உள்ளடக்கத்துக்குச் செல்

ரோமாபுரிப் பாண்டியன்/32. மானங்காப்பவர்

விக்கிமூலம் இலிருந்து

32

மானங்காப்பவர்

விளக்குகள் ஏற்றப்பட்டுச் சில நாழிகைப் பொழுதே சென்றிருந்த முன்னிரவு நேரம்.

சூலுற்ற பெண் சேய் பிறந்திடும் வேளையில், வேதனை தாங்கிடாமல். முனகிப் புலம்பித் துடியாய்த் துடித்திடுவாள் அல்லவா? அப்படித்தான் கருமுகிலைச் சுமந்திட்ட வான நங்கையும் பொருமி, அரற்றினாள் இடியும் மின்னலுமாக!

மழைக் குழந்தை, மண்ணின் மடியிலே தாவி விழுந்து தவழ்ந்திடத் தொடங்கிற்று.

குடிகாரக் கணவன் தன் மனைவியின் கூந்தலை இறுக்கிப் பற்றிக் குலுக்கிச் சுழற்றுவதுபோல, மரம் - செடிகளின் கிளைகளும், இலைகளும் படாத பாடுபட்டுத் தவித்திடக் கோரமான காற்றும் சீறிச்சீறி வீசியது.

தமிழைப் புறக்கணித்த பெயர்ப்பலகையை வீசியெறிந்திட்ட தளிர்கொடியைத் தேடிக் காப்பாற்றுமாறு தன் அரண்மனை வீரர்களை அனுப்பியதோடு அமைதியுறவில்லை இளம்பெருவழுதி; தானே புரவி மீதேறி அவளைத் தேடிடும் முயற்சியில் இருளோடு இருளாக அவன் ஈடுபட்டான்.

கடற்கரையோரமாகவே சில கற்கள் தூரம் சென்றிருப்பான்.

'பளீர்'-என்று கண்ணைப் பறித்திடும் மின்னல் வெட்டு.

அந்த வெளிச்சத்திலே, ஒரு நெடிய தென்னை மரமும் அதன் அடியிலே வெள்ளைக் குதிரையொன்றும் தெரிந்தன. நன்றியுணர்வோடு, கீழே விழுந்து கிடக்கும் ஓர் உருவத்தைச் சுற்றி வந்தது அந்த வெண்புரவி.

அந்த இடத்தினை அணுகிவிட்ட இளம்பெருவழுதி கீழே குனிந்து கூர்ந்து நோக்கினான்.

அடுத்த மின்வெட்டில்...

நிலைகுலைந்து கிடந்த அந்த உருவம் ஓர் அணங்குதான் என்பது தெளிவாகத் தெரிந்தது. சிவந்திப் பூக்களாலே யாரோ சிலை வடித்துப் போட்டாற்போலத் துவண்டு கிடந்தாள் அந்தச் சேயிழை. அவளுடைய பூரிப்பான அங்கப் பகுதிகளில் மழைத்துளிகள் விழுந்து தெறித்துப் புதுமெருகினைச் சேர்த்தன. அவளுடைய காலடிகளையோ கடலலைகள் முத்தமிட்டன; மோதித் திரும்பின.

தன் புரவியிலிருந்து இளம்பெருவழுதி கீழே குதித்து அவள் அருகினில் விரைந்தான்.

தான் காலையில் கண்டு மயங்கிய அன்னப்பேடுதான் அந்த ஆரணங்கு என்று உறுதியாக்கப்பட்டது அவனுக்கு.

முகத்தில் நீரைத் தெளித்தாலே மயக்கந் தெளிவது இயற்கை; மழையே பொழிந்தும் கூட அவள் நினைவிழந்து, நிலைகுலைந்து கிடந்தது அவனுக்குப் புதிராகவே இருந்தது. முதலில் அவளைக் கண்விழிக்கச் செய்திட வேண்டுமே என்னும் கவலையோடு அவளது பூவுடலை அள்ளியெடுத்து அவளைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்த புரவியின் முதுகில் குறுக்காகப் போட்டான்.

மேற்கே சிறிது தூரத்தில் 'மினுக் மினுக்' என்று ஏதோ வெளிச்சம் தெரிந்தது. அதனை நோக்கி இரண்டு குதிரைகளையும் கால்நடை யாகவே இட்டுச் சென்றிட்டான் அவன்.

அருகில் நெருங்க நெருங்க அது ஒரு பாழ்மண்டபமே என்று தெரிந்தது. கற்றாழை நார்போலத் தலைவெளுத்திட்ட மூதாட்டி ஒருத்தி அங்கே கற்களையே அடுப்பாக்கிச் சோறு பொங்கிக் கொண்டிருந்தாள், சுருக்கங்கள் விழுந்து முதுமைச் சுவடுகள் படர்ந்திட்ட அவளது மேனி, காய்ந்து போன பீர்க்கங்காயையே நினைவுபடுத்தியது.

குதிரையிலிருந்து அந்த இளம் பெண்ணை இறக்கிக் கொணர்ந்து மண்டபத்தின் உள்ளே படுக்க வைத்திட்டான் இளம்பெருவழுதி.

"அந்தப் பெண்ணுக்கு என்ன மயக்கமா?" என்று அக்கறையுடன் கேட்டாள் கிழவி.

"ஆமாம் பாட்டி! உன்னிடம் மஞ்சள் துண்டு ஏதாவது இருக்கிறதா?"

"இருக்கு. இதோ கொண்டு வருகிறேன்' என்று கூறிய அவள், தன்னுடைய துணி முடிச்சிலிருந்து, ஒரு மஞ்சள் துண்டினைத் தேடி எடுத்தாள். அடுப்பு நெருப்பிலே காட்டிச் சிறிது பற்றத்தொடங்கியதும், அதனை அப்படியே அந்த அணங்கின் மூக்கின் அருகே காட்டினாள். சுருள்சுருளாகக் கிளம்பிய மஞ்சள் புகை, மடந்தையின் மண்டையில் நன்றாக நெடியேற்றி அவளை விழித்திடச் செய்து விட்டது.

