உள்ளடக்கத்துக்குச் செல்

ரோமாபுரிப் பாண்டியன்/34. மதுரைப் பயணம்

விக்கிமூலம் இலிருந்து

34

மதுரைப் பயணம்

நெடுமாறன் தன் மறவர்களுடன் முதல்நாள் மாலையே புரவிகள்

மீதேறி மதுரை மாநகருக்குப் புறப்பட்டு விட்டான். மறுநாள், நிலந்தெளிந் திடும் நேரத்தில், ஒரு சிறு தேரினில் புலவர் காரிக்கண்ணனார், முத்துநகை, செழியன் ஆகிய மூவரும் கிளம்பினர்.

இந்த நெடும்பயணம் முத்துநகையின் துயர்மேகம் சூழ்ந்த உள்ளத்திற்கு அயர்வினை நீக்கிடும் அருமருந்தாகவே அமைந்து விட்டது. வழி நெடுகிலும், எழிலைப் பொழிந்திடும் இயற்கைக் காட்சிகள், அவளது இதயத்திற்குக் குளிர்ச்சியைக் கொடுத்தன. மகிழ்ச்சியை அளித்தன!

பாண்டிய நாடு கடல்வளம் மட்டுமன்றி மலை வளமும் பூண்டதல்லவா? விண்ணிலே மிதந்தோடும் கருமுகில்களைப் போல் வும், மலைக்குன்றுகள் ஆங்காங்கே படுத்துக் கிடந்த வண்ணம், எத்தகைய இடர்வரினும், மலைவுறா மனங்கொண்ட மனிதர்களை நினைவுபடுத்தின.

குன்றுகளை அடுத்த பள்ளத்தாக்குகளில் பச்சைப் பசேல் என்னும் செந்நெற் பயிர்கள். இடையிடையே அதில் சந்தன மரங்கள் நெடிதோங்கி நிழல் பரப்பின. நெல் வயல்கள் மட்டுமின்றி. இஞ்சி, மஞ்சள் செடிகளும் விழிகளுக்கு விருந்தளித்தன.

அது முசுண்டைக் கொடிகள் பூத்திடும் காலம் போலும். அவற்றிலே வெள்ளித் திருகாணிபோல் பூக்கள் மலர்ந்து பாறைகளிலெல்லாம் பால் விரித்தாற் போன்று சிதறிக் கிடந்தன. அவற்றின் நடுநடுவே ஓடிய பீர்க்கங் கொடிகளிலோ தங்கப் பில்லாக்காகத் தகதகக்கும் மஞ்சள் மலர்கள். செங்கொன்றைப் பூக்களும் பவளமணிகளை நினைவூட்டிப் பூத்துக் குலுங்கின.

மதுரை மாநகரை நெருங்க நெருங்க, முத்துநகையின் மூட்டம் போட்டிருந்த மனநிலை-வாயைத் திறந்திடாத அமைதிப் போக்கு அவளைவிட்டு முற்றிலும் விடைபெற்று விட்டது. ஏதோ புதிய உலகினில் அடிவைத்தாற் போல அவளது இதயமே இதழ்கள் அவிழ்ந்திட்ட மலராக மாறிவிட்டது. ஒவ்வொரு பகுதியினைத் தங்களுடைய சிறுதேர் கடந்திடும் பொழுதும், 'அது என்ன குன்று அண்ணா? - இது என்ன சுனை அண்ணா?... இது என்ன ஊர், அண்ணா?' என்றெல்லாம் செழியனை நச்சரிக்கத் தொடங்கி விட்டாள் அவள். அவனும் சளைக்காமல் அவள் வினவியவற்றுக்கெல்லாம் விடையளித்துக் கொண்டே வந்தான். தன் சொந்த மண்ணிடம் உண்மையான பற்றுக் கொண்ட எவனுக்கும் அதன் வற்றாத வளத்தினையும் வரையில்லாப் பெருமையினையும் பிறரிடம் சொல்லிச் சொல்லிப் பூரிப்பதில் சலிப்பா ஏற்படும்?

