ரோமாபுரிப் பாண்டியன்/33. தப்பிச் சென்றாள்
33
தப்பிச் சென்றாள்
ஒரு காவலன் ஓடோடி வந்தான், அவன் கொணர்ந்திட்ட செய்தி. கரிகாலன், காரிக்கண்ணனார் இருவரையுமே திடுக்கிடச் செய்தது.
அவன் பரபரப்புடன் பகர்ந்த செய்தி இதுதான்.
"தாமரையைக் காணோம்!"
காவலன் கழறிய செய்தி கரிகாலனைத் திடுக்கிட வைத்ததோடு நின்றிடவில்லை; உள்ளூரச் சினநெருப்பு அவனிடம் சீறிக் கனன்றிடுமாறும் செய்துவிட்டது.
எனினும் தான் அப்போது அடைந்திட்ட திடுக்கீட்டையோ சினத்தையோ வழக்கம்போல் வெளிப்படையாகப் புலப்படுத்திட வில்லை அவன்; விண்ணிலே ஒரு பனைமர உயரத்திற்கு மேல் பூவரசம் பூவைப்போல் மலர்ந்து சிரித்திட்ட விடிவெள்ளியையே வெறித்து நோக்கிய வண்ணம் இருந்தான் அமைதியாக. அவனுடைய அமைதிக்கு எப்பொழுதுமே இரண்டு பொருள்கள் உண்டு. ஒன்று, ஆழ்ந்த சிந்தனை; மற்றது ஆத்திரம்! இப்போதைய அவனது அமைதிக்குக் காரணம், ஆத்திரமே! ஏனெனில் காணாமற்போயிருப்பது பச்சிளங் குழவி இல்லை! பசும் பொன் நகையும் இல்லை. உலகம் புரிந்த ஒரு மடந்தையே அரண்மனையை விட்டு மறைந்திருக்கிறாள்! அவள் தானாகத்தான் மதில் சுவர்களைக் கடந்து சென்றாளா. அல்லது மற்றவர்களால் கடத்திச் செல்லப்பட்டாளா என்றும் விளங்கிட இயலவில்லை.
கரிகாலனின் எண்ணப் பேராற்றிலே என்னென்னவோ சுழற்சிகளெல்லாம் ஏற்படலாயின.
"...அந்த நாளில் தென்னிலங்கையை ஆண்டிட்ட வேந்தன் இராவணனின் இளவல் கும்பகர்ணன்தான், உறக்கத்தில் மன்னன் என்று கேள்வியுற்றிருக்கிறேன்; என்னுடைய அரண்மனைக் காவலாளிகளில் சிலரோ, அந்தக் கும்பகர்ணனையே மிஞ்சிவிடுவார்கள் போல் இருக்கிறதே! அவர்கள் மட்டும் கண் விழிப்போடு மட்டுமல்ல - கருத்து விழிப்போடும் இருந்திருந்தால் தாமரை தப்பிச் சென்றிட முடிந்திருக்குமா?"
"சரி, புலவர் அவர்களே! இனியும் நாம் இங்கே உரையாடிக் கொண்டிருப்பதால் என்ன பயன்? வாருங்கள் அரண்மனைக்குப் போவோம்; அங்கே என்னதான் நடக்கிறது என்பது தெரிந்திட வேண்டாமா?" என்றவாறே கரிகாலன் அந்த மண்டபத்தை விட்டுக் கிளம்பினான். காரிக்கண்ணனாரும் அவனைப் பின் தொடர்ந்தார்.
இருங்கோவேள் சவமாகிக் கிடந்திடும் இடத்தினைத் தாண்டிச் சில அடிகள் தூரம் கூடச் சென்றிருக்க மாட்டார்கள். செழியன் அவர்களுக்கு முன்னே வந்து இறங்கி நின்றான், குதிரையிலிருந்து
"அரண்மனையிலிருந்துதானே வருகிறாய் நீ? தாமரையைப் பற்றிய செய்தி ஏதாவது தெரியுமா?" என்று வினவினான் கரிகாலன்.
"தாமரை காணாமற் போய்விட்ட செய்திதானே? தெரியும். நானும் அரண்மனைக்கு உள்ளேயும் வெளியேயும் எங்கும் தேடிப் பார்த்து விட்டேன். தென்படவே இல்லை. எனக்கோர் ஐயப்பாடு..."
"என்ன?"
"தங்கள் இருவரோடும் இருந்தாரே யவனக்கிழவர், அவர் இப்போது எங்கே?"
"ஏன்?"