சில விநாடிகள் அவளுக்கு எதுவுமே விளங்காத புதிர் நிலை; எப்படித்தான் விளங்கிட முடியும்? மிரள மிரள விழித்துப் பார்த்த அவள் பிறகு தன்னினைவு வரப்பெற்றவளாகத் தானே தலையினைக் கிளப்பிச் சுவரினை ஒட்டிச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள்.

"நல்லவேளை,தம்பி! நான்கூட இந்தப் பெண் பிழைப்பாளோ. மாட்டாளோ என்று பயந்தே போய்விட்டேன்" என்று ஆறுதலாகப் பெருமூச்செறிந்த மூதாட்டி மீண்டும் தன் அடுப்பினைக் கவனிக்கச் சென்றிட்டாள்.

"இங்கே எப்படி வந்தோம் என்று திகைப்பாக இருக்கிறதா?" என்று முறுவலுடன் கேட்டான் இளம்பெருவழுதி, அந்த ஏந்திழையைப் பார்த்து.

"ஆம்" என்று அவள் இதழ்களைத் திறந்துவிடவில்லை - தலையையே அசைத்தாள்.

"மழையில் நனைந்து கொண்டு கடலை ஒட்டிக் கிடந்த உன்னை நான் மட்டும் கண்டிராவிட்டால் இந்நேரம் அந்த அலைகளே உன்னை விழுங்கி ஏப்பம் விட்டிருக்குமே! மதியத்திலிருந்து பட்டினிதானே?" பரிவுடன் கேட்டான் அவன்.

அதற்கும்,"ஆம்" என்பதற்கு அடையாளமாகத் தலையையே அசைத்தாள் அவள்.

"அந்தப் பசி மயக்கத்தோடு, தலையில் பட்ட காயத்திலிருந்து குருதியும் நிறைய வெளியாகியிருக்கும் என்று நினைக்கிறேன். அதனால்தான் குதிரையில் வந்து கொண்டிருந்த நீ நினைவினை இழந்து கீழே விழுந்திருக்கிறாய் - இவ்வாறு அவன் கணிப்பினை வெளிப்படுத்தியதும், அவள் தொண்டையைக் கனைத்துக்கொண்டு மெலிந்த குரலில், "எனக்குக் காயம்பட்டது உங்களுக்கு எப்படித் தெரியும்" என்று அவனை நோக்கினாள்.

"என்னுடைய மெய்க்காவலன்தான் முதலில் வந்து சொன்னான். தமிழின் மானத்தைக் காப்பதற்காக நீ புரிந்த வீரச் செயலைக் கேட்டதும் நான் எவ்வளவு பூரிப்படைந்தேன் தெரியுமா? எங்கே அந்தத் தமிழ்ப்பகைவர்கள் பழிக்குப் பழி வாங்கத் திட்டமிட்டு உன் உயிரையே பறித்திடுவார்களோ என்று அஞ்சி, உன்னைத் தேடிக் காப்பாற்றுவதற்காக நான்கு திக்குகளுக்கும் ஆட்களை அனுப்பி விட்டு, நானும் புறப்பட்டு வந்தேன். நீயோ இப்படிக் கடல் விழுங்குவதற்கு ஏதுவாகக் கண்ணை மூடிக்கிடக்கிறாய்.... ஆமாம், நான் யார் என்று உனக்குத் தெரிகிறதா?"

"கொற்கைப்பட்டினத்தை ஆண்டு கொண்டிருக்கும் பாண்டிய இளவரசர் தானே தாங்கள்?"

"உனக்கு எப்படி நான் இளவரசன் என்று தெரியும்?'

"முத்துக்குளிப்பு விழாவைத் தாங்கள் தொடங்கி வைத்ததை நான்தான் நேரில் பார்த்தேனே!"

"ஆனால் நான் உன்னை..." என்று ஏதோ சொல்லிட வாயை எடுத்த அவன், பேச்சை மாற்றி, "ஆமாம், நீயார், எந்த ஊர் என்று தெரிந்து கொள்ளலாமா?" என்று இரங்கிய குரலில் கேட்டான்.

"என்னைப் பற்றி தெரிந்து கொண்டு தங்களுக்கு என்ன ஆகப்போகிறது?"

"என்ன அப்படிச் சொல்லிவிட்டாய்? சீறி வந்த புலியையே முறத் தினால் துரத்தியடித்தாள் தமிழ் மறத்தி ஒருத்தி என்று சொல்வார்கள். அவளுடைய துணிச்சலைக் காட்டிலும் உன்னுடையது ஒன்றும் குறைந்தது அல்லவே! அதற்காக உன்னை என் அரண்மனைக்கே அழைத்துச் சென்று என் மண்டல மக்களுக்கெல்லாம் உன்னை அறிமுகப்படுத்திடவும், பாராட்டு விழா நடத்திப் பரிசளிப்பு உனக்கு ஏராளமாக வழங்கிடவும் நான் எத்தனை எத்தனையோ திட்டங்களையெல்லாம் என் நெஞ்சிற்குள்ளே தீட்டி வைத்திருக்கிறேன் தெரியுமா?"

"தாங்கள் சொல்வதைக் கேட்டால் எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது."

"ஏன்? என்னுடைய சொற்களில் உனக்கு நம்பிக்கை இல்லையா?"

"நம்பிக்கை இல்லாமல் இல்லை. ஆனால் நான் யார் என்று தெரிந்தால் தாங்களே என் மீது அருவருப்படைவது மட்டுமல்ல, வெறுப்புற்றாலும் வியப்பதற்கில்லை. பிறகு. தங்கள் திட்டங்கள் எல்லாம் தவிடுபொடி ஆகிவிடும்!"