பறம்பு மலையினைக் கடந்து சென்றிடும் பொழுது முத்துநகை செழியனை நோக்கிச் சொன்னாள்:

"சோழநாட்டினை வறுமையில்லா நாடு என்று சொல்லிப் பெருமிதப்படுவோம் நாங்கள். ஆனால், இங்கே வந்த பின்னரோ அதற்கும் ஒரு வகையில் வறுமையுண்டு என்பதனை நான் உணர்கின்றேன்."

"எதனை வைத்து அப்படிச் சொல்கிறாய்?" என்று கேட்டான் செழியன்.

"உறையூரையொட்டிய மிகச் சிறிய பகுதிகளைத் தவிர இந்தப் பாண்டிய நாட்டினைப் போல் மிகப் பெரிய மலைவளம் சோழநாட்டுக்கு இல்லை அல்லவா?"

"நீ புகல்வதும் உண்மைதான். ஆனால் சேரநாடு இதனைவிட மலைவளம் மிகுந்தது."

"அப்படியா? எனக்குத் தெரியாது; நான் அங்கே போனதே இல்லை. இந்தப் பாண்டிய நாட்டுக்கும், விவரம் புரிந்த பின்னர் இப்பொழுதுதானே முதன் முறையாக வருகிறேன்!"

"ஆமாம், செழியா! முத்துநகை பிறந்து ஓராண்டு முடியுந்தறுவாயில் இவள் அன்னையையும், இவளையும் அழைத்துக் கொண்டு ஒரு முறை மதுரைக்கு வந்திருக்கிறேன். அதன் பின்னர் நான்தான் அடிக்கடி இங்கே வருவதுண்டேயன்றி, இவள் அன்னையையோ, இவளையோ அழைத்து வந்ததில்லை" என்று இடைமறித்துக் கூறினார் காரிக்கண்ணனார்.

"ஆமாம், புலவர் அவர்களே! எங்கள் மன்னருக்குப் 'பஞ்சவர்' என்னும் பெயரும் உண்டு என்பது தங்களுக்குத் தெரியுமா?" - செழியன் இவ்வாறு கேட்டதும் காரிக்கண்ணனார் மெல்ல நகைத்திட்டார்.

"எனக்கா தெரியாது? குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐவகை நிலங்களையும் கொண்ட நாட்டினை ஆள்வதாலேயே பாண்டிய மன்னனுக்குப் 'பஞ்சவன்' என்னும் பெயர் உண்டாயிற்று.

"நான் ஓர் அறிவிலி! பெரும் புலவராகிய தங்களுக்குத் தெரியாதது என்ன இருக்க முடியும்?" என்று தனக்குத் தானே சலித்துக் கொண்ட செழியன், குலைகுலையாகக் காய்த்துத் தொங்கும் கமுக மரங்கள் சூழ்ந்த ஒரு பொய்கையருகே வந்ததுமே தேரினை நிறுத்தினான்.

அந்தப் பொய்கை விந்தையான காட்சியினை அளித்தது. இயல் - இசை-நாடகம் என்னும் முத்தமிழ் போல தாமரை, அல்லி, செங்கழுநீர்ப் பூங்கொடிகள் ஆகிய மூன்றுமே அங்கே விரவிக் கிடந்தன. ஒரு துறையிலே வாளிப்பான உடற்கட்டமைந்த கன்னிப்பெண்டிர் நீராடிக் கொண்டிருந்தனர். அதற்கு எதிர்த்துறையிலே இளங்காளையர்கள் மூச்சினைப் பிடித்துக்கொண்டு மூழ்கிக் கிடப்பதிலும், நீச்சலடிப்பதிலும் தங்கள் திறமையைக் காட்டியவண்ணம் விளையாடினர்.

புரவிகள் நீரினைப் பருகி நிமிர்ந்த பின்னர் அவற்றை மீண்டும் தேரிலே பூட்டுவதற்காகச் செழியன் திரும்பிடும் போது ஆடவர் துறையிலே நீராடிக் கொண்டிருந்த இருவர் உரையாடுவது அவன் செவியிலே தெளிவாக வந்து விழுந்தது.

"மதிவாணா, உனக்குச் செய்தி, தெரியுமா?"

"என்ன செய்தி, அறிவுடை நம்பி!"

"இங்கே தந்தை சாகக்கிடக்கிறார், ஆனால் தனயனோ எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லையாம்?"

"நீ யாரைச் சொல்கிறாய்?"

