உள்ளடக்கத்துக்குச் செல்

ரோமாபுரிப் பாண்டியன்/3. மரமாளிகை

விக்கிமூலம் இலிருந்து

3

மரமாளிகை

புகார் நகருக்கு வெகு தொலைவிலுள்ள காட்டுவழியொன்றில் அடியார் கூட்டம் வேகமாக நுழைந்தது. செழியனைக் கட்டியுள்ள அன்னக் காவடியைத் தூக்க முடியாமல் ஆள்மாற்றி மாற்றித் தூக்கித் தோளெல்லாம் வீங்கிவிடவே காட்டு வழியில் நுழைந்ததும் நுழையாததுமாக எல்லாரும் களைப்பாறுவதற்காக உட்கார்ந்து கொண்டார்கள்.

அன்னக் காவடியிலிருந்த செழியனும் மயக்கந்தெளிந்து அசைய ஆரம்பித்தான். அந்த அசைவு கண்டு அடியார்கள் அச்சங் கொண்டனர். வாளை உருவித் தயாராக நின்று கொண்டனர். இருவர் அருகே சென்று அன்னக் காவடிக்குள் முடங்கிக் கிடந்த செழியனை வெளியே தூக்கினர். உடனே இருவர் தயாராக வைத்திருந்த விலங்குகளைக் கையிலும் காலிலும் மாட்டினர். செழியன் ஒன்றும் விளங்காமல் விழித்தான். அடியார்களை உற்றுப்பார்த்தான். அவர்களுக்கு இப்போது பயம் தெளிந்துவிட்டது. சோழனின் தலைநகரை விட்டு வெகுதூரம் வந்து விட்டோம் என்ற துணிவில் தங்கள் மாறுவேடங்களைக் கலைத்தனர். செழியனுக்கு நன்றாகப் புரிந்துவிட்டது அவர்கள் இருங்கோவேளின் ஆட்கள்தான் என்பது.

என்ன செய்யமுடியும்? காலும் கரமும் கட்டப்பட்ட நிலையில் எட்டிய மட்டும் விழிகளைச் செலுத்தினான். எட்டாத தொலைவுக்கு நினைவுகளை அலையவிட்டான். பறக்கவிடப்பட்ட காற்றாடி எவ்வளவு தூரம் சென்று பறந்தாலும் கயிற்றின் நுனியிருக்கும் இடத்திற்குத்தானே கடைசியில் வந்து சேரவேண்டும்? அது போலவே எங்கெங்கோ பறந்து சென்ற எண்ணங்கள் இறுதியில் அவனுக்குள்ளேயே வந்து சுற்றிக் கொண்டன.

இருங்கோவேளின் வீரர்களிடமிருந்து தான் தப்புவது ஒன்றுதான் உடனடியாக நடக்கவேண்டிய காரியம் என்று தீர்மானித்தான். ஆனால் அந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற வழி? எங்கும் இருள்! அதுகூட அவனுக்குச் சாதகமான சூழ்நிலைதான். ஓடினால் யாராலும் துரத்திக் கொண்டு தொடரமுடியாது. ஆனாலும் தப்பவேண்டுமே! அதற்கு என்ன செய்வது? அந்த வெறிபிடித்த முகம் படைத்த வீரர்களோடு பேசிப் பார்ப்போம் என்று தோன்றியது. அவனுக்கு! பேசத் தொடங்கினான்.

“யார் நீங்கள்?”- இது அவன் முதல் கேள்வி.

"எங்களைத் தெரியவில்லையா? பகைவர்களைப் பழிவாங்கும் பட்டாளம்!"- இறுமாப்புடன் விடை கிளம்பியது.

"இப்போது என்னை எங்கு அழைத்துச் செல்கிறீர்கள்?"

"அழைத்தா செல்கிறோம்; அட முட்டாளே! உன்னை அழைத்துப் போகவில்லை. இழுத்துப் போகிறோம்; இருங்கோவேள் மன்னரிடம்!"

"இருங்கோவேள்! அவர் இன்னுமா மன்னர்? இருக்கிறாரா உயிரோடு? புறமுதுகு காட்டிய அவமானத்தில் தற்கொலை செய்து கொண்டார் என்றல்லவா கேள்விப்பட்டேன்!"

"என்ன ஆணவம் இவனுக்கு?"- ஒரு வீரன் கர்ச்சனை செய்தான்.

"வாயைக் கிழியுங்கள்!"- இன்னொரு வீரன் கத்தினான்.

