உள்ளடக்கத்துக்குச் செல்

ரோமாபுரிப் பாண்டியன்/35. இனிய வரவேற்பு

விக்கிமூலம் இலிருந்து

35

இனிய வரவேற்பு

வர்கள் மூவரும் அரண்மனையில் நுழைந்திடும் பொழுது நன்றாக இருட்டிவிட்டது.

அந்திப் போதில் மட்டுமே மலர்ந்திடும் பிச்சிப் பூக்களைச் சூடிய அணங்குகள், நெய் நிறைந்த 'பாவை விளக்கு'களில் நீண்ட பெரிய திரிகளைத் தோய்த்து எரிய விடுவதில் முனைந்து ஈடுபட்டிருந்தனர். அந்த விளக்குகள் யாவும் அழகான வேலைப்பாடுகள் உடையவை.

"இவை என்ன புதுமாதிரியான விளக்குகளாக இருக்கின்றனவே!" என்று வியந்திட்டாள் முத்துநகை, அங்கே திரியினை எரிய விட்டுக் கொண்டிருந்த ஒரு சேயிழையை நோக்கி இதுபற்றிக் கேட்டாள்.

"ஆமாம்; இவை யவன நாட்டுப் பக்கத்திலிருந்து வந்தவை. அண்மையில் ரோமாபுரியிலிருந்து தூதுவர் ஒருவர் நம்நாட்டுக்கு வந்திருக்கிறார் அல்லவா? அவர் நம் பாண்டிய வேந்தருக்கு அளித்திட்ட பல பரிசுப்பொருள்களில் இந்தப் பாவை விளக்குகளும் இருந்தன" என்று பதில் வந்தது.

அந்த விளக்குகளின் எழிலைப் பருகியவாறே, பாண்டிய மன்னன் படுத்திருக்கும் தனிக் கூடத்திற்குச் சென்றனர் மூவரும்.

அங்கே, நாற்பது ஆண்டுகள் முதிர்ந்த யானையின் தந்தத்தால் செதுக்கப்பட்ட பூவேலைகள் நெளிந்தோடும் நீண்ட கட்டிலில் அன்னத்தின் அடிவயிற்றுத் தூவிகளாற் செய்திட்ட தலையணைகளின் அரவணைப்பில் அயர்ந்து படுத்திருந்தான் பெருவழுதிப பாண்டியன்.

"மன்னவா!" என்று காரிக்கண்ணனார் குரல் கொடுத்திடவும் அவனுடைய இமைக்கதவுகள் திறந்து கொண்டன; புலவருக்கு மரியாதை தரும் பொருட்டு எழுந்திருக்கவும் முயன்றிட்டான் அரசன்.

ஆனால் காரிக்கண்ணனார்,

"வேண்டாம் அரசே! எதற்கு எழுந்திருக்கிறீர்கள்?" என்று அவனது கரத்தினைப் பற்றித் தடுத்திட்டவாறே கட்டிலை ஒட்டிக்கிடந்த இருக்கை யொன்றில் அமர்ந்து கொண்டார். மன்னன் தலையினைத் திருப்பிடாமல் பார்ப்பதற்கு வாய்ப்பாகப் புலவரின் பின்னால் வந்து நின்றனர் செழியனும், முத்துநகையும்.

அவர்கள் மூவரையும் கண்டதும் பெருவழுதியின் முகத்திலே தனியானதொரு மலர்ச்சி ஒளிர்ந்தது. முறுவல் இழையோடிற்று.

"தற்போது தங்கள் உடல்நலம் எவ்வாறுள்ளது மன்னவா?" என்று பரிவுடன் கேட்டார் காரிக்கண்ணனார்.

"தேவலாம்; ஒன்றும் கவலைப்படும்படியாக இல்லை" என்று மென்குரலில் பகர்ந்தான் பாண்டிய மன்னன்.