"தாமரை தங்கியிருந்த மாளிகை அறையருகே யவனக் கிழவர் உருவம் ஒன்றைப் பார்த்ததாகத் தங்கள் மெய்க்காவலனிடம், காவலாளி ஒருவன் கூறியதைக் கேட்டேன். ஒரு வேளை அந்த மூன்றாவது யவனக்கிழவர்தான் தாமரையைக் கடத்திச் சென்றிருக்கலாமோ என்று கருதினேன்” செழியன் இவ்வாறு மொழிந்ததும் கரிகாலன், காரிக்கண்ணனார் இருவருமே திகைப்புற்று, ஒருவரையொருவர் பொருட்செறிவோடு பார்த்துக் கொண்டனர்.
இருவருடைய நெஞ்சின் அடிப்பரப்பிலும் இளம் பெருவழுதியைப் பற்றிய நினைவோட்டம், இனம் விளங்கிடாத கீறல்களை ஏற்படுத்திட முனைந்தது.
காதல் மயக்கம் என்பது ஒரு விந்தையான வழுக்குப் பாறை அல்லவா? அதிலே கண்ணியம் என்னும் கட்டை விரலை ஊன்றி, இடறி விழாமல் நெடுநேரம் நடப்பதென்பது எல்லாருக்கும் எளிதான செயல் அல்லதான். ஆயினும் இளம்பெருவழுதி கொற்கை இளவரசன் என்னும் ஓர் உயர்ந்த பொறுப்பினுக்கும் உரிமை படைத்தவன் ஆயிற்றே? அவனும் மற்ற மற்ற மனிதர்களைப்போல் தன் மனம் போன போக்கிலே மையல் குளத்திலே விளையாட விழையலாமா? இளம்பெருவழுதி, மனிதர்கள் நடந்து செல்லும் வழியினைக் காத்திடும் காவலன் மட்டும் அல்லன்; புதிய வழிகளைப் படைத்துக் காட்டிடும் பாவலனும் ஆவான்; மற்றவர்களுக்கு வழிகாட்டிடும் அளவுக்குப் பாக்கள் புனைந்திடும் அவன், தானே வழிதவறிச் சென்றிட மாட்டான் என்னும் திடமான நம்பிக்கையும் அவர்களுக்கு இல்லாமல் இல்லை. எனினும் இளமைத் துடிப்புப் பொல்லாததாயிற்றே!
கரிகாலன் தொண்டையைக் கனைத்துக் கொண்டவனாக, "என்ன புலவர் அவர்களே! ஒரு வேளை...?" என்று இழுத்தாற்போல் தொடங்கினான்.
"இருக்கவே இருக்காது அரசே! உறுதியாக நம்பலாம்" என்று தெளிந்த குரலில் மொழிந்தார் காரிக்கண்ணனார்.
அவர்களுடைய சொற்களில் புதைந்துள்ள மறைபொருளை உணர்ந்து கொண்டவனைப் போல் செழியன் குறுக்கிட்டான்.
"அப்படியானால் தாமரையின் அறைப்பக்கம் காணப்பட்ட அந்த ஆள் நாலாவது யவனக்கிழவராக இருப்பாரோ? வேறு எப்படித்தான் அவள் வெளியேறினாள் என்பது புரியாத புதிராக இருக்கிறதே!"
"சரி! அந்தப் புதிரை அவிழ்ப்பது பற்றி அப்புறம் சிந்திக்கலாம். இப்போது இருங்கோவேளின் இறுதிக் கடனுக்குரிய ஏற்பாடுகளைப் பற்றிக் கவனிப்போம்!" என்று முத்தாய்ப்பு வைத்துவிட்டு மேலே நடந்தான் கரிகாலன்.
பொழுது புலர்ந்தது. இருங்கோவேளின் இறப்புச் செய்தி புகார் நகரம் முழுவதுமே எதிரொலிக்கலாயிற்று. அதற்குக் காரணம், வானக் கவிகையே கிழிந்திடும் வண்ணம் அதிர்ந்திட்ட பறை முழக்கமே! மணவேளையின் போது ஒரு வகையாகவும், பிண வேளையின் போது வேறு வகையாகவும், பறையினை முழக்குவதற்கே வரையறை வகுத்து வாழ்ந்தவர்கள் அல்லவா தமிழ்ப் பெருங்குடியினர்! அந்தக் கலையிலே கைதேர்ந்தவர்கள் இப்போது இருங்கோவேள் மறைவுச் செய்தியை ஒலிபரப்புவதிலே தங்கள் திறமை அனைத்தையும் காட்டிப் பறைகளை முழக்கினர்.
டையிடையே வினாக்குறியினை ஒத்த கொம்புகள் யானைகள் பிளிறினாற் போல் ஓலமிட்டு அழுதன.