"நாக்கை நறுக்கி எறியுங்கள்!"-ஒரு வீரன் கத்தியோடு பாய்ந்து வந்தான்.

அந்த முழக்கங்கள் எதுவும் செழியனை இம்மியளவு அச்சத்திற்கும் ஆளாக்கவில்லை. அவர்கள் ஆவேசக் கூச்சலை எழுப்பயெழுப்பச் சிங்கம்போல் நிமிர்ந்து நின்றான். போர் முரசு ஒலிக்கும்போது அறுந்துவிழும் கரத்தைக்கூட கவனிக்காமல் எதிரிகளின்மீது பாய்கின்ற வீரக்குணம் படைத்த மறவர் மரபிலே வந்தவன் அந்த மாவீரன் என்பதற்கு அடையாளமாக, மார்பை உயர்த்தி மலையென நின்ற காட்சி, சூழ்ந்து நின்ற வீரர்களுக்குத் திகைப்பை ஏற்படுத்தியது.

அவர்களில் ஒருவன் செழியனிடம் நெருங்கிவந்து, "தம்பி! நீ பாண்டிய நாட்டுக்குள்ளே பெரிய வீரனாக இருக்கலாம், ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை போல! இங்கே வால் நீட்டாதே! கரிகால் சோழனிடம் வேளிர் குடியினராகிய நாங்கள் நாட்டை மட்டுந்தான் பறி கொடுத்திருக்கிறோம்; வீரத்தையும், மானத்தையும், வெம்பகை முடிக்கும் திறத்தையும் இன்னும் பறிகொடுத்துவிடவில்லை. அவனைப் பழிவாங்காமல் விடப்போவதும் இல்லை. இன்றைக்கே முடிந்திருக்க வேண்டிய காரியம். நீ தலையிட்டுக் கெடுத்துவிட்டாய்." என்று கம்பீரமாக வார்த்தைகளை உதிர்த்தான்.

செழியன் அவனைப் பார்த்து, "ஓகோ. புறமிருந்து பகையை வளைக்கும் திறத்தை யாரிடம் கற்றீர்? இந்நாட்டுக்குச் சொந்தமில்லாத அந்தத் திறத்தை உமக்கு விற்றவர் யார்? சோழப் பெருநாட்டின் தங்கம் கரிகால் பெருவளத்தானை என் கண் எதிரிலேயே கொல்லுவீர்கள். அதை நான் பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமோ? பிறகேன் எனக்குக் கையிலே வேல், கட்கம், கட்டாரியெல்லாம்?" என்று உறுமினான்.

"இவனோடு என்ன பேச்சு? இழுத்து வாருங்கள்!" என்று ஒருவன் கரகரத்த குரலில் ஊளையிட்டான். ஒருவன் செழியன்மீது காரித்துப்பு வதற்கு விரைந்து ஓடினான். இன்னொருவன் அவனைப் பிடித்து இழுத்துப் புறம் விடுத்தான்.

காட்டுப்பாதையில் அவனைக் கால், கை விலங்குகளோடு இழுத்துச் சென்றனர். ஒரே வெறிக்கூத்து. விரோதியொருவன் பிடிபட்டான் என்ற மகிழ்ச்சி ஆட்டம்? நடுக்காட்டுக்குள்ளே அந்தக் கூட்டம் நுழைந்தது. அதன் ஆட்ட பாட்ட ஒலியில் காட்டு மிருகங்கள் கூட ஓடி ஒளிந்தன. பறவைகள் அமைதியிழந்து மரக்கிளைகளிலேயிருந்து சிறகடித்து மேலெழும்பி மீண்டும் அமர்ந்தன. கூட்டத்தின் ஆர்ப்பாட்டம் திடீரென அடங்கியது. எல்லாரும் திடுக்கிட்டு எதிரே பார்த்தார்கள். இருளைக் கிழித்துக்கொண்டு ஒரு தீவட்டி வெளிச்சம் அவர்களை நோக்கி மிக வேகமாக வந்துகொண்டிருந்தது. செழியனும் வீரர்களும் அசையாமல் நின்றனர்.

வந்த வெளிச்சம், அவர்களுக்கெதிரே வந்து, சற்றுத் தொலைவில் நின்றது. குதிரையில் ஒரு வீரன் தீவட்டியோடு அமர்ந்திருக்கிறான் என்பது மட்டுமே செழியனுக்குத் தெரிந்தது. அவன் யார்? எந்த நாட்டு வீரன்? என்பதொன்றும் செழியனுக்குப் புரியவில்லை.

