ரோமாபுரிப் பாண்டியன்/30. பகைமை முடித்தான்
30
பகைமை முடித்தான்.
அவள் இதயம் கூச்சலிட்டது.
கட்டாரியைப் பலமாகப் பிடித்துக் கொண்டு புதர் ஓரமாக நகர்ந்து சென்றாள்!
அங்கே வந்து விட்டான்!
பாய்ந்து குத்தப் போகிறாள்!
ஒரே வீச்சு! யவனக்கிழவன்! ஆம். அந்த இருங்கோவேள் செத்து மடிவான் என்ற ஆவேசத்துடன் பாய்வதற்குத் தயாரானாள்.
என்ன அதிசயம்? எத்துணை விபரீதம்!
அதோ மற்றொரு யவனக் கிழவன்!
இரண்டு கிழவர்களில் உண்மையான இருங்கோவேள் யார்? அவள் திகைத்துத் திரும்பினாள். அவளுக்குப் பின்னால் மற்றொரு யவனக் கிழவன்! அவள், கண்களைக் கசக்கிக் கொண்டாள். தன்னைச் சுற்றி மூன்று யவனக் கிழவர்கள் நிற்பதைத் தெளிவாகக் கண்டாள்.
அந்த மூன்று யவனக் கிழவர்களும் அடுத்தடுத்து வந்ததும் முத்துநகையின் மூளையே குழம்பும் வண்ணம், அவளைத் திகைப்புக் கடலிலே திணற அடிப்பது போதாதா? அவளுக்கு முதுகுப் புறமாய் வந்த மூன்றாவது யவனக் கிழவரை ஒட்டி இன்னொரு பெரியவருமா திடீரென்று தோன்றவேண்டும்?
"அவர் யார்?... என் தந்தை மாதிரித் தெரிகிறாரே? இந்த நள்ளிரவில் அவர் எப்படி இங்கே வந்தார்... பழைய துரோகத்தை இன்னும் அவர் தலைமுழுகவில்லையா?..."
-என்றெல்லாம் சந்தேக வினாக்கள் தன் நெஞ்சிலே சதிராட்டம் ஆட, மை இருளைத் தன் மை விழிகளால் துழாவியவாறே அந்த நான்காவது மனிதரின் முகத்தை நன்கு அடையாளம் கண்டிட முனைந்தாள் முத்துநகை.
அதே வேளையில் திடு திடுவென்று குதிரைகளின் குளம்பொலி இந்தப் பூமியை மட்டுமின்றித் தன்செவி மடல்களையும் அதிரவைப் பதை அவள் உணர்ந்தாள். அவளுடைய விழிக்கதவு ஒரு முறை மூடித்திறப்பதற்குள் அடலேறென ஐந்தாறு வீரர்கள் புரவிமீதேறி அவளுக்கு எதிரேயே வந்து விட்டனர்! அவர்களை அழைத்து வந்தவன் யார் என்பதை வீரன் ஒருவனின் கரத்திலிருந்த தீவட்டியின் சோளக்கதிர் போன்ற ஒளிப் பிழம்பு தெளிவாகக் காட்டியது.
அந்த ஆற்றல்மறவன் - அரிமா - வேறு யாரும் அல்லன்; பெருவழுதிப் பாண்டியனின் பெருநம்பிக்கைக்குப் பாத்திரமான செழியனே!
அவன் இப்போது தோற்றமளிப்பதும், தாமரைக்குத் துணையாகப் புகார் அரண்மனைக்குள் புகுந்தானே அந்த வேளிர் குல வீரனாகவா? அல்லவே அல்ல; முன்னொரு சமயம் புலவர் காரிக்கண்ணனார் இல்லத்தில், முத்துநகையிடம் சிகிச்சை பெற்றானே அதே உண்மையான வடிவத்தில்தான் இப்போது அவன் வந்திருந்தான்!
அவனுடைய பரந்த முகத்தைப் பார்த்ததுமே முத்துநகையின் நெஞ்சத்திலே புதியதொரு நம்பிக்கையும், தெம்பும் பொங்கிப் புரண்டன கங்குகரையில்லாமல். இனி ஆயிரம் ஆயிரம் 'இருங்கோவேள்' அணிதிரண்டு கரிகாலரைக் கவிழ்க்க வந்தாலும், அவர்களை ஒரே மூச்சில் தீர்த்துக் கட்டிவிடக்கூடிய அளப்பரிய வலிமை தனக்கு வந்துவிட்டதைப்போல் விளக்கவொண்ணாத உணர்ச்சிப் பிழம்பாகவே மாறலானாள் அந்த வீராங்கனை!
