால் பார்க்க முயல வேண்டுமே தவிர, பிரகாசமான ஒளியில் பார்த்து அவைகளைப் பிடித்து விடலாமென்று யாராவது வீட்டுக்கே நெருப்பு வைப்பார்களா? இவ்வாறு நினைத்து மன்னனின் செயல்களுக்காக அவன் வருந்தினான். ஆனாலும், அவனுக்கு ஒரு நம்பிக்கை. பகைத் தீ பெருமளவுக்குப் பரவினாலும் அதை அணைத்து வெற்றி பெறும் வல்லமை மன்னனுக்கு நிச்சயம் உண்டு என்பது.
அதே நம்பிக்கையில்தான் தன்னையும் நாட்டையும் வளைத்துக் கொண்டிருக்கும் சதிவேலைகளைப் பற்றிப் பயங்கொள்ளாது நிலைமைகளை எப்படிச் சரி செய்வது என்ற சிந்தனையில் ஈடுபட்டான் மன்னன்.
அப்போது வந்த காவலனிடம்தான் புலவரை 'வரவிடு' எனக் கூறிவிட்டு, கூறியதையும் மறந்து கண்மூடிக் கனவுலகம் சென்றான். கனவுலகின் கதாநாயகனாக அவனே நின்று நடக்க வேண்டிய காரியங்களுக்குத் திட்டம் தீட்டத் துவங்கினான்.
"வரச் சொல்லுகிறார் மன்னர்" என்று வாயிற்காப்போன் கூறியதும் மிக்க மகிழ்ச்சியுடன் புலவர் உள்ளே சென்றார்.
ஆனால் அங்கே அவர் மன்னனின் நிலைகண்டு வியப்புற்றார். தன்னை வரச்சொல்லிவிட்டு மன்னன் உறங்குகிறானேயென்று அதிசயித்தார். கனைத்துக் காட்டினார். வேந்தனின் சிந்தனை அறுபடவில்லை. அரசன் எழும் வரையில் அங்கே இருப்பது என்று முடிவு செய்துகொண்டு ஒரு புறத்தில் நின்றார்.
புலவர் பெருமக்கள் என்றால் கரிகாலர் எவ்வளவு மரியாதை காட்டுவார் - ஏழடி தூரம் பின்னால் நடந்து சென்று வழியனுப்பி வைக்காவிட்டால் பெரும் பாதகம் என்று கருதுகிற கொற்றவனாயிற்றே! அவரா என்னை வரச்சொல்லிவிட்டு அதற்குள் இவ்வளவு அலட்சியமாகத் துயில் கொண்டுவிட்டார்? புலவர் உருத்திரங்கண்ணனாருக்கு வியப்பும் வேதனையும் மாறி மாறித் தோன்றலாயின!
அப்போது யாரோ வரும் காலடியோசை கேட்கவே புலவர் தான் நிற்பது தெரியாமல் தூணின் பக்கம் மறைந்து கொண்டார். என்ன நடக்கப் போகிறது என்று அறிய வேண்டுமென்ற ஆசையால் அல்ல! வருகிறவர்கள் தான் நிற்கிற காட்சியைப் பார்த்துத் தன்னைப் பற்றித் தகுதிக் குறைவாக நினைத்துவிடக்கூடாதே என்ற கூச்சத்தால் அவர் யார் கண்ணிலும் படக்கூடாது என்று மறைந்து நின்றார்.
உள்ளே வந்தவர்கள் மெய்க்காவல் படையினைச் சேர்ந்தவர்கள்தாம். செழியனிடமிருந்து ஓலைச் சுவடியைப் பறித்துக் கொண்டுவந்த தலைமை மெய்க்காவலன் அரசனின் அருகே சென்றான்; நின்றான். பின்னர் மன்னன் பார்வைபடும் இடத்தில் சுவடியை வைத்துவிட்டு வெளியேறினான். தூண் மறைவில் நின்ற உருத்திரங்கண்ணனாரை அவன் கவனிக்காமலே போய்விட்டான்!