தீவட்டியோடு வந்த வீரன், "பகை! பகை! பகை!" என்று மூன்று முறை கூவினான்.

உடனே செழியனை அழைத்துவந்த வீரர்கள், "தூள்! தூள்! தூள்!" என்று பதிலுக்குக் கூவினார்கள். தீவட்டி வீரன் அதன்பிறகு அருகே வந்தான். செழியனுக்கு இப்போது விஷயம் புரிந்துவிட்டது. இருங்கோவேளும் அவனது எஞ்சிய படை வீரர்களும் இந்தக் காட்டிலேதான் உலவிக்கொண்டிருக்கவேண்டும். வேறு யாராவது எதிரிகள் வந்தால் அறிவிப்பதற்காகத்தான் தீவட்டி வீரன் வந்திருக்க வேண்டும். எதிரியா, அல்லவா என்பதை உணர்ந்து கொள்வதற்காகத்தான் "பகை" என்றதும் "தூள்" என்றனர்; இப்படி பதிலுக்குக் கூறாவிட்டால் தீவட்டிக்காரன் திரும்பி ஓடிப்போய் மற்றவர்களுக்கு ஆபத்தை விளக்குவான்; அவர்கள் ஓடித் தப்பித்து விடுவார்கள். இப்படித்தான் இருக்கவேண்டும் என்று செழியன் யூகித்துக்கொண்டான்.

அருகே வந்த தீவட்டிக்காரன் மற்ற வீரர்களைப் பார்த்து, "என்ன வெற்றியா?" என்று கேட்டான்.

"இதோ வெற்றியின் அடையாளம்!" என்றனர் செழியனைச் சுட்டிக் காட்டியவாறு. செழியனின் கண்கள் கட்டப்பட்டன. “ஏன் என் கண்களைக் கட்டுகிறீர்கள்?" என்று ஆத்திரத்தோடு கேட்டான் செழியன்.

"இனிமேல் நீ இந்த உலகத்தைப் பார்க்க முடியாது. சற்றுமுன் கடைசித் தடவையாகப் பார்த்தாயே. அதோடு சரி. உனக்கும் உலகத்துப் பெருங்காட்சிகளுக்கும் உள்ள தொடர்பு! ம்... இழுத்து வாருங்கள் அவனை!" என்று தீவட்டிக்காரன் ஆணையிட்டு விட்டுக் குதிரையைத் திருப்பிவிட்டான்.

விழிகளை இறுகக் கட்டிய நிலையில் செழியன் கல்லிலும் முள்ளிலும் கால்களை இடறிக்கொண்டு இரத்தம் கசியக் கசிய நடந்து சென்றான். அனைவரும் ஒரு ஏரிக்கரையோரமாக வந்து சேர்ந்தனர். காண்பவர் வியக்குமாறு அந்த நடுக்காட்டில் மரத்தால் அமைக்கப்பட்ட பல வீடுகள் இருந்தன. மாளிகை போன்ற தோற்றத்தில் கட்டிய ஒரு மரவீடு கம்பீரமாக அமைந்து இருந்தது. வீரர்கள் தங்குவதற்கு ஏற்றவாறு நீண்ட பாசறையொன்றும் காணப்பட்டது. காட்டு மரங்களை வெட்டி ஒழுங்கான பலகைகளாகக் கூட அறுக்காமல் முழு மரங்களாகவே அடுக்கி அவசரத்தில் கட்டப்பட்டிருந்தன அந்த வீடுகள்.

மாளிகை போன்ற வீட்டுக்கு எதிரே காற்றோட்டமேயில்லாத ஒரு மரவீடு இருந்தது. அதற்கு அழுத்தமான கதவு மட்டுமே இருந்தது. கதவில் பெரிய பூட்டு ஒன்று இருந்தது. அந்த வீட்டின் முகப்பில் வெள்ளை வண்ணத்தால் "சாவூருக்குப் போகும் வழி" என்று எழுதப்பட்டிருந்தது.

மாளிகை வீட்டின் பின்புறத்தில் சற்றுப் பொலிவு குறைந்த ஆனால் மாளிகைத் தோற்றமேயுள்ள மற்றொரு வீடும் காணப்பட்டது. முன்மாளிகையில் அரசனும் பின்னுள்ள மாளிகையில் அரசாங்கத்துப் பெண்களும், அரசியும், இளவரசியும் தங்கியிருக்கவேண்டும் என்ற உண்மையை செழியன் புரிந்துகொண்டிருப்பான். அவனது கண்கள் கட்டப்படாமல் இருந்திருந்தால்!