"நீ யாராக இருந்தாலும் எனக்குக் கவலையே இல்லை. நீ எந்தக் குடியில் பிறந்தவள் ஆனாலும் சரி; எத்தகைய குணம் கொண்டவள் ஆனாலும் சரி; நீ இந்த நாட்டுக்குரிய மொழியைப் புறக்கணித்தவர்களுக்கு அவமதிப்புச் செய்தவர்களுக்கு-சரியான பாடம் புகட்டியிருக்கிறாய்; அதற்காக உன் உயிரைக்கொடுத்திடவும் தயங்கிடாமல் போராடியிருக்கிறாய். அது ஒன்றுக்காகவேனும் நான் உன்னை கொண்டாட வேண்டாமா? இல்லையென்றால் நான் நன்றி கொன்றவன் - மொழிப் பற்றோ, இனப்பற்றோ இல்லாதவன் என்று என் நாட்டு மக்களே என்னைத் தூற்றமாட்டார்களா? அதற்காக நான் உன்னை என் அரண்மனைக்குக் கூட்டிக் கொண்டு போய்தானே ஆக வேண்டும்?"

"இளவரசே! தாங்கள் என்னிடம் வைத்துள்ள பெருமதிப்பிற்கு நான் மிகவும் தலை வணங்குகிறேன். ஆனால் நான் தற்பொழுது தங்கள் அரண்மனைக்கு வருவதால், தங்களுக்கே என் வருகை கெடுதலாக முடியலாம்; தங்கள்மீது மற்றவர்களுக்கு ஐயப்பாடுகளும் வரலாம்; ஏன் சில அரசியல் சிக்கல்களேகூட எழலாம். எதற்கு வீணான வம்பு?"

"நீ என்ன சொல்கிறாய்?"

"ஆம், இளவரசே; நடக்கக் கூடியதைத்தான் சொல்கிறேன். என்ன இருந்தாலும் தாங்கள் என் உயிரைக் காப்பாற்றியிருக்கிறீர்களே. அதற்கு நன்றியறிதல் காட்டிடவாவது, நான் என்னைப் பற்றிய சில உண்மைகளை இப்போதே தங்களிடம் சொல்லிடத்தான் வேண்டும். தாங்கள் நினைப்பதுபோல நான் எளிய குடியில் பிறந்தவள் அல்லள். ஓர் அரசர் குடியினைச் சார்ந்தவளே!"

"அப்படியா? நீ எந்த நாட்டு இளவரசி?"

"என்னுடைய நாடு எது என்று தெரிந்தால் தங்களால் சினத்தைக் கட்டுப்படுத்திட முடியாதோ என நான் அஞ்சுகிறேன்.'

"அந்த அச்சம் உனக்குத் தேவையே இல்லை. அதுவும் உன்னைப் பொறுத்தவரையில் என்னிடம் சினமாவது எழுவதாவது?"

"நான் வேளிர்குடியில் பிறந்தவள். என் பெயர் தாமரை. சிற்றரசர் இருங்கோவேள் என் உடன்பிறந்த அண்ணன். சோழப் பேரரசர் கரிகாலரிடம் தோற்ற பிறகு தலைமறைவாக மரமாளிகை கட்டிக்கொண்டு வாழ்ந்து வருகிறோம். இந்த நிலையில் நான் எப்படி வெளிப்படையாகத் தங்கள் அரண்மனையின் விருந்தாளியாக வரமுடியும்? ஏனெனில், தங்கள் தந்தையார் பெருவழுதிப்பாண்டியரும், கரிகால் மன்னரும் நட்புறவை வளர்த்துக் கொண்டு வரும் நல்ல நேரம் இது. கரிகாலரின் பகைவராகி விட்டவரின் தங்கையைத் தாங்கள் பாராட்டுகிறீர்கள் என்றால், தங்கள் மீது தங்கள் தந்தையாருக்கே சீற்றம் உண்டாகாதா? அத்துடன் கரிகாலருக்கே தங்கள் தந்தையார்மீது ஐயப்பாடு எழக்கூடும் அல்லவா? அதைத் தொடர்ந்து புதிய அரசியல் சிக்கல்கள் தோன்றுவதற்கு இடம் ஏற்படும் அல்லவா? அப்படியானால் நான் ஏன் இப்போது கொற்கைப் பட்டினம் வந்தேன் என்று தாங்கள் எண்ணக்கூடும். ஏதேனும் ஒற்று வேலையை மேற்கொண்டுதான் வந்திருப்பேனோ என்கிற ஐயப்பாடு தங்களுக்கு எழலாம். ஆனால்... தாங்கள் நம்பினாலும் சரி. நம்பாவிட்டாலும் சரி; என் மனச்சான்றின் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன்; நான் எளிய குடிமகளாகக் கொற்கைப்பட்டினத்திற்கு வந்ததே முத்துக்குளிப்பு விழாவினைக் கண்டிடும் ஒரே ஆசையினால் தான்."

"வியப்பாக இருக்கிறதே! இந்த விழாவுக்காகவா இத்தனை தூரம், அதுவும் தன்னந்தனியாக வந்திட்டாய்?"

"ஆம், இளவரசே! தங்களால் நம்பக்கூட முடியாது தான். ஆனால், இதற்குக் காரணம் ஒருவகையில் என் அண்ணியார்தான். அவரும் தங்களுடைய பாண்டியநாட்டைச் சேர்ந்தவர் அல்லவா? பொற்புமிக்க கொற்கை பற்றியும், அங்கே நடக்கும் பொலிவுமிக்க முத்துக்குளிப்பு பற்றியும் கதை கதையாகச் சொல்லிக்கொண்டே இருப்பார். வாழ்நாளில் எவ்வாறேனும் ஒருமுறையாவது இந்த முத்துக் குளிப்பு விழாவினைப் பார்த்திட மாட்டோமா என்னும் ஏக்கமே என் நெஞ்சை அரிக்கலாயிற்று. இன்னும் சிறிது காலம் சென்றால், கரிகாலரிடம் என் அண்ணன் வளர்த்துக் கொண்டு வரும் பகைமையினால், எங்கள் எதிர்காலமே கவிழ்ந்த கப்பலாகி விடுமோ என்கிற உள் நடுக்கமும் எனக்கு உண்டாகிவிட்டது. எனவே, இந்த ஆண்டு எப்பாடுபட்டாவது முத்துக்குளிப்பு விழாவிற்கு வந்தே தீருவது என்று துணிந்து கிளம்பிவிட்டேன். குதிரையோடு கொற்கைக்கே வந்திட்டால், நான் மன்னர்குடிப்பிறந்த மங்கைதான் என்று மற்றவர்கள் புரிந்து கொண்டு விடலாம் இல்லையா? அந்த அச்சத்தினால், கொற்கைக்கு வடக்கேயுள்ள ஒரு குப்பத்திலேயே குதிரையைக் கட்டி வைத்து விட்டுக் கால்நடையாகவே தங்கள் நகருக்குள் நுழைந்தேன். நான் இவ்வாறு புறப்பட்டு வந்தது என் அண்ணிக்கு மட்டுமே தெரியும்; அண்ணனுக்குத் தெரியாது. இந்த நிலையில் நான் தங்கள் அரண்மனைக்கு விருந்தாளியாக வந்தால் - ஆடம்பரமான வரவேற்புகளையெல்லாம் ஏற்றால் - அந்தச் செய்தி எப்படியும் என் அண்ணனுக்கு எட்டாமலா போகும்? பிறகு என்னை அவர் வாழ விடுவாரா? தங்களைப் பற்றியுந்தான் தங்கள் தந்தையார் என்ன நினைப் பார்? கரிகாலருந்தான் என்ன கருதுவார்? பொதுமக்களும் தாறுமாறான வதந்திகளையெல்லாம் தவழவிட மாட்டார்களா....?"