ஆயினும், தன்னைச் சுற்றி நிற்கும் மூன்று யவனக் கிழவர்களுள் யார் உண்மையான இருங்கோவேள் என்பதை முதலில் அவள் கண்டு பிடித்திட வேண்டுமே!
"அரசே!" என்று குரல் கொடுத்தான் செழியன்.
உடனே, இரண்டாவதாக வந்த யவனக்கிழவர், "கவலைப்படாதே செழியா! -என்றவாறே தமது உரம் வாய்ந்த கரத்தினைத் தலைக்கு மேலே உயர்த்திக் காட்டினார். அவர்தம் விரலில் குடியேறியிருந்த வைரக் கணையாழி செம்பருத்திப் பூவின் செந்நிறத்தை உமிழ்ந்து, 'பளிச், பளிச்' சென்று மின்னிற்று.
அவனது மிடுக்கான குரலைக் கொண்டே அவன் கரிகாலன் என்று உணர முடிந்த முத்துநகை, "மன்னவா! தாங்களா?" என்று அதிர்ச்சியுடன் கேட்டாள்.
"ஆமாம் முத்துநகை, நானேதான்!" என்று முறுவலித்த கரிகாலன், புலவர் காரிக்கண்ணனார் நின்றிருந்த திக்கினை நோக்கினான்.
'தாங்கள் ஏன், எப்படி, இங்கே வந்து சேர்ந்தீர்கள்?' என்று வினவாமல் வினவின அவர் விழிகள்.
சோழப் பெருவேந்தனான திருமாவளவனே இங்ஙனம் உருமாறி வரக்கூடும் என்று கற்பனைகூடச் செய்தறியாத காரிக்கண்ணனார் தாம் அடைந்த அதிர்ச்சியினின்றும் மீள்வதற்குள் பெரும்பாடு பட்டுவிட்டார். ஆயினும் அவர் சற்று முன்னால் வந்து, "மன்னர் மன்னவா! இங்கே ஒரு கொடிய நிகழ்ச்சி நடைபெறுவதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதைச் சில விநாடிகளுக்கு முன்னர்தான் தெரிந்து கொண்டேன். அதனை எவ்வாறேனும் தடுத்திட வேண்டும் என்னும் ஆர்வத்துடனேயே ஓடோடி வந்தேன். நான் சொல்வதை நம்புங்கள். மன்னா, என்னுடன் வந்திருக்கிறாரே இந்த யவனக்கிழவர், இவரைப் பற்றிப் பின்னால் விளக்குகிறேன். அதோ நிற்கிறானே, அவன் தான் இருங்கோவேள்...
காரிக்கண்ணனார் தம் வார்த்தைகளை முடிக்கும் முன்னரே முதலாவது யவனக்கிழவராக வந்த இருங்கோவேள் 'ஓ.. ஓ' என்று உரத்த குரலில் சிரிக்கத் தொடங்கி விட்டான். அந்தச் சோலைப்பகுதியே அதிர்ந்துபோகும் வண்ணம் எதிரொலியினை எழுப்பிற்று அவனுடைய பெருத்த சிரிப்பு. அவனுக்குப் பைத்தியந்தான் பிடித்துவிட்டதோ என்று எண்ணும்படியாகவும் அது பிசிறு விழுந்து ஒலித்தது!
மூளையே சிதறுண்டு, அவனுக்குப் பைத்தியமே பிடித்திருந்தாலும் கூட, அதிலே வியப்புறவோ வேதனைப்படவோ என்னதான் இருக்கிறது? ஓர் உண்மையான வீரனுக்குரிய இலக்கணப்படி எதிரியை நேருக்கு நேர் சந்திக்கும் புலியாகவா அவன் பொருத முற்பட்டான்? விநாடிக்கு விநாடி வேடம் போட்டு மறைந்து வாழும் பச்சோந்தியாக அல்லவா தன் வேளிர்குலப் பண்பையே காற்றில் பறக்க விட்டான்? ஆயினும், தன்னுடைய திட்டங்கள் அனைத்துமே இத்துணை விரைவில் இடிந்து நொறுங்கும் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. தான் பின்னிய சூதுவலை இரும்பாலானதாக அவன் எண்ணிக் கொண்டிருக்க, அது வெறும் நூலிழையால்கூட ஆனதல்ல என்று அம்பலப்படுத்தப்படும் என்று அவன் நினைக்கவே இல்லை - அவ்வாறு அதனை அறுத்தெறிந்த பெருமையும் செழியனையே சாரும்.