கரிகால் சோழனிடம் தோற்றுவிட்ட இருங்கோவேள் எப்படியும் தன் பகையைத் தீர்த்துப் பழிவாங்கிட வேண்டுமென்ற எண்ணத்தோடு அந்தக் காட்டில் தனது தளநாயகர்களோடும், அமைச்சர்களோடும், அரசியோடும், அரசகுமாரியோடும் மரமாளிகை அமைத்துத் தங்கி யிருந்தான். மக்களில்லாமல் மாவீரர்களையும் மந்திரி பிரதானியரையும் மட்டுமே கொண்ட அவனது அரசு, அந்தக் கானகத்தில் நடைபெற்று வந்தது. அங்கும் அவனுக்கு நிம்மதியில்லை. கரிகாலனைப் பூமியில் வீழ்த்தும்வரை அவனுக்கு ஓய்வில்லை. வெறிபிடித்து அலைந்து கொண்டிருந்தான். அவன் கனவு பழுக்கப்போகும் நேரத்தில்தான் செழியன் குறுக்கிட்டுவிட்டான். அவன் ஆத்திரம் செழியன்மீது திரும்பிற்று. அதன் விளைவாகச் செழியனைச் சூழ்ச்சியால் கொண்டுவந்து விட்டார்கள் இருங்கோவேளின் வீரர்கள்.

மாளிகை வீட்டுக்குள்ளே செழியனை இழுத்துக் கொண்டு அந்த வீரர்கள் புகுந்தார்கள். மரத்தால் ஆன சிம்மாசனமும் அதைச் சுற்றி அறிவுரையாளர்கள் அமர்வதற்கேற்ற வசதியுடைய ஆசனங்களும் நிரம்பி, அந்த மாளிகைக்கூடம் விசித்திரமாகக் காட்சியளித்தது. செழியனை இழுத்துக்கொண்டு வந்த நேரத்தில் அந்தக் கூடத்தில் யாருமே இல்லை. ஆசனங்கள் மட்டுமே இருந்தன. அனைவரும் உள்ளே நுழைந்ததும் தெருக்கதவுகள் மூடப்பட்டன. கூடத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு மணியை தீவட்டிக்காரன் மெதுவாக அடித்தான். கூடத்து மூலையிலே ஒரு சிறிய கதவு 'கிரீச்' என்ற ஒலியுடன் திறந்தது. அந்த வழியாக ஒருவர் தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்து. தீவட்டி வெளிச்சத்திலே முகந்தூக்கிப் பார்த்தார். வயதேறியவர் என்றாலும் அவர் முகத்தில் முதுமையின் இருள் இல்லை; கொடிய இருள் படர்ந்திருந்தது.

"யாரது?" என்று வாயைப் பிளந்தார். அய்யோ பயங்கரம்! செவியைத் துளைக்கும் குரல்! சிறு குழந்தைகளைப் பயமுறுத்தும் 'பூச்சாண்டி'யைப் போலக் காணப்பட்ட அந்தக் கிழவரின் கிணற்றுக் கண்களுக்குத்தான் எவ்வளவு கூர்மையான பார்வை.

"அமைச்சர் அவர்களே! வணங்குகிறேன். இதோ, செழியனைக் கொண்டுவந்து விட்டார்கள்!" என்று அந்தக் கிழவரைப் பார்த்துத் தீவட்டிக்காரன் மரியாதையாகக் கூறினான்.

"ஓகோ! அமைச்சரும் இருக்கிறார் போலும்!" என்று செழியன் தீர்மானித்துக் கொண்டான்.

கிழ அமைச்சர் செழியனிடம் நெருங்கிவந்து, அவன் முகத்தை ஏற இறங்கப் பார்த்தார். விகாரமாகச் சிரித்தார். "வில்லவனைக் கொன்ற வீரன் நீதானோ?" என்று பதைபதைப்புடன் கேட்டார். செழியன் மௌனமாக நின்றான்.

"சோழனுக்காகப் பரிந்துகொண்டு எங்கள் வேளிர்குடியின் தளபதியைக் கொன்றுபோட்ட உனக்கு எத்தனை வகையான சித்திரவதைகள் நடக்கப்போகின்றன பார்!" என்று மூச்சைப் பிடித்துக் கொண்டு கத்தினார். அந்தக் கூச்சலில் உறுதியிருந்தது. வார்த்தைகள் அழுத்தந் திருத்தமாக வெளிப்பட்டன. விழிகளைத் திறக்க முடியாத நிலையில் செழியன் பேசினான்.