இறுதி வேளை நெருங்கிவிட்டது.
இன்னும் சில வினாடிகளில், தன் தமக்கையின் கணவனான இருங்கோவேளின் சடலம் மண்ணோடு மண்ணாகப் போகிறதே என எண்ணிய அளவில் செழியனால் துயரத்தினை அடக்கிட இயலவில்லை. என்ன இருப்பினும் இரத்த பாசம் அல்லவா? ஒரு மரத்தின் மறைவிலே நின்று கொண்டு அவன் குமுறிக் குமுறி அழுதிட்டான்.
அதே நேரத்தில் முத்துநகையோ, தீப்பட்ட தேனீயாகத் துடியாய்த் துடித்தாள். இருங்கோவேளை வேண்டுமானால் அவள் வெறுத்திடலாம்; அவனுடைய உயிரையே பறித்திடலாம். ஆனால் வீரபாண்டியை - அவனுடைய வீறுநடையினை - விரிந்த மார்பினை - ஆரத்தழுவலை. அன்புக் கொஞ்சலை அவளால் எங்ஙனம் மறந்திட இயலும்? அதுவும் தன்கையினாலேயே அவனைக் கொன்றிட நேர்ந்ததே என்று நினைத்திட்ட அளவில், அவளுடைய இதயமே வெடித்துப் பிளந்திடும்போல் இருந்தது.
இவ்வாறாக இரண்டு இரங்கத்தக்க உயிர்கள் தனித்துப் புலம்பித் தத்தளித்திட, இருங்கோவேளுக்குரிய இறுதிக் கடன்கள் எல்லாவிதமான அரச மரியாதைகளுடனும் இனிது நிறைவேறின.
கரிகாலன் தன்னுடைய மாளிகைக் கூடத்தினில் ஓய்வாக அமர்ந்திருந்தான். புலவர் காரிக்கண்ணனாரும் உடனிருந்தார். தம்முடைய செல்ல மகள் முத்துநகையின் எதிர்காலம் இனி என்ன ஆகுமோ என்னும் கவலையின் நிழல் அவரது பழுத்த முகமெங்கும் படர்ந்து கிடந்தது.
சிறிது நேரத்தில் மெய்க்காவலன், கரங்கள் கட்டப்பெற்ற ஒரு காவலாளியை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.
"மன்னவா! தாமரை தப்பிச் செல்லுவதற்கு இவனும் துணை புரிந்திருப்பானோ என்று ஐயுறும்படியாக இருக்கிறது. ஏனெனில் அவள் அணிந்திருந்த முத்துமாலையை இவன் 'கையூட்டாக' (இலஞ்சமாக)ப் பெற்று ஒளித்து வைத்திருக்கிறான். அதற்கு இவன் கூறும் காரணங்கள் நம்பும்படியாக இல்லை" என்றான்.
"நீ என்ன சொல்கிறாய்? கையூட்டு வாங்கிக் கொண்டு இவன் தாமரையைத் தப்பவைத்து விட்டானா...?"
"ஆம் அரசே! அப்படித்தான் நாம் எண்ணும்படியாக இருக்கின்றன இவனது சொல்லும் செயலும்..."
"வேடிக்கையாக இருக்கிறது மெய்க்காவல! வேடிக்கையாக இருக்கிறது! உழைத்திடாமல் எவரிடமிருந்தும் ஒரே ஒரு சல்லிக் காசினைப் பெறுதல் கூடத் தகாத 'இரத்தல்' எனக்கருதுகின்ற இந்தத் தமிழ் மண்ணிலே 'கையூட்டு' என்கிற கொடிய பழக்கம் குடியேறிட இடம் தருவதாவது? அதனை முளையிலேயே கிள்ளி எறிந்திட வேண்டுமே!. இல்லையென்றால் இவனைப் போன்ற ஒரு சில புல்லுருவிகளின் பொல்லாங்கான போக்கினால், அரசுப் பணியாற்றும் அத்தனை பேருக்குமே அவப்பெயர் உண்டாகிவிடுமே!... சரி, உடனே இவனைச் சிறையிலே தள்ளி, மேற்கொண்டு துப்புகளைத் துலக்குவதற்கான நடவடிக்கைகளை விரைந்து முடிக்கி விட்டிட வேண்டும்!" என்று ஆணை பிறப்பித்தான் கரிகாலன்.
மெய்க்காவலனும், அந்தக் குற்றவாளியும் அப்பால் சென்று மறைந்ததும், காரிக்கண்ணனார் கரிகாலனை நோக்கி மெல்லக் கேட்டார்: "ஆமாம்; அந்தக் காவலாளியின் முகத்தினைப் பார்த்தால் நம் தமிழ் நாட்டவனாகத் தெரியவில்லையே!"
