ரோமாபுரிப் பாண்டியன்/29. மூவர்
29
மூவர்
ஆம். உண்மையிலேயே கண்களை மூடிக் கொண்டு சிந்தனையிலாழ்ந்திருந்த இருங்கோவேள் திடுக்கிட்டுப் பரபரப்புடன் எழுந்தான். கண்களைக் கசக்கிக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான். யாருமில்லை. மனப்போராட்டத்தின் உச்சக்கட்டம் அதுவென்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டான்.
அந்த நினைவு அலைகளால் அவன் உள்ளத்தில் ஒரு நல்ல முடிவு தோன்றியது. அந்த முடிவினை நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியுடன் கைகால்களை உதறிக் கொண்டு எழுந்தான், புதிய உற்சாகத்துடன். நினைவில் வந்த முத்துநகை இறுதியில் மேற்கொண்ட முடிவே சாலச் சிறந்தது என்று எண்ணிக் கொண்டான்.
நினைவில் கண்ட காட்சியில் கொல்ல வந்த முத்துநகையை இருங்கோவேள் தடுத்தான். ஆனால் நேரில் வரப் போகிற முத்துநகை யைத் தடுக்காமலே இருந்துவிட்டால்?
இந்த யோசனை அவனுக்குப் புதிய உணர்வை அளித்து விட்டது. படுக்கைக்கு கீழே ஒளித்து வைத்திருந்த மூட்டையை எடுத்துப் பிரித்தான்.
அதில் யவனருக்குரிய உடைகள் இருந்தன.
அந்த உடைகளை அணிந்து கொண்டான்.
யவனக் கிழவரானான்!
"வீரனே! இன்றிரவு நடுயாமத்தில் நான் தங்கியிருக்கும் இடத்திற்கு நீ வரவேண்டும். உன்னிடம் சில முக்கியமான செய்திகளைச் சொல்ல இருக்கிறேன். அவைகளை நீ நிறைவேற்றியாக வேண்டும்."
இருங்கோவேள் கூறிய இந்த வார்த்தைகள், செழியன் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தன. கரிகால் மன்னனுக்கெதிராகப் பயங்கரமான சூழ்ச்சித் திட்டம் ஒன்றினை நிறைவேற்றுகின்ற பொறுப்புத் தன்னிடம் விடப்பட இருக்கிறது என்று எண்ணிய அதே நேரத்தில், அந்தத் திட்டத்தை முறியடித்து இரண்டாவது முறையாகச் சாவின் வாயிலிலிருந்து மன்னனைக் காப்பாற்றும் பொறுப்பும் பெருமையும் தனக்குக் கிடைத் திருக்கின்றன என்ற மகிழ்ச்சியும் ஏற்பட்டது.
தன் சகோதரியின் சாவுக்குப் பிறகு, அவன் உள்ளத்தில் ஒரு சிறு மாறுதலுக்கான அசைவும் ஏற்பட்டிருந்தது. அவள் கல்லறையான பிறகு அந்த மாறுதல் சற்று வளரவும் தொடங்கியது. அக்காள் உயிரோடிருக்கும் வரையில் அவன் மனத்தில் தோன்றாத சொந்த பந்தமெல்லாம் அவள் பிணமான பிறகு அவனுக்குத் தோன்றியது. அவள் உயிரோடிருந்த நாட்களில் கொடிய உள்ளமும் பழி வாங்கும் வெறித் தன்மையும் கொண்ட ஒரு கணவனைத் திருத்தாமல் அவனோடு சேர்ந்து அநீதிக்கு வாழ்த்துப் பாடுகிறாள் என்று செழியன் வெறுப்படைந்திருந்தான்.
ஆனால் அவள் உயிர் பிரிந்ததும், அவன் இதயத்தில் இடம் பெற்றிருந்த வெறுப்பு உணர்ச்சி விலகிவிட்டது. அக்காளின் தியாகச் செயல் அவனை உருக்கிவிட்டது.
அவள் எந்த ஒரு கடமைக்காக இறுதி வரையிலும் பணிபுரிந்து வீழ்ந் தாளோ அக்கடமையினால் பயன் பெற வேண்டிய இருங்கோவேள் மீதிருந்த ஆத்திரத்தின் சூடு தணிந்து அவன் மீது அனுதாப உணர்ச்சி தலை நீட்டியது. 'என்ன இருந்தாலும் அக்காளின் கணவன்!. அக்காளுக்குத்தான் நல்வாழ்வு கிடைக்கவில்லை; அவளது இலட்சிய மனிதன் இருங்கோவேளுக்காவது கோர முடிவு ஏற்படாமல் இருக்கட்டும்" என்று அவன் கருதினான்.