தன்னுடைய தமக்கை பெருந்தேவி இயற்கை எய்தியதும், மைத்துனனான இருங்கோவேளிடம் செழியனுக்கு ஒருவிதப் பரிவு ஏற்பட்டது என்னவோ உண்மைதான். எனினும், கரிகாலனின் உயிருக்கே உலை வைக்கும் அளவுக்கு இருங்கோவேளின் வஞ்சனைக் கரம் எல்லை கடந்து நீள்கிறது என்றதும், செழியனால் நெஞ்சம் பெறுக்க முடியவில்லை. இமைப் பொழுதைக் கூட வீணடிக்காமல் சோழ மன்னனைச் சந்தித்து எத்தகைய பேராபத்திலே அவர் சிக்கிடப் போகிறார் என்பதனை எடுத்துச் சொன்னான். இருட்டிலே அடையாளங்கண்டு கொள்வதற்காக, அவர் சிவப்புக்கல் கணையாழியை அணிந்து கொண்டு, தம் தலைக்கு மேல் அதனை உயர்த்திக்காட்டிட வேண்டும் என்ற தந்திரத்தை வகுத்துக் கொடுத்தவனும் அவனே. இருங்கோவேளை அவன் நிழல் போலத் தொடர்ந்து கொண்டே சென்றது அவனுக்குப் பல வழிகளிலும் பயனளித்தது. இல்லையென்றால் தன் கையே தன் கண்ணைக் குத்தின மாதிரி முத்துநகையின் கட்டாரிக்கு அல்லவா இந்நேரம் கரிகாலன் இரையாகியிருப்பான்?
வேளிர் வீரனாகப் புகாருக்கு வந்து தன் அந்தரங்கங்களை ஓரளவுக்கு அறிந்து கொண்ட செழியனால்தான் சூழ்ச்சித் திறனுக்கு அழிவு ஏற்பட்டது என்பதனை அறியாத இருங்கோவேள், தான் இனிமேல் தப்புவதற்கு வழி எதுவும் இல்லை என்கிற நிலையிலேயே, விரக்தி என்னும் மலையுச்சிக்குச் சென்று விலாப்புடைக்கச் சிரித்தான். வேளிர்குல வேந்தனாக வாழ்ந்தவன், அறவழியிலேயே தன் வீரத்தையும் விவேகத்தையும் வெளிப்படுத்தித் தன் ஆட்சியை மீட்டுக் கொள்ளத் தவறிவிட்டான். அத்துடன் குள்ளநரி நடவடிக்கைகளிலெல்லாம் கூசாமல் ஈடுபட்டுத் தன் பெருமை அனைத்தும் துகிலுரியப் படும் நிலைமைக்கும் இலக்கானான். தன்னுடைய இழிந்த செயல்களே தன் மனச்சாட்சியை உறுத்த, அந்த உறுத்தலின் வெளிப்பாடாகவே அவன் விடாமல் சிரித்தான்!
அவன் சிரிக்கச் சிரிக்க, முத்துநகைக்கோ, சினத் தீ கொழுந்து விட்டெரிந்தது.
'இவனை உடனே சிறைபிடிப்பதை விட்டுவிட்டு ஏன் எல்லாரும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள்?' என்று ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது அவளுக்கு.
சிரித்துக்கொண்டிருந்த இருங்கோவேளின் கரம் அவனுடைய மார்பை மூடியிருந்த அங்கியினுள் நுழைந்தது; பளபளக்கும் கட்டாரியொன்றினை, அது மெள்ள மெள்ள வெளியே எடுத்தவண்ணம் இருந்தது. தீவட்டியின் மங்கிய வெளிச்சத்தில் முத்துநகை அதனைக் கவனித்து விட்டாள்.
அவ்வளவுதான். தன் கையிலிருந்த கட்டாரியை ஓங்கி வீசினாள்.
"அய்யோ முத்துநகை!" என்று அலறியவாறே தன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கீழே சாய்ந்தான் இருங்கோவேள்.
கட்டாரி அவனது மார்பை ஆழமாக ஊடுருவி இதயப்பகுதியில் ஆழமாகப் பதிந்து கொண்டுவிட்டது.
திடீரென்று இப்படியொரு துணிச்சலான செயலில் முத்துநகை இறங்கிவிடுவாள் என்று எவருமே எதிர்பார்க்கவில்லை. எல்லாருமே திடுக்கிட்டுப்போய் அவளையும் இருங்கோவேளையும் மாறி மாறி வெறித்து நோக்கினர்.
அடிபட்டு வீழ்ந்த வேங்கையைப் போல, ஆவி பிரியப் போகும் வேதனை தாளாமல், தன் கனத்த உடலை ஓரிடத்தில் கிடத்திக் கொள்ளவும் முடியாமல், தரையிலே தன் கால்களைப் போட்டு அடியடியென்று அடித்தவாறே துடியாய் துடித்துக் கொண்டிருந்தான் இருங்கோவேள்.