புலவர் பெருமான் அவன் வைத்துவிட்டுப் போன ஓலைச்சுவடியை உற்றுப்பார்த்துக் கொண்டு நின்றார். அந்தச் சுவடியிலே பதிந்துவிட்ட அவர் விழிகளை அவரால் மீட்க முடியவில்லை. ஓலைச்சுவடியென்றாலே தமிழ்ச் செய்யுட்கள் அடங்கிய கருவூலம் என்றுதானே புலவர்கள் எண்ணுவர்? அந்த எண்ணத்தால் உந்தப்பட்டுக் கடியலூரார் அதனையெடுத்துப் பார்க்க வேண்டுமென்ற ஆவலுக்கு அடிமையானார். ஒருவேளை அரசியல் பற்றிய கருத்துக்களோ நிலைவிளக்கங்களோ அதிலிருந்தால் என்ன செய்வது? அதனைத் தான் படிப்பதென்பது அறச் செயல் அல்லவே என்ற அச்சம் அவரைத் தயங்க வைத்தது. மேலெழுந்த வாரியாக அது என்ன சுவடியென்று பார்த்து விடலாமே யென்று மெல்ல நடந்து அருகே வந்தார். ஓலைச் சுவடியைக் கூர்ந்து கவனித்தார்.
"ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த" என்ற தமிழ்வரி அவர் கண்ணில் பட்டது. உணர்ச்சி கொண்டார். தமிழ் நூலே அந்தச் சுவடி: அரசியல் நிலைகுறித்த ஓலையல்ல என்று முடிவு செய்து அதனைக் கையில் எடுத்துக் கொண்டார்.
மெதுவாக அந்த இடத்தைவிட்டு நகர்ந்து மன்னனுக்குத் தலைப்புறமாக ஒதுங்கி நின்று ஓலையைப் புரட்டிப் படிக்கத் தொடங்கினார். செழியன் படித்துச் சுவைத்த அதே பாடலை அவரும் படித்துச் சுவைத்து மகிழ்ந்தார். பாட்டின் இறுதியில் காரிக்கண்ணனார் என்றிருந்த எழுத்துக்களைப் பார்த்ததும் அவருக்கு உற்சாகம் தாங்கவில்லை. ஆயினும் ஆவலையும் துடிப்பையும் பெருமகிழ்ச்சி யினையும் அடக்கிக்கொண்டு அடுத்த ஓலையைப் பிரித்தார்.
அதற்குள் ஒரு குரல் அவர் செவியைத் தாக்கிச் சிந்தையில் சூடேற்றி அவரைச் செயலிழக்க வைத்துவிட்டது! "புலவரே மனதுக்குள் படிக்காதீர்கள். வாய்விட்டு என் காதில் விழும்படி உரக்கப் படியுங்கள்!"
இந்த வார்த்தைகள் அவர் காதில் விழுந்ததுதான் தாமதம்! அந்த மாளிகையில் உள்ள எல்லாப் பொருள்களுமே சுற்றுவதுபோல் தெரிந்தது, உருத்திரங்கண்ணனாருக்கு!
குரல் வந்த திசை நோக்கித் திடுக்கிட்டுத் திரும்பினார் புலவர். அவர் மேனி நடுங்கிற்று; நாக்குழறிற்று. மன்னன் கரிகாலன் புன்னகையுடன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த இதழோரச் சிரிப்பிலே இயற்கையான அழகைப் புலவர் காணவில்லை. வலிந்து சிரிப்பதுபோல் அவருக்குத் தோன்றிற்று. கரிகாலனின் கண்கள் சிவந்திருந்தன. அதையும் அவர் கவனிக்கத் தவறவில்லை. அடுத்து என்ன பேசப்போகிறானோ என்ற அச்சத்துடன் பயங்கரமான அமைதியினிடையே இருளில் அகப்பட்ட சிறு குழந்தைபோல் தவித்துக் கொண்டிருந்தார். அவர் கையிலிருந்த ஓலைச்சுவடி பிரிந்து கயிற்றில் தொங்கிக்கொண்டிருந்தது.