"நல்லவேளை ;கரிகாலர் உட்பட நாங்கள் எல்லாருமே பதறியே போய்விட்டோம். சோழ மன்னருக்குத் தங்களை உடனே வந்து பார்த்திட வேண்டும் என்கிற துடிப்புத்தான். ஆனால் எதிர்பாராதவிதமாக ஏற்பட்டுவிட்ட சில சிக்கல்களினால் நகர முடியாத நிலை. எனினும் தங்கள் உடல் நலம் பற்றி ஒவ்வொரு நாளும் மடல் விடுத்திட வேண்டும் என்று கண்டிப்பான அன்புக் கட்டளை இட்டிருக்கிறார் எனக்கு"

"அவ்வாறெல்லாம் கவலைப்படும் அளவுக்கு எனக்கு ஒன்றும் ஆகிவிடவில்லை. ஆனால் ஒருநாள் என்னையறியாமல் மயக்கமுற்று விழுந்திருக்கிறேன். அதைக் கண்டு அரண்மனையிலிருந்த அத்தனை பேருமே நடுங்கிப் போயிருக்கிறார்கள். அந்த அச்சத்தின் விளைவாகத் தான் நம்முடைய அமைச்சர்கள் முதலானவர்கள், எச்சரிக்கையாக இருந்திட வேண்டுமே என்கிற போக்கில், பதற்றப்பட்டுக் கரிகாலருக்கும் 'திருமுகம்' தீட்டியிருக்கிறார்கள். பரவாயில்லை. அதுவும் ஒருவகையில் நல்லதாகத்தான் முடிந்தது. இல்லையென்றால் உங்களையெல்லாம் இப்படி ஒரே சமயத்தில் சந்தித்து மகிழ்ந்திடும் வாய்ப்புக்கிட்டுமா?" என்று புன்னகை புரிந்திட்ட மன்னன் முத்துநகையை நோக்கி, "என்னம்மா? நலந்தானா? பல ஆண்டுகளாக உன்னை மதுரைக்கு அழைத்து வருமாறு பன்னிப் பன்னிக் கூறினேன்; புலவர் கேட்டிடவில்லை. இப்போதாவது அழைத்து வந்தாரே. அதற்காக அவருக்கு நன்றி சொல்லிடத்தான் வேண்டும்!" என்றான். பின்னர் செழியனை நோக்கினான். "என்ன செழியா, நலந்தானே? இருங்கோவேள் ஆட்களிடம் சிக்கி எல்லையில்லாத தொல்லைகளுக் கெல்லாம் இலக்காகி விட்டாய் அல்லவா? ஆனால் நீயும் முத்துநகையும் இல்லாதிருந்தால் அந்த இருங்கோவேளை இத்துணை விரைவில் வீழ்த்தி இருக்க முடியாது!"

பாண்டிய வேந்தனின் இந்தப் பாராட்டுரையால் செழியன் வாய் திறந்து எதுவுமே பேசிட இயலவில்லை.

ஆனால் காரிக்கண்ணனாரோ, பெருவழுதியோடு சேர்ந்து கொண்டு தாமும் புகழ் மழை பொழிந்தார்.

"தாங்கள் மொழிவது முற்றிலும் உண்மைதான் அரசே! இருங்கோவேள் வீழ்ந்தது ஒருபுறம் இருக்க கரிகாலன் உயிர் தப்பியதே செழியனின் திறமைமிக்க திட்டங்களினால்தானே! அதற்காகச் சோழநாடே செழியனுக்கு அளப்பரிய கடன்பட்டிருக்கிறது."

"போகிறது; சோழநாட்டை மூட்டம் போட்டிருந்த அரசியல் சிக்கல்களெல்லாம் ஒருவாறு அகன்றுவிட்டன. அங்கே வானம் வெளி வாங்கிவிட்டது. ஆனால் இங்கேயோ?..."

"ஏன் அரசே அப்படிச் சொல்கிறீர்கள்? இங்கே அவ்வாறெல்லாம் சிக்கல்களுக்கு இடம் இருப்பதாகத் தெரிந்திடவில்லையே?"

"ஏன் இல்லை? முதலில் என் மகன் இளம்பெருவழுதியை எடுத்துக் கொள்ளுங்களேன்! என் உடல் நலம் குன்றிவிட்டது என்று கேள்வி யுற்றதும் எங்கோ வெகு தொலைவில் உள்ள பூம்புகாரிலிருந்து கூடத் தாங்கள் எல்லாரும் வந்துவிட்டீர்கள். அவனோ, இதோ பக்கத்திலுள்ள கொற்கையிலிருந்தும்கூட என்னை வந்து இன்னும் பார்த்திட முடியவில்லை. என்ன செய்வது?"