அவன் அவ்வாறு துடிப்பதைக் காணக் கரிகாலனின் இதயமும் துடிதுடித்தது. பகைவனுக்கும் அருள் புரியும் பண்பாளன் அல்லவா அவன்? அவன் உடலருகே விரைந்தான். அவனைத் தொடர்ந்து மற்றவர்களும் வந்தனர்.
இருங்கோவேளோ கட்டாரியோடு சேர்த்துச் செங்குருதி ஊற்றாகப் பொங்கி வழியும் தன் மார்பகத்தை ஒரு கையினால் அழுத்திப் பிடித்துக் கொண்டவாறே, இன்னொரு கையினால் தன் முகத்தருகே வந்துவிட்ட கரிகாலனின் கரிய தாள்கள் இரண்டையும் இறுகப் பற்ற முயன்றான்.
"மன்னர்... மன்னவா! என்னை...மன்னித்து விடுங்கள்" என்னும் வார்த்தைத் துளிகள் அவன் வாயினின்றும் திணறிச் சிதறின.
அந்தச் சொற்கள் தம் செவியில் விழுந்ததும் கரிகாலனின் உள்ளம் பாகாய்க் கரைந்து உருகிற்று. அவன் கீழே அமர்ந்து இருங்கோவேளின் தலையைத் தாங்கிப் பிடித்துத் தன் மடியில் போட்டுக் கொண்டான்.
"என்னுடைய எதிரி இருங்கோவேளாக உம்மை இப்போது நான் காணவில்லை; என்னுடைய உயிரைக் காப்பாற்றிய வளவனாகவே நான் காண்கிறேன்; ஆகவே 'மன்னிப்பு' என்கிற பேச்சுக்கு இங்கே இடமேது?" என்று மொழியும்போதே, கரிகாலனின் குரல் தழுதழுத்து விட்டது. கண்ணீர் வெள்ளம் அவன் விழிகளுக்குத் திரையிட்டது. அருவியாகவும் வழிந்தது.
புலவர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய 'பட்டினப்பாலை' அரங்கேற்றமும், அந்த இனிய நிகழ்ச்சியைத் தொடர்ந்து தன் உயிரைப் பருகுவதற்காகப் பெருந்தேவியிடமிருந்து பாய்ந்து வந்த கட்டாரியும், அதனைத் துணிந்து தாங்கிக்கொண்டு தன்னை இறப்பிலிருந்து மீட்ட வளவனின் தீரச் செயலும் பழைய நினைவுச் சுருள்களாகி, காற்றடிபட்ட கருமுகில்களின் கடுவேகத்தோடு அவனுடைய கண்ணீர்த் திரையிலே மிதந்தோடிடவும் தவற வில்லை.
"நான்தான் வள... வள... வன்... என்பதும் தங்களுக்குத் தெரிந்து 'விட்டதா, அரசே?" என்று கேட்டுக் கரிகாலனின் நினைவுத் தேரை நிலையடிக்குக் கொணர்ந்திட்டான் இருங்கோவேள்.
"நீர்தான் வளவன் என்பதைச் செழியன் மூலம் நான் அறிந்து கொண்டேன். நீர் மட்டும் உமது நிலைமையைப் புரிந்து கொண்டு குறுக்கு வழிகளை நாடாது இருந்திருந்தால், உம்மை மீண்டும் குறுநில மன்னராகவே ஆக்கியிருப்பேன். சிறிது காலத்திற்கு முன்னே வடபுலத்தில் சீலம் நதிக்கரையை ஆண்ட 'போரசு' மன்னனைக் கிரேக்க மாவீரன் அலெக்சாந்தர் வெற்றிக்கொண்ட போதிலும், அவனை மன் னித்து அவனுக்குரிய மதிப்பினை அளிக்கவில்லையா? அப்படித்தான் நானும் உம்மை நடத்திட எண்ணியிருந்தேன். ஆனால் நீரோ...?"
அதற்கெல்லாம் காலங் கடந்துவிட்டது மன்னவா! ஆத்திர...தில் என்...அறிவை இழந்து... விட்டேன்! நான் தங்களுக்கு மட்டும் துரோகி யில்லை.... என் மனைவி பெருந்தேவிக்கும் நான் பெரிய துரோகி! ஆனாலும் நான் நிம்மதியாகத்தான் சாகிறேன். யார் கையால் நான் சாக ஆசைப்பட்டேனோ அவள் கையாலேயே.."
"அப்படியானால் முத்துநகைதான்" என்று கரிகாலன் இழுக்கும்போதே, "ஆம்" என்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தான் இருங்கோவேள்.