மெத்தச் சிரமப்பட்டு நா அசைத்தார். "அரசே!" என்ற அழைப்புடன் நாக்கு வாய்க்குள் போய் ஒட்டிக் கொண்டு விட்டது.
புலவரின் நிலையை நன்றாகப் புரிந்து கொண்ட கரிகாலன், "ம்! பரவாயில்லை! படியுங்கள்!" என்று அன்பு கனிந்த மொழியில் கூறினான். அதுவும் புலவரை வேலெனத் தாக்கியது.
"என்னை மன்னித்திடுக மன்னா!" என்றவாறு அவனருகே ஓடி வந்தார் அவர். அதற்குள் அரசர்க்கரசன் அவரைத் தழுவிக் கொண்டு, "அமைதியாயி ருங்கள்! தாங்கள் எந்தத் தவறும் செய்திடவில்லையே!" என்று ஆறுதல் கூறினான். புலவரின் கண்கள் மலையருவிகளாயின.
"சோழர்குலத் திலகமே! தங்களைக் காண வேண்டுமென்று தணியாத வேட்கையால் அனுமதி பெற்று உள்ளே வந்தேன். வந்தபோது தாங்கள் சிந்தனையிலாழ்ந்திருந்தீர்கள். உறங்கி விட்டீர்களோ என்ற ஐயப்பட்டால் சிறிது தயங்கினேன். அதற்குள் மெய்க்காவலர் இந்த ஓலைச் சுவடியினைக் கொணர்ந்து இங்கு வைத்துவிட்டு அகன்றனர். பொன்னோ பொருளோ எனில் தொட்டிருக்கமாட்டேன். என்னோடு உறவாடும் தமிழ்ச்சுவடி என்ற காரணத்தால் படிப்பதற்கு எடுத்தேன். நான் தங்களைக் காணவந்ததோ பூம்புகார்ப் புலவர் காரிக்கண்ணனாரைப் பற்றி விவாதிப்பதற்கு! வந்த இடத்தில் காண நேரிட்டதோ அவர் எழுதிய ஓலைச் சுவடியை! அந்தத் தொடர்புதான் மன்னவா இதனைத் தொடுவதற் குத் துணிவை அளித்தது!" என்றவாறு சுவடியை மன்னனிடம் நீட்டினார் புலவர்.
கரிகாலன் அதனைப் பெற்றுக் கொள்ளாமல், "கவி மன்னரே! பூம்புகாரில் வீசிக்கொண்டிருக்கும் புயல்பற்றித் தங்களுக்கு தெரியாதா என்ன ? வந்திருக்கிறீர்கள் என்றான் வாயிற்காப்போன்; 'வரவிடு!' என்றேன். அதற்குள் அனைத்தையும் மறந்து குழப்பத்தின் மடியில் படுத்து விட்டேன். ஏதேதோ சிந்தனை! முற்றுப் பெறாத முடிவுகள்! சிந்தனை முகட்டின் விளிம்பின் நினைவின் கால் தவறிய காரணத்தால் திடுக்கிட்டுக் கண் விழித்தேன். தங்களைக் கண்டேன். இந்தத் தவற்றுக்காக என்னை மன்னித்து விடுங்கள். பூம்புகார் அரண்மனையில் புலவர்களுக்கு இழைக்கப்பட்ட இரண்டாவது அவமானம் இது!" என்று கரிகாலன் கூறிக்கொண்டே விம்மி விம்மி அழத் தொடங்கினான்.
வில்லும் வேலும் வாளும் கொண்ட வீரர் கூட்டம் சுற்றி நின்று தாக்கினாலும் கலங்காத கரிகாலன், விம்மி அழுவது கண்டு புலவர் உருத்திரங்கண்ணனார் திகைத்து நின்றார்.