"தவிர்க்க முடியாத சூழ்நிலைகளின் காரணமாகத்தான் அவரால் இதுகாறும் வரமுடியாது போயிருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்."

"தாங்களும் நம்பலாம், நானும் நம்புகிறேன். புலவர் அவர்களே! ஆனால் பொதுமக்கள் நம்பிட வேண்டுமே! அவர்கள் நம்பிடாத வகையில் பொய்ச் செய்திகளை பரப்பி, அவன் ஒரு பொறுப்பற்றவன் என்கிற தவறான ஒரு கருத்தினை நாடெங்கும் தவழவிட்டு விட்டானே தளபதி நெடுமாறன்! அதற்கு என்ன சொல்கிறீர்கள்!"

"ஆமாம்; அவர் ஏன் அப்படிச் செய்திட வேண்டும்? அதனால் அவருக்கு என்ன நன்மை?"

"இளம்பெருவழுதி பொறுப்பில்லாதவன் என்னும் அவப்பெயரை மக்கள் மனதிலே அழுத்தமாகப் பதித்தால் புதிய பொறுப்புக்களை ஏற்றிடும் நிலை வரும்பொழுது அவைகளுக்கு அவன் தகுதியானவன் அல்லன் என்று மக்களைக் கொண்டே எதிர்ப்புக்குரல் எழுப்பிடலாம். அல்லவா? அதற்காகத்தான்! ஏன், இப்போது ரோமாபுரிக்குப் பாண்டிய நாட்டிலிருந்து ஒரு தூதுவரை நாம் அனுப்பிட வேண்டிய நிலைமையுள்ளதே! அதற்கு, எங்கே நான் இளம்பெருவழுதியைத் தேர்ந்தெடுத்து விடுவேனோ என்கிற அச்சம்; அவன்மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டு அவனை ஒதுக்கி விட்டேனானால் தன்னைத் தவிர வேறு தகுதியான ஆளே இந்தத் தென்பாண்டிச் சீமையிலே இல்லை என்கின்ற தன்னம்பிக்கை; நப்பாசை."

"யாருக்கு?" என்று வியப்புடன் வினவினார் காரிக்கண்ணனார்.

"எல்லாம் நம் தளபதி நெடுமாறனுக்குத்தான்!"

"அப்படியா! வருகிற வழியில், கள்-அங்காடிக்கு அருகே இரு குடிகாரர்கள் பேசிக்கொண்டு போனது சரிதான் போல இருக்கிறது' நெடுமாறருக்கு இத்தனை உள் எண்ணங்கள் இருந்திடக்கூடும் என்று என்னால் கற்பனை கூடச் செய்திட முடியவில்லையே! படைத்தளபதி என்கிற ஒன்றைத் தவிர அப்படி என்னதான் அவருக்குத் தனித்திறமை இருக்கிறது. நம் இளவரசரை விட?"

"இளம்பெருவழுதியே கிடக்கட்டும், புலவர் அவர்களே! ரோமாபுரி நாட்டுக்குச் செல்லும் பாண்டிய நாட்டுத் தூதுவர் என்றால் அது என்ன சாதாரணப் பொறுப்பா? அதற்கு ஒருவரை 'தேர்வு' செய்கிறோம் என்றால் எவ்வளவு விழிப்போடு நாம் இருந்திட வேண்டும். நெடுநெடுவென்று வளர்ந்திருந்தாலோ அல்லது அடியாட்களை வைத்து மிரட்டும் ஆணவம் இருந்தால் மட்டும் போதுமா?"