- தாமரை இப்படி ஒரு வினாவினை எழுப்பி தன் பேச்சினை நிறுத்திடவும் இளம்பெருவழுதிக்கு என்ன விடை பகர்வது என்றே தோன்றிடவில்லை.

வாயினைத் திறந்திடாமல், அவன் அமைதியிலேயே அமிழ்ந்து போனான். ஆனால் அவன் விழிகளோ...!"

மண்டபத்திற்கு வெளியே இருளைத் துழாவி, எதனையோ தேடுவது போல், பாசாங்குதான் செய்தன இளம்பெருவழுதியின் கண்கள். உண்மையில் தாமரையின் தளிருடலை மொய்த்திடவே அவை தவியாய்த் தவித்தன. அவனைப் போலவே அவளும் நன்றாக நனைந்து விட்டாள் அல்லவா, மழையில்? அதனால் அவளது உடலோடு நெருக்கமான உறவு கொண்டுவிட்ட ஈரத்துகில்கள், இடியாப்பத்தின் மேல் இறைந்து கலந்திட்ட தேங்காய்ப் பூமாதிரி, அவளுடைய பருவச் செழுமையைப் பன்மடங்கு பெருக்கியே காட்டின. பால்வடியும் முகம் என்பார்களே அப்படி எழில் வழியும் முகம் - நிலவு முகம்! அதனைக் காணக்காண இளம்பெருவழுதியின் இதயத்தில் விளக்கவொண்ணாத கிறக்கமே விளைந்துவிட்டது. எனினும், தன் மனத்தினை அவன் மிகவும் கடினத்துடனேயே கட்டுப்படுத்திக் கொண்டான்.

முன்போல. இப்போது மழையின் இரைச்சல் இல்லை. ஓய்ந்து விட்டது. காற்றின் சீற்றமும் இல்லை; அடங்கிப் போயிற்று. ஆயினும் கிழக்கே சிறிது தொலைவில், எம்பிக் குதித்து ஆர்ப்பரித்தன கடல் அலைகள், அவற்றை வம்புக்கு இழுப்பதுபோல் எழுந்து நிமிர்ந்து சுருண்டு விழுந்தன அவனுடைய நினைவின் அலைகள்.

சட்டென்று இளம்பெருவழுதியின் சிந்தனை வானிலே ஓர் எண்ணக்கீற்று மின்னல் வீச்சு! தொண்டையைக் கனைத்தவாறே "சரி, தாமரை! நீ கூறியவற்றையும் ஆராய்ந்திட வேண்டியதுதான். என்னால் உன் அண்ணனின் சீற்றத்துக்கு நீ ஆளாவதை இப்போதைக்கு நான் விரும்பிடவில்லை. ஆனாலும் நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்" என்றான் அவன்.

"என்ன முடிவு?"

"உன் அண்ணனை நானே வந்து எப்படியாவது சந்தித்துச் சில தலையாய் செயல்களைப் பற்றி முறையாகவே விவாதித்திட விரும்புகிறேன்."

"இப்போதுள்ள இக்கட்டான சூழ்நிலையில் அவ்வாறு தாங்கள் சந்தித்து உரையாடுவது சரியாக இருக்குமா? நான் முன்னே சொன்னதைப்போன்று, தங்கள் தந்தையாரும் கரிகாலரும் தங்களுடைய செயலை அறிந்தால் வெகுள மாட்டார்களா?"

"ஒரு காலத்தில் பகைவர்களாக விலகிட நேர்ந்தவர்கள் எந்தக் காலத்திலும் நண்பர்களாக இணையவே கூடாது என்று ஏதேனும் இலக்கண வரம்பு இருக்கிறதா? மேலும், பாண்டிய நாட்டவருக்குப் பகையாளிகளா வேளிர்குடியினர்? இல்லையே! அந்தநாள் முதற்கொண்டு 'கொள்வினை கொடுப்பினை' - உறவு முறையும் இந்த இரண்டு மரபினர்க்கிடையேயும் இருந்துதானே வந்திருக்கிறது! நான் சிறுவனாக இருந்தபொழுது என் தந்தையார் அடிக்கடி வெண்ணிப் போர்' பற்றி விரிவாகப் பேசியதெல்லாம் இன்னும் என் நெஞ்சிலே பசுமையாகப் பதிந்துள்ளது. அந்தப் போரில் வேளிர்க்குடியினருக்கு ஆதரவாகத்தானே பாண்டியநாட்டுப் படைகள் கரிகாலரை எதிர்த்துக் களத்திலே குதித்தன! எனவே, உன் அண்ணனைச் சந்தித்து நம்முடைய பழைய உறவினைப் புதுப்பித்துக் கொள்ள முனைவதில் எந்தவிதத் தவறும் இருப்பதாக எனக்குப் படவில்லை. அத்துடன், நான் கேள்வியுற்ற அளவில், சோழப் பேரரசர் பகைவர்க்கும் அருள் புரியும் பண்பாளராகவே எனக்குத் தோன்றுகிறார். பிஞ்சுப் பருவத்திலேயே அவரைத் துஞ்சிடச் செய்யத் தொடர்ந்து ஈடுபட்டவர்கள்தாம் பாண்டிய-சேரர்கள். என்றாலும் அந்தப் பழைய பகைமையினைப் பாராட்டிக் கொண்டே இராமல் நட்புரிமையோடு அவர்களுடன் பழகுவதற்கும் தம்மைப் பக்குவப்படுத்திக் கொண்டவர் கரிகாலர்; அத்தகைய விண்ணைப் போல் விரிந்த நெஞ்சம் படைத்தவர், வேளிர்குடியினரை மட்டும் காலாகாலத்திற்கு வெறுத்துக் கொண்டே இருக்கவா நினைப்பார்? முறையோடு அவரை அணுகினால், ஏதேனும் ஓர் உடன்பாட்டுக்கு அவர் இசைந்திடுவார் என்றே எனக்குப்படுகிறது... அது எவ்வாறாயினும் சரி; உன் அண்ணனை நான் விரைவில் வந்து சந்தித்திடவே விரும்புகிறேன்."