"தாங்கள் குறிப்பிடுவது சரிதான், புலவர் அவர்களே! அவன் வச்சிர நாட்டைச் சார்ந்தவன்."
"அப்படியா? அவன் எப்படி நம்முடைய அரண்மனையிலே வந்து டம் பிடித்தான்?"
"நான்தான் அவனை அலுவலில் அமர்த்தினேன். அவன் மட்டுமா, இன்னும் சில வெளிநாட்டுக்காரர்களும் கூட நம் அரண்மனையில் புதிதாக அலுவல் பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இங்கே வந்து குடியேறி விட்டவர்களுக்கு நாம்தானே வாழ்வளிக்க வேண்டும் என்று நாம் ஏதோ இரக்கப்பட்டு வேலையில் அமர்த்தினால், அவர்கள் ஒழுங்குமுறையோடு நடக்க மறுக்கிறார்கள்; நம்முடைய அரசு நிர்வாகம் நெறியோடு இயங்காதவாறு அதற்கு உலைவைத்திடவும் தலைப்படு கிறார்கள்; என்ன செய்வது?"
"ஆமாம்; இவ்வளவு தொலைவு கடந்து வந்து அவர்கள் எவ்வாறு இங்கே குடியேறிட முடிந்தது?"
"ஓ! அதைப் பற்றிக் கேட்கிறீர்களா? நான் 'வாகை' என்னும் இடத்திலே குறுநில மன்னர்கள் சிலரைப் புறங்கண்ட பின்னர் இமயமலை சென்று நம்முடைய புலிக்கொடியினை நாட்டிவிட்டுத் திரும்பி வந்தேன் அல்லவா?"
"ஆமாம்! அங்கே கொடியை மட்டுமா நாட்டினீர்கள்? எந்தக் காலத்திலும் இந்தச் சோழ மன்னனின் பெருமை வடபுலத்திலே சுடர் வீசிடவேண்டும் என்பதற்காக இமயமலையின் இரும்பன்ன பாறைகளில் நம் புலிக்கொடியின் சின்னங்களையும் பல இடங்களிலே பொறித்தீர்களே! அது மட்டுமா! ஒரு கணவாய்க்குச் 'சோழர் கணவாய்' என்றும், ஒருமலைத் தொடருக்குச் 'சோழ மலைத்தொடர்' என்றும் கூடப் பெயர்களைச் சூட்டி வரலாற்றிலே ஓர் இடத்தினை அங்கே பதித்துவிட்டுத் தானே திரும்பினீர்கள் !"
"தாங்கள் என்னவோ நான் இமயத்திலே சின்னங்கள் பொறித்திட்டதையும், பெயர்களைச் சூட்டியதையும் பெருமையாகப் பேசுகிறீர்கள்! ஆனால், நம்மவர்கள் சிலரே என்னுடைய அந்த நடவடிக்கைகளை யெல்லாம் எவ்வளவு ஏளனமாக ஏசியிருக்கிறார்கள் தெரியுமா?" என்று வருத்தத்துடன் பகர்ந்தான் கரிகாலன். "அவர்களுக்கு என்ன அரசே! எதனை வேண்டுமானாலும் இளக்காரமாகப் பேசிடுவார்கள்; எதற்கு வேண்டுமானாலும் எதிர்ப்புக் காட்டிடுவார்கள். அறிஞர்கள், கவிஞர்கள், ஆன்றோர்கள் இவர்களுக்காகச் சிலைகள் அமைப்பது, சின்னங்கள் பொறிப்பது, பெயர்களைச் சூட்டுவது எல்லாம் வெறும் வேடிக்கைக்காகவா? அல்லது வீண் பொழுது போக்கிடவா? பிற்காலத்தில் இந்த மண்ணிலே பிறக்கப்போகும் பிள்ளைகளும், பேரர்களும், 'ஆகா; நம்முடைய முன்னோர்கள் எங்ஙனமெல்லாம் பேரறிஞர்களாகவும், பெருங்கலைஞர் களாகவும், ஆற்றல் மறவர்களாகவும், அரசியல் வும் உலகப்புகழை அடைந்திருக்கிறார்கள்! அவர்களைப் போலவே நாமும் ஏன் ஆகக்கூடாது புகழினை அணைத்திடக் கூடாது? என்றெல்லாம் எண்ணிட- இறும்பூது எய்திட - அதன் மூலம் எழுச்சியினைப் பெற்றிடத் தான் அந்தச் சின்னங்கள். சிலைகள், பெயர்கள் யாவும் தோற்றுவிக்கப்படுகின்றனவே அல்லாமல் வேறு எதற்கு?"
