ரோமாபுரிப் பாண்டியன்/31. இளம்பெருவழுதி
31
இளம்பெருவழுதி
கரிகாலன் வீரன் ஒருவனை அழைத்து, "அந்த மண்டபத்தின் பக்கம் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு ஒரு சிறு தீவட்டியையும் நட்டு வைத்து விட்டு வா", என்று கட்டளையிட்டான்.
அவன் போய் மண்டபத்தைச் சுற்றிலும், உள்ளேயும் தன் கூரிய கண்களால் புலனாய்வு புரிந்துவிட்டு "யாருமே இல்லை" என்று கூறினான்.
பின்னர் கரிகாலன் அந்த மண்டபத்தை நோக்கி அடிகளை எடுத்து வைத்தான். காரிக்கண்ணனாரும், மூன்றாவது யவனக்கிழவரும் அவனைப் பின்தொடர்ந்து சென்றனர்.
புகார் நகரத்தில் எங்கோ ஒரு தெருக்கோடியில் படுத்துக்கொண்டு இருங்கோவேளின் சாவுக்கு இரங்கல் தெரிவிப்பதைப் போல நாய் ஒன்று ஊளையிட்டு அழுதது.
பொழுது விடிவதற்கு நெடுநேரம் இருப்பது புரியாமலே அவசரக்காரச் சேவல் ஒன்று நீட்டி முழக்கிக் கூவியது. மண்டபத்தை அடுத்த மரங்களின் இலைகள், காற்றின் வலிமையான தழுவலைத் தாங்க முடியாமல் சரசரவென்று முனகித்திணறின. மற்றபடி, எந்தவகையான ஓசைகளின் ஆர்ப்பரிப்பும், இல்லாமல் எங்குமே ஒரே அமைதி! அமைதி!
மண்டபத்தில் அமர்ந்து, கீழே வாசலில் எரிந்து கொண்டிருந்த தீவட்டியின் ஒளிக்கற்றையின் மீதே சிறிது நேரம் தன் விழிகளைப் பதித்திருந்த கரிகாலன் தொண்டையைக் கனைத்து அமைதியைக் கலைத்தான்.
"என்ன புலவர் அவர்களே? தங்களை எதற்காக இங்கே தனியே பேசுவதற்கென்று அழைத்து வந்திருக்கிறேன் தெரியுமா?" என்று வினவினான்.
"ஓ! நன்றாகத் தெரியுமே! இந்த யவனக் கிழவரைப் பற்றிப் பின்னால் விளக்குவதாகச் சொன்னேன்; இவரைப் பற்றி அறிந்து கொள்ளத்தான் இங்கே அழைத்து வந்திருக்கிறீர்கள்."
"ஆமாம் இவராவது கிரேக்க நாட்டையோ, ரோமாபுரியையோ சார்ந்த உண்மையான யவனக்கிழவரா? அல்லது தமிழ்நாட்டவர் தானா?" வேடிக்கையாகக் கேட்டான் கரிகாலன்.
"இவரும் தமிழ்நாட்டவர்தான்!" என்றார் காரிக்கண்ணனார்.
"பரவாயில்லையே! நம் நாட்டில் இப்போது நடந்து காட்டுகின்றவர்களைவிட நடித்துக் காட்டுகிறவர்களுக்குத் தான் பஞ்சமே இல்லை என்று தெரிகிறது. ஆமாம். இவரும் இருங்கோவேளைப் போலவே ஆட்சியைப் பிடிக்கத்தான் இப்படி வேடம் போடுகிறாரா?"
"இல்லை அரசே! ஓர் அணங்கின் கையைப் பிடிக்கத்தான் இந்த யவனக்கிழவர் வேடம்!"
"பலே பலே! அப்படி யார் இந்தக் கிழவரிடம் மயங்கிய கிள்ளை? ஒரு வேளை அவளுக்கும் இவரைப் போல் அறுபது வயதிற்குக் குறையாமல் இருக்குமோ?" என்று கேட்டுவிட்டு இடியென நகைக்க லானான் கரிகாலன்.
"உண்மையில் இவர் கிழவர் இல்லை மன்னவா! இளைஞர்தான்!"
"ஆம்! அரசே! இனிமேல் தங்களிடம் எதற்குத்தான் மறைக்க வேண்டும்?" என்றவாறே அந்த மூன்றாவது யவனக் கிழவர், மேலே உடுத்தியிருக்கிற பெரிய அங்கியையும் தலையை மூடியிருந்த போலி முடியையும் களைந்தார்.
பார்த்தால் அசல் இளைஞர். களையொழுகும் முகம். எந்த நாட்டுக் கேனும் இளவரசராகத்தான் இருக்க வேண்டும் என்று திடமாகப்பட்டது கரிகாலனுக்கு! சற்றுத் திகைப்புற்றவனாக அந்தப் புதிய ஆணழகனையே வைத்த விழியினை எடுக்காமல், மேலும் கீழுமாக ஆளையே அளந்து விடுவது போல் நோக்கினான் அவன்.
"நான் சிறையிலிருந்தவாறே ஓலைச்சுவடியில் செழியன் மூலமாக எழுதி அனுப்பிய அந்தப் பாடல் தங்கள் நினைவில் இருக்கிறதா அரசே?" என்று கரிகாலனின் சிந்தனையைக் கலைத்தார் காரிக்கண்ணனார்.
"ஓ நன்றாக நினைவில் வைத்திருக்கிறேனே! 'ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த...' என்று தொடங்கும் அந்த இலக்கிய மலரின் இனிய மணத்தினை என்னால் எங்ஙனம் மறக்க இயலும்? பலாச் சுளையினும் மேலாக இனித்த அந்தப் பாடல் வரிகள் பசுமரத்தாணிபோல் என் நெஞ்சிலே நன்றாகப் பதிந்துதான் இருக்கின்றன. அவற்றைப் படித்ததாலும், கடியலூர் உருத்திரங்கண்ணனார் எடுத்துச் சொன்னதனா லுந்தானே தங்களைப் பற்றிய ஐயப்பாடு என்னைவிட்டு அகன்றது! அதன் பின்னர்தானே, தங்களுக்கு நான் இழைத்துவிட்ட பிழையினை உணர்ந்து வருந்திச் சிறையினின்று தங்களை விடுதலை செய்யுமாறு உடனே ஆணை பிறப்பித்தேன்!"
"அந்தப் பாடலில் வேந்தர் குலத்தில் பிறந்த காளையொருவனைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன் அல்லவா?"
"ஆமாம்...
"அந்தக் காளை யாராக இருக்கும் என்று தாங்கள் எப்பொழுதாவது தங்கள் கற்பனையைப் படர விட்டதுண்டா?"