இளம்பெருவழுதி இவ்வாறு பகர்ந்தது. தாமரைக்கு மகிழ்ச்சியையே அளித்தது. கரிகாலனைப் பற்றி அவளும் நல்ல முறையிலேயே கேள்வியுற்றிருந்தாள். அவனிடம் தன் தமையன் மட்டும் கொடும்பகையினை விடாப்பிடியாகக் காட்டி வருதல் விளங்கிடாத புதிராகவே இருந்தது. எவ்வாறேனும் சோழ மாமன்னனுடன் உடன்பாடு கொண்டு விட்டால், தற்போது போலத் தன் மதிப்பினை இழந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்திடும் இழிந்த நிலை இராதே என்று அவள் எண்ணினாள். அதற்கு இளம்பெருவழுதி போன்றவர்களின் எத்தகைய முயற்சியும் பயன் அளித்திடுவதாக அமைந்திடல் நல்லதுதானே என்றும் அவளுக்குத் தோன்றியது.

"தாங்கள் மொழிவது சரி என்றே என் மனத்திற்குப் படுகிறது. பகைமையினை வளர்த்துக் கெண்டே செல்வதால் என்ன நன்மைதான் ஏற்படப் போகிறது? கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போவதால் குடியா முழுகிவிடும்? தங்களைப் போன்றவர்கள் வந்து எடுத்துரைத்தால் என் அண்ணனின் மனமும் ஒருவேளை மாறினாலும் மாறக்கூடும்."

"ஆனால், இப்போதைக்கு உன் அண்ணனும் நானும் வெளிப்படையாகச் சந்திப்பதோ, வேறு யாருக்கும் அது தெரிவதோ அத்துணை நல்லது அன்று. மேலும், நான் நல்லெண்ணத்தோடுதான் வருகிறேன் என்கிற நம்பிக்கையும் அவருக்கு என்மேல் விழவேண்டும் அல்லவா?"

"ஆமாம்...அதைப் பற்றியும் நாம் சிந்திக்கத்தான் வேண்டும்... ம்.. எனக்கு ஒரு வழி தென்படுகிறது."

"என்ன வழி?"

"தாங்கள் என் உயிரையே காப்பாற்றியவர் என்கிற உண்மை தெரிந்தால், தங்களிடம் அவருக்குத் திண்ணமாகப் பெருமதிப்பு மட்டுமல்ல, நன்றியுணர்வே உண்டாகிவிடும். அதனைப் பக்குவமான முறையில் என் அண்ணியார் மூலமே எட்டிடுமாறு செய்து விடுகிறேன். அத்துடன் தமிழின் மானத்தைக் காத்திடுவதில் தாங்கள் எத்துணை ஆர்வத்தோடு ஈடுபட்டுச் செயலாற்றினீர்கள் என்கிற செய்தியும் தெரிந்தால் தங்கள் மீது இயற்கையாகவே ஒரு தணியாத பாசம்.. தளராத இதயப் பிடிப்பு-பிணைப்பு எல்லாமே உண்டாகிவிடும். தங்களைச் சந்தித்திட அவரே முந்திக் கொள்ள முனைவார். ஆனால்..."

"என்ன ஆனால்..."

"நாங்கள் தங்கியுள்ள மரமாளிகையைக் கண்டு பிடித்து வந்து சேர்வதுதான் தங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். எங்களுடைய வீரர்கள் எளிதில் யாரையும் உள்ளே விட்டுவிடமாட்டார்கள். ஒன்று செய்யலாம்; என் அண்ணனின் பெயர் பொறித்த அரச முத்திரைப் பதக்கமொன்று என்னிடம் இருக்கிறது. அதனைத் தங்களிடம் தருகிறேன். எங்கள் ஆட்களிடம் அதனைக் காட்டினீர்களானால் தங்களை எதுவுமே கேட்டிட மாட்டார்கள். பிறகு, தாராளமாக எங்கள் மாளிகைப் பக்கம் வரலாம்" என்றவாறே தன் இடையினில் செருகி வைத்திருந்த அந்த முத்திரைப் பதக்கத்தினை எடுத்து நீட்டினாள் தாமரை.

அதனை மகிழ்ச்சிப் பெருக்கோடு பெற்றுக்கொண்ட இளம்பெருவழுதி, "மெத்த நன்றி, தாமரை! உன் அறிவுக் கூர்மையைக் கண்டு நான் பெரிதும் வியக்கிறேன். உன்னை எவ்வாறு பாராட்டுவது என்றே எனக்குப் புலனாகவில்லை; விரைவில் உன்னை வந்து சந்திக்க முயல்வேன். ஆனால் என்னைப் பற்றிய தகவல்களை உன் அண்ணனிடம் இப்போதே அவசரப்பட்டுச் சொல்லிட வேண்டாம்" என்று உளந்திறந்து மொழிந்தான் இளம்பெருவழுதி.

இதற்குள் சோற்றினைப் பொங்கி முடித்துவிட்டாள் மூதாட்டி.