"அந்தப் பொறுப்பான பதவிக்கு ஒருவரை நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்றால், அவர் நல்லவரா, வல்லவரா? எல்லாருடனும் இணைந்து பழகிடும் இனிய இயல்புகள் உள்ளவரா, நம்பிக்கைக்கு உரியவரா, வம்பு வழக்குகளுக்குப் போகாதவரா, நாணயம் கொண்டவரா, பிறநாட்டுத் தலைவர்களைக் கவரும் அளவுக்கு நாநயமும் பூண்டவரா, பகுத்தறிவு நிறைந்தவரா, பண்பாட்டில் சிறந்தவரா, தரணியெல்லாம் வியந்திடும் வண்ணம் தமிழைப் பரப்புகின்றவரா, இல்லை-தமிழால் பிழைத்துக் கொண்டு, தமிழைப் பழித்துக் கொண்டே தன் வயிற்றை மட்டும் நிரப்புகின்றவரா, அல்லலுறும் மக்களுக்காக அயராது உழைப்பவரா, இல்லை - செல்வர்களின் அரவணைப்பில் செழிப்பாக வளர்ந்து கொண்டே 'ஏழைகளின் தோழன்' எனப் போலி வாழ்க்கை வாழ்பவரா. தாய் நாட்டைக் காப்பவரா, தன்மானந் தழைப்பவரா, பரந்த அறிவு பெற்ற -பல கலைகளிலும் வல்லுநரா என்றெல்லாம் நாம் ஆழ்ந்து சிந்தித்திட வேண்டாமா?"

"தாங்கள் புகல்வது சரிதான் அரசே! ஆனால் இத்துணைத் தகுதிகளையும் படைத்தவராகத் தாங்கள் யாரைக் கருதுகிறீர்கள்?" என்று கேட்டார் காரிக்கண்ணனார்.

"அவர் யார் என்று சொன்னால் தாங்கள் நம்பக்கூட மாட்டீர்கள். சொல்லட்டுமா?" என்று சிரித்திட்டான் பெருவழுதிப் பாண்டியன்.

ஆனால் அவன் வாயைத் திறந்திடுமுன் ஒரு நெடிய உருவம் அந்தக் கூடத்தினுள் நுழைந்தது.

அந்த நெடிய உருவம் வேறு யாரும் அல்ல; ஒரு சமணத் துறவியே ஆவார்!

வெள்ளை வெளேர் என்று விழிகளைப் பறித்திடும் வகையினில், தும்பைப் பூவினும் துல்லியமான வெண்துகில் உடுத்தியிருந்தார் அவர். அவர் தம் பரந்த முகத்தினிலோ சரஞ்சரமாக அரும்பு கட்டியிருந்தன வேர்வை முத்துக்கள். அத்துடன், புலியைக் கண்டு மிரண்டோடி வந்திட்ட முயலைப் போல அவரது உடல் தடதடவென்று ஆடிற்று; மேல் மூச்சு - கீழ் மூச்சு வேறு வாங்கிற்று.

பெருவழுதிப் பாண்டியனை நோக்கிக் கரங்கூப்பித் தொழுதிட்ட அவர், “பாண்டிய வேந்தே! தங்கள் நாட்டிலே இனி நாங்கள் நடமாடவே முடியாதுபோல் இருக்கிறதே! பெளத்த சமயத்தினர் எங்களைப் பழிப்பது போதாது என்று பலி வாங்கவும் தலைப்பட்டு விட்டனர். எங்கள் ஊர்வலங்களுக்கு ஊறு செய்கின்றனர்; எங்கள் சமணக் கோவிலுக்கருகிலேயே தங்கள் சங்கத்தினைக் கூட்டி, எங்கள் தத்துவங்களையெல்லாம் சாடுகின்றனர்; எங்கள் தீர்த்தங்கரர்களையும் திட்டித் தீர்க்கின்றனர்.

எங்கள் எருதுக் கொடியினையும் இழித்துப் பேசுகின்றனர். ஏனென்று கேட்டால் எதிர்த்து அடிக்கவும் வருகின்றனர். தாங்கள் உடனே தலையிட்டு அவர்களுடைய தகாத போக்கினையெல்லாம் தடுத்திடமாட்டீர்களா? அவர்களுடைய அடாத செயல்களையெல்லாம் இப்போதே அறவே களைந்திடாவிட்டால் நாங்கள் அமைதியான முறையில் வாழவே முடியாது. அரசே! வாழவே முடியாது! பிறகு, நாங்கள் அத்தனை சமணர்களும் 'சல்லேகனை' புரிந்து சாவதைத் தவிர வேறு வழியே இல்லை! என்று படபடப்புடன் பொரிந்து தள்ளினார்.