"அவற்றுக்கெல்லாம் எனக்கு நேரம் ஏது புலவரே? ஆனால் ஒரு வேளை செழியனாக இருக்கக் கூடுமோ என்று முதலில் நான் எண்ணிய துண்டு. அடுத்த கணமே 'அவன் சாதாரண மறவன்தானே! மன்னர் குலத்தில் பிறந்தவனாகத் தெரியவில்லையே! ஆகவே அவனாக இருக்க மாட்டான்'- என்ற எண்ணமும் எனக்கு உண்டாயிற்று."
"நான் குறிப்பிட்டிருந்த அந்தக் காளை இந்த இளைஞர்தான்!"
"அப்படியா? வியப்பாக இருக்கிறதே! ஆமாம். இவர் எந்த நாட்டின் இளவரசர்?"
"இவருடைய முகச்சாயலைக் கொண்டே இவர் எந்த நாடாக இருக்குமென்று கண்டுபிடிக்க முடியவில்லையா?"
"முகச்சாயலைப் பார்த்தால் சேர மன்னரின் மகனாகவும் இவர் தெரியவில்லை... பெருவழுதிப் பாண்டியரின் பிள்ளையாகவும் இவர் தோன்றவில்லை.."
"அப்படியானால் தாங்கள் தோற்றுவிட்டீர்கள்?' என்று சிரிக்க லானார் காரிக்கண்ணனார்.
"தாங்கள் என்ன சொல்கிறீர்கள்!"
"இவர் வேறு யாருமல்ல; நம்முடைய பெருவழுதி பாண்டியரின் பிள்ளையே தான் இவர்!"
"அப்படியா?.... ஆனால் முகச்சாயல் பெருவழுதிப் பாண்டியரை அவ்வளவு ஒத்திருப்பதாகச் சொல்ல முடியவில்லையே!"
"தந்தையின் சாயல்தான் தனயனுக்கு அமைய வேண்டும் என்பது என்ன நியதி? தாயின் சாயலையும் ஒத்திருக்கலாம் அல்லவா?"
"இருக்கலாம். இருக்கலாம். ஆமாம்! இவர் ஏன் நம்முடைய நட்புறவு விழாவின்போது தம் தந்தையுடன் வரவில்லை?"
"பாண்டியர்களின் மரபுப்படிப் பிற்காலத்தில் அரசராக அரியணை ஏற உரிமை பெற்றவர்கள், கொற்கைப் பட்டினத்தில் இளவரசராகப் பட்டஞ் சூட்டப்பெற்று அங்கேயே தங்கி ஆட்சித்துறைப் பயிற்சி பெற் றாக வேண்டும். அந்த மரபின்படியே தற்பொழுது கொற்கையில் தங்கியுள்ளார் நம் இளவரசர். நாம் திடீரென்று விழாவுக்கு ஏற்பாடு செய்து விட்டப்படியால் இவரால் குறித்த காலத்தில் வந்து சேர இயல வில்லையாம்!"
"ஓ!இப்பொழுதுதான் பெருவழுதிப் பாண்டியர் இவரைப் பற்றிச் சொன்னவையெல்லாம் நினைவிற்கு வருகின்றன" என்ற கரிகாலன் இளைஞரை நோக்கி.
"உங்கள் பெயர் இளம்பெருவழுதிதானே?" என்று கேட்டான் நேரடியாக.
"ஆம், அரசே!" என்று பணிவுடன் பகர்ந்து முறுவலித்தான் இளம்பெருவழுதி.
"நீங்கள் ஓர் இயற்கைப் பாவாணராமே! சிறு பிள்ளையாக இருந்தபொழுது அருமையாகப் பாடல்கள் புனையத் தொடங்கி விட்டீர்களாமே?"
"ஆம் அரசே! இவரது பாக்கள் கற்பனைப் பூக்காடு மட்டுமல்ல; கருத்துப் புதையலும்கூட! இவருடைய உணர்ச்சிக் கடலான பாடல்களில் என் உள்ளத்தைப் பறிகொடுத்துத்தான் இவர்தம் நட்பினை நான் வலிந்து பெற்றேன்" என்றார் காரிக்கண்ணனார்.
"அப்படியானால் தமிழ்ப் புலமைதான் உங்கள் இருவரையும் இணைத்து வைத்த உறுதியான பாலம் என்று சொல்லுங்கள்!"
"அதிலே ஐயப்பாடு என்ன மன்னவா? அந்த நட்பின் ஆழத்தை ஆதாரமாகக் கொண்டே என் எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ள நான் துணிந்து முற்பட்டேன். என்னால் இந்தப் புலவர் பெருந்தகை அடைய நேர்ந்த எல்லையற்ற தொல்லைகளெல்லாம் தங்களுக்கே தெரிந்தவைதான். "நான் புரிந்த ஒரு சிறு தவற்றினால் - என் இடுப்பில் செருகியிருந்த 'இருங்கோவேள்' எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பதக்கம் இவர் வீட்டிலே தவறி விழுந்துவிட - அதனால் இவர் மகளே இவரை ஐயமுற்றுத் தங்களின் துரோகியாகவே கருதிச் செயல்படுகின்ற கொடிய நிலையும் உருவாயிற்று" என்றான் இளம்பெருவழுதி.
"ஆமாம்; அந்த இருங்கோவேள் பதக்கம் உங்களுக்கு எப்படித்தான் கிட்டியது?"
"அதுவா.. அதனைத் தாமரைதான் என்னிடம் தந்தாள்!"
"என்ன! தாமரை உங்களிடம் தந்தாளா? அவளை எங்கே சந்தித்தீர்கள்!"
சற்று உரத்த குரலிலேயே திகைப்புடன் கேட்டான் கரிகாலன்.
“அது பெரிய கதை மன்னவா, பெரிய கதை! தங்களுடைய நேரத்தைப் பாழடிக்கக் கூடாதே என்று நினைக்கிறேன். தாங்கள் மட்டும் சற்றுப் பொறுமையோடு செவிமடுப்பதானால் விடிவதற்குள்ளே சுருக்கமாகச் சொல்லிவிடுவேன். என்னுடைய கதை தங்களுக்கும் தெரிந்திருக்க வேண்டியதுதான். ஏனெனில் என்னுடைய எதிர்கால வாழ்வே, தங்களின் ஆதரவைக் கொண்டுதான் அமையப் போகிறது. சொல்லட்டுமா?" என்று இறங்கிய குரலில் வேண்டினான் இளம்பெருவழுதி.
"சரி! சொல்லுங்கள் கேட்போம்" என்று தம் செவி மடலைத் தீட்டிக் கொண்டான் கரிகாலன்.
இளம்பெருவழுதி மொழிந்த அந்த இனிய கதைப் பெட்டகம் என்ன தெரியுமா?