"அரசே! அரசே!' என்று கூறிக் கொண்டே அவரும் அழுதார்.
"தமிழ்ச் சோலையிலே சுதந்திரமாகக் கூவிக் கொண்டிருந்த இன்பக் குயிலைக் கூண்டிலே அடைத்து வைத்திடும் பெரும் பழியை என்னையன்றி வேறெந்த மன்னனும் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டான். பகைவரை வென்றேன். பல படைகளை வீழ்த்தினேன். இப்படிப் பாரெல்லாம் புகழ்ந்தாலும் பாவாணராம் பைந்தமிழ்த் தேர்ப்பாகனைச் சிறையிலிட்ட கொடியவன் என்ற இழி சொல்லும் என் வரலாற்றில் ஏறிக்கொள்ளத்தான் போகிறது!" என்று புலம்பினான், பூம்புகார்க் கொற்றவன்.
"உறையூர் தந்த ஒப்பில்லா வீரனே! உத்தமச்சோழ மன்னனே! உம் கண்ணில் நீர் என்றால் அது என் போன்றோர் மனப்புண்ணில் வேல் பட்டது போலன்றோ! கவலையைத் துறந்திடுக; காரிக்கண்ணனார் தவறு செய்தார் என்ற காரணத்தால்தானே சிறை வைத்திருக்கிறீர்கள்? அநியாயமாக அவரைப் பூட்டி வைக்கவில்லையே! பிறகேன் மனம் நொந்திட வேண்டும்?" என்று கடியலூரார் ஆறுதலையும் கேள்வியையும் ஒன்றாக இணைத்தார்.
"எனக்கெதிராகப் புலவர் காரிக்கண்ணனார் புறப்பட்டதே எனக்கும் ஆட்சிக்கும் இழுக்கல்லவோ? என்னிடமோ என் ஆட்சியிடமோ அவருக்குக் குறை தோன்றிய காரணத்தால் தானே எதிரிகளுடன் உறவாட நினைத்தார்? அந்த நினைவுக்குக் காரணமானவன் நான்தானே? என் நாட்டுப் புலவரின் புகழுரையைக் கூடப் பெறமுடியாத நான், இழிதகை வேந்தனன்றோ?"
"பெருவழுதிப் பாண்டியரையும், தங்களையும் இணைத்து அவர் பாடிய பாடலை நான் கேட்டு மகிழ்ந்தேன். மன்னவா! அதில் தங்களைப் புகழ்ந்துதானே இருக்கிறார்?"
"முதலில் அந்த பாட்டைக் கேட்டபோது எனக்கு எந்த மனத்தாங்கலும் ஏற்படவில்லை. இப்பொழுது எழுந்துள்ள சூழ்நிலை களைப் பின்னணியாக வைத்து அந்தப் பாட்டை மறுபடியும் நினைத்துப் பார்த்தால், காரிக்கண்ணனாரின் எண்ணம் நன்கு தெளிவாகும்! புலவர் அவர்கள் அந்தப் பாட்டில் பாண்டியரைப் புகழ்ந்த அளவுக்கு என்னைப் புகழவில்லை!"
"அதுதான் மன்னா தமிழ்ப் பண்பு! தாங்கள் அறியாததா, என்ன? விருந்தினராக வந்த வேந்தரைத் தானே அதிகமாகப் பாராட்டிப் புகழவேண்டும்? தங்களைத் தான் காரிக்கண்ணனார் இதயத்தில் வைத்துப் புகழ்ந்து கொண்டிருக்கிறாரே!"
"இல்லை! வீண் கற்பனையே!"
"இதோ இந்த ஓலையில் எழுதியிருப்பதைப் பாருங்கள்; 'என் இதய மேவும் கரிகாலர்க்கு இச்சுவடி காணிக்கை' என்றுதான் துவங்கி யிருக்கிறார்!"