"பெருவழுதிப் பாண்டியரையும் அவர் மகன் இளம் பெருவழுதியைப் பற்றியுந்தான் சொல்கிறேன். இரண்டு முறை கொற்கைப்பட்டினத்துக்கு ஆட்கள் போய்த் திரும்பி விட்டார்களாம்; இளவரசரையே காணோமாம்!"

"இது என்ன விந்தையாக இருக்கிறதே! ஒருவேளை பெருவழுதிப் பாண்டியர் இறக்க நேரிட்டால், உடனே பட்டஞ் சூட்டிக் கொள்ளக் கூட அவர் வந்திட மாட்டாரோ?"

"எனக்கும் இதுதான் அச்சமாக உள்ளது. பாண்டிய நாட்டு நிலைமை என்னதான் ஆகப்போகிறதோ தெரியவில்லை" அதற்குமேல் அவர்கள் உரையாடியது செழியனின் செவியில் ஏறிடவில்லை.

அந்தக் குடிமக்களுக்கு ஏற்பட்ட அச்சத்தினைவிடப் பன்மடங்கு பெரிய அச்சம் இப்போது செழியனை வாட்டிடலாயிற்று.

அவன், கவலை தோய்ந்த முகத்துடன் புரவிகளைத் தேரினில் பூட்டி ஓட்டத் தொடங்கிய பொழுது - பின்புறமாகத் தடதடவெனக் குதிரைகள் விரைந்து வரும் குளம்படியோசை அவன் காதுகளைப் பிளந்தது.

செழியன் திரும்பிப் பார்த்தான்.

வேப்பமாலை முனையிலே சூட்டப்பெற்ற வேலினைக் கரத்தினில் ஏந்தியவாறே மறவன் ஒருவன் குதிரைமீது விரைந்து வந்து கொண்டிருந்தான்.

அவன் முகத்தினை கண்டதுமே...?

அணை கடந்திடும் மகிழ்ச்சிவெள்ளம் பொங்கிற்று செழியன் மனத்தினில், அந்த மறவன் ஏதேனும் ஒரு நற்செய்தியினை ஏந்தியே வந் திருப்பான் என்னும் நம்பிக்கையும் அவனுக்கு ஏற்பட்டது. இல்லை யென்றால் வேப்பமாலை சூட்டப்பெற்ற வேலினைத் தாங்கி வந்திட வேண்டிய தேவையே இல்லையே?

தங்களது சிறுதேரின் அருகே அவன் நெருங்கியவுடன் குறுக்கே சென்று அவனைத் தடுத்து நிறுத்திட நினைத்திட்டான் செழியன். அந்த மறவனோ அத்தகைய கடினமான பணியினைச் செழியனுக்கு வழங்கி டுவதா என்று கருதியவனைப் போலக் குதிரையைவிட்டுத் தானே கீழே குதித்திட்டான்.

"வணக்கம் அண்ணா! நலமா?" என்று கேட்கவும் கேட்டான்.

"வணக்கம்... வணக்கம்; நீ இப்போது கொற்கையில் தானே அலுவல் பார்க்கிறாய்?"

"ஆம் அண்ணா; அங்கே இளவரசருக்குத் துணை மெய்க்காவலனாகப் பணியாற்றுகிறேன்!"

"அப்படியா? மெத்த மகிழ்ச்சி! உன்னை முதலில் சந்தித்தபொழுது நீ நன்றாக முன்னேறிவிடுவாய் என்று நான் திண்ணமாகவே எண்ணினேன்."

"எல்லாமே தங்களுடைய கருணையினால் வந்திடும் பரிசுகள்தானே அண்ணா! தளபதி நெடுமாறர்கூட என்னைப் படையினில் சேர்த்திட முடியாது என்றுதானே முதலில் மொழிந்துவிட்டார்? தாங்கள்தானே அவரை வற்புறுத்தி இசைந்திட வைத்தீர்கள். அந்த நன்றியறிதலை என் உயிர் உள்ளளவும் என்னால் மறந்திட இயலுமா?"