"அவர்கள் தூற்றினால் தூற்றிவிட்டுப் போகட்டும் புலவர் அவர்களே! தூய்மையான உள்ளத்துடன் நாம் துவங்கிவிட்ட பயணத்தை பாதியி லேயே அவர்களுக்கு அஞ்சி நிறுத்திடப்போகிறோமா?... அது கிடக் கட்டும்; நான் இமயத்திலிருந்து திரும்பும் வழியில் வச்சிரநாட்டு மன்ன னையும், மகதநாட்டு அரசனையும், அவந்தி நாட்டு வேந்தனையும், தோற்கடித்தேன் அல்லவா?"
"ஆமாம், அந்த வெற்றிகளின் சின்னங்களாகத்தானே வச்சிர நாட்டுச் சிற்பிகள் சமைத்த முத்துப் பந்தரும், மகத நாட்டுச் சிற்பிகள் எழுப்பிய பட்டிமண்டபமும், அவந்தி நாட்டுக்காரர்கள் அழகுற அமைத்த தோரண வாயிலும் இன்றும் நம் பூம்புகார் நகருக்குப் பொலிவினைத் தந்த வண்ணம் உள்ளன!"
"அந்தச் சிற்பிகளோடு வந்த சில பணியாட்கள்தாம் இங்கே குடியேறியவர்கள். அவர்களைத்தாம் நம் அரண்மனையில் வேலைக்கு அமர்த்தி வைத்தேன். அவர்கள் என்னவென்றால், இப்படிக் 'கையூட்டுப் போன்ற கேவலமான பழக்கங்களுக்கெல்லாம் இரையாகின்றார்கள்; கீழறுப்பு வேலைகளிலும் ஈடுபடுகின்றார்கள்..." - கரிகாலன் இவ்வாறு மொழிந்து கொண்டிருக்கும் பொழுதே பாண்டியத் தளபதி நெடுமாறன் பரபரப்புடன் உள்ளே நுழைந்திட்டான்.
"வாரும் நெடுமாறரே! தாமரையைப் பற்றிய புதுச் செய்தி ஏதேனும் உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டான் சோழ மாமன்னன்.
"இல்லை! அரசே! ஆனால் எங்களுடைய வேந்தர் பெருவழுதிப் பாண்டியர் அவர்கள் அனுப்பியுள்ள ஒரு முக்கியமான மடலைத் தங்களிடம் தந்திடவே இப்போது வந்துள்ளேன். மேலும் இன்னொரு செய்தியையும் தங்களிடம் தெரிவித்திடக் கடமைப்பட்டுள்ளேன். நானும் செழியனும் மற்ற பாண்டிய நாட்டு மறவர்களும், ஏன் காரிக்கண்ண னாரும் கூட, உடனடியாக மதுரை மாநகருக்கு வந்திடவேண்டும் என்றும் எங்கள் மன்னர் சொல்லியனுப்பியுள்ளார் அத்துடன் ரோமாபுரி நாட்டிலிருந்து தூதுவர் ஒருவரும் இப்போது அங்கே வந்துள்ளாராம்..." என்று கூறியவாறே பட்டுத் துகிலினால் பத்திரமாக மூடப்பெற்ற ஒரு மடலினை எடுத்துக் கரிகாலனிடம் பணிவுடன் நீட்டினான் நெடுமாறன்.
"என்ன, ரோமாபுரியிலிருந்து தூதுவர் வேறு வந்திருக்கிறாரா?" என்று திகைப்புடன் கேட்டவாறே மடலினைப் பிரித்துப் படிக்க முற்பட்டார் கரிகாலர்.
ஆனால்...
அடுத்த கணமே அவரது பரந்த முகத்திலே இருள் கவிழ்ந்தது.
பெருவழுதிப் பாண்டியன், திடீரென்று உடல் நலங்குன்றிப் படுக்கையில் விழுந்துவிட்டான் என்னும் செய்தியே கரிகாலனின் முகத்திலே இருளினைப் படரவிட்டதாகும்.
புலவர் காரிக்கண்ணனாரின் பெரு முயற்சியினால் அண்மைக் காலமாகத்தான் அவனது நட்பினில் திளைத்திடும் நல்வாய்ப்பினைப் பெற்றிருந்த போதிலும், படிக்கச் சுவைத்திடும் பழச்சுவைத் தமிழ்நூல் போல் பழகுதற்கு இனிய பண்பாளனே பாண்டிய வேந்தன் என்பதனை நன்கு உணர்ந்திருந்தான் சோழ மன்னன். தன் அரிய நண்பர் விரைவினில் குணம் பெற்றிட வேண்டுமே என்று அவன் வருத்திக் கொண்டான் மனத்திற்குள்ளேயே!