"சிறை வாசத்திலே புலவர் எழுதிய பாடல்களா இவை? எங்கே படியுங்கள்; கேட்போம்!"
"பாடல்கள் அல்ல மன்னா! தாங்கள் மட்டுமே படிக்க வேண்டிய பரம ரகசியங்கள் இதிலே அடங்கியிருப்பதாக இரண்டாவது வரி சொல்கிறது!"
"அப்படியா? எங்கே?"
ஆவலுடன் மன்னன் அந்த ஓலைச் சுவடியை வாங்கிக் கொண்டான். கடியலூராரையும் சற்றுத் தொலைவில் உள்ள ஒரு கட்டிலில் உட்காரச் சொன்னான். அவரும் அமைதியாக உட்கார்ந்து சுவடி படிக்கும் மன்னனின் முகமாறுதலைக் கவனித்துக்கொண்டிருந்தார்.
கரிகாலன் சுவடியை நெஞ்சுக்குள்ளாகப் படித்துக் கொண்டான். அவன் முகம் ஒரு சமயம் மலர்ந்தது. பிறிதொரு சமயம் சிவந்தது. கண்கள் சில நேரங்களில் குறுகிப் போயின. சில நேரங்களில் ஒளிவிட்டு விரிந்து கொண்டன. இதழோரத்தில் புன்னகை தலைகாட்டும். உடனே அதனை உள்ளே இழுத்துக் கோபம் உதட்டைத் தள்ளிவிடும்; நெஞ்சு உயரும்; அடுத்த கணம் முதுகு வளையும்; பெருமூச்சு புறப்படும்; உடன் முகத்தில் பெருமிதம் தோன்றும்!
இத்தனை வகை மாறுதல்களுடன் கடைசி ஓலையையும் படித்து முடித்த கரிகாலன், கடைசி ஓலையைப் புரட்டி, சுவடியை ஒழுங்காகக் கட்டியவாறே கடியலூர் உருத்திரங்கண்ணனாரை நோக்கி, "காரிக் கண்ணனாருக்கு விடுதலை! விடுதலை! புலவர் பெருமானே. என்னை மன்னித்து விடுங்கள்! பெரும் பழிக்கு ஆளான இந்தப் பாவிக்கு ஏற்ற தண்டனையைப் புலவர்கள் சார்பாகத் தாங்களே அளியுங்கள். காரிக் கண்ணனார் களங்கமற்றவர். நான்தான் அவரைக் கூண்டில் அடைத்த கயவன்! கயவன்!" என்று கதறினான்.
தன் நிலைபற்றிய உண்மைகளை ஓலைச்சுவடியில் காரிக்கண்ணனார் எழுதியிருக்கக் கூடுமென்ற யூகத்தோடு புலவர் கடியலூரார் அரசனைப் பரிவுடன் நோக்கி, "மன்னர் மன்னா! காரிக்கண்ணனார் குற்றவாளியல்லர் என்று தாங்கள் கண்ட தீர்ப்பே தாங்கள் செய்ததாகக் கருதப்படும் தவறுகளைத் தீர்க்க வல்லது. நாட்டுக்குத் துரோகி என்று சந்தேகப்பட்டுத்தானே சிறை வைத்தீர்கள்? அதிலொன்றும் பெரும் பாதகமில்லையே! ஆகவேண்டியதைப் பாருங்கள். அரசே! நான் ஒன்று கேட்கிறேன். அதற்கு மட்டும் முடிந்தால் விடையளிக்க வேண்டுகிறேன்.தான் குற்றவாளி அல்லவென்று பூம்புகார்ப் புலவர் எப்படி நிரூபிக்கிறார் என்பதை நான் அறியலாமா?" என்று கேட்டார்.
"தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்! இந்த ஓலைச்சுவடியில் பதுங்கியிருக்கும் உண்மைகள் எனக்குப் பிறகு இன்னும் ஒரே ஓர் ஆளுக்குத்தான் தெரியவேண்டும். இதிலுள்ள வரிகளும் யாராலும் புரிந்து கொள்ளக்கூடிய சுலபமான வரிகள் அல்ல! அவ்வளவு கடினமான தமிழ் என்று சொல்லமாட்டேன். ஒவ்வொரு வார்த்தையும் சூசகமானது! அந்தச் சூசகத்திற்கான விளைவுகள் வெற்றிகரமாக ஏற்படுவதற்கும் பொறுப்பேற்கக் கூடியவன் ஒருவன் இருக்கிறான். அவன் வாயிலாகத் தான் வெளிப்பட வேண்டும். இந்த உண்மைகள் தமிழ்நாட்டு மண்ணிலே மட்டுமல்ல; ரோமாபுரி மண்ணிலும் புதையுண்டு கிடக்கின்றன. இதனை அகழ்ந்தெடுக்க வேண்டிய பொறுப்புக் குரியவனை நான் உடனடியாகக் கண்டுபிடித்தாக வேண்டும்!"
மன்னன் மிக்க அக்கறையுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் இந்தத் தகவலைப் புலவர் உருத்திரங்கண்ணனாரிடம் வெளியிட்டான்.
உருத்திரங்கண்ணனார் காவலனின் வாய் உதிர்த்த சொற்களைக் கேட்டுக் கொண்டிருந்தாரே தவிர, அவர் மனதில் ஒரு கணநேரம் பிரள யமே நேர்ந்துவிட்டது. சோழ மண்டலத்திலே அடுக்கடுக்காகக் குவிந்து வருகிற அதிர்ச்சிகளில் இனிப் புதியொதொரு கூட்டமே அல்லவா இடம்பெறப்போகிறது! தமிழ் மண்ணுக்கும் ரோமாபுரிக்கு மிடையே உள்ள ஏதோ ஒரு மர்மமான உண்மையைப் பற்றி அல்லவா மன்னர் குறிப்பிடுகிறார்?
அது பற்றி மேலும் விளக்கம் கேட்க விரும்பாமல், "அப்படியானால், காரிக்கண்ணனாரை இப்போதே விடுதலை செய்து விடலாமல்லவா?" என்று ஆவலுடன் வினவினார்.
மன்னன் யோசித்தான். வளவன் சொன்ன வேலையை நினைத்துக் கொண்டான்! யவனக்கிழவர் வேடத்தில் வேளிர்குல வீரனைச் சந்தித்துச் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்த வளவன் குறித்த வேளை நெருங்கி விட்டதே என்ற பரபரப்பு அவனை வளைத்துக் கொண்டது. தானே நேரில் சென்று புலவரை விடுவித்து அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்றினாலும், அவரைக் காண்பதற்கு அவன் மிகவும் வெட்கப்பட்டான்.
அதனால் அங்கிருந்த ஓர் ஓலையில் கீழ்க்கண்டவாறு எழுதினான்;
'காரிக்கண்ணனாரைச் சிறையிலிட்ட கரிகாலன் மாண்டு விட்டான். புலவர் தந்த கடமையை நிறைவேற்றப் புதுக் கரிகாலன் பிறந்திருக்கிறான். வெற்றிக்குப் பிறகு நேரில் காண்பான்.'
ஓலையைச் சுருட்டியவாறு கைதட்டி, மெய்க்காவலனை அழைத்தான். ஓடிவந்த காவலனிடம் அதனைத் தந்து, "புலவர் கடிய லூராருடன் சென்று காரிக்கண்ணனாரை விடுதலை செய்திடுக!" என மொழிந்து முத்திரையிட்ட கணையாழி யையும் அடையாளத்திற்குக் கொடுத்தனுப்பினான்.
வணங்கி விடைபெற்ற கடியலூராரை ஏழடி நடந்து சென்று வழியனுப்பி வைத்து, மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தான் கரிகாலன்.