"முது கிழவர் மட்டுமல்ல; அமைச்சராகவும் இருந்தவர். தாங்களே இப்படி வயதுக்குத் தரவேண்டிய பெருமையைக் கூடத் தராமல் வாய்க்கு வந்தவாறு பேசுதல் முறையல்ல என்பதை மட்டும் இந்தக் கண் கட்டிய காட்டில் கூறிட விரும்புகிறேன்" எனக் கம்பீரமாகச் சொல்லிவிட்டு "மாண்டிட அஞ்சான், பாண்டிய நாட்டான்!" என உற்சாகத்தோடும் உணர்ச்சியோடும் குமுறிக் கொந்தளித்து முழங்கினான்.

"செழியா! சிறுவனே! அமைச்சர் செந்தலையாரிடம் பேசுகிறோம் என்பது நினைவிருக்கட்டும்!" எனத் தலையில் ஒரு தட்டுத் தட்டினான் தீவட்டிக்காரன். தலையில் அடி விழுந்ததுதான் தாமதம். வேல்பட்ட வேங்கையானான் செழியன்! எரிமலையெனக் குமுறியெழுந்தான். தன்னைப் பிணைத்திருந்த சங்கிலியோடு சேர்த்து அதைப் பிடித்திருந்தவர்களைக் கீழே உருட்டினான். திடீரென ஏற்பட்ட அதிர்ச்சியில் காட்டாற்று வெள்ளத்து நடுவே சிக்கிய ஆட்டுக்குட்டிகள் போல் விலங்குச் சங்கிலியைப் பிடித்திருந்த வீரர்கள் சிதறி விழுந்தனர்.

காலிலும் கையிலும் விலங்கு-கண்களோ கட்டப்பட்டிருக்கின்றன- ஆனாலும் போரிடத்தயாராகி விட்டான். கண்கட்டை அவிழ்ப்பதற்காக விலங்குடன் கையைக் கொண்டு போனான். அதற்குள் ஒருவன் வாளோடு செழியன்மீது பாய்ந்தான். அந்த வாளைச் செழியன் கைப்பற்றிக்கொண்டு பாய்ந்தவனைக் கீழே உருட்டினான். அதற்குள் பல வாள்முனைகள் அவனைச் சூழ்ந்தன. ஒலிக்குறிப்பை மட்டும் வைத்துக்கொண்டு விழிகளின் பார்வையற்ற நிலையில் அவன் நடத்திய போராட்டங்கண்டு அமைச்சர் செந்தலையாரும் அதிசயித்துப் போனார். அவனது வாள்வீச்சில் ஐந்தாறு வீரர்கள் காயம்பட்டு ஓடினர். ஆயினும் இறுதி வெற்றி அவன் பக்கம் இல்லை. இருங்கோவேளின் வீரர்களே வென்றனர். செழியன் மீண்டும் பலமாகக் கட்டப்பட்டான்.

அப்போது குதிரைகள் வரும் குளம்படியோசை கேட்டது. தெருக்கதவு திறக்கப்பட்டது. குதிரையிலிருந்து இறங்கியவர்கள் தளபதி வில்லவனின் பிணத்தை உள்ளே கொண்டுவந்தனர். ஒரே அமைதி! சோகம் திடீரெனக் கப்பிக்கொண்டது. வில்லவனின் வீர உருவத்தை நடுக்கூடத்திலே கொண்டுவந்து வைத்தார்கள். மந்திரியார் அந்த உருவத்தருகே சென்று தீவட்டியின் உதவியோடு குனிந்து பார்த்தார். அவர் முகம் மேலும் கொடூரமாக மாறியது.

"பகை! பகை! பகை!" என்று படிப்படியாகக் குரலை உயர்த்தினார்.

சுற்றி நின்றவர்கள் "தூள்! தூள்! தூள்!" என்று ஒலி முழக்கம் எழுப்பினர் ஆத்திரத்தோடு!

அதன் பின்னர் சற்று நேரம் அமைதி! குதிரை வீரர்களைப் பார்த்து அமைச்சர் கேட்டார்- "இன்னும் மன்னர் வரவில்லையா?" என்று.