"அப்படி ஒன்றும் உனக்கு நான் பெரிதாகச் செய்திடவில்லையே வடிவம்பலம்? உன்னிடம் இயற்கையாகவே திறமை இருக்கிறது: நீ முன்னுக்கு வருகிறாய். இடையிலே நான் வேண்டுமானால் சிறு கருவியாகப் பயன்பட்டிருப்பேன். அவ்வளவுதான். மேலும் ஒருவருடைய திறமை இருக்கிறதே. அது உதயசூரியனின் ஒளிக்கதிரைப் போன்றது; பெருந்தூணையே நட்டு வைத்தாலும், நீண்ட சுவரையே எழுப்பி விட்டாலும் அதன் ஓட்டத்தினை - உயர்வினை - ஆற்றலைத் தடுத்திடவோ, அழித்திடவோ முடிந்திடுமா?"

செழியன் இவ்வாறு பகர்ந்திடும் போதே, தேரினுள் அமர்ந்திருந்த புலவர் காரிக்கண்ணனார் தம் தலையினைச் சற்று வெளியே நீட்டி, "ஆமாம்; இளவரசர் இளம்பெருவழுதி இப்போது எங்கே? கொற்கைப்பட்டினத்தில் இல்லையா?” என்று குரல் கொடுத்தார்.

"ஏன், கொற்கையில்தானே இருக்கிறார்? விரைவினில் மதுரைக்கு வந்திடுவார்" என்றான் வடிவம்பலம்.

"நான் வேறு ஏதேதோ கேள்வியுற்றேனே! தலைநகருக்கு வந்திடுமாறு பாண்டிய வேந்தரிடமிருந்து தகவல் வந்தபொழுது இளவரசர் கொற்கையில் இல்லையாமே?" என்று வினவினான் செழியன்.

"ஓ அதைப் பற்றிக் கேட்கிறீர்களா? சிறிது காலத்திற்கு முன்னர் கொற்கை நகரிலே 'மாகதி மொழிக்காரன்' ஒருவன் வேண்டுமென்றே மொழிப்பூசலைக் கிளப்பி விட்டான் அல்லவா? அதன் தொடர்ச்சியாகப் பழி வாங்கத் தயங்கிடாத அவன், தன்னந்தனியாக உலவச் சென்றிட்ட நம் இளவரசரைத் தன் ஆட்களை விட்டு மடக்கித் தெற்கு வெள்ளாறு வரை கொண்டு சென்றிருக்கிறான். அந்த வேளையில்தான் தலைநகரிலிருந்து செய்தி வந்தது. ஆனால் அந்த மொழிப் பகைவர்களை முறியடித்து வீழ்த்தி விரட்டி விட்டு வெற்றியோடு கொற்கைக்குத் திரும்பி விட்டார் நம் இளவரசர். அவர் மதுரைக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்னும் செய்தியினை முன்கூட்டியே தெரிவித்திடவே என்னை இப்போது அனுப்பி வைத்திட்டார்."

...அந்த அங்காடிக்காரன் அடாத செயல் பற்றி இப்போது தேரினில் வந்திடுங்காலைதான் புலவர் காரிக்கண்ணனார் மூலம் அறிந்து கொண்டேன். எனக்கோர் ஐயப்பாடு..."

"என்ன அண்ணா?"

"பொதுவாக நம் அங்காடிக்காரர்கள் தங்களிடம் விற்பனைக்குள்ள பண்டங்களைக் குறித்திடும் கொடிகளை நட்டு வைத்தோ. ஆட்டியோ வாங்குவோரைக் கூவி அழைப்பதுதானே வழக்கம்? அந்த 'மாகதி மொழிக்காரன்' மட்டும் ஏன் கொடி எதனையும் பயன்படுத்திடாமல் பலகையிலே தன் அங்காடியின் பெயரை வழக்கமில்லாத வழக்கமாக எழுதிப் போட்டு வைத்திருந்தான்!"

"அதுதானே அண்ணா, எல்லாருக்கும் புதிராகவும், ஏன் அதிர்ச்சியாகவும் கூட இருந்தது. ஏதாவது ஒரு புதிய முறையினைக் கையாண்டு இங்குள்ள மக்களை வியப்பிலே ஆழ்த்தி அதன் மூலம் எப்படியாவது தன்மொழியினைப் புகுத்திட...பரப்பிட வேண்டும் என்கிற ஒரே உள் நோக்கத்தைத் தவிர வேறு என்ன காரணம் இருந்திட முடியும். அவனுடைய வம்புச் செயலுக்கு?"

