உள்ளடக்கத்துக்குச் செல்

ரோமாபுரிப் பாண்டியன்/28. மனப் போர்க்களம்

விக்கிமூலம் இலிருந்து

28

மனப் போர்க்களம்

வனக் கிழவர் வேடத்தில் மன்னன் வரவேண்டுமென்று சூதுவலை பின்னி விட்டு, மன்னனை இருங்கோவேள் எனத் தவறாக நினைத்துக் கொலை செய்துவிட வேண்டுமென்ற வஞ்சகத் திட்டத்தையும் முத்துநகையிடம் ஒப்புவித்துவிட்டு, வளவன் என்னும் பெயருடன் அரண்மனைக்குள் திரிந்து கொண்டிருந்த இருங்கோவேளுக்கு உள்ளத்திலே ஓராயிரம் எண்ணங்கள் புற்றீசல் போலப் புறப்பட்டு அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தன.

வேளிர் மரபினர் தங்கள் குடிப்பெருமையை உயர்த்த வந்த மாவீரர் தலைவன் இருங்கோவேள் எனப் பெருமை கொண்டிருக்கின்றனர். சோழ மன்னனிடம் அவன் தோற்றுவிட்டானென்றாலும் என்றைக்காவது ஒருநாள் வேளிர் குலத்தினுடைய வெற்றிக் கொடியைப் பூம்புகார்ப் பட்டினத்துக் கோட்டை முகப்பில் பறக்க விடுவான் என்ற நம்பிக்கை கொண்டிருந்தனர்.

ஒளிந்து திரிகிறான்; காட்டில் வாழ்கிறான்; மறைந்து நின்று மன்னனைக் கொல்லச் சதிசெய்கிறான்-என்பன போன்ற செய்திகள் நூற்றுக்கணக்கில் வந்த நேரத்திலும் அவனது மரபினர் அந்தச் செயல்களையெல்லாம் ஒரு வகைப்போர் முறை என்றே வீர முழக்கம் செய்தனர்.

ஒளிந்து திரிவது எதற்காக? சோழனை ஒழித்துக் கட்டுவதற்காக!

காட்டு வாழ்க்கை ஏன்? நாட்டுக்குரியவர் வேளிர்குடியினர் என்ற வெற்றிச் சிந்து பாடுவதற்காக!

இப்படி அவர்கள் காரணம் கூறினர். மரமாளிகை தரைமட்டமாகி விட்டது. மன்னன் போன இடம் தெரியவில்லை என்ற செய்திகளை செவிமடுத்தபோதும் அவர்கள் தங்கள் மன்னன் தன்னந்தனியே வெற்றிச் செய்தியுடன்தான் வருவான் என்ற நம்பிக்கை மொழி உதிர்த்தனர். தன்பால் தன் மரபினர் வைத்திருக்கும் அசையாத நம்பிக்கைக்காக வாவது அவன் வெற்றி பெற்றுத் தீரவேண்டுமென்று துடியாய்த் துடித்தான்.

மதயானை போல் அவன் வீதியுலா வரும்போது வேளிர் மக்கள் வீதியில் வீழ்ந்து வணங்கிய காட்சியை ஒரு கணம் எண்ணுவான்:

"அய்யோ! என்னைப் பற்றி எவ்வளவு பெருமையாகக் கருதியிருக்கிறார்கள்! அவர்களிடம் சென்று நான் தோல்வியால் தொங்கிய தலையைக் காட்டுவதைவிட 'எங்கேயோ தொலைந்து விட்டான்' என்ற செய்தி அறிவித்து விட்டு ஓடிவிடுவது மேலன்றோ?" எனத் தனக்குள் கூறிக் கொள்வான்.

போர் முகத்தில் கரிகாலனின் மின்னல் வீச்செனச் சுழன்ற வாளுக்கெதிர் நிற்க முடியாமல் தனது படை வீரர்கள் மிரண்டோடிய காரணத்தால்தானே அன்றைய தினம் மாபெரும் தோல்வியை அணைத்துக் கொள்ள நேரிட்டது? கரிகாலன் இல்லாத சோழர்படை தன் கால் தூசுக்குச் சமானம் என்று அவன் தீர்மானித்திருந்தான்.