ஆயினும் நோய் மிகக் கடுமையானதாகத்தான் இருந்திட வேண்டுமென்று அவனுக்குத் தோன்றுகிறது. அதற்குக் காரணம் தளபதி நெடுமாறனையும், செழியன் முதலான மறவர்களையும், உடனே தலைநகருக்கு அனுப்பி விடுமாறு மடலில் குறிப்பிடப்பட்டிருந்தது மட்டும் அன்று: அந்த மடலே மன்னனின் கைப்பட வரையப் பட்டிருக்கவில்லை; அவனது கையொப்பமும் அதிலே காணப்பட வில்லை. மாறாகப் பாண்டிய அரசின் நிர்வாகத்தினை இயக்கும் பல்வேறு ஆட்சித்துறைத் தலைவர்களுள் ஒருவரான (இக்கால 'அரசாங்கச் செயலாளர்' அல்லது இயக்குநர்களை நிகர்த்த) 'திருமுகம் எழுதுவோர்' தான் அம்மடலினைத் தீட்டியிருந்தார்.
...இத்துணைக் கடுமையாகப் பெருவழுதி பிணியுற்றிருக்கும் செய்தி. கவணிலிருந்து புறப்பட்ட கல்லாகக் கொற்கைப்பட்டினத்தை நோக்கியும் விரைந்து பறந்திருக்குமே! ஆனால், அதனைக் குறித்த காலத்தில் அறிந்திடவும், உடனே தன் தந்தையைக் கண்டிடும் பொருட்டு மதுரை மாநகர் நோக்கிக் கிளம்பிடவும் இளம்பெருவழுதி இந்நேரம் அங்கே இருந்திட முடிந்திருக்குமோ? தாமரையை அழைத்து வருவதாகக் கூறிச் சென்ற அவ்விளவரசன், திரும்பிவந்திடவில்லையே! அவளைக் காணோமென்று கேள்வியுற்ற அளவிலேயே அவளைத் தேடிக்கொண்டு வேறெங்கேனும் சென்று விட்டாரோ? அப்படியானால், பாண்டிய மன்னன் நோய்வாய்ப்பட்டுவிட்ட நிலையில், மதுரை மாநகரிலேயே பல்வேறு அரசியல் சிக்கல்கள் பல்கிப் பெருகிடவும், புதிய வடிவங்கள் பெற்றிடவும் இடம் ஏற்பட்டு விடுமே!" என்றெல்லாம் எண்ணத் திவலைகள் கரிகாலனின் இதயத்தினுள்ளே தெறித்து விழுந்தன. ஆயினும் அவற்றினை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,
"சரி நெடுமாறரே! நீங்களும் உங்கள் வீரர்களும், இருங்கோவேள் எழுப்பிய பகைமைத் தீ பரவி விடாமல் அணைத்திடும் வகையில் எவ் வளவோ பணியாற்றினீர்கள்; துணை புரிந்தீர்கள். அவற்றை யெல்லாம் இந்தச் சோழ மண்ணிலே பிறந்தவர்கள் என்றுமே மறந்திட மாட்டார்கள். நீங்கள் உடனே மதுரை மாநகருக்கு திரும்பிச் செல்லுங்கள். நானும் உங்களுடனேயே புறப்பட்டு வந்து பெருவழுதிப் பாண்டியரைப் பார்த் திட வேண்டும் என்னும் பேராவல்தான் எனக்கும்; ஆனால், தாமரை காணாமற் போயுள்ள இக்கட்டான நிலையில் சிலமுக்கியமான நடவடிக் கைகளையெல்லாம் முனைந்து மேற்கொள்ள வேண்டியுள்ளது. நீங்கள் பாண்டிய நாட்டுத் தலைநகர் சென்றதும் மன்னனின் உடல்நலம் பற்றி உடனுக்குடன் மடல் விடுத்திட வேண்டும், மறந்திட மாட்டீர்களே?" என்று கரிகாலன் கேட்டான்.
'இல்லை, அரசே! கண்டிப்பாக அடிக்கடி மடல் விடுக்கிறேன். ஆமாம். காரிக்கண்ணனார் அவர்களும் எங்களுடனேயே புறப்படு கிறார் அல்லவா?" என்று வினவினான் நெடுமாறன்.