உடனே காரிக்கண்ணனார்-
"ஆமாம் அரசே! இருங்கோவேள் கூறுவது முற்றிலும் உண்மை! தான் இறக்கத்தான் வேண்டும் என்ற முடிவுக்கு வந்து, ஆனால் தான் இறந்த பிறகு எனக்குத் தெரிந்தால் போதும் என்று கருதி, அவர் என்னிடம் மன்னிப்புக் கேட்கும் முறையில் எழுதி வைத்திருந்த ஓலை நறுக்கு தற்செயலாக எனக்கு முன்கூட்டியே கிடைத்துவிட்டது. அதிலே முத்துநகையைத் தான் விரும்பியதைப் பற்றியும், எனக்கும் இதோ இந்த யவனக் கிழவருக்குமுள்ள தொடர்பைத் தெரிந்துகொண்டு தாமும் யவனக்கிழவர் வேடமணிந்து எல்லாரையும் ஏமாற்றியதைப் பற்றியும், அதன் காரணமாக நான் சிறைப்பட நேர்ந்தது பற்றியும், அதற்காக என்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு-தங்களை கொல்வதற்காகச் சூதுவலை பின்னி இந்தச் சோலைப் பக்கம் வரவழைத்தது பற்றியும், ஆனால் தன்னுடைய மனம் மாறி முத்துநகையின் கையினாலேயே தான் இறக்க விழைவதைப் பற்றியும் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறார் இருங்கோவேள். அந்த ஓலை நறுக்கைப் பார்த்து விட்டுப் பதறிப்போய்த்தான் இந்த யவனக் கிழவரையும் அழைத்துக் கொண்டு நான் இங்கே ஓடோடியும் வந்தேன்!" - என்று படபடப்புடன் சொல்லி முடித்தார்.
இறப்பின் தழுவலுக்கு இலக்காகப் போகும் இருங்கோவேள் "எனக்கொரு கடைசி ஆசை; நிறைவேற்றுவீர்களா?" என்றான். "என்ன ஆசை? எதுவானாலும் சொல்லும்; உடனே நிறைவேற்றி வைக்கிறேன்" என்றான் கரிகாலன்.
"முத்து... முத்துநகை மடியிலே நான் சாக வேண்டும்...
'திகீர்' என்று இருந்தது முத்துநகைக்கு; தான் ஒரு பெண் என்பதையும் மறந்து எகிறிக் குதித்தாள்; எரிமலையாகி விட்டாள்.
அடப்பாவி! உனக்கா என் மடியைக் கொடுப்பேன்? உன்னைப் போன்ற ஒரு வஞ்சகனையா நான் காதலிப்பேன்? சாகப்போகிற வேளையிலே உனக்கு ஏன் இந்த கேடு கெட்ட ஆசை?"
இருங்கோவேளின் இதழ்களில் ஒரு வறண்ட புன்னகை இழையோடிற்று.
'அடி பேதைப் பெண்ணே!... நான் தான் 'வீரபாண்டி', என்னைத்தான் நீ காதலிக்கிறாய்?" என்று நாக்குழறிற்று இருங்கோவேளுக்கு.
"என்ன! நீயா வீரபாண்டி! நீயா வீரபாண்டி! அய்யய்யோ!" என்று ஆங்காரத்துடன் அலறினாள் முத்துநகை.
அடுத்த கணம் தலைசுற்றிய பம்பரம்போலத் 'தடால்' என்று மயங்கி விழுந்தாள்
"அய்யோ! முத்து" என்று கதறியவாறே அவள் அருகே ஓடி அள்ளி அணைத்தார் காரிக்கண்ணனார்!
முத்துநகை மயக்கமுற்று விழுந்திடக் கண்டதும் பதறிப்போனான் கரிகாலன். தன் காதலனின் பிரிவினைத் தாங்கிட இயலாமல் சாதலினைத் தழுவிடுவாளோ என்ற கலக்கம் ஏற்பட்டது அவனுக்கு. உடனே எழுந்து சென்று அவளைக் கவனிக்க எண்ணினான். அதற்குள்-
இருங்கோவேளின் மூச்சு இயற்கையில் கலந்துவிட்டது; ஆம் அவனுடைய தலை சட்டென்று தொங்கிப்போயிற்று. அவனைத் தன் மடியினின்றும் அகற்றித் தரையிலே வைத்திட்ட கரிகாலன், முத்துநகை யின் தளிருடல் நோக்கி விரைந்தான். கண்ணீர் மழை பொழிந்து கலங்கிப் புலம்பும் காரிக்கண்ணனாரின் மார்பிலே வேரிழந்த கீரைத் தண்டாய்த் துவண்டு கிடந்த அவளுடைய முகத்தருகே தன் கரத்தினை நீட்டினான்.