"ஆமாம்; தாங்கள் இப்போது எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று மென்குரலில் கேட்டான் பெருவழுதி..

"பசு மலையிலிருந்துதான், அரசே!"

"பசுமலைதானா? அங்கே பௌத்தர்கள் குறைவுதானே! சமணர்கள் தாமே மிகுதி!"

"ஆட்டு மந்தை எத்துணை பெரிதாக இருந்திட்டால்தான் என்ன? ஒரேயொரு ஓநாய்க்கு ஈடு கொடுத்திட இயலுமா?"

தாக்கப்பட்ட காரணத்தால்தான் துறவியின் வாயிலிருந்து தப்பான வார்த்தைகள் வருகின்றன என்று எண்ணியோ என்னவோ, பாண்டிய மன்னன் மேற்கொண்டு வினாக்களைத் தொடுத்திடவில்லை. புன்னகை மட்டுமே புரிந்தவனாக சிந்தனையில் ஆழ்ந்திட்டான்.

புலவர்காரிக்கண்ணனாருக்கோ அந்தத் துறவியின் போக்குத் துளியும் பிடித்திடவில்லை. அவருடைய திடீர் வருகையும், படபடப்பான சொற்களும் அருவருப்பையே அளித்தன. என்னதான் நமக்குத் தாங்கிட இயலாத இடுக்கண் என்றிட்ட போதிலும் காவலர்களிடமோ அமைச்சர்களிடமோ வேறு தொடர்புடைய கருமத் தலைவர்களிடமோ முதற்கண் முறையிட்டுக் கொள்வதனை விடுத்து, நோய்வாய்ப் பட்டுள்ளாரே என்பதை ஆய்ந்து பார்த்திடாமல், எடுத்த எடுப்பிலேயே இங்ஙனம் மன்னருக்கு இன்னல் தருகிறாரே என்றும் புலவர் எண்ணிடலானார்.

அவருக்குச் சமணத் துறவியார் மீது எரிச்சல் ஏற்பட்டமைக்கு இன்னொரு காரணமும் உண்டு. ரோமாபுரிக்குத் தாம் அனுப்ப விழைந்திடும் தூதுவர் யார் என்று அரசன் குறிப்பிடப்போகும் வேளையாகப் பார்த்து இப்படிக் குறுக்கே வந்து கெடுத்து விட்டாரே என்பதுதான் அது!

அவருடைய கவனத்தைத் திருப்பிடும் வகையில் முத்துநகை அவர் தம் செவியில் மட்டுமே விழுந்திடும் வண்ணம் மெல்லக் கிசுகிசுத்தாள்.

"இந்தத் துறவி என்னவோ 'சல்லேகனை' என்றாரே. அப்படி யென்றால் என்ன அப்பா?"

"அதுவா? தருப்பைப் புற்களை அடுக்கடுக்காகப் பரப்பி அவற்றின் மீது வடக்குத் திக்கினை நோக்கி அமர்ந்து உண்ணா நோன்பு மேற்கொண்டு உயிர் விடுதலைதான் 'சல்லேகனை' என்பார்கள்."

"ஓகோ! வடக்கிருத்தல் என்று புகல்வார்களே அது தானா?"

"அதுவேதான்!" தந்தையும் மகளும் அதற்கு மேல் தங்கள் உரையாடலைத் தொடர்ந்திடவில்லை.

பெருவழுதிப் பாண்டியன் தன்னுடைய சிந்தனை அமைதியிலிருந்து விடுபட்டவனாகத் தன் தொண்டையைக் கனைத்திட்டான்.

"சரி, துறவியாரே! பௌத்தர்களால் தங்களுக்கு என்னதான் இடர் ஏற்பட்டது என்பதனைக் குறிப்பிட்டுக் கூறிட முடியுமா?"