"ஆமாம் வடிவம்பலம்; நீ புகல்வதும் சரிதான்; புதுமை என்றாலே பொதுமக்களிடையே ஒரு 'கவர்ச்சி' ஏற்படுவது இயல்புதானே? ஆழ்ந்து சிந்தித்திடாதவர்களின் அந்த மெல்லிய உணர்ச்சியினைப் பயன்படுத்திக் கொண்டுதான் சில பொல்லாங்குக்காரர்கள் மேன்மை அடைந்திடப் பார்க்கிறார்கள். ஆனால் இந்த மொழிப் பூசலிலே நம் இளவரசர் உறுதியோடு செயல்பட்டாராமே?"

"ஆம், அண்ணா; அவரைப் போலவே, இன்னொரு வீராங்கனையும் தான் உண்மையான தமிழச்சிதான் என்பதனை மெய்ப்பித்துக் காட்டினாள். நம் தாயகத்தின் தன்மானத்தையும் காப்பாற்றினாள். "நானும் கேள்வியுற்றேன்; புலவர் அவர்கள்தாம் அவளைப் பற்றியும் கூறினார்கள்" என்று மொழிந்தான் செழியன்.

அவனுடைய முகமோ சட்டென்று கறுத்துவிட்டது கவலை நிழலால். இந்நேரம் தாமரை எங்கே இருப்பாளோ, யாரிடம் சிக்கினாளோ, என்னென்ன இடர்களுக்கெல்லாம் இலக்கானாளோ என்றெல்லாம் எண்ணங்கள் முகிழ்த்து அவனது இதயத்தைக் குடைந்தன, ஈட்டியாக!

அவனுடைய அமைதிக்குரிய உட்பொருளை உணர்ந்திடாத வடிவம்பலம், "சரி, அண்ணா! நான் கிளம்பட்டுமா? இளவரசர் வந்திடும் செய்தியினை நான் விரைவாகச் சென்று மதுரையில் தெரிவித்திட வேண்டுமல்லவா?" என்று விடை கேட்டான்.

"ஆமாம், ஆமாம், நீ உடனே புறப்படு, இத்தனை நாழிகை உன்னைத் தவக்கப்படுத்தியதே தவறு" என்றான் செழியன்.

வடிவம்பலம் தன் புரவி மீதேறிக் கடுகிப் பறந்ததும், செழியனும் தன் சிறு தேரினைப் பூட்டி விட்டான்.

"எனக்கு இப்பொழுதுதான் கவலை நீங்கியது. செழியா!" என்று பெருமூச்செறிந்தார் காரிக்கண்ணனார்.

"ஆமாம், புலவர் அவர்களே! இளவரசர் தலைநகருக்கு வந்திடுவார் என்ற செய்தியினைக் கேட்ட பின்னர்தான் என்னுடைய அச்சமும் அகன்றது" என்று அவரோடு ஒத்துப் பாடினான் செழியன்.

ஆனால், காரிக்கண்ணனாருக்கு உள்ளூர நிம்மதி மட்டுமல்ல; நகைப்பும்கூட! ஏன் தெரியுமா?

"புகார் அரண்மனையிலிருந்து தாமரை காணாமற் போன செய்தியினை அறிந்ததும், யவனக்கிழவர் வேடத்திலிருந்த இளம்பெருவழுதி அவளைத் தேடிக் கண்டு பிடிப்பதற்காக எங்கேனும் அலைந்திருக்கலாம். அதனால் குறித்த காலத்தில் கொற்கைப் பட்டினத்தை அடைய முடியாது போயிருக்கலாம். இதற்குள் மதுரையிலிருந்து மன்னரைப் பற்றிய செய்தி வந்திருக்க வேண்டும். அந்த நேரத்தில், தான் கொற்கையில் இல்லாமல் போனதற்குப் பொருத்தமான - மற்றவர்கள் நம்பும்படியான ஒரு காரணம் வேண்டாமா? அதற்குத்தான் அந்த 'மாகதி' மொழிக்காரனைத் தனக்கு வாய்ப்பாக அவர் பயன்படுத்தி இருக்கலாம்?" என்று எண்ணிய அளவில்தான் காரிக்கண்ணனாருக்கு நகைப்பு ஏற்பட்டது.