இருங்கோவேளின் நோக்கம் ஈடேறக்கூடாது. அதற்குத் தன்னைத் தவிர வேறு தடையே கிடையாது என்பதை அவன் தீவிரமாகச் சிந்தித்து முடிவு செய்திருந்தாலும், அந்த முடிவுக்கு எந்தப் பாதகமும் வராமல் இருங்கோவேளைத் திருத்துவதிலும் தன் பணிக்கு முக்கியத்துவம் இருக்கிறது என்று அவன் நினைத்தான். அதைத் தன் அக்காளுக்காகச் செய்ய வேண்டிய கடமையெனவும் கொண்டான்.
அதற்கான முதல் முயற்சியாகத்தான் ஓலையொன்றில் இருங்கோ வேளை எச்சரிக்கும் தோரணையில் அறிவுரையினைத் தீட்டி அவனிருப்பிடத்தில் வைத்து அவன் கண்ணில் படுமாறு செய்தான் செழியன். எதிர்பாராத வெற்றியை அந்த ஓலை தேடித்தந்தது. அந்த ஓலையில் அடங்கியிருந்த வாசகம் இருங்கோவேளை மிரட்டியது. யாரோ தன்னைச் சுற்றி வட்டமிடுகிறார்கள் என்ற பயம் சூழ்ந்து கொண்டது.
அந்தப் பயத்தின் அடிப்படையில் முத்துநகையைப் பற்றிய எண்ணம் தலைதூக்கியது. இருங்கோவேளின் திட்டம் தலைகீழாக மாறியது. செழியனின் ஆசைப்படி இருங்கோவேள் மிக நல்லவனாக ஆகிவிட்டான் என்று சொல்ல முடியாது. கரிகாலனைப் பழி வாங்க வேண்டுமென்ற ஆத்திரம் அவனைவிட்டு அகலவில்லை. ஆனால் முத்துநகையை தனக்காகப் பலியிட அவன் விரும்பவில்லை.
அவன் மனத்தில் மூண்டெழுந்த காதலும்-அந்தக் காதல் விளைவித்த குழப்பமும் தன்னையே தியாகம் செய்து கொள்ளுமளவுக்கு நிலை மையை வளர்த்துவிட்டன.
இந்த முடிவைப் பொறுத்தவரையில் செழியனுக்குத் தோல்விதான். அவன் எதிர்பார்ப்பதெல்லாம் திருந்திய இருங்கோவேளின் அமைதியான நல்வாழ்க்கையைத்தான்! அந்த அமைதியான வாழ்வை, அடிமை வாழ்வென எண்ணினான் இருங்கோவேள், அப்படி வாழ்வதைவிடச் சாவது மேல் என்று முடிவு செய்தான்.
அவன் செய்த முடிவினை உணராத செழியன், இருங்கோவேளின் இருப்பிடத்திற்கு அண்மையில் உள்ள மண்டபத்தருகே உலாவிக் கொண்டிருந்தான். ஓலையை இந்நேரம் இருங்கோவேள் பார்த்திருக்கக் கூடும் - மனமாற்றம் அடைந்திருக்கக்கூடும்-அல்லது தன்னை யாரோ கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற பயத்தில் அரண்மனையை விட்டு வெளியேறி விடக்கூடும்-என்று பலவிதமாகச் சிந்தனையை அலையவிட்டுக் கொண்டிருந்தான்.
அவன் அவ்வாறு எண்ணமிட்டுக் கொண்டிருந்த அந்த நேரத்தில்தான் உள்ளே இருங்கோவேள் முத்துநகையின் கையால் சாவதற்குத் தயாராகி, யவனக் கிழவர் வேடமணிந்து கொண்டிருந்தான். குறிப்பிட்ட வேளை வந்து விட்டதாக உணர்ந்த செழியன், வளவன் வேடத்திலுள்ள இருங்கோவேளைச் சந்திப்பதற்காக அவனிருப்பிடத்திற்குள் நுழைந்தான்.
நுழைந்தவன் கண்களில் வியப்பின் அறிகுறி தோன்றியது. திடுக்கிட்டான். அங்குமிங்கும் சென்று பார்த்தான்.