அவனுடைய திட்டம் வெற்றிகரமாக நடைபெறுமேயானால் கரிகாலன் ஒழிந்து விடுவான். சோழநாட்டில் காரிருள் கப்பிக் கொள்ளும். பின்னர் இருங்கோவேள்தான் பூம்புகாரின் மன்னன், உறையூருக்குத் தலைவன். காஞ்சி விழுந்துவிடும், அந்த எதிர்காலக் கனவுகளுடன்தான் அவன் திட்டம் தீட்டினான். திட்டம் தீட்டியபோது குறுக்கிட்டுத் தடுக்காத சில விளைவுகள் அவனை வாட்டி வதைக்க ஆரம்பித்தன.

'முத்துநகை கரிகாலனைக் கொன்று விடுகிறாள் என்று நம்புவோம். உடனே அவளுக்குத் தெரியப்போகிறது நான்தான் இருங்கோவேள் என்று! பிறகு அவள் என்னை மதிப்பாளா? தங்கம் நிகர் கரங்களால் தழுவுவாளா? 'அத்தான்' என அழைப்பாளா? 'அன்பே' என அழைப்பாளா? இல்லை! நிச்சயமாக இல்லை! அவளை நான் இழந்துவிட வேண்டியதுதான். இழப்பதோடு முடியாது. என்னைப் பழி தீர்க்காமல் அவள் ஓயமாட்டாள். அல்லது தன்னையறியாமல் தான் நாட்டுக்குச் செய்த துரோகத்தை எண்ணித் தன்னைத் தானே சாவின் கையில் ஒப்படைத்து விடுவாள்! அய்யோ! அவளுக்கு எவ்வளவு பெரிய ஏமாற்றம் ஏற்படும்! என்னை அவள் உயிரைவிட மேலாக நேசிக்கிறாளே; என் நெஞ்சத்திலே முழு இடமும் அவளுக்கே சொந்தமென்று நினைத்திருக்கும் அந்தப் பவளக்கொடியாள் என் திட்டத்தின் உண்மை உருவம் வெளிப்பட்டதும் 'பாவி! பழிகாரா!' என வசைமாரி பொழிந்து சபித்துக் கொட்டிவிடுவாளே! அவளுடைய மென்மையான இதயம் வரப்போகும் இவ்வளவு பெரிய அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தி வாய்ந்தது அல்லவே!

"அவளது காதலைத் துறந்து - அவளை ஏமாற்றி-உயிரோடு வைத்துச் சித்திரவதை செய்து - கரிகாலனைக் கொன்று விடுவதால் என் வீரம் வெளிப்படவா போகிறது? சூழ்ச்சித் திறன்தான் வஞ்சகர்களால் போற்றப்படும். முத்துநகையை நான் காதலிக்கிறேன்; நெஞ்சார விரும்புகிறேன்; பெருந்தேவியின் இடத்தை அவளுக்கு என் இதயத்தில் அளித்திருக்கிறேன். அவள் என் துணைவி. நாடில்லாத இந்த மன்னனுக்கு அவள் பட்டத்தரசி. நாடு கிடைத்தாலும் அவள் தான் அரசி.

"அப்படிப்பட்ட ஆசைக் கிளியை நான் இழக்க வேண்டுமா இந்தச் சதித்திட்டத்தால்? என் அரசி கரிகாலனைக் கொல்லக்கூடாது என்று துடித்தேன். அவளுடைய கையால் கரிகாலன் சாவது பெரும் இழுக்கு என்று கருதினேன்; 'இருங்கோவேள் தன் மனைவியை அனுப்பிக் கரிகாலனைக் கொன்றான்! அவனைப்போலக் கடைந்தெடுத்த கோழை உலகிலேயே கிடையாது, என நாடு முழுவதும் பேசும் என்றே பயந்தேன்; என் வீரத்திற்கும், தன்மானத்திற்குமே உகந்ததாக படவில்லை. அவச் சொல் ஏற்பட்டு விட்டால்-தன் ஆற்றலில் நம்பிக்கையின்றி - தோளில் பலமின்றி - நெஞ்சில் உரமின்றி மனைவியை அனுப்பி மன்னனைக் கொன்றான் என்ற மாபழி ஏற்படுமேயென்று அப்போது மட்டும் ஏன் அஞ்சினேன்? ஏன் கொலையைத் தடுத்தேன்?