"அவரும் உடனே வந்திட வேண்டியதுதான். ஆனால் நீங்களும், உங்கள் மறவர்களும் கிளம்பி விடுங்கள்; அவரும் செழியனும் அடுத்து வந்துவிடுவார்கள்."
நெடுமாறன் விடைபெற்றுச் சென்ற பின்னர், கரிகாலன் காரிக்கண்ண னாரை நோக்கினான்.
"நான் ஏன் பாண்டியத் தளபதியை முதலில் கிளம்பி விடுமாறு பகர்ந்தேன் தெரியுமா, புலவர் அவர்களே இந்த மடலினைப் பொறுத்துச் சில அந்தரங்கச் செய்திகளை யெல்லாம் தங்களிடம் சொல்லி அனுப்பிட வேண்டியுள்ளது." "ஏன்? மடலிலே மன்னரின் உடல்நிலை பற்றிய செய்தி வேறு ஏதேனும் இடம் பெற்றுள்ளதா?"
'அங்ஙனம் இடம் பெற்றிடாததுதான் என்னைப் பல வகையான சிந்தனைகளுக்கு இலக்காக்கியுள்ளது. புலவர் அவர்களே! நெடுமாறன் இங்கே வந்து நுழைந்திடும் பொழுது ரோமாபுரியிலிருந்து தூதுவர் ஒருவர் வந்திருப்பதாகக் கூறியதைக் கேட்டீர்கள் அல்லவா?"
"ஆம், அரசே?"
"ஆனால், அதைப் பற்றிய குறிப்பே இந்த மடலினில் இல்லை. பெருவழுதி அவர்களே தம் கைப்பட இதனை வரைந்திருந்தால், அந்த இன்றியமையாத செய்தியினைக் கண்டிப்பாகத் தெரிவித்தே இருப்பார். ஆட்சித் துறைத் தலைவர்களுள் ஒருவரான 'திருமுகம் எழுதுவோ'ருக்கு அயல்நாட்டுத் தூதுவர் ஒருவர் நம்நாட்டுக்கு வந்துள்ள நிகழ்ச்சியின் அருமை புரியாதிருக்கலாம். அல்லது சோழ நாட்டுக்கோ, சேர நாட்டுக்கோ அதனைப்பற்றித் தெரிவித்தல் கூடாதென்று தவறாகவும் அவர் கருதியிருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை, ரோமாபுரி மாமன்னர் தூதுவரை அனுப்பியுள்ளமை, பாண்டிய நாட்டுக்கு மட்டுமே கிட்டிய பெருமையாக நான் கருதிடவில்லை. சேர, சோழ, பாண்டியர் ஆளும் முப்பெரு நாடுகளும் அடங்கிய தமிழ்நாடு முழுமைக்குமே கிட்டிய பெருமையாகவே எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன். நானே, ரோமாபுரிக்கு ஒரு தூதுவரைத் தமிழகத்தின் சார்பில் அனுப்பி வைத்திட எண்ணிக் கொண்டிருந்தேன். ஏனோ, இருங்கோவேள் தந்திட்ட தொல்லைகளாலும், வேறு சில சிக்கல்களினாலும் என் எண்ணத்தினைச் செயற்படுத்திட இயலாது போயிற்று. இப்போது அந்த முதல் வாய்ப்பு, பாண்டிய நாட்டினுக்கு வந்துள்ளது. அதனைச் சரியாக அவர்கள் பயன்படுத்திட வேண்டுமே என்பதுதான் எனக்கு இப்போது கவலையாக உள்ளது. ஏன் தெரியுமா?"
"ஏன் அரசே?"
"பாண்டிய நாட்டிலிருந்து ரோமாபுரிக்குச் சென்றிடக் கூடிய தூதுவர், அரசியல் அறிவு மிக்கவராக இருந்தால் மட்டும் போதாது! நம்முடைய பழம் பெருமையினையெல்லாம் நன்கு பறைசாற்றிடவல்ல நாநயமும் கூர்மதியும் கொண்டவராக இருத்தல் வேண்டும். கிரேக்கப் பேரரசர் அலெக்சாந்தர் வடபுலத்தின்மீது படையெடுத்து வந்ததாலோ என்னவோ, மேனாட்டினர் வடநாட்டினை அறிந்து கொண்ட அளவுக்குத் தென்னகத்தினைப் பற்றி அறிந்திடவில்லையோ என எண்ணும்படியாக இருக்கிறது. இப்போது இங்கிருந்து செல்கிற தூதுவர், இந்நாவலந்தீவின் தொன்மையான வரலாறு தெற்கிலிருந்துதான் தொடங்குகிறதே அன்றி, வடக்கிலிருந்து அல்ல என்பதனைத் தெளிவு படுத்தினால்தானே அவர்கள் முறையாக நம்மைப்பற்றித் தெரிந்து கொள்ள முடியும்?"