இன்னொன்றும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும். கொற்கையிலே புகைந்திட்ட மொழிப்பூசல் பற்றி செழியனிடம் புகன்றிட்ட புலவர் அவர்கள், அதிலே இளம்பெருவழுதியும் தாமரையும் எங்ஙனம் முனைந்து ஈடுபட்டுத் தங்கள் தாய்மொழியிடம் நன்றி மிகுந்த சேய்களாக நடந்து கொண்டனர் என்பதனை நவின்றிட்டாரே அன்றி, இளம்பெரு வழுதி தன் இதயத்தினைத் தாமரையின்பால் பறி கொடுத்தமை பற்றியோ, அதற்காக அவன் யவனக் கிழவர் வேடம் புனைந்தது பற்றியோ எதுவுமே பகர்ந்திடவில்லை.

அந்தச் சிறிய தேர் - முத்துநகை, காரிக்கண்ணனார், செழியன் ஆகிய மூவரையும் சுமந்திட்ட அந்தச் சிங்காரமான தேர் பசுமையான பொழில்கள் புடைசூழ்ந்த வையை ஆற்றினைக் கடந்து மதுரை மாநகரிலுள்ளே நுழைந்திட்ட பொழுது பகலவன் தன் முதுமைப் பருவத்தை நோக்கி வெகு வேகமாக விழுந்த வண்ணம் இருந்தான்.

முத்துநகைக்கோ, தங்கத் தமிழை வளர்த்திடும் - சங்கந் தழைத்துச் சிறந்திடும் - நான்மாடக்கூடலின் பேரழகினைக் கண்டிட வேண்டும் என்னும் பேராவல்! அவள் தேரினுள் இருந்தவாறே தலையை வெளியே நீட்டி நகரின் எழிலைத் தன் விழிகளால் பருகிட முனைந்தாள்.

குன்றுகள் படுத்துக்கிடப்பதைப் போன்று நீண்ட மதில்கள்.

பலகாலம் நெய் தடவப்பட்டதால், களிற்றின் வயிற்றினைப் போல் கறுத்திட்ட நெடிய நிலைக்கதவுகள் -

அந்த மதிலின் கதவுகளைத் தாண்டி உள்ளே புகுந்திட்டால் நீரோடும் பேராறுகளைப் போல் நீண்டு கிடக்கும் அகலமான தெருக்கள்-

அந்தத் தெருக்களிலே சுறுசுறுப்பாகப் பாய்ந்திடும் மனித வெள்ளம்.

ஆற்றிலே இலை தழைகளும் பூவிதழ்களும் மிதந்து வருகின்ற மாதிரி அந்த மனித வெள்ளத்தின் இடையிடையே ஊர்ந்து சென்றிடும் யானைத் தேர்கள், குதிரைத் தேர்கள், தெருவின் இருமருங்கிலும் விண்ணளாவி நின்றிடும் அழகான மாளிகைகள், அவற்றின் சாளரங்களைத் தழுவி முத்தமிடும் பூங்கொடிகள் இன்னோரன்ன காட்சிகளெல்லாம் முத்து நகையின் உள்ளத்திலே உவகைத் தேனைச் சொரிந்தன.

தேர் இப்பொழுது அங்காடிகளின் பக்கமாகத் திரும்பிற்று. பூம்புகாரிலுள்ள நாளங்காடி - அல்லங்காடிகள் எவ்வாறு தோற்றமளிக்குமோ அவ்வாறே மதுரை அங்காடிகளும் பொலிவோடு விளங்கின. ஆங்காங்கே கண்ணைக் கவரும் வண்ணக்கொடிகள் காற்றிலே அசைந்தாடி, இன்ன இடத்தில் இன்னபொருள் விற்கிறது என்பதனைக் குறிப்பால் உணர்த்திய வண்ணம் இருந்தன. அவை மட்டுமின்றிக் கோவில்கள் விழாக்களைப் புலப்படுத்திடும் கொடிகள்; போர்க்களத்திலே பெற்ற வெற்றியினை அறிவித்திடும் கொடிகள், அறிஞர்களால் ஏற்றி வைக்கப்பெற்ற கல்விக் கொடிகள், கொடை-தவம் ஆகியவற்றை உணர்த்திடும் தியாகக் கொடிகள் முதலியவையும் அருவிகள் போல் அசைந்தாடின.