அன்று கொற்கைப் பட்டினத்திலே கோலாகலமான முத்துக் குளிப்பு விழா!
பொய்கை நீரிலே தலை நீட்டி எட்டிப் பார்த்திடும் தாமரை மொட்டுக்கள் மட்டுமல்ல. மனிதப் பிறவிகளின் இதயத் தாமரையும் எழுச்சிபெற்றுச் சிரித்திடும் வண்ணம் - உதய சூரியனின் ஒளிக்கதிர்கள் உலகைத் தழுவிட வரும் இளங்காலை-இனிமையான வேளை!
துறைமுகப் பகுதியில் வழக்கமான ஏற்றுமதி - இறக்குமதிகளின் இரைச்சலோ, பரபரப்போ எதுவும் இல்லை. மாறாக, மரக்கலங்கள் யாவும் மலர்ச்சரங்கள் சூடி, 'நாங்கள்தான் நாள்தோறும் இந்த நீலக்கடலின் நீளத்தை அளக்கிறோம்! இன்று ஒரு நாள் இந்த மனிதர்கள் அதன் ஆழத்தை அளக்கட்டுமே!' என்று ஏளனம் புரிவது போல் அசைவற்று நின்றிருந்தன.
அவற்றில் அடுக்கடுக்காகக் குடியேறியிருக்க வேண்டிய முத்துப் பரல்கள், முறுகிய சங்குகள், பவள மணிகள், பட்டுத்துணிகள், மயிலின் தோகைகள், ஏலம்-கிராம்புகள், தங்கம், தந்தம், அரிசி, சந்தனம் முதலான பொருள்களின் மூட்டைகள் எல்லாம் வறியவர்கள் வாழும் சிறிய குடிசைகள் போல் அங்கங்கே தேங்கிக் கிடந்தன.
முத்துக் குளிப்பு விழாவினைத் தாங்களும் கண்டு களித்திட வேண்டுமென்னும் கரை கடந்த ஆசையினால், யவனரும் பிறரும் விழா நடக்கும் இடம் நோக்கி விரைந்தோடி விட்டதாலேயே அந்தப் பொருள்கள் அவ்வாறு தேக்கமுற்றுக் கிடந்திட நேர்ந்தது.
இளவரசன் இளம்பெருவழுதியும் விடியற்காலையிலேயே விழித்தெழுந்து விட்டான். பன்னீர்ப் பூ மணம் கமழும் வெந்நீரில் குளித்துவிட்டுப் புத்தாடை பூண்டு புறப்படுவதற்கு ஆயத்தமானான் - கடற் கரையினை நோக்கி.
பாவையரின் பல்வரிசையோ, சுரைக்காய் விதைகளின் தோரணமோ எனச் சொல்லிடத்தக்க வகையிலே, முத்துச் சரங்களால் அலங்கரிக்கப்பட்ட தேர் ஒன்று, புரவிகள் பூட்டப்பெற்று, அரண்மனை வாயிலில் அவனுக்காகக் காத்திருந்தது. அந்த அழகிய தேரினில் ஏறி நின்று மிடுக்கான தோற்றப் பொலிவோடு அதனை அவன் ஓட்டிச் சென்ற காட்சி, காண்போரையெல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்திலே மிதக்கவிட்டது. இளம்பெருவழுதியின் எழில் குலுங்கிடும் தேரினைக் கண்டதும் அவர்கள் வழிவிட்டு, "இளவரசர் வாழ்க! வாழ்க!" என்று வாழ்த்து மழையும் பொழிந்தனர்.
பொதிகையிலே பிறந்து பொங்கிப் புரண்டால் என்ன? ஆழிக்கணவனிடம் அடைக்கலம் ஆவதை விடச் சாலச் சிறந்த தனி இன்பம் ஏது?' என்று தவழ்ந்தோடி வந்து, தன் சுழி முகத்திலே, கொற்கை நகருக்கும் வளத்தைக் கொடுப்பதல்லவா பொருநையாறு!
அதன் பக்கமாக இளம்பெருவழுதி தன் தேரினைச் செலுத்தினான். அங்கே அவ்வளவாகக் கூட்டம் இல்லை. ஒரு திருப்பத்தில் வளைந்து நெடுஞ்சாலையை விட்டுப் புரவிகள் கீழே இறங்கிக் கடலினை நோக்கி நடந்த பொழுது தன் கண்களைத் தானே நம்பமுடியாமல் அவற்றை நன்றாக கசக்கி விட்டுக் கொண்டு பார்த்தான் இளம்பெருவழுதி. தழைத்துப் படர்ந்து கிடந்த ஒரு தாழம்புதர் அருகே தனித்து நடந்து கொண்டிருந்தாள் ஒரு தாழம்பூ மேனியாள்! தழையத் தழைய வெண் துகில் உடுத்தியிருந்த அவளுடைய மென்மையான அடிகள் பஞ்சுப் பொதியாய்ப் பரந்து கிடந்த மணல்வெளியில் மிதந்தும், புதைந்தும், மிஞ்சியும், கெஞ்சியும் அன்ன நடைபயின்றன.
'தங்கச் சிலையோ? தங்கக் கடைசலோ?' என்னும்படியான அவளது உருவத் தளதளப்பு, ஒடுங்கிய இடை, ஒயிலான நடை - எல்லாம் கூடி இளம்பெருவழுதியின் உள்ளத்திலே கதகதப்பை ஊட்டின; காமக் கனலை மூட்டின!
ஆம், அவளுடைய பின்புற அழகிலேயே அவன் தன்னை மறந்தான்.
அவள் முழுமையாகத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. தலையினைச் சற்றே சாய்த்துத்தான் நடந்தாள். அந்தச் சாயலிலேயே அவளுடைய கதுப்புக் கன்னங்களின் மிதப்புத் தெரிந்தது. அவன் அதன் மாதுளங்கனி மெருகிலே தன் மதியினை இழந்தான். விழாவினைத் தாம்தான் தொடங்கி வைத்திட வேண்டும் என்னும் நினைப்பையும் இழந்தான். தேரைவிட்டுக் கீழே இறங்கி அவள் செல்லும் திசையையே பார்த்த வண்ணம் கல்லாகவே சமைந்துவிட்டான் அவன்!
பின்னால் சற்றுத் தள்ளியே குதிரைமீது மெள்ள வந்து கொண்டிருந்த மெய்க்காவலன், தேர் நின்றதைக் கண்டதும் திடுக்கிட்டான். கடையாணி தான் கழன்றுவிட்டதோ. அச்சுத்தான் முறிந்துவிட்டதோ என்னும் கவலையுண்டாகி விட்டது. ஆனால் அருகில் நெருங்கி வந்ததும் தொலைவில் அசைந்து செல்லும் தோகையொருத்தியினால் இளவரசனின் சிந்தனைதான் கழன்றிருக்கிறது என்பதனை முழுதும் புரிந்து கொண்டான்.