"இப்போது என் துணைவியை விட்டுக் கொலை செய்யத் தூண்டுகிறேன்; என்ன காரணம்? அங்ஙனமாயின் முத்துநகை என் மனைவியில்லையா? என் இல்லக் கிழத்தியில்லையா? வழியிலே கிடைத்த காமக் கிழத்தியா அவள்? அய்யகோ! இல்லை! இல்லை! அவள் உத்தமி; கற்பு நிறை பொற்புடை மங்கை அவளும் எனக்குத் துணைவியேதான்! அவள் கரிகாலனைக் கொன்றால் ஊர் உலகத்திற்குத் தெரியும்படியாக பழிஎன்மீது விழாது. ஆனால் மனைவியை அனுப்பிக் கரிகாலனைக் கொன்றேன்-வென்றேன்- என்ற அவமானமிக்க பழிச் சொல்லை என் மனமே என் காதுகளில் போட்டு அந்தத் தீச்சொல்லைக் கேட்டுத் துடித்துப் போகுமே!

"அப்படியானால் என்ன செய்வது? கரிகாலனைக் கொல்லாமலே விட்டு விடுவதா? வீரபாண்டி என்ற பெயரிலே முத்துநகையை வாழ்நாள் முழுவதும் ஏமாற்றுகின்ற திட்டத்துடன் எங்கேயாவது ஓடிவிடலாமா? அப்படி ஓடினால் இல்வாழ்வுச் சுகம் மிஞ்சும், இலட்சியம் நிறைவேறுவது எப்படி? வேளிர்குல மக்களை வெற்றித் திருவிழா காணவைப்பது எப்படி? சோழ மண்டலத்தை நாணவைப்பது எப்படி?

"இப்போது எனக்கு ஏற்பட்ட பிரச்சினையே இரண்டு கேள்விகளில் அடங்கி விட்டதே!"

"முத்துநகையா? சோழ மண்டலமா?"

"இந்த இக்கட்டான கேள்விகளுக்கு நான் எப்படி விடை காணப் போகிறேன்? 'எது தேவை? வாழ்வா? சாவா?' என்று கேட்டால்கூடச் 'சாவு' என்று உடனே பதில் கூறிவிடுவேன்.

"இந்தக் கேள்விகள் இரண்டும் ஈட்டிபோலவும், கூரிய கணை போலவும் தைத்துத் தைத்து என் இதயத்தைத் தேன் கூட்டிலுள்ள அறைகளைப்போலப் பொத்தலாக்குகின்றனவே!

"நான் என்ன செய்வேன்?"

"முத்துநகையா? சோழன் தரணியா"

"இந்தக் கேள்விக்கு இன்னும் சில நாழிகை நேரத்தில் நான் பதில் கண்டுபிடித்தாக வேண்டுமே!"

-எனக் குழப்பமுற்றவாறு வளவன் வேடமிட்ட இருங்கோவேள் தனக்கெனத் தரப்பட்டிருந்த மாளிகை அறைக்குள் நுழைந்தான்.

அங்கே அவனது கட்டிலின்மீது ஓர் ஓலைச் சுருள் கிடந்தது. அதை அவசரமாகப் பரபரப்புடன் எடுத்துப் படித்துப் பார்த்தான்.

அதில்-

"மாவீரனே! மானம் பெரிது; மனத்தில் உறுதி - தோளில் வலிவு இவை இருந்தால் எதிரியைச் சந்தித்து வெற்றி பெறு! இல்லையேல் சண்டையிட்டுப் பெருமையுடன் செத்துப்போ! கோழையாகாதே! வேளிர் குலத்து மானத்தை விலை பேசாதே!"-என எழுதப்பட்டிருந்தது. அந்த வரிகளை திரும்பத் திரும்பப் படித்தான் இருங்கோவேள்.