"கலங்க வேண்டாம், புலவரே! முத்துநகை கண்டிப்பாகப் பிழைத்துக் கொள்வாள்; கவலைப்படாதீர்கள்!" என்றவன் தமக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த வீரர்கள் மீது பார்வையை வீசினான்.
"ஏன் இப்படி வேடிக்கைப் பார்த்துக்கொண்டு நிற்கிறீர்கள்? யாராவது ஓடிப்போய் பக்கத்திலுள்ள பொய்கையிலிருந்து கொஞ்சம் நீர் கொண்டு வரக்கூடாதா?' என்று கடிந்தான்.
வில்லிலிருந்து கிளம்பிய அம்பெனப் பாய்ந்து சென்றான் வீரனொரு வன்: ஒரு சிறு கொப்பரையில் கண்ணிமைப் பொழுதிற்குள் தண்ணீரைக் கொணர்ந்திட்டான். அதனைத் தானே தன் கையினால் அள்ளி முத்துநகையின் முகத்தில் அறைந்தான் கரிகாலன்.
பனித்துளிகளைச் சுமந்தவாறே மகிழம்பூவின் இதழ்கள் விரிந்த மாதிரி நீர்த்துளிகளை ஏந்தியவாறே அவளுடைய நீல விழிகளின் இமை இதழ்களும் திறந்தன. காரிக்கண்ணனாருக்கு மட்டுமல்ல; கரிகாலனுக்கே மீண்டும் இப்போதுதான் உயிரே வந்தது. இருவரும் பெருமூச்செறிந்தனர்.
தன் தந்தையின் மார்பகத்தில் தான் சாய்ந்து கிடப்பதையும், எதிரே தன் பூங்கரத்தினைத் தாங்கியவாறே சோழப் பேரரசன் அமர்ந்திருப் பதையும், செழியன் உட்பட மற்ற வீரர்கள் முற்றுகையிட்டாற்போல் சுற்றிலும் வளைத்து நிற்பதையும் கண்டு மிரள மிரள விழித்தாள் முத்துநகை.
மெள்ள மெள்ள மயக்கத்திலிருந்து மீட்சியுற்றுத் தன்னினைவு வரப்பெற்ற அவள், தன் பவள இதழ்களை விரித்து, "மன்னவா!" என்று விளித்தாள்.
அவருடைய பகைவன் என்று அறியாமலே இருங்கோவேளிடம் தன் இதயத்தையே அடகு வைத்த தன் பேதமையின் கரகரப்புத் தாளாமல் தன்மீதே தனக்கு ஏற்பட்ட அருவருப்பினாலோ என்னவோ, அவளுடைய விழிச்சுனைகளிலிருந்து நீர்த்தாரைகள் வழிந்து அவளது மாதுளங்கனிக் கன்னங்களை ஈரப்படுத்தின, மழைச்சரங்கள் போல.
அவளுடைய அழுகையின் உட்பொருளை உணர முடியாதவனா சோழப் பெருவேந்தன்?
"நீ எதற்கம்மா கலங்குகிறாய்? ஏதோ நடந்தது நடந்து விட்டது; இனி நடக்க வேண்டியவைகள் நல்லவைகளாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றித்தான் நாம் சிந்திக்க வேண்டும். சென்றதை நினைத்தே சிந்தைகலங்குவதால் என்ன ஆகப் போகிறது?” என்று அவளது இதயச் சுமையை இறக்கிடும் வகையில் தேறுதல் மொழிந்தான், அவன்.
"என்ன இருந்தாலும் இப்படிப் படுகேவலமாக ஏமாறுவேன் ஏமாற்றப்படுவேன் என்று நான் நினைக்க வில்லை; அரசே, நினைக்கவே இல்லை!" என்று உள்ளங்கைகளைத் தொன்னையாகக் குழித்து, அவற் றில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு விசும்பி விசும்பி அழுதிட்டாள் முத்துநகை.