அதனைக் காட்டிக் கொள்ளாமல், “ஏன் இளவரசே, இறங்கி விட்டீர்கள்? தேருக்கு ஏதாவது...?" என்று திகைத்தாற்போல் கேட்டான்.
"என் தேருக்கு எதுவுமில்லை. ஆனால் அந்த அழகுத் தேர்!"
"ஓ! அதுதானே? விரைவிலேயே யார் என்று தெரிந்து வந்து சொல்லிவிடுகிறேன். ஆனால் நாம் இப்போது உடனே விழா நடக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும். எல்லாரும் தங்கள் வருகைக்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள்."
...ம் சரி..." என்று தயங்கியவாறே இளம்பெருவழுதி தேரிலே ஏறினான். புரவிகளை மிக விரைவாக முடுக்கி விட்டான்.
அவன் கண்கள் மட்டும் தாழம்புதருக்கு அப்பால் ஆற்றுப்படுகையில் இறங்கி மறைந்துவிட்ட அந்த அணங்கு சென்ற திக்கையே துழாவித் துழாவி அலைந்தன.
தனக்கு ஆட்சித்துறைப் பயிற்சியளிக்கும் ஆய்வுரையாளர் (ஆலோசகர்) நிலையிலுள்ள அறவாணர், கடற்கன்னிக்கு முறைப்படி வணக்கஞ் செலுத்திவிட்டு வலம்புரிச் சங்கினை எடுத்துத் தன்னிடம் வழங்கியதும் அதனை மூச்சைப் பிடித்துக் கொண்டு ஊதி முழக்கம் எழுப்பினான் இளம்பெருவழுதி.
உடனே, தமக்குரிய தற்காப்பு உடைகளோடும் கருவிகளோடும் அலைகள் முத்தமிடும் கரையோரத்தில் வரிசையாக நின்றிருந்த மீனவக் காளைகள் தத்தம் கட்டுமரங்களைத் தள்ளியவாறே கடலினுள் பாய்ந்தனர்.
குழுமி நின்ற பொதுமக்கள் கையொலி எழுப்பி ஆர்ப்பரித்து, முத்துக்குளிக்கச் செல்வோருக்கு உற்சாகம் ஊட்டினர்.
சங்கினை ஊதி விழாவினைத் தொடங்கி வைத்திட்ட இளம்பெருவழுதியோ மக்களின் களியாட்ட ஆரவாரங்களில் கருத்தினைச் செலுத்திடவில்லை. சிறிது நாழிகைக்கு முன், தான் கண்ட சேயிழையின் பேரழகு தந்த பெருமயக்கத்திலேயே தன் எண்ணங்கள் யாவும் பின்னிட நின்றிட்டான். தன் கரத்திலிருக்கும் வாழை மடலின் வழுவழுப்போடு கூடிய வலம்புரிச் சங்கினைக் காணக்காண அந்த அணங்கு நல்லாளின் அழகுக் கழுத்தே நினைவினில் வந்து அலைகளை எழுப்பியது. ஆனால் அந்தச் சங்கின் அகண்ட வாயை நோக்கிய அவன், 'அவளுடைய வாயும் இப்படித்தான் நீளமாக இருக்குமோ?' என்று எண்ணிய உடனே தனக்குள் தானே சிரிக்காமல் இருக்க அவனால் முடியவில்லை.
அருகில் நின்ற மெய்க்காவலனை நோக்கி, "ஆமாம்! இன்னும் நீ புறப்படவில்லையா?" என்று மெல்லக் கேட்டான். முதலில் ஒன்றும் விளங்கிடாமல் விழித்த அவன் பின்னர் புரிந்து கொண்டவனாக, "ஓ! அதற்கா? ஆனால் தங்களை அரண்மனைவரை திரும்பக் கொண்டு போய்ச் சேர்க்காமல் கிளம்பினால் அறவாணர் என்னைச் சும்மா விடமாட்டாரே?" அவன் தலையினைச் சொரிந்து நின்றான்.
"அவரிடம் நான் சொல்லிக் கொள்கிறேன்; நீ உடனே புறப்படு."
"அப்படியானால் சரி..." என்று குறும்பாக நகைத்தவாறே தன் குதிரையைத் தட்டிவிட்டான் மெய்க்காவலன்.
அந்த ஆரணங்கு தன் கண்ணில் படமாட்டாளா என்று ஒருமுறை விழிகளை எங்கணும் சுழல விட்டுவிட்டு இளம்பெருவழுதியும் தன் தேரினில் ஏறிக்கொண்டு அரண்மனைக்குத் திரும்ப முற்பட்டான்.
இன்று அங்காடிகளில் வகை வகையான அணிமணிகளெல்லாம் ஏராளமாகக் குவிந்து ஒரே திருவிழாக் கோலமாக இருக்குமே! அவற்றையும் பார்த்துக் கொண்டே சென்றால் என்ன?' என்று ஆசையெழுந்து விட்டது அவனுக்கு. உடனே அந்தப்பக்கமாகத் தன் தேரினைத் திருப்பினான் அவன்.
ஓர் அங்காடியில், 'முத்துக் கடுக்கண்', 'முத்துக்கண்டி' 'முத்துச் சல்லி' முதலான அணிகள் பல தொங்கியது, விழிகளைப் பறித்தன.
அடுத்த அங்காடியில் கன்னியர்களின் கலீர்ச்சிரிப்பு, எதிரொலி எழுப்பிக் கொண்டிருந்தது. அந்த வணிகன் நகைச்சுவையாகப் பேசுவதில் நன்கு தேர்ந்தவன் போலும்! குழலில் அணியக்கூடிய 'முத்துக் கொண்டை' யைக் கையிலே வைத்துக் கொண்டு ஏதோ விலையினைக் கூறியவாறிருந்தான் வேடிக்கையாக.
அதற்கு எதிர்த்தாற்போலுள்ள இன்னொரு அங்காடியில் முதியவன் ஒருவன் மருந்தாகப் பயன்படக்கூடிய 'முத்துக் கற்கம்' 'முத்துச் சுண்ணம்' முதலானவற்றை விற்றுக் கொண்டிருந்தான். மணப்பந்தலில் தூவக்கூடிய 'முத்து மண'லும் அவனிடம் இருந்தது.