அதற்கு, "மன்னர் எங்களுக்குப் பின்னால்தான் வந்தார். உடை மாற்றிக் கொள்வதற்காகப் போயிருக்கிறார்!" என்று பதிலுரைத்தான் வீரன்.

அதற்குள், அமைச்சர் வந்த மூலைக் கதவுப் பக்கமிருந்து தேர் ஒன்று அசைவதுபோல அசைந்து வந்தான் மன்னன் இருங்கோவேள். வேளிர்குடி மன்னன் ஒரு சிற்றரசனாக இருந்தாலும் அவன் கொலுமண்டபத்திற்கு வருவதென்றால் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இன்று அவன் இருண்ட மரமாளிகையொன்றில் நிம்மதியற்ற நெஞ்சோடு, சாகும்வரை மாறாத ராஜநடை போட்டுப் பிரவேசித்த காட்சி அவனது வீரர்களின் உள்ளத்தைத் தொடாமல் இல்லை. அப்படி தொட்டதனால்தான் தங்கள் உயிரைத் திரணமாக மதித்து இருங்கோவேளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்த வேண்டுமென்று அவனோடு சிரமங்களைத் தாங்கிக்கொண்டு வாழ்கிறார்கள். இருங்கோவேளின் பார்வை முதலில் வில்லவனின் உருவத்தின் மீதுதான் விழுந்தது. அருகே வந்து நின்றான். அவன் கண்கள் நீரைப் பொழிந்தன. வீரர்களை நோக்கினான். அமைச்சர் உட்பட அனைவரும் தலைகுனிந்து நின்றனர்.

"எனக்காக - என் வாழ்வின் மேன்மைக்காக -நமக்காக - நமது நாட்டுக்காகத் தன் உயிரை மதியாமல் சென்ற வீரத்தளபதி வில்லவனின் பெருமைக்குரிய உடலுக்குத் தலை தாழ்த்தி வணக்கம் செலுத்துவோம்!"

இருங்கோவேள் சோகம் கப்பிய தொனியில் இந்த வார்த்தைகளை வெளியிட்டான். அவன் குரல் கம்மியது: விம்மியழுதிருப்பான். மன்னனாக இல்லாவிட்டால்! எவ்வளவு சோகத்தோடு சொற்கள் புறப்பட்டனவோ அதற்கு நேர்மாறான வேகத்தில் திடுமென வெடித்துக் கிளம்பினான், “எங்கே வில்லவனைக் கொன்றவன்?" என்று.

"இதோ!" என்றார் அமைச்சர்.

செழியனிடம் போய் அவனையே பார்த்தவாறு நின்றான். பார்வையிலேயே அவன் இரத்தத்தை உறிஞ்சிவிடுவது போல காட்சி யளித்தான். அவனையும் அறியாமல் அவன் கை, கட்டாரிக்குச் சென்றது; கையில் எடுத்து விட்டான். கிழ அமைச்சர் அதைத் தடுத்து விட்டார். இவ்வளவும் செழியனுக்குத் தெரியாது. அவன் ஏதோ சிந்தனையில் விழிகளைத் திறக்க முடியாமல் எதிரே நின்றிருந்தான்.

"செழியனைக் கொண்டுபோய் தக்க பாதுகாப்புடன் வையுங்கள்!"- கிழ அமைச்சர் உத்திரவு போட்டார். அமைச்சரின் உத்திரவில் ஏதாவது அர்த்தமிருக்கும் என எண்ணிக்கொண்ட இருங்கோவேள் தடை சொல்லாமல் இருந்துவிட்டான். செழியன் இழுத்துச் செல்லப்பட்டான். விடியற்காலையிலேயே வில்லவனை அடக்கம் செய்துவிட வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

"சாவூருக்குப் போகும் வழி!" என்று முகப்பில் எழுதப்பட்டுள்ள வீட்டின் கதவு திறக்கப்பட்டது. செழியன் அதன் உள்ளே இழுத்துச் செல்லப்பட்டான். ஆட்கள் நுழைந்ததும் அங்கு அடைந்துக் கிடந்த வௌவால்கள் அங்குமிங்கும் அலைமோதிப் பறந்தன. ஒரு பெரிய தூணில் செழியனின் கை கால்களில் சங்கிலிகளைப் பிணைத்து அவன் நகர முடியாதபடி கட்டிப்போட்டனர். பிறகு அந்த பயங்கர வீட்டின் கதவு மூடப்பட்டது. வீட்டைச் சுற்றிக் காவலுக்கு ஆட்கள் நிறுத்தப்பட்டனர்.