அந்த ஓலையிலிருந்த கையெழுத்து செழியனுடையது என்பதை இருங்கோவேள் புரிந்து கொள்ள முடியவில்லை. அவனுக்கு அந்த ஓலையை எழுதியது யார் என்ற கேள்விக்குப் பதில் கண்டுபிடிக்க ஏற்பட்ட ஆவலையும் மீறிக் கொண்டு திகில் எழுந்தது. தன்னை வட்டமிட்டவாறு யாரோ உலவிக்கொண்டிருக்கிறார்கள், பூம்புகார் அரண்மனையில் என்ற அச்சம் அவனைத் தாக்கத் தொடங்கியது. கையில் வசமாகச் சிக்கிக் கொண்ட கரிகாலனைக் கொன்றுவிடலா மென்று முடிவு கட்டிய பிறகு அந்தத் தீர்மானத்தின் விளிம்பிலே முத்துநகையின் மீது அவன் கொண்ட தூய்மையான காதல். தோகை விரித்து ஆடியவாறு, 'என்னை அறவே வெட்டியெறிந்து அழகைக் கொன்றுவிடப்போகிறாயா?" என்று அவனைக் கேட்பது போலிருந்தது.

குழப்பம்! குழப்பம்! எங்கே திரும்பினாலும் குழப்பம்!

சோழ மண்டலத்தின் தந்தை-பெருங்குடி மக்களின் சிந்தையெல்லாம் கவர்ந்த ஏந்தல் - கரிகாலனும் குழப்பத்தின் கோரப்பிடியில் அகப்பட்டுத் தத்தளித்தான். அது போலவே அவனைத் தீர்த்துக் கட்டிப் பகை முடிக்க வந்த இருங்கோவேள் மன்னனையும் குழப்பம் தாவி அணைத்து இறுகத் தழுவிக் கொண்டு இதயத்தைப் பிழிந்தெடுத்தது!

"ஏன் மன்னனாகப் பிறந்தோம்- குடி மக்களில் ஒருவனாகப் பிறந்திருக்கக் கூடாதா?" என்று மனம் கலங்கும்.

"நீ மன்னனாகப் பிறந்ததாக யார் சொன்னது? மன்னன் வீட்டில் பிறந்தாய்; நீ குடி மக்களில் ஒருவனாகத் திகழ வேண்டுமென்று விரும்பியதை யாரும் தடுக்கவில்லையே!" மனத்தின் இன்னொரு பகுதி, விடையிறுக்கும்.

இந்த இரண்டு பகுதியில் எது இருண்ட பகுதி, எது ஒளிமிக்க பகுதி என்பதை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இன்னும் சில நாழிகை நேரத்தில் நடக்க வேண்டிய காரியத்திற்கு இருங்கோவேளின் இறுதியான முடிவு என்ன? அவன் யாரைப்போய் யோசனை கேட்பது? அமைச்சர் செந்தலையாரையா, அல்லது அவனது வீரத் தளபதிகளையா? அவர்கள் தான் எலும்புப் பொடிகளாக மாறி மண்ணோடு மண்ணாகக் கலந்து விட்டார்களே-அவனுக்கு யோசனை சொல்ல அவனைத் தவிர வேறு யாருமேயில்லை!

தங்கை தாமரைக்கு அவன் திட்டமே பிடிக்காது. அவளிடம் இந்தச் சிக்கலை வெளியிட்டால் அழுது புலம்புவாள், 'அண்ணா! ஓடிவிடு! பகைவர்களிடம் சிக்கிக் கொண்டு வேளிர்குலத்தினர் மிச்ச மீதியாக வைத்திருக்கிற நம்பிக்கையையும் நாசமாக்கி விடாதே!' என்று கெஞ்சிக் கேட்பாளே தவிர, உருவான ஆலோசனை எதையும் கூறக் கூடியவள் அல்லள்.

கனல் கக்கும் கண்களில் புனல் தேங்க-இமைகளை மூடிக்கொண்டு சிறிது நேரம் உட்கார்ந்திருந்தான்.

சின்ன இடை நெளிய, கன்னக் கதுப்பில் அறுத்து வைத்த பழத்தின் அழகு வண்ணம் காட்டியவாறு, அன்னநடையாள் அச்சடித்த சிலையனையாள்-அழகி முத்துநகை 'அத்தான்' என அழைத்தவாறு எதிரே வந்தாள். மாணிக்க மலர்க்கொடியை இழுத்துத் தோளில் படர விட்டுக் கொண்டான் இருங்கோவேள்.