சிறிது தூரத்தில் கட்டுடல் அமைந்த காளையொருவன் சங்குப் பொருள்களாகப் பரப்பி வைத்தவாறு ஏதேதோ கதைகள் அளந்து கூட்டத்தைக் கூட்டிக் கொண்டிருந்தான். அவன் கூறினான்;
"இதோ, இது ஆயிரம் சிப்பி சூழ்ந்த இடம்புரிச்சங்கு! சாதாரணம தானதுதான்! கழஞ்சுகள் நிறைய இல்லாதவர்கள் இதை வாங்கிக்கொள்ளலாம். ஆனால்... இதோ, இது ஆயிரம் இடம்புரிச் சூழ்ந்த வலம்புரிச் சங்கு! இதை வைத்திருப்பவர்களுக்கு செல்வங்களெல்லாம் தானாக வந்து குவியும்! வாங்கத் தவறி விடாதீர்கள்! வாய்ப்பினை இழந்து விடாதீர்கள்!"
அந்தக் காளையின் அங்காடிக்கு எதிர்த்தாற்போல் ஒரு நடுத்தர வயதினன் 'இதோ, இந்தச் 'சலஞ்சலச் சங்கு வலம்புரியைவிட உயர்ந்தது; ஆயிரம் வலம்புரி சூழ்ந்ததுதான் சலஞ்சம்! இதோ! இது இதைவிட உயர்ந்தது.பாஞ்சசன்னியம்!" என்றெல்லாம் உரக்கக் கூவினான்.
அவன் அத்துடன் நிறுத்தவில்லை. "இதோ, இந்தச் சங்கு என்ன தெரியுமா? வடபுலத்தில் உள்ள சாஞ்சியிலே அசோக மன்னர் அழகான பெருந்தூபியை எழுப்பியிருக்கிறார் இல்லையா? அதிலுள்ள சங்குச் சிற்பங்களெல்லாம் இந்தச் சங்கைப் பார்த்துத்தான் செதுக்கப்பட்டன!" - இதைக் கேட்டதும் இளம்பெருவழுதியால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
"அசோகன் காலம் எங்கே? இங்கே நிற்கும் இவனுடைய காலம் எங்கே? அந்தச் சங்காகவே இருந்தாலும் அதனைக் கருத்தோடு பாதுகாத்திருக்க மாட்டார்களா? இத்தனை ஆண்டுகள் கழித்து இவ்வளவு பளபளப்போடா இவன் கைக்கு அது எளிதில் கிட்டியிருக்க முடியும். ம் வணிகம் என்றாலே பொய்ம்மைகளின் புதையல்தான் போலும்" என்று எண்ணியவாறே தன் தேரினை நகர்த்தினான்.
சிறிது தூரத்தில், கிழவியொருத்தி, 'முத்துக் கொம்பன்' என்னும் மீன்களையும் வேறு பல கயல்களையும் விரிவாகப் பரப்பி விலைகளைக் கூவினாள்.
பிறிதோர் அங்காடியில், ஓரங்களில் முத்துமணிகள் மினுமினுக்கும், மேலே போட்டுக் கொள்ளக்கூடிய முத்துத் தரயங்களும், முத்து வண்ணச் சேலைகளும் பளபளவென்று பார்வையை ஈர்த்தன.
சற்றுத் தொலைவில் நிழற்பந்தர் விரித்து நின்றது ஒரு பசுமையான வன்னிமரம். அதன் கிளையிலமர்ந்திருந்த குரங்கு ஒன்று தன் குட்டியை மடியிலே போட்டுக் கொண்டு முத்துக்கள் உள்ளே செலுத்தப்பட்ட கிளிஞ்சல்களை ஆட்டி வேடிக்கை காட்டியது. அந்த அழகிய கிலுகிலுப்பையைக் கொண்டு குழந்தையின் அழுகையை நிறுத்த முயன்ற குரங்கின் 'கூர்மையைக்' கண்டு வியந்து களிப்புற்றான் இளம்பெருவழுதி.
ஆனால்.... அடுத்த கணமே, களிப்புத் தவழ்ந்த அவனது பரந்த முகத்திலே கனல் தெறிக்கலாயிற்று. ஏனெனில், வன்னிமரத்திற்கு எதிர்த்தாற்போல் இருந்த அங்காடியின் முகப்பிலே தொங்கிய பெயர்ப் பலகையில் தமிழ் இல்லை; ஆம். தமிழ் எழுத்துக்கள் இல்லை! அதனைக் கண்டதுமே அவனுடைய குருதி கொதித்தது! தன்மான உணர்வு கொழுந்து விட்டு எரிந்தது!
எனினும் தன் ஆத்திரத்தையெல்லாம் பொறுப்புணர்வோடு அடக்கியவனாக, எதிரே வந்து கொண்டிருந்த காவல் மறவனைக் கையசைத்து அழைத்தான். அவனிடம், "உடனே அந்தப் பெயர்ப் பலகையை அகற்றிடவேண்டும் என்று அந்த அங்காடிக்காரனிடம் சொல்!" என்று ஆணை பிறப்பித்து விட்டுத் தன் தேரினை மிகக் கடிதாக அரண்மனையை நோக்கிச் செலுத்தினான்.
காலையில் கடற்கரையோரமாகத் தான் கண்ட காரிகையைப் பற்றிய கற்பனைகளெல்லாம் இப்பொழுது இளம்பெருவழுதியிடம் அறவே இல்லை. அவனுக்கு உறங்கவும் தோன்றவில்லை; உட்காரவும் முடியவில்லை. இருப்புக் கொள்ளாமல் அவன் அங்குமிங்கும் உலவிய வண்ணமே இருந்தான்.
அவனுடைய நினைவுகள் அனைத்தும் 'மாகதி மொழி'யில் வரையப்பட்டிருந்த பெயர்ப் பலகையையும், அதனைத் துணிச்சலோடு மாட்டி வைத்திருந்த அங்காடிக்காரனையுமே சுற்றிச் சுற்றிச் சுழன்றன.
ஆய்வுரையாளராகிய அறவாணர் வயதிலே முதிர்ந்தவர். நண்பகல் உணவு அருந்தியதும், சில நொடிகளாவது உடலைக் கீழே கிடத்தி அறிதுயிலில் ஆழ்ந்திருப்பது அவர் வழக்கம். அது இளம்பெருவழுதிக்கும் தெரியும்.
என்றாலும் தனக்கு ஏற்பட்டுவிட்ட நெஞ்சக் கொந்தளிப்பில், அவர் ஓய்வெடுக்கட்டுமே என்று விடுவதற்குக் கூட அவனுக்குப் பொறுமை இல்லை. காவலன் ஒருவனை அனுப்பி அவரை உடனே அழைத்து வருமாறு செய்து விட்டான்.