"நேற்று வைத்த முடக்கத்தான் சாறுதான். ஆனாலும் உடம்புக்கு நல்லது" என்று தயங்கித் தயங்கி அவள் கூறினாலும் அவர்கள் இருவருக்கும் உணவு படைப்பதில் விரைந்தே ஈடுபட்டாள்.

அப்போதிருந்த ஆற்றொணாப் பசிக்கு, அந்தச் சோறும் சாறும் அருமையான விருந்தாகவே இனித்தன தாமரைக்கு!

'இருங்கோவேள்' எழுத்துக்கள் பொறிக்கப் பெற்ற முத்திரைப் பதக்கத்தினைத் தாமரையிடமிருந்து பெறுவது தான் எளிதாக இருந்ததேயன்றி, அவள் தங்கியிருந்த மரமாளிகையைக் கண்டுபிடிப்பது அத்துணை எளிதாக இல்லை பெருவழுதிக்கு.

அவனுடைய தலையாய நோக்கம், இருங்கோவேளையும் கரிகாலரையும் இணைத்து வைத்திடல் மட்டுந்தானா? அல்ல; தாமரையை எவ்வாறேனும் தன் வாழ்க்கைத் துணையாக எய்திட வேண்டும் என்பதுமாகும்!

ஆனால், அப்போது மூட்டம் போட்டிருந்த அரசியல் முகில்களுக்கிடையே தன்னுடைய எண்ணம் ஈடேறல் எளிதல்ல என்பதும் அவனுக்குத் தெரிந்திடாமல் இல்லை.

அந்த வேளையில் தான் புலவர் காரிக்கண்ணனாரைப் பற்றிய நினைவு வந்தது. அவர்தம் அன்பினால் மட்டுமின்றிப் பண்பினாலும் கவரப்பெற்றவனே இளம்பெருவழுதி.

....அவருடைய பாடல்வரி ஒவ்வொன்றும் இனிக்கும் மலைவாழை: மணக்கும் மருக்கொழுந்து. அவரது உள்ளமோ மெல்லிய மல்லிகைப்பூ: கள்ளமே இல்லாதது..." என்றெல்லாம் தன் தோழர்களிடம் அவரைப் பற்றி அவன் ஏற்றிப் போற்றுவதுண்டு.

இத்தகைய ஈடுபாடு அவரிடம் அவனுக்கு ஏற்பட்டதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை.

மதுரை மாநகரிலே பாட்டரங்கம் ஒன்று நடைபெற்றது. அதிலே இளம்பெருவழுதியும் தன்னுடைய பாடற் புனலை இனிமை பொங்கிடப் பாயவிட்டான். அதனைக் கேட்டுத் திளைத்திட்ட காரிக்கண்ணனார் தம்மை விட இளைஞன் தானே என்று இளக்காரமாக எண்ணிடவில்லை; அழுக்காற்றுக்கும் இடம் அளித்திடவில்லை; இவனுக்கெல்லாம் உலகப் புகழ் ஏற்படுவதா? என்று வயிற்றெரிச்சல் கொண்டு இழிந்த போக்கிலும் நடந்திடவில்லை. மாறாக, “அவையோர்களே! என்னைப் 'புலவன்' என்று எல்லாரும் கொண்டாடுகிறீர்கள். அவ்வாறு உங்களால் ஒப்புக் கொள்ளப் பெற்ற புலவனாகிய யானே, இந்த இளம்பெருவழுதியின் பாக்களைச் சுவைத்து மெய்சிலிர்த்து நிற்கிறேன். இவர் என்னை விடப் பெரும் புலவர் மட்டும் அல்லர்; 'உலகப் பெரும் புலவரே' ஆவார்! என்று மனம்விட்டுப் புகழ் மழை பொழிந்தார். அதுமட்டுமா? அவனைக் கட்டியணைத்து முன் நெற்றியிலே முத்தமும் ஈந்தார்; அந்தக் கண்கொள்ளாக் காட்சியினைக் கண்டு பாட்டரங்கமே துள்ளிக்குதித்துக் கரவொலி எழுப்பி, இன்ப வெள்ளத்திலே நீச்சலடித்தது.

இவ்வாறு பரந்த மனப்பாங்கு கொண்ட அவர்தம் அரிய முயற்சியினால்தான் தன்னுடைய தந்தைக்கும் கரிகாலருக்குமிடையே நட்பு அரும்பிடலாயிற்று என்பதனை நன்றாக அறிவான் இளம்பெருவழுதி. எனவே தன்பால் எல்லையில்லாத அன்பு பூண்ட அவர் மூலமாகவே அவர்தம் அறிவுரையையும் துணையையும் கொண்டே தான் விரும்பியவளை அடைந்தால் என்ன என்னும் எண்ணமும் உண்டாயிற்று அவனுக்கு. அதே சமயம், சோழ மண்ணில் வாழும் அவரைக் கொற்கைப்பட்டினத்து இளவரசன் என்கின்ற நிலையில் வெளிப்படையாகப் போய்ச் சந்திக்கவும் அவன் விழைந்திடவில்லை. அதனால் சில சிக்கல்கள் எழுந்திடுமோ என்கிற அச்சமே! எனவேதான் யவனக்கிழவர் வேடத்தை அவன் மேற்கொண்டான்.

காரிக்கண்ணனாரும் அவனுடைய உள்ளார்ந்த காதலை எண்ணி உதவிட இசைந்தார். அதே சமயம் அவசரம் கூடாதென்று அணை போடுவதிலும் குறியாக இருந்தார். அடிக்கடி தம்மைச் சந்தித்து அறிவுரை கேட்டிட வந்த அவனைக் காட்டிக் கொடுத்திடாமலும் காப்பாற்றினார். அதனாலேயே சொல்லொணாத் துன்பங்களையும் பழிச் சொற்களையும்கூடச் சுமந்திட்டார்.