ஒரு திருப்பத்திலே பறந்து கொண்டிருந்த கொடி, 'களிப்பளிக்கும் கள் விற்கும் அங்காடி இங்கேதான் இருக்கிறது' என்று கூறாமல் கூறியது.

அந்தக் கள் அங்காடியைக் கடந்து தேர் நகர்ந்திட்ட பொழுது. தெருவோரமாக இரு திண்டோள் மறவர்கள் தள்ளாடித் தள்ளாடி நடந்து கொண்டிருந்தனர்.

பனம்பழம் போலக் கறுத்த மேனியினையுடைய அவர்களது கண்களோ நெருப்புத் துண்டுகளாகச் சிவப்பேறியிருந்தன. நட்டுவாக்கலி போல் நறுக்கி முறுக்கி விடப்பட்ட தங்கள் மீசையைத் தடவியவாறே அவர்கள் ஏதேதோ உளறிச் சென்றனர்.

"உனக்குச் சேதி தெரியுமா? ரோமாபுரியிலிருந்து தூதுவர் வந்திருக்கிறாரே, அவருக்குப் பதிலாக நம் பாண்டிய நாட்டின் தூது வராகத் தளபதி நெடுமாறன்தான் செல்லப்போகிறாராம்!"

"அப்படியா! இளவரசர் இளம்பெருவழுதி போகக் கூடும் என்றல்லவா நான் கேள்விப்பட்டேன்?"

"அவரைத்தான் கொற்கையில் காணோமாமே?"

"வேடிக்கையாக இருக்கிறதே! எங்கே போயிருப்பார் இளவரசர்?"

"யார் கண்டார்கள்? அவருக்குக் கடலிலே பயணம் போவதென்றால் கரை கடந்த மகிழ்ச்சி, ஒரு வேளை, எங்காவது கரை சேர்ந்திட மனமே இல்லாமல், கடலிலேயே விளையாடிக் கொண்டிருக்கிறாரோ என்னவோ?"

கள்ளுண்ட களிப்பினில் மிதந்த அவர்கள் கற்பனையால் உரையாடுவதைக் கேட்டுச் சிரிப்புத்தான் வந்தது செழியனுக்கு.

"என்ன புலவர் அவர்களே! அவர்கள் உளறிச் செல்வதைக் கேட்டீர்களா?" என்று தேரினை ஓட்டியவாறே காரிக்கண்ணனாரைத் திரும்பிப் பார்த்திட்டான் அவன்.

"கேட்டேன்; கேட்டேன், ஆனால் அவர்கள் உளறலிலும் ஓர் உண்மை ஒளிந்து கிடக்கிறது" என்றார் புலவர்.

“என்னப்பா அது?" என்று ஆர்வம் ததும்பக் கேட்டாள் முத்துநகை.

"ரோமாபுரிக்குத் தூதுவராகச் சென்றிடும் ஆசை, தளபதி நெடுமாறருக்கும் ஏற்பட்டிருக்கிறது என்பது தான் அந்த உண்மை. அத்துடன் இன்னொரு ஆறுதல் தரக்கூடிய காட்சியினையும் நான் காண்கிறேன்."

"ஆறுதல் தரக்கூடிய காட்சியா?" என்று வியப்புடன் கேட்டான் செழியன்.

"ஆம் செழியா! நாம் கவலையுற்று வருந்திய அளவுக்குப் பெருவழுதிப் பாண்டியரின் உடல்நலம் அவ்வளவு கடுமையாக நலிவடைந்திடவில்லை; சற்றுத் தேறியும் இருப்பார் என்றே தோன்றுகிறது. இல்லையென்றால், மதுரை மாநகரினை இந்நேரம் துயர இருள் கவ்வியிருக்காதா? இத்துணை ஆரவாரமாக, ஆடம்பரமாக - மக்கள் இயங்கிடுவதைத்தான் நாம் கண்டிட முடிந்திருக்குமா?"

"தாங்கள் மொழிவது சரிதான் புலவர் அவர்களே! என் மனத்திற்கும் மன்னர் நலம் பெற்றிருப்பார் என்றே படுகிறது" என்றவாறே செழியன் தேர்ப்புரவிகளை மேலும் முடுக்கிவிட்டான்.