அவர் வந்து சேர்ந்ததும், அவருக்குரிய மரியாதையோடு வரவேற்று இருக்கையிலே அமரச் சொன்ன இளம்பெருவழுதி, "என்ன அறவாணர் அவர்களே! நம்முடைய கொற்கை மண்டலத்திலே ஒரு விந்தையான ஊடுருவல் நடந்திருக்கிறதே, தெரியுமா?" என்று கேட்டான்.
"ஊடுருவலா? என்ன ஊடுருவல்? எனக்குத் தெரியவே தெரியாதே." என்று பதற்றத்துடன் பகர்ந்தார் அறவாணர்.
அது படை ஊடுருவலாக இருந்தாலும் பரவாயில்லை. நம் கட்புலனுக்கு அது தெளிவாகத் தெரியும். நாமும் படைகளைத் திரட்டி நேருக்கு நேர் பொருதலாம். புறமுதுகிட்டு ஓடச் செய்யலாம். அல்லது நாமே விழுப்புண்பட்டு வெஞ்சமர்க் களத்திலேயே வீழ்ந்து மடியலாம். ஆனால் இந்த ஊடுருவல் வேறு வகையானது."
"அது என்ன ஊடுருவல், இளவரசே? சற்று விளக்கமாகத்தான் சொல்லுங்களேன்."
"இது மொழி ஊடுருவல்!"
"அப்படியா? அது நிரம்ப நிரம்பப் பொல்லாததாயிற்றே! முளையிலேயே கிள்ளி எறியவேண்டியதாயிற்றே! கொஞ்சம் வளரவிட்டாலும் நாட்டின் எல்லாத் துறைகளிலுமே அது நஞ்சினைக் கலந்து விடுமே! நாளாவட்டத்தில் நம் செந்தமிழையே சிதறிடச் செய்திடுமே! நம் வருங்கால வழித்தோன்றல்களையும் வழிமாற வைத்திடுமே!"
அறவாணர் இவ்வாறு உணர்ச்சிப் பெருக்கோடு உரைத்திடவும், இளம்பெருவழுதி ஒரு வறட்டுச் சிரிப்பினை உதிர்த்தான்.
"அறவாணர் அவர்களே! இந்த தள்ளாத பருவத்திலும் தங்களுக்குள்ள தணியாத தாய்மொழிப் பற்றுக்கு நான் உளமாரத் தலை வணங்குகிறேன். ஆனால், தங்களிடம் பொங்கிப் பெருக்கெடுக்கும் இந்தத் தாய்மொழிப்பற்று தன்மான உணர்வு - இந்தமண்ணிலே பிறந்திட்ட எல்லாருக்குமே இருந்திடக் கூடாதா? அதனை எண்ணிடும் போதுதான் என்னால் கலங்காமல் இருக்க முடியவில்லை. அறவாணரே. கலங்காமல் இருக்க முடியவில்லை!"
"நீங்கள் என்ன சொல்கிறீர்கள். இளவரசே? அயல் மொழிகளின் ஆதிக்கம் வருவதற்கு நடைபாவாடை விரித்துவிடும் நச்சுச் செயலும் இந்த நாட்டில் முளைவிட முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா!"
"நம்புவதென்ன? நான் நேரிலே என் கண்ணாறவே கண்டு விட்டேனே!"
“என்ன! கண்ணாறக் கண்டீர்களா?"
"ஆம்; அறவாணரே! இன்று காலை முத்துக்குளிப்பு விழா எத்துணைக் கோலாகலமாக நடந்தேறியது! அவற்றுக் கெல்லாம் சேர்த்து வைத்துக் கரியைப் பூசினமாதிரி தான் அந்தக் காட்சியை நான் கண்டேன். விழா முடிவுற்றதும் அங்காடிகளின் வழியாகத் தேரினில் வந்து கொண்டிருந்தேன்; அப்போது அங்கே ஒரு வன்னிமரம் நிற்கிறதல்லவா? அதன் எதிரேயுள்ள அங்காடியின் முகப்பிலே, நம் மக்களுக்கு தெரியாத தெரியத் தேவையும் இல்லாத - 'மாகதி'- மொழியிலே தன் அங்காடியின் பெயரை ஒருவன் வேண்டுமென்றே பலகையில் எழுதித் தொங்கவிட்டுள்ளான். தமிழைப் புறக்கணிக்கும் போக்கிலே உள்ள அதனை எடுத்துவிடுதலே அறம் என்று நாம் சொன்னால், 'நம்மவர்கள்' சிலரே அதற்கு எதிர்ப்பினைக் காட்டுகின்றனராம்!"
"தாங்கள் சொல்வதைக் கேட்கும்பொழுது மிகுந்த வேதனையாக இருக்கிறதே! மிகவும் விழிப்போடு நாம் இருக்க வேண்டுமே! அயல் மொழிக் 'களை' களுக்கெல்லாம் ஆக்கம் தந்தால் பிறகு தமிழ்ப் 'பயிர்' தானாகவே மடிந்திட வேண்டியதுதான். பெற்றெடுத்த தாயினைப் பட்டினி போட்டுவிட்டு எதிர் வீட்டுக்காரிக்கு இனிப்புப் பொங்கலா? நன்றாக இருக்கிறதே நம்மவரின் போக்கு. ஆமாம்; அந்த மாகதி மொழியை இப்போது இங்கே திணித்திடவேண்டிய இன்றியமையாமை தான் என்ன? அந்த அங்காடிக்காரன் அயல் நாட்டவனா? அல்லது நம் நாட்டவன் தானா?"
"அவன் எந்த நாட்டவனாக இருந்தாலும் இருந்து தொலையட்டும். அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால், இந்த மண்ணிலே குடியேறிய பிறகு. இந்த மண்ணைக் கொண்டே பிழைக்க முற்பட்டுவிட்ட பிறகு இந்த மண்ணுக்கு நன்றியுள்ளவனாக அவன் நடந்து கொள்ள வேண்டாமா? ஊழூழிக் காலமாக இந்த மண்ணுக்கே உரிமையுள்ள மொழியைக் கெடுக்கலாமா? உணர்வைப் பொசுக்கலாமா? இனத்தைக் குலைக்கலாமா? நம்முடைய தமிழை அவனுடைய நாட்டிலே கொண்டு போய்ப் புகுத்திட முற்பட்டால் அவன் பொறுத்துக் கொள்வானா? எனவே, இவ்வாறெல்லாம் நம் மொழியை -பண்பாட்டை - நெறியைக் குறுக்கு வழியிலே கொல்லப் பார்ப்பது அறம் பிறழ்ந்த செயலல்லவா என்று எடுத்துக் காட்டினால், நாம் குறுகிய நோக்கம் கொண்டவர்களாம்! சிறுபான்மையர் நலத்தைப் பேணிடத் தவறுகிறோமாம்!"