"ஏனத்தான் ஒரே சிந்தனையில் மூழ்கியிருக்கிறீர்கள்? என்ன நடந்தது? என்னிடம் கூறுங்கள்!" எனப் பொன்னிற விரல்கள் கொண்டு அவன் செந்நிறக் கண்ணோரத்தில் தடவிக் கொண்டிருந்தாள்.

"கண்ணே, முத்துநகை! இன்று ஓர் உண்மையைச் சொல்லப் போகிறேன். அது கேட்டு நீ அதிர்ச்சி அடைவாய் என்று நன்றாகத் தெரியும். அதன் பிறகு நீ என்னை வெறுக்கவும் கூடும்!" என்று தயங்கித் தயங்கிப் பேசினான் இருங்கோவேள்.

"பரவாயில்லை! சொல்லுங்கள் அத்தான்!" என்றாள் முத்துநகை.

"மலர்ப் படுக்கையில் படுத்திருக்கும்போது திடீரென அது முட்படுக்கை ஆகிவிட்டால் என்ன செய்வாய்?"

"இப்போது மட்டுமென்ன, நீங்கள் இல்லாமல் நான் தனியாகப் படுத்திருக்கும்போதெல்லாம் முட்படுக்கையில் தானே கிடப்பதாக உணர்கிறேன்.!"

"தேனைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாய்-திடீரென அது நஞ்சாகி விடுகிறது. அப்போது என்ன செய்வாய்?"

"மாற்றம் தேனிலே இல்லை! நம் மனத்திலேதான் இருக்கிறது. அத்தான், நினைவுதான் தேனைக் கூடத் தேளின் நஞ்சாகக் கருதச் செய்கிறது என்று என்னை நானே தேற்றிக் கொள்வேன்!"

"நீ என்னை முழு மனத்தோடு நம்பிக் காதலிக்கிறாய்...

"காதலிக்கிறேனா? காதலித்து முடிந்து விட்டது!"

"அடடா! இரு-குறுக்கிட்டுக் குழப்பாதே! சரி, காதலித்து முடிந்து விட்டது! ஒருநாள், நான் உன்னுடைய பகைவன் என்று தெரிந்து விட்டால் என்ன செய்வாய்?"

"இப்படியெல்லாம் சொல்லி என்னைப் பிரித்துவிடப் பார்க்கிறீர்களா? நீங்கள் எந்தப் பொய் சொல்லியும் என்னை ஏமாற்ற முடியாது! செம்புலப் பெயல்நீர் போல அன்புடைய நெஞ்சம் கலந்துவிட்ட பிறகு அதனைத் துண்டாட நினைக்கும் யாரும் வெற்றி பெற முடியாது என்கிறபோது அடித்தளமற்ற உங்கள் பொய்கள்தானா வெற்றி பெற்றுவிடும்?"

"இல்லை முத்துநகை! என்னைப் பார்? என் மேனியெல்லாம் நடுங்குவதைப்பார்! குத்தீட்டிகளும், கொலை வாட்களும் சூழ்ந்து வந்தபோதும் பயத்தால் துடிக்காத என் இதயம் படபடவென்று அடித்துக் கொள்வதை உன் மென்மையான கரத்தால் புரிந்து கொள்! இத்தனை நாள் உன்னை நான் ஏமாற்றி வந்தேன். என் பகைவனை அழிப்பதற்காகப் புறப்பட்ட இலட்சியப் பயணத்தில் உன்னைச் சந்தித்தேன், உள்ளத்தைப் பறிகொடுத்தேன், இனி நாம் பிரிய முடியாது."

இருங்கோவேள் குழந்தையைப் போல் ஓவென அழுதான்.

முத்துநகை திகைப்படைந்து அவன் முகத்தோடு முகம் புதைத்துக் கொண்டு, "அத்தான்! என்ன சொல்கிறீர்கள்? பகைவன் இருங்கோ வேளை அடக்கவந்த உங்களுடைய பாதையில் நான் குறுக்கிட்டது பெருந்தவறு என்று கருதுகிறீர்களா? என்மீது தாங்கள் கொண்ட காதலால் தங்களுக்கும் நாட்டுக்கும் ஏற்பட்ட இழப்பு என்ன அத்தான்? சொல்லுங்கள் அத்தான்!" என்று கண்ணீர் வடித்தாள்.