இளம்பெருவழுதி இவ்வாறாகத் தன் கதையினைச் சொல்லி முடித்திடும்பொழுது, கடைச்சாம வேளையாக இருக்கலாம். புகார் நகரத்துச் சேவல்கள் போட்டியிட்டுக் கொண்டு கூவலாயின. கீழ்வானில் வெள்ளி முளைத்து வெகு தொலைவுக்கு மேலேறி இருந்தது. தீவட்டி வெளிச்சத்தையே கூர்ந்து நோக்கியவண்ணம் ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டிருந்தான் கரிகாலன். பின்னர், "உங்களுடைய எண்ணம் பெருவழுதிப் பாண்டியருக்குத் தெரியுமா!" என்று அமைதியாக வினவினான்.

"இன்னும் தெரியாது அரசே! தங்களுடைய எதிரியான இருங்கோ வேளின் தங்கையை நான் மணக்க விழைகிறேன் என்பது கடுகளவு தெரிந்தாலும் போதும்; என் தந்தை கொடுஞ்சினம் கொண்டு விடுவார் என் மீது! அதனால் தான் முதலில் தங்களுடைய ஒப்புதலைப் பெற்றுத் தங்கள் மூலமாகவே அவரை நான் அணுகிட எண்ணுகிறேன். தாங்கள் தான் அவரிடம் நயமாக எடுத்துரைத்து என் நம்பிக்கை நலிந்திடாதவாறு காப்பாற்றிட வேண்டும். இன்னொன்றையும் தெளிவுபடுத்தினால் தாங்கள் தவறாகக் கருதிட மாட்டீர்கள் என எண்ணுகிறேன்."

"என்ன அது?"

"நான் தாமரையை மணப்பதால் அவள் சார்ந்த வேளிர் குடியினருக்குப் பரிந்து கொண்டு ஏதேனும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவேனோ என்று தாங்கள் ஐயுறவே தேவையில்லை. என்னால் எத்தகைய சிக்கலும் எழுந்திடவே எழுந்திடாது. இருங்கோவேள் தான் இயற்கை எய்திவிட்டார். அவருக்குப் பின்னர் வேளிர்குடியினரின் செல்வாக்கை உயர்த்திடும் அளவுக்கு அங்கே தளபதிகளோ தலைவர் களோ இருப்ப தாகவும் தெரியவில்லை. செந்தலையார் உயிரோடு இருந்தாலாவது ஏதேனும் செய்வார் என்று நாம் எண்ணி இடம் உண்டு. அவரும்தான் இறந்து போனார்!" - இளம்பெருவழுதி இவ்வாறு புகன்றிடவும்-

"ஆம்; மன்னர் மன்னவா! இளவரசர் இயம்புவது முற்றிலும் உண்மை. இருங்கோவேள் நெஞ்சிலே நஞ்சினைப் பாய்ச்சிக் கொண்டே இருந்தவர் அந்தச் செந்தலையார்தாம்? குரங்கினை ஆட்டி வைத்திடும் கோல் போலக் குழப்பங்கள் அத்தைைனக்கும் வித்திட்டவர் - ஏன், விதையாகவே வேலை செய்தவர்-அவர்தாம்" என்றார் காரிக்கண்ணனார்.

"அதற்கென்ன செய்வது புலவர் அவர்களே! செந்தலையாருக்குத் தாம் தொடர்ந்து அமைச்சராகவே பதவியில் நீடித்து, இந்த நாட்டு மக்களை ஆட்டிப் படைத்து அதிகாரஞ் செலுத்துவதற்கு முடியாமல் இந்தக் கரிகாலன் குறுக்கே வந்துவிட்டானே என்கிற ஆத்திரம். அதனால் தான் இருங்கோவேளைத் தூண்டிவிட்டு இந்தச் சோழ மண்டலத்தையே கைப்பற்றிடச் சூழ்ச்சிகள் பல புரிந்தார். அவருடைய உள்நோக்க மெல்லாம், இருங்கோவேளையும் அழித்துவிட்டுத் தாமே பேரரசர் ஆகிவிடவேண்டும் என்பது தான். நாட்டிலே அமைதியோ குழப்பமின் மையோ நிலவினால் அவருக்கு அறவே பிடிக்காதே! ஏதேனும் குட்டையை குழப்பிவிட்டு மீன் பிடிக்காவிட்டால் அவருக்கு உறக்கமே வராதாமே! பதவி வெறியைப் பற்றியோ சொல்லிடவே வேண்டாம்! 'செந்தலையார் - மற்றவர் வளர்ச்சியைக் கண்டால் வெந்தலைவார்!' என்று வேளிர் மக்களே அவரை கேலி செய்திடுதல் உண்டாம். வெளியிலே என்னவோ 'ஏழை பங்காளர்' என்றே பெரிய பெயர். அவர் வாழ்வதோ அடுக்கு மாளிகையில்; படுப்பதோ பட்டு மஞ்சத்தில்; குளிப்பதோ பன்னீர்த் தொட்டிகளில்! அவர் எப்படியோ வாழட்டும்; வசதிகளைத் துய்க்கட்டும்; அதைப்பற்றி நமக்குக் கவலை இல்லை. ஆனால், தம்முடைய பதவி வெறியைத் தணித்துக் கொள்வதற்காக இருங்கோவேளின் மனத்தையே கெடுத்து, இந்தச் சோழ மண்டலத்திற்கே தலைமை அமைச்சர் ஆகிவிடுவதற்கும், பின்னால் தாமே அரியணை ஏறுவதற்கும் சதிகள் புரியலாமா? பொய்களையே தளவரிசையாகப் போட்டு அதிலே புகழ் மாளிகையினை எழுப்பிட முயன்றால், அது எத்துணை காலத்திற்குத்தான் இடியாமல் நிலைத்து நிற்கும்? போகட்டும். அவர் இறந்துவிட்டார். அதற்காக நான் வருந்தாமல் இல்லை. அவர் உயிரோடு இருந்திருந்தால் நான் எவ்வளவோ மகிழ்ந்திருப்பேன்... ம் எங்கோ பேச்சைத் தொடங்கினோம்; எங்கோ வந்துவிட்டோம். இளவரசே! தாமரையைப் பொறுத்தவரை நீங்கள் உறுதியாகத்தான் இருக்கிறீர்கள். இல்லையா?" என்று கேட்டான் கரிகாலன்.