அங்கே இருங்கோவேளைக் காணவில்லை
செழியனுக்கு ஒன்றுமே புரியவில்லை. தான் எழுதிய ஓலையிருக் கிறதா என்று தேடிப் பார்த்தான். கிடைக்கவில்லை. அங்கு வீசிக் கொண்டி ருந்த மென்காற்றில் பலகணியோரமாகப் படபடவென்ற மெல்லிய ஓசை கேட்டது. சென்று கவனித்தான். இருட்டில் சரியாகத் தெரியவில்லை. விளக்கை எடுத்துக் கொண்டு பலகணிப் பக்கம் வந்தான். அவன் எழுதிய ஓலை அளவுக்கே மற்றோர் ஓலை! அதை அவசரமாக எடுத்துப் படித்துப் பார்த்தான்.
அதில், "இருங்கோவேளை மிரட்டாதீர்கள்! அவன் வீரனாகத்தான் சாவான்!" என்ற வரிகள் எழுதப்பட்டிருந்தன!
செழியன் அந்த வரிகளைத் திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்து விட்டு, அந்த ஓலையை இடுப்பில் செருகிக் கொண்டு அங்குள்ள இருக்கையொன்றில் பலத்த யோசனையுடன் உட்கார்ந்தான். இருங்கோ வேள் தன்னை வரச் சொல்லிவிட்டு எங்கே போயிருக்க முடியும் என்ற ஆராய்ச்சிக்கு அவனால் முடிவு காண இயலவில்லை.
இருங்கோவேள் போயிருக்குமிடம் அவனுக்கு எப்படித் தெரியும்! அவன் தன் அழகான காதலியின் தங்கக் கரங்களிலே மின்னிக் கொண்டிருக்கும் கட்டாரியை முத்தமிட்டுக் கண்களை மூடுவதற்காக அவசர அவசரமாகப் போய்க் கொண்டிருந்தான். முத்துநகையிடம் சதித்திட்டம் பற்றிக் கூறிய வார்த்தைகள் எல்லாம் இருங்கோவேள் மனத்தில் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்தன.
"இன்றிரவு நடுயாமத்தில் இருங்கோவேள், யவனக் கிழவர் வேடத்திலே அரசனைக் கொல்வதற்குத் திட்டமிட்டிருக்கிறான். அந்தச் சதித்திட்டத்திற்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் உள்ளே யிருந்து தாமரை செய்து முடிக்கப் போகிறாள். மாளிகைக்கு அருகில் அரசனின் ஆலோசனை மண்டபத்திற்கு ஒட்டினாற்போலுள்ள சோலை வழியேதான் யவனக் கிழவர் உருவில் இருங்கோவேள் வரப்போகிறான். அவனை வரவேற்பதற்கு வேளிர்குல வீரன் தயாராக இருப்பான்."
இந்தத் திடுக்கிடும் தகவலைச் சொல்லித்தான் முத்துநகையை அதிர்ச்சி அடைய வைத்துப் பிறகு தனது சதித்திட்டத்திற்கு அவளை இணங்க வைத்தான்.அந்தக் கட்டளையை நிறைவேற்ற - கடமையினைச் செய்ய கரிகாலனையும் அவன் நாட்டையும் காப்பாற்ற இருங்கோவேள் தந்த கட்டாரியுடன் சோலையிலே ஒளிந்திருந்தாள் முத்துநகை.
அவள் ஒளி மிகுந்த விழிகள் சோலையைச் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தன. அவள் எதிர்பார்த்த வேளிர்குல வீரனையும் காணோம்; யவனக் கிழவனையும் காணோம். அவள் உள்ளத்தில் ஒரே பரபரப்பு. அவள் காதுகளால் உணர முடிந்தது, நேரம் ஆக ஆக நெஞ்சு வெடிப்பது போன்ற சங்கடம். மேனியெங்கும் ஒரே நடுக்கம். வியர்வை கொட்ட ஆரம்பித்தது. தன் வாழ்நாளில் சோழ மண்டலமே பெருமை கொள்ளக் கூடிய மாபெரும் காரியமொன்றினைச் செய்திடப் போகிறோம் என்ற துடிதுடிப்பு அவளை ஆட்டிப் படைத்தது.
அவளைவிட அதிகமான துடிப்புடன் இருங்கோவேள் சோலைப் பக்கம் வந்து கொண்டிருந்தான் - யவனக் கிழவர் வேடத்தில்! அவன் வேகமெல்லாம் தனக்கு முன்பு கரிகாலர் அங்கு போய் முத்துநகை யினுடைய கையால் முடிவெய்திடக் கூடாது என்பதுதான்! அந்த வேகத்தில் அவன் ஓட்டமும் நடையுமாகச் சென்று கொண்டிருந்தான்.
சோலையில் முத்துநகை தன் கடமைக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டாள். சுழன்று கொண்டிருந்த விழிகள் ஓரிடத்தில் நின்றன; அதோ வந்து விட்டான் யவனக் கிழவன்!