"நீயாவது பெண்; பேதமை என்பது பெண்ணோடு பிறந்தது என்று சொல்வார்கள். ஆனால் நானோ...? இந்தப் பரந்த சோழ மண்ணையே ஆள்கின்றவன். அகவையில் (வயதில்) மட்டுமின்றிப் பட்டறிவிலும் பழுத்தவன் என்று பெயரெடுத்தவன். நானே இந்த இருங்கோவேளிடம் ஏமாந்து விட்டேன் என்றால் நீ எந்த மூலை? வளவனாக வந்து, என் உயிரையே காப்பாற்றியவராக எப்படியெல்லாம் என்னுடைய பரிவினையும் பாசத்தினையும் அவர் பெற்றுவிட்டார்! என்ன இருப்பினும், இருங்கோவேளின் அறிவினை மெச்சிடத்தான் வேண்டும். ஆற்றலைப் போற்றிடத்தான் வேண்டும். இத்துணைத் தேர்ந்த நடிகராக அவர் திகழ்வார் என்று நான் எண்ணிடவே இல்லை. ஆனால் அந்தக் கூர்மை நாட்டின் நடப்புக்கும் மக்களின் நல்வாழ்வுக்குமே பயன்படுவதாக அமையக் கூடாதா? அரங்கத்தில் நடிப்பதோடு நில்லாமல் வாழ்க்கையில் நடித்திடவும் அது தூண்டிட வேண்டுமா? அந்த நடிப்பாற்றலும் சூழ்ச்சிக்கும் சூதுக்கும்தான் துணை போக வேண்டுமா? உண்மையைத் திரித்திடவும், பொய்ம்மையைப் பரப்பிடவுந்தான் அது உரமாக வேண்டுமா? நல்ல உள்ளங்களை யெல்லாம் கொல்லெனச் சிரிக்க வைத்து, அவர்கள் சிரிக்கும் பொழுதே குடிக்கப் போகும் பாலில் கொடிய நஞ்சினைக் கலப்பது போல அடாத செயலுக்கெல்லாம் அது இடந்தர வேண்டுமா? என்ன வேண்டு மானாலும் பேசி, எப்படி வேண்டுமானாலும் நடந்து எந்த வகையிலாவது தனக்குப் பெயர் வந்தால் போதும் என்று, தன்னுடைய பிற்போக்குத்தனத்தை நோக்கி மக்களைத் திசைதிருப்பிக் கேவலமான செல்வாக்குப் பெறும் கீழ்த்தரமான நிலைக் குத்தான் ஒருவருடைய அறிவும் ஆற்றலும் இறங்கிட வேண்டுமா? அதுவும் இடையில் வந்து வளவனாக நம்மிடம் ஒட்டிக் கொண்ட இருங்கோவேள், இப்படிக் கூட இருந்தே குழிபறிக்க முனைந்திடுவார் என்று நான் கனவுகூடக் கண்டிடவில்லை. செழியன் மட்டும் தக்க சமயத்தில் வந்து என்னை எச்சரித்திடத் தவறியிருந்தால்..." விண்ணிலே பூத்துக் கிடக்கும் மீன்களை அண்ணாந்து வேடிக்கை பார்த்தவனாக ஒரு வறண்ட சிரிப்பினை உதிர்த்தான் கரிகாலன்.
"அதற்கு மேல் சொல்ல வேண்டாம் அரசே, சொல்ல வேண்டாம். நினைத்தாலே நெஞ்சம் 'திகீர் என்கிறது! ஆனால் இத்துணை வஞ்சகமாக அவர் நடந்து கொண்டுங்கூட அந்த ஆளை இன்னும் தாங்கள் 'அவர்...அவர்' என்று மரியாதை குறையாமல் குறிப்பிடுவதுதான் எனக்கு வியப்பைக் கொடுக்கிறது..." என்று குமுறலுடன் கூறினாள் முத்துநகை.
"அதுதானே அம்மா நம்முடைய தமிழ்ப் பண்பாடு! இருங்கோவேளே. 'இந்தக் கரிகாலனுக்கு என்ன தெரியும்? இவனுக்கெல்லாம் ஆளத்தெரியுமா?' என்று எடுத்தெறிந்து ஏசியிருக்கலாம்; ஏகடியம் பேசியிருக்கலாம். ஆனால் உயிரையே குடிக்க வந்த எதிரியே ஆயினும் உரிய மரியாதை அளிப்பதுதான் இந்த மண்ணுக்கே சொந்தமான உயரிய பண்பாடு அல்லவா? அந்த பண்பாட்டிலிருந்து நம்மவர்களே சிலர் நழுவலாம்-வழுவலாம்; அதற்காக நாம் வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை. இப்பொழுதுங்கூட இருங்கோவேளின் சவ அடக்கத்தினை அரச மரியாதைகளுடன் நடத்திடத்தான் ஆணை பிறப்பிக்கப் போகிறேன். ஆனால் உன்னுடைய எதிர்காலத்தை எண்ணும் பொழுதுதான்" கரிகாலனால் அதற்கு மேல் தொடர முடியாமல் தொண்டையை அடைத்தது; கண்களும் பனித்தன.