"சிறுபான்மையர் நலத்திற்காகப் பெரும்பான்மையர் தங்கள் மானத்தையே இழந்திட வேண்டுமா? வந்தாரையெல்லாம் வாழ வைத்திடும் செந்தமிழ் நாட்டானையா குறுகிய நோக்கம் கொண்டவன் என்று கூசாமல் கூறுகின்றான்? இத்துணை வாய் நீளம் காட்டிபவனை நாம் வாளா விடக்கூடாதே! அவன்மீதுதானே நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்?"
"முதியவராகிய தங்களுக்கே இத்துணைக் கொதிப்பு என்கிறபோது என்னுடைய இளமை உள்ளம் என்ன பாடுபட்டிருக்கும்! என்றாலும், என் உணர்ச்சிக் கொந்தளிப்பையெல்லாம் அடக்கிக் கொண்டேன். காவல் மறவன் ஒருவனை அனுப்பிப் பெயர்பலகையை எடுத்துவிடுமாறு அங்காடிக் காரனிடம் கூறச் சொன்னேன். அவனோ அதற்கு மறுத்து விட்டான். அது மட்டுமா? அவன் நம் இனிய தமிழை எவ்வளவோ இழி வாகவெல்லாம் பேசியிருக்கிறான். 'நீங்கள் பகுத்தறிவுப் பகலவனாகக் கொண்டாடும் கவுதம புத்தரே எங்கள் 'மாகதி' மொழியில்தான் தம் அறிவுரைகளைக் கூறியுள்ளார். அவ்வளவு உயர்ந்த மொழி உங்கள் நாட்டிலே பரவினால் என்ன குடி முழுகி விடும்?' என்று வாதிட்டிருக்கிறான்."
"கவுதம புத்தரை நாம் கொண்டாடுவது அவர்தம் அரிய கருத்துக்களுக்காகவே அன்றி, அவர்தம் மொழிக்காகவா ? அதே கவுதமர் இலத்தீனிலோ, எகிப்தியத்திலோ, கிரேக்கத்திலோ தம் சிந்தனைகளை வெளிப்படுத்தியிருந்தால் கூட நாம் அவற்றைச் சிறப்பாகத்தான் போற்றியிருப்போம்! இன்னொரு பேருண்மை. அந்த அங்காடிக்காரனுக்குத் தெரியாதுபோல் இருக்கிறது. பௌத்த சமயம் தலையெடுப்பதற்கு முன்னர் சமணம்தானே தழைத்து வந்திருந்தது! அந்தச் சமணத்தைச் சார்ந்தவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் நம் நாட்டில் இருக்கிறார்களே! அவர்களில் யாரும் தங்களுடைய தீர்த்தங்கரர்கள் பேசிய 'அர்த்தமாகதி' 'மொழியினை பிற இனத்தவரிடமெல்லாம் திணித்திட வேண்டும் என்று துடித்திடவில் லையே? அந்தநாளில் கடற்கோளுக்கு இரையான கபாடபுரத்தினில் 'நிலந்தரு திருவிற் பாண்டியன்' அவையினிலே அரங்கேற்றம் பெற்ற ஒப்பில்லாத நூல் தொல்காப்பியம். அது வகுத்தளித்துள்ள வரையறையை - பழம் மரபை மீறிடாமல் தானே சமணப் புலவர்களும் பெரும்பாலோர் இன்றும் தங்கள் பனுவல்களை யாத்து வருகின்றனர். இவன் கொடிய சூதுக் காரனாக இருப்பான் என்றே தோன்றுகிறது. அவனுடைய மொழித்திணிப்பு முயற்சிக்கெல்லாம் இப்போதே முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் பிறகு நம்முடைய தாய்மொழியை நமது பிள்ளைகளுக்குப் புகட்டுவதையே 'மொழித் திணிப்பு' என்று கயிறு திரிப்பான்; கதை அளப்பான்; திசை திருப்புவான். மேற்போக்காகப் பார்த்தால் அயல் மொழிகளைப் பயில்வதில் தவறில்லைதான். ஆனால் நாளடைவில் அவற்றின் ஆதிக்கம் நம்முடைய செந்தமிழையே சிதைத்திடும்; அழித்திடும்; எனவே மிக மிக எச்சரிக்கை தேவை."
"தாங்கள் மொழிவது நூற்றுக்கு நூறு உண்மைதான். அறவாணர் அவர்களே! இப்பொழுதே அவன் கழஞ்சுகளையும், மதுப் பொருள்களையும் அன்பளிப்பாக அள்ளி வீசி நம்மவர் சிலரையே தன் கைக்குள் போட்டுக் கொண்டிருக்கிறான் என்று கேள்வி. அவனை உடனே சிறைப்படுத்திடலாம் என்றாலும் மிகவும் சிந்திக்க வேண்டியுள்ளது. முழுப் பூசணிக்காயையும் சோற்றில் மறைப்பது போல் - தமிழை இழிவுபடுத்தும் தன் உள்நோக்கத்தை ஒளித்துக் கொண்டு பொதுவாக அங்காடிக்காரர்களையே நாம் அவமதித்து விட்டதாக அவன் திசை திருப்புவானோ என்றும் எண்ண வேண்டியுள்ளது. ஆயினும் என்ன நேர்ந்தாலும் - என் உயிரே போவதானாலும் என் அன்னை மொழிக்கு ஊறு ஏற்பட நான் எந்தக் காலத்திலும் இடந்தரவே மாட்டேன்"- இளம்பெருவழுதி இவ்வாறு அறைகூவல் விடுத்திடும்பொழுதே மெய்க்காவலன் பரபரப்புடன் நுழைந்தான்.
"இளவரசே! ஒரு திடுக்கிடும் செய்தி!" என்றான்.
"திடுக்கிடும் செய்தியா? என்ன அப்படி?" என்று மெய்க்காவலனை நோக்கிப் பரபரப்புடன் வினவினான் இளம்பெருவழுதி.
"அந்த அங்காடிக்காரன், வேற்றுமொழியிலே வேண்டுமென்றே பெயர்ப்பலகையை எழுதித் தொங்கவிட்டிருந்தான் அல்லவா? அதனை எடுத்திடுமாறு நம் காவல் மறவன் வலியுறுத்தியதையும், அதற்கு அவன் முடியாது என்று வாதிட்டதையும் கேட்டுக் கொண்டிருந்த பொதுமக்களில் சிலரே இப்போது கிளர்ச்சியில் இறங்கி விட்டார்கள்".
"கிளர்ச்சியா? எதற்கு?"
"அந்தப் பலகையை அவன் அகற்றியே தீர வேண்டும் என்றுதான்."