"ஒன்றா இரண்டா? எத்தனையோ இடர்கள் அரசே! ஆனால் இன்றைக்கு நிகழ்ந்ததை மட்டும் இப்போது எடுத்துரைக்கிறேன். அரசே, பசுமலையில் எங்கள் கோவிலுக்கு எதிரேயுள்ள திடலில் பௌத்தர்கள் தங்கள் சங்கக் கூட்டத்தைக் கூட்டினார்கள். அதிலே எங்கள் சமண முனிவராகிய கனகநந்தி அவர்களை எவ்வளவு இழிவாக ஏசிட முடியுமோ அவ்வளவு இழிவாக ஏசினார்கள். எங்ஙனம் பொறுத்திட முடியும்? எனவே, அவர்கள் கூட்டத்தில் புகுந்து சில வினாக்களை எழுப்பினோம். அதற்காக என்னையும் என்னைச் சார்ந்தவர்களையும் அடித்து நொறுக்கி விட்டார்கள். அத்துடன் கனகநந்தி அவர்களே நேரில் வந்து, தங்களிடம் வருத்தம் தெரிவித்திட வேண்டும் என்று வற்புறுத்திச் சமணக் கோவிலையே முற்றுகையிட்டு நிற்கிறார்கள். எங்கே அவரைக் கொன்று விடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாகவே இப்போது தங்களிடம் ஓடோடி வந்தேன்."

"நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அங்கே நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் போல் தோன்றுகிறதே!"

"ஆம் வேந்தே! பசுமலை முழுவதுமே ஒரே கொந்தளிப்பாக இருக்கிறது!" - துறவியார் இவ்வாறு சொல்லிடவும் செழியன் குறுக்கிட்டான்;

"மன்னவா, நான் ஒன்றைச் சொல்லலாமா?"

"ஓ! தாராளமாகச் சொல்லலாமே."

"இவர் கூறுவதைப் பார்த்தால் இது சாதாரணச் சிக்கலாகத் தோன்ற வில்லை. இரு சமயங்களுக்கும் இடையே இத்துணை கடுமையாகப் பகைமை நிலவுவதற்கு வேறு சில அடிப்படைக் காரணங்களும் இருந்திடல் வேண்டும். எனவே எடுத்த எடுப்பிலேயே அரசர் அளவிலே இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண முற்படுவது முறையில்லை என்பதே என் பணிவான கருத்து. முதலில் இவரோ இவரைச் சார்ந்தவர்களோ நம் அறங்கூறு அவையத்திடம் முறையிட்டுக் கொள்ளட்டும். அதற்கு முன்னர் இப்பொழுது உடனடியாக நம் படை வீரர்களை அனுப்பிப் பசுமலை எரிமலை ஆகிவிடாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்!"

"ஆம், செழியா! நீ மொழிவதுதான் முற்றிலும் சரி. தளபதி நெடுமாறனை அனுப்பி வைப்போமா?" என்று சிந்தித்த மன்னன், “ஏன் செழியா! நீயேதான் சில படை வீரர்களை அழைத்துக் கொண்டு பசுமலை நிலைமையை ஒழுங்கு படுத்திவிட்டு வாயேன்!" என்றான்.

"தங்கள் ஆணை எதுவாயினும் நிறைவேற்றிட நான் என்றுமே காத்திருக்கிறேன் அரசே! என்ற அவன், நொடிப்பொழுதினைக்கூட வீணடித்திடாமல் பெருவழுதியிடம் மட்டுமின்றிக் காரிக்கண்ணனார், முத்துநகை இருவரிடமும்கூட விடை பெற்றுக்கொண்டு வெளியேறினான்.

"நன்றி மன்னவா; மிக மிக நன்றி; இவ்வளவு விரைவினில் இத்துணைச் சுறுசுறுப்புடன் தாங்கள் நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நான் நம்பிடவே இல்லை. எங்கள் அறக்கடவுளான அருகதேவரின் அருளாலே தாங்கள் நெடுங்காலம் வாழ்ந்திட வேண்டும். செழியன் உரைத்திட்டவாறே அறங்கூறு அவையத்திடம் முதலில் எங்கள் வழக்கினைத் தொடுக்கிறோம். தாங்கள் பிணியுற்ற நிலையில், இரவுப் பொழுதாயிற்றே என்றும் பாராமல், அடியேன் தொல்லை கொடுத்திட்ட போதும் தாங்கள் பொறுமையோடு என் உரைகளையெல்லாம் செவிமடுத்தீர்கள். அதற்காக மீண்டும் என் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று நவின்றுவிட்டுச் சமணத் துறவியும் கூடத்தினை விட்டு அகன்றார்.