"நீ கருதுகிறபடி என் பகைவன் இருங்கோவேள் அல்ல; நானும் வீரபாண்டி அல்ல. வீரபாண்டி என்ற பெயரால் உன்னை இதுவரை வஞ்சித்து வந்தேன். முதலில் உன்மீது ஆசை கொண்டேன். உன் தங்க உடல் என்னை உன் அடிமையாக்கியது. பிறகு உன் உள்ளத்தை உணர்ந்தேன். காதல் கொண்டேன். நீயே என் மனைவியென்று தீர்மானித்து விட்ட பிறகு, கணவனின் காரியங்களுக்கு மனைவியும் உதவியாக இருக்கவேண்டுமென்ற இலக்கணப்படி என் பகையழிக்கும் திட்டத்துக்கு உன்னையும் பயன்படுத்திக் கொண்டேன்!”

"அய்யோ! என்னத்தான் சொல்கிறீர்கள்; என் நெஞ்சு வீங்குகிறதே! பேசாதீர்கள்! அத்தான் பேசாதீர்கள்! என் நெஞ்சு வெடித்துவிடும்!"

"முத்துநகை! நுனிநாக்கு வரையில் வந்து உதட்டுக் கதவுகளையும் திறந்துவிட்ட உண்மை இனிமேல் உள்ளே திரும்புவது சிரமம் மிச்சத்தையும் கேள்! உன்னைக் கொண்டே என் பகைவனைச் கொல்வதற்கும் இறுதியாகத் திட்டமிட்டு விட்டேன்!"

"யார் உங்கள் பகைவன்? நீங்கள் யார்? தெளிவாகச் சொல்லுங்கள் அதுவும் விரிவாகச் சொல்லுங்கள்" என்று சத்தம் போட்டுக் கத்தினாள் முத்துநகை.

"என் பகைவன் கரிகாலன்! நான் தான் இருங்கோவேள்!" இந்த வார்த்தைகளைக் கேட்ட முத்துநகை "ஆ" என்று அலறியெழுந்த காட்சி, திடுமென வெடித்து நெருப்புக் குழம்பு கக்கும் எரிமலையை ஒத்ததாக இருந்தது.

உறையினின்றும் வெடுக்கெனக் கிளம்பிய வாள்போல்-வில்லி லிருந்து விடுபட்ட கணை போல்-அவன் மடியைவிட்டு எழுந்த முத்து நகையின் கையைப் பிடித்தவாறு, இருங்கோவேள், "பகைவனா யினும் உன்னிடம் பாசமுள்ளவன் நான் கண்ணே!" என்று பாகுமொழி பேசலானான்.

"சீ! விடு கையை!" என்று சொல்லிக்கொண்டே இடையிலிருந்த கத்தியைக் கையிலேந்தினாள். இமை கொட்டும் நேரத்தில் இருங்கோவே ளின் மார்புக்கு நேராகக் கத்தியுடன் பாய்ந்தாள்.

ஆனால் போர்மறவன் இருங்கோவேள், அலட்சியமாகச் சிரித்துக் கொண்டே அவளைத் தந்திரமாகத் தடுத்துக் கீழே வீழ்த்தினான்.

மீண்டும் கத்தியைத் தூக்கினாள். முன்னிலும் பன்மடங்கு ஆவேசமாக அவன்மீது பாய்வதற்கு ஓடினாள். இந்த முறையும் தோல்வி! இப்படிப் பல தடவை; அவளால் அவனைக் கொல்லவே முடியவில்லை.

"துரோகம்! துரோகம்! என் தந்தை துரோகியில்லை! நானே துரோகி!" என்று அலறிக் கொண்டே கையிலிருந்த கத்தியைத் தன் நெஞ்சில் ஆழப் பதித்தாள்.

"அய்யோ முத்துநகை!" - என்று இருங்கோவேள் திடுக்கிட்டு ஓடினான்.