"ஆம்; மன்னர் அவர்களே! என்னுடைய உறுதிப்பாட்டில் இம்மி அளவுகூட விரிசலுக்கோ தளர்ச்சிக்கோ இடமே இல்லை. தங்களிடம் மனம்விட்டுச் சொன்னால்தான் என்ன தவறு? நான் கலையுணர்வு மிகுந்தவன்தான் என்றாலும் தாமரையைத் தவிர இதுகாறும் எந்த காரிகையையுமே நான் ஏறெடுத்துப் பார்த்ததே இல்லை; இனி பார்க்கப் போவதும் இல்லை. சுருக்கமாகச் சொன்னால், தாமரை இல்லை என்றால் பிறகு எனக்கு வாழ்வே இல்லை!” அழாத குறைதான் இளம்பெருவழுதியின் குரலில்; அவ்வளவு உருக்கமாக எடுத்துச் சொன்னான் தன் உள்ளக் கிடக்கையை!

.. ஏதேது. தாமரைக்காக பாண்டியநாட்டு அரியணையைக் கூட துச்சமெனக் கருதித் துறவுக் கோலமே பூண்டு விடுவீர்கள் போல் இருக்கிறதே!" என்று கேலியாகச் சிரித்த கரிகாலன் மேலும் தொடர்ந்தான்:

"அதற்காக உள்ளத்தை உடையவிட்டு விடாதீர்கள்! எது எப்படி இருந்தாலும் தமிழுக்குப் புறக்கணிப்பு என்றதுமே நீங்கள் இருவரும் கொதித்து எழுந்திருக்கிறீர்கள். அந்த உங்களுடைய ஆழமான தன்மான உணர்வுக்கும் தாய்மொழிப் பற்றுக்காகவுமே உங்கள் இருவரையும் இணைத்துவைத்திட வேண்டாமா? உங்களைப் போன்றவர்களால் தானே எதிர்காலத்தில் நம் இனப்பெருமையையும் மொழிச் செழுமையையும் அழித்திடாமல் காப்பாற்றிட முடியும்? எனவே, உங்கள் மனம்போல நீங்கள் மணம் புரிந்திட நான் உடனே பெருவழுதிப் பாண்டியருக்கு மடல் விடுத்து இசையச் செய்துவிடுகிறேன். போதுமா?" -சோழ மாமன்னனின் இந்தச் சொற்கள் இளம்பெருவழுதியின் இதயக் கிண்ணியில் தேன் துளியாகவே விழுந்தன. அவன்பால் நன்றி - நம்பிக்கை - பூரிப்பு- புல்லரிப்பு எல்லாமே ஒன்றிக் கலந்து, அவன் விழியோரத்தில் நீர்த்துளிகளாக அரும்பு கட்டின.

"மிகுந்த நன்றி மன்னவா! ஆனால் ஒரு சிறிய வேண்டுகோள்".. என்று தயங்கியவாறே தன் உதடுகளை அசைத்தான் அவன்.

"என்ன?"

"பொழுதுந்தான் விடிந்திடப் போகிறது. இருங்கோவேள் இறந்திட்ட செய்தியினை நானே போய்ப் பக்குவமான முறையில் தாமரையிடம் எடுத்துச் சொல்லி, அவளை இங்கே அழைத்து வருகிறேனே?" - இதனைக் கேட்டதும் கரிகாலனால் நகைக்காமல் இருந்திட முடிய வில்லை. அவன் காரிக்கண்ணனாரை நோக்கி மொழிந்தான்.

"பார்த்தீர்களா, புலவர் அவர்களே! சிறிது இடம் கொடுத்துப் பேசியதும் தன் காதலியை விரைவில் சந்தித்துப் பேசிட, எவ்வளவு திறமையாக திட்டம் இடுகிறார்!" பிறகு அவன் இளம்பெருவழுதியின் பக்கம் திரும்பி, “ஏன், பார்த்துப் பலநாள் ஆயிற்றோ?" என்று வேடிக்கையாகக் கேட்டான்.

இளம்பெருவழுதி அவனுக்கு என்ன விடையளிப்பான்? வெட்கத்தால் அவனது முகம் வெளிறிப் போயிற்று!

கரிகாலனும் சிந்தித்துப் பார்த்தான் - இருங்கோவேள் இறந்திட்ட செய்தியினை அவனுடைய எதிரியான தம் வாய் மூலம் நேரடியாகக் கேட்பதைவிடத் தன்னுடைய காதலன் வாயிலாகக் கேட்டால் தாமரையின் துயரச்சுமை என்ன இருப்பினும் சற்றுக் குறைந்திடுதல் இயற்கைதானே என்று தோன்றிற்று.

"சரி இளவரசே! உங்களுடைய ஆசையைத்தான் கெடுப்பானேன்!... ஆனால் ஒன்று, இளமைத் துடிப்பில் உங்கள் அவசரத்தைக் காட்டி விடாதீர்கள்! சற்று நிதானமாகவே இருங்கள்!" என்று கரிகாலன் பகர்ந்ததும், இளம் பெருவழுதிக்கு மகிழ்ச்சிப் பெருக்குப் பிடிபடவே இல்லை. அவனுடைய இதயம் முழுதும் நொடிப் பொழுதில் இனிப்புக் கடலாகவே மாறிப் பொங்கி ஆர்ப்பரித்தது.

“மிக மிக நன்றி அரசே! தங்களுடைய வாக்கினை மீறிடவும் மாட்டேன்; வழி தவறிச் சென்றிடவும் மாட்டேன். தாங்கள் உறுதியாக நம்பலாம். நான் விரைவிலேயே தாமரையுடன் இங்கு வந்து சேர்கிறேன்" என்று உணர்ச்சிப் பெருக்குடன் உரைத்துக் கரிகாலனிடமும் காரிக்கண்ணனாரிடமும் விடைப்பெற்றுக் கொண்ட இளம்பெருவழுதி, தாமரை தங்கியுள்ள அரண்மனை மாளிகை நோக்கி விரைந்து தன் அடிகளை நீட்டிப்போட்டான்.

சிறிது நேரத்தில்...