"சோழ நாட்டிலிருந்து நீண்ட பயணம் வந்த உடல் அலுப்புக்கூடத் தீர்ந்திடாத நிலையில் மீண்டும் படைப் பணியினை மேற்கொள்வது செழியனுக்கு மிகவும் கடினமாகத்தான் இருக்கும்! அல்லவா?" என்று பரிவுடன் பகர்ந்திடலானார் காரிக்கண்ணனார்.

அதற்குப் பெருவழுதிப் பாண்டியன், "என்னசெய்வது புலவர் அவர்களே! செழியனைப் போலப் பொறுப்போடு, உண்மையோடு உழைக்கக் கூடியவர்களை - திறமையோடு செயலாற்றக் கூடியவர்களை -நாம் எங்கே காண முடிகிறது? அதுவும் சமயப் பூசல்களுக்குத் தீர்வு காண்பது இருக்கிறதே? அது மிகுந்த கடினமான வேலை. மிகமிக எச்சரிக்கையோடு ஈடுபட வேண்டும். தனிப்பட்ட முறையிலே எனக்கென்று சில அசைக்க முடியாத-அறிவுக்கு இசைந்த- அடிப்படையான கொள்கைகள் இருந்திட்ட போதிலும் நம்முடைய அரசினைப் பொறுத்தவரையில் எல்லாச் சமயங்களுமே நமக்கு இணையானவை தான். ஒன்றைத் தாக்குவதோ இன்னொன்றைத் தூக்குவதோ நம்முடைய தொழில் இல்லை. இந்த நடுவு நிலைமை யினின்றும் நாம் கடுகளவு பிறழ்ந்திட்டாலும், நம் வளர்ச்சியினைக் கண்டு வயிற்றெரிச்சல் கொண்டிடுவோர் புழுதியினை வாரிப் பொலபொல வென்று தூற்றிட மாட்டார்களா? அதனால்தான் பொறுப்புணர்ந்து நடந்திடக்கூடிய செழியனைப் போன்றவர்களின் தோள்களின் மீதே தொல்லை மிகுந்த பணிகளையெல்லாம் அடிக்கடி சுமத்திட வேண்டியுள்ளது..." என்று பெருவழுதிப் பாண்டியன் புகன்றிடும் பொழுதே இளம்பெருவழுதி வந்துவிட்டான்.

பிணியினால் நலிவுற்று மெலிந்து களைத்துக் காணப்பெற்ற தன் தந்தையினைக் கண்டதும் இளவரசனின் இதயக் குருத்தினைத் துயரம் துளைத்திட்டது, சுளுக்கியைப் போல!

காரிக்கண்ணனார் குரல் எழுப்பினார்;

"இளவரசருந்தான் வந்துவிட்டார்; இனி நமக்குக் கவலை இல்லை. அப்புறம் இங்கு வருவதற்காகக் கிளம்பு முன், கரிகாற் சோழர் ஓர் இன்றி யமையாத கருத்தினைத் தங்களிடம் எடுத்துரைக்குமாறு கூறினார்...

"எதைப்பற்றி?" என்று வினவினான் பெருவழுதி.

"ரோமாபுரிக்குத் தூதுவராக யாரை அனுப்பினால் பாண்டிய நாட்டினுக்கு மட்டுமின்றி முத்தமிழ் வேந்தர்கள் ஆண்டிடும் தமிழகம் முழுமைக்குமே நலம் பயக்கும் என்பதைப் பற்றித்தான்!”

"அப்படியா?..ம். அதைப்பற்றி நாம் அப்புறம் பேசிக் கொள்வோமே!"

பெருவழுதி இங்ஙனம் மொழிந்திடுவான் என்று காரிக்கண்ணனார் எதிர்பார்த்திடவில்லை. 'தம்முடைய தனயனுக்கு முன்கூட்டியே அது பற்றித் தெரிந்திட வேண்டாம் என்று நினைத்திருப்பாரோ? அல்லது நெடுநேரம் உரையாடிக் கொண்டே இருந்துவிட்டதால் ஏற்பட்ட களைப்பினால்தான் அவ்வாறு புகன்றிருப்பாரோ?' என்றெல்லாம் குழம்பிடலானார் புலவர்.