"அதுதானே பார்த்தேன்! நம்முடைய மக்களுக்குத் தாய்மொழிப் பற்றும், தன்மான உணர்வும் பட்டுப் போய் விடாது!" என்று நிம்மதியுற்ற அறவாணர், தாமே மெய்க்காவலனைப் பார்த்துக் கேட்டார்.
"மற்ற அங்காடிக்காரர்கள் எல்லாரும் எப்படி இருக்கிறார்கள்? தொழில் துறை என்கிற அளவில் ஒரே பிரிவினர் என்னும் உணர்வைப் பெரிதுபடுத்தி எதையும் ஆராய்ந்து பார்த்திடாமல், அவனுக்கேதான் துணை நிற்கிறார்களா?"
"இல்லை, அறவாணர் அவர்களே! அங்காடிக்காரர்களுள் பெரும்பாலோர் நம் பக்கத்தில்தான் இருக்கிறார்கள். முதலில் சிறிது தெளிவில்லாமல் அவனுக்குப் பரிந்து பேசியவர்களும்கூட இப்போது திரும்பிவிட்டார்கள்; தங்கள் கருத்தினைத் திருத்திக் கொண்டு விட்டார்கள். இதிலே இன்னொரு வேடிக்கை என்ன தெரியுமா? ஊமையன் முன்னால் மூக்கினைச் சொரிந்து ஆத்திரத்தை மூட்டிடும் போக்கில், அந்த அங்காடிக்காரன் நடந்துகொண்டது தவறுதான் என்றும், தமிழைப் புறக்கணித்துத் தமிழர்களின் உணர்வுகளை அவமதிக்கும் அவனுடைய புன்மையான செயலினைத் தடுத்திடத்தான் வேண்டும் என்றும் ரோமாபுரியைச் சார்ந்த யவனர்கள் மட்டுமல்ல. வடபுலத்தைச் சார்ந்த சிலரும் கூட ஒப்புக் கொள்கிறார்கள்".
"இது இன்னும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாக இருக்கிறதே! பார்த்தீர்களா. இளவரசே! தொடக்கத்திலே தோல்விகளைச் சந்தித்திடினும், அறத்திற்கும் உண்மைக்கும் என்றைக்குமே அழிவில்லை என்பது தெரிகிறதல்லவா?" என்று பெருமிதத்தோடு பகர்ந்து மகிழ்ந்தார் அறவாணர்.
"ஆமாம். இப்போது கிளர்ச்சியின் நிலைமை என்ன? அதை முதலில் சொல்" என்று மெய்க்காவலனை வினவினான் இளம்பெருவழுதி.
"அது தான் வருந்திடத்தக்க வகையில் திரும்பிவிட்டது இளவரசே! அந்த அங்காடிக்காரனிடம் கழஞ்சுக் கடனும் அன்பளிப்புகளும் பெற்றிருந்த சிலர், அமைதியான முறையில் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது முரட்டுத் தனமாகப் பாய்ந்து மூன்று பேரைக் கொன்று விட்டார்கள்; முப்பது பேருக்கு மேல் கொடிய காயம்..."
"என்ன! மூன்று பேர் மடிந்து விட்டார்களா? நம்முடைய கரங்களைக் கொண்டே நம் கண்களைக் குத்தியிருக்கிறானே அந்த அங்காடிக்காரன்!"
"ஆம் இளவரசே! இந்தக் கலகத்திலே ஒரு காரிகைக்கும் வலுவான அடி- காயம். ஆனாலும் அதை அவள் பொருட்படுத்தவே இல்லை; வீராங்கனையாகச் சீறிப் பாய்ந்து அந்த வேற்று மொழிப் பலகையைப் பிடுங்கி வீசியெறிந்து விட்டாள் புழுதியிலே. அந்த அங்காடிக்காரனின் ஆட்கள் அவளை நையப்புடைக்க முற்பட்டனர். அவள் அந்தப் பலகையை எடுத்துத் தற்காத்துக் கொண்டே நகர்ந்தவள், அருகிலிருந்த கிணற்றிலே அதனைப் போட்டு விட்டு ஓடியே போய்விட்டாள் மாயமாக!"
"இதற்கு மேலும் நாம் பொறுமையைக் காட்டிட வேண்டிய தேவை இல்லையே இளவரசே! உடனே அந்த அங்காடிக்காரனையும் அவனைச் சார்ந்த ஆட்களையும் சிறைப்படுத்திட வேண்டியதுதான்; படை வீரர்களை அனுப்பி உடனே கொந்தளிப்பை அடக்குவதும் இன்றியமையாதது. எதற்கும் இப்போதே நான் அங்காடிகளின் பக்கம் சென்று நிலைமையை நேரில் அறிந்து வருகிறேன். பிறகு தாங்கள் மாண்டவர்களையும், காயமுற்றவர்களையும் பார்வையிடச் செல்லலாம்."
-என்றவாறே அறவாணர் அங்கிருந்து புறப்பட்டு விட்டார். அவர் சென்றதும் மெய்க்காவலன் சொன்னான்;
"அந்த வீராங்கனை யார் தெரியுமா? இளவரசே! தாங்கள் காலையில் கண்டு மெய்மறந்தீர்களே. அவளே தான்!"
"அப்படியா?வியப்பாக இருக்கிறதே! அவள் யார்?"
"அவள் நமது கொற்கை நகரத்துக் கோதையில்லையாம். ஏதோ வெளிநாட்டிலிருந்து முத்துக் குளிப்பு விழாவினை வேடிக்கை கண்டிட வந்தவள்தானாம். அதற்கு மேல் அவளைப் பற்றி உசாவுவதற்கு நேரம் இல்லை; கிளர்ச்சி பற்றி, உடனே தங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமே என்று ஓடோடி வந்துவிட்டேன்."
"அந்த அங்காடிக்காரனும் அவன் ஆட்களும் அவளை வாளாவிட மாட்டார்களே! வாள் கொண்டு அவளை வெட்டித் தீர்த்தாலும் தீர்த்து விடுவார்களே! அவளை எவ்வாறேனும் நாம் காப்பாற்றியாக வேண்டுமே! சரி; முதலில் நம் சிறுபடைத் தளபதியை வரச்சொல். அந்த அங்காடிக்காரனும் அவன் ஆட்களும் எங்கே ஒளிந்திருந்தாலும் சிறைப்படுத்திடத்தான் வேண்டும்" என்று புலியென உறுமியெழுந்தான் இளம்பெருவழுதி.
அவனுடைய எண்ணங்கள் யாவும் தமிழின் மானத்தைக் காப்பாற்றிடத் தன்னையே காணிக்கை ஆக்கத் தயங்கிடாத அந்தத் தையலைப் பற்றியே தழுவிப்படர்ந்தன.