"தாங்கள் மொழிவது சரிதான் மன்னவா! பஃறுளியாறு பாய்ந்திட்ட நிலக்கோளத்தின் நடுப்பகுதிதானே முதன் முதலாக மனிதர்கள் தோன்றிய இடம்! அந்த மனிதர்களும் நம்முடைய முன்னோர்களான திராவிட இனத்தவர்தாமே! அவர்கள் பேசிய திராவிடத் தமிழ்தானே இன்றுள்ள 'செந்தமிழ்' ஆகச் செப்பம் பெற்றுச் சிறந்து விளங்குகிறது! நடுஆசிய மொழிக் கூட்டமான 'சிதியன்குடி'யினைவிட நம் செந்தமிழ் தனித் தன்மை வாய்ந்தது-கனிச்சுவை மலிந்தது என்பதனை நாம் உருவான வகையில் எடுத்துரைத்தால்தானே வெளி நாட்டினர் நம்மைப் பற்றிய உண்மைகளை நன்றாக விளங்கிக் கொள்ள இயலும்! ஆகவே, ரோமா புரிக்குச் சென்றிடும் பாண்டிய நாட்டுத் தூதுவர் தாங்கள் பகர்ந்ததைப்போல வெறும் அரசியல் அறிவுபடைத்தவராக இருந்தால் மட்டும் போதாதுதான்! வரலாற்று அறிவினில் வல்லுநராகவும், மொழிப்புலமையில் முதிர்ச்சியுடையவராகவும்கூட இருந்திடத்தான் வேண்டும். அது மட்டுமா? அறிவிலும் ஆற்றலிலும் எத்துணைதான் நிறைந்து நின்றிட்ட போதிலும், நம்முடைய மொழி-இன-நாட்டு நலன்களில் உள்ளார்ந்த பற்று, நம்பிக்கை, அக்கறை அனைத்தும் இல்லாதவராக இருந்திட்டால் அத்தகைய தூதுவரால் நமக்கு எந்தவிதப் பயனுமே ஏற்படாது."
"அதனால்தான் புலவர் அவர்களே, எல்லாவற்றிற்கும் பொருத்த மான ஒருவரைப் பெருவழுதிப் பாண்டியர் மிகுந்த எச்சரிக்கையோடு தேர்ந்தெடுக்கும் வண்ணம் தாங்கள் முன்னின்று அவருக்கு ஆய்வுரை வழங்கிட வேண்டுமென்று நான் விழைந்தேன். ஆமாம்! தாங்கள் அறிந்த அளவிலே பாண்டிய நாட்டவருள் யாரைத் தகுதி மிக்கவராகக் கருதுகிறீர்கள்?"
"எனக்கென்னவோ, இளவரசர் இளம்பெருவழுதியே எல்லாவற் றுக்கும் பொருத்தமானவராகப் புலப்படுகிறார். ஆனால், பெருவழுதிப் பாண்டியர் வேறு யாரை எண்ணிக் கொண்டிருக்கிறாரோ?"
"எனக்கும், இளம்பெருவழுதி சிறந்த தூதுவராகத் திகழத் தக்கவர் என்றே தோன்றுகிறது. ஆனால், அவர் தாமரையின் மீதுள்ள மயக்கத்தில் எங்கே அலைந்து கொண்டிருப்பாரோ தெரியவில்லை?"
"ஆம் மன்னவா! அதுதான் எனக்கும் என்ன செய்வது என்று புரியவில்லை. எவ்வாறாயினும் பாண்டிய வேந்தரை நம் இருவருடைய கருத்தினுக்கும் இசையுமாறு செய்திடலாம் என்னும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அப்புறம் இன்னொரு வேண்டுகோள், அரசே!" "என்ன?"
"முத்துநகையையும் என்னுடன் பாண்டிய நாட்டுக்கு அழைத்துச் சென்றிட விரும்புகின்றேன்."
"அப்படியா? அவள் புகார் நகரிலேயே இருந்தால் அரசியல் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டிடுவதில் எனக்குத் துணை புரிவாள் என்றல்லவா எண்ணினேன்? ம்... ஆனால் இப்போது அவளுக்கு ஏற்பட்டுவிட்ட மன அதிர்ச்சிக்கு வெளிநாடுகளுக்குச் சென்று வருவதும் நல்லதுதான். சரி; அழைத்துச் செல்லுங்கள்!" என்றான் கரிகாலன்.