"என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் மன்னவா! தங்களைப் போன்ற அறிவும் ஆற்றலும் நிரம்பிய - அதே சமயம் பண்பாட்டிலும் தலைசிறந்த ஒரு பேரரசரின் அன்புக்குப் பாத்திரமானதே வாழ்க்கையில் நான் அடைந்த பெரும் பேறு! தங்களுடைய உயிருக்கும் ஆட்சிக்கும் ஊறு வராமல் பணிபுரிவதைவிட எனக்கு வேறு இலட்சியம் குறிக்கோள் -இன்பம் என்ன இருக்கிறது? என்றாலும், மூளையோடு முன்னேற வேண்டியவர்கள் மூட நம்பிக்கைகளுக்குப் பலியாவதைப் போலக் கடமையாற்றிடப் புறப்பட்டுச் சென்ற நான், உடல் உணர்ச்சிகளுக்கு அடிமையாகலாமா? ஆணுடை அணிந்து தாமரையை ஏமாற்றி னேன். அதற்குத்தான் அவளுடைய அண்ணன் 'வீரபாண்டி யாக வந்து என்னைப் பழிவாங்கி விட்டார்!"
முத்துநகை இவ்வாறு பகர்ந்ததும் "அரசே! இருங்கோவேள் இறந்த செய்தியை உடனே நாம் தாமரைக்கு தெரிவிக்க வேண்டும் அல்லவா?” என்று கேட்டான் செழியன்.
"ஆமாம், தெரிவிக்கத்தான் வேண்டும். ஆனால் இந்த நள்ளிரவில் உறங்கிக் கொண்டு இருப்பவளை எழுப்பி இந்தச் செய்தியைச் சொன்னால், அவள் அதிர்ச்சியடைந்து அந்த அதிர்ச்சியிலேயே..." என்று தயங்கினான் கரிகாலன்.
"தாங்கள் நினைப்பதும் சரிதான் அரசே! அவளுடைய அண்ணி இறந்து சில நாட்கள் கூட ஆகவில்லை. அந்த ஆற்றொணாத்துயரமே அவளை வாட்டிக் கொண்டிருக்கும் பொழுது அண்ணனும் இறந்து விட்டான் என்றால் அவளால் எப்படித்தான் தாங்கிட இயலும் அந்த அதிர்ச்சியினை! தன்னுடைய குலமே இப்படிப் பூண்டோடு அழிந்து விட்டதே என்கிற ஏக்கமே அவளுடைய உயிரைக் குடித்து விடாதா? ஆகவே, படிப்படியாக மெள்ள மெள்ள இந்தச் செய்தி அவள் செவியில் விழுமாறு செய்வதுதான் நல்லது. அத்துடன் இந்த நள்ளிரவில் போர் அறத்திற்குப் புறம்பான முறையில் தன் அண்ணனைக் கொன்று விட்டார்களோ என்று தவறாகவும் தங்களைப்பற்றி அவள் எண்ணிடக்கூடும். மேலும், துயிலில் ஆழ்ந்திருக்கும் புகார் நகரத்து மக்கள், திடுக்கிட்டெழுந்து இங்கே திரண்டோடி வருவதால் என்ன நன்மை ஏற்படப் போகிறது. எனவே, விடிவதற்குள் இருங்கோவேளின் இறப்புச் செய்தியைப் பரப்பி விடாமல் இருப்பதே நல்லதென்று படுகிறது" என்றார் மூன்றாவது யவனக் கிழவர்.
அவரது கூற்றும் சரியென்றே பட்டது கரிகாலனுக்கு.
"ஆமாம். செழியா! பொழுது புலர்ந்ததும் நானே தாமரையிடம் சென்று நயமான முறையில் அவள் இடிந்து போகா வண்ணம் செய்தியை எடுத்துச் சொல்லித் தேற்றி இங்கே அழைத்து வருகிறேன். நீ இப்பொழுதே அரண்மனைக்குச் சென்று மெய்க்காவலரைக் கலந்து கொண்டு, இருங்கோவேளின் இறுதிக் கடனுக்கான ஏற்பாடுகளைக் கவனி. முத்துநகையையும் உடன் அழைத்துச் செல். சோர்ந்து போயிருக்கின்ற அவள் சிறிது ஓய்வெடுத்துக் கொள்ளட்டும். பனியும் கடுமையாகப் பெய்கிறது. நானும் காரிக்கண்ணனாருடன் சற்றுத் தனியே உரையாட வேண்டியிருக்கிறது" என்றான் கரிகாலன்.
செழியன் தான் ஏறிவந்த குதிரையுடன் அரண்மனை நோக்கி நடந்தான். முத்துநகையும் துயரத்தின் மொத்த வடிவமாகத் துவளும் கால்களுடன் தளர் நடைபோட்டாள்.